Loading

சீமை 40

 

மூத்தோர்கள் இல்லம் திரும்பி இரண்டு நாட்கள் கடந்த நிலையிலும் இன்னும் பரபரப்பு குறையவில்லை. வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு தந்தையுடன் பேச வேண்டிய பேச்சுக்கள் ஆயிரம் இருக்க, பதில் சொல்லும் நிலையில் இல்லாத சண்முகமும் ஆறுமுகமும் மனதில் எதையோ நினைத்துக்கொண்டு ஒதுங்கி இருக்கிறார்கள். 

 

 

ஊரில் இருக்கும் சொந்தம் பந்தம் அனைவரும் இருவரையும் வந்து நலம் விசாரித்து செல்ல, ஊரை சுற்றி வலம் வர வேண்டும் என்ற எண்ணம் இருவருக்கும் ஒன்று போல் எழுந்தது. இம்மண்ணில் கால் வைத்து வருடங்கள் ஆகிவிட்டதால் அதன் தாக்கம் பெருமளவு இருக்க, தங்கையின் முகம் அதையெல்லாம் ஓரம் கட்டி விட்டது.

 

 

குற்றம் செய்ததற்கான தண்டனையை அனுபவிக்க கூட தயாராக இருக்கும் இருவரும் தங்கைக்கு இழைத்த அநீதியை தாங்கிக் கொள்ளத்தான் தைரியம் இல்லாமல் இரண்டு நாட்களாக வீட்டிற்குள் சிறை இருக்கிறார்கள்.

 

 

 

காரணம் ஊரில் இருக்கும் சில பேர் தான். நலம் விசாரிக்கும் சாக்கில் பழைய நினைவுகளை குத்திக் கிளற, குற்றம் செய்த தவிப்பில் மருகிக் கொண்டிருக்கிறார்கள். மூத்த பிள்ளைகள் தந்தையோடு அதிகம் பழகியதால் அவர்களுக்கான நேரம் தேவை என்று அமைதி காக்க, மருமகள்கள் இருவரும் மரத்துப்போன நாக்கிற்கு உயிர் கொடுக்க முயன்று கொண்டிருக்கின்றனர்.

 

 

அவ்வீட்டில் இருக்கும் மூன்று வானரங்களும், இவ்வீட்டில் இருக்கும் இரண்டு வானரங்களும் தான் ஏதோ சுயமாக முயன்று தந்தையை வெளிக்கொண்டு வந்தது போல் முறுக்கிக் கொண்டு திரிகிறார்கள். இன்றும் அதே போல் ஒரு நிலை வர,

 

“நீ கருவுல இருக்கும் போதே நா தெருவுல இருந்தவன்டா.” என்ற மகா பஞ்ச் டயலாக்கை ஆக்ரோஷத்தோடு எதிரணியிடம் பேசினான் இமையவன்.

 

“நீ தெருவுல இருக்குறது தெரிஞ்சு கருவறுக்க பொறந்தவன்டா நானு” என்ற சிலம்பனின் டயலாக்கில் எதிரணியினர் அடுத்த வார்த்தையை தேடினர்.

 

இந்த முறை இமையவனை முந்திக் கொண்டு, “கருவறுக்க வுடாம காக்க பொறந்தவன்டா இந்த எழில்குமரன்.” என்றான் அவனின் தம்பி.

 

 

“காக்க பொறந்தவனை தாக்க பொறந்தவன்டா இந்த மொழியன்.”

 

“தாக்க வுடாம தடுக்க பொறந்தவன்டா இந்த கவிநேயன்.”

 

“தடுக்க வந்த உன்ன தவுடு பொடியாக்க பொறந்தவன்டா இந்த சிலம்பன்.”

 

“தவுடுக்கு உன்ன வித்து பெரியவன்னு காட்டப் பொறந்தவன்டா இந்த இமையவன்.”

 

“காட்ட பொறந்த உன் உயிர எடுக்க உருவானவன்டா இந்த மொழியன்.”

 

“உருவான உன்ன உரு தெரியாம அழிக்க பொறந்தவன்டா இந்த எழில்குமரன்.”

 

“அழிக்க நெனைக்குற உன்ன அழிக்க பொறந்தவன்டா இந்த கவிநேயன்.”

 

“அழிக்கப் பொறந்த உன்ன ஆட்டுப்புழுக்கைய அள்ள வெக்க உதிச்சவன்டா இந்த சிலம்பன்.”

 

“உதிச்ச உன்ன உதைக்க பொறந்தவன்டா இந்த இமையவன்”

 

“உதைக்குற உன் கால வெட்ட பொறந்தவன்டா இந்த மொழியன்.”

 

“வெட்ட வர உன் கைய துண்டாக்க பொறந்தவன்டா இந்த கவிநேயன்.”

 

“துண்டு மாதிரி தோள்ல போட்டு உன்ன கசக்க உருவான சக்திடா இந்த சிலம்பன்.”

 

“சக்திய சக்கரை பொங்கலா மாத்த துணிஞ்சவன்டா இந்த எழில்குமரன்.”

 

“சர்க்கரைப் பொங்கல் மாதிரி உன்னை குழைய வெக்க வந்தவன்டா இந்த மொழியன்.”

 

“குழைய நெனச்ச உன் குடல அறுக்க தயாரானவன்டா இந்த இமையவன்.”

 

 

இப்போதைக்கு முடியாது போல இவர்களின் பஞ்சாயத்து. மதுரவீரன் தந்தைக்காக ஏற்பாடு செய்திருந்த வழக்கறிஞரை சந்திக்க சென்றிருக்க, கோவில் வேலை ஒன்றிற்காக பக்கத்து ஊர் வரை சென்றிருக்கிறான் மச்சக்காளையன்.

 

 

அண்ணன் தம்பி இருவரும் வீட்டில் இல்லை என்ற தைரியத்தில் தான் ஐவர் படை இரு வீட்டு வாசலில் நின்று கொண்டு இத்தனை கலோபரங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். மருமகள்கள் இருவரும் ஆற்றங்கரைக்கு வெளுக்க சென்று விட, ஆண்டாள் கணவனோடு சேர்ந்த மகிழ்வில் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறார்.

 

செந்தமிழன் அன்று கூறியது போல் சுடுகாட்டிற்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஊர் நிலத்தை தூய்மைப்படுத்திக் கொண்டிருக்கிறான். அவன் செய்வதை அருவருப்போடு கவனித்த ஒரு சில ஊர் பெருசுகள் அப்படியே ஊர் முழுவதும் விஷயத்தை படர விட, அனைவரும் அங்கு அவனைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

 

 

அவன் நடத்தும் சாதனை தெரியாமல் இங்கு வெட்டியாக இன்னும் பேசிக் கொண்டிருக்கிறது ஐவர் படை. தூக்கத்தில் இருந்த சண்முகத்தின் செவியில் பிள்ளைகளின் வார்த்தை விழ, எழ முடியாமல் எழுந்து வெளியில் வந்தார். 

 

 

அவர் வந்ததை கூட அறியாத சிலம்பன், “சிலம்பன் நெனைச்சா சின்னா பின்னம் ஆக்கிடுவான்டா உங்க குடும்பத்தை.” என்றான்.

 

 

“இந்த இமையவன் நெனைச்சா சங்கதி தெரியாம ஆகிடுவான்டா.” சண்முகத்தின் வரவை அறிந்தும் தைரியமாக பேசினான்.

 

 

“எடேய்!” என ஆக்ரோஷமாக வசனம் பேச வந்த மொழியன் கழுத்தை பிடித்த சண்முகம், “என்னாய்ங்கடா பேச்சு இதெல்லாம்? படிக்குற புள்ளைங்க பேசுற வார்த்தையா இதெல்லாம்.” என கண்டிக்க,

 

“இங்க பாருங்கடா அவுனுங்க அப்பாவே அவுனுங்களை அசிங்கப்படுத்துறாரு.” என்ற எழில்குமரனின் பேச்சுக்கு சகோதரர்கள் இருவரும் சிரித்தார்கள் கைத்தட்டி.

 

கொதித்த சண்முகத்தின் பிள்ளைகள் சண்டைக்கு பாய, “எடேய்!” உள்ளிருந்து குரல் கொடுத்தார் ஆறுமுகம்.

 

 

தங்களை தான் மிரட்ட வருகிறார் என சிலம்பனும் மொழியனும் ஜல்லிக்கட்டு காளைகள் போல் தயாராகி நிற்க, “உங்க மூணு பேத்தியும் நேத்து ராத்திரி தான அவன் மிதிச்சான் எந்த வம்புக்கும் போவாதீங்கன்னு. அடங்காம திரிஞ்சுக்கிட்டு கெடக்குறீங்களே எரும மாடுங்களா.” என்று தன் பிள்ளைகளை திட்டினார்.

 

 

ஆறுமுகத்தின் பேச்சுக்கு மூவர் அணி முறைப்பை கொடுக்க, இருவரணி அவர்களைப் போல் கைதட்டி சிரிப்பை கொடுத்தது. சிரிக்கும் மகன்களை சண்முகம் இந்த புறம் இருந்து அடக்க, அந்தப்புறம் இருக்கும் ஆறுமுகம் மூவரையும் அடக்கி கொண்டிருந்தார்.

 

 

தந்தையின் பேச்சுக்கு கட்டுப்படும் நல்ல பிள்ளைகள் போல் மூவரும் வாயை மூடிக்கொள்ள, கண்கள் மட்டும் கத்தி சண்டை போட்டுக் கொண்டிருந்தது. துணிகளை துவைத்து முடித்து வீடு வந்த சேர்ந்த மருமகள்கள் இருவரும் என்னவென்று விசாரிக்க, விவரம் அளித்தனர் அவரவர் மருமகளுக்கு பெரியவர்கள் இருவரும்.

 

“இவனுங்களுக்கு என்னா சொன்னாலும் புத்தி உரைக்காது மாமா. பேசாம வூட்டை வுட்டு தொரத்தி வுடுங்க. எங்கயாது கோவில் கோவிலா உக்காந்து பிச்சை எடுக்கட்டும்.” என்ற சாமந்தி முறைக்கும் கொழுந்தன்களை கண்டுகொள்ளாமல் மாமனாரை அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்.

 

 

“அவனுங்களை மாதிரி வூட்ட வுட்டு தொரத்தாம சோத்துல விசம் வெச்சி குடுக்கனும் மாமா. மொத்தமா தொல்லை வுட்டுடும்.” என்றதோடு ஒளிர்பிறை உள்ளே சென்றுவிட, 

 

“இதே மாதிரி பண்ணிக்கிட்டு இருந்தீங்க உங்க மதினி வெக்கிறாளோ இல்லியோ நா வெச்சுடுவ.” என்ற மிரட்டலோடு மருமகளை பின்தொடர்ந்தார் ஆறுமுகம்.

 

***

 

சிறுநீர் வாடையும் காலி மது கோப்பைகளும் உலக அதிசயம் போல் காட்சி அளித்த இடம் பளிச்சென்று மின்னியது அவ்வூர் நாயகனின் உழைப்பில். இது என்ன வேலை என்று ஆரம்பத்தில் சொல்லிய அனைத்து வாயும் புகழ ஆரம்பித்து விட்டது அவன் நல் மனதை பாராட்டி. 

 

 

ஊரில் இருக்கும் வயதானவரில் ஒருவர், “நா சின்ன புள்ளையா இருக்கும்போது இந்த எடம் இப்டி தான்யா சுகமா இருந்துச்சு. என் காலம் முடியறதுக்குள்ள இந்த எடத்தை இப்டி பாக்கணுனு நெனைக்காத நாளு இல்ல. உன்ன போல தங்கமான மனசு இந்த ஊர்ல இருக்க ஒருத்தனுக்கும் இல்லிய்யா ராசா. நீயி ரொம்ப நல்லா இருப்ப. ஒரு குறையும் கடவுள் உனக்கு குடுக்க மாட்டான்.” என அவர் வாழ்த்திக் கொண்டிருக்கும் நேரம் தேன்மொழி தாய் தந்தையோடு இங்கு வந்தாள்.

 

ஏற்கனவே புன்னகை முகமாக இருந்தவன் காதலியை பார்த்ததும் ஆனந்தத்தில் தன்னை மறக்க, “என் மருமகன் குணத்த பத்தி இப்பதா உங்களுக்கு தெரியுதா ஆத்தா. இது மட்டும் இல்ல நம்ம ஊரு எல்லையில இருந்து கோடி வரைக்கும் எல்லா எடத்தையும் கோவில் கோபுரம் மாதிரி அழகு படுத்தி வெச்சிருக்கான்.” என மருமகனின் புகழ் பாடினார் தேன்மொழியின் தந்தை.

 

 

“எனக்கு முன்னமே தெரியும் ராசா உன் மருமகனை பத்தி. நம்ம ஆரு வேணா எந்த எடத்தை வேணா சுத்தம் பண்ணிடலாம் இந்த ஒரு எடத்தை தவிர. இங்க கை வெக்கணும்னா நல்ல மனசு மட்டும் போதாதுய்யா சுத்தமான அன்பும் இருக்கணும். இந்த மண்ணு மேல உன் மருமகன் எவ்ளோ அன்பு வெச்சிருக்கான்னு இன்னிக்கு நிரூபிச்சிட்டான். உன் மருமகனை கட்டிக்க போற பொண்ணு ரொம்ப குடுத்து வெச்சவ. இவன் மனசுக்கு மகாராணி மாதிரி மனசுல இவன வெச்சு ஆளப்போற மகராசி தான் வருவா.” என எதிர்காலத்தை கணித்து கூற, வெட்கப்பட்டுக் கொண்டாள் தேன்மொழி.

 

 

முதியவரின் பேச்சுக்கு அங்கிருந்த மற்றொரு முதியவர், “அட என்னா கிழவி நீயி புரியாம பேசிக்கிட்டு கெடக்க. அந்தா இருக்கே அவரு பொண்ணு… அந்த பொண்ணையே கட்டி வெச்சு நீயி சொன்ன வார்த்தைய உண்மையாக்கப் போறாரு பாண்டியன்.” என்றார்.

 

 

“ஏற்கனவே ஒரு பொண்ண கட்டி குடுத்து உரிமைய வாங்கி வெச்சிருக்காரே பாண்டியன்.”

 

 

ஊர் பேசும் பேச்சுக்கு தந்தை என்ன பதில் சொல்லப் போகிறார் என ஆர்வமாக தேன்மொழி அவரை நோக்க, “ஆமா, இந்த மாதிரி ஒரு மருமகனை வேணானு சொல்ல ஆருக்கு துணிவு வரும். காலம் நேரம் கூடி வந்தா ரெண்டு பொண்ணுங்களையும் ஒரே வூட்ல வாழ வெச்சிட வேண்டியதுதான.” என்றார்.

 

 

தேன்மொழியை விட செந்தமிழனின் முகம் காதல் கைகூடிய மகிழ்வில் கூத்தாடியது. பலரையும் சுற்றிப் பார்த்துவிட்டு நாசுக்காக காதலியை பார்த்து கண்சிமிட்டியவன், ‘நம் காதல் திருமணத்தில் இருந்து மீண்டும் தொடங்க போகிறது.’ என்றான் கண் அசைவில்.

 

 

காதலிக்கு புரியாமல் போக, பிறகு சொல்வதாக சைகை செய்தான். இருக்கும் மகிழ்வில் அந்த சைகையை பெரிதும் எண்ணாதவள் மகிழ்வோடு வலம் வர, அவனது கனவான வயல் நிலத்தில் மீன் வளர்க்கும் வேலையை கவனிக்க சென்றான். போதும் என்ற அறிவுரைகளை தன்னுள் வாங்கிக் கொண்டவன் அதற்கான வேலைகளை மூன்று நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கி விட்டான்.

 

 

தந்தை வீட்டிற்கு வந்ததால் அவை தள்ளி போக, விட்ட வேலையை இன்றைய நாளில் முடித்துவிட்டு நாளையில் இருந்து அவனது ஆசையை நிறைவேற்ற எண்ணிக் கொண்டிருக்கிறான். 

 

வீட்டில் உள்ளவர்களிடம் தன் எண்ணத்தை பிரதிபலிக்க, அண்ணன் அமைதி காத்தான் தம்பி மீது இருக்கும் தைரியத்தில். ஒளிர்பிறைக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் அவனுக்கு உதவியாக வருவேன் என்று முன்னதாகவே நம்பிக்கை அளித்து விட்டாள்.

 

அனைத்தும் நலமாக நடக்கிறது என்ற மகிழ்வில் நிலத்தில் கால் வைத்தவன் சற்றும் எதிர்பார்த்து இருக்க மாட்டான் கால் வைக்க முடியாத நிலை வரும் என்று. 

 

 

 

சீமை 41.

 

“மாமா எவ்ளோ நேரமா கெளம்புறீங்க? அங்க தமிழு நமக்காக காத்துக்கிட்டு கெடக்கா.”

 

 

“அட செத்த நேரம் இரு அம்மணி. உன் கொழுந்தன் நல்ல நேரம் முடியுறதுக்குள்ள நெனச்சத ஆரம்பிச்சிடுவா. ராத்திரி எல்லாம் முதுகு வலியில எந்திரிக்க முடியாம கடந்த புருசன வுட கொழுந்த முக்கியமா போயிட்டானாக்கும்.” 

 

 

கணவன் வார்த்தையில் அவசரமாக வீட்டை ஒதுக்கி வைத்துக் கொண்டிருந்தவள் திரும்பி, “கட்டிக்கிட்டவ ஒன்னு சொன்னா கேக்கணும். இல்லினா இந்த மாதிரி தான் வலியோட உருண்டுகிட்டு கெடக்கணும்.” என்றாள்.

 

 

“உனக்கு ஆமாம் சாமி போட்டு வருசம் ரொம்ப ஆவுது அம்மணி. சந்தேகமா இருந்தா எங்க அம்மாவ வேணா கேட்டு பாரு.” என்று மனைவியின் முறைப்பை வாங்கிக் கொண்டான்.

 

 

மூச்சுக்காற்று ஏறு இறங்கி அவளின் உஷ்ணத்தை வெளிக்கொண்டுவர, கீழ் உதட்டை நான்கு பற்களுக்கு கீழ் மடக்கியவன் ரசித்தான் அந்த அழகை. கணவனின் ரசிப்பை தொடர வைக்க விருப்பம் இல்லாதவள்,

 

“பொண்டாட்டி தாசனா வெச்சிருக்கன்னு சொல்லாம சொல்றீங்களா மாமா.” என்றாள் தலையை மேலும் கீழும் ஆட்டி.

 

“இருந்தாலும் தப்பு இல்ல அம்மணி. என் பொண்டாட்டிக்கு பொண்டாட்டி தாசனா இருக்குறதெல்லாம் புண்ணியம்.” என பேச்சு கொடுத்துக் கொண்டு அவளை நெருங்க, சுதாரித்த ஒளிர்பிறை ஒதுங்கி நின்றாள்.

 

 

“இந்த மாதிரி ஆமாம் சாமி போடுற புருசன் வேணுனு எல்லா பொட்ட புள்ளைங்களும் கோவில் கோவிலா போவுதுங்க. உனக்கு கெடைச்சும் சிலுப்பிக்கிட்டு போறியே நியாயமா அம்மணி.”

 

“பேச்செல்லாம் நல்லா வக்கனையா பேசி ராத்திரி ஆனா உங்க காரியத்தை சாதிச்சிடுறீங்க. வேல முடிஞ்சதும் புருசனை முந்தாணில முடிஞ்சிக்கிறான்னு குத்தி காட்டுறீங்க. ஆம்பள புத்தியே

இப்டித்தா இருக்கும் போல.” என அவள் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தாள். 

 

முந்தானை என்ற வார்த்தைக்கு அவள் இடுப்பை காண்பிக்க, அதில் பார்வையை வைத்தவன் நகராமல் அப்படியே இருந்தான்.

வெகு நேரம் கழித்து அதை உணர்ந்து கொண்டவள், “உங்களை திருத்தவே முடியாது மாமா” என தலையில் அடித்தாள்.

 

“இந்த வார்த்தைய இன்னுமா அம்மணி சொல்லிக்கிட்டு இருக்க. சண்டியா தனம் பண்ணிக்கிட்டு கெடக்கும் போது தான் கொற சொல்லுவ. இப்போ உன் புருசன் ரொம்ப நல்லவனா மாறி குழந்தையா தான இருக்கான்.” என்றான் குழைவாக.

 

“ஆமா இருக்குறாரு குழந்தையா…” என கொனட்டல் செய்தவள் அவனை விட்டு வெளியேற பார்க்க, தன்னோடு இழுத்துக் கொண்டவன், “அம்மணி, நடக்குற வேலைய உன் கொழுந்த பாத்துக்கட்டும் நடக்க போற வேலைய நம்ம பாப்போமா.” கேட்டான் காதலோடு.

 

 

“நீங்க எவ்ளோ தூரம் சுத்தி வந்து அடி போட்டாலும் காரியம் நடக்காது மாமா. மூணு நாளைக்கு வூட்டுக்கு தூரம்.” என்றாள் நக்கல் புன்னகையோடு.

 

“அதுக்கு என்னா அம்மணி இப்போ கெட்டுப் போச்சு. நீயி மாமா நெஞ்சுல சாஞ்சி கொஞ்சிக்கிட்டு கெட. நா உன்னை கட்டி பிடிச்சிக்கிட்டு அனுபவிச்சிட்டு போற.” என்றவன் சொன்னது போல் நின்ற நிலையிலையே அவளை மார்பில் தாங்கிக் கொள்ள,

 

“நீங்களா இதுன்னு சந்தேகமா இருக்கு மாமா எனக்கு.” என்றாள்.

 

 

தன் மார்பில் சாய்ந்து கொண்டிருக்கும் மனைவியின் தோள்களை கடித்தவன், “நெசம் தான் அம்மணி நம்பு.” என்று அவளிடமிருந்து அடிகளை வாங்கிக் கொண்டான்.

 

 

தம்பதிகள் இருவரும் அவர்களுக்கான நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்க, செந்தமிழன் தொடர்புகொண்டு அந்த தருணத்தை கெடுத்து விட்டான். தம்பியின் அழைப்பை பார்த்ததும் மதுரவீரன் சமத்தாக கிளம்பும் வேளையில் இறங்க, சாமந்தி வாசலில் நின்று அழைத்தாள்.

 

 

மதுரவீரன் புருவம் நெறிய மனைவியை முறைக்க, எதற்கு அழைக்கிறாள் என்று தெரியாத காரணத்தினால் கணவன் புறம் திரும்பாமல் பயத்தோடு வெளியே சென்றாள். 

 

 

“பிற, இந்த தமிழு பண்ற வேலயா பாத்தியா.” என்றாள் பதட்டமாக.

 

ஒளிர்பிறை என்னவென்று கேள்வி கேட்க, “நானும் வரணுமா டி.  இந்த விசயம் மட்டும் என் வூட்டுக்காரனுக்கு தெரிஞ்சுது அத்தோட அம்மா வூட்டுக்கு பொட்டிய கட்ட வேண்டியதுதா. ஏற்கனவே எப்படா சாக்கு கெடைக்கும் என்னை அனுப்பி வுடலாம்னு காத்துட்டு இருக்காரு.” என்றவள் முகத்தில் அளவு கொள்ளா தவிப்பு.

 

 

“இதுக்கு நா என்னா மந்தி சொல்ல முடியும். அண்ண தம்பிகளை என்னிக்கும் நம்மளால மாத்த முடியாது போல. புடிச்சா புளியங்கொம்பு.” 

 

 

“வரலன்னு எவ்வளவோ சொல்லி பாத்துட்ட பிற. என்னா நடந்தாலும் நா பாத்துக்குற நீங்க வாங்க மதினினு சொல்லுறா டி.”

 

“இவ்ளோ உறுதியா சொல்லுறானா  ஏதாச்சுது காரணம் வெச்சிருப்பான் மந்தி. நீ உன் புருசனுக்கு தெரியாம வயக்காடு பக்கம் வா. எங்க வூட்டு ஆளுங்களை கண்டிப்பா தமிழு சமாளிச்சுப்பான். காதும் காதும் வெச்ச மாதிரி வேலைய முடிச்சுட்டு வந்துடலாம்.” என வெகு நேரமாக தோழியை சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.

 

 

கணவன் மச்சக்காளையனுக்கு பயந்து அவள் வர மறுக்க, வெளியில் வந்த மதுரவீரன், “கிளம்பலாம்” என்றான்.

 

வரும் ஓசையை வைத்தே அவன் குணம் சரியில்லை என்பதை உணர்ந்த ஒளிர்பிறை தோழிக்கு கண்ணால் சைகை செய்துவிட்டு கிளம்பினாள்.

 

 

செந்தமிழனின் ஆசைப்படி வயல் நிலத்தில் வயல்களுக்கு நடுவில் சிறு மீன் வளர்ப்பு ஏற்பாடு செய்திருக்கிறான். அதன் கழிவுகள் நேரடியாக விளைச்சலுக்கு போகுமாறும் வழி செய்தவன் குறைந்த தண்ணீரில் உயிர்வாழும் மீன்களாக பார்த்து கொள்முதல் செய்து இருக்கிறான்.

 

 

இவை எந்த அளவிற்கு சாத்தியம் என்பது இன்னும் முழுதாக தெரியாததால் சின்ன அளவில் செய்ய முயல, மதினிகள் இருவரும் அவர்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் பழக்கப்பட்ட ஆட்களை அவனுக்கு அறிமுகம் செய்தனர். 

 

 

 

எந்நேரமும் நீர் தேவைப்படுவதால் அதற்கான வேலைகளை அண்ணன் பார்த்துக்கொள்ள, தம்பி தன் கனவுகளில் ஒன்றானதை இன்று ஆரம்பிக்கப் போகிறான்.

 

ஏற்கனவே செந்தமிழனின் குடும்பம் மொத்தமும் அங்கு இருக்க மூத்த அண்ணன் மதினிக்காக காத்துக் கொண்டிருக்கிறான். அவன் கண்ணில் இருவரும் பட்டனர் .

 

அன்போடு வரவேற்று, “செத்த நேரம் உக்காருங்க ண்ணே. ஒரு விசமா வூடு வரைக்கும் போயிட்டு வந்துடுற.” என்றவன் காரணம் கேட்கும் அண்ணனுக்கு பதில் உரைக்காமல் குடுகுடு என்று ஓடினான்.

 

 

அவன் போகும் காரணத்தை அறிந்த ஒளிர்பிறை கடவுளிடம் வேண்டுதல் வைக்க, என்ன மாயாஜாலம் செய்தானோ அவனோடு வந்து கொண்டிருந்தாள் சாமந்தி. அங்கிருந்த யார் முகத்திலும் விருப்பம் இல்லை என்பதை உடனே கண்டு கொண்டவள் தயக்கமாக செந்தமிழனை பார்க்க,

 

“மதினிங்க ரெண்டு பேரு கையாலயும் இத ஆரம்பிக்கணுனு ஆசைப்படுற ண்ணே. எனக்கு நல்ல தோழியாவும், வழிகாட்டியாவும் இருக்குறது இவங்க ரெண்டு பேரு தான். அப்படிப்பட்டவங்க மனசார வாழ்த்தி இத ஆரம்பிச்சு குடுத்தா நல்லா இருக்குனு விருப்பப்படுற.” என்றிட, மதுரவீரன் அங்கிருந்து வெளியேற பார்த்தான்.

 

 

“மாமா” என்ற சாமந்தியின் வார்த்தையில் அவளை கடுமையாக முறைத்தவன், “இன்னொரு மொற அந்த வார்த்தைய சொல்லாத.” என்று விட்டான் முகம் வாடும்படி.

 

 

கண் கலங்கி நிற்கும் தோழிக்காக அவள் கணவனிடம் கோரிக்கை வைக்க, ஒரே பார்வையில் அடக்கி விட்டான். மூவர்படைக்கும் சாமந்தின் வரவு பிடிக்காமல் போனதால் இதுதான் சாக்கு என்று அண்ணனை ஏற்றி விட, “வந்து உன் கையால முதல்ல ஆரம்பிச்சு வைம்மா.” என்ற வார்த்தையில் அனைவரின் பார்வையும் ஆறுமுகத்திடம் சென்றது.

 

 

“என்னாய்யா பேசுற நீயி? நம்ம குடும்பம் நாசமா போனதுக்கு காரணமானவன் மருமகளை பந்தில உக்கார சொல்லுற. பட்டதெல்லாம் போதலையா உனக்கு. அவன் தான் கூறுகெட்டதனமா எதியோ சொல்லுறான்னா நீயி அதுக்கு மேல இருக்க.” கணவனிடம் சண்டைக்குப் பாய்ந்தார் ஆண்டாள்.

 

“நல்ல காரியம் நடக்கணுனு கூட்டிட்டு வந்திருக்கான். அத நம்மளோட விருப்பு வெறுப்புக்காக தடுக்க கூடாது. சண்டையும் வம்பும் என்னோட போவட்டும். இனியாது என் புள்ளைங்க எல்லாத்தியும் மறந்துட்டு ஒத்துமையா இருக்கட்டும்.” 

 

 

பகை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து அன்புக்கு பிள்ளையார் சுழி போட தயார் என வெளிப்படையாக வாக்குமூலம் கொடுத்தார் ஆறுமுகம். ஆனால் அவரின் பேச்சுக்கு தான் அங்கு ஆதரவு இல்லாமல் போனது.

 

 

இதுவரை மருமகளை மட்டுமே திட்டிக் கொண்டிருந்த ஆண்டாள் தனக்கு உரிமை இல்லை என்பதை மறந்து சாமந்தியை கடுமையாக சாடினார். தோழி திட்டு வாங்குவதை தாங்கிக்கொள்ள முடியாத ஒளிர்,

 

“அய்த்த அவ ஒன்னு ஆசைப்பட்டு இங்க வரல. தமிழு தான கூட்டிகிட்டு வந்தது… நீங்க எத பேசுறதா இருந்தாலும் உங்க புள்ளை கிட்ட பேசிக்கோங்க.” என்றாள்.

 

 

அவ்வளவுதான் ஆண்டாளின் கூர் நாக்கு மருமகளை குத்த ஆரம்பித்தது, “எடுபட்ட சிறுக்கி இது எல்லாத்துக்கும் காரணம் நீதான்டி. முதல்ல நீயி உள்ள வந்து என் குடும்பத்தை கெடுத்த. இப்போ இவளை உள்ள கூட்டிட்டு வந்து மொத்தத்தியும் அழிக்க பாக்கிறாயா. தல விதி… உன்ன என் மகன் கட்டி என் வயிற எரிய வுடுறான். நாளும் பொழுதும் என் குடும்பத்த கருவறுக்க கால நேரம் பாத்துட்டு கெடக்கா.” என்று.

 

 

தனக்காக தோழி திட்டு வாங்குவதை விரும்பாத சாமந்தி, “அவளை ஒன்னு சொல்லாதீங்க அய்த்த” என ஆரம்பிக்க,

 

“என் மகன் மாதிரி சொல்லிக்கிட்டு இருக்க மாட்ட, பேசுற நாக்க அறுத்துடுவ. என்னை மொற சொல்லி கூப்பிட எவளுக்கும் உரிமை இல்ல.”  மனம் நோகும்படி பேசினார்.

 

 

“என்னால உங்க குடும்பத்துக்குள்ள சலசலப்பு வேணா. தமிழு கட்டாயப்படுத்துனதால தான் இங்க வந்த. வந்தது தப்புதா மன்னிச்சிடுங்க.” இரு கை வணங்கி மன்னிப்பு கேட்டவள் வெளியேற,

 

“மதினிய இங்க கூட்டிட்டு வந்தது நான். என்னை மதிக்காம அவங்களை அனுப்புறது மனசுக்கு ஒப்பல. இத அவங்க கையால ஆரம்பிச்சா ஆரம்பிக்கட்டும். இல்லினா எதுவும் நடக்க வேணா” சாமந்தியை செல்ல விடாமல் தடுத்தவன் தன் முடிவை உறுதியாக சொல்லிவிட, மகன் பக்கம் நின்றார் ஆறுமுகம்.

 

கூடவே, “ஐய்யா… இந்த பொண்ணுக்கும் நமக்கும் எந்த பகையும் இல்ல. நம்பி வந்த புள்ளைய நோகடிச்சு அனுப்புன பாவம் நம்மளை சும்மா வுடாது. ஏற்கனவே பொண்ணு சாபத்தை வாங்கித்தான் நம்ம குடும்பம் முன்னேறாம கெடக்கு. இன்னு பாவத்தை தேடிக்காதீங்க. உன் தம்பி எது செஞ்சாலும் ஆயிரம் மொற யோசிச்சு செய்வான்னு நீயி தான சொல்லிட்டு கெடப்ப. இப்போ அதே நம்பிக்கையோட உத்தரவு குடு ஆசைப்பட்டதை வழிநடத்தி வாழ்ந்துட்டு போவட்டும்.” என பெரிய மகனிடம் கோரிக்கை வைத்தார்.

 

 

தந்தைக்காகவும் தன்னுடன் பிறந்தவனுக்காகவும் இத்தனை நாள் பிடித்து வைத்திருந்த ரோஷத்தை தவிடு பொடியாக்கி சம்மதம் தெரிவித்தான். அண்ணனே தலையாட்டி விட மூன்று வானரங்களும் வாயை மூடிக் கொண்டது. ஆண்டாள் மட்டுமே அங்கு எதிர்ப்பு கொடி காட்ட, அவரையும் மீறி தன் திருகரங்களால் நீரை பாய்ச்சினாள் சாமந்தி.

 

 

 

தோழியும் அவளோடு சேர்ந்து கொள்ள, குறைந்த அளவு நீர் அங்கு. போதும் என்ற அளவு வந்ததும் நிறுத்தியவன் இருவர் கையிலும் இரு மீன்களை திணிக்க, நழுவி ஓடும் மீனை சாதுரியமாக பிடித்தவர்கள் கடவுளை வேண்டிக் கொண்டு ஆரம்பித்தார்கள். 

 

 

 

சீமை 42

 

இனிதே தொடங்கப்பட்ட காரியம் நன்முறையில் முடிந்தது. சாமந்தி விட்டால் போதும் என்று விரைவாக வீடு திரும்பி விட, மற்றவர்கள் பொறுமையாக வந்தார்கள். மகனின் நல் மனது தனக்கு இல்லையே என்ற ஆதங்கத்தில்,

 

“உன்ன நெனைச்சி ரொம்ப

பெருமை படுற ராசா. உன்னைய பாத்தாது இந்த குடும்பம் மாறட்டும். அண்ணனுக்கு துணையா என்னிக்கும் கூடவே இருய்யா.” என தோள் தட்டி கொடுத்து தன் மனதையும் ஆற்றிக்கொண்டார்.

 

 

“இது பிள்ளையார் சுழி அப்பா. இனிமே ஒவ்வொன்னா இந்த குடும்பத்துல நல்லது நடக்கும். நீங்க வேணா பாருங்க ரெண்டு குடும்பமும் சேர்ந்து ஒன்னா சிரிக்க தான் போறோம். அந்த நாளு வர வரைக்கும் உங்க மகன் இந்த எண்ணத்த பின் வாங்க மாட்டான்.” 

 

 

“மனசுக்கு நெறைவா இருக்குயா. உன்ன மாதிரி அறிவு எனக்கு இல்லாம போச்சு. உங்க அத்தினி பேரு வாழ்க்கையையும் நாசமாக்க பாத்திருக்க. இந்த அப்பன எல்லாரும் சேர்ந்து மன்னிச்சிடுங்கய்யா.” என கை வணங்கும் தந்தையின் செயலில் பதறியவன் உடனே தடுத்து விட்டான்.

 

 

தந்தையின் வார்த்தைகள் காதில் விழுந்தாலும் கண்டுகொள்ளாமல் மதுரவீரன் நடக்க, கொழுந்தன் வார்த்தை வருங்காலத்தில் நடக்க வேண்டும் என்ற பெரும் வேண்டுதலோடு வீட்டை நோக்கி நடந்தாள் ஒளிர்பிறை.

 

 

 

ஊரை சுற்றிப் பார்க்க விருப்பம் தெரிவித்த ஆறுமுகத்தின் எண்ணத்தை நிறைவேற்றும் நோக்கோடு செந்தமிழன் அவரை வேறு பக்கம் அழைத்துச் சென்றான். மகனோடு பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு வந்தவர் ஒவ்வொன்றையும் ரசிக்க ஆரம்பித்தார் ஏக்கத்தோடு.

 

 

தந்தையின் நிலை தவறும் பொழுதெல்லாம் பக்கத்துணையாக நின்று தேற்றியவன் ஒருவழியாக அவர்களுக்கு சொந்தமான குலதெய்வ கோவிலுக்கு அழைத்து வந்தான். அங்கு வந்ததும் மனதில் கனத்த பாரம் கூடியேறியது. பட்டென்று மனதில் ஆணி அடித்தது போல் வந்தது தங்கை முகம்.

 

எப்பேர்ப்பட்ட புன்னகை முகத்தை சிதைத்திருக்கிறோம் என்ற வருத்தத்தோடு அங்கேயே அமர்ந்தார். தந்தைக்கு துணை நிற்க வேண்டிய புதல்வன் அவரோடு அமர, “மாற்றான் வூட்டு உறவுன்னு கூட நெனைக்காம என் மேல அம்புட்டு பாசமா இருப்பாய்யா. உன்ன மாதிரி தாய்யா நானும் அவ விசயத்துல அன்பா இருப்ப. கட்டிக்க மாப்பிள்ளை வரும்போது கூட உனக்கு புடிச்சிருக்கானு தான் கேட்டு நின்னா. அப்படிப்பட்டவ வாழ்க்கைய முடிச்சிட்டேனே ராசா…”

 

 

“நடந்தது நடந்து போச்சுப்பா வுடுங்க.”

 

“இந்தப் பாவத்தை எங்க எப்டி தீர்க்க போறன்னு சத்தியமா தெரியல. என் தங்கச்சி மொகத்தைப் பாத்து என்னை மன்னிச்சிடும்மா தாயேன்னு கால்ல விழனும் போல இருக்கு. காத்தா கரைஞ்சிருக்காளோ என் கூடவே ஒட்டி இருக்காளோ தெரியல. எனக்கு அந்த வாய்ப்ப குடுக்காமலே போய்ட்டா.” என்றவர் நிலத்தில் விழுந்து கதறினார்.

 

 

“எந்த புனிதமான எடத்துக்கு போனாலும் நீயி செஞ்ச பாவத்த கழுவி முடியாது. ஒரு குடும்பத்த செதச்ச பாவத்துக்கு புழு பூத்து அனாதையா தான் நீயி சாவ. அந்த நாளை பாக்காம இந்த கட்ட மண்ணுல சாயாதுடா.” என்ற வசனம் தலை நிமிர வைத்தது ஆறுமுகத்தை.

 

 

முருகேசனின் தாயார் நின்றிருந்தார் அவரை சபித்துக் கொண்டு. கடவுள் மகன் கொடுத்த பாட்டி என்ற உறவை தக்க வைக்க இன்றுவரை உயிரை விட்டு வைத்திருக்கிறார். தள்ளாத வயதிலும் தட்டு தடுமாறி தன் மகன் இறந்த இடத்திற்கு வந்தவர் அதற்கு காரணமானவனின் பேச்சைக் கேட்க நேர, மனதில் விட்டுக் கொண்டிருந்த சாபத்தை நேரடியாக வீசினார்.

 

“அய்த்த, நா தெரிஞ்சே என் தங்கச்சிக்கு துரோகம் பண்ணல.” என மண்டியிட்டு அழ,

 

“ச்சீ! அசிங்கமா இல்ல உனக்கு. தங்கச்சி தாலிய அறுத்த குற்ற உணர்ச்சி கொஞ்சமும் இல்லாம இருக்க. அவ பெத்தது அனாதையா அப்பனும் இல்லாம ஆத்தாளும் இல்லாம போராடிக்கிட்டு கெடக்கு. அந்த உத்தமி பெத்தது உங்களை காவு குடுக்க காத்துட்டு இருக்கு‌. மண்ணோட மண்ணா போவ வரிசைல நில்லுங்க எல்லாரும்.” என மண்ணை வாரி முகத்தில் அடித்தார்.

 

 

முருகேசனின் தாயார் மணியம்மாள் பேச்சைக் கேட்ட செந்தமிழன் வருத்தம் கொள்ள, “நா பண்ண பாவத்துக்கு என் தங்கச்சி புள்ள கையாலயே செத்துப் போற அய்த்த. அப்பவாது என் தங்கச்சி உசுரு என்னை மன்னிக்கட்டும்.” என்றார் ஆறுமுகம்.

 

 

“அது மட்டும் நீயி செத்து ஆவியா அலைஞ்சா கூட நடக்காது. அவ பெத்தது கையால இதே எடத்துல துடிதுடிக்க சாவ.” 

 

 

“அம்மாச்சி, பெரியவங்க இந்த மாதிரி பேசுறது நல்லா இல்ல. அப்பா தப்பு பண்ணவராவே இருக்கட்டும். ஆனா, இப்ப செஞ்ச தப்ப உணர்ந்து தெனம் சித்திரவதை அனுபவிச்சுக்கிட்டு இருக்காரு. இந்த மாதிரி நேரத்துல மன்னிச்சு வுடுறது தான் உங்களை மாதிரி பெரியவங்களுக்கு அழகு.”

 

 

“எது அழகு? உன் அப்பன சாவடிக்க போறன்னு சொன்னத கூட உன்னால கேக்க முடியலையே…  பெத்தவ உசுரோட இருக்கும்போதே கொல்லி வைக்க புள்ள இல்லாம ஆன என் நெலைமைய சொல்லி புரிய வைக்க முடியுமா. என்னை வுடு உலகம் தெரியாத வயசுல பெத்தவங்கள இழந்துட்டு நின்ன அந்த அப்பாவி நெலைமை புரியுமா உனக்கு. இந்த விசயத்துல நா பெரியவளா இருக்குறதை வுட என் புள்ள மருமகள் சாவுக்கு காரணமான உங்க வூட்டு ரத்தத்தை குடிக்குற சின்னவளா இருக்குறது ரொம்ப சரின்னு படுது.

 

 

“நாங்க எங்க அய்த்த உறவ என்னிக்கும் வேணானு சொன்னது இல்ல. ஒவ்வொரு தடவயும் இறங்கி வரும்போது உதாசனம் செஞ்சு விலகிப் போனது நீங்கதா. எங்க அப்பா செஞ்ச பாவத்துல எங்களுக்கும் பங்கு இருக்கு. இழந்த எல்லாத்தியும் ஈடு செய்ய முடியலனாலும் கொஞ்சமாது சரி பண்ண பாப்போம்.”

 

 

“சரி பண்ண முடியாத தப்ப செஞ்சிட்டு சரி பண்ண போறோம்னு சொல்றியே இன்னிக்கு சொல்ற கேட்டுக்கோ… உங்க அப்பன் பண்ண பாவத்துக்கு நீங்க அஞ்சு பேரும் அஞ்சு திசைக்கு ஓட போறீங்க. வாழ்க்கை துரத்தி துரத்தி உங்களை அடிக்க போவுது. இப்டி வாழ்றதுக்கு சாவுறதே மேலுன்னு நீங்க புலம்புற நாளு சீக்கிரம் வரும். அந்த நேரத்தை கொண்டாடத்தா நாங்க காத்துக்கிட்டு இருக்கோம்.” என்றார்.

 

 

யார் இருக்கும் தைரியத்தில் இதையெல்லாம் மணியம்மாள் பேசுகிறாரோ அந்த முருகேசனின் ரத்தம் சீறும் பாம்பாக துள்ளிக் கொண்டிருக்கிறது சண்முகத்திடம்.

 

 

வீட்டிற்கு வந்த நாளில் இருந்து தங்கை நினைவு அவரை கொல்லாமல் கொன்று கொண்டிருந்தது. மகனிடம் அதைப் பற்றி புலம்பியும் செவிமடுக்காத காரணத்தினால் யாரும் அறியாமல் அவரே தங்கை வீட்டை தேடி வந்துவிட்டார்.

 

 

அண்ணன்களோடு வாழ்ந்த ராசாத்தி கணவன் உயிர் பிரிந்த விரக்தியில் வீட்டை விட்டு வெளி வர மறுத்தார். ஒரு கட்டத்தில் அண்ணன்கள் முன்னே தன் உயிரை மாய்த்துக் கொள்ள, மகனின் உயிராவது நல்லபடியாக வாழட்டும் என்று வேறொரு ஊருக்கு குடிபெயர்ந்தார் மணியம்மாள்.

 

 

ராசாத்தி மறைவுக்குப் பின் இவர்களிடம் நெருங்க பயம் கொண்டார்கள் இரு குடும்பத்தினரும். அதிலும் ராசாத்தி வாரிசு காட்டும் மிரட்சியில் நெருங்க அஞ்சினார்கள் என்பதே உண்மை. பழி தீர்க்கும் எண்ணத்தோடு வளர்க்கப்பட்ட உடம்பு அது.

 

எண்ணம், செயல், சிந்தனை அனைத்திலும் ஒரே எண்ணம் மட்டும்தான். பெற்றோர்களின் மரணத்திற்கு காரணமான குடும்பத்தை பழி தீர்க்க வேண்டும் என்று. நேரம் காலம் கூடி வராத காரணத்தினால் கூடி வர வைக்கும் வேலையில் இருக்கிறது. அதற்கு இன்னும் தூபம் போடும் விதமாக இருவரின் ஜாமீன் செய்தி கிடைத்து விட, எரிந்து கொண்டிருந்த நெருப்பில் நெருப்பு பந்து விழுந்தது.

 

 

அந்த நேரம் பார்த்து சண்முகம் தங்கை உறவை பார்க்க வீட்டு வாசலில். “என் வூட்டு வாசல்ல உன் கால் பட்டுச்சு நொண்டியாத்தான் வூடு போய் சேருவ. எவ்ளோ நெஞ்சழுத்தம் இருந்தா என் வூட்டு வாசல்ல வந்து நிக்க துணிஞ்சிருப்ப. உன்னை இதே எடத்துல கழுத்து அறுத்து போடணுனு என் கை கதறுது.” என்ற பேச்சுக்கு அழுகையை பதிலாக கொடுத்தார் சண்முகம்.

 

 

“உயிர் பயத்துல அழுறியா இல்ல உயிர் பிச்சை கேட்டு அழுறியா? நீயி என்னா கேட்டாலும் எப்டி கேட்டாலும் உன் உயிரு என் கையாலதான் போவும். வழக்குல இருந்து வெளிய வந்து குடும்பத்தோட வாழலாம்னு மட்டும் நெனைக்காத. இன்னைல இருந்து உன் குடும்பத்துக்கும் உன்னோட சேர்ந்து என் பெத்தவங்க உயிரை குடிச்ச அந்த ஆறுமுகம் குடும்பத்துக்கும் எழவு காலம். ஒவ்வொரு உயிரா எங்க அப்பா இறந்த நாளு அன்னிக்கு காவு குடுத்து எங்க அம்மா உயிருக்கு சந்தோசத்தை குடுக்கல நா ஒரு அப்பனுக்கு பொறக்கல.” என்றதோடு வீட்டின் கதவு அடைக்கப்பட்டது.

 

 

 

வெகு நேரமாக வீட்டு வாசலில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார் சண்முகம். அந்த அழுகை சத்தம் உள்ளிருக்கும் ராசாத்தியின் வாரிசுக்கு நன்றாக கேட்டது. இருந்தும் செவிமடுக்க விருப்பம் இல்லாமல் இருந்துக் கொள்ள,

 

“கூட பொறந்தவ தாலிய அறுத்ததும் இல்லாம அவ உசுர குடிச்ச என்னை இத்தினி வருசம் நீயி வுட்டு வெச்சதே பெரிய தண்டனை தான சாமி. தெனம் தெனம் நா செஞ்ச பாவத்தை நெனைச்சி செத்துக்கிட்டு கெடக்க. என்னை மொத்தமா கொன்னு நிம்மதியை குடு. ஆனா, ஒன்னு மட்டும் கெஞ்சி கேட்டுக்குற…” என்றவர் எழுந்து நின்றார்.

 

 

உள்ளிருக்கும் உருவம் காதை திட்டி வைத்து கேட்க, “நா பண்ண பாவத்துக்கு என்னை என்னா வேணும்னாலும் பண்ணுய்யா சாமி.  என் புள்ளைங்க பாவம் வுட்டுடு. அவனுங்க எந்த தப்பும் செய்யாதவனுங்க. இந்த மாதிரி ஒரு அப்பனுக்கு பொறந்ததை தவிர ஈ எறும்புக்கு கூட துரோகம் நெனைக்காத நல்லவனுங்க. நீயி அப்பன் ஆத்தா இல்லாம தவிக்குற மாதிரி என் புள்ளைங்களும் பெத்தவளை இழந்து, கூட துணை நிற்க வேண்டிய என்னியும் இழந்து இத்தினி வருசம் கஷ்டப்பட்டுட்டாய்ங்க. இனியாது அவங்க வாழ்க்கை நல்லா இருக்கட்டும்.” என்ற வேண்டுதலை வைத்ததும் பட்டென்று திறந்தது கதவு.

 

 

சண்முகம் அழுகையோடு தலை நிமிர, “நா பட்ட வலியும் உன் புள்ளைங்க பட்ட வலியும் ஒன்னா? என்னா கெஞ்சி கதறி கால்ல விழுந்தாலும் சரி உன் வம்சம் வருசத்துக்கு ஒன்னா போவும். அதுவும் உன் கண்ணு முன்னாடி போவும். பெத்த புள்ளைங்களை மண்ணுக்கு இரையா தூக்கி குடுத்துட்டு கடைசியா தான் உன் உசுரு போவ. வருசத்துக்கு ஒன்ன தூக்கிப் போட தயாரா இரு.” என்று விட்டு மீண்டும் பழையபடி கதவு மூடிக்கொண்டது.

 

 

முடிந்தவரை வாசலில் நின்று கதறிப் பார்த்தவர் தெம்பில்லாமல் ஊர் திரும்பினார். இந்தப் புறம் மணியம்மாள் பாட்டி சாபத்தை கொடுத்து விட்டு வெளியேற, தன் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்த ஆறுமுகத்தின் நினைவுகள் கடந்த காலத்தை சுற்றியது. அவரோடு சேர்ந்து பகைக்கு காரணமான சண்முகமும் அதே கடந்த காலத்திற்குள் நுழைந்தார்….

 

தெக்கத்தி சீமை எல்லைக்குள்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்