2,090 views

வானம் 12

ப்பாவும் மகளும் ஒருசேர தன்னைப் பார்ப்பதை உணர்ந்தவள் புருவ முடிச்சுடன் சித்தார்த்தை பார்த்தவள் இதழிகாவிடம், “கியூட்டி என்ன பண்றாங்க?” என்றாள் அவளின் கன்னத்தை பிடித்துக் கொஞ்சியவாறே.

“அப்பா ஐஸ்கிரீம் குடுத்தாங்க சரயு. நான் சமத்து பொண்ணா வேண்டாம்னு சொல்லிட்டேன்” என்றவளின் கண்கள் அவளின் பாராட்டை எதிர்நோக்கி இருந்தது. அதனை உணர்ந்தவள் இதழிகாவின் பட்டுக் கன்னத்தில் முத்தமிட்டு, “கியூட்டி எப்பவும் சமத்துப் பொண்ணு தான்” என்றவளுக்கு சித்தார்த் தன்னை பார்த்ததன் அர்த்தம் புரிய அவன் தவறாக எண்ணி விடுவானோ என்றெண்ணி, “அதுவந்து…” என தயக்கமாக அவனுக்கு விளக்கமளிக்க முயற்பட்டவளைத் தடுத்தது சித்தார்த்தின் வார்த்தைகள்.

“தேங்க்ஸ் சரயு” என்றவனுக்கு சிறுதலையசைப்பை மட்டும் பதிலாக அளித்தவள், “நம்ம வொர்க்க ஆரம்பிக்கலாமா கியூட்டி” என்றவள் அவளுடன் தன் பணியை கவனிக்க செல்ல, சித்தார்த்தின் பார்வையோ சரயுவையே பின்தொடர்ந்தது.

தன்னை யாரோ பார்ப்பதை போல் உணர்ந்து திரும்பி பார்த்தவள், சித்தார்த் தன்னை பார்ப்பதை கண்டு ‘என்ன’ என்பது போல் விழியுயர்த்த, சித்தார்த் சற்று தடுமாறி தன்னை நிதானப்படுத்திக் கொண்டு தன் வேலையை கவனிப்பதுபோல் குனிந்துக் கொண்டான். சரயுவோ யோசனையுடனே தன் வேலையை கவனிக்கச் சென்றாள்.

இதனை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த சம்யுக்தா சரயுவின் அருகில் வந்து, “உனக்கும் சித்தார்த் சார்க்கும் இடைல என்னதான் நடக்குது டி” என விழி உயர்த்தினாள்.

“எனக்கும் அவருக்கும் இடைல என்ன நடக்குது?” என இவள் அவளிடமே மறுகேள்வி வினவ, “ஆக, நான் கேட்ட கேள்வியோட அர்த்தம் உனக்கு புரியல, அப்படித் தான!” என்றாள் அவளை ஊடுருவும் பார்வையோடு.

“அப்படிலாம் இல்ல சம்யு, நான் சீரியஸ்ஸா தான் கேட்குறேன். எனக்கும் கியூட்டியோட அப்பாவுக்கும் என்ன சம்பந்தம்… நீ ஏன் இப்படி கேட்கிற?” என்றாலும் தன் தோழியின் கேள்வியின் அர்த்தத்தை உணர்ந்துதான் இருந்தாள்.

“அப்போ கண்ணாலயே பேசிக்கிறதுலாம்” என ஒற்றை புருவம் உயர்த்த, “அது… நான் எதேச்சையா திரும்பும்போது அவங்க பாத்தாங்க, அதான் என்னனு கேட்டுட்டேன்… இதுல என்ன இருக்கு, போய் வேலைய பாரு சம்யு. வேல நேரத்துல பேசக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்கள்ள. ஓடு ஓடு” என அவளை தள்ளிவிடாத குறையாய் விரட்ட, அவளின் தடுமாற்றத்தை உணர்ந்தவள், “பார்த்துக்கிறேன்” என முணுமுணுத்தவாறே அங்கிருந்து நகர்ந்தாள்.

சரயுவின் பார்வை அனிச்சையாக பில்போடும் இடத்தில் அமர்ந்திருந்த சித்தார்த்தின் மேல் மீண்டும் படர்ந்தது. அவனோ ஏதோ தீவிரமாக எழுதிக் கொண்டிருப்பது போன்ற முகபாவத்துடன் கையில் இருந்த டைரியில் எழுதிக் கொண்டிருந்தான்.

அப்பொழுது “தேவிகா” என கடைக்கு வந்திருந்த பெண்ணொருத்தி தன் மகளை அழைத்துக்கொண்டிருக்க, அந்த பெயரைக் கேட்டவுடன் சித்தார்த்தின் விழிகள் அவசரமாக அந்த பெயருக்கு சொந்தக்காரியை தேடியது.

“இதோ வந்துட்டேன் ம்மா, ஏன் இப்படி கத்துற” என சடைந்தவாறே அந்த பெயருக்கு சொந்தக்காரி தன் அம்மாவிடம் வர அவனது கண்களில் தெரிந்த உணர்வை சரயுவால் கண்டறிய முடியவில்லை.

ஆனால் அந்த பெயருக்கும் அவனிற்கும் ஏதோ சம்பந்தம் உள்ளது என்பது மட்டும் புரிந்தது. ஒருவேளை அவனது மனைவியின் பெயராக இருக்குமோ என கேள்வி எழுப்பிய மனதை அடக்கியவள் மீண்டும் தன் பணியை தொடர, சித்தார்த்தோ கண்களை இறுக மூடி தலையை தாங்கிய வண்ணம் அமர்ந்திருந்தான்.

இமைகளுக்கிடையே தேவிகாவின் உருவம் நிழலாட அதனை கலைக்க எண்ணி கண்களை மேலும் மேலும் இறுக்கிக் கொள்ள முற்பட்டான். ஆனால் நினைவுகளோ அவனை விட்டு விலக மறுத்தன.

மே, 2017

“வீட்டுக்கு ஒரே பையங்கிறதால அப்பா, அம்மாவோட தான் எனக்கு அதிகமான ஒட்டுதல். அதுனாலயோ என்னவோ எனக்கு பிரண்ட்ஸ்னு பெருசா சொல்லிக்கிற அளவுக்கு யாருமில்ல தேவி. எனக்கு வரப்போற மனைவி எனக்கு ஒரு நல்ல பிரண்டா இருக்கணும்னு ஆசை. எனக்கு ஒரு பிரண்டா நீங்க இருப்பீங்களா!” என்றவனின் கண்களில் அத்தனை ஆர்வம்.

தலையை குனிந்திருந்தவள் “ம்” என ஆட்ட, “தேங்க்ஸ் தேவிகா” என்றவன், “இத மொதல்லயே கேட்ருக்கணும், சாரி… ஒரு ஆர்வத்துல ஏதேதோ பேசிட்டு இருக்கேன். என்னை கல்யாணம் பண்ணிக்க உங்களுக்கு விருப்பமா தேவிகா?” என்றவனுக்கு எதிரே நின்றிருந்தவளோ இன்னும் குனிந்த தலை நிமிராமல் தான் இருந்தாள்.

அவளிடம் பதில் இல்லாமல் போக, “தேவிகா… உங்களுக்கு இதுல விருப்பமானு கேட்டேன்” என மீண்டும் அவன் வினவ, அதற்கும் “ம்” என்று மட்டுமே பதிலாக வந்தது. அதற்குள், “தேவிகா” என அழைத்தவாறே அவர்கள் வீட்டு மாடிக்கு வந்திருந்தார் தேவிகாவின் அன்னை ராஜேஸ்வரி.

“மாப்பிள்ளை உங்கள கீழ கூப்பிடறாங்க” என சித்தார்த்தை பார்த்துக் கூறவும் அவனது பார்வை தேவிகாவின் மீதே இருக்க, “மாப்பிள்ள” என மீண்டும் அழைக்க, “சரிங்க அத்த” என்றவன் அங்கிருந்து செல்ல மனமில்லாமல் கீழே இறங்கினான்.

அவனது தலை மறையவும், “ஏன்டி அவரு தான் பேசணும்னு கூப்ட்டா உடனே ஓடியாந்திருவியா… இங்க பாரு, இந்த கல்யாணம் முடியவரைக்கும் அவர்கிட்ட உன் வாய தொறந்துறாத. உன் விருப்பத்தோட தான் எல்லாம் நடக்குதுனு உன் மண்டைல நல்லா ஏத்திக்கோ சரியா!” என கட்டளையாக வந்தது வார்த்தைகள்.

அவள் அதற்கும் “ம்” என்று மட்டுமே தலையாட்டினாள். “சரி, சரி சிரிச்ச முகத்தோட கீழ வா” என அவளை தரதரவென இழுக்காத குறையாய் கீழே அழைத்துச் சென்றார் ராஜேஸ்வரி.

தேவிகாவின் வீட்டு நடுக்கூடத்தில் அமர்ந்திருந்தனர் சித்தார்த்தின் குடும்பத்தார். “உங்களுக்கு சம்மதம்னா இன்னிக்கே பொண்ணுக்கு பூ வச்சற்லாம் சம்பந்தி” என்றார் கற்பகம்மாள்.

“எங்களுக்கு இதுல பரிபூரண சம்மதம் சம்பந்தியம்மா. தரகர் மாப்பிள்ளை போட்டோ காமிச்ச உடனே நாங்க முடிவு பண்ணிட்டோம் இவர் தான் எங்க வீட்டு மாப்பிள்ளைனு. இப்போ மாப்பிள்ளைக்கும் சம்மதம்னு உறுதியாகிருச்சு. இனி அடுத்தக்கட்ட வேலைய ஆரம்பிச்சுருவோம்” என்றவரின் வார்த்தைகளில் அத்தனை வேகம் இருந்தது.

“ஆமா சம்பந்தி, அவர் சொல்ற மாதிரி மாப்பிள்ளை போட்டோவ பாத்தோனே எங்க தேவிகாவுக்கு உடனே பிடிச்சுப் போச்சு” என தன் கணவனின் பேச்சுக்கு ஒத்துப்போனார்  ராஜேஸ்வரி.

“என்ன கண்ணா, இன்னிக்கே பொண்ணுக்கு பூ வச்சற்லாமா?” என்ற கற்பகம்மாளிடம் வெட்கத்தோடு சம்மதமளித்தான் சித்தார்த். அன்றே பூ வைத்து நிச்சயத்திற்கு நாளும் குறித்துவிட அடுத்தக்கட்ட வேலைகளை பற்றி பெரியவர்கள் பேச ஆரம்பிக்க சித்தார்த்திற்கோ என்ன செய்வது எனப் புரியாமல் அவர்களுக்கிடையே அமர்ந்திருந்தான்.

தேவிகாவை கண்களாலே தேட அவளோ அவளது அறையில் யாருடனோ சண்டையிட்டுக் கொண்டிருந்ததால் அவனது கண்களுக்கு சிக்காமல் போனாள்.

மெதுவாக எழுந்து வீட்டை சுற்றிப் பார்ப்பதுபோல் கண்களை சுழலவிட்டவன் தேவிகாவையும் ஆர்வத்தோடு தேட ஆரம்பித்தான்.

கடைசியில் அவளது அறை முன்பு வந்திருந்தவன் அவளது பேச்சு சப்தம் கேட்கவே கதவை தட்டினான். அவசரமாக அலைப்பேசியை வைத்தவள் முகத்தில் புன்னகையை ஒட்டிக்கொண்டு கதவைத் திறந்தாள்.

அவளிடம் பேச எண்ணியவனுக்கு ஏனோ வார்த்தைகள் வராததால் “அதுவந்து…” எனத் தடுமாறி, “பெரியவங்க எல்லாம் பேசிட்டு இருக்காங்க. அதான், எனக்கு என்ன பண்றதுனு தெரியாம வீட்ட சுத்திப் பார்த்துட்டு இருந்தேன். இந்த ரூம்ல உங்க பேச்சு சத்தம் கேட்கவும் கதவ தட்டிட்டேன்” என விளக்கமளிக்க,

சரி என அவள் தலையசைக்கவும் கற்பகம்மாள் அங்கு வரவும் சரியாக இருந்தது. “என்ன கண்ணா, என் மருமகட்ட பேசி முடிச்சாச்சா?” என்கவும்,

‘எங்க பேச விடுறீங்க’ என முணுமுணுத்தவாறே தலைகோதியவன், “ம்” என தன் தாயின் கேள்விக்கு பதிலளித்து விட்டு, தேவிகாவிடம் சிறு தலையசைப்போடு அங்கிருந்து விடைபெற்றான்.

தேவிகாவை முதன்முறை பார்த்த நினைவுகள் அவனை அலைக்கழிக்க தலையை அழுந்தப் பிடித்துக் கொண்டான். கண்களை மெதுவாக திறக்க அவன் முன்னே சூடாக ஆவி பறக்கும் டீ மேஜையின் மீது தயாராக இருந்தது.

யார் அதை வைத்திருப்பார்கள் என கண்களை சுழலவிட, அங்கு வந்த பாண்டியன், “அண்ணா டீ கேட்டீங்களாமே, சரயு சொன்னாங்க. அதான் வாங்கிட்டு வந்தேன் ண்ணா. சூடு போதுமாண்ணா, இல்ல வேற வாங்கிட்டு வரவா?” என கர்மசிரத்தையாய் சரயுவையும் போட்டுக் கொடுக்க, ‘நான் எப்போ அவக்கிட்ட டீ கேட்டேன்’ என மனதினுள் கேள்வியை ஓடவிட்டவாறே, “இதுவே போதும் பாண்டியா” என்றவனின் கண்கள் சரயுவைத் தேடியது.

பாண்டியன் கூறியதை சற்று தள்ளி நின்று கேட்டுக் கொண்டிருந்தவள் தலையில் அடித்துக் கொண்டாள். “பாண்டி அண்ணா, கடைசில இப்படி சொதப்பிட்டீங்களே!” என புலம்பியவாறே சித்தார்த் தன்னை தவறாக எண்ணிவிடக் கூடாது என நினைத்தவள் அவனிடம் ஏதாவது கூறி சமாளிப்போம் என்றெண்ணி அவனிடம் சென்றாள்.

சரயுவே தன்னை நோக்கி வருவதைக் கண்டவன், “நான் எப்போ உன்கிட்ட டீ கேட்டேன்?” என்றான் அழுத்தமாய். அவனது கண்கள் அவளை ஊடுருவ, அதன் வீச்சை தாங்க முடியாமல் தடுமாறியவள் ஓரிரு வினாடிகளில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு, “அது… அதுவந்து, நீங்க தலைய பிடிச்சுட்டு உக்காந்திருந்ததால தலைவலி போலனு நினைச்சுட்டு நான் தான் பாண்டி அண்ணாட்ட டீ வாங்கிட்டு வர சொன்னேன். தலைவலிச்சா ஸ்ட்ராங்கா ஒரு டீ குடிச்சா போதும். பட்டுனு சரி ஆகிரும். அதான்…” என இழுத்தவாறே அவனது முகம் நோக்கினாள்.

அவனது பார்வை அவளது முகத்திலேயே ஓரிரு நொடிகள் நிலைத்திருக்க, பட்டென அவள் தலைகுனிந்துக் கொள்ளவும், “சரி, போ” என்றான் சித்தார்த்.

‘தப்பிச்சோம் டா சாமி’ என அவள் அங்கிருந்து நகர, “ஒரு நிமிஷம்” என்ற சித்தார்த்தின் வார்த்தைகளை கேட்டு, “திரும்பவுமா” என மனதினுள் கூறுவதாக நினைத்து சப்தமாக கூறிவிட, அவனது முகத்தில் சிறு புன்னகை மலர்ந்ததோ என எண்ணுவதற்குள் மீண்டும் முகம் இறுகிப் போயிருந்தது.

“இனி இதுமாதிரி அதிக பிரசங்கித் தனமா எதுவும் பண்ணாத. எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது, டூ யூ அண்டர்ஸ்டேண்ட்?” என அழுத்தமாய் வந்தது வார்த்தைகள்.

“சாரி” என முணுமுணுத்தவள் அங்கிருந்து ஓடாத குறையாய் தன் இடத்திற்கு வந்து சேர்ந்தாள்.

“அதிக பிரசங்கித் தனமாம்… பாவம் பாத்து பண்ணேன்ல, எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்” என முகத்தை சிலிப்பிக் கொண்டாள் சரயு.

தேவிகா என்ற பெயரை கேட்டதன்பின் அவனின் முகமாற்றங்களை கவனித்துக் கொண்டிருந்தவளுக்கு அவன் நெடுநேரமாக தலையை அழுந்தப் பிடித்த வண்ணம் அமர்ந்திருந்தது ஏனோ மனதை பிசைய, கண்டிப்பாக அவனது கடந்த காலத்திற்கும் அந்த பெயருக்கும் சம்பந்தம் உள்ளது என்பது புரிந்தாலும் என்ன என்பது மட்டும் புரிபடாததால் அவன் ஓரளவு தன்னை சமன்படுத்திக் கொள்ளட்டுமே என்றுதான் பாண்டியனிடம் அவன் டீ கேட்டதாக கூறி வாங்கி வரக் கூறி இருந்தாள்.

ஆனால் தான் செய்தது உண்மையிலேயே அதிக பிரசங்கித் தனமோ என எண்ண வைத்தது சித்தார்த்தின் கோப முகம். “விடு சரயு, நாலு நல்லது பண்ணா இந்த உலகம் நம்மள இப்படி தான் சொல்லும்” என தனக்குத்தானே கூறிக் கொண்டவள் தன் பணியைத் தொடர, சித்தார்த்தோ டீயை பருக ஆரம்பித்தான்.

சில நொடிகளுக்குப் பின் அவன் மனம் ஓரளவு இயல்பாக, அதற்கு காரணமான கையில் இருந்த டீ கிளாஸிற்கு நன்றியுரைக்க சென்றவனின் விழிகள் அனிச்சையாக சரயுவைத் தேடியது.

_தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
17
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. Nalu nalladhu panna thaputhan Pola sarayu 🤨🤨🤨