Loading

சீமை 37

 

 

“அவன் கூட உறவு வெக்காதன்னு உன் புத்திக்கு எத்தினி தடவை உரைக்குறது. .” 

 

“அவன் நமக்கு கெட்டது பண்ணலயே நல்லது தான பண்ணி இருக்கா. 

 

 

“நல்லது பண்ண சொல்லி நா கேட்டனா? அவங்க வூட்டு பால விக்க போறதோட முடிச்சிக்கணும். அத வுட்டுட்டு இங்க வந்து எதுக்கு வாங்கிட்டு போவணும்?”

 

 

“நா தாங்க கறந்த பால் அப்டியே கெடக்குனு பொலம்பிட்டு இருந்த பிற கிட்ட.” என்றவளை கடுமையாக சாடினான்.

 

“ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்க மாட்ட. இன்னொரு தடவை அந்த வூட்டு ஆளுங்க கூட நீயி பேசுறத பாத்த அதுதான் நீயி இந்த வூட்ல இருக்க போற கடைசியா இருக்கும்.” என்ற சாமந்தியின் கணவன் முறைத்துக் கொண்டே வீட்டை விட்டு வெளியேற,

 

“இது என்னிக்கும் திருந்தாது.” என்றாள்.

 

“அண்ண தான் ஏசுதுனு தெரியுதுல மதினி அப்புறம் எதுக்கு அந்த வூட்டு ஆளுங்க கூட பேசிக்கிட்டு இருக்கீங்க.” என்ற சிலம்பனுக்கு,

 

“பின்ன உங்களை மாதிரி சண்ட போட்டுக்கிட்டா கெடக்க சொல்ற.” என முறைத்தாள்.

 

“நாங்க ஒன்னு அவங்க கிட்ட சண்ட போடல மதினி அவங்கதா எந்நேரமும் எங்ககிட்ட வராய்ங்க.” 

 

 

“அந்த வூட்ல இருக்குற நாலு பேரும் உன்னை வுட பெரியவங்க. வயசுக்கு கூட மரியாதை குடுக்காம அவன் இவன்னு பேசுற.” என மொழியனை கண்டித்தாள்.

 

 

“கொழுந்தைய்ங்க எங்களுக்கு ஆதரவா பேசுறத வுட்டுட்டு அவங்களுக்கு பேசிட்டு இருக்கீங்க மதினி.” என கோபித்துக் கொண்டான் மொழியன்.

 

“அவங்களுக்கு எந்த விதத்திலும் லேசு பட்ட ஆளுங்க நீங்க இல்லிடா. உங்க அண்ண எத்தினி தடவ சொல்றாரு சண்ட போடாதீங்கன்னு கேக்குறீங்களா? என்னை மட்டும் இந்த வூட்ல இருக்க பெரிசுல இருந்து சிறுசு வரைக்கும் அடக்கி வையுங்க.” சிடுசிடுத்துக் கொண்டவள் வேலையை கவனிக்கச் சென்றாள்.

 

 

மதினியின் கோபத்தில் நியாயம் இருக்கிறது என்பதை மறந்த சிலம்பன், “அவுனுங்க நம்ம மதினிக்கு ஏதோ மை தடவிட்டாய்ங்க போலடா. அதா எப்ப பாரு அவுனுங்களுக்கே ஆதரவா பேசுறாய்ங்க. மதுரவீரன் காலடியில வெச்ச மைய எடுத்து வந்து மதினி உச்சந்தலையில தேய்ச்சு வுடனும். இல்லினா மொத்தமா அவனுங்க நம்ம மதினிய இழுத்துடுவானுங்க.” என்றான்.

 

 

“அவுனுங்க மூணு பேத்த வுட அவுனுங்க அண்ணன தான் நம்மளால சமாளிக்க முடியல சிலம்பா. அந்த கிறுக்கங்க மாதிரி சண்ட போட்டா கூட பரவால எதித்து நிக்கலாம். அவரு ‌என்னாடானா எந்நேரமும் பாசத்தை தூக்கிட்டு வந்துடுறாரு.” அன்பெனும் ஆயுதத்தை கையில் ஏந்தி யாசகம் கேட்கும் செந்தமிழனை பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தான் மொழியன்.

 

சிலம்பனின் எண்ணமும் இது என்பதால் தலையை மட்டும் அசைக்க, அதன் பின்னான பேச்சுக்கள் எல்லாம் செந்தமிழனை பற்றியே ஓடியது.

 

***

 

பின்பக்கம் வந்தவள் தன் தோழியை அலைபேசியில் அழைத்தாள். அவளோ கோபித்துக் கொண்டு அறையில் இருக்கும் கணவனை சமாதானம் செய்து கொண்டிருந்தாள். கட்டியவளின் பேச்சில் கொஞ்சம் இறங்கி வந்தவன் மீண்டும் உச்சி கொம்பில் ஏறி நின்று கொண்டான் சாமந்தியின் அழைப்பை பார்த்து. 

 

 

ஒளிர்பிறையின் போதாத நேரம் அவளது கைபேசி மெத்தையில் இருந்தது. மனைவியை நோக்கியவன், “இது எல்லாத்திக்கும் பிள்ளையார் சுழி போடுறது நீதான்னு நல்லா தெரியும். உன் வழியில போற என் தம்பிக்கும் இந்த வூட்டுக்கும் ஏதாச்சும் ஆச்சுன்னா கொஞ்சிக்கிட்டு கெடக்க புருசனை மொத்தமா நீயி மறக்க வேண்டியதா இருக்கும்.” என்று எதிர் வீட்டு தலைவன் கிளம்பியது போல் இவனும் கிளம்பி விட்டான்.

 

 

 

தலையில் அடித்துக் கொண்டவள் தோழியின் அழைப்பை ஏற்று, “அடியே! உனக்கு போன போட நேரம் காலமே இல்லியா. நானே கட்டபொம்ம மண்டைய இப்பதா கொஞ்சம் கழுவி வுட்ட அதுக்குள்ள நீ வந்து களிமண்ண புகுத்திட்ட.” என எரிந்து கொண்டிருந்தாள்.

 

 

“மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு பிற.” என்றவளின் வார்த்தையில் திட்டுவதை நிறுத்தியவள்,

 

“என்னாடி சொல்ற… மசக்கையா இருக்கியா என்னா?” கேட்டாள்.

 

 

“சந்தோசமா இருக்கனு ஒத்த வார்த்த சொல்லக்கூடாது உடனே வந்துருவியே. உன் கொழுந்தன கட்டுனதுக்கு பதிலா மரத்த கட்டி இருந்தா கூட இந்நேரம் நா ஒரு குட்டி மரத்தை பெத்து இருப்ப.” என சலித்துக் கொண்டாள்.

 

 

தோழியின் பேச்சில் இருந்த அனைத்து மண்டை சூட்டையும் மறந்தவள் கலகலவென சத்தமிட்டு சிரித்தாள். தோழியின் சிரிப்பு புகைச்சலை கொடுக்க, “நீ எல்லாம் சிரிக்குற மாதிரி என் பொழப்பு ஆகிடுச்சு பாரு. கட்டிக்கிட்டவன் சரி இல்லினா இப்டித்தா கண்ட….” என அவள் குதர்க்கமாக சொல்ல வர,

 

“அடியே, அடுத்த வார்த்த பேச நாக்கு இருக்காது.” என தடுத்துவிட்டாள் ஒளிர்பிறை.

 

 

“நாக்க அறுக்குறதுக்கு பதிலா என் கண்ண அறுத்துடுடி பிற”

 

 

“என்னாடி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சந்தோசமா இருக்கனு சொன்ன. அப்புறம் எதுக்கு கண்ண காவு குடுக்குற.”

 

 

“எல்லாம் இங்க நடக்குறத பாக்க முடியாம தான்.” என்றவள் மேற்கொண்டு பேச வர,

 

 

“அங்க என்னா நடந்து இருக்குனு நீ சொல்லவே வேணாடி மந்தி.” முற்றும் துறந்த ஞானியாக நடந்ததை கணித்து விட்டாள்.

 

 

“தமிழு நல்ல மனசோட வந்து பாலை வாங்கிட்டு போனது இவருக்கு பெரிய குத்தம் ஆயிடுச்சு. இந்த வூட்லயே இருக்க மாட்டனா இப்டியே நடந்துட்டு கெடந்தா.” 

 

 

“அங்க பரவால மந்தி. இங்க பழையபடி மாறிடுவன்னு சொல்லாம சொல்றாரு.”

 

 

“உன் நெலைமையும் என்னை மாதிரியே இருக்குறதால தான் பிற சந்தோசமா இருக்குனு சொன்ன.”

 

 

“அடி கட்டையில போறவளே…! என் குடும்பம் கெட்டுப்போறதுல உனக்கு என்னாடி அப்டி ஒரு சந்தோசம்.”

 

“நாங்க இன்னு குடும்பம் நடத்தவே ஆரம்பிக்கல. என்னோட சுத்திக்கிட்டு கெடந்த சிறுக்கி புருசன முந்தானைல முடிஞ்சு வெச்சிருக்குறதை பாத்தா வயிறு எரியுமா? எரியாதா?”

 

 

 

“உன் கொள்ளி கண்ணுக்கு செய்வினை வெச்சாதா அடங்கும்.”

 

 

“அதைத்தாண்டி நானும் சொல்ற. பேசாம என் கண்ண ஏதாச்சும் பண்ணி புடிங்கிடு பிற. இங்க நடக்குற பல விசயத்தை பாக்காம இருந்தாலே நா நல்லா இருப்ப போல.”

 

 

“வுடு மந்தி, உன்ன வூட்ட வுட்டு துரத்திட்டு அவரு தனி மரமா நிக்கும் போது தன்னால பொண்டாட்டியோட அருமை பெருமை தெரியும். அப்பன் கூடவே ஜெயில்ல உக்கார திரிஞ்சதுங்களை கட்டிக்கிட்டு திருத்தி வெச்சிருக்கோம் இல்லியா அந்த மிதப்புல பேசத்தான் செய்யுங்க.”

 

 

“அதெல்லாம் இப்போ ஆரு பிற சொல்லுறா. என்னாமோ வாழ வழி இல்லாம இவங்க பின்னாடி வந்த மாதிரி தான பேசுதுங்க.”

 

 

“ஒரு பத்து நாளு அம்மா வூட்டுக்கு போயிட்டா தெரியும் ஆருக்கு வாழ வழி இல்லினு. திங்குற தட்டு எங்க இருக்குனு கூட தெரியாத இதுங்களுக்கு சண்டியா வம்சம்னு பேச்சு வேற.” தோழிகள் இருவரும் மாற்றி மாற்றி தங்கள் புகுந்த வீட்டையும் கட்டிய கணவன்களையும் சாடிக் கொண்டார்கள்.

 

 

***

 

தனி ஆளாக இரு வீட்டு பாலையும் எடுத்து வந்த செந்தமிழன் சேர்க்கும் வீட்டிற்கு முன்னால் நின்றான். வெளித் திண்ணை காலியாக இருக்க, “அண்ணே” என குரல் கொடுத்தான்.

 

 

பத்து நிமிடங்கள் கடந்தும் அவர் வரவில்லை. பொறுத்துப் பார்த்தவன் தன்னிடம் பேசிய நபரை தொடர்பு கொண்டான். நான்கைந்து முறை அழைப்பு சென்ற பின்பு எடுத்தார்.

 

“அண்ணே, நா வாசல்ல நிக்குற கொஞ்சம் வெளிய வரிங்களா.” 

 

 

“இருங்க தம்பி வர” என்றவர் இருபது நிமிடங்கள் கழித்து வந்தார்.

 

 

தாமதம் ஆனாலும் பொறுமை முகத்தோடு வரவேற்றான். வந்தவர் புன்னகை இல்லாமல் பார்க்க, கொண்டு வந்த பால் டின்னை இறக்கி வைத்தான். பாத்திரத்தை திறந்து அவரிடம் காட்டியவன், “அளந்து பாத்துக்கோங்க அண்ணே.” என்றான்.

 

 

அவர் பதில் பேசாமல் அமைதியாக நிற்க, “என்னாண்ணே பாத்துட்டு இருக்கீங்க.” என கேட்டான்.

 

 

“தம்பி எனக்கு இந்த பால் வேணாம்பா.” என்றவர் வார்த்தை புரியாதது போல் அவன் முகம் மாற, 

 

“ஏற்கனவே நெறைய பேரு எடுத்துட்டு வராய்ங்க அதையே விக்க முடியல. அப்டி இருக்க உங்க வூட்டு பால வாங்கி வெச்சா கட்டுபடி ஆவாது. அதனால எடுத்துட்டு போயிடுங்க.” என்றார் சர்வ சாதாரணமாக.

 

 

பால் டின்னின் மூடியை பிடித்துக் கொண்டு குனிந்து இருந்தவன் அவர் வார்த்தையில் நிமிர்ந்து, “நீங்க தான எடுத்துட்டு வர சொன்னீங்க.” கேட்டிட,

 

“ஆமாப்பா, நா தான் எடுத்துட்டு வரச் சொன்ன. ஆனா, இப்ப எனக்கு வேணாம்.”

 

“என்னா’ண்ணா இது விளையாட்டு? வேணானு அப்பவே ஒரு வார்த்தை சொல்லி இருந்தா இவ்ளோ தூரம் எடுத்துட்டு வந்திருக்க மாட்டனே.” 

 

 

“நா ஏதோ ஒரு யோசனையில சொல்லிட்ட தம்பி. நீ கொண்டாந்ததை எடுத்துக்கிட்டு கிளம்பு.”

 

 

“அண்ணே, நீங்க வேணானு சொன்னது தப்பு இல்ல, அத இவ்ளோ தூரம் வர வெச்சு சொன்னது தப்பு இல்லியா.”

 

“என்னாப்பா நீயி… நா தான் தெரியாம சொல்லிட்டன்னு சொல்றேன்ல. சரின்னு சொல்லி எடுத்துட்டு போவாம பேசிக்கிட்டு கெடக்க.” என்றவர் முகம் பதட்டத்தில் இருந்தது.

 

 

அதை கவனித்தவன், “என்னாண்ணே உங்களுக்கு ஏதாச்சும் பிரச்சனையா?” என அக்கறையாக கேட்க,

 

 

“அதுலாம் ஒரு பிரச்சனையும் இல்லப்பா. நீயி முதல்ல இங்க இருந்து கிளம்புற வழிய பாரு.” என்றவர் வேகமாக உள்ளே சென்று விட்டார்.

 

 

என்ன நடக்கிறது என்று புரியாமல் அவன் யோசனையில் அங்கேயே நின்று கொண்டிருக்க, “எடேய்…” என குரல் கொடுத்தார் சிவகுமார்.

 

 

திரும்பிப் பார்த்தவன் அமைதியாக நிற்க, “என்னை பகச்சிக்காத வாழ்க்கை வீணா போயிடும்னு எத்தினி தடவை சொன்ன, கேட்டியா?” என்றவர் அவன் அருகில் வந்தார்.

 

 

“போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் உன்ன உக்கார வெச்சும் திமிரு அடங்காம உங்க ஊரு பஞ்சாயத்து தலைவர் கிட்ட சொல்லி மிரட்டி பாக்குறியா.” 

 

 

“மிரட்டுறது எல்லா என் வேல இல்ல உங்க வேல. எங்க ஊர்ல நிறைய பேர் சொசைட்டிக்கு பால் எடுத்துட்டு வர்றதால கவனிக்க சொல்லி அவரு கிட்ட சொன்ன. ஊர் மக்களுக்காக உங்க கிட்ட பேசி இருக்காரு.” என்றவனின் அருகில் இன்னும் நெருங்கியவர்,

 

 

“எங்கிட்ட மோதுனதுக்கு தான் ஊர் ஊரா என் பொருளை வாங்கிக்கோன்னு கெஞ்சிட்டு இருக்க. அதே நிலைமைய உன் ஊருக்கும் குடுத்துடாத.” என மிரட்டினார்.

 

 

“நீங்க பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல சார்.”

 

“நல்லா இல்லினு தெரிஞ்சா பொத்திக்கிட்டு போவணும். அத வுட்டுட்டு நியாயத்தை வாங்குற, நேர்மைய நிலை நாட்டா போறனு என் பக்கம் வரக்கூடாது. என் மேல கை வெச்சதுக்கான தண்டனையே இன்னு கொடுக்கல. அதுக்குள்ள அடுத்த ஆட்டத்துக்கு என்னை தயார் படுத்திடாத.” என்றவரை அவன் புருவம் நெறிய பார்க்க,

 

“உங்க மேல கை வெச்சது தப்புனு என் கால புடிச்சி உன்ன கெஞ்ச வெக்கல… நா ஒரு அப்பனுக்கு பொறந்தவன் இல்லிடா.” என்றார்.

 

 

 

சீமை 38

 

சிவகுமார் யோசனையில் வீடு வந்து சேர்ந்தான் செந்தமிழன். வந்தவன் உள்ளே செல்ல மனம் இல்லாமல் வெளி திண்ணையில் அமர்ந்துக் கொண்டான். மகனைக் கண்ட ஆண்டாள், 

 

“என்னா சின்னவனே ஒரு மாதிரி இருக்க” என விசாரித்தார்.

 

 

பதில் சொல்லாமல் அவன் யோசனையில் அமர்ந்திருக்க, மகனின் நடவடிக்கை வித்தியாசமாக தெரிந்தது அவருக்கு. ஐந்து நிமிடம் இடைவெளி விட்டவர் மீண்டும் அவனிடம் கேட்க, “ஒன்னு இல்லம்மா” என உள்ளே சென்று விட்டான்.

 

 

இரவு கேழ்வரகு அடை செய்வதற்காக கேழ்வரகு ஊற வைத்து காய வைத்துக் கொண்டிருந்தாள் ஒளிர்பிறை. அவளோடு சேர்ந்து மூன்று வானரங்களும் அமர்ந்திருந்தது.

 

“மதினி இந்த டிவில வர்ற மாதிரி பீட்சாலா செஞ்சி தராம எப்ப பாரு அடை வடைனு செஞ்சி குடுக்குறீங்களே எங்களை பாத்தா பாவமா இல்லியா” என இமையவன் காய வைத்து கொண்டிருக்கும் கேழ்வரகில் கோலம் போட்டான்.

 

 

அவன் கையில் அடி வைத்தவள், “எரும மாடே! கஷ்டப்பட்டு காய வெச்சுட்டு கெடக்க.‌ அத ஏன்டா கலச்சி போடுற.” என்றாள்.

 

“மதினி, இப்ப எல்லாம் நீங்க எங்களை ரொம்ப ஏசுறீங்க.” எழில்குமரன் வருத்த தோரணையாக தன் முகத்தை மாற்ற,

 

“அப்டி எல்லாம் எதுவும் இல்லிடா” என்றாள்.

 

“இல்ல மதினி உண்மையாவே இப்ப எல்லாம் நீங்க ரொம்ப ஏசிட்டு இருக்கீங்க.” கவி.

 

“அப்டி என்னாடா உங்களை ஏசிட்ட நானு?”

 

“என்னா பேசல மதினி நீங்க. இப்போலாம் மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. முன்ன மாதிரி நீங்க எங்க கிட்ட அன்பா இருக்குறது இல்ல. அண்ண தான் எங்களை ஏசிக்கிட்டு கெடக்குன்னு பாத்தா நீங்களும் அவரு மாதிரியை பண்றீங்க. உங்களுக்கு எங்க மூணு பேத்தயும் புடிக்காம போயிடுச்சு.” என்ற இமையவனின் வார்த்தையில் செய்யும் வேலையை நிறுத்தினாள்.

 

 

அவளின் அசைவுகளை கண்டு கொண்ட இமையவன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு, “அண்ண ஏசும் போது கூட எங்களுக்கு அவ்ளோவா வலிக்கல மதினி. இந்த வூட்டுக்கு வந்ததுல இருந்து எங்களை குழந்தையா பாத்துக்கிட்டு இருக்க நீங்க இப்டி பண்றதுதா ரொம்ப வலிக்குது.” அண்ணன் போலவே முகத்தை வைத்துக் கொண்டு பேசினான் எழில்குமரன்.

 

“உங்க ரெண்டு பேத்தியும் வுட என்னை தான் மதினி ரொம்ப ஏசுறாங்க. முன்னாடியெல்லாம் சின்னப் பையன்னு ஒரு வேல வாங்க மாட்டாய்ங்க. இப்ப என்னாடானா காலையில எந்திரிச்சதுல இருந்து ராத்திரி தூங்க போற வரைக்கும் வேலைய மட்டும்தான் வாங்குறாய்ங்க. கேட்க ஆளு இல்லாத பையனு நெனைச்சு இப்டி நடந்துக்கிறாய்ங்க போல.” மற்ற இருவருக்கும் தான் சளைத்தவன் இல்லை என்பதை நிரூபித்து விட்டான் அவர்களை விட பாவமாக முகத்தை வைத்து.

 

 

மூவர் பேசுவதை கேட்டு ஒளிர்பிறை மனம் குற்ற உணர்ச்சியில் தள்ளாடியது. விளையாட்டுக்கு செய்த அனைத்தும் இம்மூவர் மனதையும் காயப்படுத்தி இருக்கிறது என்பதை இப்போதுதான் உணர்கிறாள். இனி இதை தொடர விடக்கூடாது என்ற எண்ணத்தோடு மன்னிப்பு கேட்க வர, அவளை பார்த்துக் கொண்டிருந்த மூவரும் ஒன்றுபோல்,

 

“வேணா மதினி இப்பவும் ஏதாச்சும் சொல்றன்னு எங்க மனச காயப்படுத்திடாதீங்க.” என்றார்கள்.

 

“என்னாய்ங்கடா மூணு பேரும் இப்டி பேசுறீங்க. உங்களை அப்டி நெனைக்குற ஆளா நானு. உங்களை என்னிக்கும் என் புள்ளைங்களா பாத்ததால தான் உரிமையா இதெல்லாம் பண்ணிட்டு கெடக்க.” என்றாள்.

 

 

“என்னா இருந்தாலும் நீங்க பண்ணதை கொஞ்சம் கூட ஏத்துக்க முடியல மதினி.” என்ற இமையவன் மீது பார்வையை பதித்தாள்.

 

அவள் பார்ப்பதை அறிந்து தலை குனிந்து கொண்டான் இமையவன். அண்ணன் தலைகுனிவதை பார்த்த மற்ற இருவரும் அவனைப் போல் செய்ய, மூவர் தலையையும் கோதிவிட்ட ஒளிர்பிறை,

 

“சத்தியமா உங்க மனசு இந்த அளவுக்கு காயம் பட்டு இருக்குனு நெனைக்கல. நடந்த எல்லாத்தியும் மறந்துட்டு உங்க மதினிய மன்னிச்சிருங்கடா” என்றவள் மூவர் முடியையும் பிடித்து ஆட்டினாள்.

 

“ஆஆஆஆஆ…மதினி வலிக்குது.” என கத்தினார்கள் மூவரும்.

 

 

“நல்லா வலிக்கட்டும் குரங்குங்களா. ஆற ஏமாத்த பாக்குறீங்க?  எதுக்கு இப்ப இந்த மாதிரி நடிச்சுக்கிட்டு இருக்கீங்கன்னு சொல்லுங்கடா.” என நன்றாக காதை திருகினாள்‌.

 

 

உரக்க கிள்ளியதில் வலி பொறுக்க முடியாமல் மூவரும் காதை பிடித்துக் கொண்டு, “எப்டி மதினி கண்டுபிடிச்சீங்க?” தங்கள் நடிப்பை கண்டு கொண்ட வழியை கேட்டார்கள்.

 

“உங்க மூணு பேத்தியும் ஓட்ட டவுசர் போட்டு ரோட்ல விளையாண்டுட்டு இருந்ததுல இருந்து பாத்துக்கிட்டு இருக்கடா. எப்போ என்னா பண்ணுவீங்கன்னு கூடவா தெரியாம இருக்கும்.” என்றவள் வார்த்தைக்கு வலையில் மாட்டிய குரங்காக முகத்தை வைத்தார்கள்.

 

 

“இருந்தாலும் எங்க அண்ண இப்டி ஒரு அறிவாளி பொண்டாட்டிய கட்டி இருக்கக் கூடாது.” எழில் குமரன்.

 

“பேச்ச மாத்தாம எதுக்காக இந்த நடிப்புன்னு சொல்லுங்கடா” 

 

மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள, உள்ளே வந்தான் செந்தமிழன். யாரும் அவனை கவனிக்கும் நிலையில் இல்லாமல் இருக்க பின் வாசலுக்கு சென்று விட்டான்.

 

 

 

இமையவன், எழில்குமரன் இருவரும் சின்னவனை சொல்லும் படி சைகை செய்ய, கண்டும் காணாமலும் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தாள் ஒளிர்பிறை. 

 

 

அண்ணன் மனைவியின் பக்கத்தில் அமர்ந்தவன் பல்லை இழுத்துக் கொண்டு கையை சுரண்டினான். அவனைத் திரும்பி பார்க்காது, “என்னாடா” என அவள் கேட்டாள்.

 

 

“மதினி…” 

 

“ஓலம் போடாம என்னா விசயம்னு சொல்லுடா.”

 

“அது வந்து…” என அவன் ராகம் பாட, “கொஞ்சம் இரு கொள்ளைல  இருக்க தொடப்பத்த எடுத்துட்டு வந்துடற.” என எழுபவளை அவசரமாக அமர வைத்தான் கவிநேயன்.

 

“என்னா மதினி இதுக்கு போயி கோவிச்சுக்கிறீங்க” என்றவன் பல்லை இளித்துக் கொண்டு, “நீங்க நாளைக்கு இவுனுங்க ரெண்டு பேத்தோட காலேஜுக்கு போவணும்.” என்றவன் மீது இருந்த பார்வை பெரியவர்கள் மீது சென்றது ஒளிர்பிறைக்கு.

 

 

அவ்விருவரும் நல்ல பிள்ளையாக முகத்தை வைத்துக்கொண்டு கைகட்டி கொண்டார்கள். கொடுக்கும் பாவனைகள் சரியில்லாது போனதால் அவள் ஒரு மார்க்கமாக பார்வையை செலுத்த, “இவுனுங்க எதுவும் வம்பு பண்ணல மதினி.” தானாக வம்புக்கு முதலடி எடுத்து வைத்தான் கவிநேயன்.

 

“இப்ப நா ஏதாச்சும் இவுனுங்க வம்பு பண்ணாய்ங்களான்னு கேட்டனா” என்றதும் எழில்குமரன் தம்பியை முறைக்க, “கிறுக்கு பயலே” என வாய்க்குள் முணுமுணுத்தான் இமையவன்.

 

 

“ஒழுங்கு மருவாதையா என்னா பண்ணிங்கன்னு சொல்லிடுங்க. உங்க அண்ண வேற ரெண்டு நாளு ஊருக்கு போறாரு. அதுக்கான வேலயே எனக்கு நெறைய கெடக்கு.” 

 

 

“என்னாது அண்ணா ஊருக்கு போவுதா” என மூவரும் வாயை பிளந்தார்கள் ‌

 

 

காய போட்டு இருந்த கேழ்வரகை அள்ளி மூவர் வாயிலும் போட்டவள், “இந்த தடவ வால சுருட்டி வெக்கல நானே ஒட்ட வெட்டிடுவ.” என்றாள்.

 

 

அண்ணன் ஊருக்கு செல்வதை அறிந்த மூவரும் துள்ளி குதிக்காத குறையாக திமிர்த்தனத்தை காட்டினார்கள். இனி பயம் இல்லை என்ற மிதப்பில் கல்லூரியில் நடந்ததை கூறினார்கள்.

 

 

“உங்களை எல்லாம் அய்த்த எப்டித்தா பெத்து போட்டுச்சின்னு தெரியல. என்னால காலேஜுக்கு வர முடியாது. உங்க அண்ண கிட்ட சொல்லி கூட்டிட்டு போங்க.” 

 

 

 

ஊருக்கு செல்வதால் எப்படி இருந்தாலும் அண்ணன் வரமாட்டான் என்ற தைரியத்தில், “அதெல்லாம் எங்களுக்கு தெரியாது மதினி. அண்ணன் நாளைக்கு வூட்ல இருக்க மாட்டாரு. அண்ண எடத்துல இருந்து எங்களை பாத்துக்க வேண்டிய பொறுப்பு உங்களோடது. நேரத்த கெடுக்காம நாளைக்கு காலேஜுக்கு வந்து சேருங்க.” என்றவர்கள் அவள் கொடுத்த அடியை வாங்கிக்கொண்டு பறந்தார்கள்.

 

 

தொல்லை செய்த மூவரும் பக்கத்தில் இல்லாததால் தன் வேலைகளை விரைவாக முடித்தாள். முடித்து ஓய்வெடுக்க செல்லும் நேரம் ஆண்டாள் தண்ணீர் எடுத்து வரும்படி கூற, கழுவி வைத்த பாத்திரங்களை பின்புறம் அடுக்கி வைத்திருப்பதால் எடுக்க சென்றாள்.

 

 

உச்சி வெயில் மண்டையை பிளக்க, அதை பொருட்படுத்தாது சுடுக்கல்லில் அமர்ந்திருந்தான் செந்தமிழன். அவனைப் பார்த்ததும், “தமிழு… எத்தினி தடவ உனக்கு சொல்றது இந்த மாதிரி வெயில்ல இருக்காதனு. அடிக்குற வெயில்ல உடம்பு சூடாகிட போவுது உள்ள போ.” என்றாள்.

 

 

அசைவு கொடுக்காமல் அவன் யோசனையில் சுழல, கொழுந்தனின் அசையா உணர்வில் அவன் அருகில் சென்றாள். மதினின் வரவை கண்டு கொண்டாலும் இமை சிமிட்டாமல் அப்படியே அமர்ந்திருக்க, “தமிழு” என தோள் தொட்டாள்.

 

 

 

திரும்பி முகம் நோக்கியவன் முகம் தெளிவில்லாமல் இருந்தது. அதில் பதறியவள் என்னவென்று விசாரிக்க, சற்று முன்னர் நடந்ததை விவரித்தான்.

 

 

காலில் விழ வைத்து கெஞ்ச வைப்பதாக சபதம் செய்தவரிடம், “தப்பு பண்ணது நீங்க சார் நாங்க இல்ல. அதுக்கான தண்டனைய நீங்கதா அனுபவிக்கணும். என்னா நடந்தாலும் சரி நீங்க செஞ்சுகிட்டு இருக்க தப்ப ஆதாரத்தோட நிரூபிச்சு தண்டனை குடுக்க தான் போற.” என்றவன் பேச்சு கோபத்தை கிளப்பியது சிவகுமாருக்கு.

 

 

கோபம் பொங்கி வாக்குவாதங்கள் செய்து கொண்டிருக்க, நிதானத்தோடு பதில் கூறிக் கொண்டிருந்தான் செந்தமிழன். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதங்கள் முற்ற, சைக்கிளில் ஏற்றி வைத்த பாலை உதைத்து தள்ளினார்.

 

 

அதிலிருந்த பால் அனைத்தும் மண் நிலத்தில் விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ள, கோபம் வந்து விட்டது தமிழுக்கு. அதை அப்படியே அவரிடம் காட்ட, காலில் இருக்கும் செருப்பை கழட்டினார் செந்தமிழனை அடிக்க.

 

உணர்ந்து சுதாரித்தவன் விலகி நிற்க, செருப்பு கீழே விழுந்தது. ஆத்திரம் குறையாதவர் அவன் சட்டையை பிடித்து, “உன்னால முடிஞ்சா நா தான் இது அம்புட்டயும் பண்றன்னு நிரூபிச்சு காட்டுடா அப்போ ஒத்துக்குற நீயும் உன் கூட பொறந்தவய்ங்களும் ஒரு அப்பனுக்கு தான் பொறந்தீங்கன்னு.” என்றதை சொல்லி முடித்தான்.

 

 

அனைத்தையும் கேட்டவள், “அந்த ஆள சும்மாவா வுட்டுட்டு வந்த. நல்லா நாக்க புடுங்குற மாதிரி நாலு வார்த்தை கேட்டுட்டு வர்றது தான.” என கோபம் கொண்டாள்.

 

 

“இந்த மாதிரி ஆளுங்க கிட்ட பேசுறது சரி வராது மதினி. இவன் பண்ண தப்ப கண்டுபிடிச்சு வேலைய வுட்டு தூக்குனதா புத்தி உரைக்கும்.”

 

 

“வேலைய வுட்டு மட்டும் இல்ல தமிழு அவன் பண்ண மாதிரி செருப்ப கழட்டி நாலு அடி அடிச்சிட்டு வரணும். இது மட்டும் உங்க அண்ணனுக்கு தெரிஞ்சா அவன் நிலைமை என்னா ஆகும் தெரியுமா” என்றவள் அறியவில்லை இவை அனைத்தையும் சாப்பிட வந்த மதுரவீரன் கேட்டுக் கொண்டிருக்கிறான் என.

 

 

பம்பை அடித்து முறுக்கேறிய தேகம்  மொத்தமாக புடைத்தது. அவனுக்குள் அடக்கி வைத்த திமிர் பிடித்தவன் வெளியில் எட்டிப் பார்த்தான். தம்பி பட்ட அவமானத்திற்கு பதில் கொடுக்க எண்ணியவன் அதற்கான வேலையை திட்டமிட்டான். அண்ணன் ஒன்று செய்ய அதில் சிக்க போகிறார்கள் தம்பிமார்கள்.

 

 

 

 

சீமை 39

 

 

இரவெல்லாம் தூக்கம் வரவில்லை மதுரவீரனுக்கு. எதுவும் கேட்காது போல் அவன் குரல் கொடுத்ததும் அண்ணனிடம் சொல்ல வேண்டாம் என செய்கை செய்தான் செந்தமிழன். அதையும் கவனித்தவன் காட்டிக் கொள்ளாமல் சாப்பிட அமர, சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லி பிரச்சனையை மறைத்தாள் ஒளிர்பிறை.

 

 

தந்தை சென்ற பின் காக்க வேண்டிய தந்தையாய் இவன் மாற, நால்வரில் செந்தமிழன் மட்டும் தனிப்பிரியத்தை கொண்டிருப்பான். காரணம் அவன் குணம் தான். இந்தக் குடும்பத்தில் யாருக்கும் இல்லாத பொறுமையும் அன்பும் அவனிடம். 

 

தந்தை கைதாகி காவல் நிலையம் சென்றதை அறிந்த மதுரவீரன் அருவாளை கையில் எடுத்துக் கொண்டு துள்ளி குதிக்க, அண்ணன் என்றும் பாராமல் புத்தி உரைக்க வைத்த அன்பு தமையன் இவன். 

 

 

அன்று தம்பி மீது கை வைத்ததற்கே கோபம் அவனுக்குள் கொழுந்து விட்டு எரிந்தது. அனைத்து வில்லங்கத்தையும் விட்டுவிட்டு குடும்பஸ்தனாக வாழ்வதால் பொறுமை காத்தான். காலனி கொண்டு தன் உடன் பிறந்தவனை ஒருவன் அடிக்க துணிந்து இருக்கிறான் என்ற சம்பவம் அவனை நல்மனிதனாக யோசிக்க வைக்க தவறியது.

 

 

கொடியவன் பிறப்பிக்கும் போதே இப்போது இருக்கும் நல்லவன் வேண்டாம் என்று எச்சரிக்க, இரண்டுக்கும் நடுவில் இரவெல்லாம் சிக்கி தவித்தான். காலைப் பொழுதை தொட்ட பின்பு கூட ஒரு முடிவெடுக்க முடியாமல் திண்டாடியவன் அப்படியே படுத்திருந்தான். 

 

 

அவனை கட்டியவள் எப்பொழுதும் கவனிக்கும் வேலையை கவனிக்க சென்று விட, இரவெல்லாம் தூங்காததால் தலைவலியில் கண்மூடி படுத்திருந்தான். செவியில் தம்பிமார்களின் பேச்சு சத்தம் அரைகுறையாக விழுந்தது.

 

அதில், “இவுனுங்க என்னாங்கடா சம்பவம் பண்ணிட்டு வந்திருக்காய்ங்க. இதுவே அந்த எடத்துல நானா இருந்துருந்தா புத்திசாலித்தனமா யோசிச்சு இருப்ப.” என்ற இமையவனின் சத்தம் கேட்டது.

 

அவன் பின்னால் வால் போல் சுற்றும் இருவரும் என்னவென்று கேட்க, “அண்ண கையில போன் இருக்கு. நடந்த எல்லாத்தியும் வீடியோ எடுத்து காட்டி இருந்தா அவன் சீட்ட அப்பவோ கிழிச்சிருப்பாய்ங்க.” என்றான்.

 

 

“எடேய் உனக்குள்ள எம்புட்டு பெரிய அறிவுடா.” என எழில்குமரனும்,

 

“எனக்கு அண்ணனா பொறந்துட்டு மக்கா இருக்கியேன்னு பல தடவ வருத்தப்பட்டு இருக்கடா. இன்னிக்கு தான் சந்தோசப்பட வச்சிருக்க.” என கவிநேயனும் பாராட்டினார்கள்.

 

 

முதல் தம்பியை பார்த்து புன்னகைத்தவன் இரண்டாவது தம்பியை முறைக்க, “உனக்கு எப்டிடா இந்த ஐடியா வந்துச்சு?” அவன் முறைப்பிலிருந்து தப்பிக்க பேச்சை மாற்றினான் சின்னவன்.

 

 

“எல்லா பெருமையும் போனுக்குகே சேரும். எங்க திரும்பினாலும் எத எடுத்தாலும் வீடியோ எடுத்து போடுறாய்ங்க. நம்ம தெக்கத்திய தவிர உலகமே மாறிடுச்சு.” என்றவர்கள் பேச்சு சத்தம் அவன் விழிகளை திறக்க வைத்தது.

 

***

 

ஒளிர்பிறை மூலம் சாமந்திக்கு விஷயம் பகிரப்பட்டது. அவளுக்குள் சொல்ல முடியாத கோபம். சிவகுமார் அருகில் இருப்பதாக நினைத்து வீட்டையே கலவரப்படுத்தி விட்டாள் அனைத்தையும் தூக்கி எறிந்து. மனைவியின் செயலை கவனித்தவன்,

 

“ஏண்டி கிறுக்கு எதாச்சும் புடிச்சிருக்கா உனக்கு?” கேட்டான்.

 

 

கையில் பிடித்திருந்த மண் சட்டியை தரையில் போட்டு உடைத்தவள், “அது ஒன்னுதா புடிக்காத கொறை இப்ப எனக்கு.” என்றவள் புலம்பிக்கொண்டு வேலையை கவனித்தாள்.

 

 

மதினியின் அர்த்தமில்லாத செயலில், “மதினி எல்லாத்தியும் உடைக்குறன்னு குழம்பு சட்டிய உடைச்சிடாதீங்க. நாங்க இன்னு சாப்பிடல.” என்றான் சிலம்பன்.

 

மூக்கு புடைக்க முறைத்தவள், “தின்னுங்கடா வூட்ல இருக்க மொத்த சோத்தையும் சட்டில போட்டு தின்னுங்க. அது மட்டும் தான உங்களுக்கு பண்ண தெரியும். எவனோ கேடு கெட்டவன் செருப்ப தூக்கி இருக்கான். நா அந்த எடத்துல இருந்திருந்தே… அவன் கால் சட்டைய உருவி மிதிச்சிருப்ப அப்பனாக முடியாதபடி.” தையத் தக்கா வென்று குதித்தாள்.

 

 

“அடியே! என்னான்னு சொல்லிட்டு அப்புறம் குதிச்சிட்டு கெட.” என்ற கணவனிடம் நடந்ததை சொல்லியவள்,

 

“இவனுங்க பண்ண வம்பால தான தமிழுக்கு இந்த நெலைமை. பாவம் அப்பாவி புள்ள அது. ஆரு பேச்சுக்கும் போவாது. செருப்ப தூக்குனவன் கை கட்டையில போவ.” என்றவள் மனம் அடங்கவில்லை.

 

 

சிலம்பன் மதினி சொன்ன வார்த்தையை ஏற்க முடியாமல் அப்படியே நிற்க, மொழியனுக்கு மனம் கேட்கவில்லை. இவர்களின் அண்ணன் எதுவும் பேசாமல் உள்ளே சென்று விட, “கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்கான்னு பாரு இவருக்கு. ஒத்த வார்த்தை அவன திட்டுனா என்னாவா? உங்களுக்கு போயி நல்லது நெனைக்க நெனைச்சான் பாரு அவன சொல்லணும்.” பேச்சுக்கு கூட ஒரு வார்த்தை திட்டாமல் செல்லும் கணவனின் செயலில் சலித்தவள் அர்ச்சித்தாள்.

 

****

 

 

ஆறுமுகம் சண்முகம் இருவருக்கும் இன்று விசாரணை. இந்த முறையாவது ஜாமின் கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு அவர்களது பிள்ளைகள் வந்திருந்தார்கள். பொதுவாக மதுரவீரனும் மச்சக்காளையனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் அவ்வாறு சந்தித்து வருடங்கள் பல ஆகிவிட்டது.

 

 

விசாரணைக்கு நடக்கும் பொழுது கூட அந்த சந்தர்ப்பம் அமையவில்லை. இன்று மதுரவீரன் உள்ளே நுழைய, மச்சக்காளையன் சரியாக அந்த நேரம் வெளியில் வந்தான். இருவரும் மோதிக் கொண்டு யார் என்று தெரியாமல் மன்னிப்பு கேட்க வர, பார்வைகள் கோபத்தை பிரதிபலித்தது. கேட்க வந்த மன்னிப்பை கேட்காமல் அவரவர் வழியில் சென்று விட்டார்கள்.

 

 

விசாரணை நடத்தப்பட்டது. ஏற்கனவே ஏழு ஆண்டுகளாக இழுத்துக் கொண்டிருக்கும் இவ்விசாரணையை இன்னும் ஆறு மாதத்திற்குள் முடிக்கும்படி நீதியரசர் உத்தரவிட்டார். கூடவே ஒருமுறை மட்டுமே ஜாமுனில் இருவரும் சென்று இருப்பதால் இந்த முறை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

 

 

சண்முகம் முகத்தில் அப்படி ஒரு மகிழ்வு. அதை அப்படியே பிரதிபலித்தார் தன் மகனைப் பார்த்து. தந்தையின் கண்ணில் தெரியும் ஆனந்த விழி நீரை கண்டு உள்ளம் மகிழ்ந்த மச்சக்காளையன் மேற்கொண்டு நடக்கும் வேலைகளை கவனிக்க சென்று விட்டான்.

 

 

ஆறுமுகம், “இப்டியே ஜெயிலுக்குள்ளயே செத்துப் போயிடுவன்னு மாருகிட்டு  கெடந்தய்யா. இந்த உசுர காப்பாத்தி என் மண்ணுல வுட்டுட்ட.” என மகனின் கைப்பிடித்து நன்றி உரைத்தார்.

 

“என்னாப்பா நீங்க பெரிய வார்த்தை எல்லாம் பேசிக்கிட்டு. எப்பவோ உங்களை வெளிய எடுத்து இருக்க வேண்டியது. செய்ய முடியாத சூழ்நிலையில இத்தினி வருசத்தை கடத்திட்ட.” ஒரு நொடி அவன் முன்னால் ஒரு உயிர் எரிந்து கரிக்கட்டையான சம்பவத்தை நினைத்து கலங்க, ஆறுமுகத்திற்கு தங்கை நினைவு.

 

 

கைதாகிய சில மாதங்களில் இருவருக்கும் ஜாமின் வழங்கியது அரசு. அந்த மகிழ்வோடு இருவரும் ஊருக்குள் கால் எடுத்து வைக்க, சண்முகத்தின் உடன் பிறந்த சகோதரி கணவன் மரணத்திற்கு நீதி கேட்டு அவர்கள் முன்னால் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு மரணத்தை தழுவினார். 

 

 

அந்த நினைவில் இருந்து வெளிவர முடியாமல் ஆறுமுகம் கண்கலங்க, தந்தையை கவனித்தவன் தன்னை தேற்றிக்கொண்டு, “விடுங்கப்பா அதா இப்போ வெளிய வந்துட்டீங்களே. இனிமே இந்த வழக்குல இருந்து மொத்தமா உங்களை வெளிய எடுக்குறது தான் என்னோட அடுத்த கட்ட வேலை.” என்றான்.

 

 

***

 

இருவருக்கும் ஜாமின் கிடைத்த விஷயம் இரு வீட்டிற்கும் பகிரப்பட்டது. மகிழ்ச்சிக்கு எல்லை இல்லாமல் ஆனந்த கூத்தாடியது இரு வீடும். அதுவும் ஆண்டாளின் நிலை சொல்லவே வேண்டாம். கணவன் வீடு வரும் தருணத்திற்காக வாசலில் காத்துக் கொண்டிருந்தார். 

 

 

உள்ளே மருமகள் மாமனாருக்கு பிடித்ததை சமைக்க ஆரம்பிக்க, பிள்ளைகள் நால்வரும் தந்தையின் முகத்தைக் காண ஏங்கிக் கொண்டிருந்தார்கள். 

 

 

அவர்கள் வீட்டின் எதிர்புறம் இருக்கும் சாமந்தியும் மாமனாரை வரவேற்க ஏற்பாடுகளை செய்ய, தனி ஒரு ஆளாக தங்களை வளர்த்த தந்தையைக் காண திண்ணையில் அமர்ந்திருந்தார்கள் மொழியனும் சிலம்பனும்.

 

 

அவர்களின் எதிர்பார்ப்பை வெகு நேரம் காக்க வைத்து நிறைவேற்றினார்கள் அவ்வீட்டின் பெரிய தலைவர்கள். முதலில் சண்முகம் தான் வீட்டு வாசலில் வந்து நின்றது. தங்கள் திருமணத்தின் போது கூட இல்லாத மாமனாரை புன்னகை முகமாக வரவேற்றாள் சாமந்தி.

 

 

அவளின் திருமணம் பிரச்சனையோடு நடந்ததால் ஆறுமுகத்தை ஜெயிலில் கூட சென்று பார்க்கவில்லை.  அதையெல்லாம் தீர்த்துக் கொள்ளும் நோக்கோடு கைகளை உயர்த்தி பெரிதாக ஆரத்தி சுற்றி, “உள்ள வாங்க மாமா.” என்றாள்.

 

 

தந்தையை பார்த்ததும் பிள்ளைகள் இருவரும் கண் கலங்கினார்கள். அதுவும் மொழியன் அவருக்கு செல்ல பிள்ளை. உயிர் கொடுத்து உயிரை விட்ட தாய்க்கு சமமாக என்றும் கருதுவான் தந்தையை. ஆண் பிள்ளைகள் என்பதால் ஒட்டி உறவாடாமல் கலங்கி நிற்க,

 

“அழக்கூடாது ராசாங்களா” என்று தைரியப்படுத்தினார் சண்முகம்.

 

எதிர்வீட்டில் நின்ற சண்முகத்தை பார்த்ததும் தன் கணவனை எதிர்பார்த்தார் ஆண்டாள். அவரின் ஆசை நிறைவேறியது காரில் இருந்து இறங்கிய ஆறுமுகத்தின் வரவால்.

 

 

“என் சாமிமிமீமீஈஈ” என கணவனை கட்டிக்கொண்டு அழுது தீர்த்தார்.

 

 

 

பல வருடங்களாக பார்க்காத மனைவியை ஆரத்தழுவி தன் அன்பை தெரிவித்தவர் சமாதானப்படுத்தினார் அழுகையை நிறுத்த. இருந்தும் அவர் விடாமல் அழுது கொண்டிருக்க, “அப்பாவ உள்ள வர வுடுமா.” என்ற செந்தமிழின் வார்த்தையில் அமைதியானார்.

 

 

“மாமா, பின் வாசல் பக்கம் வாங்க குளிச்சிட்டு முறையா முன் வாசல் வழியா வரலாம்.” என்ற மருமகளை ஆசையாக பார்த்தவர்,

 

“நல்லா இருக்கியாம்மா” மனமார விசாரித்தார்.

 

“ரொம்ப நல்லா இருக்க மாமா. நீங்க பின்பக்கம் போங்க சுடுதண்ணி ஆத்தி வெச்சிருக்க.” என அனுப்பி வைக்க, ஆண்டாள் கணவன் பின்னால் சென்றார்.

 

 

எதிர்வீட்டில் இன்னும் வீட்டின் திண்ணையிலேயே பாசப் போராட்டம் நடந்து கொண்டிருக்க, அழைத்து வந்த வாகனத்துக்கு பணம் செலுத்திய மச்சக்காளையன் பெரிய பாரம் குறைந்ததாக எண்ணி அதே திண்ணையில் அமர்ந்தான்.

 

 

கணவனின் உணர்வுகளை புரிந்து கொண்டவள் ஆதரவாக தோள் மீது கை வைக்க, பெருமூச்சு விட்டு தன்னை ஆஸ்வாசப்படுத்திக் கொண்டான்.

 

 

தன் மாமனாரை அனுப்பிய ஒளிர்பிறை எதிர்வீட்டை நோட்டமிட, “மாமா, திண்ணையில உக்காராம வூட்டுக்குள்ள போங்க. எத்தினி வருசம் ஆவுது உங்க கால் பட்டு.” என உள்ளே அனுப்ப முயன்றாள் சாமந்தி.

 

 

தோழியின் வார்த்தைகளைக் கேட்டவள், “போவக்கூடாத எடத்துக்கு போயிட்டு வந்திருக்காய்ங்க நேரா வூட்டுக்குள்ள வரக்கூடாது. பின்பக்கமா கூட்டிட்டு போயி குளிக்க வெச்சு முன் வாசல் வழியா அனுப்புங்க.” என்றிட, மொத்த பேரும் அவளை பார்த்தார்கள்.

 

 

சங்கடப்பட்டு சில நொடிகள் தன் முகத்தை வேறு பக்கம் வைத்துக் கொண்டவள், “நல்லா இருக்கீங்களா மாமா” என சண்முகத்தை விசாரிக்க, என்ன பதில் கொடுப்பது என்று தெரியாமல் தலை குனிந்து கொண்டார்.

 

 

 

சங்கடமான சூழ்நிலையை மாற்ற எண்ணிய சாமந்தி மாமனாரை பின்பக்கம் அழைத்து செல்ல, மச்சக்காளையன் பார்வை உடன்பிறவா அண்ணன் மனைவி மீது ஊர்ந்தது.

 

 

அவனின் பார்வையில் கோபம் இல்லை என்பதை அறிந்து, “எத்தினி நாளைக்குதா இப்டி பாத்துக்கிட்டு கெடக்க போறீங்க கொழுந்தனாரே… சட்டுனு இறங்கி வந்து மதினி கிட்ட பேச பாருங்க.” என்றவள் அவன் பார்வை மாறுவதை உணர்ந்து உள்ளே ஓடிவிட்டாள்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்