Loading

நிறம் 16

 

பிரதீப்பையும் அவனின் ஆட்களையும் கடத்தி வைத்திருக்கும் விஷயத்தை பிரதீப்பை கொண்டே விக்ரமிற்கு தெரிவித்து விட்டானா என்ற ஷ்யாமின் கேள்விக்கு, “அதுக்கு தான் எங்க வீட்டுலயே ஒரு பிளாக்ஷீப் இருக்கே!” என்று ஸ்வரூபன் கூற, மற்ற இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

 

“யாரை டா சொல்ற? உங்க மாமாவையா?” என்று அகில் வினவ, அவனை தீப்பார்வை பார்த்தான் ஸ்வரூபன்.

 

“சரி சரி தாமஸையா சொல்ற?” என்று கேள்வியை மாற்றினான் அகில்.

 

“அவருக்கு அவ்ளோ சீன் இல்லையே. இங்க நடக்குறதை பையன் கிட்ட புலம்ப மட்டும் தானே தெரியும்!” என்று ஷ்யாம் கூற, “எக்ஸாக்ட்லி மச்சான். கல்யாணமான புதுசுல, அவரைப் பெரிய வில்லன் ரேஞ்சுக்கு நினைச்சுட்டு, நானும் அவரு போன் பேசுறதை ஒட்டுக் கேட்டேன். பார்த்தா மனுஷன் புலம்பி தள்ளிட்டாரு. பாவம் அந்த கிரீஷ் எப்படி தான் இவரு புலம்பலை கேட்டுட்டு இருக்கானோ?” என்றான் அகில்.

 

ஆனால், ஸ்வரூபனோ யோசனையுடன் இருக்க, “என்னடா தீவிரமான சிந்தனைல இருக்க?” என்றான் ஷ்யாம்.

 

ஒரு பெருமூச்சுடன், “இப்போ விக்ரமுக்கு தகவல் போயிருக்குறது அவர் மூலமா தான்.” என்று கூற அகில் அதிர்ந்தான் என்றால் ஷ்யாமோ புருவம் சுருங்க அவன் கூறியதை உள்வாங்கிக் கொண்டான்.

 

“அப்போ தாமஸுக்கு வேற யாரோ உதவி செஞ்சுட்டு இருக்காங்களோ? அதுவும் உங்க வீட்டுல இருந்தே.” என்று சரியாக கணித்தான் ஷ்யாம்.

 

“ஆமா, எனக்கு ரெண்டு மூணு பேர் மேல சந்தேகமா தான் இருக்கு.” என்று ஸ்வரூபன் நிறுத்த, “அடேய் இரு டா, இன்னும் அந்த தாமஸ் விக்ரமுக்கு ஹெல்ப் பண்ணிருக்காருன்னு சொன்னதுலயிருந்தே நான் வெளிய வரல. அதுக்குள்ள குடும்பத்துல ஸ்பை வேற இருக்காங்கன்னு அடுத்த ஷாக் குடுக்குற.” என்று புலம்பினான் அகில்.

 

அவனைக் கண்டு கொள்ளதவாறு நண்பர்கள் இருவரும் தாங்கள் சந்தேகப்படும் நபர்களையும் அதற்கான காரணங்களையும் விவாதித்தனர்.

 

சற்று நேரம் பொறுத்திருந்த அகில், “போதும் டா. ஒரே ஒரு கேஸ், இப்படி மொத்த குடும்பத்தையும் சந்தேக லிஸ்ட்ல வச்சுருக்கீங்களே டா!” என்றான்.

 

அதுவரை தீவிரமாக விவாதத்தில் ஈடுப்பட்டிருந்தவர்கள் அகிலின் புலம்பலில் அவனை வம்பிழுக்க விரும்பினர்.

 

“நீயும் தான் அந்த லிஸ்ட்ல இருக்க. சொல்லப்போனா முதல் பேரே உன் பேர் தான்.” என்றான் ஷ்யாம்.

 

“எதே நானா? நான் என்ன டா செஞ்சேன்? ஒரு நேர்மையான, கடமை தவறாத போலீசை பார்த்து இப்படி வீணா பழி போடுறீங்களே, உங்களுக்கே அநியாயமா தெரியல?” என்றான் அகில்.

 

“நேர்மையான, கடமை தவறாத போலீஸ் தான், விக்டிமை கடத்திட்டு போக ஹெல்ப் பண்றவனா? இதுல அக்யூஸ்ட் கூட எல்லாம் கூட்டு வச்சுருக்க?” என்று கடுமையான குரலில் ஷ்யாம் கூற, அகிலோ பாவமாக ஸ்வரூபனைக் கண்டான்.

 

ஸ்வரூபனோ எப்போதும் போல அவனைக் கண்டுகொள்ளாமல் இருக்க, “உங்களுக்கு பிரெண்டா பிறந்த பாவத்துக்கு இன்னும் என்னவெல்லாம் கேட்க வேண்டியதிருக்கோ? மிஸ்டர். கஞ்சி சட்டை, அந்த அக்யூஸ்ட் உங்க பக்கத்துலயே இருக்கான். ஆனா, அது உங்களுக்கு தெரியாது. நீங்க இவ்ளோ நேரம் யாருக்காக பேசிட்டு இருந்தீங்களோ, அந்த ‘விக்டிம்’ அதே அக்யூஸ்ட் வீட்டுல வயிறு முட்ட தின்னுட்டு என்னைப் போல அப்பாவி ஜீவன்களை துன்புறுத்திட்டு இருக்குறது உங்களுக்கு தெரியாது. அப்படி தான?” என்றான் அகில்.

 

அகிலின் ‘கஞ்சி சட்டை’ என்ற விழிப்பில், அது யாரிடமிருந்து வந்திருக்கும் என்பதை யூகித்த நண்பர்கள் இருவருக்கும் சிரிப்பு வந்தாலும், அதை மறைத்துக் கொண்டனர்.

 

“உனக்கும் உன் பாச மலருக்கும் நான் ‘கஞ்சி சட்டையா?” என்று ஷ்யாம் மீசையை முறுக்க, “என் தங்கச்சி பார்க்க தான் லூசு மாதிரி இருப்பா. ஆனா, உனக்கு பேரெல்லாம் சரியா தான் வச்சுருக்கா.” என்று சிலாகித்த அகிலை, “யோவ் பிரதர், யாரு லூசு?” என்ற வசனம் திரும்பிப் பார்க்க வைக்க, அங்கு நமுட்டுச் சிரிப்புடன், அலைபேசியை அகிலின் முகம் தெரியும்படி பிடித்திருந்தான் ஸ்வரூபன்.

 

அதில் விடியோ காலில் இருந்த வர்ஷினியோ கோபத்தில் இருக்க, அவளை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான் அகில்.

 

‘இவளுக்கு எப்போ டா கால் பண்ண?’ என்று அகில் மைண்ட் வாய்ஸ் மூலமே ஸ்வரூபனை வினவ, அவனோ தோளை குலுக்கிக் கொண்டான்.

 

“ஹலோ, உங்களை கேள்வி கேட்டு ரெண்டு நிமிஷமாச்சு.” என்று ‘கிவிஸ் ப்ரோக்ராம்’ ரேஞ்சிற்கு வர்ஷினி கூற, “அட இரும்மா, என்ன சொல்றதுன்னு தெரியாம தான யோசிச்சுட்டு இருக்கேன்.” என்று மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து வெளியிலேயே உளறிவிட்டான்.

 

அகிலின் நல்ல வேலையோ, ரூபா வர்ஷினியை எதற்கோ அழைக்க, அவளும் விடியோ காலை அணைத்துவிட்டு சென்று விட்டாள்.

 

‘ஷப்பா என் பொண்டாட்டி காப்பாத்திட்டா!’ என்று மகிழ்ந்த அகில், “ஆமா, அவளுக்கு எப்போ டா கால் பண்ண?” என்று ஸ்வரூபனிடம் வினவ, “விக்டிம் வயிறு முட்ட தின்னுட்டு இருக்கான்னு நீ வாக்குமூலம் குடுத்தப்போவே கால் பண்ணிட்டேன்.” என்றான்.

 

“க்கும், இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல. ஆமா, உனக்கும் அவளுக்கும் தான் முட்டிட்டே இருக்குமே. நீ எதுக்கு அவளுக்கு கால் எல்லாம் பண்ற?” என்று சந்தேகத்துடன் அகில் வினவ, “எல்லாம் ஒரு சோசியல் சர்வீஸ் தான்.” என்றான் ஸ்வரூபன் அவனின் பிரத்யேக தோள் குலுக்களுடன்.

 

அத்தனை நேரம் அமைதியாக அங்கு நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த ஷ்யாமோ, “இங்க என்ன நடக்குது?” என்று ஸ்வரூபனை பார்க்க, நண்பனை மாட்டிவிட கிடைத்த நல்ல வாய்ப்பை வீணடிக்க விரும்பாத அகிலும், “நல்லா கேளு டா. நான் ஏதாவது கேட்டா, தோள் மேல ஏதோ விழுந்த மாதிரி குலுக்கிட்டு போயிடுவான்.” என்றான்.

 

ஷ்யாமின் கேள்வியில், ஸ்வரூபனோ வழக்கம் போல தோளை குலுக்க ஆரம்பித்து, பின்னர் அகிலின் பதிலில் சிரித்து விட்டான்.

 

“இங்க நடக்குறது இருக்கட்டும், அங்க என்ன நடக்குதாம்? நடுரோடுன்னு பார்க்காம, ஒரு பொண்ணுகிட்ட விசாரணை நடக்குதாமே?” என்று இப்போது ஸ்வரூபன் ஷ்யாமை பார்த்து வினவ, உடனே ஷ்யாமோ அகிலை திரும்பி பார்த்தான்.

 

“அடப்பாவி, உனக்கு பதில் இல்லன்னா, இப்படி தான் என்னைக் கோர்த்து விடுவியா?” என்று முணுமுணுத்த அகில், வராத அழைப்பை காரணம் காட்டி, அலைபேசியுடன் வெளியேறி விட்டான்.

 

அவனைக் கண்டு மற்ற இருவரும் சிரித்தபடி அவனை பின்தொடர்ந்தனர்.

 

ஷ்யாமின் தோளில் கைபோட்ட ஸ்வரூபனோ, “யாருடா அந்த சோடாபுட்டி? எதுவா இருந்தாலும் சட்டுன்னு யோசிச்சு முடிவெடுக்குற என் நண்பனை, இப்படி ரெண்டு நாளா யோசனையில திரிய வைக்குறா? ஒரு திருட்டு கேஸுக்கு இவ்ளோ ஃபோன் காலான்னு போலீஸ் ஸ்டேஷனே அலறுது!” என்று கேலி செய்ய, “நீயுமா ஸ்வரூபா? அது காலேஜ்ல ஒண்ணா படிச்ச பொண்ணுன்னு பேசுனேன். இந்த விக்ரம் கேஸ்ல பிஸியானதால, மத்த எந்த கேஸையும் கவனிக்கல. இந்த திருட்டு கேஸும் சாதாரண கேஸ் மாதிரி தோணல. அதான், கொஞ்சம் பிரஸர் குடுத்தேன். உடனே, உனக்கு நியூஸ் வந்துடுச்சா? அது எப்படி டா எல்லா இடத்துலயும் ஸ்பை வச்சுருக்க? பேரு தான் ப்ரொஃபெசர், பண்றதெல்லாம் பக்கா ஃபிராடுத்தனம்.” என்றான் ஷ்யாம்.

 

“ஹ்ம்ம், வெற்றிகரமா பேச்சை மாத்திட்ட! இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி நழுவுறன்னு பார்க்குறேன்.” என்ற ஸ்வரூபனும் வேறு பேச்சுக்கு தாவி விட்டான்.

 

ஆனால், ஷ்யாமின் மனமோ, ‘காலேஜ்ல ஒண்ணா படிச்ச பொண்ணுன்னு தான் அவளுக்கு என்னவோ ஏதோன்னு இவ்ளோ துடிக்குறியா?’ என்று கேள்வி கேட்டது.

 

ஆம், ஷ்யாமின் அலைபேசியிலிருந்து காவல் நிலையத்திற்கு மட்டுமல்ல, ஷர்மியுடன் பணிபுரியும் நிழற்படக் கருவியாளருக்கும் பல அழைப்புகள் சென்ற வண்ணம் இருந்தனவே. காரணம், ஷர்மி இரு நாட்கள் வேலைக்கு வரவில்லை என்பது தான்!

 

சரியாக சொல்லப் போனால், ஷ்யாம் – ஷர்மியின் இறுதி சந்திப்பு நிகழ்ந்ததிலிருந்து, அவள் சம்பந்தப்பட்ட யாரும் அவளைக் காணவில்லை என்ற தகவலை பெற்றிருந்தான் ஷ்யாம்.

 

அதனுடன், ஷர்மியின் தம்பி வினய்யும் காணவில்லை என்பது அவன் சந்தேகத்தை அதிகரித்தது.

 

அதன் காரணமாகவே, அந்த திருட்டு வழக்கின் மீது ஷ்யாம் தீவிரம் காட்டுகிறான் என்பது அவன் மட்டுமே அறிந்த உண்மை. காரணம், வினய்யின் புகைப்படம், அந்த வழக்கில் பிடிபட்டு ஜாமினில் விடுப்பட்டவர்களின் பட்டியலில் இருந்தது.

 

மனதின் கேள்வியை புறக்கணித்த ஷ்யாமோ, ‘கண்டிப்பா ஏதோ பிரச்சனைல தான் சிக்கியிருக்கா. இதுக்கு மேல தாமதிக்க கூடாது. நாளைக்கே கிளம்பனும்.’ என்று திட்டம் தீட்டினான்.

 

அவன் எண்ணியதை போலவே, பெரிய பிரச்சனையில் தான் சிக்கியிருந்தாள் ஷர்மி. அதற்கு காரணமான வினய்யோ, உடலில் பல இடங்களில் இரத்த காயத்தோடு சுருண்டு படுத்திருந்தான்!

 

தீவிர சிந்தனையில் இருந்த ஷ்யாமின் தோளை தட்டிய ஸ்வரூபனோ, “ஹலோ, பேரை கேட்டதும் கனவா? எப்போ ஊருக்கு கிளம்புறன்னு இதோட பத்தாவது முறை கேட்டுட்டேன்.” என்றான்.

 

“வர வர சார் கனவுல தான் இருக்காரு.” என்று அகிலும் கூட்டு சேர, “சொல்ல வேண்டியவங்க கிட்ட சொன்னா தான் உன் கொழுப்பு குறையும்.” என்று அகிலை பார்த்து கூறிய ஷ்யாமோ, “என்னை துரத்துறதுலயே இரு! நாளைக்கு கிளம்பிடுவேன் போதுமா?” என்று ஸ்வரூபனிடம் கூறினான்.

 

“எதே நாளைக்கா? மிஸ்டர். கஞ்சி சட்டை, நீங்க மொராட்டு சிங்கிள், நினைச்சா கிளம்பிடுவீங்க. நானெல்லாம் பிள்ளக்குட்டிக்காரன். என் நிலைமையையும் யோசிச்சா நல்லா இருக்கும்!” என்றான் அகில்.

 

“இன்னும் பிள்ளையே பொறக்கல, அதுக்குள்ள எவ்ளோ பொய் சொல்றான் பாரு.” என்று அகிலின் வயிற்றில் ஸ்வரூபன் குத்த, “நீயெல்லாம் தாய்மாமனா டா?” என்று வயிற்றை தடவியபடி நேராக பார்த்த அகில், “அடக்கடவுளே, இதென்ன மகளிர் கூட்டணி வீதியுலா வந்துட்டு இருக்கு?” என்று பதறினான்.

 

அவன் பதற்றத்திற்கு காரணமான மகளிர் கூட்டணியில் பெரியவர்கள் பெரியநாயகி, அகிலாண்டேஸ்வரி, தமயந்தி முதல் வர்ஷினி, ரூபி வரையான ஐவரும் இவர்களை நோக்கி தான் வந்து கொண்டிருந்தனர்.

 

அவர்களை பார்த்ததும் தேங்கி நின்ற ஷ்யாமை ஸ்வரூபன் தான் வற்புறுத்தி முன்னழைத்து சென்றான்.

 

“எல்லாரும் ஒண்ணா எங்க போயிட்டு வரீங்க?” என்று அகில் வினவ, “கண்ணு வைக்காத டா அகிலா. குடும்பமா கோவிலுக்கு போயிட்டு வரது எவ்ளோ நிறைவா இருக்கு தெரியுமா?” என்றார் பெரியநாயகி. அவரின் பதில் அகிலுக்காக இருந்தாலும் பார்வை முழுவதும் ஷ்யாமின் மீது தான் இருந்தது.

 

அதை இரு ஜோடிக் கண்கள் கவனித்தபடி தான் இருந்தது.

 

“ஹலோ கெழவி, பெண்கள் மட்டும் படையெடுத்து போயிட்டு வந்துட்டு, குடும்பமா போறோம்னு பில்ட்டப் வேறயா? க்கும், இந்த குடும்பத்துல பொறந்த ஆம்பளைங்களும் சரி, வாக்கப்பட்டு வந்த ஆம்பளைங்களும் சரி, வாயில்லா அப்பாவியா இருக்குறோம்.” என்று அகில் கூற, “அட கூறுகெட்டவனே, வெளிய நின்னுட்டு வாயளந்துட்டு இருப்பியா? உள்ள வாடா.” என்றபடி பெரியநாயகி உள்ளே சென்று விட்டார்.

 

“பார்த்தியா மச்சான், கெழவிக்கு பேச்சை! மாப்பிள்ளைன்னு கொஞ்சமாச்சும் மரியாதை இருக்கா பாரு!” என்று ஸ்வரூபனிடம் பேசிக் கொண்டிருந்த அகிலின் காதை பிடித்து திருகிய அகிலாவோ, “இந்த மரியாதை போதுமா மாப்பிள்ளை?” என்று கேலி செய்ய, ரூபியோ களுக்கென்று சிரித்து விட்டாள்.

 

“க்கும், பொண்டாட்டி இப்படி இருந்தா எங்குட்டு எனக்கு மரியாதை கிடைக்கும்? சரி சரி, இவனுங்க கிட்ட மாட்டி திண்டாடி வந்துருக்கேன், சூப்பரா ஒரு சுக்கு காபி போடுங்க மாமியாரே.” என்றபடி உள்ளே நழுவ பார்த்தான் அகில்.

 

அப்போது அவனை தடுத்தது வர்ஷினியின் குரல்.

 

“பிரதர், அதுக்குள்ள எங்க ஓடுறீங்க?” என்று குரல்வழியாக வர்ஷினி தடுக்க, அவனை உள்ளே செல்ல முடியாதபடி ரூபி எதிர்க்க நின்று தடுத்தாள்.

 

இவர்களின் விளையாட்டை சிரிப்புடன் பார்த்தபடி அகிலாவும் தமயந்தியும் உள்ளே சென்று விட்டனர்.

 

அவர்களும் ஷ்யாமை கண்டு கொள்ளவில்லை என்பதையும் வர்ஷினி கவனித்தாள்.

 

ரூபியை பார்த்து, “புருஷன் திட்டு வாங்க போறதை சந்தோஷமா பார்க்குற பொண்டாட்டி நீயா தான் டி இருப்ப!” என்று அகில் முணுமுணுக்க, “எனக்கு சான்ஸ் கிடைக்குது, நான் பார்க்குறேன்.” என்று அண்ணனை போல தோளை குலுக்கியவள், “வெளிய பஞ்சாயத்து முடிஞ்சதும் உள்ள ஒரு பஞ்சாயத்து இருக்கு உங்களுக்கு.” என்றும் கூற, ‘இந்த சூனிய பொம்மை என்னத்த போட்டுக் குடுத்துச்சோ!’ என்ற எண்ணத்துடன் வர்ஷினியை நோக்கினான் அகில்.

 

“ஆக, மூணு பேரும் கூட்டுக்களவானிங்க தான்ல?” என்று கைகளை கட்டியபடி தோரணையாக வர்ஷினி வினவ, மூவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி பதில் கூறாமல் இருந்தனர்.

 

“எப்படி எப்படி, இந்த கஞ்சி சட்டை என்னை விசாரிப்பாராம், இந்த ஃபிராடு ப்ரொஃபெசர் என்னை கடத்தி காப்பாத்துவாராம். இவங்க ரெண்டு பேரை கூட விட்டுடலாம். ஆனா, கூட இருந்தே நடிச்ச இந்த துரோகியை என்ன பண்ண?” என்று ஷ்யாம், ஸ்வரூபனில் ஆரம்பித்து அகிலிடம் முடிக்க, “போட்டுடலாமா?” என்று ரூபியும் எடுத்துக் கொடுத்தாள்.

 

“ரூபி செல்லம், நோ வயலன்ஸ்.” என்று தங்கையை சரிகட்ட முடியாது என்பதை நன்கு புரிந்த அண்ணனாக மனையாளை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினான் அகில்.

 

“ஏதோ போலீஸ் அண்ணியாம்ல! அது யாரு எனக்கு தெரியாத அண்ணி?” என்று ரூபி முந்தானையை இடுப்பில் சொருகி தயாராக, “ஆத்தி, ஒன்னு கூடிட்டாங்க.” என்று கத்தியபடி அகில் ஓட, அவனை துரத்தியபடி ரூபி ஓட, “புள்ளத்தாச்சி பொண்ணை எப்படி ஓட வைக்கிறான் பாரு!” என்று பெரியநாயகியின் குரல் அவர்களை துரத்தியது.

 

“அங்க வேடிக்கை பார்த்தது போதும்! சொல்லுங்க, எத்தனை நாள் பிளான் இது?” என்று வர்ஷினி கேட்க, “சைனா செட்டு பொம்மை மாதிரி இருந்துட்டு என்னையே விசாரிக்கிறியா?” என்று ஷ்யாம் கேட்க, “அது என்ன ‘என்னை’யே? போலீஸ்னா என்ன கொம்பா முளைச்சுருக்கு? ஹான், ஒரு போலீஸா இருந்துட்டு, இந்த மாதிரி கிட்னாப்பருக்கு ஹெல்ப் பண்ணி இருக்கீங்க.” என்று வர்ஷினி பதிலுக்கு பேசினாள்.

 

“அடிங், யாரை பார்த்து கிடனாப்பர்னு சொல்ற?” என்று இம்முறை ஸ்வரூபன் வினவ, அதில் சற்று பின்வாங்கிய வர்ஷினியோ, “ஏன் எனக்கென்ன பயமா? உங்களை தான் சொன்னேன்.” என்று அடங்கிய குரலில் கூறும்போதே, “யாரது என் பேத்தியை மிரட்டுறது?” என்றபடி அங்கு வந்தார் வைத்தீஸ்வரன்.

 

தாத்தா துணை கிடைத்த மகிழ்ச்சியில் வர்ஷினி ஸ்வரூபனை மிதப்பாக பார்த்து வைக்க, அவன் பதில் கொடுக்கும் முன்பே, “இன்னும் வெளிய என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று பெரியநாயகியின் குரல் அனைவரையும் அடக்கியது.

 

“உள்ள போயிடுவோம். இல்லன்னா, இங்கேயே வந்தாலும் வந்துடுவா உங்க பாட்டி.” என்று வைத்தீஸ்வரன் கூற, “அவ்ளோ பயமா தாத்தா?” என்று சிரித்தபடி உள்ளே செல்ல அடியெடுத்து வைத்தாள் வர்ஷினி.

 

இரண்டடிகள் எடுத்து வைத்தவள், தனக்கு பின்னால் ஸ்வரூபனும் ஷ்யாமும் வராததை உணர்ந்து, “நீங்க வரல?” என்று வினவ, ஸ்வரூபனும் அதே கேள்வியுடன் ஷ்யாமை பார்த்தான்.

 

“நான் அப்படியே கிளம்புறேன் ஸ்வரூபா.” என்றபடி ஷ்யாம் அங்கிருந்து கிளம்ப முற்பட, “போலீஸ்காரருக்கு பேசிக் கர்ட்ஸி தெரியாதா? ஒருத்தர் வீட்டுக்கு கூப்பிட்டா, பத்து நிமிஷமாச்சும் தலையை காட்டிட்டு போகணும்.” என்று பாடம் எடுத்தாள் வர்ஷினி.

 

நண்பனை கூறியதும் ஸ்வரூபனுக்கு கோபம் வர, “வீட்டுக்கு கூப்பிட்டா தான வருவான்.” என்று கூற, “நான் தான் கூப்பிடுறேன்ல.” என்ற வர்ஷினி வைத்தீஸ்வரனிடம் திரும்பி, “தாத்தா, இது எனக்கும் வீடு தான?” என்று வினவினாள்.

 

அவளின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் வைத்தீஸ்வரன் மனைவியை பார்க்க, பெரியநாயகியோ தன் விருப்பமின்மையை முகத்தில் காட்டினார்.

 

சில நொடிகள் அமைதியாக இருக்க, “மையூம்மா, இது உன் வீடு தான்டா. இதுல என்ன சந்தேகம் உனக்கு? ஷ்யாம் உள்ள வா.” என்றார் தமயந்தி.

 

பெரியநாயகி ஏதோ சொல்ல வர, “ம்மா, நான் எதுவும் தப்பா சொல்லலன்னு நினைக்கிறேன். இன்னும் பழசையே நினைச்சிட்டு என்ன சாதிக்க போறோம்? விடுங்க மா.” என்று தமயந்தி கூற, அவரே அப்படி கூறிய பின்னர், பெரியநாயகிக்கும் மறுக்க வேறு காரணங்கள் இல்லை.

 

“இப்போயாச்சும் உள்ள வருவீங்களா, இல்ல கர்ட்ஸி தெரியாம அப்படியே போயிடுவீங்களா?” என்று வர்ஷினி நமுட்டுச் சிரிப்புடன் வினவ, “வரலன்னா, எனக்கு கர்ட்ஸி இல்லன்னு போஸ்டர் அடிச்சு ஓட்டுனாலும் ஒட்டிடுவ! அதுக்காகவாச்சும் வரத்தான் செய்யணும் போல!” என்று சலித்தபடி கூறுவது போலிருந்தாலும், அவன் முகம் பிரகாசித்ததை வர்ஷினி மட்டுமல்ல, ஸ்வரூபனும் வைத்தீஸ்வரனுமே பார்த்தனர்.

 

பெண்களில் பெரியநாயகியை தவிர, ஆண்களில் தாமஸை தவிர அனைவரும் ஷ்யாமிடம் சகஜமாகவே பேசினர்.

 

சொல்லி வைத்ததை போல பத்து நிமிடங்களில் கிளம்புவதாக சொன்ன ஷ்யாமை தடுத்த தமயந்தி, “சாப்பிட்டு போ.” என்று உபசரிக்க, அந்நிகழ்வை கண்ட ஸ்வரூபன் மர்மமாக சிரித்தான்.

 

அதை தற்செயலாக கண்ட வர்ஷினி, ‘க்கும், இவங்க ரியாக்ஷன் மட்டும் புரிஞ்சுக்கவே முடியல ப்பா சாமி.’ என்று மனதிற்குள் புலம்ப, எப்போதும் போல இப்போதும் அது கேட்டது போல சட்டென்று அவளை திரும்பி பார்த்தான் ஸ்வரூபன்.

 

‘இந்த சுவருக்கு ஏதாவது மேஜிக் தெரியுமோ?’ என்ற ஆராய்ச்சியில் இருந்த வர்ஷினியின் பக்கம் வந்த ஸ்வரூபன், “பரவாலையே, உனக்கும் மேல்மாடி வேலை செய்யுதே!” என்றான்.

 

“பேரு தான் ப்ரொஃபெசர்! பாராட்ட எல்லாம் வரவே வராது போல.” என்று முணுமுணுத்தவள், திடீரென்று, “ஆமா, மிஸ்டர். கஞ்சி சட்டைக்கும் பாட்டிக்கும் இடையில என்ன பிரச்சனை? இல்லல்ல, பாட்டின்னு மட்டும் இல்ல, அத்தை, அம்மா கூட அவங்களை முதல்ல கண்டுக்கலையே!” என்று தன் சந்தேகத்தை வினவினாள்.

 

அத்தனை நேரமிருந்த சிரிப்பு மறைந்து தீவிர பாவத்திற்கு மாறிய ஸ்வரூபனோ, “எல்லாமே உடனே தெரிஞ்சுக்கணும்னு நினைக்காத மயூரா. அது, உனக்கு தான் வலியை தரும்.” என்றான்.

 

வர்ஷினியோ அவன் பேச்சின் உட்பொருளை அறிய முற்படவில்லை. அவள் தான் அவனின் ‘மயூரா’விலேயே தேங்கி விட்டாளே!

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்