Loading

சீமை 43

சிறுமயிலூர் கிராமத்தில் இருக்கும் மதுரைவீரன் சாமிக்கு வருடத் திருவிழா நடத்துவதற்காக தேதி குறிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மற்ற விவரங்களை ஊர் தலைவர் பேசிக் கொண்டிருக்க, பம்பை உடுக்கை அடிப்பதில் வந்து நின்றது.

அனைத்து விஷயத்திலும் சுமுக தீர்வு காணும் ஊர் மக்கள் இதில் மட்டும் சிக்கிக் கொள்வார்கள் வருடம் தவறாமல். முனுசாமி பெற்ற இரு புதல்வர்களும் பம்பை உடுக்கை அடிப்பதில் தேர்ச்சி பெற்றவராக இருக்க, ஒற்றுமையாக இருந்தால் கூட சேர்ந்து செய்யட்டும் என்ற பெருந்தன்மை ஊர் மக்களிடம் இருக்கும்.

ஆனால், அவர்களோ முட்டுக்கொரு திசையில் நின்று கொண்டு ஒருவரை ஒருவர் முட்டிக்கொண்டு நிற்கிறார்கள். ஆறுமுகத்திற்கு கொடுத்தால் சண்முகம் சண்டைக்கு வருவாரோ இல்லையோ அவரின் புதல்வன் மச்சக்காளையன் சண்டைக்கு பாய்வான். அதே நிலைமை தான் சண்முகத்திற்கு கொடுத்தால் ஆறுமுகத்தின் பிள்ளை மூலமும் வரும்.

ஒரு தலை பட்சமாக முடிவு செய்த ஊர் பெரியவர்கள் இருவரையும் அழைத்து சுமுகமாக பேசி ஒருவரை தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவு செய்தனர்.

“எங்க அப்பா போனதுல இருந்து இந்த தொழிக்காகவே வாழ்ந்துட்டு இருக்க. வெளியூர்கார அத்தினி பேரும் வெத்தலை பாக்கு வெச்சு நீங்கதா வரணுனு சொல்லும்போது நா பொறந்த ஊருல என்னை மதிக்காம இருக்குறது அவமானமா இருக்கு.” என்ற ஆறுமுகத்திற்கு ஊர் தலைவர் பகுமானமாக சமாதானங்கள் சொல்ல,

“மத்தவங்கள மாதிரி அப்பன் செத்ததுக்கு அப்புறம் இந்த தொழிலுக்காக வாழ ஆரம்பிக்கல. என் காதுல கேட்ட நாளுல இருந்து பம்பை உடுக்கை என் உயிராக இருந்திருக்கு. ஊரு ஊரா சுத்தி என் திறமைய காட்டுனாலும் ஊருக்குள்ள காட்டாம இருக்குறது வருத்தமா இருக்கு. இந்த மொற திருவிழாவுல பம்ப உடுக்க அடிக்குறத எனக்கு குடுங்க. காசு கூட எதுவும் வேணா தெய்வத்துக்கு செய்யுறதா நெனைச்சு மகிழ்வா செஞ்சிட்டு போற.” என்றார் சண்முகம்‌.

“உங்க ரெண்டு பேர பத்தி எங்களுக்கு ரொம்ப நல்லா தெரியும். ஒருதர வுட ஒருத்தர் எந்த விதத்திலும் கொறஞ்ச ஆளு இல்ல. ஆனா, அண்ண தம்பிங்க முட்டிக்கிட்டு நிக்கும்போது சேர்ந்து செய்யச் சொல்லி சங்கடப்படுத்த ஊர் சபைக்கு விருப்பம் இல்ல. போன வருசம் சண்முகத்துக்கு குடுத்ததால ஆறுமுகம் மகன் மதுரவீரன் ஊரு திருவிழாவ நல்லபடியா நடத்த வுடல. இந்த தடவ அந்த மாதிரி எந்த பிரச்சனையும் வந்துடக்கூடாது. அதனால நீங்களே சுமூகமா ஒரு முடிவுக்கு வாங்க.” இருவரையும் விட்டுக் கொடுக்க முடியாமல் பொதுவான பேச்சை சபையில் வைத்தார் ஊர் தலைவர்.

“போன மொற என்னை பம்ப உடுக்கைய அடிக்க வுடாம பிரச்சனை பண்ணது இவன் மகன் தான். அதனால இந்த மொற அவனுக்கு நீங்க குடுக்கக் கூடாது.” சண்முகம்.

“நியாயமா போன மொறயே எனக்கு தான் நீங்க குடுத்து இருக்கணும். என்னென்னமோ சாக்கு சொல்லி என்னோட உரிமைய தட்டி பறிச்சதால தான் என் மகன் பிரச்சனை பண்ணா. இந்த மொறயும் என் உரிமை பறிக்கப்பட்டுச்சுன்னா சும்மா இருக்க மாட்டா அவன்.” ஆறுமுகம்.

“உன் மகனுக்கு மட்டும்தா சண்டை போட தெரியுமா? என் மகனை அடக்கி வெச்சிருக்க எதுக்கு வீண் வம்புன்னு. அடக்கி வெச்சவனை அடங்காம பாய வெச்சிடாத.” சண்முகம்.

“என் புள்ளை மாதிரி உன் புள்ளை  இல்லினு சமாளிக்காத. என் மகனுக்கு ஈடா உன் மகனை வெச்சா தோல்வி உனக்குதா.” ஆறுமுகம்.

இருவரும் தங்கள் பிள்ளைகளை வைத்து பகையை வளர்த்துக் கொண்டிருக்க, “என்னாப்பா நீங்க சமாதானமா பேசி ஒரு முடிவுக்கு வாங்கன்னு சொன்னா இங்கயே புதுசா ஒரு பிரச்சனைய கிளறிட்டு இருக்கீங்க. ரெண்டு பேரும் ஒத்து வரலைன்னா இந்த தடவ வெளியூர்க்காரங்க ஆரயாது ஏற்பாடு பண்ணிக்கிறோம்.” சண்டை உருவாவதற்கு முன் தடுக்கும் விதத்தில் ஊர் தலைவர் பேச,

“அதெல்லாம் என்னால ஒத்துக்க முடியாது. போன மொற கைவிட்டுப் போனதை இந்த மொற வாங்கியே தீருவ.” என அடம் பிடித்தார் ஆறுமுகம்.

“நா இருக்க வரைக்கும் உன்னால இத வாங்க முடியாது.” சபதம் போட்டார் சண்முகம்.

இருவரும் அடங்குவதாக தெரியவில்லை. ஒருவர் மாற்றி ஒருவர் மிரட்டல் விடுத்துக் கொண்டிருக்க, “உங்க குடும்ப பிரச்சனைய தீர்த்துக்க திருவிழா நடக்கல. வருசா வருசம் நடந்த மாதிரி இந்த வருசமும் கலவரம் நடக்கக்கூடாதுனு உங்க ரெண்டு பேரயும் கூப்பிட்டு பேசுற. இதுக்கு மேலயும் பேசினா வேலைக்கு ஆவாது. நாங்க வெளியூர் ஆளுங்களா பாத்து முன்பண தொகை குடுத்துக்குறோம். உங்க ரெண்டு பேரால திருவிழாவுல எந்த பிரச்சினையும் வரக்கூடாது.” என்றவர் பேச்சை முடிக்கும் முன்னர்,

“எங்க அப்பனுக்கு இத குடுக்கலனா வேற எவனும் ஊருக்குள்ள வர முடியாது.” என்ற மிரட்டலான குரலோடு அங்கு வந்தான் மதுரவீரன்.

“ஊருக்குள்ள வர முடியாதுன்னா என்னா அர்த்தம்? இந்த சண்டியாத்தனம் எல்லாம் வேற எங்கயாது வெச்சிக்க. வருசம் தவிராம உங்க ரெண்டு குடும்பத்தாலையும் எங்க நிம்மதி கெட்டுப் போவுது. இந்த மொற எங்க முடிவுல எந்த மாற்றமும் இல்ல.”

“அப்போ எம் முடிவுலயும் எந்த மாற்றமும் இல்ல. இந்த ஊருக்குள்ள எவன் பம்ப உடுக்க அடிக்க கால வெச்சாலும் அந்த எடத்துலயே வெட்டுவ.”

“ஆறுமுகம், உன் மகன் பேசுறது கொஞ்சம் கூட நல்லா இல்ல. இந்த ஊர மதிக்காம உங்க இஷ்டத்துக்கு நடந்துட்டு இருக்குறதுக்காகவே ஊர வுட்டு தள்ளி வெக்க முடியும். காலங்காலமா இருக்க பழக்கத்தால அமைதியா இருக்க.” என்ற பெரியவருக்கு மகன் போல் அடங்காமல் பதில் சொன்னார்,

“என் மகன் பேசுறதுல எந்த தப்பும் இல்லை. என்னை தவிர வேற ஆரு கிட்ட இந்த பொறுப்ப குடுத்தாலும் காலோட சேர்த்து கையயும் வெட்டுவ.” என்று.

“இவன மாதிரி ஆளு கிட்ட இந்த புனிதமான பம்ப உடுக்கைய குடுத்த எங்க அப்பன என்னா சொல்லி திட்டுறதுனு தெரியல. அப்பனும் மகனும் சேர்ந்து ஊரையே நாசமாக்கிடுவாய்ங்க போல. இவுனுங்கள அடக்க என் மகன் மச்சக்காளையனால மட்டும் தான் முடியும். இந்த வருசம் பம்ப உடுக்கைய நா அடிக்குற. எவன் வந்து என்னா பண்ணுறான்னு பாத்துடுற.” என்றவர் கட்டிருக்கும் வேட்டியின் முடிச்சை அவிழ்த்து உதறிவிட்டு மீண்டும் முட்டி தெரிய ஏற்றி கட்டினார்.

“யோவ்! நீயி மட்டும் மீசை வெச்ச ஆம்பளையா இருந்தா எங்கப்பன எதுத்து பம்ப உடுக்கை அடிச்சு பாருய்யா. அப்ப தெரியும் ஆறுமுகத்தோட புள்ளை எம்மாம் பெரிய வீரன்னு.” என்றவனை முறைத்துக் கொண்டிருந்தாள் ஒளிர்பிறை.

அவள் பார்வையை அறிந்து கொள்ளாதவன் துள்ளி குதித்துக் கொண்டிருக்க, “எங்க அப்பா முன்னாடி இன்னொரு தடவ குரல ஒசத்துன…. அது உனக்கு சொந்தமா இருக்காது.” மதுரவீரனோடு மல்லு கட்ட தானாக வந்தான் மச்சக்காளையன்.

“என்னாடா பண்ணிடுவ? உங்க அப்பனயும் உன்னயும் இதே எடத்துல வெட்டி போட்டுடுவ. ஒழுங்கு மருவாதியா போங்கடா.” என்ற மதுரவீரனின் தோற்றம் சகிப்பை கொடுத்தது ஒளிர்பிறைக்கு.

“வாடா வா…. நீயி மட்டும் ஆம்பளையா இருந்தா வாடா. இதே எடத்துல உன் குடல உருவி மதுரவீரனுக்கு நா மாலை போடுற.” என்றவன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது மூச்சு வாங்க வந்து நின்றாள் சாமந்தி.

வந்த தோழியை கண்டு வாயுக்குள் முணுமுணுத்தாள் ஒளிர்பிறை. அதை அறிந்து மழுப்பியவள், “என்னாடி பிற அதிசயமா பேசிட்டு  இருக்காய்ங்க. இந்நேரம் ரெண்டு பேரும் சட்டைய கிழிச்சி உருண்டு இருப்பாய்ங்களே.” என அவள் முடிக்கும் முன்னர் இருவரும் அடித்துக்கொள்ள ஆரம்பித்தனர்.

பாதி ஊர் சலசலப்பில் கலைய, மீதி ஊர் தலையில் அடித்துக் கொண்டு வேடிக்கை பார்த்தது. பெற்ற மகன் தவறு செய்தால் கேட்க வேண்டிய தந்தைமார்களே அங்கு அடித்துக் கொண்டிருக்க, இளம் ரத்தம் சூடாக பாய்ந்து கொண்டிருந்தது.

நால்வரும் ஒருவர் மாற்றி ஒருவர் தாக்கிக் கொண்டு யார் வீரன் என்று அடையாளப்படுத்திக் கொள்ள, ஒளிர்பிறையின் தந்தை பாண்டியன் ஆறுமுகத்தை தடுத்துக் கொண்டிருந்தார். சண்முகத்தை தடுக்க யாரும் இல்லை என்ற தைரியத்தில் அவர் வேகமாக சண்டையிட்டுக் கொண்டிருக்க, “மச்சான்” என்ற ஓசையோடு வந்து நின்றார் ராசாத்தியின் கணவர் முருகேசன்.

இருவரின் முயற்சியால் பெரியவர்களின் சண்டை தடுத்து நிறுத்தப்பட, சிறுசுகள் இரண்டும் இன்னும் அடித்துக் கொண்டுதான் இருக்கிறது அங்கு. அதிலும் மதுரவீரன் கட்டிய வேட்டி அவிழ்ந்து விட்டது. அதைக் கூட உணராமல் மச்சக்காளையனோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தான். ஒருவனுக்கு வேட்டி மட்டுமே அவிழ்ந்து இருக்க, மற்றொருவனுக்கு சட்டையும் சேர்ந்து அவிழ்ந்தது.

ஊரார் வாய் சொல்லுக்கு ஆளாகும்படி வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பம் என்று நிரூபித்து விட்டார்கள் இந்த முறையும். முனுசாமி ஏற்படுத்திய கலவரம் ஆறுமுகம், சண்முகம் என்ற மாற்றான் சகோதரர்கள் மூலம் மதுரவீரன் மச்சக்காளையனிடம் வந்து நிற்கிறது.

மதுரவீரனுக்கு பன்னிரண்டாம் வகுப்புக்கு பின் படிப்பு ஏறாமல் போனது. அதற்கு முழு காரணம் தந்தையான ஆறுமுகம் தான். எந்நேரமும் அவனைக் கொம்பு சீவி விட, சண்டைக்காகவே வளர்க்கப்பட்ட இரண்டு கால் ஜீவன் ஆனான்.

மச்சக்காளையன் என்னதான் சண்டை போட்டாலும் படிப்பில் ஆர்வமாக இருந்தான். ஆனால் அவனின் ஆர்வத்திற்கு வழி தான் கிடைக்கவில்லை. குடும்ப சூழ்நிலை காரணமாகவும் தந்தைக்குப் பின் தம்பிகளை பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும் அவன் மீது விழுந்தது. குடும்பத்திற்காக படிப்பை ஓரம் தள்ளியவன் மனம் நன்றாக இருந்தாலும் புத்தி வேண்டாதவையை புகுத்திக் கொண்டு கெட்டவனாக காட்டிக் கொண்டது.

மதுரவீரன் மச்சக்காளையன் இருவருக்கும் இருக்கும் ஒரே குறிக்கோள் தன் தந்தைமார்களை முன்னிறுத்த வேண்டும் என்பதே. அதற்கு மிக முக்கியமாக இருப்பது ஊர் திருவிழா. ஊருக்குள் ஜெயிக்க இருவரும் செய்யாத சாகசங்களே இல்லை. ஒவ்வொரு முறையும் ஊர் திருவிழா அல்லோல பட்டு கதறும் இவர்களின் சண்டையில்.

போன முறை சண்முகத்திடம் பொறுப்பு சென்றுவிட, கொடிக்கம்பம் நட்டு பம்பை உடுக்கை அடிக்கும் நேரம் வெடியை கொளுத்தி பிரச்சனை செய்தான் மதுரவீரன். தந்தைக்கு காவலாக மச்சக்காளையன் அங்கு வர, போர்க்களமானது சிறுமயிலுர் கிராமம்.

இருவர் செய்த கலவரத்தில் திருவிழா நாள் தள்ளி வைக்கப்பட்டது. தந்தையை அவமானப்படுத்தியதால் இரவெல்லாம் தூங்காத மச்சக்காளையன் ஆறுமுகம் போகும் வழியில் அவர் மகன் செய்தது போல் வெடி கொளுத்தி போட்டு அலற விட்டான்.

இப்படி ஒருவர் மாற்றி ஒருவர் பழி தீர்க்க ஆரம்பித்து கடந்த ஒரு வருடத்தில் மட்டும் எண்ண முடியாத பிரச்சனைகள் ஊருக்குள். ஒருவர் கூட இவ்விருவரையும் பார்த்தால் சிரிக்க மாட்டார்கள். அதை தன்னுடைய வெற்றியாக எண்ணிக் கொண்டவர்கள் இளம் வயது என்பதையும் மறந்து முரட்டுத்தனமான தோற்றத்தோடு எந்நேரமும் வலம் வந்தார்கள்.

சீமை 44

“அந்த பொறுக்கி மூஞ்சிய பாத்தாலே எனக்கு கொஞ்சம் கூட புடிக்கல மந்தி. அவனும் அவன் மூஞ்சியும்… ச்சீ!.”

“ஆரம்பிச்சிட்டியா பிற” என அலுத்துக்கொள்ளும் தோழியை முறைத்தவள், “உன்ன மாதிரி சண்ட போடுறவன வீரன்னு நெனைக்குற கிறுக்கு நா இல்ல. அந்த மதுரவீரன பாத்தாலே அப்டியே பத்திகிட்டு வருதுடி. எனக்கு மட்டும் இப்டி ஒரு புருச கெடைச்சான்னு வெச்சிக்க கைய கால ஒடைச்சு அடுப்புல வெச்சிடுவ.” என்றவள் மனம் சிரித்துக் கொண்டது உள்ளுக்குள் தோன்றிய ஆசையை கோபத்தில் கொட்டி விட்டாள் என்று.

“சரி வுடுடி பிற, அவன கட்டிக்க போறவ பிரச்சனை அதெல்லாம். நீயி உன் தோழிக்கு மட்டும் நேத்து பண்ண மாதிரி அப்பப்போ உதவி பண்ணி காதலை சேர்த்து வையி போதும்.” சென்றவளை கேவலமாக பார்த்தாள்.

அந்தக் கேவலமான பார்வை எதற்கு என்று உணர்ந்து, “என்னாடி பண்ண சொல்ற? ரெண்டு வருசத்துக்கு முன்னாடி வூட்டுக்கு பின்னாடி பாத்தது. அன்னையில இருந்து மனசுக்குள்ள உக்கார்ந்துக்கிட்டு போவ மாட்டேங்குறான். அந்த திமிர்த்தனத்த அடக்கி எம்முந்தானைல முடிஞ்சிக்கணுனு ஆசையா இருக்கு.” எனும் பொழுது அவள் முகத்தில் காதல் ரேகைகள்.

“பைத்தியக்காரி பள்ளிக்கூடம் படிக்குற வயசுல நீயி ஒருத்தன பாத்ததே தப்பு. இதுல காதல் வேற ஒரு கேடு. நல்லவனா இருந்தா கூட சரி பண்ணிட்டு போடினு வுடுவ. அவன் மதுரவீரன வுட மோசமானவன்.”

“என்னாவா வேணா இருக்கட்டும் பிற. நா முதல்ல ரசிச்ச ஆம்பள அவன். என்னால அவ்ளோ சீக்கிரம் வுட முடியாது.” என்ற தோழியின் பேச்சில் சிறு பயம் உருவாகியது ஒளிர்பிறைக்கு.

இருவரும் பள்ளி படிப்பில் இருந்து நெருங்கிய தோழிகள். கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார்கள். பக்கத்து ஊரில் இருக்கும் சாமந்தி தற்செயலாக காளையன் விழியில் விழ, தோழியின் சொந்தம் என்று தெரியாமலே மறுநாள் பள்ளிக்கு வந்த கையோடு அதை தெரிவித்தாள்.

ஒளிர்பிறையும் யாரோ என்று தோழியை உசுப்பி விட, போன ஆண்டு திருவிழாவில் தான் தெரியும் யார் என்று. அன்றிலிருந்து காதலனை பற்றி விசாரிப்பதே சாமந்தியின் வேலை.

***

“நீயி ஒன்னு கவலைப்படாத ப்பா நாளைக்கு திருவிழால நீயி தான் பம்ப உடுக்க அடிப்ப. அதுக்கான எல்லா வேலையும் நா பாத்துட்ட.”

“என்னாடா சொல்ற?” என்ற ஆறுமுகத்திற்கு,

“வடக்கு சீமையில இருக்க ஆளுதா பம்ப உடுக்க அடிக்க வராய்ங்க. அவங்களை வர வழியில மடக்கி புடிச்சு துரத்தி அடிச்சிடுற. ஆரும் பம்ப உடுக்க அடிக்க இல்லினா நீயி தான அங்க நிக்கணும்.” ரகசியமாக தன் திட்டங்களை தெரிவித்தான்.

“செய்டா நல்லா செய்டா. நாளைக்கு அந்த சண்முகம் மொகத்துல நம்ம கரிய பூசணும்.” என்றார்.

மதுரவீரன் போட்ட திட்டத்தை செயல்படுத்த விடியற்காலை முன்னரே காத்துக் கொண்டிருக்கிறான் மச்சக்காளையன். அதை அறியாத பெரியவன் விடியற்காலைப் பொழுது சிறுமயிலூர் கிராம எல்லையில் காத்துக் கிடக்க, தன் காரியத்தை சாதித்துக் கொண்டவன் தந்தையோடு திருவிழா நடக்கும் இடத்திற்கு சென்று விட்டான்.

பிரம்ம முகூர்த்தம் நெருங்கும் நேரம் ஊரில் இருக்கும் அனைவருக்கும் பதற்றம். கொடிக்கம்பம் ஏற்றும்பொழுது பம்பை உடுக்கை அடித்தே ஆக வேண்டும் என்பது ஐதீகம் அங்கு. இன்னும் முன் தொகை வாங்கிய ஆட்கள் வராமல் இருக்க,

“அவுனுங்களுக்கு ஆராவது போன போடுங்கப்பா” என வந்தது கூட்டத்திற்கு நடுவில் இருந்து ஒரு குரல்.

“வெள்ளன எழுந்ததுல இருந்து போட்டுக்கிட்டு இருக்க எவனும் எடுக்க மாட்டேங்குறாய்ங்க.” என்ற பெருசுக்கு, “இப்ப என்னா பண்றதுனு சட்டுனு ஒரு முடிவெடுங்க” என்றார் மற்றொருவர்.

தனக்கான சமயத்தை தேடிக் கொண்டிருந்த மச்சக்காளையன், “இதுக்குதா சொல்றது உள்ளூர்க்காரங்களை நம்பனுனு. இதுவே எங்க அப்பா கிட்ட குடுத்து இருந்தா இந்த மாதிரி நடந்து இருக்குமா. தன்ன வேணானு சொன்ன எடத்துல கூட எப்டி பொறுப்பா வந்து நிற்கிறாருனு பாருங்க.” என்றிட, அங்கிருந்த அனைவரின் பார்வை சண்முகம் மீது சென்றது.

மகனின் சாமர்த்தியத்தால் அவரே கடைசியில் வெற்றி கொடியை நாட்டினார். கொடி ஏற்றப்பட்டதும் பம்பை வேகமாக அதிர, உடுக்கையை கையில் பிடித்திருந்த மச்சக்காளையன் வெற்றியை கொண்டாடினான்.

ஊர் எல்லையில் காத்துக் கொண்டிருந்த மதுரவீரன் செவியில் இவை விழ, பதறி அடித்து ஓடி வந்தான். அவனைப் பார்த்ததும் வேகம் கொண்ட சின்னவன் வேண்டுமென்றே,

“அம்மா ஆடிவரா தாயி ஆடிவரா…
குங்கும பொட்டு வெச்சு சிங்காரம் சீவிக்கிட்டு தாயி ஆடிவரா.

பம்பா உடுக்கை சத்தம் காதுல கேட்டதுமே எழுந்து ஓடி வரா…
ஊர காக்கவே தாயே எழுந்து ஓடி வரா…

கெட்டவன் கருவறுக்க நல்லவனா காத்து நிக்க அம்சமா ஆடிவரா…” என்று தன் எதிரியை பார்த்துக் கொண்டு மிதப்பாக பாடினான்.

எப்படி இது நடந்தது என்ற குழப்பத்தில் மதுரவீரன் நிற்க, “சிறுமயிலுர் கிராமம் கொடிக்கம்பம் பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்டது. இன்றிலிருந்து ஏழு நாட்கள் வெளியூர் போக்குவரத்து இருக்கக் கூடாது.
கெட்ட சகவாசங்கள் வைத்துக் கொள்ளக் கூடாது.
வீட்டிற்கு தூரம் இருக்கும் பெண்கள் கோவிலை நெருங்க கூடாது.
திருவிழா முடியும் வரை விரதம் இருக்க வேண்டும் திருமணமானவர்கள்.” என்ற நிபந்தனையோடு ஊர் கொட்டம் அடிக்கப்பட்டது.

***

தோல்வியுற்ற மகனை வறுத்தெடுத்தார் ஆறுமுகம். ஏற்கனவே கோபத்தில் இருந்தவன் தந்தையின் வார்த்தையில் இன்னும் கோபமாகி காத்துக் கொண்டிருந்தான் பழி தீர்க்க. வெகு நேரம் எடுத்துக் கொள்ளாமல் மறுநாளே அந்த சந்தர்ப்பம் அமைந்தது.

பம்பை உடுக்கை அடிப்பதால் கோவிலில் தங்கினார்கள் சண்முகமும் அவரது மகனும். ஏழு வருடங்களுக்கு முன்னர் சிறு பொடியனாக இருந்தார்கள் சிலம்பனும் மொழியனும். எதற்கு இந்தப் போர் என்று தெரியாத பருவத்தில் தந்தை தமையனின் வெற்றியை கொண்டாடினார்கள்.

சண்டை போடும் வயது இல்லை என்பதால் மூவரணி முறைக்க மட்டுமே செய்தது. எப்பொழுதும் அங்கு ஒரே ஒரு நல்லவன் செந்தமிழன் மட்டும்தான் எதற்கும் துணை நிற்காமல் நல்வழியில் சென்று கொண்டிருந்தான்.

இரண்டாம் நாள் அம்மன் ஜோடிக்கப்பட்டு முழு அலங்காரத்தோடு தரிசனம் கொடுக்க அமர்ந்திக்க, விழா நாயகன் மதுரைவீரனுக்கு ஜோரான அலங்காரங்கள் இனிமேல் தான் தொடங்கப்பட இருக்கிறது. அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் இருக்கும் மதுரவீரனை அலங்கரிப்பது அவ்வளவு எளிதான காரியமா என்ன!

அதற்காக ஏணி மரக்கட்டை கட்டப்பட்டிருக்கிறது. கோவில் பூசாரி மஞ்சள் நீரை மதுரைவீரன் மேல் ஊற்ற, சூரிய ஒலியோடு மின்னியது ஊர் தெய்வம். மஞ்சள் நீருக்கு அடுத்ததாக சுத்தமான நீர், சந்தன நீர், குங்கும நீர் என அனைத்தும் ஊற்றப்பட்டது.

அபிஷேக தண்ணீரை கீழிருந்து ஒவ்வொரு கட்டையாக தாண்டி மேல் எடுத்து செல்வது பெரிய சவாலாக இருந்தது அங்கு இருந்தவர்களுக்கு. அதைவிட சிறப்பு, கண் கூசும் சூரியனையும் தாண்டி மதுரைவீரனின் கிரீடத்தில் நீர் படும்பொழுது பம்பை உடுக்கை அடிப்பது. சண்முகத்திற்கு கண் கூசுவதால் அவரது மகன்தான் அண்ணாந்த நிலையில் பார்த்தபடி அடித்துக் கொண்டிருந்தான்.

அவனின் திறமையைக் கண்டு அங்கிருந்த பெரியவர் ஒருவர் பாராட்ட, அனலோடு கேட்டுக் கொண்டிருந்தார் ஆறுமுகம். அவருக்கு இங்கு நிற்க விருப்பமில்லை என்றாலும் மகன்தான் கட்டாயப்படுத்தி நிற்க வைத்திருக்கிறான். என்ன காரணம் என்று கேட்டும் சொல்லாதவன்,

“எப்பவும் நா அவன வுட ஒசத்தியாதா நிக்கணும்.” என பேச்சை முடித்தான்.

அபிஷேகம் முடிந்து பூசாரி கீழே இறங்குவதற்குள் மணி பத்து ஆகிவிட்டது. கீழே வந்தவர் ஓய்வெடுக்காமல் ஆராதனை காட்டும் வேளையில் இறங்க,

“அந்த சாமியாடி தயாரா இருக்காப்டியா ப்பா.” கேட்டார் ஊர் தலைவர்.

“அதெல்லாம் ஜோரா இருக்காப்படி.” என்றதும் ஆராதனை காட்டும் காட்சி அரங்கேறியது.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் தலைக்கு மேல் கை உயர்த்தி வணங்கினார்கள் மதுரைவீரனை. பயம் காட்டும் முட்டை கண்ணோடு அனைவருக்கும் குலதெய்வம் ஆசிர்வாதம் வழங்க, சண்முகம் தோளில் இருக்கும் பம்பை அதிர்ந்தது. தந்தையின் திறமைக்கு சிறிதும் குறைவில்லாது கையில் அடங்கிய உடுக்கையை விளாசினான் நான்கு திசைக்கும்.

அவ்விருவரின் சத்தத்தையும் தாண்டி ஜல் ஜல் ஓசை கேட்டது அதிர்ந்து. தெய்வத்தை வணங்கிய அனைவரும் திரும்பிப் பார்த்தனர். முகம் முழுவதும் மஞ்சள் குங்குமம் நிரம்பி இருக்க, நெற்றியில் மதுரைவீரனுக்கு உண்டான மை திருநீறு வட்டமாக மின்னியது. கண்கள் உருண்டு ருத்ர தாண்டவம் ஆட, கையில் காக்கும் அருவாள். கழுத்தில் மாலை கணமாக நிற்க, இடுப்பில் பட்டாடை இறுக்கமாக ஆடியது.

பம்பை உடுக்கை அடித்துக் கொண்டிருந்த இருவரும் வேடமிட்ட நபரை வரவேற்று உற்சாகப்படுத்த திரும்ப, அடித்துக் கொண்டிருந்த கைகள் நின்றது.

அனைவரும் ஒரு நொடி ஆச்சரியம் கொண்டார்கள் மதுரவீரனே எழுந்து வந்து விட்டது என்று. அப்படி ஒரு உயிர்ப்பு வேஷம் போட்டிருந்தான் மதுரவீரன்.

என்ன நினைத்து அவனது தந்தை அந்தப் பெயர் வைத்தாரோ தெரியவில்லை தோற்றத்திற்கும் சத்தத்திற்கும் குறைவில்லாமல் பெரும் ஓசையோடு வந்து நின்றான். அவனை முறைக்கும் இருவரையும் கவனிக்கும் நிலையில் இல்லை மதுரவீரன். வெற்றி பெற வேடமிட்டவன் உண்மையாகவே அந்த நிலைக்கு மாறிவிட, தெய்வ அருளோடு மதுரவீரனே வந்து இறங்கினார்.

ஊரின் வழக்கப்படி ஆராதனை காட்டும் நேரம் மதுரைவீரன் அலங்காரத்தோடு ஒருவர் வந்து ஆடுவார். அவரை உற்சாகப்படுத்தி பாடல் இசைத்து அலங்கரிப்பார்கள் உடுக்கை அடிப்பவர்கள். ஆட வேண்டிய இடத்தில் மதுரவீரன் நிற்க, ஆட வைக்க வேண்டிய இடத்தில் மச்சக்காளையன்.

அடிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கும் மகனை ஊரார்களுக்காக சமாதானம் செய்தார் சண்முகம். வேறு வழி இல்லாமல் முறைத்துக் கொண்டு உடுக்கை அடிக்க ஆரம்பித்தான். காதலனின் கோபத்தை மறைவாக நின்று சாமந்தி ரசிக்க, யாரைப் பிடிக்கவில்லை என்று புலம்பினாளோ அவனை அவளையும் அறியாமல் ரசித்துக்கொண்டிருந்தாள் ஒளிர்பிறை.

சுற்றி இருக்கும் யாவரையும் கவனிக்கும் நிலையில் இல்லாத மதுரவீரன் கையில் இருக்கும் அருவாளை சுழற்றி பயம் காட்டினான். காலில் கட்டி இருக்கும் சலங்கை விடாமல் ஜொலித்துக் கொண்டிருக்க, அவன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் கொலுசு முத்து உருண்டோடியது நிலத்தில். சரியாக ஒளிர்பிறையின் காலில் வந்து விழ, கைகள் கடவுள் பக்தியில் பற்றவில்லை காதலால் பற்றியது என்பதை அறியவில்லை பாவை.

“இப்டியே அடிச்சுக்கிட்டு கெடக்காம நம்ம அய்யன மனசுல நிறுத்தி ஜோடிச்சி பாட்டு பாடுங்க.” என பெரியவரில் ஒருவர் சண்முகத்திற்கு கட்டளையிட, அவர் மகனைப் பார்த்தார்.

செய்யும் தொழிலுக்கு உண்மையாக இருப்போம் என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டான். மதுரைவீரனுக்குள் இருக்கும் மதுரவீரனை மறந்து எலுமிச்சை பழத்தை சுற்றி இடது காலால் நசுக்கி தூக்கி அடித்தான்.

வந்த குலதெய்வத்தின் திருஷ்டி அதன் சேவகனால் கழிக்கப்பட, தலை உயர்த்தி தன்னைத்தானே பார்த்துக் கொண்டது ஊர்க்காக்கும் தெய்வம்.

சீமை 45

ஊர் சீமாட்டிகள் குலவை போட்டார்கள் சத்தமாக. பூசாரி பெரிய தாம்பூலத் தட்டில் கையளவு கற்பூரத்தை வைத்து மதுரைவீரன் வந்து இறங்கிய மதுரவீரனுக்கு ஆரத்திக்காட்ட, கண்ணில் தீப்பொறி பற்றி எரிந்தது.

காணும் அனைவருக்கும் அவனே குலதெய்வமாக தெரிந்தான். தந்தை மகன் இருவரும் பம்பை உடுக்கை அடித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். தோல்வியில் கருகிய மச்சக்காளையன் முகம் அடிக்கும் வேகத்தை குறைத்தது. தன்னிலை இழந்த மதுரவீரனுக்கு அவை புரியாமல் போக,

“குலசாமி வந்திருக்கு ஒரு வர்ணிப்பு பாடல் கூட பாட மாட்றாய்ங்க. வந்த சாமி மனசு சரியில்லாம திரும்பி போவப்போவுது.” மகன் தோற்றம் மூலம் பழி தீர்த்துக் கொண்டார் ஆறுமுகம்.

“எப்பா, பம்ப உடுக்க சத்தத்தை அதிகமாக்கி நாலு வரிய போட்டு பாடுங்க.”

“ஆமாப்பா உங்களுக்குள்ள இருக்குற பிரச்சனைய காரணம் காட்டி சாமிய மனத் திருப்தி இல்லாம மலையேற வெக்காதீங்க. வருசத்துக்கு ஒரு மொற தான் மதுரவீரன் இப்டி இறங்கி ஆடுறான். அவன் மனசு குளிர்ந்தா தான இந்த ஊரு செழிப்பா இருக்கும்.”

“மதுரவீரன பாக்க அப்டியே நெச மதுரைவீரனாட்டம் இருக்காப்படி. எதிர்ல நிற்குறது உன் சண்டக்காரனா நெனைக்காம சாமியா நெனைச்சி ஆட்டத்தை தொடங்கு காளையா.” ஊர் மக்கள் அனைவரும் ஆளாளுக்கு ஒன்றை பேசி கட்டாயத்திற்கு தள்ளினர்.

“அதிர்வேகமாகவே…. அதிர்வேகமாகவே… மதுரைவீரன் சாமி அவரு…” மச்சக்காளையன்.

“(ஆஹான், ஆமா சாமி அவரு…)” ஊர்மக்கள்.

“ஆர்ப்பரித்து கொக்கரித்து மதுரை வீரன் சாமி அவரு…
வெள்ள குதிரை ஏறி வராரு.”

அழகு முடி கொண்டை கொஞ்ச…

“(ஆஹான் ஆமா…
அழகு முடி கொண்டை கொஞ்ச…)”

மதுரவீரன் சாமி வெள்ளை குதிரை ஏறி வராரு.

வாளெடுத்து வையகத்தை சுத்திவராரு…

“(ஆமா.. மதுரவீரன் சாமி அவரு சுத்தி வராரு)”

மலைக்கோட்டை வாசல் விட்டு ஓடி வர்றாரு… எங்க மதுரைவீரன் சாமி அவரு ஆடி வராரு.

“(ஆமா, மலைக்கோட்டை வாசல் விட்டு ஓடி வராரு…)”

காத்திருக்கும் மக்களை காத்திடவே வராரு…

“(ஆமா, காத்திருக்கும் மக்களை காத்திட வராரு.)”

“கை தொழுத மக்களுக்கு அருள்புரிய வராரு… எங்க மதுரைவீரன் அருள் புரிய வராரு.”

“(ஆமா… அருள்புரிய வராரு.)”

“அழகுமலை தாண்டி வாள் எடுத்து வராரு… எங்க மதுரைவீரன் வெள்ள குதிரையில வராரு.”

“(ஆமா… வெள்ளை குதிரையில வராரு)”

குலதெய்வத்தை வரவேற்கும் பாட்டை உடுக்கை அடித்துக் கொண்டு மச்சக்காளையன் பாட, அவனுக்கு தோதாக ஊர் மக்கள் பாடினார்கள். தன்னை வரவேற்கும் பாட்டில் உற்சாகம் கொண்ட மதுரைவீரன் கழுத்தில் இருக்கும் எலுமிச்சை மாலை உருண்டு நிலத்தில் விழும் அளவிற்கு வாள் ஏந்திய கையை உயர்த்தி பிடித்துக் கொண்டு சுழற்றி சுற்றி நின்றான்.

கால் ஜலங்கை அதிர்ந்து பூமி பிளக்கும் அளவிற்கு ஒரு காலை மட்டும் உயர்த்தி நிலத்தில் வேகமாக அடித்தான். சுழற்றியதில் பாதி எலுமிச்சை பழமும், மீதி இந்த அதிர்விலும் மொத்தமாக உதிர்ந்தது. கண்ணில் ரத்த சிவப்பேரி வீரத்தை பறைசாற்ற, முறுக்கேறிய தேகம் இன்னும் முறுக்கேறி மலைபோல் நின்றது.

அனைவரும் ஒன்று போல் கையெடுத்து கும்பிட்டு, “மதுரைவீரா… ஊரையும் எங்களையும் நல்ல மொறையில காப்பாத்துப்பா. மழை செழிப்பா இருக்கணும். நோய் நொடி அண்டாத பொழுதா இருக்கனும்” எனக் குழுவாக வேண்டுதல் வைத்தனர்.  அனைவரையும் சுழற்றி நின்று ஆசீர்வதித்த மதுரைவீரன் தன் இருப்பிடம் நோக்கி பறந்தார்.

எப்பொழுது இந்த ஆட்டம் அடங்கும் பம்பை உடுக்கை அடிப்பதை நிறுத்துவோம் என்ற ஆத்திரத்தில் இருந்த மச்சக்காளையன் சமயம் கிடைத்ததும் நிறுத்திவிட்டு வெளியேறினான். அவனுக்கு பின்னால் அவனது தந்தையும் வெளியேறிவிட, தன் மகனை காத்தார் ஆறுமுகம்.

***

கோபமாக வெளியேறிய காதலனை நோட்டம் விட அவன் பின்னால் சென்றாள் சாமந்தி. யார் கண்ணிலும் சிக்க கூடாது என்பதற்காக கோவலின் பின்புறம் அவன் நகர, யாராவது பார்க்கிறார்களா என்ற சுதாரிப்பில் அவன் பின்னால் நின்றாள்.

முதலில் கோபத்தில் கண்டுகொள்ளாதவன் கண்டுகொண்டு அமைதியாக அவளை விட்டு நகர்ந்தான். பலமுறை மச்சக்காளையனை தனியாக சந்திப்பதற்கு முயன்றிருக்கிறாள் சாமந்தி. அவள் விழியில் விழுந்த முதல் ஆண் இவன் என்பது போல் இவன் விழியில் விழுந்த முதல் பெண் சாமந்தி.

உள்ளுக்குள் துளிர்விட்ட காதல் அப்படியே பொசுங்கி போனது ஒளிர்பிறையின் தோழி என்பதால். ஆண்டாளின் அண்ணன் மகள்  ஒளிர்பிறை என்பதால் மச்சக்காளையன் குடும்பம் அவளிடம் உரையாடாது. அப்படி இருக்க அவளின் தோழியை காதலிப்பதை அவமானமாக எண்ணினான்.

பள்ளிப் பருவத்தில் சிறு பெண்ணாக பார்த்தவள் திடீரென்று வளர்ந்த பெண்ணாக தன் முன் நின்ற தருணம் அவன் மனதில் இருக்கும் எண்ணத்தை மாற்றியது. இருப்பினும் உறவை தொடர விருப்பம் இல்லாதவன் அவள் பின் தொடர்கிறாள் என்பதை தெரிந்தும் விலகினான்.

பக்கத்து ஊரில் இருக்கும் பெண் அடிக்கடி தன் ஊரில் அதுவும் தான் சம்பந்தப்பட்ட இடத்தில் இருக்கும் பொழுதே அவள் காதலை உணர்ந்து கொண்டான். தன்னை நேசிக்கும் பெண்ணாகவே இருந்தாலும் எதிரி வீட்டின் தொடர்புடையவள் என்பதால் அவளை இரண்டு ஆண்டு காலமாக அலைய வைத்துக் கொண்டிருக்கிறான்.

“என்னங்க” என்றவள் ஓசையில் திரும்பி பார்க்காமல் நின்றான்.

“கோவமா இருக்கீங்கன்னு நெனைக்கிற.” என அவள் பேச ஆரம்பிக்கும் பொழுது,

“ஆரு நீயி?” என கேட்டான்.

இந்தக் கேள்வியை எதிர்பார்க்காதவள் முழிக்க, “நானும் பாத்துட்டே கெடக்க இங்க அங்கன்னு என் பின்னாடி வர. பொம்பள புள்ளன்னு அமைதியா போற. ஒழுங்கு மருவாதையா வந்த வழியே ஓடிடு. இல்லினா ஆரு என்னான்னு கூட பாக்க மாட்ட தூக்கி போட்டு மிதிச்சிடுவ.” என்ற பின் முழிப்பு முறைப்பாக மாறியது.

“அப்போ நா உங்க பின்னாடி சுத்துறன்னு தெரிஞ்சுதா இத்தினி நாளா பாக்காத மாதிரி இருந்தீங்களா?”

காதில் எதுவும் விழாதது போல் எங்கோ பார்த்தபடி நின்று கொண்டிருந்தான். அவன் அமைதியை விரும்பாதவள், “உங்களை தான கேக்குற வாயைத் தொறந்து பதில் சொன்னா முத்து கொட்டிடுமா” என கேட்டாள்.

“இந்தாரு… நா நல்லவன்னு நெனைச்சி என் பின்னாடி சுத்திக்கிட்டு கெடக்க. நீயி நெனைக்குற மாதிரியான ஆளு நா இல்ல. ஒழுங்கா வூட்ல காட்டுறவன கண்ணாலம் பண்ணிக்கிட்டு போ.”

“எவனோ ஒருத்தன கட்டிக்கவா ரெண்டு வருசமா உங்க பின்னாடி சுத்திக்கிட்டு கெடக்க?”

“உன்ன சுத்த சொல்லி நானா சொன்ன”

“வாயால சொல்லித்தா பண்ணனுனு அவசியம் இல்ல. என்னை முதல் தடவ பாக்கும்போதே புடிச்சி இருக்குனு உங்க மொகம் சொல்லுச்சு.”

“பொம்பள புள்ள மாதிரியா பேசுற. என் குணம் பத்தி உனக்கு தெரியாது. ஏற்கனவே அவன் பண்ண வேலையால ரொம்ப கோபத்துல இருக்க வீணா வாங்கி கட்டிக்காம ஓடிடு.”

“எதுக்கு உங்களுக்கு இம்புட்டு கோபம் வருது. எத்தினி நாளுக்கு இப்டி சண்ட போட்டுக்கிட்டு கெடக்க போறீங்க. எதிர்ல இருக்குறவன பழி வாங்குறதுக்கு பதிலா உங்க பின்னாடி சுத்துறவளை பாத்து இருந்தா இந்நேரம் நாலு புள்ளைக்கு மேல பொறந்திருக்கும்.” என்றவள் உடம்பை தூக்கி போட்டு அதிர்ந்து நின்றாள்,

“ஏய்!” என்றவன் மிரட்டலில்.

இவ்வளவு நேரம் திரும்பி இருந்தவன் திட்டுவதற்காக அவள் முகத்தை பார்க்க, பயந்த விழிகள் வார்த்தையை வெளிவர விடாமல் கட்டி போட்டது. கருவிழி அசையாமல் நின்று அவனையும் அசைய விடாமல் மாற்றியது. திகைத்து மூச்சை உள்வாங்கியவள் வெளிவிட துணிவு இல்லாமல் அப்படியே இருக்க, தோள்கள் இரண்டும் தூக்கிக் கொண்டு சிலையாக மாற்றியது.

நேசித்தவளின் கருவிழியில் தன்னையே பார்த்தவன் இனம் புரியாத பரவசத்தில் சிக்கிக் கொண்டான். உள்ளுக்குள் மறைத்து வைத்திருந்த காதல் மெல்ல எட்டிப் பார்க்க, அவனையும் அறியாமல் அருகில் சென்றான்.

தன்னருகில் அவன் உருவம் வந்ததும் இன்னும் விழிகள் விரிந்தது. முன்னேறியவன் கால்கள் தடைப்பட, விரிந்த கண்கள் லேசாக சுருங்கியது. அதில் சுயம் பெற்று தன்னை நிதானிக்க திரும்பிக் கொண்டவன்,

“இந்த மாதிரி பேச்செல்லாம் எனக்கு சுத்தமா புடிக்காது. இந்த கண்ணாலம் குடும்பம் இதுலலா எனக்கு நாட்டம் இல்ல. அதுவும் உன்ன கண்ணாலம் பண்ணிக்குற எண்ணம் கொஞ்சம் கூட என் மனசுல இல்ல. கடைசியா சொல்லுற இனி என் கண்ணுல படாத.” என்றான் பொறுமையாக.

“இங்க பாருங்க…உங்களுக்கு என்னை புடிக்காம இருக்கலாம். ஆனா, எனக்கு உங்களை ரொம்ப புடிக்கும். எதனால புடிக்குனு கேட்டா சொல்ல தெரியல. ஒவ்வொரு தடவயும் மனசு சொல்லும் இவன் உனக்கு வேணானு. ஆனா, அதே மனசு கொஞ்ச நேரம் கழிச்சு இவன்தா வேணுனு அடம் புடிக்குது. என்னை என்னா பண்ண சொல்றீங்க?” என்றவள் திரும்பி நிற்பவனுக்கு முன்னால் நின்று,

“உங்கள தவிர வேற எவனையும் கண்ணாலம் பண்ணிக்க மாட்ட. அப்டி ஒரு நெலைமை வந்தா இந்த மண்ணுல சாய்வனே தவிர தாலி கட்டிக்க மாட்ட. என் உயிர காப்பாத்தணுனு எண்ணம் இருந்தா வூட்ல வந்து பேசுங்க.”

அவளிடம் பேச விருப்பம் இல்லாதவன் முறைத்துக் கொண்டு நடையை கட்ட, “இந்த ஒரு வாய்ப்புக்காக ரெண்டு வருசம் காத்து இருந்திருக்க. இனி இந்த மாதிரி ஒரு வாய்ப்பு கெடைக்குமான்னு தெரியல. மனசுல இருக்க மொத்தத்தையும் சொல்லிடுற. உங்களுக்கு புடிக்கலன்னா கூட பரவால்ல கொஞ்ச நேரம் எனக்காக கேளுங்க.” என தடுத்து நிறுத்தினாள்.

அவன் பார்வை எங்கோ இருக்க, “என் மனசுல இருக்க அன்ப எப்டி புரிய வெக்குறதுனு தெரியல. ஆனா, நீங்க இல்லாம ஒரு நாளு கூட இருக்க முடியும்னு தோணல. உங்க கோபம் எம் முன்னாடி அடங்கிப் போவணுனு ஆசையா இருக்கு. இவ்ளோ கோவப்படுற ஆளுகிட்ட என் அதிகாரத்தை காட்டி மிரட்டி பாக்கணுனு தோணுது.” என்றவளை அவன் நேருக்கு நேராக நோக்க, காதலனின் பார்வை கணத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் திரும்பிக் கொண்டாள்.

“நா உங்கள ரொம்ப காதலிக்கிற. உங்க எடத்துல சாகுற வரைக்கும் வேற எவனையும் என்னால வெக்க முடியாது. மச்சக்காளையன் கையால தாலி வாங்கிக்கணும். போதுனு சொல்ற அளவுக்கு வரிசையா புள்ளைங்கள பெத்துக்கணும். ஒவ்வொன்னையும் கண்ணாலம் பண்ணி துரத்தி வுட்டுட்டு வயசான காலத்துல என் மடியில நீங்க படுத்து கெடக்கணும். இதெல்லாம் என் வாழ்க்கையில நடந்துட்டா இனி ஒரு பிறவியே எனக்கு வேணாங்க.” என்றவள் அவன் விழியைப் பார்த்து காதலை சொல்லலாம் என்று திரும்ப, தோழி நின்றிருந்தாள்‌.

தன்னோடு இருந்தவனை மனம் பரபரப்பாக தேட, “என்னாடி கிறுக்கு முத்தி போச்சா உனக்கு? தனியா நின்னு பேசிக்கிட்டு கெடக்க ஆளு போனது கூட தெரியாம.” என்றவள் பேச்சு புரியவில்லை சாமந்திக்கு.

தோழியின் நிலை எண்ணி உள்ளுக்குள் கலங்கியவள் கலங்கி நிற்கும் அவள் விழிகளை துடைத்து விட, இரண்டு வருடங்களுக்குப் பின் கிடைத்த சந்தர்ப்பமும் வீணாய் போனதில் நொந்து கொண்டாள்.

“நீயி இவ்ளோ ஆசையா இருக்கும்போது உன் விருப்பத்தை கடவுள் நிச்சயம் நிறைவேத்துவான். மனச போட்டு குழப்பிக்காம தைரியமா இரு.”

“எங்க இருந்து பிற தைரியமா இருக்குறது. வூட்டுல இப்பவே கண்ணால பேச்சு வந்துடுச்சு. ஆரோ சொந்தக்கார பையனாம். கண்ணாலம்
பண்ணிட்டு கூட படிக்க வெக்கிறோம்னு சொல்லி பொண்ணு கேட்டு இருக்காய்ங்க. நல்ல வரன் வரும்போதே முடிச்சு வுடலாம்னு அப்பா வேற அம்மா கிட்ட பேசிட்டு இருந்தாரு. என்னால இவரைத் தவிர வேற ஆரயும் கட்டிக்க முடியாது. அப்டி ஆராது கட்டாயப்படுத்துனா செத்து போய்டுவ.” என்றவள் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.

தோழி அழுவதால் தன்னிச்சையாக ஒளிர்பிறையும் அழுக, இருவர் அறியாது மரத்துக்குப் பின்னால் நின்று இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தான் மச்சக்காளையன்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்