Loading

கையில் வைத்திருந்த அந்த வெடிமருந்தின் எடையை விடக் கனத்தது அந்தத் துப்பாக்கியின் குண்டு.

கபீர் தன்னை நோக்கித் தான் சுடுவான் என்று அவனையே நேருக்கு நேராய் ருத்ரன் பார்த்துக் கொண்டிருந்த கணத்தில் அவனது குறி இடம் மாறி அக்னியை நோக்கிச் செல்லவும் பதற்றம் தொற்றிக்கொள்ள.. ஒரே தாவலில் அவனது கப்பலில் குதித்திருந்தவன், அக்னியை நோக்கி ஓடுவதற்குள் கபீரின் ஸ்னைப்பர் அக்னியின் மார்பைத் துளைத்திருந்தது.

“மித்ரா….” என்று அவன் அலறிய அலறல், அந்த வங்கக்கடலின் ஆர்ப்பரிப்பையும் மீறி எதிரொலித்தது.

வேகமாகத் தன்னுடைய ஸ்னைப்பரை எடுத்து கபீரை சுட முற்பட்டான் ருத்ரன். அதற்குள் கடல் அலையின் கொந்தளிப்பாலும், அந்தச் சிறிய படகு, கபீர்.. அக்னியைச் சுட்ட மறுகணமே சீறிப் பாய்ந்து கிளம்பிவிட்டதாலும், அவனால் கபீரை சரியாகக் குறிபார்க்க முடியவில்லை.

அந்த வெறியில் வானதிர கத்தியவனை சமீர் அருகே வந்து ஆசுவாசப்படுத்தினான்.

“ஜி.. இப்போ அவனைக் கொல்ல நமக்கு டைம் இல்ல.. சீக்கிரம் இவங்கள நாம காப்பாத்தணும்..” என்று அவன் கூறிக் கொண்டிருக்க, அதே சமயத்தில் சமீரின் தம்பியும், மருத்த்துவனுமான முகம்மது முன் வந்து அக்னியை பரிசோதித்துக் கொண்டிருந்தான்.

இருவரின் பார்வையும் அவனிடம் ஒரு சேரப் போக, அவனோ பதட்டமான முகத்துடன்.. “சீக்கிரம் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும்..” என்றான் அக்னியின் ரத்தக்கசிவுக்கு முதலுதவி செய்துகொண்டே!

அவன் கூறிய அடுத்த வினாடி, கடல் சீற்றத்தையும் பொருட்படுத்தாது நீரைக் கிழித்துக் கொண்டு சீறிப் பாய்ந்தது அந்தக் கப்பல்!

கப்பல் சென்று கொண்டிருக்கும் போதே சற்று தூரத்திற்கெல்லாம் போனில் சிக்னல் திரும்பக் கிடைத்துவிட, முகம்மது உடனே காளிக்ஷேத்ராவில் இருக்கும் அந்தப் பெரிய மருத்துவமனைக்கு அழைத்து விஷயத்தைக் கூற, அடுத்த கணமே ஊரே விழித்துக் கொண்டது.

அக்னிக்குத் தேவையான சிகிச்சைக்கான ஏற்பாடுகள் அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்க, இங்கோ கரை சேர இன்னும் ஒரு மணிநேரம் ஆகும் போலிருந்தது.

ருத்ரனோ, அக்னியை மடியில் கிடத்திக் கொண்டு அவளிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.

“அக்னி.. அக்னி.. இதோ பாரு.. சீக்கிரம் ஹாஸ்பிடல் போய்டலாம்.. உனக்காக பர்ஸ்ட் எயிட் எல்லாமே செஞ்சுட்டு இருக்கோம்.. ஒன்னும் பயமில்லை.. ஒன்னும் பயமில்லை..” என்று அவளுக்குக் கூறுவதை போல, தனக்குமே அவன் தைரியமூட்டிக் கொண்டிருக்க, அரை மயக்க நிலையில் இருந்த அக்னியோ, மெல்லச் சிரித்தபடி..

“என்ன அப்படியே கடல்ல தூக்கிப் போட்டுட்டு போய்டுங்க.. அது தான் உங்களுக்கு நல்லது..” என்றாள் திணறலுடன்.

அவளையே உறுத்துப் பார்த்தவன்.. “இன்னொரு முறை இந்த மாதிரி பேசினா, நானே உன்னைக் கொன்னுடுவேன்..” என்று அடிக்குரலில் உறுமினான்.

அதற்கும் சிரித்தவள்..

“அதையே தான் நானும் சொல்லறேன் ருத்ரன்!.. என்னை நீங்க காப்பாத்தக் கூடாது! ஏன்னா.. இங்க நீங்க.. இல்ல நான்.. நம்ம ரெண்டு பேர்ல யாரவது ஒருத்தர் மட்டும் தான் உயிரோட இருக்க முடியும்.

நான் இன்னைக்கு உயிர்பிழைச்சா.. அதற்கான விலையா உங்க உயிர் தான் இருக்கும்.. சோ, என்னை இப்படியே கடல்ல தூக்கிப் போட்டுட்டு நிம்மதியா போய்டுங்க..” என்றாள் அக்னி அழுகையில் உதடு துடிக்க!

அவளது கண்களையே ஆழ்ந்து பார்த்தவன்..

இந்தக் கண்ணுல.. அதுல இருந்து வழியற கண்ணீர்ல எனக்கு உன்னோட காதல் முழுசா புரியுதுடி.. ஆனா.. ஆனா ஏன் நீ என்னையும், என் மக்களையும் புரிஞ்சுக்க மாட்டேங்கறேன்னு தெரியல..” என்று அவன் பரிதவிப்புடன் கூற, குண்டு துளைத்த வலியில் முகம் சுருக்கியவள், மெல்ல மெல்ல ஆழ்மயக்கத்திற்குப் போய்க் கொண்டிருக்கும் வேளையில்..

“எ.. எனக்கு எல்லாத்தையும் விட, இ.. இந்த நாட்டு மேல.. இருக்கற பற்று.. தான்.. ரொம்ப முக்கியம் ருத்ரன்.. அ.. அதனால தான் சொல்லறேன்.. நா.. நான் உங்கள ஏதாவது செய்யறதுக்கு முன்னாடி.. என்னை.. இ.. இப்படியே விட்டுடுங்க..

உ.. உங்க கையால… என்னைக் கொலை செய்யத் தான் உ.. உங்களுக்கு மனசு வரல.. இப்.. இப்போ.. கடவுளா பார்த்து, அந்தச் சந்தர்ப்பத்தை உண்டாக்கிக் கொடுத்துட்டாரு..

எ.. என்னைக் காப்பாத்திடாதீங்க.. நீ.. நீங்களும், இ.. இந்த ஊரும் ந.. நல்லா இருக்கணும்னு தான் சொல்லறேன்..” என்று அவள் கூற, ருத்ரனோ அவள் இதழ் மீது கை வைத்துப் பொத்தினான்.

“நீ உயிரோட இருந்தா நான் சாகப்போறது உறுதி.. அது எனக்குத் தெரியும்!

ஆனா.. இந்த ருத்ரனோட உடம்புல உயிர் இருக்கற கடைசி வினாடி வரைக்கும், உன் உடம்பை விட்டு உன்னோட உயிரைப் பிரிய விட மாட்டேன்!

இது என் காளிக்ஷேத்ரா மீது ஆணை!” என்று அடிபட்ட சிங்கத்தின் உறுமலாய் அவன் உரைக்க, அக்னியின் மென்னிதழ்களோ, ருத்ரனின் விரல்களுக்கு அடியே மெல்ல நகைத்துக் கொள்ள.. அவளது கண்களோ முழுதாக மூடிக் கொண்டன!

அவள் கண்கள் மூடியதும் உயிருக்குள் ஆழமாய் ஒரு விதிர்ப்பு ஓட, அவர்களுக்கு அருகேயே அமர்ந்து அக்னிக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த முகம்மதுவை கலவரத்துடன் ருத்ரன் பார்க்க.. அவனோ..

“இப்போதைக்கு மயக்கமாகிட்டாங்க.. ஆனா சீக்கிரம் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும்.. இல்லைன்னா ரொம்ப சீரியசாகிடும்..” என்றான் பதட்டமான குரலில்.

அக்னியை முகமதுவிடம் விட்டுவிட்டு, தானே கப்பலை இயக்கக் கிளம்பினான் ருத்ரன். அவன் கையில் கப்பல் சீறிய வேகத்துக்குக் கடலன்னையின் சீற்றம் கூடக் கொஞ்சம் மட்டுப் பட்டுத் தான் போனது.

அடுத்த இருபதாவது நிமிடத்தில் அவர்கள் கரையில் இருக்க, அனைத்து மருத்துவ வசதிகளுடனும் கூடிய ஒரு அதிநவீன ஆம்புலன்ஸ் அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தது.

அக்னியைத் தூக்கிக் கொண்டு கப்பலிலிருந்து இறங்கியவன், ஆம்புலன்சில் ஏறுவதற்கு முன்பு அங்குக் குழப்பத்துடன் வந்து நின்ற அமரேந்தரிடமும், அர்ஜுனிடமும் பார்வையால் கப்பலைக் காட்ட.. அவர்களோ அவன் பார்வையைப் புரிந்து கொண்டு வேகமாகக் கப்பலை நோக்கி ஓடினர்.

அக்னியுடன் ஆம்புலன்சில் ஏறும் பொழுது அக்னியின் கரமோ ருத்ரனின் கரத்தை அழுத்திப் பிடித்திருந்தது.

தன்னைக் கொன்றுவிடும்படி கேட்டுக் கொண்டிருந்தவள், எந்த நம்பிக்கையில்.. எதன் காரணமாக அவனது கரத்தை, தன் உயிரின் ஆதாரம் போல அப்படி இறுக்கமாகப் பற்றி இருந்தாள் என்று தெரியவில்லை!

சலைனை ஏற்ற அவளது கரத்தைப் பிரிக்கும் போது அவள் முகத்தை ஆத்மன் பார்க்க, அவளோ அந்த மயங்கிய நிலையிலும், அரைக் கண் கொண்டு அவனையே பார்த்திருந்தாள்.

அதில் ருத்ரனின் விழிகள் மெல்ல கலங்கத் துவங்க.. அவனோ இரும்பு இதயத்தின் ஈரக் கடிவாளம் கொண்டு அந்தக் கண்ணீரை உள்ளடக்கியபடியே மெல்ல அக்னியின் தலையை வருடியபடி..

“உனக்கு ஒன்னும் ஆகாது.. ஆக விடமாட்டேன்..” என்றால் சபதம் போல!

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் மருத்துவமனையின் அவசரசிகிச்சைப் பிரிவுக்குள் இருந்தாள் அக்னி.

மருத்துவர்கள் தீயாய் அவளுக்கு வைத்தியம் பார்த்த்துக் கொண்டிருக்க, ருத்ரனும் அந்தக் கப்பலில் இருந்தவர்கள் மட்டுமே உடனிருந்தார்.

அவர்கள் அனைவருக்குமே பெருங்குழப்பம்!

இந்த அக்னி எதற்காக இந்த ஊருக்கு வந்தாள் என்று அனைவருக்குமே தெரியும்.. ஆனால் அப்படிப்பட்டவளிடம் எப்படி ருத்ரனுக்குக் காதல் தோன்றியது?

ருத்ரனுக்கு இந்த காளிக்க்ஷேத்ரா முக்கியமா? இல்லை இந்த அக்னி முக்கியமா?

அவளுக்கும் ருத்ரனிடம் வெறுப்பு இருப்பது போலத் தோன்றவில்லையே.. சொல்லப் போனால் துப்பாக்கிக் குண்டு பட்டதும் அவள் முகத்தில் எல்லாமே முடிந்துவிட்டது என்ற நிம்மதி தான் பரவியது.

அதையே அவள் ருத்ரனிடமும்.. “என்னை இங்கயே கடல்ல போட்டுட்டுப் போய்டு.. அது தான் உன்னோட உயிருக்கு நல்லது..” என்று கூறினாள்.

அவள் இந்திய அரசாங்கத்துக்கு உளவு பார்க்க வந்தவளென்றால்.. அவளுக்கு இந்திய அரசாங்கமும், நாட்டுப்பற்றும் தான் முக்கியமென்றால், அவள் இப்படியொரு வார்த்தையைக் கூறியிருக்க மாட்டாளே!

அந்த வார்த்தைகளைக் கூறும் பொழுது தான் அவள் முகத்தில் எத்தனை இறைஞ்சுதல்.. ‘என்னால, ருத்ரனுக்கு ஒன்னும் ஆகிடக் கூடாதே..’ என்ற பரிதவிப்பு தான் அவள் முகத்தில் இருந்தது.

இப்படி இத்தனையாய் இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்தால், இருவரும் ஒத்த கருத்துக்குத் தானே வந்தாக வேண்டும்?

ஆனால் எதிரெதிர் துருவத்தில் இருந்து கொண்டு இணைவது எப்படி? என்ற குழப்பம் அங்கிருந்தோரின் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.

ஆனால் இதைப் பற்றி எல்லாம் ருத்ரனிடம் கேட்பது யார்?

மற்றவர்களின் யோசனை இப்படியெல்லாம் உழன்று கொண்டிருந்தாலும், ருத்ரனை நெருங்கி அவனுக்கு ஆறுதல் கூறக் கூட யாருக்கும் தைரியம் இருக்கவில்லை.

ஏனென்றால் அவன் கண்கள் கனன்ற விதத்தில் அவன் இப்பொழுது கொலை வெறியில் இருக்கிறானென்று அத்தனைப் பேருக்கும் அப்பட்டமாகத் தோன்றியது.

அக்னிக்கு மட்டும் ஏதாவது என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள் என்றால், ருத்ரனின் அசுரத் தாண்டவத்தை இந்த காளிக்ஷேத்ராவினாலேயே தாங்கி முடியாது.

அதற்காகவே மற்றவர்களும் கூட அக்னிக்கு ஒன்றும் நேர்ந்துவிடக் கூடாது என்று வேண்டிக் கொண்டார்கள்.

ஆனால் அவர்களுள் சமீர் மட்டும் தான் எதைப் பற்றியும் யோசிக்காது ருத்ரனின் மனநலனில் மட்டும் கவனமாய் இருந்தான்.

அவன் காலையிலிருந்து ஒன்றுமே சாப்பிட வில்லையே என்ற பரிதவிப்பில் அந்த மருத்துவமனை உணவகத்திலேயே அவனுக்குப் பிடித்தமான பழச்சாறை வாங்கி கொண்டு வந்து அவனிடம் கொடுக்க, ருத்ரனோ அவனை ஏறிட்டு முறைத்தான்.

“இப்போ இது தான் முக்கியமா? அந்த கபிரை எப்படி கொல்லறதுன்னு முடிவு செஞ்சுட்டீங்களா இல்லையா? அவன் சாகணும்.. இன்னும் இருபத்து நாலு மணி நேரத்துக்குள்ள அவன் சாகணும்..” என்று மதம் பிடித்த யானையாய் அவன் பாய, இறுகிய முகத்தோடு நின்றிருந்த சமீரோ, மறுப்பாகத் தலையசைத்தான்.

“இல்லைன்னு தலையசைச்சா என்ன அர்த்தம்? இங்க அக்னி இப்படி இருக்கறதுக்கு காரணம் அவன்.. அவன் இன்னமும் உயிரோட இருக்கான்.. இந்த ருத்ரன் அவனை உயிரோட விட்டு வச்சிருக்கேன்..” என்று இன்னமும் சீற, மெல்ல அவனது தோளைத் தொட்டு அடக்கிய சமீரோ..

“ஆமாம் ஜி.. அந்த கபீர் இன்னமும் உயிரோட தான் இருக்கான்..

ஆனா.. அவனோட உயிர் எங்க கையால போகக் கூடாது!

அவனோட உயிர் எங்க ருத்ரன் கையால போகணும்! எந்த நிலையிலும் நிதானமிழக்காத எங்க கோஸ்ட்.. இந்த மொத்த இந்தியாவே பயந்து நடுங்கிட்டு இருக்கற எங்க கோஸ்ட்.. இப்படி பித்து பிடிச்ச மாதிரி இருக்கறதை எங்களால பார்க்க முடியல!

எத்தனை வெறி இருந்தாலும், வேட்டைக்குப் போற சிங்கத்தோட கண்ணுல நிதானம் இருக்கும்!

அதோட ஒவ்வொரு அசைவுலேயும் அதோட ஆளுமை தெரியும்!

இரையை துரத்திட்டு ஓடறப்போ கூட அதோட நிதானம் தவறினது கிடையாது.

இரையோட குரல்வளையைக் கவ்வி ரத்தத்தைக் குடிக்கறப்போ அதோட கண்ணுல ஒரு அலட்சியம் தெரியும் பாருங்க.. அது வேணும் எங்களுக்கு..

எங்களோட சிங்கம் ஜி நீங்க! நீங்க இவ்வளவு தடுமாற்றத்தோட இருந்து நாங்க பார்த்ததே இல்ல..

தயவு செஞ்சு நிதானத்துக்கு வாங்க..

நிதானமா வந்து வேட்டையாடுங்க.. உங்களை எந்தக் கேள்வியும் கேட்காம உங்களுக்கு அடிமையா வேலை செய்ய இந்த சமீர் இருக்கான்!.

நீங்க எந்த முடிவு எடுத்தாலும் இந்த சமீர் உங்க பின்னாடி நிப்பான்!” என்று அவன் உறுதியாகக் கூற அவனையே ஆழப் பார்த்திருந்த ருத்ரனோ, அவனிடம் எதுவும் பேசாது அவன் கையிலிருந்த பழச்சாறை மட்டும் வாங்கினான்.

அந்த செய்கையிலிருந்தே ருத்ரன் தன்னிலை மீண்டுவிட்டான் என்று உணர்ந்த சமீருக்கோ உள்ளுக்குள் நிம்மதி பெறுகியது!

இவன் மதம்கொண்டயானையல்ல.. சினம் கொண்ட சிங்கமென்று உணர்ந்தவன் மனதார பொங்கிய மகிழ்ச்சியுடன் திரும்பி நடந்தான்.

அதே சமயம் அக்னிக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த, அந்த மருத்துவமனையின் டீன் ஆண்டனி, அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியே வந்தார்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்