Loading

சீமை 34

 

 

அடுத்த நாள் விடியல் அழகாக பிறந்தது மச்சக்காளையன் வீட்டில். கொட்டாவி விட்டுக்கொண்டு எழுந்த அவ்வீட்டின் மருமகள் கீழே படுத்திருக்கும் கணவன் முகத்தை பார்த்தாள். திருமணமான நாளிலிருந்து இந்த இடைவெளி இருவருக்குள்ளும் இன்னும் மாறாமல் இருக்கிறது. 

 

அதை எண்ணி தனக்குள் தலையாட்டி கொண்டவள் கலைந்திருந்த முடியை அள்ளிக் கொண்டை இட்டாள். மனைவியின் கண்ணாடி வளையல்கள் தூங்கிக் கொண்டிருந்த கணவனின் இமைகளைப் பிரிக்க, ஜன்னல் வழியாக வந்த சூரிய ஒளியில் மலர்ந்த பூவாய் மின்னினாள் சாமந்தி.

 

 

அவள் என்ன நினைப்பாள் என்பதையெல்லாம் கவலை கொள்ளாதவன் நேராக ரசிக்கும் அம்பை எய்தான். முதலில் கண்டு கொள்ளாமல் தன்னை சீர் செய்யும் வேலையில் இருந்தவள் கண்டுகொண்டு செய்வதை நிறுத்த, இவனின் பார்வை விடுவதாக இல்லை.

 

 

கட்டியவனின் பார்வை உள்ளுக்குள் பாய்ந்து அடிவயிற்றை சிலுர்க்க வைக்க, அவன் பார்வை போகும் இடத்திற்கு ஏற்ப கைகள் சென்றது. கலைந்திருந்த முந்தானையை சரி செய்து இடுப்பில் சொருக்கியவள் முறைத்துக் கொண்டே கட்டிலை விட்டு இறங்கினாள்.

 

 

இன்றைய நாள் அவன் மனதை ஏதோ செய்தது போல குறும்போடு அவள் இறங்கும் நேரம் தடுக்க பார்த்தான் கால் நிமிர்த்தி. அதை எதிர்பார்க்காமல் இறங்கியவள் தடுமாறி மெத்தையில் அமர்வதற்கு பதில் தரையில் விழப் பார்க்க,

 

“சாமு…” என்றவாறு எழுந்து நின்று பிடித்தான்.

 

 

விழும் அதிர்ச்சியோடு தன்னை முதல் முறை அழைக்கும் கணவனின் திகைப்பும் சேர்ந்து கொள்ள, இருந்த கொஞ்ச நஞ்ச சுதாரிப்பும் அவளை விட்டு நகர்ந்து கணவன் மீது படுக்க வைத்தது. எழுந்தமர்ந்தவன் தொப்பென்று பாயில் படுத்தான்.

 

 

அவன் மீது படுத்துக்கொண்டு, “இப்ப என்னானு மாமா கூப்பிட்டீங்க?” என கேட்டாள்.

 

 

அப்பொழுதுதான் அழைத்தது ஞாபகத்திற்கு வந்தது. பதில் சொல்லாமல் தன் மேல் விழுந்தவளை ஓரம் படுக்க வைத்து, “சாக்கு முட்டன்னு சொன்ன.” என்று ஓடி விட்டான் சட்டென்று.

 

 

அவன் படுக்க வைத்த அதே தோரணையில் படுத்திருந்தவளின் இதழ்கள் பூவாய் பூத்தது. காலையில் ஏற்பட்ட மயக்கம் அவளை எழவிடாமல் செய்ய, மதினி வராததால் மாட்டுடன் மல்லு கட்டிக் கொண்டிருந்தார்கள் இருவர்.

 

“செண்பகமே… செண்பகமே….

பால் கறக்கணும் வழி விடு தங்கமே…” சாமந்தி வீட்டில் இருக்கும் வெள்ளை பசு ஒன்று பாவமாக சிலம்பனை பார்க்க, அதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாதவன் பாடலைத் தொடர்ந்தான்.

 

 

காதில் ரத்தம் வருவது போல் உணர்ந்த மாடு, “ம்ம்மாமாமாமா” என அலற, “இந்த சிலம்ப பாட்டை அவ்ளோ ரசிக்கிறியா என் செல்ல குட்டி.” என்றவன் மாட்டின் மூக்கின் மேல் முத்தம் கொடுப்பதாக எண்ணி வாய் நுழைத்து விட்டான்.

 

 

விரிந்த மூக்கு நொந்து தலையை சிலுப்ப, “ஆமான்னு வேற சொல்லுறியா” என அதைக் கொல்லாமல் கொன்றான்.

 

 

“அண்ண உனக்கு வேற பாட்டு பாடுற நீ சமத்தா நெறைய பால் குடுக்கிறியா.” கரகரவென கத்துவதற்கு சங்கீதம் என்று பெயர் சூட்டிக் கொண்ட சிலம்பன் அடுத்த பாடலை பாடினான்.

 

 

பொறுக்க முடியவில்லை அந்த ஜீவனால். தன்னால் முடிந்தவரை தலையை அங்கும் இங்கும் ஆட்டி தன் எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டிருக்க, “இந்த சங்கீத வித்வானுக்கேத்த சங்கீத ரசிகை நீதான்.” என்று அதை தடவி கொடுத்து இன்னும் சோதித்தான்.

 

“உன் பாதம் போகும் பாதை நானும் தேடி வந்தேனே… உன் மேல ஆசைப்பட்டு பார்த்து பார்த்து நின்னேனே.” மாடு ரசிப்பதாக எண்ணி அதன் காதில் நெருக்கமாக வாய் வைத்து பாட, மூளை அதிர்ந்தது அந்த வாயில்லா ஜீவனுக்கு.

 

விட்டுவிடும்படி கெஞ்சிக் கொண்டிருந்தது விடாமல் தலையை ஆட்டி. அதையும் தனக்கு சாதகமாக எண்ணிக் கொண்டவன் மாட்டின் காதை பிடித்துக் கொண்டு, “செண்பகமே செண்பகமே….

சிலம்பன் பாட்டை கேக்கும் நந்தவனமே…” நன்றாக சத்தம் போட்டு பாட, உயிர் பிழைக்க வேண்டும் என்ற பயத்தில் பின் காலால் எட்டி உதைத்தது அவனை.

 

 

ரசிகையை உற்சாகப்படுத்துவதாக எண்ணி பலத்த சேதாரத்தை வாங்கிக் கொண்டவன் மாட்டோடு மல்லு கட்டிக் கொண்டிருந்த மொழியன் மீது விழுந்தான்.

 

 

விழுந்த வேகத்தில் இருவரின் தலையும் முட்டிக்கொள்ள, மொழி தடுமாறி மாட்டின் மடி மீது மோதினான். ஏற்கனவே பால் கறக்கிறேன் என்ற பெயரில் சித்திரவதை செய்து கொண்டிருக்கும் மொழியன் மீது கடுப்பில் இருந்த பசு இதுதான் சமயம் என்று ஓங்கி உதைக்க, சிலம்பன் மீது விழுந்தான்.

 

 

“எத்தே….மண்டய கொன்னுட்டானே!” தம்பி விழுந்ததும் இரண்டு அடி தள்ளி விழுந்த சிலம்பன் தலையைப் பிடித்துக் கொண்டு சுருங்கி படுக்க,

 

“எடுபட்ட பயலே! இந்த நேரத்துல கூட பொய்தா வருமாடா உனக்கு.” அவனுக்கு பக்கத்தில் சுருண்டு படுத்துக் கொண்டிருந்த மொழியன் கருகினான்.

 

 

“கூறு கெட்டவனே என் மேல வந்து விழுந்து புட்டு என்னையவே கேலி பண்ணுறியா? எந்திரிச்சி போடா அங்குட்டு” காலால் எட்டி உதைக்க, மீண்டும் மாட்டின் காலருகே விழுந்தான் மொழியன்.

 

தன்னிடமே விடாமல் வந்து வம்பு இழுக்கும் மொழியனை இன்றோடு தீர்த்துக்கட்ட எண்ணிய அந்த பசுமாடு அவன் மார்பின் மீது ஏறி நின்றது.

 

“கொலை பண்ணுது… எங்க மதினி சோறு போட்டு வளர்த்த மாடு என்னை கொலை பண்ணுது.” என்ற அலறல் அந்த மாட்டிற்கு ஆனந்தமாக இருந்தது போல மீண்டும் மேலேறி நின்று மிதித்தது.

 

“எடேய்! முன்னாடி பொறந்த கிறுக்கு பயலே… வாடா காப்பாத்துடா. இப்டியே விட்டா என் நெஞ்செலும்பு சாணிக்கு நடுவுல சாணியா கரைஞ்சிடும் போல.” என சிலம்பனை பார்த்தபடி அலறினான்.

 

 

எழ முடியாத சூழ்நிலையில் அவன் நிலை இருக்க, “நீயெல்லாம் ஒரு அண்ணனாடா? தம்பிகாரன் சாவுற நெலைமைல இருக்கான் பாத்து ரசிக்கிற.” என்று சாடினான்.

 

 

“எந்திரிச்சி வந்தனா நெஞ்செலும்பு மட்டும் இல்ல உடம்புல இருக்குற எல்லா எலும்பையும் மிதிச்சே கொன்னுடுவ.” என பல்லை கடித்துக் கொண்டு வசனம் பேசியவன் கைகளை பின்னந்தலைக்கு தாங்கிக் கொண்டு, 

 

“நானே எந்திரிக்க முடியாம கெடக்க இவனை வந்து காப்பாத்தணுமா… காப்பாத்தணும்” என்றான் வலி பொறுக்க முடியாமல் முகத்தை சுருக்கி கொண்டு.

 

 

“நடிக்காதடா டேய்! என்னை கொன்னுட்டு இந்த சொத்து எல்லாத்தியும் நீயே சொந்தம் ஆக்கிகலான்னு பாக்கிறாயா?”

 

“ஆமாண்டா தெக்கத்தி சீமையில இருக்க எடம் அத்தினியும் நம்ம அப்பன் சம்பாதிச்சி வெச்சது பாரு. உனக்கு தராம திருடிட்டு போகப் பாக்குற. அங்க இருக்க சாணி உனக்கு இங்க இருக்க சாணி எனக்கு. அது தவிர சொத்து எதுவும் நமக்கு கெடையாதுடா மூடிக்கிட்டு எந்திரி.”

 

 

 

“எந்திரின்னா எப்டிடா எந்திரிப்ப கிறுக்கு பயலே இந்த மாடு பாரு என்னா உயரமா என் மேல ஒத்த கால வெச்சுக்கிட்டு நக்கலா பாக்குது.” அவன் சொன்னது போல் ஒரு காலை அவன் மீது வைத்துக்கொண்டு தெனாவட்டாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தது அந்த பசுமாடு.

 

 

காலை ஆறு மணிக்கு எழுந்து வந்தவன் பால் கறக்கிறேன் என்று எட்டு மணி ஆகியும் ஒரு சொட்டு பாலை கூட கறக்கவில்லை. இரண்டு மணி நேரமாக அதை தடவி கொடுக்கிறேன் என்ற பேர்வழியில் சித்திரவதை செய்ய, தன்னை தண்டித்தவனை தண்டித்த நிம்மதியில் நிற்கிறது.

 

 

 

“எடேய்! மாட்டு கூட என்னாடா வம்பு பண்ண?”

 

 

“உன்ன மாதிரி கேனத்தனமா பாட்டு பாடிக்கிட்டடா கெடந்த… என்னா வம்பு பண்ணனு கேக்குற. நா பதமா பக்குவமா பாத்து தடவிட்டு தான்டா இருந்த. அதா என் பாசத்தை புரிஞ்சுக்காம இப்டி நெஞ்சு மேல நிக்குது.”

 

 

“என் பாட்டு உனக்கு கேனத்தனமா இருக்காடா கிறுக்கு பயலே. என் சங்கீதத்துல தன்னையே மறந்து டான்ஸ் ஆடி என்னை தள்ளி வுட்டதால தான் உன் மேல வந்து வுழுந்த” இன்னும் அந்த மாட்டின் அவஸ்தை புரியாமல் இவனே ஒரு காரணத்தை தேடிக்கொண்டான்.

 

 

“கட்ட குரல் கவிதாக்கு பதிலா கட்ட குரல் சிலம்பனு பேரு வர்ற அளவுக்கு கரகரன்னு பாடி புட்டு இளையராஜா ரேன்ஜ்க்கு பேசாதடா.”

 

 

வலியெல்லாம் அவனை விட்டு பறந்து போய்விட்டது தன் திறமையை குறை சொன்னதில். வேகமாக புயல் போல் எழுந்தவன், “ஆர பாத்துடா கட்ட குரல்னு சொன்ன. இப்போ… இந்த நிமிசோ இந்த சிலம்பன் குரல் வளம் என்னான்னு பாக்க போற.” என்றவன் கச்சேரி நடத்துவது போல் அமர்ந்தான்.

 

 

தொடையில் தாளம் தட்டிக் கொண்டு செண்பகமே பாட்டை பாட ஆரம்பித்தான். அவன் பார்த்துக் கொண்டிருந்த மாடு ‘மீண்டுமா’ என்பது போல் இவனைப் பார்க்க, சின்னவன் பார்த்துக் கொண்டிருந்த மாடு, ‘இவனுங்கள…’ என்பது போல் பார்த்தது.

 

 

அவர்களின் மொழி அறியாத அப்பாவி குழந்தை சிலம்பன் தன் பாட்டை தொடர்ந்து கொண்டிருக்க, ஐந்தறிவு ஜீவன் ஆறறிவு ஜீவனை தாக்க ஆரம்பித்தது. இருபுறம் இருந்தும் இரு மாடுகள் அவனை பந்தாட, வயிறு வலிக்க சிரித்துக் கொண்டிருந்தான் மொழியன்.

 

 

மிதிப்பட்டு குத்து வாங்கும் நேரத்தில் கூட தம்பியின் சிரிப்பு எரிச்சலை கொடுத்தது சிலம்பனுக்கு. அவன் சிரிப்பை அடக்க எண்ணியவன் தட்டி தடுமாறி அவன் மீது தொப்பன்று தெரியாமல் விழுவது போல் விழ, பேச முடியாமல் மூச்சற்று கிடந்தான் தரையில்.

 

 

அதுவும் போதாது என்று பழித்திருக்க எண்ணிய சிலம்பன் அவன் மீது படுத்து கொண்டு பாட்டு பாட, அங்கிருந்த மொத்த மாடுகளும் இருவரையும் சூழ்ந்து கொண்டது. சாணியை அள்ளி சுத்தம் செய்தவர்கள் மீது சாணியை போட்டது மாடுகள்.

 

 

அள்ளும் பொழுது மணக்காத சாணம் முகத்தில் விழும் பொழுது மணந்தது இருவருக்கும். மொழியன் மூக்கை மூடிக்கொண்டு எழ முயற்சிக்க, குமட்டிக் கொண்டு வாயில் பட்ட சாணத்தை துடைத்துக் கொண்டிருந்தான் சிலம்பன்.

 

 

இருவரின் நிலை காண பெரும் ஆனந்தத்தை கொடுத்தது சாமந்தி வளர்க்கும் மாடுகளுக்கு. எல்லா இடத்திலும் செய்யும் குறும்புத்தனத்தை வாய் பேசாத ஜீவன்கள் தானே என்று இவர்களிடமும் காட்டுவார்கள் தினமும். முக்கியமாக சிலம்பன் சாணி அள்ளும் பொழுது, “தள்ளி போடா கழுத…” என திட்டிக்கொண்டே அள்ளுவான்.

 

 

சின்னவனும் தினமும் அங்கிருக்கும் வாயில்லா ஜீவன்களை கை பொம்மை போல், “இதுங்க ஒரு மூஞ்சிங்க தெனமும் சேவ செய்ய வேண்டியதா கெடக்கு.” தடவி நோகடிக்க, வெகு நாட்களாக சமயம் பார்த்துக் கொண்டிருந்த மாடுகளின் சங்கம் இன்று தீர்ப்பை நிறைவேற்றி விட்டது.

 

 

ஒட்டுமொத்த சாணத்தையும் இருவர் மீதும் வாலை தூக்கி கொட்டிய குறும்புக்கார மாடுகள் அப்பாவியாய் அவரவர் இடங்களுக்கு சென்று விட, பின்புறம் வந்த மச்சக்காளையன் தம்பிகள் இருவரையும் பார்த்து கொதித்தான்.

 

 

அடி வாங்கி மிதிவாங்கி வாங்கக்கூடாத அனைத்தையும் வாங்கிய தம்பிகளின் கடும் நிலையை சிறிதும் அறியாது, “கேடு கெட்டவனுங்களா மாட்டு சாணத்தை கூட வுட்டு வெக்காம தின்னுட்டு கெடக்குறீங்களா” என்று மிதிக்க ஆரம்பித்தான் இருவரையும்.

 

 

பத்து நிமிடங்களுக்கு மேலாக மிதித்தவன், “மருவாதையா எந்திரிச்சி வேலைய பாருங்கடா” என எச்சரித்து விட்டு சென்றான்.

 

 

முடியாமல் படுத்து கிடந்தவர்கள் பெருமூச்சு விட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் திரும்பி பார்க்க, “ஆஆஆஆஆ” என அலறினார்கள் முகம் முழுவதும் சாணி இருப்பதை பார்த்து.

 

 

சீமை 35

 

“நீயி எல்லாம் எதுக்குடா எனக்கு அண்ணனா இருக்க? உன்ன வுட சின்ன பையனுங்க எவ்ளோ பெரிய சம்பவத்த பண்ணிட்டு வந்து நம்மளை வுட பெரியவன்னு கெத்து காட்டிட்டு கெடக்காய்ங்க. நீயி என்னாடானா சின்ன புள்ள மாதிரி காலேஜ்ல சண்ட போட்டுட்டு வந்து நிக்குற” 

 

“கவி…” என இமையவன் தாழ்ந்த குரலில் தம்பியை அழைக்க,

 

 

“பேசாதடா! இனிமே என் முன்னாடி பேசுற தகுதி உனக்கு கெடையாது. நம்ம குடும்ப வம்சம் எப்டிப்பட்ட வம்சம்னு தெரியுமாடா. அத அசிங்கமா இப்டி பிரின்ஸ்பல் முன்னாடி காவு குடுத்துட்டு வந்திருக்கியே… இந்தப் பாவம் உன்ன சும்மா வுடுமா.” அநியாயத்திற்கு சத்தம் போட்டான் கவிநேயன்.

 

 

“எடேய், என்னா நடந்துச்சுன்னு கேளுடா” எழில்குமரன் நடந்ததைச் சொல்ல வாய்ப்பு கொடுக்கும்படி கேட்க,

 

“அவன கூட நா மன்னிச்சு வுட்டுடுவ. ஆனா, உன்ன எப்பவும் மன்னிக்க மாட்டடா. கழுத்தைப் புடிச்சு நாலு வெச்சு அவன காலுக்கு கீழ நாய் மாதிரி உக்கார வெக்குறதை வுட்டுட்டு இப்டி அண்ணன துணைக்கு கூப்பிடுறியே தோத்துல உப்பு போட்டு தானடா திங்குற.” என அவனையும் விட்டு வைக்காமல் திட்டினான்.

 

 

 

அவர்கள் செயற்குழு கூட்டம் நடக்கும் மாமரத்தின் மேல் பந்தாவாக கடைக்குட்டி அமர்ந்திருக்க, தவறு செய்து விட்டதால் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு இமையவன் வலப்புறம், எழில்குமரன் இடப்புறம் மரத்தை சுரண்டிக்கொண்டு நின்றிருந்தார்கள். 

 

“உங்களால அவங்க மொகத்துல முழிக்க எனக்கு வெக்கமா கெடக்குடா. என்னை வுட முன்னாடி பொறந்திங்கன்னுதா பேரு கொஞ்சம் கூட பொறுப்பு இல்ல.”

 

 

“அப்டி என்னாடா நாங்க பொறுப்பு இல்லாம நடந்துகிட்டோம்?”

 

“பேசாதடான்னு அப்பவே சொல்லிட்ட. உன்னோட கிளாஸ்ல தான அவன் படிக்குறா. அவன் உக்காரும் போது பெஞ்சுல ஆணி வெக்க தெரியாது. எழுதுன நோட்டு புக்க ஒளிச்சு வெச்சு அடி வாங்க வெக்க தெரியாது. அட அதெல்லாம் கூட வேணா…” என்றவன் மரத்தில் இருந்து குதித்து,

 

 

“அவன் சட்டைல இங்க் அடிச்சு வுடவா கூட தெரியாது உனக்கு. அந்த மொழியன் பையன எப்டி எல்லாம் விரட்டி அடிப்பன்னு தெரியுமா ஸ்கூல்ல. என்னை கண்டா அப்டி அலறி அடிச்சு ஓடுவா. சம்பவம் செய்யணும்னா அந்த மாதிரி செய்யணும்டா” என்றவன் பேச்சு அவனுக்கே ஒரு மாதிரியாக தான் இருந்தது.

 

 

இருந்தும் இதுதான் சமயம் என்று பந்தா காட்ட நினைத்தவன், “உங்க கூட பொறந்தவன்னு நெனைக்கும் போது எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு. சண்ட நடக்கும் போது எனக்கு தகவல் சொல்லி அனுப்பி இருந்தா கூட நா வந்து அவனை மிதிச்சி இருப்ப.” என்றவனை முறைத்தார்கள் அண்ணன் தம்பி இருவரும்.

 

 

“இன்னாத்துக்குடா மொறைக்கிறீங்க? இந்தக் கவிநேயன் அடிச்சு ஆட்டம் ஆடுனதை பாத்தது இல்லியே நீங்க.” என கையால் வீடு கட்ட,

 

 

“நாளைக்கு வூட்ல இருந்து ஆள கூட்டிட்டு வரச் சொன்னதுனால உன்ன உதவி பண்ண கேட்டோம். இதா சாக்குன்னு எங்க காதுல ரெண்டு பலாப்பழத்தை மாட்ட நெனைக்கிறியா.” என அசிங்கப்படுத்தினான் எழில்குமரன்.

 

 

“பலாப்பழத்தை இல்லிடா இவன் பலா மரத்தையே நம்ம காதுல தொங்க வுட பாக்குறா. ஒவ்வொரு தடவயும் நம்ம அவுனுங்களை அடிக்கும் போது காணாம போறவன் சரியா அடிச்சு முடிச்சதுக்கு அப்புறம் வந்திடுவான்.” என்ற இமையவனின் வார்த்தையில் திருத்திருவென்று முழித்து தலையை திருப்பிக் கொண்டான் கவிநேயன்.

 

 

 

மூவரும் ஒருவர் மாற்றி ஒருவரை அசிங்கப்படுத்திக்கொள்ள, செந்தமிழன் அவ்வழியாக வந்தான். அண்ணனைப் பார்த்ததும் அவன் காதல் விவகாரம் ஞாபகத்திற்கு வந்தது. 

 

 

“ஏண்டா தம்பிகளா… அண்ண நமக்கு பாத்து இருக்குற மதினி யாரா இருக்கும்?” என கேட்டான் இமையவன்.

 

 

“கிறுக்கு பயலே… அதா தெளிவா சொன்னானே தேன்மொழின்னு.” எழில்குமரன்.

 

 

“இருந்தாலும் நம்ம மதினியோட தங்கச்சியானு சந்தேகமா இருக்கு.” இமையவனுக்கு இருந்த சந்தேகத்தை முன்வைக்க, “சந்தேகம் வந்தா உடனே தீர்த்திடனும். வாங்கடா அண்ணன பின் தொடர்வோம்.” என்ற கவிநேயனின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு மூவரும் அவனை பின்தொடர்ந்தார்கள்.

 

 

ஊர் தோப்பை தாண்டி வாழை மரத் தோப்புக்குள் நுழைந்தான். “என்னாடா அண்ண இதுக்குள்ள போவுது. என்னாத்துக்கா இருக்கும்” இமையவன்.

 

“பசி எடுத்திருக்கும் ரெண்டு வாழைப்பழத்தை திண்ணலான்னு போவுது.” என்ற எழில்குமரனை அவன் முறைக்க, “பின்ன என்னாடா கிறுக்கு பயலே. எதுக்கு போவுதுன்னு தெரியாம தான பின்னாடி போய்கிட்டு இருக்கோம். அப்புறம் கேள்வி கேட்டா என்னா அர்த்தம்?” என்றான்.

 

 

“எடேய்! காக்கா மாதிரி கத்திக்கிட்டு கெடக்காம ஒழுங்கா பின்னாடி வாங்கடா.” அவர்களுக்கு முன்னால் சென்று கொண்டிருக்கும் கவிநேயன் பின்னால் வரும் இருவரையும் சத்தம் இல்லாமல் அழைக்க,

 

“வர வர இவன் ரொம்ப பேசுறான்டா. அவனுக்கு முன்னாடி பொறந்தவய்ங்கன்னு கொஞ்சம் கூட பயமில்லாம போயிடுச்சு.” என்றான் எழில்குமரன்.

 

 

“இந்த ஊருக்குள்ள சம்பவம் பண்ண வேண்டிய ஆளு நெறைய இருக்குது. அந்த வரிசையில இவன் பேர எழுதி வைப்போம். நேரம் கெடைக்கும்போது நம்ம ஆருன்னு காட்டிடலாம் வுடுடா.” என சமாதானம் செய்தும் புலம்பிக் கொண்டே வந்தான் எழில்குமரன்.

 

 

வாழை தோப்பைத் தாண்டி ஊர் ஒதுக்குப்புறமாக செந்தமிழன் சென்று கொண்டிருக்க, “இதுக்கு நேராவே வந்திருக்கலாமே. எதுக்கு இந்த சுத்து சுத்துறான்னு தெரியலையே.” சுற்றி வளைத்து சென்று கொண்டிருக்கும் அண்ணனின் செயலில் குறைப்பட்டான் கவிநேயன்.

 

 

தனக்குப் பின்னால் மூவர் வருவதை அறியாத செந்தமிழன் ஊர் ஒதுக்கப்புறமாக இருக்கும் கிணறு பக்கம் செல்ல, அவனுக்காக காத்திருந்தாள் காதலி தேன்மொழி. மாமனைக் கண்டதும் புன்னகையோடு வரவேற்க, “ரொம்ப நேரமா காக்க வெச்சுட்டனா தேனு.” என்றபடி அவள் அருகில் சென்றான்.

 

அண்ணன் சொன்ன தேன்மொழி மதினியின் தங்கையாக இருக்கும் என்று முன்னரே யூகித்ததால் பெரிய அளவு அதிர்ச்சி இல்லை மூவருக்கும். இருந்தும் வீட்டில் அமைதிப்படையாக இருக்கும் அண்ணன் காதல் செய்வதை இன்னும் நம்ப முடியவில்லை மூவராலும்.

 

***

 

நேற்று போடப்பட்ட தயிரை மோராக மாற்றி கணவனுக்கு கொடுத்தாள் ஒளிர்பிறை. இன்னும் இருநாளில் வேலை விஷயமாக வெளியூர் செல்ல இருப்பதால் மனைவியோடு பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறான் மதுரவீரன். வழக்கம்போல் ஆண்டாள் இருவரையும் நோட்டம் விட்டு கரித்துக்கொட்ட,

 

“அய்த்த மோரு குடிங்க” என அவருக்கு கொடுத்தாள்.

 

 

“என்னாத்துக்குடி மிச்ச மீதிய என் தலையில கட்டப் பாக்குற. என் புள்ள காச கரியாக்கவே இந்த வேலையெல்லாம் பண்ணிக்கிட்டு கெடக்க நீயி. பேருக்குனு ஒரு மாடு வளர்த்துக்கிட்டு கெடந்த வூட்ல இவ்ளோ மாட வாங்கி போட்டு என் புள்ளைய நடு வூட்டுல உக்கார வெச்சுட்ட.” நான்கு நாட்கள் ஆகியும் கறந்த பால் வெளியில் விற்பனைக்கு செல்லாததால் மருமகளை சாடினார் ஆண்டாள்.

 

 

“பால் விக்காம போனதுக்கு அவ என்னாமா பண்ணுவா.”

 

 

“இவ தான் எல்லாத்திக்கும் காரணம் பெரியவனே. ஒழுங்கா பால் எடுத்துக்கிட்டு இவ போயிருந்தா என் புள்ள ஸ்டேஷன் வரைக்கும் போய் இருப்பானா. படுபாவி மனசுல எதை நெனைச்சு என் புள்ளைய அனுப்புனாளோ தெரியல… போவ கூடாத எடத்துக்கு போயிட்டு வந்துட்டான்.” 

 

 

“நா போறன்னு எவ்வளவோ எடுத்துச் சொன்ன அய்த்த. தமிழு தான் கேக்காம எடுத்துட்டு போனான்.”

 

 

“கொழுந்தன இப்டித்தா பேரு சொல்லி கூப்பிடுவாய்ங்களா?”

 

 

“சின்ன புள்ளையில இருந்தே இப்டித்தா சொல்லிட்டு இருக்க.”

 

 

“சின்ன புள்ளைல அப்டி கூப்பிட்டா பரவால நல்லா இருக்கும். இப்போ நீ அவனுக்கு மதினி.”

 

 

அத்தையிடம் பேச்சை வளர்க்க விரும்பாத ஒளிர்பிறை, “வுடுங்க அய்த்த இனிமே பேரு சொல்லி பேசல.” என அந்த பேச்சை முடிக்க எண்ணினாள்.

 

“புருசன் இருந்தா மட்டும் அப்பாவி மாதிரி பேச வேண்டியது. அவன் தல அப்டி மறைஞ்சிட்டா போதும்… என்னை நாலா மடிச்சு வாயில போட்டுக்க வேண்டியது.”

 

 

“தெனப்பொழுது அவளை ஏதாச்சும் சொல்லிக்கிட்டே இருக்கணும் இல்ல ம்மா உனக்கு. என்னிக்காது ஒரு நாளு என் பொண்டாட்டி உன்ன மந்திரிச்சு விடப் போறா பாத்துக்கிட்டே இரு.” என்றவன் எதிர்ப்பேச்சு பேசும் அன்னையை கண்டு கொள்ளாது,

 

 

“ஆக வேண்டிய வேலைய பாரு” என அனுப்பி வைத்தான் மனைவியை.

 

 

அடுப்பங்கரை சென்றவள் மனதெல்லாம் ரணமாக இருந்தது. நேற்று தமிழிடம் பேசிவிட்டு வந்திருக்க, அவன் சொன்ன நபர் இன்னும் பதில் அளிக்கவில்லை. அதனால் இன்று கறந்த பாலும் வீட்டில் அப்படியே இருக்கிறது. அதை நினைத்து வருந்தி கொண்டிருந்தவள் மாமியாரின் பேச்சில் இன்னும் வருந்த, பின்னால் நின்று கட்டி அணைத்தான் மதுரவீரன்.

 

 

“அம்மணிக்கு இப்ப என்னா வேணும்” என்றவன் வலது புற காதில் முத்தம் பதித்தான்.

 

 

ஒளிர்பிறை பதில் பேசாமல் அமைதியாக நிற்க, “அம்மணி” என்றான் காதோரம்.

 

 

 

 

“அவங்க பேசுறதை காதுல வாங்கிக்காத அம்மணி. அதா தமிழு ஒருத்தரு கிட்ட பேசி இருக்குறதா சொன்னான்ல. ஒரு ரெண்டு நாளு பதில் வருதான்னு பாரு இல்லினா என் பொண்டாட்டி அம்மணிக்காக நானே இதுல இறங்குற.” என்றவன் கட்டிப்பிடித்துக் கொண்டே அவளை குலுக்கினான்.

 

 

“மனசுக்கு ஒரு மாதிரியா இருக்கு மாமா.” திரும்பாமல் அவன் நெஞ்சின் மீது தலையை சாய்த்தாள்.

 

 

மனைவியை திருப்பியவன், “எதுக்கு அம்மணி” கேட்டிட,

 

“அய்த்த சொன்ன மாதிரி நா தான் இம்புட்டு மாட்டையும் வாங்கி தர சொல்லி அடம் புடிச்ச. இந்த விவகராத்தால தான தமிழு ஸ்டேஷன் வரைக்கும் போய்ட்டு வந்திருக்கா.” என முகம் வாடினாள்.

 

 

வாடாத முகம் கொண்ட மதுரவீரன் புன்னகைத்து, “என் அம்மணி இப்டி எல்லாம் யோசிக்குற ஆளு இல்லியே. இன்னிக்கு என்னா புதுசா பேசிக்கிட்டு இருக்குற. உன்னால இங்க எதுவும் நடக்கல, நடக்கவும் நடக்காது. என் செல்ல அம்மணி கேட்டா ஒரு மாடு இல்ல ஆயிரம் மாடு கூட வாங்கி தருவ. நீயி மட்டும் ஒரு வார்த்த சொல்லு என் குல தொழில வுட்டுட்டு உனக்காக நீயி ஆசைப்பட்ட வேலைய செய்யுற.” என்றான் ஆசை குறையாது.

 

 

கணவனின் செல்ல அழைப்புகளும் கொடுக்கும் முத்தங்களும் மனதோரம் ஒட்டி இருக்கும் சோகத்தை மறைத்தது. “அம்மணினு சொல்லியே ஆள கவுத்துடுங்க மாமா.” என்றவள் சொல்லி முடிப்பதற்குள்,

 

“அம்மணி வார்த்தைய சொல்லி தான என் பொண்டாட்டிய தூக்கிட்டு வந்த என் வூட்டுக்கு.” என்றான்.

 

 

“இந்த வார்த்தைய கேட்டு ஒரு நாள் முழுக்க பித்து பிடிச்ச மாதிரி சுத்திக்கிட்டு இருந்ததை நெனைச்சா சிரிப்பா வருது மாமா.” என்றவள் அவன் முதன் முதலாக அழைத்த நாளை நினைத்து வெட்கப்பட, இவன் தேகம் சூடு பிடித்தது அதில் சிக்கி.

 

 

 

அவள் வெட்கத்தை தனக்கானதாய் மாற்றிக்கொள்ள நினைத்தவன் சிவந்திருந்த கன்னத்தைப் பற்றி, “இந்த அழகான மொகத்தை வெச்சு ஆள கவுத்தது நீதா அம்மணி.” என்றவன் பார்வை அவளிடம் காதல் வேண்டுமென்று மன்றாட, மறுப்பாக தலையசைத்தவள் சம்மதமாக வெட்கப்பட்டாள். 

 

 

 

சீமை 36

 

கட்டியவளின் வருத்தத்தை தாங்கிக் கொள்ள முடியாத மதுரவீரன் உடனே அழைத்தான் தம்பியை. காதலியோடு நேரம் செலவழித்துக் கொண்டிருந்தவன் கைபேசி ஒலி வந்ததும் ஓட்டம் பிடித்தான். பாதியில் விட்டுச் சென்ற காதலனை திட்டிக்கொண்டே தேன்மொழி அங்கிருந்து புறப்பட, அண்ணன் கிளம்பியதால் தம்பிமார்கள் மூவரும் நடையை கட்டினார்கள்.

 

“மதினி தங்கச்சிய உங்களுக்கு புடிச்சிருக்காடா தம்பிங்களா?” இமையவன்.

 

“எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.” கவிநேயன் முந்திரிக்கொட்டை முந்திக் கொண்டது.

 

“மதினி மாதிரியே இவங்களும் நம்ம வூட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் நம்ம கிட்ட நல்லபடியா பேசினா போதும் இமையா. அம்மா பேசுற பேச்சுக்கு மதினி வேணா அமைதியா இருக்கலாம். ஆனா, இவங்க அப்டி இல்ல. மதினிய வுட வூட்ல ரொம்ப செல்லம் வேற.”

 

“அதாண்டா எழிலா நானும் யோசிச்ச. ஆரு வந்தாலும் நம்ம மதினி மாதிரி வராதுடா. நம்ம எவ்ளோ சேட்ட பண்ணாலும் சாப்பிடும் நேரத்துக்கு தட்ட நீட்டிடுவாய்ங்க. தன்னோட வாழ்க்கைதா முக்கியம்னு நெனைக்காம நெறைய நாளு நமக்காக அண்ண கிட்ட சண்ட போட்டு இருக்காய்ங்க. அவங்களை மாதிரி எல்லாம் தேன்மொழி மதனி வருவாய்ங்களான்னு தெரியல.” 

 

 

“எனக்கு தமிழு அண்ண மேல நம்பிக்கை இருக்கு. அண்ண எது பண்ணாலும் நல்லா யோசிச்சுதா பண்ணும். தேன்மொழி மதினிய காதலிக்குதுனா கண்டிப்பா அவங்க நம்ம மதினி மாதிரி நல்லவங்களாதா இருப்பாய்ங்க.” கவிநேயன்.

 

 

“எதுவோ ஒன்னுடா நம்ம வூட்ல கண்ணால சோறு சீக்கிரம் போட போறாய்ங்க.” என இமையவன் குதுகளித்தான்.

 

 

“அண்ணனுக்கு அடுத்து உனக்கு தான் கண்ணாலம்.” என்றான் எழில்குமரன்.

 

 

கல்யாணம் என்றதும் அநியாயத்திற்கு வெட்கப்பட்டான் இமையவன். இன்னும் பல் முளைக்காத பாப்பாவாக இருக்கும் மூவரும் பேசக்கூடாத பேச்சை பேச, “எனக்கு பல கற்பனை இருக்குதுடா. என் பொண்டாட்டி அடக்க ஒடுக்கமா வாய் பேசாத அம்மாஞ்சியா இருக்கணும். நா ஏய் அப்டின்னு குரல் குடுத்தா நடுங்கி ஓடி வரணும். காலைல இருந்து ராத்திரி வரைக்கும் எனக்கு சேவை செஞ்சுக்கிட்டே இருக்கணும்.” என்றான் கனவிலும் நடக்காததை கற்பனை செய்து.

 

 

“என்னாடா நீ… நம்ம கூட படிக்குற எத்தினி புள்ளைங்க மருவாதி இல்லாம பேசிக்கிட்டு அலையுதுங்க. இதுல சேவை பண்ற பொண்ணா கேக்குற.” 

 

 

“நீயி வேணா பாருடா எனக்கு அப்டி ஒரு பொண்ணுதா அமையும். உங்களுக்கு வர மூணாவது மதினி பெரிய மதினிய வுட அமைதியான பொண்ணா இருக்க போவுது.” என்றவனை எண்ணி இறைவன் சிரித்துக் கொண்டான்.

 

 

“ஒருவேளை அடாவடி பண்ற மதினி வந்துட்டாய்ங்கன்னா என்னாடா பண்ணுவ? குதர்க்கமான கேள்வியை கவிநேயன் முன் வைக்க,

 

 

“முடிய புடிச்சு சொலட்டி செவுத்துல ஒரே அடி தான். அதுக்கப்புறம் அவ சாப்பிட கூட வாயைத் திறக்க மாட்டா.” 

 

 

“அப்டிலா இப்ப இருக்க பொண்ணுங்க பொறுத்து போவ மாட்டாய்ங்க.”

 

“இந்த இமையவன் கிட்ட அடி வாங்காம உயிர் வாழனுனா வாய அடைக்கி வெச்சாகணும் உன் மதினி.” வருங்காலத்தில் உண்பதற்கு கூட வாய் திறக்க முடியாத நிலையில் இருக்கப் போகிறோம் என்பதை அறியாது பிதற்றிக் கொண்டிருந்தான் இமையவன்.

 

 

***

 

“அவரு கிட்ட நேத்து ராத்திரி கூட பேசிட்டு வந்த மதினி. காலையில சொல்றன்னு சொன்னாரு இன்னா வரைக்கும் ஒரு போன் போடல.” வீட்டிற்கு வந்த செந்தமிழன் விவரம் கூற,

 

 

“அவரு இல்லினா அடுத்த வேல என்னான்னு பாரு தமிழு. இல்லினா நம்மளே ஊர் ஊரா போயி வித்துட்டு வந்துடுவோம்.” என்றான் மதுரவீரன்.

 

 

“செத்த நேரம் இரு ண்ணா. அவரு கிட்ட எதுக்கும் ஒரு தடவை பேசிட்டு வந்துடுற.” என்றவன் அந்த நபரை தொடர்பு கொண்டான்.

 

 

“நானே போன போடணுனு நெனைச்சுகிட்டு இருந்த தம்பி. உங்க கிட்ட எத்தினி லிட்டர் பால் இருக்கோ அத கொண்டு வாங்க நானு வாங்கிக்குற.”

 

 

“இத வெள்ளனவே சொல்லி இருந்தா எப்பவோ கொண்டாந்து இருப்பனே ண்ணே.”

 

 

“அதா சொன்னனே தம்பி வெள்ளன போன் போடணுனு நெனச்ச. வேலை கொஞ்சம் அதிகமா போனதால போட முடியல. நீயி ஒன்னு தப்பா நெனைச்சுக்காத இன்னிக்கு ஒரு நாளு மட்டும் எடுத்துட்டு வாப்பா. நாளைல இருந்து நானே வூடு தேடி வந்து வாங்கிக்குற.”

 

 

“இதுல தப்பா நெனைக்க என்னா ண்ணே இருக்கு. உங்க சூழ்நிலை அங்க எப்டி இருந்துச்சோ ஆருக்கு தெரியும்.” என்றவன் இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவதாக அழைப்பை துண்டித்தான்.

 

 

உள்ளே வந்தவன் அண்ணனிடம் விஷயத்தை கூற, “சரி தமிழு, இருக்குறதை எடுத்துட்டு போ.” என்றவன், “மூணு கொரங்குங்க இந்த வூட்ல இருக்குமே எங்க ஒளிரும்மா.” விசாரித்தான் வீட்டில் இல்லாத மூவரையும்.

 

 

“தோப்பு வரைக்கும் போயிருக்காய்ங்க மாமா. மதிய சாப்பாடு நேரத்துக்கு வந்திடுவாய்ங்க.”

 

 

“என்னாமோ தோப்பையே கூட்டிப் பெருகிட்டு வர போயிருக்க மாதிரி சொல்ற. சும்மா வெட்டி கதை பேசிட்டு வரவங்களுக்கு சோறு பொங்கி போட்டுட்டு கெட.” என்றவனிடம் எதையும் பேசாமல் அமைதி காத்தாள் ஒளிர்பிறை.

 

 

“வுடுங்கண்ணா சின்ன பசங்க தான” என்ற தம்பியை முறைத்தவன், “எவன்டா அது சின்ன பசங்க? உங்க மதினி அன்னிக்கு தான அவுனுங்களுக்கு இன்னு கொஞ்ச நாளுல கண்ணாலம் ஆகி பொண்டாட்டிங்க வர போறான்னு சொன்னா.” என்றதும் மதினியை திரும்பி பார்த்தான் செந்தமிழன்.

 

 

அவள் மேற்கொண்டு பேச வேண்டாம் என கொழுந்தனிடம் சைகை செய்ய, பார்த்து விட்டான் மதுரவீரன். உடனே அவள் பார்வையை மாற்றிக் கொண்டு அப்பாவியாக நிற்க, “அப்டி அவுனுங்க மூணு பேரும் உனக்கு என்னா பண்ணிட்டாய்ங்கன்னு தெரியல.” எனக் கொனட்டிக் கொண்டு சென்று விட்டான்.

 

 

கணவன் போகும்வரை அப்பாவி முகத்தோடு இருந்தவள், “இவருக்கு என் கொழுந்தைய்ங்க என்னா பண்ணிட்டாய்ங்கன்னு தெரியல தமிழு. எப்ப பாரு புள்ளைங்களை கரிச்சி கொட்டிக்கிட்டு கெடக்காரு.” என்றாள்.

 

 

செந்தமிழன் வாய் திறக்கும் நேரம், “நா இன்னு போவலடி” அடுப்பங்கரை வாசலில் நின்று குரல் கொடுத்தான் அவள் கணவன்.

 

 

ஒளிந்திருந்து வேவு பார்க்கும் கணவனை உள்ளுக்குள் திட்டிக்கொண்டு, “பாலை டின்னுல ஊத்தி வெக்குற எடுத்துக்கிட்டு போ தமிழு.” என்றிட, சிரித்துக் கொண்டே வெளியேறினான் செந்தமிழன்.

 

 

அவன் வெளியே வரும் நேரம் மூவரும் வீட்டிற்குள் கால் வைக்க, “எடேய்! அண்ண உங்களை கேட்டு சத்தம் போட்டுட்டு கெடக்கு. வாய் வம்பு வளர்க்காம பதமா இருங்க.” என எச்சரிக்கை மணி அடித்தான்.

 

 

ஏதோ உளவு துறையிலிருந்து செய்தி வந்தது போல் மூவரும் கண்கள் விரிய ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அண்ணன் செந்தமிழன் இளையவர்களின் பார்வையில் முறைத்துக் கொண்டே செல்ல, “இன்னிக்கு முதுக பழுக்க வுடாம பாத்துக்கணும்டா தம்பிங்களா.” என்றான் கவிநேயன்.

 

 

அவனை மற்ற இருவரும் முறைக்க, “ஈஈஈஈ அண்ணங்களா” என வார்த்தையை திருத்தினான்.

 

 

***

 

கறந்து வைத்த பால் வெளியேறுவதால் மகிழ்வோடு அனைத்து வேலையும் முடித்தாள் ஒளிர்பிறை. அவள் புன்னகை முகத்தை ரசித்தப்படி மதுரவீரன் அங்கு அமர்ந்திருக்க, “தமிழு” என குரல் கொடுத்தாள்.

 

 

அவன் பதில் கொடுக்காமல் போக, “மாமா தமிழுக்கு ஒரு போன போடுங்க.” என்று கணவனை வேலை வாங்கினாள்‌.

 

 

அவன் அழைப்பை ஏற்ற செந்தமிழன், “இந்தா வந்துட்ட ண்ணே.” என பதில் கொடுத்துவிட்டு அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் நின்றான் அண்ணன் முன்பு.

 

 

வந்தவனை கேள்வியோடு மதுரவீரன் நோக்க, “சாமந்தி மதினி வூட்ல இருந்த பாலை வாங்கிட்டு வர ண்ணே.” என்றவன் அண்ணனின் முறைப்புக்கு ஆளானான்.

 

 

“உனக்கு என்னாத்துக்குடா இந்த வேண்டாத வேல. அந்த வூட்டு சங்காத்தம் நமக்கு வேணான்னு எத்தினி தடவ சொல்றது உனக்கு. அவனுங்க பண்ண தப்பால நீயி ஸ்டேஷனுக்கு போயிட்டு வந்ததை மறந்துடாத.” சற்று முன்னர் வரை மனைவியை ரசித்துக்கொண்டிருந்த விழிகளில் கோப நெருப்பு பற்றி எரிந்தது.

 

 

ஒளிர்பிறையை ஒரு முறை பார்த்தவன், “நம்மளை மாதிரி அவங்க வூட்லயும் நாலு நாளா பால் வெளிய போவல அதா…” என இழுக்க, 

 

“அடுத்தவன் குடும்பத்துல என்னா நடந்தா நமக்கு என்னா. நீயி இந்த மாதிரி இரக்கப்படுறதால நல்லது எதுவும் நடக்காது தமிழு.” காட்டமாக பதில் கூறினான்.

 

 

அண்ணன் குரலில் பதமாக இருந்த மூன்று வானரங்களும் அங்கு வந்து விட, “இன்னு எத்தினி நாளைக்கு ண்ணா இந்த மாதிரி பகையோட பாக்க போறீங்க அந்த குடும்பத்தை” மிக மெல்லிய குரலில் கேட்டான் செந்தமிழன்.

 

 

“அவங்களால நமக்கு எந்த பிரச்சனையும் வராதுனு நம்பிக்கை வர வரைக்கும். ஆனா, அது அவ்ளோ சீக்கிரம் நடக்காது தமிழு. என்னோட காலம் இனி மேல கீழன்னு போயிடும். அவங்களை வுட்டு ஒதுங்கி இருங்கன்னு சொல்றது உங்க நாலு பேரோட நலனுக்காக. எனக்குனு கடவுளா பாத்து உங்க மதினிய அனுப்பி விட்டு நாசமா போன வாழ்க்கைய காப்பாத்திட்டான். அதே மாதிரி உங்களுக்கும் நடக்குனு சொல்ல முடியாது. எதுக்கு சொல்றன்னு புரிஞ்சி நடந்துக்கோங்க.” என்றவன் குரல் பேச்சுக்கு பேச்சு உயர்வதை உணர்ந்த ஒளிர்பிறை கண்களால் அமைதியாகும் படி சைகை செய்தாள்.

 

 

 

மனைவியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அவன் பேச்சை குறைக்க, “பகை வளர கூடாதுனா உறவு வளரணும் ண்ணே.” என்ற தம்பியை உஷ்ணத்தோடு நோக்கினான்.

 

 

இப்படியே விட்டால் வீட்டில் பிரச்சனை முளைக்கும் என்று உணர்ந்த ஒளிர்பிறை, “மாமா பிரச்சனைய வளர்க்காம பேச்ச நிறுத்துங்க. தமிழு குணம் எப்டினு உங்களுக்கு தெரியும் தான. நம்ம வூட்டு மாடுங்க உழைப்பு வீணா போவுதுனு நாலு நாளா வருத்தப்பட்டுக்கிட்டு கெடந்தான். அதே நெனைப்பு அங்க இருக்க மாடுங்க மேலயும் வந்திருக்குமே தவிர மனுசங்க மேல இல்ல. இன்னிக்கு ஒரு நாளு அவங்களுக்கு உதவி செய்யலாம். நாளைல‌ இருந்து அவங்களாச்சி அவங்க வூட்டு பிரச்சனையாச்சுனு ஒதுங்கிக்கலாம்.” என சமாதானம் செய்தாள்‌.

 

 

 

மனைவியின் விழி அசைவிற்கு கட்டுப்பட்டவன் இப்பொழுது பேசிய பேச்சில், “உன் தோழி வூட்டுக்கு ஆதரவுகரம் ரொம்ப நீட்டாத. நாள பின்ன உன் புருசனும் ஜெயிலுக்கு போவ வேண்டியதா இருக்கும்.” என்றவன் முறைப்போடு அங்கிருந்து நகர்ந்தான்.

 

 

அண்ணன் பேச்சிற்கு வருந்திய செந்தமிழன் பார்வையை கீழ் இறக்க, “அவரு பேசுறது என்னா புதுசா. நீயி ரொம்ப நல்ல காரியம் பண்ணி இருக்க தமிழு. அதனால மனசு வருந்தாம எடுத்துட்டு போ. நடக்குறது நல்லதா நடக்கும்.” கொழுந்தனை தேற்றியவள் வழியனுப்பி வைத்தாள்.

 

 

வானரப் படை மூன்றும் தனக்கு எதற்கு வம்பு என்று ஒதுங்கிக் கொள்ள, கோபம் கொண்ட கணவனை சாந்தப்படுத்த அறைக்குள் நுழைந்தாள்‌ மதுரவீரனை கட்டியவள்.

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்