Loading

 அத்தனை பெண்களைக் காப்பற்றி வீர தீர செயல் புரிந்தவன் என்றெல்லாம் எந்த ஊடகத்திலும் வரவில்லை, அவன் அதற்காகவும் இதைச் செய்யவில்லை, ஆனால் அவர்களைக் காப்பாற்றி விட்டோம் இதுவே போதும் என்ற மனநிம்மதியை அவனுக்குக் கொடுத்திருந்தது.

மீட்கப்பட்ட ஐநூறு பெண்களுக்கும் சென்னையில் பிரபல மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தனர், தாராவிடமிருந்து வாங்கியிருந்த தகவல்களை வைத்து அவரவர் பெற்றொருக்குத் தெரியபடுத்தபட்டிருந்தது. மலர் உட்பட அனைத்து பெண்களும் இன்னும் மனதளவில் அந்த நரகத்திலிருந்து வெளியே வர முடியாமல் தவித்துக்கக் கொண்டிருந்தால், அவர்களுக்குத் தக்க மருத்துவச் சிகிச்சை அளித்து, ஆலோசனையும் வழங்கி முழுதாய் சரியான பின் அவரவர் பெற்றோரிடம் அனுப்படுவார்கள்.

“தீரேந்திரன் சார், தீரேந்திரன் சார் ஜிஜி லைனில இருக்காரு” எனத் தீராவின் போனை கையில் வைத்துக்கொண்டு மருத்துவமனையின் வராந்தாவில் ஓடி வந்தான் சமர். அதை வாங்கி பேச துவங்கினான் தீரா.

“குட் மார்னிங் சார் தீரேந்திரன் ஸ்பீக்கிங்” காவலுனுக்கே உரித்தான கம்பீர குரலுடன், ஒற்றைத் விரலால் தன் மீசையை நீவியபடி பேசினான் தீரேந்திரன்.

“பை தி வே ரொம்பத் தேங்கஸ் தீரேந்திரன், இந்தக் கேஸை இவ்ளோ சீக்கிரம் முடிச்சு கொடுப்பீங்கன்னு நான் எதிர்பாக்கலை” எனப் புன்னகை முகமாய்ப் பேசினார்.

“நான் எதுவும் பன்னலை சார், நீங்க எனக்குக் கொடுத்த ஃபுல் ஃபீரிடம் தான் இந்தக் கேஸ் எந்தத் தடையும் இல்லாமல் மூவ் ஆகக் காரணம்” எனத் தற்பெருமை பேசாது நிதர்சனத்தை எடுத்துச் சொன்னான்.

“அப்படிலாம் இல்லை தீரேந்திரன், அரசியல்வாதிங்க கண்ணுல மண்ண தூவி, கூட வொர்க் பண்ணுற ஆபிஸர்சே உங்களுக்கு எதிரா இருக்கும்போது, இப்படி ஒரு விசயத்தைக் கண்டுபிடிச்சு அதுல சக்ஸஸூம் ஆகுறது பெரிய விசயம், அதை நீங்க சாதிச்சும் காட்டிட்டிங்க, இந்த விசயத்துல என் தங்கச்சி பொண்ணு சத்யா மாட்டினதுல எனக்குச் சுயநலம் இருக்கு அதனால தான் நான் உங்களுக்கு ஃபுல் ஃபீரிடம் கொடுத்தேன், ஆனா நீங்க சுயநலமில்லாமல் பொதுநலத்துடன் செயல்படுறது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்குது” என ஜிஜி சொன்னார், அவர் தங்கை மகள் என்று சொல்வது சரளாவின் மகள் சத்யாவை தான், உறவுகளே வேண்டாம் என்று ஒதுங்கி வாழ்ந்த சரளாவிற்கு இப்படி ஒரு அண்ணன் இருந்திருப்பார் என்பது யாரும் அறியாத ஒன்று தான், சரளாவின் இறப்புக்குப் பின் தனியே வாழ்ந்து வந்த சத்யாவை ஏமாற்றித் தான் பார்த்துக் கொள்வதாக அழைத்துச் சென்றதில் தாரா வசமாக மாட்டியிருக்கிறாள். சத்யாவையும் கோவாவிற்கு அழைத்துச்சென்று அவளையும் அதே பாழும் கிணற்றில் தள்ளியிருந்தாள் தாரா,ஜிஜி இதில் நேரடியாக இறங்காமல், தீரேந்திரனின் உதவியை நாடியிருந்தார்.

“என்னோட கடமையைச் செஞ்சேன் சார் அவ்வளவு தான்” என்ற அவனின் பெருந்தன்மை இந்த அழகான காவலனுக்கு மட்டுமே உரித்தானது.

“நீங்க இதை ஏன் ப்ரெஸ் வரைக்கும் கொண்டு போகலைன்னு தான் எனக்குப் புரியலை தீரேந்திரன், அதோட சம்மந்தபட்டவங்களுக்கு எந்தத் தண்டனையும் நீங்க வாங்கித் தரலை.?” இதைக் கேட்க கூடாது என்று நினைத்திருந்தவர் தன்னையும் மீறிக் கேட்டிருந்தார்.

“இதைக் கொஞ்ச நாள் ஆற போடணும் சார், இதே மாதிரி நிறையக் கேங்க் நம்ம இந்தியா முழுக்கக் கிளை முளைக்கத் தொடங்கியிருக்கும் அதை அடியோட சரிக்கணும், எல்லாமே நாட்டை வழி நடத்தி செல்லுறவங்க கையில இருக்கும் போது, நம்ம தண்டனை வாங்கிக் கொடுத்தும் எந்தப் பிரயோஜனமும் இல்லைன்னு தோணுது சார்” எனப் புன்னகைத்த தீரன் அலைப்பேசியைத் துண்டித்துவிட்டு மருத்துவமனையின் வரேவேற்பரையில் அமர்ந்திருந்தான், அப்போது அங்கு வந்த கார்த்தி அவனருகே அமர்ந்தான்.

“தீரா சார்” எனத் தொண்டையைச் செறுமியபடி அழைத்தான்.

“சொல்லுங்க கார்த்திக்”

“நீங்க செய்யுறது உங்களுக்கே நியாயமா படுதா.?”

“நான் என்ன செஞ்சேன்.?” விழி உயர்த்திக் கேட்டான் தீரா.

“மாட்டியிருந்த எல்லாப் பொண்ணுங்களையும் மீட்டாச்சு, என்னோட மலர் மறுபடியும் என்கிட்ட வந்து சேர்ந்துல சந்தோசம் தான், ஆனா இந்தப் பாதகம் செஞ்சவங்களை அப்படியே விட்டுட்டு வந்துட்டிங்களே.? சரி என்னை விடுங்க உங்களுக்கு அதி மேல தான் எவ்ளோ காதல், அவளை இந்த நிலைக்கு ஆக்கியவனைச் சும்மா விட்டுட்டு வந்திருக்கீங்க, உங்களுக்குக் கோபமே வாராதா.? நீங்க என்ன காந்தியா அகிம்சை வழியில போறதுக்கு, உங்க கையில துப்பாக்கி இருக்கே, உங்க கையில அதிகாரம் இருக்கே நீங்க ஏன் தீரா எதுமே பண்ணலை, எதோ தியாகம் செஞ்சவன் மாதிரி ஹெலிகாப்ட்டர்ல அனுப்பி வச்சிருக்கீங்க, சட்ட ரீதியா கூடத் தண்டனை கொடுக்கலை.? உங்களுக்கு உணர்ச்சிகளே இருக்காதா.? உங்க நதியை சிதைச்சவனைக் கொல்லணும்னு உங்களுக்குத் தோணலை.? சரி போதை மருந்தை ஏத்தி சித்ரவதை செஞ்சேன்னு சொன்னீங்க, ஆனா அவன் சாகலையே இன்னும் உயிரோட நடமாடிட்டு தானே இருப்பான்” என ஆத்திரம் பொங்க பேசினான் கார்த்தி.

“எல்லாத்துக்கும் வன்முறை தீர்வாகாது கார்த்தி” எனச் சொல்லி தீரா எழுந்து வரவேற்பரையில் ஓடிக்கொண்டிருந்த செய்தியை பார்த்து மென்மையாய்ச் சிரித்தது அவனின் விழிகள்.

“மெரினா கடற்கரையில் உடைந்து போய் மிதந்து கிடக்கும் ஹெலிகாப்டர் உதிரிபாகங்கள், எரிந்தபடி கடலில் வந்து விழுந்ததாக அப்பகுதி மக்கள் தகவல். அதிகாலை ஆறு மணி அளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது இதைப்பற்றி விரிவாகப் பார்க்கலாம்” எனச் செய்தியாளர் பேச,

“கார்த்திக் அது செந்தமிழனோட ஹெலிகாப்டர், இனி ரிசர்ச் டீம் ரிசர்ச் பண்ணி இது செந்தமிழனோட ஹெலிகாப்டர் தான்னு சொல்ல இரண்டு மணி நேரம் ஆகும்” எனச் சொல்லி தீரா புன்னகைக்க,

“தீரா சார் வேற லெவல் ப்ளான், சட்டபடி தண்டனை வாங்கிக் கொடுத்திருந்தால் கூட இவனுக வெளிய வந்து ஊரையே நாசம் பண்ணிருப்பானுக” என தீராவை அணைத்து அங்கிருந்து அகன்றவன், இத்தனை கொடுமைக்கும் காரணமானவன் உயிரோடு இல்லை என்ற சந்தோசத்தில் சென்றான்.

 ஆறு மாதங்கள் கடந்திருந்த நிலையில், தன்னவளின் நலன் கருதி திருமணத்தை ஒர் ஆண்டுக்கு ஒத்தி வைத்திருந்தான் தீரேந்திரன், அவள் மனதாலும் உடலாலும் தேற வேண்டும் என்ற எண்ணத்திலும், அவளின் கனவுகள் மெய்பட வேண்டும் என்பதற்காகவும் இந்த முடிவை எடுத்திருந்தான் தீரேந்திரன்.

ஆம் நதி இயக்கிய திரைப்படம் வெள்ளித்திரையில் இன்று ரிலீஸ் ஆகிறது, அவள் கனவுக்குத் தடை போடாமல் உறுதுணையாய் நின்றிருந்தான் அவளவன். மலர் இரண்டு மாதத்திலே தேறி இருந்தாள், அவளின் பங்கும், கார்த்திக் கேமரா மேனாக, நிஹா டப்பிங் ஆர்டிஸ்டாக இதில் களம் இறங்கியிருந்தார்கள். இன்று தான் திரைப்படத்தின் முதல் காட்சி.

மூன்று மணி நேரம் படம் முடிந்தபின் நண்பர்கள் படையுடன் வெளியே வந்தவளை மீடியா சூழ்ந்திருந்தது, தீரா அவளின் பக்க பலமாய் நின்றிருந்தான்.

“மேம் இந்தத் திரைபடத்தின் மூலம் நீங்க என்ன சொல்ல வர்றிங்க, வெளிநாடுகளுக்குப் பொண்ணுங்க போகக் கூடாதுன்னு சொல்ல வர்றீங்களா.? கதை முழுக்க வெளிநாட்டு வேலை தேடி பாதிக்கப் பட்ட பெண்ணைப் பற்றிச் சொல்லியிருக்கீங்க, அதனால தான் கேட்கிறோம்” என ஒரு நிருபர் கேட்க,

“பெண்கள் சிறகு முளைத்துக் கண்டம் தாண்டி,நாடு தாண்டி, அவர்களின் இலக்கை நோக்கி பறக்க வேண்டும் ஆனால், அவர்கள் தேர்வு செய்யும் பாதையானது சரியாக இருக்க வேண்டும், அப்ராட் ஜாப்னு எடுத்திகிட்டோம்னா நிறைய ரிஜிஸ்டர்ட் ஆன அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தின் மூலம் செல்வதே நல்லது, இதைத் தான் நான் படத்தில் சொல்லியிருக்கேன்” எனச் சொல்லி அவள் அங்கிருந்து நகர்ந்த போது தீராவின் கைகளை இறுக பற்றியிருந்தாள்,

“யூ ஆர் மை மெண்டர் (வழிகாட்டி) தீரா” எனச் சொன்னவள் அவன் விழியில் கலந்து சிரித்தாள், ஆம் அவள் வாழ்க்கையின் வழிகாட்டி அவன் தான். காதலில் காத்திருப்பதால் அதீத அன்பை அள்ளிக்கொடுக்கும், அவளின் கனவுகளுக்காக இவன் காத்திருக்கும் காவலனாய் மாறிப் போனான். இவர்களுடன் சேர்ந்து கார்த்திக், நிஹா, மலரும் சேர்ந்து, மதிய உணவுக்காக அங்கிருந்த ஃபுட் கோர்ட்டில் அமர்ந்திருந்தனர்.

“அப்பறம் அகரநதி டைரக்டர் ஆகியாச்சு, அடுத்து என்ன கல்யாணம் தானே” கேலி பேசினாள் நிஹா, அவள் கேட்டதில் மெலிதாய் புன்னகைத்தான் தீரா.

“அடுத்தப் படத்துக்கு மேடம் கதை ரெடி பண்ணிட்டாங்க, அடுத்தப் படம் முடிஞ்சா தான் கல்யாணமம்” கார்த்திக்கும் நிஹாவுடன் சேர்ந்து கொண்டான். மலர் மட்டும் அமைதியாய் அமர்ந்திருந்தாள்.

“ஏய் மலர் என்னாச்சுடி.?” அதி அவள் கரம் பற்றினாள்.

“இல்லைடி அதி நம்ம ஷூட்டிங் ஸபாட்ல கூட அவ்வளவா தெரியலை, பட் மூவியா பார்க்கும் போது அந்த நரகத்தை மறுபடியும் பார்த்த ஃபீல் வருதுடி” என வருந்தினாள் மலர்.

“ஏய் மலர், இப்போ நீ எங்க கூட நம்ம நண்பர்கள் உலகத்துல இருக்க, இங்கே அந்த ஆயிரம் கைகள் உன்னை துரத்தாது, உன்னை பாசத்தோடு உன் தோளை தட்டிக் கொடுக்குற கைகள் தான் இனி எப்போதும் இருக்கும். டாக்டர் கொடுத்த டப்ள்ட்லாம் சரியா போடு எல்லாமே சரியாகிரும்” என ஆறுதல் சொல்லியவள்

“நிஹா வா நம்ம தனியா போகலாம்” எனத் தீராவையும் அழைத்துக்கொண்டு செல்ல, கார்த்திக் மலருக்கு ஆறுதல் சொல்ல தொடங்கியிருந்தான்.

“மலர் ஃபீல் பண்ணாதேடி, இப்போ தான் எல்லாமே சரியாகிருச்சே, நம்மளும் ஆளுக்கு ஒரு வேலைய பார்க்கிறோம் குடும்பத்தைச் சமாளிச்சகலாம்டி, உனக்கு என்ன நடந்திருந்தாலும் வாழ்நாள் முழுக்க நான் உன் கூடத் தான் இருப்பேன் ஓகேவா, நம்ம கடமைகளலாம் முடிச்சிட்டு நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம், ஓகேவா.? எங்க சிரி” எனக் கார்த்திக் கேட்க, விழியில் விழி நீர் கோர்க்க அழகாய் சிரித்தாள் மலர்.

“இப்போ எதுக்கு நம்ம மட்டும் தனியா வந்தோம்.?” கோபமாய் அதியை பார்த்து முறைத்தாள் நிஹா.

“அவங்க கப்பிள்ஸ் அவங்களுக்கு ப்ரைவசி வேண்டாமா.? நமக்குக் கொஞ்சமாவது சென்ஸ் இருக்கணும், ஹாப்பி மொமண்ட்ஸை அவங்க தனியா அனுபவிக்கட்டும்னு” என அதி சொல்ல,

“அடுத்து நீ எதுவும் சொல்ல வேண்டாம், இப்போ நான் தனியா போகணும் அதானா.? இந்த மரமண்டைக்கு புரிஞ்சுது”

“நான் அப்படி எதுவும் சொல்லையே” சிரிப்பை இதழுக்குள் மறைத்தாள் அதி.

“போலீஸ்கார் இதெல்லாம் கேட்க மாட்டிங்களா.? மொரட்டு சிங்கள்ன்ற ஒரே காரணத்துகாக, என்னைய எல்லாரும் ஒதுக்கி வைக்குறாங்க ஆஃபிசர்” என நிஹா கேட்க,

“நதி சொன்னதுல தப்பு ஒன்னும் இல்லையே., நமக்கே அறிவு இருக்கணும்” என எதோ சொல்ல வருவதற்குள்.

“ஆஃபிசர் போதும் உங்க எக்ஸ்பளனேசன், நானே போய் இந்த எலிவேட்டர்ல ஏறி ஏறி இறங்குறேன், பேசி முடிச்சுட்டு கால் பண்ணுங்க வர்றேன்” என நிஹா நகர்ந்து செல்ல,

“ஏய் நதி.”

“சொல்லுங்க தீரா.?”

“என்னை உன் ப்ரெண்ட்ஸ் இருந்தா கண்டுக்கவே மாட்டேன்ற.?”

“என்னது நான் உங்களைக் கண்டுக்கலையா.? நீ்ங்க தான் என்னைக் கண்டுக்கலை, ஸ்டிரிக்ட் ஆனா போலீஸ் வேற”

“அதெல்லாம் விடு, நீ சந்தோசமா இருக்கியா.?”

“ரொம்பச் சந்தோசமா இருக்கேன் தீரா, நீங்க கூட இருக்கும் போது, உங்க பக்கத்தில் இருக்கும் போது சந்தோஷத்தோட சேர்ந்து பாதுகாப்பு உணர்வும் எனக்கு வருது தீரா” எனச் சொல்லி தன்னவன் தோள் சாய்ந்தாள் கோதை பெண்ணவள். அவள் அவனருகே பாதுகாப்பாய் இருப்பதை உணர்வதே, அவனுக்கு அதிகச் சந்தோசம் கொடுத்தது, வேறு என்ன வேண்டும் ஒரு ஆண்மகனுக்கு. ஓர் ஆணுக்கு இலக்கணம் உதட்டின் மேல் இருக்கும் ரோமம் அல்ல, பெண்ணின் நம்பிக்கையைப் பெறுவது அதைப் பெற்றுவிட்டான் தீரா.

“நீங்க ஹாப்பியா இருக்கிங்களா தீரா.? உங்களுக்கு நான் சரியா வருவேனா.?”

“நதி!! நான் மட்டும் காதலிச்சிட்டு இருந்த வரைக்கும் நீ யாரோ மாதிரி தெரிஞ்ச, என்னக்கி உன்னோட டைரி என் கையிலை கிடைச்சுதோ அப்போவே நீ எனக்குள்ள வந்துட்ட நதி முழுசா வந்திட்ட, நீ மட்டும் தான் எனக்குச் சரியா இருப்ப” எனச் சொல்லி அவன் புன்னகைத்தான்.

“தீரா ஒரு எக்ஸாம்பிள்கு கேட்கிறேன், நானும் மலர் மாதிரி எங்கையோ சிக்கி சீரழிஞ்சு வந்திருந்தால் இப்போ இருக்கிற காதல் இருந்திருக்குமா.? என்னை உங்க வாழ்க்கையில ஏத்திட்டு இருந்திருப்பிங்களா.? எனக்கு நம்ம காதலை விடக் கார்த்தி மலர் காதல் ரொம்ப உயர்வா தெரியுது தீரா, ஒரு ஆண், தன்னோட கற்பை இழந்த பொண்ணு மேல அதே காதலோட இருக்கிறான்னா அது தானே உண்மையான காதல் தீரா”

“உனக்கு என்ன நடந்திருந்தாலும், உன் மேல இருக்கக் காதலோ பாசமோ துளி அளவு கூடக் குறையாது நதி, ஏன்னா கற்பு உடல்ல இல்லை களங்கமில்லா உன் மனசுல இருக்கு. என் நதியே அந்த மனசுல இந்தத் தீரா தானே இருக்கான்” என இதழ் மலர்ந்து சொன்னவனைக் கட்டியணைத்து எட்டி நின்று நெற்றி முத்தம் வைத்தாள் அவனின் நதி, ஒற்றை நெற்றி முத்தம் ஒட்டு மொத்த காதலையும் உணர்த்தியிருந்தாள் அவனின் நதி. அவளுக்கு நேர்ந்த சில கொடூரங்கள் அவளுக்கு தெரியவே கூடாது என்று நினைத்திருந்தான் நதியின் தீரா.

கற்பிழந்திருந்தால் என்னை

ஏற்றிருப்பாயா என்று கேட்கிறாயே..?

என் தாரகையே..!

எங்கே இருக்கிறது

கற்பு.?

உணர்வு குவியல்களில் தேடி பார்த்தும்

என் கண்களுக்கு புலப்படவில்லை!!

கற்பென்பது கோபமா.? சோகமா.? இல்லை துரோகமா.? இல்லை அழுகையா??

இவைகளில் எதிலும் இல்லை எனில்

திரவங்களில் தேடி பார்த்தேன்,

கண்ணீரா.? குருதியா.? உமிழ்நீரா.?

இவைகளிலும் இல்லையெனில்.!

திடங்களில் தேடி பார்த்தேன்,

தங்கமா.? முத்தா.? வைரமா.?

கற்பானது பெண்ணின் சேலைக்குள் ஒளிந்திருப்பதாய்

பேச்சு..!

அப்படியானால் ஆணின் வேட்டிக்குள் இருப்பது என்னவோ.?

ஆதிக்கம் தானே.?

கற்பென்று ஏதுமில்லை காலுக்கிடையில் தேடி பார்க்க,

என் இனியவளே,

உன் மனச்சிறையில் இந்தக் காவலனை அடைத்தபின்,

கற்பு ஒன்றும் தேவையில்லையடி,

உன்னை அறியாமல் இழந்த ஒன்றை,

தேடி அலையும் காவலன் நான் இல்லையடி

மனதெனும் சிறையில் சிக்கிய கள்வனடி நான்,

என் நதியே..! தீராநதியாவோமே என்றும் உனதன்பில்.

**********

வாழ்க்கை என்ற நதி, சத்தமில்லாமல் ஆனாலும் உறுதியாய் ஓடிக்கொண்டிருந்தது.

அந்த நதிக்கரையில், இப்போது நதியும் தீரேந்திரனும் — காதலர்கள் அல்ல;

தாயும் தந்தையுமாய் நின்றிருந்தனர்.

அன்று பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடக்கவிருக்கும் அறையில் அமர்ந்திருந்தனர் நதியும் தீராவும். பதற்றமாய் இருந்த நதியின் கைப்பற்றியவன்,

“ரிலாக்ஸ் நதி என்றான்”

“இவ என்ன மார்க் வாங்கி வச்சிருக்காளோ பயமா இருக்கு தீரா” வாய்விட்டு புலம்பினாள் நதி.

“அதெல்லாம் நல்ல மார்க் தான் வாங்கியிருக்கேன்” எனச் சொன்னவளின் பெயர் இயல். அகரநதியின் சாயலை ஒத்திருந்தாள் அவள். அகரநதியின் குட்டி நகல் அவள்.

“ப்பா!! அம்மாவை கொஞ்சம் புலம்பாமல் இருக்க சொல்லுங்க” என தீராவின் மடியில் அமர்ந்தவளுக்கு முத்தம் வைத்தவன்,

“நதி பீ கூல்” எனச் சொல்ல, இமை தாழ்த்தி சரி என்றாள் பார்வையில். அதே சமயம்.

“இயல் கம்” என ஆசிரியர் அழைக்க தாய் தந்தை இருவரையும் அழைத்துக்கொண்டு. வகுப்பாசிரியருக்கு போடப்பட்டிருந்த நீள் இருக்கையில் மூவரும் அமர,

“இயல் ரொம்ப புத்திசாலி குழந்தை தான். ஆனால்,”என வகுப்பாசிரியர் இடைநிறுத்த, நதி சற்று நிமிர்ந்து பார்த்தாள்.

“ இயல் அவளோட ஃப்ரெண்ட் கூட சேர்ந்து ரொம்ப குறும்புத்தனம் பண்ணுறா” என ஆசிரியர் சொல்ல,

“இயல்!! நோ” என்பது போல் தீரா தலையசைக்க,

“சாரி டாடி” என கிசுகிசுப்பாய் இயல் சொன்னதில் நதியும் தீராவும் சிரித்து விட,

“அந்த ஃப்ரெண்ட் பேர்” நதி கேட்ட போது,

“மித்ரன்” என்ற பதில் அவளுக்கு பரிட்சயமான குரலில் கேட்க விரைந்து திரும்பி பார்த்தவள் புன்னகைத்தாள்.

“கார்த்திக் மலர்” என ஓடிச் சென்று இருவரையும் கட்டிக் கொண்டாள் நதி.

வெகுநாட்களுக்கு பிறகு அவர்களின் நட்பு பூத்து குலுங்கியது.

“எருமை எருமை, போன் கால் கூட எடுக்க மாட்டேன்ற” கார்த்திக்கை இரண்டு அடி அடித்துவிட்டு தீராவிடம் வந்து நின்றாள்.

“சாரி மேம் நீங்க சொல்லுங்க” என வகுப்பாசிரியரை பார்த்து பேசினாள் நதி.

“அதான் மித்ரன் கூட பேசிக்கிட்டே இருக்கா. இடம் மாற்றி உட்கார வைக்கலாம்ன்னு இருக்கோம்”

“நோ மிஸ் இயல் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். நாங்க இனி சேட்டை பண்ணவே மாட்டோம். ப்ளேஸ் மாத்தி உட்கார வைக்காதீங்க ப்ளீஸ்” என மித்ரன் கெஞ்சலாய் கேட்க அனைவரும் அங்கே சிரிக்க,

“ஏய் இயல் மிஸ் கிட்ட சாரி கேளு. இல்லைனா இடத்தை மாத்திருவாங்க” என மித்ரன் கூற,

“சாரி மிஸ்” என இயல் சொன்னாள்.

“ஓகே” என ஆசிரியர் சொல்ல இருவரும் கைப்பற்றிக் கொண்டு விளையாட வெளியே ஓடினார்கள். அடுத்த நட்பிலக்கணமாய் இருவரும் இருப்பார்கள் என கார்த்திக்கும் அகரநதியும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தனர்.

வெளியே, இயலும் மித்ரனும் எதையும் அறியாத சிரிப்போடு விளையாடிக் கொண்டிருந்தனர்.

நதி தீராவை பார்த்தாள். காதலெனும் நதி இன்னும் ஓடிக்கொண்டிருந்தது.

இந்த முறை தீராத அன்போடு.

        *************நிறைந்தது***********

 

ஹாய் டியர்ஸ் கதையுடன் தொடர்ந்து பயணித்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றி. தினமும் படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்த வாசகர்களுக்கும் நன்றிகள்.  நிறைய நாட்கள் பயணத்தில் இருந்ததால் பதிலளிக்க முடியவில்லை மன்னிக்கவும் . இந்த தளத்திற்கு நான் புதிது. எழுத வாய்ப்பளித்த எழுத்தாளர் மேகவாணி அவர்களுக்கும் நன்றிகள். விரைவில் புதிய கதைக் களத்துடன் சந்திப்போம்.

With love ❤️

மதிளா சுகி 😊❤️

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
8
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. சட்டத்தின் முன் நிறுத்தி இருந்தாலும் கிடைத்திராத மிகச் சிறந்த தண்டனையை அளித்துள்ளான் தீரன்.

    மனைவியின் கனவுகளுக்கு உறுதுணையாக நின்று அவளை அரவணைத்துக்கொள்கின்றான்.

    ஆணின் வேட்டிக்குள் இருப்பது என்ன ஆதிக்கம் தானே? 👏🏼

    அகர் கார்த்தியின் நட்பை போலவே அவர்களது பிள்ளைகளின் நட்பும் தொடர்கிறது. 😍

    அருமையான விறுவிறுப்பான கதை.

    அன்று இன்று என்று நடந்தவற்றை மிக சுவாரசியமாக கொண்டு சென்றீர்கள்.

    நட்பு, காதல், துரோகம் என்று அனைத்தையும் அழகாய் காட்சிப்படுத்தி இருந்தீர்கள்.

    ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை என்ன நடந்திருக்கும், எதனால் நடந்திருக்கும் என்ற விறுவிறுப்பு குறையாமல் இருந்தது.

    சமூகத்தில் நடக்கும் தவறுகளை அதன் பாதகமான விளைவுகளை பற்றிய நிறைய விளக்கங்கள் அளிக்கப்பட்டது.

    தீராநதியாக இணைந்தது அருமை. 🌟

    வாழ்த்துகள் சகோதரி 🤝❤️

  2. தீரா வோட கவிதை சூப்பர். எதிர்பார்க்காத முடிவு. ஒருவழியா சுபமான முடிவு. அடுத்த தலைமுறைக்கும் தொடரும் நட்பு அருமை. 🫰🏻🫰🏻🫰🏻🫰🏻