Loading

அத்தியாயம் 12

“சற்றும் எதிர்பார்க்கவில்லை நான், அவனின் இத்தகைய வார்த்தைகளை. அள்ளி வீசிவிட்டான். தனக்கே என்ன நடந்தது என்று தெரியாதபட்சத்தில் அவனின் வார்த்தைகள் இன்னும் என்னை குத்திவிட்டுத்தான் சென்றது.” இதற்கு மேல் இதழால் நாட்குறிப்பில் தொடர முடியவில்லை. அவளின் கண்ணீர் துளிகள் இரண்டு, அந்த தாளை நனைத்தது. கண்களை மூடி தன்னை சமன்செய்துக் கொண்டவள், மணியைப் பார்க்க அது மூன்றில் நின்றது. இன்னும் சற்று நேரத்தில் அனைவரும் பரப்பரப்பாகி விடுவர். மண்டபத்திற்கு அழைத்து சென்று அடுத்தக்கட்ட நிகழ்வுகள் நடந்தேறும். இவனுடன் நம் வாழ்வு தொடர போகிறதா? இன்னும் இன்னும் அவனின் வார்த்தைகளில்தான் அவளின் மனது உழன்று கொண்டிருந்தது. யோசித்துக் கொண்டிருக்கையில் கதவு தட்டப்பட, மணி அதற்குள் நான்கை எட்டிவிட்டது. வெளியே சென்று பார்க்க, பிரவீனும் அமுதனும் நின்றுக் கொண்டிருந்தனர். இதழுக்கு அப்படி ஒரு கோபம், தன்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே? என்று.

“இதழ்…” என்று பிரவீன் அழைக்க,

அதற்குள், “இதழ்மா எழுந்திட்டியா? சீக்கிரம் கிளம்பி வா. காலைல நலுங்கு வைக்க எல்லாரும் வந்துடுவாங்க. மண்டபத்துக்கு கிளம்பணும். இப்போதைக்கு சுடி போட்டுக்கோ. அங்க போய் சேரி போட்டுக்கலாம்.” என்று அவளின் அண்ணி முறை உறவு ஒருத்தி பேசிக்கொண்டு வந்துவிட்டாள்.

ஏதும் பேசாமல் மீண்டும் தன்னறைக்குள் சென்று கதவடைத்துவிட்டாள் இதழ். செல்லும்முன் அவளின் கண்களில் கண்ட கோபமும் அவளின் பார்வையும் இருவரையும் உலுக்கியது.

அங்கோ இளையா எதுவும் பேசாமல் பொம்மையைப் போல் தெய்வானை சொல்வதை செய்துக் கொண்டிருந்தான். அகிலனிற்கு கோபம் இருந்தாலும் அவனை சமாதானம் செய்துக் கொண்டிருந்தான்.

“இங்க பாருடா. இப்போ எதுக்கு இப்டி இருக்க? கல்யாணம் முடியட்டும். பொறுமையா பேசிக்கலாம்.”

“என்ன பொறுமையா பேசிக்கலாம்.? கல்யாணம்ங்குறது ரெண்டு மனசு சம்பந்தப்பட்ட விசயம்தான? அவங்க எப்டி இப்டி செய்யலாம்.? அப்டி சந்தேகம் இருந்தா ஏன் அவங்க பொண்ண தரணும்? ஒரு மாதிரி அசிங்கமா இருக்குடா?” என்று தன் ஆற்றாமையை கொட்டினான் இளையா.

“டேய், என்ன பேச்சு இது? இதழ் கிட்ட பேசுனியா?”

“நேத்து இருந்த டென்சனுக்கு நைட்டே கால் பண்ணி கத்திட்டேன்டா. ப்ச், அது வேற இன்னும் டென்சனா இருக்கு. என்ன பன்றாளோ?”

“கொஞ்சமாவது அறிவு இருக்கா? இதழ் அம்மா பண்ணதுக்கு இதழ் என்ன செய்வாங்க? கோபம் வந்தா பொறுமையே இருக்காதா? எங்க போச்சு உன் பொறும எல்லாம்.? எத்தன தடவ சொல்லியிருக்கேன், ஒரு விசயத்த முதல்ல பொறுமையா யோசின்னு?” என்றவனுக்கு தற்போது தலைவலி வேறு. தான் கேட்டதையே இன்னும் இன்னும் மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்தான் அகிலன்.

தெய்வானையின் மாமியார் ருக்மணி அத்தனை வார்த்தைகள் பேசியிருந்தார் இதழின் வீட்டைப் பற்றி. ஆரம்பத்தில் இருந்தே அது சரியில்லை, இது சரியில்லை என்று குத்தம் கண்டுபிடித்துக் கொண்டேதான் இருந்தார். நேற்று இரவு தண்ணீர் குடிக்க வந்தபோது உறவுக்காரப் பெண்மணியிடம் புலம்பிக் கொண்டிருந்தார் ருக்மணி.

“ஊரு உலகத்துல இல்லாத சம்பந்தத்த புடிச்சிட்ட மாதிரி என்ன ஒரு ஜம்பம் பாரேன். தேவாவோட ஒன்னா வேல செஞ்சவங்களாம். அப்போவே முடிவு பண்ணிட்டாங்களாம்.  இப்போ கல்யாணமாம். இந்த வீட்டுக்கு பெரியவன்னு நான் ஒருத்தி இருக்கப்போ என்ன கலந்துக்காம இவங்களா முடிவு எடுத்து இருக்காங்க பாரேன்டி. இதுல இதழுக்கு அந்த புடவ சரியா இருக்கும். இந்த அட்டிகை சரியா இருக்கும்னு என்னா தாங்கு தாங்குறா பாரு இந்த தெய்வான. இந்த திகழும் அண்ணி அண்ணின்னு உருகுறா. பாத்த ஒரு மாசத்துலயே குடும்பத்தயே முந்தானைல முடிச்சிக்கிட்டா பாருவேன்.”

“எல்லாம் இப்போ இருக்க புள்ளைங்க ரொம்ப உஷார்ரா இருக்காங்கத்த. நாம தான் ஒன்னும் தெரியாம, புருசனே கதின்னு இன்னும் அவங்க கிட்ட பேச்சு வாங்கிட்டு இருக்கோம். இத விட, இன்னொரு விசயம் தெரியுமா உங்களுக்கு? இந்த புள்ளையோட அம்மா நம்ம இளையாவ பத்தி ஆள விட்டுலாம் விசாரிச்சு இருக்காங்களாம். பெரிய சிபிஐ ஆபிசராம் அந்தம்மா. அதுக்குன்னு நம்ம புள்ளய சந்தேகப்பட்டு இப்டி செய்வாங்களா?” என்றார் அந்த பெண்மணி.

“அடியாத்தே, என்னடி சொல்றவ? அந்த பொம்பள இப்டியா பண்ணுச்சு? ஏன் என் பேரனுக்கு அப்டி என்ன கொற? இல்ல அவ புள்ள தான் உலகத்துல இல்லாத பொண்ணா? இவள விட்டா என் பேரனுக்கு பொண்ணுங்களாம் வரிச கட்டிட்டு வந்து நிப்பாங்க. என்ன தகிரியம் பாரேன் அந்தம்மாவுக்கு. இத நான் சும்மா விடமாட்டேன். கல்யாணம் முடிச்சிட்டு இங்க தான வரணும். அப்போ இருக்கு.” என்று அவரிடம் பேசிக்கொண்டிருந்தார்.

இதனை கேட்ட அகிலனிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இளையாவை கவனிக்க ஆள் அனுப்பினார்களா? இந்த ஒன்றே அவனின் மனதில் வியாபித்து இருந்தது. சிறு வயது முதலே இரண்டு குடும்பமும் பழக்கம் என்று தேவநந்தன் கூறி இருக்க, பிறை ஏன் இவ்வாறு செய்ய வேண்டும் என்று கேள்வியும், அப்படி சந்தேகம் இருப்பின், ஏன் இதழை கொடுக்க வேண்டும்? என்ற கோபமும் எழுந்தது.

எதற்கு வந்தோம் என்பதே அவனுக்கு மறந்துவிட, நேரத்தை கவனிக்காமல் பிரவீனுக்கு உடனே அழைத்தான்.

“சொல்லுங்க அகில், இந்த நேரத்துல? எதாவது பிரச்சனையா?”

“இல்ல பிரவீன், எங்க இருக்கீங்க?”

“மண்டபத்துலதான். மார்னிங் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்யணும். கேட்ரிங் ஆளுங்கலாம் வந்துட்டாங்க. அதான், கூட ஒருத்தர் இருக்கணும்னு நானும் அமுதனும் இங்க இருக்கோம்.”

“சரி நான் அங்க வரேன்.” என்று அவன்பாட்டிற்கு அழைப்பைத் துண்டித்திருக்க, பிரவீனுக்கோ நள்ளிரவில் அவனின் அழைப்பும், உடனே வருவதாக சொல்வதும் ஏதோ சரியில்லை என்றே தோன்றியது.

அமுதனை எழுப்பிவிட்டு அங்கே இருந்த சமையல்காரர் ஒருவரிடம் டீ போட சொன்னவன், அமுதனிடமும் விசயத்தைப் பகிர்ந்து இருந்தான்.

அகிலன் அறியாத ஒன்று இளையாவும் ருக்மணி பேசியதை கேட்டு இருந்தது தான். இளையா அகிலனை பார்த்துவிட்டான். ஆனால், அகிலன் கவனிக்கவில்லை. அகிலன் கிளம்புவதைப் பார்த்தவன் நிச்சயம் பிரவீனிடம்தான் செல்வான் என அறிந்து அவனுக்கு முன் மண்டபத்திற்கு கிளம்பினான்.

அகிலன் வருவதாய் சொல்லி இருக்க, அவனுக்கு முன் இளையா வந்து நிற்பதை என்னவென்று புரியாமல் எழுந்து நின்றனர் பிரவீனும் அமுதனும்.

“என்ன ப்ரோ? என்ன ஆச்சு?” என்ற பிரவீனிற்கு பதட்டமாகத்தான் இருந்தது. தன் உயிர்த்தோழியின் வாழ்க்கையல்லவா இது. ஏதாவது பிரச்சனை என்றால் தன் தலையை கொடுத்தாவது அதனை சரிசெய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தான்.

“நான் கேட்குறதுக்கு மறைக்காம பதில் சொல்லுங்க. பிறை அத்தை என்னை பத்தி விசாரிக்க ஆள் அனுப்பினாங்களா?” என்றதும் இருவருக்கும் தூக்கிவாரிப்போட்டது.

நிச்சயம் இது கோபப்படக்கூடிய விசயம்தான். ஆனால், இது தங்களை மீறி எப்படி வெளியே சென்றது என்று அமுதன் யோசிக்க தவறவில்லை.

அகிலனும் வந்துவிட்டான். வந்தவனுக்கு இளையா அங்கிருப்பது அதிர்ச்சி என்றால், அவன் கேட்ட கேள்வி பேரதிர்ச்சிதான்.

“இளையா பொறுமையா பேசிக்கலாம்டா.” என்றான் அப்போதும்.

“பிரவீன், கேட்ட கேள்விக்கு பதில்… அனுப்பினாங்களா? இல்லையா?”

ஆம் என்பதற்கிணங்க அவன் தலையசைக்க, தன் கோபத்தை கையை இறுக்கி கட்டுக்குள் கொண்டுவந்தவன், “யாருன்னு தெரியுமா?” என்று கேட்டான்.

அவனின் கோபம் பிரவீனை சில்லிடச் செய்தது. இத்தனை கோபத்தை இதழ் தாங்குவாளா என்பதே அவனின் முதல் கேள்வியாய் இருந்தது.

“அது… நாங்கதான் ப்ரோ.” என்றவனின் பதிலில் இளையாவும் தற்போது உறைந்துவிட்டான்.

“என்ன..?” இளையாவுக்கும் அகிலனுக்கும் அத்தனை அதிர்ச்சி. கண்டவுடனேயே நண்பர்களாக மனதில் அச்சாரமாய் அமர்ந்து விட்டனர். அவர்கள் இதனை செய்தவர்கள் என்று நினைக்கையில், நண்பர்களே தன்னை சந்தேகப்பட்டதை போல்தான் இருந்தது அவனின் எண்ணம். வெகுவாய் காயம்பட்டு போனது அவனின் மனது.

வந்த கோபத்திற்கு அகிலன் பிரவீனை அறைந்துவிட்டான்.

“என்ன எவ்ளோ வேணா அடிச்சிக்கோங்க. ஆனா, கொஞ்சம் பொறுமையா பேசிக்கலாமே. நான் என்ன சொல்றேன்னு கொஞ்சம் கேளுங்க ப்ரோ. பிறைம்மாதான் சொன்னாங்க. இதழ்… இதழுக்கு இது தெரியாது.”

“பேசாத நீ? அந்த பேர்… அவ ஒருத்திக்காகதான இது எல்லாம். அதெப்டி அவளுக்கு தெரியாம இருக்கும்? நீயும் அவளும் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்தான? நீ சொல்லி இருக்க மாட்டியா? இல்ல அவ சொல்லிதான் நீ செஞ்சியா?”

“அய்யோ, சத்தியமா இதழுக்கு தெரியாது. நம்புங்க இளையா.”

“இத்தன நாள் நம்பினேனே… நம்பித்தான கூட இருந்தேன். இன்னும் என்ன நம்ப இருக்கு?” என்றவனின் வார்த்தையில் பிரவீனும் அமுதனும் துவண்டு போனார்கள்.

“இளையா…”

“பேசாத… இனி ஒரு வார்த்தை வந்தது?” என்று விரல் நீட்டி எச்சரித்தவன், அவ்விடம் விட்டு அகன்றான். பிரவீனும் அமுதனும் பின்னாடியே செல்ல, அகிலன்கூட சற்று நிதானமாக யோசிக்க ஆரம்பித்தான்.

அவர்கள் யாரையும் லட்சியம் செய்யாதவன், தன் இருசக்கர வாகனத்தை இயக்கி புறப்பட்டான். மண்டபத்தின் வாயிலில் ‘இளையபாரதி வெட்ஸ் இதழினி’ என்ற பதாகை அவனை பார்த்து மின்னியது.

அத்தனை கோபம் அவனுள் கனன்றுக் கொண்டிருந்தது.

“நிஜமா இதழுக்கு தெரியாது அகிலன். இளையாக்கிட்ட சொல்லுங்க.” என்றவனின் முகத்தில் பயம் அப்பட்டமாகத் தெரிந்தது. இளையாவின் கோபம் அறிந்துக் கொண்டவனுக்கு முன் இதழின் கோபமும் வார்த்தை பிரயோகமும் கண்முன் வந்து இன்னும் பயத்தைக் காட்டியது.

சற்றுத் தூரம் வந்து தன் வண்டியை நிறுத்தியவன் உடனே இதழுக்கு அழைத்தான்.

பிறை அறையை விட்டு சென்றதும் அழைப்பை ஏற்றவள் மனதிற்குள் அத்தனை குறுகுறுப்பு.

“சொல்லுங்க, என்ன இந்த நேரத்துல?”

“இப்டிதான் நீங்க கேஸ்லாம் பார்ப்பீங்களா? இதுதான் நீங்க பார்க்குற கேஸா இதழினி?” என்றவனின் வார்த்தைகள் பல்லின் இடுக்குகளில் இருந்து வந்தது.

“என்ன ஆச்சு? எந்த கேஸ்? நீங்க ஏன் இப்டிலாம் பேசுறீங்க?” அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

“ஏன், உனக்கு எதுவும் தெரியாதா? நீயும் பிரவீனும்தான் அவ்வளவு க்ளோஸ் ஆச்சே? ஏன் அவன் ஒன்னும் உனக்கு சொல்லல.”

“என்ன, பிரவீனுக்கு என்ன ஆச்சு?” அவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. அவள் சொல்ல வேண்டாம் என்று சொன்ன வழக்கைப் பற்றி ஏதாவது உளறி வைத்து விட்டானோ என்று.

“நடிக்காத இதழ். அவ்ளோ சந்தேகம் இருக்குறவ, எதுக்கு என்ன கல்யாணம் செய்துக்கணும்.? உன் அம்மா எதுக்கு எனக்கு கட்டிக்கொடுக்கணும்.? இந்த கல்யாணம் நடக்கணுமான்னு இப்போ எனக்கு இருக்கு இதழ். உனக்கு வர கேஸ்சும் இப்டிதானா? மாப்ள, பொண்ண பத்தி டீடையில்ஸ் கேட்டா இப்டிதான் இன்வெஸ்டிகேசன் செய்வீங்களா?”

இதுவரை பொறுமையாக இருந்தவள், அவனின் இந்த வார்த்தைகளில் வெகுண்டாள். “வாட், நான்சென்ஸ்.? என்ன பேசிட்டு இருக்கீங்க? நான் டீல் பன்ற கேச பத்தியும், இன்வெஸ்டிசேன் பத்தியும் உங்களுக்கு என்ன தெரியும்.? என்ன ஏதுன்னே சொல்லாம உங்க வாய்க்கு வந்தத பேசிட்டு இருக்கீங்க?” என்றவளுக்கு பிறையை பற்றியும் அவளின் வேலையை பற்றியும் சொன்னவுடன் சுர்ரென்று ஏறிவிட்டது.

“ஏன், நான் அப்டித்தான்டி பேசுவேன். நம்பினேன்ல நான். நம்ப வச்சு கழுத்தறுக்குறதுன்னா இதுதானா? லடாக் போனதுல இருந்து எதர்ச்சைய மீட் பன்ற மாதிரி பேசி, என்னையே அறியாம ப்ரென்ட்டா ஆகி அப்ரோம் என் டீடையில்ஸ், அகிலனோட டீடையில்ஸ் எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு அதுக்கு அப்ரோம் கல்யாணத்துக்கு ஓகே சொல்றது? இது என்ன கல்யாணமா இல்ல உன் ஃப்ரொபசனுக்கு ஏத்த ஆள செலக்ட் பண்றியா? ஒருத்தரோட எமோசனல் உங்க எல்லாருக்கும் அவ்ளோ விளையாட்டா போச்சுல? இதுல இத்தனைக்கும் நான் மகி… மகிய பத்தி சொல்றப்போ ஒன்னுமே தெரியாத மாதிரி எப்டி ரியாக்ட் செஞ்ச? ப்பா… தோத்துடுவாங்க, ஆக்டர்ஸ்லாம்.”

தற்போது ஓரளவுக்கு அவளுக்கு விளங்கியது. “இளையா, நிஜமா எனக்கு எதுவும் தெரியாது. எதுவா இருந்தாலும் மார்னிங் பேசிக்கலாம். ப்ளீஸ்” அவளுக்கும் கோபம்தான். இருந்தும் அவனின் நிலையில் இருந்தும் சிந்தித்தாள்.

“என்ன, எல்லாம் தெரிஞ்சிடுச்சுன்னு மறுபடியும் நடிக்கிறியா? இதுக்கு முன்னாடி எவ்ளோ கோபமா பேசின? இப்ப எங்க போச்சு அந்த கோபம்.?” என்றவனுக்கு இன்னும் மனது ஆறவில்லை.

இதற்கு மேல் அவன் பேசினால் தானும் பொறுமையை இழக்க நேரிடும் என்று தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள், “நான் நடிக்கிறேனா? சரி அப்டியே இருக்கட்டும். ஆனாலும் உங்க கிட்ட இருந்து நான் இத எதிர்பாக்கல இளையா. நான் வைக்குறேன்.” என்று உடனே அழைப்பைத் துண்டித்தாள்.

இருவருக்கும் மனது ஆழிப்பேரலையாய் அடித்துக் கொண்டது. இதழுக்கு இது பிடிக்காத ஒன்று. இதுவரை இதுபோல் விசாரணை எல்லாம் அவள் எடுத்ததே இல்லை. சாதாரணமாக விசாரித்துக் கொள்ளுங்கள். இதனை இந்த அளவிற்கு கொண்டு வர வேண்டாம் என்று தன்னிடம் வருபவர்களிடம் சொல்லி விடுவாள். ஆனால், இதனை பிரவீனும் அமுதனும் செய்து இருக்கின்றனர் என்று அவன் சொல்லியதில் அத்தனை கோபம் அவளுக்கு.

அம்மா சொன்னாலும் இவர்களுக்கு எங்கு போனது அறிவு. அதிலும் பிரவீன் அவளிடம் மறைத்ததை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

இன்னும் தன்னை நிலைப்படுத்த அவள் தடுமாற, இளையாவின் வார்த்தைகள் காதிற்குள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. ‘நடிக்காத…’ என்றதில் ஆரம்பித்து, ‘அவ்ளோ சந்தேகம் இருக்குறவ என்னை ஏன் கல்யாணம் செய்துக்கணும்.?’ ‘பிரவீன் உன் க்ளோஸ் ப்ரெண்ட் தான? அவன் சொல்லலயா?’ ‘எனக்கு இந்த கல்யாணம் நடக்கணுமான்னு இருக்கு?’ என்றதில் முற்றுகையிட்டு நின்றது அவளின் எண்ணங்கள். என்ன சொல்வாள்? ஒரு மாதமேயானாலும் கணவனாக வரித்துக் கொண்டாளே. தன்னைப் போல் ஆசைகளும் கனவுகளும் அவனுக்கு இல்லையா? நான்தான் அவனை எண்ணிக் கொண்டிருந்தேனா? நினைக்கையிலேயே உள்ளம் வெதும்பியது.

துணிகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தவள், மனதின் வெம்மையை தீரும் வரை நீரில் நின்றாள். என்னதான் மனதை சமன்செய்ய முயன்றாலும் அவனின் வார்த்தைகள் தீயாய் சுட்டது. அங்கு இளையாவும் கொதிநிலையில்தான் இருந்தான்.

இதழைக் கண்டவுடன் மனைவியாகவே வரித்துக் கொண்டவனின் மனது என்னதான் சமாதானம் செய்தாலும் ஆறவேயில்லை. ‘நான் நினச்ச மாதிரி நீ என்னை நினைக்கலயா இனி? என்னை நீ நம்பலயா? ஏன் இப்டி செஞ்ச இனி?’ பிரவீன் சொன்னவை எதையும் அவன் லட்சியம் செய்யவேயில்லை. இதழுக்கு தெரிந்தேதான் இது நடந்திருக்கும் என்பது அவனின் எண்ணமாக இருந்தது. கோபத்தில் தான் திருமணம் நடக்க வேண்டுமா என்று சொன்னானே தவிர, இதழை விட இவனுக்கு சற்றும் மனமில்லை. கோபத்தில் மனிதன் மதியை இழக்கின்றான் என்பது எத்தனை உண்மை. தான் விட்ட வார்த்தைகளின் வீரியத்தை தற்போது அறியாது போனான் இளையபாரதி.

அவரவர் இல்லங்களில் இருவரும் தயாராகி வர, “என் கண்ணே பட்டுடும் போல இருக்கு இதழ். அங்கபோய் புடவ மாத்திக்கலாம். எல்லாம் எடுத்துக்கோ. பிரவீன் கார்ர எடுடா. எல்லாரும் கிளம்புங்க.” என்றபடி பரபரப்பாவே இருந்தார் பிறை. இதழுக்கும் பிரவீனுக்கும் அவரை பார்க்கவே சிரமமாக இருந்தது. தனக்காக என்று எண்ணி தாய் செய்த செயல் தற்போது எங்கு வந்து நிற்கிறது என்று எண்ணியவள், பிரவீனை முறைக்கவும் தவறவில்லை.

“இளையா வேட்டி கட்டிக்கோடா. நலுங்கு வைக்குறப்போ வேட்டியோடதான் இருக்கணும். ரெடியாகிட்டு திங்க்ஸ்லாம் பேக் பண்ணு.” என்றபடி தன் மகனை கண்குளிர பார்த்தார் தெய்வானை.

தன் அன்னைக்காகவாவது இத்திருமணம் எந்த வித தடையுமின்றி நடந்தேற வேண்டும் என்று தற்போது நினைத்தான். அனைவரும் மண்டபத்தை நோக்கி புறப்பட்டனர்.

அனைவர் முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி. ஆனால், மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய இருவரின் முகத்திலும் கிஞ்சித்தும் புன்னகை என்பதே இல்லை.

மகிழுந்து புறப்பட்டது, மணமக்களையும் மன உணர்வுகளையும் தாங்கி.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்