Loading

அத்தியாயம் 31

“எ… என்ன சொல்ற…” என நம்ப இயலாமல் விஹானாக் கேட்க, சஜித் தான், “உன்னை அவன் நல்லா ஏமாத்தி இருக்கான் விஹா. அவனைப் பத்தின எந்தத் தகவலும் வெளில கசியக் கூடாதுன்றதுல ஸ்ட்ராங்கா இருந்துருக்கான். அதான், உன் தம்பிக்கு இல்லாத நோயை இருக்குற மாதிரிக் காட்டி, அவனை அஞ்சு வருஷமா நோயாளியாக்கி வச்சிருக்கான்.” என்றான் அமைதியுடன்.

அவளுக்கோ ஆற்றாமைத் தாளவே இல்லை. “இப்போ இப்போ எங்க இருக்கான். நான் அவனைப் பார்க்கணும் சஜி…” என அவள் அழுகைப் பொங்க கேட்க,

ஸ்வரூப் தான், “அவன் இப்ப வரை பத்திரமா தான் இருக்கான். நீ போய் பார்க்குறது அவனுக்கும் சேஃப் இல்ல. உனக்கும் சேஃப் இல்ல. நீ ராகேஷ் பத்தி சொன்னதுமே, நாங்க உன் தம்பி இருந்த ஹாஸ்பிடல்ல விசாரிச்சு, அவனை அங்க இருந்து எங்க இடத்துக்கு மாத்தி திரும்ப டெஸ்ட் பண்ணுனோம்.

ஹீ இஸ் பெர்ஃபக்ட்லி ஆல்ரைட். என்ன… அஞ்சு வருஷமா தேவையில்லாத மருந்தைக் கொடுத்து அவனை டயர்டா இருக்குற மாதிரியே வச்சு இருக்கான். அதனால, அவன் ரெகவர் ஆக டைம் ஆகும். ஆனா, கண்டிப்பா சரி ஆகிடுவான்.” என்று உறுதி கொடுக்க, விஹானா யோசியாமல் அவன் காலிலேயே விழுந்து விட்டாள்.

“ஏய் அரை லூசு என்னப் பண்ற?” எனப் பட்டென நகர்ந்த ஸ்வரூப் அவ்தேஷிடம்,

“ரொம்ப தேங்க்ஸ் ஸ்வரூப். கேட்டா கூட ஹெல்ப் பண்ணாத மனுஷங்க இருக்குற உலகத்துல, கேட்காமையே என் தம்பியை சேவ் பண்ணிருக்க.” என்று தேம்பிட,

“எங்களை நம்பி எங்கக் கூட இருக்குற உங்களைப் பாதுகாக்க வேண்டியது எங்க பொறுப்பு. இதுல எங்களுக்கு என்ன ஆனாலும், உங்க மூணு பேருக்கும் எதுவும் ஆகாதுன்னு தாராளமா நம்பலாம்” என்றவன் இறுதி வரியை மட்டும் உத்ஷவியை அழுத்திப் பார்த்தபடி கூற, அவளும் நடப்பதை தான் வியப்பும் குழப்பமும் கலந்துப் பார்த்திருந்தாள்.

ஜோஷித் விஹானாவை ஒரு மாதிரியாகப் பார்த்து, “ஹே சீட்டர் உன் தம்பிக்கு ரீ-டெஸ்ட் எடுக்கணும்னு ஐடியா குடுத்தது நானு.” என அவன் காலைக் காட்ட,

அக்ஷிதா தான், “சஜி நீ இப்படி வா…” என ஜோஷித்தின் அருகில் நிற்க வைத்தவள்,

“மொத்தமா எல்லார் கால்லயும் சேர்த்து விழுந்தடு டார்ல்ஸ். ஒவ்வொருத்தன் காலுலயும் விழுந்து எந்திரிக்கிறதுக்குள்ள உனக்கு இடுப்பு உடைஞ்சுடும்.” என்று கிண்டலடித்தாள்.

பின் முகத்தை வெகு சீரியஸாக வைத்துக் கொண்டு “ஸ்வரூப் என் வாய் சும்மா இருக்க மாட்டேங்குது. ஒண்ணே ஒன்னு மட்டும் இந்த இடத்துல நான் பதிவு பண்ணிக்கட்டுமா?” என்று பணிவுடன் கேட்டாள்.

அவன் தலையசைத்ததும், “க்ளூ தேடுற இடத்துலயும் சோசியல் சர்விஸ் பண்றீங்க, திருட வந்த எங்களுக்கும் சோசியல் சர்விஸ் பண்றீங்களே… யாருடா நீங்கள்லாம்… ஒருவேளை, நீங்க வாம்பயரா பல வருஷத்துக்கு முன்னாடியே பிறந்து, இன்னும் சாகாம இருக்குற மனுஷங்களா? இல்ல, உங்க இரத்தத்துல சேவை மனப்பான்மையை ஒரு நாலு டோஸ் போட்டு விட்டுட்டாங்களா. புல்லரிக்குது போ!” என கையை சொறிந்துக் கொண்டதில்,

சஜித் தான், “இப்ப நீ எங்களைப் புகழறியா இல்லை கலாய்க்கிறியா?” எனக் கேட்டான் ஒரு மார்க்கமாக.

“அஃப்கோர்ஸ் புகழ தான் செய்றேன் காட்ஸில்லா.” எனப் புன்னகையுடன் ஒப்புக்கொண்டாள்.

விஹானாவிற்கு அப்போது தான் கண்ணீர் நின்று மெல்லப் புன்னகை பூத்தது.

ஸ்வரூப்பின் பார்வை இப்போது மீண்டும் உத்ஷவியிடம் பாய, “இப்போவாவது வாயைத் திறப்பியா?” எனக் கேட்க, அவளை ஏதோ ஒன்று தடுத்தது.

‘இதுக்கு ஏன் இவள் இவ்ளோ வீம்பு பண்ணுறா?’ என ஸ்வரூப்பிற்கு சந்தேகம் தோன்றினாலும், அதனைத் துருவ முயலவில்லை.

“சரி… இந்த ஃபுட்ஏஜ் பாரு. உன் பிரெண்டு நிகிலனை நான் கொன்னுட்டேன்னு சொன்ன தான. இதை பாரு. யார் கொன்னாங்கன்னு புரியும்” என்று அவளுக்கு ஒரு வீடியோவைக் காண்பிக்க, அந்த விபத்து அங்கிருந்த சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகியது.

இவர்களது கார் விபத்தாகும் போதே, எதிர்சாலையில் ஒரு வேன் நின்று கொண்டே இருந்தது.

நிகிலன் தனியாக வருவது தெரிந்ததும், அந்த வேன் மெல்ல வேகம் எடுத்து, அவனை நோக்கி வந்து வேண்டுமென்றே அடித்துத் தூக்கியது அதில் அப்பட்டமாகப் பதிவாகி இருக்க, உத்ஷவிக்கு மேலும் திகைப்பு தான்.

“இது விபத்து இல்ல திருடி. திட்டமிடப்பட்ட கொலை. இப்பவாவது இதுல இருக்குற சீரியஸ்நெஸை புரிஞ்சுக்க. இப்ப நீங்க என்னை நம்பித்தான் ஆகணும்.” என்றிட, அவள் முகத்தில் மீண்டும் சிறு குழப்பம்.

அதில் சினம் தலைக்கேற, “ஓகே… நீ சொல்லவே வேணாம். நானே தெரிஞ்சுக்குறேன். நீ ஏன் ஜுவனைல்க்கு வந்தன்ற ரகசியத்தையும் சேர்த்து” எனப் பூடகமாகக் கூற, அவள் விலுக்கென நிமிர்ந்தாள்.

கோபத்துடன் அவன் அவளைத் தாண்டி நடக்க எத்தனிக்க, அவன் கையைப் பற்றிய உத்ஷவி, “நிகிலன் சொன்ன மேகனா எங்க கூட தான் இருந்தா…” என்றாள் முணுமுணுப்புடன்.

அதில் நின்றவன், இடுப்பில் கையைக் கொடுத்து ‘மேல சொல்லு’ என்பது போல கண்ணசைக்க, அவளும் யோசித்தவாறே,

“நான் ஜுவனைல்க்கு வரும் போதே அவளுக்கு 16, 17 வயசு இருக்கும். ரொம்பத் திமிரா இருப்பா. அங்க இருக்குற வார்டன் யாரையும் மதிக்க மாட்டா. எவ்ளோ பனிஷ்மென்ட் குடுத்தாலும் திரும்பத் திரும்ப ஏதாவது தப்பு பண்ணிக்கிட்டே தான் இருப்பா.

அவளுக்கு 18 வயசு ஆக ஒரு 2 மாசம் இருக்கும் போது, அங்க இருந்து தப்பிச்சு போய்ட்டா. எனக்கும் அவளை சுத்தமா பிடிக்காது. சோ, அவ கூட பேசுனாலே பிரச்சனைல தான் முடியும். நிக்கியை தவிர அங்க வேற யார் கூடவும் நான் பழகுனது இல்ல.

நான் அங்க போயிட்டு ஒரு வருஷத்துல, செயின் ஸ்னாட்சிங்ல ஒரு 17 வயசு பையனைப் புடிச்சுட்டு வந்தாங்க. அவன் கூடத் தான் இவள் எப்பவுமே சுத்திட்டு இருப்பா.

அவன் பேரு கூட… என இதழ் கடித்து சிந்தித்தவள்,

“ஹான்… பத்ரி. ஆனா அவன் ஒரேடியா அங்க இருக்க மாட்டான். வெளில போயிட்டு போயிட்டு தான் வருவான். ஒரு தடவை ரேப் கேஸ்ல கூட அவனை புடிச்சுட்டு வந்தாங்க. அந்த டைம்ல தான் அவனோட சேர்த்து ஜுவனைல்ல இருந்த 15 கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ் தப்பிச்சுப் போய்ட்டாங்க. அதுல நிக்கியும் ஒரு ஆளு. அதுக்கு அப்பறம் நான் அவனை இப்ப தான் பாக்குறேன்.” எனச் சொல்லிக்கொண்டே வந்தவளிடம்,

“அப்போ நீ ஏன் தப்பிச்சு போகல?” எனத் துளைப்பது போல பார்த்தான் ஸ்வரூப் அவ்தேஷ்.

“தப்பிச்சு போய்… சோத்துக்கு சிங்கி அடிக்கவா. நேரத்துக்கு சாப்பாடு, தரமா இல்லனாலும் படிக்க படிப்பும் இருந்துச்சு. அதான் நான் அங்கேயே செட்டில் ஆகிட்டேன்.” என அசட்டையுடன் கூறியவளை செய்வதறியாமல் பார்த்தனர் தோழிகள்.

அக்ஷிதாவோ, “ரேப்பிஸ்ட்ன்னு சொல்ற… அவங்களைத் தனியா தான அடைச்சுருப்பாங்க. உனக்கு ப்ராபளம் எதுவும் இருந்தது இல்லைல. உனக்கு தனி ரூம் குடுத்து இருப்பாங்க தான” எனப் பதறிப் போய் கேட்டாள்.

அதில் சத்தமாக சிரித்து விட்டவள், “அடியேய் நான் என்ன பைவ் ஸ்டார் ஹோட்டல்லையா ரூம் போட்டு தங்கிட்டு வர்றேன். அது ஒரு மினி ஜெயில். ரேப்பிஸ்ட், கஞ்சா விக்கிறவன், கொலை  பண்ணுனவன், சின்ன தப்பு, பண்ணுனவன், பெரிய தப்பு பண்ணுனவன, தெரியாம தப்பு பண்ணுனவன்னு  எல்லாரையும் ஒண்ணா தான் அடைச்சு வச்சிருப்பாங்க. பொண்ணுங்களுக்கும் பசங்களுக்கும் தனி தனியா பிளாக் இருக்கு. ஆனா, அது இருந்து ஒரு பிரயோஜனமும் இல்ல. அந்த பத்ரி பரதேசி… என்கிட்டயே ரெண்டு மூணு தடவை தப்பா நடந்துருக்கான்.”
என்றதும் விஹானாவும் பதறி விட்டாள்.

“என்னடி சொல்ற? அங்க வார்டன் எல்லாம் இருப்பாங்க தான.” என வருத்தத்துடன் கேட்க,

“இருப்பாங்க இருப்பாங்க. எதையும் கண்டுக்காம அவங்க பாட்டுக்கு இருப்பாங்க.” என்று சலித்துக் கொண்டவள், அவர்களின் கசங்கிய முகத்தைப் பார்த்து,

“ஹேய், நீங்க பயப்படுற மாதிரிலாம் ஒன்னும் இல்ல. அவன் என்கிட்ட சில்மிஷம் பண்ணுனதுமே தட்டை தூக்கி அடிச்சு அவன் மண்டையை உடைச்சுட்டேன். அதுல இருந்து எனக்கும் அவன் கேங்குக்கும் சுத்தமா ஆகாது. மேகனா என்னவோ நான் அவனை ரேப் அட்டெம்ப்ட் பண்ணுன ரேஞ்சுக்கு என்னை முறைச்சுக்கிட்டே சுத்துவா. அதுக்கு அப்பறம், எனக்கு ஏதாவது தொந்தரவு குடுத்துக்கிட்டே தான் இருப்பாங்க. அப்பறம் ஒரு நாள் எல்லாரும் மொத்தமா தப்பிச்சு போயிடுச்சுங்க. அதுக்கு அப்பறம், பெரிசா பிரச்சனை எதுவும் இல்லை” என்றாள் சாதாரணமாக. கேட்கும் அவர்களுக்குத் தான் பதறியது.

ஸ்வரூப்பின் இதயம் கூட உட்சபட்ச டெசிபலில் துடித்துக் கொண்டிருக்க, அதனை முகத்தில் சிறிதும் காட்டாமல் நடித்துக் கொண்டான்.

ஜோஷித் தான், “இதெல்லாம் கூட சரியா கவனிக்காம எதுக்கு ஜுவனைல் நடத்துறாங்க. அங்க வர்ற பசங்களை திருத்துறது தான அவங்க வேலை.” என்று ஆதங்கப்பட, அவனை விசித்திரமாகப் பார்த்தான் உத்ஷவி.

“நீ என்ன நினைச்சுட்டு இருக்க ஜோ. சிறுவர் சீர்திருத்தப்பள்ளின்னா, தப்பு செஞ்சவங்களை திருத்துற போதி மரம்ன்னு நினைச்சு இருக்கியா?” என கேலிநகையுடன் கேட்க,

“இல்லையா பின்ன?” எனக் கேட்டான் சஜித்.

“அட போங்கடா… நீங்க நல்லவனுங்களா இருக்கீங்கன்னு எல்லாரையும் அப்படியே நினைக்காதீங்க. ஜுவனைல்க்குள்ள வந்த பசங்களும் சரி பொண்ணுங்களும் சரி திருந்தி வெளில போனதை நான் பாத்ததே இல்லை. சின்ன தப்பு பண்ணிட்டு வந்தவன் கூட, கொலைகாரன், ரேப்பிஸ்ட் கூட சேர்ந்து வெளில போகும் போது ஒண்ணாம் நம்பர் க்ரிமினலா தான் போவான்.

அது சிறுவர் சீர்திருத்தப்பள்ளி இல்ல, க்ரிமினலை உருவாக்கும் பள்ளி. நம்ம நாட்டுல சோசியல் மீடியால வர்ற பிரச்சனையை மட்டும் தான் கோர்ட்டும் போலீசும் விசாரிக்குது.

அதுவும் 18 வயசுக்கு கீழ இருக்குறவங்க எந்த தப்பு பண்ணுனாலும் அதை பெருசா விசாரிக்கிறது கூட இல்லை. சின்ன திருட்டா இருந்தாலும், திருத்துறேன் பேர்வழின்னு ஜுவனைல்ல போட்டுடுறாங்க.

ஆக்சுவலா அதுக்கு அப்பறம் அந்த கேஸை கோர்ட்டுக்கு கொண்டு போய் அதுக்குன்னு ஒரு தண்டனையோ இல்ல மன்னிச்சு விடுறதோ ஏதோ ஒன்னு பண்ணனும்.

ஆனா, அவங்களுக்கு இருக்குற ஆயிரக்கணக்கான முக்கியமான கேஸுக்கு முன்னாடி, இந்த மாதிரி கேஸை எல்லாம் விசாரிக்க கூட டைம் இல்ல. எல்லாத்தையும் வருஷக் கணக்கா குமிச்சு போட்டுடுறாங்க அதுக்குள்ள இவன் க்ரிமினலா மாறிடுறான்.” எனப் பேசி முடித்ததும் மற்றவர்களும் அயர்ந்து போனர்.

ஸ்வரூப் தொண்டையைக் கனைத்துக் கொண்டு, “நீ என்ன தப்பு செஞ்ச?” எனக் கேட்க, “அதான் சொன்னேனே கோவில் நகையை திருடுனேன்னு…” என்றாள் மெல்லிய குரலில்.

அவளைக் கூர்மையுடன் பார்த்தவன், “உண்மையா என்னத் தப்பு செஞ்சன்னு கேட்டேன்.” என்றான் அழுத்தத்துடன்.

அதில் திகைத்தவள், “உண்மையை தான் சொல்றேன்” என்று முணுமுணுப்புடன் கூற,

“இங்க பாரு விஷா. நீ சொல்ற எல்லாமே நமக்கு ஏதோ ஒரு விதத்துல உதவியா இருக்கும். சோ எதையும் மறைக்காம சொல்லு” என்றவனுக்கு, அவளைப் பற்றி அறிய ஆவல் மிகுந்தது.

அதனை வெளிக்காட்டாமல் மறைமுகமாகக் கேட்டதில் அவள் குழம்பினாள்.

“இதுக்கும் என்னைப் பத்தி சொல்றதுக்கும் என்ன சம்பந்தம்” எனப் புரியாமல் கேட்க, ஒரு நொடி தடுமாறியவன்,

“ஏதாவது இருக்கலாம்ல…” என தோளைக் குலுக்கிக்கொண்டான் இயல்பு போன்று.

இருக்குமோ… என அவளும் குழம்பி, தன்னைப் போட்டு வாங்குவது உறைக்காமல், கடந்த காலத்தின் எச்சங்களை சொல்லலானாள்.

அத்தியாயம் 32

“அக்கா… ஜானுக்கா…” என சத்தமிட்டபடி அந்தச் சிறிய ஓட்டு வீட்டினுள் நுழைந்தாள் 12 வயது நிரம்பிய உத்ஷவி. பள்ளியில் இருந்து திரும்பியதன் அடையாளமாக வெள்ளைச் சட்டை லேசாகக் கசங்கி இருக்க, பாவாடையிலும் ஆங்காங்கே மண் ஒட்டி இருந்தது. ரெட்டை ஜடையில் ஒரு பக்கம் ரிப்பன் அவிழ்ந்திருந்தது.

பக்கிள்ஸ் வைத்தப் பையை தலைவழியாகப் போட்டுக் கொண்டு உள்ளே வந்தவள், நடை வண்டியில் நடைப் பழகிக் கொண்டிருந்த 11 மாத பெண் குழந்தையைக் கண்டு குஷியானாள்.

அவளைப் போன்றே, அக்குழந்தையும் அவளைக் கண்டதும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து வேகமாகத் தவழ்ந்து அவளருகில் வர, பையைக் கீழே போட்டு விட்டு, “என் செல்லப்பொண்ணு சித்தி ஸ்கூல்ல இருந்து வந்துட்டேனே…” எனத் தூக்கி சுற்றினாள்.

அதில் குழந்தை கிளுகிளுப்புடன் சிரிக்க, உள்ளே இருந்து கல் வைத்த புடவையில், தலையில் மல்லிகைப் பூ மின்ன வெளியில் வந்தாள் அவளது பெரியம்மா பெண் ஜனனி.

அவளைக் கண்டதும், “அக்கா பாப்பாவை நான் தூக்கிட்டு போறேன்.” எனச் சொல்லிக்கொண்டு அவளது பதிலை எதிர்பாராமல், பையையும் ஒரு கையில் தூக்கிக்கொள்ள, அதனை மறுக்காத ஜனனி, “நான் பக்கத்துக்கு வீட்டு மல்லிகா கூட சினிமாக்கு போறேன். ராத்திரி சாப்பாடும் குடுத்துடு” என்றாள் கண்ணாடியில் பொட்டை சரி செய்தபடி.

அதில் வேகமாக தலையாட்டிய உத்ஷவி “சரிக்கா.” என்று வெளியில் வந்தாள். நான்கு வீடு தள்ளி இருந்த அவளது ஓட்டு வீட்டுக்குள் நுழைந்தவள், பையையும் குழந்தையையும் கீழே விட்டு விட்டு, “அம்மா… நானும் கவிக்குட்டியும் வந்துட்டோம்” என்று பின்புறம் பாத்திரம் துலக்கிக்கொண்டிருந்த அவளது தாய் இந்துஜாவிடம் சென்றாள்.

அவளை முறைத்த இந்துஜா, “தினமும் உனக்கு வேற வேலை இல்ல சவி. கொஞ்சுறதுன்னா அங்கேயே கொஞ்சிட்டு வர வேண்டியது தான. ஏன் புள்ளையைத் தூக்கிட்டு வர்ற. உங்கிட்ட குடுத்துட்டு அவள் நல்லா ஊர் சுத்திட்டு அலங்கரிச்சுட்டு இருக்கா. நீ பள்ளிக்கூடம் விட்டு வந்து முகம் கூட கழுவாம ஆயா வேலைப் பார்த்துட்டு இருக்க.” என்று அதட்டினார்.

ஆனாலும் அவசரமாக கையைக் கழுவி விட்டு கவிக்குட்டியை தூக்கிக்கொஞ்சவும் தவறவில்லை.

“ஏன்மா இப்படி சொல்ற. நம்ம பாப்பா தான. அக்கா வெளில போகட்டும் நான் பாத்துக்குறேன் கவிக்குட்டியை…” என்று மாலைப்பொழுது முழுக்க தனது தமக்கைக் குழந்தையுடனே பொழுதைக் கழிப்பாள் உத்ஷவி.

குண்டுக் கன்னங்களுடன், அவளைக் கண்டதுமே ஆர்வமாகப் பாசத்தைப் பொழிந்து முத்தமிட்டு கட்டிக்கொள்ளும் கவிதாவை பார்க்கப் பார்க்க தெவிட்டாது அவளுக்கு.

அவள் பிறந்ததில் இருந்தே, அவளைப் பார்த்துக்கொள்வதைத் தனது கடமையாகச் செய்து கொண்டிருக்கிறாள்.

இரவு சோறூட்டி உறங்க வைத்து விட்டே தமக்கையின் வீட்டுக்கு தூக்கிச் செல்வாள்.

அவர்களைக் கண்டதும் முகம் மலர்ந்த ஜனனியின் கணவன் விக்னேஷ், “பாப்பா தூங்கிட்டாளாடா. முதல்லயே கூட்டிட்டு வந்துருக்கலாம்ல. பாரு நீ இன்னும் யூனிபார்ம் கூட மாத்தாம இருக்க.” என்று மென்மையுடன் கண்டிக்க, “பாப்பா கூட இருந்தா எல்லாமே மறந்துடுது அத்தான்.” என வெகுளியாகச் சிரித்தாள்.

ஜனனி, ஒரு டப்பாவில் கேசரியை நிறைத்து, “சவி… இந்தா கேசரி செஞ்சேன் எடுத்துட்டு போய் சித்திக்கிட்ட குடு. நீயும் சாப்பிடு.” என்று கொடுக்க,

“சரிக்கா.” என்றவள், மீண்டும் ஒரு முறை உறங்கும் குழந்தைக்கு முத்தமிட்டு விட்டு நகர, அவளை பெருமூச்சுடன் பார்த்த விக்னேஷ், “ஜானு… என்ன இருந்தாலும் சின்னப் பிள்ளைக்கிட்ட இவ்ளோ வேலை வாங்காத. நீ சினிமாவுக்கு போகணும்ன்னா பிள்ளையையும் தூக்கிட்டுப் போக வேண்டியது தான. அதை விட்டுட்டு பள்ளிக்கூடம் போற பிள்ளைக்கிட்ட விட்டுட்டு வந்துருக்க. அவள் படிக்க வேணாமா” என்று கண்டிக்க ஆரம்பிக்க, அவளோ பொங்கினாள்.

“நானா வேணாம்ன்னு சொன்னேன். அவள் தான் பாப்பா பாப்பான்னு உயிரை விடுறா. நான் சினிமாவுக்குத் தூக்கிட்டு போறேன்னு சொல்லியும் அவள் தான் வலுக்கட்டாயமா பாப்பாவை வாங்கிட்டுப் போனா.” என்று கண்ணீர் சிந்திட, அவன் மற்றதெல்லாம் மறந்து, மனைவியைக் கொஞ்சி சமாதானம் செய்யலானான்.

தினமும் இதுவே வாடிக்கையாக, ஒரு நாள் உத்ஷவியின் பள்ளி ஆசிரியர் இந்துஜாவைப் பள்ளிக்கு வரக்கூறினார்.

இந்துஜாவும் என்னவோ ஏதோ என்று சென்று பார்க்க, உத்ஷவி தலைமை ஆசிரியர் அறையில் தலையைக் குனிந்து கொண்டு நின்றதில் “என்ன ஆச்சு சவி…” என்றார் புரியாமல்.

அவளது வகுப்பு ஆசிரியர் விமலாவோ, “என்னை கேளுங்க என்ன செஞ்சான்னு. அவளோட பையை பார்த்தீங்களா… க்ளாஸ்ல இருக்குற பசங்களோட ரப்பர், பென்சில், பேனான்னு எல்லாத்தையும் திருடி வச்சுருக்கா. ஏன் திருடுனன்னு கேட்டா, எடுக்கணும்ன்னு தோணுச்சு எடுத்துட்டேன்னு திமிரா பதில் சொல்றா…” எனக் கடிந்தார்.

இந்துஜா ஒரு நொடி திகைத்து பின் மகளை முறைத்து விட்டு, “இனிமே இப்படி பண்ண மாட்டா மிஸ் இந்த தடவை மன்னிச்சுடுங்க…” எனக் கெஞ்ச,

“இதான் லாஸ்ட் வார்னிங். இனிமே இப்படி செஞ்சா டிசி வாங்கிட்டு வேற ஸ்கூல்ல சேர்த்துக்கங்க.” என்று தலைமை ஆசிரியர் கண்டித்து அனுப்ப, வீட்டிற்க்கு சென்றதுமே இந்துஜா மகளைப் பளாரென அடித்தார்.

அவள் தேம்பியபடி அன்னையைப் பார்க்க, “என்ன பழக்கம்டி இது. திருடுறது தப்பு இல்ல…” என்று அதட்ட,

“தப்பு தான்மா. ஆனா என்னால என்னை அடக்கவே முடியல. யாரோட பொருளாவது பிடிச்சிருந்தா உடனே எடுக்கணும் போல இருக்கு. வேணும்ன்னே திருடலம்மா. என்னை நம்பேன்.” எனப் பாவமாக உரைக்க, “அதுக்கு பேர் தான்டி திருட்டு…” என முறைத்தவருக்கும் அதற்கு மேல் அவளிடம் கண்டிப்பு காட்ட இயலவில்லை.

“இனிமே இப்படி செய்யாத சவிமா” என பதமாகக் கூற, “நான் வேணும்ன்னு பண்ணலைம்மா… நீயும் என்னை நம்ப மாட்டியா?” என ஏக்கத்துடன் கேட்டதில், அவர் தான் குழம்பிப் போனார்.

அக்கம் பக்கத்து வீட்டில், வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்திக் கொண்டிருப்பவருக்கு, இதேதுடா புது சோதனை என்றிருந்தது.

அன்று வழக்கம் போல கவிதாவை தூக்கிக்கொண்டு தன் வீட்டிற்கு வந்து விட்டாள் உத்ஷவி. அப்போது ஜனனியின் வீட்டுப்பக்கத்தில் இருந்த மல்லிகா தான் ஜனனியிடம் அங்கலாய்த்துக் கொண்டாள்.

“உன் தங்கச்சிக்காரி செஞ்ச வேல தெரியுமாடி. கிளாஸ்ல திருட்டு வேலை பார்த்துருக்கா…” என அப்பிரச்சனையை பேசிப் பேசி பெரியதாக்க, ஜனனிக்குக் கோபம் தலைக்கு ஏறியது.

தன்னிடம் அனைத்தையும் பகிரும் சித்தி இதை சொல்லாமல் விட்டு விட்டாரே… என அர்ச்சித்துக் கொண்டவளின், விஷக் குணத்தை அறியும் வாய்ப்பு அன்றே கிட்டியது.

இரவு கவிக்குட்டியை உண்ண வைத்து தமக்கையின் வீட்டிற்குத் தூக்கி வந்த உத்ஷவியிடம் இருந்து குழந்தையை வெடுக்கெனப் பிடுங்கிய ஜனனி, குழந்தையின் கழுத்தில் கையில் போட்டிருக்கும் நகையெல்லாம் பத்திரமாக இருக்கிறதா என ஒரு முறை சோதித்தாள்.

அவளின் நடவடிக்கைப் புரியாமல், “என்னக்கா பண்ற?” எனக் கேட்ட இளையவளிடம், “இவள் போட்டிருந்த தங்கச் செயின் எங்கடி” எனக் கேட்டு பதறினாள் ஜனனி.

உண்மையாகவே குழந்தையின் செயின் காணாமல் போயிருக்க, அவளோ விழித்தாள்.

“எனக்குத் தெரியலக்கா” என உத்ஷவி கூறியும் நம்பாதவள், “பொய் பேசாதடி. நீ ஸ்கூலுல பண்ணுன திருட்டுத்தனம் எல்லாம் எனக்கும் தெரியும். உன் வேலையை என்கிட்டயே காட்டுறியா?” என மிரட்ட, உத்ஷவிக்கு அவமானத்தில் முகம் கறுகியது.

“சத்தியமா பாப்பாவோட செயினை நான் எடுக்கலக்கா.” என அழுகும் குரலில் கூறிட, ஜனனி அவளது சட்டையைப் பார்த்தாள்.

ஒரு பட்டனில் கவியின் செயின் தொங்கிக்கொண்டிருக்க, “அப்போ இது என்னதுடி” என வெடுக்கென அதனை எடுத்துக்கொண்டாள்.

உத்ஷவிக்கே அது எப்படி வந்தது எனத் தெரியவில்லை.

“எனக்கு நிஜமா தெரியலைக்கா. பாப்பாவை தூக்கும் போது தெரியாம செயின் பிடிச்சு இழுத்துருக்கும்.” என்ற வாதத்தை நம்பாதவள்,

“திருடுறதையும் திருடிட்டு சமாளிக்கிறதைப் பாரு. உன்னால தான் உன் அப்பாவும் சித்தி கூட வாழாம ஓடிப் போய்ட்டாரு. அப்பவே எங்க அம்மா எவ்ளோவோ சொன்னாங்க… பணக்காரனை நம்பாதன்னு. உன் அம்மா கேட்டாத்தான. தாலி கட்டுறதுக்கு முன்னாடியே வயித்தைத் தள்ளிட்டு வந்து, எங்களை தான் அசிங்கப்படுத்துனாங்க. சரி அதுக்கு அப்பறமாவது கவுரவமா கல்யாணம் பண்ணுனாங்களா… அதுவும் இல்ல, முறை தவறி பிறந்தது மட்டும் எப்படி முறையா வளரும்?” என வார்த்தைகளால் அப்பிஞ்சின் மனதிற்கு கொள்ளி வைத்தாள்.

‘முறை தவறி பிறந்தது மட்டும் எப்படி முறையா வளரும்?’ ஏனோ இவ்வார்த்தை மட்டும் இன்றளவு கூட அவளை விட்டு நீங்கவே இல்லை.

அப்பொழுதே முடிவு செய்து விட்டாள், தான் பெரியாளாகி தன்னை பெற்று விட்டுச் சென்றவனை நேரில் கண்டால், செருப்பாலேயே அடிக்க வேண்டும் என்று.

வாடிய முகத்துடன் வீட்டுக்குத் திரும்பியவளிடம் இந்துஜா என்னவென்று விசாரிக்க, அவள் நடந்ததை ஒன்று விடாமல் கூறி முடித்தாள்.

இந்துஜாவிற்கு ஜனனி மீது தான் கடுங்கோபம் வந்தது. சிறு பெண்ணிடம் என்ன பேச்சு பேசி இருக்கிறாளென்று.

அப்போதைக்கு அவளை சமன் செய்து விட, மறுநாள் அனைத்தையும் மறந்து விட்டு பள்ளி முடிந்து நேராக தமக்கையின் வீட்டிற்கே சென்றாள் உத்ஷவி.

எப்போதும் போல கவிதா அவளைப் பார்த்ததும் பாய்ந்து வர, அவளைக் கையில் அள்ளும் நேரம் ஜனனி வந்து படக்கென குழந்தையைத் தூக்கிக் கொண்டாள்.

உத்ஷவி குழப்பத்துடன், “என்ன ஆச்சுக்கா?” என வினவ, “இனிமே வந்து புள்ளையத் தூக்குற வேலை எல்லாம் வச்சுக்காத. எப்ப எது காணாம போகுமோன்னு பதறிக்கிட்டே என்னால இருக்க முடியாது” என்றதும் அதிர்ந்தே விட்டாள்.

அவள் கூறிய கொடுஞ்சொற்களை விட, குழந்தையைத் தர மாட்டேன் என்றதே அவளைக் கலங்க வைத்தது.

வீடு வரைக்கும் அழுது கொண்டே சென்றவள், “ம்மா… அக்கா கவிக்குட்டியை தரமாட்டேங்குறா. எனக்கு பாப்பா வேணும்” என்று அழுது தீர்த்திட, இந்துஜாவிற்கும் கண் கலங்கிப் போனது.

“அவள் அவ்ளோ பேசியும் நீ ஏண்டி அங்க போன.” என இந்துஜா ஆதங்கத்துடன் வினவ,

“பாப்பாவை பாக்கணும்னு போனேன்மா. நீயாவது பேசி தர சொல்லுமா. வேணும்னா செயின் வளையலை எல்லாம் கழட்டிட்டு கூட தரச் சொல்லு. நான் அப்படி எல்லாம் எதையும் திருட மாட்டேன்.” என்று கேவிட, இந்துஜாவிற்கு ஐயோ என்றிருந்தது.

அவளைக் கட்டிக்கொண்டவர், “உன்னை கூட வச்சுருக்குறதே வயித்துல நெருப்பைக் கட்டுன மாதிரி இருக்குடி. பத்தங்களாஸ் முடிச்சதோட உனக்கு கல்யாணம் பண்ணி வச்சுருடுறேன். அப்பறம் நீயே குழந்தைப் பெத்து கொஞ்சிக்க.” என்று சமாதானம் செய்யப் பார்க்க,

அவளோ “பத்தாங்கிளாஸ் முடிச்சதுமா?” என விழித்து, “அதுக்கு இன்னும் மூணு வருஷம் இருக்கே…” என்றாள் மலைப்பாக.

“அடிக்கழுதை…” என அவள் தலையிலேயே நங்கென கொட்டிய இந்துஜா, “ஒழுங்கா பன்னெண்டாவது வரையாவது பாஸ் பண்ணு. கல்யாணம் பண்றாளாம்ல கல்யாணம்” என்று போலியாய் முறைத்தார்.

தாயின் பேச்சில் மெல்ல அழுகை மட்டுப்பட, அவளோ “அம்மா! அம்மா நீ எனக்கு இப்பவே கல்யாணம் பண்ணி வச்சுடுறீயா” என அவர் முந்தானைப் பிடித்துக் கேட்க, அவருக்கோ நெஞ்சு வலியே வந்து விட்டது.

“என்னடி சொல்ற?” எனத் திகைக்க,

“படிக்கன்னு போனா தான, எனக்கு ஏதாவது திருடனும்ன்னு தோணுது. நானும் ஜானுக்கா மாதிரி கல்யாணம் பண்ணிட்டு வீட்ல இருந்துட்டேன்னு வையேன் இந்த பிரச்சனையே இல்லை. ஜானுக்கா மாதிரி எனக்கும் கொலுக் மொலுக்குன்னு பாப்பா இருக்கும். அதை கொஞ்சிகிட்டே இருந்துடுவேன்.” என ‘மிட்டாய் வாங்கித் தா’ என்பது போல கேட்டதில் இந்துஜா நொந்து போனார்.

அவளைத் தரையில் அமர வைத்துத் தானும் அமர்ந்தவர், “இங்க பாரு சவிக்குட்டி… கல்யாணம்ன்றது நீ நினைக்கிற மாதிரி இல்ல. உனக்கு அதைப் பத்தி யோசிக்க வயசும் இல்லை. திருடுறது தப்புன்னுப் புரிஞ்சு அந்த பழக்கத்தை நிறுத்திக்கப் பாரு. நம்மளை மாதிரி ஆளுங்களுக்கு படிப்பு தான் வாழ்க்கையோட பிடிப்பே. முக்கியமா ஆம்பளைங்களை அதுவும் பணக்காரங்கள நம்பவே நம்பாத. என் ராணிடி நீ. உன் உலகத்துல நீ மட்டும் ராணியே இரு. ஏன் அடிமையா இருக்கணும்ன்னு நினைக்கிற.” என மெல்லப் பேசி புரிய வைக்க, அவளும் தலையாட்டிக் கேட்டுக் கொண்டாள்.

மகளுக்குப் புரிய வைத்த நிம்மதியில் அவளை மறுநாள் பள்ளிக்கு அனுப்பி விட்டு, வீட்டு வேலைக்காக சென்றவர், அங்கு கேஸ் வெடித்து விபத்து ஏற்பட்டதில் உயிரற்ற கரிக்கட்டையாகத் தான் வீடு திரும்பினார்.

காலையில் வரை தன்னுடன் அளவளாவித் தன்னை அரவணைத்த தாய் இப்போது இல்லை என்று உத்ஷவியால் நம்பவே இயலவில்லை.

வாழ்க்கையில் சில துயரங்கள் ஏன் நடக்கிறது எதற்கு நடக்கிறது என்று புரியாது. அது புரியும் போது வாழ்க்கையே முடிந்து போயிருக்கும்.

இந்துஜா சில இடத்தில் கடன்கள் வாங்கி இருக்க, கடன்காரர்கள் வீட்டை முற்றுகை இட்டு, வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் திரட்டி எடுத்துப்போனதோடு நில்லாமல், உத்ஷவியின் சொந்தமான ஜனனியின் பெற்றோரிடம் பணத்தைக் கேட்க, அவர்களோ எங்களுக்கும் இவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்று விட்டனர்.

விக்னேஷ் தான், “பாவம்டி சின்னப் பொண்ணு. அவளை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்” என்று மனைவியிடம் கூற,

“ஏன் உங்களுக்கு நான் ஒருத்தி பத்தலையான்னு ஊரு முழுக்கத் தப்பா பேசவா?” என சுருக்கென பதில் கூற, அவன் அதற்கு பிறகே வாயே திறக்கவில்லை.

பேசினால், அந்தச் சின்னப் பெண்ணைத் தான் அசிங்கப்படுத்துவாள் என்று புரிந்து கொண்டவனுக்கு, செய்வதறியாத நிலை தான்.

உத்ஷவியால் அவளது வீட்டிலும் இருக்க இயலாத நிலை. தமக்கையோ வீட்டுப் பக்கம் வந்து விடாதே என்று நேரடியாகவே கூறி விட்டுச் செல்ல, நொந்து போனவள், அவள் ஊரின் எல்லையில் இருக்கும் சிறு கோவிலிலேயே அன்று இரவு படுத்து உறங்கி விட்டாள்.

நடுஜாமத்தில் ஏதோ பேச்சுக் குரல் கேட்டதில் கண்ணைக் கசக்கியபடி விழித்தவள் பேயறைந்தது போல நின்றாள்.

அந்த ஊரிலேயே பெரிய மனிதனாக மதிக்கப்படும் ஊர் தலைவன் ரங்கன், கோவில் நகைகளை இரு ஆட்கள் கொண்டு திருடிக் கொண்டிருந்தான்.

அவனும் இவளை எதிர்பார்க்காமல் திகைக்க, அவளும் பயத்தில் கத்தப் போனாள்.

அதற்குள் வேறொரு ஊர்க்காரன் கோவிலில் யாரோ கொள்ளையடிப்பதைப் பார்த்து சத்தம் கொடுக்க, ரங்கன் அவசரமாக யோசித்தான்.

நொடியில் ஒரு திட்டத்தை உருவாக்கியவன், முக்கால்வாசி நகைகளை அவன் ஆட்களிடம் கொடுத்து தலைமறைவாக விட்டு, சிறிது நகைகளை மட்டும் உத்ஷவியின் கையில் திணித்தான்.

அவளோ அதிர்ந்து கையில் இருந்த நகைகளைப் பார்க்க, அதற்குள் ஊர் மக்கள் கூடி விட்டனர்.

ரங்கனோ, உன் வயசுக்கு ஏதோ பென்சில் பேனா தான் திருடுறன்னு சும்மா இருந்தா, நீ கோவில் நகைல கை வைக்கிற அளவு வந்துட்டியா? எனக் கூறியது அவளுக்கு நடுங்கி விட்டது.

“இல்ல இல்ல…” என அவள் மறுப்பாக தலையசைப்பதை யாரும் கண்டுகொள்ளக் கூட இல்லை.

யாரோ இருவருடன் சேர்ந்து இவளும் நகைகளைக் கடத்தியதாகவும், மீதி நகைகளை மற்றவர்கள் எடுத்துக்கொண்டு ஓடி விட்டதாகவும், இந்த பெண்ணை மட்டுமே தான் பிடித்து மீதி நகைகளைக் காப்பாற்றியதாகவும் ரங்கன் ஊர் மக்களையும் காவலர்களையும் நம்ப வைத்து விட்டான்.

உத்ஷவி அடம்பிடித்து அழுது, “நான் இத செய்யவே இல்லை” என்று மல்லுக்கட்டி, அடியும் வாங்கிக்கொண்டாள்.

ரங்கன் யாரும் அறியாமல், அவளிடம் அடிக்குரலில் “எதிர்த்துப் பேசுன, உன்னை அடையாளம் தெரியாத பொணமா ஆத்துல வீசிடுவேன். வாயை மூடிக்கிட்டு போலீஸ் கூட போ.” என்று மிரட்ட, அவளுக்குப் பயமும் உண்மையை வெளியில் கூற இயலா நிலையும் சுழற்றி அடித்தது.

அதன் பிறகு, காவலாளிகளின் குடைச்சல் தாள இயலாமல், தானே திருடியதாக ஒப்புக்கொள்ள, ரங்கன் அவளை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்ப ஏற்பாடு செய்து விட்டார்.

விஹானாவும் அக்ஷிதாவும் கன்னத்தில் வழிந்த கண்ணீரைக் கூட துடைக்க இயலாமல் உத்ஷவியையே வெறித்திருந்தனர்.

ஜோஷித்திற்கும் சஜித்திற்கும் கூட விழிகள் கலங்கி விட்டது. ஸ்வரூப் எப்போது அவளருகில் அமர்ந்து, எப்போது அவள் கையை தன் கைக்குள் வைத்துக்கொண்டான் என்று அவனுக்கே தெரியவில்லை.

ஆத்திரம்… ஆத்திரம்… மனமெங்கும் அத்தனை பேர் மீதும் ஆத்திரம். இவள் சம்பந்தப்பட்ட ஒருவர் கிடைத்தாலும் யோசியாமல் சுட்டிக் கொன்று விடுவான். ஏன் திருடுகிறோம் என்றே தெரியாமல் மன சம்பந்தப்பட்ட பிரச்சனையால் பாதிக்கப்பட்ட சிறுமியைத் திருடியாக பாவித்து, பெரும் பழி சுமத்தித் தண்டனையும் கொடுத்து இருக்கும் அவ்வூர் மக்களின் மீதும், ஜனனியின் மீதும், ரங்கனின் மீதும் கட்டுக்கடங்காமல் கோபம் கொப்பளித்தது.

அவனது ஒரு கை அவள் கரத்தை மென்மையுடன் பிடித்திருக்க, மற்றொரு கையோ சினத்தை அடக்க இயலாமல் பெட்ஷீட்டை இறுக்கத்துடன் கசக்கிப் பிழிந்து கொண்டிருந்தது.

அவளுமே பழையவைப் பற்றிய பேச்சில் அந்தத் தீண்டலை உணரவில்லை. இப்போதும் அவளிடம் வருத்தமோ வேதனையோ ஒன்றுமே தென்படவில்லை. மரத்துப் போன உணர்வுகளுக்கு உயிரும் இருக்காதே. அது போல தான், அவளுக்கும் அனைத்தும் மரத்து போய் விட்டது.

“ஆனா டைனோசர்… இதுல தேவைப்படுற மாதிரி ஒரு எழவும் இல்லையே.” என மூக்கைச் சுருக்கி அவனைப் பார்க்க, ஸ்வரூப்போ தன் நயனங்கள் கொண்டு நங்கையின் மறைக்கப்பட்ட வலிதனை அவளது விழிகளில் தேடி தோற்றுப்போய், அவ்விழிகளை தனக்குள் சிறைபிடிக்க முயன்றான்.

முதலும் முடிவும் நீ…
மேகா

ஸ்டோரி எப்படி போகுதுன்னு சொல்லுங்க drs🥰

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
17
+1
100
+1
4
+1
1

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  13 Comments

  1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  2. Naveena Ramesh

   😍😍😍
   விஷா உன் ஊருக்கு ஸ்வரூப் போயிருவான்டி எல்லாரும் செத்தாங்க…

  3. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  4. நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல்