Loading

 

 

 

 

இரவு திவ்யான்ஷி வீட்டுக்கு பக்கவாட்டில் இருக்கும் செடிகளுக்கு இடையில் அமர்ந்து இருந்தாள். கையில் ஒரு புத்தகமும் இருந்தது. இரவு நேரம் வீட்டை சுற்றி இருந்த விளக்குகள் எறிந்து கொண்டிருக்க அதன் வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருந்தாள்.

 

திடீரென கார் வந்து நிற்கும் சத்தமும் கதவு திறக்கும் சத்தமும் கேட்க நிமிர்ந்து பார்த்தாள். அர்ஜுன் நடந்து வந்து கொண்டிருந்தான். லெனின் இவனை விட்டு விட்டு சென்றிருக்க வேண்டும் என்று நினைத்தவள் மீண்டும் குனிந்து படிக்க ஆரம்பித்து விட்டாள். அல்லது படிப்பது போல் நடித்தாள்?

 

அர்ஜுன் நேராக வீட்டுக்குள் செல்லாமல் திவ்யான்ஷி இருக்கும் இடத்திற்கு வந்தான். காலடி ஓசை நெருங்கும் போதே திவ்யாவின் மனம் படபடத்தது.

 

‘கண்டத நினைக்காத மனமே… அவன் எல்லாத்தையும் மறந்து போயிருப்பான்.’ என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டு அமைதியாக இருக்க முயற்சித்தாள்.

 

அருகில் வந்த அர்ஜுன் “ம்க்கும்” என்று தொண்டையை கணைத்தான்.

 

திவ்யாவிற்கு இப்போது பதட்டம் மறைந்து கோபம் வந்தது.

 

‘ஏன் கூப்பிட மாட்டானாமா? நான் நிமிர்ந்தா தான?’ என்று வீம்புக்கு கண்டு கொள்ளாமல் அமர்ந்து இருந்தாள்.

 

“உன்ன தான்…” என்று கூறியும் அவள் நிமிராமல் இருக்க “ப்ச்ச்.. மிஸ். திவ்யான்ஷி..” என்று பல்லை கடித்துக் கொண்டு அழைத்தான்.

 

சாவதானமாக நிமிர்ந்து பார்த்து அவள் புருவம் உயர்த்த அர்ஜுன் அதிர்ந்து‌ நின்றான். ஒரு நிமிடம் அவன் கண் முன்னால் எதெதோ வந்து போனது.

 

அவன் அசையாமல் நிற்க மீண்டும் புத்தகத்தை கவனித்தாள். அவள் குனிந்த பின்பே சற்று தெளிவானான். உடனே தொண்டையை செறுமி நிதானத்திற்கு வர பார்த்தான். மீண்டும் நிமிர்ந்த திவ்யா அசையாமல் நிற்பவனை பார்த்து புருவம் உயர்த்தினாள்.

 

“என்ன சிலை மாதிரி நிக்கிற?” என்று கேட்டுக் கொண்டே புத்தகத்தை மூடி வைத்தாள் .

 

தன் நினைவுகளை வேகமாக உதறியவன் அவளை பார்க்காமல் கையில் இருந்த ஃபைலை அவளருகில் போட்டான்.

 

“இத அப்பா கிட்ட கொடுத்துடு”

 

“என்ன இது?”

 

“மேனேஜர் கொடுக்க சொன்னார். என்னனு எல்லாம் எனக்கு தெரியாது”

 

அர்ஜுன் பேச்சு முடிந்தது என்று திரும்பி நடக்க “வெயிட்” என்றாள். அர்ஜுன் நின்றதும் எழுந்து அருகே வந்தாள்.

 

“மேனேஜர எங்க பார்த்த?”

 

“அது எதுக்கு உனக்கு?”

 

“எனக்கு இல்ல. மாமா கேட்பாரு. அப்போ எனக்கு தெரியாதுனு முழிக்க முடியாது. சோ பதில் சொல்லு. இல்லைனா நீயே அவர் கிட்ட கொடுத்துட்டு டிடைல் சொல்லிக்கோ” என்று திருப்பி கொடுத்தாள்.

 

அதை வாங்காமல் எங்கோ பார்த்தவனுக்கு எரிச்சலாக இருந்தது. அதை மறைக்காமல் மேனேஜரை எங்கு சந்தித்தான் என்று கூறினான்.

 

“ஓகே. ” என்றவள் அவனுக்கு முன்பு அங்கிருந்து சென்று விட்டாள்.

 

அவள் செல்வதை பார்த்துக் கொண்டிருந்தவன் சற்று முன் அவள் அமர்ந்து இருந்த இடத்தை ஒரு முறை பார்த்தான். பிறகு அங்கிருந்து ஓடாத குறையாக சென்று விட்டான்.

 

திவ்யா அந்த ஃபைலை செந்தில் குமாரிடம் கொடுக்க அவள் கேட்ட கேள்வியை தான் அவரும் கேட்டார். அதற்கெல்லாம் அவள் பதில் சொல்லி விட “ஏன் இத அவனே வந்து கொடுக்க மாட்டானாமா?” என்று கேட்டார்.

 

“அப்படி கொடுத்துட்டா அவன் கொம்பு உடஞ்சு போயிடுமாம். அதான்” என்று கூறி விட்டு வெளியே வர வாசலில் அர்ஜுன் நின்று இருந்தான்.

 

அவனது முகத்தில் இருந்த உணர்வை பார்த்து விட்டு கடைசியாக பேசியதை கேட்டு விட்டான் என்பதை உணர்ந்து கொண்டாள். ஆனாலும் அவனை திமிராக பார்த்து விட்டு நடக்க அவள் கையை பிடித்து இழுத்தவன் வேகமாக படியேறினான்.

 

திவ்யா ஆச்சரியமாக பார்த்தாளே தவிர கையை உதறவோ விடுவிக்கவோ முயற்சிக்கவில்லை. மாடிக்கு இழுத்து வந்தபின் கையை அவன் விடுவித்து விட அதற்கும் அமைதியாக தான் இருந்தாள்.

 

“என்ன நக்கலா? என் கொம்பு உடஞ்சு போயிடும்னு சொல்லுற? “

 

“வேற எப்படி சொல்லனும்? ஒரே வீட்டுல இருக்க உன் அப்பாவ பார்க்க உன் ஈகோ விடல. அத அப்படி தான சொல்லுவாங்க”

 

“அத சொல்ல நீ யாரு?”

 

“நான் யாருனு நினைச்சு அந்த ஃபைல என் கிட்ட கொடுத்தியோ அதான் நான்.”

 

“அது உங்க சினிமா சம்பந்த பட்ட ஃபைல். அத கைல வச்சுருக்கதே அருவருப்பா இருந்துச்சு. நீ முன்னாடி இருக்கவும் உன் கிட்ட கொடுத்துட்டேன். இதுல நீ யாருனு நான் நினைச்சேன்?”

 

“இங்க பாரு.. உன் ஈகோவ கொம்பு சீவனும்னா நல்லா சீவிக்கோ. அத விட்டுட்டு சும்மா என்ன டீஸ் பண்ணுறதா நினைச்சு சினிமா பத்தி பேசாத. இதுக்கெல்லாம் ரியாக்ட் பண்ண நேரம் இல்ல.”

 

சலிப்போடு சொல்லி விட்டு அறை பக்கம் சென்றாள்.

 

“நில்லு..”

 

“ப்ச்ச்”

 

“இன்னைக்கு வேற ஒருத்தரையும் சேர்த்து பார்த்தேன்”

 

“யார?”

 

“உன் எக்ஸ் லவ்வர்”

 

அதிர்ந்து போய் திரும்பி பார்த்தாள். அவளது அதிர்ச்சியான முகத்திற்கு நேர்மாறாக உணர்ச்சியே இல்லாமல் பார்த்தான் அர்ஜுன்.

 

“யாரு.. யார சொல்லுற?” எனும் போதே பதட்டம் கூடியது.

 

“அந்த டைரக்டர்…”

 

அர்ஜுன் பெயரை சொல்லாமல் நிறுத்தி விட திவ்யான்ஷிக்கு வேதனையாக இருந்தது. ஆனாலும் அதை அவன் முன் காட்ட விருப்பம் இல்லாமல் திரும்பிக் கொண்டாள்.

 

“எக்ஸ் லவ்வர் எதுவும் சொல்லி விட்டாரானு கேட்க மாட்டியா?”

 

அர்ஜுன் சீண்டுவது தெரிந்தும் அமைதியை இழுத்து பிடித்தாள்.

 

“தேவையில்ல. உன் வேலைய பாரு”

 

“அதெப்புடி…? முன்னால் காதலன் மா..  நீங்க ஓடிப்போக போறதா எல்லாம் சொல்லிட்டு இருந்தாங்க. இப்படி சொல்லுற?”

 

“அர்ஜுன் ஸ்டாப்” என்று அமைதி இழந்து கத்தி விட்டாள். ஆனாலும் அவன் அசையாமல் நின்றான்.

 

“அது என் பர்ஸ்னல். நீ உன் வேலைய மட்டும் பாரு”

 

“ஊருக்கே தெரிஞ்ச விசயம். பர்ஸ்னல்னு என் கிட்ட கத்தி என்ன ஆக போகுது? தெரியாம தான் கேட்குறேன். அந்த ஆளு…”

 

“ஹேய்… இதோட நிறுத்திடு” என்று விரல் நீட்டி எச்சரித்தாள்.

 

“அட அவர பத்தி பேசுனா கூட கோபம் பொத்துக்கிட்டு வருது”

 

“வேணாம். அவ்வளவு தான் லிமிட். இதுக்கு மேல பேசுன மரியாதை கெட்டுரும்” என்று கூறியவள் வேகமாக கதவை திறந்து அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

 

கதவை அடைக்கும் நேரம் அதில் கைவைத்து தடுத்தவன் “என் வாய மூடிட்டா எதுவுமே இல்லனு ஆகிடுமா? ” என்று கேட்டான்.

 

அவன் வெற்றி பாதையிலும் அவள் தோல்வி பாதையிலும் இருக்கும் போது பேச தான் செய்வான். கேட்டு தான் ஆக வேண்டும் என்று மூளை இடித்துறைத்தது. ஆனாலும் அவ்வளவு சீக்கிரம் தோல்வியை ஒப்புக் கொள்ள திவ்யான்ஷிக்கு மனம் இல்லை.

 

அவனது கையை வேகமாக தட்டி விட்டவள் “உன் கிட்ட பேசவே பிடிக்கல.” என்று கூறி வேகமாக கதவை அடைத்து விட்டாள்.

 

அர்ஜுன் அசையாமல் நின்று இருந்தான். கதவை அடைத்தவளும் கதவில் சாய்ந்து கொண்டு நின்று இருந்தாள். இருவரின் எண்ணமும் ஒரே நிகழ்வை தான் திருப்பி பார்த்தது.‌ ஆனால் இருவரின் மனநிலையும் வெவ்வேறாக இருந்தது.

 

ஒரு பெருமூச்சோடு அர்ஜுன் சென்று விட திவ்யா மெத்தையில் வந்து அமர்ந்தாள்.

 

‘எல்லாம் நேரம். உன் நேரம் டா. அதுனால பேச தான் செய்வ. நான் தோத்துட்டேன்னு சந்தோசம். ஆமா தோத்து தான் போயிட்டேன். ஆனா அத கொண்டாட உனக்கு தகுதி‌ இல்ல.’

 

திவ்யா கோபமாக தனக்குள்ளே பேசிக் கொண்டாலும் முகம் முழுவதும் தோல்வியின் வலி இருந்தது. அவள் யாரிடம் தோற்றாலும் கவலை பட மாட்டாள். அடுத்த நாள் வெற்றியை தொட்டுக் காட்டுவேன் என்று சவால் விட கூடியவள்.

 

ஆனால் அர்ஜுனிடம் மட்டும் தோற்க கூடாது . அவனிடம் தோற்கும் போதெல்லாம் உயிரை மாய்த்துக் கொண்டால் என்ன என்று நினைத்து இருக்கிறாள்.

 

முகத்தை மூடி சில நிமிடங்கள் அமர்ந்து இருந்தவள் அப்படியே மெத்தையில் விழுந்து தலையணையில் முகத்தை மறைத்துக் கொண்டாள்.

 

உடை மாற்றிக் கொண்டு வந்து படுத்த அர்ஜுன்‌ திவ்யா பேசியதையே நினைத்துக் கொண்டிருந்தான். அவள் தோற்க வேண்டும் என்று அவனும் நினைக்கவில்லை தான். ஆனால் தோற்றுப்போய் விட்டாளே.

 

அவனது ஆழ் மனதில் இருக்கும் கோபம் தான் இப்போது வார்த்தைகளாக வந்தது. இதை அவளிடம் சொல்லாமல் போயிருக்கலாம். அவளாக ஈகோவை பற்றி பேசி ஆரம்பித்து வைத்து விட்டாள்.

 

‘நீ நான் பார்த்தவ இல்ல… நீ யாரோ.. யாரோ ஒரு ஆக்டர்.. யாரோ ஒரு திவ்யான்ஷி.. யாரோ ஒரு மின்மினி. நீ எனக்கு வேணாம். நிச்சயமா வேணாம்’

 

அர்ஜுன் மனம் நொந்து போய் கூற வேதனையோடு கண்ணை மூடிக் கொண்டான்.

 

 

*.*.*.*.*.*.

 

 

“ஓய்.. என்ன கீழ வராம உட்கார்ந்து இருக்க?”

 

கேள்வி கேட்டபடியே அறைக்குள் நுழைந்த மஞ்சுளா தனியாக போனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த திவ்யாவை பார்த்து முழித்தாள்.

 

“ஏய்.. என்ன தனியா சிரிக்குற?”

 

“தனியா சிரிக்கனும்னு ஆசை ஒன்னும் இல்ல. இங்க வா. நீயும் சேர்ந்து சிரி”

 

திவ்யா முகம் கொள்ளா சிரிப்போடு அழைக்க மஞ்சுளா வேகமாக வந்தாள்.

 

“இத பாரு” என்று ஒரு புகைப்படத்தை காட்டினாள். அதில் ஜெயதேவ் வெள்ளை நிற விண்வெளி பயணத்திற்கு உடுத்தும் உடையில் இருந்தான்.

 

கையில் அந்த உடைக்கு பொருத்தமான தலைகவசத்தை பிடித்துக் கொண்டு நின்று இருந்தான்.

 

“ஹா… என்ன இது? எதும் சயின்ஸ் ஃபிக்ஷன் மூவில ஆக்ட் பண்ணுறாரா?” என்று மஞ்சுளா கேட்க திவ்யான்ஷி வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.

 

“சொல்லிட்டு சிரி ” என்று மஞ்சுளா உலுக்கவும் தன் சிரிப்பை அடக்கி விட்டு “இத கேளு” என்று ஜெயதேவின் குரலை ஒலிபரப்பினாள்.

 

“அதாவது.. ஒருத்தன் அந்த ஒருத்தன் நான் தான். நான் வீட்டுல டீவி பார்த்துட்டு இருக்கும் போது ஒரு சிப்ஸ் பாக்கெட்ட எடுத்து ஓபன் பண்ணுறேன். உடனே டீவிக்குள்ள இருக்க கேரக்டர் எல்லாம் குதிச்சு வந்து அந்த சிப்ஸ்ஸ கேட்டு சிரிக்குதுங்க.

 

தனியா ஸ்டாச்சூ எக்ஸிபிஷன்ல சிப்ஸ் ஓபன் பண்ணா சிலை எல்லாம் உயிர் வந்து சிப்ஸ் கொடுனு கேட்குது. இது சரியில்லனு ஓடிப்போய் எல்லா கதவையும் அடச்சுட்டு இருட்டுக்குள்ள ஓபன் பண்ணா அப்புவும் இருட்டுல இருக்க பேய் எனக்கு கொஞ்சம்னு கேட்குது..

 

கடைசியா எவனும் வேணாம் போங்கயானு செவ்வாய் கிரகத்துல போய் இங்க யாரும் வர மாட்டாங்கனு பாக்கெட்ட ஓபன் பண்ணா ஏலியன்ஸ் எல்லாம் சுத்தி நின்னுட்டு சிப்ஸயே பார்க்குது. கடைசில சிப்ஸ்ல கொஞ்சம் அதுக்கும் கொடுத்துட்டு நானும் சாப்பிட்ட மாதிரி ஆட் முடிஞ்சுடும்.”

 

ஜெயதேவ் சொல்வதை முழுதாக கேட்ட மஞ்சுளா வாயை பிளந்து நிற்க திவ்யான்ஷி விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

 

“பாரு.. நான் நடிச்ச ஆட் க்கு எவ்வளவு பேசுன? இந்த காமெடி எப்படி?”

 

“கடவுளே” என்று தலையில் அடித்துக் கொண்ட மஞ்சுளாவிற்கும் சிரிப்பு தான் வந்தது.

 

“இப்படிலாமா யோசிப்பாங்க? ஒரு சிப்ஸ் தின்ன செவ்வாய்க்கு போகனுமா? அவ்வளவு காஸ்ட்லியா அது? இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ”

 

“அத அவன் கிட்டயே கேளு.. அய்யா க்ரீன் ஸ்க்ரீன்ல ஸ்பேஸ் சூட் போட்டு கெத்தா போட்டோ எடுத்து அனுப்பிருக்கார். என்னனு விசாரிச்சா இத சொல்லுறான் “

 

“இங்க கொடு” என்று போனை வாங்கிய மஞ்சுளா “பார்த்து சார்.. சிப்ஸ் சாப்பிட செவ்வாய் கிரகத்துக்கு போனவரே.. அங்க இருக்க ஏலியன் உங்கள பிங்கர் சிப்ஸ் போட்டு சாப்பிட்டுட போறாங்க” என்று கூறி அதை ஒலிப்பதிவு செய்து அனுப்பி விட்டாள்.

 

“ஹாஹா.. பிங்கர் சிப்ஸ்.. ஏலியன்ஸ் இவன தின்னா ஏலியன்ஸ யாரு காப்பாத்துறது?” என்று திவ்யா கேட்க அதையும் மஞ்சுளா அனுப்பி வைத்து விட்டாள்.

 

சில வினாடிகளிலே பதிலும் வந்தது.

 

“மஞ்சுளா.. நீங்களும் மினி கூட சேர்ந்து கெட்டு போயிட்டீங்க.‌ போனா போகுதுனு உங்க ரெண்டு பேருக்கும் ப்ரோமோஷன்க்கு ரெண்டு சிப்ஸ் பாக்கெட் அனுப்பலாம்னு பார்த்தேன். ஓவரா பேசுறீங்க. உங்களுக்கு இல்ல”

 

இதை கேட்டு விட்டு மஞ்சுளாவும் திவ்யாவும் தலையிலடித்துக் கொண்டு சிரித்தனர்.

 

“வேணாம் வேணாம்.‌ நீயே செவ்வாய் புதன் நெப்டியூன் வரை சிப்ஸ் சாப்பிட போற. எங்க பங்க அங்க இருக்க எல்லா ஏலியன்ஸுக்கும் கொடுத்துட்டு வந்தடு”

 

திவ்யா குறுஞ்செய்தி அனுப்பி வைக்க தேவிடம் இருந்து கோப முகங்கள் பதிலாக வந்தது.

 

“இந்த கொடுமைய எல்லாம் கேட்க ஆளே இல்லையா?” என்று திவ்யா சிரித்துக் கொண்டே இருந்தாள்.

 

“அதுக்கு நடிக்க ஒத்துக்கிட்டாரே.. அத பாராட்டனும்.. சரி நீ ஏன் ரூம்லயே இருக்க? சாப்பிடுற ஐடியா இல்லையா? அந்த சமையல்கார பொண்ணு நீ கீழ வரலனு சொல்லுது”

 

திவ்யாவின் முகத்தில் இருந்த சிரிப்பு உடனே காணாமல் போய்விட்டது.

 

“ப்ச்ச்.. அர்ஜுன் கீழ இருக்கானா?”

 

“இல்லயே.. நான் பார்க்கல”

 

“அவன் போனதும் வரலாம்னு உட்கார்ந்துட்டேன்”

 

“ஏன்?”

 

“எனக்கு அவன பார்க்க இஷ்டம் இல்ல”

 

“என்னாச்சு?”

 

“நேத்து நைட்டு ஒரு குட்டி சண்டை”

 

“ம்க்கும்.. இதுக்கு இவ்வளவு பில்டப்பா? அதுக்கு சாப்பிடாம உட்கார்ந்து இருப்பியா? செந்தில் சார் வேற எங்கயோ ஊருக்கு கிளம்புறார். முதல்ல இறங்கி வா” என்று கையை பிடித்து வெளியே இழுத்து வந்தாள்.

 

அர்ஜுன் வீட்டில் இல்லை என்று உறுதி செய்த பிறகே திவ்யாவிற்கு நிம்மதியாக இருந்தது.

 

செந்தில் குமார் எதோ முக்கியமான வேலையாக இரண்டு வாரத்திற்கு வெளிமாநிலம் கிளம்பினார். திவ்யா வழியனுப்பி வைக்க “கேரளாக்கு போயிட்டு பத்திரமா வரனும் சரியா” என்று கூறி விட்டு சென்றார்.

 

அவர் அந்த பக்கம் சென்றதுமே இந்த பக்கம் கேரளா செல்வதற்கு தேவையான பயணசீட்டு வந்து சேர்ந்தது. அதில் நேரத்தை பார்த்து விட்டு “சரி வா பேக் பண்ணுவோம்” என்று மஞ்சுளாவை இழுத்துக் கொண்டு சென்றாள்.

 

இருவரும் பேசிக் கொண்டே திவ்யான்ஷிக்கு தேவையானவற்றை எடுத்து அடுக்கினர். வேலை முடிந்ததும் மஞ்சுளா மெத்தையில் விழுந்து விட்டாள்.

 

“அதுக்குள்ள டயர்டா?”

 

“ப்ச்ச்.. என்ன கேரளா போய் என்ன ப்ரயோஜனம்? நாள் முழுக்க சூட்டிங்ல போயிடும். அது முடிஞ்சதும் வீட்டுக்கு வரனும்.”

 

“அப்புறம் ? வேற என்ன பண்ணனும்?”

 

“ஊர சுத்தி பார்க்கனும். கேரளா எவ்வளவு அழகான ஸ்டேட். அதுல பார்க்க எவ்வளவு இடம் இருக்கு. ஆனா என் நிலமைய பாரு.. உன்‌ கூட போக வேண்டி இருக்கு”

 

“ரொம்ப சலிச்சுக்காத.. வேணும்னா மேக் அப்க்கு ஆளுங்கல ஏற்பாடு செய்ய சொல்லி கேட்குறேன்.‌ நீ மட்டும் போய் சுத்தி பாரு”

 

“நிஜம்மாவா?” என்று சந்தோசமாக கேட்டவள் உடனே “வேணாம்” என்றாள்.

 

“ஏன்?”

 

“உன்ன தனியா விட்டுட்டு போனா நான்ல பதில் சொல்லனும்?”

 

“மாமா கிட்ட நான் சொல்லுறேன்”

 

“வேணாம் வேணாம். அவரே வேலை பிசில இருப்பார்.”

 

“அப்போ என் கூடவே இரு. கவலை படாத. சாங் சூட்டிங் தான்.‌ நிறைய ப்ளேஸ பார்க்கலாம்”

 

மஞ்சுளா தலையாட்டும் போதே போன் இசைக்க அதை எடுத்து காதில் வைத்தாள்.

 

“ஹலோ..”

 

“மஞ்சுளாவா?”

 

“ஆமா.. நீங்க?”

 

“நான் டைரக்டர் அஸிஸ்டன்ட் பேசுறேன்” என்று கூறி பெயரை சொன்னதும் மஞ்சுளா அதிர்ச்சியானாள்.

 

“உங்க கிட்ட இப்போ பேச முடியுமா?” என்று கேட்டதும் “ம்ம்.. சொல்லுங்க” என்றாள்.

 

திவ்யா அவளை கேள்வியாக பார்க்க போனை ஸ்பீக்கரில் போட்டாள்.

 

“அது… திவ்யான்ஷி மேம் கூட ஒரு மீட்டிங் ஃபிக்ஸ் பண்ணனும். அப்பாயின்ட்மெண்ட் காக தான் கால் பண்ணேன்”

 

“அப்பாயின்ட்மென்ட் ? என்ன விசயமா ?”

 

“நெக்ஸ்ட் மூவிக்கு திவ்யான்ஷி நடிச்சா நல்லா இருக்கும்னு டைரக்டர் நினைக்கிறாரு. அதான்…”

 

அவன் பாதியில் நிறுத்தி விட மஞ்சுளா திவ்யாவை பார்த்தாள். திவ்யா ஒன்றும் புரியாமல் குழப்பமாக பார்க்க “நான் மேடம் கிட்ட கேட்டுட்டு சொல்லுறேன்” என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டாள்.

 

“யாரு இது?”

 

“டைரக்டர் பாலனோட அசிஸ்டன்ட்”

 

“வாட்?” என்று அதிர்ச்சி தாங்காமல் திவ்யா எழுந்து விட்டாள்.

 

“நிஜம்மாவா? அவர் ஏன் என்ன வச்சு படம் பண்ண கூப்பிடுறாரு?”

 

“அதான் ஆச்சரியம். வேணாம்னு சொல்லியும் நெக்ஸ்ட் மூவிக்கு நீ வரனும்னு அப்ரோச் பண்ணுறாரே..”

 

“ஒரு வேளை அவ்வளவு ஸ்ட்ராங் கேரக்டரா இருக்கும்” என்று கூறியவள் யோசனையோடு அமர்ந்து விட்டாள்.

 

சில நிமிடங்களுக்கு பிறகு “ஃபிக்ஸ் பண்ணு. நாம கேரளா போயிட்டு வந்தப்புறம் மீட் பண்ணலாம்” என்றாள்.

 

“லூசா நீ?”

 

“யோசிச்சு தான் சொல்லுறேன் மஞ்சு. நீ போன் பண்ணி சொல்லிடு. நான் மேனேஜர் கிட்டயும் மாமா கிட்டயும் சொல்லிக்கிறேன்.”

 

“இது எல்லாம் சரி… இன்னும் முக்கியமான ஒன்ன மறந்துட்டியே?” 

 

மஞ்சுளா நக்கலாக கூற திவ்யா ஒரு நிமிடம் அமைதியாக இருந்தாள். பிறகு “நான் எதையும் மறக்கல. ஆனா நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்ல” என்றாள்.

 

குரலில் உணர்ச்சியே இல்லாமல் அவள் பேச மஞ்சுளாவிற்கு தான் கவலையாக இருந்தது.

 

‘இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ?’ என்று நினைத்துக் கொண்டு போனை கையில் எடுத்தாள்.

 

தொடரும்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
5
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. Meenakshi Subburaman

      💞ஓ இவரு தான் அந்த எக்ஸ் டைரக்டரா அப்போ இன்னும் தரமான சம்பவங்கள் பல இருக்கு 😜😘😘

      💞 ஏன்டா தேவ் நடிக்குற விளம்பரத்துலையும் ஒரு லாஜிக் வேணாமா டா

      💞அவனுக்கு கூப்டா நீங்களும் யோசிக்க மாட்டிங்களா டா

      💞ஆமா அர்ஜுன் நீ ஏன் டா அப்படி அலறி அடிச்சுக்குட்டு ஓடி வர்ர

      💞 அப்போ அங்க ஏதோ சம்திங் சம்திங் இருக்கு 😜😜😜

      💞 கடைசியில் அவ நடிகையா இருக்குறது பிடிக்காமல் தான் இப்போ இவ்வளவு அக்கப்போருமா 🤦🤦🤦🤦

      💞👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌💐💐💐💐 சூப்பர் டா ஹனி

      1. hani hani
        Author

        விளம்பரம்னாலே லாஜிக் இல்லாதது தான வருது 🤣 அது தான் போல 🤔🤔🤔

    2. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.