Loading

அந்த வீல்சேரில் இருந்தவன் தான் சைதன்யா என்று தெரிந்ததும், அவன் ஏன் இப்படி இருக்கிறான் என்று புரியாமல் இருந்தாலும், உத்ரா அவனை தெரிந்த மாதிரியே காட்டிக்கொண்டாள்.

அவள் அந்த ஆறு மாதத்தில் நடந்ததை மறந்திருந்தாலும், அப்பா அவளிடம் என்ன சொல்ல அழைத்திருப்பார் என்று புரியவில்லை.

அதனை அவரிடமே கேட்கலாம் என்று அவள் இந்தியா வரும் முன் வீட்டிற்கு சென்று பார்த்த போது மாரடைப்பில் அவர் இறந்திருந்தார்.

அப்பா என்று ஒருவர் எங்கோ ஒரு மூலையில் இவ்வளவு நாள் இருந்தார் என்ற நிலை மாறி தாய் தந்தை இருவருமே இல்லாது, மேலும் மனதில் ஏதோ ஒரு பொக்கிஷத்தை இழந்த ஒரு மன உளைச்சலில் இந்தியா வந்தடைந்தாள்.

அப்பொழுது அவரின்  உயிலை பார்த்த பிறகு ஏதோ பெரிதாக நடந்திருக்கிறது என்று உணர்ந்தவள், அவள் பேகில் துருவ் விட்டு சென்ற பென்ட்ரைவை பார்த்து, அதனை அப்பா தான் கொடுத்திருப்பார் என்று நினைத்து, காஞ்சனாவிடமும், ரிஷியிடமும் கண்டிப்புடன் நடந்து கொண்டாள்.

இவளின் பேச்சைக் கேட்பதை தவிர அவர்களுக்கு வேறு வழியும் இல்லை.

ஆனால் அவர்களிடம் அவள் எதையும் மறந்த மாதிரி காட்டிக்கொள்ளவில்லை. இதில் விதியின் விளையாட்டோ என்னவோ, அவர்களும் துருவைப் பற்றி இவளிடம் பேசவில்லை.

அதனாலேயே இத்தனை வருடமாய் இவனைப் பற்றி தெரியாமலேயே இருந்தாள்.

மேலும் யோசித்தவளுக்கு, ‘அப்பாவின் இறப்பிற்கு சைதன்யாவும் தான் வந்திருக்க வேண்டும். ஆனால் இவனை நான் பார்த்ததே இல்லையே. இவன் எங்கு சென்றான் அப்போது’ என்று குழப்பத்துடன் நின்றிருக்க,

சைதன்யா “இப்போவே என் கண்ணு முன்னாடி உங்களை சித்தரவதை பண்ணி அணு அணுவா சாகடிச்சாதான் என் கோபம் தீரும் வேந்தா” என்று உத்ராவையும் பார்த்துக் கொண்டு கூற, துருவ் அவனை கூர்மையாய் பார்த்து விட்டு அவனின் அடி ஆட்களை பார்த்தான்.

பின், கீழே நின்ற அவனின் கார்ட்ஸ் எங்கே என்று அவசரமாய் cctv யில் பார்க்க, அவர்கள் எல்லாம் மயங்கிய நிலையில் இருந்தனர்.

சைதன்யா வெற்றியாய் அவனை பார்த்து எக்களித்து விட்டு, அவனின் ஆள் ஒருவனுக்கு கையை காட்ட, அவன் துப்பாக்கி ஒன்றை துருவை நோக்கி குறி வைத்தான்.

அதில் உத்ரா அதிர்ந்து பார்க்க, சைதன்யா உத்ராவை கடுங்கோபத்துடன் நோக்கி  “இவளுக்காக தான நண்பா என்கிட்டே மோதி… நீ எல்லாத்தையும் இழந்த.

இவளுக்காக என்னை பகைச்சுதானடா உன் அப்பா, அம்மாவை என் கையாலேயே கொல்ல வச்ச.

இவள் மானத்தை காப்பாத்த போய் தானடா உன்னோட பிசினெஸ் எல்லாமே இழந்த.

மறுபடியும் இவளை நான் நெருங்க கூடாதுன்னு தானடா என்னை அடிச்சு, இடுப்பு கீழ வேலை செய்யாதமாதிரி செஞ்சு படுத்த படுக்கை ஆக்கி… 3 வருஷம்…

கிட்ட தட்ட 3 வருஷமா எங்கயும் போகாம யாரு முகத்துளையும் முழிக்காம ரூம்க்குள்ளேயே அடைஞ்சு இருக்க வைச்ச.

ஆனா இது எல்லாத்துக்கும் காரணம் ஆன இவள் மட்டும் ரொம்ப சந்தோசமா இருக்கா.

நீ என்னை இப்படி ஆக்கிட்டு தொழில், லவர்ன்னு ஜாலியா இருக்க.

திரும்ப இவளை நான் அழிக்க முயற்சி பண்ணும்போது, மறுபடியும் மறுபடியும் என்கிட்டே மோதி, இப்போ உன் உயிருக்கு உயிரான காதலி முன்னாடி உன் உயிரையும் இழக்க போற” என்று சொல்லிக்கொண்டு இருந்தவனை ஒன்றுமே புரியாமலும்,

துருவின் பெற்றோர் இறந்து விட்டானரா என்ற திகைப்புடனும், தான் அவன் வாழ்வில் வந்ததாலேயே இப்போது வரை அனைத்தையும் இழந்து நரக வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கிறானா என்று நினைக்கும் போதே உத்ராவிற்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

துருவிடம் நடுங்கிய குரலில், “இவன் சொல்றது உண்மையா துருவ்? அப்பா அம்மா…” என்று கேட்கையில், அவனும் இறுகி போய் தான் இருந்தான்.

அவன் சட்டையைப் பிடித்து “வாயை திறந்து எதையாவது சொல்லு துருவ். என்னால நீ இவ்ளோ கஷ்டப்பட்டுட்டியா. இதெல்லாம்… இதெல்லாம் நான் தெரியாமயே இருந்துருக்கேன்.” என்று வேதனையுடன் அவன் மீதே சாய்ந்து அழுக ஆரம்பித்தாள்.

துருவ் அவளை வலுக்கட்டாயமாக விலக்கி  “நீ எதுவுமே பண்ணலை உதி. எல்லாமே நான் பண்ணுனது தான்.

நான் செஞ்ச பாவம் தான் எல்லாரையும் என்கிட்ட இருந்து பிரிச்சிருச்சு.” என்று கண்ணீருடன் பேச,

சைதன்யா புரியாமல் “டேய். இவங்க ஓவரா சீன் போடறாங்க. முதல்ல அவனை அடிங்கடா அப்பறம் இவளை வேற மாதிரி சித்தரவதை பண்ணலாம்” என்று வெறியுடன் கூற, உத்ரா சும்மாவே ஆடுவாள். இப்போது தன்னால் துருவ் இவ்வளவு வேதனைகளை அடைந்திருக்கிறான் என்று தெரிந்ததும் அவளுக்கு வெறிபிடித்தது போல் ஆகி விட்டது.

துருவை துப்பாக்கியால் அடிக்க வந்தவனை அவன் தடுப்பதற்குள் உத்ரா அவன் துப்பாக்கியை கையில் பிடுங்கி  ஓங்கி ஒரு அறை தான் அறைந்தாள்.

அதில் இவன் இவ்வளவு நேரம் நடந்த எதையும் உணராமல் சோபாவின் பின் பக்கம் படுத்து சுகமாய் உறங்கிக்கொண்டிருந்த  இருந்த அஜய் மீது போய் விழுந்தான்.

அவள் கண்ணில் அவ்வளவு ரௌத்திரம்.

அஜய் படாரென எழுந்து பேந்த பேந்த முழித்து, விதுனை எழுப்ப, அவனும் எழுந்து என்ன நடக்குதுடா இங்க, என்று பார்க்க, உத்ரா ஒருவனை அடித்து துவைத்துக் கொண்டிருந்தாள்.

விதுன் மீண்டும் கண்ணைக் கசக்கி கொண்டு,

“ஏன் பங்கு, நியாயமா அவனுங்க உத்ராவை அடிக்க வரணும், அதுல துருவ் பொங்கி அவனுங்களை அடிக்கணும். அப்பறம் ஹீரோக்கு லேசா அடிபடணும்.

அதை  பார்த்து ஹீரோயின்க்கு லவ் வரணும். அது தானடா காலங்காலமா நடக்கும். இவளை பாக்சிங் கத்துக்க வச்சது ரொம்ப தப்புன்னு இப்போதான் புரியுது. பங்கு… ஹீரோவை பெர்ஃபார்மன்ஸ் பண்ண விட மாட்டுறாள்” என்று புலம்ப,

அஜய் தலையில் அடித்துக் கொண்டு, “டேய் வாயை மூடுடா. வா போய் நம்ம காப்பாத்தலாம்.” என்று அவர்களும் முன்னே சென்று சண்டை போடுவது போல் கை முட்டியை இறுக்கி கொண்டு அவர்களைப் பார்க்க, சைதன்யா அவர்களை எதிர்பார்க்காமல்,

“டேய் யாருடா நீங்க? இவனுங்களை முதல்ல அடிச்சு துரத்துங்கடா” என்று கத்தியதும்,

விது மிரண்டு, “பங்கு அவனுங்க நம்மள பார்க்கவே இல்ல பங்கு. அப்டியே பின்னாடி வழியா குதிச்சு எஸ்கேப் ஆகியிருக்கலாம். நம்மளா வந்து சிக்கிட்டோம் போல” என்று கதறினான்.

அஜய், “டேய் நீ ரெண்டு பேரை அடி நான் நாலு பேரை அடிக்கிறேன்” என்று சொல்லி முடிக்கையிலேயே ஒருவன் ஓடி வந்து அஜய் வயிற்றிலேயே குத்தினான்.

“ஐயோ அம்மா” என்று வலியில் கத்திக் கொண்டு அவன் அமர, மற்றொருவன் வந்து விதுனை அடித்துத் தூர தள்ளினான்.. இருவரும் சில பல அடிகள் வாங்க,

உத்ரா துருவை பார்த்து, “சாரி துருவ்… என்னால உனக்கு ரொம்ப கஷ்டம்ல.” என்று நீர் துளிகள் கண்ணில் இருந்து வழிய கேட்க,

துருவ் அவள் அருகில் கோபத்துடன் வந்து “நான் அன்னைக்கே சொல்லிட்டேன் உதி. உன் கண்ணுல இருந்து தண்ணி வரணும்னா… அது நான் இறந்ததும் அப்பறம் தான்னு” என்று தீப்பொறி பறக்க கூற,

இங்கு அஜய், “டேய் துருவ். இங்க ரத்தமே வருதுடா. நாங்க போய் சேருறதுக்குள்ள எங்களை காப்பாத்துடா.” என்று கத்தினான்.

துருவ் பதறி அவர்களைக் காப்பாற்ற போக, உத்ரா அவன் கையைப் பிடித்து, “பெருசா அடிக்க போறவனுங்க மாதிரி வந்தானுங்கள்ல கொஞ்ச நேரம் அடி வாங்கட்டும்.” என்றாள் அசட்டையாக.

விதுவோ “தங்கச்சியாடி நீ எல்லாம் துரோகி” என்று சொல்லும் போதே, அவன் வாயில் ஒருவன் குத்தினான்.

“இருங்கடா பேசிகிட்டு இருக்கேன்ல”என்று பாவமாய் கூறியவன் மேலும் பல அடிகளை வாங்கிக் கொண்டான்.

துருவ் உத்ராவிடம் “ப்ச் பாவம் உதி அவனுங்க” என்று அவர்களை அடுத்தவர்களை அடி அடியென அடித்தான்.

விது அவனிடம் “வா ராசா… இதை முன்னாடியே பண்ணி இருந்தால்.. ரத்தக்களரி ஆகி, சட்டை கிழியாம இருந்துருக்கும்ல.” என்று கதற,

துருவ் அவனை முறைத்து, “நான் இப்பவும் வரல எது எது கிழிஞ்சுருக்கும்னு தெரியாது. போய் ஓரமா உக்காருங்கடா” என்று அவர்களை அதட்டி விட்டு, சைதன்யாவின் ஆட்களை துவம்சம் செய்தான்.

உத்ராவிற்கு தான் கோபமும் ஆற்றாமையும் தீரவே இல்லை.

சைதன்யாவிடம், சென்றவள் “எதுவும் வேலை செய்யாமல் இருக்கும்போதே உனக்கு இவ்ளோ திமிராடா” என்று அவனை பளாரென அறைந்தாள்.

பின், அவனை நக்கலாக பார்த்து கொண்டே, “பரவாயில்லை என் ஹனி. உனக்கு நல்ல தண்டனை தான் குடுத்துருக்கான். அடி பலமோ…” என்று இளக்காரமாக கேட்க,

அவனோ “உன்னை உருத்தெரியாம அழிக்காம விடமாட்டேண்டி” என்று உறுத்து விழித்தான்.

உத்ரா, குறு நகையுடனும் கண்ணில் கடும் தீவிரத்துடனும் “அதையும் பார்ப்போம்டா. யாரு யாரை அழிக்கிறாங்கன்னு…

அப்போ நீ மோதுனது வாழ்க்கைன்னா என்ன… நம்மளை சுத்தி நல்லவங்க இருக்காங்களா இல்லையானு கூட யோசிக்கத்தெரியாத உதியோட துருவ்கிட்ட.

பட் இப்போ நீ மோதுறது… என்னை எதிர்க்கிறவங்கள எந்திரிக்கவே முடியாத படி அடிச்சு, என்னை தொடவே பயப்படணும்னு நினைக்கிற ‘தி கிரேட் பிசினெஸ் மாக்னெட் உத்ரா’ வோட துருவேந்திரன்கிட்ட.

அவனை மீறி நீ என்னையும் ஒன்னும் பண்ண முடியாது. என்னை மீறி அவனோட ஹேரை கூட நீ…” என்று செய்கையிலேயே செய்து காட்ட, அவன் கோபத்தில் உள்ளுக்குள் எரிமலையாய் வெடித்துக்கொண்டிருந்தான்.

அவன் அழைத்து வந்த அடியாட்களை, சைதன்யாவின் காலடியிலேயே போட்டு, துருவ் அவனை தீப்பார்வை பார்க்க, அப்பொழுது அர்ஜுன் போலீசுடன் அங்கு வந்தான்.

அஜயும், விதுனும் தான் அர்ஜுனுக்கு போன் செய்து சொல்லி இருந்தனர்.

சைதன்யா, துருவ் மட்டும் இருப்பான் என்று நினைத்திருக்க, இவர்களை அவன் எதிர்பார்க்கவில்லை.

காவலர் வந்து, அனைவரையும் ஸ்டேஷன் அழைத்துப் போக, சைதன்யா எல்லாரையும் பகையுடன் ஒரு பார்வை பார்த்து விட்டு போனான்.

விதுன் தான், அஜயிடம், “ஆத்தாடி தீப்பார்வையா இருக்கே. இவன் பார்க்குறதை பார்த்தா க்ளைமேக்ஸ்ல வந்து பழிவாங்குவானோ” என்று கேட்க,

அஜய், “க்ளைமேக்ஸ்ல மட்டும் இல்லை பங்கு. க்ளைமேக்ஸ் வரைக்கும் இவன் தான் பழிவாங்க போறான்”. என்றான் நக்கலாக.

விது எச்சிலை விழுங்கி கொண்டு, “அப்போ இந்த துருவ் அவனை கொலை பண்ணுற வர, நம்ம அடி வாங்கிகிட்டே இருக்கணும்னு சொல்லு” என வீங்கி இருந்த அவன் முகவாயை தடவிக் கொண்டே கேட்டான்.

அஜயும் பாவமாய் வலிக்கும் வயிற்றைப் பிடித்து கொண்டு, “டெஃபினட்லீ டெஃபினட்லீ” என்றான்.

அர்ஜுன் பதட்டமாய் உத்ரா, துருவ் அருகில் வந்து,” உங்களுக்கு ஒன்னும் இல்லைல. அடி எதுவும் படலைல” என்று கேட்க,

உத்ரா, “எங்களுக்கு ஒன்னும் இல்லடா…”என்று கூறும் போதே, அர்ஜுன் மற்ற இருவரையும் பார்த்து, “என்னடா ஆச்சு உங்களுக்கு?” என்றான்.

விதுன் சும்மா இல்லாமல் “நாங்களும் ஃபைட் பண்ணுனோம்ல.” என்று காலரை தூக்கி விட்டு கொள்ள,

‘இவனுங்கள பார்த்தா சண்டை போட்ட மாதிரி தெரியலையே’ என்று நினைத்து கொண்டு,

“சட்டை எல்லாம் கிழிஞ்சுருக்கு” என்றான் சந்தேகமாக.

அஜய், “சண்டைன்னா சட்டை கிழிய தான் செய்யும்…” என்று கெத்தாக கூற,

அர்ஜுன், துருவைப் பார்த்து விட்டு, “ஏண்டா அடிச்ச இவனுக்கே சட்டை கசங்க கூட இல்லை. நான் வரும்போது ஓரமா தானடா இருந்தீங்க” என விடாமல் கேட்டு விட்டு, “ஆமா உங்களுக்கு ஏண்டா அடி பட்டருக்கு” என்று தீவிரமாய் கேட்டான்.

விது “எதிரியை நாலு அடி அடிக்கும் போது, ரெண்டு அடி நம்ம மேல விழத் தான் செய்யும்..இதெல்லாம் பார்த்தா சண்டை செய்ய முடியுமா” என்று பதில் சொல்ல,

“பட் உங்களை பார்த்தா அடி குடுத்த மாதிரி தெரியலையே…” என்று அவர்களை மேலும் சோதிக்க,

அஜய் கடுப்பாகி, “ஏண்டா ஏன்? அதான் தெரியுதுல அடி வாங்கிருக்கோம்னு. கேள்வியா கேட்டு கொல்ற. உனக்கு அவனுங்களே பரவாயில்லை போல, ஐயோ அம்மா வலிக்குதே” என்று இருவரும் வலியில் கத்திக்கொண்டிருந்தனர்.

உத்ரா அவர்களை பார்த்து கலகலவென சிரிக்க. துருவ் முதலுதவி பெட்டியை எடுத்து வந்து அர்ஜுனிடம் கொடுத்து விட்டு பால்கனிக்கு சென்றான்.

அவன் அவர்களுக்கு மருந்து போட்டு விட அஜய் தான் அர்ஜுனிடம் “பங்கு இதுங்க ரெண்டும் எங்களை வேணும்னே அடி வாங்க விட்ருச்சுங்கடா.” என்றதும்,

“விடுங்கடா. உங்களுக்கு தான் ஆள் இல்ல. முரட்டு சிங்கிள் பசங்க தான. அடி வாங்குனா ஒன்னும் தப்பு இல்லை” என்று அசட்டையாக சொன்னதும்,

விதுன் “சிங்கிளா இருக்குறதுக்கும் அடி வாங்குறதுக்கு என்னடா சம்பந்தம்” என்று புலம்பி விட்டு,

மனதில் ‘முதல்ல நாளைக்கு கந்து வட்டிக்கு கடன் வாங்கியாவது ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் ரெடி பண்ணனும். இல்லைனா அடி வாங்கியே சாக வேண்டியது’ தான் என்று தீவிரமாய் சிந்தித்தான்.

அஜய்க்கு சட்டென்று சுஜியின் நினைவு வந்தது.

இன்று அவள் அவனை காதலிக்கிறேன் என்று சொன்னதை நினைத்தவன்,

‘வர வர இவளுக்கு விளையாட்டுத்தனம் ஜாஸ்தி ஆகிடுச்சு.’ என்று தனக்குள் பேசிக்கொண்டு, அவளின் நினைவில் இயல்பாய் சிரித்துக் கொண்டான்.

உத்ராவிற்கு ஒன்றுமே ஓடவில்லை. சைதன்யா பேசிவிட்டு சென்றதே மனதை வெகுவாய் அழுத்தியது.

பின், துருவிடம் சென்றவள், அவனை அழைக்க, அவன் “நீ சைதன்யாகிட்ட என்ன பேசிகிட்டு இருந்த” என்று கேட்டதும்,

அவள் “நான் கேட்குற எந்த கேள்விக்கும் நீ பதில் சொல்லிடாத. ஆனால் நான் மட்டும் நீ கேட்டதும் பதில் சொல்லிடனும். சொல்ல முடியாது…” என்று வீம்பாய் நிற்க, துருவ் குறுநகை பூத்தான்.

சிறிது நேரம் அவளையே அமைதியாய் பார்த்து விட்டு, “சஞ்சுவோட அம்மா சாதனாவை எனக்கு தெரியும். அவள் ஒரு தடவை என்னை பார்க்க வந்தாள்.” என்று சொன்னவனின் முகத்தை ஏன் என்ற கேள்வியுடன் நோக்க, அவன் சாதனாவைப் பற்றி கூறினான்.

சில வருடங்களுக்கு முன், நண்பர்கள் என்ன தவறு செய்தாலும் அதனை மூடி மறைத்து, அவர்களை காப்பாற்றிக் கொண்டே இருந்த துருவிற்கு, அவர்களுடன் பழகும் பெண்கள் மேலும், பெரிதாய் நல்ல எண்ணம் கிடையாது.

அப்பொழுது, ரிஷியிடம் நெருக்கமாக பழகிய சாதனாவையும் அதே போல் தான் நினைத்தான்.

  அந்த நாட்டிலேயே வளர்ந்த தமிழ் பெண்ணான சாதனா ரிஷியிடம் நட்பாக பழக ஒரு கட்டத்தில் அவள் உண்மையிலேயே ரிஷியை காதலித்து விட்டாள். அவன் மேல் மிகுந்த அன்பாய் இருந்தாள்.

ஒரு நாள், குடி போதையில் அவன் அவளிடம் தவறாக நடந்து கொள்ள, அவன் மேல் இருந்த காதலில் அவள் அவனை ஏற்று கொண்டாள்.

சில நாட்களில் அவள் கருவுற்றதை அறிந்ததும், ரிஷியிடம் சொல்ல அவன் அதனை கலைத்து விடுமாறு அசட்டையாக சொன்னதை கேட்டு அதிர்ந்தவள், அவனிடம் திருமணம் செய்து கொள்ளுமாறும், தான் அவனை உண்மையாய் காதலிப்பதாகவும் கூறினாள்.

ரிஷி அதனை மறுத்து விட்டு,  “எனக்கு இந்த கம்மிட்மெண்ட்ஸ்ல லாம் இன்டெரெஸ்ட் இல்ல. ஏதோ அன்னைக்கு தெரியாமல் நடந்துருச்சு. இல்லைன்னா நான் ரொம்ப கேர்ஃபுல் ஆ தான் இருந்துருப்பேன். இதோட நம்ம பிரேக் அப் பண்ணிக்கலாம்” என்று சொல்லிவிட, அப்பொழுது தான் அவளுக்கு அவனின் உண்மையான குணம் புரிந்தது.

அவளால் அதனை அப்படியே விட முடியவில்லை.

அதோடு, குழந்தையை அழிக்கவும் மனம் வரவில்லை.

காஞ்சனாவிடம் சென்று இதனை முறையிட, அவளோ மனதில் ரிஷிக்கு குடும்பம் குழந்தை என்று வந்து விட்டால், சொத்து எதுவும் தனக்கு கிடைக்காது என்று எண்ணி, சாதனாவை அடித்து துரத்தி விட்டாள்.

அப்படியும் அவள் சும்மா இல்லை… என்றாவது ஒரு நாள் இவள் பிரச்சனையாக வருவாள் என்று நினைத்து, அவளை கொலை செய்ய முயற்சி செய்தாள்.

பின், சாதனா துருவிடம் சென்று நடந்ததை சொல்ல, அவனுக்கு அவள் சொல்வது மேல் எல்லாம் நம்பிக்கை இல்லை.

மேலும், அப்போது உத்ராவையும் சந்திக்காததால், அவனுக்கு பெண்கள் மேல் பெரிய மதிப்பு எதுவும் இல்லை.

எனவே, அவன் அவளுக்கு பணத்தை கொடுத்து, அவனை விட்டு விலக சொன்னான்.

சாதனா “துருவ் ப்ளீஸ் நான் உண்மையா தான் அவனை காதலிச்சேன். எனக்கு இந்த பணம் எல்லாம் வேணாம். அந்த காஞ்சனா என்னை கொலை பண்ண பாக்குறா. என் வயித்துல இருக்குற குழந்தையை கொல்ல பார்க்குறாள். எனக்கு ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்” என்று கெஞ்ச, அவன் அவளை கண்டுகொள்ளவே இல்லை.

அவள் கண்ணீரின் உண்மைத்தன்மையை அவன் உணரவும் இல்லை.

துருவ் “சும்மா ஏதாவது பொய் சொல்லிக்கிட்டு இருக்காத. உனக்கு நியாயம் வேணும்னா இந்தியால அவன் தங்கச்சி இருக்காள் அவள்கிட்ட போய் கேளு” என்று கடுப்படித்து விட்டு அவளை வெளியே அனுப்பி விட்டான்.

அப்பொழுது தான், உத்ரா வரவை கேட்டு கடுப்புடன் இருந்ததால், இவ்வாறு சொன்னான்.

சாதனாவும் இந்தியா செல்லலாம் என முடிவெடுத்து, காஞ்சனாவின் கண்ணில் மண்ணை தூவி, இந்தியா வர, இங்கும் அவளை உத்ராவின் வீட்டினுள் நுழைய விடாமல், அவள் ஆட்களை அனுப்பி இருந்தாள்.

அவர்களுக்கு பயந்து, குழந்தை பிறக்கும் வரை தலைமறைவாகவே இருந்தவள். குழந்தை பிறந்து இரண்டு நாட்களிலேயே மாட்டிக்கொண்டாள். அப்பொழுது தான் மீராவின் கண்ணில் பட்டனர் அவளும் சஞ்சுவும்…என்று சொல்லி முடிக்கையில்

உத்ரா துருவை பளாரென அறைந்தாள்.

அர்ஜுன், “உதி என்ன பண்ற?” என்று அதட்ட, அவள் அவனை மீண்டும் அறைந்தாள்.

துருவ் எதுவும் சொல்லாமல் அமைதியாய் அவள் அடியை வாங்கிக் கொள்ள,

உத்ரா கோபத்துடன், அவன் சட்டையை பிடித்து, “உங்களுக்குலாம் வெட்கமா இல்ல. பொண்ணுங்கன்னா உங்களுக்கு விளையாட்டு பொம்மையா.

உங்களால ஒரு உயிரே போய்…ஒரு குழந்தை அனாதையாகி… இதுல மீராவை வேற இழுத்து விட்டு… சே” என்று அவனை கடுங்கோபத்தில் உறுத்து விழிக்க,

அஜய், “இப்படிலாம் நடக்கும்னு தெரிஞ்சா பண்ணுனான்” என்று துருவிற்கு ஆதரவிற்கு வந்ததில், அவனை பார்வையாலேயே எரித்தாள். அதோடு எல்லாரும் கப்சிப் தான்.

துருவ் கலங்கிய கண்ணுடன் “சாரி உதி…” என்று தலையை குனிந்து கொண்டு கூற,

அவள் அதே இறுக்கத்துடன் “மீராவ எப்படி உங்களுக்கு தெரியும்” என்று கேட்டதில், அவன் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் சொல்ல ஆரம்பித்தான்.

அப்பொழுது தான், உத்ராவிற்கு மருத்துவமனையில் மீண்டும் அந்த செயினை போட்டு விட்டு, வீட்டிற்கு சென்றான்.

அங்கு சென்றவனுக்கு பைத்தியம் பிடித்தது போல் இருந்தது.

அனைத்தையும் போட்டு உடைத்து, வீட்டையே கந்திர கோலமாக்கி வெறிபிடித்தவன் போல, வீட்டிலேயே நடமாடிக்கொண்டிருந்தான்.

அப்பொழுது அவனைப் பார்த்த, ராமர் கீதா தம்பதியருக்கு அவனின் நிலை கவலையை கொடுத்தது.

மேலும், அவள் மேல் கொண்ட காதலால் அவள் உயிருக்கு எதுவும் ஆகக்கூடாது என்று அவளை விட்டு விலகியவனை நினைக்கும் போது இருவருக்கும் தாங்கள் செய்த தவறின் வீரியம் புரிந்தது.

இருவரும் ஒன்றாக வந்து, துருவை சமாதானப்படுத்தி விட்டு, “அவளுக்கு தான மறந்துச்சு. வெங்கடேஷுக்கு தான் உன்னை தெரியும்னு  சொன்னியே நாங்க அவர்கிட்ட போய் உத்ராவை பொண்ணு கேக்குறோம். அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு அப்பறம் அவளுக்கு புரிய வை” என்று சொல்லிவிட்டு வெங்கடேஷை பார்க்க செல்ல, இது எதையும் உணரும் நிலையில் கூட அவன் இல்லை.

அப்பொழுது தான், இருவரும் வெங்கடேஷ் வீட்டிற்கு சென்ற போது, அவர் சுயநினைவிலேயே இல்லை. மிகவும் முடியாமல் இருந்தார்.

அவரிடம் எப்படி பேசுவது என்று யோசனையுடன் இருந்தவர்கள், இந்தியாவிற்கு சென்று உத்ரா வீட்டில் பேசுவோம் என்று நினைத்து ஏர்போர்ட் சென்ற வழியிலேயே சைதன்யா அவர்களையும் விபத்து ஏற்படுத்தி  கொலை செய்து விட்டான்.

அதில் மொத்தமாய் கலங்கிய துருவ் தற்போது தான் ஒற்றுமையாய், வாஞ்சையாய் பேசிய பெற்றோர் கண் முன்னே உயிரற்று கிடந்ததை கண்டு கண்ணீர் விட்டு அழுதான்.

தனிமையிலும், தோல்வியிலும் துவண்டு கிடந்தவன், அந்த நிலையிலும் உத்ராவை சுற்றி அவன் ஆட்களை வைத்தே இருந்தான்.

அப்பொழுது சைதன்யா, மயக்கத்தில் இருந்த உத்ராவை மருத்துவமனையில் இருந்து கடத்த, முயற்சி செய்து, அவளை மானபங்கப்படுத்த முயற்சி செய்தான்.

அப்பொழுது தான், துருவ் வெறி கொண்ட வேங்கையாய் மாறி, அவனிடம் இருந்து அவளை காப்பாற்றி, மீண்டும் மருத்துவமனையிலேயே விட்டு விட்டு, சைதன்யாவை கொலைவெறியில் அடித்தான்.

“உனக்கும் எனக்கும் தானடா பிரச்சனை என் அப்பா அம்மா என்னடா பண்ணுனாங்க உன்ன” என்று அங்கிருந்த இரும்பு கம்பியை வைத்து அவன் முதுகிலேயே அடித்தான். மேலும், பல இடங்களில் அவன் அடித்த அடியில், அவன் இடுப்பு கீழே வேலை செய்யாமலே போனது.

இதில் கோபமான சைதன்யாவின் பெற்றோரோ அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி, லண்டனில் அவன் இருந்த அலுவலகத்தில் போதை பொருளை வைத்து, அங்கு அவன் தொழிலே செய்ய முடியாத படி செய்து விட்டனர்.

உத்ராவும் இந்தியா சென்று விட, தொழிலும் செய்ய முடியாமல், தாய் தந்தையும் இல்லாமல், லண்டனை விட்டே வெளியேறி ஆஸ்திரேலியா வந்தவனுக்கு அங்கு அவன் ஏற்கனவே தொடங்கிய தொழிலும், மேலும் அவன் தந்தையின் தொழிலும் கை கொடுக்க, மீண்டும் உழைக்க ஆரம்பித்தான்.

ஆனால், இரவின் தனிமையில், வீடே அதிரும் அளவுக்கு கத்தி அழுவான்.

“நான் என்ன தப்பு செஞ்சேன் எனக்கு ஏன் இவ்ளோ பெரிய தண்டனை. அப்பா அம்மா கூட சேர்ந்து நானும் செத்துருக்கலாம்” என்று கதறியவனுக்கு, சடாரென சாதனாவின் நினைவு வந்தது.

அவளின் கண்ணீர் அப்பொழுது தான் அவனை பாதித்தது. தான் அவர்கள் செய்த தவறுக்கு துணை போனது தான், நான் செய்த பெரிய பாவம் என்று நினைத்தவன், காஞ்சனா அவளை கொலை செய்ய முயற்சி செய்வதாகக் கூறியதை நினைவு கூர்ந்தவன், அவளைத் தேட தொடங்கினான்.

தேடலின் முடிவில், அவள் இறந்து விட்டாள் என்றும், குழந்தை எங்கிருக்கிறது என்றும் தெரியவில்லை என்ற பதில் தான் கிடைத்தது.

அதில் தன்னையே நொந்தவன், தன்னிடம் காப்பாற்ற சொல்லி வந்தாலே, அந்த பெண்ணின் இறப்பிற்கு தான் காரணம் ஆகி விட்டோமே என்று தன்னையே வெகுவாய் நொந்தவன், எப்படியாவது அந்த குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்று தேட, அப்பொழுது தான் மீரா அவனை ரகசியமாக காப்பாற்றி வைத்திருப்பதை, டிடெக்டிவ் மூலம் கண்டறிந்தான்.

தற்போது அந்த குழந்தை அவனிடம் வந்தால், எப்படியும் காஞ்சனாவும் ரிஷியும் சும்மா இருக்க மாட்டார்கள் என்று நினைத்தவன் அவளிடம் இருப்பதே சரி என நினைத்து, அவளை ஆஸ்திரேலியா வர வைத்தான்.

மேலும், அந்த ஆஸ்ரமத்தில் இருப்பவர்களை அந்த அடியாட்கள் மீரா எங்கே என கேட்டு துன்புறுத்த, அவர்களை வேறு இடத்திற்கு மாற்றவும் ஏற்பாடு செய்தவன் துருவ் தான்.

மீரா ஆஸ்திரேலியா வந்ததும், முதலில் குழந்தையிடம் ஒட்டினால், ரிஷிக்கு சந்தேகம் வந்து விடும் என நினைத்து கண்டுகொள்ளாமலே இருந்தவன், சஞ்சுவிற்கு உடம்பு சரி இல்லாமல் போனதும் தான், அவனை தன்னுடனே வைத்திருக்க வேண்டும் என்ற ஆவல் வந்தது.

அவனை பார்க்கும் போது அவனுக்கு உத்ராவின் சாயல் தெரிய, அவனை பாசத்துடன் பார்த்துக் கொண்டான்.

என்ன ஆனாலும் தானே அவனை வளர்க்கலாம் என்று நினைக்கும் போது, மீரா அவனை பெற்ற தாய் போல் பாசத்துடன் பார்த்து கொண்டதை பார்த்தவனுக்கு அவளிடம் இருந்து பிரிக்க மனம் வரவில்லை.

மேலும், ஏற்கனவே அவனிடம் பேசும் பெண்களையும் தவறாக சித்தரித்து பத்திரிகையில் வருவதால், மீராவிடம் பேசினால் அவள் பெயரும் தவறாக அடிபடும் என நினைத்து, அவளை ஏனென்றே தெரியாமல் தங்கையாக நினைத்த மனதை அடக்கி விட்டு அவளை தள்ளியே வைத்திருந்தான்.

இருந்தும், அவள் வாழ்க்கை இப்படியே இருந்து விட கூடாது என யோசித்து, அவளிடம் பேச வருகையில் தான் அவளிடம் இருந்த அர்ஜுனின் புகைப்படத்தை பார்த்தான்.

அந்த நேரத்தில், சைதன்யா மறுபடியும் அவனின் ஆட்டத்தை ஆரம்பித்து விட, உத்ராவையும் காப்பாற்றி, சஞ்சுவை அவன் சொந்தத்திடம் ஒப்படைத்து விட்டு, மேலும், அர்ஜுனையும் மீராவையும் சேர்த்து வைக்கலாம் என்று பலவகையாக யோசித்து தான் இறுதியில் இந்தியா வந்தடைந்தான்.

அவனின் நிலையில் அங்கிருந்த நால்வரும் கண் கலங்கினர்.

எவ்வளவு வேதனை, எவ்வளவு விரக்தி, எவ்வளவு தோல்வி, இருந்தும் உத்ராவின் மேல் அவனுக்கு இன்னும் எவ்வளவு காதல் இருந்திருந்தால், இப்பொழுது எதை இழந்தாலும் அவளை காக்க வேண்டும் என்று நினைத்து, மீண்டும் சைதன்யாவை எதிர்க்கிறான் என்று நினைத்த ஆண்கள் மூவருக்கும் அவன் மேல் அன்பு பொங்கியது.

மூவரும் ஒரே நேரத்தில் அவனை கட்டி அணைத்து ஆறுதல் படுத்தினர்.

அவன் அதோட சும்மா இருந்திருக்கலாம்…

உத்ராவின் முகத்தை  பார்க்காமல், “அந்த மூணு பேரையும் ஒரு வழி ஆக்கிட்டு, உன்னை சுத்தி இருக்குற ஆபத்தை சரி பண்ணிட்டு நான் இங்க இருந்து போயிடுறேன். அதுக்கு அப்பறம் நான் உன் முன்னாடி கூட வரமாட்டேன்.” என்று சொன்னவனுக்கு சில நேரத்திற்கு முன்னால் அவன் உறங்கும் போது உத்ரா பேசியது எதுவும் தெரியவில்லை.

இப்பொழுதும் அவளுக்கு, தான் மிகவும் தவறானவனாகவே மனதில் இருக்கிறோம் என்று தவறாக நினைத்தவன், இப்படி வாயை விட, கண்ணில் வழிந்த நீரை அழுத்தமாய் துடைத்து கொண்டு, உத்ரா, “கிளம்பலாம்” என்றாள் கோபமாக.

விது, “உதி. அவன் பாவம். செய்யாத தப்புக்கு அவன் நிறையவே தண்டனை அனுபவிச்சுட்டான்…” என்று பேச வர, அவள் பல்லைக்கடித்து கொண்டு, “கிளம்பலாம்னு தமிழ்ல தான் சொன்னேன்… நீங்க வேணும்னா இங்க இருந்து கொஞ்சி கூத்தடிச்சிட்டு வாங்க” என்றவள் விறுவிறுவென வெளியில் சென்று விட்டாள்.

மூவரும், இவள் வேற கோச்சுக்கிட்டு போறாளே என்று அவள் பின்னே செல்ல, துருவ் அவள் சென்ற திசையை வெறித்துக் கொண்டிருந்தான்.

மறுநாள், லட்சுமி வீட்டினர் கருணா வீட்டில் இருந்து அவர்கள் வீட்டிற்கு வந்து விட, சஞ்சுவை அருகில் இருந்த பள்ளியில் விட்டு விட்டு, வீட்டிற்கு வந்த மீரா, அலுவலகம் கிளம்பி கொண்டிருந்தாள்.

கைப்பையை சரி பார்த்து கொண்டிருக்கையில், அர்ஜுன் அவள் அறைக்குள் வந்து, உள்பக்கமாய் தாழிட்டான்.

அதில் அவள் திகைத்து, “அர்ஜுன் என்ன பண்றீங்க” என்று கேட்க,

“ம்ம் மயிலே மயிலேன்னா இறகு போடாது அதான்… நானே” என்று அவள் அருகில் வர,

பயந்து நடுங்கியவள், “அர்ஜுன் ப்ளீஸ்” என்று சுவற்றில் மோதி நின்றாள்.

அவன் அவளை மேலும் நெருங்கி, “இனிமே என்னை விட்டு போகணும்னு நினைப்பியா” என்று கிசுகிசுப்பாய் கேட்க, அவளுக்கு தான் வார்த்தையே வெளியில் வரவில்லை.

அவளின் கன்னச் சிவப்பில் தன்னை இழந்தவன் அவள் இதழ்களை முற்றுகை இட போக, முதலில் கிறங்கியவள் பின், ஏதோ தோன்ற அவனை தள்ளிவிட்டு பேசிய வார்த்தையில், அர்ஜுன் உச்ச கட்ட கோபத்தில் அவளிடம் கத்தி அங்கிருந்த பூச்சாடியை தூக்கி எறிந்தான்.

கீழே, அஜயும், விதுனும் ஆளுக்கொரு பக்கம் “அம்மா வலிக்குதும்மா” என்று கதறிக்கொண்டு இருக்க,

லட்சுமி, “ஏண்டா, இப்படி மாடு மாதிரி வளர்ந்துருக்கீங்க… திருப்பி அடிக்க வேண்டியது தான.” என்றவர்,

விதுனிடம் “அண்ணா காலைல இருந்து 10 தடவை போன் பண்ணிட்டாரு நீ வீட்டுக்கு வரலைன்னு… எதேதோ சொல்லி சமாளிச்சுருக்கேன். இப்படி வீங்குன முகத்தோட அவர் முன்னாடி போய் நிற்காத. அப்பறம் உன் காதும் சேர்ந்து வீங்கிடும்.” என்று நக்கலடிக்க, அஜய் ஏதோ பேச வருகையில் தான், அர்ஜுன் எதையோ உடைக்கும் சத்தம் கேட்டது.

அதுவும் மீராவின் அறையில் இருந்து அவன் சத்தம் கேட்க, அந்த நேரம் கருணாகரன் அங்கு வர, அஜயும் விதும் தான் ‘செத்தாண்டா சேகரு’ என்ற ரீதியில் முழித்து கொண்டிருந்தனர்.

உறைதல் தொடரும்…!
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
18
+1
64
+1
4
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான குடும்பக் கதை. நகைச்சுவையும், அழுத்தமும் கொண்ட சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.