Loading

எரும்பு தட்டி விடுவது போல அந்த பூந்தொட்டியைத் தட்டிவிட்டு மீண்டும் உறங்கிய பயில்வான், வெடுக்கென்று எழுந்து அமர்ந்தான். உண்மையில் அந்த பூந்தொட்டியில் இருந்த ஒரு கட்டெறும்பு அவன் காதுக்குள் புகுந்து ஆட்டி வைத்தது அவனை. குட்டி போட்ட பூனை போல தலையை ஆட்டி ஆட்டி அந்த இடத்தை சுற்றிக் கொண்டே இருந்தான். பிறகு எப்படியோ போராடி காதுக்குள் ரீங்காரமிட்ட எறும்பை அகற்றவும்தான் சுய நினைவுக்கு வந்தான். அவனை அங்கிருந்த அனைவரும் விசித்திரமாக பார்த்துக்கொண்டிருந்தனர்.இப்போது அனைவருமே மயக்கம் தெளிந்து இருந்தனர் பூந்தொட்டி விழுந்த சத்தத்தில்.

 

“யாருடா நீங்க எல்லாம்? யாருடா என்னை கடத்தினது..? எதுக்குடா  செஞ்சீங்க..?” என்றுஅவன் கணீர் குரலில் கத்துவான் என்று நினைத்திருந்த அனைவருக்கும் ஏமாற்றமாய் போனது. ஏனெனில் அவனுடைய குரல் கீச்சுக் கீச்சென்று இருந்தது. குரலுக்கும் அவனுக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லை. அனைவரும் அவனை உத்து உத்து பார்த்தனர். பேசியது அவன்தானா என்று.

 

“என்னடா இவன் ஆள் பாக்க அனகோண்டா மாதிரி இருக்கான். ஆனா வாயத் தொறந்தா சின்ச்சான் மாதிரி பேசுறான்..” தணிகை.

 

அங்கிருந்த உடைந்த பூந்தொட்டியின் உடைந்த பாகத்தை எடுத்து தணிகையைக் குறிப்பார்த்து எய்தான்.

அது‌ தவறாமல் அவன் நெற்றியைப் பதம் பார்த்தது.

 

“டேய் லூசு… யாருடா என்னை கடத்துனா…”

 

“தயவு செஞ்சு நீ பேசாத.. எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது…” தணிகை. 

 

ஒரு பூந்தொட்டியை எடுத்து அவன் தலையில் போட பார்த்தான் அந்த பயில்வான். அதுவரை பொம்மைகளாக சமைந்திருந்த  மற்ற அனைவரும் சென்று தடுத்தனர். 

 

“யாருடா நீங்க எல்லாம்… என்னைய எதுக்குடா கடத்துனீங்க..”

 

“டேய்.. மாமிச மலை.. பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்ல வேணாம்… இங்க உள்ள எவனாச்சும் உன்னைய கடத்த முடியுமா” என்று  நியாயம் கேட்டான்‌ தணிகை. இவனுக்கு மூளைதான் வேலை செய்யாது. வாய் அதற்கும் சேர்த்து‌ செய்துவிடும். 

 

இடி போல் ஒரு அடி அவனது கன்னத்தில் மீண்டும் விழுந்தது. அடித்தது பயில்வான்தான். குரல் தான் கீச்சு கீச்சென்று இருக்கிறதே தவிர, அடி ஒவ்வொன்றும் இடி தலையில் இறங்கியது போல்தான் விழுந்தது. செவிப்பறையில் கொயிங் என்ற சத்தம் வேறு. எதுவுமே அவனுக்கு கேட்கவில்லை. கன்னத்தைப் பிடித்துக் கொண்டு ஒரு ஓரமாக அமர்ந்து விட்டான்.

 

“கொஞ்சம் பேசாம இருக்கீங்களா… நாம எல்லாரும் இப்போ ஆபத்தான நிலையில் தான் இருக்கோம்…” என்று அந்த முதியவர் அடுத்து பேச ஆரம்பித்தார்.

 

“இப்ப இல்லைன்னு‌ யாரு சொன்னா..” தணிகை. அவர் அவனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.  தணிகைக்கு வாய் மட்டும் தான் உடம்பில் ஓயாமல் உழைக்கும் இயந்திரம் என்று, அவரது அனுபவம் அவருக்கு உணர்த்தியிருக்க வேண்டும்.

 

“நம்மளை எல்லாம் யாரோ எதுக்காகவவோ கடத்திட்டு வந்திருக்காங்க… இங்க கேமரா கூட வச்சிருக்கலாம். அதனால எல்லாரும் கொஞ்சம் கவனமா இருங்க. நமக்குள்ளே நம்ம அடிச்சிகிட்டா நாம தப்பிச்சு போக முடியாது” என்றார் பெரியவர்.

 

“ஆமா… இப்ப நீ‌ சொன்னத கேமரா‌ ஒட்டு‌ கேக்காதா..” என்று தணிகை மீண்டும் வம்பிழுத்தான்.

 

“கடத்திட்டு வந்தா தப்பிச்சு போக முயற்சி செய்றது இயல்பு. அதனால எனக்கு அந்த எண்ணம் இருக்குன்னு என்னை கடத்துனவனுக்கு ஏற்கனவே தெரியும்… நான் பேசுனது எதுவும் புது தகவல் கிடையாது அவனுக்கு..”

 

“மூளைக்காரன்தான்…”

 

“அதெல்லாம் அப்பறம் பேசலாம்… முதல்ல இப்ப தப்பிக்க வழி ஏதாச்சும் இருக்கான்னு பாக்கலாம் எல்லாரும்..”

 

அனைவரும் எழுந்து சென்று தேடினர். எங்கு சென்றாலும் கதவு என்ற ஒன்று உள்ளது போல் இல்லை. அனைத்து இடமும் வழித்து துடைக்கப்பட்டது போல் இருந்தது. ஜன்னலும் இல்லை. மாமிச மலை ஒரு பக்கம் சென்றால் தணிகை வேறொரு பக்கம் சென்றான். அது ஏதோ ஒரு விசித்திரமான இடமாக இருந்தது. இதுவரை கண்டிராத இடமாகவும். ஆனால் அங்கு இருக்க முடியாது என்று சொல்லும் அளவு மோசமாக இல்லை. தங்குவதற்கு வசதியாக தான் இருந்தது. அங்கு சில அறைகளும் இருந்தது அவற்றுக்கெல்லாம் கதவுகள் இல்லை. அங்கு கதவு என்று இருந்தது கழிவரைக்கும் குளியலறைக்கும் மட்டும்தான்.

 

அனைவரும் ஒவ்வொரு இடமாகத் சென்று‌தேடி களைத்துதான் போயினர். தணிகையின்‌ வயதை ஒத்த ஒருவன், அங்கிருந்த சுவரை துழாவிப் பார்த்ததில் ஒன்றைக் கண்டறிந்தான்.

 

“எல்லாரும் ஓடிவாங்க ஓடிவாங்க” என்று கத்த, அனைவரும் எதிர்ப்பார்ப்புடன் அங்கு சென்றனர்.

 

“அடேய் கிறுக்கு பயலே… எதுக்குடா கத்துற… கடத்துனவன் காதுல விழப்போகுது..”

 

“இனி அவனுக்கு‌ தெரிஞ்சா என்ன தெரியாட்டி என்ன.. நான் தப்பிக்கிற வழி கண்டுபிடிச்சுட்டேன்..”

 

அந்த அறையில் உள்ள சுவற்றில் எங்கோ ஓர் இடத்தில் கை வைத்து இந்த இடத்தில் ஒரு ஓட்டை இருக்க வேண்டும் என்ற என்று அவன் கூற, அதை சென்று ஆராய்ந்தனர் சிலர். கைகளால் உணர முடிந்த அளவு மெல்லிய மேடு பள்ளம் சதுரமாக இருந்தது. அனைவருமே அதை எப்படி திறப்பது என்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

எவ்வளவு பிராயத்தனப்பட்டும் அதை திறக்க முடியவில்லை. என்ன செய்வதென்று சோர்ந்து போய், அந்த இடத்தை ஒரு குத்து குத்தினான் பயில்வான் போல் இருந்தவன்.

 

திடீரென்று பாதி வழி திறக்க, அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் சிறிய துவாரம் தான். அந்த பயில்வான் உள்ளுக்குள் நுழைய முடியாது. ஆனால் துளியும் தாமதிக்காமல் அதை கண்டுபிடித்து அழைத்தவன் துவாரத்திற்குள் இறங்க பார்க்க, பாதி வழியில் துவாரம் மூடிக்கொண்டு, அவனின் வயிற்றை நெறிக்க ஆரம்பித்தது. அவன் அலறிய அலறிலில் அனைவரும் மிரண்டு விட்டனர்.  தணிகை அவன் கால்களைச் சென்று பிடித்து இழுக்க, அவன் வலியில் கத்திய கத்தல் அனைவரின் நெஞ்சிலும் கிலி வந்தது. 

 

சில நொடிகளில் அவனை உள்ளே தள்ளி விட்டு மீண்டும் அந்த துவாரம் தானாகவே மூடிக்கொண்டது. அது அறைந்து சாத்தியத்தில் அங்கிருந்த ஒவ்வொரு கன்னத்திலும் அறை விழுந்தது போல் இருந்தது. இனி யாரும் அவர்களுக்கு வார்த்தைகளால் கூற வேண்டிய அவசியமில்லை. இங்கிருந்து தப்பிக்க முயன்றால் என்ன நிகழும் என்பதை செயல்முறை விளக்கமாக காட்டியாயிற்று. அனைவருக்கும் ஒன்று புரிந்தது. இங்கு இருக்கும் அனைவரையும் யாரோ கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர் என்று.

 

கீழே விழுந்திருந்திருந்தவனை சென்று தூக்கினர் அனைவரும். வயிற்றில் ஏதோ சுருக் சுருக்கென்று தைக்க அவன் வலியில் அலறிக் கொண்டுதானிருந்தான். அந்த முதியவர் சென்று ஏதோ முதலுதவி செய்ய அவன் சற்று ஆசுவாசமடைந்தான்.

 

அந்த அறையில் கூட நிற்க முடியாது, அனைவரும் கூட்டத்திற்கு வந்தனர்.

மது பல்லவியின் குழந்தை எழுந்து அழ ஆரம்பித்திருந்தது. மது குழந்தையை சமாதானம் செய்தாள்.

 

அதன் பிறகு யாருமே எதுவுமே பேசவில்லை. கத்திரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்துதான் ஆக வேண்டும் என்று அமைதி காத்தனர். எப்படியும் கடைத்தியவன் நிச்சயம் அவர்கள் முன் வருவான்.  அவனின் கோரிக்கைகள் வைப்பான் என்பதில் ஐயம் ஏதுமில்லை. அந்த தருணம் வரும் பொழுது பார்த்துக்கொள்ளலாம். அதுவரை செய்வதற்கு எதுவுமில்லை என்று தங்களை தேற்றிக் கொண்டனர்.

 

ஆனால் நேரம் கடந்ததே தவிற, ஒருவரும் வரவில்லை. யாரேனும் வந்து பார்த்தால் அல்லவா எதற்காக கடத்தப்பட்டனர் என்று இவர்களுக்கு தெரியும்‌. எது இரவு, எது பகல் என்று விவரிக்க முடியாத அளவு இருந்தது. வெளியில் இருந்து வெளிச்சம் வருவது போல் தெரியவில்லை. ஏன் காற்று கூட உள்ளே நுழைய முடியாது போல. 

 

அந்த முதியவர் அமைதியைக் கலைத்தார். 

 

“நீங்க எல்லாம் கொஞ்சம் யார் யாருன்னு சொல்றீங்களா..? நமக்குள் என்ன ஒத்துமை இருக்கு.. நம்ம எல்லாரையும் எதுக்கு கடத்தி அடிச்சு வச்சிருக்காங்கன்னு தெரிஞ்சா எதாச்சும் க்ளூ கிடைக்கிதான்னு பாக்கலாம்” என்ற பேச்சை ஆரம்பித்தார் அந்த முதியவர்.

 

60 வயதிற்கு மேல் இருக்கும். ஆனால் பார்த்தால் அப்படி தெரியவில்லை. முடி எல்லாம் நரைத்துதான் போய் இருந்தது. ஆனால் உடலில் தொய்வு என்பது இல்லை. இப்பொழுது அவரை வில்லாய் வளைத்தாலும், சிரமம் ஏதுமின்றி வளைந்து கொடுப்பார். தோலில் ஆங்காங்கே மெல்லிய சுருக்கங்கள். 40, 45 கடந்தவர் என்று கூறுமளவு உடற்திடம். 

 

“என்னோட பேரு திருநல்லன். நான் சித்த மருத்துவம் படிச்சவன். விவசாயம் செய்றேன். எனக்கு எதிரி என்று யாரும் கிடையாது. அதனால என்னைக் கடத்த வேண்டிய அவசியமும் இல்ல.. ஆனா ஏன் இது நடந்துச்சுன்னு என்னால அனுமானிக்க முடியல..” என்று அவரே துவக்க விழா தொடங்கி வைத்தார் அறிமுக படலத்திற்கு.

 

“நாங்க ரெண்டு பேரும் இரட்டையர்கள். என்னோட பேரு ஆரெழில் இவளோட பேரு நேரெழில். நாங்க ரெண்டு பேரும் நர்சிங் படிக்கிறோம். சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படிக்கிறோம்” என்றனர் இரட்டையர்கள்.

 

“நான் மது பல்லவி. என்னோட கணவர் கணியன். அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ். பயோ ஹெவன் என்கிற நிறுவனத்தை நடத்திட்டு வரேன். என் கணவருக்கு எதிரிகள் இருக்க வாய்ப்பு இருக்கு… அவங்கள்ல யாராச்சும் என்னை கடத்திருக்க வாய்ப்பிருக்கு…”

 

“என் பேரு தணிகைச்செல்வன். உங்கள மாதிரி எனக்கு பெரிய பின்புலம் எல்லாம் கிடையாது. சுருக்கமா சொல்லனும்னா வி. ஐ.பி. குரூப்பை சேர்ந்தவன். அவ்வளவுதான். ஊர் சுத்திட்டு இருந்தேன். எப்படி கடத்திட்டு வந்தாங்கன்னு தெரியல. வீட்டுக்கு போன் போட்டு பணம் கேட்டு மிரட்டுனா கூட பைசா தரமாட்டாங்க. அவனை வச்சிக்கிட்டு எங்களுக்கு ஆயருவா குடுத்தாலும் பரவாயில்லைனு சொல்லிருவாரு என்னய பெத்த மகராசன்…”

 

“நான் சித்திரன்.. சினிமால ஹீரோவிவுக்கு டூப் போடுறவன். மலையிலிருந்து குதிக்கிறது, சண்டைக்காட்சிகளில் நடிக்கிறது எல்லாமே நான்தான்..” என்றான் அந்த பயில்வான்.

 

“பேசாம சின்ச்சான்னு வச்சிருக்கலாம்..” என்று முணுமுணுத்தான் தணிகை.

 

“உனக்கு வாய்ல சனி..”மற்றொருவன். எலிப்பொறியில் சிக்கியது போல் தவித்தவன்.

 

அனைவரும் அவர்களின் பின்புலம் பற்றி கூறிவிட்டனர். இனி அந்த எலிப்பொறியில் சிக்கித் தவித்தவன் மட்டுமே மிச்சம். 

 

“என் பேரு வேதன்… நானும் படிச்சிட்டு வேலை இல்லாம தான் இருக்கேன்…” என்று அவன் கூற, தணிகை சிறிது யோசனைக்குப்பின், “உன்னை எங்கேயோ பார்த்திருக்கிறேனே..”என்று நெற்றியைத் தடவி சிந்தித்தான். பாவம் அவன் மூளையே களைத்துவிட்டது போல. “ஞாபகம் வந்ததும் சொல்றேன்” என்று சிந்தனைக்கு விடுதலையிளித்தான். அதுதான் அவனுக்கு விருப்பமுள்ள காரியமாயிற்றே.

 

“ஆமா… பாதி அந்த ஓட்டைக்குள்ள வெளிய போனியே… அங்க என்ன பாத்த… ஏதாச்சும் தெரிஞ்சுதா… எந்த இடத்தில் இருக்கோம்.. ஏதாவது க்ளூ..” தணிகை ஆர்வமாக வினவினான்.

 

“எதுவும் பாக்கல…”

 

“அதெப்படி… ஒரு முப்பது செகண்ட் எலி பொந்துல மாட்டுன மாதிரி இருந்தியே..”

 

“இப்பவும் ஒன்னும் கெட்டு போகல. உன்னைய அதுக்குள்ள இறக்கிவிடுறோம்… நீ போய் பாத்துட்டு வா…”

 

“அப்படி ஒன்னும் தப்பிச்சு போகணும்னு எனக்கு அவசியம் இல்லை. நான் இங்கயே இருந்துக்குறேன்..” என்றவனை நாக்கு மடித்து ஒற்றை விரலில் கொன்றுவிடுவேன் என்றான் வேதன்.

 

சிறிது நேரத்தில் ஏதோ துவாரம் திறப்பது போல் சப்தம் வர அனைவருக்கும் வயிற்றில் ஒரு பயபந்து உருண்டது.

 

“யாராவது போய் பாத்துட்டு வாங்க…” தணிகை.

 

“ஏன் நீ போறது..” வேதன்.

 

அந்த முதியவர் எழுந்து சென்றார். அவர் பின்னே இரட்டையர்கள் எழுந்து சென்றனர். பயில்வான் சித்திரன் அவர்களை கேவலமான ஒரு பார்வைப் பார்த்தான்.

 

“நீயே போகாம உக்காந்திருக்க… என்னைய எதுக்குடா பாக்குற…” தணிகை.

 

“உன்னை அப்பறம் வச்சிக்கிறேன்…” சித்திரன்.

 

“ஏன் இப்போலேந்தே வச்சிக்க. ஆனா சாப்பாடு மட்டும் போட்ரு…” தணிகை.

 

“மலைலேந்து உன்னைய உருட்டி விடுறேன்டா..”

 

“அது இங்கேந்து தப்பிச்சா பாக்கலாம்…” 

 

சித்திரன் முறைத்துவிட்டு சென்றான். உள்ளே சென்ற அனைவரும் கைகளில் சில பொருட்களுடன் வந்தனர்.

 

“என்ன இது…?”

 

“நாம இங்க சமைச்சு சாப்ட பண்டம் பாத்திரம்..”

 

ஒரு சிறு இண்டக்ஷன் அடுப்பு, வடைசட்டி, அருந்த நீர், ரவை, உப்பு, கொஞ்சம் எண்ணெய், சில காய்கறிகள், கத்தி என்று மிகவும் தேவையான பொருட்கள் மட்டுமே இருந்தது. அனைவருமே அதன் போக்கில் விட முடிவு செய்துவிட்டனர். திடமாக இருந்தால் மட்டுமே தப்பிக்கும் வழியறிய முடியும். அவர்களைக் கொல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தால் இந்நேரம் யாரும் உயிருடன்‌ இருக்க மாட்டர். அதனால் கடத்தியவனுக்கு கொல்லும் எண்ணம் இல்லை. மாறாக உணவு வேறு கொடுக்கிறான் என்றால், அவர்களைப் பட்டினி போட்டு வருத்தும் எண்ணமும் இல்லை. எப்படியும் இன்னும் சிறிது‌ காலத்திற்கு‌ அவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லை என்பதை திருநல்லன்  அனைவருக்கும் எடுத்துரைத்து புரிய வைத்தார்.

 

மது இவை அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு கணியின் நினைவாகவே இருந்தது. இரட்டையர்கள் இருவரும் அவளை எவ்வளவோ சமாதானம் செய்ய முனைந்தனர். ஆனால் முடியவில்லை.

 

“அம்மாடி பல்லவி…” என்று அழைத்தார் திருநல்லன்.

 

ஏனோ ஒரு நிமிடம் அவளுடைய தந்தை செம்பியன் அழைப்பது போலவே இருந்தது. 

 

திருநல்லன் இருந்த பொருளில் உப்புமாவைக் கிண்ட, தணிகை ஒரு பக்கம் புலம்பி கொண்டிருந்தான்.

 

“இந்த உப்புமாவ தின்னு போற உயிர் அதை திங்காம போகட்டும்…” என்றவன் மேலே பார்த்து, “டேய் டுபாகூர் ரௌடி… நல்ல சாப்பாடு போட முடியாத நீயெல்லாம் ஏன்டா கடத்துன என்னைய…” தணிகை.

 

“வேண்டாம்னா போ.. பட்டினாயாவே‌ கிட… நாங்க சாப்டுக்கிறோம்” ஆரெழில்.

 

என்னதான் வாய் சவடால் அதிகம் இருந்தாலும் வயிறு அதன் சுவரையே அரித்து உண்பது‌ போல்‌ தோன்ற, தணிகையும் அமைதியாக அந்த உப்புமாவை உண்டான்.

 

பல்லவியை திருநல்லன் கட்டாயப்படுத்தி உண்ண வைத்தார். ஏனோ அவரைப் பார்க்க தன்‌ தந்தையைப் பார்ப்பது போலவே இருந்தது அவளுக்கு. அவரும் இப்படிதான். வயதே தெரியாத அளவு இளமையுடன் வலம் வந்தவராயிற்றே.

 

********

 

கணி திராவிடனை அனுமதித்திருந்த அரசு மருத்துவமனைக்கு சென்றான். அவனை விசாரணை செய்யதான். ஆனால் அவனோ ஒத்துழைப்பது போல் தெரியவில்லை.

 

“மிஸ்டர் திராவிடன்..” கணி.

 

“ஒரு சின்ன திருத்தம் சார்.. மிஸ்டர் போடுற அளவு நான் ஒன்னும் பெரிய ஆள் இல்ல” திராவிடன்.

 

“சரி.. திராவிடன். சொல்லுங்க. என்ன நடந்துச்சு..”

 

“அத நீங்கதான் சார் கண்டுபிடிக்கணும். பத்து நாளா கோமாவுல இருக்கவன வந்து விசாரிக்கிறது எந்த விதத்தில் நியாயம்..”

 

“நீ‌ உயிரோட இருக்கதாலதான் உன்னைய கேக்குறேன்..” கணி‌.

 

“அப்ப நான் உயிரோட வந்ததுதான் உங்க பிரச்சினையா..?”

 

“ச்ச ச்ச… நீ உயிரோட வந்ததால உன் மேல சந்தேகம். அங்க போன எல்லாரும் கோமாவுல போனாங்க. நீ மட்டும் ஏன் பொழச்ச..”

 

“அத டாக்டர்கிட்டதான் கேக்கணும்..”

 

“டேய் அடிபட்டு சாகதடா. அவரப் பத்தி உனக்கு முழுசா தெரியல. ஒழுங்கா சொல்லுடா. என்ன நடந்துச்சுன்னு..” மணி.

 

“அதான் சார் சொல்லிட்டு இருக்கேன். காத்து கருப்பு அடிச்சிருச்சு.”

 

“என்ன நக்கலா..?” மணி.

 

“இல்ல சார். உண்மைதான். உங்கள மாதிரி சிட்டில வாழறவுங்களுக்கெல்லாம் கிராமத்தைப் பத்தி என்ன தெரியும். நானும் இப்படிதான் சுத்துனேன். ஆனா நல்லா பொடனில அடிச்சு சொல்லிருச்சு.”

 

“எது..?”

 

“காத்து கருப்பு..”

 

“பத்து தடவை சொன்னா பொய் உண்மையாகாது” மணி.

 

“நீங்க அழுத்தி அழுத்தி கேட்டா உண்மை பொய்யாகாது.. இது ஆதிகாலத்துலேர்ந்து கிராமத்தில் இருக்க நம்பிக்கை. நம்பிக்கை மட்டும் கிடையாது. உண்மையா உலா வர உண்மை.”

 

அதன்பிறகு கணி எதுவும் பேசவில்லை. மணியின் குறுக்கு விசாரணையை‌க் கைக்கட்டி பார்த்துக்கொண்டிருந்தான். மிக உன்னிப்பாக திராவிடனின் முகத்தில் படரும் மாற்றங்களை கவனித்துக் கொண்டிருந்தான். ஆனால் அவன் முகத்தில் குறும்பு வழிந்ததே தவிற, ‌கணி எதிர்பார்த்த மாற்றங்கள் எதுவுமில்லை. 

 

“சரி…‌ அந்த காத்து கருப்பு எப்படி இருந்துச்சு…”

 

“பாக்க முடியல..”

 

“ஸப்பா… முடியல டா…”

 

“சார் உண்மையா மனசுல பதியல சார்..”

 

“பேர திராவிடன்னு வச்சிகிட்டு மூடநம்பிக்கையோட இருக்க..”

 

“பேரு எங்கப்பா வச்சது. தெரியாம வச்சுட்டாரு போல…. சார் உங்களுக்கு உண்மையான்னு தெரியணும்னா நீங்க அந்த இடத்துக்கு போங்க… காத்து கருப்பு அடிக்கிதான்னு அப்பதான் தெரியும்” திராவிடன்.

 

“ஏன்டா…‌பேயடிச்சவன் மாதிரியே இல்லடா உன்னைய பாத்தா.. பிக்னிக் போயிட்டு வந்தவனாட்டம் நக்கல் பண்ற..” மணி

 

கணி இன்னும் அமைதியாகவே அமர்ந்திருந்தான். அவன் அமைதிக்குப் பின் அடக்கப்பட்ட கோபம் இருக்கிறது என்பது நன்றாகவே புலனாகியது அங்கிருந்த மற்ற இருவருக்கும். ஆனால் திராவிடன் எதையும் உரைப்பதாக இல்லை. அவன் வாயிலிருந்து ஒன்றையும் பிடுங்க இயலவில்லை. கணியும் முயற்சிக்கவில்லை. ஒன்று அவனுக்கு ஒன்றும் தெரிய வாய்ப்பில்லை. இல்லை இதற்கு பின் அவன் இருக்கிறான். அதை சொல்வதில்லை என்ற முடிவுடன் அவன் இருக்கிறான்.

 

இதில் திராவிடன் இரண்டாவது ரகம்தான் என்பது கணியின் கணிப்பு‌ திராவிடன் திடகாத்திரமாக சொல்லக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டான். இனி ஏதேனும் யுத்தி செய்து அவனிடம் இருந்து உண்மைகளை வாங்க வேண்டுமே தவிர, இப்படி குறுக்கு விசாரணை செய்வதில் எந்த பயனும் இல்லை என்பதை சில நிமிடங்களில் கணித்திருந்தான்.

 

அதனால் ஒரு வார்த்தை கூட பேசாமல் அவ்விடத்தை விட்டு எழுந்து சென்றான். சிறிது நேரத்திலேயே அதிரூபனும் கீர்த்தனனும்‌ கணியைக் காண அந்த மருத்துவமனைக்கு ஓடி வந்தனர்.

 

யோசனையுடன் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த அவன் அருகில் சென்று அமர்ந்தனர்.

 

“சார் என்ன ஆச்சு? மேடமும் பத்து நாளா ஆபீஸ் பக்கமே வரல. போன் பண்ணாலும் நாட் ரீச்சபிள் வருது. உங்களுக்கு போன் பண்ணாலும் எடுக்க மாட்றீங்க. என்ன பிரச்சனை..” அதி.

 

“மொகமெல்லாம் இறுகிப் போய் இருக்கு. என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க சார். நீங்க இதுவரைக்கும் இப்படி இருந்து நாங்க பார்த்ததில்லை..” கீர்த்தி.

 

“மது பல்லவியை யாரோ கடத்திட்டாங்க டா..” என்று சிறு இடைவெளிவிட்டான்.

 

மற்ற இருவருக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. செவிகளில் விழுந்த செய்தி உண்மைதானா என்று இருவரும் பார்வைப் பரிமாறி உறுதி செய்தனர்.

 

கணியே தொடர்ந்து பேசினான்.

 

“மது பல்லவியோட சேர்த்து ஏழு பேர் கடத்தப்படடிருக்காங்க. மதுவோட இருந்த குழந்தை அலர்விழியையும் கடத்திட்டாங்க… அதுல ஒருத்தர் அத்தியூர்.. காணாம போய் பத்து நாளுக்கு மேல ஆச்சு. ஆனா எந்த க்ளூவும் கிடைக்கல…” என்று கூறி அங்கு நடக்கும் மர்மங்களையும் சேர்த்தே கூறினான்.

 

கணியின் தோளில் தட்டி இருவரும் அவனுக்கு ஆறுதல் அளித்தனர்.

 

“சார்… நான் ஒரு விஷயம் சொல்லவா..? நீங்க கொஞ்சம் இமோஷனலா இருக்கீங்க.. அதுலேந்து பழைய கணியா வெளிய வாங்க. உங்களால நிச்சயம் இந்த வழக்கில் உள்ள முடிச்சுகளை உடைக்க முடியும்..” அதி.

 

“ம்ம்ச்ச்ச்… அரசாங்கம் இந்த விஷயத்தில் ரொம்ப சிரத்தை எடுக்குற மாதிரியே இல்லடா.. நான் இதுல தீவிரமா இருக்கேன்னு என்னை புயல் நிவாரணப் பணிய பாக்க சொல்லி ஆர்டர்..”

 

“சார் ஒரு பத்து நாள் மெடிக்கல் லீவ் எடுங்க.. நாம எல்லாரும் சேர்ந்து தேடலாம்..” கீர்த்தி.

 

சில நிமிடங்கள் தான்… தன் மனதை ஒரு நிலைப்படுத்தி, பழைய புத்துணர்வுடன் எழுந்தான்.

 

“இந்த திராவிடன் வாயைத் திறக்க மாட்டேன்ங்கிறான். அவனுக்கு ஏதோ தெரியுது. அவனுக்கும் இந்த கேசுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு. ஆனா என்னனுதான்

கணிக்க முடியல..”

 

“எதை வச்சு இவ்ளோ உறுதியா சொல்றீங்க..?”

 

“அவனை காத்து கருப்பு அடிச்சிருச்சின்னு சொல்லிட்டு திரியிறான். இத்தனை நாளா சுயநினைவு இல்லாம இருந்தான். இப்பதான் நினைவு திரும்பிருக்கு..”

 

“அப்போ அவனும் பாதிக்கப்பட்டவன்தான..” கீர்த்தி.

 

“அப்படி காத்து கருப்பு அடிச்சிருச்சுன்னு சொன்ன எவனுமே இதுவரைக்கும் எந்திரிச்சு பேசல. எல்லாரும் கோமாவுல இருக்காங்க.. இவன் மட்டும் எப்படி தப்பிச்சான்..” 

 

“சரி சார். அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கும்னு நினைக்கிறீங்க. அப்படிப் பார்த்தாலும் அங்க வந்து போனவங்க எல்லாரும் காணாமல் போகலையே.. நம்ம மது அந்த ஏரியா பக்கம் கூட போனதில்ல இல்லையா..” அதி.

 

“அதுதாண்டா குழப்பமா இருக்கு. எந்த பக்கத்தில் இன்வெஸ்டிகேஷன் ஆரம்பிச்சாலும் திரும்பி ஆரம்பப் புள்ளிலயே வந்து நிற்கிற மாதிரி இருக்கு. ஒரு துப்பும் கிடைக்க மாட்டேங்குது” கணி.

 

“சார் பேசாம அவனை அவன் போக்கில் விட்டு பிடிச்சு பார்க்கலாமா.. அவன பேசாம விடுங்க.. அவனோட போன் கால் ட்ரேஸ் பண்ணலாம்..” கீர்த்தி.

 

“இல்ல சாத்தியப்படாது. அவன் ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கான். மணி எவ்ளோ நேரம் விசாரிச்சான் தெரியுமா.. களைச்சுப் போனதுதான் மிச்சம். ஒரு வார்த்தை கூட அவன் வாயிலிருந்து வரல. எப்ப கேட்டாலும், எப்படி கேட்டாலும் தெளிவா பதில் சொல்றான். காத்து கருப்புதான் அடிச்சிருச்சுன்னு. காத்து கருப்பு இருக்குன்னு அடிச்சு வேற பேசுறான்..” கணி.

 

“சரி சார்… அப்ப அவனை நாம கண் காணாத இடத்துக்கு தூக்கிடலாம். அங்க வச்சு நாம விசாரிக்க வேண்டிய விதத்தில விசாரிக்கலாம்” அதி.

 

“சரி அவன் ஹாஸ்பிட்டலையே  இப்போதைக்கு இருக்கட்டும். நாம அத்தியூர் போயிட்டு வரலாம். முதல்ல அங்க என்ன நடக்குதுன்னு பார்த்துட்டு வரலாம்.. ” கணி.

 

சரி என்று மூவரும் அந்த ஊருக்கு கிளம்பி சென்றனர். அந்த விவசாய நிலத்தையும் சென்று பார்த்தனர். சற்று தூரத்தில் இருந்துதான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

சதுரமாக பச்சை பசேல் என்று இருந்த அந்த இடம் பார்க்கவே மனதிற்கு இதமாக இருந்தது.நெல் மணிகள் தங்க நிறத்தில் ஜொலித்தன. அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலம். புன்செய் நிலம் போல. செம்புல பெயல் நீர் என்ற இலக்கிய கூற்றிற்கு ஏற்ப வானம் பார்த்த கழனி. மழை பெய்து புத்தம் புது பூமியாய் செழித்திருந்தது. ஆனால் இங்கு நிலவும் மர்மம்தான் என்ன என்று சிந்தித்து கொண்டிருந்த கணிக்கு பளிச்சென்று மின்னல் வெட்ஞியது மூளையில். யார் இந்த நிலத்தில் உழுது பயிர் செய்திருப்பர் என்ற சந்தேகத்துடன் சற்று தூரம் உள்ளே செல்ல, ஒரு கணீர் குரல் அவர்களைத் தடுத்து நிறுத்தியது.

 

அந்த வழியாக சென்ற ஒரு முதியவர் அவர்களை தடுத்து நிறுத்தினர். “அங்கன போவக்கூடாதுன்னு தெரியாதா… பத்து நாளைக்கு முன்ன இப்புடிதேன் ஒருத்தன் கங்கனம் கட்டிக்கினு போனியாம். என்ன ஆச்சுன்னு தெரியுமா.‌.‌ஊருக்குன்னு ஒரு கட்டுப்பாடு இருக்கு. உசிரே போனாலும் நாங்க அதை மீற மாட்டோம்ல..” 

 

“சரிங்கய்யா நாங்க அங்க போகல.. எங்களுக்கு அதைப்பத்தி கொஞ்சம் தகவல் சொல்லுங்களேன். என்னதான் நடக்குது இங்க..”அதி.

 

“ஒரு வருஷத்துக்கு முன்னால, இந்த ஏக்கருக்கு சொந்தக்காரன் தூக்குமாட்டி செத்துப்போனியான். கடன் பாக்கியா பேங்குலேந்து வந்து நிலத்தை  கிரயம் பண்றோம்னு சந்தி சிரிக்க வச்சுட்டாய்ங்க.. நிலத்தை   வுட்டு குடுக்க மனசில்லாம போய் சேந்துட்டான் புன்னயவான்..‌ அவன் நிலம்தேன் இது..”

 

“யாரும் அந்த பக்கம் போவக்கூடாதுன்னு சொல்றீங்க.. ஆனா அங்க யாரோ பயிரு விதச்சு உழுதுருக்காங்க… நெல் அறுவடைக்கு காத்துக் கிடக்கே…” கணி.

 

“அது அவன் விதைச்சிட்டு போனது…” என்று சலைக்காமல் தலையில் பாராங்கல்லை ஏற்றி வைத்தார் அவர். பொய் சொல்வதற்கும் அளவில்லையா. அது எப்படி ஒரு ஊரே பொய் சொல்ல முடியும் என்று குழம்பி தவித்தான் கணி.

 

“ஐயா‌ கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுங்களேன்.. அந்த விவசாயி தூக்கு மாட்டி ஒரு வருஷம் ஆச்சுன்னு சொல்றீங்க… அப்பறம் எப்படி… நெல் அஞ்சு மாசத்துல விளையிற பயிர்ன்னு என்னைய விட உங்களுக்கு நல்லாவே தெரியும்..” கணி.

 

“அது அவன் விதைச்ச நெல்லு…” என்றார் மீண்டும் அழுத்தத்துடன்.

 

“புரியல…”

 

“அவன் வந்து அறுவடை செய்யுவான்னு காத்துக்கிடக்கு பூமி……..” என்று கூறியவர் சற்று இடைவெளிவிட்டு, “ஆறு மாசமா..” என்றார்.

 

இதைக் கேட்டதும் மூவரும் அதிர்ந்து விட்டனர். ஆனால் இது நம்பும்படியாக இல்லையே.

 

“அது எப்படி முடியும்..”

 

“செத்துப் போன காத்தவராயன் காத்தா இந்த வயலையே வீச்சறுவாளோட சுத்தறியான்.. நடுசாமத்துல சோலிய முடிச்சுட்டு வார இளவட்ட பயலுவோ அப்பப்ப பாத்திருக்கதா சொல்லுவாய்ங்க..”

 

“ஐயா..‌ நீங்க சொல்றது உங்களுக்கே நியாயமா படுதா..” என்று ஆரம்பித்த அதியை தடுத்து நிறுத்தினான் கணியன்.

 

கீர்த்திக்கு இதைக் கேட்டதும் திகில் படர்ந்தது. 

 

“ஆத்தி ரெண்டு வருஷம் முன்னாடி இந்த அதி மட்டும் தான் பைத்தியமா திரிஞ்சான். ஏதோ புக்கு படிச்சேன். பேரு ஞாபகம் இல்லை. புக்குல உள்ளது ஞாபகம் வரல. அப்படின்னு எனையும் சேர்த்து பைத்தியமா சுத்தவிட்டான். ஆனா இங்க என்னடான்னா ஒரு ஊரே பைத்தியமா சுத்துது..”

 

ஆரல் தொடரும்…

 

வர்மன் சீக்கிரம் வருவான். அதுவும் எழுதி முடிச்சுட்டேன். கொஞ்சம் வேலை அதிகம். உடம்பு வேற கொஞ்சம் முடியல. அதான் உடனே உடனே யூடி கொடுக்க முடியல. உங்க கமெண்ட்க்கும் பதில் சொல்ல முடியல.

அதனால திட்டாம இந்த அக்காவ மன்னிச்சு விட்ருங்க..

 

டாடா பைபை…

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்