Loading

 

அத்தியாயம் 25

ஆறு பேருமே மலைக்கிராமத்தின் அடிவாரத்தில் இருக்கும் பஜாரில், அவர்களால் குறிப்பிடப்பட்ட அண்ணாச்சி கடை முன் நின்றனர்.

உத்ஷவி, “நீ போய் திங்க்ஸ் வாங்குடா என்னை விடு…” என இன்னும் அவன் கையில் சிக்கி இருந்த அவளது கையை விடுவித்துக் கொள்ள முயன்றாள்.

ஸ்வரூப்போ, அவளது உள்ளங்கையை இறுக்கிப் பற்றிக்கொண்டு, சஜித்தைக் கண் காட்ட, அவன் உள்ளே சென்று வாசற்புறம் இருந்த கேமராவைப் பார்த்தான்.

அவனைப் பார்த்ததும் பதறிய அண்ணாச்சி என்னும் கடை முதலாளி, வேட்டிக் கட்டை இறக்கி விட்டு, “கும்புடுறேங்கய்யா!” என வணங்கினான்.

அவனுக்கு ஒரு தலையசைப்பைக் கொடுத்தவன், “இந்த கேமராவை நாங்க வைக்கலையே. நீங்க வச்சுக்கிட்டீங்களா?” எனக் கூர்மையுடன் வினவ, அண்ணாச்சியோ “கேமராவா?” என விழித்து விட்டு, கடையின் வெளிப்புறம் வந்து பார்த்துத் திகைத்தார்.

“இது தான் கேமராவாங்கய்யா?” என அவர் கேட்ட கேள்வியில் சஜித் சகோதரர்களைத் திரும்பிப் பார்க்க, கையிலிட்ட கட்டை சரி செய்தபடி அவர்களின் அருகில் வந்த ஜோஷித், “உன் கடை வாசல்ல முன்னாடி தான இருக்கு… தெரியாத மாதிரி கேக்குற?” என அதட்டுவது போல கேட்டான்.

“ஐயா… சாமி சத்தியமா இதை இவ்ளோ நாளா நான் பார்க்கவே இல்லைங்கய்யா. டேய் சோட்டு உனக்கு இது எப்படி வந்துச்சுன்னு தெரியுமா?” என அந்த ஐம்பது வயது அண்ணாச்சி, கடையினுள் யாருக்கோ குரல் கொடுத்தார்.

அதில் உள்ளே இருந்து பதின்வயது சிறுவன் வெளியில் வந்தான். வந்தவன், திருதிருவென விழித்து விட்டு, அண்ணாச்சி காதில் ஏனோ முணுமுணுக்க, அவன் முதுகில் அடி ஒன்றை வைத்தார் அண்ணாச்சி.

“இதை ஏன்டா முன்னாடியே சொல்லல.” என அடிக்குரலில் கடிந்தவர், ஆடவர்களின் முன்பு பணிந்து,

“ஐயா… கொஞ்ச நாளைக்கு முன்ன நான் உடம்புக்கு முடியாம வீட்ல இருந்தேன். மூணு நாளைக்கு மேல கடையைப் பூட்டி வச்சுருந்தேன். அந்த நேரத்துல யாரோ ரெண்டு பேரு கடை வாசல்ல நின்னு ஏதோ செஞ்சாங்களாம். கடைல இருக்குற பொருளைப் பாத்துக்கணும்ன்னு இந்தப்  பயலை கடை வாசல்லயே தான் இருக்க சொல்லிருந்தேன். ராத்திரி தூங்குற நேரத்துல ஆளுங்க வந்ததை பார்த்தும் என்கிட்ட சொல்லாம இருந்துருக்கான்.” என மீண்டும் சோட்டுவை முறைத்து முதுகில் அடித்தவர் கடைக்குள் செல்லச் சொன்னார்.

அவனும் வலியில் முகத்தைச் சுருக்கியபடி உள்ளே செல்லப் போக, “நில்லு” என்றபடி அங்கு வந்த ஸ்வரூப், சோட்டுவின் உயரத்திற்குக் குனிந்து அமர்ந்து, “இங்க ஆளுங்க வந்தும், ஏன் சொல்லல தம்பி.” என மென்மையுடன் வினவ,

அவன் அண்ணாச்சியை ஒரு முறை பயத்துடன் பார்த்து விட்டு, “அவங்க கடையை திறக்கலண்ணே. உள்ளே எதுனா காணாம போன தான் ஐயா சொல்ல சொன்னாரு. நான் வாசல்லேயே தான் படுத்து பாத்துக்குட்டேன். யாரும் உள்ள வந்து எதையும் எடுத்துப் போகல.” என்றான் தலையை ஆட்டி.

ஜோஷித், “அவனுங்க எப்படி இருந்தானுங்கன்னு தெரியுமா தம்பி” என வினவ, அவனோ சற்று சிந்தித்து விட்டு, “நல்லா உயரமா இருந்தாங்கண்ணே. வேற எதுவும் தெரியலயே” எனப் பாவமாக உரைத்தான்.

அக்ஷிதா தான், “உயரமா இருக்கறதை எல்லாம் க்ளூவா வச்சு எப்படித் தேடுறது?” என சலிக்க,

விஹானா, “எதுக்கும் கேமரால மூஞ்சியைக் காட்டாம நில்லு டார்ல்ஸ். அப்பறம் நம்மளை கடத்திட்டு போயிடப் போறானுங்க” என ஒதுங்கி நின்று கொண்டாள்.

“கடத்திட்டு போனா கண்டமாகுறது அவனுங்க தான்.” என்ற அக்ஷிதாவின் கூற்றில் விஹானா நகைத்தாள்.

சிறுவனிடம் இருந்து வேறேதும் விவரம் கிடைக்காது என்றறிந்ததும் பெருமூச்சுடன் எழுந்த ஸ்வரூப், அந்த கேமராவை முறைத்து விட்டு, அதனை எடுக்க உத்தரவிட்டான் சஜித்திடம்.

உத்ஷவி, “அதை ஏன் எடுக்க சொல்ற. அது இருந்தா தான, அடுத்து யாரைக் கடத்துறாங்கன்னு தெரியும். அட்லீஸ்ட் ஃபாலோ பண்ணவாவது பிரயோஜனமா இருக்கும்” எனக் குழப்பமாகக் கேட்க,

“எப்பவும் மத்தவங்க கண் பார்வைக்குள்ள நம்ம இருக்கக் கூடாது, நம்மளோட கழுகுப் பார்வையில தான் மத்தவங்களோட நடவடிக்கையை வாட்ச் பண்ணனும்.” என்றதில்,

“இவனும் கழுகு கழுதைன்னு மாஸ் டயலாக்லாம் பேச தான் செய்றான். ஆனா, க்ளூ தான் கிடைச்ச பாடில்லை…” என முணுமுணுத்துக் கொண்டாள் உத்ஷவி.

அதில் பெண்கள் இருவரும் பொங்கிய சிரிப்பை அடக்கிக்கொள்ள, நல்லவேளையாக அது ஆடவர்களின் காதில் விழுகவில்லை.

சஜித் சிசிடிவி கேமராவை எடுத்து விட்டதும், ஜோஷித், “இங்க நம்ம கேமரா ஃபிக்ஸ் பண்ணிடலாம். யாருக்கும் தெரியாத மாதிரி” எனக் கூற, அதனை ஆமோதிக்கும் விதமாக ஸ்வரூப் தலையாட்டினான்.

பின், கிளம்ப எத்தனித்தவன் ஒரு நொடி நிதானித்து, அண்ணாச்சியை பளாரெனக் கன்னத்தில் ஒரு அறை அறைந்தான்.

“சின்னப் பையனை வேலைக்கு வைக்கிறதே தப்பு. இதுல மூணு நாளும் நைட்டு முழுக்க, வாசல்ல படுக்க வச்சுருக்க. அது போதாதுன்னு, கை நீட்டுற பழக்கம் வேற.” என்று பல்லைக்கடித்தவன்,

“யார் இந்தப் பையன்?” என மிரட்டலுடன் வினவ, அண்ணாச்சிக்கு ஒரு காது கேட்கவே இல்லை பாவம்.

“கேட்குறது உன்னைத் தான பதில் சொல்லுய்யா” என சஜித் உறும,

“என்னை தான் கேட்குறீங்கன்னு தெரியுதுய்யா, ஆனா என்ன கேட்குறீங்கன்னு தான் கேட்கல.” எனப் பரிதாபமாகப் பதில் கூற,

“ஒன்னு சுடுறான் இல்லன்னா செவுள்ளயே விடுறான்.” என அவன் அறைந்ததை எண்ணி கன்னத்தைத் தேய்த்துக் கொண்டாள் உத்ஷவி.

பின், ஸ்வரூப் முறைத்ததில் மிரண்ட அண்ணாச்சி, “என் உறவுக்காரப் பையன்ய்யா. சொந்தம்ன்னு யாரும் இல்ல. அதான் நான் சோறு போட்டுட்டு இருக்கேன்.” என்றதில், ஜோஷித், “சோறு போடுறியா? அடிமையா வச்சுருக்கியா?” எனக் காட்டத்துடன் கேட்டிட, அவருக்குத் தான் குலை நடுங்கியது.

“எனக்கு ஏற்கனவே 4 பசங்கய்யா. இவனையும் வச்சு சமாளிக்க முடியல. அதான் கடைக்கு ஒத்தாசைக்கு வச்சுருக்கேன்.” என எச்சிலை விழுங்கியபடி கூறிட,

சஜித், “அப்போ பாவப்பட்டு அவனை நல்லபடியா வளர்க்குறதுக்கு கூட்டிட்டு வரல. சம்பளமில்லாத வேலைக்காரனா இருக்கத் தான் அண்ணாச்சி சேவை மனப்பான்மையோட பையனைக் கூட வச்சிருக்கீங்க.” எனக் கையில் போட்டிருந்தக் காப்பை முறைப்புடன் பின்னால் நகர்த்தினான்.

அவரோ பதில் பேச இயலாமல் விழிக்க, அவரைக் கடுமையுடன் கண்டித்த ஸ்வரூப், அவனது ஆட்களுக்கு போன் செய்து வர சொல்லியவன், அச்சிறுவனை அவர்களிடம் ஒப்படைத்து, அவனைப் பள்ளியில் சேர்த்து விடுதியில் தங்க வைக்க உத்தரவிட்டான்.

பள்ளிக்கூடம் என்றதும், சோட்டுவின் விழிகள் ஒரு நொடி மின்னி குதூகலித்தது.

“இனிமே, நீ யாருக்கும் பயப்படத் தேவை இல்ல சோட்டு. நல்லாப் படிக்கணும். புரியுதா?” என்ற ஸ்வரூப்பிடம் வேகமாக தலையாட்டியவன், புன்னகை முகத்துடன் அங்கிருந்து சென்றான்.

ஒரு கணம் ஸ்வரூப்பின் மீது அழுத்தப் பார்வையை படிய வைத்த உத்ஷவி, “ஷப்பா… டேய் சமுத்திரம் பாய்ஸ்… நீங்க என்னடா க்ளூ தேடி வந்த இடத்துல எல்லாம் சோசியல் சர்விஸ் பண்ணிட்டு இருக்கீங்க.” என சலித்துக் கொள்ள, ஜோஷித்தும் சஜித்தும் ‘எதே சமுத்திரம் பாய்ஸா?’ என விழித்தனர்.

விஹானா கொல்லென சிரித்து, “ஆமா பின்ன… ‘நான் சொன்னா என் தம்பி விஷம் குடிப்பான்டா’ ரேஞ்சுக்கு அவன் சொல்றதை எல்லாம் கேள்வி கேட்காம செய்யிறீங்களே.” எனக் கலாய்க்க,

அக்ஷிதா, “அப்பறம் ஏன்டா, முறைச்சு பார்த்துக்கிட்டே சுத்துறீங்க. பேசி தான் தொலைய வேண்டியது தான.” என தலையில் அடித்துக் கொண்டாள்.

அவர்களை முறைத்த ஜோஷித், தமையனை ஓரக்கண்ணால் பார்க்க, அவனோ அவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை.

‘பேச்சாடா பேசுன பேச்சு…’ என்பது போல சஜித் ஜோஷித்தை நக்கலுடன் பார்த்து விட்டு, “ஸ்வரா” என ஆரம்பிக்க, அதனை ஒதுக்கியவன்,

மூன்று பெண்களையும் கூர்ந்துப் பார்த்து, “வளர்ந்ததும் அவனும் உங்களை மாதிரி மத்தவங்க உழைப்பைத் திருடி வாழக் கூடாதுல. அதான் இந்த சோசியல் சர்விஸ்.” என்று நெருப்பாய் வார்த்தைகளை உமிழ்ந்து விட்டு நகர, அது அவர்களைச் சுட்டது போலும், சட்டென முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்தே போனது.

‘ரொம்ப ஓவரா பேசுறான்…’ எனக் கடுகடுத்த உத்ஷவி மெல்லிய கோபத்துடனே அவர்களுடன் மலைக்கிராமத்திற்கு திரும்ப, அங்கோ அவர்களைத் திகைக்க வைக்கும் விதமாக ஒரு செய்தி வந்தடைந்தது.

பல மாதங்களுக்கு முன்பு காணாமல் போன காடன் என்பவன், மீண்டும் திரும்பி வந்து விட்டான் என்பதே அது.

அதில் ஊரே மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளித்தது. அவனது வயதான பெற்றோர் மகனை மீண்டும் கண்டு விட்ட சந்தோஷத்தில் மிளிர, ஆடவர்கள் தான் குழம்பினர்.

காடனை அழைத்து விசாரிக்க, அவனோ “நான் காணாம போகலைங்கய்யா. என் ஐயன்கிட்ட கோச்சுக்கிட்டு, வெளியூர்ல வேலைக்கு போயிருந்தேன். இப்ப திரும்பி வந்துட்டேன்.” என்றவன் எப்போதும் அழுக்கு லுங்கியும் பனியனுமே அணிந்திருப்பான். இப்போது சுத்தமான கசங்காத சட்டையும் பேண்ட்டும் அவனை வித்தியாசமாகக் காட்டியது.

காட்டு வேலை மட்டுமே செய்யத் தெரிந்த காடனுக்கு வெளியூரில் என்ன வேலை கிடைத்திருக்கும்? எந்த வேலை இவனை இப்படி டிப் டாப்பாக மாற்றி இருக்கும்? என்று புரியாமல் குழப்பத்தின் உச்சத்தில் மிதந்த ஜோஷித், “காட்டு வேலை பார்த்துட்டு இருந்தவன், எப்படி கார்ப்பரேட் கம்பெனில வேலை பாக்குறவன் மாதிரி வந்து நிக்கிறான்…” எனத் தலையை சொறிய,

சஜித், “இவனை நான் நிறைய தடவை பார்த்து இருக்கேன் ஜோ. படிச்சு வெளியூர்ல வேலைக்குப் போக சொன்னப்பக் கூட, எனக்கு இந்த வேலை செய்யத் தான் பிடிச்சுருக்குன்னு, மம்முட்டியை தூக்கிட்டு காட்டுக்கு ஓடுனவனுக்கு திடீர்ன்னு எப்படிடா ஞான உதயம் வந்துருக்கும். அப்போ காணாமப் போன எல்லாருமே கோச்சுக்கிட்டு போய்ட்டாங்களா. ஐயோ… பைத்தியமே பிடிச்சுடும் போல.” எனத் தலையைப் பிடித்துக் கொண்டு அங்கேயே அமர்ந்து விட்டான்.

“பசங்க கோச்சுட்டு போய்ட்டாங்க சரி… அப்போ நாகா எங்க போயிருப்பா?” புருவத்தைச் சுருக்கி ஸ்வரூப் கேட்க, உத்ஷவி “அவளும் எங்கயாவது கோச்சுட்டு போயிருப்பா. அவளே வந்துடுவான்னு நினைச்சுக்க வேண்டியது தான்.” என்றதும்,

“அப்போ நம்ம வீடியோல பார்க்கும் போது, நீல சட்டைக்காரனை ஒருத்தன் கூட்டிட்டு போனானே. அதுக்கு என்ன அர்த்தம்?” என்று வினவியதில், யாருக்குமே பதில் கூறத் தெரியவில்லை.

“சஜி, இந்த காடனை க்ளோசா ஃபாலோ பண்ண ஆளுங்களை ஏற்பாடு பண்ணு. இவனோட எல்லா மூவ்மெண்ட்டும் நமக்குத் தெரியணும். அண்ட், எங்க வேலை பார்த்து, இவ்ளோ நாளா எங்க சர்வைவ் பண்ணுனான்ற எல்லாத் தகவலும் எனக்கு வேணும்” என்றதும், சஜித் அலைபேசியை எடுத்துக்கொண்டு தனியே சென்றான்.

விஹானாவும் அக்ஷிதாவும் கிராமத்தை சுற்றிப் பார்க்கும் பொருட்டு சிறிது தூரம் நடக்க, உத்ஷவிக்கு ‘எப்போதடா இவர்களிடம் இருந்து தப்பித்து செல்வோ’மென ஆயாசமாக இருந்தது.

ஜோஷித்தும் ஸ்வரூப்பும் மட்டும் தனித்திருக்க, இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திய ஜோஷித் “ஸ்வரா…” என்றான் மெல்லமாக.

அதனைக் காதில் வாங்கினாலும் பதில் கூறாமல் பார்வையை வேறு புறம் திருப்பிய ஸ்வரூப்பை மீண்டும் அழைத்த ஜோஷித், “சாரி” என மன்னிப்பு வேண்டினான்.

அப்போதும் அவனிடம் எந்த எதிர்வினையும் இல்லை.

அது ஜோஷித்தைக் கலங்க வைக்க, “சாரி ஸ்வரா… நீ… உனக்கு நான் முக்கியம்ன்னு ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல. நீ அமைதியா இருந்தது எனக்கு கஷ்டமா இருந்துச்சு.” என்றான் கமறலுடன்.

அவனை அழுத்தமாய் ஏறிட்ட ஸ்வரூப், “நீ எனக்கு முக்கியம்ன்னு வெறும் வார்த்தையால சொல்லி தான் நிரூபிக்க வேண்டியது இருக்குல்ல. அந்த அளவு நம்ம உறவு பலவீனமாகிடுச்சு ஜோ. பதவி பொறுப்புன்றது நம்ம மூணு பேருக்கும் சமமா தான் இருக்கு. உங்களை சாகடிச்சுட்டு அதை முழுசா நான் அனுபவிக்க நினைக்கல. அப்படி நினைச்சா, அது நான் இறந்ததுக்கு சமம். நம்மளும் வெறும் சராசரி அண்ணன் தம்பிங்க தான்னு புரிய வச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ்.” என்று ஈட்டியாய் குத்தி கிழித்தவனின் மனதிலும் ஜோஷித்தின் காயம் கொடுத்த வார்த்தைகள் பாரமாகி நின்றது.

ஸ்வரூப்பின் கூற்றில் ஸ்தம்பித்த ஜோஷித்திற்கு, அப்போது தான் அவன் பேசிய வார்த்தையின் வீரியம் புரிந்தது.

தகப்பனைத் தாக்கியவனை விட்டு விட்டானே, அப்போ தனக்கு ஒன்றென்றாலும் துடிக்க மாட்டானா? என்ற ஒரு ஆதங்கத்திலும் உரிமையிலுமே சண்டை இட்டவனுக்கு, அவனது அமைதி பேரதிர்ச்சியாகிப் போக, அதன் பிறகு வார்த்தைகள் தடித்துப் போனதை ஜோஷித் இப்பொழுதே உணர்கிறான்.

இத்தனை நாட்கள் அவன் காட்டிய பாராமுகம் ஸ்வரூப்பை காயப்படுத்திட, இப்போதோ ஸ்வரூப்பின் பாராமுகம் ஜோஷித்தைக் குற்ற உணர்ச்சியில் தள்ளியது.

அத்தியாயம் 26

மாலை நேரம் நெருங்கி நெருங்க குளிர் ஊசியாகக் குத்தத் தொடங்கியது. அக்ஷிதாவோ, கையைக் கட்டிக்கொண்டு ‘இவனுங்க மட்டும் ஜெர்கின் போட்டுக்கிட்டு சுத்துறானுங்க. நமக்கு ஒரு ஸ்வெட்டராவது வாங்கி தரானுங்களா?’ என சலித்துக் கொண்டு சஜித்திடம் நியாயம் கேட்கச் செல்ல, விஹானாவோ குளிர் தாளாமல் ஜோஷித்தின் அருகில் வந்தாள்.

அவன் தலையைக் குனிந்து கண்கள் கலங்கி அமர்ந்திருக்க, அதனைக் கவனியாதவள், “ஜோஷ் உன் ஜெர்கின் குடு. செம்ம குளிரு” என நடுங்கியபடி வெகு அதிகாரமாகக் கேட்டதில், மெல்ல முறைத்தவாறு நிமிர்ந்தான்.

அவனது சிவந்த கண்களைக் கண்டதும் திகைத்தவள், “என்ன ஆச்சு ஜோஷ். அடிபட்டது வலிக்குதா?” எனத் தோள்களில் ஆடிய கூந்தலை பின்னால் ஒதுக்கியபடி கரிசனத்துடன் கேட்டவளிடம், மறுப்புடன் தலையசைத்தான்.

“சரி நீ ஜெர்கினை போட்டே இரு. அப்பறம் நேத்து மாதிரி எவனாவது கத்தியை வீசிட போறான்.” எனப் பீதியாக, அவளைக் கண்டதும் எப்போதும் போல மனதின் இரணங்கள் மட்டுப்படுவதை வியப்புடன் உணர்ந்தவன், ஜெர்கினை கழற்றிக் கொடுத்தான்.

“கிளம்பும் போதே ஸ்வெட்டரை போட்டு வர வேண்டியது தான.” என்ற அதட்டலைக் கண்டுகொள்ளாதவள், அவசரமாக அதனை மாட்டிக்கொண்டு பாக்கெட்டினுள் கையை விட, ஏதோ தட்டுப்பட்டது.

அதில் என்னவென எடுத்துப் பார்த்தவள், சிகரெட் பாக்கெட்டைக் கண்டதும், “ச்சை…” என அதை வேகமாக கீழே போட்டு விட்டு, கையில் வாடை வருகிறதா என முகர்ந்துப் பார்த்து முகத்தைச் சுளித்தாள்.

“இந்த சிகரெட்டுக்கு ஒரு கேடு வர மாட்டேங்குது…” என சிலுப்பிக்கொள்ள, அவளது அசைவுகளை எல்லாம் கண்களில் நிரப்பியவன், கீழே இருந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்து விட்டு, அவளை நோக்கி வந்தான்.

“என்ன? எதுக்கு பக்கத்துல வர்ற?” என எகிறலுடன் கேட்ட விஹானாவின் சத்தம் அவனது பார்வையில் முற்றிலும் குறைந்து விட, அவனோ அவள் அணிந்திருந்த ஜெர்கின் பாக்கெட்டினுள் கையை நுழைத்தான்.

அதில் அசையாமல் அதிர்ந்து நின்றவளை, நக்கல் நகையுடன் ஏறிட்டவன், பாக்கெட்டினுள் இருந்த லைட்டரை எடுத்து விட்டு நகர, அதன் பிறகே அவளால் மூச்சு விட முடிந்தது.

——

தீவிரத்துடன் அலைபேசியில் விவரங்களைப் பகிர்ந்து கொண்டிருந்த சஜித்தின் முன் வந்து நின்ற அக்ஷிதா அவன் பேசி முடிக்கும் வரை பொறுமையற்று, சைகையிலேயே “காட்ஸில்லா… குளிருது. ஸ்வெட்டர் வேணும். ரூம்ல வச்சுட்டு வந்துட்டேன்.” என சத்தம் வராமல் பேச,

அதனைக் கவனித்தபடியே எதிர்முனையில் உத்தரவுகளைப் பிறப்பித்தவனுக்கு கவனம் சிதறியது.

அவளோ விடாமல் வாயசைக்க, உள்ளுக்குள் ஏதேதோ உணர்வுகள் பிழிந்தெடுத்ததில், போனை இறக்கி விட்டு அடிக்குரலில் “ப்ச், என்னடி?” எனக் கேட்டான் பல்லைக்கடித்து.

“குளிருதுடா காட்ஸில்லா” எனப் பாவமாக அவள் உரைக்க, அதில் மீண்டும் போனை காதில் வைத்தவன், விறுவிறுவென சிறிது தூரம் நடந்துச் சென்றான்.

அவளும் அவன் பின்னேயே செல்ல, ஒரு ஓரத்தில் பெண்கள் சிலர் ஸ்வெட்டர் விற்றுக்கொண்டிருக்க, அதில் ஒன்றை வாங்கியவன், போனை காதில் வைத்தபடியே அவளிடம் கொடுக்க, அவளும் “குட் பாய்.” என அவன் கன்னத்தில் தட்டிக் கொடுத்து அதனைப் போட்டுக் கொண்டதில், சஜித்தின் இதழ்கள் இரகசியப் புன்னகை வீசியது.

—–

கைகள் இரண்டையும் தேய்த்துக் கொண்டு, பனி மூடிய மலைகளையும் மரங்களையும் விழிகளில் நிரப்பினாள் உத்ஷவி.

ஜோஷித்திடம் பேசி விட்டு இறுகிய முகத்துடன் நடந்து சென்ற ஸ்வரூப்பின் கால்களும் அவனறியாமல் அவள் சென்ற பாதையிலேயே சென்று நிற்க, அவனை ஒரு முறை திரும்பிப் பார்த்தவள், “எனக்கு ஒரு டவுட்டு டைனோசர்” என ஆரம்பித்தாள்.

ஆரம்பிக்கும் போதே, சற்று தள்ளி இருந்த ஒரு குடிசையில் இருந்து குழந்தை அழுகும் சத்தம் கேட்க, அங்கு பார்வையை பதித்தபடியே “ம்ம்” என்றான்.

“நீ ஏதோ ஒரு டாக்குமெண்ட்டை ப்ரீத்தன்கிட்ட இருந்து எடுத்துட்டு வந்தேன்னு சொன்னியே. அதை ஏன் பத்திரமா லாக்கர்ல வச்சிருந்த. கிழிச்சு போட்டுருந்தா நாங்க திருட வரத் தேவையே இல்லையே.” எனக் கேட்டாள் குழப்பத்துடன்.

அதில் அவள் முகத்தைப் பார்த்தவன், “ப்ரீத்தன்க்கு எதிரா சில ஆதாரங்களை திரட்டிட்டு இருக்கோம். அந்த டாக்குமெண்ட் மட்டும் வெளில வந்தா, அவன் கூட சேர்ந்து சித்தூரையும் எங்க மக்களையும் அழிக்க நினைக்கிற பல முதலைங்களோட உண்மையான முகம் வெளில வந்துடும். அதனால தான் அதை அழிக்காம, பாதுகாத்து வச்சுருக்கேன்.” என்றதும்,

“அப்போ அந்த ஆதாரத்தை வச்சு, ப்ரீத்தனை அரெஸ்ட் பண்ண வைக்கலாம்ல.” இன்னும் குழப்பம் தெளியாமல் அவள் கேட்க, அவனும் ஆமோதிப்பாகத் தலையாட்டினான்.

“ஆனா, அது அவ்ளோ ஈஸி இல்ல. சில சட்ட சிக்கலும் இருக்கு.” எனப் பெருமூச்சு விட்டான்.

“இதுலயும் சிக்கலா?” அவள் முகத்தைச் சுருக்கியதில், தன்னுடைய இறுக்கமான பாவத்தை மாற்றாதவன், “ம்ம்… எஸ். ப்ரீத்தன் வேற யாரும் இல்லை. என் சொந்த அத்தை பையன். சித்தூர் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுக்குறதுக்கு அவனுக்கும் முழு உரிமை இருக்கு. 

அவனே மொத்த சாம்ராஜ்யத்தையும் அழிக்க நினைக்கிறான்னு சொன்னா, கவர்மெண்ட்க்கு எங்க மேல இருக்குற நம்பிக்கை போய்டும். தலைமுறை தலைமுறையா இங்க வாழுற மக்களோட வாழ்வாதாரம் அடிவாங்கும்.

ஒரு டம்பளர் பால்ல ஒரு துளி விஷம் கலந்தாலும் விஷம் விஷம் தான. அதை விஷமா தான நம்ம பார்ப்போம். அதே மாதிரி தான், அவனோட தப்பான புத்தியைப்  பத்தி வெளி உலகத்துக்கு தெரிய வந்தா, ஒட்டு மொத்த அவ்தேஷ குடும்பத்துக்கும் பெரிய அடி. எனக்கு என் குடும்பத்தோட கவுரவம் ரொம்ப முக்கியம். அதை விட, மக்களோட பாதுகாப்பும் ஊரோட அமைதியும் முக்கியம். அதனால தான், இவ்ளோ பொறுமையா போயிட்டு இருக்கேன். இல்லன்னா, அந்த ப்ரீத்தன் என்னைக்கோ என் துப்பாக்கிக்குப் பலியாகி இருப்பான்.” என்றான் உள்ளுக்குள் கனன்ற கோபத்துடன்.

இப்போது ஓரளவு பிரச்சனைகளை உள்வாங்கிக் கொண்டவள், “அப்போ உங்க அப்பாவை கொல்ல வந்ததும் அவன் தானா?” எனக் கேட்டு கோபத்தில் சிவந்து நின்ற அவனது வதனத்தை கண்டு கண்ணிமைக்க மறந்தாள்.

‘இவன் ஃபேஸ் என்ன இப்படி சிவந்து போகுது…’ என்று அவனது ஆத்திரம் சூழ்ந்த முகத்தைக் கூட ரசனையுடன் ஆராய்ச்சி செய்திட, அவனுக்கோ தந்தையரின் நினைவில் மனம் ரணமாகிப் போனது.

“இல்ல… அதை ப்ரீத்தன் செய்யல. வேற யாரோ தான் இன்வால்வ் ஆகி இருக்காங்க. அவன் மட்டும் என் கையில கிடைச்சான்…” எனப் பல்லைக்கடித்திட,

“அது எப்படி அவ்ளோ ஸ்ட்ராங்கா சொல்ற?” எனக் கேட்டாள் புருவம் சுருக்கி.

“சின்ன லாஜிக் தான். அவனோட தங்கச்சிங்களை தான் நாங்க கல்யாணம் பண்ணிக்கிறதா இருக்கோம். அவங்களோட தான் எங்கேஜ்மெண்ட் நடந்துச்சு. வெறும் உறவுக்காரங்களா இருந்தவங்க சம்பந்தமே பண்ண போறோம்ன்னா, இன்னுமே அவனோட திட்டம் ஈஸியா நடக்க நிறைய வழி இருக்கும் போது, அதைத் தடுக்குற விதமா என் அப்பா சித்தப்பாவை தாக்க நினைச்சுருக்க மாட்டான் தானே!” எனக் கேட்டு விழி உயர்த்த,
அதனோடு சேர்ந்து அவளுடைய விழிகளும் உயர்ந்தது.

“அடேய் என்னை கொழப்பாத. ப்ரீத்தன் உன் குடும்பத்தையே அழிக்க நினைக்கிறான். அப்பறம் எப்படிடா அவனோட தங்கச்சிங்களை கல்யாணம் பண்ணிக்க போறீங்க…?” எனப் பின்னந்தலையை சொறிந்தாள் பாவை.

“ஏய்… இந்த விஷயமே எங்க நிச்சயம் முடிஞ்சப் பின்னாடி தான் எங்களுக்கு தெரியும்டி. அதுக்கு அப்பறம் தான் எங்களுக்கும் ப்ரீத்தன்க்கும் சண்டை வந்துச்சு. நாங்க அவனோட டாக்குமெண்ட்டை அவனுக்குத் தெரியாம எடுத்துட்டோம். அப்பறமும் பெரிய பிரச்சனை நடந்துக்கிட்டே இருந்துச்சு. ஆனா, அதுல எங்களோட கல்யாணம் நிக்கிற மாதிரி எந்த ஆப்ஷனும் இல்லை.

ஏன்னா, என் தாத்தா உயிரோட இருக்கும் போதே, எங்க அத்தை பொண்ணுங்களை தான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு உத்தரவு கொடுத்துட்டு தான் இறந்தாரு. அதனால, ப்ரீத்தன்க்கும் எங்களுக்கும் நடக்குறப் பிரச்சனைக்கு மத்தியில, கல்யாண ஏற்பாடு நடந்துட்டு தான் இருந்துச்சு. அந்த கல்யாணத்தை எதிர்பார்த்து தான் அவனும் காத்திருந்தான். அப்படி இருக்கும் போது, கல்யாணம் தடை படுற மாதிரி அவன் அட்டாக் பண்ணிருக்க மாட்டான்.” என உறுதியாகக் கூற, அவளோ பேந்த பேந்த விழித்தாள்.

“இப்பவே கண்ணைக் கட்டுதுடா டைனோசர். நான் பாட்டுக்கு ஜீஸஸேனு என் பொழப்பை பார்த்துட்டு இருந்தேன். அதுல ஒரு லாரி ம்ம்ஹும் நூறு லாரி மண்ணை அள்ளிப் போட்டு இப்படி ரோடு ரோடா சுத்த விட்டுட்டு இருக்கீங்களேடா.” எனப் புலம்பித் தீர்த்தாள் உத்ஷவி.

இந்த சம்பாஷணைகள் முடியும் வரை கூட குழந்தையின் அழுகைச் சத்தம் நின்றபாடில்லை.

“இன்னும் ஒரு க்ளூ கூட கிடைக்கல. அதுவரை இப்படி தான் சுத்தி ஆகணும். திருட வந்தீல அனுபவி.” என்று அசட்டையாகக் கூறி, பெண்ணவளின் முறைப்படி வாங்கி கொண்டவன், “ஏன் பாப்பா அழுதுகிட்டே இருக்கு” எனக் கேட்டபடி அக்குடிசைக்கு சென்றான்.

அங்கோ, வயதான பெண்மணி ஒருவர் குழந்தையின் அழுகையை நிறுத்தப் போராட, அந்த ஒன்பது மாத குழந்தையோ கிஞ்சித்துக்கும் அழுகையை நிறுத்தவில்லை.

“என்ன ஆச்சு?” எனக் கேட்ட ஸ்வரூப்பைக் கண்டதும், “கும்புடுறேங்கையா…” என வேகமாக வணங்கியவர், “புள்ளையோட அம்மைக்கு உடம்புக்கு முடியலைன்னு, ஆஸ்பத்திரிக்கு போயிருக்காயா. என்னன்னு தெரியல அழுதுகிட்டே இருக்கு. தொந்தரவா இருந்தா மன்னிச்சுருங்கய்யா” என அவர் பதறிட,

“இதுல என்ன தொந்தரவு?” எனப் போலி முறைப்புடன் கேட்டவன், மாநிறத்தில் குண்டு கண்களுடன் அழுது அழுது கண்கள் சிவந்துப் போன குழந்தையை வாங்கிக் கொண்டான்.

“பேபிக்கு என்ன ஆச்சு? ஏன் அழுகுறீங்க. பசிக்குதா? ம்ம்” என தோளில் வைத்து ஆட்டி விளையாட்டுக் காட்ட, அத்தனை நேரமும் அழுத குழந்தை சிரித்தது.

அதில் வியந்த பெரியவரும், “உங்ககிட்ட வரவும் சிரிக்கிறா பாருங்களேன்” என்றிட, அவனும் மென்னகையுடன், “பேபியோட அம்மா ஹாஸ்பிடல்ல இருந்து வர்ற வரைக்கும் நான் வச்சுருக்கேன். வந்ததும் சொல்லுங்க.” என்று அவரது பதிலை எதிர்பாராமல் குழந்தையைத் தூக்கிக்கொண்டு சென்று விட, உத்ஷவி அங்கு அப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லையென்ற ரீதியில் தோளைக் குலுக்கிக்கொண்டு முன்னே நடந்தாள்.

“மத்தவங்க எங்க போனாங்க.” எனக் கேட்டபடி குழந்தையை தூக்கி நடந்து வந்தவன், விளையாட்டுக் காட்டி சிரிக்க வைக்கவும் தவறவில்லை.

அந்நேரம் குழந்தை அவன் மீது சிறுநீர் அபிஷேகம் நிகழ்த்தி விட்டு, ஈரத்தில் இருக்க மாட்டேனென அடம் செய்து மீண்டும் அழத் தொடங்கியது.

“அச்சச்சோ… நீங்களே ஈரம் பண்ணிட்டு அழுதா எப்படி பேபி.” எனக் கொஞ்சியவன், “ஏய் திருடி பேபியைப் பிடி. நான் போய் டவல் ஏதாவது வாங்கிட்டு வரேன். குளிர்ல ஈரத்தோட இருந்தா பேபிக்கு சேராது.” என்று அவளிடம் கொடுக்க அவளோ வாங்காமல் நின்றாள்.

“இங்க பாரு… இந்த மாதிரி சோசியல் சர்விஸ் எல்லாம் நீ மட்டும் பண்ணுன்னு நான் ஏற்கனவே சொல்லிட்டேன். இதை கொண்டு போய் அவங்க வீட்லயே குடுத்துடு.” எனக் கோபத்துடன் மொழிந்தவள், அவனைத் தாண்டி நடக்க எத்தனிக்க, அவனுக்கு சினம் எல்லை மீறி பறந்தது.

குளிருக்கு இதமாகத் துப்பட்டாவை போர்த்தி இருந்தவளின், தலை முடியைப் பற்றி இழுத்தவன், “பெரிய மைசூர் மகாராணி… திருட்டு வேலை பாக்குற உனக்கு எதுக்குடி இவ்ளோ ஈகோவும் திமிரும். உன்னை சரிக்கு சமமா நடத்துறேன்ல. அதான் தலைல ஏறி உட்காருற.” என அவனை மீறிய ஆத்திரத்தில் வார்த்தைகளை சரமாரியாகக் கொட்டித் தீர்த்தான்.

அவன் பிடித்த பிடியில் வலி எடுத்திருக்க வேண்டும். அவள் அனுமதி இன்றியே கண்கள் கலங்கிப் போனது. “வலிக்குது விடுடா.” என அவள் கத்த, அந்த சத்தத்தில் மற்ற நால்வரும் அங்கு வந்தனர்.

“ஸ்வரா என்ன ஆச்சு?” எனப் புரியாமல் சஜித் கேட்க, “அவளை ஏன்டா…” என ஆரம்பித்த அக்ஷிதா ஸ்வரூப்பின் பார்வையில் கப்பென வாயை மூடிக்கொண்டாள்.

உத்ஷவியை விடுவித்தவன், அவள் உணரும் முன்னே, அவளைச் சுற்றி இருந்தத் துப்பட்டாவை உருவி, குழந்தைக்கு ஈரம் படாமல் வைத்துக் கொண்டவன், “என்கூட இருக்குற வரைக்கும் கொஞ்சம் மனுஷியா இரு. இல்ல நான் மிருகமா மாறிடுவேன்…” எனக் கர்ஜித்திட, வலித்த தலையைப் பிடித்துக்கொண்டு எவ்வித சலனமுமின்றி ஆடவனை வெறித்தாள் உத்ஷவி.

முதலும் முடிவும் நீ…
மேகா

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
81
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    2. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.