Loading

நிறம் 14

 

ராஜரத்தினம் அங்கிருந்து விடைபெற்று சென்றதும், அத்தனை நேரம் தேக்கி வைத்திருந்த இறுக்கத்தை கைவிட்டவராக, கூடத்தின் நடுவிலிருந்த நீள்சாய்விருக்கையில் அமர்ந்துவிட்டார் தமயந்தி.

 

ஏற்கனவே, உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் மகளின் மீதே கவனத்தை வைத்திருந்தவரான பெரியநாயகி, மகள் சரிந்ததைக் கண்டு, “தமா…” என்று அழைத்தவாறே அவரின் அருகே அமர, பெரியநாயகியின் தோள் சாய்ந்து கதறினார் தமயந்தி.

 

அவரின் மகள் தொலைந்து போனது, வாழ்வு பாழானது என்று எல்லாவற்றையும் ஒருவித அழுத்தத்துடனே கடந்தவர், இப்போது தன் மகள் இத்தனை வருடங்கள் கழித்த வாழ்விற்கு தானும் ஒரு காரணம் என்பதை அறிந்ததும், உடைந்து போனார்.

 

“மையூ இத்தனை நாள் நம்ம கூட இல்லாம, இப்படி பாசத்துக்காக ஏங்கி தவிச்சு வாழ நான் தான ம்மா காரணம். நான் புத்தியில்லாம, நீங்க யாரு சொன்னதையும் கேட்காம செஞ்ச தப்புக்கான தண்டனையை என் பொண்ணு இத்தனை நாள் அனுபவிச்சுருக்கான்னு நினைக்கும்போதே மனசு தாங்கல ம்மா. மையூ திரும்ப கிடைச்சதும், அந்த விக்ரமால செத்துப்போயிருக்க வேண்டிய என் பொண்ணு, ஏதோ ஒரு மூலையில நல்லபடியா வாழ்ந்துருக்கான்னு நினைச்சேன். ஆனா, அந்த வள்ளி பேசுனதை வச்சே, அவ என் பொண்ணை எவ்ளோ கொடுமைப்படுத்தியிருப்பான்னு புரிஞ்சுருச்சு. எல்லாத்துக்கும் நான் தான் காரணம்!” என்று மற்றவர்களை பேசவே விடாமல் புலம்ப, வீட்டினருக்கு தான் என்ன செய்வதென்று புரியவில்லை.

 

சிறு வயது முதலே தமயந்தி தன் அண்ணன் பரமேஸ்வரனை சுற்றியே வருவார் அத்தகைய பாசமிகு தங்கையின் அழுகையை காணமுடியாமல், பரமேஸ்வரன் மருத்துவரான மைத்துனர் கதிரேசனிற்கு  அழைத்து நடந்தைக் கூறினார்.

 

“அவங்க இத்தனை வருஷம் மனசுக்குள்ள அழுத்தி வச்சிருந்த பாரம் தான் இப்போ அழுகையா வெளிய வருது. அவங்க அழுகட்டும். யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க. நான் டவுன்ல இருக்கேன். கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்.” என்றார் கதிரேசன்.

 

அவர் கூறுவதும் சரி தான் என்பதால் ஆண்கள் தங்களின் இணைகளை பார்க்க சொல்லிவிட்டு தங்களின் வேலையை பார்க்க மனதே இல்லாமல் சென்றனர்.

 

பெரியநாயகி தன் மகளின் சிரசை வருடிக் கொண்டிருக்க, அவரின் சிந்தனை பின்னோக்கி சென்றது.

 

*****

 

உஷா – தாமஸின் காதல் திருமணத்தால் குடும்பத்தில் ஏற்பட்ட சிறு பிளவுகள் குறைந்து வந்த காலம் அது. வீட்டை விட்டு ஓடிச்சென்று திருமணம் செய்து கொண்டவர்களை அப்போது தான் மன்னித்து ஏற்றுக்கொண்டனர். தாமஸிற்கு சொந்தம் என்று யாருமில்லாததால் அதே வீட்டிலேயே தங்கிவிட்டனர் தம்பதியர்.

 

அடுத்து வீட்டிற்கு கடைக்குட்டியான தமயந்தியின் திருமணத்தைக் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தபோது, தன் நண்பனின் விருப்பம் அறிந்து அவனிற்கான தன் பெற்றோரிடம் பேசினார் பரமேஸ்வரன்.

 

“அப்பா, அவன் குடும்பம் வசதியில்லைனாலும், பையன் திறமையானவன் ப்பா. நம்ம தமயந்தியை பிடிச்சுருக்குன்னு என்கிட்ட வந்து சொன்னான். இதுவரைக்கும் தமயந்தி கிட்ட பேசுனதே இல்ல. முதல்ல வீட்டுல இருக்குறவங்க விருப்பம் தெரிஞ்சதுக்கு அப்பறம் தான் தமா கிட்ட பேசுவேன்னு சொல்லிட்டான். அவ்ளோ மரியாதை தெரிஞ்ச பையன். என் நண்பன்னு சொல்லலை, நம்ம தமயந்திக்கு பொறுத்தமானவன் ராஜரத்தினம் தான் அப்பா.” என்று பரமேஸ்வரன் தன் தந்தையிடம் பேசிக் கொண்டிருக்க, அவர்கள் அமர்ந்திருந்த இடம் உணவு மேஜை என்பதால், அங்கிருந்த தாமஸிற்கும் அவர்கள் பேசியது கேட்டது.

 

பரமேஸ்வரன் கூறியதைக் கேட்ட தாமஸ், ‘ஓஹ், பொண்ணை பிடிச்சுருக்குன்னு உன்கிட்ட சொன்னா, மரியாதை தெரிஞ்சவனா? என்னைக் குத்திக்காட்டனும்னே இந்த வீட்டுல எல்லாரும் அலையுறாங்க!’ என்று மனதிற்குள் புழுங்கினார் தாமஸ்.

 

பரமேஸ்வரன் அதை எதார்த்தமாக தான் கூறியிருந்தார். ஆனால், வீட்டினரிடம் சரியாக பழகாத தாமஸிற்கு, அவர்கள் எதை பேசினாலும், அது தன்னைப் பற்றியே என்ற எண்ணம் முதலிலிருந்தே இருந்ததால், இதையும் அவரை நோக்கி வீசப்பட்ட குற்றச்சாட்டாக தான் எடுத்துக் கொண்டார்.

 

அதன்பிறகு பலகட்ட குடும்ப ஆலோசனைகளுக்குப் பின்னர், ராஜரத்தினம் – தமயந்தி திருமணம் நிச்சமானது. நிச்சயித்த பின்பே தமயந்தியிடம் பகிரப்பட்டது. அதைக் கேட்டதும் கூம்பிய தமயந்தியின் முகத்தை யார் காணவில்லை என்றாலும், அகிலாண்டேஸ்வரி கண்டுகொண்டார். அதை தன் கணவனிடமும் கூறினார்.

 

ஆனால் பரமேஸ்வரனோ, “கல்யாணம் நிச்சயமானவுடனே, பொண்ணுங்க பயப்படத்தான செய்வாங்க. எல்லாரும் இங்கயிருக்குறப்போ அது மட்டும் வேற இடம் போகுதுன்னு வருத்தமா இருக்கும். கல்யாணமான பின்னாடி, இங்கயே அவங்களையும் கூப்பிட்டுக்குவோம்.” என்று கூறி பேச்சை திசை திருப்பிவிட்டார்.

 

அதன் பலனை இரு வாரங்கள் கழித்து அனுபவித்தனர். திருமணத்திற்கு இரண்டு நாட்களே உள்ளன என்று அனைவரும் காலில் சக்கரம் கட்டாத குறையாக ஓடிக் கொண்டிருக்க, மாலையுடன் வந்த இருவரின் வரவு அதை நிறுத்தியது… அவர்களின் ஓட்டத்தை அல்ல.. அந்த திருமணத்தையே!

 

அவர்களை முதலில் கண்டது பெரியநாயகி தான்.

 

“அடியேய் தமா, என்ன காரியம் டி பண்ணி வச்சுருக்க?” என்றவரின் குரலில் அனைவரும் அங்கு கூடிவிட்டனர்.

 

குடும்பத்திற்கு தெரியாமல் திருமணம் செய்தது சிறிது உறுத்தினாலும், காதலித்தவனை மணமுடித்ததால் உண்டான தைரியத்துடன் நின்றார் தமயந்தி.

 

இரண்டு நாட்களில் திருமணம் நடக்கப்போகும் பெண், இப்படி திருமணம் செய்து கொண்டு வந்து நின்றால், அந்த குடும்பத்திற்கு ஏற்படும் அதிர்ச்சியை அங்கிருந்த அனைவரின் முகங்களிலும் காண முடிந்தது.

 

சற்று நேரம் மௌனம் நிலவ, அதைக் கலைத்தார் வைத்தீஸ்வரன்.

 

“நீ காதலிக்கிறன்னு முன்னாடியே சொல்லியிருந்தா, இப்படி ஒரு அவமானம் ஏற்பட்டிருக்காது.” என்று மட்டும் கூறினார்.

 

அவரின் குரலிலிருந்த வருத்தம் தமயந்தியையும் வருத்த, “என்னை மன்னிச்சுடுங்க அப்பா. எங்க நான் இவரைக் காதலிக்கிறதை உங்ககிட்ட சொன்னா, ஒத்துக்க மாட்டீங்களோன்னு தான் சொல்லாம…” என்று இழுத்தவரை பார்த்த வைத்தீஸ்வரன், “அதான் உனக்கே தெரிஞ்சுருக்கே நாங்க சம்மதிக்க மாட்டோம்னு. அப்போ ஏன்னு யோசிக்க முடியாத அளவுக்கு காதல் கண்ணை மறைச்சுடுச்சுல.” என்று கூறிவிட்டு திரும்பிக் கொண்டார்.

 

தந்தையின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தமயந்தி குழம்பி நின்ற வேளையில் மீண்டும் வைத்தீஸ்வரனே பேச ஆரம்பித்தார்.

 

“ஹ்ம்ம், இனி எதையும் மாத்த முடியாது. அவங்களுக்கும் நமக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்ல.” என்று அவர் கூறிக் கொண்டிருகும்போதே, இடைவெட்டிய தமயந்தியின் காதல் கணவனான விக்ரம், “அது எப்படி மாமா சரியா இருக்கும்? வேற்று மதத்தவரான உங்க மூத்த மருமகன் உங்க கூட இருக்கலாம், ஒரே ஆளுங்க நான், அதாவது உங்க சின்ன மருமகன் உங்க கூட இருக்கக்கூடாதா? அவங்களும் காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க, நாங்களும் காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அவருக்கும் பெத்தவங்க இல்ல, எனக்கும் இல்ல. இவ்ளோ ஒற்றுமையில என்ன வேற்றுமையை கண்டீங்க?” என்று அந்த பெரிய மனிதரை எதிர்த்து பேச, வைத்தீஸ்வரனோ ‘அவனும் நீயும் ஒன்றா’ என்பது போல பார்த்தார்.

 

“எங்க அப்பாவையே எதிர்த்து பேசுறியா?” என்று பரமேஸ்வரன் சண்டைக்கு போக, அதன்பிறகு வாய் சண்டை கைச்சண்டை ஆகும் அபாயம் ஏற்பட்டதால், வைத்தீஸ்வரன் தான் இடைப்புகுந்து அதை நிறுத்தினார்.

 

*****

 

“அத்தை..” என்ற அகிலாண்டேஸ்வரியின் குரலில் நினைவுகளிலிருந்து மீண்டு  சுயத்தை அடைந்தார் பெரியநாயகி.

 

“இந்தாங்க அத்தை தமாக்கு இந்த பாலை கொடுங்க. நான் போய் மையூவை பார்த்துட்டு வரேன்.” என்று கூற, அப்போது தான் பேத்தியைப் பற்றிய ஞாபகம் பெரியநாயகிக்கு வந்தது.

 

“மையூம்மா என்ன பண்றா?” என்று வினவ, “தெரியலை அத்தை. ரூபா அவ ரூம்ல தான் இருக்கா. நான் போய் பார்க்குறேன்.” என்றாவாறே வர்ஷினியின் அறைக்கு செல்ல மாடியில் கால் வைத்த அகிலாண்டேஸ்வரி ஸ்வரூபனின் பேச்சில் அங்கேயே நின்றார்.

 

*****

 

“டேய் என்னடா இங்க வந்து நிக்கிற? உள்ள உன்னை தேடிட்டு இருந்தேன்.” என்றவாறே ஸ்வரூபனின் அருகில் அமர்ந்தான் அகில்.

 

இருவரும் வீட்டைச் சுற்றியுள்ள தோட்டத்தில் ஸ்வரூபனிற்கு பிடித்த இடமான மல்லிகை பந்தலருகேயுள்ள கல்மேடையில் அமர்ந்திருந்தனர்.

 

“ஹ்ம்ம், உள்ள நடக்குற டிராமாவை பார்க்க முடியாம தான் இங்க வந்துட்டேன்.” என்று சற்று எரிச்சலாகவே கூறினான் ஸ்வரூபன்.

 

“ஹே, என்னடா டிராமான்னு பேசிட்டு இருக்க. அவங்க உன் அத்தை டா.” என்று அவனைக் கண்டிக்க முயன்றான் அகில்.

 

“அத்தைங்கிறதால உண்மை பொய்யாகிடாது மச்சான். குடும்பத்தை நினைச்சு கவலைப்படாம, காதலிக்கிறவனை கைப்பிடிக்கிறதுல இருக்க தெளிவு, அப்படி காதலிச்சவன் சரியானவனான்னு யோசிக்கிறதுல இல்ல. அவனுக்கு ஏற்கனவே குடும்பம் இருக்குறது தெரியாம, ரெண்டு வருஷம் சேர்ந்து வாழ்ந்துருக்காங்க!” என்று ஸ்வரூபன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அங்கு வந்த அகிலாண்டேஸ்வரி, “ஸ்வரூபா, என்ன பேசிட்டு இருக்க?” என்று கத்தியிருக்க, அவரின் சத்தம் கேட்டு, வீட்டிலிருந்த மற்ற பெண்கள் அங்கு கூடினர்.

 

“நம்ம குடும்பத்து ஆளுங்களை பத்தி இப்படி தான் பேசுவியா?” என்று மீண்டும் அகிலா கண்டிக்க, ஸ்வரூபனோ அதைக் கண்டுகொள்ளவில்லை.

 

அவனின் அலட்சியத்தால் அகிலாவின் கோபம் வலுப்பெற, அவனை ஏதோ சொல்லப்போக, அவரைத் தடுத்த தமயந்தி, “விடுங்க அண்ணி. அவன் என்ன தப்பா பேசிட்டான்னு கண்டிக்கிறீங்க?” என்றார்.

 

“இல்ல தமா, உன்னைப் பத்தி பேச இவனுக்கு என்ன உரிமை இருக்கு?” என்று அவர் கூறும்போதே அவரை இடைவெட்டி, “இந்த வீட்டோட அடுத்த தலைமுறையோட மூத்த வாரிசுங்கிற உரிமை இருக்கு ம்மா.” என்றான் ஸ்வரூபன்.

 

அவனின் இத்தகைய கடுமையான பேச்சினை இதுவரை கண்டிராத பெண்கள் சற்று அதிர்ந்து தான் போயினர்.

 

மற்றவர்கள் அதிர்ச்சியின் பிடியில் இருக்க, முதலில் சுயத்தை அடைந்த தமயந்தி, “அண்ணி, என்னைப் பேச என் மருமகனுக்கு உரிமை இல்லயா என்ன? விடுங்க.” என்று அகிலாவிடம் கூறியவர், “வாங்க ம்மா…” என்று அதிர்ந்து நின்ற பெரியநாயகியை அழைத்துக் கொண்டு சென்றார்.

 

அவர்களின் பின்னே உஷாவும் சென்றார். செல்லும் முன் உஷா ஸ்வரூபனை பார்க்க, அவனோ மற்றைய பக்கம் திரும்பிக் கொண்டான்.

 

“ஸ்வரூபா…” என்று அகிலா சின்ன குரலில் அழைக்க, அவனோ அவரை திரும்பிக் கூட பார்க்காமல் உள்ளே சென்றான்.

 

அவன் அறைக்கு செல்ல வேண்டி மாடியில் ஏற, அங்கு பாதி படிகளில் நின்று கொண்டிருந்த வர்ஷினியைக் கண்டான். அவளின் கூர் பார்வையே அவன் பேசியதனைத்தும் கேட்டுவிட்டாள் என்று கூறியதும். எனினும், தோளை குலுக்கிவிட்டு, சாதாரணமாக அவளைக் கடந்து சென்றுவிட்டான்.

 

“டேய் அகிலா, என்னாச்சு டா என் பையனுக்கு?” என்று அகிலாண்டேஸ்வரி வினவ, ‘க்கும், என்கிட்ட சொல்லிட்டு தான் பண்றானுக்கும். உள்ள நடந்தது டிராமான்னு சொல்லிட்டு இவனே இங்க ஒரு டிராமா க்ரியேட் பண்ணிட்டு போயிருக்கான். இதை வச்சு இன்னும் என்னென்ன பிரச்சனை வருமோ?’ என்று மனதிற்குள் புலம்பினான்.

 

*****

 

பிற்பகல் வேளை என்பதால், அந்த ஊரில் நடமாட்டம் சற்று குறைவாக தான் இருந்தது. அதனாலேயே ஷ்யாம் இந்த நேரத்தை தேர்ந்தெடுத்து வெளியில் சுற்றுகிறான்.

 

சற்று தூரம் நடந்தவன் தூரத்திலிருந்த குடவுனைக் கண்டு புருவம் சுருக்கினான். ஏனெனில், அந்த பாழடைந்த குடவுன் தற்போது பயன்பாட்டில் இல்லை என்பது அவனிற்கு தெரியும். அப்படியிருக்கையில் அதற்குள், சுற்றுமுற்றும் பார்த்து திருட்டுமுழியுடன் ஒருவன் செல்வதைக் கண்டு அவனின் காவல்துறை மூளை விழித்துக் கொண்டது.

 

அவனின் அனுபவத்தில் இது போன்ற பாழடைந்த இடங்களில் நடக்கும் எத்தனையோ குற்றங்களை கண்டிருக்கிறான். அதை வைத்தே, இங்கும் ஏதோ தவறாக நடப்பதாக அவனின் அறிவு எடுத்துக் கூற, அவனும் மெதுவாக பதுங்கியபடியே அந்த குடவுனிற்குள் நுழைந்தான்.

 

செல்லும் வழியில் அகிலை தொடர்புகொள்ள, அகிலின் எண்ணோ அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

 

“இடியட்! எதுக்கு வந்துருக்கோம்னு தெரியாம, குடும்பத்தோட என்ஜாய் பண்ண வேண்டியது.” என்று திட்டியபடியே உள்ளே சென்றான் ஷ்யாம்

 

அங்கு ஷ்யாம் கண்ட காட்சியில் முதலில் குழம்பியவன், சில நிமிடங்களிலேயே நடந்த, நடக்கப்போகும் நிகழ்வுகளை யூகித்தான்.

 

அவன் யூகித்ததை எண்ணி பல்லைக் கடித்துக் கொண்டு அடுத்து நடக்கப் போகும் நிகழ்வுகளுக்காக காத்திருந்தான்.

 

*****

 

‘இந்த சுவருக்கு என்ன எங்க அம்மா மேல கோபம்? அவங்களே நடந்ததை நினைச்சு ஃபீல் பண்ணிட்டு இருக்காங்க. இப்போ போய் இப்படி ஹர்ட் பண்ற மாதிரி பேசிட்டு, ஒண்ணுமே நடக்காத மாதிரி தோளை குலுக்கிட்டு போறான்! அடுத்த தடவை அவனைப் பார்க்கும்போது இருக்கு.’

 

‘யாராவது வேணும்னே ஏமாறுவாங்களா? என்னமோ இவன் தான் எல்லாத்துலயும் மிஸ்டர். பெர்ஃபெக்ட்னு நினைப்பு!’

 

‘இன்னைக்கு வெளிய வரட்டும்.’

 

இப்படி மனதிற்குள் புலம்பிக்கொண்டே அந்த தாழ்வாரத்தை தன் காலடிகள் கொண்டு அளந்து கொண்டிருந்தாள் வர்ஷினி.

 

ராஜரத்தினம் சென்றபிறகு, சிறிது நேரத்திலேயே தன் சோகத்திலிருந்து வெளிவந்தவளின் சிந்தனை தன் தாயிடம் தாவியிருந்தது. இது தான் அவளின் இயல்பு. சோகத்தை எப்போதும் சுமந்து கொண்டிருக்க மாட்டாள்.

 

தனக்காக தன்னுடன் இருந்த ரூபாவிடம், தனக்கு ஒன்றுமில்லை என்று கூறிவிட்டு, தன் அன்னையைப் பார்க்க கீழே செல்லும் போது தான், ஸ்வரூபனின் பேச்சைக் கேட்க நேர்ந்தது.

 

அவனின் பேச்சில் முதலில் திகைத்து நின்றவளை அவன் வீசிச்சென்ற பார்வை உசுப்பேற்றியிருந்தது. அதன் காரணமாக முன்னர் நடந்த நிகழ்வுகள் எல்லாம் மனதில்  பின்தங்கிப் போக, ‘மிஷன் ஸ்வரூபன்’னில் நிலைத்து நின்றது அவளின் சிந்தனை.

 

அவன் அறைக்கு வெளியே ஒருத்தி அவனை மனதிற்குள் வருத்தெடுத்துக் கொண்டிருக்க, அறையினுள்ளோ ஒருவன் அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

 

“டேய், என்னத்த பண்ணிட்டு வந்தன்னு சொல்லிடு டா. என்னமோ, நான் தான் உனக்கு ஸ்க்ரிப்ட் எழுதி தர மாதிரி எல்லாரும் என்னையவே ரவுண்ட் கட்டுறாங்க.” என்று பாவமான குரலில் அகில் கூற, அத்தனை நேரமிருந்த எரிச்சல் மறைந்து சிறிது சிரிப்பும் தோன்றியது ஸ்வரூபனிற்கு!

 

“யாரு உங்க அத்தையா?” என்று ஸ்வரூபன் கட்டிலில் சாய்ந்து கொண்டு வினவ, “அத்தை மட்டுமா? அத்தைக்கு அத்தை, அத்தை பெத்த சொத்தைன்னு எல்லாரும் தான்! இதுல அந்த கிழவியோட பார்வையே கொஞ்சம் டெரர்ரா தான் இருந்துச்சு. எதுக்கும் இன்னைக்கு சோறு சாப்பிடுறப்போ கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்.” என்று தங்கைக்கு ஏற்ற அண்ணனாக புலம்பிக் கொண்டிருந்தான்.

 

“விடு மச்சான், இதெல்லாம் ஒரு விஷயம்னு புலம்பிட்டு இருக்க.” என்று சிரிப்புடன் ஸ்வரூபன் கூற, “ஏன் டா சொல்ல மாட்ட? என்னை மாட்டி விட்டுட்டு நீ நல்லா குதூகலமா தான் டா இருக்க. ஆமா, இப்போது தங்களின் சிரிப்பிற்கான காரணம் என்னவோ?” என்று அகில் கேட்டான்.

 

“ம்ம்ம், நான் ஒரு கல்லுல ஒரு மாங்காய் தான் பிளான் பண்ணேன். ஆனா, இப்போ பல மாங்காய்கள் கிடைக்கும் போல.” என்று விசிலடித்தவன், “சரி, வா வெளிய போயிட்டு வரலாம்.” என்று அகிலை அழைக்க, அவனோ “யூ கோ மேன், வொய் மீ?” என்று வினவ, “சரி, இன்னைக்கு நீ நம்ம லேடீஸ் கேட்குற கேள்வியில சிக்கி சின்னாபின்னமாகணும்னு உன் தலையில எழுதியிருந்தா அதை யாரால் மாத்த முடியும்?” என்று கூறிவிட்டு கதவை நோக்கி சென்றான் ஸ்வரூபன்.

 

“டேய் நில்லு டா.” என்று கத்தியவாறே அங்கு அனாதையாக கிடந்த தன் அலைபேசியை எடுத்துக் கொண்டு ஸ்வரூபனின் பின்னே சென்றான்.

 

“ஐயோ, இந்த போன் வேற சார்ஜ் இல்லாம ஸ்விட்ச் ஆஃப்பாகிடுச்சே. அந்த போலீஸ்காரன் வேற இதுக்கு கத்துவானே.” என்று அவனின் அடுத்த புலம்பலை ஆரம்பிக்க, “இன்னுமா டா அவனுக்கு பயந்துட்டு இருக்க?” என்று அகிலை கேலி செய்தவாறே அறையை விட்டு வெளியே வந்தான் ஸ்வரூபன்.

 

சொர்க்கவாசல் கதவு திறப்பதைப் போல அவனின் அறைக்கு வெளியே காத்திருந்தவளைக் கண்ட, ஸ்வரூபன் ‘என்னவென்று’ புருவம் உயர்த்தி வினவ அவளோ, ‘இதுகொன்னும் குறைச்சல் இல்ல!’ என்று மைண்ட் வாய்ஸில் அவனின் தலையில் மானசீகமாக மத்தளம் கொட்டினாள்.

 

ஸ்வரூபனிற்கு பின்னே வந்த அகில், வர்ஷினியைக் கண்டதும், பாசத்துடன் பேச வர, “உனக்கும் எனக்கும் பேச்சே இல்ல. சைலண்ட்டா இரு.” என்று கத்தரித்து விட்டாள்.

 

“ரைட்டு… வரு பேக் டு தி ஃபார்ம்!” என்று முணுமுணுத்தவாறே சற்று தள்ளி நின்று கொண்டான் அகில்.

 

“ஹலோ, உங்களுக்கு இந்த குடும்பத்து மேல எப்படி உரிமை இருக்கோ, அதே மாதிரி தான் எனக்கும் இருக்கு. இனிமே எங்க அம்மாவை தப்பா பேசுனா…” என்று அவள் இழுக்க, அவனோ தன் கைகளை கட்டிக்கொண்டு அவளருகே நடந்தவாறே, “பேசுனா… என்ன பண்ணுவ?” என்று புருவங்களை உயர்த்தி கேட்டான்.

 

‘என்ன இப்படி உடனே கேட்டுட்டான்?’ என்று நினைத்தவள், “இனிமே எங்க அம்மாவை தப்பா பேசுனா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.” இன்று கூறிவிட்டு வேகமாக அவளின் அறைக்குள் சென்றுவிட்டாள்.

 

“லூசு…” என்று முணுமுணுத்தவனின் அருகில் வந்த அகில், வர்ஷினியின் அறையை சுட்டிக்காட்டி, “தாட் மேங்கோ?” என்று வினவ, ஸ்வரூபனும் அதை ஆமோதித்தவாறே கீழே இறங்கினான்.

 

“ஹ்ம்ம், நல்லா இருந்தா சரிதான்!” என்றவாறே ஸ்வரூபனை பின்தொடர்ந்தான் அகில்.

 

*****

 

ஸ்வரூபனும் அகிலும் சென்றது பிரதீப்பின் அடியாட்களை அடைத்து வைத்திருந்த குடவுனிற்கு தான்.

 

அவர்கள் உள்ளே நுழைந்த நொடி, அவர்களின் பின்னே, “என்ன நடக்குது இங்க?” என்று ஷ்யாமின் குரல் கேட்டது.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்