Loading

 

 

 

 

அடுத்தடுத்து மருத்துவர்கள் கூறிய திடுக்கிடும் தகவல்கள் கீதனை ஆழ்கடலில் அமிழ்த்தியது.

 

“என்ன சொல்றீங்க மேடம்?” என்றான் அதிர்ச்சி மேலிட்ட குரலில்.

 

“உண்மைதான் கீதன். உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கலாம். ஆனால் உங்க மனைவி எதையும் சொல்லக்கூடாதுன்னு ஆழ்மனதில் நினைக்கிறாங்க. அதில் உறுதியாகவும் இருக்காங்க. என்னோட கட்டளைகளை அவுங்க பின்பற்ற மறுக்குறாங்க. நான் கண்ணை மூடுங்கன்னு சொல்லும்போது பேருக்கு மூடுறாங்க. அவுங்க கருவிழிப்பாவை அங்கும் இங்கும் அலைபாயுது. என்னுடைய குரலுக்கு அவுங்க ஒத்துழைக்கணும். அப்போதான் ஹிப்னாஸிஸ் பாசிபிள். நீங்க ஏற்கனவே கொடுக்கும் மாத்திரையை தினமும் கொடுங்க. அதிகமா தூக்கம் வரும். மனம் அமைதியாக வாய்ப்பு இருக்கு. இன்னும் ஒரு வாரத்தில் அடுத்த சிட்டிங் வாங்க” என்று தன் பக்க விளக்கங்களை கூறி முடித்தார்.

 

“நற்பவி.. இப்போ நிரண்யா இருக்க சூழ்நிலையில் நீங்க அவுங்க மூலமா எதையும் தெரிஞ்சுக்க முடியாது” என்று அவளிடமும் அறிவிப்பாகக் கூறினார்.

 

நற்பவி பெருமூச்சை வெளியிட்டவள் வெளியே சென்றாள். சற்று நேரம் மருத்துவருடன் பேசிவிட்டு கீதனும் வெளியில் வந்தான். 

 

“கீதன்.. உங்க மனைவி இதிலிருந்து விலகிட்டாங்க. நீங்க நிம்மதியா இருங்க. வேற ஏதாவது உதவி வேணும்னா கேளுங்க” என்று கூறிவிட்டு அவனிடம் இருந்து விடைபெற்றுக் கிளம்பினாள்.

 

சற்று தூரம் சென்றவள், திரும்பி வந்து, “உங்க மனைவி ஏதாவது சொன்னா எனக்கு உடனே சொல்லுங்க” என்று‌ கூற அவனும் தலையாட்டி வைத்தான்.

 

நற்பவி வேகமாக தன் வாகனத்தை உயிர்பித்துச் சென்றாள். கீதன் நிரண்யாவை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றான். நன்றாக உறங்கிக் கொண்டிருந்தவள் திடீரென விழித்து அலறினாள். கீதனும் நிரண்யாவின் அன்னையும் அலறியடித்து எழுந்தனர்.

 

“அம்மா..” என்று வயிற்றைப் பிடித்துக்கொண்டு அழுதாள் நிரண்யா.

 

“என்ன ஆச்சு?” என்று கீதன் வினவ, அவனை அவள் கண்டுகொண்டது போல் தெரியவில்லை. 

 

“என்‌ குழந்தை.. என்‌ குழந்தை..” என்று கதறி அழுதாள். அதைக்கண்ட கீதன் திடுக்கிட்டான். அவளின் ஓலத்தில் அவளின் அன்னையும் எழுந்து அவர்களின் அறையின் உள்ளே வந்தார்.

 

“இன்பா.. ஏன் இப்படி செஞ்ச? நான் என்ன பாவம் செஞ்சேன். உன்னைக் காதலிச்சதுதான் பெரிய தப்பு. என்னோட குழந்தையை இப்படி கொன்னுட்டியே.. எனக்கு என் குழந்தை வேணும்” என்று கதறினாள். மற்ற இருவரும் விக்கித்துப் போய் நின்றனர்.

 

கீதன் நிர்ண்யாவின் அருகில் செல்ல முற்பட, அவள் அவனைத் தள்ளிவிட்டாள். முன்புபோல் முழு பலத்துடன். சமாளித்து எழுந்தவன், அவள் அருகில் சென்று, “உன்னோட குழந்தை இன்னும் சாகல” என்றான். 

 

அதுவரை கத்தி ஆர்பாட்டம் செய்தவள் அமைதியாக அவனைப் பார்த்தாள். 

 

“யார் நீ.. நான் எங்க இருக்கேன். நீ பொய் சொல்ற. என்‌ குழந்தை இறந்து போச்சு” என்று மீண்டும் அழுதாள். 

 

“இல்லை.. இல்லை.. உன் குழந்தை சாகல. இன்னும் உயிரோட இருக்கு.”

 

“இல்ல நீ பொய் சொல்ற. இன்பன் என்னோட சண்டைப் போட்டான். அவனோட பேச்சை நான் கேக்கல. அதனால கோபத்துல என்னைப் பிடிச்சு தள்ளினான். எனக்கு எல்லாமே ஞாபகம் இருக்கு” என்றாள் தெளிவாக.

 

விக்கித்து நிற்பது அவன் முறையானது.

 

“அவன் அடிச்சதும் நான் கட்டிலில் போய் மோதினேன். என் அடிவயிற்றில் சுருக்குன்னு ஒரு வலி. பொலபொலன்னு உருகி ரத்தமா என் பிள்ளை வெளில வந்துட்டான். என் கை முழுக்க ரத்தம் நான் பார்த்தேனே” என்று நடுங்கும் தன் கரங்களை பார்த்து மீண்டும் அழுதாள். 

 

நிரண்யாவின் அன்னை அழுதுவிட்டார். இதை எப்படி கையாள்வது என்று அவருக்குத் தெரியவில்லை. கீதனுக்கும் அதே நிலைதான். ஆனால் அவன் மூளையில் மணியடிக்க, அவளை சமாதானம் செய்வதை முதன்மைக் காரியமாக நினைத்தான்.

 

“இல்ல.. அதெல்லாம் உன்னோட கனவு. உனக்கும் இன்பனுக்கும் சண்டை. ஆனால் அவன் உன்னை அடிக்கல. உன்னோட குழந்தை உயிரோட இருக்கு. அதை நீ நம்பணும்” என்று திடமாக உரைக்க, அவனை கேள்வியாகப் பார்த்தாள் நிரண்யா.

 

“உண்மையாவா?” என்றாள் சந்தேகத்துடன்.

 

“ஆமா.. உண்மைதான். நாளைக்குக் காலைல நாம டாக்டர்கிட்ட போய் செக் பண்ணலாம். இப்போ நீ படுத்துத் தூங்கு” என்று‌ கூற, “நீங்க யாரு?”‌ என்றாள் குழப்பத்துடன். 

 

“உங்களை நல்லா பார்த்துக்க சொல்லி இன்பன் விட்டுட்டுப் போயிருக்காரு” என்று‌ எதையோ உளறி வைக்க, அவள் மீண்டும் சென்று கட்டிலில் படுத்துக்கொண்டாள். 

 

அவளின் மனம் தற்காலிக அமைதி பெற்றுவிட்டது. ஆனால் அவனது மனம் ரணமாய் கீறப்பட்டது. நெஞ்சம் நைந்துபோன கந்தலாகியிருந்தது.

 

“அத்தை.. நீங்க அவகூட படுத்துக்கோங்க” என்று‌ கூறியவன், அவரின் பதிலுக்குக் காத்திராமல் கூடத்திற்குச் சென்றான். அங்கிருந்த குளியலறையில் நுழைந்தவன் குழாயைத் திறந்து தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டான். குளிர்ந்த நீராயினும் மனதின் வெம்மை அடங்கவில்லை. தன் எதிரிக்கும் இந்நிலை வரவேண்டாம் என்று லட்சம் முறையாக நினைத்திருப்பான். நெஞ்சில் சுரந்த தன்னிரக்கத்தால் மனம் துவண்டு போனது.

 

நாளுக்கு நாள் அவளின் நிலை மோசமானதே தவிற, அதில் மாற்றம் இல்லை.

 

 

“மாப்பிள்ளை.. நிருக்கு பேய் பிடிச்சிருக்கு. இந்த வைத்தியம் மாத்திரை எல்லாம் சரியா வராது. நான் அவளை ஊருக்குக் கூட்டிட்டுப் போறேன்” என்றார் அறிவிப்பாக. 

 

“இல்ல அத்தை. அவ மனசு பாதிக்கப்பட்டிருக்கு. என்னால உங்க கூட அனுப்ப முடியாது. சாட்டைய வச்சு அடிச்சா இது சரியா போகும்னு சொல்றீங்களா. அவ பாவம். மனசால நொந்து போயிருக்கா. அவளை உடலாலும் வருத்த நினைக்கிறது‌ தப்பு” என்று மறுத்தான் அவன்.

 

“இல்ல தம்பி. அவ ஏன் யாரோ மாதிரி நடந்துக்கணும். கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க” என்றார் விடாமல்.

 

“எதிர் வீட்டில் உள்ள பொண்ணு இறந்துட்டான்னு அவ கதையை யாரோ அவளுக்கு சொல்லிருக்காங்க. அதையெல்லாம் அவ மூளை சேமிச்சு வச்சிக்கிட்டு இப்படி நடக்க வைக்கிது. அவ்ளோதான்..”

 

“இல்ல மாப்பிள்ளை. இங்க யாரும் அவளுக்கு அந்த பொண்ணைப் பத்தி சொல்லல. நான் விசாரிச்சுட்டேன். அந்த பொண்ணு செத்துப் போயிட்டா. ஆறாவது மாடிலேருந்து குதிச்சு. அவ்ளோதான் இங்க‌ எல்லாருக்கும் தெரியிது. நாலாவது மாடில ஒருத்திக்கிட்ட நிரண்யா பேசுனாலே. அவகிட்ட கூட விசாரிச்சேன். ஆனா மேம்போக்காதான் தெரியிது. இவ்வளோ ஏன்? செத்துப்போன பொண்ணு பேரு மொழி.. அவ புருஷன் பேரு இன்பன்ங்கிறது இங்க யாருக்கும் ஞாபகம் இல்லை. தெரியலை. ஆனா நிரண்யா சரியா சொல்றாளே. இது எப்படி சாத்தியம்” என்று அர்த்தத்துடன் வினவ, அவனும் அதிர்ந்து விட்டான்.

 

“அதெல்லாம் நிரண்யாவின் மனசோட கற்பனையா கூட இருக்கலாம் அத்தை. ஏனா நம்ம மூளை ஒரு கதையைக் கேட்டா சும்மா இருக்காது. அதை சுத்தியே யோசிக்கும்” என்று அவன் எடுத்துக்கூற அவர் மறுத்துவிட்டார்.

 

“சரி..‌ கடைசியாக ஒரு விஷயம் சொல்றேன். அதை செஞ்சு பாருங்க. அந்த வீட்டு ஓனர் இன்பனோட நம்பர் வாங்கி அவர்கிட்ட பேசிப் பாருங்க” என்று கூற, அவன் அவரைக் கேள்வியாகப்‌ பார்த்தான். 

 

“நிரண்யா சொல்ற கதைக்கும் அந்த மொழியோட கதைக்கும் ஒத்துமை இருந்தா நீங்க என்னோட போக்குல விடணும்” என்று கூற, அவர் அனைத்தையும் சிந்தித்து முடிவு எடுத்து விட்டதாகவே தோன்றியது கீதனுக்கு.

 

“சரி.. அத்தை.. நான் விசாரிக்கிறேன்” என்று‌ கூற அவர் திருப்தியுடன் உள்ளே சென்றார். 

 

அடுத்து அவனும்‌ களத்தில் இறங்கி அந்த அப்பார்ட்மெண்ட் முழுக்க விசாரித்துவிட்டான். நிரண்யாவின் அன்னைக் கூறியது உண்மையென்று அவனுக்கு புரிந்தது. செகரெட்டரி கொடுத்த இன்பனின் எண்ணிற்கு அழைத்தான். மறுமுனையில் அழைப்பு ஏற்கப்படும்வரை, அவன் இதயம் நொடிக்கு நூறு முறை துடித்து துவண்டது. அழைப்பு ஏற்கப்பட, அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை.

 

“ஹலோ.. நான் கீதன் பேசுறேன். க்ரீன் வேளி அப்பார்ட்மெண்ட்” என்று‌ இவன் கூறியதும் மறுமுனையில் ஒரு அமைதி நிலவியது. 

 

“ம்ம்ம்.. சொல்லுங்க.. உங்களுக்கு யாரு வேணும்..”

 

“இன்பன் நீங்கதானே. உங்கிட்ட உங்க மனைவி பத்திக் கொஞ்சம் பேசணும்” என்று கூற, “யாரு இன்பன்” என்று திடுக்கிட வைத்தனர் மறுமுனையில். 

 

“க்ரீன் வேளி அப்பார்ட்மெண்ட் ஆறாவது மாடி ஏழாம் நம்பர் வீட்டின் ஓனர்” என்று‌ கூற, “சாரி சார்.. இது ராங் நம்பர்” என்றார்.

 

“இல்லையே.. இந்த நம்பர் தானே கொடுத்தாங்க.”

 

“மே பீ.. நான் இந்த நம்பர் வாங்கி மூணு மாசம் தான் ஆகுது.. அதுக்கு முன்னாடி நீங்க சொல்ற நபர் இந்த நம்பரை உபயோகப் படுத்திருக்கலாம்” என்று கூற ஏமாற்றத்துடன் அலைபேசியை‌ வைத்தான் கீதன்.

 

அவனால் அடுத்து என்ன செய்வதென்று முடிவு செய்ய முடியவில்லை. 

 

திகையாதே மனமே!

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்