Loading

டொம்மென்ற சத்தத்துடன், காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்தான் சஜித் அவ்தேஷ்.

“சத்தம் வராம குதிக்க மாட்டியா?” என அக்ஷிதா ஹஸ்கி குரலில் அதட்ட, அவனுக்கோ சினம் பீறிட்டது.

அவனுக்கு மறுபக்கம் நின்றிருந்த உத்ஷவி, “நீ முறைச்சது போதும் ப்ரீத்தனோட ரூம் எது? அவன் சிப்பை எங்க வச்சு இருப்பான்னு ஐடியா இருக்கா” என மெல்லமாகக் கேட்டாள்.

“ஆமா, என்கிட்ட சொல்லிட்டு தான் அவன் எல்லாத்தையும் வைக்கிறான் பாரு. அதைத் தேடி தான் எடுக்கணும். போய் ரெண்டு பேரும் தேடுங்க.” என்றான் கடுகடுப்புடன்.

“நீயும் இப்ப எங்க கூடத் திருட தான் வந்துருக்க. உன் கேரக்டரை கரெக்ட்டா மெயின்டயின் பண்ணு காட்ஸில்லா.” என்ற அக்ஷிதா முன்னே நடக்க,

“அடிப்பாவி. இது என் அத்தை வீடுடி. விஷயம் தெரிஞ்சா, என்னைக் கேவலமா நினைப்பாங்க.” எனப் புலம்பிட அதனைக் கேட்க தான் அங்கு யாரும் இல்லை.

பெண்கள் இருவரும் பூனை நடையுடன் உள்ளே செல்ல முயல, “ஏய்… இந்த பக்கம் போகாதீங்க. இங்க அந்தப் பிசாசுங்க ரூம் தான் இருக்கு. அவன் ரூம் மாடில தனியா இருக்கு. மொட்டை மாடி வழியா போகலாம்.” என சஜித் கூறியதில், மூவரும் மொட்டை மாடி வழியே ப்ரீத்தனின் அறையை அடைந்தனர்.

அந்த அறை ஆள் அரவமற்று காட்சியளிக்க, ப்ளூடூத்தின் வழியே ஸ்வரூப் உத்தரவு கொடுத்தான்.

“ப்ரீத்தன் எப்போ வேணாலும் திரும்பி வருவான். வேகமா சிப்பை தேடுங்க.” என்றதும், உத்ஷவி, “நாங்க என்ன காணாம போன சீப்பையா தேட வந்துருக்கோம்.” என்று எகிறிட, அக்ஷிதாவோ, “உன் தம்பி உதறுற உதறுல எங்களை மாட்டி விட்டுடுவான் போல. அவனோட ஹார்ட் பீட் ப்ரீத்தனுக்கே கேட்கப் போகுது.” என்று கிண்டலடித்தாள்.

சஜித் தான், “திருட வந்தா இவ்ளோ பயமா இருக்கும்ன்னு தெரியாமப் போச்சு.” என நொந்து போக, ஸ்வரூப் அதரம் மடக்கி புன்னகைத்து, “நீ தான தேவை இல்லாம வாயை விட்ட” என்றான் நக்கலாக.

“அதுக்காக இவளுங்களோட என்னை மாட்டி விடுவியாடா கொய்யால.” எனக் கதறும் போதே, “இங்க சீக்ரட் ரூம் மாதிரி ஏதாச்சு இருக்கா ஸ்வரூ” எனக் கேட்டாள் உத்ஷவி.

“ட்ரெஸ்ஸிங் டேபிளுக்கு ரைட் சைட் சின்ன டோர் இருக்கும். அதுல ப்ரீத்தனோட ஃபிங்கர் ஆர் பாஸ்கோட் போட்டா தான் வொர்க் ஆகும். பட் ஒரே ஒரு தடவை தான் சான்ஸ். தப்பா போட்டா பீப் சவுண்ட் வந்துடும். சோ பீ கேர்புல்.” என்று எச்சரித்தான்.

“அடேய்… நான் வரும் போது நீ இவ்ளோ டீடெயில் சொல்லவே இல்லையே.” என்ற உத்ஷவியிடம், “நானே இப்ப தான டீடெய்ல் வாங்கிட்டு இருக்கேன்…” என்றான் இதழ் வளைத்து.

இத்தனை நேரமாக, வராத பாசத்தை வரவழைத்து, இஷானாவிடம் ‘சேட்’ செய்து, அவளிடம் விஷயத்தைக் கறக்க முற்பட, அவளோ அத்தனை சீக்கிரம் வாய் திறக்கவில்லை.

இறுதியில், ‘திருட்டுப் பெண்களுடன் இருக்கும் போது தான் உங்களுடைய அருமை தெரிகிறது…’ என்ற வார்த்தையில் உச்சிக் குளிர்ந்தது இஷானாவிற்கு.

அந்த மிதப்பில் இருந்தவளிடம், நைசாக பேசி விஷயத்தை வாங்கிக் கொண்டிருந்தான் ஸ்வரூப் அவ்தேஷ்.

இங்கோ ஜோஷித்தும் விஹானாவும், பார் வாசலில் காரை நிறுத்தி ப்ரீத்தனை வேவு பார்த்துக் கொண்டிருந்தனர்.

“எல்லாருக்கும் ரோல் மாடலா இருக்கணும்ன்னு வாயார பேசுறீங்க… இங்க உங்க அத்தை பையன் பார்ல கூத்தடிச்சுட்டு இருக்கான்.” என்று விஹானா சலிக்க, அந்த வருத்தம் அவனது முகத்திலும் எதிரொலித்தது.

“எல்லாம், மாமாவும் அத்தையும் குடுக்குற இடம். ஒரே ஆம்பளைப் பையன்னு அவன் இஷ்டத்துக்கு விட்டதுக்கு, எல்லா ஆட்டமும் ஆடுறான். அங்க சுத்தி இங்க சுத்தி, மக்களோட வாழ்வாதாரத்தையும் சுரண்டப் பார்க்கிறான். ப்ளாடி பாஸ்டர்ட்.” என்று பல்லைக்கடித்தான்.

“அவன் மட்டும் தான் இஷ்டத்துக்கு ஆடுறானாக்கும்…” என வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டவளைக் கூர்விழிகளுடன் பார்த்த ஜோஷித், “கம் அகைன்?” என்று முறைக்க,

“அவனை சொல்லி மட்டும் தப்பு இல்ல. நீ மட்டும் சிகரெட் குடிக்கலாமாக்கும். அதுவும் செயின் ஸ்மோக்கிங். இப்ப கூட வர்றதுக்குள்ள நாலு குடிச்சுட்ட.” என்று சிலுப்பினாள்.

அதில் இறுக்கம் தளர்ந்தவன், “ஸ்வரா மேல இருக்குற கோபத்துல குடிக்க ஸ்டார்ட் பண்ணுனேன். இப்போ டென்ஷன் வந்தா கை தானா அதை தான் தேடுது. அதுக்கு ஆல்டர்னேட் இருந்தா இந்த பழக்கம் நின்னுடும் போல…” என்றவனது கருவிழிகள் பாவையின் இதழ்களை வட்டமிட,

அவளுக்கும் ‘உன் லிப்ஸ பார்த்தா டென்சன் குறையுது. கேன் ஐ டேஸ்ட் தட்?’ என்ற அவனது கேள்வி காதினுள் ரீங்காரமிட்டு, மனதை சில்லிட வைத்தது. சிலிர்க்கவும் செய்ததே!

இது என்ன விசித்திர உணர்வு என்று புரியாமல், எதுவும் பேசி விடுவானோ எனப் பயந்தவள், சாலையில் பார்வையைப் பதிக்க, “உனக்குப் பிடிக்கலையா சீட்டர்?” எனக் கேட்டு அவளை ஆராய்ந்தான்.

அதில் திடுக்கிட்டுத் திரும்பியவள், “எ என்னப் பிடிக்கலையா?” எனத் தடுமாறிட, அதனை ரசனையுடன் ஏறிட்டவன், “ஐ மீன் நான் ஸ்மோக் பண்ணுறது.” என்றான் கேலி நகையுடன்.

அவனறியாமல் நிம்மதி பெருமூச்சை விட்டவள், “சுத்தமாப் பிடிக்கல. நல்லது செய்ற மனுஷங்க ரொம்ப கம்மி ஜோஷ். உன்னைப் பாக்கும் போது” எனக் கூற வந்தவள் சட்டெனத் திருத்தி,

“உங்க மூணு பேரையும் பார்க்கும் போது முதல்ல ரொம்ப ஆபத்தானவங்களை மாதிரி தெரிஞ்சாலும், இப்போ மனசுக்கு ரொம்ப நெருங்குன சொந்தம் மாதிரி ஆகிட்டீங்க. உங்களை வெளியாளாக் கூட என்னால நினைக்க முடியல. நான்லாம் இருந்தாலும் ஒன்னு தான் இல்லைன்னாலும் ஒன்னு தான் ஜோஷ்.

யாருக்கும் நல்லது செய்ற எண்ணமும் எனக்கு இல்ல. அதுக்காக சிரத்தை எடுக்குற மனசும் இல்ல. பணமும் இல்ல. ஏதோ நீங்க மூணு பேரும் விரட்டுறனால தான், உங்க கூடவே சுத்துறேன். ஆனா, நீங்க அப்படி இல்ல. உங்களை மாதிரி ஆளுங்களுக்கு எதுவும் ஆகக் கூடாது ஜோஷ். அதுக்கு உடம்பும் நல்லா இருக்கணும்ல. இந்த பழக்கத்தினால உன் உடம்புக் கெட்டு போச்சுன்னா, இந்த உலகம் ஒரு நல்லவனை இழந்துடும்…” எனத் தீவிரத்துடன் பேசிக்கொண்டே வந்தவள் இறுதியில் குறும்புடன் முடித்தாள்.

அங்கும் இங்கும் சுழலும் பெண்ணவளின் கருவிழிகளுக்குள் தொலைந்துப் போனவன், “அதெப்படி, நீ இருக்கணுமா இருக்கக் கூடாதான்னு நீ முடிவு பண்ணலாம். அதை நான்ல முடிவு பண்ணனும்…” வெகு அழுத்தமாய் வந்த மன்னவனின் வார்த்தைகள் புரிந்தும் புரியாதது போல இருக்க, விஹானா பேந்தப் பேந்த விழித்தாள்.

“என்ன சொல்ற?” எனக் கேட்கும் போதே பிரீத்தன் அவனது மகிழுந்தைக் கிளப்பும் அரவம் கேட்க, அவசரமாக அவனைப் பின் தொடர்ந்தான். அந்தத் தகவல் ஸ்வரூப்பிடமும் பகிரப் பட, “டூ இட் பாஸ்ட் விஷா. ஹீ இஸ் ஆன் ஹிஸ் வே.” என்றிட,

“நீ சொன்னதை செஞ்சுட்டேன் டைனோசர். சீக்ரட் ரூம்க்குள்ள நிறைய லாக்கர் இருக்கு. இதுல எதுல இருக்கும்ன்னு தெரியலையே. ஒவ்வொண்ணையும் திறந்து தேடுறதுக்குள்ள விடிஞ்சுடும்.” என நொந்ததில், சஜித்தில் அலைபேசி அலறியது.

அவன் திருதிருவென விழித்து அவசரமாக போனை அணைக்க, இரு பெண்களும் அவனைத் தீயாக முறைத்தனர்.

“திருட வரும் போது போனை சைலன்ட்ல போடணும்ன்னு தெரியாதா உனக்கு?” என்று அக்ஷிதா காய,

“எதே… என்னமோ நான் தினமும் இந்த வேலையைப் பார்க்குற மாதிரி பேசுற. போங்கடி நீங்களும் உங்க திருட்டு வேலையும் நான் வெளில போறேன்.” என்றவன், விட்டால் போதும் என கிளம்பியே விட்டான்.

அக்ஷிதா வாயைப் பொத்திக் கொண்டு நகைக்க, உத்ஷவி ‘இவனை வெளில போய் பேசிக்கிறேன்.’ என்று கடுப்புடன் சிப்பை தேடும் முயற்சியில் ஈடுபட, அதிர்ஷ்டவசமாக அவள் முதலில் திறந்த லாக்கரிலேயே, அவர்கள் எதிர்பார்த்த சிப் ஒரு கண்ணாடி பெட்டியினுள் இருந்தது.

“ஸ்வரூ கிடைச்சுடுச்சுடா…” என வேகமாக அதில் கை வைக்கப்போக, ஸ்வரூப் தடுத்தான்.

“இருடி… அலாரம் எதுவும் அடிக்கப் போகுது.” என்றதும்,

அக்ஷிதா “பியூஸை பிடுங்கி விடு ஸ்வரூ” என்றாள்.

“அறிவுக் கொழுந்து யூபிஎஸ் இருக்கும்ல” என ஸ்வரூப் கேட்டதும், “ஆமால… அப்போ என்ன பண்றது, போட்டோ வேணும்ன்னா எடுத்துட்டு வரட்டுமா?” என்றாள் அடுத்தபடியாக.

ஸ்வரூப்பின் அருகில் சென்று விட்ட சஜித் இவளது கூற்றில் “ஹையோ” எனத் தலையில் அடித்துக் கொள்ள, உத்ஷவி கடியாகி, “ஐயோ சீக்கிரம் ஏதாவது சொல்லுங்க. எனக்கு இந்த  சிப் வச்சுருக்குற பாக்ஸ் கண்ணை உறுத்துது. கை என் பேச்சை கேட்க மாட்டேங்குது.” என்று படபடக்க, இப்போது ஸ்வரூப் தலையில் அடித்துக் கொண்டான்.

அதற்குள் ஜோஷித் “டேய் அவன் ஏரியாக்குள்ள நுழைஞ்சுட்டான்டா” என்றிட,

ஸ்வரூப் அதற்குள் சுவர் ஏறிக் குதித்து எலெக்டிரிக் அறைக்குள் நுழைந்தான்.

“ஷவி கொஞ்சம் வெய்ட் பண்ணு. நான் அந்த அலாரம் வயரை டிஸ்கனக்ட் பண்ணப் பாக்குறேன்.” என்றவன், அந்த வேலையில் இறங்க ப்ரீத்தன் சரியாக பங்களாவினுள் நுழைந்து விட்டான்.

அவனது கார் சத்தம் கேட்டதுமே, ஸ்வரூப் துரிதமாக வேலை செய்து விட்டு, “விஷா இப்போ எடு!” என்றிட, அவள் விருட்டென எடுத்து விட்டாள்.

“அலாரம் அடிக்கவே இல்ல டைனோசர்” என வியப்புடன் கேட்டவளிடம், “சீக்கிரம் வெளில வாடி.” என்றான் வேகமாக.

அதில் இருவரும் ஜன்னல் வழியே வெளியில் வரப் போக, முதலில் சிப்பை அக்ஷிதாவிடம் கொடுத்து அவளை இறக்கி விட்டவள், அவள் தப்பிக்கும் வேளையில் சரியாக ப்ரீத்தன் உள்ளே வந்து விட்டான்.

அக்ஷிதா சிப்புடன் வெளியில் வந்த பிறகே உத்ஷவி வராதது உறைக்க, ஸ்வரூப் ஒரு நொடி திகைத்தான்.

உத்ஷவி மாட்டிக்கொண்டதுமே முதல் வேளையாக ப்ளூடூத்தை எடுத்து அவனறியாமல் ஜன்னல் வழியே எறிந்து விட, “ஹலோ விஷா நான் பேசுறதுக் கேட்குதா” என ஸ்வரூப் பேசிக்கொண்டே இருந்தான்.

எதிர்முனையில் பதில் இல்லை என்றதும் துடித்த மனதை அடக்க இயலாமல் தவித்தான்.

“வரே வா… தேடிட்டு இருந்த ஆடு, தானா தலையைக் குடுத்து வெட்ட அனுமதியும் குடுக்குதே. நாட் பேட்!” குரூரப் புன்னகையுடன் அவளை நெருங்கினான் ப்ரீத்தன்.

“திருடிக்கு இந்த பங்களால என்ன வேலை? உன் கூட தான் ஒரு மல்டி மில்லினியர் இருக்கானே. அவன்கிட்ட காசைக் கறந்தது பத்தலையா?” என வெகு நக்கலுடன் கேட்க, அவன் பேசிய தொனி உணர்ந்து அவள் முகத்தைச் சுளித்தாள்.

பின், “அவன்கிட்ட ஒன்னுமே திருட முடியல. அதான் இந்த வீட்ல திருட வந்தேன். இங்கயும் ஒன்னும் இருக்காது போலயே!” என அறையை அளந்தபடி திமிருடன் பேசியவளைக் கூர்ந்து பார்த்தவன், “உன்னை ஸ்வரூப் தான இங்க அனுப்புனான். எதுக்கு எதை திருட அனுப்புனான்” எனக் கர்ஜனையுடன் கேட்டான்.

அவளோ காதைக் குடைந்தபடி, “அப்படின்னு நீயா நினைச்சுக்கிட்டா நான் ஒண்ணும் செய்ய முடியாது. நானே அவன்கிட்ட இருந்து தப்பிச்சு, திருடி பொழைக்கலாம்ன்னு பார்த்தா… இப்ப தெரியாம உன் வீட்ல நுழைஞ்சுட்டேன் போல.” என முகத்தைப் பாவமாக வைத்துக் கொள்ள, அவனுக்கு கோபம் ஏறியது.

“நடிக்காதடி திருட்டு நாயே. இப்படி எல்லாம் பேசச் சொல்லி, அவன் உன்னை ட்ரெயின் பண்ணுனானா? பண்ணிருப்பான். இப்போ நீ உண்மையைச் சொல்றியா இல்ல அடி வாங்கி சாகுறியா” என்றவன், அவள் அதே திமிருடன் நிற்பதைக் கண்டதும், அவளது மூக்கிலேயே குத்திட, பொலபொலவென குருதி வழிந்தது.

அப்போதும் அவள் “நீ என்னை அடிச்சு மிதிச்சாலும் என்கிட்ட இருந்து எந்த உண்மையையும் உன்னால வாங்க முடியாது ப்ரீத்தன்” எனத் திணக்கமாகக் கூற, அவன் அவளது கையை வளைத்து ஒடிக்க முற்படும் போதே, சுற்றிலும் இருந்த விளக்குகள் அணைக்கப்பட கடும் இருட்டு சூழ்ந்தது.

‘ஜெனெரேட்டர் ஏன் ஆன் ஆகல…’ என ஒரு நொடி ப்ரீத்தன் தடுமாற, அதனைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்த ஸ்வரூப் உத்ஷவியை இழுத்துக் கொண்டு வெளியில் சென்று விட, ப்ரீத்தன் போனில் டார்ச் அடிக்கும் போது அவள் எதிரில் இல்லாததைக் கண்டு உறுமினான்.

“டேய் வீட்டு வேலைக்கார நாயெல்லாம் எங்கடா போனீங்க. திருட்டுப் பொண்ணு ஒருத்தி தப்பிச்சுப் போய்ட்டா அவளைப் பிடிங்கடா” என்று கத்தியதில், வேலையாட்களும் செக்கியூரிட்டியும் டார்ச் அடித்துத் தேட, ஒருவன் எலெக்ட்ரிக் அறைக்கு வந்தான்.

அவனது கழுத்தைத் திருப்பி அடித்துப் போட்ட சஜித், ஸ்வரூப்பிடம் இருந்து தகவல் வரும் வரை அங்கேயே நிற்க, இருவரும் மொட்டை மாடி வழியே தப்பித்து செல்ல முற்படும் போது, “நீ ஏன் வந்த ஸ்வரூ. நீ மாட்டுனா இதை பெரிய விஷயம் ஆக்கிடுவான் அந்த ப்ரீத்தன்” என்றதில், அவன் பதில் பேச வரும்போதே அவளது முகத்தைப் பார்த்தான்.

சுறுசுறுவென ஆத்திரம் தலைக்கு ஏறியது. எத்தனை நெஞ்சழுத்தம் இருந்திருந்தால் தன்னவளை அடித்திருப்பான்…! இவள் மீது கை வைக்க இனி ஒரு முறை அவனுக்கு தைரியமே வரக்கூடாது என்ற சினம் சூழ, மொத்தமாக சுற்றுப்புறம் மறந்தவன், விறுவிறுவென மீண்டும் ப்ரீத்தனின் அறைக்குச் சென்றான்.

உத்ஷவி ஹஸ்கி குரலில் “டேய் டேய் சிப் எடுத்தாச்சுல. நீ ஏன் திரும்பி உள்ள போற. டைனோசர் எங்கடா போற.” எனப் பதறி அவளும் அவனுடன் செல்ல, நேராக ப்ரீத்தனின் அருகில் சென்றவன், யோசியாமல் அவன் முகத்தில் நறுக்கென ஒரு குத்து விட, டார்ச் அடித்து எதிரில் நிற்பது யாரெனக் கண்டறியும் முன் ப்ரீத்தனுக்கு கண்ணை இருட்டி விட்டது.

தடுமாறி கீழே விழப் போனவனின் தாடையை பலம் கொண்ட மட்டும் தாக்கிட, ப்ரீத்தன் பறந்து போய் சுவரில் முட்டி கீழே விழுந்தான்.

உத்ஷவி பதறி, “வாடா முதல்ல… அடுத்த மர்டர் பண்ணிடாத. அவன் உன் அத்தை பையன் அது ஞாபகம் இருக்கா உனக்கு.” என்று அதட்டி மிரட்டி கெஞ்சி கொஞ்சி அவனை வெளியில் அழைத்து வரும் முன் அவளுக்குத் தான் மயக்கமே வந்து விட்டது.

வெளியில் வந்தும் கூட ஸ்வரூப்பின் ஆத்திரம் அடங்கவில்லை.

அவளது மூக்கில் இருந்து வந்த இரத்தம் அவனை இராட்சசனாக்கியது.

அவளோ அவனது கோபம் புரியாமல், “நீ ஏன்டா இவ்ளோ ரூடா நடந்துக்குற. நான் தான் அவனை சமாளிச்சுட்டு இருந்தேன்ல. நீ ஏன் வந்த…?” என அவனது மனநிலைத் தெரியாமல் பேசிட, ஸ்வரூப் அவ்தேஷ் ருத்ர தாண்டவம் ஆடினான்.

“நான் தான் உன்னை அனுப்புனேன்னு சொல்ல வேண்டியது தானடி. அவன் அடிச்சா வாங்கிட்டு இருப்பியா? திருப்பி அடிக்க கை இல்ல உனக்கு. ப்ளூடூத்தை ஏண்டி கழட்டுன?” என்று கர்ஜித்தான்.

அவனது கர்ஜனையில் மிரண்டு நின்றவளுக்கு, கோபத்தில் சிவந்த ஆடவனது வதனத்தைக் காண மிரட்சியாகவே இருந்தது.

“கேட்குறேன்ல வாயைத் திறடி…” என மீண்டும் உறுமிட, அதில் பயந்து பின்னால் நகன்றவள்,

“ஏன்டா இப்படி கத்தி பயம் காட்டுற.” என்று உதட்டைக் குவித்தவள், “அது எப்படி உன்னை மாட்டி விட முடியும். நீ, ஒருத்தன் வீட்ல திருட அனுப்புனன்னு வெளியில தெரிஞ்சா, உனக்கு தான அவமானம். நீ தான் இதை செஞ்சன்னு தெரிஞ்சா, அவன் உன் பியான்சிகிட்டயும் சொல்லிடுவான். அப்பறம் உன் கல்யாணத்துலயும் ப்ராப்ளம் ஆகும்ல.” என்று தலையை ஆட்டிக் கூறியவளை மொத்தக் கோபமும் வடிந்த நிலையில் பேச்சற்று வெறித்திருந்தான் ஸ்வரூப் அவ்தேஷ்.

முதலும் முடிவும் நீ
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
42
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்