Loading

அத்தியாயம் 27

குழந்தையை உரியவர்களிடம் ஒப்படைத்து விட்டு, மூன்று ஜோடிகளும் அறைக்குத் திரும்பியது.

விஹானா தான் ஸ்வரூப்பை திட்டித் தீர்த்தாள். “ரொம்ப ஓவராத்தான் போறான் இவன். எப்பப் பார்த்தாலும் கை நீட்டிக்கிட்டே இருக்கான். கேட்க யாரும் இல்லன்னு நினைச்சுட்டானா?” அறைக்குள் நுழைந்ததும் விஹானா பொங்கிட,

அக்ஷிதா, “நீ வேணும்ன்னா போய் கேளேன்” என்றாள் அவளை மேலும் கீழும் பார்த்து.

“என்னத்த கேட்குறது… கேட்குறதுக்கு முன்னாடியே துப்பாக்கியை எடுத்து சுட்டுப்புடுறான்.” என சலித்துக் கொண்டவள், புலம்பலை நிறுத்தவில்லை.

அக்ஷிதாவும் அதனை ஆமோதித்து, “எதுக்குடி அவன் உன்னைத் திட்டிட்டு இருந்தான்?” என உத்ஷவியிடம் வினவ, அவள் நடந்ததைப் பற்றிக் கவலை கொள்ளாமல், அப்படியே கூறிட, இரு பெண்களும் விழித்தனர்.

விஹானாவோ, மெல்லக் குரலைத் தாழ்த்தி, “ப்பூ! இவ்ளோ தானா டார்ல்ஸ். ரெண்டு நிமிஷம் குழந்தையை வாங்கிருந்தா இவ்ளோ ப்ராப்லம் இல்லையே.” என எதார்த்தமாகக் கூற,

அவளைத் தீயாக முறைத்தவள், “நான் என்ன செய்யணும் செய்யக்கூடாதுன்னு நீ சொல்லத் தேவை இல்ல.” என முகத்தில் அடித்தவாறு கூறி விட, விஹானாவின் முகம் சுருங்கிப் போனது.

அக்ஷிதா, “ஏன் டார்ல்ஸ் இவ்ளோ கோபப்படுற. இது சாதாரண விஷயம் தான. இதுக்கு நீயும் இவ்ளோ ரியாக்ட் பண்ணிருக்க தேவை இல்லை. அவனும் கோபப்பட்டுருக்க தேவை இல்லை” என்று அமைதியுடன் உரைக்க, உத்ஷவி எரிச்சலானாள்.

“ப்ச், என்னடி பிரச்சனை இப்ப உங்களுக்கு. அவன் ஒரு பக்கம் இம்சை பண்றான்னா, நீங்க ஒரு பக்கம் உயிரை வாங்குறீங்க. அவனுக்கு அவ்ளோ சப்போர்ட் பண்றதுன்னா, போய் அவனுங்களோடயே இருக்க வேண்டியது தான. என்ன ஹேருக்கு இங்க வந்து உட்காந்து என் கழுத்தை அறுக்குறீங்க…” எனக் கண்ணாபின்னாவெனத் திட்ட, விஹானாவிற்கு இப்போது சிறிது கோபமே வந்து விட்டது.

“போதும் ஷவி… நீ எப்பவுமே எங்களை ஃப்ரெண்டா நினைக்க மாட்டன்னு தெரிஞ்சும் உன் கூடவே சுத்துறோம்ல, அதான் உனக்கு ப்ரெண்ட்ஷிப்போட அருமை எல்லாம் தெரிய மாட்டேங்குது. யாராச்சும் நம்ம கூட பழக மாட்டாங்களான்னு நிறைய நாள் ஏங்கி இருக்கேன். அதோட வெளிப்பாடு தான், உன்னையும் இவளையும் விட்டுப் போக முடியாம மனசு அடிச்சுக்குது. ஆனா, உனக்கு அந்த மாதிரி ஒரு எழவும் இல்லன்னு தெரிஞ்சும்…” என்ற வாசகத்தை முற்றுப் பெற விடாதவள்,

“தெரியும்ல… அப்பறம் ஏன் நாய் மாதிரி என் பின்னாடியே சுத்துறீங்க.” என வள்ளெனக் கத்தினாள்.

அக்ஷிதாவோ, “நாய் அது இதுன்னு சொல்லாத ஷவி…” எனக் கலங்கிய குரலில் கூறிட,

விஹானா, “இவ கூட பேசுறது வேஸ்ட். நீ தனியா தான இருக்கணும். தாராளமா இரு.” என்றவள், அக்ஷிதாவை இழுத்துக் கொண்டு வெளியில் சென்று விட்டாள்.

பக்கத்து அறையில் ஆடவர்களும் காரசாரமான விவாதத்தில் தான் இருந்தனர்.

“ஸ்வரா… அந்த காடன் வேங்கடகிரி பக்கத்துல இருக்குற பஞ்சு ஆலை தான் வேலை பார்த்துட்டு இருந்துருக்கான். கிட்டதட்ட மூணு வருஷம் அங்க வேலை பார்த்துருக்கான். மூணு வருஷத்துல ஒரு தடவை கூடவா, வீட்டுக்குப் பேசணும்ன்னு தோணிருக்காது.” என யோசனையுடன் கேட்டான் சஜித்.

“அவன் அங்க எங்க தங்கி இருந்தான்?” என ஜோஷித் கேட்க, “அவன் வேலை பார்த்த இடத்துலயே லேபர்ஸ் தங்க ரூம் குடுத்து இருக்காங்க. அங்க தான் இருந்துருக்கான். இதே மாதிரி மத்தவங்களும் கிடைச்சுட்டா ஓகே தான்.” எனப் பெருமூச்சு விட்டான்.

ஆனால் ஸ்வரூப்பிற்குத் தான் ஏதோ தவறாகவே பட்டது. “நாகா பத்தின தகவல் ஏதாவது கிடைச்சுதா?” என்றதற்கு சஜித் மறுப்பாக தலையாட்டினான்.

“ப்ச்…” எனக் கழுத்தைத் தேய்த்துக் கொண்டவன், “சரி… நான் வெளில போயிட்டு வரேன். அந்த பொண்ணுங்களைக் கூப்பிட்டு சாப்பிட சொல்லு”. எனக் கூறும் போதே, திறந்திருந்தக் கதவை தள்ளிக்கொண்டு இருவரும் உள்ளே வந்தனர்.

ஜோஷித் தான், “சோறுன்னு சொன்னதுமே எப்படி தான் ஆஜர் ஆகுவாளுங்களோ.” எனக் கிண்டலடிக்க, சஜித் நமுட்டுச் சிரிப்புடன், “அந்த கவர்ல சாப்பாடு இருக்கு. சாப்பிடுங்க” என்றான்.

அக்ஷிதாவோ தலையை நிமிர்த்தாமல் இருக்க, சஜித் தான் வியந்தான்.

“என்ன ஒரு அதிசயம் கேடி. இந்நேரம் நீ பாஞ்சு போய் கவர எடுத்துருக்கணுமே…” எனக் கேலி புரிய,

ஜோஷித், “அதான் போற வர்ற வழில எல்லாம் ஸ்நாக்ஸ்சா வாங்கி சாப்பிட்டாளே. அப்பறம் எப்படி பசிக்கும்?” என்றான் நக்கலாக.

“அதெல்லாம் இவளுக்கு மட்டும் கடவுள் தனியா ஸ்பெஷலா வயித்துல ஸ்பேஸ் வச்சிருக்காரு ஜோ. எவ்ளோ சாப்பிட்டாலும் உள்ள இடம் இருக்கும்” எனக் கேலி நகை புரிய, அக்ஷிதாவிற்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

அதில் உதட்டைப் பிதுக்கி கண்ணில் நீர் தேங்க நிமிர்ந்து அவர்களை முறைத்திட, சஜித் பதறினான்.

“ஏய் எதுக்குடி இப்ப கண்ணுல வாட்டர் ஃபால்ஸ் விடுற.” எனக் கேட்டதும் தான், ஜோஷித் விஹானாவைக் கவனித்தான். அவளது முகமும் கன்றிப் போய் தான் இருந்தது.

“என்ன ஆச்சு உங்க ரெண்டு பேருக்கும். எங்க உங்க தோஸ்து…?: எனக் கேட்டதும், “அவளைப் பத்தி பேசாத ஜோஷ். அவளுக்கு எப்பவுமே நாங்க ஒரு பொருட்டே கிடையாது.” எனக் கோபமும் ஆதங்கமும் பொங்கப் பொருமினாள்.

“அது உங்களுக்கு இப்ப தான் தெரியுதாக்கும்” என சஜித் அசட்டையாகக் கூறிட, ஸ்வரூப் “உங்க டிராமாவை ஸ்டாப் பண்ணிட்டு, போய் வேற வேலையைப் பாருங்க.” எனக் கடிந்து விட்டு வெளியில் சென்றான்.

“ம்ம்க்கும்” அவனைக் கண்டு கழுத்தை வெட்டிக்கொண்ட அக்ஷிதா, அணிந்திருந்த டாப்ஸினைக் கொண்டு மூக்கைத் துடைத்துக் கொள்ள, சஜித்திற்கு அவளைப் பார்த்து சிரிப்பே வந்தது.

என்னவோ ஜோஷித்திற்கும் கூட அவர்களின் மீது கோபம் கொள்ள இயலவில்லை. அவர்களின் பின்புலம் தெரிந்ததுனாலோ என்னவோ, அவர்களை இந்நிலைக்குத் தள்ளிய சமூகத்தை எண்ணியே கோபம் வந்தது.

அவன் அப்படித்தான். அனைவரிடமும் ‘எமோஷனலாக அட்டாச்’ ஆகி விடுவான். அதுவே அவனது எதிரியாகவும் மாறி, சொந்தத் தமையனிடமே பகை கொள்ள வைத்து, இப்போது அவன் அன்பிற்கு ஏங்கவும் வைத்தது.

ஆனால், ஸ்வரூப்பின் வாதமே வேறு. தவறு இழைக்கக்கூடாது என்று முடிவு செய்து விட்டால், எந்த சூழ்நிலையானாலும் நடுநிலைத் தவறாமல் இருத்தல் அவசியம். வெறும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களது செயலை நியாயப்படுத்துவது அவனுக்குப் பிடிக்காது.

அவனை எதிர்த்துப் பேசி, இன்னும் கொஞ்சம் சண்டையை வளர்த்துக் கொள்ள விரும்பாததால், அவனும் பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

இப்போதோ அவன் வெளியில் சென்று விட்டதை உறுதிபடுத்திக் கொண்டு, “இப்போ ஏன் நீ உன் கண்ணீரால ஊரை வெள்ள மயமாக்குற அக்ஷிதா. அவள் பக்கா செல்ஃபிஷ்ன்னு பாக்குற எங்களுக்கே தெரியுது. பழகுன உனக்குத் தெரியாதா?” என்று கனிவுடன் கூற,

“தெரியும் தான். திடீர்ன்னு ‘நண்பன் போட்ட சோறு தினமும் தின்பேன் பாரு’ன்னு ப்ரெண்ட்ஷிப்பை காட்டுறா. சில நேரம், ‘போடா போடா புண்ணாக்கு’ன்னு துரத்தி விட்டுடுறா. அவள் கேரக்டரையே புரிஞ்சுக்க முடியல ஜோ.” என்று முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு வார்த்தைகளில் கவுண்டரை அள்ளி விட்டதில், இப்போது இருவரும் சத்தமாகவே சிரித்து விட்டனர்.

விஹானாவிற்கும் கூட அத்தனை நேரம் இருந்த மன உளைச்சல் மெல்ல மறைய, “விடு டார்ல்ஸ். அவள் மனசுல என்ன இருக்கோ. நானும் அவள்கிட்ட கோபப்பட்டுருக்கக் கூடாதோன்னு தோணுது. அவள் வருத்தப்பட்டுருப்பாள்ல…” என மனம் உறுத்தியது.

“நான் போய் அவளைப் பார்த்துட்டு வரேன்…” என்று விருட்டென எழுந்து பக்கத்து அறைக்குச் சென்றவள், உர்ரென்ற முகத்துடன் மீண்டும் வந்து அதே இடத்தில் அமர்ந்தாள்.

அவளை நக்கலாகப் பார்த்த சஜித், “ஏதோ வருத்தப்பட்டுட்டு இருப்பான்னு சொன்ன? அதை ஒரு போட்டோ எடுத்துட்டு வந்திருக்கலாம்ல…” என வெகுவாய் கலாய்க்க, “கடுப்பேத்தாத சஜித். அவள் கொஞ்சம் கூட ஃபீல் பண்ணாம தூங்கிட்டா” என்றாள் உதட்டைக் குவித்து.

“இது தேவையா உங்க ரெண்டு பேருக்கும்.” என்றவன், இன்னும் அக்ஷிதாவின் முகம் தெளியாததைக் கண்டு மனம் கேளாமல், “சரி… நம்ம ஒரு டீலிங் வச்சுக்கலாம்” என்று பூடகமாக ஆரம்பித்தான்.

அதில் இரு பெண்களும் என்னவென நோக்க, “இந்தப் பிரச்சனை எல்லாம் முடிஞ்சு திரும்பி நீங்க ஊருக்குப் போற வரைக்கும், நம்ம எல்லாரும் ப்ரெண்ட்ஸா இருக்கலாம். வேலையும் சீக்கிரம் நடக்கும். புது ப்ரெண்ட்ஸ் கிடைச்ச மாதிரியும் ஆச்சு” என ஆர்வத்துடன் வினவியவனுக்கு, அவனது போக்கே பெரும் ஆச்சர்யம் தான். இரு நாட்களுக்கு முன்பு வரை கூட, இவர்களை எங்கோ ஒழித்து விட்டு வந்தால் தான் நிம்மதி என எண்ணியவன் ஆயிற்றே!

இப்போது அவனே அவர்களது நட்பினை அதிலும் முக்கியமாக அக்ஷிதாவின் நட்பினை விரும்பிக் கேட்க, விஹானா “இதுல உள்குத்து எதுவும் இல்லையே?” என அவனைச் சந்தேகமாகப் பார்த்தாள்.

ஜோஷித்தோ அவளை முறைத்து, “ஆமா உன்னை ஏமாத்தி உன் சொத்தை அபகரிக்கப் போறோம் பாரு. நீ உன் ப்ரெண்ட்ஸை சீட் பண்ணுன மாதிரி எங்களையும் சீட் பண்ணாம இருந்தா சரி தான் சீட்டர்” என சீண்டினான்.

“நான் ஒன்னும் ஏமாத்த மாட்டேனாக்கும்.: எனப் பழிப்புக் காட்டிட, அக்ஷிதா விழி விரித்து “அப்போ நிஜமாவே ப்ரெண்ட்ஸா இருக்கலாம்ன்னு சொல்றீங்களா?: எனக் கேட்டாள் இன்னும் நம்பாதவளாக.

“ஜஸ்ட் இந்தப் பிரச்சனை முடியிற வரை.” என அழுத்திச் சொன்னான் சஜித். அது அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டது போலத் தான் இருந்தது.

சில நொடிகள் சிந்தித்த பெண்கள் இருவரும் “ஓகே டீல்” எனக் கூறிட, அந்நேரம் இள வயது ஆடவன் ஒருவனை ஸ்வரூப் தரதரவென இழுத்து வந்தான்.

ஸ்வரூப்பின் நெற்றியில் இருந்து இரத்தம் வழிய, அவன் பிடித்து வந்த ஆடவனுக்கு முகத்திலும் வாயிலும் குருதி வழிந்தது. அனைத்தும் ஸ்வரூப்பின் கை வண்ணம் தான்!

“ஸ்வரா… என்ன ஆச்சுடா?” என சஜித்தும் ஜோஷித்தும் பதறிட, அவனோ அந்த ஆடவனைத் தரையில் போட்டு மிதித்தான்.

“இவனுக்கும் காணாம போன பசங்களுக்கும் ஏதோ தொடர்பு இருக்குடா. காடனை பார்க்கலாம்ன்னு ஊருக்குள்ள போனேன். இவன், அவனை கொன்னுட்டான். அவனைக் கொன்னுட்டு என்னையும் கொல்ல வந்தான்.” என மீண்டும் ஓங்கி வயிற்றிலேயே மிதிக்க, அந்த ஆடவனுக்கு வாயிலிருந்து இரத்தம் பொலபொலவெனக் கொட்டியது.

“நான் சாகடிக்கலைன்னாலும் அவனே செத்துருப்பான்…” எனத் திமிராகப் பதில் கூற, அதற்கும் சேர்த்து அடி வாங்கினான்.

தோழிகள் கோவித்துக் கொண்டுச் சென்றதில் உத்ஷவிக்கும் கோபம் தான். பின் அவர்களைக் கண்டபடி பேசியதை உணர்ந்து, தன்னையே திட்டிக்கொண்டவள், அவளை மீறி லேசாக கண்ணயர்ந்து விட்டாள்.

ஏதோ சத்தம் கேட்டதும் தான், உறக்கத்திலிருந்து விழித்தவள், ‘இந்த டைனோசர்க்கு வேற வேலையே இல்லை. எவனையாவது அடிச்சுக்கிட்டே இருக்கான்.; என்று முணுமுணுத்தபடி அவன் அறைக்குச் சென்று திகைத்தாள்.

திமிருடன் பேசிய ஆடவனை, சகோதரர்கள் பிழிந்து எடுக்க, உத்ஷவி அவசரமாக மூவரையும் தடுத்தாள்.

“டேய் நிறுத்துங்கடா. டைனோசர் விடு அவனை.” என்று அவன் கையைப் பிடித்துக்கொள்ள, “ஏய் ஓரமா போடி.” என்று உறுமினான் ஸ்வரூப் அவ்தேஷ்.

“இப்போ நீ அவனை விட போறியா இல்லையா?” என உத்ஷவி கடுப்படிக்க, “முடியாது…” என்றான் அழுத்தமாக.

அந்த ஆடவனோ உத்ஷவியைக் கண்டதும் அத்தனை காயத்தின் மத்தியிலும் விழிகளை விரித்து வியந்தான்.

“ஷவி? நீயா… நீ இங்க செய்ற?” எனக் கேட்டதும், “நீ இங்க என்ன செஞ்சுட்டு இருக்க நிக்கி. எதுக்கு இவன்கிட்ட அடி வாங்கிட்டு இருக்க. எந்திரி…” என அவனைத் தூக்கி விட, அவனுக்கோ எழவே இயலவில்லை.

அதில் கோபம் கொண்டு, “நீ மனுஷப்பிறவி தானாடா? இப்படி அடிச்சு வச்சுருக்க…” என ஸ்வரூப்பிடம் எகிறியவளைப் பெண்கள் இருவரும் தான் ஆச்சர்யமாய் பார்த்தனர்.

இதுவரை, அவள் இத்தனை உணர்ச்சிவசப்பட்டு அவர்களே பார்த்தது இல்லையே.

ஸ்வரூப் அவளைக் கூர்மையாக நோக்க, அக்ஷிதா “இவனை உனக்குத் தெரியுமா ஷவி?” எனக் கேட்டாள்.

விஹானாவோ :தெரியாமையா அவனுக்கு இவ்ளோ சப்போர்ட் பண்றா. இவன் யாருடி?” என்று வினவ, “என் பிரெண்டு” என்றாள்.

ஸ்வரூப் தான், “அதான இனம் இனத்தோட தான சேரும். நீ திருடி. அவன் கொலைகாரன். நல்ல ப்ரெண்ட்ஷிப்.” என்று இளக்காரம் புரிந்தான்.

“கொலையா?” என அதிர்ந்தவள், நிக்கி என்ற நிகிலனைப் பார்க்க, அவன் “நான் கொலை பண்ணல ஷவி. அவனா தான் செத்துட்டான். நான் சும்மா அவனை பார்க்கத் தான் வந்தேன்.” என்றிட, “பொய் சொன்ன பல்லை கழட்டிடுவேன்” என்று ஸ்வரூப் அவனை உதைத்தான்.

“விடுன்னு சொல்றேன்ல. அதான் அவன் கொலை பண்ணலைன்னு சொல்றானே. செஞ்சா தான் செஞ்சேன்னு ஒத்துக்க முடியும்.” என ஸ்வரூப்பைப் பிடித்து தள்ளி விட முயன்றவளுக்கு அவனை அசைக்கக்கூட இயலவில்லை.

“நீ ஏண்டா இரும்புல செஞ்ச ராட்சசன் மாதிரி உடம்பை வளர்த்து வச்சுருக்க.” என அதற்கும் அவனையே திட்டியவள், “நீ நிஜமா கொலை பண்ணலை தான?” என நிகிலனிடம் வினவினாள்.

“சத்தியமா இல்ல ஷவி. அவன் என்ன செய்றான்னு பார்க்கத் தான் வந்தேன். திடீர்ன்னு, நாய் மாதிரி குரைச்சு அங்கயும் இங்கயுமா தாவுனான். அவனைப் பிடிக்க வரும்போதே மலை மேல இருந்து. குதிச்சு செத்துட்டான். அதை தான் இந்த சார் பார்த்துட்டு நான் தள்ளி விட்டுட்டேன்னு நினைச்சு என்னை அடிச்சுட்டு இருக்காரு” என்றான் மூச்சிரைக்க.

அவனது கூற்றில் அனைவருமே அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, விஹானா “என்னது இவனும் நாயா மாறிட்டானா?” என வாயில் கை வைத்துக் கொண்டாள்.

ஜோஷித், “இது என்னடா புது தலைவலி?” என அதிர, ஸ்வரூப்பிற்கும் நடந்ததை எண்ணி பேரதிர்ச்சி தான்.

அத்தியாயம் 28

மெல்ல அதிர்ச்சியை விழுங்கிய ஸ்வரூப், “நீ ஏன் அவனைப் பார்க்க வந்த?” என லேசர் பார்வையுடன் கேட்க,

“என் பாஸ் தான் அவனைப் பார்த்துட்டு வரச் சொன்னாரு. அதான் வந்தேன். மத்தபடி எனக்கு வேற எதுவும் தெரியாது.” என நிகிலன் கூறியதும், “யாரு உன் பாஸ்?” என அவனை அளந்தபடிக் கேட்டான் சஜித்.

“அதை எல்லாம் சொல்ல முடியாது…” என்றதும், ஜோஷித் அவனை அடிக்க வர, அவனைத் தடுத்த உத்ஷவி, “வாயால பேசவே மாட்டீங்களாடா?” என முறைத்தாள்.

“அவன் என் அண்ணனை அடிச்சு இருக்கான். இதுக்காகவே அவனை நான் அடிச்சு போடணும்.” என்று ஜோஷித் எகிறிட,

“அடேய் இவன் தலைல இருந்து இத்துணூண்டு இரத்தம் வருது அவ்ளோ தான. அவன் உடம்புல இருந்து லிட்டர் கணக்குல வெளில எடுத்துட்டான் உன் அண்ணன்காரன். அது பத்தாதா?” என்று சிலுப்பியவள், முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்து நிக்கிக்கு மருந்திட, அதுவே ஸ்வரூப்பை வெகுவாகக் கோபப்படுத்தியது.

காரணமெல்லாம் யோசிக்கவில்லை அவன். வெடுக்கென அவள் கையைப் பற்றி இழுத்தவன், கையிலிருந்த மருந்து தோய்த்த பஞ்சை அவன் காயத்திற்கு வைத்துக் கொண்டான்.

“உனக்கு வேணும்னா வேற மருந்தை எடுத்து போட்டுக்கோயேன்…” எனக் கையை இழுத்துக்கொள்ள முயன்றவளால் முயற்சி மட்டுமே செய்ய முடிந்தது.

ஆடவனின் காரப்பார்வை வேறு அவளைச் சுழற்றி அடிக்க, அதற்கு மேல் மறுக்க இயலாமல், அவன் கையைத் தட்டி விட்டு, அவளே மெல்ல மருந்திட்டு சிறிய பிளாஸ்டரை ஒட்டி விட்டாள்.

அதுவரையிலும் அவனது பார்வை அவளைத் தாண்டி நகரவே இல்லை. அவளும் கூட அவனை முறைப்பதை நிறுத்தவில்லை.

பின் நிகிலனிற்கு மருந்திடத் திரும்ப, அவளை இழுத்து ஒதுக்கி நிறுத்தியவன், சஜித்திடம் அவனுக்கு மருந்திடுமாறு பணித்தான்.

தமையனை விநோதமாகப் பார்த்த சஜித், அவனே மருந்திடத் தொடங்க, உத்ஷவி “நல்லா க்ளீன் பண்ணுடா. ப்ளட் இன்னும் இருக்கு பாரு. குடு நானே பண்றேன்” என்று அவனையே அதட்டியதில்,

“நீ மூடு. இவனுக்கு இதுவே ஜாஸ்தி” என்று சஜித் அவளை காட்டத்துடன் பார்த்தான்.

ஸ்வரூப்போ அவளை நகரவே விடவில்லை. “இவனை உனக்கு எப்படி தெரியும்?” என வினவ, “அதான் சொன்னேனே என் பிரெண்டுன்னு.” என்றாள் எரிச்சலாக.

“ப்ரெண்ட்ன்னா?” ஒற்றைப் புருவம் உயர வினவினான்.

“ப்ரெண்ட்ன்னா பிரெண்டு தான்.” அவனைப் போலவே ஒற்றைப் புருவத்தை தூக்க முயன்று தோற்றவள் முறுக்கியபடி நிற்க,

நிகிலன் தான், “எனக்கு சின்ன வயசுல இருந்தே ஷவியைத் தெரியும் சாரே.” எனப் பதில் அளித்தவன், “இவங்க எல்லாம் யாரு ஷவி?” எனக் கேட்டான்.

அவனிடம் பெரியதொரு விளக்கம் கொடுக்கப் பிடிக்காமல் பொதுவாக, “ப்ரெண்ட்ஸ்” என்று நிறுத்தி விட, “ஓ… உன் ப்ரெண்ட்ன்னு தெரிஞ்சுருந்தா நான் கை வச்சுருக்கவே மாட்டேன் ஷவி. ஆனா, உன் பிரெண்டு அடி ஒன்னொன்னும் இடி” என்று வலியில் சுணங்கினான்.

அக்ஷிதா தான், “சின்ன வயசுல இருந்து தெரியுமா? சைல்டுஹுட் ப்ரெண்டா?” என வினவ,

நிகிலன், “ம்ம்ஹும்” என மறுப்பாகத் தலையசைத்து, “ஜெயில்ஹுட் ப்ரெண்ட்” என்றான் கிண்டலாக.

ஸ்வரூப் பார்வையைக் கூர்மையாக்கி, “புரியல?” என்றதில்,

“நானும் ஷவியும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில ஒண்ணா தான் வளர்ந்தோம். நீ சொல்லலையா?” எனப் பெருமையுடன் கூறி விட்டு உத்ஷவியிடம் கேட்க, “இப்ப இந்த ஹிஸ்டரி ரொம்ப முக்கியம் பாரு.” என்று கடிந்தவள், பெயின்கில்லர் மாத்திரையை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

அவன் கூற்றில் மற்றவர்கள் தான் திகைக்க வேண்டியதாகப் போயிற்று.

“சிறுவர் சீர்திருத்தப் பள்ளியா?” விஹானா அதிர்ந்து நோக்க, அக்ஷிதாவும் அதே அதிர்வுடன், “நீ திருடுற ரப்பர் பேண்ட், ஹேர் க்ளிப்புக்குலாமா டார்ல்ஸ் தண்டனை கொடுக்குறாங்க.” என அதிசயித்தாள்.

உத்ஷவி பதில் பேசாமல் நிற்க, ஸ்வரூப் அவள் மீதிருந்தப் பார்வையை மாற்றாமல், “அப்படி என்ன தப்பு செஞ்ச?” எனக் கேட்டான்.

“எங்க ஊரு கோவில் நகையை திருடுனா தூக்கி வச்சு கொஞ்சுவாங்களா?” என இயல்புடன் கூறிட, அவளை விழி இடுங்க முறைத்தான்.

விஹானா தான் புரியாமல், “கோவில் நகையா? நீ கண்ணு முன்னாடி இருக்குற பணத்தைக் கூட திருட மாட்டியே ஷவி” எனக் குழப்பத்துடன் வினவ, “உங்களுக்கு என்னை வெறும் மூணு மாசமா தான தெரியும். ஏதோ பிறந்ததுல இருந்து கூட இருக்குற மாதிரி சீன் போடுற…” என்றாள் நக்கலாக.

“ஒருத்தரைப் புரிஞ்சுக்க பொறந்ததுல இருந்து கூட இருக்கணும்ன்னு அவசியம் இல்ல ஷவி” என விஹானா வெடுக்கெனக் கூற உத்ஷவி தான் பேச்சற்றுப் போனாள்.

ஆனாலும் மறுகணம் தோளைக் குலுக்கி விட்டு அமைதி காக்க, நிகிலன் தான் அவள் கொடுத்த மாத்திரையைப் போடாமல் விழித்து விட்டு, “அது இல்ல…” என ஏதோ கூற வர, அவன் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையைத் திணித்தவள், “இங்க காணாம போற பசங்களை உன் பாஸ் தான் கடத்துறானா? யாருடா அவன்?” எனக் கேட்டு பேச்சை மாற்றி இருக்க,

“அதை எல்லாம் சொல்ல முடியாது ஷவி. அதை நீங்க தெரிஞ்சுக்காம இருக்குறதே நல்லது.” என்றான் அவனும்.

ஸ்வரூப் அவளது ஒவ்வொரு பாவனைகளையும் உள்வாங்கிக் கொள்ள, அவனுக்கும் அவள் கூறியது ஏற்புடையதாக அல்ல. 

ஜோஷித் தான் சிறிது சிந்தித்து விட்டு, “மலைல இருந்து விழுந்த காடனோட பாடியைத் தேடி எடுத்து போஸ்ட் மார்ட்டம் பண்ணலாம்ல ஸ்வரா? ஏன் இப்படி வியர்டா பிஹேவ் பண்ணி செத்துப் போறாங்கன்னு கண்டுபிடிக்கணும்.” என்றதும்,

“ராகேஷ் இறந்தப்பவே இதைப் பத்தி யோசிச்சு இருக்கணும் ஜோ. இப்போ அதே மாதிரி ரெண்டாவது இறப்பு. காரணம் தான் என்னன்னு புரியவே இல்லை. இப்படியே காணாம போனவங்களும் செத்துப் போனா, நம்ம ஊரே அழிஞ்சு போய்டும்.” எனத் தீவிரத்துடன் உரைத்தவனுக்கு, ஆயாசமாக இருந்தது.

நடக்கும் கடத்தலையும் தற்கொலைகளையும் கண் முன்னே நடந்தும் கூட தடுத்து நிறுத்த இயலவில்லையே. அதுவே அவனை சோர்வாக்கியது.

நிகிலன் தான், “ஷவி இதுல நீ இன்வால்வ் ஆகிருக்கன்ற நல்ல எண்ணத்துல சொல்றேன். இந்தப் பிரச்சனையை அப்படியே விட்டுட்டு ஒதுங்கிப் போய்டு. உன் ப்ரெண்ட்ஸையும் இங்க இருந்துப் போக சொல்லிடு. அதான் உங்க எல்லாருக்கும் நல்லது.” என்று அறிவுரைக் கூற,

சஜித், “யார் ஊரை விட்டு யாரைடா போக சொல்ற… உங்க மொத்த நெட்வொர்க்கையும் பிடிச்சா எல்லாருக்கும் சங்கு தான்.” என சினத்துடன் மிரட்டினான்.

அதன் பிறகே, நிகிலனுக்கு அவர்கள் அவ்தேஷ் சகோதரர்கள் என்று தெரிய வர, “அது நீங்க தானா?” எனத் திகைத்தவன்,

“உங்க ஊரைக் காப்பாத்த நினைக்காதீங்க சார். முடிஞ்சா உங்க உயிரைக் காப்பாத்திட்டு தப்பிச்சுடுங்க.” என்று மீண்டும் அறிவுறுத்த, ஸ்வரூப் அவனை அடிக்கச் சென்றான்.

அவனை வேகமாகத் தடுத்த உத்ஷவி, “இரு டைனோசர். நான் விசாரிக்கிறேன்.” என்று அவனை அடக்கி விட்டு,

“டேய் நிக்கி… என்னடா நடக்குது இங்க. ஒழுங்கா உண்மையைச் சொல்லு. இவ்ளோ ஆபத்தான ஆளுங்ககிட்ட நீ ஏன் வேலை பாக்குற?” என்று ஆதங்கத்துடன் கேட்டாள்.

நிகிலனோ, “நீயும் ஒழுங்கா எங்களை மாதிரி அந்த ஜெயில்ல இருந்து தப்பிச்சு வந்துருந்தா, நம்ம எல்லாரும் ஒன்னாவே இருந்துருக்கலாம் ஷவி. நீ தான் வரமாட்டேன்னு அங்கேயே இருந்துட்ட” எனக் குறைபட்டுக் கொண்டவன், “நம்ம கூட மேகனான்னு ஒரு பொண்ணு இருந்தாள்ல… எங்களுக்கு முன்னாடியே அங்க இருந்து தப்பிச்சுப் போனாளே… ஞாபகம் இருக்கா?” எனக் கேட்டவனிடம், சுருங்கிய புருவத்துடன் தலையாட்டினாள்.

“அவள் தான் என்னை இந்த கேங்க்ல சேர்த்து விட்டா. நிறைய பெரிய பெரிய ஆளுங்க நடத்துற தொழில் இது. ஒருத்தனைக் கொல்லனும்ன்னு நினைச்சா எப்படியாவது கொன்னுடுவாங்க.” என விழிகளை உருட்டி அவன் கூற, அக்ஷிதாவிற்கு வியர்த்து வழிந்தது.

“இவன் என்னடி தீவிரவாதி மாதிரி பேசிட்டு இருக்கான். நான் சாதாரண பிக்பாக்கெட் கேஸுடி. இதுவரை போலீஸ்ல கூட மாட்டுனது இல்லை. என்னை திகார் ஜெயில்ல கம்பி எண்ண விட்டுருவானுங்க போல.” எனப் பயத்தில் நடுங்கிட, விஹானாவோ “கம்பி எண்ண விட்டாக் கூட பரவாயில்லடி. ஒரேடியா உயிரோட புதைச்சுடுவானுங்க போல. ராகேஷ் இருந்தா கூட ஏதாவது ஹெல்ப் கேட்கலாம். அவனும் போய் சேர்ந்துட்டானே” என எச்சிலை விழுங்கினாள்.

உத்ஷவிக்கு அவன் பயமுறுத்தியதில் அச்சம் எழுந்தாலும், “நீ உன்னோட முன்னுரை முடிவுரையெல்லாம் நிப்பாட்டிட்டு இவனுங்க யாருன்னு சொல்லித் தொலை.” என்றாள் கடுப்பாக.

அவனோ அதை மட்டும் சொன்னானில்லை.

ஸ்வரூப்பும் பொறுமையை இழுத்துப் பிடித்து, “இங்க பாரு நிகிலன். நீ சொல்ற சின்ன விஷயம் கூட இங்க வாழுற அத்தனை மக்களையும் காப்பாத்தும். காணாமப் போன பசங்களையும் கண்டுபிடிக்க ஒரு வழியா இருக்கும். உனக்குத் தெரிஞ்சதை சொல்லு.” என்றிட,

“சொன்னா என்னைக் கொன்னுடுவாங்க சார்” என்றான் பரிதாபமாக.

“சொல்லலைன்னா நான் கொன்னுடுவேனே” எனத் திணக்கத்துடன் கூற, அவனோ பேந்தப் பேந்த விழித்தான்.

உத்ஷவியும், “ப்ளீஸ் நிக்கி. ஒரு க்ளூவும் கிடைக்காம எல்லாரும் என்ன செய்றதுன்னு தெரியாம நின்னுட்டு இருக்கோம். இவனுங்க மாட்டுனதும் இல்லாம, இப்ப நாங்களும் சேர்ந்து சிக்கல்ல மாட்டி இருக்கோம். எனக்காக சொல்லேன்.” என நாசுக்காகப் பேசிட, அவனும் “உனக்காக நான் சொல்ல மாட்டேனா ஷவி. இருந்தாலும்…” என அவன் தயங்கினான்.

“நீ உண்மையை சொல்லு. இங்க யாரும் உன்னை எதுவும் பண்ண மாட்டாங்க.” என்று உறுதியாய் கூற, அதன் பிறகே அவன் வாய் திறந்தான்.

“நான் இருக்குற கேங்க்ல என்ன நடக்குதுன்னு எனக்கு முழுசா எல்லாம் தெரியாது. நிறைய பசங்களைக் கடத்திட்டு வந்து அடைச்சு வச்சுருக்காங்க. அவங்களை என்ன செய்வாங்கன்னு தெரியாது. காடன கூட அதே மாதிரி கடத்திட்டு வந்து அடைச்சு வச்சுருந்தாங்க. திடீர்ன்னு வெளில விட்டுட்டாங்க.” என்றதும், “பசங்களை கடத்தி வச்சுருக்குற இடம் எங்கன்னு தெரியுமா?” எனக் கேட்டான் ஸ்வரூப்.

“தெரியும்” என அவன் தலையாட்டியதும், “எங்க?” என்றான் கூர்பார்வையுடன்.

“விஜயவாடால. அங்க ஒரு ரிசர்வ்ட் ஏரியா இருக்கு. அங்க தான்.” என்றதும், ஜோஷித் “எங்களுக்கு அந்த இடத்தை காட்டு…” என்றதில், “அய்யயோ உங்களை கூட்டிட்டு போனா. அவ்ளோ தான்.” என அவன் மிரண்டான்.

“நீ கூட்டிட்டு போய் தான் ஆகணும்.” என சஜித் முறைக்க, ஸ்வரூப் நெற்றியை நீவியபடி, “பசங்களை எப்படி கடத்துறாங்க நிகிலன். ஹிப்னோடைஸ் பண்ணியா?” எனக் கேட்டான் வீடியோவை நினைவில் வைத்து.

“ஹிப்னோடைஸா அப்படின்னா?” என அவன் தலையை சொறிய, அக்ஷிதா வேகமாக, “ஏழாம் அறிவு படம் பார்த்து இருக்கியா. அதுல வர்ற வில்லன் மாதிரி பார்த்தாலே எல்லாரும் அப்படியே கேட்பாங்கள்ல…” என அவளது சந்தேகத்தை நிவர்த்தி செய்ய எத்தனித்தாள்.

அவளை விசித்திரமாகப் பார்த்த நிகிலன், “அப்படி எல்லாம் எதுவும் இல்லையே” எனக் குழப்பத்துடன் கூறிவிட்டு, “கடத்துற கேங்க் வேற. நான் சும்மா சின்ன சின்ன வேலை தான் செய்றேன். அதனால இதைப் பத்தி பெருசா தெரியல.” என்றான்.

“சரி பரவாயில்ல வா. இப்பவே விஜயவாடா போகலாம்.” என்று ஸ்வரூப் அவசரப்படுத்த, அவனோ “என்னால உங்களை அங்க எல்லாம் கூட்டிட்டு போக முடியாது சார்” என்று மறுத்தான்.

“எங்களுக்கு இடத்தை மட்டும் காட்டு. மத்ததை நான் பாத்துக்குறேன்” என்று ஸ்வரூப் அழுத்தமாகக் கூறியும் அவன் மறுத்ததில் மீண்டும் அவன் மூக்கில் ஒரு குத்து விட, அதிலிருந்து மடமடவென இரத்தம் கொட்டியது.

அதில் கோபம் கொண்ட பெண்ணவள், “பேசிட்டு இருக்கும் போதே எதுக்குடா அடிக்கிறா.” என அவன் நெஞ்சில் கை வைத்துத் தள்ள, “நான் சொல்றதைக் கேட்கலைன்னா கொலையும் செய்வேன்.” என்றான் ஆத்திரத்துடன்.

நிகிலன் இடத்தைக் காட்டுவதாக ஒப்புக்கொள்ள, அனைவரும் விஜயவாடாவிற்கு புறப்பட்டனர்.

அக்ஷிதா மறக்காமல் சாப்பாட்டு கவரை எடுத்துக்கொண்டாள். “இவனுங்க சாப்பிட சொன்னப்பவே சாப்பிட்டு இருக்கணும்.” எனப் புலம்பிக் கொண்டு காரில் ஏற, உத்ஷவி ஸ்வரூப்பை முறைத்தபடி புதிதாக நிகிலனுக்கு ஏற்பட்ட காயத்திற்கு முதலுதவி செய்ய எத்தனித்தாள்.

அதனைத் தடுத்து அவளைக் காரில் ஏற்றியவன், “சஜி…!” எனக் குரல் கொடுக்க, “வந்துட்டேன் வந்துட்டேன்” என்றான் சலிப்பாக. ஜோஷித் தான், “நீ எப்ப இருந்துடா டாக்டரான” என நக்கலாகக் கேட்டதில், அவனது அடிபடாத கையில் நறுக்கென கிள்ளினான்.

ஒன்பது பேர் செல்லும் ஃபார்ச்சுனர் காரில் பயணித்தனர் ஏழு பேரும். செல்லும் வழியில் அனைவரும் பலத்த அமைதியுடன் வர, ஜோஷித் தனதருகில் அமர்ந்திருந்த நிகிலனிடம் “நீ ஏன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளில இருந்த?” என வினவினான்.

“என் அப்பனை போட்டுத் தள்ளிட்டேன் சார்…” எனக் கூறியதில் கண்ணாடி வழியே அவனை முறைத்தான் ஸ்வரூப் அவ்தேஷ். கூடவே உத்ஷவியின் மீதும் அனல் பார்வை வீசினான்.

அக்ஷிதாவோ, “கொலைகாரன்கூடலாம் சகவாசம் வச்சிருக்காளே.” என நொந்திட, நிகிலன் தான், “நான் ஷவி பக்கத்துல உட்காந்துக்குறேன் நாங்க பேசிக்கிட்டே வருவோம்ல” என ஏதோ பேருந்தில் பயணிப்பது போல கேட்க, காரை செலுத்திக் கொண்டிருந்த சஜித் ஒரு நொடி திரும்பி அவனைக் காரப் பார்வை பார்த்து விட்டு,

“உன்னை நாங்க டூருக்கா கூட்டிட்டு போறோம். மவனே… வாயைத் திறந்த பேச நாக்கு இருக்காது.” என்று மிரட்டினான்.

அதற்கு விஹானா தான், “ஹே சஜித் அப்படி எதுவும் பண்ணிடாத. நாக்கு இல்லாம இவன் உண்மையை சொல்ல முடியாம போனா, நம்ம இப்படியே ரோடு ரோடா அலைஞ்சுக்கிட்டே இருக்க வேண்டியது தான்.” எனப் பதறிட,

உத்ஷவி பதிலேதும் பேசவில்லை. ஸ்வரூப் தான், பார்வையாலேயே அவளை அடக்கிக்கொண்டிருந்தானே. பிறகெங்கே பேசுவது?

ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிந்தனையில் பயணத்தைத் தொடர, மேலும் சிந்திக்க இயலாதவாறு பக்கவாட்டில் இருந்து வந்த லாரி ஒன்று அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரே இடியாய் இடித்துத் தூக்கி வீசியது.

முதலும் முடிவும் நீ…!
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
91
+1
3
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    10 Comments

    1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். மிகவும் திகிலாகவும் மர்மமாகவும் உணர வைப்பது போன்று அமைந்துள்ள தங்களின் எழுத்து நடையும், வசனமும். மிகவும் அசத்தல். பயமாகவும் அதே நேரம் ஆர்வமாகவும் அமைந்துள்ளது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    2. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு ஆர்வத்தைத் தூண்டும் திகிலான கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.

    3. Naveena Ramesh

      என்னங்கடா ஒரு துப்பும் கிடைக்க மாட்டேங்குது 😍😍😍😍😍

    4. Indhu Mathy

      ஒரே மர்மமாவே போகுதே…. 😵😵😵
      யார் எதுக்கு பன்றாங்க ஒன்னும் புரியல…. 🥴 இந்த நிகிலன் வேற அவனுங்களுக்கு ஓவர் பில்டப் குடுக்குறான்….. 😨
      ஷவி எதுக்கு ஜெயிலுக்கு போயிருப்பா.. 🤔 அந்த கதையையாவது பேசிக்கிட்டே வண்டியில போகலாம்ல அவ கதை தான் மிச்சமிருக்குது… 😁