Loading

நிறம் 3

 

“என்ன அகில், இன்ஃபார்மேஷன் எல்லாம் கலெக்ட் பண்ணியாச்சா?” என்றவாறே உள்ளே நுழைந்தான் ஷ்யாம்.

 

அவன் அங்கிருந்து போகும் போது இருவரும் எப்படி இருந்தனரோ, அப்படியே இருந்தனர் இப்போதும். வர்ஷினி கட்டிலில் சாய்ந்தவாறு இருக்க, அகில் அவளின் கட்டில் அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்து அவன் குறிப்பேட்டில் எதையோ நோக்கிக் கொண்டிருந்தான்.

 

ஷ்யாம் வருவதைக் கண்ட அகில் தான் குறித்திருந்ததை அவனிடம் கொடுத்து, “சார், இந்தர், ஐ மீன் இந்திரஜித், பெங்களூருல ‘டெக்னோவே’ங்கிற ஐ.டி கம்பெனில வேலை செஞ்சுட்டு இருக்காரு. அவருக்கு அப்பா, அம்மா இல்ல. சென்னைல ஒரு ஆஸ்ரமத்துல தான் வளர்ந்துருக்காரு. இப்போ வேலைக்காக எலெக்ட்ரானிக் சிட்டில தங்கியிருக்காரு.” என்று தன் கற்பனையை ஷ்யாமிடம் கொட்டினான், அவன் நம்புவானா என்ற தயக்கத்துடனே!

 

ஷ்யாமோ முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாமல், “இப்போ இவங்க சொன்ன எல்லா டிடெயில்ஸும் செக் பண்ணுங்க. பெங்களூருல இருக்க அவரோட வீடு, ஆஃபிஸ் ரெண்டு இடத்துலயும் விசாரிக்க சொல்லுங்க.” என்று அவனை வெளியே அனுப்பினான்.

 

‘நானே சும்மா என் பிரெண்டு பெங்களூருல வேலை பார்க்குறேன்னு சொன்னதை  வச்சு அடிச்சு விட்டுருக்கேன். இப்போ அவன் வீடு, ஆஃபிஸ்ன்னு விசாரிக்க சொன்னா, என்ன பண்ணுவேன்? இந்த குட்டிச்சாத்தானை காப்பாத்த போய், நான் மாட்டிப்பேன் போலயே!’ என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டே வெளியேறினான் அகில்.

 

இங்கு வர்ஷினியின் நிலையும் அதே தான். ஷ்யாம் கூறியதைக் கேட்டவளிற்கு உள்ளுக்குள் பயம் தோன்றினாலும் வெளியே அதைக் காட்டிக்கொள்ளாமல் சமாளித்தாள்.

 

அவளின் நியாயமான மனசாட்சியோ, ‘உன்னால எத்தனை பேர் பாதிக்கப்படுறாங்க?” என்று எடுத்துக்கூற, அதற்கு மறுமொழி அளிப்பதற்குள், அங்கு மனதோடு நடந்து கொண்டிருந்த உரையாடலை தடுப்பது போல, லேசாக செருமியவாறே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான் ஷ்யாம்.

 

அகில் கொடுத்துவிட்டு சென்ற குறிப்பேட்டிலேயே பார்வை பதித்திருந்தவன், “ஹ்ம்ம், மிஸ். ஷீதல் சிங்… ரைட்?” என்று கேள்வியாக நிறுத்தி புருவம் உயர்த்தி அவளைக் காண, அவன் பார்வையிலிருந்த ஏதோ ஒன்று அவளை உசுப்பியிருக்க வேண்டும்.

 

தீவிரமான முகத்துடன், “நோ, இட்ஸ் ஜஸ்ட் ஷீதல்.” என்றாள் கடினமான குரலில்.

 

“ஓஹ், உங்களுக்கு உங்க அப்பா மிஸ்டர். விக்ரம் சிங்கை பிடிக்காதுல? ஹுஹும், அப்பறம் ஷீதல், உங்க அப்பாவோட ஹிஸ்டரி பத்தி உங்களுக்கு தெரியுமா?” என்று அவன் வினவ, இம்முறை அவனின் நக்கல் அவன் குரலில் நன்கு வெளிப்பட்டது.

 

‘இவனுக்கு என்ன பெரிய ஜேம்ஸ் பாண்ட்னு நினைப்பா?’ என்று உள்ளுக்குள் புழுங்கினாலும், வெளியே சாதாரண குரலில், “அவரோட வரலாறு தெரிஞ்சு வச்சுக்குற அளவுக்கு அவர் ஒன்னும் ஹீரோ இல்ல.” என்றாள்.

 

“ஓஹ், ஐ சீ. அப்போ உங்க அப்பா தமிழ்நாட்டுல பிறந்து வளர்ந்தவர்னு கூட தெரியாதா, மிஸ். ஷீதல்?” என்று அவளை விடாமல் கேள்விகளால் தாக்க ஆரம்பித்தான்.

 

‘ஓஹோ, போட்டு வாங்குறாராமா! நல்ல வேளை, அகில் அண்ணா கிட்ட அந்த ஆளோட வரலாறை தெரிஞ்சுகிட்டோம்.’ என்று மானசீகமாக பெருமூச்சை வெளியிட்டவள், “ம்ம்ம் தெரியும். அவரோட இருபத்தி ஏழாவது வயசுல தான், மும்பைல செட்டில் ஆனாருன்னு அம்மா சொல்லியிருக்காங்க. அது மட்டுமில்லாம, இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னீங்களே, விக்ரம் சிங்ன்னு… அது கூட அவரோட நிஜப்பெயர் இல்லன்னும் தெரியும். இன்னும் வேற எந்த கேள்விக்காவது பதில் தெரியனுமா?” என்றாள் வர்ஷினி, எரிச்சலை பெரும்பாடுபட்டு குரலில் காட்டாதவாறு.

 

என்ன தான் எரிச்சலை மறைக்க வேண்டும் என்று அவள் நினைத்தாலும், அவளின் குரல் அதற்கு ஒத்துழைப்பு தர மறுக்க, அந்த காவலன் அதை நொடியில் கண்டுகொண்டான். இருப்பினும் அவளை சீண்டவே, மீண்டும் கேள்விக் கணைகளை தொடுக்க ஆரம்பித்தான்.

 

“ஹ்ம்ம், உங்க அம்மா மராத்தி ரைட்?” என்று மீண்டும் கேள்வியாக அவளை நோக்க, ‘ஐயோ கடவுளே, இவனுக்கு வேற எந்த வேலையும் கிடையாதா? ஒரு பேச்சுக்கு கேள்வி இருக்கான்னு கேட்டா, நான்-ஸ்டாப்பா கேட்டுட்டே இருக்கானே.  நானும் இப்போ நகருவான், அப்பறம் நகருவான்னு பார்த்துட்டே இருக்கேன், இடத்தை விட்டு அசைவேனான்னு இருக்கான். அச்சோ, அந்த அம்மா பத்தி எனக்கு தெரியாதே. இந்த அகில் அண்ணாவும் இப்படி ஒரு கொஸ்டின் கேட்பாங்கன்னு சொல்லல. இப்படி அவுட்- ஆஃப்-சிலபஸ்ல கேட்டா நான் என்ன பண்றது. யாருக்குமே தெரியாதது இவனுக்கு மட்டும் எப்படி தெரியுமோ? இல்ல மறுபடியும் போட்டு வாங்க முயற்சிக்கிறானோ? அந்த ஆள் இருக்குறது மும்பை, அப்போ அந்த அம்மா மராத்தியா இருக்க நிறைய சான்ஸ் இருக்கு. ஹ்ம்ம், சும்மா சொல்லி விடுவோம்.’ என்று நீண்ட பெரிய விவாதத்திற்குப் பின் ஒரு மனதாக பதில் கூற முடிவெடுத்து நிமிர்ந்து பார்க்க, ஷ்யாமோ அவளைத் தான் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“என்ன சொல்லணும்னு யோசிச்சாச்சா?” என்று கேட்க,  அவன் குரலிலிருந்தது, கோபமா, கேலியா, எச்சரிக்கையா என்று பிரித்தறிய முடியாத வண்ணம் இருந்தது.

 

“மராத்தி தான்.” என்றாள்.

 

“அப்போ நீங்க இவ்வளவு நல்லா தமிழ் பேசுறீங்களே. அப்பறம் நீங்க சென்னைல தான் ரொம்ப நாளா இருக்கீங்களோ?” என்றான் ஷ்யாம்.

 

ஒரு பெருமூச்சுடன், “சார், இப்போ உங்களுக்கு என்ன சந்தேகம்? நான் உண்மையிலேயே அந்த ஆளோட பொண்ணு தானான்னு தான?” என்று சத்தமாக கேட்டவள், “இதுக்கு தான் அவரோட பொண்ணுன்னு எங்கயும் வெளிய சொல்லிக்கிறது இல்ல.” என்று முணுமுணுத்தாள்.

 

அப்போது அவளைக் காப்பதற்காகவே வந்தான் அகில். “சார், ஐ.ஜி உங்களுக்கு கால் பண்ணாராம். ஆனா, நீங்க பிக் பண்ணலைன்னு எனக்கு கூப்பிட்டு சொன்னாரு.” என்று கூறியதும், எதுவும் பேசாமல், ஷீதலை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியே சென்று விட்டான்.

 

“எப்பா கிரேட் எஸ்கேப்பு! உன் சீனியர் ரொம்ப தான் போலீஸா இருக்காரு ண்ணா. உங்ககிட்ட மாட்டிக்கிட்ட அக்யூஸ்ட்டெல்லாம் ரொம்ப பாவம்.” என்று சலிப்பாக கூற, அகிலோ, “என்னாச்சு வர்ஷு? சாருக்கு ஏதாவது சந்தேகம் வந்துடுச்சா?” என்றான்.

 

“ம்ம்ம், அப்படி தான் நினைக்கிறேன். தோண்டித் துருவி, கேள்வியா கேட்டுட்டு இருந்தாரு.” என்றவள், ஷ்யாம் கேட்ட கேள்விகளை அகிலிடம் கூறினாள்.

 

“ண்ணா, அந்த அம்மா மராத்தி தான?” என்று சற்றே ஆர்வத்துடன் வினவ, “யாருக்கு தெரியும்? அந்த விக்ரம் தான் அவனோட குடும்பத்தை வெளிய காட்டுனதே இல்லையே. சாருக்கும் தெரிஞ்சுருக்க வாய்ப்பில்லை. சும்மா உன்கிட்ட போட்டு வாங்க முயற்சி பண்ணியிருக்கலாம்.” என்றான் அகில்.

 

“ண்ணா, நம்ம புதுசா உருவாக்குனோமே என் லவர், அவனைப் பத்தின டிடெயில்ஸ் கிடைச்சுதா?” என்று கண்ணடித்து வினவ, “உனக்கென்னமா, இதோ நல்லா படுத்துட்டே கதை சொல்லிட்டு இருக்க. அதை உண்மையாக்குறதுக்கு நான் தான் படாதபாடு பட வேண்டியதா இருக்கு.” என்று தலையிலடித்துக் கொண்டான்.

 

“சரி சரி, ரொம்ப சலிச்சுக்காத. என்னாச்சு?” என்றாள் விளையாட்டை கைவிட்டவளாக.

 

“விக்ரமோட வலது கை அந்த பிரதீப் கிட்ட சொல்லியிருக்கேன். அவனே எல்லாத்தையும் பார்த்துக்குறேன்னு சொல்லியிருக்கான். அநேகமா, இன்னும் கொஞ்ச நேரத்துல உன் லவர் வந்துடுவான்.” என்று அவனும் சற்று விளையாட்டாகவே கூறினான்.

 

“எது, அந்த மலமாடு கிட்டயா சொல்லியிருக்க? சரியான பொறுக்கி! எப்போ பார்த்தாலும் உத்து உத்து பார்த்துகிட்டு…” என்று பல நல்ல வார்த்தைகளால் அந்த ‘மலமாடு’ பிரதீப்பை அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள்.

 

சில நொடிகளுக்குப் பின்னர், “ம்ம்ம், சரி வேற ஏதாவது இன்ஃபார்மேஷன் இருந்தா சொல்லு. உன் சாரை நம்ப முடியாது. வந்ததும், ‘உங்க அப்பா சின்ன வயசுல என்ன பண்ணாரு’ன்னு கேட்க ஆரம்பிச்சுடுவாரு.” என்றாள் சலிப்பாக.

 

“அந்த விக்ரம் பத்தி நிறைய டிடெயில்ஸ் இருக்கு. ஆனா, அதுல எது சரி, எது தப்புன்னு யாருக்கும் தெரியாது. சும்மா இவங்களே இஷ்டத்துக்கு பரப்பி விட்டுருக்கானுங்க.” என்று அகில் கூற, “சூப்பர் சூப்பர், எல்லாத்தையும் சொல்லு, ‘சூஸ் தி பெஸ்ட்’ மாதிரி எது எனக்கு பிடிச்சுருக்கோ, அதை லாக் பண்ணிக்கலாம்.” என்றாள் கதை கேட்கும் ஆர்வத்துடன்.

 

அகிலோ, ‘இங்க என்ன பிரச்ச்சனை போயிட்டு இருக்கு. இந்த ரணகளத்துலயும் இவ மட்டும் குதூகலமா இருக்கா.’ என்று நினைத்துக் கொண்டான்.

 

“விக்ரமுக்கு மதுரை பக்கத்துல இருக்க ஒரு கிராமம் தான் சொந்த ஊர். சின்ன வயசுலேயே ஒழுங்கா படிக்காம, சின்ன சின்ன திருட்டு, சும்மா இருக்குறவங்களை வம்பிழுத்து சண்டை போடுறதுன்னு ‘ரவுடி-இன்-மேக்கிங்’கா தான் சுத்திட்டு இருந்துருக்கான். வளர்ந்ததுக்கு அப்பறம், ஊர்ல ஏதோ பிரச்சனை ஆகி, ஊர் மொத்தமும் இவனை ஒதுக்கி வச்சுருக்காங்க. அங்கயிருந்து  கிளம்புனவன், நேரா போனது மும்பைக்கு தான். அங்க தான் நிர்மல்…” என்று மூச்சே விடாமல் விக்ரமை பற்றிய தகவல்களை சொல்லிக் கொண்டிருந்த அகிலை இடைவெட்டியவள், “இதுக்கு அப்பறம் தான் எனக்கே தெரியுமே. அந்த நிர்மல் கூட கூட்டு வச்சுக்கிட்டு மும்பையவே கன்ட்ரோலுக்கு கொண்டு வந்த வறட்சியான கதையெல்லாம் எனக்கு வேணாம். வேற ஏதாவது நல்ல கதை ப்ளீஸ்.” என்றாள் கண்களை சுருக்கி.

 

“ஓய் என்னை என்ன கதை சொல்ற பாட்டியா நினைச்சுட்டு இருக்கியா? இந்த கதை நல்லா இல்ல, வேற கதை சொல்லுன்னு சொல்லிட்டு இருக்க. சீரியஸ்னெஸ் தெரியாம ரொம்ப அசால்ட்டா இருக்க வர்ஷு. நானே உன்னை எப்படி இங்க இருந்து காப்பாத்துறதுன்னு யோசிச்சுட்டு இருக்கேன்! நீ வேற…” என்று அகில் பதற்றமாகி கத்த அது எல்லாம் அவளின் தன்மையை சிறிதும் மாற்றவில்லை.

 

அருகிலிருந்த தண்ணீர் குவளையை எக்கி எடுத்தவள், அவனிடம் நீட்டி, “பாரு ரொம்ப மூச்சு வாங்குது. இதுக்கு தான் இப்படி ரொம்ப பேசக்கூடாதுன்னு சொல்றது.” என்று இலகுவாக கூற, அகிலோ அவளை முறைத்தபடி அதை வாங்காமல் இருந்தான்.

 

“அட வாங்குண்ணா.” என்று வலுக்கட்டாயமாக அவனிடம் குவளையை திணித்தவள், “ண்ணா நீ ஏன் இவ்ளோ சீரியஸா எடுத்துக்குற? எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியவங்களே அதைப் பத்தி கவலைப்படல. நீ தான் பெருசா ஃபீல் பண்ணிட்டு இருக்க. மாட்டாதவரை ஜாலியா இருப்போம், மாட்டிக்கிட்டா முடிஞ்சவரை சமாளிப்போம், இல்லைனா தண்டனையை ஏத்துப்போம். அவ்ளோ தான்! இதுக்கு போய் அரை பக்கத்துக்கு மூச்சு விடாம பேசி, அரை கிளாஸ் தண்ணீரை காலி பண்ணி… தேவையா இது?” என்று கடினமாக ஆரம்பித்து அதையும் இலகுவாக முடித்தாள்.

 

“உன்மேல மத்தவங்களுக்கு அக்கறை இல்லாம இருக்கலாம், அதுக்குன்னு என்னையும் அப்படியே நினைச்சுக்கிட்டியா? நான்…” என்று ஏதோ கோபமாக சொல்லிக் கொண்டிருகும்போதே, கதவு திறக்கும் சப்தம் கேட்க, சொல்ல வந்ததை சொல்லாமல் விட்டுவிட்டான்.

 

ஷ்யாமாக தான் இருக்கும் என்று நினைத்த அகில் தன்னை மீறி முகத்தில் எவ்வித உணர்வையும் காட்டிவிடக்கூடாது என்பதற்காக தன்னை சமன்படுத்திக் கொண்டே வாயில் புறம் திரும்பினான்.

 

பல வருடங்களாக பொய்த்துப் போனதாக நம்பிய வர்ஷினியின் கண்ணீர் சுரப்பிகள் சரியாக இரு துளிகளை கண்ணோரத்தில் வழியவிட்டு அவற்றின் இருப்பை உணர்த்தின. அப்படி வழிந்த கண்ணீரை துடைத்தவாறே வாயிலை நோக்க, அங்கு ஷ்யாமுடன் காவல்துறை தலைவர் வந்து கொண்டிருந்தார்.

 

உள்ளே வந்தவர், தன்னை குணசேகரன், ஐ.ஜி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

 

வர்ஷினியின் கண்ணீரைப் பார்த்தவர், “என்னாச்சு?” என்று வர்ஷினியையும் அகிலையும் மாறி மாறிப் பார்த்தார்.

 

அதில் சுதாரித்த அகில், “சார், இந்தரஜித் பத்தி விசாரிச்சுட்டு இருந்தேன்…” என்று இழுக்க, அவரோ அதை புரிந்து கொண்டவர் போல, “உங்க காதலனை கண்டுபிடிச்சுடலாம் மிஸ். ஷீதல்.” என்றார்.

 

அதற்கு நேர்மாறாக ஷ்யாமோ, வெளிப்படையாகவே அகிலை சந்தேகப் பார்வை பார்த்தான். அதை அகிலும் கண்டுகொள்ளத்தான் செய்தான். இருப்பினும் அவனிற்கு வேறு வழியில்லையே. அவனால் தற்போது முடிந்த ஒரே செயல், ஷ்யாமைக் காணாமல் தவிர்ப்பது.

 

“மிஸ். ஷீதல், இந்த சூழ்நிலைல உங்களை தொந்தரவு செய்யக் கூடாது தான், இருந்தாலும் எங்களுக்கு வேற வழியில்ல.” என்று ஆரம்பித்தார் குணசேகரன்.

 

‘இவரு எதுக்கு இப்படி பம்முறாரு?’ – இது தான் அங்கிருக்கும்  மூவருக்குக்குமே தோன்றியது, வார்த்தைகளின் வடிவம் மட்டுமே வெவ்வேறாக.

 

வர்ஷினியின் அமைதியைக் கண்டவர் அவரே தொடர்ந்தார். “உங்க அப்பா, விக்ரம் பத்தி உங்களுக்கு தெரிஞ்ச எந்த தகவலையும், அது எவ்ளோ சின்ன தகவலா இருந்தாலும், எங்க கிட்ட சொல்லுங்க ப்ளீஸ். நீங்க தான் சமீபத்துல அவரைப் பார்த்துருக்கீங்க. அதனால தான் உங்க உதவி எங்களுக்கு ரொம்ப அவசியமாகுது.” என்று கூற, வர்ஷினிக்கோ அதை எப்படி கையாள்வது என்றே தெரியவில்லை.

 

ஏற்கனவே, அகில் பேசியதில் பழையவை எல்லாம் மனதின் அடியாழத்திலிருந்து வெளிவந்திருக்க, அவை அவளிற்கு ஒருவித எரிச்சலையே தந்திருந்தது. அந்த எரிச்சலில், இவர்களின் ஓயாத விசாரணையும் சேர்ந்து கொள்ள, அவளிடம் தோன்றும் அபூர்வமான உணர்ச்சிகளில் இரண்டாவதையும் வெளிப்படுத்தியிருந்தாள்.

 

“சார், ப்ளீஸ்… நானே என்னோட இந்தரைக் காணோம்னு டென்ஷன்ல இருக்கேன். இதுல எனக்கு சம்பந்தமே இல்லாத விஷயத்தை பத்தி பேசிட்டு இருக்கீங்க. எனக்கு அந்த ஆளை பிடிக்கவே பிடிக்காதுன்னு சொல்லிட்டு இருக்கேன். திரும்ப திரும்ப, நான் தான் அவரை ஒளிச்சு வச்ச மாதிரி, என்கிட்ட விசாரிச்சுட்டு இருக்கீங்க. இப்போ சொல்றேன், எனக்கும் அந்த ஆளுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. அவரு எப்படி போனாலும் எனக்கு கவலையே இல்ல. அப்படியே அவரைப் பத்தி சின்ன க்ளூ கிடைச்சாலும், நானே உங்க கிட்ட அதை சொல்லி அந்த ஆளை உள்ள தள்ள உதவி செய்யுறேன். சோ ப்ளீஸ் இனி விக்ரம்னு பேரை சொல்லிக்கிட்டு என்னை விசாரிக்க வராதீங்க.” என்றாள்.

 

அவளின் பேச்சில் அங்கிருந்த அனைவரும் சற்று நேரத்திற்கு உறைந்து தான் போயினர். அவளை இங்கு சேர்த்ததிலிருந்து பார்த்ததற்கும், இப்போது பார்ப்பதற்கும் எளிதாகவே பல வித்தியாசங்களை சொல்லி விடலாம். அப்படி ஒரு எரிச்சலில் கத்தியிருந்தாள் வர்ஷினி. அவளை ஒரு வருடமாக தெரிந்து வைத்திருக்கும் அகிலுக்கே அவளின் இந்த முகம் புதிது தான் போல. அவனும் அல்லவா அதிர்ச்சியாக இருக்கிறான்!

 

வழக்கம் போல, முதலில் சுயத்தை அடைந்தது ஷ்யாம் தான். அவளின் பேச்சு, அதில் தெரிந்த எரிச்சல் எல்லாம் அவனிற்கு கோபத்தை கிளப்பியிருக்க, ஏற்கனவே அவளின் மேல் தோன்றிய சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்தது அவளின் இந்த தோற்றம்.

 

“ஹலோ, ஒரு ஹையர் ஆஃபிசியல் கிட்ட இப்படி தான் பேசுவாங்களா? லுக், நீங்க எங்களுக்கு கிடைச்சது குற்றவாளி புழங்குன இடத்துல. அப்போ உங்க மேலயும் சந்தேகம் இருக்கத்தான் செய்யும். நாங்க விசாரிக்க தான் செய்வோம். உங்களுக்கு அவரை பிடிக்கலைக்கிறதுகாக்காக எல்லாம் விசாரிக்காம இருக்க முடியாது. அண்டர்ஸ்டான்ட்?” என்றான் கடினமான குரலில்.

 

உள்ளுக்குள் பயம் தோன்றினாலும் அதை மறைத்தவள், “லுக் மிஸ்டர். ஷ்யாம், உங்க கடமை உங்களுக்கு பெருசுன்னா, எனக்கு என்னோட உடல்நிலைஅண்ட் மனநிலை பெருசு. என்னோட எதிர்காலமே இங்க கேள்விக்குறியா இருக்கும்போது என்னோட நிலையையும் கொஞ்சம் யோசிச்சு பார்ப்பீங்கன்னு நினைச்சேன்.” என்று விரக்தியாக சிரித்தவள், “அவங்கவங்களுக்கு அவங்க வேலை தான் முக்கியம் இல்ல? ரைட், என் இந்தரைக் காணோம்னு உங்ககிட்ட சொன்னேன். ஆனா, அதுக்காக நீங்க என்ன ஆக்ஷன் எடுத்தீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா? இதோ இவருக்கிட்ட (அகிலை சுட்டியபடி) பெயரளவுல சும்மா விசாரிக்க சொல்லிட்டு ‘உங்க’ விசாரணைக்கு தான முக்கியத்துவம் கொடுத்தீங்க. ஆனா, நான் மட்டும் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கணும். அப்படி தான?” என்று பேசியவள், மூச்சுக்காக பேச்சை நிறுத்தினாள்.

 

அதுவரையிலும், வர்ஷினி எப்படி சமாளிக்கப் போகிறாள் என்று பயந்து கொண்டிருந்த அகிலோ, வாய் பிளக்காத குறையாக நின்று கொண்டிருந்தான்.

 

‘இவரையே ஒரு செக்கண்ட் ஸ்டான்னாக வச்சுட்டாளே!’ என்று நினைத்தவன் நொடியில் தன் பாவனையை மாற்றிக் கொண்டான்.

 

அகில் நினைத்தது போலவே, ஷ்யாம் அவளின் பேச்சில் சற்று தடுமாறித் தான் போனான். அவள் கூறியதைப் போல, அவளின் காதலன் (!!!) இந்திரஜித் விஷயத்தில் அவன் அலட்சியமாகத் தான் நடந்து கொண்டான்.

 

எந்த ஒரு பொறுப்பை எடுத்துக் கொண்டாலும், அதைத் தனக்கு கீழிருப்பவர்களுக்கு பிரித்து கொடுத்ததும் கடமை முடிந்தது என்று எண்ணாமல், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கொடுக்கப்பட்ட வேலைகளில் அடைந்த முன்னேற்றத்தைப் பற்றி ஆலோசிப்பான். ஆனால், இம்முறை இந்திரஜித்தைப் பற்றி விசாரிக்க சொன்னானே ஒழிய, அதைப் பற்றி அவன் சிந்திக்கவேயில்லை. அதற்கு காரணம், வர்ஷினியின் மேலெழுந்த சந்தேகம்!

 

அந்த ஒரு நொடியில் இவையனைத்தையும் நினைத்துப் பார்த்தவன், தலையை குலுக்கிக் கொண்டான். ஆனாலும் அவள் கூறியதை ஒப்புக்கொள்ளதாவனாக, “அப்படி ஒருத்தர் இருந்தா தான விசாரிக்க முடியும்?” என்று கேலியாக அவளைப் பார்த்துக் கூற, அதற்கு வர்ஷினி ஏதோ கூற வரும் சமயம், “அப்படி ஒருத்தன் தான் இங்க இருக்கேனே.” என்ற குரல் வாயில் புறம் ஒலித்தது.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
8
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்