Loading

அத்தியாயம் 30

கணவன் சொன்னதற்கு ஏற்பக் கவலிடம்  பேசினாள் வசுந்தரா.
இவளின் அழைப்பை ஏற்றவள்

“என்னடி உங்க வீட்ல ஒத்துக்கிட்டாங்களா.? நண்டு, சுண்டு எல்லாம்.” எனக் கேட்க
“கேலி செய்யாதடி. உன் விருப்பம் சொல்லிட்டாங்க.”
“ஓ.! சூப்பர், சூப்பர். சரி நீ இப்ப உடனே வேலையில் சேர வேண்டாம். இப்ப ரொம்ப ஹை பெய்டு (அதிக சம்பளம்) வேலைனா அது மெடிக்கல் கோட்டிங் தான். உனக்கு இருக்கிற அறிவுக்கு நீ எல்லாம் ஈஸியா பாஸ் ஆயிடுவ. நான் உனக்கு  அதோட லிங்க் அனுப்புறேன். மூணு மாசம் கோர்ஸ் படி.அதுக்கப்புறம் எக்ஸாம் இருக்கு எழுது. நீ என்ன வேலைக்காக எங்க ஆபீஸ் தேடி வரது.எங்க ஆபீஸே உன்னை வந்து கொத்தா தூக்கிட்டு வந்துரும். ஆனா என்ன ஒன்னு அதோட கட்டணமே ஒரு லட்சம்.” என்றாள் சற்று மெதுவான குரலில், அவளின் சூழ்நிலை எப்படியோ என்ற யோசனை உடன்.

அவள் பிறந்த வீட்டில் கஷ்ட நிலை அவளுக்குத் தெரிந்தே  இருந்தது.
“அது ஒன்னும் பிரச்சனை இல்லடி. எனக்குச் செலவுக்குன்னு எங்க வீட்டுக்காரர் கொடுத்ததிலேயே என்னால படிச்சுக்க முடியும்.”

“அப்புறம் என்ன.? இன்னைக்கே  உனக்கு  லிங்க் அனுப்புறேன். நீ இன்றிலிருந்து ஸ்டார்ட் பண்ணிடு.” என நல்ல நண்பியாக அவளுக்கு ஆலோசனை வழங்கினாள்.

அவள் சொன்னவற்றுக்கு சம்மதித்தவள் கணவனிடமும் ஒப்புவித்தாள்.
“கோர்ஸ்க்கு, பீஸுக்கெல்லாம் எவ்வளவு ஆகும்னு சொல்லு. உன் அக்கவுண்டுக்கு நான் அனுப்பி வைக்கிறேன்.” என்றபடி அவன் அலைபேசியை  எடுக்க.
“வேண்டாம். இத்தனை நாள் நீங்க எனக்காக அனுப்பின பணமே என்கிட்ட அவ்ளோ இருக்கு. அதிலேயே நான் படிச்சிக்கிறேன்.” எனக் கூற சரியென  ஒப்புக் கொண்டான் அவனும்.

அதே நேரம் சஞ்சையும் அனுபமா சொன்னதற்கு ஏற்ப வாரத்தில் சில நாட்கள் வீட்டிற்கு சீக்கிரம் வர ஆரம்பித்தான். ஆரம்ப நாட்களை  மனைவி மகனுடன் நேரம் செலவழித்தான். பின்பு, வந்த நாட்களில் சீக்கிரமாக வீடு திரும்பினாலும் அலுவல் விஷயமாகத் தாரணியுடன் பேச ஆரம்பித்து விடுவான். அலுவலக விஷயம் தான் பேசுகிறார்களா எனத் தெரியாத அளவுக்குச் சில நேரங்களில் சத்தமான சிரிப்புச் சத்தம் கேட்கும். ஓரிரு முறை சமையலறையிலிருந்து வெளியில் வந்து கணவனைப் பார்த்து விட்டுச் செல்வாள் வசந்தரா. ஆனால் அது கூடத் தெரியாமல் பேச்சில் மும்முரமாக ஆழ்ந்திருப்பான் சஞ்சய். கணவன்மீது சந்தேகம் என்பதெல்லாம் இல்லை பெண்ணவளுக்கு. ஆனாலும் ஏதோ ஒரு விதமான பொறாமை உணர்வு. அதை எப்படி தீர்த்துக் கொள்வது என்று தெரியாமல், அந்தக் கோபத்தையும் படிப்பில் செலுத்தி, தன்னை திசை  திருப்பிக் கொள்வாள்.
அடக்கி, அடக்கி வைத்தது என்று வெடிக்குமோ தெரியவில்லை.
அதற்குப் பின் வசுந்தராவின் படிப்பு எங்கும் தேங்கவில்லை. கவல் சொன்னபடி மூன்று மாத படிப்பை முடித்தவள் பரிச்சையையும் நன்றாகவே எழுதி முடிக்க. முதல் வகுப்பில் தேர்வாகி இருந்தாள்.

இடையிடையே கணவன் மகனின் தேவைகளையும் கவனித்துக் கொண்டு வீட்டையும் அழகாக நிர்வகித்து படிப்பிலும் சிறந்து விளங்கினாள். அதுவே அவளுக்கு ஒரு தனி தன்னம்பிக்கையையும் மகிழ்வையும் கொடுத்தது. இடையிடையில் கணவனால் உடல் நிலையில் சில சங்கடங்களும் திருப்தியின்மையும்  ஏற்பட்டாலும். அந்த ஏமாற்றத்தையும் படிப்பில் செலுத்தி வெற்றி கண்டாள்.

இவள் வெற்றியில் அனுபமாவும் பிரபுவும் பாராட்ட விரைவிலேயே கவல் ப்ரீத்தின் அலுவலகத்தில் இவளுக்கு வேலையும் கிடைத்தது.

முதல் நாள் பயந்து கொண்டே அலுவலகத்திற்கு சென்றாள் வசுந்தரா. இவள் பயத்தை ஒன்றும் இல்லாமல் ஆக்குவது போல இவளைக் கண்டதும் ஆரவார வரவேற்பு கொடுத்தாள் கவல் ப்ரீத்.
முதல் நாள் என்பதால் சஞ்சையே இவளை அலுவலகத்திற்கு அழைத்து வந்திருந்தான். பெரிய கட்டிடத்தின் முன்பு கார் நின்று இவள் இறங்கிய உடனே இவளுக்காகக் காத்திருந்த கவல்.
“வா, வா வெல்கம் டு அவர் நியூ ஆஃபீஸ்…” என்று கட்டி அணைத்து வரவேற்று, அவளை உள்ளே அழைத்துச் செல்ல.தன்னை இறக்கிவிட்டு காத்திருந்த கணவனிடம் தலையசைத்து விடைபெற்று அவளோடு அலுவலகத்தின் உள் சென்றாள் வசுந்தரா.
இவளை அழைத்துக்கொண்டு நேராக எச்ஆர் இடம் சென்றவள்.
“சார், நம்ம புது எம்பிளாய். செம மூலக்காரி. என்னோட ஸ்கூல் டைம் ஃபிரண்ட்…” என்று ஆங்கிலத்தில் அவருக்கு வேகமாக அறிமுகம் செய்துவிட்டு.

“ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் சீக்கிரம் முடிங்க. நான் அவளை என் டீமுக்கு கூட்டிட்டு போய் எல்லார்கிட்டயும் அறிமுகம் செய்து வைக்கணும்.” என்று அவசரப்படுத்த. அவளின் துறுதுறுப்பை பற்றித் தெரிந்த ஹெச் ஆர்
“சாரி மிஸ் கவல் பிரீத். இவங்க உங்க டீம் கிடையாது. நீரஜ் உடைய டீம்.”
“என்னது அந்த லூசா.??”
“எக்ஸ்க்யூஸ் மீ.”
“ஐயையோ.! மைண்ட் வாய்ஸ் நினைச்சு சத்தமா பேசிட்டேன் போல, சாரி சார் ஒன்னும் இல்ல. ஆனா, ஏன் சார்.?”என்றவனின் கேள்விக்கு,

“உங்க டீம் ஆல்ரெடி ஃபுல் லோடுல இருக்கு. நோ வேக்கன்சி அங்க. அதுவும் இல்லாம, நீங்களே சொல்லிட்டீங்க இவங்க மூளைக்காரங்கன்னு உங்க டீம்ல நீங்க ஒரு மூளைக்காரர்  இருந்தா போதும். இப்ப நீரஜ் டீமுக்கு தான் ஆள் தேவை சோ.” என்று முடிக்காமல் இழுத்தவரை பார்த்தவள்.

“சரி ஓகே. என்ன பண்றது.? பரவால்ல. பக்கத்து டீம் தானே.” என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டவள். வசந்தரா அனைத்து ஃபார்மாலிட்டிசையும் முடித்து வரக் காத்திருந்தாள்.

அனைத்தும் முடிந்து வசுந்தராவிற்கு வாழ்த்து கூறிய ஹெச் ஆர். “உங்களுடைய டி எல் மிஸ்டர் நீரஜ். உங்களைக் கைடு பண்ணுவார். அவரோடு உங்க டீமுக்கு நீங்கப் போகலாம்…” எனக் கூறியபடி தொலைபேசியை எடுக்க முயல.

“சார், ப்ளீஸ் நான் என் டீமுக்கு கூட்டிட்டு போயிட்டு நானே நீரஜ் கிட்ட அறிமுகம் பண்ணிட்டு அவங்க டீம்ல விட்டுட்டு வந்துடறேன்.”என்று வேண்டுகோளாகக் கேட்க அவளோடு நல்ல நட்புறவிலிருந்து ஹெச் ஆரால் மறுக்க முடியவில்லை.
“ஓகே கேரி ஆன்.” என அவர் அனுமதி கொடுக்க. சந்தோஷத்தில் கிட்டத்தட்ட அவளை இழுத்துக் கொண்டு ஓடினாள், கவல் ப்ரீத்.

வசுந்தராவின் கைகளை இழுத்துக் கொண்டு ஆரவார கூச்சலுடன் ஓடிவரும் கவல் ப்ரீத்தை அலுவலகமே புன்னகையுடன் பார்த்தது. வேலையில் படுச்சுட்டியானவள் பழகும் விதத்திலும் பண்பானவள். ஆண், பெண் பேதம் பார்க்காமல் எல்லோரிடமும் நட்புடன் பழகும் அவளைப் பெரும்பாலானவர்களுக்குப் பிடிக்கும். இவளின் சந்தோஷ கூச்சல் யாருக்கு மகிழ்வை தந்ததோ இல்லையோ ஒருவனுக்கு வாய் முழுவதும் பல்லாகக் குதித்து ஓடிவரும் அவளையே ரசனையும் காதலும் பொங்க பார்த்துக்கொண்டிருந்தான். அவன் நீரஜ். அந்த அலுவலகத்தில் டி எல் லாக இருப்பவன். அவன் கீழ்தான் வசுந்தராவிற்கு வேலை. தன் டீம்  மேட்களிடம் தன் பள்ளிக்கால உயிர் நட்பு என அறிமுகப்படுத்த அனைவரும் அவளுடன் கைகுலுக்கி அறிமுகமாகி கொண்டார்கள்.

சற்று நேரம் கழித்து அனைவரிடமும் அளவளாவியபிறகு.
“சரி வா. உன்ன உன்னோட டீம் கிட்ட கூட்டிட்டு போறேன்.” என்று கூறியபடி வசுந்தராவை அழைத்துக்கொண்டு நேராக நீரஜிடம் சென்றாள். வேலையில் கவனமாக இருந்தாலும் ஒரு கண்ணை இவர்கள்மேல் வைத்திருந்த நீரஜ்ஜும்  எப்போது தன்னிடம் அவளை அழைத்து வருவாளெனப் பார்த்துக் கொண்டே இருந்தான். எச்ஆர் இடம் இருந்து அவனுக்குத் தகவல் வந்திருந்தது வசுந்தராவை பற்றி.

அவர்கள் தன்னை நோக்கி வருவதைக் கண்டு வேகமாக எழுந்து நின்றான் முகம் முழுவதும் புன்னகையில் விகாசிக்க. அவன் எழுந்து நிற்பதை பார்த்த வசுந்தரா மெதுவாகத் தோழியின் காதில்
“யாரு டி இந்தக் குடுமிக்காரன்.?” எனக் கேட்டாள். நீரஜின் தோற்றம் அப்படி. நெடு நெடு என்ற உயரம். ஒல்லியான உடல்வாகு. அதையும் ஜிம் சென்று கட்டுக்கோப்பாக வைத்திருந்தான்.தலையின் பின்னால் சின்னதாக ஒரு குடுமி.

“அது ஒரு லூசு. கண்டுக்காத. வா. ஆனா வேற வழியும் கிடையாது. அது தான் உன்னோட டி எல்.”  என்றாள் அவளும் மெதுவாகக் கிசுகிசுத்த படி.
“சே, என்னடி இது.?அது, இதுன்னு அஃறிணை மாதிரி.?”  என்று தோழியைக் கண்டித்தபடி வந்தவளை பார்த்தவள்.
“உனக்கு இப்போ புரியாது. போக, போகப் புரியும். அது தலை பின்னாடி ஒரு குடுமி பாத்தியா.? அது எதுக்குன்னு நினைக்கிற.? எங்க ஆளுங்க எல்லாம் தலைக்கு மேல போடுவாங்க. இது, அதே மாதிரி நினைச்சு தல பின்னாடி வச்சிருக்கு. என்னைக் கவர் பண்ண தான்.” என்றாள் மெலிதாகச் சிரித்துக் கொண்டு.
“ஹேய் லவ்வா.”
“ஆமாமா ஒன்சைடா.”
“ஏன்.? டபுள் சைடு ஆக்க வேண்டியது. நீ இப்போ சிங்கிள் தானே.”
“என் மேரேஜ் ஏன் பிரேக் அப் ஆச்சின்னு  நான் இன்னும் சொல்லலையே.” எனக் கேட்க. சட்டென்று நடப்பதை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்துத் திரும்பிய வசந்தரா.

“ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கேன். இப்பவாவது சொல்லு.” எனக் கேட்க.
“சொல்றதுக்கு இது சரியான நேரம்  இல்லை. சொல்றேன். அவன் வேற நம்மையே தான் பாத்துட்டு இருக்கான். இப்படி நீ அவனுக்குச் சப்போர்ட் பண்ணி என்கிட்ட பேசினேன்னு  தெரிஞ்சது. அவ்வளவுதான், உனக்குக் கோயில் கட்டி கும்பாபிஷேகமே பண்ணுவான்.” எனக் கூறியப்படியே அவளை இழுத்துக்கொண்டு அவனை நோக்கி நடந்தாள் வேகமாக.

தன்னை நோக்கி வரும் இரு பெண்களையும் கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் நீரஜ். பார்வை பொதுவாக இருந்தாலும் கவனம் முழுவதும் கவல் மேல் தான் இருந்தது. வைத்த கண் வாங்காமல் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பது  கவளுக்கும் தெரிந்தே இருந்தது.
“இம்சை.” என்று வாய்க்குள் முணுமுணுத்த படி அவன் அருகில் வந்தவள்.
“நீரஜ், மீட் யுவர் நியூ டீமேட் வசுந்தரா.”என அவனுக்கு அறிமுகம் செய்துவிட்டு
“ஓகே டி பார்த்துக்கோ. லஞ்ச் டைம்ல மீட் பண்ணலாம்.” என்று அவளிடம் கூறிவிட்டு திரும்ப
“வேற எதுவும் இல்லையா.?” என  நீரஜ் கேள்வி கேட்டு அவளை நிறுத்தினான்.
“வேற என்ன.?”என்ற கவலின் கேள்விக்கு.
“சும்மா நாலு வார்த்தை முடிஞ்சா ஒரு கப் காபி.” என்று மைண்ட் வாய்ஸில் ஓடியது வசுந்தராவிற்கு. வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு அவர்களின் சம்பாஷணையை கவனிக்க ஆரம்பித்தாள்.

“உங்களுடைய பெஸ்ட் ஃபிரண்ட். ஸ்கூல் ஃப்ரெண்ட்ன்னு. என்கிட்ட சொல்லவே இல்லையே.” என்றான் நீரஜ் கவலையுடன்.
“ரொம்ப முக்கியம். அதான் நான் சொன்னது உனக்குக் கேட்டுச்சு இல்ல. அப்புறம் என்ன.?” என்றபடி அவர்களைத் தாண்டித் தன் இடம் நோக்கிச் சென்றாள் கவல் பிரீத்.
‘இவளை எப்படித்தான் சரி கட்டுவது.’ எனத் தெரியாமல் அசந்து போய் நின்றான் நீரஜ்.

சிறிது நேரம் அசையாமல் நின்றவன். பின்பு, அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்த வசுந்தராவை பார்த்து.
“ஹாய் வசு. வெல்கம் டு அவர் டீம்.” என்று விட்டு மற்றவர்களிடம் அவளை அறிமுகப்படுத்தினான். இதுவரை “வசு” என்று அவளை யாரும் அழைக்காதிருக்க இவனின் அழைப்பு அவளுக்கு  ஆச்சரியமாக இருந்தது. ஆனாலும் அதைத் தடுக்க தோன்றவில்லை அவளுக்கு. அவன் ஆங்கிலம் பேசும் விதமே சற்று வித்தியாசமாக இருக்க இலகுவாகவே ஏற்றுக் கொண்டாள் அவனின் அழைப்பை. இப்படியாக அன்றைய நாள் அறிமுக படலத்துடன்  முடிந்தது.

பின் தொடர்ந்து வந்த நாட்களிலும் நீரஜ் அவளுக்கு வேலை சொல்லிக் கொடுப்பதில் பெரிதும் உதவினான். அவனின் வழிகாட்டுதலில் அனைத்தையும் புரிந்து கொண்டு தனக்கு கொடுத்த வேலைகளைப் பிழை இல்லாமல் முடித்தாள் வசுந்தரா.

ஒரு முறை இவளிடம் தான் கவல் பிரீத்தை வெகுவாக விரும்புவதாகும் தனக்காக அவளிடம் பேசும் படியும் கூறி இருந்தான் நீரஜ். அவள் வாழ்வில் என்ன நடந்திருந்தாலும் தான் அவளை உயிராகப் பார்த்துக் கொள்வதாகக் கிட்டத்தட்ட சத்தியம் செய்யும் நிலையில் உறுதி அளித்தான். இது ஒருவரின் தனிப்பட்ட விஷயம் இதில் தான் தலையிடுவது சரியாக இருக்காது என அவனிடம்  மறுத்திருந்தாள் வசுந்தரா.
சில நாட்கள் கலகலப்பாகவும் உற்சாகத்துடனும் இருப்பவள் சில நாட்கள்  சோர்வுடனும் சிடுசிடுப்புடனும்  இருப்பதை கவனித்துக் கொண்டுதான் இருந்தாள் கவல்.

அன்று விடுமுறை நாளாக இருக்க சற்று நேரம் டிவி பார்ப்பதும் ஒரு வாரத் துணிகளை மெஷினில் போட்டுக் காய  வைப்பதுமாக இருந்தான் சஞ்சய். துணி துவைப்பதை தன் வேலையாக எடுத்துக் கொண்டான். பின் மகனுடன் சிறிது நேரம் விளையாட்டு, சற்று நேர தூக்கம் முடிந்து, மாலை நேர தேநீரை அருந்திக் கொண்டிருக்கும்போது  தாரணியிடமிருந்து அழைப்பு வர. எடுத்துப் பேசிக்கொண்டிருந்தான் மும்முரமாக. இடையில் சத்தமான சிரிப்பு வேறு. மறுநாள் உணவிற்காகக் காய்கறிகளை நறுக்கிக் கொண்டு இருந்த வசுந்தராவிற்கு பெரும் ஆத்திரமாக வந்தது. மதியம் சமையலின்போது ஏதேனும் உதவி வேணுமா எனக் கேட்டான் தான். வேண்டாமென மறுத்து விட்டபின் வேறொன்றை அவனிடம் எதிர்பார்த்தாள் அது கிடைக்காத கோவம் அவளுள் உழன்று கொண்டே இருந்தது. ஆனால் அதை அவனுக்கு எப்படி புரிய வைப்பது என்பதுதான் தெரியாத நிலை.

சத்தமாகப் பேசிச் சிரித்து கொண்டிருக்கும் கணவனை மனதில் அர்ச்சித்தபடியே காய்களை  நறுக்கி கொண்டிருந்தாள் வசுந்தரா. அப்போது அவளுக்கு நீரஜ்ஜிடமிருந்து அலைபேசி அழைப்பு வர. யார் என்று பார்த்துவிட்டு ஸ்பீக்கரில் போட்டபடி வேலைகளைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.
“ஹாய் வசு. என்ன பண்றீங்க.?” என்ற கேள்வியில் இவள் பதில் கூற ஆரம்பிக்கும் முன்பே அதுவரை  பால்கனியில் நின்று பேசிக் கொண்டிருந்த சஞ்சய் எதற்கோ உள்ளே வர. அலைபேசியில் கேட்ட “வசு.” என்ற விளிப்பிலேயே நின்று விட்டான் யோசனையுடன் நெற்றியை சுருக்கியபடி. கணவன் வந்ததையோ சென்றதையோ கவனிக்காமல்.

“சொல்லுங்க நீரஜ் காய்கறி கட் பண்ணிக்கிட்டு இருக்கேன்.
நாளைச் சமையலுக்கு.” என அவன் கேட்டதற்கு பதில் கூறியபடியே தன் வேலைகளைச் செய்துகொண்டிருந்தாள்.
“ஓஹ்.! ஒகே வசு. கவல் கிட்ட ஏதாவது பேசினீங்களா.”
“நான் தான் ஏற்கனவே சொன்னேனே  நீரஜ். என்னால எதுவும் பண்ண முடியாதுன்னு.”
“ம்ம்.” என்றவன் பின், அவளுக்குப் புரியாமல் இருந்த ஒரு கோடிங்கை பற்றிக் கேட்டவன் அதைப் பற்றிய விளக்கங்களையும் கூற ஆரம்பித்திருந்தான். அதுவரை அவளையே பார்த்தபடி நின்றிருந்த சஞ்சய் பேசிக் கொண்டிருந்த தாரணியிடம் ஒன் மினிட் என்று கூறிவிட்டு அவளின் அழைப்பை மியூட்டில் வைத்துவிட்டு. மேஜையில் கைகொண்டு மெதுவாகத் தட்டி. யார்.? என்று சைகையில் கேட்டான். அப்போதே அவன் அங்கு நிற்பதை கவனித்த வசுந்தரா. வாயசைப்பில்
“ஆபீஸ் கொலீக்” என்று கூற,
“ஆபீஸ் விஷயம் எல்லாம் எதுக்கு வீட்ல பேசணும்.”என்று முனுமுனுத்தவனின் குரல் நன்றாகவே வசந்தராவிற்கு கேட்டது.

அதில் நிமிர்ந்து அவன் கைகளில் இருந்த அலைபேசியை அவள் குறிப்பாகப் பார்க்க. அவள் குறிப்புணர்ந்தவனும்
“நாளைக்கு ஆபீஸ்ல பேசிக்கலாம் தாரணி.” என்றப்படி அலைபேசியை வேகமாக அணைத்தான்.
இவளும் வேலை இருப்பதாகக் கூறி நீரஜன் அலைபேசி அழைப்பைத் துண்டித்தாள்.
“ஓகே வசு பாய்.” என்றவாறு அவன் அழைப்பைத் துண்டித்தது இவன் காதுகளில் நன்றாகக் கேட்டது.

“யார் அவன்.? அது என்ன வசு.?”என்று கேட்டபடி அவள் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
“யாருன்னா.? சொன்னேனே. ஆபீஸ் கொலீக்.”
“அது சரி, அது என்ன வசு.?”
“அவருக்கு என் பெயரை முழுசா சொல்ல முடியல. அதனால ஷார்ட்டா வசுன்னு கூப்பிடுகிறார்.”
“வசுந்தராங்கற பெயர் அப்படி ஒன்னும் வாயில நுழையாத கஷ்டமான பெயர் இல்லையே.” என்று சத்தமாகக் கூறியவன்,
“வசு, பசுன்னு.” என்று வாய்க்குள் முனங்கினான். அவனின் குரலில் அப்பட்டமான பொறாமை உணர்வு தெரிந்தது.
“நானே உன்னை இதுவரைக்கும் அந்த மாதிரி கூப்பிட்டதில்லை…” என்று புலம்பியவனின் பொறாமை உணர்வு பிடித்தே இருந்தது பெண் அவளுக்கு.

அன் நாளின் மீதம் உள்ள நேரமெல்லாம் மனைவியுடனேயே சுற்றிக் கொண்டிருந்தான் சஞ்சய். ஏதேனும் பேசிக்கொண்டே. பின், இரவிலும் அவளை நாட, கணவனின் செயல்கள் மகிழ்வை கொடுத்தாலும். பூரணமாகாத அரைகுறை இன்பம் எரிச்சலை கொடுத்தது.

வார இறுதி நாள் முடிந்து வேலைக்கு வந்திருந்த வசுந்தரா அன்றும் சற்று சிடுசிடுப்புடன் காணப்பட்டாள். இதற்கு மேல் கேட்காமல் இருக்க முடியாது என்று நினைத்த கவல், அவள் முன் வந்து நின்று.
“வசுந்தரா வா, காபி குடிச்சிட்டு வரலாம்.” என்று அழைக்க.அவளுக்கு இருந்த சிடுசிடுப்பில் காபி அருந்தினால் நன்றாக இருக்கும் என நினைத்தவள் அவளோடு எழுந்து சென்றாள்.

வேலையில் சேர்ந்த இந்த ஐந்து மாதத்தில் ஒரு விதமான தன்னம்பிக்கை அவளுள் முகிழிந்திருந்தது. சற்று தைரியமும் பெற்றிருந்தாள். கணவனைத் தவிர்த்து மற்றவர்களிடம் எதைப் பற்றியும் தயங்காமல் பேசச் சற்று துணிவு வந்திருந்தது.அதற்கு முக்கிய காரணமாகக் கவல் இருந்தாள்

“என்னடி பிரச்சனை.? நானும் பார்த்துகிட்டு இருக்கேன். கொஞ்ச நாள் நல்லா இருக்குற. கொஞ்சநாள் சிடு சிடுன்னு இருக்கிற. ரொம்ப கோவப்படுற. என்ன பிரச்சனை உனக்கு.? நீரஜ் ஏதாவது தொந்தரவு பண்றானா.?”

“ஹேய்.! சீய், என்ன பேசுற நீ.? அவன் மனசு ஃபுல்லா உன்ன தான் வச்சிருக்கான். அப்புறம் எப்படி என்கிட்ட மிஸ் பிஹேவ் பண்ணுவான். கொஞ்சமாவது லாஜிக்கா பேசு.”
“ஹேய் வசுந்தரா. நீ இவ்ளோ பேசுவியா.?”
“உன் கூடச் சேர்ந்துட்டு இவ்வளவு கூடப் பேசலனா எப்படி.?”
“நல்ல முன்னேற்றம். டீ.கீப் இட் அப்.”
“என்ன முன்னேற்றம்.? புருஷன் கிட்ட மட்டும் பேச வாய் வரமாட்டேங்குது.”
“ஏன்.? என்ன ஆச்சு.? அவர்கிட்ட பேசும்போது உன் வாய் கம் போட்டு ஒட்டிக்குதா.? அவர் கிட்ட பேச முடியாத அளவுக்கு அவர் என்ன அவ்வளவு பெரிய ரவுடியா.? சொல்லு வேணும்னா சம்பவம் செஞ்சு விட்டுடலாம்…”

“அடிப்பாவி.! என் புருஷன் ரொம்ப ரொம்ப நல்லவருடி. அவர்கிட்ட உன் அடாவடித்தனத்தை காட்டாத.”
“என்னடி இது வம்பா இருக்கு.? நீ தான் சொன்ன என் புருஷன் கிட்ட பேச வாய் வரமாட்டேங்குதுன்னு. இப்ப என்னை அடாவடித்தனம் பண்ணாதன்னு சொல்ற.”
“ப்ச். இது வேற பிரச்சனை டி உன்கிட்ட எப்படி சொல்றது.” என்று யோசனையுடன் அவளைப் பார்க்க,
“ஏன் வாயால தான்.” என்றாள் விளையாட்டாக.
“ப்ச்.” என்றபடி அவள் தயங்க.
“எதுவாயிருந்தாலும் சொல்லுடி பாத்துக்கலாம்.” என்று அவளை ஊக்கினாள்.
சொல்வதற்கு தயங்கியவளாகச் சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் மெதுவாகக் கண்களைச் சுழற்றி சுற்றி பார்த்தாள். அங்கொன்றும் இங்கொன்றுமாக வெகுசிலரே அமர்ந்திருந்தார்கள்.

“என்னடி ஏதாவது அந்தரங்கமான பிரச்சனையா.” என்று கேட்டவளை இவள் அதிர்ந்து பார்க்க.
“அவ்ளோ எல்லாம் ஷாக் வேண்டாம். புருஷனால பிரச்சனை இல்ல. இந்த வயசுல நம்மள போலப் பெண்களுக்கு வரும் பிரச்சனைனா அதுல முக்கியமான ஒன்று இதுதான். ஆனா இத பத்தி பேசத் தான் இங்க ஆளே இல்லை. என்னவோ இதைப் பற்றிப் பேசிட்டா தெய்வ குத்தம் ஆயிடும்னு எல்லாரும் பயப்படுறாங்க. உடைச்சுகிட்டு வெளியில வந்து பேசுனா தானே நமக்கும் இது எவ்வளவு முக்கியம்னு நாம சொல்ல முடியும். இன்னும் உள்ளுக்குள்ளேயே போட்டு அடைச்சுக்கிட்டே இருந்தா.? வைச்சூட் பாய்ஸ் ஹாவ் ஆல் த ஃபன்.(Why Should only  Men have all the fun)அப்படின்னு நாம எப்பதான் கேட்கிறது. தமிழ்ல சொல்லணும்னா பூனைக்கு யாரு மணிக் கட்டுறதுங்கிற கதைதான்.”  என்றாள் மூச்சு விடாமல்.

அவள் கேட்ட கேள்விகள் அனைத்துமே மிகவும் நியாயமாக இருந்தது. சரிதான், பூனைக்கு யார் தான் மணி கட்டுவது. என்ற கேள்வி அவள் உள்ளும் எழுந்தது.

வசுந்தராவும், கவல் ப்ரீத்தும் எதிர் எதிரே அமர்ந்திருந்தார்கள். அவர்களின் முன் ஆவி பறக்க இருந்த காபியும் தன் ஆவியை மெதுமெதுவாகக் குறைத்துக் கொண்டிருந்தது. முதலில் சுயத்துக்கு வந்த கவல்
“அடியே. என்ன ட்ரீம் உலகிற்கு போயிட்டியா.?” என்று கேட்டபடி அவள் கையை உலுக்கி அவளை நிகழ் உலகுக்கு இழுத்து வந்தாள்.

“நீ சொல்றதும் சரிதான் டி. பூனைக்கு யாரு தான் மணி கட்டுறது.?” என்றவளின் கேள்விக்கு
“நாம தான்.” என்றாள் அவளும். அலட்டிக் கொள்ளாமல்.
“அதுதான் எப்படி.?அது தெரியாம தானே முழிச்சுக்கிட்டு இருக்கேன்.”என்றாள் இவளும். இதுதான் விஷயம் என்று பரஸ்பரம் பகிர்ந்துக் கொள்ளாமலேயே ஒருவரின் எண்ணமும், பிரச்சனையும்  மற்றவருக்கு நன்றாகவே புரிந்திருந்தது.

“என் பிரச்சனை என்னன்னு ரொம்ப நாளா கேட்டுட்டு இருந்த இல்ல நீ. எதுக்கு புருஷனை விட்டுப் பிரிஞ்சு வந்துட்டேன்னு இன்னைக்கு சொல்றேன், அதுக்கான விடையை. கேட்டுக்கோ. அம்மா, அப்பா பார்த்து, பேசிக் கல்யாணம் பண்ணி வச்ச அரேஞ்சிடு மேரேஜ் தான். அவன், ஹரிந்தர். ஆளு நல்லா ஹைட்டா, வெயிட்டா  இருப்பான். பார்த்ததுமே எனக்கும் பிடிச்சிருந்தது. அவனுக்கும் அப்படித்தான்னு  என்கிட்ட பேசும்போது சொன்னான். ரொம்ப சீக்கிரத்திலேயே எங்கள் கல்யாணமும் நடந்தது. அறிமுகமான ரெண்டு மாசத்திலேயே திருமணத்தை முடிவு செஞ்சி இருந்தாங்க அவங்க வீட்ல. எங்க வீட்டிலேயும் எல்லாருக்கும் பிடிச்சி இருந்ததுனால பெருசா தடை இல்லை. அதனால நாங்களும் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டோம். கல்யாணத்துக்கு முன்னாடி ரெண்டு முறை அவனோட வெளியில போய் இருக்கேன். ரொம்ப நல்லா பழகினான். கண்ணியமா நடந்துக்கிட்டான். திருமணமும் நடந்துச்சு. ஆனா திருமணம் செய்வதற்கு முக்கிய கோட்பாடான ஒன்னு மட்டும் திருமணத்திற்குப் பிறகு நடக்கவே இல்லை. போகப் போகத் தான் எனக்குத் தெரிஞ்சது, அவனுக்குப் பெருசா குடும்ப வாழ்க்கையில இன்ட்ரஸ்ட் இல்லன்னு.”

“அப்ப உங்களுக்குள்ள.” எனக் கேட்க வந்து தயங்கியவாறு நிறுத்தினாள் வசுந்தரா.
“நடந்ததா…? நடக்கலையான்னு கேக்க வரியா.? நடந்ததுன்னும் சொல்ல முடியாது. நடக்கலன்னும் சொல்ல முடியாது.”
“என்னடி குழப்புற.”
“பொறுமையா கேளு அப்பதான் உனக்கு முழுசா புரியும். இது ஒரு மாதிரி வித்தியாசமானது. நீ வேற குழந்தை புள்ள டக்குனு சொன்னா பயந்துடுவே.”
“நீ இப்படி சொல்றதே  எனக்குப் பயமா இருக்கு டி.”
“இரு, இரு.பொறுமை, பொறுமை. உனக்கு இப்ப சொல்ற பொறுமையத்தான் நானும் பொறுமையா கடைப்பிடிச்சுட்டு வந்தேன். ஆனாலும் ஒரு கட்டத்துக்கு மேல முடியல. கிஸ் பண்ணுவான், கட்டிப்பிடிப்பான், அதுக்கு மேலயும் கூடப் போவான். ஆனா மெயின் மேட்டர் மட்டும் நடக்காது…”
“ஏன்.?”
“ஏன்னு அவன தான் கேட்கணும்.?”
“ப்ச்.”
“சரி, சரி அவனுக்குச் சுய இன்பத்தில் தான் விருப்பமாம்…”
“அப்படின்னா.?” என்று புரியாமல் கேட்டவளிடம்.
“குழந்தை பிள்ளைன்னு சொன்னது கரெக்ட்டா இருக்கா… இதெல்லாம் உன் வாழ்க்கையில நடந்தது இல்ல போல. கிட்ட வா.”என்று அருகில் அழைத்து அதற்கான விளக்கத்தைக் கொடுக்க.

“இப்படி என்னைக்காவது எனக்கு உடம்பு சரியில்லன்னா நடக்கும் தான்…” என்றாள் இவளும்.
“என்னைக்காவதுன்னா பரவால்ல. என்னைக்குமே இல்லன்னா எப்படி.?” என்றவளுக்கு குரல் கட்டியது.

“ஹேய்.!”என்று அவள் கரங்களைப் பற்றியவளை கண்டு.
“நான் கூல் தான். ஆனா எத்தனையோ நாள் ஏன்னு தெரியாம, புரியாம முழிச்சிருக்கேன். அப்பெல்லாம் ப்ளீஸ். ஹரிந்தர், ப்ளீஸ் ஹரிந்தர்ன்னு அவன் பின்னாடியே சுத்தி இருக்கேன். தினம் தினம் என்னை உச்சத்துக்கு கொண்டு வந்து.அதுக்கப்புறம் அவன் மட்டும் அவனுக்கு வேண்டியத நடத்திக்கும்போது சீன்னு ஆயிடுச்சு.அப்படி பார்த்த நான் இன்னும் வெர்ஜின் (கன்னிப்பெண்)தான். அந்த மாதிரி நேரத்துல வலிக்கும் பாரு என்ன பண்றதுன்னு தெரியாம கால் இரண்டையும் கட்டிக்கிட்டு அப்படியே சுருண்டு படுத்திடுவேன். வலி, கோவம், ஏமாற்றம், அழுகைன்னு என்னை ஒரு பாடு படுத்திடுச்சு.
அதுக்கப்புறம் நான் யோசிக்கவே இல்லை ஒரே  மாசம் தான். அவன விட்டு வந்துட்டேன்.அப்புறம் லீகலா பிரிஞ்சிட்டேன். இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொல்லி அம்மா அப்பா ரொம்ப வற்புறுத்தினாங்க. அதுவும் இதே மாதிரி ஆயிடுச்சின்னா என்ன பண்றது. அப்போதான் நம்மள சந்தோஷ படுத்திக்க, சேட்டிஸ்ஃபை செய்துக்க நிறைய வழி இருக்குன்னு தெரிஞ்சுகிட்டேன். வகை வகையா விதவிதமா டாய்ஸ் பத்தி தெரிஞ்சுகிட்டேன். அதுல ஒன்றை வாங்கி யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். எதிர்பார்த்து தேடிய இன்பமும் திருப்தியும் வேண்டிய அளவு கிடைத்தது. எப்படியொரு மனுஷன் உயிர் வாழச் சாப்பாடு, தூக்கம் முக்கியமோ அதுபோலத் தான் இதுவும் ரொம்ப முக்கியம். அந்தந்த வயசுக்கு தேவையானதை கொடுத்திடனும் அப்பதான் நம்ம மூளையும், மனசும், உடம்பும் ஃப்ரீயா இருக்கும். எனர்ஜிட்டிக்காவும் இருக்கும்.”எனத் தன் கடந்த கால சிரமங்களையும் அதிலிருந்து தான் மீண்டு வந்ததையும் கூறிக் கொண்டே வந்தவள் வசுந்தராவின் முகத்தைப் பார்த்து விட்டுத் தன் பேச்சை நிறுத்தினாள்.

“என்னடி உக்காந்துக்கிட்டே  தூங்கிட்டியா.? என் கதை அவ்வளவு போராவா இருந்தது.? கதை கேட்டியா இல்ல நான் தனியா பொலம்பிட்டு இருந்தேனா.?”
“கேட்டேன். ஆனா ஒரு டவுட்.?”
“கேளு உன் மூஞ்ச பாத்தாலே தெரியுதே. உனக்கு ஏதோ புரியலன்னு.”
“டாய் யினு சொன்னல அப்படின்னா என்ன.? அது என்ன டாய். டாய் அப்படின்னா விளையாட்டுப் பொருள் தானே…”
“ம்ம். ஆமாமா. இதுவும் நாம விளையாடுறதுக்கு யூஸ் பண்ற பொருள் தான்…” என்றாள் சிரிப்பை  மென்றபடி.

பின், அவள் காதின் அருகே குனிந்து அந்தத் டாய் எதற்கு உபயோகமாகிறது அது எப்படி செயல்படுகிறது என்பதை விரிவாகக் கூற.
“சீய்.! என்னடி இது.? இப்படி எல்லாமா இருக்கு.?”என அதிர்ந்த கேட்டவளை பார்த்தவளுக்கு இன்னுமே சிரிப்பு பீறிட்டுக் கிளம்பியது.
“இதெல்லாம் எப்பவோ வந்துடுச்சு.எந்த ஜெனரேஷன்ல இருக்க நீ. இதெல்லாம் தெரிஞ்சுக்காம.?”
“எந்த ஜெனரேஷன்ல இருந்தாலும் இதெல்லாம் எனக்குத் தெரிஞ்சுக்க வேண்டாம் டி.” என்று வேகமாக மறுத்துக் கூறியவள். பின் மெதுவாக,

“இதெல்லாம் தப்பு இல்லையா. கலாச்சார கேடு இல்லையா.”
“இதுல என்னடி தப்ப கண்டுபிடிச்ச. இதுல எங்க கலாச்சார கேடு வந்தது. எதையும் எதையும் முடிச்சு போடுற.”என்று இவளும் கோபமாகக் கேட்க.
“ஆண் பெண் உறவு இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ளும் காலத்தில் இருக்கோம். இப்போ ஆண் என்பவனே தேவைப்படவில்லை என்ற நிலைக்குக் காலம் போனால், அப்புறம் மனித குல பிறப்பிற்கு அவசியம் தான் என்ன.? ஏற்கனவே 90ஸ் கிட்ஸ்க்கு பொண்ணு கிடைக்க மாட்டேங்குது. இதுல இப்படியொரு விஷயம் இருக்குன்னு இந்தப் பெண்ணுங்களுக்கு தெரிஞ்சா ஆண்களே தங்கள் வாழ்வில் வேண்டாம் என்று முடிவு பண்ணிட மாட்டாங்களா.?” என்று ஆதங்கமாகக் கேட்க. அவள் ஆதங்கத்தில் இருந்த நியாயத்தைப் புரிந்து கொண்ட கவல்.

“நீ சொல்றதும் சரிதான். ஒருவகையில. சில பேர் கணவனோட ரொம்ப பாசமா காதலா வாழ்ந்து இருப்பாங்க. ஏதோ அசம்பாவிதம் நடந்து அந்தக் கணவன் இல்லாமல் போயிட்டா அப்ப அந்த மனைவி தன் ஆசைகளை அடக்கி வாழணுமா.? இல்ல இந்த மாதிரியான கிடைக்கும் சாதனங்களைக் கொண்டு தன்னைத்தானே இன்புற்றுக் கொள்ளனுமா.? யாருக்கும் எந்தக் கஷ்டமும் கொடுக்காமல்.தன் உணர்ச்சிகளுக்காகத் தப்பான முடிவுக்குச் செல்லாமல், முக்கியமா அடுத்தவங்க குடும்பத்தைக் கெடுக்காமல் அடுத்தவ புருஷனை இழுக்காம ஒழுக்கமா வாழலாமே.”என்று அவள் விளக்கம் கூற. அவளின் விளக்கத்திலும் ஒரு நியாயம் இருப்பதாகத் தோன்றியது வசுந்தராவிற்கு.

“நீ சொல்றதும் சரியா தான் இருக்கு.”
“சரியா தான் இருக்கு இல்ல. ரொம்ப சரியா இருக்கு. இதுக்காக அவனுங்க கிட்ட நாம ப்ளீஸ், ப்ளீஸ்னு கெஞ்ச வேண்டாம் பாரு. அவங்களுக்கு ஒன்னும் இல்ல வெளியில வந்துருச்சுன்னா சந்தோஷமும் சேர்ந்தே வந்துரும். ஆனால் நமக்கு அப்படி இல்லையே. நம்ம உடல் ஒன்னு ஒன்னையும் ஏத்துக்கிட்டு தயாராகி வரும்போது அங்க முடிஞ்சே போயிடும். இதுக்காகப் பாவமா அவங்க முகத்தைப் பார்த்துகிட்டு இருக்க முடியுமா. எத்தனை வருஷம் ஒண்ணா வாழ்ந்திருந்தாலும் பெண்களுக்கு இந்தக் கூச்சங்கிர ஒன்று மட்டும் போகவே போகாது போல. அத்தனை வருஷம் வாழ்ந்த புருஷன் கிட்ட கூடத் தன் ஆசையைச் சொல்ல முடியலனா அப்புறம் அவங்க எல்லாம் என்ன வாழ்க்கை தான் வாழ்றாங்க.”என்று ஆவேசமாகக் கூறிக் கொண்டு வந்தவள்.

வசுந்தராவின் சோர்ந்த முகத்தைப் பார்த்து.
“ஹான்.! வெளியில எங்கேயும் ஏன் தேடணும். இதோ, என் முன்னாடி நீயே உட்கார்ந்து இருக்கியே. என்ன ஒரு ஏழு, எட்டு வருஷம் வாழ்ந்திருப்பியா உன் புருஷன் கூட. அது ஒன்னும் குறைவான நாள் இல்லையே. உன்னால சொல்ல முடிந்ததா.? உன்னுடைய ஆசையை, தேவையை. ஒருமுறையாவது. சரி, வார்த்தையால சொல்ல முடியல. குறிப்பாவது காட்டி இருக்கியா.?”என்று கேட்டவளுக்கு இல்லையென அவள் தலையாட்ட.

“ஹான்.!, அப்புறம், இதுக்கு என்ன தான் தீர்வு.? இப்படியே மனசுல போட்டு அழுத்தி, அழுத்தி உடலுக்குத் தேவையான நியாயமான இன்பம் கூடக் கிடைக்காமல் வெந்து தணிந்து அப்படியே போக வேண்டியதுதான் இல்லையா.?” என்று கேட்டவளுக்கு பதில் கூறத்தான் வசுந்தராவால் முடியவில்லை. அவள் கேட்பது அனைத்தும் மிகச் சரியானது என்று புரிந்தே இருந்தது இவளுக்கு. ஆனாலும் அதற்காக அவள் சொல்வதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“சரி விடு, மத்தவங்க வெந்து சாகுறாங்களோ சாகலையோ எனக்குத் தெரியாது. ஆனால் நீ அப்படி சாகக் கூடாது. சொல்லு உனக்கு நான் வாங்கி தரவா.?” எனக் கேட்க.
“அய்யய்யோ.! வேணாம், வேணாம்.”  என்றாள் பதறி வேகமாக.
“அப்ப, இவ்வளவு விளக்கம் கொடுத்தும் இன்னும் இது உனக்குத் தப்பா தான் தெரியுது. இல்ல.” எனக் கேட்ட தோழியைப் பார்த்தவள்.
“தப்புன்னு சொல்லல.”
“அப்புறம்.”
“எனக்கு வேண்டாம்னு தான் சொல்றேன்.”
“சரி உனக்கு வேண்டாம். ஆனா உன்னுடைய நிலைமைக்குத் தீர்வு தான் என்ன.? உன் உடலுக்கான நியாயத்தை நீ கொடுத்துத் தானே ஆகணும்.?”
“நீ சொன்னியே புருஷன் கிட்ட பேசணும்னு. அதைச் செய்யலாம்னு இருக்கேன்.” என்றாள் தெளிவாக
“அந்தத் தெளிவுக்கு வந்தா சரிதான்.” என்று இவளும் உடனே ஒப்புக்கொண்டாள்.

சிறிது நேரம் இருவருமே அமைதியாக அமர்ந்திருக்க,

“இதுக்கு மேல முடியாது, வா. ரொம்ப நேரமா டீப் டிஸ்கஷன்ல நேரம் போனதே தெரியாமல் பேசிக்கிட்டே உட்கார்ந்து விட்டோம்.நம்மைத் தேடி யாரும் வரதுக்குள்ள வேகமா ஓடிப் போய்க் கொஞ்சமாவது வேலையைப் பார்ப்போம்.” என்று கூறியபடி எழுந்த கவலின் கைகளைப் பிடித்த வசுந்தரா.

“நீரஜ்ஜிக்கு ஒரு வாய்ப்பு கொடுடி. கண்டிப்பா அவர் உன்னை நல்லா பாத்துக்குவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. உன் முதல் திருமணத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள் இந்தத் திருமணத்தில் இருக்காதுன்னு என் மனசுக்கு தோணுது. அவர் கண்டிப்பா உன்ன சந்தோஷமா வச்சு பாரு.”
“அவன் என்னடி என்னைச் சந்தோஷமா வெச்சிக்கிறது.நானே என்னைச் சந்தோஷமா தான் வச்சிருக்கேன். அதுக்கு தேவையான எல்லா உபகரணமும் என்கிட்ட இருக்கு.” என்று கண்ணடித்தபடியே கூற.
“எல்லா சந்தோஷமும் உன் கிட்ட இருக்கு. நீ என்னைக் கேட்டது போல, உன் உடலுக்குத் தேவையான நியாயத்தை நீ கொடுக்கிற. சரிதான். ஆனால் உனக்குன்னு ஒரு குழந்தை.” என்று அவள் கேட்ட ஒற்றைக் கேள்வியில் அதுவரை தெனாவட்டாக நின்றிருந்தவள் அப்படியே தோய்ந்து அமர்ந்தாள்.

“அதுக்கும் வழி இருக்குன்னு தயவு செஞ்சு சொல்லாத. செயற்கை ரொம்ப நாளைக்கு வெற்றி பெற்று கொண்டே இருக்காது.” என்று சற்று கோபத்துடன் கூற. அதுவரை தைரியமாகவும் ஆவேசமாகவும் பேசிக் கொண்டிருந்த கவலின் கண்களில் கண்ணீர் கரை கட்டி நின்றது.
“ஹேய் என்னடி.?” என்று இவள் அவள் கண்ணீரைக் கண்டு பதறிக் கேட்க.

“எனக்கு மட்டும் ஆசை இல்லையாடி நார்மலான ஒரு குடும்ப வாழ்க்கை வாழனும்னு. நான் சொல்ற டாய்  உடலுக்குச் சுகம் கொடுக்கும் தான். ஆனா மனசுக்கு.? ஒரு ஆணோட அரவணைப்பு. அவனுக்கே உண்டான மணம், பாசமான ஒரு இறுகிய அணைப்பு, இதழ் முத்தம், அனுசரணையான ஒரு சில வார்த்தைகள். தலை கோதும் விரல்கள். இதையெல்லாம் கேட்டு மனசு ஏங்கும். அப்படி ஏங்குகிற மனச தட்டி, அடக்கி வச்சிருக்கேன்.”என்றவள்,
“ம்ம்ம்.”என்று ஒரு நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டாள். பின், சிறிது நேர யோசனைக்குப் பிறகு,

“நீ சொன்னதுனால அவன கன்சிடர் பண்றேன்.” என அவள் முடிப்பதற்குள்ளாகவே,
“ஹேய்.! ரொம்ப, ரொம்ப சந்தோஷம் டி.”என்று இவள் ஆர்ப்பரிக்க.
“ஏய்.! நீ போய் அவன்கிட்ட எதையும் சொல்லி வைக்காத. நானே பேசிக்கிறேன்.”
“நான் ஏண்டி வரப் போறேன். உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல. நீ ஆச்சு, அவன் ஆச்சு. எனக்கு உருப்படியா செய்ய நிறைய வேலை இருக்கு.” என்றபடி எழுந்து சென்றவளை

“கொழுப்பிடி உனக்கு.”என்றவள் பின்பு,
“உருப்பட்டினா சரிதான்.” என்றபடியே முன் செல்லும் வசுந்தராவை தொடர்ந்தாள் கவல் ப்ரீத் சிரிப்புடன்.

தன் மனதில் உள்ளவற்றை கணவனிடம் பேசுவதாகக் கவலிடம் உறுதி கூறி ஒரு வாரம் முடிந்து இருந்தது. இதைப் பற்றிக் கணவனிடம் எப்படி பேசுவது, ஆரம்பிப்பது எனத் தெரியாமல் குழப்பத்திலேயே சுற்றிக் கொண்டிருந்தாள் பெண் அவள். மேலும் இரண்டு நாள் முடிந்து இருந்தது.

மறுநாள் விடுமுறை நாளாக இருக்க. அன்று சஞ்சய் அவளை நாடினான். கணவனோடு முதலில் ஒன்றியவள் அவன் உச்சம் பெறும் நேரத்தில் அவனைத் தடுக்க கோபத்துடன்
“என்னடி.?” என்றான் அவள் முகம் பார்த்து.
“எனக்கு வலிக்குது.”
“கொஞ்ச நேரம் தான். பொறுத்துக்கோ.”
“இல்ல முடியாது. எனக்கு ரொம்ப வலிக்குது.?”
“ஏன் புதுசா அடம் பிடிக்கிற. வலிக்குதுன்னு வேற சொல்ற.”
“எப்பவுமே தான் வலிக்கும். நான் தான் சொல்றதில்ல.”
“அப்புறம் இப்ப மட்டும் என்ன புதுசா.?”
“எப்பவுமே அப்படி இருக்க முடியாது இல்ல.”
“ப்ச்.! இப்போ என்ன தாண்டிச் சொல்ற…?”
“முடியல. வலிக்குது. நகர்ந்து போங்க அவ்வளவுதான்.”
“ஏய், ப்ளீஸ் டி. எனக்கு ரொம்ப ஏமாற்றமா இருக்கு. கொஞ்ச நேரம் தான். அட்ஜஸ்ட் பண்ணிக்கோ ப்ளீஸ். செல்லம்ல்ல.” என்ற படி அவள் கண்களில் முத்தமிட்டு கேட்க.
“ஒரு நாளைக்கே உங்களுக்கு ஏமாற்றமா இருக்குன்னு சொல்றீங்களே. எனக்கு எப்பவுமே இப்படித்தான் இருக்கு. அப்ப, நான் என்ன பண்றது.” என்று கேட்டவளை அதிர்ந்து பார்த்தான்.

“என்ன பாக்குறீங்க. இத பத்தி உங்ககிட்ட பேசணும்னு நினைப்பேன். ஆனா ஏனோ பேச முடியாது. ஒரு விதமான தயக்கம். கூச்சம்.” என்று கூறிவிட்டு அவள் சற்று நேரம் அமைதியாக. அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அன்னை முன்பு கூறியதும் இதைப் பற்றிய ஏதோ ஒரு கட்டுரையை அனுப்பியதும் ஞாபகத்தில் வந்தது.

“என் ஃப்ரெண்ட் கவல் இருக்கால்ல. அவ ஒன்னு சொன்னா.”
“என்ன சொன்னா.?”
“இல்ல, ஏதோ டாய் எல்லாம் இருக்காமே.”
“எதே.”
“வேணும்னா வாங்கி தரேன்னு சொல்லி இருக்கா.”
“என்னது.? வாங்கி தரேன்னு சொன்னாளா.? அதுக்கு நீ என்ன சொன்ன…?”
“யோசிச்சு சொல்றேன்னு சொன்னேன்…” என்றவளின் பதிலில் அரண்டவனாக அவளையே பார்த்துக் கொண்டிருக்க.

“மூச்சு முட்டுது. நகர்ந்து போங்க.” என்று அவனைப் பக்கவாட்டாகத் தள்ள, அதுவரை அனைத்து சம்பாஷனைகளையும் அவள் மேலிருந்தவாறு கேட்டவன், அவள் கீழே தள்ளியதில் மறுபடியும் உருண்டு அவள் அருகில் வந்து, அவளை இருகணைத்து தோள் வளைவில் முகம் புதைத்தவன் அப்படியே இருந்தான். எதுவும் பேசத் தோன்றாமல்.

வசுந்தராவும் தான் பேசியது அவனுக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருக்கும் என்று நினைத்தவளாக அமைதியாகவே இருந்தாள். கணவனின் இறுகிய அணைப்பில் கட்டுண்டு.
ஒரு வழியாகப் பூனைக்கு மணி கட்டி விட்டாள் வசுந்தரா.

மறுநாள் முழுவதும் மனைவியைப் பார்ப்பதும் பின்பு சிந்தனையில் ஆழ்வதுமாகவே இருந்தான் சஞ்சய். அவன் மூளை வேலை நிறுத்தம் செய்தது போல் இருந்தது அவனுக்கு. எதையும் தெளிவாகச் சிந்திக்க முடியவில்லை அவனுக்கு. இதற்குத் தீர்வு வேண்டும் ஆனால் எப்படி என்பது தெரியாமல் யோசித்தே அன்றைய நாள் முடிவுக்கு வந்திருந்தது. அன்று முழுவதும் மௌனமே ஆட்சி செய்ய மறுநாளும் மனைவியின் முகத்தை மட்டும் ஏறெடுத்து பார்த்துவிட்டு அலுவலகத்திற்குச் சென்றான்.

அவனின் செயல்கள் வசுந்தராவிற்கு ஒரு விதமான அசௌகரிய நிலையைக் கொடுத்தாலும். அவனிடம் தன் மனதில் உள்ளவற்றை கூறியதில் சற்றே மன நிம்மதி ஏற்பட்டது. இனிமேல் எனும் தன்னை புரிந்து கொண்டு தன் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பானா எனப் பார்ப்பதற்கு ஆவலாகக் காத்திருந்தாள்.

அலுவலகத்திற்கு வந்த சஞ்சய்க்கு வேலை செய்ய நாட்டமே இல்லை. மனைவி கூறியதையே யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு. உணர்வுகள் தடைபடுவது எவ்வளவு பெரிய கொடுமை என்று புரிந்தது. ஒற்றை இரவே அவனுக்கு அது எவ்வளவு கோபத்தை கொடுத்தது என்பதை நினைத்தவன் கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் மனைவி பொறுத்துக் கொண்டிருக்கிறாளென நினைக்கும்போது வேதனையாகவும், அதே நேரம் அவளுக்கும் இது தேவை என்பதை தான் புரிந்து கொள்ளாமல் தன் சுகம், இன்பம் மட்டுமே பெரிது எனத் தன் வேலை முடிந்ததும் நகர்ந்து விட்ட தன் நிலையை நினைத்து வெட்கம் கொண்டான்.

இனியேனும் இதைக் கண்டிப்பாகச் சரி செய்தே தீர வேண்டும் என்ற உறுதி எடுத்துக் கொண்டவனுக்கு அதை எப்படி செயல்படுத்துவது என்பது புரியாது நிலை. யாரிடம் கேட்பது என யோசித்துக் கொண்டிருக்கும்போது மருத்துவரான தன் அன்னையின் நினைவும் அவர் ஒருமுறை இதைப் பற்றித் தன்னிடம் பேசியதும் ஒரு கட்டுரையை அனுப்பி வாசிக்குமாறு கூறியதும் தான் அதை வாசித்துப் பாதியோடு நிறுத்தியதும் நினைவில் பளிச்சிட்டது. நேற்று இரவு இந்த ஞாபகம் வந்தது தான் ஆனால் அப்போது இருந்த அதிர்வில் அனைத்தும் மறந்திருந்தது. அன்னை அனுப்பி இருந்த கட்டுரையை வேகமாக எடுத்தவன் பொறுமையாக வாசிக்க ஆரம்பித்தான்.

படிக்கப் படிக்கப் பல விஷயங்கள் அவனுக்குப் புரிந்தது… ஆணைப் போல் பெண்களுக்கு உணர்வுகள் ஆரம்பமாகி உச்சம் அடைவதற்கு காலதாமதம் ஆகும். என்பதே அவனுக்குப் புதிதாக இருந்தது. முதலில் அவள் உடல் வலிகளைச் சமன் செய்து, பின்பே இன்ப உணர்வுகளுக்குச் செல்லும் என்பதும் அதற்கான கால நேரத்தை ஒரு ஆண் கட்டாயமாகப் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டும் என்பதும் படிக்க, படிக்க அவனுக்கு வியப்பாக இருந்தது.

என்றேனும் இப்படித் தான் யோசித்து இருக்கிறோமா என்று நினைத்துப் பார்த்தவனுக்கு இல்லை என்ற பதிலே பெரிதாக முகத்தில் அறைந்தது. படிப்பதை நிறுத்தி விட்டுச் சற்று நேரம் அமைதியாக அமர்ந்தான். இன்னும் காலம் தங்களுக்கு நீண்டு இருக்கிறது. இப்போதாவது தெரிய வந்ததேயென நினைத்தவன் கட்டாயமாக இனிவரும் காலங்களில் தான் மட்டும் இன்பத்தைச் சுவைக்காமல் தன் மனைவிக்கும் அது சம அளவில் கிடைத்திருக்கிறதா என்பதில் கவனம் கொள்ள வேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டான். அதற்கான வழிமுறைகளைத் தேடி மறுபடியும் படிக்க ஆரம்பித்தான்.

படித்தவனுக்கு பல விஷயங்கள் நன்றாகப் புரிய ஆரம்பித்தது விளக்கங்களும் கிடைத்தது. கலவி மட்டுமே ஒரு பெண்ணுக்கு இன்பத்தைக் கொடுத்து விடாது என்பதும் அதற்குப் பின்னான ஆணின் அணுகுமுறையை வேறு விதமாக எதிர்பார்ப்பாள் அது சிறியதான ஒரு அணைப்பாகவோ அல்லது நெற்றியிலோ கண்களிலோ இடும் முத்தமாகவும் இருக்கலாம். அப்படித் தான் நடந்திருக்கிறோமா என்று படிப்பதை நிறுத்திவிட்டு யோசித்தவன் தனக்கு, முழு திருப்தி கிடைக்கும் நாட்களில் சந்தோஷ் ஆர்ப்பரிப்பில் அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டது ஞாபகத்திற்கு வந்தது.
‘ஹ்ம்ம்ம் அதையாவது ஒரு சில நாள் செஞ்சிருக்கோம்.’ எனத் தனக்குள்ளாகவே நினைத்துக் கொண்டான்.

அடுத்து வந்த நாட்கள் சற்று அமைதியாகவே கழிந்தது. உளவியல் ஆய்வு கட்டுரைகளைப் படித்துù நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டான். மருத்துவ புத்தகம் சைக்கலாஜிக்கல் புத்தகம் என்று எதையும் விட்டு வைக்காமல் சிறு சிறு விஷயங்களைத் தேடி சேகரித்து படிக்க ஆரம்பித்தான். தன்னை மேம்படுத்திக் கொள்வதற்கு. தன்னையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள என்னென்ன உட்கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்து, அதற்கேற்றார் போல் உணவு பழக்கங்களையும் மாற்றிச் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தான்.
அடுத்த முறை மனைவியை நாடும்போது தனக்கு மட்டுமல்லாமல் அவளுக்கும் சந்தோஷமும் நிம்மதியும் கிடைக்க வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டான். ஏட்டுக் கல்வியாகப் படித்து நன்கு தெரிந்து கொண்டதை செயல் முறையில் தெரிந்து கொள்ள ஆவலாகக் காத்திருக்க ஆரம்பித்தான்.

காத்திருந்த நாளும் வந்தது. மனைவி வரவிற்காகத் தங்களின் அறையில் காத்திருந்தாள் சஞ்சய். மகன் நன்றாக உறங்கி இருக்க, இருவருக்கும் நடுவில் எப்போதும் படுக்கும் மகனை இந்த முறை சுவர் ஓரமாகப் படுக்க வைத்துவிட்டு நிமிர உள்ளே வந்த வசுந்தரா.

“என்ன அந்தப் பக்கமா உருண்டு போயிட்டானா.?” எனக் கேட்டபடியே வர.
“அவன் உருண்டு போகல. நான் தான் அவனைத் தள்ளிப் படுக்க வச்சேன்.” என்றான் சஞ்சய். கணவனின் பதிலில் நெற்றியை சுருக்கியபடி அவனைப் பார்க்க.
“ரொம்ப யோசிக்காதடி. இங்கே வா.” என்று தன் அருகே தட்டிக் காட்ட ஒன்றும் பேசாமல் அவளும் அவன் அருகில் வந்து அமர்ந்தாள். அவள் கை விரல்களை மெதுவாக நீவியபடி, அவள் முகத்தைப் பார்த்தவன்,

“இன்னைக்கு உனக்கு ஓகேவா.?” எனக் கேட்டான்.
“என்ன புதுசா.?” என்றாள் அவளும்.
“இனிமே எல்லாம் அப்படித்தான்.” என்றவனின் பதிலில், மனம் மகிழ்ச்சியுற அவனையே பார்த்திருந்தாள் பெண்.
“மௌனத்தையே சம்மதமா எடுத்துக்கவா.?” என்று கேட்டதற்கும் அவள் மௌனத்தையே பதிலாகக் கொடுக்க அதையே சம்மதமாக எடுத்துக்கொண்டு ஆரம்பித்தான்.

படித்ததையும் புரிந்ததையும் நினைவில் கொண்டு. மென்மையாகவே கையாண்டான் மனைவியை. கணவன் தனக்காக மெனக்கெடுவது புரிந்தே இருந்தது பெண் அவளுக்கு. அதுவே அவளுக்குப் பெரும் மகிழ்வை கொடுக்க, அவன் கொடுப்பதை ஏற்றுக் கொள்ள அவள் மனமும், மேனியும் தயாரானது.அன்று இல்லறம் மிக நல்லறமாக இருவருக்கும் சமமான மகிழ்வுடனும் திருப்தியுடனும் வெகுசிறப்பாக முடிந்தது.

கூடல் முடிந்து சில நிமிட ஆசுவாசத்திற்கு பிறகு தன் கைவளைவுக்குள் அவளை இழுத்துக் கொண்டவன். தன் மனதில் உள்ளவற்றை கூற ஆரம்பித்தான்,
“உன்னை வேண்டி விரும்பிக் கல்யாணம் பண்ணினேன் டி. நீதான் வேணும்னு. உனக்குத் தெரியாமலே உன்னைச் சைட் அடிச்சு, அதுக்கு மேல தாங்க முடியாதுன்னு உன்னையும் என்னைப் பாக்க வச்சு. ஆனாலும் அங்க இருந்து எந்த ரியாக்ஷனும் வரல அது வேற கதை… ” எனச் சிரிப்புடன் கூற. அதில் வெட்கம் வர லேசாக அவன் கைகளில் கிள்ளி வைத்தாள்.

“என்னடி அடிக்கிற.”
“இனிமே அப்படித்தான்.” என்றாள் இவளும் சிரிப்புடன். அவள் சிரிப்பில் அவளை ரசித்துப் பார்த்தவன். மெதுவான குரலில்,
“உயிர் வாங்கிடும் மோகினி நீயடி.”என்று மென் குரலில் பாடியபடி அவள் நுனி மூக்கில் முத்தமிட,
“உயிர் வாங்கிடும் ஓவியம் தான.? நீங்க என்ன மாத்தி பாடுறிங்க.” எனத் தன் சந்தேகத்தைக் கேட்க.
“முதல் முதலில் உன்னைப் பார்க்கும்போது, அப்பா.! யாருடா இது மோகினி மாதிரி இவ்வளவு பெரிய முடியோட. அப்படின்னு தான் நினைச்சேன்.”என்றான் புன்னகையை அடக்கிய குரலில்…
“மோகினி யா.?”என்று சிணுங்கியவள். பின்பு நியாபகம் வந்தவளாக.
“ஆமா, ஆமா கல்யாணம் ஆன இரண்டாவது நாளே சொன்னீங்களே. வசுமதியை கூடக் கலாய்ச்சி விட்டீங்களே. ஞாபகம் இருக்கு.”என்றாள் சிரிப்புடன்.
“அழகான மோகினி டி. நீ.எனக்கே எனக்கான மோகினி. உயிர் வாங்கிடும் மோகினி.”

“ம்ம்ம்.”என்று மேலும் அவள் சினுங்க,
“உனக்குப் புரியலையா.? என் உயிர் வாங்கிடும் மோகினி நீ. அதாவது என் உயிரை உன் கிட்ட தானே நான் கொடுக்கிறேன். என்ன இன்னும் புரியலையா.? இதோ ஏழு வயசுல பக்கத்துல படுத்து இருக்கே ஒரு குட்டி உருவம். அது நான் கொடுத்த உயிர் தானே. அதுதான் உயிர் வாங்கிடும் மோகினி நீ.”என்றவாறு அவன் சத்தமிட்டு சிரிக்க.
“அய்ய.! சீய்.” என்றாள் அவளும் வெட்கத்தில் சிவந்துவிட்ட முகத்துடன்.

“இன்னொரு உயிர வாங்கிக்க ரெடியா.?” என்று அவள் காது மடலில் முத்தமிட்டு கேட்க. ரெடியெனச் சம்மதமாகத் தலையசைத்தாள் அவளும்.
“சூப்பர்.! ஆனா அது கொஞ்சம் லாங் பிராசஸ். இப்பதானே வேலையில் சேர்ந்து இருக்கே ஒரு ரெண்டு வருஷம் போகட்டும். அதுக்கப்புறம் இன்னொரு உயிர கொடுக்கிறதுல நானும் களத்தில் இறங்குறேன்.நீயும் வாங்கிக்க களத்துல இறங்கு சரியா.”எனக் கேட்க அதற்கும் வெட்கத்துடன் சம்மதித்தாள் அவள்.

“சரி நாம மீதமுள்ள கதையை முடிப்போம். எதுல விட்டேன். ஹான்.!நான் பார்த்தேன். ஆனா நீ என்னைக் கண்டுக்கவே இல்ல.சரிதான் இது வேலைக்காகாதுன்னு என் மனசுல இருக்கிறத அம்மா கிட்ட சொல்லி, அது அப்பாட்ட போய், அப்புறம் உங்க அப்பா கிட்ட போயி, நீ என் கைச்சேர்ந்திருக்க. அப்ப நான் உன்னை எப்படி பார்த்துக்கணும்.? நீ என்கிட்ட வந்தவுடனே நான் ரிலாக்ஸ் ஆகிவிட்டேன் போல. இனி அப்படி இருக்காது.” என்று அவன் சற்று சங்கடமான குரலில் கூற,
அவன் குரல் பேதத்தில், அவனைச் சமாதானம் செய்யும் நோக்கத்துடன் இவள் பேச ஆரம்பித்தாள் தெளிவாக.

“நீங்க என்னைப் பாத்துக்கவே இல்லைன்னு முழுசா சொல்லிட முடியாதே. நீங்க என்னை விரும்பிக் கல்யாணம் பண்ணதுக்கு மதிப்பு கொடுத்து என்னை நல்லாவே பார்த்துக்கிட்டீங்க. என்னை ரொம்ப ரொம்ப கண்ணியமா மரியாதையோட இதுவரைக்கும் நடத்தி இருக்கீங்க. நான் ஆசைப்பட்டதை வாங்கி கொடுத்திருக்கீங்க. எனக்குத் தன்னம்பிக்கை கொடுத்துப் படிக்க வச்சீங்க. வேலைக்குப் போறதுக்கு அனுமதிச்சீங்க. ஒரு அழகான குடும்பம் கொடுத்தீங்க. என் மேல ரொம்ப ரொம்ப பாசம் வைத்திருக்கிற மாமியாரை கொடுத்தீங்க. மாமனாரை கொடுத்தீங்க. எனக்கே எனக்குன்னு ஒரு குழந்தை. என் பையன், அவனைக் கொடுத்தீங்க. இதெல்லாம் தான் அதிகபட்ச சந்தோஷம். அந்தச் சந்தோஷத்தை எனக்குக் கொடுத்து இருக்கீங்க. இதோ இப்போ என் உணர்வுகளைப் புரிஞ்சுகிட்டு உங்களையே அதுக்காக மாத்திக்க முயற்சி பண்றீங்க. என் சந்தோஷத்தை உங்க சந்தோஷமா நினைக்கிறீங்க. என்னுடைய கேரியரை கவனத்தில் கொண்டு அடுத்த குழந்தை இப்போ வேணாம்னு முடிவு எடுக்குறீங்க. இதைவிட எனக்கு வேற என்ன வேணும். நெஜமாவே சொல்றேன் நான் ரொம்ப ரொம்ப லக்கி.” என்றவள் அவளாகவே முதன்முறையாக அவனை இறுக்கி அணைத்துக் கொள்ள. அதில் ஆச்சரியமுற்றவன் அவள் அணைப்பில் அடங்கி நிம்மதியுடன் அவனும் அவளை அணைத்து கொண்டான்.

சிறிது நேரத்திற்கு பிறகு,
“என்னால என்னுடைய குடும்பத்தையும் கெரியரையும் ஒன்றாகக் கையாள முடியும். ஏற்கனவே வருணனுக்கு ஏழு வயசு ஆகிடுச்சு. இதுக்கு மேல காலதாமதம் செய்ய வேண்டாம். நீங்க வேற அப்பவே மூணு நாலு குழந்தை வேணும்னு கேட்டீங்க. முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும்மே நாம நிறைய கேப் விட்டுட்டோம். இன்னும் இரண்டு வேற பாக்கி இருக்கு. அதுக்கு கேப் விடாமல் அடுத்தடுத்து பெற்றுக்கொள்ளலாம். குழந்தையைச் சுமக்கிறதோட என் கெரியரையும் கரெக்ட்டா கொண்டு போவேன். அதனால அடுத்த குழந்தைக்கான ப்ராசசை தாமதிக்காம இப்பவே ஆரம்பிச்சிடலாம்.”என்றாள் வெட்கத்தை அடக்கிய குரலில்.

“அப்படியா சொல்ற.? நீ சொன்னதுக்கு அப்புறம் அதுக்கு அப்பிலே கிடையாது. ஆனா நாலு வேண்டாம். மூணு போதும்.”என்றவன் காரியத்தில் கண்ணாக… அவன் ஆசைப்படி இரண்டு ஆண் ஒரு பெண் என அவர்களின் குடும்பம் முழுமை பெற்றது.

பெண்ணின் உணர்வுகளைப் புரிந்து கொண்டான் சஞ்சய். இதுவே எப்போதும் தொடரும் என்ற நம்பிக்கையுடன் அவர்களின் மகிழ்வில் நாமும் இன்புற்று விடைபெறுவோம்.

பெற்று அன்னையும் உடன் பிறந்த சகோதரிகளும் நிறம் கொண்டு அவளை ஒதுக்கி வைக்க. தனக்கென வரும் ஆண் மகன் தன்னை புரிந்து கொள்வான் என்ற இவளின் நம்பிக்கை வீண் போகவில்லை. பேசத் தயங்கி ஒரு கூட்டிற்குள் அடங்கி இருந்தவள். இன்று தனக்கு ஒன்று வேண்டும். ஆணுக்கு நிகரான இன்பம் பெண்ணுக்கும் கிட்ட வேண்டும் என்று கேட்கும் அளவுக்குத் துணிச்சலோடு தன் வாழ்வை வளமாக்கி கொண்டாள். மகிழ்வுடன்.

ஒரு ஆணுக்குக் கிடைக்கும் இன்பம் சம அளவில் பெண்ணுக்கும் கிடைக்க வேண்டும். அச்சம், மடம், நாணம் என்று பெண்கள் தங்கள் உணர்வுகளை மறைத்துக் கொண்டு இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் இவ்வுலகில். நெடு வருடங்கள் சேர்ந்து வாழும் கணவனிடம் கூட இதையெல்லாம் வெளிப்படையாகக் கேட்கக் கூச்சம் கொண்டு தயங்கும் பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் பெண்ணுக்கும் இவை அனைத்தையும் அனுபவித்து உணரும் சுதந்திரம் இருக்கிறது இந்த ஒற்றை வாழ்வில். இதைப் பற்றித் தயங்காமல் தன் கணவனிடம் பேசும் தைரியமும், துணிவும் இனிவரும் பெண்களுக்கு வரும் என்ற நம்பிக்கையுடன். நான்.

சுபம்

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்