Loading

“காப்பியன், இனி எல்லாம் தயார் செய்ய வேண்டியதுதான். எனக்கு தெரிஞ்சு, அதுக்கான நேரம் வந்திருச்சு” சென்னி.

அவன் வந்தது கூட தெரியாமல்,
காப்பியன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.

“டேய், என்னடா ஆச்சு?” சென்னி.

“சென்னி, இது சரியா வருமா?” காப்பியன்.

“எல்லாம் கைகூடி வர நேர்த்தில் இது என்னடா கேள்வி?”

“நிறைய பேரோட உயிர் சம்மந்தப்பட்டிருக்குடா. யாருக்காவது ஏதாவது ஆச்சுனா?”

“அப்போ வேற எப்போதான் ஆராய்ச்சி செய்றது. இப்படி யோசிச்சுதான் நாசமா போயிட்டோம்.”

“தப்பில்லையா?”

“எப்படி தப்பாகும்..”

“ஒருவேளை ஏதாவது தப்பாச்சுன்னா, அது தெரிஞ்சே செய்ற உயிர்வதைக்கு சமம்.”

“உயிர்வதை, தப்பு… இப்படி பெரிய வார்த்தை எல்லாம் ஏன்டா சொல்ற. வீட்ல வச்சிருக்க சீனில எறும்பு வந்தா என்ன செய்வோம்” என்றான் கேள்வியுடன்.

அதுவும் இதுவும் ஒன்றா என்று பார்த்து வைத்தான் காப்பியன்.

“அதுவும் இதுவும் ஒன்னுதான். எறும்பு உயிர் வாழ கொஞ்சம் சீனி நமக்கு கொடுக்க மனசு இல்லை. அதே மனநிலை மனுஷனுக்கு வந்து ரொம்ப நாளாச்சு. அதாவது ஒருத்தன் வாழ பல பேரை அழிக்கிறது. ஒரு பரம்பரை வாழ சில இனத்தையே அழிக்கிறது… இப்படி நிறைய வகைகள் மனிதர்களில் இருக்காங்க.”

“போனா திரும்பி வர ரெண்டு வருஷம் ஆகுமே. அதுவரை அங்க மேனேஜ் பண்ண முடியுமா?” என்ற காப்பியனை ஆழ்ந்து பார்த்தான் சென்னி‌.

“என்னடா பாக்குற… திரும்பி வரணும்னு நினைச்சா கூட வர முடியாது. ரெண்டு வருஷம் உயிரைக் கையில் பிடிச்சு வச்சிருக்கணும். முடியுமா?” காப்பியன்.

“இது முதல் முயற்சி. எல்லா ஏற்பாடுகளும் சரியா இருக்கு. அதனால கவலைப் படாம வேலையைப் பாரு” சென்னி.

“அந்த போலீஸ்காரரன் கணி அத்தியூர் போய்ட்டான். திராவிடனை விசாரிக்கிறான்” காப்பியன்.

“திராவிடனுக்கு ஒரு வாரம் எந்த தகவலும் கொடுக்காத. கொஞ்ச நாள் எந்த தகவல் தொடர்பும் இருக்கக்கூடாது‌” சென்னி.

“நாம எப்போ போறோம்.”

“போகலாம். அதுக்கும் தயார் செஞ்சுட்டுதான் இருக்கேன்” சென்னி.

“இன்னும் ஒரு வாரம்தான். நம்ம கனவு நிறைவேற முதல் படி எடுத்து வைக்கப் போறோம்” என்று கூறிவிட்டு சென்னி அந்த இடத்தைவிட்டு அகன்றான்.

அவனை நினைத்தால் ஆச்சரியமாக இருந்தது. இன்னும் சில தினங்களில் இவனின் திட்டங்கள் பேசு பொருளாக இருக்கப் போகின்றன. அவன் கனவின் முதல் படி என்று கூறுகிறான். அவனைப் பொறுத்தளவு அது சரிதானோ? அவன் கனவின் முதல் படியோ?

********

அன்று இரவு கணி, அதி மற்றும் கீர்த்தி புறப்பட்டனர். காத்தவராயனின் நிலத்தின் அருகில் வந்துவிட்டனர். சில உபகரணங்களும் எடுத்து வந்திருந்தனர். சற்று தூரத்தில் இருந்து கயிற்றுல் கொக்கி ஒன்று முடிச்சிட்டு அதை அந்த நிலம் நோக்கி எரிந்து, கொஞ்சம் நெல்லை எடுக்கலாம் என்று எண்ணியிருந்தனர்.

அந்த நிலத்தின் அருகில் சென்றுவிட்டனர். அது ஆள் நடமாட்டம் இல்லாத இடமாக இருந்தது. நிசப்தம் சப்தமாக இரைந்து கொண்டிருந்து. அதில் கருமை துளித்துளியாய் இயைந்துக் கொண்டிருந்தது.

“கணி சார்..‌ இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல. வாங்க போயிடலாம். எனக்கு என்னமோ இது விஷப்பரிட்சை மாதிரி இருக்கு‌” கீர்த்தி.

“சும்மா இருடா.. ரிஸ்க் எடுக்காம எதுவும் கிடைக்காது” அதி‌.

“இந்த கேஸ்க்கும் இதுக்கும் என்ன சம்மந்தம். என்னமோ திசை மாறிப் போற மாதிரி இருக்கு” என்று கீர்த்திப் புலம்பிக் கொண்டிருக்க, கணி அவன் வேலையில் கவனமாக இருந்தான். நன்றாக திரிக்கப்பட்ட கயிற்றில் கொக்கி போல் உள்ள இரும்பு உபகரணம் ஒன்றை பொருத்தினான். கயிற்றின் முடிச்சை இழுத்து சரி பார்த்தான்.

“சார்..‌ விருந்தும் மருந்தும் மூணு நாள்தான். இந்த ஊரைவிட்டு துறத்துறதுக்கு முன்னாடி நாமளே போயிட்டா நல்லது” என்ற கீர்த்தியின் தலையில் ஒரு கொட்டை வைத்தான் கணி.

அவன் நிலத்தை நோக்கி அந்த கயிறை எரிய தயார் நிலையில் இருக்கும் பொழுது, மின்னல் ஒன்று வெட்டியது. விழிகள் கூச, அனைவரும் திரும்பினர். நனியிதழ் நடந்து வந்தாள்.

அவளைக் கண்டதும் மூவரும் அவளின் புறம் திரும்பினர். கணியின் கைகளில் ஏய்தும் நிலையில் தயாராய் இருந்த ஆயுதம் கீழிறங்கியது‌.

அவள் கைகளில் ஒரு கட்டு நெற்பயிர் இருந்தது. அதை எடுத்து கணியிடம் நீட்டினாள்.

அவன் அதை வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“அப்பா நீ வந்துட்டியா? இப்போ யாரு தப்பு செய்றா? என்ன நடக்குது” கொஞ்சம் சொல்லேன். மண்டை வெடிக்கிற மாதிரி இருக்கு” கீர்த்தி.

“ஆமா நனி.. இப்போ என்ன போராட்டம் நடக்குது. யாருக்காக நடக்குது. நீ திரும்பவும் எங்களை கருவியா பயன்படுத்துறியா. அப்புறம் ஏன் எங்களை ஒட்டாத பார்வைப் பார்க்குற. உனக்காக நாங்க என்ன வேணா செய்யத் தயாரா இருக்கோம்” அதி.

கணி ஒன்றும் வினவவில்லை. அவனுக்கு கேட்க ஆயிரம் கேள்விகள் இருக்கிறது. ஆனாலும் அமைதி காத்தான். என் மனைவியை மீட்க வேண்டும். உதவி செய் என்று அவளிடம் கேட்டுவிடலாம். ஆனால் அவள் எழுப்பப் போகும் எதிர்வினாவிற்கு இவனிடம் பதில் இல்லை.

“இம்முறை போராட்டமும் இல்லை. பழிவாங்கலும் இல்லை. மாந்தர் இழைத்த செயற்கரிய யாவுள நன்செயல் யாதென்று அறிவீர்களா மதலைகளே?” நனி.

“நனி, ஏன் இப்படி புரியாம பேசுற” என்று அதி வினவ, அவள் மெல்லிய சிரிப்பொன்றை உதிர்த்தாள்.

“மோனத்திலிருப்பது என்று உறுதியாக அறுதியொன்று எழுதிவிட்டேன் என் மனத்திரையில்.”

“என்ன ஆச்சு? நாங்க என்ன செஞ்சோம்னு கேக்குற தகுதி எங்களுக்கு இல்லை. இனி இப்படி நடக்காதுன்னு சொல்லவும் மனசில்லை. அப்படி சொன்னால் அது உண்மையும் அல்ல. ஆனால் இந்த நொடி உன்னோட துயரைத் துடைக்கனும்னு தோணுது நனி” அதி.

“இப்போ  கூட அந்த வயலில் இருந்து நெல் எடுத்துட்டு வந்து தந்திருக்க. உனக்கு நாங்க என்ன செய்யணும்னு சொல்லு” கீர்த்தி.

“கேள்வர்களே! நான் தங்களின் வினாக்களுக்கு விடையளிக்க விழையவில்லை. மௌனத்தீ கொண்டு வேள்வியொன்று நிகழ்த்தலாம் என்று முடிவு செய்துவிட்டேன்‌. இம்முறை போராடப்போவது உங்கள் இனமே. ஒரு விதை முளைக்க ஒராயிரம் துளிகள் கண்ணீர் வேண்டி நிற்கிறேன். என் இனத்தின் கொடையுள்ளம் வேண்டி மன்றாடி நிற்க வேண்டும் நும் இனம். என்னின் களவு போன மென்மையை, மேன்மை கொண்டு மீட்டெடுப்பேன்” நனியிதழ்.

கணியன் மனம் தெளிவில்லாமல் தவித்தது‌. பெருங்குற்றம் நிகழப்போவது போல் மனம் தொய்ந்து போக, நனி கொடுத்துச் சென்ற நெற்கதிர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். செல்லும் அவளின் நடையில் தொய்வில்லை. வந்தவள் என்ன உரைத்துச் சென்றாள் என்ற தெளிவில்லை இவர்களிடத்தில்.

“அதி, ஒரு விஷயம் தெளிவாயிருக்கு” கணி‌.

“என்ன சார்?” அதி‌.

“நனிக்கும் இந்த நிலத்துக்கும் சம்மந்தமில்லை” என்று கணி கூற, அது உண்மை என்றே தோன்றியது மற்ற இருவருக்கும்.

“அவளே இது எடுத்து பரிசோதிக்கக் கொடுத்துட்டு போயிருக்கான்னா, இதில் வேறு ‌ஏதோ விஷயம் இருக்கு” அதி.

“அதி, இதை என்ன செய்யணும். அடுத்த திட்டம் என்ன?” கணி.

“சார், இதை லேப்ல கொடுத்து டெஸ்ட் பண்ண சொல்லலாம்” என்று அதி முடித்துக் கொள்ள மூவரும் அந்த இடத்தைவிட்டு சென்றனர்.

அப்பொழுது திராவிடன் எங்கோ நடந்து செல்வதைப் பார்த்த மூவரும் அவன் பின்னே தொடர்ந்து சென்றனர்.

இருளுக்குள் மூச்சுக் காற்று கூட, வெளியில் கேட்காதவன்னம் நடந்து சென்றான் திராவிடன்.

மூவரும் அரவமேதும் செய்யாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்றனர். சற்று தூரத்தில் ஒரு புதருக்குள் சென்றவன், சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தான். யாரும் அவனைப் பின்தொடரவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு, ஓரிடத்தில் குழி தோண்ட ஆரம்பித்தான்.

குழியில் இருந்து ஒரு நெகிழிப் பையை எடுத்து அதிலிருந்து, ஒரு அலைபேசியை எடுத்தான். யாருக்கோ அழைத்தவன், காற்றுக் கூட அறியா வன்னம் உரையாடினான். மீண்டும் திரும்பி திரும்பி பார்த்தவன், அந்த அலைபேசியை புதைத்துவிட்டுச் சென்றான்.

அவன் சென்றதை உறதி செய்த பின்னர், இவர்கள் மூவரும் அந்த இடத்தைத் தோண்டி அலைபேசியை எடுத்தனர். அது உயிரற்று இருந்தது.

வேகமாக அதை உயிர்ப்பித்தான் கணி.

“சார்.. டயல் லிஸ்ட் பாருங்க” அதி.

வேகமாக சில பொத்தான்களை அழுத்தி தேடிய கணி, களைப்பும் சலிப்பும் மிஞ்ச, அதியிடம் அலைபேசியக் கொடுத்தான்.

“டேய் அதி… இந்த மாடல் போன் இன்னமும் இருக்காடா?” என்றான் கீர்த்தி ஆச்சர்யமாக. ஏனெனில் அது அலைபேசி அறிமுகம் செய்த பொழுது வந்த மாதிரி. அவ்வளவு பழமையானது. இப்பொழுது அது பழுதடைந்தால் மாற்று உபகரணங்கள் கூட இருக்க வாய்ப்பில்லை.

“இதெல்லாம் ட்ராக் பண்றது கஷ்டம். அதான் இதை பயன்படுத்துறாங்க” கணி.

அதில் தேடிப் பார்த்த அதியும் சலித்துக் கொண்டான்.

“என்னடா ஆச்சு..?” கீர்த்தி.

“அதுல ஒன்னுமே இல்லை.
அவன் டெலீட் பண்ணிட்டான்” அதி.

“இல்ல அவன் டெலீட் பண்ணல” கணி.

“அப்புறம்..” கீர்த்தி.

“நாம வந்தத பாத்துட்டான்.”

“என்ன சார் சொல்றீங்க.”

“நாம வந்ததைப் பார்த்துட்டான். அவன் பேசுனது இந்த போன்லேந்து இல்லை” கணி.

“சார்… குழப்பாதீங்க சார்.. இப்போதான் நனி வந்து குழப்பிட்டு போனா. நீங்க வேற” அதி.

“டேய் அவன் பேசி முடிச்சுட்டு டெலீட் பண்ணனும்னா, ஒரு முப்பது செகண்ட் ஆகும். இந்த போன்ல உள்ள வசதி அவ்ளோதான். டச் மாதிரி எதையும் செய்ய முடியாது. ஆனா அவன் பேசுன உடனே குழித் தோண்டி புதைச்சான்.

“அவனை நாம பின் தொடர்ந்து வரோம்னு தெரிஞ்சா எதுக்கு பேசணும். பேசாமையே இருந்திருக்கலாமே” கீர்த்தி.

“ஒருவேளை கடைசியா கவனிச்சிருக்கலாம்” கணி.

சரியென்று அந்த அலைபேசியை அந்த நெகிழிப்பைக்குள் வைத்து, மீண்டும் குழி தோண்டி புதைத்தனர்.

வேகமாக மீண்டும் அவனைப் பின் தொடர்ந்து சென்றனர். வந்த வழியில்தான் அவன் சென்றிருக்கக்கூடும் என்று நினைத்தனர்.

ஆனால் அவனைப் பிடிக்க முடியவில்லை. மறுநாள் காலையில் அவர்களைக் காண வந்தான் திராவிடன்.

“சார்… என்ன ஆச்சு? திருநல்லன் ஐயாவ கண்டுபிடிப்பீங்களா? எதுவுமே சொல்லாம இருக்கீங்க” திராவிடன்.

அவனை நக்கலாகப் பார்த்தான் கணி.

“கண்டுபிடிச்சாச்சு” கணி.

“யாரை..”

“திருநல்லனை யாரு கடத்தி வச்சிருக்கான்னு..”

“யாரு சார். அப்போ சொல்லுங்க. அவுங்களைப் போய் புடிக்கலாம். எனக்கு என்னமோ இங்க மீத்தேன் திட்டத்தை நிறைவேற்ற சிலர் போராடிகிட்டு இருக்காங்க. அவுங்க யாராவதுதான் இந்த வேலையை செஞ்சிருக்கணும். ஏனா திருநல்லன் ஐயா அவர் ஊர்ல, பெரிய கலவரம் செஞ்சவரு” திராவிடன்.

“இதைப் பயன்படுத்தி வேற யாராவது கடத்திருக்கலாம்ல” கணி.

“வேற என்ன காரணம் இருக்கும் சார்” திராவிடன்.

“அது தெரியல. ஆனா இந்த பெரிய தப்புக்கு பின்னாடி ஒரு பெரிய தப்பு நடக்குது. அது மட்டும் உண்மை” என்று கணி கூற, திராவிடன் சற்றே திடுக்கிட்டது உண்மை.

“என்ன சார் சொல்றீங்க. இதைவிட பெரிய தப்பு இருக்க முடியுமா என்ன?” என்று அவன் கேட்க, கணி அவனை அடித்துவிட்டான்.

“இந்த வேலையெல்லாம் எங்கிட்ட வச்சுக்காத. நேத்து நாங்க உன்னை ஃபாலோ பண்ணி வந்தது உனக்கும் தெரியும். எனக்கும் தெரியும். வேற ஒரு போனை புதைச்சு வச்சிட்டா எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறியா? ஒரு ரெண்டுநாள் இருடா… உன்னை கையும் களவுமா புடிக்கிறேன்‌” என்று கூற, கன்னத்தைப் பிடித்துக் கொண்டே அவர்களைப் பார்த்தான்.

அதியும் கீர்த்தியும் நமட்டுச் சிரிப்பு சிர்த்தனர்.

திராவிடா… இன்னும் ஒரு வாரம் இவுங்களை சமாளிச்சிரு. இல்லைனா மொத்தமா சொதப்பிரும்.

அதன்பிறகு இரண்டு நாட்கள் திராவிடன் கண்காணிக்கப்பட்டான். கணிக்கு நன்றாக தெரியும். இனி அவன் கவனமாய் இருப்பான் என்று. இருந்தும் அவனை எதுவும் செய்யாமல் இருந்தான்‌.

அந்த நெல்மணிகளின் ஆராய்ச்சி முடிவுகள் வந்திருந்தது. அதைக் கேட்ட அதி திடுக்கிட்டனர்.

“அதி, என்னடா ஆச்சு. சொல்லித் தொலைடா…”

“சார்.. அந்த நெல் முத்திப் போகாம அப்படியே இருக்க நனி காரணம் இல்லை சார். அவ சொன்ன மாதிரி அவ பார்வையாளராதான் இருக்கா” அதி.

“டேய்.. புரியிற மாதிரி சொல்லித் தொலை.”

“அது எப்படி சொல்றது” அதி.

“டேய்.. சொல்லித் தொலைடா” கீர்த்தி.

“அது மரபணு மாற்றம் செய்யப்பட்ட நெல்.”

“சரி.. அதுக்கும் இவுங்க மூட நம்பிக்கைக்கும் என்னடா தொடர்பு.”

“இது எல்லாமே திட்டமிட்டு நடக்குது சார். அதாவது எல்லா உயிரிணத்துக்கும் ஏஜிங் ஃபேக்டருக்கு ஒரு ஜீன் இருக்கும். அதை செயலிழக்க செஞ்சிருக்காங்க” அதி.

கீர்த்தியின் மண்டை வெடித்தது.

“டேய், என்னடா புதுசு புதுசா என்னவோ சொல்ற.”

“இல்லடா… உனக்கு புரியிற மாதிரி சொல்றேன் கேளு. முதல் முதலில் டாலி அப்படிங்கிற ஆட க்ளோன் செஞ்சாங்க‌. ஆனா க்ளோன் செஞ்ச சில வருஷங்களில் அது செத்துப் போச்சு. ஏனா க்ளோன் செஞ்சப்போ அந்த தாய் ஆடுக்கு ஆறு வயசுன்னு வச்சுக்கோ, க்ளோனிங் செய்ய எடுக்குற செல்லுக்கும் ஆறு வயசு. ஆதாவது அந்த ஆடு பிறக்கும் போதே ஏழு வயசு உள்ள ஆடா பிறந்து வாழ ஆரம்பிக்குது. வயதுக்குன்னு ஒரு மரபணு இருக்கும். அந்த தகவலை அது அப்படியே அதோட பிரதிக்கு கொடுக்குது‌” அதி.

“டேய்.. உன்னைக் கொல்லாம விடமாட்டேன். சரி ஆடு சீக்கிரம் செத்துப் போச்சு. ஆனா இங்க ஏன் இந்த நெல் சாவாம உயிரோட இருந்து நம்ம உயிரை வாங்குது”கீர்த்தி.

ஏதோ கண்டுபிடித்துவிட்ட உணர்வு தெரிந்தது கணியின் முகத்தில்.

“அதி…. அப்போ அந்த வயதுக்கு உரிய மரபணுவை செயலிழக்க செஞ்சிருக்காங்க. அதனால ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக்கு பின் அது அடுத்த நிலை போகாம அப்படியே இருக்கு. சரியா” கணி.

“ரொம்ப சரி சார். இதுதான் நடந்திருக்கு” என்று அதி கூற, மற்ற இருவரும் மண்டையைப் பிடித்துக் கொண்டு அமர்நதனர்.

“டேய் அதி… இப்படிலாம் கூட செய்ய முடியுமா?” கீர்த்தி.

“மனிஷனுக்கு செய்றது கஷ்டம். ஆனா நெல்லுல செய்யலாம். இதே வகை நெல் இன்னொரு மாதிரியும் எடுத்து ஆராய்ச்சி செய்ய சொல்லிருந்தேன். அது ரெண்டுலையும் இருந்த ஒரே வித்யாசம் முதுமைக்கு உள்ள மரபணு மட்டுமே. காத்தவராயன் நிலத்தில் விளைந்த நெல்லில் அது செயலிழக்கப்பட்டிருக்கு” அதி.

“இதை யாரு செஞ்சிருப்பா?” கீர்த்தி.

“திராவிடன்…” கணி.

“அவன் விவசாயம்ல படிச்சிருக்கான்” அதி.

“அவனைச் சார்ந்த யாரோ ஒருத்தர் இதைச் செய்யணும். அவனுக்கு யாரோ பின் புலத்தில் இருக்கணும்” கணி.

“அடுத்து அதை விசாரிக்க சொல்றேன். இனி வெயிட் பண்ண வேண்டாம். திராவிடனை விசாரணை செய்ய வேண்டியதுதான்‌” கணி.

*****************

இரண்டு நாட்களாக உணவில் எந்தவொரு இடரும் இல்லை. உணவு சமைக்க தேவையான பொருட்கள் அனைத்தும் வந்தது. வழக்கத்தைவிட சற்று அதிகமாகவே. சமைத்து உண்பது, கலந்தாலோசிப்பது தவிற அவர்களுக்கு வேறு வேலை இருக்கவில்லை. வந்த பொருட்களில் நளபாகம் செய்து உண்டனர் அனைவரும்.

உண்ட மயக்கத்தில் படுத்திருந்தனர்.

“நம்ம ஒத்துமை அவுங்களுக்கு ரொம்ப முக்கியமோ?” திருநல்லன்.

“என்னப்பா சொல்றீங்க?” பல்லவி.

“ஆமாமா… இங்க சண்டை வந்தப்போ பட்டினிப் போட்டாங்க. சண்டை சரியானதும் நல்ல சாப்பாடு கொடுக்குறாங்க” என்று திருநல்லன் கூற, இப்படியும் இருக்குமோ என்று அனைவரும் நினைத்தனர்.

“அப்போ எல்லாம் இந்த தணிகையால வந்துச்சு” ஆரு.

“அவன்தான் சண்டையை ஆரம்பிச்சது” நேரு என்று இருவரும் கூறிக் கொண்டிருக்கும் போதே, ஏதோ பெரிய சத்தம். அனைவரும் ஒலி வந்த திசை நோக்கி சென்றனர்.

ஒரு பெரிய துவாரம் திறந்தது. சூரிய வெளிச்சம் பட்டும் படாமலும் உள்ளே வந்தது. எலும்பை உருக்கும் குளிர் உள்ளே ஊடுருவல் செய்தது. அனைவரும் பிரமித்து நின்றிருந்தனர் வெளியில் இருந்த நிலம் கண்டு.

ஏனெனில் வெள்ளைக் கம்பளம் விரித்துக் காணப்பட்டது. ஆங்காங்கே பனிமலைகள். இது என்ன இடம் என்று யாராலும் கணிக்க இயலவில்லை.

பின்னணியில் ஒரு குறல் கணீரென்று உரைத்தது.

“லெட்ஸ் ரெடி ஃபார் தி ப்ராஜெக்ட் ஆரல்…” என்று ஒலிக்க, அனைவரும் திடுக்கிட்டனர்.

அரல் தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்