Loading

அத்தியாயம் 1

நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய

ஹர ஹர சிவனே அருணாச்சலனே
அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

என்று இசைப்பானிலிருந்து கசிந்த பாடலுடன் தானும் பாடியபடி பக்தியுடன் பூஜையறையில் இருந்தது இக்கதையின் நாயகி என்று நீங்கள் நினைத்தால், அது தான் தவறு.

ஆறடியில் பக்கத்துக்கு வீட்டு பையன் போல் தோன்றும் உருவ அமைப்புடனும், எப்போதும் சிரிக்கும் இதழ்களுடனும் இருப்பவன் தான் ராகவ். பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் கண்கள் பேசும் என்பது போல எல்லா பாவனைகளையும் காட்டும் ‘எக்ஸ்ப்ரெஸிவ் ஐஸ்’ அவனிற்கு.

பொதுவாக அவன் பக்தியில் ஊறிக்கிடப்பவன் கிடையாது தான். அவ்வப்போது கோயிலுக்கு சென்று வருபவன் தான் என்றாலும், இப்படி காலையில் நேரத்துடன் குளித்துவிட்டு கடவுளை வணங்குபவன் அல்ல.

அப்படிப்பட்டவன் அவனின் இரண்டு மணி நேர தூக்கத்தை தியாகம் செய்து, அதிகாலையில் எழுந்து, குளித்துவிட்டு கடவுளை வணங்குகிறான் என்றால் அதற்கு ஒரே காரணம், இன்று அவனின் செல்ல ராட்சசிக்குப் பிறந்தநாள் என்பதே ஆகும்.

ஆம் அவளின் தொடர் நச்சரிப்பு தாங்காதவன், இவற்றையெல்லாம் செய்து கொண்டிருக்கிறான். இல்லையென்றால் இந்நேரத்திற்கு பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை அவனின் அலைபேசி அலறியிருக்கும், மங்கையவளின் இடைவிடாத அழைப்புகளால்.

“கடவுளே, ஒவ்வொரு வருஷமும் இதே வேண்டுதல் தான் வைக்குறேன். அந்த லூசுக்கு நல்ல புத்தியை தா… அவகிட்ட இருந்து மத்தவங்களை எப்படியாவது காப்பாத்திடு…” என்று வாய்விட்டு வேண்டிக் கொண்டிருந்தவன், அவனைச் சுற்றி அனலடிக்க கண்களைத் திறந்து பார்த்தவன் எதிரில், அவன் சற்று முன் கூறிய ‘லூசு’ கண்களைச் சுருக்கி கோபமாக (!!!) நின்று கொண்டிருந்தாள்.

ராகவ் மனதினுள் ‘ஜெர்க்’கானாலும் வெளியில் அது தெரியாதபடி, “ஹே வீன்ஸ் எப்ப வந்த..?” என்று வினவியபடியே அவளை விட்டு இரண்டடி பின் சென்றான். பின்னே, அவளின் அடியிலிருந்து தப்பிக்க வேண்டுமே!

“நில்லு டா ராக்கி… எவ்ளோ தைரியமிருந்தா என்னை லூசுன்னு சொல்லுவ. அதுவும் இன்னைக்கு எனக்கு பெர்த்டே… பெர்த்டே பேபின்னு கூட பார்க்காம என்னை கலாய்ச்சுட்டு இருக்கீயா…” என்று புசுபுசுவென மூச்சு வாங்கிக் கொண்டே அவனைத் துரத்தினாள்.

“வீன்ஸ் இப்போ யாரை பேபின்னு சொன்ன..?” என்று ஓடிக் கொண்டிருக்கும் நேரத்திலும் அவளை வம்பிழுத்துக் கொண்டிருந்தான் ராகவ்.

அதைக் கேட்டவள் இன்னும் வேகமாக துரத்த, அவனும் சளைக்காமல் அந்த இரட்டை படுக்கையறை கொண்ட வீட்டை சுற்றிக் கொண்டிருந்தான். இவர்களின் ஓட்டத்தை, பாதி கண்கள் திறந்த நிலையில், கைகளை கன்னத்தில் முட்டுக் கொடுத்து பார்த்துக் கொண்டிருந்தது ஒரு ஜீவன். அந்த ஜீவன் பெயரே ஜீவா தான். ராகவுடன் இதே வீட்டை பகிர்ந்து கொண்டு வாழும் அப்பாவி. ராகவின் ‘வீன்ஸ்’ தத்தெடுத்துக் கொண்ட ‘ரெடிமேட் அண்ணன்’.

அவர்கள் இருவரும், அந்த ஜீவனை ஒரு பொருட்டாகக் கூட மதியாமல், அந்த வீட்டை சுற்றுவதையே தங்களின் குறிக்கோளாகக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தனர். ஏற்கனவே தூக்கக் கலக்கத்தில் இருந்த ஜீவா, இவர்கள் சுற்றுவதைக் கண்டு ‘சுத்தி சுத்தி வந்தீக…’ என்று பாடாத குறையாக அமர்ந்திருந்தான்.

“டேய் நில்லு டா ராக்கி…” என்று ஓட முடியாமல் கீழே குனிந்து மூச்சு வாங்கியபடி நின்றாள் அவள்.

“உன் பிரென்ட் கொடுத்ததை, வயித்துல கொஞ்சம் கூட கேப்பே விடாம அடைச்சுட்டு வந்திருப்ப… அதான் ஓட முடியாம மூச்சு வாங்குது…” என்றவாறே அவளின் அருகில் வந்தான்.

அவன் கையெட்டும் தூரத்திற்கு வந்த பின்னர், ஒரே பிடியில் அவனின் சட்டைக் காலரைப் பற்றியவள், “என்ன டா சொன்ன… நானா லூசு… என்கிட்ட இருந்து எல்லாரையும் காப்பாத்தணுமா…” என்று அவனை அடிக்க ஆரம்பித்தாள்.

ராகவிற்கு வலிக்காவிட்டாலும், வலிப்பதைப் போல் நடித்து, “ஹே லூசு விடு டி…” என்று அலறினான். அதில் இவர்களைக் கண்ட ஜீவா, ‘இன்னுமா இந்த சீன் ஓடிட்டு இருக்கு…’ என்பதைப் போல் பார்த்துவிட்டு மீண்டும் கண்களை மூடி சாய்ந்து விட்டான்.

“உன்னை எட்டு மணிக்கெல்லாம் கிளம்பி கீழ வெயிட் பண்ண சொன்னா, இப்போ தான் சார் சாமி கும்பிட்டுட்டு இருக்கீங்க… இன்னும் நீ கிளம்ப எவ்ளோ நேரமாகுமோ… அங்க எல்லாரும் நமக்காக காத்திட்டு இருப்பாங்க…” என்று அவள் கூறவும், ‘அடிப்பாவி…’ என்று பார்த்து வைத்தனர் நண்பர்கள் இருவரும்.

அவள் கூறியவை அனைத்தும் வார்த்தை மாறாமல் தினமும் அவளிடம் கூறுவது ராகவாயிற்றே!

“வீன்ஸு… எங்க உன் மனச தொட்டு சொல்லு… இது உனக்கே அநியாயமா தெரியல…” என்று நெஞ்சில் கைவைத்து கேட்ட ராகவைக் கண்டு, கண்ணடித்து புன்னகை பூத்தவள், “இல்ல…” என்றவாறே அவனை இழுத்துக் கொண்டு நடுகூடத்திற்கு சென்றாள்.

அங்கு அரைக் கண்ணை திறந்து பார்த்தபடி இருந்த ஜீவாவைக் கண்டவள், “ஓய் அண்ணா, இன்னும் என்ன தூக்கம்…” என்று அவனை உலுக்கினாள்.

“எம்மா தாயே… உன் பெர்த் டேக்கு, உனக்குன்னு நேர்ந்து விட்டவன் அவன் சீக்கிரமா எழுந்தா ஒரு நியாயம் இருக்கு… வொய் மீ..?” என்று பரிதாபமாகக் கேட்டவனை முறைத்தவள், “உன்னைத் தான் அண்ணாவா தத்தெடுத்துட்டேன்ல… ஆமா என் கிஃப்ட் எங்க..?” என்று அவளின் விசாரணையை துவங்கினாள்.

“கிஃப்ட்டா… அது… கிஃப்ட்டு…” என்று திக்கியவாறே ராகவை நோக்கி, ‘அட கிராதகா… காப்பாத்தேன் டா…’ என்ற பார்வை பார்க்க, இவ்வளவு நேரமும் ஜீவா அவனின் வீன்ஸிடம் சிக்கி சின்னாபின்னமாவதை சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவன், நண்பனை காக்க, “ஹே வீன்ஸ்…போதும் விடு.. அவன் எங்க போயிட போறான்… இன்னைக்கு ஈவினிங் வந்து அவனை பார்த்துக்கலாம்…” என்று அவளை கிளப்பினான்.

‘ஈவினிங் இங்க இருந்தா தான டா…’ என்று மனதிற்குள் கூறிக் கொண்டான் ஜீவா.

ராகவ் மற்றும் அவனின் வீன்ஸ் அவர்கள் போக வேண்டிய இடத்திற்கு சென்று சேரும் முன் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

ராகவ் மற்றும் பிரவீணா (ராகவின் வீன்ஸ்… ராகவிற்கு மட்டுமே வீன்ஸ்…) இருவரும் பால்ய காலத்திலிருந்தே இணைபிரியாத நண்பர்கள். ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒரே கட்டிலில் தூங்கி என்று அக்மார்க் நண்பர்களுக்கு எடுத்துக்காட்டு இவர்கள் தான்.

அவர்களின் நட்பு இவ்வளவு வலுப்பெற காரணம் அவர்களின் குடும்பம் என்று கூறினால், அது மிகையாகாது.

ராகவின் பெற்றோர், நந்தகோபால் மற்றும் மாலதி ஒரே வங்கியில் பணிபுரிந்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். வழக்கம் போல, இவர்களின் காதலை வீட்டில் ஒப்புக்கொள்ள மறுக்க, அன்றிலிருந்து இன்றுவரை பிறந்த வீட்டு தொடர்பே இல்லாமல் வாழ்ந்து வருபவர்கள். ஆனால் அந்த குறை தெரியாமல் பார்த்துக் கொண்டவர்கள் கோபாலகிருஷ்ணன் – ரேவதி தம்பதியர், பிரவீணாவின் பெற்றோர்.

இவர்களும் ஒரு வகையில் பிறந்த வீட்டு தொடர்பு இல்லாதவர்கள் தான். ரேவதி, கோபாலகிருஷ்ணனின் அத்தை மகள் தான். இவர்களின் திருமணம் முடிய காத்திருந்ததைப் போல இவர்களின் பெற்றோர்கள் இறக்க, அவர்களின் நிதி நிலைமை மோசமானதால் மற்ற சொந்தங்களின் வரவும் குறைந்து போனது.

துன்பம் வரும் வேளையில் தான் உண்மையான துணையைக் காண முடியும் என்பதை நன்கு அறிந்து கொண்டனர் இரு குடும்பங்களுமே.

உறவுகளின் ஒதுக்கத்தால், தளர்ந்திருந்த இரு குடும்பங்களுக்கும் நட்பு என்ற மற்றொரு கதவைத் திறந்து வைத்தார் கடவுள். அதை சரியாக உபயோகித்த இரு குடும்பங்களும், ஒருவருக்கு மற்றவர் துணையாகிப் போயினர்.

இவர்களின் பிணைப்பை இறுக்கப் பிறந்தவள் தான் பிரவீணா. கோபாலகிருஷ்ணன் மற்றும் ரேவதியின் சுட்டிப் பெண் என்பதைக் காட்டிலும் ராகவின் ‘செல்ல ராட்சசி’ என்று அவர்களின் குடியிருப்பு முழுவதும் பிரசித்தி பெற்றவள்.

பிரவீணா பிறந்த போது ராகவிற்கு நான்கு வயது. அதுவரையிலும் தனித்தே இருந்தவனை, அவளின் வரவு குதூகலப்படுத்தியது உண்மையே. அந்த வயதிலேயே, தன்னைப் போல அவளும் தனிமையில் கழிக்கக் கூடாது என்று எண்ணினானோ, யாரும் சொல்லாமலேயே அவளின் பொறுப்பை அவன் எடுத்துக் கொண்டான்.

அவ்வப்போது ஊட்டி விடுவது, தூங்க வைப்பது முதல், எங்கு சென்றாலும் அவளை பத்திரமாக பார்த்துக் கொள்வது வரை அவனே அவளைப் பேணி பாதுக்காக்க, பெற்றவர்களுக்கு சற்று நிம்மதி தான்.

ஏனெனில், பிரவீணாவின் சேட்டை அப்படி. துறுதுறுவென்று ஓடிக் கொண்டே இருப்பவளை சமாளிப்பதற்குள், ரேவதிக்கு போதும் போதும் என்று ஆகிவிடும். சமையலறையில் அவள் கலைத்து வைத்ததை அடுக்குவதற்குள், படுக்கையறையிலுள்ளவற்றை கலைத்து விடுவாள்.

இப்படிப்பட்டவள் அடங்குவது ராகவிடமே. அதற்காக அவனிற்கு பயந்து அவன் சொல்வதை கேட்பாள் என்பதில்லை. அவளுடன் சண்டை போட்டாவது அவளின் கவனத்தை வேறு புறம் திருப்பி விடுவான், ராகவ்.

இவ்வாறு சிறு வயதிலிருந்தே ராகவை வால் பிடித்து சுற்றி வருபவளை, பலர் கேலி செய்து கிண்டலடித்தாலும், அசராமல் பதிலுக்கு பதில் அவர்களுடன் மல்லுகட்டுவாளே தவிர, ஒரு நாள் ஒரு பொழுது கூட அவனிடம் பேசாமல் இருந்ததில்லை. இந்த காரணத்திற்காகவே அவன் சுற்றுலா செல்லக் கூட அனுமதிப்பதில்லை!

வீணாவின் பிடிவாதம் நாளுக்கு நாள் அதிகரிக்க, அவளின் பெற்றோர் அவளைக் கண்டிக்க, அதற்கும் ராகவிடமே சென்று நின்றாள். இறுதியில், ராகவ் தான், “மாமா, அவ சின்ன பொண்ணு தான… இன்னும் கொஞ்சம் மெச்சூரிட்டி வந்தா, இப்படி பிஹேவ் பண்ண மாட்டா…” என்று அவர்களை சமாதானப் படுத்தினான்.

அவனின் கணிப்பு படியே, வருடங்கள் கடக்க வீணாவிடமும் சில மாற்றங்கள் வந்தன. ராகவை கல்லூரி விடுதியில் தங்கி படிக்க அனுமதிக்கும் அளவிற்கு சற்று மாறினாள்.

வீணா பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்கு போகும் சமயம், ராகவைப் போலவே அவளும் பத்திரிக்கை துறையில் படிக்க விரும்பவதாகக் கூற, இரு குடும்பங்களிடமிருந்தும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அவளின் பாதுகாப்பிற்காக அவர்கள் தயங்க, அப்போதும் ராகவின் துணையை நாடி, நினைத்ததை சாதித்தாள்.

ஆனால், அவள் படிக்க செல்லும் முன் ராகவின் பலகட்ட அறிவுரைகளைக் கேட்டு, அதன்படி நடப்பதாக உறுதியளித்த பின்பே அவளை கல்லூரிக்கு செல்ல அனுமதித்தான் ராகவ்.

அதில் முதன்மையாக, வேலை என்று வந்துவிட்டால், அவளின் சிறுப்பிள்ளைத்தனத்தை எல்லாம் விட்டுவிட்டு கவனமாக நடக்க வேண்டும். தனக்கு இருக்கும் ஆபத்தை அறிந்து அதற்கு தக்க பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே வேலையில் ஈடுபட வேண்டும். – இவையெல்லாம் வீணா கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் முன்னரே அவன் கூறியவை.

ஆனால், இப்போது வேலைக்கு வந்த பின்னரும் கூட, அவற்றையெல்லாம் அவள் கண்டுகொள்வதே இல்லை. கேட்டால், அவளின் ராக்கி அதை பார்த்துக் கொள்வான் என்று அலட்சியமாகக் கூறுவாள்.

ராகவும் அவளின் அலட்சியத்தை பல முறை கண்டித்தாலும், அது செவிடன் காதில் ஊதிய சங்காகத் தான் இருக்கும். இதன் காரணமாகவே, மேலதிகாரியின் கோபத்திற்கு ஆளானாலும் பரவாயில்லை என்று அவளைத் தனியே விடாமல், தன்னுடனே கூட்டிக்கொண்டு சுற்றுவான். சில சிக்கலான செய்திகளை சேகரிக்கும் போது மட்டும் அவளின் தோழியரிடம் ஆயிரம் பத்திரங்கள் சொல்லி விட்டுவிட்டு செல்வான்.

இப்போது அவளின் பாதுகாப்பிற்காக இவ்வளவு மெனக்கெடுபவன், அவளின் உயிரே ஆபத்தில் இருக்கும்போது கையறு நிலையில் இருப்பான் என்றோ, அவளை அடித்தாவது, அவளின் பிடிவாதத்தை குறைத்திருக்கலாம் என்று பின்னால் வருத்தப்படுவான் என்றோ ராகவ் சற்றும் நினைத்திருக்க மாட்டான்.

அதே போல, எந்த ராகவின் மேல், மீயுடைமை மிகுந்து அவன் பின்னே சுற்றிக் கொண்டிருக்கிறாளோ, அவனையே வேண்டாம் என்று ஒதுக்கப் போவதையும் வீணாவும் அறியவில்லை…

பிற்காலத்தில் நடக்கப் போவதை முற்காலத்திலேயே உணர்ந்து கொண்டால், வாழ்க்கையில் சுவாரஸ்யம் ஏது..?

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
6
+1
0
+1
1
  • Select

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments