Loading

அத்தியாயம் 13

மெஹந்தி வைக்கும் பணியில் மணமகளை மூழ்கடித்திருந்தனர்.

“ஏடத்தி, சேட்டா பேரை எவிடே (எங்க) எழுதலாம்?” எனக் குறும்பாக அனகா வினவ,

‘ம்ம், என் தலைல எழுது…’ என வாய்க்குள் முணுமுணுத்தவள், “எங்க வேணா எழுதுமா, எனக்குத் தூக்கம் வருது.” என்று கொட்டாவி விட்டாள்.

அதிகாலையிலிருந்தே மணமகள் அலங்காரத்திற்குத் தயாராகத் தொடங்கினாள் அகமொழி.

உறக்கம் வேறு வழிந்தது. காலை உணவாக ஆப்பமும், கடலைக் கறியையும் அறைக்கே கொண்டு வந்து கொடுத்தாள் அனகா.

‘ஆப்பத்துக்குக் கடலைக் கறியா?’ என்ற ரீதியில் அதனைப் பரிதாபமாகப் பார்த்தாள். அவள் வீட்டில் தேங்காய் பால் ஊற்றி உண்பதே வழக்கம்.

‘ஒரு ஹாஃப் பாயில் ஆவது போட்டுக் கொண்டு வந்திருக்கலாம்!’ முணுமுணுத்தபடி அதனைப் பாதி வயிறுக்கு உண்டவளுக்கோ அதற்கு மேல் முடியவில்லை.

“போதும் அனு, சாப்பாடு எடுக்கல.” என்று விட்டாள்.

“கல்யாண டென்ஷனானோ ஏடத்தி?” என அவள் நக்கலடித்துச் சிரிக்க, அவளைச் சுற்றி இருந்த தோழிகளும் சில உறவின இளவட்டங்களும் இணைந்து நகைத்தது.

அவர்களை முறைத்து வைத்தவள், மீண்டும் அலங்காரத்தைத் தொடங்கினாள்.

கசவு என்னும் கேரளா புடவையை அணிந்திருந்தவளின் மேனி முழுதுமே தங்கத்தால் இழைக்கப்பட்டிருந்தது.

வசந்தியும் தங்களது நகையைப் போட்டு விடலாம் என எண்ண, அதற்கு அவள் கழுத்தில் இடம் இருந்தாலல்லவோ.

“அக்கா, இவ்ளோ நகையும் கண்டிப்பா போடணுமா? பாருங்க வயிறு வரைக்கும் ஆரம் இருக்கு.” என்றாள் உர்ரென.

“எவ்ளோ அழகா இருக்க தெரியுமா? உன் மேல கோபமா சுத்துற அர்ஜி கூட உன்னைப் பார்த்தா பிளாட் ஆகிடுவாங்க…” என அவளுக்கு மட்டும் கேக்கும் வண்ணம் கிசுகிசுத்தாள்.

அதில் திகைத்தவள், “என்..என் மேல அவருக்கு என்ன கோபம்? இல்லையே…” எனச் சமாளிக்க,

“ஹேய், எல்லார்கிட்டயும் சொல்லுற பொய்ய என்கிட்டச் சொல்லாத அகா. உங்களுக்குள்ள இருக்குற பிரச்சினை என்னன்னு எனக்குத் தெரியும்.” என்றாள் கண்ணைச் சுருக்கி.

“எப்படி? அகன் சொன்னானா?”

“இல்ல ப்ரணீ சொன்னான்.” என்றதும் அவள் குழப்பமாகப் பார்த்தாள்.

“அவன் என் ஸ்கூல்மேட் அகா, எல்லா தகவலையும் வந்து கொட்டிடுவான்.” எனக் கண் சிமிட்டிச் சிரித்தவளுக்குள் அத்தனைப் பெருமை.

அழகான, களங்கமில்லாத ஒளிவு மறைவில்லாத நட்பு கிடைக்கும்போது தான் ஒவ்வொரு மனிதரின் முகத்திலும் பொலிவு கூடி விடுகிறதே!

தனது நண்பர்களை எண்ணிக் கவலை கொண்டவள், சட்டென முக பாவத்தை மாற்றிக்கொண்டு, “பை தி வே, அந்தப் பைத்தியக்காரன் என்னைப் பார்த்து பிளாட் ஆகத் தேவை இல்ல.” என நொடித்தாள்.

அவளை வருத்தமாகப் பார்த்தவள், மேற்கொண்டு பேச வரும்போதே பெரியவர்களும் அங்கு கூடி விட, அத்துடன் அன்விதாவிற்கும் பேசத் தைரியமில்லை.

திருமணத்திற்குத் தயாரான பிறகு, குடும்பத்தில் மூத்த உறுப்பினர்கள் அனைவரிடமும் காலில் விழுந்து ஆசி வாங்கினாள்.

முதல் ஒரு சுற்றுக்கு ஒன்றும் தெரியவில்லை. அவளை மணமேடைக்கு அழைத்துச் செல்ல, அப்போது தான் அர்ஜித் அகனும், க்ரீம் நிற கல்யாண உடையில் மிளிர்ந்தான்.

அவன் கழுத்தை அலங்கரித்த பூமாலை இன்னும் கொஞ்சம் பளபளப்பைக் கூட்டி இருந்தது.

அவனும் அப்போது தான் அனைவரிடமும் ஆசி வாங்கிக் கொண்டிருந்தான். வசந்தி பாஸ்கரிடமும் ஆசி வாங்க மறக்கவில்லை. அவர்களைக் காணும்போது மட்டும் சின்னதொரு சங்கடம். ஆகினும், ‘தப்பு என் மேல இல்ல. ஸ்டார்ட் பண்ணது அவள் தான்!’ எனத் தோளைக் குலுக்கிக் கொண்டான்.

மேடை ஏறி வந்ததுமே சுஜாதா, புன்னகையுடன் அகமொழிடம் ஒரு மாலையைக் கொடுத்து அவனுக்குப் போட சொன்னார்.

‘காலைச் சாப்பாடுக்கு கடலைக்கறி தந்தவனே…’ என மனத்தினுள் அர்ச்சித்தபடி அவனுக்கு மாலை போட வர, அவனுக்குப் பின்னால் நின்றிருந்த பிரணீத் அவனைப் பிடித்து இழுத்தான்.

“அவ்ளோ சீக்கிரம் போட விட்டிருவோமா? எங்க மாப்பிள்ளை ரேர் பீஸ் சிஸ்டர்.”

அர்ஜித் ஒற்றைப் புருவம் உயர்த்திக் கேலியாக ஏறிட, இருவரையும் முறைத்தவள் மீண்டும் முன்னே வந்து எக்கி மாலை போட வர மீண்டும் பின்னால் இழுத்தான்.

‘இவர் பெரிய மன்னர் பரம்பரை… இவரைத் தேடித் தேடி வந்து மாலை போடணுமாக்கும்!’ உள்ளுக்குள் கறுவியவள் மீண்டும் முயற்சி செய்து தோல்வி காண, பூமுகம் சுருங்கிப் போனது.

இவ்வித விளையாட்டில் எல்லாம் அவள் மனம் இலயிக்கவில்லை.

என்னவோ அவனைத் திருமணம் செய்ய, தான் தவமிருந்தது போல… அவன் முகத்தில் கண்ட வெற்றிக் களிப்பும் பிடிக்கவில்லை.

சுண்டிப்போன முகம் அதை நொடியில் கண்டு விட்டவன், தன்னைப் பிடித்திருந்த பிரணீத்தின் காலை யாரும் அறியாது எத்தினான்.

‘ஐயோ அம்மா!’ என அவன் நின்ற இடத்திலேயே குதிக்க, அர்ஜித் அவள் புறம் நெருங்கிக் குனிந்தான்.

சட்டென அவன் அருகில் வந்ததில் திகைத்தவளுக்கு, மாலை போட வேண்டுமெனக் கூட உறைக்கவில்லை.

ஒற்றைப் புருவம் உயர்த்தியவன், அவளது கையைப் பிடித்து மாலையைப் போட்டுக் கொள்ள அதில் தான் நிகழ்வுணர்ந்தவள், அவன் பிடித்திருந்த கையை விலக்கச் சொல்லக்கூடத் தோன்றாது அசையாமல் நின்றிருந்தாள்.

சில நிமிடத்திற்கு முன்னே அனகா கூறியது நினைவு வந்தது.

“மாலை போடவே விட மாட்டோம் நிங்கள… விஷ்ணு கல்யாணத்தில் எல்லாம் ஏடத்தி மாலை போட ட்ரை செய்தே டயர்ட் ஆகிப் போயி அறயுமோ… முகூர்த்த நேரமே கழியும்னு (முடிஞ்சுடும்னு) எல்லாரும் திட்டியதும் தன்னே போயால் போகட்டேன்னு (போனால் போகட்டும்னு) ஞானும் அர்ஜியும் விட்டோம்… கிட்டத்தட்ட அரை மணி நேரத்தினு செஞ்சாச்சு…” எனக் கிளுக்கிச் சிரிக்க,

அன்விதாவும், “ஐயோ எனக்கு மாலை போடும்போதே மயக்கம் வந்துடுச்சு அகா… விஷ்ணுவாவது பாவம் பார்த்து விடலாம்ல. அர்ஜியே ஒரு கட்டத்துல விட்டிட்டாரு. ஆனா விஷ்ணு விளையாட்டை நிறுத்தவே இல்லை. கடைசியா நான் தான், கெஞ்சிக் கூத்தாடித் தோல்வியை ஒத்துக்கிட்டு மாலை போட்டேன். எனக்குப் போடும்போது மட்டும் உடனே மாலை போட்டு விட்டுட்டாரு.” எனக் கல்யாண நினைவில் கூறினாள்.

‘சும்மாவே இவன் ஆடுவான். இப்ப என்ன செய்யப் போறானோ’ என்ற படபடப்பில் தான் அவளும் மேடைக்கு வந்தது. ஆனால் அவனே தோல்வியை ஒப்புக்கொண்டு தலை குனிந்து மாலை வாங்கிக் கொள்வான் என்று முற்றிலும் நினைக்கவில்லை அவள்.

அனகா தான், “இது சீட்டிங் சேட்டா… இங்கனேயா (இப்படியா) உடனே ஏடத்திட்ட அடங்கிப் போனது… விஷ்ணு சேட்டா, நோக்கு இவனே மானத்தை வாங்கிட்டான்.” என்று தமையனைத் துணைக்கு அழைக்க, விஷ்ணுவோ ஏற்கெனவே கடுகடுப்பில் இருந்தான்.

சுஜாதாவும் மகனை ஒரு முறை அர்த்தமாகப் பார்த்து விட்டு அமைதியாகி விட்டார். ஆசி வழங்கும்போது கூடத் தன்னையே ஊடுருவிக் கொண்டிருந்த மகனின் முகத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை அவர்.

கோபால கிருஷ்ணன் தான், “ஒயிஃபுக்காக அடங்கிப் போனது தெற்றில்ல (தப்பில்ல) மோளே!” என மகனுக்கு வக்காலத்து வாங்கியவர், “அர்ஜி, நீ மாலை இடு மோனே!” என்றார்.

இப்போது அவன் மாலை போட வரும்போது அனகா, அகமொழியைப் பிடித்துப் பின்னால் இழுக்க அர்ஜித் முறைத்தான்.

அப்போது தான் அகமொழியும் சற்றே சுயநிலைக்கு வர, மீண்டும் அவளுக்கு மாலை போட வரும்போது மீண்டும் அனகா பின்னால் இழுக்க, அவனோ ஓரடி வைத்து முன்னால் வந்தான்.

அகமொழிக்கு ஏனோ இப்போது இவ்விளையாட்டுப் பிடித்திருந்தது.

மாலை போட விடாமல் அவனுக்குப் போக்குக் காட்டினாள் குறும்பு மின்ன.

அவன் நினைத்தால் ஒரே எட்டில் போட்டு விட முடியும் தான். ஆனாலும் அவன் நெஞ்சமும் இவ்விளையாட்டை ரசித்ததோ!

இம்முறை நன்றாகவே அவளை நெருங்கி விட்டவன், அவள் காதோரம் குனிந்து “மாலை வாங்கிக்கோ பெண்டாட்டி… ப்ளீஸ்!” எனக் கொஞ்சும் குரலில் கிசுகிசுக்க, தன்னையறியாது சிவந்து போன கன்னங்களின் அர்த்தம் புரியாது உறைந்து நின்றவளோ இப்போது அனகா இழுத்தும் சிலைபோல நின்றாள்.

அதில் இதழ் வளைத்துக் குறும்புப் புன்னகை வீசியவன், நிறுத்தி நிதானமாக மாலையைப் போட்டு விட அனகா, “முழுசா ரெண்டு நிமிஷம் கூட ஆகல… ஓவரா தான் ரெண்டு பேரும் லவ் பண்றீங்க!” என்றதும் தான் தீச்சுட்டாற் போல விலகினாள் அகமொழி.

‘ஓ! இது காதல் கல்யாணம்னு ப்ரூவ் பண்ண தான் இவ்ளோ நாடகமா?’ மெலிதான எரிச்சல் அவளிடம்.

அதன்பிறகு அவளிடம் மேனி சிவக்கும் வேலைக்கெல்லாம் இடமிருக்கவில்லை.

தாலி கட்டும் வைபவம் இருக்க, தங்கச் செயினில் தாலி டாலர் கோர்த்த மாங்கல்யத்தை வாங்கியவன் அவளை நிமிர்ந்து பார்க்க, அவளோ விழிகளைத் தரையில் புதைத்திருந்தாள்.

“என்னைக் காணான் (பார்க்க) வெக்கமானோ காந்தாரி…” நக்கலாய் கேட்ட ஆண்மகனின் குரலில் வெடுக்கென நிமிர்ந்தவளின் விழிகளில் நெருப்புப் படர்ந்தது.

“மச்சம் காணான் ரெடியானோ மொழி?” அவள் அருகில் நெருங்கி தாலிச் செயினை அவள் கழுத்தில் போடப் போகையில் ரகசிய குரலில் அர்ஜித் வினவ, மெல்லத் திகைத்தவளுக்கு மீண்டும் நெருப்பை அணைத்து ஓர் சிவப்பு ஊருடுவியது.

அவள் விழிகளில் தன் விழிகளைப் புதைத்தபடியே அவளைத் தன்னவளாக்கிக் கொண்டவன், அவள் நெற்றி வட்டில் ஒற்றை விரலால் குங்குமம் இட்டான்.

‘என்ன செய்யக் காத்திருக்கானோ’ என்ற அச்சம் மெல்ல இதயத்தை நடுங்கச் செய்தது.

சகித்துக் கொள்வது என முடிவான பின் இனி எதையும் யோசித்து அர்த்தமில்லை என மனத்தை திடப்படுத்திக் கொண்டவள், மீண்டும் பெரியவர்களிடம் ஆசி வாங்க, சிறிது நேரத்தில் இடுப்பு வலியே வந்து விட்டது.

“டேய், உனக்கு எத்தனைச் சொந்தக்காரங்க தான்டா இருக்காங்க. நேத்துல இருந்து குனிஞ்சு குனிஞ்சு கூன் விழுந்திரும் போல எனக்கு.” என அவனிடம் மட்டும் கரித்துக் கொட்டியவள், வெளியில் சிறிதும் காட்டிக் கொள்ளவில்லை.

அவனே தனது தாய் தந்தையரின் காலில், இத்தோடு பலமுறை விழுந்து விட்டான்.

அடுத்து மணமக்களுக்குப் பாலும், பழமும் கொடுக்க வீட்டுப் பெரியவர்கள் ஒவ்வொருவராய் வர, அதைக் கண்டதும் தானாய் கோணலாகிய முகத்தைக் கஷ்டப்பட்டுச் சரிசெய்து காட்டாமல் இருக்க முயன்றாள்.

எப்படியோ அந்தப் பாலும் பழத்தையும் வாயிலிருந்து வயிற்றுக்குக் கடத்தியவளின் முகத்தை அகனும் கவனிக்கத் தவறவில்லை.

அது முடிந்து அவர்கள் சென்றதும் அவளைத் திரும்பி முறைத்தவனிடம், “நீ பார்த்து நடிச்சதுலாம் போதும். லன்ச் எப்போடா மிஸ்டர் மலையாளி? சீரியஸ்லி செம்ம ஹங்கரி…” என வெட்கத்தை விட்டுக் கேட்டே விட்டாள்.

“ஏய்! கூட்டிட்டுப் போகும்போல் தன்னே சாப்பிடணும். விட்டா நீயே பந்தியில் போயி இரிக்கும் (இருக்கும்) போல.” எனத் தளர்ந்து அவளிடம் மெல்லச் சரிந்து கேட்டவனிடம்,

“பந்தில இல்ல… நேரா கிட்சனுக்கே போயிடுவேன்.” என்றாள் பரிதாபமாக. உதடு மீறிய சிரிப்பை அடக்கும் நேரம்,

பிரணீத் தான், “என்ன சேட்டா பாய், ஒரே ரொமான்ட்டி டாக்கா ரெண்டு பேரும்” என்று இவர்கள் குசுகுசுவெனப் பேசுவதைப் பார்த்தபடி அருகில் வர,

அர்ஜித் அவனைக் கடுப்பாய் ஏறிட்டான்.

‘ரொமான்ட்டிக் டாக்… இவள்கூட’ என்ற அசட்டைத்தனம் அவனிடம்.

“யோவ் ப்ரோ… இருக்குற பசில உங்கள பிரியாணி ஆக்கிடுவேன்.” அவளும் பொரிய, பிரணீத் “ம்மா, சீக்கிரம் இவளுக்குச் சாப்பாடு குடுங்க. வேம்பயரா மாறிட்டு இருக்கா…” எனப் புலம்பியபடி ஓடி விட்டான்.

“விஷ்ணு, அவங்களோட ஒரு போட்டோ எடுக்கலாமா?” அன்விதா ஆசையாகக் கேட்க, “நீ வேணும்னா போய் எடு. ஞான் வரல!” என்று விட்டான்.

அமையா தான் மேடையில் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தாள்.

“மோளே… வீழண்டா! (விழுந்துடாத)” அகமொழியிடம் பேசினாலும் அர்ஜித்தின் கவனம் அமையாவிடமே இருந்தது.

அப்படியும் மேடை நுனியில் நின்று குதித்துக் கொண்டிருந்தவளை அர்ஜித் தூக்கிக் கொண்டான்.

“ஓரத்தில் நின்னு குதிக்காத மோளே, வீணு போவில்லே… (விழுந்துடுவல்ல)” என்றபடி மீண்டும் அகமொழியின் அருகில் வந்து நின்று கொண்டான்.

“ஹாய்…” அகமொழி அமையாவிற்குக் கை கொடுக்க, அவள் அர்ஜித்தின் தோள்களில் சாய்ந்து முகத்தை மறைத்துக் கொண்டாள்.

“இன்னும் என்னைப் பார்த்தா வெட்கமா உனக்கு? ம்ம்ம், தமிழ் புரியும் தான?” என அவனிடம் கேட்டுக் கொண்டாள்.

“ஏடத்தி தமிழ் அல்லே சம்சாரிக்கனது, புரியும்.” அமையாவின் கன்னத்தில் முத்தமிட்டபடி கூறினான்.

“ஆமால்ல. அவங்க தமிழ் பேசுறாங்கன்னே இப்ப தான் எனக்கு உறைக்குது. எப்படி?” எனப் புருவம் சுருக்கிக் கேட்க,

“லவ் மேரேஜ்…” என்றான்.

“ஓ… சூப்பரு. அப்போ அமையாக்குட்டி என்ன மொழில பேசுவீங்க…” அவள் கன்னம் கிள்ள, “கலர்ஸ்… கியூப்” எனக் கேட்டாள்.

அன்று கியூபை அவள் கொடுத்ததை நினைவு வைத்துக் கேட்க, “அச்சோ, என்கிட்ட கியூப் இல்லையே. வீட்டுக்குப் போயிட்டு எடுத்துக்கலாம். ஓகேவா?” என்றதில் அவளும் தலையாட்டினாள்.

“குட் கேர்ள். என்ன க்ளாஸ் படிக்கிறீங்க?”

“யூகேஜி!”

“வாவ்! பெரிய க்ளாஸ் தான். எந்த ஸ்கூல்?” என அவளிடம் பேசத் தொடங்க, அவளும் அனைத்திற்கும் பதில் அளித்தாள். எல்லாம் ஒரே வார்த்தை தான்.

பின் பிரணீத் வந்து, “டேய் நீங்க போய் சாப்பிடுங்க!” என்று அமையாவை வாங்கிக் கொள்ள, “சித்தப்பா… டாய்ஸ்” என்று அவன் தோளைக் கட்டிக் கொண்டாள்.

“வாங்கிடலாம் குட்டிச் சிட்டு!” என்றபடி அவளைத் தூக்கிச் செல்ல, அவள் அவனைச் சித்தப்பா என உரிமையுடன் அழைப்பதிலேயே நட்பெனும் உறவைத் தாண்டி அவனும் இவ்வீட்டின் முக்கிய அங்கம் எனப் புரிந்து கொண்டாள்.

“பாப்பாக்கு ஸ்பீச் பிராப்ளம் எதுவும் இருக்கா அகன்?” அவள் கேட்டதுமே அர்ஜித் முகம் இறுகினான்.

ஏற்கெனவே சஹானா அவளுக்கு ஆட்டிசம் என்று முத்திரை குத்தி விட்டாள். இதில் இவள் வேறு! எரிச்சலடைந்தவன் ம்ம் மட்டும் கொட்டினான்.

“செம்ம பிரில்லியண்ட். அன்னைக்கு கியூப் குடுத்து கலர்ஸ் சேர்க்கச் சொல்லும்போதே ஒரே பக்கத்துல சேம் கலர் கொண்டு வர ட்ரை பண்ணா… சேட்டை தான் ஜாஸ்தி. பட் அதுவும் இல்லன்னா நல்லாருக்காது.” என்றபடி அவனுடன் டைனிங் ஹாலுக்கு நடந்தாள்.

அவளது பதிலில் சற்றே மென்மையடைந்தவன், “வீட்டிலு எல்லோரும் மலையாளம் பரயும். ஏடத்தி தமிழ். ரேராயிட்டு தெலுங்கும் சம்சாரிக்கும் போல. சோ, ஏது லாங்குவேஜில் ரிப்ளை செய்யனதெந்து கன்பியூஸ் ஆவுனுந்து தோணுந்து… (எந்த லாங்குவேஜ்ல ரிப்ளை செய்யன்னு கன்பியூஸ் ஆகுறான்னு நினைக்கிறேன்)” அவனும் தீவிரமாகக் கூறிட,

“மே பி… அதுனால தான் தெளிவா இங்கிலிஷ்ல ரிப்ளை பண்றா… எதுக்கும் ஒரு டைம் டாக்டர்கிட்ட ஒபீனியன் கேக்கலாம். அவங்களும்…” என்றபடியே இலையைப் பார்த்தவள் திருதிருவென விழித்தாள்.

கல்யாண சத்யைக்குச் சைவ வகைகள் இலை முழுதும் நிரம்பி இருக்க, அவள் அருகில் அனகா வந்து அமர்ந்து கொண்டாள். அவனுக்கு மறுபுறம் கோபால கிருஷ்ணனும் அமர்ந்திட, தன்னைத் திருமணம் செய்தவனைத் திட்டக்கூட இயலவில்லை.

மட்டை அரிசி எனப்படும் கேரளா சாதமும், பருப்பும் நெய்யுமாக அதன்மீது மிதக்க, அதையே நொந்து பார்த்தாள்.

அவளுக்கு எதிரில் தான் வசந்தியும் பாஸ்கரும் வலுக்கட்டாயமாக அமர்த்தப்பட்டனர்.

வசந்திக்கோ, மகளின் முகத்தைக் கண்டு வருத்தத்தை மீறிச் சிரிப்பும் பரவியது.

“பாவம், அவளுக்குச் சாப்பாடு சிம்பிளா இருந்தால் கூட வாய்க்கு ருசியா தான் கேட்பா… இதெல்லாம் அவளுக்கு உள்ளேயே இறங்காதுங்க…” எனக் கணவரிடம் கூற, “அவள் செஞ்ச குளறுபடி தான. அனுபவிக்கட்டும் விடு!” என்றவருக்கும் மகளைப் போல உணவு உள்ளே இறங்கவில்லை.

“ரெண்டு பேரும் வீம்பு பிடிக்காதீங்க…” வசந்தி திட்டி விட்டு உண்ணத் தொடங்கினார்.

‘மம்மி! ஒரு ஆம்லேட்டாச்சும் போட்டுக் குடு மம்மி’ என மனத்தினுள் கதறியவள் வெகுவாய் முயன்று உண்டு விட்டு எழுந்தாள்.

“எந்தா ஏடத்தி, அப்போலேக்கும் எனிச்சது? (அதுக்குள்ள எந்திரிச்சுட்டீங்க) அடுத்து சாம்பார், ரசம் இருக்கு. நோக்கின்… அவியல், ஓலன், கூட்டுகறி, பச்சடி எல்லாம் தொடாதே அங்கனே வச்சிருக்கீங்க…” என அனகா மீண்டும் அமர வைக்க,

“எனக்கு வயிறு நிறைஞ்சிருச்சு நாத்தனாரே…” எனத் தப்பிக்க முயன்றாள்.

“ம்ம்ஹும்! பருப்புப் பாயசமெங்கிலும் குடிக்கு!” என இரண்டு பாயாசத்தையும் அவளைக் குடிக்க வைத்தே எழ விட, அவளுக்கோ பாய்ஸன் குடித்தது போல வயிறு காச் மூச்செனக் கத்தியது.

சுஜாதா தான், “நந்தாயிட்டு கழிச்சோ மோளே! (நல்லா சாப்பிட்டியா)” என அன்பாகக் கேட்க, தலையை மட்டும் ஆட்டினாள். வேறு வழி!

‘உங்க அன்புல ஆசிட் ஊத்த!’

மகளைப் புகுந்த வீட்டிற்கு அனுப்பும்போது வசந்திக்குக் கண்ணில் நீர் நிரம்பியது.

பாஸ்கர் அப்போதும் மகளிடம் பேசவில்லை. அவளும் அவர்களைக் கட்டிப்பிடித்து அழவெல்லாம் இல்லை.

இறுகிய முகத்துடன் அமைதியாகி விட்டாள்.

மண்டபத்திலிருந்தே மணமக்களை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கேசவ நாயர் கூற, வசந்தியும் பாஸ்கரும் விடைபெற முயன்றனர்.

“நீங்களும் வீட்டுக்கு வந்துட்டுப் போங்க சம்பந்தி” என்று கோபால கிருஷ்ணன் கூற, “இல்ல சம்பந்தி, மறுவீடு அழைக்கறப்ப வர்றோம்…” என்று பாஸ்கரும் மறுத்தார்.

வசந்தியிடம் மட்டும் சொல்லிக் கொண்டவள், தந்தையைத் திரும்பிப் பாராது காரில் ஏறிக் கொண்டாள்.

மெல்ல மெல்ல அந்தக் கோபம் அர்ஜித்தின் மீது தான் திரும்பியது.

“உன்னால தான் என் அப்பா என்கிட்டப் பேசுறது இல்ல!” பல்லிடுக்கில் வார்த்தையைக் கடித்துத் துப்பினாள்.

“நின்டே காரணமானு என்டே அம்மயும் என்னோடு சம்சாரிக்காதே இரிக்கனது… (உன்னால தான் என் அம்மாவும் என்கிட்ட பேசுறது இல்ல)” அவனும் அதே நெருப்பைப் பொழிய,

“கண்டவ கூடக் கண்டபடி திரிஞ்சது நீ… அப்போ உன்கூடப் பேசாம இருக்குறது நியாயம் தான்…” என ஆத்திரத்தைக் கக்கியதில், அவன் பாறையாய் முகம் இறுகினான்.

வீட்டுக்குச் சென்று மீண்டும் பெரியவர்கள் மணமக்களுக்குப் பால், பழம் கொடுக்கும் சடங்கைச் செய்ய அகமொழி நொந்து போனாள்.

அது முடிந்ததும் தனது அறையில் சென்று அடைந்து கொண்டவன், பிறகு அவளைக் கண்டு கொள்ளவும் இல்லை.

மீண்டும் இரவு உணவு தடபுடலாக இருந்தது. பல்வேறு வகையான டிபன் வகைகளைக் கலந்து அவள் இலையில் வைக்க அவள் நொந்து விட்டாள். அப்போதும் அவளை நிமிர்ந்து பாராது உண்டு விட்டு மீண்டும் அறைக்குள் புகுந்து கொண்டான் அர்ஜித் அகன்.

அனகா தான், “அர்ஜி வாங்கிய நகையெல்லாம் நிங்களுக்கு இந்து செமயா இருந்தது ஏடத்தி…” எனச் சிலாகிக்க, அவள் புருவம் சுருக்கினாள்.

“இதெல்லாம் அத்தை குடுத்ததா தான சொன்ன?”

அவள் திருதிருவென விழித்து விட்டு, “ஆமா ஆமா… யார் குடுத்தா என்ன?” எனச் சமாளித்து விட்டு ஓடினாள். ‘இவ்ளோ நகையையும் அவனா வாங்கிருப்பான்? அட அரைப் பைத்தியமே!’ என்றிருந்தது அவளுக்கு.

முதலிரவு அறைக்கான அலங்காரங்கள் மெல்லிய மெழுகுவர்த்தி ஒளியின் பின்னணியில் நிகழ்ந்து கொண்டிருக்க, அலங்கரிக்க வேண்டியவளோ முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தபடி அமர்ந்திருந்தாள்.

கேரளத்து மணப்பெண் அலங்காரங்களைக் கலைத்து விட்டு, கசவு என்னும் புடவையை அணிந்து கொண்டவளுக்கு, அந்த க்ரீம் நிற வெள்ளைப் புடவை சற்றே மெலிதாய் இருப்பது போல ஒரு உணர்வு.

“மோளே… முத்தச்சன், முத்தக்ஷிகிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கோ!” சுஜாதா அவளிடம் கூறியதில், பெரியவர்களிடம் இதோடு பத்தாவது முறையாகக் காலில் விழுந்து வணங்கியவளுக்கு ‘ஐயோ’ என்றிருந்தது.

வீட்டின் மூத்த தலைமுறையினர் அவள் நெற்றியில் சந்தனம் குங்குமம் வைத்து ஆசீர்வதித்தனர்.

‘சந்தனம் பூசிப் பூசி, நெத்தி குளிர்ந்து தலைவலி வந்தது தான் மிச்சம்’ தனக்குள்ளேயே புலம்பினாள்.

அவள் கையில் வெதுவெதுப்பான பால் சொம்பைத் திணித்த சுஜாதா, “ரூம்ல ஸ்வீட் இண்டு மோளே… ஆத்யம் ஸ்வீட் சாப்பிடணும், பின்னே பால். இது குடும்ப வழக்கம்!” என்று கூறிட, அன்விதாவும் அனகாவின் தோழிகளும் இணைந்து தான் அவளை முதலிரவு அறைக்கு அழைத்துச் சென்றனர். கூடவே அன்விதா தவிர மற்றவர்களிடம் குறும்புச் சிரிப்பு.

‘இவளுங்களுக்கு எதுக்கு இவ்ளோ சிரிப்பாம்…’ எனப் பல்லைக் கடித்தவளோ, கட்டிலில் காலை ஆட்டியபடி அமர்ந்திருந்த ஆறடி ஆடவனை நோக்கித் தீப்பந்தத்தையே நீட்டினாள்.

அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன், “ஈ சாரியைச் சுத்திட்டு வரானானோ இத்தர நேரம்… (இந்த சேரியை சுத்திட்டு வரத்தான் இவளோ நேரமா)” என்றான் ஏளனமாக.

“ட்ரெடிஷன், ட்ரெடிஷன்னு காலைல இருந்து என்னை டார்ச்சர் செஞ்சது பத்தாதுன்னு, இப்பவும் எல்லார் கால்லயும் விழுந்துட்டு வந்திருக்கேன்…” என எரிச்சலுற,

அவனோ காலை இன்னும் ஆட்டினான்.

“இன்னும் என்டெ காலில் வீணில்லே, (விழுகல) காந்தாரி…” ஆணவம் மிகுந்தது அவன் குரலில்.

“அதுக்கு வேற ஆளைப் பாரு! உன் கால்ல விழுகறதுக்கு நான் என் ஹை-வியூ கிளாம்பிங்ல இருந்து குதிச்சு சாகலாம்…”

“பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்! இப்போ நீ என்டெ லீஸில் ஆனு காந்தாரி… அறுபது வருஷத்தேக்கு!” என இதழ் வளைத்துக் கூறிட,

“அகமொழி!” கோபத்தில் கடுகடுத்தாள்.

“நினக்கு அகமும் ஒழுங்கில்லா… மொழியும் நிதானமில்லா… ஆரா ஈ பேரிட்டது, நின்டெ அச்சனானோ? (யார் இந்தப் பேர் வச்சது, உன் அப்பாவா)” என்றான் குத்தலாக. காரில் ஏற்பட்ட வாக்குவாதம் அவனை முருங்கை மரத்திற்கு ஏற்றி விட்டது.

“என் அகமெல்லாம் நல்லாத்தான் இருக்கு மிஸ்டர் அர்ஜித் அகன்… உங்க அகம் தான் ரொம்பக் கேவலமா இருக்கு.” எனக் கொந்தளித்தாள் அகமொழி.

“வாட்எவர், அகம் ஆருக்கு வேணம்?” என்றபடி கூர்விழிகளால் அவளை ஆராயத் தொடங்க, அவளுக்கோ மேனி பற்றி எரிந்தது.

“ஆமா, இந்த நகையெல்லாம் நீயா வாங்குன… அனு சொன்னா. இதோட கம்பேர் பண்ணும்போது அந்த கிளாம்பிங் இடமே அவ்ளோ ரேட் போகாது. லாஸ் உனக்குத் தான்!”

“எஸ், யூ ஆர் ரைட்… பட்சே, லாஸ் கிளாம்பிங் விஷயத்திலல்ல.” என்றவனின் நக்கல் நிறைந்த குரலில், “வேற என்ன?” எனப் புரியாது பார்த்தாள்.

“லேண்ட் பத்து வருஷத்துல டபிள் ஆயிடும். கிளாம்பிங் பிசினஸ்ல எனிக்கு பிராஃபிட்டாக்கும். பட்சே… நான் இன்வெஸ்ட் செய்ததிலே பெரிய லாஸ் நீயானு…” என்றான் எகத்தாளமாக.

அவளோ ஆக்சிஜன் மாஸ்க் இல்லாமலேயே மூச்சிரைத்தாள்.

“பத்து வருஷத்திலே நீயும் ஓல்ட் ஆகும். ரீசேல் வேல்யூவும் காணில்லா. ஒன் நைட் ஸ்டாண்டினு ஆசிச்சிட்டு, ஐ மீன் ஆசைப்பட்டு, இன்வெஸ்ட்மென்ட் வேஸ்டாக்கியோந்து இப்போ தோணுந்து…” என்றவனின் சிவந்த நெற்றியில் வரி விழுந்தது.

அவளோ புகைந்து கொண்டிருந்தாள். ‘கட்டுன பொண்டாட்டிக்கு ரீசேல் வேல்யூ கேக்குறான் பைத்தியக்காரன்… இவனை… இவனும் இவன் பாஷையும்…’

“செரி… ஈ வேஷமெல்லாம் மாற்றியிட்டு, குறச்சு நோக்கன மாதிரி ட்ரெஸ் செய்யூ… ஞான் ஃப்ரெஷ் ஆயிட்டு வராம்.” என அர்த்தமாகக் கூறிவிட்டுச் செல்ல, அகமொழிக்கு அகமே அடைத்த நிலை தான்.

அவன் வரும் வரையிலும் அதே நிலையில் நின்றவளை ஆடவனின் விழிகள் ஏளனமாக நோக்கியது.

“ட்ரெஸ் சேஞ்ச்?” இம்முறை கடுமையாகவே வந்த அவனது குரலில் லேசாய் இதயம் படபடக்க நிற்க, அவளை நோக்கிக் காலடி எடுத்து வைத்தவனின் பாதச்சுவடில் கூட சினம் மிதந்தது.

மெல்லத் திகைத்த அகமொழி பின்னால் நகர்ந்து செல்ல, இறுதியில் சுவரில் முட்டி நின்றாள்.

அவனோ நெற்றியில் பூத்த பாவையின் வியர்வைத் துளிகளில் ஈர்க்கப்பட்டு, ஒற்றை விரலால் அதன் மீது கோலமிட, அவளுக்கு அடிவயிற்றில் எதுவோ பிசையும் உணர்வு.

மூச்சுக் காற்றுப் படும் தூரம் நெருங்கியவன் அவள் இதழ் நோக்கிக் குனிய, அவனை வெடுக்கெனத் தள்ளி விட்டவள், வாயை மூடியபடி வேக வேகமாகக் குளியலறைக்குச் சென்று வாந்தி எடுக்கத் தொடங்கினாள்.

அவளை விநோதமாகப் பார்த்தவன், “எந்தாடி, பர்ஸ்ட் நைட் அன்னைக்கே வாந்தி எடுக்கனது?” எனக் கேட்கத் திரும்பி அவனைச் சீறலாகப் பார்த்தவள், வாயைத் துடைத்து விட்டுத் திடுதிடுவென அவனிடம் வந்தாள்.

“எல்லாம் உன்னால தான்டா பைத்தியக்காரா!” கையை நீட்டித் திட்ட, அவனோ குழம்பினான்.

“ஏய் பைத்தியம், ஒரே ரூமில் தனித் தனியே உறங்கியாலே ப்ரெக்னென்ட் ஆகிடும்னு நினைச்சுட்டு இரிக்குவானோ? (நினைச்சுட்டு இருக்கியா)”

“எதே பிரெக்னென்டா? அடேய், நீ இவ்ளோ செலவு பண்ணிக் கல்யாணம் பண்ணுனியே, ஒரு பிரியாணியாவது போட்டியா… ச்சே, என் ஷேர் தரலைன்னதும் நீ பாட்டுக்கு வெஜ் மட்டும் போட்டு வச்சுருக்க. இதுல எனக்கு அந்த ஆப்பத்தையும், கடலைக் கறியையும் பார்த்தாலே வயிறு பிரட்டுது. இதுல எனக்குப் பிடிக்கவே பிடிக்காத பாலும் பழமும் வேற சம்பிரதாயம்னு தவணை முறைல குடுக்கறீங்க.” என்றவளுக்கு மீண்டும் வாந்தி வருவது போல இருக்க, குளியலறை நோக்கி ஓடினாள்.

“சரக்கடிச்சு வாந்தி எடுத்தவளை கண்டிருக்கேன். பட்சே, வெஜ் சாப்பிட்டு வாந்தி எடுக்குறவளை இப்ப தான் காணான்னு (பாக்குறேன்)” எனத் திருவிழாவில் காணாமல் போன சிறுவன் போல விழித்து நின்றது என்னவோ அர்ஜித் அகன் தான்.

அகன் வசமாவாள்!
மேகா

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்