Loading

சீமை 46

 

கணவன் வீட்டிற்கு சென்றிருந்த ராசாத்தி இன்று தான் ஊர் திரும்புகிறார். அண்ணன்களைப் பிரிந்து செல்ல மனைவிக்கு விருப்பமில்லை என்பதை அறிந்த முருகேசன் என்ன ஆனாலும் பரவாயில்லை என மனைவியோடு அவர் பிறந்த ஊரில் தங்கி இருக்கிறார்.

 

 

ஒரு குழந்தைக்கு பின் ராசாத்திக்கு குழந்தை பேறு இல்லாமல் போக, மனைவி ஏக்கம் கொள்ளக் கூடாது என்பதற்காக இன்னும் கண்ணும் கருத்துமாக கவனிப்பார். அதிலும் அண்ணன்கள் இருவரும் அடித்துக் கொள்ளும் செய்தி தெரிந்தால் இரவெல்லாம் தூங்காமல் புலம்பிக் கொண்டிருக்கும் மனைவியை தூங்க வைக்க பெரும் பாடுபடுவார்.

 

திருவிழாவில் அண்ணன்கள் இருவரும் அடித்துக்கொண்ட செய்தியை கேட்டதும் இருப்புக் கொள்ளவில்லை ராசாத்திக்கு. கணவனை நச்சரித்து ஊர் வந்து சேர்ந்தவர் நேராக நின்றார் ஆறுமுகத்தின் முன்பு. ராசாத்தியோடு பிறந்தவர் தான் இவருக்கு ஆகாதே தவிர தங்கை மிகவும் பிடித்தவள். 

 

“என்னாம்மா இப்பதா ஊருக்கு போன அதுக்குள்ள திரும்ப வந்துட்ட” என அக்கறையாக கேட்க,

 

“நீங்க பண்ண வேலைக்கு எப்டி அங்கு இருக்குறது.” என்றார்.

 

 

தங்கை எதை குறிப்பிடுகிறாள் என்பதை அறிந்தும், “இம்புட்டு அவசரமா வர அளவுக்கு அப்டி என்னாம்மா அண்ண வேல பாத்துட்ட. நானே ராவெல்லாம் எந்திரிக்க முடியாம முதுகு வலியோடு படுத்துக்கிட்டு கெடக்க.” மழுப்பலாக பேசினார்.

 

 

“ரெண்டு பேரையும் சண்ட போடாதீங்கன்னு எத்தினி தடவ சொல்றது. நா சொல்லும்போது சரி சரின்னு தலையாட்டிட்டு வாரத்துக்கு ஒரு சண்டைய போடுறீங்க. நீங்களாது பரவால்ல உங்களுக்கு பொறந்தவய்ங்க அதுக்கும் மேல இருக்காய்ங்க.” எனும் பொழுது மதுரவீரன் அங்கு வந்தான்.

 

 

“தாய் எட்டடி பாஞ்சா குட்டி பதினாறு அடி பாயும்னு ஒரு பழமொழி இருக்கு அய்த்த, தெரியுமா?”

 

“வாய்யா என் மூத்த மருமகனே…” என இடுப்பில் கை வைத்தவர், “வாழ்க்கைய அப்பங்க மாதிரி மல்லுக்கு நின்னே கடத்திட முடிவு பண்ணிட்டீங்களோ.” என்றிட,

 

“உங்க அண்ணன மாதிரி இத்தினி வருசத்த வெட்டியா கடத்த மாட்ட அய்த்த. இன்னு கொஞ்ச நாளுல எதிர்த வூட்ல இருக்க எவனும் இந்த ஊருல இருக்க மாட்டாய்ங்க.” மதுரவீரனின் பேச்சில் திமிர் தெரிந்தது ராசாத்திக்கு.

 

 

“உனக்கு அய்த்தைய புடிக்குமா ராசா.” என்ற கேள்விக்கு உடனே பதில் கொடுத்தான், “என் அய்த்தைய புடிக்காதுனு வேற சொல்லுவேனா.” என்று.

 

“உன் அய்த்தைக்கு அவளோட பொறந்த ரெண்டு அண்ணனையும் ரொம்ப புடிக்கும். ரெண்டு பேருல ஆருக்கு பிரச்சனை வந்தாலும் நிம்மதியா வாழ முடியாது என்னால. அதே மாதிரிதா அண்ணங்க பெத்த எட்டு பேரும் என்னிக்கும் நலமா இருக்கணும்.” என்றவர் மனம் எதை சொன்னாலும் நோகும் என்பதால் அமைதி காத்தான்.

 

 

கோபம் அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டவர் அண்ணனின் காலடியில் அமர்ந்து, “வேணா’ண்ணே நமக்கு இந்த சண்ட சச்சரவு எதுவும். இருக்குற வரைக்கும் ஒருத்தருக்கு ஒருத்தர் மொகம் பாத்து சிரிக்குற அளவுக்கு உறவ வெச்சிப்போம். இந்த உசுரு போயிடுச்சின்னா திரும்ப வராது. போனதுக்கு அப்புறம் ஐய்யோ அம்மான்னு அடிச்சிக்கிறதுல அர்த்தமில்ல.” என அண்ணன் மடி மீது தலை சாய்ந்தார்.

 

 

சின்னவளின் வருத்தத்தை போக்க எண்ணியவர் இதமாக தடவி கொடுக்க, மனைவியின் வருத்தத்தை போக்கும் மருந்து அண்ணன் என்பதால் இருவரையும் தொந்தரவு செய்யாமல் பார்வையாளர் ஆனார் முருகேசன்.

 

 

***

 

“என் வூட்டுக்குள்ள வரதுக்கு முன்னாடி அவன் வூட்டுக்குள்ள கால வெச்சுட்டு வர போல.” பெரிய அண்ணனை பார்த்துவிட்டு சின்ன அண்ணனை பார்க்க ராசாத்தி வந்திருக்கிறார்.

 

தன்னுடன் பிறந்த சகோதரி தனக்கு முன்னுரிமை கொடுக்காமல் வேறு ஒருவனுக்கு கொடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவர் கருக, “உனக்கும் எனக்கும் பெரியவரு அண்ண தான’ண்ணே. அவர முதல்ல பாக்குறது தான மருவாதியா இருக்கும்.” என்றார்.

 

“வாய மூடு ராசாத்தி. அவுனுக்கும் நமக்கும் எந்த உறவும் இல்ல. இன்னு சொல்லப்போனா எத்தினி வருசம் ஆனாலும் அழிக்க முடியாத பகை தான் இருக்கு. அத முடிச்சு வெக்க நா இங்க போராடிட்டு இருக்க. நீயி என்னாடானா அண்ண பகையா நெனைக்குற வூட்டுல கால வெச்சிட்டு வந்திருக்க.”

 

“நீயி பகைய முடிக்கிற மாதிரி ஒன்னு தெரியலண்ணே. இருக்குற பகைய உன் பைய தலையில கட்டி வுட்டுட்டு குளிர் காயுற மாதிரி இருக்கு.” என்ற தங்கையை கடுமையான பார்வையோடு நோக்கினார் சண்முகம்.

 

“நா சொல்றேன்னு தப்பா நெனைக்காத. பெரியவரை வுட உன்கிட்ட எனக்கு அதிக உரிமை இருக்குறதால மனசுல இருக்குறதை சொல்ற. அப்பா பண்ண தப்புக்கு உங்க மகன வெச்சி பழி தீர்த்துக்குறது நல்ல வழியா தெரியல. அவன் எதிர்காலம் என்னா ஆவும்னு கூட யோசிக்காம பண்ணிட்டு இருக்கீங்க. ஒன்னு கடக்க ஒன்னு ஆகி வாழ்க்கை முடிஞ்சு போனா என்னா பண்ணுவீய்ங்க.”

 

“என்னை பெத்தவருக்காக வாழ்க்கைய மட்டும் இல்ல உயிர குடுக்கவும் தயாரா இருக்க. உங்கள மாதிரி கூட பொறந்தவனை இன்னொருத்தன் முன்னாடி அவமானப்படுத்துற நல்ல மனசு எனக்கு கெடையாது.” என்ற குரலுக்குச் சொந்தக்காரன் மச்சக்காளையன் அத்தை முன்பு நின்றான்.

 

 

“இப்போ உனக்கு அய்த்த சொல்றது புரியாது காளையா. ஒரு நாளு ஒன்னு செய்ய முடியாத நெலைமையில இருக்கும் பொழுது புரிஞ்சுப்ப. ஆனா, அன்னிக்கு உன் வாழ்க்கை உன் கையில இருக்குமான்னு தெரியல.”

 

“என்னா அய்த்த சாபம் வுடுறீங்களா?”

 

“நீயி நா தூக்கி வளர்த்த பையன். உனக்கு சாபம் குடுத்தா எனக்கு நானே குடுத்துக்குற மாதிரி. என் மருமகன் ஆயுசுக்கும் நல்லா இருக்கணுனு ஆசைப்படுறதால தான் இப்டி ஒரு வார்த்தைய சொல்ற.”

 

 

“மருமகன் மேல அம்புட்டு பாசம் இருந்தா அவுனுக்கு புடிக்காததை செய்ய மனசு வருமா?”

 

“என்னாப்பா பண்ண எனக்கு ஒரு மருமகன் இருந்தா பரவால்ல. எட்டு பேரையும் ஒரே நேரத்துல திருப்திப்படுத்துற சக்திய கடவுள் எனக்கு குடுக்கலயே.”

 

“இது பொல்லாப்பு பேச்சு அய்த்த. எங்க அப்பாவ மதிக்காம அவுனுங்க கூட பேசுறது சுத்தமா புடிக்கல. ஏதோ எங்க அப்பா ஆரும் இல்லாத அனாதையா இருக்குற மாதிரி தோணுது.” என்ற மருமகனை திடமான பார்வையால் நோக்கினார்.

 

 

ராசாத்தியின் பார்வை அவனை தாக்க, “உன்ன மாதிரி நானும் அவங்க மேல கோவமா இருந்தது உண்மை. ஒரு கட்டத்துல எனக்கு எங்க அண்ணன தவிர வேற எந்த உறவும் இல்லன்னு தெரிய வரும்போது தான் பயம் வந்துச்சு. வம்பு பண்ணாதன்னு சொல்லாத நாளு இல்ல. தங்கச்சிக்காக அண்ண கேக்க மறுத்துட்டாரு. அண்ணனுக்காக எதிராளி கூட உறவு வெச்சிக்கிட்ட. இதுல பெருசா கொல குத்தம் இருக்குற மாதிரி எனக்கு தெரியல மருமகனே.” என்றவர் புரிதல் அவனுக்கு இல்லாமல் போனது.

 

 

“அப்டி என்னா பண்ணிடுவாய்ங்க எங்க அப்பாவ அவுனுங்க. நீங்க உறவு வெச்சுக்கிட்டா எல்லா பகையும் முடிஞ்சிடும்னு தப்பா நெனைச்சிட்டு இருக்கீங்க அய்த்த.”

 

 

“இவ்ளோ சொல்லியும் புரியாத உன்கிட்ட என்னா பேச முடியும் காளையா.” என்றவரின் கைப்பிடித்தார் முருகேசன்.

 

 

கணவனை ராசாத்தி கேள்வியோடு நோக்க, “இப்ப நீயி என்னா நல்லது சொன்னாலும் இங்க இருக்கவங்க ஆரு காதுலயும் விழாது.  நீயி இப்டி போனதுக்கப்புறம் அடிச்சிக்கதா போறாய்ங்க. அவங்களா திருந்துனா மட்டும்தா ரெண்டு குடும்பமும் சந்தோசமா வாழும். பேச்ச வளர்த்து இருக்க உறவ முட்டிக்க வெச்சிக்காத ராசாத்தி.” என தடுத்தார்.

 

 

 

கணவன் வார்த்தைக்கு பின் வாதம் செய்ய விரும்பாதவர், “எனக்கு என் கூட பொறந்தவரும் முக்கியம் கூட பொறக்காதவரும் முக்கியம். ஆருக்காகவும் ஆரையும் விட்டுக் குடுக்க தயாரா இல்ல.” என்றவர்  கிளம்பினார்.

 

“கொஞ்ச நேரம் இருந்துட்டு போம்மா வந்ததும் போற.”

 

 

“இல்லண்ணே சாமி பள்ளிக்கூடம் முடிச்சுட்டு வர நேரம். வர நேரத்துக்கு வூட்டுல நா இல்லினா ராத்திரி சாப்பிட மாட்டேன்னு அடம் புடிக்கும்.”

 

 

“உனக்கு பொறந்தது உன்ன மாதிரியே இருக்கு.” தன்னை பிடிவாதகாரி என்று குறிப்பிடும் அண்ணனை முறைத்தவர், “நல்லா இருக்கு நீயி பேசுறது. என்னாத்துக்கு என் தங்கச்சிய இப்டி கொடுமை பண்ணுறன்னு ஒரு வார்த்த கேக்காம ஆதரவா பேசுற.” என்றதும்,

 

“சாமிய என்னால ஏச முடியாது ராசாத்தி.” என்றவர் தங்கை பெற்ற புள்ளையை பெருமை பேசிக் கொண்டிருந்தார்.

 

 

அவரோடு சிறிது நேரம் உரையாடிய ராசாத்தி அங்கிருந்து கிளம்ப, பள்ளி முடித்து வீடு திரும்பினான் சிலம்பன். 

 

 

***

 

 

வேடம் போட வந்தவரை விரட்டி அடித்து விட்டு வேடம் போட்டதால் ஊர் தலைவரிடம் பஞ்சாயத்திற்கு முறையிட்டான் மச்சக்காளையன். அதன்படி அவர் அழைத்து விசாரிக்க,

 

“ஆமா, அதுக்கு என்னா இப்போ?” என்றான் திமிராக.

 

 

“எடேய்! என் விசயத்துல திரும்பத் திரும்ப நொழஞ்சிட்டு கெடக்க. எச்சரிக்கை விடுக்கும் போதே புரிஞ்சிட்டு அமைதியா போயிடு. சாமி பேர சொல்லி பித்தலாட்டம் பண்றவன் நல்லா இருந்ததா சரித்திரம் இல்லை.” 

 

 

“சாமி பேரைச் சொல்லி பித்தலாட்டம் பண்றது நீயும் உங்க அப்பனும் தான்டா. பம்ப உடுக்க அடிக்க தெரியாமலே பெரிய வித்வான் மாதிரி ஊர ஏமாத்திக்கிட்டு இருக்கீங்க.” என்றதும் மதுரவீரனின் சட்டையை பிடித்தான் மச்சக்காளையன்.

 

 

தன் மீது கை வைத்தவன் மீது கை வைத்தான் பெரியவன். ஊர் தலைவர் இருவரையும் அமைதியாகும் படி சொல்லியும் கேட்காதவர்கள் அடித்துக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

 

 

இருவரின் செய்தி இருவரின் குடும்பத்திற்கும் பறந்தது. சிலம்பனே பள்ளி படித்துக் கொண்டிருக்கும் நிலையில் மொழியின் அவனை விட குட்டி பையன். அதே போல் தான் இமையவன், எழில்குமரன் இருவரும் பள்ளி படிப்பை தொடர, கவிநேயன் இருப்பதிலேயே குழந்தை அங்கு.

 

 

 

வீட்டில் இல்லாத தந்தையின் சார்பாக சிலம்பன் சண்டை நடக்கும் இடத்திற்கு ஓட, அவன் பின்னால் தட்டு தடுமாறி ஓடினான் மொழியன். இந்தப் பக்கம் ஆறுமுகத்தோடு செந்தமிழன் ஓடினான். அவனுக்கு பின்னால் ஓடும் இமையவனை பின் தொடர்ந்தான் எழில்குமரன். ஆண்டாள் கவிநேயனை வைத்துக்கொண்டு ஓடினார்.

 

 

அனைவரும் வந்து சேர்வதற்கு முன்னால் ஆடைகள் இரண்டும் கிழிந்த நிலையில் சண்டை நிறுத்தப்பட்டிருந்தது. அவரவர் குடும்பம் இருவரை சமாதானம் செய்ய, சண்முகம் அங்கு வந்தார். 

 

 

 

வந்தவர் என்ன ஏதென்று விசாரிக்காமல் இருக்கும் கோபத்திற்கு மதுரவீரனின் கன்னத்தை பதம் பார்க்க, மகன் அடி வாங்கியதை ஏற்றுக் கொள்ள முடியாத ஆறுமுகம் அவரை அடித்தார்.

 

 

மீண்டும் திருவிழா நடக்கும் இடம் போர்க்களமானது இந்த இரு குடும்பத்தால். மதுரவீரன் முடிவாக இவர்கள் பம்பை அடிக்கக் கூடாது என்று விட, அடித்தே தீருவேன் என சவால் விட்டான்  மச்சக்காளையன்.

 

 

 

சீமை 47

 

இரண்டாம் நாள் திருவிழா ஜோராக தொடங்கப்பட்டது. இன்று அம்மனுக்கு மஞ்சள் காப்பு செலுத்துவார்கள். போன வருட திருவிழாவில் சேர்த்து வைத்த மஞ்சளை வருடம் முழுவதும் பாதுகாத்து வைப்பார்கள். திருவிழா நேரம் வீட்டில் பிடித்து வைத்து வழிபட்டு அதை நேராக அம்மன் சன்னதியில் சேர்ப்பார்கள். 

 

 

வரும் மஞ்சள் அனைத்தையும் ஒன்று சேர்த்து அம்மன் ரூபத்தில் அலங்கரித்து ஊர் மக்கள் தரிசனத்திற்காக வைப்பார்கள். மஞ்சள் நிற அழகில் அம்மன் காட்சி தரும் நேரம் பம்பை உடுக்கை அடித்து வர்ணிப்பார்கள். ஊரே சேர்த்து வைத்த மஞ்சளை அம்மன் சன்னதியில் சேர்க்கும் வேலையில் தீவிரமாக இருக்க, மச்சக்காளையன் பம்பை தட்டுகளை மாற்றி கட்டி சரி செய்து கொண்டிருந்தான்.

 

 

சண்முகம் உடுக்கையை ஐவிரலில் சுழற்சி பிடித்து நான்கைந்து முறை அடித்து ஓசையை சரிப்படுத்திக் கொள்ள, அவசரமாக ஓடி வந்தான் மொழியன். 

 

“என்னாத்துக்குடா இப்டி மூச்சு வாங்க ஓடி வர?” என்ற தந்தைக்கு பதில் அளிக்க முடியாமல் மேல் மூச்சு வாங்க நின்றான்.

 

 

“நம்ம வயக்காடு தீ புடிச்சு எரியுறதா சேதி வந்திருக்கு.” என்றிட, இருவரும் அதிர்ந்தார்கள்.

 

“என்னாடா சொல்லுற?”

 

“ஆமாப்பா உங்க கிட்ட தகவல் சொல்ல என்னை அனுப்பிட்டு சிலம்பன் அண்ணன் வாயக்காடு பக்கம் இப்பதா ஓடுச்சு.” என்றதும் பம்பை உடுக்கைகளை அம்மன் சன்னதியில் அப்படியே அனாதையாக விட்ட இருவரும் ஓடினார்கள்.

 

அவர்கள் போவதற்குள் சிலம்பன் தன்னால் முடிந்த வரை தீயை அணைத்து இருந்தான். வயலில் கீரைகள் விதைத்திருக்க எங்கிருந்து இந்த தீ வந்தது என்று தெரியாமல் சண்முகத்தின் குடும்பம் தடுமாறியது.

 

 

 

ஆண்டாள் சேர்த்து வைத்த மஞ்சளை தீவிரமாக பூஜையறையில் வைத்து பூஜித்துக் கொண்டிருக்க, தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஆறுமுகம் இங்கு வந்து விட்டார். இருவரின் நிலமும் பக்கத்து பக்கத்தில். அவரைக் கண்டதும் அங்கிருந்த நால்வரும் எரிந்திருந்த தீயை விட அதிகமாக எரிந்தார்கள். 

 

 

உண்மையில் தானாக தீப்பற்றி எரிய, இவர் காரணம் இல்லை என்பதை அறியாத சண்முகம் அவரை தாக்க, உடனே பதில் தாக்குதல் கொடுத்தார் ஆறுமுகம். வயக்காட்டிற்கு தீ வைத்ததும் இல்லாமல் தந்தையையும் அடிக்கும் மதுரவீரன் தந்தையின் செயலில் தன்னை மறந்த மச்சக்காளையன் பெரியவர் என்றும் பார்க்காமல் அடிக்க பாய்ந்தான்.

 

 

அவனின் அடியில் இருந்து தப்பித்த பெரியவர் கால் சிக்கி நிலத்தில் விழுந்தார். அவரை துரத்தி வந்தவன் சட்டையைப் பிடித்து அடிக்கும் நேரம் தாடை நரம்பில் ஓங்கி ஒரு உதை கொடுத்தான் மதுரவீரன். தந்தைக்குப் பின்னால் இவன் வருவான் என்பதை அறியாது எதிரணியினர் தாக்குதல் நடத்த, தந்தையை காத்தான் மதுரவீரன்.

 

வழக்கம்போல் சண்டைக்கு காரணமான பெரியவர்கள் ஒரு கட்டத்தில் ஒதுங்கிவிட்டனர். மச்சக்காளையன் வயக்காடு கீரையும், மதுரவீரன் வயக்காடு நெல் பயிர்களும் நாசமானது இவர்கள் உருண்டு புரண்டு சண்டை போட்டதில்.

 

***

அவரவர் வீட்டில் இருந்து மஞ்சள் பிடி வந்துவிட்டது கோவிலுக்கு. கோவில் பூசாரி, “அங்காளி பங்காளி எல்லாரும் வந்துட்டீங்களா. அம்மன் முன்னாடி மஞ்ச பிடிய வைங்க.” என்றிட, அனைவரும் வரிசை கட்டி நின்றார்கள்.

 

“என்னாம்மா நீ மட்டும் வந்திருக்க, எங்க சாமி?”

 

“அதை ஏன் கேக்குறீங்க மதினி கோவிலுக்கு கூப்டா அந்த பேச்சு பேசிகிட்டு திரியுது நா பெத்தது. என்னாமோ கலெக்டருக்கு படிச்சு பாஸாக போற மாதிரி பரீட்சை இருக்குது நா வரலன்னு ஒரே அடம்.”

 

“புள்ள படிக்கத்தான செய்யுது ராசாத்தி அதுக்கு எதுக்கு இப்டி ஏசுரவே.”

 

“இந்த வயசுல இந்த படிப்பு ரொம்ப அதிகமா இருக்கே மதினி.”

 

“நல்லா படிக்குதுனு சந்தோசப்படு ராசாத்தி.” 

 

“அய்த்தையும் இத தான் சொல்லிக்கிட்டு இருக்காய்ங்க.”

 

“அவுங்க எப்டிம்மா இருக்காங்க கால் வலி’னு கேள்விப்பட்ட.”

 

“போன வாரம் வாசப்படில கால் மடக்கி விழுந்துட்டாய்ங்க. இப்ப பரவால்ல மதினி நல்லா எழுந்து நடக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க.”

 

“வயசானவங்க ராசாத்தி பாத்து பக்குவமா இருக்க சொல்லு.” என்றவருக்கு சம்மதமாக தலையசைத்தவர்,

 

“என்னா மதினி அண்ணன காணோம்?” கோவிலில் இருக்கும் ஆண்டாளிடம் ராசாத்தி விசாரிக்க,

 

“தெரியல ராசாத்தி வயக்காடு வரைக்கும் தண்ணி காட்டிட்டு வரேன்னு போன மனுசன இன்னும் காணும்.” என்றார். 

 

 

“ஒரு போன போட்டு கேக்குறது தான மதினி”

 

“அதெல்லாம் நாலஞ்சு மொற போட்டாச்சு. பதில் சொல்ல உங்க அண்ணனுக்கு நேரமில்ல போல.”

 

“சரி வுடுங்க மதினி போன எங்கயாது வெச்சிட்டு வேல பாத்துட்டு இருக்கும்”

 

“அப்டிதா நெனைக்குற ராசாத்தி.” என இருவரும் பேசிக் கொண்டிருக்க, “மருமகனுமா போயிருக்கு” கேட்டார் முருகேசன்.

 

“ஆமா தம்பி, பெரியவனும் கூட போயிருக்கான். அவனும் போன் அடிச்சா எடுக்க மாட்டேங்குறா.” என்றதும் ராசாத்திக்கு சந்தேகம் எழுந்தது.

 

மதினியிடம் காட்டிக் கொள்ளாமல் பேச்சை நிறுத்தி விட, “என்னாம்மா மொகம் ஒரு மாதிரி இருக்கு” மனைவியின் முக மாறுதல்களை அறிந்து கேட்டார்.

 

“இல்லங்க நா அண்ண வூட்டுக்கு போயிருந்த. சின்னவன் அண்ண கோவில்ல இருக்குறதா சொன்னா, இங்க அவர காணல. அம்மனுக்கு மஞ்சள் சாத்துற நேரம் பம்ப உடுக்க அடிக்க இங்கு தான இருக்கணும்.” என சந்தேகத்தில் பேச்சை நிறுத்த,

 

“பம்ப உடுக்க கட்ட போயிருப்பாங்கமா.” என்றார் முருகேசன்.

 

“இல்லங்க… பம்ப உடுக்க கட்டுறதா இருந்தா ஒன்னு வூட்லயா இருக்கும் இல்லியா குலதெய்வ கோவிலுக்கு பின்னாடி இருக்கும். ரெண்டு எடத்துலயும் அவரு இல்ல. அதே மாதிரி பெரிய அண்ணனும் மதினி கூட கோவிலுக்கு வரல. எனக்கு என்னாமோ அவுங்க ரெண்டு பேரும் எங்கயோ அடிச்சுக்கிட்டு இருக்காய்ங்கன்னு தோணுது.”

 

 

மனைவி வார்த்தையில் சிறு சந்தேகம் எழுந்தது முருகேசன். மனதில் தோன்றியதை சொல்லி மனைவியை வருத்தம் அடையச் செய்ய விரும்பாதவர், “நீயா எதயாது கற்பனை பண்ணிக்காதம்மா. அந்த மாதிரி எல்லாம் ஒன்னு இருக்காது” என்று தைரியப்படுத்தினார்.

 

 

உள் உணர்வு என்னவோ சொல்லியது ராசாத்திக்கு. ஊர் மக்கள் அனைவரும் அம்மனை பயபக்தியோடு தரிசித்துக் கொண்டிருக்க, இவரின் சிந்தனை எங்கோ இருந்தது.

 

“சண்முகத்த எங்கப்பா ஆளையே காணோம்? பம்ப உடுக்க அடிக்குற நேரம் வந்துடுச்சு. எங்க இருந்தாலும் வெரசா கூட்டிட்டு வாங்க.” என குரல் கொடுக்க, ராசாத்தியின் பதட்டம் அதிகமானது.

 

 

“என்னங்க, வாங்க வூடு வரைக்கும் போய் பாத்துட்டு வரலாம்.” 

 

“பம்ப அடிக்குற நேரம் வூட்டுக்கு போக மாட்டாய்ங்க. நீயி பதட்டப்படாம கொஞ்ச நேரம் பொறுமையா இரு.”

 

கட்டியவரின் வார்த்தைக்கு மதிப்பளித்து சிறிது நேரம் அமைதியாக இருந்தார் ராசாத்தி. கோவில் முழுவதும் தேடியும் அண்ணன் கிடைக்கவில்லை என்ற செய்தியில் அடக்கி வைத்திருந்த பயம் வெளிவந்து விட, 

 

“நா ஒரு எட்டு போயி பாத்துட்டு வந்துடுற.” என அங்கிருந்து கிளம்பினார்.

 

 

எவ்வளவு சொல்லியும் கேட்காத ராசாத்தி சண்முகம் வீட்டிற்கு சென்றார். அங்கு அவர் இல்லாமல் போக, பெரிய அண்ணன் வயக்காடு பக்கம் இருப்பதாக மதினி சொன்னது மனதில் ஓடியது. கணவனை அழைத்துக் கொண்டு ஓடினார் மூவருக்கும் சொந்தமான வயக்காட்டிற்கு.

 

 

ராசாத்தியின் பங்கையும் சேர்த்து சண்முகம் பார்த்துக்கொள்ள, ஆறுமுகத்தின் இடத்தை மட்டும் அவர் பார்த்துக் கொண்டார். மூவருக்கும் தந்தை முனுசாமி சரிசமமாக எழுதி வைத்த இடம் அது. ராசாத்தி அங்கு வந்து சேர்வதற்குள் எல்லாம் மாறி இருந்தது. ஆள் ஆளுக்கு காயங்களுடன் அடிதடியை தொடர்ந்து கொண்டிருக்க, நேரில் பார்த்தவர் திகைத்து தடுக்கு முயன்றார்.

 

 

 

தங்கையை பார்த்ததும் பெரியவர்கள் சண்டையை நிறுத்த, இளையவர்கள் யாருக்கும் அடங்குவதாக இல்லை. நிலத்தில் உருண்டு புரண்டனர். சரிசமமாக ஒருவர் மாற்றி ஒருவர் தாக்கிக் கொள்ள தங்கைக்காக மகன்களை தடுத்தார்கள்.

 

 

 

மச்சக்காளையன் உதட்டில் இருந்து ரத்தக்கசிவு வருவதைக் கூட அவன் உணரவில்லை. மதுரவீரன் காதிற்கு பின்னால் பணியாரம் போல் வீங்கி இருந்தது பின் மண்டை. மருமகன்கள் உடல் சேதாரத்தையும் மறந்து தாக்கிக் கொள்வதில் மனம் உடைந்த ராசாத்தி தானே தடுக்க சென்றார்.

 

அத்தை வந்ததும் தானாக சண்டையை விட்டார்கள். 

“நீங்க ரெண்டு பேரும் மனுசங்களா இல்ல மிருகங்களா? மிருகம் கூட இந்த அளவுக்கு எந்நேரமும் பகையோட சுத்தாது.” அத்தையின் கோபத்தில் மருமகன்கள் இருவரும் முறைப்பதை கூட நிறுத்தி விட்டார்கள்.

 

 

“தெனம் இப்டி சண்ட போட்டு என்னாத்த சாதிச்சீங்க. சாவு என்னிக்கு ஆரு கிட்ட வரும்னு தெரியாது. வாழுற வரைக்கும் ஒத்துமையா இருந்து தொலைஞ்சாதா என்னா கேடு வந்துருது. ஒத்துமையா கூட இருக்க வேணா இந்த மாதிரி காரி துப்பிக்காம இருக்கலாம்ல.” 

 

 

“அய்த்த இன்னிக்கு எங்க மேல தப்பு கெடையாது. இவனும் இவன் அப்பனும் சேர்ந்து வயக்காட்டுல தீ வெச்சுட்டாய்ங்க.” என்றவன் சட்டையை பிடித்த மதுரவீரன் ஒரு தாக்குதலை நடத்திவிட்டு பதில் சொன்னான், “உன்ன மாதிரி ஈனப்பிறவி இல்லிடா நானும் எங்க அப்பாவும்” என்று.

 

 

தன்னை அடித்தவனை உடனே தாக்கிய மச்சக்காளையன், “மண்ணு மேல உங்க கோபத்தை காட்டுறீங்களே… ஈனப்பிறவிக்கும் மேலடா நீங்க. எப்போ இவ்ளோ தூரம் செய்ய துணிஞ்சிங்களோ இனிமே உங்கள உயிரோட வுட்டு வெக்குற எண்ணம் எனக்கு இல்லிடா.” என்றான்.

 

 

 

 

“என்னாடா பண்ணிடுவ…” என்ற மதுரவீரன் கலைந்த சட்டையை சரி செய்து கொண்டு அவனிடம் நெஞ்சை நிமிர்த்த, “இந்த திருவிழா முடியிறதுக்குள்ள உன்னயோ இல்ல உன் அப்பனையோ இந்த நெலத்துல ரத்தம் சொட்ட விழ வெக்கல நா மச்சக்காளையன் இல்லிடா.” என்றான்.

 

 

 

“அதே திருவிழா முடியிறதுக்குள்ள நீயி சொன்ன வார்த்தைய உனக்கே செஞ்சு காட்டல நா மதுரவீரன் இல்லிடா.” என இருவரும் வார்த்தை பலிக்கும் என்பதை அறியாது சவால் விட்டுக் கொண்டனர்.

 

 

 

“ராசாங்களா இந்த மாதிரி பேச்சு வேணாம்ய்யா. வாழுற வாழ்க்கைய தொலைச்சிட்டு நிக்காதீங்க.” என்ற அத்தைக்கு மதிப்பளிக்காது இருவரும் தன் எண்ணங்களில் அப்படியே இருக்க, அறிவுரை சொல்லியே ஓய்ந்து போனார்.

 

 

இரு குடும்பத்திற்கும் நடுவில் சிக்கி சிதையும் மனைவியின் நிலை கண்டு வருந்திய முருகேசன் இரு குடும்பத்தையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். 

 

 

எரிந்த நிலமும் செழித்த நிலமும் இரு பக்கம் இருக்க, நடுவில் அமர்ந்து வருந்தினார் ராசாத்தி. 

 

“நீயி நெனைக்குற மாதிரி ஒன்னு ஆவாது ராசாத்தி.”

 

 

 

“எனக்கு என்னாமோ உள்ளுணர்வு ஏதோ ஆவப் போறதா சொல்லிக்கிட்டே இருக்குங்க. இந்த திருவிழா முடியுற வரைக்கும் நீங்க எப்பவும் எங்க அண்ணங்க கூடவே இருங்க. உங்களுக்கு மருவாதி குடுத்தாது சண்ட போடாம இருக்காய்ங்களான்னு பாப்போம்.” என தானே தன் கணவன் உயிரை பறிக்கிறோம் என்பதை அறியாமல் துணைக்கு அனுப்பி வைத்தார்.

 

 

 

 

சீமை 48

 

 

மூன்றாம் நாள் திருவிழா இன்று. மதுரவீரன் சாமிக்கு படையலிடும் திருநாள். ஊரில் இருக்கும் வயது பெண்கள் ஒருவர் விடாமல் அனைவரும் பொங்கல் வைக்கும் இடத்தில் கூடியிருந்தார்கள். திருமணமாக வேண்டும் என்ற வேண்டுதலில் யார் பொங்கல் வைத்தாலும் அடுத்த ஆண்டுக்குள் திருமணம் நடந்து விடும் என்பது இங்கு இருப்பவர்களின் நம்பிக்கை. 

 

 

 

ஒளிர்பிறையின் வீட்டில் தயாராகிக் கொண்டிருந்தது பொங்கல் பானை. சின்னவள் தேன்மொழி தோழிகளோடு பள்ளி பற்றி பேசிக் கொண்டிருக்க, தாவணி பாவாடை அணிந்திருக்கும் அழகை கண்ணாடியில் ரசித்துக்கொண்டிருந்தாள் ஒளிர்பிறை. மகளின் ரசிப்பை இன்னும் அதிகமாக்க அவளின் அம்மா,

 

 

“இந்தாடி இந்த பூவ வெச்சுக்க.” என கை நிறைய கனகாம்பரம் பூவை கொடுத்தார்.

 

 

அதில் பாதியை வெட்டி தனக்கு வைத்துக் கொண்டு கண்ணாடியில் ரசிக்க, “இத ஏண்டி வெச்சிட்ட? இதியும் வெச்சுக்க.” என்றிட,

 

 

“மந்தி பொங்கல் வெக்குறதுக்கு வரனு சொன்னா அம்மா. அவளுக்காக இந்த பூவ வெச்சிருக்க.” தோழி வரும் விஷயத்தை பகிர்ந்தாள்.

 

 

சாமந்தியை நன்கு தெரியும் அவள் குடும்பத்திற்கு. தன் பெண் போல் நினைக்கும் பெண் வரும் செய்தியை கேட்டு, “அவளையும் ஒரு பொங்கல் வெக்க சொல்லிடுவோம். நா பொங்க பானைய தயார்படுத்துற.” என்று நகர்ந்தார்.

 

 

அவர் சென்ற சிறிது நேரத்தில் சாமந்தி அறைக்குள் வர, “என்னாடி மினுக்கி இன்னிக்கு மொகத்துல வண்ணம் கொஞ்சம் அதிகமா இருக்கு.” தான் வந்தது கூட அறியாமல் கண்ணாடியில் மூழ்கி இருக்கும் தோழியை கேலி செய்தாள்.

 

 

தோழியின் கேலிக்கு பதில் கொடுக்காதவள் கண்ணாடியில் தன்னைத்தானே பார்த்து சிரித்துக் கொள்ள, “மதுரவீர மயங்கிடுவான்னு நெனைப்போ…” என்ற வார்த்தையில் சடார் என திரும்பி நின்றாள் ஒளிர்பிறை.

 

 

தோழியின் அதிர்வில் கம்பீரமாக அவள் எழுந்து நிற்க, திகைப்பு மாறாமல் அப்படியே நின்று இருந்தாள் மதுரவீரனின் மனைவி. 

 

 

“என் கூடவே சுத்திக்கிட்டு இப்டி ஒரு களவாணித்தனத்த எனக்கே தெரியாம பண்ணிக்கிட்டு இருக்கியே நீயி எவ்ளோ பெரிய களவாணியா இருப்ப.” 

 

 

பதில் சொல்ல காரணம் இருந்தாலும் வாய் திறக்க மறுக்க, “எப்டி… எப்டி அவன கண்டாலே உனக்கு பிடிக்காதாம்… கோபம் கோபமா வேற வருமாம்… அப்டியே செங்கல எடுத்து மண்டைய ஒடைக்கனும் போல தோணுமாம்.” என இழுத்து பேசிய சாமந்தி தோழியின் அருகில் நின்றாள்.

 

 

அவஸ்தையான முகபாவனையோடு அவள் தோழியை நோக்க, “இத்தினி நாளா புடிக்காதவன எதுக்கு இவ எப்ப பாரு பேசுறான்னு சந்தேகம் வந்துச்சு. இப்பதா தெரியுது புடிச்சவன புடிக்காத மாதிரி காட்டிக்கத்தா பேசி இருக்கான்னு.” என்று தோழி நாடகத்தை முடிவுக்கு கொண்டு வந்தாள் சாமந்தி.

 

 

“மந்தி…” என்றதற்கு மேல் ஒளிர்பிறையால் பேச முடியாமல் போக, “நா ஒரு சண்டியன காதலிக்குறது தப்பு. ஆனா, நீயி காதலிக்கலாமா?” நறுக்கென்று கேள்வி கேட்டாள்.

 

 

“தம்பிய என் முந்தானைல முடிஞ்சிக்க வழிய காட்ட சொன்னா நீயி அண்ணன முந்தானைல முடிஞ்சு கட்டிகிட்ட சிறுக்கி…” கன்னத்தில் இடிக்கும் தோழியை முறைத்தாள் ஒளிர்பிறை.

 

 

மாட்டிக்கொண்ட பயமில்லாமல் முறைக்கும் தோழியை தெனாவட்டாக பார்த்தவள், “என்னாடி சிலுப்பிக்கிட்டு பாக்குற. இதெல்லாம் உண்மை இல்லினு என் முன்னாடி நெஞ்ச நிமித்தி சொல்லுடி பாப்போம்.” என்று இடுப்பில் கை வைத்துக் கொண்டு நின்றாள்.

 

 

இதற்கு மேல் சென்றால் இன்னும் நிலைமை மோசமாகும் என்பதால் தன் நிலையை மாற்றிக் கொண்ட ஒளிர்பிறை, “நா ஒன்னு அவன காதலிக்கல.” என காலம் தாழ்த்தி சமாளித்தாள்.

 

 

“த்தூ… அண்ட புளுகி ஆகாச புளுகி. அதான் அன்னிக்கு பாத்தனே மதுரைவீரன் சாமிய பாக்குற மாதிரி உன் காதலன் மதுரவீரன “ஆ” னு அண்ட சராசரமும் வாய்க்குள்ள போறது தெரியாம பாத்தத.”

 

 

“இந்தாடி நா சத்தியமா சாமியத்தா பாத்த”

 

 

“அப்படியா!” என வக்கனை செய்த சாமந்தி, “அப்புறம் என்னாத்துக்குடி ஆருக்கும் தெரியாம கீழ விழுந்தத ஒளிச்சு வெச்ச.” போட்டு உடைத்தாள் தோழியின் ரகசியத்தை.

 

 

“சாமி சலங்கடி” என்ற தோழியை முறைத்தவள், “இந்தா பிற உன்கிட்ட நா எதியும் மறைச்சது இல்ல. நீயும் இத்தினி நாளு என்கிட்ட அப்டித்தா இருக்கன்னு நம்பிகிட்டு இருந்த. அந்த நம்பிக்கைய பொய்யாக்கினது கூட எனக்கு வருத்தம் இல்ல. ஆனா, இப்பவும் அதே நெனைப்போட என்கிட்ட பேசுற பாரு அது தான் வருத்தமா இருக்கு.” என்றாள்.

 

 

விளையாட்டு பேச்சு விளையாட்டாக இல்லை என்பதை உணர்ந்து, “உன்ன ஏமாத்தணுனு நா என்னிக்கும் நெனச்சது இல்ல மந்தி. அவன எனக்கு சத்தியமா புடிக்காதுனுதா ஒவ்வொரு தடவயும் சொல்ல தோணுது. ஆனா, மனசு ஆரும் இல்லாத அப்போ நெனைக்குதுடி. இது காதலா என்னான்னு புரியாம என்னான்னு உன்கிட்ட சொல்றது. அதுவும் இல்லாம அவன் எப்ப பாரு சண்ட போட்டுக்கிட்டு திரியுறான். சண்டியா தனம் பண்றவன கட்டி வாழ்க்கை போயிடுமோனு ஒரு‌ பக்கம் பயமாவும் இருக்கு.” மனதில் இருக்கும் இரு வேறு எண்ணங்களை வெளிப்படையாக கூறினாள்.

 

 

“காதலிக்காமையா கண்ணாலம் வரைக்கும் உன் நெனைப்பு போவுது.” என்றதும் தலை குனிந்து கொண்டாள்.

 

 

ஒளிர்பிறையின் முகத்தை நிமிர்த்திய சாமந்தி, “நீயி அவன காதலிக்கிற பிற. ஆனா, அவன் நடவடிக்கை புடிக்காம உன்ன நீயே சமாதானம் பண்ணிக்குற புடிக்காத மாதிரி. உண்மையாவே உன் மனசு அவன் தான் வேணுனு நெனைச்சா உன் காதலால மாத்த பாரு. அந்த ஒரு நம்பிக்கையில தான மச்சக்காளையன் பின்னாடி நா சுத்திகிட்டு கெடக்க.” என்றிட,

 

 

“உன்ன மாதிரி தைரியமா முடிவெடுக்க முடியல மந்தி என்னால. மதுரவீரனை சின்ன வயசுல இருந்து பாத்துகிட்டு இருக்க. அய்த்த மகன்னு பாசம் இருந்தாலும் வீண் கோபம் அத தொடர வுடாம தடுக்குது. எப்ப பாரு ஊரு வாயிக்கு அரிசி போடுற மாதிரி பஞ்சாயத்த இழுத்து வுடுறதை நெனைச்சாலே பயமா இருக்கு. என்னால அவன மாத்த முடியலன்னா என் வாழ்க்கை போவுறதும் இல்லாம நாளைக்கு எங்களுக்கு பொறக்கப் போற குழந்தைய்ங்க வாழ்க்கையும் போவும்.” என அவள் தீவிரமாக பேசிக் கொண்டிருக்க, தள்ளி நின்ற சாமந்தி மேலும் கீழுமாக பார்த்தாள்.

 

 

தோழியின் பார்வைக்கு அர்த்தம் தெரியாமல் தன்னைத்தானே குனிந்து பார்த்துக் கொண்ட ஒளிர்பிறை, “என்னாடி?” கேட்டிட,

 

“புளுகுக்கு பொறந்த புளுகுமுட்டை. அவன் வேணாமா ஆனா புள்ள பெத்துகுற வரைக்கும் பேசுவாளாம்.” என்றதில் சிரித்தாள் சத்தமிட்டு.

 

 

“மனசுல அவனோட வாழ ஆரம்பிச்சிட்ட பிற. உன் காதல் அவன மாத்தும்னு நம்பு. எல்லாம் நல்லபடியா நடந்தா உன் மனசும் சந்தோசமா இருக்கும் அவன் வாழ்க்கையும் நல்லபடியா மாறும்.” 

 

 

“ஆயிரம் சொன்னாலும் மனசு தடுமாறுதுடி. சின்ன புள்ளைல என் பின்னாடி அடிக்கடி சுத்தி வருவான். அய்த்த மகன்னு நானும் அத ரசிக்க ஆரம்பிச்ச. வளர்ந்ததுக்கு அப்புறம் என் பின்னாடி வரத நிறுத்துனதும் என்னாமோ மாதிரி ஆயிடுச்சு. முன்ன மாதிரி என்னை பாக்குறது இல்லன்ற கோபத்தை தான் புடிக்காத மாதிரி கட்டிக்கிட்டு இருக்க. இது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு அவனோட வாழ போறதை நெனச்சு பயமாவும் இருக்கு.” என்றவளுக்கு பதில் சொல்லும் நேரம்,

 

“அக்கா பொங்க பானை எடுத்து வெச்சாச்சாம் அம்மா உன்ன கூப்பிடுறாய்ங்க.” என்றாள் தேன்மொழி.

 

 

காதல் பேச்சுக்களை நிறுத்திய தோழிகள் இருவரும் பொங்கல் வைக்க திருவிழாவிற்கு புறப்பட்டார்கள். நேற்றைய நிகழ்வில் பம்பை உடுக்கை அடிக்காமல் சந்தன காப்பு நடைபெற்றிருக்க, இன்று என்ன நடந்தாலும் கோவிலை விட்டு நகரக்கூடாது என்ற முடிவில் மச்சக்காளையன் அங்கேயே அமர்ந்திருந்தான்.

 

 

 

நேற்று நடந்த சம்பவத்தில் சூடாக இருந்த மதுரவீரன் கோவிலில் நின்றிருந்தான் சமயம் கிடைக்க. இருவரின் உடன் பிறந்த பொடுசுகள் அங்கிருக்கும் பொம்மைகளையும், கலர் கண்ணாடிகளையும் ரசித்து கொண்டிருந்தார்கள். 

 

 

செந்தமிழன் பக்குவமான வயதில் அதையெல்லாம் ரசிக்காமல் உள்ளங்கையில் மண்ணை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான். பொங்கல் வைக்க வந்த ஒளிர்பிறையின் விழியில் இவன் விழ, 

 

“தமிழு” என குரல் கொடுத்தாள்.

 

 

 

ஆராய்ச்சியில் தீவிரமாக இருந்தவன் செவியில் இவை விழாமல் போக, அழைத்துப் பார்த்தவள் அருகில் வந்து நின்றாள். தலை உயர்த்திப் பார்த்தவன் மாமன் மகளை கண்டு சிரிக்க, “என்னா பண்ணிக்கிட்டு கெடக்க தமிழு கூப்பிடுறத கூட காதுல வாங்கிக்காம.” என்றவளுக்கு கையை உயர்த்தி காட்டினான்.

 

 

உள்ளங்கையில் மணலோடு புழு ஒன்று நெளிந்து கொண்டிருந்தது. பக்கத்தில் நின்றிருந்த சாமந்தி, “இத எதுக்கு கையில வெச்சிருக்கீங்க?” கேட்டிட,

 

 

“ஒரு சின்ன உயிரினம் எப்டி போவுதுனு பாருங்க. அதுக்கும் கடவுள் ரெண்டு கண்ணு, ஊர்ந்து போக உடம்புன்னு எவ்ளோ அற்புதமான படைப்ப படைச்சிருக்கான்.” என்றவனை புரியாமல் பார்த்தாள்.

 

“இதுல என்னா அதிசயம் இருக்கு” என்ற வருங்கால அண்ணன் மனைவிக்கு,

 

“இதோட பார்வைக்கு நம்ம எல்லாம் எப்டி தெரிவோம்னு யோசிச்சு பாருங்க… அது மட்டும் இல்ல இத எத்தினி பேரு மிதிச்சிருப்பாய்ங்க. நம்மளோட கணத்த தாங்குற அளவுக்கு இந்த சின்ன உயிரினம் இருக்குறது அதிசயம் தான.” என்றதும் தோழிகள் இருவரும் பார்த்துக் கொண்டார்கள்.

 

 

“நா விவசாயம் சார்ந்த படிப்ப எடுக்க போற. படிச்சு முடிச்சதும் பாருங்க இத ஒருநாள் ஆராய்ச்சி பண்ணி விளக்கமா சொல்லுற.” என்றவன் புன்னகையில் தோழிகள் இருவரும் சிரித்தார்கள்.

 

***

 

 

“எடேய்! இது நாங்க வாங்க போற பொம்மை.” 

 

“நாங்க தான முதல்ல வந்தது”

 

“பொய் சொல்லாதீங்கடா நீங்க எங்களுக்கு பின்னாடி தான வந்தீங்க.”

 

“நாங்க எப்ப வந்தோம்னு எங்களுக்கு தெரியுமா இல்ல உங்களுக்கு தெரியுமாடா.” இந்த பஞ்சாயத்தை நடத்திக் கொண்டிருப்பது நம் ஐவர் படைத்தான்.

 

 

ஐவர் படையில் கவிநேயன் மட்டும் இல்லை இன்று. நால்வரை விட வயதில் சின்னவன் தாயோடு ஒட்டிக்கொள்ள, வருங்காலத்தில் முட்டிக் கொள்வதற்கு முதல் பிள்ளையார் சுழி போட்டார்கள் நால்வரும்.

 

 

கடைக்காரர் இருக்கும் ஒரு பொம்மையை யாருக்கு தருவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க, “என்னாய்ங்கடா நாலு பேரும் பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு இருக்கீங்க.” முதல் கொழுந்தனிடம் உரையாடி விட்டு வந்த ஒளிர்பிறை அடுத்தடுத்து வரவிருக்கும் கொழுந்தன்களிடம் பேசினாள்.

 

 

“நாங்கதா முதல்ல வந்தோம். ஆனா இவுனுங்க வந்ததா சொல்லி சண்ட புடிக்கிறாய்ங்க.” என்ற மொழியனின் வாயை பொத்திய சிலம்பன், 

 

“எடேய் தம்பி, அவுங்க நம்ம எதிர் வூட்டு ஆளுங்களோட சொந்தக்காரங்க. இவுங்க கிட்ட பேசுறத அண்ண பாத்தா அவ்ளோதா.” என்று தம்பியை அங்கிருந்து அழைத்துச் சென்று விட்டான்.

 

 

செல்லும் சிலம்பனை பிடித்த சாமந்தி, “நில்லுடா, உன் கிட்ட தானடா கேக்குறாய்ங்க நீயி பாட்டுக்கு மதிக்காம போற.” என்று கேட்க,

 

“உங்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது வுடுங்க.” என கையை உதறிவிட்டு சென்றான்.

 

 

“போங்கடா உங்க வூட்டுக்குதா வாழ வரப்போற. வந்து தட்டி வுட்ட கைய ஒடைக்கிற.” என்றவள் செல்லும் கொழுந்தன்களை முறைத்தாள்.

 

 

(இன்னும் இரண்டு பதிவுகள் கடந்த கால நிகழ்வுகள் முடிந்து விடும். 

நன்றிகள் ❤️)

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்