Loading

26

சிரஞ்சீவி தனது உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்க, “இவ்ளோ அவசரமா நீ வேலைய ரிசைன் பண்ண என்ன காரணம் டா?” என்றான் ரகுநந்தன்.

“எனக்கு பிடிக்கல, அதான் நான் கிளம்புறேன் டா…” என்றவன், அதற்கு மேல் பேசாமல் தனது வேலையைத் தொடர,

“பிடிக்கலனா?… என்ன அர்த்தம் இதுக்கு?” என்றான் ரகுநந்தன்.

அவனோ எதுவும் பேசாமல் அமைதியாக உடைகளை எடுத்து வைக்க, அவன் தோள்களைக் குலுக்கினான் ரகுநந்தன்.

“என்ன டா பிரச்சனை? இவ்ளோ அவசரமா நீ சென்னை கிளம்ப வேண்டிய அவசியம் என்ன?” என்றான். மிதிலாவும் அதே கேள்வியோடு தான் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் அதற்கு கூறிய பதிலில் இருவருமே அதிர்ந்தனர்.

அவன் கூறக்கூற மிதிலாவிற்கு தான் அதிர்ச்சி மேலிட்டன. ரகுநந்தனோ அவனை ஆராயும் பார்வை பார்த்தான்.

“இப்போ நீ சென்னை போய்ட்டா இந்த பிரச்சனை சரியாகிருமா டா?” என்க,

“தெரியல டா… ஆனா, என் மனசு ஓரளவாவது மாறும்னு தான் அங்க போறேன்” என்றவன், “என்னை ரயில்வே ஸ்டேசன்ல டிராப் பண்றியா? இல்ல டாக்சி புக் பண்ணவா டா?” என்க,

“நானே கொண்டு போய் விடறேன்” என்றவன், விறுவிறுவென வெளியே செல்ல, அவள் கேட்க நினைத்த அனைத்தையுமே அவளின் கணவன் கேட்டு விட்டதால் அதற்கு மேல் அவளும் பேசாமல் அங்கிருந்து சென்றாள்.

தன் நண்பனை கோவை ரயில் நிலையத்தில் விடச் சென்றான் ரகுநந்தன். மிதிலாவோ தனியாக இருக்க வேண்டாம் என்று, தன் வீட்டிற்கு சென்றாள்.

“என்ன மா? மாப்பிள்ளை கூட இருக்க வேண்டியது தான?, அவர தனியா விட்டுட்டு நீ ஏன் ம்மா இங்க வந்த?” என பூங்கோதை வினவ,

‘என் வீட்டுக்கு வரதுக்கே இனி நான் யோசிச்சு தான் வரணும்ல… அதுவும் அவரு இருக்கும் போது நான் தனியா வந்தா இப்படி தான் கேள்வி கேட்பாங்கள்ள’ என நினைத்தவளுக்கு, துக்கம் தொண்டையை அடைக்க “அவரு வெளிய போய்ருக்காரு ம்மா… அவரு வர்ற வரை இங்க இருக்கலாம்னு வந்தேன்” என்றாள் மிதிலா.

“சரி மிது. நீ உட்கார்ந்து டீவி பாரு, நான் உனக்கு பிடிச்ச இளநீர் பாயாசம் பண்றேன்” என சமையலறைக்குள் சென்ற தன் அம்மாவை அதிசயமாகப் பார்த்தாள்.

அவள் எப்பொழுதாவது இளநீர் பாயாசம் வேண்டும் எனக் கேட்டால், ஏதாவது ஒரு காரணம் சொல்லும் தன் அன்னை இன்று அவரே அவள் கேட்காமல் செய்கிறேன் எனச் சென்றது, ஏனோ சந்தோசத்திற்கு பதில் வருத்ததையே அளித்தது.

‘இனி நான் இங்க சகஜமா இருக்க முடியாதுல்ல… என்னை ஒரு விருந்தாளி மாதிரி தான பார்க்கிறாங்க’ என நினைக்கும் போதே, தூக்கத்தில் இருந்து கண்ணைத் தேய்த்து கொண்டே அறையில் இருந்து வந்தாள் நறுமுகை.

“வா டி குட்டச்சி… எங்க நீ மட்டும் வந்திருக்க? மாம்ஸ்ஸ காணோம்” என்க, எரிகின்ற தீயில் எண்ணெயை ஊற்றியது போல் இருந்தது அவளின் வரவேற்பு.

“அவரு வெளிய போய்ருக்காரு…” என்றவள், டீவியில் தன் கவனத்தைப் பதிக்க, அவள் அருகில் அமர்ந்தவாறே நறுமுகையும் டீவி பார்க்க ஆரம்பித்தாள்.

மிதிலாவிற்கு பிடித்த திரைப்படம் ஒன்று கே டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க, அந்த படம் நறுமுகைக்கு பிடிக்காது என்பதால் இருவரும் ரிமோட்க்கு அடித்துக் கொண்டு கிடப்பர். ஆனால் இன்றோ நறுமுகை அமைதியாக அமர்ந்து அந்த படத்தைப் பார்த்துக் கொண்டிருக்க, இதுமாதிரியான சிறுசிறு விசயங்கள் கூட அவளுக்கு ஏனோ அன்னியதன்மையை ஏற்படுத்தியது.

பூங்கோதை கொண்டு வந்து கொடுத்த இளநீர் பாயாசத்தை அமைதியாக குடித்தாள் மிதிலா.

வெளியே சென்றிருந்த சுந்தரேசன் அப்பொழுது தான் வீட்டிற்கு வர, தன் மூத்த மகளைப் பார்த்த அவர், “எங்க மா மாப்பிள்ளை? நீ மட்டும் தான் வந்துருக்கியா?” என்றார்.

“அவரு வெளிய போய்ருக்காரு ப்பா…” என்றவளின் மனமோ கொதித்துக் கொண்டு இருந்தன.

இன்று காலையில் தான் இந்த வீட்டை விட்டு தன் புகுந்த வீட்டிற்கு சென்றாள். ஆனால், இடைப்பட்ட ஏழு அல்லது எட்டு மணி நேரத்திற்குள் எத்தனை மாற்றங்கள். எட்டு மணி நேரத்தில் இந்த வீட்டிற்கு நான் விருந்தாளி ஆகிவிட்டேன் அல்லவா! என அவள் மனம் தவிக்கத் தொடங்கியது.

தலைவலி, சென்று படுகிறேன் என வாய்க்கு வந்த காரணத்தை ஒப்பித்துவிட்டு தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

வீடு அமைதியாக இருக்க, அந்த அமைதியே அவளை கொல்லுவதாக இருந்தது.

கதவைப் பூட்டிவிட்டு அறைக்குள் சென்றாள் மிதிலா.

எப்பொழுதும் போல் புகைப்படத்தை அணைத்துக் கொண்டு கண்களை இறுக மூடி தூக்கத்தை வலுக்கட்டாயமாக வரவழைத்தாள்.

சிரஞ்சீவியை கொண்டு போய் விட்டுவிட்டு வந்த ரகுநந்தன், தன்னிடம் இருந்த மற்றொரு சாவி மூலம் வீட்டைத் திறந்து கொண்டு வந்தான்.

இங்கு வருவதற்கு முன்பே தன் மாமனார் வீட்டிற்கு சென்று மிதிலாவை அழைத்து வரப் போக, பூங்கோதையோ “அவ தலைவலினு சொல்லி படுக்கப் போய்ட்டா மாப்பிள்ளை. நீங்க உள்ள வாங்க, பாயாசம் பண்ணி இருக்கேன்” என அவனை அழைக்க,

தன்னவளுக்கு தலைவலி எனக் கூறியவுடன், “இல்ல அத்தை. பரவாயில்ல, நான் போய் ஜானுவ பார்க்கிறேன்” என அவன் கிளம்ப,

அவனின் பதற்றத்தை உணர்ந்தவர், “சரி, நீங்க போங்க மாப்பிள்ளை. நைட் டிப்பனும் இங்கயே செஞ்சு முகி கிட்ட கொடுத்து விடறேன், அவள ரெஸ்ட் எடுக்கச் சொல்லுங்க” என்றார்.

அவரின் பதிலுக்கு சரியென தலையாட்டியவன், வேகமாக தங்கள் பிளாட்டிற்கு சென்றான்.

அழைப்பு மணி அடித்து தூங்கி கொண்டிருப்பவளின் தூக்கத்தை எதற்கு கலைக்க வேண்டும் என எண்ணியவன், தன்னிடம் இருந்த மற்றொரு சாவியைக் கொண்டு கதவைத் திறந்து உள்ளே சென்றான்.

ரகுநந்தன், சிரஞ்சீவி இருவரிடமும் தனித்தனியாக சாவி இருக்க, இன்று சிரஞ்சீவியை ரயில் நிலையத்தில் விடும் போது தன்னிடமிருந்த சாவியை இவனிடம் கொடுத்து இருந்தான் சிரஞ்சீவி.

அது இப்பொழுது அவனுக்கு பயன்பட, உள்ளே வந்தவன் கதவை உள் தாழிட்டுவிட்டு தங்கள் அறைக்கு சென்றான் ரகுநந்தன்.

அங்கோ கை, கால்களைக் குறுக்கிக் கொண்டு மெத்தையில் ஓர் ஓரத்தில் சுருண்டு படுத்திருந்தாள் மிதிலா.

“ஜானு…” என அவன் அருகில் செல்ல, அவளோ நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். அவளின் நெஞ்சின் மேல் அவர்களின் சிறுவயது புகைப்படம் இருக்க,

“நிஜத்தை விட்டுட்டு நிழலோட குடும்பம் நடத்துறியா ஜானு… நான் பண்ணது தப்பு தான், ஆனா எனக்கு வேற வழி தெரியல ஜானு. உன்னை ரொம்ப கஷ்டப்படுத்தறனா ஜானு” என்றவாறே அவளின் கேசத்தை வருடிவிட,

தூக்கத்தில் புரண்டு படுத்தவள் அவனின் கைகளையும் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு படுக்க, அவனின் கரங்கள் அவளின் நெஞ்சில் குடி கொண்டிருக்க அவளை நெருங்கி அமர்ந்தான் ரகுநந்தன்.

“இவ்ளோ வருஷமா அம்மா, அப்பா, தங்கச்சி தான் உலகம்னு வாழ்ந்துட்டு இருந்த உன்னை நான் அவங்க கிட்ட இருந்து ஒரே நாள்ள பிரிச்சுட்டு வந்துட்டேனு கோபமா ஜானு… கஷ்டம் தான், எனக்கும் உன் வலி புரியுது டி. ஆனால் உனக்கு ஏன் டி என் வலி புரிய மாட்டேங்கிது, நீ சொன்ன ஒத்த வார்த்தைக்காக தான் இன்னிக்கு திரும்ப அம்மாகிட்ட போய் பேசுனேன். ஆனா, அவங்க உன்னை கேவலப்படுத்துறேனு தன்னையே தரம் தாழ்த்தி கிட்டாங்க. உன்னை எந்த சூழ்நிலையிலும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் ஜானு, யார் எதிர்த்தாலும். ஏன், நீயே எதிர்த்தாலும் நான் உன்னை விட மாட்டேன் டி. என் உயிரோட கலந்தவ டி நீ… நீ என்னை விட்டு பிரியறது என் உடல்ல இருந்து உயிர் பிரியறதுக்கு சமம், இன்னும் என் இதயம் துடிக்கிறதுக்கு காரணம் நீ மட்டும் தான் ஜானு… என்னோட பதினாலு வருஷத் தேடலுக்கு கிடைச்ச பொக்கிஷம் நீ, உன்னை எந்த சூழ்நிலையிலும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்” என அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு அவள் தலையைக் கோதி விட்டவாறே தன்னவளின் முகத்தைப் பார்த்தான் ரகுநந்தன்.

அத்தனை உறக்கத்திலும் தன்னவனின் அருகாமையை உணர்ந்ததாலோ என்னவோ அவனின் கரத்தை தன்னுள்ளே புதைத்தவாறே நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்தாள் அவனின் ஜானகி.

எத்தனை நேரம் அவளை ரசித்தான் எனத் தெரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அழைப்பு மணி ஓசைக் கேட்டு தான் நிகழ்காலத்திற்கு வந்தான் ரகுநந்தன்.

அவளிடமிருந்து கஷ்டப்பட்டு தன் கரங்களை விடுவித்துக் கொண்டவன், எழுந்து வெளியே வந்து கதவைத் திறந்தான்.

“மாம்ஸ் டிப்பன்…” என கையில் கேரியருடன் நின்றிருந்தாள் நறுமுகை.

“உள்ள வா முகி” என்றவன், அவள் கரங்களில் இருந்த கேரியரை வாங்கிக் கொண்டு போய் டைனிங் டேபிளில் வைக்க,

“அக்கா எங்க மாம்ஸ்? இப்போ தலைவலி எப்படி இருக்காம்?” என அறையை பார்க்க,

“அவ இன்னும் தூங்கறா முகி. எழுப்ப மனசில்ல, கொஞ்சம் நேரம் தூங்கட்டும். அப்புறம் அவ எந்திரிச்சவுடனே நான் சாப்பிட வைக்கிறேன்” என்க,

“ஓ.கே மாம்ஸ். அப்போ நான் கிளம்புறேன்” என்றவள், “நாளைல இருந்து நான் காலேஜ் போறேன் மாம்ஸ்… அவ எப்போ காலேஜ் வர்றா?” என்றாள் நறுமுகை.

“உன் அக்காகிட்ட நீ தான் அத கேட்கணும்” என்க, “இன்னும் பேசாம தான் இருக்காளா மாமா?” என்றாள் நறுமுகை.

“கோபம் கொஞ்சம் இல்ல, ரொம்பவே இருக்கு. சாமி மலை இறங்குற வரை அமைதியா காத்திருந்து தான ஆகணும்” எனக் கூறுபவனை புன்னகையுடன் ஏறிட்டவள்,

“எங்க டிப்பார்ட்மெண்ட் ஹெச்.ஓ.டி சார் டெரர் பீஸ்னு நினைச்சா இப்படி ஒரு பொண்டாட்டிதாசனா இருக்கீங்களே மாம்ஸ்” என கிண்டல் பண்ண,

“பாரு, நீ எல்லாம் என்னை கிண்டல் பண்ண வேண்டிய நிலைக்கு வந்துட்டேன். என்ன கொடுமை சரவணா இது!” என அவன் தலையில் கை வைக்க,

“அய்யோ அய்யோ… உங்கள இப்படி பார்க்கத் தான் ரொம்ப அம்சமா இருக்கு” என நெட்டி முறித்தவள், “சரி, நான் போய்ட்டு வரேன் மாம்ஸ்…” என்றவள் அங்கிருந்து கிளம்பினாள்.

அவள் கிளம்பும் போது சிரஞ்சீவியின் அறைப் பக்கம் கண்கள் செல்ல, அதுவோ சாற்றி இருந்ததால் ‘எங்க ஆளயே காணோம்’ என நினைத்தவாறே கிளம்பினாள் நறுமுகை.

அவளின் பார்வை சிரஞ்சீவியின் அறை மேல் பட்டு மீண்டதைக் கவனித்த ரகுநந்தன், எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

அவள் கிளம்பிய பின், கதவை சாற்றி தாழ் வைத்தவன் தன்னவளை நேராக படுக்க வைத்துவிட்டு, போர்வையைப் போத்தி விட்டான்.

பின் ஹாலில் இருந்த ஷோஃபாவில் வந்து படுத்தவன், அறையின் கதவு திறந்திருந்ததால் தன்னவள் உறங்கும் அழகைப் பார்த்தவாறே கண்களை மூடினான்.

பதினோரு மணியளவில் முழிப்பு வர, “இன்னுமா அவரு வரல?” என அறையினுள் தன் பார்வையை சுழற்ற, அறை முழுவதும் இருட்டு சூழ்ந்திருத்ததால் மெல்ல எழுந்து விளக்கை ஒளிர விட்டாள் மிதிலா.

அறைக்குள் அவன் இல்லாததைக் கண்டு வெளியே வந்து பார்த்தவள், ஷோஃபாவில் குறுகிப் படுத்திருந்த ரகுநந்தனைக் கண்டு “வந்தா எழுப்பி விட வேண்டியது தான? இப்படியா இந்த குட்டி ஷோஃபால படுக்கிறது” என முணுகியவளுக்கு, அப்பொழுது தான் வயிறு தன் பசியை எடுத்துரைக்க,

“சாப்பிடாமலே படுத்ததால பசிக்குதே” என சமையற்கட்டிற்குள் செல்ல முனைந்தவள், டைனிங் டேபிள் மேல் இருந்த கேரியர் கண்ணில் பட அதனை எடுத்துப் பார்த்தாள்.

தன் அம்மா தான் செய்து கொடுத்தனுப்பி இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டவள், என்னென்ன இருக்கிறது என ஆராய்ந்தவள் ‘அப்போ இவரு இன்னும் சாப்பிடலயா… எல்லாம் அப்படி அப்படியே இருக்கே’ என நினைத்தவள், அவனை எழுப்ப அருகே சென்றாள்.

ஆனால் எப்படி எழுப்புவது எனத் தெரியாமல் அவள் முழித்துக் கொண்டிருக்க, விளக்கொளியின் உபாயத்தால் அவன் கண்களைக் கசக்கியவாறே திறக்க முயன்றவன், தன்னருகே தன்னவள் நிற்பதை உணர்ந்து வேகமாக எழுந்தமர்ந்தான்.

“என்னாச்சு ஜானு? இன்னும் தலைவலி இருக்கா?” என அவன் அவசரமாக எழுந்து அவள் நெற்றியைத் தொடப் போக அவளோ அனிச்சையாக இரண்டடி பின் நகர்ந்தாள்.

அவன் கை அந்தரத்தில் இருக்க, “இப்போ எப்படி இருக்கு தலைவலி? எந்த பிராப்ளமும் இல்லையே… ரொம்ப வலிச்சா சொல்லு ஜானு, இப்பவே ஹாஸ்பிட்டல் போகலாம்” என அவன் படபடவென பொரிய,

அவளோ எதுவும் பேசாமல் டைனிங் டேபிள் அருகே சென்று இருவருக்கும் உணவை எடுத்து வைக்கத் தொடங்கினாள்.

அவளின் செயலில் புரிந்து கொண்டு, முகம் கழுவி விட்டு வந்தவன் அவள் எதிர்பாரா நேரம் அவளின் முந்தானையில் முகத்தை துடைத்து விட்டு டைனிங் டேபிளில் இயல்பாக அமர, அவள் தான் ஓரிரு நொடிகளில் நடந்தேறிய இந்த செயலில் தவித்துப் போனாள்.

அவனோ, ‘நெத்திய தொட வந்ததுக்கே இரண்டடி தள்ளி போனாளே… இதுக்கு என்ன பண்ணப் போறாளோ’ என உள்ளுக்குள் இருந்த கிலியை வெளியேக் காட்டிக் கொள்ளாமல் இருக்க பெரும்பாடுப்பட்டான்.

அவள் எதுவும் பேசாமல் அமர்ந்து உண்ணத் தொடங்க, இவனோ எப்பொழுதும் போல் அவள் முகம் பார்த்தாள்.

‘இது ஒன்னு’ என முணுமுணுத்தவள் அவளாவே ஆ… காட்ட அவளுக்கு ஊட்டி விட்ட பின் அவன் திருப்தியாய் உண்ணத் தொடங்கினான்.

உண்டு முடித்தப் பின், அவள் பாத்திரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு அறைக்கு செல்ல, அவனோ ஷோஃபாவிலே அமர்ந்திருந்தான்.

ஓர் நொடி நின்றவள், இந்த ஷோஃபாவில் அவன் இரவு முழுக்க உறங்கினால் மறுநாள் கட்டாயம் கழுத்து வலி ஏற்படும் என நினைத்து, “ஷோஃபாவில படுத்தா கழுத்து வலி வந்துரும். உள்ள வந்து பெட்ல படுங்க” என்றவள், அறைக்குள் சென்று மெத்தையின் ஓர் ஓரத்தில் சுருண்டு படுத்துக் கொண்டாள்.

அவள் கூறியது கனவா… நனவா… என ஓர் நொடி தயங்கியவன், பின் மெதுவாக எழுந்து அறைக்குள் செல்ல அவளோ நுனியில் படுத்து முக்கால்வாசி மெத்தையை காலியிடமாக்கி இருந்தாள்.

அதன்மூலம் அவள் கூறியது நனவு தான் என உறுதி செய்து கொண்டு கட்டிலில் அவளின் மறுபுறம் படுத்துக் கொண்டான் ரகுநந்தன்.

பனிக்காற்றின் ஈரப்பதம் மெல்லிய சாரலாய் பொழிந்துக் கொண்டிருக்க, ஆதவன் மெல்ல மெல்ல தன் கதிர்களை நிலமகளின் மீது பரப்பத் தொடங்கி இருந்தான்.

சென்னை ரயில் நிலையத்தை அந்த ரயில் வந்தடைய, அதிலிருந்து இறங்கினான் சிரஞ்சீவி.

மூன்றாண்டுகளுக்கு பின் சென்னை மண்ணில் காலடி எடுத்து வைப்பதை உணர்ந்தவனுக்கு உற்சாகத்திற்கு பதில் சோகமே சூழ்ந்தது.

அதன்பின் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்தவன், அங்கு தன்னை அழைத்துச் செல்ல வந்திருந்த தன் தங்கையின் கணவன் விஷ்வாவைப் பார்த்து கையசைத்தான்.

“ஹாய் மாப்பிள்ளை…” என அவன் அருகில் செல்ல, “வாங்க மச்சான்… என்ன திடீர் விஜயம்?” என்றான் விஷ்வா.

“இனி இங்க தான்” என்றவாறே அவனின் இருசக்கர வாகனத்தில் பின்னால் ஏறி அமர, “ஏன் நண்பனுக்கு கல்யாணம் ஆனவுடனே அவங்களுக்கு எதுக்கு தொந்தரவா இருக்கணும்னு உடனே கிளம்பியாச்சா?” என்றவாறே அவன் வண்டியை வளசரவாக்கத்தை நோக்கி செலுத்த,

“அப்படியும் வச்சுக்கோங்க மாப்பிள்ளை” என்றான் சிரஞ்சீவி.

“அப்போ அது ரீசன் இல்ல. உங்க நண்பன் தான் எங்களுக்கு எல்லாம் கல்யாண சாப்பாட்ட கண்ணுல காமிக்காம கல்யாணத்த முடிச்சுட்டாரு, அடுத்து நீங்க எப்போ கல்யாணச் சாப்பாடு போட போறீங்க மச்சான்?” என்க,

“ஏன்… உங்கள மாதிரி நானும் பொண்டாட்டி கையால அடி வாங்க அவ்ளோ ஆசையா” என்றான் நக்கலாக.

“நான் ஏதாவது சொன்னா அப்புறம் தங்கச்சிக்கிட்ட போய் போட்டு கொடுத்து எனக்கு இன்னிக்கு பூஜை பண்ணிருவீங்க. நான் எதுவும் பேசல ப்பா” என்றான் விஷ்வா.

“இதுக்கு தான் என்னை மாதிரி இருக்கணும்” எனக் கூறியவனுக்கு, கையில் விளக்கமாற்றோடு நறுமுகை நிற்பது போல் காட்சித் தோன்ற, தன் தலையை சிலுப்பிக் கொண்டான் சிரஞ்சீவி.

அதன்பின் இருவரும் பொதுவாக பேசிக் கொண்டு வர, அரை மணி நேர பயணத்திற்கு பின் அவர்களின் இல்லம் வந்தடைந்தது.

ரகுநந்தனின் இல்லத்திற்கு பக்கத்தில் தான் சிரஞ்சீவியின் இல்லமும். வண்டி சத்ததைக் கேட்டவுடன், சிரஞ்சீவியின் தங்கை மகள், “மாமா…” என ஓடிவர,

“வாங்க குட்டிமா…” என அவளைத் தூக்கி கொண்டவன், “எப்படி இருக்கீங்க” என அவள் மூக்கோடு தன் மூக்கை வைத்து உரச,

“நம்ம எல்லாம் அவன் ஞாபகத்துல இருக்கோமானு கேளு ஜானு” என்றவாறே வீட்டினுள் இருந்து வெளியே வந்தாள் ஆர்த்தி.

“எப்படி இருக்க?” என தங்கையை பார்த்து வினவ, “எங்களுக்கு என்ன, நல்லா இல்லைனு சொன்னா மட்டும் உடனே நீ சென்னை வந்து பார்த்துருப்ப பாரு” என அவள் முணுமுணுக்க,

“ஆரு பேபிமா… அண்ணன் பாவம்ல, இப்படிலாம் கோபப்படக் கூடாது” என தன் தங்கையைக் கொஞ்ச,

“அவன உள்ள வரச் சொல்லு ஆர்த்தி… வாசல்லயே என்ன பேச்சு?” எனக் குரல் கொடுத்தார் அவனின் தந்தை குணசேகரன்.

உள்ளே வந்தவன், தன் தந்தையைப் பார்க்க “நீ போய் குளிச்சுட்டு வா கண்ணா. நான் சூடா இட்லி எடுத்து வைக்கிறேன்” என சமையற்கட்டிற்குள் இருந்து வெளியே வந்த, சிரஞ்சீவியின் அன்னை கூற,

“போடா… போய் குளிச்சுட்டு வா” என குணசேகரனும் கூற, தன் அறைக்கு சென்றவன் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான் சிரஞ்சீவி.

அதற்குள் அவனின் குடும்பத்தைப் பற்றி நாம் பார்ப்போம்.

குணசேகரன் – வள்ளி தம்பதியினருக்கு ஒரே மகன், ஒரே மகள். சிரஞ்சீவி மூத்தவன். இளையவள் ஆர்த்தி. ஆர்த்திக்கு நான்கு வருடங்களுக்கு முன் தான் விஷ்வாவுடன் திருமணம் ஆனது.

விஷ்வா, அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவன். வேலை செய்யும் இடத்தில் அவனைக் கண்டு காதலில் விழுந்த ஆர்த்தி தன் பெற்றோரின் சம்மதம் கேட்க, அவர்களும் ஒத்துக் கொண்டனர்.

விஷ்வாவிற்கு பெற்றோர் இல்லை என்பதால் அவனுக்கும் தாங்களே பெற்றோராய் இருக்க, இப்பொழுது அவனும் இவர்களோடு தான் இருக்கிறான். இரண்டரை வயது தான், ஜான்விக்கு. இந்த பெயரைக் கூட ரகுநந்தன் தான் தேர்வு செய்தான்.

இரு குடும்பங்களும் நட்பாக பழகி வந்ததால் தன் நண்பனுடன் கோயம்பத்தூர் செல்வதாக சிரஞ்சீவி கூற, முதலில் மறுத்தவர்கள் பின் சம்மதித்தனர்.

குளித்து விட்டு வந்தவன், தன் அன்னையின் கையால் மணக்க மணக்க சாம்பாருடன் இட்லியை ஒரு கை பார்த்தவன், சிறிது நேரத்தில் வெளியே கிளம்பினான் சிரஞ்சீவி.

“அதுக்குள்ள எங்க டா கிளம்பிட்ட?” என வள்ளி வினவ,

“வீட்டுல சாப்பிட்டுட்டு இருக்கச் சொல்றியா ம்மா… வெளிய போய் வேலை தேடுனா தான வேலை கிடைக்கும்” என்க,

“அப்போ உண்மைலயே வேலைய விட்டுட்டியா ண்ணா” என்றாள் ஆர்த்தி.

“நான் என்ன கதையா சொன்னேன்” என்க, “இல்ல, நீ ரகு அண்ணாவ விட்டு வந்ததே எங்கனால இன்னும் நம்ப முடியல. இதுல நீ வேலைய விட்டுட்டு வந்தத சொன்னா எப்படி நம்பறது” என்றாள் ஆர்த்தி.

“விடு ம்மா ஆர்த்தி. சரி, நீ போய் வேலைய தேடு, வேண்டாம்னு சொல்லல. இன்னிக்கு ஒருநாள் ரெஸ்ட் எடு, நாளைல இருந்து வேலைய தேடு” என குணசேகரன் கூற,

“இல்ல ப்பா… இன்னிக்கே போய் பார்க்கணும் ப்பா… ஆல்ரெடி அவங்களுக்கு போன் பண்ணி பேசிட்டேன், போய் லேப்ப பார்க்கிறது தான். அது ஓ.கே னா அங்கயே வேலைக்கு போகலாம்” என்க,

“லேப்பா… ஏன் ண்ணா? காலேஜ்ல பிரபசர் வேலைக்கு தான போக போற?” என்றாள் ஆர்த்தி.

“இல்ல ஆரு, இனி நான் லேப்ல வேலை பார்க்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன். இப்போ போறது கூட ஒரு கெமிக்கல் பேக்ட்ரி தான்” என்றவன் கிளம்ப,

“என்ன ப்பா, இவன் படிச்ச படிப்பு கெமிஸ்ட்ரியா இருந்தாலும் பிரபஸர் வேலை தான் ரொம்ப பிடிக்கும்னு போனவன் இன்னிக்கு கெமிக்கல் பேக்ட்ரிக்கு வேலைக்கு போறேனு சொல்றான்” என தன் தந்தையின் முகம் பார்த்தாள் ஆர்த்தி.

“அவன அவன் விருப்பப்படி விடு மா… பார்த்துக்கலாம்” என்றவர், ரகுநந்தனுக்கு அலைப்பேசியில் தொடர்பு கொண்டு, சிரஞ்சீவியைப் பற்றி கூற,

“அவன நீங்க எதுவும் கேட்க வேண்டாம் ப்பா… அவன் ஆசைப்படி அங்கயே போகட்டும்” என்றவன், கல்லூரிக்கு கிளம்பினான்.

சிரஞ்சீவியும் வேலையை விட்டு நின்றதால், ஹெச். ஓ. டியும் விடுமுறையில் இருப்பது நன்றாக இருக்காது என்று அவன் அன்றே வேலைக்கு செல்ல முடிவெடுத்து கிளம்பினான்.

மிதிலாவும் கல்லூரிக்கு கிளம்ப, அவளை ஓரிரு நொடி நின்று பார்த்தவன் பின் எதுவும் பேசாமல் கிளம்பினான்.

காலை உணவை அவள் செய்திருக்க, இருவரும் மௌனத்தையே கடைப்பிடித்து உண்டு முடித்தப்பின், வேலைக்கு கிளம்ப தயாராகினர்.

எந்தவித மாற்றமும் இல்லாமல், தன் தங்கையுடன் தன்னுடைய ஸ்கூட்டியில் கிளம்பினாள் மிதிலா.

அவள் தன்னுடன் வர மாட்டாள் என்பதை அறிந்தாலும் மனதின் ஓர் ஓரத்தில், ‘அவள் வந்தால் நன்றாக இருக்கும்’ என்ற ஆசை இருக்கத் தான் செய்தது.

அவள் தன்னுடன் வந்தால் நறுமுகை ஆட்டோ பிடித்தோ அல்லது பேருந்திலோ தான் கல்லூரி வர வேண்டும், என நினைத்தவன் “முகி, நீ உன் அக்கா கூட வா…” என்றவன், தன் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு புறப்பட்டான்.

அவர்கள் முன் செல்ல, இவன் பின்னாலே சென்றான். கல்லூரிக்குள் நுழைந்த பின், இருவரும் அவரவர் துறைக்கு செல்ல, அவர்களின் திருமண விசயத்தைக் கேள்வியுற்ற சில பேராசிரியர்கள் அவர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.

இன்னும் சிலரோ, மிதிலாவை “வந்த ஒரே மாசத்துல ரகு சார்ர எப்படி தான் வளைச்சு போட்டாளோ” என முணுமுணுக்க,

இதுவரை மிதிலாவின் அழகை ரசித்துக் கொண்டிருந்த சில மாணவர்கள், அவளுக்கு திருமணம் ஆனதை நினைத்து சோக கீதம் வாசித்தனர்.

ஆனால், அவளோ தன்னைச் சுற்றி நடப்பதை எதுவும் கண்டு கொள்ளாமல் தன் வேலையை மட்டும் பார்க்கத் தொடங்கினாள்.

வீட்டில் இருந்தால் தனிமையும் அமைதியுமே அவளை மேலும் கோபமுற வைக்கும் என்பதால் தான் உடனே வேலைக்கு வந்திருந்தாள் மிதிலா.

அவர்கள் இருவரையும் ஆசிர்வதித்த, விலங்கியல் துறைத் தலைவர் ரவிக்குமார், “ரெண்டு பேரும் எப்பவும் சந்தோசமா இருக்கணும்… எந்த சூழ்நிலையிலும் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுக்காம வாழ பழகிட்டாலே சண்டை இல்லாம குடும்பம் நல்ல படியா போகும்” என அறிவுரை வழங்கி, இருவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்தார்.

சிரஞ்சீவி ஊரை விட்டு சென்றது தெரியாமல், ‘என்னாச்சு நம்ம மென்டாருக்கு? ஆளயே காணோம்’ என நறுமுகை நினைத்துக் கொண்டிருக்க,

அதற்குள் சிரஞ்சீவி வேலையை விட்டு சென்றது வேதியியல் துறை முழுவதும் பரவி இருக்க, இறுதியில் நறுமுகைக்கும் விசயம் வந்தடைந்தது.

அவளோ, ‘என்ன வேலைய ரிசைன் பண்ணிட்டாரா?’ என அதிர்ந்தாள்.

 

27

அந்தி மாலைப் பொழுதில் ஆதவன் தன் கதிர்வீச்சுக்களைத் தன்னுள் சுருக்கிக் கொள்ள, அந்திவானம் முழுதும் செந்நிறத்தில் நிலமகளை இதமாய் குளிர்வித்துக் கொண்டிருந்தது.

மாலை நேர தென்றல் இதமாய் அவளின் புடவையைத் தாண்டி தேகத்தை வருட, அந்த ரம்மியமான சூழ்நிலையை ரசிக்கும் நிலையில் இல்லை அவள்.

அவளின் முகத்தில் யோசனை படர்ந்திருக்க, அவள் மனம் முழுவதும் சற்று நேரத்திற்கு முன் அலைப்பேசியில் தொடர்பு கொண்ட துகிலனின் வார்த்தைகள் தான் சுழன்று கொண்டிருந்தது.

ரகுநந்தன் தன் அன்னையை சமாதானப்படுத்த சென்ற போது நடந்த அனைத்தையும் துகிலன் சற்று நேரத்திற்கு முன்பு தான் மிதிலாவிடம் கூறி இருந்தான்.

அவர்கள் மூவரும் இன்று காலையிலேயே சென்னை சென்றிருந்தனர். நேரில் இதனைக் கூற முடியாததால் சென்னை சென்றவுடன், தன் அண்ணியை அலைப்பேசியில் அழைத்து அன்று நடந்ததைக் கூறி இருந்தான்.

“அண்ணா மேல உனக்கு என்ன கோபம்னு எனக்கு தெரியாது மிது. ஆனா, அண்ணா உன்னை ரொம்ப காதலிக்கிறாருனு மட்டும் எனக்குத் தெரியும்” என்றவன், தன் அன்னை ரகுநந்தனிடம் கோபப்பட்டது அதற்கு ரகுநந்தனின் மறுமொழி என அனைத்தையும் கூறி இருந்தான் துகிலன்.

கூடவே, “அவங்க என் அம்மா தான். ஆனா, அதுக்காக அவங்க சொல்றது தான் நியாயம்னு நானும் நினைக்க மாட்டேன், ரகுவும் நினைக்க மாட்டான் மிது. எந்த பிரச்சனையா இருந்தாலும் பேசினா அதுக்கு தீர்வு கிடைக்கும், உன் மனசுலயே போட்டு குழப்பிக்கிற விசயத்தை அண்ணா கூட ஷேர் பண்ணிப் பாரு மிது, இது நான் அவனோட தம்பியா சொல்லல. உன்னோட பிரண்டா சொல்றேன்” என்றிருந்தான்.

அவள் மனம் முழுவதும் தன்னவன் தனக்காக தன் தாயை எதிர்த்துள்ளான் என்பது தான் ஓடிக் கொண்டிருந்தது.

அவன் மேல் இவளும் அளவுகடந்த காதலை வைத்துள்ளாள் தான். ஆனால், அதனை வெளிப்படுத்தவும் முடியாமல் அவனின் காதலை ஏற்கவும் முடியாமல் மனதினுள் உழன்றுக் கொண்டிருக்கிறாள்.

அவள் பூங்காவில் இருந்த சிமெண்ட் இருக்கையில் அமர்ந்திருக்க, அவளின் சூடான தேகத்தை இதமாக்கிக் கொண்டிருந்தது தென்றல்.

“அனிச்சமே, இதுவரை நீ தான் மெல்லியவள் என்று இவ்வுலகம் நம்பிக் கொண்டிருக்கிறது. ஆனால், இவளோ நின்னினும் மெல்லியவள்” என அவளை தீண்டிச் சென்ற தென்றல், அருகில் உள்ள நீர்வீழ்ச்சியில் இருந்த அனிச்ச மலரிடம் மிதிலாவை புகழ்ந்து கொண்டிருக்க,

ஆனால் அதற்கு காரணமானவளோ, தன் மெல்லிய மனதை தன்னவனிடம் வெளியிட முடியாமல் இறுக மூடி இருந்தாள்.

அவளிடம் வந்த சில்வண்டு, “உன் கூட நான் டூ…” என முகத்தை சிலுப்ப,

“என் சில்வண்டுக்கு என்ன கோபம்?” என அவனைத் தூக்கி தன் மடியினில் அமர்த்த,

“நீ தான் அந்த பிக் பிரண்ட கல்யாணம் பண்ணிக்கிட்டியாமே… நீ என்னை தான கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்ன, இப்போ என்னை ஏமாத்திட்டில்ல” என அவன் உதட்டைப் பிதுக்க,

அவனின் செயலில் அவளின் ஒட்டுமொத்த சோகமும் அந்த தென்றலோடு கலந்திருக்க, கலகலவென சிரித்தாள்.

அவளின் செவ்விதழ்கள் விரிய, அவளின் தேகமோ அதற்கு ஏற்றார் போல் அசைந்தாட அவளின் மான்விழிகள் ஆயிரம் கதை பேசியது.

அவளைக் கண்ட அந்த தென்றலுக்கே காதல் உண்டாயிற்று போல. அவளின் தேகத்தை தன் இதமான காற்றால் ஆசையுடன் வருடிக் கொண்டிருக்க,

“என் சில்வண்ட நான் எப்படி ஏமாத்துவேன்? உன்னையும் கட்டிக்கிறேன்” என அவள் அவனின் கன்னத்தைக் கிள்ள,

“ஒன்னும் வேண்டாம் போ… நீ என் பொன்வண்டு இல்லைல” என அவன் மீண்டும் உதட்டைப் பிதுக்க, அவனின் செயல் ஏனோ அவளுக்கு அவளின் குழந்தைப் பருவத்திற்கு கூட்டிச் சென்றது.

இதேப் போல் தானே இதன் அர்த்தம் தெரியாமல் அன்று தானும் ராமிடம் கேட்டோம் என அவள் நினைக்க, அவளின் கன்னங்கள் இரண்டும் வெட்க கதுப்புக்களைப் பூசி நின்றன.

அவளின் சிவந்த கன்னத்தைக் கண்ட சில்வண்டு, அதனைத் தொட்டவாறே “என்னாச்சு பொன்வண்டு? காயம் பட்டுருச்சா?” என அவன் தன் பிஞ்சுக் கரத்தால் தடவிக் கொடுக்க,

அவனின் செயல் அவளுக்கு புன்னகையை தத்தெடுக்க, “லவ் யூ டா சில்வண்டு” என அவன் கன்னத்தில் தன் செவ்விதழ்களைப் பதித்தெடுத்தாள்.

அவளின் முத்தத்தால் சமாதானமான சில்வண்டு, “உனக்கும்” என அவளின் பட்டு போன்ற கன்னத்தில் அவன் முத்தமிட,

“என் ராம் மாதிரியே தெரியற டா…” என அவள் இதழ்கள் முணுமுணுக்க, அவன் தன் நட்பு வட்டாரத்தோடு விளையாட அவள் மடியில் இருந்து இறங்கி ஓடினான்.

அவள் புன்னகை உறைய அமர்ந்திருக்க, அவளின் கவனத்தை திசை திருப்பியது அலைப்பேசியின் ஒலி.

அதனை எடுத்துப் பார்த்தவள், திரையில் ‘ஜீவி சார்’ என ஒளிர அழைப்பை ஏற்று, “சொல்லுங்க ஜீவி சார்…” என்றாள் மிதிலா.

“நீங்க ஃப்ரீயா இருக்கீங்களா மிதிலா? உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்?” என்க,

“சொல்லுங்க… நான் பார்க்ல தான் உட்கார்ந்துருக்கேன்” என்றாள் மிதிலா.

“ரகு கூட இருக்கானா?” என அவன் தயங்க, “அவரு இன்னும் வரலங்க. வொர்க் அதிகமா இருக்கிறதால கொஞ்சம் லேட்டாகும்னு சொன்னாங்க” என,

“நான் உங்ககிட்ட இத அங்க இருக்கும் போதே சொல்லணும்னு நினைச்சேன் மிதிலா. ஆனா, அதுக்குள்ள நான் அங்க இருந்து வர வேண்டியதா போய்ருச்சு. உங்களுக்கு நான் சொல்லப் போற விசயம் தெரியாதுனு நினைக்கிறேன்” என்றவன், ஊர்மிளா – ரகுநந்தனின் நிச்சயதார்த்த ஏற்பாடுகளைப் பற்றி கூறத் தொடங்கினான்.

மூன்று வருடங்களுக்கு முன்…

தனது பி.ஹெச்டி படிப்பிற்கான தீசிஸ் தயாரிப்பதில் படுபிசியான இருந்தான் ரகுநந்தன்.

இன்னும் சில மாதங்களில் அவனின் ஆராய்ச்சிக்கான படிப்பு நிறைவடைய இருந்த நிலையில், அதில் தன்னை முழுவதுமாய் தொலைத்திருந்தான்.

அவனின் ஆராய்ச்சியே கதியென அவன் இருக்க, அப்பொழுது தான் அவன் வீட்டில் ஊர்மிளாவிற்கும் அவனிற்கும் நிச்சயம் பண்ண ஏற்பாடு செய்தார்கள்.

நித்திலவள்ளிக்கோ ஏக சந்தோசம். தன் நாத்துனாரே தன் பிறந்த வீட்டிற்கு மருமகளாய் வருவதில்.

ஊர்மிளாவும் அப்பொழுது தான் கல்லூரி இறுதியாண்டில் இருக்க, அவளின் சம்மதம் கேட்கும் போது தனக்கு தெரிந்த குடும்பம், ரகுநந்தன் ஒரு பக்கா ஜென்டில்மேன் என்பதே அவளை சம்மதிக்க வைத்தது.

நல்ல நாள் பார்த்து முடிவெடுத்து, அதனை நம் நாயகனிடம் தெரிவித்தது நிச்சயதார்த்த நாளன்று தான்.

அவன் தன்னுடைய ஆராய்ச்சியில் மூழ்கி இருக்க, தன்னைச் சுற்றி நடந்தவைகளை கவனிக்கத் தவறி இருந்தான்.

சிரஞ்சீவியும் அவனிடம் பேச சென்றால் அவன் கவனம் முழுக்க அவன் அந்த மாத இறுதியில் சமர்ப்பிக்க இருந்த படிப்பின் மேல் இருக்க, அவனாலும் எதுவும் பேச முடியாமல் இருந்தது.

நிச்சயதார்த்த நாளன்று புது உடையைக் கொடுத்து தன் அன்னை அணிந்து வரச் சொல்லும் போது, அவன் கேள்வியுடன் அவரை நோக்க “சீக்கிரம் குளிச்சுட்டு இந்த புது டிரஸ் போட்டுட்டு வா ரகு” என்று மட்டும் கூறிவிட்டு செல்ல,

“கோவிலுக்கு ஏதும் போகணுமா என்ன? அம்மா ஏன் அவசரமா போறாங்க” எனப் புலம்பியவன், சிறிது நேரத்தில் தயாராகி ஹாலிற்கு வர, அங்கு ஊர்மிளாவின் பெற்றோரும் வந்திருக்க அவர்களை வரவேற்றான்.

சிறிது நேரத்தில் சில முக்கிய உறவினர்கள் வர, தன் தம்பியிடம் “என்னடா விஷேசம்? சொந்தகாரங்க எல்லாம் வந்துருக்காங்க” என்க,

அவனோ அவனை முறைத்தான். “ஏன்டா உனக்கே ஓவரா தெரியல. உன் நிச்சயதார்த்தத்துல வந்து நீயே என்ன நடக்குதுனு கேட்கிற?” என்றான் துகிலன்.

“என்ன எனக்கு நிச்சயதார்த்தமா… என்ன டா உளர்ற?” என்றான் அதிர்ச்சியுடன்.

“உன்கிட்ட தான் அம்மா சொன்னேனு சொன்னாங்களே டா… அம்மா சொன்னாங்களா இல்லையா?” என அவன் குழப்பத்துடன் வினவ,

“அம்மா என்கிட்ட எதுவும் சொல்லலயே” என்றான் ரகுநந்தன்.

“அம்மா தான் உன்கிட்ட பேசிட்டேன், அவன் தீசிஸ் வொர்க்ல இருக்கிறதால இதப் பத்தி அவன்கிட்ட கேட்க வேண்டாம். நிச்சயம் அன்னிக்கு அவன்கிட்ட பேசிக்கலாம்னு சொன்னாங்க. ஆனா, நீ என்னடான்னா எதுவும் தெரியாதுனு சொல்ற” என்றான் துகிலன்.

தலைவலி வேறு அவனைப் படுத்தி எடுக்க தன் தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டவன், “பொண்ணு யாரு டா…” என்றான் ரகுநந்தன்.

“ஊர்மி… நம்ம நித்துவோட நாத்துனார்” என்க,

அவனுக்கோ தன்னைச் சுற்றி நடப்பதை கண்டு அதிர்ந்து, “சரி, நான் அம்மாகிட்ட பேசறேன்” என்றவன், தன் அன்னையைத் தேடி சென்றான்.

அவரோ வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருக்க, “அம்மா உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்க,

அவரோ, “நிச்சயம் முடிஞ்சோனே பேசிக்கலாம் கண்ணா… நீ போய் வந்தவங்கள கவனி” என நழுவப் பார்க்க,

“ம்மா… ப்ளீஸ், உங்ககிட்ட நான் பேசியே ஆகணும்” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.

அவரோ, அவனிடம் தற்பொழுது பேசினால் இந்த நிச்சயதார்த்தம் நடக்காது என்பதை உணர்ந்தவர், “நிச்சயம் பண்ண இன்னும் கொஞ்சம் நேரம் தான் இருக்கு கண்ணா… பாரு, நம்ம சொந்தக்காரங்க எல்லாம் வந்துட்டாங்க. ஊர்மி ரொம்ப நல்லப் பொண்ணு பா, போ போய் வந்தவங்க கிட்ட பேசு” என அவர் உறுதியாய் கூறிவிட்டு, அதற்குள் ஒருவர் வர அவரை வரவேற்க சென்றார்.

ஆக, தன் அன்னை இந்த நிச்சயதார்த்தத்தில் உறுதியாய் இருப்பது அவனுக்கு புலப்பட, என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

அவனால் அவனின் ஜானுவைத் தவிர, வேற எந்த பெண்ணையும் தன் வாழ்வுடன் நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலையில், அவனின் நிச்சயதார்த்தம் அவனுக்கு பேரிடியாய் இருந்தது.

அப்பொழுது தான் தன் நண்பனிடம் சென்று, “நீயும் ஏன் டா என்னைச் சுத்தி நடக்கிறக் கூட சொல்லாம விட்ட?” என்றான் கோபமாய்.

“அம்மா உன்கிட்ட என்னை பேசவே விடல டா… நானும் அவங்களுக்கு உன் மனச புரிய வைக்க முயற்சி பண்ணேன், ஆனா அவங்க அந்த பொண்ணு எங்க இருக்கா? என்ன பண்றா? கல்யாணம் ஆச்சா இல்லையானு தெரியாம என் மகன் காத்திருக்கிறதுக்கு என்னையும் சம்மதம் சொல்ல சொல்றியானு கேட்டாங்க. நான் என்ன பதில் சொல்லுவேன் டா, உன்கிட்ட பேச முயற்சி பண்ணாலும் நீயும் அப்போ தீசிஸ் வேலைல ரொம்ப பிசியா இருந்த. அதான் டா என்னால சொல்ல முடியல” என அவன் தன் பக்க நியாயத்தைக் கூற,

ரகுநந்தனோ அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் முழித்தான். அதன்பின் ஒரு முடிவெடுத்தவன், “என்ன நடந்தாலும் பரவாயில்ல டா… நான் இதுக்கு சம்மதிக்கவே மாட்டேன், இதுனால என்ன பிரச்சனை வந்தாலும் பரவாயில்ல. சமாளிச்சுக்குவேன், ஆனா என்னால என் வாழ்க்கை முழுக்க என் ஜானுவுக்கு துரோகம் பண்ண முடியாது. அது என் மனசையே நான் கொல்றதுக்கு சமம் டா” என தீர்க்கமாய் கூற தன் நண்பனுக்கு துணை நின்றான் சிரஞ்சீவி.

அவன் மீண்டும் ஹாலிற்கு வரும் போது, அனைவரும் அமர்ந்து நிச்சய தாம்பூலம் மாற்ற நல்ல நேரத்திற்காக காத்திருந்தனர்.

அங்கு வந்தவன், “எல்லாரும் என்னை மன்னிச்சுருங்க. இந்த நிச்சயம் நடக்காது” என்க, அம்பிகாவோ “ரகு, என்ன பேசறனு தெரிஞ்சு தான் பேசிறியா?” எனக் கோப்பட,

“ப்ளீஸ் ம்மா… இன்னிக்கு உங்களுக்காகனு நான் இங்க அமைதியா இருந்தா அது ஊர்மிக்கும் துரோகம் பண்ற மாதிரி. ஊர்மி ரொம்ப நல்லப் பொண்ணு தான், ஆனால் அவள என் மனைவியா ஒருநாளும்… அப்படி வார்த்தையால கூட என்னால சொல்ல முடியாது” என அவன் கூற,

“அம்மா சொல்றேன் டா, இப்போ நீ இங்க உட்காரு. இன்னும் அஞ்சு நிமிஷத்துல நிச்சயம்” என மீண்டும் அம்பிகா அந்த நிச்சயதார்த்ததை நடத்துவதிலே குறியாய் இருக்க,

தன் அண்ணனின் அருகில் வந்த நித்திலவள்ளி, “என்ன அண்ணா இப்படி பேசற. ஊர்மி நம்ம வீட்டுக்கு மருமகளா வந்தா நல்லா இருக்கும்னு தான் அம்மாகிட்ட இதப் பத்தி பேசி, இப்போ நிச்சயம் வரை கொண்டு வந்தேன். ஆனா, இப்போ நீ இப்படி சொன்னா அந்த வீட்டுல போய் நான் எப்படி ண்ணா வாழ முடியும்? ப்ளீஸ், என் வாழ்க்கையும் சேர்த்து அழிக்காத” என்க,

“எல்லாரும் உங்க உங்க வாழ்க்கைய மட்டும் தான பார்க்குறீங்க. ஆனா, ஏன் என் வாழ்க்கைய பத்தி யாரும் நினைக்கல. எனக்கும் மனசு இருக்கு, அதற்கு உணர்வுகளும் இருக்குனு ஏன் நினைக்க மாட்டேன்ங்கிறீங்க? அம்மாவுக்காகவோ இல்ல உனக்காகவோ நான் இப்போ வாழணும்னு முடிவு பண்ணா அது வாழ்க்கையா இருக்காது, நரகமா இருக்கும்” என்றவன்,

அங்கு நின்றிருந்த ஊர்மிளாவிடம், “ஸாரி ஊர்மி. உனக்கு இது கஷ்டத்தை தரும்னு எனக்கும் தெரியும், ஆனா இப்போ நான் இவங்களுக்காக ஒத்துக்கிட்டு உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா அத விட நரகம் வேறு ஏதும் இல்ல. ப்ளீஸ், என்னை மன்னிச்சுரு ஊர்மி” என்றவன், வெளியே கிளம்ப,

“இப்போ நீ இந்த நிச்சயத்துக்கு சம்மதிக்கணும். இல்லனா இங்க ஒரு பொணம் விழும்” இறுதியாய் தன்னை ஆயுதமாய் அம்பிகா எடுக்க,

“ஏற்கெனவே என்னை உயிரோட கொன்னு புதைச்சுட்டீங்க. இனியும் நீங்க கொல்லணும்னு நினைச்சா தாராளமா என் உடலையும் எரிச்சுக்கலாம். இப்போ எல்லாருக்கும் கஷ்டத்தைக் கொடுத்தாலும் எதிர்காலத்துல இந்த கஷ்டத்தோட சுவடுகள் மறைஞ்சுரும். ஆனா, இப்போ நான் உங்கள சந்தோசப்பட வச்சா என்னை நானே கொல்றதுக்கு சமம். இனி, ஒருநிமிஷம் கூட இந்த வீட்டுல இருக்க மாட்டேன். உங்களுக்கு ஒரே மகன் தான்னு நினைச்சுக்கோங்க” என்றவன், அங்கிருந்து கிளம்பியது தான்.

அதன் மறுநாள் கதிரவனையும் ஊர்மிளாவையும் பார்த்து தன் காதல் விசயத்தையும் கூறி மன்னிப்பு வேண்டினான்.

அதன்பின் தான் அவன் மிதிலாவைத் தேடி கோயம்புத்தூர் வந்தான். தன் நண்பனை தனியே விட மனமில்லாமல் தானும் அவன் கூட கிளம்பி வந்தான் சிரஞ்சீவி. அவனே சில சமயம் தன் நண்பனிடம், “ஏன்டா அந்தப் பொண்ண உனக்கு ஒரு ஒரு வருஷம் தெரியுமா? ஆனா, அந்த பொண்ண இத்தனை வருஷமா நினைச்சுக்கிட்டு இருக்கிறது கொஞ்சம் முட்டாள்தனமா இல்ல. அத விட, அவளும் உனக்காக காத்துக்கிட்டு இருப்பானு நீ எந்த நம்பிக்கைல இருக்க டா?” என்றான் சிரஞ்சீவி.

அதற்கு புன்னகைத்த ரகுநந்தன், “என் ஜானுவோட இருந்த நாட்கள கணக்கிட்டா ஒரே வருஷம் தான் வரும். ஆனா, அவ நினைவுகளோட வாழ்ந்த வருஷம் அதிகம் டா… கூட இருந்தா தான் காதல் இருக்குமா, அவ என்னோட ஜானுடா… எனக்காவது அந்த வயசுல எங்களுக்குள்ள இருந்த உறவுக்கு பேர் வைக்கத் தெரியும். ஆனா, அவ அப்போ குழந்தை டா. ஆனாலும் அப்பயும் எனக்காக நீ காத்துருப்பியா ராம்னு அதோட அர்த்தம் தெரியாம கேட்டா பாரு. அந்த ஒரு வார்த்தைக்காகவாவது என் ஜானுவுக்காக நான் காத்திருக்கணும்னு முடிவு பண்ணேன். இது லூசுத் தனமா கூட இருக்கலாம், ஆனா காதல் இதை எல்லாம் தாண்டின ஒரு உணர்வு டா… என் ஜானு எனக்காக காத்திருப்பா, என் நம்பிக்கை வீண் போகாது டா” என காதல் மின்ன கூறிய தன் நண்பனை அணைத்துக் கொண்டான் சிரஞ்சீவி.

இதனைக் கூறி முடித்த சிரஞ்சீவி, “அவன எனக்கு சின்ன வயசுல இருந்து தெரியும் மிதிலா, அவன் அங்க கோயம்பத்தூர்ல இருந்தப்போ மட்டும் தான் நாங்க பிரிஞ்சு இருந்தோம். இப்பவும் அவன் உனக்காக தான் காத்திருக்கான் மிதிலா, அவன் அவசரமா உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு கூட அதுதான் காரணம். அவங்க அம்மா திரும்பவும் அவனோட கல்யாணத்தப் பத்தி தான் பேச வந்தாங்க, அதே நேரம் நீயும் அவன்மேல கோபத்துல இருந்ததால உன்கிட்ட சம்மதம் கேட்கிற அளவு அவனுக்கும் நேரமில்ல. நீ நினைக்கிற மாதிரி அவன் கிருஷ்ணன் இல்லை மிதிலா. நீ ஏன் கிருஷ்ணன வெறுக்கிறனு எனக்குத் தெரியாது, ஆனால் என் நண்பன் ரகுநந்தன் சுத்த தங்கம்னு நான் அடிச்சு சொல்லுவேன், உன்னை மட்டுமே மனசுல நினைச்சுகிட்டு உனக்காக வாழ்ற ஜீவன் அவன், அன்னிக்கு நான் அவன கிண்டல் பண்ணத கேட்டுட்டு தான் அவன் மேல உனக்கு கோபம் வந்துருந்தா அத அடியோட அழிச்சுரு மிதிலா. அன்னிக்கு நடந்ததுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்” என அவன் மன்னிப்பு வேண்ட,

“ச்சே ச்சே. உங்க மேல எனக்கு எந்தவித கோபமும் இல்ல, என் ராம் மேலயும் எனக்கு கோபம் இல்ல… அன்னிக்கு நான் என் ராம்ம பார்க்கும் போது… என் உணர்வ வார்த்தையால சொல்லி புரிய வைக்க முடியாதுங்க. இனி நீங்க உங்க பிரண்டுக்காக கவலப்பட வேண்டாம், அவர் இனி என் பொறுப்பு” என்க,

“தேங்க்ஸ் மிதிலா” என்றவன், அலைப்பேசியை வைக்க மிதிலா தான் அதிர்ச்சியில் இருந்தாள்.

தன்னவனின் தன் மீதான காதலை கேட்டவுடன் அந்த வஞ்சியவளின் மனம் அவனைக் காணத் துடித்தது.

உடனே தங்கள் பிளாட்டிற்கு சென்றாள் மிதிலா. யாருமில்லா அந்த இல்லம் அவளை வரவேற்க, தன்னவனை இந்நாள் வரை அதிக கஷ்டப்படுத்தி விட்டோமோ என்ற கவலை அவள் மனதை அரிக்கத் தொடங்கியது.

அதன் விளைவாய் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோட, டைனிங் டேபிளில் அமர்ந்தவள் அதில் தலை வைத்துப் படுத்தாள்.

ரகுநந்தன் வரும் போது அவள் அழுகையினூடே உறங்கி இருந்தாள். கதவைத் திறந்து உள்ளே வந்தவன், டைனிங் டேபிளில் தன் மனைவி தலைவைத்து படுத்திருப்பதைக் கண்டு,

“ஜானு…” என்றவாறே அவள் அருகில் சென்றவன் அவளின் கன்னங்களில் வரிவரியாய் ஓடி இருந்த கண்ணீர் கோடுகளைக் கண்டு பதறிப் போனான்.

“ஜானு… ஜானு மா, என்னாச்சு?” என அவள் கன்னம் பற்ற, அவளோ அப்பொழுது தான் கண் விழித்தாள்.

தன் எதிரே இருந்தவனைக் கண்டு மீண்டும் அவள் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட அதனைக் கண்டு பதறியவன், “என்னாச்சு ஜானு? உடம்பு ஏதும் சரியில்லயா?” என அவன் அவசர அவசரமாக அவள் நெற்றி, கழுத்தைத் காய்ச்சலோ எனத் தொட்டுப் பார்க்க அவனின் கரத்தைப் பற்றியவள்,

“என்னை ஏன் ராம் இவ்ளோ காதலிக்கிறீங்க…” என கண்ணில் நீருடன் கேட்பவளைக் கண்டு அவன் என்ன மொழியில் விளக்குவான் அவனின் காதலை.

“என் உயிர் மேல உள்ள காதல எப்படி விளக்க முடியும் ஜானு… நீ என் உயிர் ஜானு” என்க,

“ஆனா, நான் உங்கள வெறுக்க மட்டும் தான செஞ்சேன்” என அவள் அழுகையினூடே கூற,

“என்னை வெறுக்கவும் உனக்கு மட்டும் தான் ஜானு உரிமை இருக்கு” என்றவன் நின்றிருக்க அமர்ந்தவாறே அவனின் வயிற்றினுள் புதைந்து அவளது இரு கரங்களாலும் அவனை இறுக அணைத்திருந்தாள்.

அவளின் கேசத்தை வருடி விட்டவன், “இப்போ எதுக்கு குழந்தை மாதிரி அழற ஜானு” என்க,

“தெரியல ராம்… எனக்கு கத்தி அழுகணும் போல இருக்கு, என் ராம் எனக்காக திரும்ப வந்ததக் கூறி கத்தணும். அவனைக் கட்டிப் பிடிச்சு அழணும் போல இருக்கு” என்க, அவளைத் தடுக்க விரும்பாமல் அவளை அணைத்துக் கொண்டான் ரகுநந்தன்.

சிறிது நேரம் தன் அழுகையிலேயே அவனின் சட்டையை நனைத்தவள், அதன்பின் தான் அவனிடமிருந்து விலகினாள்.

அவனின் சட்டையை கொத்தாகப் பிடித்தவள், “நான் உனக்கு என்னடா பண்ணேன். என்னை ஏன் இவ்ளோ காதலிக்கிற, நான் சொன்ன ஒத்த வார்த்தைக்காக எனக்காக ஏன் ராம் காத்திருங்கீங்க?” என உலுக்க,

“இங்க பாரு ஜானு. இந்த ராமன் அவனோட ஜானகிக்காக காத்திருக்கிறதுல என்ன தப்பு… நீ என் உயிர் மா, எனக்கு தெரியும், நீயும் எனக்காக காத்து இருப்பனு. இவ்ளோ அழகான, இவ்ளோ காதலோட இருக்கிற என் ஜானுவ எப்படி நான் மிஸ் பண்ணுவேன்” என அவள் கன்னம் துடைத்து நெற்றியில் அழுந்த முத்தமிட,

அவனின் முத்தம் அவளின் கணுக்கால் வரை சென்று அவளின் தளிர்மேனியை அதிர வைத்தது.

அந்த உணர்விற்காக தானே அவள் இத்தனை வருடங்களாய் காத்திருந்தாள்.

“அப்போ ஏன் என்னை ஜானுனு ஒரு வார்த்தை கூப்பிட மறுத்தீங்க. நீங்க என்னைப் பார்த்தோனே ஜானுனு ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை சொல்லி இருந்தா… என் உயிர் போற நொடில தான என் பேர கூப்பிடணும்னு தோணுச்சுல்ல?” என்றாள் கோபமாய்.

“அதான் அன்னிக்கு அவ்ளோ கோபமா?” என அவன் ஒற்றைப் புருவம் உயர்த்தி வினவ,

அவனிடமிருந்து விலகியவள், “தெரியல… ஆனா அப்போ நான் உங்களோட ஜானுங்கிற அழைப்ப எதிர்பார்த்தேன். உங்கள பிரிஞ்சப்போ என் உயிரே என்னை விட்டு போற மாதிரி இருந்துச்சு, ஆனா அந்த வயசுல உங்கள தேடிக் கண்டுபிடிக்க முடியல. ஆனா, என் மனசு முழுக்க நீங்க தான் இருக்கீங்க. என்னிக்காகவது ஒரு நாள் என் ராம் எனக்காக திரும்ப வருவான்னு தான் நான் நம்பிக்கையோட இருந்தேன். குண்டச்சி கூட சொல்லுவா, இப்படியே நீ ராம் ராம்னு சொல்லிக்கிட்டு இருந்தா கடைசில பைத்தியகாரி ஆகிருவனு. ஆனா, அவளுக்குத் தெரியல, நான் ஏற்கெனவே என் ராம் மேல பைத்தியமானத… உங்கள காலேஜ்ல பார்த்தப்போ அப்படியே நிலத்துக்குள்ள புதைஞ்ச மாதிரி இருந்துச்சு, நீங்க என்னைப் பார்த்து ஜானுனு கூப்பிட மாட்டீங்களானு என்னோட ஒவ்வொரு செல்லும் கத்துச்சு, கதறுச்சு. ஆனா, அப்போ தான் நிதர்சனம் புரிஞ்சுது… நீங்க ஒருவேள கல்யாணம் ஆனவரா இருந்தா, ஏன் என்னையே உங்களுக்கு அடையாளம் தெரியாம இருந்தா…

இதெல்லாம் நினைக்கும் போது நான் செத்து செத்து பொழைச்சேன், அப்போ தான் ஜீவி சார் உங்கள சைட் அடிச்சப் பொண்ணப் பத்தி சொன்னாரு. எனக்கு அந்த பொண்ணு மேல கொலைவெறியே வந்துச்சு, ஆனா நீங்களும் அதுக்கு மறுத்து பேசாம சிரிக்கும் போது எவ்ளோ கோபம் தெரியுமா… நானும் சராசரி பொண்ணு தான, எனக்கும் பொறாமை கோபம் எல்லாமே இருக்கும் தான… என் ராம் எப்படி என்னை தவிர இன்னொரு பொண்ணப் பார்க்கலாம்னு கோபம்…

எனக்கு கிருஷ்ணாங்கிற பேர் பிடிக்காது தான், அதுக்காக உங்ககிட்ட சின்ன வயசுல லூசுத்தனமா சண்டை போட்டவ தான். அதுக்காக நான் கிருஷ்ணர் கெட்டவர்னு நான் சொல்ல மாட்டேன், ஆனா என் ராம் எனக்காக என்னை மட்டும் நினைக்கிற என்னவனா இருக்கணும்னு நான் நினைச்சது தப்பா ராம்…” என தன் ஒட்டுமொத்த மனதையும் கொட்ட,

“யாரு தப்புனு சொன்னது. இப்பவும் சொல்றேன், நான் உன்னோட உனக்கான ராம் தான் டி பொண்டாட்டி” என தன் கை வளைவுக்குள் கொண்டு வர,

“அன்னிக்கி என் உயிர காப்பாற்ற ஏன் ராம் உங்க உயிர பணயம் வச்சீங்க… பதினாலு வருஷம் கழிச்சு நீங்க கூப்பிட்ட அந்த ஜானு என் உயிருக்குள்ள எப்படி இறங்குச்சு தெரியுமா?” என அந்நிகழ்வை நினைக்க, அவளின் உடல் தூக்கி வாரி போட்டது. அவளை இறுக அணைத்துக் கொண்டான் அவளின் ராம்.

“எனக்காக நீங்க நிறைய இழந்துட்டீங்கள்ள ராம்…” என அவள் வினவும் போது அவளின் குற்றவுணர்வு அப்பட்டமாய் தெரிய,

“லூசுத் தனமா கண்டதையும் யோசிக்காத டி பொண்டாட்டி. அத்தான கண்டுக்காம உனக்கு ஏன் இந்த கேவலமான கேள்வி எல்லாம் தோணுது” என அவளின் மூக்கைப் பிடித்து ஆட்ட,

“அப்புறம்… எங்கையாவது கிருஷ்ண லீலைகள ஓப்பன் பண்ண நினைச்சீங்க அவ்ளோ தான். கொலை பண்ணவும் தயங்க மாட்டேன்” என அவள் ஒற்றை விரல் நீட்டி மிரட்ட,

“திரும்பவுமா…” என அவன் மிரள, “எப்பவும் ராமன்னு நினைப்பு உங்க மனசுல இருக்கணும். இல்ல…?” என அவள் அவனை மிரட்ட,

“அம்மா, தாயே… எந்தப் பொண்ணையும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன், வேணும்னா உனக்கு சத்தியம் பண்ணி தரவா… என் ஜானுவ தவிர மத்தப் பொண்ணுங்க எல்லாம் எனக்கு சகோதரி மாதிரினு” என்க,

“குட்… பண்ணுங்க” என அவள் கை நீட்ட, “விளையாட்டுக்கு சொன்னா உண்மையாலுமே கேட்கிறாளே…” என அவன் முழிக்க,

“சத்தியம் பண்ணுங்க சார்…” என அவள் நீட்டிய கரங்களை விலக்காமல் கேட்க, புன்னகையுடன் தன் மனைவியின் கரத்தில் ‘என் ஜானுவ தவிர மத்தப் பொண்ணுங்க எல்லாம் எனக்கு அக்கா, தங்கச்சி தான்…’ என சத்தியம் செய்து கொடுக்க,

“அப்போ நானுமா மாம்ஸ்…” என்றவாறே உள்ளே வந்தாள் நறுமுகை.

கதவைத் திறந்தவன் தாழ்ப்பாள் போட மறந்திருக்க அப்பொழுது தான் அங்கு வந்த நறுமுகை அவனின் கடைசி வார்த்தையைக் கேட்டுவிட்டு உள்ளே நுழைந்தாள்.

“அதுவந்து கண்ணம்மா…” என தன் மனைவியின் முகம் பார்க்க, “சொல்லுங்க…” என்றாள் அவள்.

“உன் அக்காவுக்கு நீ எப்படியோ அப்படியே தான் எனக்கும்” என அவன் கூற,

“சரி, சரி… சமாளிக்க வேண்டாம், லவ் பேர்ட்ஸ் ரெண்டும் சேர்ந்தாச்சு போல” என்க,

மிதிலாவின் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்தன. அதனை இமைக்க மறந்து ரகுநந்தன் ரசித்துக் கொண்டிருக்க,

“ஹலோ ஹலோ… இங்க ஒரு பச்சை மண்ணு இருக்கிறத மறந்துட்டு இப்படி ரொமான்ஸ் பண்றீங்களே! இது நியாயமா?” என்றாள் நறுமுகை.

தன் தங்கையுடன் உட்கார்ந்து மிதிலா பேச ஆரம்பிக்க, ரெபிரஷ் ஆக சென்ற ரகுநந்தன் சிறிது நேரத்திலே அவர்களுடன் அரட்டையில் இணைந்து கொண்டான்.

அப்பொழுது நறுமுகை, “உங்க பிரண்ட்க்கு என்னாச்சு மாம்ஸ்?” என நைசாக வினவ ஆரம்பிக்க,

“என் பிரண்ட்டா… யாரு ஜீவியவா கேட்கிற?” என்றான் ரகுநந்தன் தெரிந்தும் தெரியாதது போல்.

“ம்… திடீர்னு சார் ரிசைன் பண்ணிட்டு போய்ட்டாரே… அதான் என்னாச்சுனு தெரிஞ்சுக்கலாம்னு” என அவள் தயங்க,

“அவனுக்கு இங்க இருக்கப் பிடிக்கலயாம்… அதான் சென்னை கிளம்பிட்டான்” என ரகுநந்தன் கூற,

“திடீர்னு ஏன் பிடிக்கலயாம்… ஏதாவது பிரச்சனையா?… மாம்ஸ்…” என்றாள் நறுமுகை.

கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து ரகசியமாய் சிரித்துக் கொள்ள, அவளோ அவர்களை புரியாத பார்வைப் பார்த்தாள்.

ரகுநந்தனும் மிதிலாவும் ஒருவரை ஒருவர் ரகசியமாக பார்த்து சிரிப்பதைக் கண்டவள், “அப்போ நீங்க தான் என் மென்டார் சார்ர சென்னை பேக் பண்ணி அனுப்புனீங்களா… ஒ… உங்களுக்கு உங்க காதலிய தேட நண்பன் வேணும், காதலி கிடைச்சவுடனே நண்பன கலட்டி விட்றது” என அவளாய் ஒரு கற்பனைக் கோட்டைக் கட்டி அதனைப் பிடித்து பொரிய,

ரகுநந்தனோ அவளின் கேள்வியில் நமட்டு சிரிப்பு சிரித்தான். மிதிலாவோ,

“குண்டச்சி என்ன விட்டா ஓவரா பேசற… என் புருஷன் ஒன்னும் உன் மென்டார போக சொல்லல, அவரா போனதுக்கு நாங்க எப்படி பொறுப்பாகுவோம்?” என முறைக்க,

“பாரு, புருஷன சொன்னோனே சண்டைக்கு வரிஞ்சு கட்டிக்கிட்டு வர்றத பாரு… எனக்கு ஏன் அவரு இங்க இருந்து போனாருனு தெரிஞ்சே ஆகணும்” என அவள் கூற,

மிதிலாவோ, “அவரு போனா போய்ட்டு போறாரு, உனக்கு என்ன டி குண்டச்சி பிரச்சனை? அதான் உனக்கும் அவருக்கும் எப்பொழுதும் ஏழாம் பொருத்தம் தான… அப்படியே அத விடு” என்க, அதனை அப்படியே விட்டு விடுவாளா என்ன.

“என்னாச்சு டி குட்டச்சி? ஒருவேள அவரு குடும்பத்துல யாருக்கும் உடம்பு சரியில்லயா? ஏன் அவரு திடுதிப்புனு போனாரு” என பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு வினவ, இதன் பின்பும் அவளுடன் விளையாட மனமில்லாமல் உண்மையை கூறலானாள் மிதிலா.

நேற்று மாலை சிரஞ்சீவியுடன் பேசிய நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன.

“இப்போ எதுக்கு டா நீ வேலைய ரிசைன் பண்ண? உண்மையான காரணத்த சொல்லு” என மீண்டும் மீண்டும் அதனையே ரகுநந்தன் வினவ,

“நான் என் வேலைக்கு உண்மையா இல்ல டா… அதுக்கான தகுதிய நான் இழந்துட்டேன்” என்க,

மிதிலாவும் ரகுநந்தனும் அவனின் பதிலில் அதிர்ந்தனர். “என்னாச்சு டா? ஏன் லூசு மாதிரி உளர்ற?” என்றான் ரகுநந்தன்.

“இல்ல டா… நான் தப்பு பண்ணிட்டேன், நீ தான் அடிக்கடி சொல்லுவியே. மாதா, பிதா, குரு, தெய்வம்னு பெற்றோருக்கு அடுத்த நிலை குருக்கு தான்னு. ஆனா, நான்… தப்பு பண்ணிட்டேன் டா, முடியல” என்க,

அவனை அணைத்துக் கொண்டவன் பின் அவனை கட்டிலில் அமர வைத்தவன், “இப்போ சொல்லு, என்னாச்சு?” என்றான் ரகுநந்தன்.

“நான் சொல்லப் போற விசயத்துல உனக்கும் மிதிலாவுக்குமே என்மேல கோபம் கூட வரலாம் டா… எனக்கே தெரியல, எப்போ என் மனசுக்குள்ள முகி வந்தானு…” என்றவன் தலைகுனிந்து அமர்ந்திருக்க,

இதனை ஓரளவு எதிர்பார்த்து தான் இருந்தான் ரகுநந்தன். ஆனால், மிதிலாவிற்கு இது பெரிய அதிர்ச்சியை கொடுத்தது என்னவோ உண்மை தான்.

அவள் அதிர்ச்சியுடன் நோக்க, “எனக்கு எப்போ இப்படி மனசு மாறுச்சுனு தெரியல டா… அவ கூட வம்பிழுக்க பிடிக்கும், ஸ்டூடண்ட் அப்படிங்கிறதையும் தாண்டி நான் அவக்கிட்ட பேசிட்டனோனு தோணுது. இந்த ஒரு வாரமா தான் என் மனசே எனக்கு புரிய ஆரம்பிச்சுது. ஆனால் அது தப்புனு என் அறிவு சொல்லுது, மனசுக்கும் அறிவுக்கும் நடுவுல நான் சிக்கி தவிக்கிறேன் டா”

“நான் ஒரு பிரபசர், அவ என் ஸ்டூடண்ட்… இத தாண்டி எங்களுக்குள்ள இந்த மாதிரி ஒரு உறவு வர்றது, என் பணிக்கு நான் செய்ற துரோகம் டா. நிறைய கதைகள்ள, படங்கள்ள இப்படி வரலாம். ஏன் பிரபசர், ஸ்டூடண்ட் லவ் பண்றது பொதுவான விசயமா கூட இருக்கலாம். ஆனா அது தப்பு டா, எனக்கு அத சொன்னவனும் நீ தான…

என் மாணவிய நான் என் குழந்தையா நினைச்சு தான பாடம் எடுக்கணும். ஆனா, முகி விசயத்துல என் மனசு என் பேச்சை கேட்க மாட்டேன்ங்கிது, இது தப்புனு புரியுது. ஆனா, அவள பார்த்ததுக்கு அப்புறம் என் மனச கண்ட்ரோல் பண்ண முடியல. ஒரு தடவை நானே அவளுக்கு அட்வைஸ் பண்ணேன், ஆனா இப்போ அதே தப்ப நான் பண்றனே டா…” என புலம்பியவனைப் பார்த்த ரகுநந்தனுக்கு தன் நண்பனின் மனதை புரிந்து கொள்ள முடிந்தது.

“தினமும் நியூஸ்ல ஆசிரியரே மாணவிகிட்ட தவறா நடந்துக்கிட்டான்னு படிக்கும் போது எவ்ளோ கோபம் வருது. அப்போ நான் பண்றதும் தப்பு தான?” என்றவனை,

“சரி, நீ பண்ணது தப்பாவே இருக்கட்டும் டா… ஆனா இப்போ நீ வேலைய ரிசைன் பண்ணிட்டு சென்னை போய்ட்டா மட்டும் உன் மனசுல இருக்கிற முகிய அழிக்க முடியுமா?” என்றான் ரகுநந்தன்.

“ப்ச்… தெரியல டா… ஆனா, கண்டீப்பா என்னால இனி பிரபசரா வேலை பார்க்க முடியாது டா. அதான் நான் வேலைய விட்டுடேன், இனி வேற வேலை பார்க்க வேண்டியது தான்” என்றான் சிரஞ்சீவி.

தன் நண்பனை அணைத்துக் கொண்டவன், “உன்னால முகிய மறக்க முடியுமானு உன் மனசையே கேட்டுப் பாரு. உனக்கே புரியும்” என்க,

“இப்போ சின்ன சலனம் தான் டா… அது கூடிய சீக்கிரம் காணாம போய்ரும், அதான் இங்க இருந்து நான் உடனே கிளம்புறேன், ப்ளீஸ் டா. நான் சென்னை போகணும்” என்க,

தன் நண்பன் காதலை ரொம்ப எளிதாக எடுத்துக் கொண்டான் என்பதை புரிந்து கொண்டான் ரகுநந்தன். சிறு சலனம் என்றாலும் அதுவும் காதலின் விதை தானே. அதனை எவ்வாறு அகற்றுவான் என நினைத்தவன், அவனே இனி வரும் காலங்களில் புரிந்து கொள்வான் என்று தான் அவனை சென்னைக்கு அனுப்பி வைத்தான்.

இதனைக் கேட்டு முடித்த நறுமுகைக்கு என்ன சொல்வதன்றே தெரியாமல் முழித்தாள். சிரஞ்சீவியை முதன்முறை பார்த்ததில் இருந்து, அவனுடன் வழக்காட விரும்பியவள் அவள் தான்.

கடந்த மூன்று நாட்களாக தன் அக்காவின் திருமணத்தை நினைத்து பயப்பட்டு கொண்டிருந்தவள் சிரஞ்சீவியை கவனிக்கத் தவறி இருந்தாள்.

அன்று கோவிலில் கூட அவனை ஒருமுறை தான் பார்த்தாள். அவனும், வேஷ்டி சட்டையில் தான் இருந்தான். ஆனால், அதன்பிறகு அவனை அவள் பார்க்கும் சூழ்நிலை ஏற்படவில்லை.

அவள் மனம் ஏனோ அவனை உடனடியாக பார்க்க வேண்டும் எனத் துடித்தது.

‘தான் செய்த காதலால் தன் ஆசிரிய பணிக்கே துரோகம் செய்ததாய் நினைத்து அதனை ராஜினாமா செய்துள்ளான்’ என நினைக்கும் போது அவள் மனம் ஏனோ அவன் புறம் சாய ஆரம்பித்தது.

“நான் ஜீவாவ உடனே பார்க்கணும் டி குட்டச்சி” என தன் மனதை தன் அக்காவிடம் கூற,

அவளின் ஜீவா என்ற அழைப்பே அவளின் உள்ளத்தை காட்டிக் கொடுத்தது அவர்கள் இருவருக்கும்.

“சரி, போய் பாரு…” என மிதிலா அசால்ட்டாக கூற, அவளை முறைத்த நறுமுகை, “விளையாடுறியா டி குட்டச்சி. நான் எப்படி சென்னை போக முடியும்?” என்றாள்.

“நான் என்னடி தப்பா சொன்னேன், நீ தான உடனே ஜீவாவ பார்க்கணும்னு சொன்ன… அதான் போய் பாருனு சொன்னேன்” என அவள் நக்கலாக கூற,

“நம்ம கோயம்பத்தூர்ல இருக்கோம், அவரு சென்னைல இருக்காரு. பஸ்ல போனாலே பத்து மணி நேரம் ஆகும், உடனே போகணும்னா பறந்து தான் போகணும்” என அவள் முறைக்க,

“பறந்து போ…” என மிதிலா கூற, “என்கிட்ட அடிவாங்க போற டி குட்டச்சி. பறந்து போவாம், என்னைப் பார்த்தா கிண்டலா இருக்கா உனக்கு” என்க,

அக்கா தங்கையின் சண்டையை சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தான் ரகுநந்தன்.

“சீரியஸ்ஸா சொல்றேன் டி குட்டச்சி. பறந்து போ டி, அதான் கோயம்பத்தூர் டூ சென்னை பிளைட் இருக்கே. முக்கால் மணி நேரம் தான் டிராவல் டைம், நாளைக்கு காலைல கிளம்புனா திரும்ப ஈவ்னிங் பிளைட்ல வந்தற்லாம். வீட்டுலயும் பிரண்ட்ஸ் கூட வெளிய போறேனு சொல்லிக்கலாம், அவ்ளோ தான்” என அவள் கூற,

தன் அக்காவின் திட்டத்தை நினைத்து அவள் விழிவிரித்து நோக்கினாள்.

“உண்மையா தான் சொல்றேன் டி குண்டச்சி. இப்போ மாதிரி பத்து வருஷத்து முன்னாடி டெக்னாலஜி இருந்து இருந்தா நான் என் ராம்ம இவ்ளோ நாள் பிரிஞ்சு இருந்திருக்க மாட்டேன். இப்போ தான் நம்மள மாதிரி சாமானிய மக்கள் கூட பிளைட்ல போக முடியுமே, ஏன் டைம்ம வேஸ்ட் பண்ற… நாளைக்கு கிளம்பு, நான் இப்பவே பிளைட் ஃபுக் பண்றேன்” என அவள் தன் அலைப்பேசியில் டிக்கெட் முன்பதிவு வேலையைத் தொடங்க,

“பிளைட் டிக்கெட்க்கு காசு டி…” என கேட்கும் தன் தங்கைக்கு ரகுநந்தனை சுட்டிக் காட்ட,

“அப்போ டபுள் ஓ.கே…” என அவள் கட்டை விரலை தூக்கி காட்ட, அக்கா தங்கையின் அலப்பறையை ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு இப்பொழுது தான் புரிந்தது அவர்கள் தன்னுடைய கார்டை எம்ட்டி ஆக்க போகிறார்கள் என்று!

“எனக்குனு வாச்சு இருக்கிறத பாரு” என அவன் இதழ்கள் முணுமுணுத்தாலும், அவன் கைகள் தன்னுடைய கிரிடிட் கார்டை எடுத்து மிதிலாவிடம் தானாக கொடுத்தது.

நறுமுகை நிம்மதியாக சென்று உறங்க, இன்றுவரை நிழலை அணைத்து உறங்கிய மிதிலா இன்று நிஜத்தை அணைத்து உறங்கத் தொடங்கினாள்.

தன்னவளை தன்னுள் புதைத்துக் கொண்டு அவனும் உறங்க ஆரம்பித்தான்.

சென்னை

மறுநாள் காலை பதினோரு மணியளவில், வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க, கதவை திறந்தாள் ஆர்த்தி.

தன் எதிரே நின்றிருந்த இளம்பெண்ணைக் கண்டு யாரென்று தெரியாததால், “உங்களுக்கு என்ன வேணும்?” என்றாள்.

“ஜீவா…” என அவள் படக்கென பதில் அளிக்க, “ஙே…” என முழிப்பது அவள் முறையாயிற்று.

“ஜீவாவ பார்க்க வந்தேன்” என்க, தன் அண்ணனை ஜீவா என விளித்து அதுவும் ஒருமையில் சொல்வதைக் கண்டு தன் எதிரே இருந்தவளின் மேல் பார்வையை பதித்தாள் ஆர்த்தி.

டாப் & ஸ்கர்ட் அணிந்து, முடியை ஒரு சிறு கிளிப்பால் அடக்கி இருக்க பாதி முடிகள் கிளிப்பிற்குள் அடங்காமல் காற்றில் அசைந்தாட, கொஞ்சமே கொஞ்சம் எடைப் போட்டு இருந்தாலும் பார்க்க பார்பி டால் மாதிரி இருப்பவளைக் கண்டு ஆச்சரியமானாள்.

சிறு பெண்ணாய் தோன்றுகிறாள். ஆனால் தன் அண்ணனை பெயர் சொல்லி அழைப்பதை நினைத்து, “உள்ள வா மா…” என்றவள், “நீ அண்ணாவோட ஸ்டூடண்ட்டா…” என்க,

அவளோ இல்லை என தலையசைத்தவள், “கேர்ள் பிரண்ட்” என்க அவளோ நம்பாத பார்வை பார்த்து வைத்தாள்.

“நம்ப முடியலையா… உங்க அண்ணன் கிட்டயே கேட்டு தெரிஞ்சுக்கோங்க, இப்போ நான் ஜீவாவ பார்க்கணும், அவரு எங்க இருக்காரு?” என்றாள் அதிகாரமாய்.

“அண்ணா அவன் ரூம்ல தான் இருக்கான்” என்க, “ஓ.கே, தேங்க்ஸ்… நானே போய் பார்த்துக்கிறேன்” என அவனின் அறை நோக்கி நறுமுகை செல்ல,

“அண்ணாவோட ரூம் தெரியுமா?” என்றாள் ஆர்த்தி.

“இது என்ன மைசூர் பேலஸ்ஸா… கண்டுபிடிக்க கஷ்டப்படறதுக்கு, அதெல்லாம் நானே பார்த்துக்கிறேன்” என்றவள், ரகுநந்தன் ஏற்கெனவே கூறி இருந்த அறையின் முன் சென்று நின்றாள்.

அங்கு அவனோ, இவள் வருகையை உணராமல் விசில் அடித்தவாறே கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து தானாய் சிரித்துக் கொண்டிருக்க, கதவின் மேல் சாய்ந்து அவனை பச்சையாக சைட் அடித்துக் கொண்டிருந்தாள் நறுமுகை.

“இவ்ளோ அழகா என்ன? இவ்ளோ நாள் இதெல்லாம் நம்ம கண்ணுல படலயே!” என அவள் நினைத்துக் கொண்டிருக்க,

அவனோ கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தைக் கண்டு முதலில் கனவு என நினைத்தவன் தன் வேலையைத் தொடர, ஆனால் அதில் பதிந்த உருவமோ அசையாமல் நிற்க, அதிர்ந்து பின்னால் பார்த்தான்.

அவளோ கேசுவலாக அவன் முன்னே வந்து, “இந்த கேர்ஸ்டைல் நல்லா இல்ல ஜீவா…” என்றவள், அவனின் கேசத்தை கைகளால் கலைத்து விட்டவள்,

“இப்போ தான் சூப்பரா இருக்கு” என அவள் நெட்டி முறிக்க, அதற்குள் மகள் மூலம் விசயம் அறிந்த வள்ளி தன் மகளுடன் தன் மகனின் அறைக்கு வந்திருந்தார்.

“ஜீவி…” என அவர் அழைக்க, அவரைக் கண்ட நறுமுகை, “வணக்கம் ஆன்ட்டி…” என்றவள் பவ்யமாக அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க,

“நல்லா இரும்மா…” என்றவர், “ஜீவிக்கு தெரிஞ்ச பொண்ணு வந்துருக்கானு ஆர்த்தி சொன்னோனே எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியா தான் மா இருந்தது, இவன் பொண்ணுங்கள கண்டா எட்டூர் தாண்டி போறவன். இப்போ, அவனத் தேடி நீ வரவும் ஆர்த்தி என்கிட்ட சொல்ல வந்துட்டா” என்றார் வள்ளி.

“என்ன ஜீவா, ஆன்ட்டி உங்கள ரொம்ப நல்ல பையன்னு சொல்றாங்க, அப்படியா… அப்போ நான் தான் உங்களுக்கு பர்ஸ்ட் கேர்ள் பிரண்டா?” என அவள் ஏகத்துக்கும் கதைக் கட்ட,

அவளின் அதிரடி தாக்கத்தில் விழி பிதுங்க நின்றிருந்தான் சிரஞ்சீவி.

“நீ சென்னை தானா ம்மா?” என வள்ளி வினவ, “இல்ல ஆன்ட்டி. கோயம்ப…” என சொல்ல வந்தவனைத் தடுத்த சிரஞ்சீவி,

“அம்மா எங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் வேலை இருக்கு, போய்ட்டு வரோம் ம்மா… இன்னொரு நாள் அவக்கிட்ட சாகவாசமா பேசிக்கோங்க” என்றவன், அவசர அவசரமாக அவளின் கரம் பற்றி இழுத்துக் கொண்டு போனான் சிரஞ்சீவி.

இதழ்களில் புன்னகை உறைய, அவனுடன் சென்ற நறுமுகை வள்ளியிடமும் ஆர்த்தியிடமும் சைகையிலேயே விடைப்பெற்று சென்றாள்.

அவளை தன் வீட்டை விட்டு ஒரு கிலோ மீட்டர் தூரம் அழைத்து வந்தவன், “என்ன முகி இது? நீ எப்போ சென்னை வந்த? எப்படி வந்த? வந்ததும் ஏன் என் வீட்டுக்கு வந்த?” என அவன் கேள்வி கணைகளை அடுக்க,

தன்னிடமிருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து நீட்டியவள், “ப்ச்… என்ன ஜீவா இது, கொஞ்சம் மூச்சுவிட்டு பேசுங்க. இப்படியா மூச்சு விடாம பேசறது” என்க,

சிரிப்பதா! அழுவதா! எனத் தெரியாமல் முழித்தான் சிரஞ்சீவி.

“நீ இங்க வந்தது வீட்டுக்கு தெரியுமா முகி? எப்படி வந்த, வீட்டுல என்ன ரீசன் சொன்ன?” என அவள் நீட்டிய பாட்டிலில் இருந்த தண்ணீரை காலி செய்து விட்டு வினவ,

“அக்காவுக்கும் மாம்ஸ்க்கும் தெரியும்” என்றவள், “ப்பா… என்ன வெயில் டா சாமி, சென்னைல எப்பவும் இப்படி தான் வெயில் அடிக்குமா… இந்த வெயிலுக்கு ஃபலூடா சாப்பாட்டா சூப்பரா இருக்கும், போகலாமா” என்க,

தலையில் அடித்துக் கொண்டவன், “வா…” என அவளை வண்டியில் ஏற்றிக் கொண்டவன், அவளிற்கு ஃபாலூடா வாங்கி தர அழைத்துச் சென்றான்.

ஃபலூடாவை அவள் ருசித்துக் கொண்டிருக்க, அவளின் எதிரே அமர்ந்திருந்தவன் “எப்படி வந்த முகி?” என்றான் சிரஞ்சீவி.

“பிளைட்ல ஜீவா” என்க, அவளின் ஜீவா என்ற அழைப்பு பிடித்திருந்தாலும், “ஜீவானு கூப்பிடாத… உன்னை விட வயசுல மூத்தவன், உனக்கு மென்டாரா வேற மூணு மாசம் குப்பை கொட்டிருக்கேன். தயவுசெஞ்சு எனக்கு மரியாதை குடும்மா” என்க,

“மரியாதைலாம் கேட்டு வாங்க கூடாது ஜீவா…” என்க, அவளுடன் வாதம் புரிய விரும்பாமல் “சரி, வந்ததும் வந்த, ஏன் என் வீட்டுக்கு வந்த? அம்மாகிட்ட வேற கேர்ள் பிரண்ட்னு சொல்லி வச்சுட்ட, அவங்க என்ன நினைக்கப் போறாங்களோ” என அவன் புலம்ப,

“நான் என்ன பண்ண? நீங்க ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்துருங்கீன்னா நான் ஏன் காசு வேஸ்ட் பண்ணி இங்க வர போறேன்” என நொடித்தவளிடம் பேசி பிரயோசனம் இல்லை என்பதை புரிந்து கொண்டவன்,

“சரி, திரும்ப ஊருக்கு போக நானே டிக்கெட் ஃபுக் பண்றேன். ஒழுங்கா ஊர் போய் சேர்ற வழிய பாரு” என்றவன், தன் ஃபோனை எடுக்க,

“அதெல்லாம் ஆல்ரெடி ஃபுக் பண்ணியாச்சு. இரண்டு மணிக்கு எனக்கு பிளைட்” என்க, அப்பொழுது தான் மணி 12 ஆக, “சரி, வா… உன்னை ஏர்போர்ட்ல டிராப் பண்றேன்” என்க,

“எனக்கு பசிக்குதே… சாப்பிட்டு கிளம்பலாம்” என்க, “சரி, ஆர்டர் பண்ணு” என்றவன் அமைதியாக அமர்ந்தான்.

ஒருவழியாய் அவளை ஏர்போர்ட்டில் கொண்டு வந்து விட, “ஏன் வேலைய ரிசைன் பண்ணிட்டு அவ்ளோ சீக்கிரம் இங்க வந்தீங்க?” என்றாள் நறுமுகை.

“அதான் வந்த வேலை முடிஞ்சுருச்சுல்ல, இனி எனக்கு அங்க என்ன வேலை” என்றான் சிரஞ்சீவி.

“அப்போ, இது தான் காரணமா…” என அவள் அவனை நம்பாத பார்வை பார்க்க, அவனோ “பிளைட் டிக்கெட்க்கு பணத்துக்கு என்ன பண்ண?” என்றான்.

“அதான் மாம்ஸ் இருக்காரே. இதக் கூட பண்ண மாட்டாரா” என்க, “ரகு உன் நிலைம ரொம்ப பாவம் டா… உனக்குனு அக்காவும் தங்கச்சியும் வந்து வாச்சிருக்கு பாரு, சோ ஸேட்” என அவன் புலம்ப,

“அப்போ இப்பவும் நீங்க உண்மைய சொல்ல மாட்டீங்க?” என்றாள் நறுமுகை.

“அதான் சொல்லிட்டேன்ல, நீ கிளம்பு. செக்இன் ஆரம்பிச்சுடாங்க போல. உள்ள போ” என அவன் உறுதியாய் கூற,

சற்று தூரம் சென்றவள் திரும்பி அவனைப் பார்த்தாள் நறுமுகை.

பேன்ட் பாக்கெட்டில் இருகைகளையும் நுழைத்து, இதழ்களில் புன்னகை உறைய நின்றிருந்தவனைக் கண்டு,

“போ டா… உனக்கு ஊருல தேன்மொழி, கனிமொழினு எவளாச்சும் வாய்க்கா வரப்புல திரிவா. அவள தேடி தேடி லவ் பண்ணு, உனக்குலாம் நான் செட் ஆகவே மாட்டேன் ஜீவா…” எனக் கத்தியவள், திரும்பியும் பாராமல் செல்ல, “பச்ச மிளகா…” என முணுமுணுத்தவாறே போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் சிரஞ்சீவி.

 

28

நறுமுகையை ஏர்போர்டில் விட்டு விட்டு வந்தான் சிரஞ்சீவி. விசிலடித்தவாறே அவன் உள் நுழைய, ஹாலில் இருந்த டீவியில்,

எதனால் இமை பார்த்தது

எதனால் இதழ் கோர்த்தது

வங்கக்கடல் ஈரம் போகுமா

இந்த புதிர் காதல் ஆகுமா….

இமை மூடாமல் 

இரை தேடாமல் 

உன் உணர்வால் விழித்திருப்பேன்…

சற்றுமுன் கிடைத்த தகவல்படி

தொலைந்துபோனது என் இதயமடி

உயிரே என் உயிரே என் உயிரே உயிரே…

என்ற பாடல் ஓடிக் கொண்டிருக்க, அந்த பாடலை அவன் இதழ்களும் முணுமுணுத்தன.

ஷோஃபாவில் வந்து அமர்ந்தவன், அந்த பாடலை ரசித்து பாடிக் கொண்டிருக்க அவனின் இருபுறத்திலும் வந்து அமர்ந்தனர் வள்ளியும் ஆர்த்தியும்.

பாடலின் மேல் உள்ள கவனத்தில் அவர்களைக் கவனிக்க தவறி இருந்தான் சிரஞ்சீவி.

“சற்று முன் அப்படி என்ன தகவல் கிடைத்தது தமையனே…” என நக்கல் தொனியில் வினவினாள் ஆர்த்தி.

அப்பொழுது தான் அவர்களைக் கண்டவன், வேகமாக எழ முயற்சிக்க இருவரும் அதனை தடுத்தனர்.

“உட்காரு கண்ணா…” என வள்ளி கூற, ‘டேய்… சிரஞ்சீவி, இன்னிக்கு உன்னை வச்சு செய்யப் போறாங்க உன் அம்மாவும் தங்கச்சியும்’ என மனதினுள் புலம்பியவன்,

“ஹி… என்ன ம்மா?” என்றான். “ஓவரா அசடு வழியாதடா அண்ணா… ஆமா, இன்னிக்கு உன்னைப் பார்க்க வந்த பொண்ணு யாரு?” என்றாள் ஆர்த்தி.

“பிரண்டோட தங்கச்சி மா…” என்க, “பிரண்டோட தங்கச்சி மட்டும் தானா…” என அவள் இழுக்க,

“ஏன் கண்ணா? அந்த பொண்ண உனக்கு பிடிச்சுருக்கா?” என்றார் வள்ளி.

“அம்மா, நீங்க நினைக்கிற அளவுலாம் இல்ல… அவ உங்கள வம்பிழுக்க, என் கேர்ள் பிரண்ட்னு சொல்லிட்டு போறா… அத நம்பி என் விரதத்த தப்பா நினைக்கக் கூடாது. சிரஞ்சீவினு பேர் வச்சுட்டு அந்த மாதிரி தப்பெல்லாம் உன் மகன் பண்ண மாட்டான் ம்மா, யூ நோ ஐ ஆம் தீவிர ஆஞ்சநேயர் பக்தன்…” என்க,

“ஐ நோ டா அண்ணா… இப்படி பொய் சொல்லிட்டு திரியறவங்களத் தான் நம்பக் கூடாதாம்… இன்னிக்கு பிபிசி நியூஸ்ல கூட சொன்னாங்க” என ஆர்த்தி நக்கல் பண்ண,

“அம்மா, உன் மகன நம்பும்மா… தெரிஞ்சப் பொண்ணு, அவ்ளோ தான்…” என பாவமாக முகத்தை வைத்துக் கொள்ள,

“சரி, அந்தப் பொண்ணு எந்த ஊரு டா… கோயம்பத்தூரா…” என்க, ஆமாம் என்றால் அவள் இங்கு எப்போது வந்தாள்? ஏன் வந்தாள்? என்ற கேள்வி கட்டாயம் எழும்.

அதற்கு அவன் என்ன பதில் கூறுவான். “அடியேய் பச்ச மிளகா, நீ ஒரு பிளேட் பிரியாணிக்கும் ஃபலூடாவுக்கும் தான் சென்னை வந்தனு சொன்னா நம்புவாங்களா… வந்து அத மட்டும் தான பண்ண, இப்போ நான் என்ன சொல்லி சமாளிப்பேன்” என அவன் புலம்ப,

அந்நேரம் பார்த்து வெளியே சென்றிருந்த விஷ்வா வீட்டிற்கு வர, தன் மனைவியும் மாமியாரும் தன் மச்சானை ரவுண்டு கட்டி அடிப்பதைக் கண்டவன்,

“என்ன மச்சான்… பாசத்துல கண்ணுமண்ணு தெரியாம உட்கார்ந்து இருக்கீங்களா…” என நக்கல் அடித்தான்.

‘நேரங்காலம் தெரியாம இவரு வேற…’ எனப் புலம்பியவன், “மாப்பிள்ளை என்னை கொஞ்சம் காப்பாத்துங்களேன்” என மன்றாடினான்.

அவனோ, “ஆமா மச்சான்… ஏதோ உங்கள பார்க்க உங்க கேர்ள் பிரண்ட் வந்தாங்களாமே… பார்த்தீங்களா, என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கமுக்கமா இருக்கீங்க?” என,

அய்யோ என தலையில் அடித்துக் கொண்டவன், “அவ வந்தது எனக்கே பெரிய ஷாக்… இதுல இவங்க வேற என்னை வச்சு செய்றாங்க” என வாய்விட்டே புலம்பியவன்,

“அந்தப் பொண்ணு எனக்கு தெரிஞ்ச பொண்ணு… அவ்ளோ தான், நீங்களா பெரிய கற்பனைக் கேட்டைய கட்டாதீங்க… ப்ளீஸ்” என கை எடுத்து கும்பிட்டவன், அங்கிருந்து தலை தெறிக்க ஓடினான்.

அவனைக் கண்டு சிரித்தவர்கள், அவர்கள் வேலையைப் பார்க்க செல்ல தன் அறைக்கு வந்தவன், “கடவுளே… நல்லவன்னு பேரு வாங்குனத கோயம்பத்தூர்ல இருந்து பிளைட் ஏறி வந்து கெடுத்து விட்டுட்டு போய்ட்டா…” எனப் புலம்பியவன், இதற்கெல்லாம் காரணமான தன் நண்பனை அலைப்பேசியில் அழைத்தான்.

“சொல்லு டா மாப்பிள்ளை…” என உற்சாகமாக அந்த பக்கமிருந்து குரல் வர, “நான் உனக்கு என்ன டா துரோகம் பண்ணேன்… ஏன், இல்ல ஏன்னு கேட்கிறேன், பச்சை மிளகாய எதுக்கு டா இங்க அனுப்பி வச்ச?” என இவன் கத்தத் தொடங்க,

அவனோ மறுமுனையில் அவனின் பேச்சால் அடக்க முடியாமல் சிரிக்க, “பண்றதெல்லாம் பண்ணிட்டு எப்படி டா உன்னால சிரிக்க முடியது? உன் நண்பன் பாவம் இல்லயா…” என அழும் குரலில் வினவ,

“நான் என்னடா மாப்பிள்ளை பண்ணுவேன்… அக்காவும் தங்கச்சியும் பேசி முடிவெடுத்துட்டாங்க. இடைல நான் போய் பேசுனா அப்புறம் குட்டச்சி கையால செப்பல்லயும், குண்டச்சி கையால விளக்கமாத்துலயும் அடி வாங்கணும். இது எனக்கு தேவையா…” என்க,

“அவ இங்க வந்து வீட்டுல ஒரு பூகம்பத்த கிளப்பி விட்டுட்டு போய்ட்டா… அவ எனக்கு கேர்ள் பிரண்டாம், எல்லாம் காலக் கொடுமை” என அவன் கதற,

“அப்போ இல்லையா டா மாப்பிள்ளை…” என்க,

“டேய்… ஆமா, இதென்ன புதுசா மாப்பிள்ளை” என அவன் வினவ, “முகி எனக்கு மக மாதிரி… அப்போ நீ எனக்கு மாப்பிள்ளை தான டா, அப்புறம் தான் நண்பன்” என்றான் ரகுநந்தன்.

“எப்படி டா எப்படி… குடும்பமே என்னை எப்படி போட்டுத் தள்ளலாம்னு தனியா ஐ.நா பொதுக் கூட்டம் போட்டு யோசிப்பீங்களா… அம்மாவும், ஆருவும் ஏதேதோ கற்பனைக் கோட்டை கட்றாங்க டா…” என்றான் சிரஞ்சீவி.

“ஹா ஹா… முகி வந்து என்ன சொன்னா?” என்றான் ரகுநந்தன்.

“ம்… இதே கேள்விய அவக்கிட்டயும் கேட்டேன்… ஏன் மா நீ பிளைட்க்கு தெண்டத்துக்கு காசு கொடுத்து இங்க வந்த… எல்லாம் வேஸ்ட் தானனு, அதுக்கு அவ ஒரு பதில் சொன்னா பாரு… முடியல டா” என அவன் புலம்ப,

“அப்படி என்னடா சொன்னா?” என்றான் ரகுநந்தன்.

“ம்… ஃபலூடா சாப்பிட வந்தாளாம்… அப்படியே இந்த கடைல பிரியாணி நல்லா இருக்கும்னு மாம்ஸ் சொன்னாரு, அதான் பிளைட் ஏறி இங்க வந்தேனு சொல்றா…” என்றான் சிரஞ்சீவி கடுப்பாக.

“என் பொண்டாட்டி நல்லா தான் டிரைனிங் குடுத்து வச்சுருக்கா. நாளப்பின்ன, அவ இப்படி தான் கோயம்பத்தூர் போய் ஃபலூடா சாப்பிடறேனு உன் பர்ஸையும் காலி பண்ணுவா டா… ஜாக்கிரதை” என்றான் ரகுநந்தன்.

“ஆமா, பண்றதெல்லாம் பண்ணிட்டு ஜாக்கிரதையாம்… அவள முதல்ல ஒழுங்கா டிகிரி முடிக்கச் சொல்லு, அப்புறம் ஃபலூடா சாப்பிடறத பத்தி கனவு காணச் சொல்லு” என்க,

“நீ அவக்கிட்ட சொல்லாம போய்ட்டியாம்… அதான் உனக்கு பனிஷ்மெண்ட் குடுக்கிறேனு அங்க வந்தா… நல்லாவே பனிஷ் பண்ணிருப்பா போல” என்றான் ரகுநந்தன்.

“உன்கூட நான் கோயம்பத்தூர் வந்ததுக்கு உன்னால என்ன செய்ய முடியுமோ அத நல்லாவே செஞ்சுட்ட டா…” என்றான் சிரஞ்சீவி.

“கூல் டா நண்பா… நம்ம வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்” என்க, “போதும் டா நீயும் உன் பொண்டாட்டியும் பண்ணதே இன்னும் நாலு வருஷத்துக்கு தாங்கும்” என்றவன், அதன்பின் பொதுவாக பேசத் தொடங்கினான்.

நறுமுகையும் தன் தோழிகளுடன் வெளியே சென்றதாகவே தன் வீட்டிலும் கூறி இருக்க, அவள் மாலையிலேயே வீட்டிற்கும் வந்து சேர்ந்தாள்.

இரவு உணவிற்காக, கோதுமை மாவை பிசைந்து கொண்டிருந்தாள் மிதிலா.

கிட்சனின் வாயிலில் நின்றவாறே தன் மனைவியை கண்களால் பருகிக் கொண்டிருந்தான் ரகுநந்தன்.

கருப்பு வண்ணப் புடவையில் தங்க நிற கோடுகள் வரிவரியாய் சென்றிருக்க, அதே நிறத்தில் பிளவுஸ்ம் அணிந்திருந்தாள் மிதிலா.

அவளின் சந்தன நிறத்திற்கு அந்த புடவை எடுப்பாக இருக்க, புடவையை தாண்டி பாதி மறைத்தும் மறைக்காமலும் இருந்த அவளின் சந்தன நிற தேகம் அவனின் கண்களுக்கு விருந்தாக, தன் மனைவியின் அருகே சென்றவன் அவளைப் பின்னிருந்து அணைத்தான்.

“ஹெச். ஓ. டி சாருக்கு என்ன வேணுமாம்…” என்றவாறே அவள் மாவை பிசைய, “என்ன என்னமோ வேணும்னு தோணுது… அதெல்லாம் கிடைச்சா நல்லா இருக்கும்” என அவன் கிசுகிசுப்பான குரலில் கூற,

“அடி வேணும்னா கிடைக்கும்…” என்றவள், “கொஞ்சம் நேரம் போய் வெளிய உட்காருங்க… பத்து நிமிஷத்துல சப்பாத்தி போட்ருவேன், சாப்பிடலாம்” என்றாள் மிதிலா.

“ப்ச்… எனக்கு பசியில்லயே” என அவன் மீண்டும் கிறக்கத்தோடு கூற, “கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி தான் ரொம்ப பசிக்குதுனு சொன்னீங்க…” என அவள் கூற,

“இப்பவும் பசிக்குது தான்… ஆனா, சப்பாத்தி வேண்டாம்” என அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான் அவன்.

“ஏங்க… ப்ளீஸ்” என அவள் கூறியது அவளுக்கே கேட்காத வண்ணம் அவள் இதழ்களில் இருந்து வெறும் காற்று மட்டும் தான் வெளியேறின.

அவளைத் தன்பக்கம் திருப்பி, அவளை காதலுடன் நோக்கியவன், “இந்த நிமிஷத்துக்காக எத்தனை வருஷம் காத்திருந்தேன் தெரியுமா… இப்பவும் இது கனவா இருந்திரக் கூடாதுனு மனசு பக்கு பக்குனு அடிச்சுக்குது” என்க,

அவளோ எதுவும் பேசாமல் தன்னவனை காதலுடன் விழி நிரப்பினாள்.

நான்கு கண்கள் பேசும்போது
தாய்மொழிக்கு இடமில்லை
மௌனம் பாடும் பாடல் போலே
மனதுக்கு சுகமில்லை

மலர்களை எறிப்பது முறையில்லை
மௌனத்தை உடைப்பது சரியில்லை
மௌனத்தின் ஓசைகள் கேளாமல்
வார்த்தைகள் புரிவது எளிதில்லை

அடுத்த நொடி அவனின் கரங்களில் இருந்தாள் மிதிலா. அவன் கால்கள் தங்கள் அறை நோக்கி செல்ல,

“ஏங்க கை எல்லாம் மாவு…” என அவள் கூறிய வார்த்தை எல்லாம் அவன் காதில் ஒலிக்க மறுத்தது. அவனும் அதனைக் கேட்க கூடிய சூழ்நிலையில் இல்லை.

இத்தனை வருட தவத்திற்கு பயனாய், தன்னவளிடம் தனக்கான தேடலைத் துவங்கி இருந்தான் அந்த கள்வன்.

பெண்மையை அவளுள் தேடத்தேட அது நீண்டு கொண்டு தான் போனதே தவிர, அவனுக்கு சலிப்பு தட்டவில்லை.

அவளும் தன்னவனின் தேடலுக்கு ஒத்துழைத்து அவனுள் இன்பமாய் தொலைய ஆரம்பித்தாள். அங்கு துன்பம் கூட இன்பமாய் மாறிப் போனது.

பெண்ணிடத்தில் உள்ளதெல்லாம்
பெண்ணுக்கு தெரியாது
ஓர் ஆணின் கைகள் தீண்டும் மட்டும்
அவசியம் புரியாது
காதல் மங்கை சொன்ன வார்த்தை
கவிதையில் கிடையாது
அட காதலிக்கும் ஆட்கள் போல
கவிஞர்கள் கிடையாது

தன்னவனின் தேடலுக்குள் அவளும் புதைய, அவனின் தேடலின் பொறுமை தாளாமல் ஆதவன் தன்னை வெளிப்படுத்த துவங்கி இருந்தான் அந்த இளங்காலைப் பொழுதில்.

அப்பொழுதும் அவளிடமிருந்து விலக மனமில்லாமல் கடினப்பட்டு பிரிந்து அவளை தன் நெஞ்சத்தில் தாங்க அவள் முகமோ வெட்கத்தில் சிவந்திருக்க போர்வையோடு அவனை அணைத்துப் படுத்தாள் மிதிலா.

“ஜானு…” என்ற அந்த கிறக்கக் குரலில் அவள் இன்னும் அவனுள் புதைய, “ஜானு…” என்ற அந்த அழைப்பு அவனுக்கு மேலும் மோகமூட்ட,

தன்னவளை வாரியணைத்து தன்மேல் போட்டுக் கொண்டவன், அவள் கேசத்தை வருடி விட்டான் ரகுநந்தன்.

“ராம்…” என அவள் உருகி அழைக்க, “என்ன மா…” என்றான் ரகுநந்தன்.

“நம்ம சென்னை போகலாமா…” என சற்று பயத்துடனே வினவினாள் தன் கணவன் கோபப்படுவானோ என்று!

“ஏன் உனக்கு இப்போ இப்படி தோணுச்சு?” என்றான் ரகுநந்தன்.

“நம்ம வீடு அங்க தானங்க இருக்கு, நம்ம இங்கயும் அவங்க அங்கயும் இருக்கிறது நல்லா இருக்காதுங்க…” என்றாள் மிதிலா.

“நீ சொல்றது கரெக்ட் தான் ஜானு… ஆனா, இப்போ இருக்கிற சூழ்நிலைல அங்க போனா உன்னை அம்மா ரொம்ப காயப்படுத்துவாங்க ஜானு. அதப் பார்த்துட்டு என்னால அமைதியா இருக்க முடியாது, அப்புறம் பிரச்சனை பெருசா தான் போகும்” என அவளின் தலையை வருடியவாறே கூற,

“அதுக்காக நம்ம இங்கயே இருந்தா எப்படிங்க பிரச்சனை சால்வ் ஆகும்? அத்தை கோபப்படுவாங்க தான். ஆனா, அவங்க நினைப்பு தப்புங்கிறத நம்ம மாத்தி தான ஆகணும். ஆளுக்கு ஒரு மூலைல இருந்தா இந்த பிரிவு இன்னுமே தான் வளருமே தவிர, குறையாது… நம்ம சண்டைக்காக நம்மளோட குழந்தைங்க தாத்தா, பாட்டியோட அன்ப இழந்துறக் கூடாது” என்றவளைப் பார்த்து கள்ளப் புன்னகை புரிந்தவன்,

அவள் காதில் கிசுகிசுக்க, அதனைக் கேட்டு “ச்சீ… பொறுக்கி… நினைப்பப் பாரு, கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க” என்றாள் மிதிலா.

ஆனால் அவனின் ரகசிய கேள்வியின் விளைவாய் அவள் கன்னங்கள் சிவப்பதை அவளால் தடுக்க முடியவில்லை.

அவளின் கன்னத்தை ஆசையுடன் வருடியவன், “சரி, உன் ஆசைய நான் கெடுப்பானேன்… ஆனா, ஒன் கண்டிசன். அங்க அம்மா ஏதாவது ஏடாகூடமா பேசினாங்கனா என்னால அமைதியா இருக்க முடியாது” என்றான் ரகுநந்தன்.

“உங்கள யாரு அமைதியா இருக்கச் சொன்னது. நீங்களாச்சு உங்க அம்மாவாச்சு… ஆனா, எங்க இரண்டு பேருக்கும் இடைல நீங்க வரக்கூடாது” என்பவளைப் பார்த்து,

“அப்போ ஏதோ ஒரு முடிவோட தான் இருக்க…” என்றான் ரகுநந்தன்.

“என் மாமியார நான் சரி பண்ண வேண்டாமா… அவங்க நினைச்சத விட அவங்க மருமக பெரிய கில்லாடினு தெரிய வேண்டாம்” என்றாள் மிதிலா.

“அடுத்த டார்கெட் அவங்களா… நடத்து, நடத்து… நான் உட்கார்ந்து வேடிக்கைப் பார்க்கிறேன்” என்றவன்,

“ஒரு வாரத்துல சென்னை போக ஏற்பாடு பண்றேன்… உடனே காலேஜ்ல வேலைய ரிசைன் பண்ண முடியாது. ரெண்டு பேரும் சேர்ந்து ரிசைன் பண்றதால கொஞ்சம் லேட்டாகும், அது வரை கொஞ்சம் பொறுத்துக்கோ…” என்றான் ரகுநந்தன்.

“ம்…” என்றவள் தலையாட்டியவாறே, உறங்க ஆரம்பிக்க, தன்னவளை அணைத்தவாறே உறங்கத் தொடங்கினான் ரகுநந்தன்.

அடுத்த ஒரு வாரமும் நொடிகளாய் கடந்தது. நறுமுகையிடம், முதலில் படிப்பு தான், அதனை ஒழுங்காக முடித்தால் மட்டும் தான் மற்ற கனவுகள் காண வேண்டும் என கட்டுப்பாடு போட்டிருந்தனர் ரகுநந்தனும் அவனின் துணைவியாரும்.

அவள் மனதிலும் இது காதல் தானா? என்ற குழப்பம் இருந்ததால் தற்பொழுது படிப்பில் கவனத்தை செலுத்தத் தொடங்கினாள்.

இருவரும் தங்களின் பிளாட்டை காலி செய்துவிட்டு, சென்னை செல்ல தயாராகினர்.

“முறைப்படி எல்லாம் நடக்கணும்… ஆனா, அவங்க தான் கோபமா இருந்தாலும் நாங்க வந்து உங்கள முறைப்படி உங்க வீட்டுல கொண்டு வந்து விடறோம்னு சொன்னாலும் கேட்க மாட்டேன்கிற ம்மா…” என புலம்பிய தன் தந்தையிடம்,

“மதியாதார் தலைவாசல் மிதியாதேனு நீங்க தான சொல்லிக் கொடுத்தீங்க… அவங்க என் புகுந்த வீடு ப்பா, அவங்க என்ன சொன்னாலும் அதுக்கு நான் வளைஞ்சு கொடுக்கலாம். ஆனா, என்னைப் பெத்தக் காரணத்துக்காக அவங்க முன்னாடி என் அப்பாவும் அம்மாவும் தலைகுனிஞ்சு நிக்கிறத என்னால பார்க்க முடியாது… உங்க சம்பந்தியம்மாவே வந்து உங்ககிட்ட பேசுவாங்க, அதுவரை உங்கள பார்க்க நானும் உங்க மாப்பிள்ளையும் அடிக்கடி வருவோம் ப்பா…” என்றாள் மிதிலா.

“நாங்க பொண்ணப் பெத்தவங்க மா… கொஞ்சம் விட்டுக் கொடுத்து போறதுல தப்பில்ல” என பூங்கோதை கூற,

“என்ன ம்மா பேச்சு இது? ஏன், அவங்க மட்டும் தான் அவங்க மகன பாலையும் தயிரையும் ஊட்டி வளர்த்தாங்களா… நீங்க என்னை அப்படி வளர்த்தலயா… என்னைப் பொறுத்தவரை தப்பு இருந்தா மட்டும் தான் நம்ம மன்னிப்பு கேட்கணும், இல்லைனா எதுக்கு குனிஞ்சு போகணும்… அவங்க என் புகுந்த வீடா இருந்தா, அதுக்காக என்னைப் பெத்தவங்கள என்ன வேணும்னாலும் சொல்லுவாங்களா? இன்னொரு தடவை பொண்ணு வீடு, அப்படி இப்படினு ஏதாவது சொல்லாத ம்மா. அன்னிக்கு அத்தனை பேர் முன்னாடி அவங்க அப்படி பேசுனது தப்பு, அவங்களே அத உணர்ந்து உங்ககிட்ட வந்து பேசுவாங்க. அதுவரை உங்க வேலைய மட்டும் பாருங்க” என்றாள் மிதிலா.

தன் மனைவியின் கூற்றை ஏற்றுக் கொண்ட ரகுநந்தன், “மாமா அவ சொல்றதுல என்ன தப்பு இருக்கு… அம்மா ஏதோ குருட்டாம்போக்குல தப்பு பண்றாங்க, அத என் பொண்டாட்டி மாத்துவானு எனக்கு நம்பிக்கை இருக்கு… நீங்க கவலப்படாதீங்க, உங்கள பார்க்க நாங்க ரெண்டு பேரும் அடிக்கடி வருவோம் மாமா. உங்களுக்கும் பார்க்கணும்னு தோணுச்சுனா உடனே ஃபோன் பண்ணுங்க, ரெண்டு பேரும் உடனே வர்றோம்” என்றவன், தன் மனைவியுடன் சென்னை நோக்கி பயணமானான் ரகுநந்தன்.

ஏற்கெனவே தன் அப்பாவிடமும் தம்பியிடமும் ரகுநந்தன் கூறி இருந்ததால், விசயம் அம்பிகாவின் காதையும் எட்டியது.

அவரோ, எந்தவித ரியாக்சனும் இல்லாமல் உலவ “என்ன ப்பா, அம்மா அமைதியா இருக்காங்க…?” என்றான் துகிலன்.

“தெரியல டா… நான் பேசுனாலே முகத்த திருப்பிக்கிட்டு போறா… மருமக வந்து தான் இவள மாத்தணும் போல” என்றார் ராஜாராம்.

“அண்ணி மேல அப்படி என்ன ப்பா கோபம் அம்மாவுக்கு?” என துகிலன் வினவ,

“சின்ன வயசுல கிட்டியால அடிச்சுட்டானு கோபம் இன்னும் நீடிக்கிது டா… இப்போ இவ தான் சின்னப் புள்ளத் தனமா பிகேவ் பண்றா… என்ன சொன்னாலும் அவ புரிஞ்சுக்கிற நிலைல இல்ல, உன் அண்ணன அவக்கிட்ட இருந்து பிரிச்சது மிதிலா தான்னு கோபம்” என்றவர்,

“அவ எப்போ மாறுறாளோ மாறிக்கிட்டும் டா… நம்ம வீட்டுக்கு உன் அண்ணன் மூனு வருஷம் கழிச்சு வரான், கூட என் மருமகளும் வர்றா… ஆரத்தி கூட எடுக்கலைனா எப்படி. சிரஞ்சீவி வீட்டுல போய் ஆர்த்தியையும் வள்ளியையும் அழைச்சுட்டு வாடா” என்றார் ராஜாராம்.

ரகுநந்தனும் மிதிலாவும் காரில் வந்து அவர்கள் இல்லத்தின் முன் வந்து இறங்க, வள்ளி ஆரத்தி தட்டோடு வாசலில் காத்திருந்தார்.

அவர்களுக்கு ஆரத்தி எடுத்து சுற்றிப் போட்டவர், “மருமக இம்புட்டு அழகா இருந்தா நம்ம பையன் இப்படி தான் இங்க இருந்து கோயம்பத்தூர் ஓடுவான்…” என்றவர் மிதிலாவிற்கு நெட்டி முறிக்க,

அவர் யார் என்பதை உடனே தெரிந்து கொண்ட மிதிலா, “எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க அத்தை…” என அவர் காலில் தன் கணவனோடு விழுந்தார்.

தன் அருகே நின்ற குணசேகரனை தன் பக்கம் இழுத்த வள்ளி, இருவரும் சேர்ந்து அவர்களை ஆசிர்வதித்தனர்.

“பதினாறு பெற்று பெரு வாழ்வு வாழ்க” என வாழ்த்தியவர்கள், “உன் மாமியார நீ தான் மருமகளே சமாளிக்கணும்” என்றார் வள்ளி சிரித்த முகத்துடன்.

“அதுக்காக தான அத்தை இங்க வந்தோம்…” என அவளும் பதிலுக்கு புன்னகைக்க,

“நம்ம வீடு அடுத்த வீடு தான் ம்மா… இப்போ கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு சாயந்தரம் அங்க வாங்க” என அவர் கூற,

“கண்டிப்பா அத்தை…” என்றவள், ஆர்த்தியின் கைகளில் இருந்த ஜான்வியை தூக்கிக் கொண்டு, “உங்க பேரு என்ன குட்டிமா?” எனக் கொஞ்சினாள் மிதிலா.

“ஜான்வி…” என அவள் கூற, அதனைக் கேட்டு அதிர்ந்தவள் தன் கணவனை பார்க்க, “ரகு அண்ணா தான் பாப்பாவுக்கு பேரு வச்சாங்க அண்ணி” என ஆர்த்தி கூறினாள்.

தன் கணவனை காதலுடன் அவள் நோக்க, “திரும்பவுமா…” என நினைத்த சிரஞ்சீவி, “டேய். உங்க லவ்ஸ்ஸ உள்ள போய் வச்சுக்கோங்க டா… இது வாசல்” என்க,

அங்கு சிரிப்பலை எழுந்தது. பின் இருவரும் வலது கால் எடுத்து வைத்து உள்ளே சென்றனர்.

பூஜையறையில் விளக்கேற்றிய மிதிலா மனமுருக தன் இஷ்ட தெய்வமான ராமரை வேண்டிக் கொண்டவள், தன் கணவனின் அறைக்கு சென்றாள்.

அந்த அறை இன்றும் பராமரிக்கப்பட்டு வருவதை அதன் நேர்த்தியே காட்டிக் கொடுக்க, “எங்க உங்க அம்மா உங்க மேல உள்ள கோபத்துல உங்க ரூம்ம பூட்டியே வச்சுருப்பாங்களோனு நினைச்சேன். எப்படியோ என் மாமியார் எனக்கு ஒரு வேலைய மிச்சம் பண்ணிட்டாங்க” என்றவாறே அவள் ஜன்னல் திரைச்சீலைகளை விலக்கிக் கொண்டிருக்க,

அவளை அதுவும் தன் அறையில் கண்டவனுக்கு பழைய நினைவுகள் கிளர்ந்தெழுந்தன.

எத்தனை வருடங்கள் இதே அறையில் தன்னவளுடன் கனவில் டூயட் பாடி இருப்பான். இன்று நிஜத்தில் அவளுடன் டூயட் பாட விரும்பியவன், அவளை தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தான்.

அவனின் இன்பமான இம்சைகளுக்குள் அவளும் மூழ்க ஆரம்பித்தாள்.

குளித்து முடித்து வந்தவள், வீட்டைச் சுற்றி பார்த்தாள். பெரிய வீடும் என்றிராமலும் சின்ன வீடும் என்றிராமலும் நடுத்தர அளவில் இருந்தது ரகுநந்தனின் இல்லம்.

வாசலில் ஒரு கார், இரண்டு வண்டிகள் நிறுத்த இடம் விட்டிருக்க மீதி இடத்தில் செடிகள் இருந்தன. வீட்டினுள் உள்ளே நுழைந்தவுடன், ஹால் அதனை அடுத்து பூஜையறையும் ராஜாராம் அம்பிகாவின் அறையும் இருந்தது.

அதனை தாண்டி கிட்சனும் டைனிங் ஹாலும் இருக்க, மேலே மாடியில் மூன்று அறைகள்.

அண்ணனுக்கும் தம்பிக்கும் ஆளுக்கு ஒரு அறைகள். மற்றொன்று நித்திலவள்ளி வந்தால் பயன்படுத்திக் கொள்வாள் என ரகுநந்தன் கூறி இருந்தான்.

வீட்டிற்கு பின்புறம், சிறு தோட்டம் போல் இருந்தது. அதில் முல்லைப் பூ பந்தல் போடப்பட்டிருக்க, மல்லிகைப் பூவும் ரோஜா செடிகளும் அணிவகுத்து நின்றிருந்தது.

அதன்பின் கீரை வகைகள் சிலது இருக்க, ஒரு வேப்ப மரமும் இருந்தது. வேப்ப மரத்தடியில் அதன் குளிர்ச்சியை தன் தேகத்தினுள் உள் வாங்கியவள், பின்கட்டு வழியாக கிட்சனுக்குள் சென்றாள்.

தோட்டம் பராமரிக்க மட்டுமே வேலைக்கு ஆள் போட்டு இருப்பதாக ரகுநந்தன் கூறி இருந்ததால், சமையல் வேலை அனைத்தும் அம்பிகாவே பார்த்துக் கொள்வார் போலும் என எண்ணினாள் மிதிலா.

அவளின் எண்ணத்தை நிஜமாக்குவது போல் அடுப்படிக்குள் தான் இருந்தார் அம்பிகா.

அவர்கள் வந்ததில் இருந்து அவரும் பார்த்துக் கொண்டு தான் இருந்தார். ஆனால் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர் பாட்டுக்கு அவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்க, அவரை வம்பிழுக்க விரும்பிய மிதிலா அவர் அருகே சென்றாள்.

“அத்தை நான் ஏதாவது உங்களுக்கு ஹெல்ப் பண்ணட்டுமா?” என வினவ, அவரோ எதுவும் கூறாமல் மாலை நேர சிற்றுண்டிக்காக வாழைப் பூ வடை செய்ய தயார் செய்து கொண்டிருந்தார்.

அதனை பார்த்தவள், “கொடுங்க அத்தை… நான் செய்றேன்” என்றவள், அதனை அவர் அனுமதி இல்லாமலே தன் கைக்கு மாற்றியவள் வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பை பற்ற வைத்தாள்.

அவள் ஒவ்வொரு பொருளையும் தேடித் தேடி எடுக்க, பொறுமையாக இருந்த அம்பிகா அவள் தேடுவதைக் கண்டு பின் அவரே அதனை எல்லாம் எடுத்து வைத்தார்.

அவள் வடை சுட ஆரம்பிக்க, அவரோ நகராமல் அங்கயே இருக்க “என்ன அத்தை உங்க மேல உள்ள கோபத்துல உங்களுக்கு உப்போ இல்ல காரமோ அதிகம் போட்டு குடுத்துருவேன்னு பயமா? ச்சே… ச்சே… நான் அப்படிலாம் பண்ண மாட்டேன், நீங்க தைரியமா போகலாம்” என்றவாறே அவள் வடையை தட்டிப் போட,

அவரோ தான் மனதில் நினைத்ததை அவள் எவ்வாறு கண்டு பிடித்தாள் என்ற அதிர்ச்சியில் நின்றார்.

 

29

தன் மாமியார் அதிர்ச்சியுடன் நிற்பதைக் கண்ட மிதிலா, “என்ன அத்தை… நம்ம மனசுல நினைச்சத இவ எப்படி கண்டுபிடிச்சானு யோசிக்கிறீங்களா? நீங்க சீரியல் பார்த்து ரொம்ப கெட்டு போய்ட்டீங்க அத்தை. பிடிக்காத மருமகள், காஃபில உப்பையும் குழம்புல மிளகா தூளையும் அதிகமா போட்டே பயமுறுத்தி வச்சுட்டாங்க நம்மூரு மாமியார்கள… நானும் அப்படி பண்ணுவேன்னு நீங்க நினைச்சதுல தப்பே இல்ல, பட் என்ன பண்ண என் அம்மா எனக்கு உப்பு எவ்ளோ போடணும் காரம் எவ்ளோ போடணும் கத்துக் குடுத்து இருக்காங்களே… நான் அதிகமா போட்டா நீங்க என்ன சொல்லுவீங்க? உன் அம்மா இப்படி தான் சொல்லி குடுத்தாளாக்கும்னு தாவ கட்டைய சிலுப்பிக்குவீங்க… நம்ம ரெண்டு பேரு சண்டைக்குள்ள என் அம்மா வர்றத நான் விரும்ப மாட்டேன், சோ நீங்க நான் செஞ்ச எந்த பதார்த்ததையும் தைரியமா சாப்பிடலாம்” என்றவாறே வடையை பொரித்து எடுத்துக் கொண்டிருந்தாள்.

‘அமைதியா அப்பவே போய்ருந்தா இந்த பிரசங்கம் தேவையா உனக்கு’ என அம்பிகாவின் மனமே அவரை வெறுப்பேற்ற,

எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பினார் அம்பிகா. தன் அம்மா சமையற்கட்டில் இருந்து வெளியே வந்தவுடன் உள்ளே நுழைந்தான் துகிலன்.

“வாவ்… மிது, வடையா…” என ஒரு வடையை எடுத்து கொறித்துக் கொண்டே சமையற்கட்டு மேடையில் ஏறி அமர,

“இவ்ளோ நேரம் எங்க போய்ருந்தீங்க துகி?” என்றாள் மிதிலா.

“அம்மா எப்போடா சமையற்கட்ட விட்டு வெளிய வருவாங்கனு காத்திருந்தேன் மிது… அவங்க வெளிய போனோனே உள்ள வந்துட்டேன்” என்க, அப்பொழுது ராஜாராமும் அங்கு வர,

“அப்பா வடை செம டேஸ்ட் ப்பா… சாப்புடுறீங்க” என ஒரு வடையை எடுத்து நீட்ட, அவரும் சமையற்கட்டிற்குள்ளேயே தன் மகன் அருகே சாய்ந்து நின்றவாறு வடையை ருசி பார்க்க, ரகுநந்தனும் அங்கு வந்தான்.

பின் மூவரும் சமையற்கட்டிற்குள்ளேயே பேசி சிரித்தவாறு மிதிலா வடை சுட சுட அவர்களின் வயிற்றுக்குள் தள்ளிக் கொண்டிருந்தனர்.

இதனைக் கண்ட அம்பிகா, “நான் கிட்சனுக்குள்ள இருக்கும் போது ஒருத்தராவது எட்டிப் பார்த்தாங்களா… இப்போ, பாரு அவ என்னமோ ஊருல இல்லாத வடைய சுடுறாளாம்… அப்பனும் மகனுகளும் இப்படி அலப்பறை பண்றாங்களே” என பொறுமிக் கொண்டிருந்தார்.

அவரைக் கண்ட மிதிலா, துகிலனிடம் அவரை கண் ஜாடைக் காட்ட தன் அம்மாவை அழைத்தான் துகிலன்.

“ம்மா… நீங்களும் வாங்க” என்க, ராஜாராமும், “நீயும் வா அம்பிகா…” என அழைத்தார்.

தன் கோபத்தைத் தனக்குள் மறைத்துக் கொண்டவர் அவர்களுடன் கலந்து கொண்டார். ஆனால் அவர்கள் பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டு தான் இருந்தார்.

ஒவ்வொரு விசயத்திலும் தன்னுடன் தன் மாமியாரையும் மிதிலா இழுக்க முயற்சி செய்ய, அவரோ அவளிற்கு பிடி கொடுக்காமல் இருந்தார்.

அவளின் குறும்புத் தனத்தை ரசித்தவர் ராஜாராம் தான். அதனால் தன் பக்கம் தன் மாமனாரை இழுத்துக் கொண்டாள்.

சென்னையிலேயே ரகுநந்தனுக்கு ஒரு கல்லூரியில் வேலை கிடைத்திருக்க, மிதிலாவும் அதே கல்லூரியில் வேலைக்கு சேர்ந்தாள்.

இருவரும் ஒன்றாக கல்லூரிக்கு செல்லத் தொடங்கினர். அம்பிகா அவர்களின் அன்னியோன்யத்தைக் கண்டும் காணாமலும் இருந்தார்.

காலை இருவருக்கும் ஒரே கப்பில் காஃபி எடுத்துச் செல்வதில் இருந்து, காலை உணவின் போது தன் மனைவிக்கு முதல் வாய் உணவை கொடுத்துவிட்டு தான் ரகு உண்பதாகட்டும் என அனைத்தும் அவர் கண்ணில் பட்டுக் கொண்டு தான் இருந்தது.

தன் மகன், மருமகளின் அன்னியோன்ய வாழ்வு அவருக்கு சந்தோசத்தைக் கொடுத்தாலும் மிதிலா மேல் இருந்த கோபம் மட்டும் குறைய மறுத்தது. வீம்பை அவர் கைவிடத் தயாராகவில்லை.

அதனை உணர்ந்த மிதிலா, அதனை எல்லாம் கண்டு கொள்ளாமல் தன் பங்கை சிறப்பாக செய்தாள். அதாவது அவரின் கோப அளவை உச்சஸ்தானியில் எகிற வைப்பது.

ஒருநாள் மாலை நேரத்தில், அவர்கள் வீட்டின் முன் இரண்டு வீடு தள்ளி இருந்த வீட்டின் அம்மா வந்து கத்திக் கொண்டிருக்க, அவரின் சத்தம் கேட்டு வெளியே வந்தார் அம்பிகா.

“என்னங்க இங்க வந்து சத்தம் போட்டுக்கிட்டு இருக்கீங்க?” என அம்பிகா வினவ,

“எங்க உங்க மருமக? எங்க வீட்டு காம்பவுண்ட் சுவர்ல எகிறி குதிச்சு நெல்லிக்கா மரத்தையே பாதி ஒடச்சு வச்சுட்டா… சின்னப் புள்ளைங்க தான் அழிச்சாட்டியம் பண்ணுதுங்கனா இப்படி கல்யாணம் ஆனப் புள்ளையும் பண்ணலாமா?” என காட்டுக் கத்து கத்திக் கொண்டிருக்க,

அவரை ஒரு வழியாக சமாளித்து அனுப்பி வைத்த அம்பிகா கோபமாக வீட்டிற்குள் வந்தார்.

ஆனால், இதற்கு காரணமானவளோ தன் மாமனாரிடம், “மாமா செம டேஸ்ட்…” என்றவாறே திருடி வந்திருந்த நெல்லிக்காயில் உப்பும் மிளகா தூளும் தொட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்க, ராஜாராமும் தன் மருமகளோடு சேர்ந்து நெல்லிக்காயை ருசி பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது ரகுநந்தன் அங்கு வர, “ரகு இந்தா நெல்லிக்கா சாப்பிடு… சூப்பரா இருக்கு” என அவர் நீட்ட,

“என்னப்பா திருட்டு நெல்லிக் காயா…” என தன் மனைவியை பார்த்த வண்ணம் கூற,

“ஹா ஹா… இதான் டேஸ்ட் டா… நான் சின்ன வயசுல என் வயசு பயலுகளோட இப்படி நெல்லிக்கா திருடி சாப்பிட்டது, இப்போ என் மருமகளால அதே அனுபவம் திரும்ப கிடைச்சுருக்கு” என்க,

“அப்போ அவ கூட நீங்களும் சேர்ந்து போனீங்களா ப்பா?” என்றான் ரகுநந்தன்.

“என் கூட்டாளிய விட்டுட்டு நான் மட்டும் எப்படி தனியா போவேன் ராம்” என நெல்லிக்காயை ருசி பார்த்துக் கொண்டிருந்த மிதிலா கூற,

அவள் காதை திருகியவன், “பிரபசர் மாதிரியா இருக்க… ஊர்பட்ட சேட்டை ஜானு” என்க,

“டேய், என் மருமகள ஏன் குறை சொல்ற… நாங்களாம் பண்ணாத தில்லுமுல்லா… அத கம்பேர் பண்ணி பார்க்கும் போது என் மருமக பண்றது ரொம்ப கம்மி” என தன் மருமகளுக்கு அவர் வக்காளத்து வாங்க,

“ஏன் ப்பா, நீங்க வேற உசுப்பேத்தி விடுறீங்க. மரம் ஏறும் போது எங்கையாவது விழுந்துட்டா என்ன பண்றது” என அவன் கவலைப்பட,

“டேய்… அதெல்லாம் என் மருமக லாவகமா மரம் ஏறுறா. உனக்கும் உன் தம்பிக்கும் தான் இதெல்லாம் தெரிய மாட்டேங்குது” என்றவர், தன் மருமகளிடம் தான் சிறு வயதில் செய்த வீரதீர பராக்கிரமங்களை அள்ளி வீசத் தொடக்கினார்.

அவள் ஆவலோடு கேட்க, அவர் முகத்தில் இருந்த சந்தோசத்தைக் கண்ட அம்பிகா எதுவும் பேசாமல் அமைதியாக உள்ளே சென்றார்.

பணி முடிந்து வீட்டிற்கு வந்த துகிலன், “அப்பா உங்களுக்கு இந்த மாச செக்கப் பண்ணல தான…” என்றவாறே மாதாந்திரம் எடுக்கும் செக்கப்களை அவன் பார்க்க,

பிபி, சுகர் என அனைத்தும் அவருக்கு நார்மலாகி இருந்தன. “வாட் அ மெடிக்கல் மிராக்கல்… இது எப்படி சாத்தியம்” என அவன் கூச்சலிட,

“என்னடா ஆச்சு?” என்றான் ரகுநந்தன். “அப்பாவுக்கு எல்லாம் நார்மலா இருக்கு டா…” என அவன் சந்தோசத்தில் கூற,

“மாமா நான் தான் அப்பவே சொன்னேன்ல… உங்க மகன் டாக்டருனு சொல்லி ஊர ஏமாத்திக்கிட்டு இருக்காருனு, இப்போ பாருங்க உண்மையா போச்சு. ஒன்னும் இல்லாத மனுஷன இவ்ளோ நாள் மாத்திரை கொடுத்து அவர கஷ்டப்படுத்தி இருக்க” எனறவாறே வந்த மிதிலா ஆவி பறக்க, காஃபியை தன் மாமனாரின் முன் நீட்டினாள்.

“எல்லாம் என் மருமகளோட வேலை தான் டா மகனே… இப்போலாம் டென்சன் எந்த பக்கம் இருக்குனே தெரியல, அந்த அளவு என்னை சிரிக்க வைக்கிறா என் மருமக” என்றார் ராஜாராம்.

“இந்தாங்க டாக்டர் சார், உங்களுக்கும் காஃபி” என்க, இஞ்சியும் சுக்கு மல்லியும் தட்டிப் போட்டு ஆவி பறக்க கொண்டு வந்த காஃபியை கண் மூடி ரசித்து ருசித்துக் கொண்டிருந்தான்.

அவன் அருகில் வந்த மிதிலா சற்று சத்தமாக, “ஏன் டாக்டர் சார் உங்க அப்பாவ மட்டும் தான் மந்த்லி செக் பண்ணுவீங்களா… உங்க அம்மாவ செக் பண்ண மாட்டீங்களா? அவங்களுக்கு இப்போ செக் பண்ணி பாரேன் பிபி ஹை பீச்சுல போகும்” எனக் கூற,

அவளை முறைத்தவர் எப்பொழுதும் போல் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றார்.

“அவ எப்பவோ உன்னை மருமகளா ஏத்துக்கிட்டா ம்மா மிதிலா… ஆனா, கொஞ்சம் வீராப்பு. அதான் மூஞ்ச திருப்பிக்கிட்டு போறா” என்றார் ராஜாராம்.

சிறிது நேரம் அவர்களுடன் பேசிவிட்டு தங்களின் அறைக்கு வந்தாள் மிதிலா. அவள் உள்ளே நுழைந்தவுடன், தன் கைச்சிறையில் சிறையெடுத்தவன் “எல்லாரையும் கவனிக்கிற… ஆனா, என்னை மட்டும் கவனிக்கிறதே இல்ல” என பொய் குற்றச்சாட்டு அவள் மேல் கூற,

“அப்படியா சார்… அப்போ நைட் முழுக்க என்னைத் தூங்க விடாம பண்றதெல்லாம் யாரு சார்?” என அவன் தாடியை பிடித்து ஆட்ட,

“ஹேய்… வலிக்குது டி” என அவன் சிணுங்கியவன், “வர வர உன் ராம்ம நீ கண்டுக்கிறதே இல்ல” என பொய்கோபம் கொண்டான் அந்த கள்வன்.

“ஆனா எனக்கு அப்படி தெரியலயே ராம்…” என அவனின் முகத்தைப் பார்த்தவாறே அவள் கூற, அவள் முகத்தில் கோலமிட்டவன், “இல்ல… நீ கண்டுக்கிறதே இல்ல” என அவன் மீண்டும் முகத்தை சோகமாக வைத்துக் கொள்ள,

“சரி, இப்போ என்ன பண்ணா என் ராம்க்கு கோபம் தீரும்?” என்றாள் ஜானகி.

“ம்…” என அவன் யோசிக்கும் போதே அவனை சமாதானப்படுத்தத் தொடங்கினாள் அவள்.

துகிலன் எப்பொழுதும் போல் ஊர்மிளாவுடன் கடலை போட்டுக் கொண்டிருக்க,

“துகி அப்பா, அம்மா கல்யாண பேச்ச எடுத்துட்டாங்க…” என்றாள் ஊர்மிளா.

“அட என் மாமனாரும் மாமியாரும் ரொம்ப நல்லவங்களா இருக்காங்களே… அப்போ சீக்கிரம் எங்க வீட்டுக்கு மருமகளா வரப் போறனு சந்தோசமா சொல்லு ரமி” என்றான் துகிலன்.

“சீரியஸ்ஸா பேசிக்கிட்டு இருக்கறேன். உனக்கு காமெடியா தெரியுதுல்ல” என அவள் கோபப்பட, “இப்போ ஏன் ரமி டென்சன் ஆகற? பேசத் தான செஞ்சிருக்காங்க, உடனேவா கல்யாணத்த நடத்த போறாங்க. இப்போ தான் அம்மா மிதுவ கொஞ்சம் கொஞ்சமா ஏத்துக்க ஆரம்பிச்சு இருக்காங்க, இந்த நேரத்துல எப்படி நம்ம விசயத்த ஓப்பன் பண்றதுனு தான் தெரியல” என அவன் கூற,

“எங்க வீட்டுல லைனா போட்டோ அனுப்பி பாருனு சொல்றாங்க டா… என்னால சத்தியமா அந்த போட்டாவ பார்க்க கூடப் பிடிக்கல” என்றவள்,

“ப்ளீஸ் ஏதாவது பண்ணு டா… வீட்டுல எப்படியாவது நம்ம விசயம் தெரிஞ்சா தான் அவங்க மாப்பிள்ளை பார்க்கிறத நிறுத்துவாங்க” என்றாள் அவள்.

“சரி, நான் பார்த்துகிறேன்… நீ கவலப்படாத ரமி” என்றவன், யோசனையில் ஆழ்ந்திருக்க, கீழே தண்ணீர் பாட்டில் எடுக்க வந்திருந்த மிதிலா வீட்டின் பின்பக்கம் விளக்கெரிவதைக் கண்டு அங்கு சென்றாள்.

அங்கு துகிலன், ஏதோ சிந்தனையிலேயே நடந்து கொண்டிருக்க, “துகி…” என அழைத்தாள் மிதிலா.

“சொல்லு மிது” என அவன் கூற, “ஏன் தூங்காம இங்க வந்து உலாவிக்கிட்டு இருக்க? ஏதாவது பிரச்சனையா?” என்றாள்.

“அப்படிலாம் ஏதும் இல்லை மிது, சும்மா தான்… தூக்கம் வரல” என அவன் சமாளிக்க,

“என்ன பிராப்ளம்…? முதல்ல அதச் சொல்லு” என்றாள் மிதிலா. முதலில் தயங்கியவன் பின் ஊர்மிளா கூறியதை கூற,

“அட இவ்ளோ தானா… இதுக்கு ஏன் இவ்ளே டென்சன், விடு நான் பார்த்துகிறேன். ஆல்ரெடி உங்க காதல் விசயத்த பத்தி உன் அண்ணன் சொன்னாரு, இனி என்னோட பொறுப்பு… நான் வீட்டுல பேசறேன்” என்க,

“இல்ல மிது, அம்மா இத எப்படி எடுத்துக்குவாங்கனு தெரியல” எனக் கூற,

“அத்தைய சம்மதிக்க வைக்கிறது என் பொறுப்பு துகி… டோன்ட் வொர்ரி, போய் நிம்மதியா தூங்கு” என்றாள் மிதிலா.

“தேங்க்ஸ் மிது…” என்றவன், தன்னறைக்கு செல்ல யோசனையுடனே தன்னுடைய அறைக்கு வந்தாள் மிதிலா.

“என்னாச்சு ஜானு? ஏதோ யோசனையிலேயே இருக்க…” என அவளை தன் நெஞ்சில் சாய்த்தவாறே ரகுநந்தன் வினவ,

“நம்ம துகி, ஊர்மி விசயம் தான் ராம்… ஊர்மி வீட்டுல அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்களாம்” என்றாள் தன்னவனின் நெஞ்சத்தை மஞ்சமாக்கி.

“இப்போ வீட்டுல எப்படி சொல்றதுனு குழப்பமா…” என்றான் ரகுநந்தன். “ம்… ஆமா, அவங்க காதலிக்கிறாங்கனு சொன்னீங்க, சரி… எப்போ இருந்துனு சொல்லவே இல்ல? உங்களுக்கு நிச்சயம் பண்ணும் போதே அவங்களுக்குள்ள காதல் இருந்துச்சா?” என்றாள் மிதிலா.

“அப்போலாம் இல்ல ஜானு… எங்க நிச்சயம் நின்னதுக்கு அப்புறம் நான் நம்ம காதல ஊர்மிகிட்டயும் மச்சான்கிட்டயும் சொன்னேன்… அதுக்கு அப்புறம் ஊர்மி நார்மலாகிட்டா. ஆனா, நம்ம துகி அவ பீலிங்க்ல இருப்பானு நினைச்சு டாக்டரா அவளுக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுட்டான். அப்படியே ரெண்டு பேருக்குள்ளயும் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகி இப்போ லவ் பேர்ட்ஸ்ஸா சுத்துதுங்க” என்றான் ரகுநந்தன்.

“ஓ.கே… நானே வீட்டுல சம்மதம் வாங்கறேன்” என்க, “அவங்ககிட்ட அப்புறம் சம்மதம் வாங்கு ஜானு… இப்போ உன் ராமையும் கொஞ்சம் கவனி” என்க, தன் கணவனின் தீண்டலுக்கு ஒத்துழைத்தவள் அவனுள் கரையத் தொடங்கினாள் மிதிலா.

உறவுக்காரர் ஒருவரின் திருமணத்திற்கு சென்னை வந்திருந்தனர் ஊர்மிளாவின் பெற்றோரும், நித்திலவள்ளியும்.

இன்றும் தன் தாயைப் போலவே நித்திலவள்ளி மிதிலாவின் மேல் கோபத்தில் தான் இருந்தாள்.

திருமணம் முடிந்து ரகுநந்தனின் இல்லத்திற்கு வந்திருந்தனர். வந்தவர்களோடு பேசிக் கொண்டிருந்தார் அம்பிகா.

அப்பொழுது தான் ரகுநந்தனும் மிதிலாவும் தங்கள் அறையில் இருந்து கீழே வர, ஊர்மிளாவின் பெற்றோரைப் பார்த்து “வாங்க சித்தப்பா… வாங்க சித்தி” என்றவள், நித்திலவள்ளியைப் பார்த்து, “வாங்க அண்ணி… அண்ணா வரலயா?” என்றவள், தர்ஷினியை கை நீட்டி அழைக்க, அவளோ தன் அம்மாவிடமிருந்து இறங்கி அத்தையிடம் ஓடினாள்.

தங்கள் மகள் இருக்க வேண்டிய இடத்தில் மிதிலா இருக்க, அதனைக் கண்ட ஊர்மிளாவின் பெற்றோருக்கு சற்று வருத்தமாக தான் இருந்தது.

ஆனால், அவளோ அவர்களை சித்தப்பா, சித்தி என உறவுமுறை வைத்து கொண்டாட இருவரும் அவளைப் பார்த்தனர்.

“என்னடா இவ, இப்போ தான் முதல் தடவை பார்க்கிறா… சித்தப்பா, சித்தினு சொல்றாாளேனு நினைக்கிறீங்களா சித்தப்பா? கதிர் அண்ணா எனக்கு அண்ணானா அப்போ நீங்க எனக்கு சித்தப்பா தான…” என்றவள்,

“குடிக்க டீ, இல்ல காஃபி கொண்டு வரட்டுமா?” என அவள் உபசரிக்க, அவர்கள் “இல்ல மா, இப்போ தான் கல்யாண வீட்டுல சாப்பிட்டுட்டு வந்தோம்…” என மறுத்தனர்.

“அப்புறம் சித்தி, ஊர்மிக்கு மாப்பிள்ளை பார்க்குறீங்களாமே…” என கேசுவலாக வினவ,

தன் மனைவியின் அதிரடி கேள்வியில் ரகுநந்தனே கொஞ்சம் அதிர்ச்சியில் தான் இருந்தான்.

ஊர்மிளாவின் அன்னையோ, “என் மகளுக்கு முதல்ல பார்த்த மாப்பிள்ளை தான் அமையல… இப்போயாவது நல்ல மாப்பிள்ளையா அமையணும்னு அந்த ஆண்டவன் மேல பாரத்த போட்டுட்டு மாப்பிள்ளை பார்க்கிறோம்” என்றார்.

“அட என்ன சித்தி நீங்க? கைலயே வெண்ணைய வச்சுட்டு நெய்க்கு அலைவானேன்… என்னால ஊர்மி இந்த வீட்டு மருமகளாக முடியாம போச்சு, அதுனால என்ன அதான் எங்க வீட்டு கடைக்குட்டி என் கொழுந்தனாரு இருக்காரே… ஊர்மிளா இந்த வீட்டுக்கு மருமகளா வர்றதுல எனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்ல… அண்ணி உங்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இருக்கா?” என அவள் நித்திலவள்ளியை பார்த்து வினவ,

இதுநாள் வரை இந்த கோணத்தில் யோசித்திராதவள், ஆனால் எப்படியும் ஊர்மிளா தன் பிறந்த வீட்டு மருமகள் ஆனால் சந்தோசமே என்று இல்லை என தலையசைத்தாள்.

“அப்புறம் என்ன சித்தி யோசனை…. என் அத்தையும் இதுக்கு கண்டீப்பா சம்மதம் சொல்லுவாங்க, அப்புறம் பொண்ணுகிட்டயும் மாப்பிள்ளை கிட்டயும் சம்மதம் கேட்டுட்டா போச்சு” என்றவள், அப்பொழுது பணிக்கு கிளம்பிக் கொண்டிருந்த துகிலனை அழைத்தவள்,

“உனக்கு ஊர்மிய கல்யாணம் பண்ணிக்க சம்மதமா துகி?” என்றாள் மிதிலா.

அவளின் அதிரடி கேள்வியில் அவன் திருதிருவென முழித்தவன், பின் அவள் ஏதோ பிளான் பண்ணி விட்டாள் என்பதை உணர்ந்து, “ம்…” என தலையாட்டியவனுக்கு வெட்கம் வர, வராத ஃபோனை ஏற்று “ஹலோ… கேட்கலயா? டவர் சரியா இல்ல போல, ஒன்னும் கேட்கல” என அவன் நகர,

அதனைக் கண்ட ரகுநந்தனும் மிதிலாவும் சிரிக்க, இதுநாள் வரை இவர்கள் இருவரையும் இணைத்து யோசித்துப் பார்த்திராதவர்கள் இப்பொழுது முதன்முறையாக யோசிக்க ஆரம்பித்து இருந்தார்கள்.

மிதிலா பற்ற வைத்த நெருப்பு சரியாக வேலை செய்ய, துகிலனிடம் “இப்போ ஓ.கே வா துகி? எப்படி உங்க கல்யாணத்த அரேன்ஜ் மேரேஜ் மாதிரியே மாத்திட்டேன்” என இல்லாத காலரை தூக்கி விட,

“அய்யோ அண்ணி செம போங்க… உங்கள அடிச்சுக்க ஆளே இல்ல” என்றவன், “தேங்க்ஸ் அண்ணி… ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்” என துள்ளலாக சந்தோசத்துடன் ஓடியவனை புன்னகை முகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் மிதிலா. அவளை காதலுடன் நோக்கினான் அவளின் ராமன்.

30

காலையில் எழுந்ததிலிருந்தே நறுமுகை ஏதோ முணுமுணுத்துக் கொண்டே இருக்க, “ஏன் டி, காலைல எந்திரிச்சதுல இருந்து ஏதோ வாய்ல போட்டு மென்னுக்கிட்டே இருக்க?” என்றார் பூங்கோதை.

“எல்லாம் உன் சீமந்தப் புத்திரியால தான்… ச்சே, இவ இருந்தாலும் தொல்லை. இல்லைனாலும் தொல்லை” எனப் புலம்பிக் கொண்டிருக்க, அவள் அருகில் வந்த சுந்தரேசன் “என்ன டா முகி, அக்காவ காலைலயே அரைச்சுக்கிட்டு இருக்க?” என்றார்.

“உங்கள யாரு ப்பா அவளுக்கு ராமாயணம்லாம் சொல்லிக் குடுக்கச் சொன்னது. இப்போ ஃபோன் பண்ணா எப்ப பார்த்தாலும் ராமன் புராணம் தான் பாடறா… என் காதுல ரத்தம் வருது” என வராத ரத்தத்தை தன் காதிலிருந்து துடைத்தாள் நறுமுகை.

அவர் புன்னகைத்தப்படியே அவள் அருகில் அமர்ந்து, “எனக்கு கம்பரோட எழுத்துக்கள் ரொம்ப பிடிக்கும் முகி. அத உன் அக்காவுக்கும் சொல்லிக் கொடுத்தேன், ஆனா என் மக உண்மைலயே தனக்கான ராமன் வருவான்னு எதிர்ப்பார்த்து ராமனையே கல்யாணம் பண்ணிக்குவானு நான் நினைச்சே பார்க்கல…” என்றார் சுந்தரேசன்.

“ஆமா, நல்லா சொல்லி குடுத்தீங்க போங்க. புக்கு படிச்சா ரெண்டு நாள் அதுக்காக ஃபீல் பண்ணிட்டு போய்க்கிட்டே இருக்கணும். லூசுத் தனமான அதுல உள்ள கதாபாத்திரம் மாதிரியே தன்னோட நிஜ வாழ்க்கைலயும் வருவான்னு எதிர்பார்க்கிறது சுத்த மடத்தனம்” என அவள் புலம்ப,

“புத்தகம் ரொம்ப நல்ல விசயம் டா… அதுல உள்ள நன்மைகள எடுத்துக்கிட்டு தீமைகள ஒதுக்கிற மாதிரி எந்த கதாபாத்திரத்தையும் தன் வாழ்க்கையோட இணைக்க முற்படக் கூடாது. நம்ம மிதிலாவுக்கு ஒரு ராமன் கிடைச்ச மாதிரி இப்படி ஆசைப்படற எல்லாருக்கும் கிடைப்பாங்கனு எதிர்பார்க்கக் கூடாது… நம்ம முன்னோர்கள்ள இருந்து இப்போ உள்ள இளம் எழுத்தாளர்களோட கதைகள் வரைக்கும் ரசிச்சுப் படிக்கலாம். அந்த கதாபாத்திரத்தோட ஒன்றிப் போகலாம், ஆனால் அதே மாதிரி ஒரு கேரக்டர் நம்ம வாழ்க்கைல வருவாங்கனு எதிர்பார்க்க கூடாது… கற்பனைய கற்பனையா மட்டுமே எடுத்துக்கணும். அப்போ தான் நிதர்சனம் புரியும்” என காலம் கடந்து தான் புரிந்து கொண்டதைக் கூறினார் சுந்தரேசன்.

“இப்போ பத்து பக்கத்துக்கு அட்வைஸ் பண்ணுங்க ப்பா… ரகு மாம்ஸ் மட்டும் அவள தேடி வரலைனா இந்நேரம் உங்க பொண்ணு மனநல காப்பகத்துல இருப்பா… என் ராம்ம பார்த்தியா? என் ராம்ம பார்த்தியானு சுத்த வேண்டி இருக்கும்” என்றாள் நறுமுகை.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. அது எல்லா விசயங்களிலும் பொருந்தக் கூடியது. நம்மில் பலரும் புத்தகம் வாசிக்கும் போது அதனுள் ஒன்றி போய் விடுவோம். ஏன் சில நேரங்களில் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நம்மில் ஒருவராய் மாற்றுவோம். அது அந்த எழுத்தாளரின் கற்பனை வளத்தைப் பொறுத்தது. ஆனால், அந்த கதாபாத்திரத்தோடு நம் நிஜ வாழ்வையும் இணைத்துப் பார்த்தால் நம்மால் நிதர்சனத்தை உணர முடியாமல் கற்பனையின் பின்னே செல்ல வேண்டி வரும்.

தன்னுடைய ராமனுக்காக இந்த கலியுக ஜானகி காத்திருந்தாள். அவனும் வந்தான். ஆனால், நிஜ வாழ்வில்? எப்பொழுதும் இது கேள்விக்குறியே!

நறுமுகை தன் தந்தையை குற்றம் சாட்டியவள், தன் தாய் கொண்டு வந்து கொடுத்த காஃபியை அருந்தத் தொடங்கி இருந்தாள்.

அப்பொழுது அவளின் அலைப்பேசி ஒலிக்க, அதனை ஏற்று “என்ன ஜானகி மேடம், ரொம்ப பிசியோ… உங்கனால ஒரு ஃபோன் கூட பண்ண முடியாத அளவு பிசி இல்ல” என பொரிய,

“அடியேய் குண்டச்சி… என்ன டி காலைலயே பொங்குற? ஏன் பூங்கோதை ஏதாவது சொல்லிருச்சா?” என்றாள் மிதிலா.

“க்கும்… அப்படி சொல்ல விட்ருவேனா நான்… அதுசரி, ஏன் ஒரு வாரமா ஃபோன் பண்ணவே இல்ல?” என வினவினாள் நறுமுகை.

“என் மாமியார சமாளிக்கவே எனக்கு இருபத்தி நான்கு மணி நேரம் பத்த மாட்டேன்ங்கிது டி குண்டச்சி… இப்போ தான் கொஞ்சம் மலை இறங்கி வந்துருக்காங்க, இதுல அவங்க எப்போலாம் கண்ணாடி பார்க்குறாங்களோ அப்போலாம் என் மேல கோபம் தான் எகிறுது… நான் என்ன பண்ண?” எனப் புலம்பினாள் மிதிலா.

“என்ன மிது சொல்ற? கண்ணாடி பார்த்தா ஏன் உன்மேல கோபம் எகிறுது?” என்றாள் புரியாமல்.

“ஈஈஈ… சின்ன வயசுல கிட்டி எரிஞ்சதால வந்த காயத்தோட தழும்பு இன்னும் இருக்கே டி குண்டச்சி, அதப் பார்த்தா திரும்ப வேதாளம் முருங்கை மரம் ஏறிருது… நான் எத்தனை தடவை தான் விக்கிரமாதித்தன் போல மரம் ஏறி அந்த வேதாளத்த இறக்குறது. ஒரு வழி ஆகிட்டேன்” என அவள் புலம்ப,

“ஹா ஹா… ஹா… ஹா…” என வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்த நறுமுகை, “என்ன டி உன் மாமியார் இவ்ளோ சின்னப் புள்ளையா இருக்காங்க? சோ ஸேட்… நான் அவங்க இடத்துல இருந்தேன் மறுநாளே உன்னை வீட்ட விட்டு விரட்டி இருப்பேன்… உன் மாமியார் சரியில்ல” என்றாள் நறுமுகை.

“ஏன் டி, உனக்கு ரொம்ப ஷாப்ட்டான மாமியார் அமைஞ்சுட்டாங்கனு லொள்ளா…?” என்றாள் கடுப்புடன் மிதிலா.

“என் மாமியார் ரொம்ப ஷாப்ட்னு நீ சொல்லித் தான் நான் தெரிஞ்சுக்க வேண்டியதா இருக்கு” என நொந்து போய் பேச,

“ஏன் டி? இன்னுமா நீ உன் மென்டார் சார் கிட்ட பேசல?” என்றாள் மிதிலா.

“அடப்போடி… அந்த மனுஷன் ஃபோன் பண்றதே அபூர்வம், இதுல ஃபோன் பண்ணா இன்டர்னல் எக்சாம்ல எவ்ளோ மார்க்? அசைன்மெண்ட் கரெக்ட்டா சப்மிட் பண்ணியா? பிராக்டிக்கல் எப்படி பண்ண? இந்த மாதிரியான கேள்விகள் தான் வருது. அப்புறம் ரொம்ப நேரம் ஃபோன் பேசுனா எப்படி படிப்பனு வேற கேள்வி… இவரு என்னை லவ் பண்றாறா? இல்ல, இன்னும் என் மென்டாரா தான் இருக்காரானு டவுட்டாவே இருக்கு” என்க, இப்பொழுது சிரிப்பது மிதிலாவின் முறையாயிற்று.

“உன் மென்டார் சார் கரெக்ட்டான கேள்விய தான கேட்டு இருக்காரு… செம போ, நல்லா லவ் பண்ணுங்க” என்க,

“கடுப்பேத்தாத குட்டச்சி… நானே எப்போ டா இந்த டிகிரி முடியும்னு வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்” என்றாள் நறுமுகை.

“ஓ. கே டி குண்டச்சி, நீ போய் உன் மென்டார் சார் சொன்ன மாதிரி படி… நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணல, அப்புறம் நீ மார்க் கம்மி ஆகிட்டா பழி என்மேல தான் விழும்” என்றவள், அழைப்பைத் துண்டிக்க,

“எல்லாம் என் நேரம்…” என தலையில் அடித்துக் கொண்ட நறுமுகை கல்லூரி கிளம்ப தயாரானாள்.

அவள் பேசும் போது பூங்கோதை கிட்சனில் சமையலில் மூழ்கி இருக்க, சுந்தரேசன் வாக்கிங் சென்றிருந்தார். இன்னும் அவர்களுக்கு நறுமுகையின் காதல் விசயம் தெரியாது என்பதால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என பார்த்து விட்டு தான் தன் அக்காவிடம் சிரஞ்சீவியைப் பற்றி பேசினாள்.

வாரத்திற்கொரு முறை மட்டுமே. அதுவும் பதினைந்து நிமிடங்கள் மட்டும் தான் பேசுவான் சிரஞ்சீவி. அதில் பத்து நிமிடங்கள் அவளின் மதிப்பெண்களைப் பற்றி பேசவே சரியாக இருக்கும். அதன்பின் வேதியியல் பாடத்தில் உள்ள சந்தேகங்களைத் தீர்த்து வைப்பான்.

ஒருநாள் கடுப்பாகி, அவன் பேசும் போதே அழைப்பைத் துண்டித்து விட்டாள் நறுமுகை.

மீண்டும் அழைத்தவன், “என்மேல கோபமா பச்ச மிளகா?” என அவன் கொஞ்சலாய் வினவ, அடுத்த நொடி இவளின் கோபம் காற்றில் பறந்தது. அதனை தனக்கு சாதகமாக்கியவன் மீண்டும் பாடத்தைப் பற்றி பேச ஆரம்பித்தான்.

ஒருக்கட்டத்தில் இவளும் அதற்கு பழகி போய் இருந்தாள்.

துகிலன் – ஊர்மிளா ஜோடிக்கு அவர்கள் பெற்றோர்களே திருமண ஏற்பாடுகளைப் பற்றி பேச, அவர்களும் அவர்களுக்காக சம்மதம் தெரிவிப்பது போல் தங்கள் காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றனர்.

இதனால் நித்திலவள்ளியின் கோபம் குறைந்து மிதிலாவிடம் உறவு கொண்டாட ஆரம்பித்தாள். அம்பிகாவும் ஓரளவு மனம் மாறி இருந்தாலும், அதனை வெளிப்படுத்தாமல் அதே வீராப்போடு வலம் வர, அவரின் வீராப்பை கட்டுடைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாள் மிதிலா.

அதே நேரம், மிதிலா – ரகுநந்தனின் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரத் தொடங்கி இருந்தது.

இரண்டு வருடங்களுக்கு பின்…

சென்னை வேளச்சேரியில் அமைந்திருந்த அந்த பிரமாண்ட திருமண மண்டபம் மாவிலைத் தோரணங்கள், வாழை குலைகள் என அட்டகாசமாய் வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தது.

இன்று, கலியுக ஜானகியின் சீமந்த விழா. அவர்களின் திருமணத்திற்கு அனைவரையும் அழைக்க முடியாமல் போய் விட்டதால் அவளின் சீமந்தத்தை மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்திருந்தனர் இரு வீட்டினரும்.

சுந்தரேசனும் தன் பக்க உறவுகள் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

கேமிரா மேனின் கையில் இருந்த கேமிரா மண்டபத்தின் வாயிலிருந்து வீடியோ எடுக்க ஆரம்பித்தது.

அந்த மண்டபத்தின் உள்ளே நுழைவாயில் அழகாய் அலங்கரிக்கப்பட்டு இருக்க, ரோஜா பூக்களால் சீமந்த விழா என பொறிக்கப்பட்டு இருக்க, அதன் கீழே மிதிலா (ஜானகி) எனப் பொறிக்கப்பட்டு இருந்தது.

வரவேற்பு பகுதியில் சுந்தரேசன் – பூங்கோதை தம்பதியினரும், ராஜாராம் – அம்பிகா தம்பதியினரும் வந்த உறவுக்காரர்களை வரவேற்றுக் கொண்டிருந்தனர்.

உள்ளே செல்லச் செல்ல, விழாவிற்கு வந்திருந்தவர்களின் குட்டீஸ்கள் ஒன்றாக ஒரு பக்கம் விளையாடிக் கொண்டிருக்க, மேடையின் இருபக்கமும் உறவுக்காரர்கள் உட்கார்ந்திருந்தனர்.

மேடையில் சாமியானா விரிக்கப்பட்டு, வெற்றிலை பாக்கு, இனிப்பு வகைகள், பழங்கள் என தட்டு எண்ணிக்கை அடிப்படையில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது தான் மேடைக்கு அழைத்து வரப்பட்டாள் மிதிலா.

நிறைமாத கர்பிணியாய் மேடிட்ட வயிற்றை ஒரு கையால் பிடித்த வண்ணம், மெல்ல அன்னநடையிட்டு மேடைக்கு அழைத்து வரப் பட்டாள்.

அவளை கண் எடுக்காமல் ரசித்துக் கொண்டிருந்தான் அவளின் ராமன்.

அவள் மேடையில் அமர வைக்கப்பட, தன்னவளை அளவிட ஆரம்பித்தான் ரகுநந்தன்.

கார்குழல் கூந்தல் காற்றில் அசைந்தாட அதில் சூடி இருந்த மல்லிகைப் பூ வாசம் அவன் மனதை கொள்ளையிட்டது.

நேர் வகிடு எடுத்து அதில் நெற்றிச் சுட்டி பாந்தமாய் அவள் முன் நெற்றியை முத்தமிட, அதனை ஏக்கத்தோடு பார்த்தான் ரகுநந்தன்.

வகிட்டின் நடுவே குங்குமம் தங்கமாய் ஜொலிக்க, பிறைநிலவை ஒத்திருந்தது அவளின் நெற்றி. வானவில் போல் இயற்கையாய் வளைந்திருந்தது புருவம்.

மீன் விழிகள். இதனை என்னவென்று விளக்க! இவளின் கண்களைக் கண்டால் தான் இதற்கு இணையில்லை என்று குவளை மலர் நாணி நிலம் நோக்கும். அத்தகைய காந்த விழிகளின் சொந்தக்காரி.

கடைந்தெடுத்த ஆயன சிற்பி ஒருவனால் செதுக்கப்பட்டது போல் நாசி, அதன் கீழ் இரு பவளத்தை வைத்தார் போல் இதழ்கள்.

அந்த பவள இதழின் மேல் அவன் பார்வைப்பட தன்னவனின் பார்வையின் திக்கை அறிந்த அந்த பாவையவள், பல ஏகாந்த வேளைகளில் அவன் அந்த இதழை ருசி பார்த்தது நினைவிற்கு வர, ரூஜ் தடவாமலே அவளின் கன்னங்கள் இரண்டும் வெட்கக் கதுப்புக்களை பூசிக் கொண்டன.

தன்னவளின் நாணத்தை ரசித்தவாறே அவளை தன் விழிகளால் நிரப்பிக் கொண்டிருந்தான் ரகுநந்தன்.

அவனிற்கு தான் சளைத்தவனில்லை என நிரூபித்துக் கொண்டிருந்தான் துகிலன்.

இதழ்களில் புன்னகை உறைய, பட்டுப் புடவையில் வலம் வந்து கொண்டிருந்த தன் காதல் மனைவி ஊர்மிளாவை பின்தொடர்ந்து அலைந்துக் கொண்டிருந்தான்.

அவனை அழைத்த அம்பிகா, “டேய், உன் பொண்டாட்டி பின்னாடி சுத்தறத விட்டுட்டு போய் வந்தவங்கள வரவேற்க போ டா…” என அவனை விரட்டினார்.

மேடையில் அமர்ந்திருந்த தன் மருமகளிடம் சென்ற அம்பிகா “ஜூஸ் கொடுத்து விட்டேன், குடிச்சியா மிது?, திரும்ப கொண்டு வரச் சொல்லட்டுமா?” என அன்பாய் விசாரிக்க,

“அய்யோ அத்தை… உங்க மகனும் உங்களுக்கு போட்டியா ஜூஸ் குடுத்து விட்டு இப்போ ரெண்டு கிளாஸ்ஸ உங்க பேரப்பிள்ளை குடிச்சுட்டு உள்ள நிம்மதியா தூங்கறான்” என அவள் சிணுங்க,

“சரி ம்மா… மேடைல இருந்து கீழ இறங்கும் போதும் ஏறும் போதும் பார்த்து வா மா… இல்லனா, மூச்சு வாங்கும்” என அவள் கேசத்தை தடவி விட்டவர், வந்தவர்களை கவனிக்கச் செல்ல தன் அத்தையையே பார்த்துக் கொண்டிருந்தாள் மிதிலா.

அவர் விடா கண்டன் என்றால் இவள் கொடா கண்டியாக இருக்க, கடைசியில் அவரும் இவளிடம் சரணாகதி ஆகி விட்டார்.

தன் சம்பந்தியிடம் தானே சென்று அவரும் பேச, இப்பொழுது இரு குடும்பமும் ஒன்றாக மாறிப் போயின.

மண்டபத்தில் இருந்த அறையொன்றில், பட்டுப் புடவை ஒன்றோடு போராடிக் கொண்டிருந்தாள் நறுமுகை.

“இந்த அம்மா வேற எங்க போனாங்க… புடவைய தான் கட்டணும்னு சொல்லத் தெரியுது, அத கட்டி விடணும்னு இந்த பூங்கோதைக்கு கொஞ்சமாச்சும் தோணுச்சா…” என தன் அம்மாவை வறுத்தெடுத்துக் கொண்டிருக்க, அந்நேரம் கதவு தட்டப்பட்டது.

“அம்மாவா தான் இருக்கும்” என நினைத்தவாறே அவள் அப்படியே சென்று கதவைத் திறக்க, எதிரே இருந்தவன் அவளின் கோலத்தைக் கண்டு அதிர்ச்சியில் இருந்தான்.

பட்டுப் புடவையில் முந்தானை மடிப்பை மட்டும் கடினப்பட்டு எடுத்து அதனை தன் தோளின் மேல் போட்டு இருந்தவள் இடுப்பு மடிப்பை முயற்சி செய்து அது வராமல் போக, அதனை கலைத்து உருட்டி அதனை தன் மேல் பொம்மைக்கு சுற்றியது போல் நின்றிருந்தாள்.

எதிரே நின்றவனைக் கண்டு அவள் வேகமாக தான் நிற்கும் கோலம் உணர்ந்து கதவை சாற்ற செல்ல அவனோ அவளைத் தாண்டி உள்ளே வந்து கதவைச் சாற்றினான்.

“என்ன ஜீவா இது… முதல்ல வெளிய போங்க” என அவள் கூறியவாறே திரும்பி நிற்க,

“போயே ஆகணுமா…” என அவன் கிசுகிசுப்பான குரலில் கூற, அவனின் பார்வை திரும்பி இருந்த அவளின் முதுகை துளைபோட ஆரம்பித்தன.

“ப்ளீஸ்… வெளிய போங்க” என்றவள், தன் முன் பக்கத்தில் சரி செய்ய, “நான் பார்த்துட்டனே…” என்றவாறே அவன் அருகில் வர,

அவள் அதிர்ந்து விழித்து அப்படியே அவன் புறம் திரும்பினாள் நறுமுகை.

“அங்க பாரு” என அவளை பின்னிருந்து அணைத்து அவள் முன் இருந்த பெரிய கண்ணாடியை காட்ட, அவளோ அதனைக் கவனிக்காமல் விட்டதை நினைத்து அசடு வழிந்தாள்.

இதுநாள் வரை அவன் அவள் படிப்பில் கவனம் சிதறக் கூடாது என ஒதுங்கி இருக்க, இன்று தன்னவளை அதுவும் புடவையை பொம்மை போல் போர்த்திக் கொண்டு நின்றவளைக் கண்டு தன் விரதத்தை கைவிட்டு இருந்தான்.

அவனின் முதல் தீண்டலில் அவள் சொக்கித் தான் போனாள்.

அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்து, “புடவை கட்டத் தெரியாதா பச்ச மிளகா?” என்றான் கிசுகிசுப்பாக.

அவளோ, “தெரியாது” என தலையாட்ட, “அப்போ நான் கத்து தரட்டுமா…” என அவளுள் அவன் புதைய, அவளின் பெண்மை விழித்து “முதல்ல இங்க இருந்து வெளிய போங்க ஜீவா… யாராவது பார்த்தற போறாங்க” என அவள் சிணுங்கினாள்.

அவளின் சிணுங்கல் அவனுக்கு மேலும் மோகமூட்ட, “பார்த்தா பார்த்துட்டு போறாங்க… இனியும் உன்னை விட்டு பிரிஞ்சு இருக்க முடியாது” என்றவன்,

“வா… புடவையை கட்டி விடறேன்” என்றவன், அவளை தன் முன்பக்கம் திருப்பி அவள் இடுப்பில் இப்பவோ அப்பவோ என கீழே நழுவ தடுமாறிக் கொண்டிருந்த மடிப்பை உருவ,

அவனின் திடீர் செயலில் அவள் அதிர்ந்து, “நானே கட்டிக்குவேன் ஜீவா… ப்ளீஸ்” என அவள் கெஞ்ச,

அவனோ அதனை எல்லாம் கேட்கும் நிலையில் இல்லை.

அவளின் முந்தானை மடிப்பை சரிசெய்து, பின் குத்தி விட்டவன் அவளின் பிளவுஸ்ஸின் பின்பக்கமும் பின் குத்தி விட முயன்றவனின் கண்களுக்கு விருந்தாய் பிளவுஸ்ஸின் டிசைன்களுக்கு மத்தியில் அவளின் முதுகுப்புறம் தெரிய அதில் தன் இதழை ஒற்றி எடுத்தான்.

அதனால் ஏற்பட்ட கூச்சத்தில் அவள் நெளிய, அவனோ “நேரா நில்லு டி பச்ச மிளகா” என்றவன், அவளுக்கு புடவையை ஒருவழியாக கட்டிவிட்டு, அவளைப் பார்க்க அழகான பார்பி டால் போன்று நிற்பவளை புடவை கசங்காமல் அணைத்துக் கொண்டான்.

“நம்ம கல்யாணதுக்கு அப்புறமும் நானே புடவை கட்டி விடறேன், புடவை கட்ட கத்துக்க வேண்டாம்” என அவன் கிசுகிசுப்பான குரலில் கூற, அவனின் இந்த காதல் யுத்தத்தில் தோற்றும், அவனை வென்றும் காதலுடன் அணைத்துக் கொண்டாள் நறுமுகை.

“செமயா இருக்க டி பச்ச மிளகா…” என அவன் கிசுக்கிசுக்க, அவளின் இதழ்கள் மௌனம் என்ற மொழியை தத்தெடுத்தது அவனின் காதல் மொழியால்.

வார்த்தையாடி பார்த்த போது
காதல் வரவில்லை
காதல் வந்து சேர்ந்தபோது
வார்த்தை வரவில்லை

இவர்களின் காதல் லீலைகள் இங்கு தொடர, அங்கு மிதிலாவிற்கு சீமந்தம் தொடங்கியது. சுந்தரேசனுக்கும் பூங்கோதைக்கும் தன் மகள் தாய்மையின் பூரிப்புடன் அமர்ந்திருப்பதைக் கண்டு உள்ளம் நிறைந்தது.

இருவரும் ஒரு வழியாக அங்கு சென்று அவர்களோடு கலந்துக் கொண்டனர்.

முதன்முதலாக வளையல் தான் தான் போடுவேன் என ரகுநந்தன் கூறி இருந்ததால், அவனே தன்னவளின் மெல்லிய கரத்தைப் பற்றி வளையல் அணிவித்தான்.

சீதா சீமந்தம் இங்கும் அங்கும் வைபவங்களே
மாறா ஆனந்தம் நெஞ்சை அள்ளும் சம்பவங்களே

கோசலை தேசமே மகிழ்ந்து
கோகிலை ஆசையில் பல்லவி பாட
பொய்கையில் தாமரை எழுந்து
நாணமாய் தேவியின் பொன்முகம் காண

எழில் ஶ்ரீராமனின் பட்டத்து ராணி
சீதை முகம் சிவந்தாள்…

என்ற பாடல் வரி பிண்ணனியில் ஒலிக்க,

தன்னவளுக்கு வளையலை அணிவித்து அவளின் கரங்களில் தன் இதழை ஒற்றி எடுத்தான் அவளின் ராமன்.

சுற்றி இருந்த சொந்தங்கள் இந்த கலியுக ஜானகி – ராமனின் காதலை கண்டு சிரிக்க,

“என்னோட ஏழேழு ஜென்மத்துக்கும் என்னோட ஜானகியா நீ வேணும் ஜானு” என காதல் பொங்க கூறும் தன் ராமனைக் கண்டு அவள் கண்களால் பதில் சொன்னாள்,

“நான் என்றும் இந்த ராமனின் ஜானகி தான் என்று!”…

அவனோ, அதனை மறுதலித்து ” நான் என்றும் இந்த ஜானகி(யின்) ராமன் என்றான்.

அன்று ராமன் சீதாவின் சீமந்தத்தில் ஒன்றாக இருக்க முடியாமல் காலம் அவர்களை பிரித்து வைத்திருக்க, அதனை இந்த கலியுக ராமன் – ஜானகி ஜோடி நிறைவேற்றி வைத்திருக்க, தங்களின் சந்தோசங்களோடு பூ மழை பொழிந்தனர் தேவலோக தூதர்கள்.

அவர்களோடு நாமும் இந்த கலியுக ராமனையும், ஜானகியையும் வாழ்த்தி விடைபெறுவோம்.

                         _சுபம்_

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
19
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்