Loading

நிறம் 15

 

ஸ்வரூபனும் அகிலும் அந்த குடவுனிற்குள் நுழைய, அவர்களின் பின்னிலிருந்து, “என்ன நடக்குது இங்க?” என்று ஷ்யாமின் குரல் கேட்டது.

 

ஷ்யாமின் குரலில் சற்று அதிர்ந்த அகில் ஸ்வரூபனை பார்க்க, அவனோ எந்தவித பதற்றமும் இல்லாமல் இருந்தான்.

 

‘ஹ்ம்ம், எல்லாத்தையும் பண்ணிட்டு இவன் கூலா தான் இருப்பான். என்னை தான் எல்லா இடங்களைலயும் கோர்த்து விட்டுடுவான். ஐயோ, இந்த போலீஸ் வேற ஏன் போன் பண்ணலன்னு கேள்வியா கேட்டு கொள்வானே!’ என்று அலுத்துக் கொண்டே பின்னே திரும்பிப் பார்க்க, ஷ்யாமோ இருவரையும் முறைத்துக் கொண்டிருந்தான்.

 

அகில் சமாளிக்கும் விதமாக ஏதோ சொல்ல முயலும்போதே, “எனக்கு போனதும் போன் பண்ண சொன்னேன்ல. ஏன் போன் பண்ணல? அப்படி என்ன முக்கியமான வேலையை பார்த்துட்டு இருந்தீங்க?” என்று சரியாக அகில் நினைத்ததைப் போலவே வினவ, என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தான் அகில்.

 

“அது வீட்ல பிரச்சனை…” என்று வாய்க்கு வந்ததை உளறினான் அகில்.

 

அடுத்து ஸ்வரூபனின் புறம் திரும்பியவன், “போன்ல சரியா கூட பேச முடியாம அப்படி என்ன வேலை உனக்கு? நீயா வந்த, அந்த பொண்ணைக் கடத்திட்டு போன. நானும் உனக்காக அங்க எல்லாரையும் சமாளிச்சுட்டு, உன் சேஃப்டிக்காக போன் பண்ணா, நீ சரியா கூட பேச மாட்டிங்குற.” என்றான் ஷ்யாம் கோபமாக.

 

அப்போது வரையில் எதைக் கூறி தப்பிக்கலாம் என்று யோசித்த அகில், ஷ்யாமின் கவனம் ஸ்வரூபனிடம் சென்றதால், சற்று இலகுவாகி, “அப்படி கேளு டா. எப்போ பார்த்தாலும் என்னையே எல்லாருகிட்டையும் சிக்க வச்சு குளிர் காயுறான்.” என்று போட்டுக் கொடுத்தான் அகில்.

 

“ஹலோ சார், நீங்க இன்னும் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லல.” என்று அகிலைப் பார்த்து ஷ்யாம் கூற, ‘இவன் விட மாட்டானோ?’ என்றான் மனதிற்குள்…

 

“ப்ச், இப்போ வந்ததும் எதுக்கு எங்களை அக்யூஸ்ட் மாதிரி விசாரிக்கிற? நீ போலீஸ் தான் ஒத்துக்குறேன். அதுக்குன்னு இவ்ளோ போலீஸா இருக்க கூடாது டா.” என்றவாறே அவனை லேசாக அணைத்துக் கொண்டான் ஸ்வரூபன்.

 

ஸ்வரூபன் பேசியதைக் கேட்டு, “அதே டையலாக்.” என்று முணுமுணுத்தான் அகில்.

 

“ப்ச் ரூபா, நான் எவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கேன். இப்போ தான் காமெடி பண்ண மூட் வருதோ உனக்கு?” என்று அலுத்துக்கொண்டான் ஷ்யாம்.

 

“ஹ்ம்ம், எல்லாம் பழக்கதோஷம் டா ஷ்யாமா.” என்று வர்ஷினியை நினைத்து கூறினான் அகில்.

 

ஸ்வரூபனோ எதுவும் கூறாமல் அமைதியாக இருப்பதைக் கண்ட மற்ற இருவரும் கண்களாலேயே பேசிக் கொண்டனர்.

 

அவர்களின் மோன நிலை கலைவதற்குள், அவர்களின் நட்பைப் பற்றிய அறிமுகத்தை காணலாம்.

 

ஸ்வரூபன், ஷ்யாம், அகில் மூவரும் சிறு வயதிலிருந்தே இணைபிரியாத நண்பர்கள். அவர்களின் நட்பிற்கு பல தடங்கல்கள் வந்தாலும், அவற்றை எல்லாம் தாண்டி இன்னமும் அவர்களின் நட்பு தொடர்கிறது.

 

பள்ளிப்படிப்பை ஒன்றாக முடித்தவர்கள், கல்லூரி செல்லும்போது அவர்களுக்குள் முதல் பிரிவு உண்டானது. ஸ்வரூபன், தன் அன்னைக்காக அதே ஊரில் தங்கி படிக்க முடிவு செய்ய, அவனின் மனதை மாற்ற எவ்வளவோ முயற்சி செய்தும் முடியாததால், மற்ற இருவர் மட்டும் சென்னையில் தங்களின் கல்லூரி படிப்பை முடித்தனர்.

 

ஸ்வரூபன், தன் இளநிலை மற்றும் முதுநிலை கல்லூரி படிப்பு முடிந்ததும் பக்கத்து ஊரிலுள்ள கல்லூரியில் வேலைக்கு சேர்ந்து விட்டான்.  இதுவும் அவன் அன்னைக்காக தான். மேலும், அவ்வீட்டின் முதல் வாரிசு என்பதால் அவர்களுக்கு சொந்தமான விளைநிலங்களள்ளையும் தொழிற்சாலைகளையும் பார்த்துக் கொள்ள இந்த பணியே வசதியாக இருந்தது.

 

அகிலின் தந்தை கதிரேசன், அகிலிடம் பல முறை மருத்துவ துறையை தேர்ந்தெடுக்க சொல்ல, அவனோ அதை மறுத்துவிட்டு, தன் நண்பன் ஷ்யாமை போல காவல்துறையை தேர்ந்தெடுத்தான். அதனால் இன்றளவும், தந்தைக்கும் மகனிற்கும் அவ்வப்போது உரசல்கள் ஏற்படுவதுண்டு.

 

ஷ்யாம், தன் வாழ்க்கையின் ஒரே இலட்சியமாக கருதிய காவல்துறை பணிக்காக சிறு வயதிலிருந்தே கடினமாக உழைத்தான். நண்பர்கள் மூவரில், சிறு வயது கனவை நிறைவேற்றிக் கொண்டவன் இவன் ஒருவனே. ஷ்யாமின் திறமையும் கடின உழைப்பும் தான் அவனின் இந்த வளர்ச்சிக்கு காரணமாக இருந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.

 

என்ன தான் ஒரே துறையில் இருந்தாலும், ஷ்யாமும் அகிலும் நண்பர்கள் என்பது காவல்துறையில் இருக்கும் யாருக்கும் தெரியாது. அவர்கள் பயிற்சி முடிந்ததும், வெவ்வேறு இடங்களில் நியமன ஆணை கிடைத்திருந்ததாலும் அவர்களின் அடையாளத்தை சுலபமாகவே மறைத்து வைக்க முடிந்தது.

 

இவ்வாறு ஸ்வரூபன் அவனின் ஊரிலும், ஷ்யாம் மற்றும் அகில் அவர்களுக்கு நியமிக்கப்பட்ட ஊரிலும் இருந்தாலும், தொலைதூர உறவுகளை இணைக்கும் வழிகளின் மூலம், அன்றாடம் தங்கள் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

 

அப்படி பகிரப்பட்ட தகவல் தான், விக்ரம் சிங்கை கைது செய்ய வேண்டி மேலிடத்திலிருந்து வந்த உத்தரவு!

 

ஷ்யாம், அந்த விக்ரம் சிங்கின் ஆட்கள் மீது வழக்கு பதிவு செய்யும் போதெல்லாம் அவர்களின் மீது எவ்வித வழக்குப்பதிவும் இருக்கக்கூடாது என்று மேலிடம் உத்தரவு தர, கைதிகளுக்கு பதிலாக தன் கைகள் பிணைக்கப்பட்டிருப்பதை எண்ணி கோபம் கொள்வான். ஆனால், தற்போது விக்ரம் சிங்கையே கைது செய்ய மேலிடம் தீவிரம் காட்டுவதை நண்பர்களிடம் பகிர்ந்தான்.

 

ஒரு காலத்தில் சுடர்விடும் தீபமாக ஒளி வழங்கிய தன் குடும்பம், ஒளியிழந்து இருப்பதற்கு காரணமானவனின் பெயரைக் கேட்டதும் எப்போதும் போலவே எரிச்சல் உண்டானது ஸ்வரூபனிற்கு. இத்தனை நாட்கள், அவன் எதுவும் செய்ய முடியாதவாறு, அகிலா அவர்தம் அன்பினால் அவனைக் கட்டிப்போட, அவனும் தாய்க்காக அடங்கியிருந்தான்.

 

இப்போது ஷ்யாம் கூறிய செய்தி மூலம், தன் பழியுணர்வை தீர்த்துக் கொள்ள நல்ல வாய்ப்பு கிடைக்க, அதை தவறவிட விரும்பவில்லை. ஷ்யாமும், தன் பல வருட பகையை தீர்த்துக் கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்த நினைத்தான். இருவருக்கும் பொதுவான நண்பனாகிப் போனதால், அகிலும் இக்குழுவில் இணைந்தான்.

 

இவ்வாறு, காவல்துறையினர் ஒரு பக்கம் அந்த விக்ரம் சிங்கிற்கு ‘ஸ்கெட்ச்’ போட, மறுபுறம் அதை முறியடித்து தங்களின் திட்டத்தை செயல்படுத்த துவங்கினர் நண்பர்கள்.

 

*****

 

“எவ்ளோ நேரம் டா இப்படியே இருப்பீங்க? ஸ்வரூபா ட்ரீம்ஸ் விட்டு வெளியே வா.” என்று அகில் கூற, வழக்கம் போல அவனின் முதுகில் அடித்து அவனை அமைதிபடுத்தினான்.

 

“இங்க என்ன டா பண்ணி வச்சுருக்கீங்க?” என்று ஷ்யாம் அங்கு சுருண்டு விழுந்திருந்தவர்களை சுட்டிக்காட்ட, “ஹ்ம்ம், நம்ம ஊருக்கே வந்து வேவு பார்க்குறானுங்க. அதான் அவங்க பார்க்க மிஸ் பண்ண நம்ம குடவுனையும் சுத்தி காட்டினோம். இல்ல டா ஸ்வரூபா?” என்ற அகில் ஸ்வரூபனிடம், “ஆமா, இதை நீ இவன்கிட்ட சொல்லலையா? சொல்லிட்டேன்னு சொன்ன.” என்று வினவினான்.

 

ஸ்வரூபனின் எதுவும் பேசாமல் அங்கு சுருண்டிருந்த ஒருவனையே நோக்கிக் கொண்டிருந்தன.

 

“ஹ்ம்ம், அந்த அடியாட்களை தூக்கிப் போட்டு மிதிச்சதை பத்தி சொன்னான். ஆனா, அந்த பிரதீப்பை அடையாளமே தெரியாம அடிச்சதை தான் சொல்லல.” என்றான் ஷ்யாம்.

 

“எதே பிரதீப்பா?” என்று ஸ்வரூபனைக் காண, அவனோ அகிலைக் கண்டுகொள்ளவே இல்லை.

 

‘இவன் ஒருத்தன்! முக்கியமான நேரத்துல வாயைத் திறக்க மாட்டான்.’ என்று மனதிற்குள் புலம்பியவாறே அங்கு விழுந்திருந்தவர்களின் முகங்களை ஆராய்ந்தான்.

 

மூன்றாவது முறையாக உற்று நோக்கும் போது தான் பிரதீப்பை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது அகிலால். அந்தளவிற்கு அவனின் உருவத்தையே மாற்றியிருந்தான் ஸ்வரூபன்.

 

“டேய் இவனை எப்போ டா தூக்குன?”  என்றான் அகில் அதிர்ச்சியுடன்.

 

“நேத்து தான்.” என்று பார்வையில் எவ்வித மாற்றமும் இன்றி ஒலித்தது அவனின் குரல். அவனின் நினைவோ முன்தினத்திற்கு சென்றது.

 

*****

 

ஸ்வரூபனும் அகிலும், தங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துவிட்டு  மாலை வேளையில் வீடு திரும்பினர். பிரதீப்பின் வருகை எப்போது வேண்டுமென்றாலும் இருக்கலாம் என்பதால் ஒவ்வொரு இடங்களையும் நேரில் சென்று ஆராய்ந்து, நம்பிக்கையான ஆட்களை நியமித்துவிட்டு தான் வந்திருந்தனர்.

 

அப்போது தான் சோர்வாக வீட்டினுள் நுழைபவர்களை வாசலிலேயே நிறுத்திய பெரியநாயகி, “எங்க போய் சுத்திட்டு வரீங்க ரெண்டு பேரும்?” என்று வினவினார்.

 

“என்ன மச்சான் இந்த கிழவி வெளியவே விசாராணையை ஆரம்பிச்சுருச்சு. நம்ம குடவுன் மேட்டர் தெரிஞ்சுருச்சோ!”  என்று ஸ்வரூபனின் காதில் முணுமுணுக்க, ஸ்வரூபனோ அவனின் வயிற்றிலே லேசாக இடித்து அவனை அமைதிபடுத்தினான்.

 

“பாட்டி ரெண்டு பேரும் குடவுனுக்கு தான் போயிருந்தாங்களாம்.” என்று திடீரென்று அவர்களின் பின்னிருந்து சத்தம் கேட்க, திடுக்கிட்டு திரும்பினான் அகில்.

 

அங்கு வர்ஷினி, ரூபா இருவரும் நின்றிருப்பதைக் கண்ட அகில், “அடியேய் பொண்டாட்டி, உன் வேலை தானா இது?” என்று ரூபாவிடம் வினவ, அவளோ அகிலை முறைத்துக் கொண்டிருந்தாள்.

 

‘ஆத்தி கோபப்பார்வையால இருக்கு!’ என்று நினைத்து சட்டென்று பார்வையை திருப்ப, அவன் கண்களில் அகப்பட்டதென்னவோ அலட்சியமாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்த வர்ஷினி தான்.

 

‘இந்த குட்டிப்பிசாசு பண்ண வேலையா இது?’ என்று அகில் நினைக்க, அதற்குள் ரூபா கோபமாக உள்ளே சென்றாள்.

 

“அய்யயோ கோபமா போறாளே!” என்று வாய்விட்டே கூறியவன் உள்ளே செல்ல முயல அவனை செல்ல விடாமல் தடுத்தார் பெரியநாயகி.

 

“கிழவி, உன்கூட விளையாடுறதுக்கு எல்லாம் இப்போ நேரம் இல்ல. நகரு… அங்க ஒரு வால்கனோ வெடிக்கிறதுக்குள்ள அணைக்கணும்.” என்று பதற்றத்தில் உளற, வர்ஷினி சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் சிரித்தாள்.

 

“அட கிறுக்குப் பயலே, உன்கூட விளையாடுறது தான் எனக்கு வேலை பாரு. இதுல விளக்கெண்ணெய் வெடிக்கும்னு கூறுகெட்ட தனமா பேசுறான். உங்களுக்காக காத்திருந்த என் பேத்திகளுக்கு என்னங்கடா பதில் சொல்லப் போறீங்க?” என்றார் பெரியநாயகி.

 

பாதி கவனம் மட்டும் பெரியநாயகியின் பேச்சில் வைத்திருந்தவன், “எதே கூறுகெட்ட தனமாவா? உன் பேத்திக்கு பதில் சொல்ல போயிட்டு இருந்தவனை தடுத்துட்டு இப்போ என்னையவே திட்டுறியா?” என்றவனின் கவனம் இப்போதும் உள்ளே தன் அன்னையிடம் பேசிக் கொண்டிருந்த ரூபாவிடம் தான் இருந்தது.

 

“டேய் இங்க பாரு டா.” என்று அவனின் முழு கவனத்தையும் தன்னிடம் கொண்டு வந்த பெரியநாயகி, “என் பேத்திங்க வீட்டுக்குள்ளேயே  இருக்காங்களே. அவங்களை வெளிய கூட்டிட்டு போகணும்னு அக்கறை இருக்கா உங்களுக்கு?” என்றார் தன் பேத்திகளுக்கு ஆதரவாக.

 

உள்ளே செல்லவிடாமல் தடுத்த கடுப்பில், “அதெல்லாம் கூட்டிட்டு போக முடியாது.” என்றான் அகில்.

 

அப்போது அவனின் அருகே வந்த வர்ஷினி, “பிரதர், இப்போ சும்மா பிட்டு பிட்டா தான் போட்டுக் கொடுத்தேன். அதுக்கே எஃபெக்ட் சும்மா தாறுமாறு தக்காளி சோறா இருக்கு. இதுல அந்த ‘அண்ணி’ மேட்டர் மட்டும் பத்த வச்சேன்…” என்று இழுக்க, அவள் எதை கூறுகிறாள் என்று நினைத்தவனிற்கு மேலும் பதற்றமாகியது.

 

“வெளிய போகணும்ல, போய் கிளம்பு போ.” என்று வீட்டிற்குள் வர்ஷினியை தள்ளினான் அகில்.

 

“அண்ணோவ், நான் எப்பவோ ரெடி!” என்றவளை கண்டுகொள்ளாமல், “இந்த ட்ரெஸ் நல்லா இல்ல. போய் மாத்திட்டு வா.” என்று ஏதேதோ கூறி உள்ளே அனுப்பி வைத்த அகில், பெருமூச்சை வெளியிட, ஸ்வரூபனோ  நக்கலாக அவனைப் பார்த்து கொண்டிருந்தாள்.

 

வெளியே யாரோ அழைப்பதாக வேலையாள் கூறியதும், அதைப் பார்க்க சென்றுவிட்டார் பெரியநாயகி, அவர் சென்ற இடைவெளியில் தான் இவையனைத்தும் நடந்து கொண்டிருந்தன.

 

அப்போதும் விடாமல் ஸ்வரூபன் அகிலின் தோளில் கைபோட்டு, “அது என்ன டா ‘அண்ணி’ மேட்டர்?” என்றான்.

 

‘ஐயோ இவனுமா?’ என்று நொந்து கொண்டவன், ஸ்வரூபனிடம் மறைக்க முடியாது என்று எண்ணியவனாக அதைக் கூற ஆரம்பித்தான்.

 

“அது ஒன்னுமில்ல டா, இவளுக்கு சந்தேகம் வரக்கூடாதுன்னு நம்ம டிப்பார்ட்மெண்ட்லேயே ஒரு பொண்ணை காட்டி, அவ தான் என்னோட ஒய்ஃப்புன்னு இண்ட்ரோ கொடுத்துட்டேன்.” என்று கூற, அவனை முறைத்தான் ஸ்வரூபன்.

 

உள்ளே செல்வது போல சென்ற வர்ஷினி மீண்டும் வெளியே வந்து, “ஹலோ பிரதர், என்ன பாதியோட முடிச்சுட்டீங்க? அதுக்கு அப்பறம் என்னாச்சுன்னு நான் சொல்லவா?” என்று கண்ணடித்தாள்.

 

“எம்மா தாயே! ஆளை விடுமா. உனக்கென்ன வெளிய போகணும் அவ்ளோ தான. மச்சான் கூட்டிட்டு போவான்.” என்று ஸ்வரூபனை கோர்த்துவிட்டான்.

 

ஸ்வரூபனோ, “என்னால கூட்டிட்டு போக முடியாது. அதுவும் இவ கூட… சான்ஸே இல்ல.” என்று கூற, வர்ஷினியோ அவனுடன் வாய் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்.

 

இப்போது அவர்களின் சண்டை முடியாது என்று எண்ணிய அகில், கிடைத்த இடைவேளையில் தன் திருமண வாழ்வை காப்பாற்ற ரூபாவை தேடி சென்றுவிட்டான்.

 

அவன் சென்றது கூட தெரியாமல், ஸ்வரூபனும் வர்ஷினியும் சண்டை போட்டுக் கொண்டிருக்க, எப்படி நிகழ்ந்தது என்று தெரியாமல் (!!!) இருவரும் ஒருவரையொருவர் நெருங்கியிருந்தனர். சண்டையிடும் மும்முரத்தில், அவர்களுக்கு இடையேயிருந்த நூலளவு இடைவெளி அவர்களுக்கு பெரிதாக தெரியாமல் இருந்தது போலும்.

 

அப்போது அங்கு வந்த பெரியநாயகி இந்த காட்சியைக் கண்டு திகைத்து, பின்னர் நமுட்டுச் சிரிப்புடன் செறுமினார்.

 

அப்போதே சுயத்திற்கு வந்த இருவரும், தங்களின் நிலை கண்டு அதிர்ந்தனர். வர்ஷினி உடனே இரண்டடி பின்னே நகர்ந்து பெருமூச்சு விட, ஸ்வரூபனோ தலையைக் கோதிக் கொண்டான்.

 

“சரி சரி, பார்த்து சூதானமா போயிட்டு வாங்க.” என்று சிரிப்புடனே பெரியநாயகி கூற, அந்த சூழலிலிருந்து தப்பிக்கும் பொருட்டு, இருவரும் வேகமாக தலையாட்டினர்.

 

இதில் சற்று நேரத்திற்கு முன்பு, இதற்கு தான் சண்டை போட்டுக் கொண்டனர் என்பது வசதியாக மறந்து போனது!

 

அப்போது அறையிலிருந்து ரூபாவும் கிளம்பி வந்துவிட, அவளின் பின்னே அவளை சமாதானப்படுத்த வேண்டி அகிலும் வந்தான்.

 

ஊரைச் சுற்றிக் பார்த்தபடி நடந்தே செல்லலாம் என்று முடிவெடுக்க, முதலில் வர்ஷினியும் ரூபாவும் செல்ல, அவளைப் பின்தொடர்ந்து ஸ்வரூபனும் அகிலும் சென்றனர்.

 

சம்பந்தப்பட்ட இருவரும் இன்னும் அந்த சூழ்நிலையிலிருந்து வெளிவராமல் இருக்க, ரூபா தான் வர்ஷினியை கேலி செய்து கொண்டே இருந்தாள். அவள் தான் அறையிலிருந்து வெளிவரும் போதே அந்த காட்சியை பார்த்து விட்டாளே!

 

“இந்த பாட்டி வேற உங்களுக்கு இடையில ‘பூஜை வேளை கரடி’ மாதிரி நுழைஞ்சுட்டாங்க, இல்ல?”

 

“இப்போ கூட என்னை டிஸ்டர்பென்சா தான நினைப்பீங்க?” என்று அவ்வப்போது வர்ஷினியை அவளறியாமலேயே சிவக்க வைத்தாள்.

 

“ஷ், ரூபா பேசாம வா.” என்பதே வர்ஷினியின் சமாளிப்பு வார்த்தைகளாக மாறிப்போனது.

 

சற்று நேரத்தில் பேச்சை மாற்றுவதற்காக, “இப்போ எங்க போறோம்?” என்று வர்ஷினி வினவ, “இப்போ நம்ம தோப்புக்கு போலாம்னா இருட்டாகிடுச்சு. அதனால நாளைக்கு காலைல அங்க போலாம். நம்ம ஊரோட சென்டர்ல நிறைய கடைகள் இருக்கு. ரெண்டு, மூணு ஃபேன்சி ஸ்டோர்ஸ்ல புது சரக்கு வந்தா சொல்ல சொல்லி சொல்லி வச்சேன். இப்போ நாம அங்க போலாம்.” என்று அவளை இழுத்துக் கொண்டு சென்றாள் ரூபா.

 

செல்லும் வழியில், வர்ஷினிக்கு யாரோ தன்னையே பார்ப்பது போலிருக்க, திரும்பி பார்த்தபடியே வந்தாள். ஸ்வரூபனிற்கும், ஏதோ தவறாக பட, அவனும் நாலாபுறமும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.

 

ரூபா கூறிய ஊரின் மையப்பகுதி வர, வர்ஷினியை இழுத்துக் கொண்டு சந்தோஷமாக ஒவ்வொரு கடையாக ஏறி இறங்க, வர்ஷினிக்கும் அவளின் உற்சாகம் தொற்றிக் கொண்டது. அதில் தற்காலிமாக அவளின் சௌகரியமின்மையை மறந்தும் போனாள்.

 

இத்தனை நேரம் அலைந்து திரிந்து பழக்கப்படாத வர்ஷினியோ சற்று நேரத்திலேயே சோர்வாக, இப்போது மீண்டும் அதே பார்வையை உணர்ந்தாள்.

 

அவளைக் கவனித்த ஸ்வரூபனிற்கும் அவளின் நிலை புரிந்தது போல, அவளருகே வந்து வினவ, “யாரோ என்னை ரொம்ப நேரமா பார்க்குற மாதிரி இருக்கு. கொஞ்சம் அன்-ஈசியா இருக்கு.” என்றாள் வர்ஷினி.

 

ஸ்வரூபனின் மூளை, பிரதீப்பாக இருக்கலாமோ என்று சிந்திக்க, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நீ ஊருக்கு புதுசுல அதான் எல்லாரும் உன்னைப் பார்ப்பாங்க. நீ ஃப்ரீயா இரு.” என்றான்.

 

ஸ்வரூபனிடம் கூறியதாலோ, அவன் கூறிய ஆறுதலினாலோ, வர்ஷினி அதன்பிறகு இயல்பாக இருக்க, ஸ்வரூபனின் தேடுதல் வேட்டை தொடர்ந்தது.

 

இதற்கிடையே ரூபாவை மலையிறக்க வேண்டிய வேலைகளை அகில் பார்க்க, அவனிற்கு ஸ்வரூபன் – வர்ஷினியின் சம்பாஷனைகள் தெரியாமலேயே போயிற்று.

 

அடுத்த ஐந்தாவது நிமிடங்களிலேயே, வர்ஷினியின் சௌகரியமின்மைக்கான காரணத்தை பார்த்து விட்டான். நீண்ட நாட்கள் கழித்து வர்ஷினியை கண்டதாலோ, இங்கு யார் என்னைக் கண்டுகொள்ள முடியும் என்ற அஜாக்கிரதையாலோ, அவனே அவனின் இடத்தை காட்டிக் கொடுக்க, அங்கு சாதாரான மக்களை போல சுற்றிக் கொண்டிருந்த தன் ஆட்களிடம் கண்ணைக் காட்டினான் ஸ்வரூபன்.

 

அதன்பிறகு, தன் நம்பிக்கைக்குரியவர்கள் காரியத்தை கச்சிதமாக செய்து முடிப்பர் என்று நம்பிய ஸ்வரூபன் தன்னுடன் வந்தவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

 

*****

 

தன் நினைவில் ஓடியவற்றை சில காட்சிகளை நீக்கிவிட்டு தேவையானவற்றை மட்டும் கூறினான் ஸ்வரூபன்.

 

“அடப்பாவி, எனக்கே தெரியாம வேலை பார்த்துருக்கியா?” என்று அகில் வினவ, “குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரி உன் பொண்டாட்டியை மட்டுமே பார்த்துட்டு இருந்தா, வேறெது கண்ணுக்கு தெரியும்?” என்று கேலியாக வினவினான் ஸ்வரூபன்.

 

“சரி சரி, அடுத்து என்ன பிளான்? இவனை வச்சு விக்ரமுக்கு தகவல் சொல்லிட்டியா?” என்றான் ஷ்யாம்.

 

“இவன் சொல்லாமலேயே அங்க தகவல் போயிருக்கும்.” என்றான் ஸ்வரூபன்.

 

“எப்படி?” என்று ஷ்யாம் வினவ, அகிலும் அவனை யோசனையுடன் பார்த்தான்.

 

“அதுக்கு தான் எங்க வீட்டுலயே ஒரு பிளாக்ஷீப் இருக்கே.” என்று பல்லைக் கடித்துக்கொண்டு கூறினான் ஸ்வரூபன்.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்