Loading

அத்தியாயம் 13

காலையில் நெருங்கிய சொந்தங்கள் குழுமியிருக்க, முதலில் இதழுக்கு நலுங்கு வைக்கப்பட்டது. அதற்கு பிறகு இளையாவிற்கு நலுங்கு வைக்கப்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் மதியம் வரை பார்க்கக் கூடாது என்பதால் பேசவும் வாய்ப்புகள் அமையவில்லை. ஆனால், விசயம் அறிந்த ஐவரும் இதனை எப்படி சரிசெய்ய என்ற யோசனையிலேயே தான் இருந்தனர்.

மதியம் விளக்கேற்றி அவர்களின் வழக்கப்படி கடவுளை தொழுத பின்னர் உணவு உண்ண சென்றுவிட்டனர். இதழுக்கு அறைக்கே உணவு கொண்டு வரும்படி சொல்லியிருக்க, பிரவீன்தான் எடுத்து வந்தான். அவன் கையில் தட்டைக் கண்டவள், ஏகத்துக்கும் கடுப்பானாள். “மகிழா, எனக்கு பசிக்கல. நீ சாப்டு. நான் அப்ரோம் சாப்டுறேன்.” என்று நெற்றியில் கைவைத்தபடி அமர்ந்துக் கொண்டாள்.

“ப்ச், இதழ்… நான் சொல்றத நீயாவது கேளு எரும.” என்றவன் பார்வை அதிகப்படியான இறைஞ்சுதலை சுமந்து இருந்தது.

எதுவும் பேசாமல் அவள் அப்டியே நிமிர்ந்து அமர்ந்தாள். பேசு, பேசாதே என்று எதையும் கூறவில்லை. அவளின் கோபத்தை விட, இந்த மௌனம் பிரவீனை வெகுவாகத் தாக்கியது.

உணவுத் தட்டை ஓரமாக வைத்தவன், கதவை சாற்றி விட்டு வந்தான். மகிழாழி வேறு என்ன நடந்திருக்கும் என்ற யோசனையில் இருந்தாள்.

பிரவீன் நடந்தவற்றை சொல்ல, சொல்ல இதழின் மனதிற்குள் புயல் ஒன்று சூறாவளியாக மாறிக் கொண்டிருந்தது.

அனைத்தும் கூறி முடித்தவன், அவளின் பதிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தான். அவளுக்குள் அப்படி ஒரு கோபம். அப்போதுதான் பிரவீனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். இடது பக்க கண் சிவந்து வீங்கி இருந்தது.

“டேய், கண்ணுக்கு என்ன ஆச்சு?” என்று அவள் கேட்டதும் இவனுக்கு தூக்கிவாரிப்போட்டது.

‘சுத்தம், மண்டைல இருந்த கொண்டைய மறந்த கதையா ஆச்சே.! இப்போ இதுக்கு உண்மைய சொன்னா இன்னும் எகுறுவாளே!’ என்று உள்ளுக்குள் கதறத்தான் முடிந்தது.

“உன்னதான் கேட்குறேன். காதுல விழுகுதா? எப்டி ஆச்சு?”

“அது எரும… நைட் மண்டபத்துல இலை பக்கத்துல படுத்தேனா, பூச்சி ஏதோ கடிச்சிடுச்சு போல. ஆயில்மென்ட் போட்டுட்டேன். நாளைக்கு சரியாகிடும்.”

“அதாவது எரும, பூச்சி கடிக்கும், பொளேர்ன்னு வாங்கின அடிக்கும் கூடவா எனக்கு வித்தியாசம் தெரியாது.? கன்னத்துல விரல் அச்சு இருக்கு. சொல்லு யார் அடிச்சா?”

“அதுலாம் இல்லையே… பூச்சி கடிச்ச மாதிரி இருக்குன்னு நானே என் கன்னத்துல அடிச்சிக்கிட்டேன் எரும. என் மேல யார் கை வைக்க முடியும்.?”

“அப்போ நீ சொல்ல மாட்ட? அப்டிதானே?” என்று அவனை கூர்ந்து நோக்கியவள், “அமுதனயும் இளையாவயும் மாடிக்கு கூட்டிட்டு வா” என்றபடி அவள் முன்னே நடந்தாள்.

“ஏய், வெளிய போனா திட்டுவாங்கடி.” என்று மகிழாழியால் கத்தத்தான் முடிந்தது.

“ரெண்டு பேர்கிட்டயும் மாட்டிக்கிட்டு நான் படுற பாடு… கடவுளே” என்று தலையில் அடித்துக் கொண்டவன், அமுதனுக்கு அழைப்பு விடுத்து மாடிக்கு வர சொன்னான்.

அகிலனை நேற்று அந்த சம்பவத்திற்கு பிறகு பார்க்கவில்லை. தற்போது அவனுக்கு அழைப்பு விடுத்தான்.

“சொல்லுங்க”

“இதழ், இளையாவ மாடிக்கு வர சொன்னா. கூட்டிட்டு வரீங்களா?”

பல்லைக் கடித்தவன், “இப்போ எதுக்கு மறுபடியும் பிரச்சனை? இளையா வர மாட்டான்.” என்றான்.

“வரலன்னா, அவ இன்னும் பிரச்சன செய்வா அகில். புரிஞ்சிக்கோங்களேன்.” என்றவனின் சொற்கள் அகிலனை யோசிக்க வைத்தது. ஆனால், முக்கியமான நபரை விட்டுவிட்டு நமக்குள் பேசுவது எந்த வித பிரயோஜனமும் இல்லை என்றும் யோசித்தான்.

இளையாவிடம் சென்றவன் இதழ் அழைத்ததாகக் கூற, உள்ளுக்குள் மகிழ்ச்சி இருந்தாலும் நடந்த நிகழ்வு அவனை வெகுவாகத் தாக்கியது. விடிந்தால் திருமணம், ஆனால் அதில் லயிக்க இருவருக்கும் மனம் வரவில்லை.

இளையாவும் அகிலனும் மாடிக்கு வர, அங்கு கைகளை கட்டியபடி சுவற்றில் சாய்ந்து நின்றுக் கொண்டிருந்தாள் இதழினி. பிரவீனும் அமுதனும் பதட்டமாகத்தான் இருந்தனர். யாரேனும் வந்துவிட்டால் என்ன சொல்லி சமாளிப்பது என்று ஒரு பக்கமும், இதழினி, இளையாவின் கோபமும் இருவரையும் பெரிதாய் வாட்டியது.

“இதழ்…” என்ற அழைப்பில் திரும்பிப் பார்க்க, இளையாவும் அகிலனும் வந்திருந்தனர்.

நீண்ட பெருமூச்சொன்றை விட்டவள், இளையாவின் முகத்தை மறந்தும் பார்க்கவில்லை. அவனுக்கும் உள்ளுக்குள் கோபம் இருக்கத்தான் செய்தது. ‘பன்றது எல்லாம் பண்ணிட்டு, இவ மூஞ்ச தூக்கி வச்சிட்டு இருக்கா பாரு’ என்று அவளை மனதில் வறுத்துக் கொண்டிருந்தான்.

“பிரவீன யார் அடிச்சா?” சுற்றி வளைக்காமல் இவள் கேட்ட கேள்வியில் மானசீகமாக பிரவீன் தலையிலடித்துக் கொண்டான்.

“என்ன?” என்று இளையா கேட்க,

“உங்க கிட்ட தான் அகிலன் கேட்குறேன், பிரவீன யார் அடிச்சா?” கேட்டாள் கண்கள் இடுங்க.

அகிலனிற்கோ என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இளையாவின் கோபத்தின் அளவு தெரிந்தவனுக்கு தற்போது இதழின் இந்த கோபமும் இருவர் வாழ்வில் என்ன நடக்கும் என்பதை யோசிக்க வைத்தது.

“நான்தான் அடிச்சேன் இதழ்” என்றான் அகிலன்.

“எதுக்கு?” கோபம்தான் ஆனால் முகத்தில் அப்படியொரு இறுக்கமும் இருந்தது.

பிரவீன் அவளின் கையை பிடித்து, “இதழ், அமைதியா இரு.” என்றவனுக்கு,

“நீ பேசாம இரு. எதுக்குன்னு கேட்டேன்?” என்று சற்று குரலை உயர்த்தினாள்.

“எதுக்குன்னா? அவன் அப்டித்தான் அடிப்பான். பிரவீன் செஞ்ச வேல அப்டி.” என்றான் இளையா.

“என்ன? அப்டியென்ன அவன் செஞ்சிட்டான். இங்க பாருங்க, நான் உங்க கிட்ட பேசல. அகிலன் அண்ணா, நீங்க சொல்லுங்க. அவன் என்னவும் செய்யட்டுமே, அவன அடிக்குற ரைட்ஸ் உங்களுக்கு யார் கொடுத்தா? அவன் என் ஃபிரென்ட்.” என்றவள் கண்களை மூடி தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தாள். என்னவும் செய்யட்டுமே, எப்படி அவன் மேல் கை வைக்கலாம்? அதுவும் கண்கள் சிவந்து, கன்னம் வீங்கி இருந்தது. பார்க்கவே இதழுக்கு அத்தனை கஷ்டமாக இருந்தது.

“அவன் எங்களுக்கும் ஃப்ரென்ட் தான். அந்த உரிமைல தான் இதழ் அடிச்சேன்.” என்றுவிட்டான் அகிலன்.

“என்ன?” என்று அவனின் வார்த்தைகளில் அதிர்வுற்றவள், மெதுவாகத் தலையை மட்டும் பிரவீன் பக்கம் திருப்பினாள்.

‘செத்தடா பிரவீனு’ அவனுக்கு தூரத்தில் அபாயமணி ஒலிப்பது தற்போது கேட்டது. அவளின் பார்வையில் என்ன சொல்வதென்று தெரியாமல் பிரவீன் திருதிருக்க, “ஏன் பிரவீன், அகிலன் உன்ன அடிக்க கூடாதா?” என்று கேட்டான் இளையா.

பிரவீன் எந்த பக்கம் தலையாட்டுவது என்று தெரியாமல் ஒரு விதமாய் தலையாட்ட, இதழுக்கு அத்தனை கோபம். சிறு வயதில் இருந்தே எந்த சூழ்நிலையிலும் தன் நண்பனை அவள் விட்டுத் தரமாட்டாள். தற்போது இளையாவும் அகிலனும் பிரவீனை தன் நண்பன் எனக் கூறியது, உள்ளுக்குள் சிறிது மகிழ்ந்தாலும் பெரிய அளவு பொறாமை ஏற்பட்டது. ‘இவன் என் நண்பன்’ என்ற உள்ளுணர்வு தான் மேலோங்கியது.

அமுதனிற்கு இவர்கள் விளையாடுகிறார்களா? என்றுதான் தோன்றியது.

“ரைட்.! உங்க ப்ரென்ட்தான். நீங்க அடிங்க, மண்டய உடைங்க. எனக்கென்ன? அன்ட் தப்பும் எங்க மேலதான். ப்ச், திருத்தம் என்மேல தான். என்னோட அம்மா சொல்லிதான் இவங்க செஞ்சாங்க. அதுனால நீங்க அவங்கள அடிச்சிருக்க கூடாது. பர்ஸ்ட் சாரி சொல்லுங்க.” என்றுவிட்டாள்.

இந்த பேச்சு பிரவீனை வெகுவாகத் தாக்கியது. அவனிருக்கும்போது என்றும் அவள் பிறை அம்மா என்றுதான் விளிப்பாள். இன்று முதன்முறை ‘என்னோட அம்மா’ என்றதே அவனுக்கு அவளின் எண்ணம் புரிந்திட, அதிலும் அவள் மரியாதையாக அழைப்பது இன்னமுமே அவனை வாட்டியது.

என்னதான் சண்டையாக இருந்தாலும் தன் நண்பனை என்றுமே எங்கேயுமே விட்டுக் கொடுக்காமல் பேசுகிறாளே, தன்னை எப்படி இவள் சந்தேகித்து இருப்பாள் என்ற எண்ணம் இளையாவிற்கு தற்போது தோன்றியது. ஆனால், அகிலனை மன்னிப்புக் கேட்கும்படி சொன்னதும் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டான் இளையா.

“உன் ஃப்ரென்ட் உனக்கு எப்டி முக்கியமோ, அதே மாதிரி என் ப்ரென்ட்டும் எனக்கு முக்கியம். அவன் சாரி கேட்க மாட்டான். என்னைப் பொறுத்தவரைக்கும் அகிலன் எந்த தப்பும் செய்யல.” என்று காய்ந்தான் இளையா.

அகிலனிற்கும் பிரவீனிற்கும் தங்களை வைத்து புது பிரச்சனை உருவாக போகிறதோ என்ற பயம் துளிர்த்தது.

“அவங்க சாரிலாம் கேட்கவேண்டாம் எரும. இதோட விடேன்” என்று பிரவீன் ஒருபக்கம் சொல்ல,

“சாரி தானே. என்னதான் இருந்தாலும் நானும் அவசரப்பட்டு அடிச்சு இருக்கக் கூடாது. சாரி பிரவீன்” என்றுவிட்டான் அகிலன்.

அமுதனிற்கு இவர்களின் நட்பைக் கண்டு உள்ளுக்குள் பெருமையாக இருந்தது.

இளையாவின் பேச்சில் தன் கோபம் கரையை கடக்க இருப்பதை உணர்ந்த இதழ், அகிலன் மன்னிப்புக் கேட்டதில் கொஞ்சம் மட்டுப்பட்டதையும் உணர்ந்தாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டிருக்க, மற்ற மூவரும் அமைதியாகக் கிளம்பினர்.

எதுவாக இருந்தாலும் இருவரும் பேசிக் கொள்ளட்டும் என்று அவர்கள் சென்றிருக்க, அதுவும் வேலை செய்தது.

“எப்பவும் உனக்கு உன் ஃப்ரென்ட்தானே முக்கியம்?” என்றவனின் கேள்வியில் தன்னிலை திரும்பியவள் சுற்றியும் பார்க்க, அங்கு இளையாவும் தானும் மட்டும் தனித்து இருப்பதை உணர்ந்தாள்.

‘இந்த எரும, கமுக்கமா கோர்த்துவிட்டு போய்ட்டான்.’ என்று மனதில் அவனை திட்டிக்கொண்டிருந்தாள்.

“எப்பவும் எனக்கு பிரவீன் முக்கியம்தான். அவன் என் ஃப்ரென்ட். அந்த இடத்துக்கு யாராலும் வர முடியாது. அவங்க அவங்க இடத்துல அவங்க அவங்களுக்கான முக்கியத்துவம் என்னைக்கும் நான் தருவேன். அதுல எந்த மாற்றமும் கிடையாது, எப்பவும்” அந்த எப்பவும் என்ற சொல்லில் அழுத்தம் கொடுத்து சொன்னாள். அவளின் வார்த்தைகளில் நான் எனக்கான உறவுகளில் சந்தேகம் கொள்ளமாட்டேன் என்பது தெளிவாக தெரிந்தது.

“இதழ்…” என்ற அவன் தொடங்க, கையை நீட்டி தடுத்தவள்,

“நான் பேசிடுறேனே.? நேத்து நீங்க பேசிட்டீங்க. பர்ஸ்ட் நான் என் பக்கம் கிளியர் பண்ணிக்குறேன். நிஜமாலுமே இப்டி ஒரு விசயம் நடந்து இருக்குன்னு எனக்கு தெரியாது. என்னதான் பிரவீன் என்னோட க்ளோஸ் ப்ரெண்ட்டா இருந்தாலும் பிறைம்மா சொன்னா அவன் அததான் கேட்பான். அன்ட், எனக்கு இப்டி கேஸ் வந்தாலும் நான் அத அக்சப்ட்டே பண்ண மாட்டேன். அப்டி நீங்க மாப்ள, பொண்ண பத்தி விசாரிக்கணும் அப்டின்னா நம்பிக்கையானவங்கள வச்சு தான் விசாரிக்க சொல்லுவேன். ஒரு பேரன்ட்ஸ்க்கு இருக்குற சாதாரண பயம்தான். நம்மளோட பசங்களுக்கு சரியான துணைய ஏற்படுத்தி கொடுக்கணும்னு அவங்க யோசிக்குறதுல தப்பு இல்ல. இப்போ இருக்குற காலத்துல விசாரிக்குறது சகஜம்தான் இளையா. அது சந்தேகம் அப்டின்னா அதுக்கு நான் என்ன எக்ஸ்ப்ளனேசன் கொடுக்கணும்னு தெரியல.

ஆணோ, பொண்ணோ ஒழுக்கம் ரெண்டு பேருக்கும் முக்கியம். உங்க இடத்துல வேற யாராவது இருந்து இருந்தா இப்பவும் நான் அம்மாவுக்கும் பிரவீனுக்கும் தான் சப்போர்ட் செய்வேன். ஆனா, இப்போ இந்த இடத்துல இருக்குறது நீங்க. முதல் காரணம், நீங்க தேவா மாமாவோட பையன். அந்த ஒரு காரணம் போதும். அன்ட், எனக்கு உங்கள பிடிச்சு இருக்கு. எந்த சந்தேகமும் எனக்கு கிடையாது. இதுவும் நான் நடிக்குறதா உங்களுக்கு தெரிஞ்சா அப்டியே வச்சுக்கோங்க.

எனக்கு இருக்குற ஒரு கேள்வி, திகழுக்கு யாருன்னே தெரியாத ஒருத்தர்ர மாப்ளயா பாக்குறப்போ ஒரு அண்ணனா நீங்க அந்த பையன பத்தி விசாரிக்க மாட்டீங்களா? இதுக்கு பதில யோசிச்சு பாருங்க. ‘சரி’ன்னு பதில் வந்தா பிரவீன் செஞ்சது சரிதான். அம்மா செஞ்சதும் சரிதான். இதுக்கு மேல நடிக்குற என்னை கல்யாணம் செய்துக்கனுமா வேண்டாமான்னு நீங்க முடிவு செஞ்சிக்கோங்க.” இறுதி வரிகளில் அவளின் கண்கள் கலங்கி இருந்தது. சொன்னவள் பதிலேதும் எதிர்பார்க்காமல் அவனைக் கடந்து சென்றாள்.

படியிறங்கும் முன், “அன்ட் பைனல், என்னை நீங்க என்ன வேணா பேசலாம். ஆனா, அம்மாவயோ, பிரவீனையோ பேச யாருக்கும் ரைட்ஸ் கிடையாது.” என்று காரமாக மொழிந்துவிட்டு சென்றுவிட்டாள்.

தான் பேசிய வார்த்தைகளின் வீரியத்தை தற்போது உணர்ந்தான் இளையா. ‘தன் நிலையை அவள் யோசித்து இருக்கின்றாள். அவளின் நிலையையும் நாம் யோசித்து இருக்க வேண்டும். ஏன் இந்த கோபம்? தன்னவள் தன்னை சந்தேகித்துவிட்டாள் என்ற உரிமையின்பேரில் வந்த கோபமா?’ என்று யோசித்துக் கொண்டிருந்தவனின் சிந்தனையில் அவள் இறுதியாக கேட்ட கேள்விகள் வரிசைக் கட்டி நின்றது.

‘திகழுக்கு மாப்ள பாக்குறப்போ அந்த பையன பத்தி விசாரிக்க மாட்டீங்களா?’ ஆம் தானே. அண்ணனாக விசாரித்து தானே அடுத்த முயற்சி நடக்கும். அதே போல் தனக்காக பிரவீன் விசாரித்துள்ளான் பிறையின் சொல்படி, என்று சொல்லாமல் சொல்லிவிட்டாள்.

ஒரு மணி நேரம் சுய அலசில் இருந்தவன், தெளிவாகினான். தன்மேலும் தவறு இருக்கின்றது. இதழுக்கு நடந்த எதுவும் தெரியாதபட்சத்தில் அவளை சாடியதும் தவறுதான் என்று உணர்ந்தவன், தெளிந்த முகத்தோடு நின்றிருந்தான். இதை இதோடு விட்டுவிடவேண்டும் என்று தீர்க்கமாக முடிவெடுத்தவன் மணியைப் பார்க்க, நிச்சயதார்த்தத்திற்கு இன்னும் அரை மணி நேரமே இருக்கின்றது என்று உணர்ந்தவன் தன்னவளை எதிர்நோக்கியபடி கீழே வந்தான்.

அனைவரும் பரப்பரப்பாக தயாராகிக் கொண்டிருக்க, பிரவீன் இளையாவை நோக்கி வந்தான்.

“சாரி பிரவீன். கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன். இதழ கால் பண்ண சொல்றீங்களா?” என்று கேட்க, பிரவீன் முகத்தில் தொலைந்திருந்த ஜீவன் உயிர் பெற்றதை போல் அப்படியொரு புன்னகை.

“பரவால்ல ப்ரோ. இதுல என்ன இருக்கு.? நான்.. நான் உடனே போய் எருமய… ஸ்ஸ்ஸ்.. சாரி இதழ கால் பண்ண சொல்றேன்.” என்று சிரிப்போடு இதழ் இருக்கும் அறையை நோக்கி ஓடினான்.

இந்த புன்னகைக்கு இதழ் நம்மை சாடியது தவறே இல்லை என்றே தோன்றியது இளையாவிற்கு.

புன்னகையோடு அறைக்குள் செல்ல, அகிலன் இன்னமும் தெளியாத முகத்தோடு நின்றிருந்தான்.

“என்னடா ஆச்சு? இதழ் அப்போவே வந்துட்டாங்க. நீ என்ன இவ்ளோ நேரம்.? அம்மா எத்தன தடவ வந்து கேட்டாங்க தெரியுமா? கால் பண்ணாலும் எடுக்கல.” என்றான் பதட்டமாக.

“சில் மச்சான். எல்லாம் சால்வ்டு. என் பொண்டாட்டி எனக்கு புரிய வச்சிட்டா.” என்று கண்ணடித்து கூற, ஆசுவாசமாக உணர்ந்தான் அகிலன்.

இங்கு எப்படி இளையாவிடம் தன் அன்னைக்காகவும் பிரவீனிற்காகவும் வாதாடினாளோ அங்கு அறையில் பிறையிடமும் இளையாவிற்காக பேசியிருந்தாள்.

மாடியை விட்டு இறங்கி வந்தவள், தன் அன்னையிடம் இதைப் பற்றி தற்போதே பேச வேண்டும் என்று தன் அறைக்குள் சென்றாள். பிறை அங்கே அவளுக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருக்க, அறையில் மகிழாழியை தவிர யாரும் இல்லை.

“மகி, அமுதன் உன்னை கூப்டாங்க. என்னன்னு பாரு.”

“சரி இதழ்” என்று அவள் செல்ல,

“வந்துட்டியா இதழ். இந்த புடவைக்கு ஜூவல்ஸ் எடுத்து வச்சியிருக்கேன். ஓகேவா பாரேன்?” என்றபடி திரும்ப, அவரையே கூர்ந்து நோக்கியவள், “ஏன்மா இப்டி பண்ணீங்க?” என்று கேட்டாள்.

“என்ன இதழ்? என்ன பண்ணேன்.?”

“ஏன், இளையாவ பத்தி விசாரிக்க சொல்லி பிரவீனையும் அமுதனயும் அனுப்புனீங்க?”

அவளின் நேரடி கேள்வியில் தவித்தவர் என்ன பதில் சொல்வதென்று தடுமாறினார்.

“ம்மா, உங்களுக்கு நல்லாவே தெரியும், இந்த விசயம் அப்பாவுக்கு சுத்தமா பிடிக்காது. அப்பாவுக்கு பிடிக்காதது எனக்கும் பிடிக்காது. அதக்கூட விடுங்க, நான் இப்போ ஒருத்தர லவ் பண்ணி அவங்கள பத்தி நீங்க விசாரிக்குறீங்கன்னா கூட ஏதோ ஒரு வகைல அத ஒத்துக்குவேன். ஆனா, இளையா? நீங்க பார்த்த பையன் தானே? இதுலயும் தேவா மாமாவோட பையன். தேவா மாமா நம்ம அப்பாவோட ப்ரென்ட் தானே? இப்போ எனக்கு என்ன தெரியுமா மா தோணுது, இளையாவ சந்தேகப்படுறது அப்பாவ சந்தேகப்படுற மாதிரி இருக்கு. ஏன்மா?”

“இதழ்… என்ன பேசுற? அப்பாவ?”

“கோபம் வருதுல மா.? நானும் இளையாவ அப்டி பாத்துட்டேன்மா. என்னோட எல்லாமுமேவா! அப்போ எனக்கும் கோபம் இருக்குமே? இதுல இந்த விசயத்த பிரவீன செய்ய சொல்லி இருக்கீங்க? என்னை அந்த மாதிரி ஒருத்தர் சந்தேகப்பட்டு விசாரிச்சா சரியா மா? எனக்கு உங்க எண்ணம் புரியுது மா. பெத்தவங்களா தன் பிள்ளைங்களுக்கு சரியான துணை அமையணும்னு நினைக்குறதுல தப்பில்ல. ஆனா, அது சந்தேகம்னு வரப்போ தானே மா. எனக்கு இளையா மேல எந்த சந்தேகமும் கிடையாது. உங்களுக்கு சந்தேகம் இருந்தா ஏன்மா இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சீங்க?” என்றவளின் கண்கள் கலங்கி இருந்தது. இதுவரை தன்தாய் அனைத்திலும் சிறந்தவர் என்ற கண்ணோட்டத்தில் பார்த்து வந்தவள், இன்று அவரே தனக்கு பிடிக்காத செயலை செய்துவிட்டு, தன்னாலேயே குற்றம் சுமத்தப்படும் நிலையில் நிற்க அதை இதழால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

“அட இதழ்! சாரிடா. அம்மா செஞ்சது தப்புதான். சந்தேகம்னுலாம் இல்ல. என்னதான் தேவா அண்ணாவோட பையனா இருந்தாலும் பிள்ளைங்க எந்த தப்பும் செய்ய மாட்டாங்கன்னு முழுசா சொல்லிட முடியாது இதழ். எல்லாமே பேரன்ட்ஸ் கிட்ட சொல்லிட முடியாது இல்லயா.? அன்ட், ப்யூச்சர்ல இளையாகிட்ட ஏதாவது ஒரு தப்பு உனக்கு தெரிய வந்து, ‘நீங்க சி.பி.ஐ ஆஃபிசர்தானே மா? ஏன் விசாரிக்கல?’ன்னு கேட்டா அம்மா என்னடா பதில் சொல்வேன்.? பட், உனக்கும் அப்பாக்கும் பிடிக்காதுன்னு தெரிஞ்சே அம்மா இத செஞ்சுட்டேன். இனிமே இந்த மாதிரி தப்ப செய்ய மாட்டேன் இதழ்மா. திருத்திக்குறேன்.” பிறைக்கு அத்தனை பெருமை. அனைவரும் இப்படி பெருமை கொள்வாரா என்பது சந்தேகம்தான். தன் பெற்றோர்கள் ஏதாவது தவறு செய்து அதை பிள்ளைகள் சுட்டிக் காட்டினால், ‘நான் பெத்து வளர்த்தா, என்னயவே நீ தப்பு சொல்றியா? உனக்கு எல்லாம் தெரியுமா?’ என்று இன்றும் இத்தகைய கேள்விகளை கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர்.

ஆனால், பிறையின் இந்த சொற்கள் இதழைக் குத்தி கிழித்தது. அவர் சொல்வதும் சரிதானே? என்னதான் வீட்டிற்கு நல்ல பிள்ளையாகவே இருந்தாலும், அந்தந்த வயதில் அனைவரும் ஏதோ ஒரு தவறை செய்துதான் இருப்போம். அனைவரும் அனைத்தையும் பெற்றவர்களிடம் சொல்லிவிடுவது இல்லையே? ஏன் இதழும் தற்போது பெற்றவர்கள் மறுத்த, தனக்கு பிடித்த வேலையை மறைமுகமாக செய்துக் கொண்டுதானே இருக்கின்றாள்? அப்போது அதுவும் தவறுதானே? என்ற பலவித யோசனைகள் அவளை ஆட்டிவைத்தது.

மகளிடம் பேசியவர், தன் தவறை உணர்ந்தாலும் உள்ளுக்குள் சிறிது வருத்தம் இருக்கத்தான் செய்தது.

“எத பத்தியும் யோசிக்காத இதழ். இன்னும் கொஞ்ச நேரத்துல நிச்சயம். சிரிச்ச முகமா கிளம்பி வா. அம்மா அடுத்த வேலைய பாக்குறேன்” என்று சென்றுவிட, இதழும் சற்று நிதானமாக கிளம்ப ஆயுத்தமானாள்.

புடவைக் கட்டிக்கொண்டு இருக்க, இளையாவிடமிருந்து அழைப்பு வந்தது. பிரவீனிடம் இதழை அழைக்க சொல்லியவன், வெகுநேரமாக அவள் அழைக்காததில் தானே அழைத்தான்.

அதற்குள் அங்கே அந்த ருக்மணி பாட்டி புது பிரச்சனையை கிளப்பி இருந்தார்.   

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்