Loading

 

 

ஈர்ப்பு 19

 

ஒரு வாரம் சென்றது. பொடிக்கை சீரமைக்கும் பணி மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. அதன் இறுதி கட்டத்தையும் எட்டியிருந்தது. அடுத்த நாள் நடக்கவிருக்கும் திறப்பு விழாவிற்காக நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மறு பக்கம் சிறிது பதட்டமாகவே இருந்தது. 

 

என் வாழ்க்கையின் முக்கிய கட்டத்தை நோக்கி நான் அடியெடுத்து வைக்கும் முதல் படி இது. இதற்கான எதிர்வினை எப்படி இருக்கும் என்பது குறித்த படபடப்பும், சிறிது பயமும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. ‘என் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்குமா?’ – இந்த சிந்தனையே என்னை ஆட்டுவித்துக் கொண்டிருந்தது.

 

இதைப் புரிந்து கொண்ட அபியோ என்னை எப்போதும் சந்தோஷமான மனநிலையிலேயே வைத்திருந்தான். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது  பேச்சு என் பொடிக்கை நோக்கிச் சென்றால், நான் உற்சாகமாகி விடுவேன். என் பொடிக்கை பற்றிப் பேச எனக்கு நிறைய விஷயங்கள் இருந்தன. என் அப்பா கூட இப்போதெல்லாம் என் பேச்சை பொறுமையாக கேட்கிறார். இப்படியே அந்த வாரம் முழுக்க நான் குழப்பமான மனநிலையிலேயே இருந்தேன்.

 

அன்று தான், எங்கள் பொடிக்கை திறப்பு விழாவிற்காக தயார்படுத்தும் கடைசி நாள். எல்லாரும் அவரவர் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சாண்டி எங்கள் தோழிகளை திறப்பு விழாவிற்காக அழைத்துக் கொண்டிருந்தாள். நானோ திறப்பு விழா தள்ளுபடிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தேன்.

 

அப்போது ராகுல் பொடிக்கை கடந்து செல்வதைப் பார்த்தேன். இங்கு சீரமைப்புப் பணி ஆரம்பத்ததிலிருந்தே அவனை பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த வழியாக தான் அவன் வேலைக்கு செல்வான். ஆனால், ஒரு நாள் கூட திரும்பி பார்த்ததில்லை. ஒரு நீண்ட பெருமூச்சுடன் என் வேலையில் கவனத்தைத் திருப்பினேன்.

 

*****

 

அன்று இரவு எனக்கு தூக்கம் என்பது சிறிதும் இல்லை. அடுத்த நாள் நிகழ்விற்காக இப்போதே ஆவலுடன் காத்திருந்ததால், என்னால் தூங்க முடியவில்லை. நானும் என் கட்டிலில் உருண்டு பிரண்டு பார்த்தாலும் தூக்கம் வரவில்லை. சிறிது நேரம் பால்கனியில் உலவினேன். அப்போதும் தூக்கம் வராததால் முகநூலிற்குள் லாக் இன் செய்தேன்.

 

க்ரிஷிடம் இருந்து செய்தி வந்தது. அதில் ‘ஆல் தி பெஸ்ட் ஃபோர் தி மோஸ்ட் இம்போர்டன்ட் அக்கேஷன் ஆஃப் யுவர் லைஃப்’ என்ற செய்தியை அனுப்பியிருந்தான்.

 

அவனை ஏற்கனவே திறப்பு விழாவிற்கு அழைத்திருந்தேன். அது தான் நாங்கள் இருவரும் நேரில் சந்திப்பதற்கு சரியான தருணம் என்று கருதினேன். அவனோ ஆன்-சைட்டில் வேலை இருப்பதால் வர முடியாது என்று மறுத்து விட்டான்.

 

இதற்காக ஒரு வாரமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தோம். கடைசியில் என்னை சமாதானப்படுத்தியும் விட்டான். ஆன்-சைட் முடிந்ததும் வருவதாக என்னிடம் சத்தியம் செய்யாத குறையாக கூறினான்.

 

எங்கள் உரையாடல்களை நினைத்து சிரித்துக் கொண்டிருந்தேன். ஏனோ அவனிடம் மிகவும் நெருக்கமாக உணர்ந்தேன். அவனை நம்பி என் ரகசியங்களைக் கூட பகிரும் அளவிற்கான நெருக்கம்!

 

சில நேரங்களில், நேரில் பார்க்காத ஒருவனிடம் இவ்வளவு பேசியிருப்பது எனக்கே விசித்திரமாக தான் இருந்தது. எங்கள் இருவரின் அலைவரிசை ஒன்றாக இருப்பதால் எங்களுக்குள் இந்த நெருக்கம் தானாக ஏற்பட்டிருக்கலாம். ஆனால், ஏதோ ஒன்று அவனிடம் நான் நானாக இருக்க தூண்டியது. 

 

இரவு எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை. தூக்கம் கலைந்துமே கட்டிலில் படுத்திருப்பது தனி சுகம். அதைக் கண் மூடி ரசித்துக் கொண்டிருக்கும்போது தான் அன்றைய நாளின் முக்கியத்துவம் எனக்கு நினைவிற்கு வந்தது.

 

‘இப்போ மட்டும் அம்மா நான் இப்படி கட்டில்ல படுத்து விட்டத்தை பார்த்திட்டு இருக்கிறதை பார்த்தாங்க, அவ்ளோ தான்!’ என்று என் அம்மாவின் திட்டிற்கு பயந்தே எழுந்தேன்.

 

நேரம் ஏழரை மணி. ஒன்பது மணிக்கு திறப்பு விழா என்பதால் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தேன்.

 

“இன்னும் கிளம்பலையா நீ. உன் கடைக்கு நீயே லேட்டா போவீயா? என்ன பொண்ணோ! கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல.” என்று நான் எதிர்பார்த்தபடியே என் அம்மா திட்டத் துவங்கினார்.

 

“எத்தனை முறை சொல்றது, அதுக்கு பேரு பொடிக்!” என்று அந்த களேபரத்திலும் அவரை திருத்த முயன்றேன்.

 

என் அம்மாவோ என் தலையில் கொட்டி, “ஃபர்ஸ்ட் போய் கிளம்பு டி. இன்னைக்காவது அழகா ஒரு சேலைய கட்டு.” என்றார்.

 

அப்போது அபி அங்கிருப்பது கண்ணில் பட்டது. வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்ற அம்மாவிடம், ”விடு ம்மா, உனக்கு பிடிச்ச மாதிரி சேலை கட்டி, நீ பூ கொடுத்தா மறுக்காம வச்சுக்குற மருமகளா அபிக்கு பார்த்துடலாம். அப்படி தான ப்ரோ?” என்றேன் அவனை பார்த்து கண்ணடித்துக் கொண்டே.

 

“அ…அத…க்கும், அதெல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம். முதல்ல நீ போய் கிளம்பு.” என்று கூறிவிட்டு அவன் அவசரமாக வெளியே சென்றான்.

 

“என்ன ம்மா உன் புள்ள என்னை போய் கிளம்ப சொல்லிட்டு அவன் வெளிய கிளம்பி போய்ட்டான்.” என்று வம்பு வளர்க்க, அவரோ என் காதை திருகி, “ஹே ஒழுங்கா சொல்லு டி, யாரு அந்த பொண்ணு? உங்க அண்ணனுக்கு தெரியுமா. அவனுக்கும் பிடிச்சுருக்கா?” என்று என்னைப் பேச விடாமல் தொடர்ந்து கேள்வி கேட்டார்.

 

“ப்ச்ச், ஒவ்வொரு கேள்வியா கேளு ம்மா. இப்போ பாரு ஃபர்ஸ்ட் என்ன கேட்டன்னே மறந்துருச்சு.” என்று சமாளித்தவாறே அங்கிருந்து செல்ல முயன்றேன்.

 

“அடியேய் நில்லு டி, யாரு அந்த பொண்ணுனாவது சொல்லிட்டு போ டி.” என்று அவர் கத்த, “அதான் சொன்னேன்ல உங்களுக்கு பிடிச்ச மாதிரி சேலை கட்டி பூ வச்சுக்குற பொண்ணு.” என்று கண்ணடித்துவிட்டு சென்றேன். 

 

என் அறைக்கு சென்ற நான் எதை உடுத்துவது என்று யோசித்துக் கொண்டிருக்கையில், என் பார்வை அலமாரியிலிருந்த தேன் கலர் டிசைனர் சேலையில் விழுந்தது. அதற்கேற்றவாறு காதணிகளைத் தேர்ந்தெடுத்து அணிந்துக் கொண்டேன்.

 

அடுத்த இருபதாவது நிமிடத்தில் காஜலை சரி செய்து கொண்டிருந்தபோது சாண்டியின் குரலைக் கேட்டேன். ஒரு முறை என்னையே கண்ணாடியில் சரி பார்த்துக் கொண்டு இறுதிக்கட்ட வேலைகளை பார்க்க கிளம்பினேன்.

 

பொடிக்கிற்கு சென்று அங்கு தொங்கிய பெயர்ப் பலகையைப் பார்த்ததும் சிறிது கர்வமாக இருந்தது. ‘NaVya Boutiques’ எங்களின் முதல் கனவு நனவாகப் போகிறது என்ற மகிழ்ச்சி எங்கள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

 

விட்டால் அங்கேயே நின்று விடுவேன் என்று சாண்டி என்னை உள்ளே கையோடு கூட்டிச் சென்றாள். இன்றைய நாளின் ‘சீஃப் கெஸ்ட்’டாக தாமோ அங்கிளை தான் அழைத்திருந்தோம். இன்னும் லோன் கையில் கிடைக்காத நேரத்தில் அவரின் உதவியாலேயே எங்கள் பொடிக்கின் திறப்பு விழா  இன்று நடக்கவிருக்கிறது. அதனாலேயே நானும் அபியும் வற்புறுத்தி அவரை அழைத்திருந்தோம்.

 

முதலில் அவர் ‘சீஃப் கெஸ்ட்’டாக வர மறுத்தும் என் அப்பாவே அவரை அழைத்தார். எங்களுக்கே அவர் அழைத்தது ஆச்சரியமே. இறுதியாகத் தான் தாமோ அங்கிள் சம்மதித்தார்.   

 

மற்றவர்களை அழைக்கும் பணியை சாண்டியும் அபியும் பார்த்துக் கொண்டனர். நான் பொடிக்கின் இன்டீரியரை சரி பார்த்துக் கொண்டிருந்தேன். 

 

ஒரு நாள் சாண்டி என்னை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள். ஏனெனில், அன்று அவர்கள் அழைக்கச் செல்வது ராகுலை. அதனால் வேண்டுமென்றே என்னை கடுப்பேற்றிக் கொண்டிருந்தாள்.

 

“இன்னைக்கு வேணா அபி அண்ணா கூட நீ போறியா?” என்றாள் சாண்டி கண்ணடித்துக் கொண்டே.

 

“ஒன்னும் வேணாம். நீயே போ.” என்று நான் கூற, “அட லூசு இந்த மாதிரி சிசுவேஷனை யூஸ் பண்ணி உன் லவ்வை எக்ஸ்பிரஸ்  பண்றதை விட்டு இப்படியே இருக்க போறியா? நீயெல்லாம் கடைசி வரைக்கும் லவ்வை சொல்லவே மாட்ட டி!” என்று சலித்துக் கொண்டே அவள் சென்றது இப்பொழுது என் நினைவிற்கு வந்தது.

 

லேசாக சிரித்துக் கொண்டேன். அதைக் கண்ட சாண்டி, “என்ன டி ஏதோ கனவுல இருக்கீங்க போல மேடம்! என்ன ரொமான்ஸ் பண்றதுன்னு யோசிச்சுட்டு இருக்கீயா?” என்றாள்.

 

“இல்ல டி உன்னை பத்தி தான் யோசிச்சுட்டு இருந்தேன்.” என்று நான் சமாளிக்க, “என்னாது என்னை பத்தி யோசிச்சியா? உஃப், நீயெல்லாம் லவ்வுக்கு சரி பட்டு வர மாட்ட டி!” என்று அவள் கூற, “அடிங்…” அவளை அடிக்க துரத்தினேன்.

 

 

*****

 

பொடிக்கினுள் அனைத்தையும் சரி பார்த்து விட்டு, வாசலில் ரிப்பனை கட்டிக் கொண்டிருக்கும்போது அபி வந்து விட்டான். வீட்டில் அவனைக் கிண்டல் செய்தபோது பார்த்தது. அதன் பின்பு இப்போது தான் காண்பதால், அவனைப் பார்த்து சிரித்தேன். அவனும் புரிந்து கொண்டு என் தலையில் லேசாக கொட்டினான்.

 

“ஹலோ அண்ணனும் தங்கச்சியும் என்ன எனக்கு தெரியாம கண்ணுலேயே சீக்ரெட் பேசிக்குறிங்க?” என்று சாண்டி வினவ, “அதான் சீக்ரெட்ன்னு சொல்லிட்டியே சந்தி. அப்பறம் எப்படி உன் கிட்ட சொல்ல முடியும்?” என்று கூறியபடி அபிக்கு ஹை-ஃபை கொடுத்தேன்.

 

“உங்க அண்ணன் – தங்கச்சி அட்ராசிட்டிஸ் தாங்க முடியல. இதுக்காகவே ஒரு அண்ணனை தத்தெடுக்கப் போறேன் டி.” என்று அவள் புலம்பினாள்.

 

இப்படியே நாங்கள் பேசிக் கொண்டிருக்க, என் முதுகில் ஏற்பட்ட எரிச்சலில், “ஆ… அம்மா!” என்றபடி திரும்பிப் பார்த்தால், அங்கு ப்ரியா க்ரீன் கலர் டிசைனர் சேலையில் அழகாக இருந்தாள்.

 

“ஏன் டி இப்படி அடிச்ச?” என்று நான் பாவமாக வினவ, “ஹான், நான் வந்து ஐஞ்சு நிமிஷம் ஆச்சு. ஆனா என்னை கண்டுக்காம கூத்தடிச்சுட்டு இருக்கீங்க!” என்ற பதிலை என்னிடம் சொன்னாலும் பார்வையோ என்னை தாண்டிச் சென்றது.

 

‘என்னது இது லுக் வேற எங்கேயோ இருக்கு? அட நம்ம அபி ப்ரோ! கண்டுக்கலன்னு சொன்னதெல்லாம் அபியவா?’ என்று நினைத்தேன்.

 

“அது ஒன்னும் இல்ல டி அண்ணி…” என்றவாறே ஓரக்கண்ணில் அபியின் அதிர்ச்சியை பார்த்துக் கொண்டே,  “நீ பின்னாடி இருந்து வந்ததால ஃபோகஸ்ல இல்லாம போய்ட்ட. அதுக்குத் தான் எப்பவும் முன்னாடி இருக்கணும்.” என்று கூறியவாறே அவளை எனக்கு முன்பக்கம் அபியோடு சேர்ந்தவாறு நிற்க வைத்தேன்.

 

அவர்கள் இருவரும் முழிக்க, “இப்போ பாரு ஃபோகஸ் கரெக்டா இருக்குதா?” என்று கேட்டவாறே பின்னால் நகர்ந்து சென்றேன்.

 

அவர்கள் இனிய அதிர்ச்சியிலிருந்து இன்னும் வெளிவராததை உணர்ந்து அவர்களை நிகழ்விற்கு அழைத்து வரச்சென்ற சாண்டியை கைப்பிடித்து தடுத்து அவர்களை இந்த போஸில் புகைப்படம் எடுக்க விழைந்தேன். அவர்களை ஃபுல் ஃபோகஸில் புகைப்படம் எடுக்க பின்னாடி நகர்ந்தபோது, வாசற்படியை கவனிக்காமல் கீழே விழச் சென்றேன்.

 

‘அச்சோ சேரில வேற இருக்கேனே! பொடிக் வாசல்ல விழுந்தா மானமே போய்டுமே. கடவுளே காப்பாத்து.’ என்று மனதிற்குள் நான் அலற, அதை கடவுள் கேட்டு விட்டார் போலும்.

 

‘என்ன இன்னும் விழுகல? ஒருவேளை கடவுளுக்கு நம்ம ப்ரேயர் கேட்டு நம்மள காப்பாத்திட்டாரோ!’ என்று எண்ணியவாறே கண்களை திறந்து பார்த்தேன்.

 

கண்களை திறந்ததும் ராகுலே தெரிந்தான். அவன் எப்போதும் போல் களையான முகத்தோடும், எப்போதும் இல்லாத வகையில் இதழ் விரிந்த சிரிப்போடும் என்னைப் பார்த்துக் கொண்டிருக்க, என் கண்களோ அவன் முகத்தை விட்டு அகல மறுத்தன.

 

ஒரு நொடியாயினும் அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். சாண்டியின் சத்தத்தில் நிகழ்விற்கு வந்த நான், அப்போது தான் அவன் கைகளில் இருப்பதைக் கவனித்து உடனே விலகினேன்.

 

‘ஐயோ, இன்னிக்கும் நான் விழுகுறப்போ இவன் தான் பிடிக்கணுமா?’ என்று நான் செல்லமாக சலித்துக் கொள்ள, ‘என்னமோ அவன் உன்ன தாங்கிப் பிடிச்சது உனக்கு பிடிக்காத மாதிரியே சீன் போடுற!’ என்று என் மனசாட்சி கிண்டல் செய்யவும் வெட்கத்தில் கன்னங்கள் சிவந்தன.

 

“என்ன டி ரொமான்ஸா?” என்று என் காதருகில் கேட்ட குரலில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தால் அங்கு சாண்டி புசுபுசுவென கோப மூச்சுக்கள் விட்டுக் கொண்டிருந்தாள்.

 

‘ஐயோ, இவள வேற சமாளிக்கணுமே!’ என்று எண்ணிய நான், “ஹே என்ன டி ரோஸ் பவுடர் நிறையா போட்டுட்டியா, இவ்ளோ ரெட்டா இருக்கு?” என்று பேச்சை மாற்ற முயன்றேன்.

 

“வேண்டாம், ஏற்கனவே காண்டா இருக்கேன். நீ வேற வான்டட்டா வந்து வாங்கிக் கட்டிக்காத.” என்று எச்சரித்தாள் சாண்டி.

 

“ஏன் டி இவ்ளோ கோபமா இருக்க?” என்று தெரியாதவாறே கேட்டேன்.

 

“ஓஹ், உனக்கு ஏன்னு தெரியாதுல.” என்று அவள் என்னை பார்த்து கண்களை உருட்ட, சமாளிக்க முடியாமல் இளித்து வைத்தேன்.

 

“என்ன டி இளிக்குற? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஜொள்ளு விட்டுட்டு இருந்தியே.” என்று சாண்டி கூற, அப்போது தான் ஞாபகம் வந்தவளாக ராகுலை தேடினேன். அவன் சிறிது தூரத்தில் அபியுடன் பேசிக் கொண்டிருந்தான்.

 

அவனின் ப்ளாக் ஸ்லிம் ஃபிட் ப்ளேசரும் க்ரே ஜீன்ஸும் அவனை அழகாக காட்டியது. அவன் ப்ளேசரின் ஃபுல் ஹாண்டை கை முட்டியளவு மடித்து விட்டிருந்த விதத்திலும், அவனின் அர்மானி கூலர்ஸை சட்டையில் மாட்டியிருந்த விதத்திலும் ஈர்க்கப்பட்டு உண்மையிலேயே அவனை கண்டு ஜொள்ளியது மனம்.

 

“அடியேய் என்ன சொல்லிட்டு இருக்கேன், நீ என்ன பண்ணிட்டு இருக்க?” என்று சாண்டி என்னை உலுக்க, ‘இவ ஒருத்தி, பார்க்க கூட விட மாட்டிங்குறா!’ என்று மனதில் புலம்பியபடி, “என்ன டி சொன்ன?” என்று கேட்டேன்.

 

“ஓஹ், மேடம் வெட்கப் படுறீங்களோ! இங்க பாரு நீ என்ன வேணா பண்ணித் தொலை, ஆனா தயவு செஞ்சு வெட்கப்பட மட்டும் செஞ்சுடாத டி. பார்க்க சகிக்கல.” என்று அவள் கூற, “சீ பே, ஒரு நாள் இப்படி நீயும் என்னை விட ரெட்டிஷ்ஷா நிப்ப. அப்போ உன்னை பார்த்துக்குறேன் டி.” என்று இன்ஸ்டன்ட் சபதம் போட்டேன்.

 

“ஆத்தி, அண்ணனும் தங்கச்சியும் விடுற ஜொள்ளுலேயே இங்க வெள்ளம் வர அளவுக்கு போயிடுச்சு. இதுல இன்னொரு ரொமான்ஸ் சீன்னா! நாடு தாங்காது மா.” என்று அவள் மேலும் கேலி செய்ய, “அது என்னமோ உண்மை தான்! உன் ரொமான்ஸ் எல்லாம் பார்த்தா நாடு தாங்காது தான்.” என்று நானும் ஐக்கியமானேன்.

 

“போடி!” என்று அவள் சிறிது கோபத்துடன் கூற, “ஹான், இப்படி சொன்னா போயிட போறேன்.” என்றவாறே அவள் கேள்விகளிலிருந்து தப்பிக்கப் பார்த்தேன்.

 

“உடனே ஓடாத, இங்க என்ன நடக்குதுன்னு சொல்லிட்டு போ.” என்று மீண்டும் சாண்டி என்னை வளைத்து பிடிக்க, “ஹே பொடிக் ஓப்பனிங் வச்சுட்டு உனக்கு இப்போ கதை கேட்கணுமா?”  தீவிரமாக பேசுவதை போல நடித்தேன்.

 

“ஓஹ், அப்போ மேடம் மட்டும் பொடிக் ஓப்பனிங் அன்னிக்கு வாசல்ல ரொமான்ஸ் பண்ணலாம். நாங்க கதை கேட்டா மட்டும் தப்பா?” என்று சரியாக பாயின்ட்டை பிடித்தாள்.

 

“இப்போ லேட்டாச்சு டி, அப்பறம் சொல்றேனே.” என்று நான் ஓட பார்க்க, “ஃபைவ் மினிட்ஸ்ல சொல்லிட்டு போய் வேலைய பாரு டி.” என்று கதை கேட்பதிலேயே குறியாக இருந்தாள்.

 

‘ஐயோ, சொல்லாம விட மாட்டா போலயே!’ என்று புலம்பியபடி கூற ஆரம்பித்தேன்.

 

“அது தான் ஏற்கனவே உனக்கு தெரியுமே…” என்று தலையை குனிந்தவாறே நான் கூற என் கன்னத்தைப் பிடித்து முகத்தை தூக்கி, வாசலைக் காட்டி, “இங்க நடந்ததை கேட்கல.” என்று கூறிவிட்டு, என் முகத்தை திருப்பி அபியும் ப்ரியாவும் நின்ற இடத்தை காட்டி, “இங்க நடந்ததை கேட்டேன்.” என்றாள்.

 

“ஓஹ், அபி – ப்ரியா லவ் மேட்டரா? அதை நீ அபி கிட்ட கேட்டுக்கோ.” என்றவாறே நான் கிளம்ப எத்தனிக்க, “ஒழுங்கு மரியாதையா பதில் சொல்லிட்டு போடி.” என்று என்னை நிறுத்தி வைத்தாள் சாண்டி.

 

‘இதுக்கு மேல சொல்லாம இருக்க முடியாது.’ என்று நினைத்தவாறே அனைத்தையும் கூறினேன்.

 

“அடிப்பாவி, இவ்ளோ நடந்துருக்கு என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லல!” என்று சாண்டி வாயை பிளக்க, “இந்தா வரான்ல உங்க அபி அண்ணா அவன்கிட்டயே கேளு.” என்று அங்கு வந்து கொண்டிருந்த அபியை நோக்கி கை காட்டினேன்.

 

“ஹே, எல்லாரும் வந்துட்டு இருக்காங்க. நீங்க ரெண்டு பேரும் இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று கேட்டவாறே வந்தான் அபி.

 

‘ஆஹா, ஆடு தான வந்து சிக்குதே. நதி மா இன்னிக்கு உனக்கு ஒரு என்டர்டைன்மெண்ட் காத்திட்டு இருக்கு!’ என்று குதூகலித்துக் கொண்டேன்.

 

எங்கள் இருவரின் முகத்தை கண்டவன், “ஹே சந்தி நீயென்ன புதுசா பார்க்குற மாதிரி பாத்துட்டு இருக்க!” என்றான் அபி.

 

“இப்போலாம் புதுசா தான் நடக்குது!” என்று ஒருமாதிரி குரலில் சாண்டி கூற, அபியோ என்னை குழப்பமாகப் பார்க்க, நான் எதுவும் தெரியாது என்று உதட்டைப் பிதுக்கினேன்.

 

“சாண்டி, நீ எதை சொல்றன்னே எனக்கு புரியல.” என்று அபி விழிக்க, “ஹ்ம்ம், கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு ரொமான்ஸ் சீன் நடந்துச்சுல, அதை தான் சொல்றேன்!” என்றாள் அவளும் சலிக்காமல்.

 

‘சபாஷ் சரியான போட்டி!’ என்று கவுண்டர் கொடுத்தவாறே அந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்தேன்.

 

“அது… அது.. க்கும், இந்த லூசு உங்கிட்ட ஏதாவது உளருச்சா?” என்று வினவினான் என்னை காட்டியவாறே.

 

‘ம்ம்ம், இப்போ என் டர்ன்!’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்ட நான், “நான் ஒன்னும் சொல்லல. அதெல்லாம் கண்ணை திறந்து பார்த்தா எல்லாருக்கும் தெரியும்!” என்றேன்

 

“லூசு மாதிரி பேசாம  வாங்க, நேரமாச்சு எல்லாரும் வந்துட்டாங்க.” என்றான்.

 

“அபி நீ ஏன் இப்படி சமாளிக்கவே பார்க்குற? அவளை அவாய்ட் பண்ண ட்ரை பண்ற. அதுக்கான உண்மையான ரீசன் தான் என்ன?” என்று அங்கு வந்து கொண்டிருந்த ப்ரியாவை பார்த்துக் கொண்டே இந்த கேள்வியை அபியிடம் கேட்டேன்.

 

அபி என்னை நோக்கி திரும்பியிருந்ததால் அவன் ப்ரியாவை கவனிக்கவில்லை. அவன் சொல்லப் போகும் பதிலை அவளும் அறிய வேண்டும் என்றே அவள் இருக்கும்போது கேட்டேன்.

 

ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு, “இதை நான் ஏற்கனவே அவகிட்ட சொல்லிட்டேன். அவளும் உன்கிட்ட சொல்லியிருப்பா. அப்பறம் எதுக்கு திரும்ப கேட்குற?” என்றான்.

 

“நீ சொன்னது வேலிட் ரீசன் இல்ல. அதான் திரும்ப கேட்குறேன்.” என்றேன் நான் விடாமல்.

 

அவன் ஏதோ சொல்ல வரும்போது எங்களுக்கு பின்னால் இருந்து வந்த “ஹாய்” என்ற குரலில், ‘யாரு டா அந்த கரடி?’ என்று நினைத்தவாறே திரும்பினேன்.

 

அங்கு அவனின் வழக்கமான புன்சிரிப்புடன் நின்றிருந்தான் ஆனந்த். அவனை பார்த்து நான் முறைக்க, “ராங் டைம்ல என்ட்ரி கொடுத்துட்டேனோ! ஹே ப்ரியா, நீ ஏன் அங்க ஒளிஞ்சு நிக்குற?” என்று அவன் கேட்டதும் நான் வெளிப்படையாகவே தலையில் அடித்தேன்.

 

“ஓஹ், இதுவும் சீக்ரெட்டா? சாரி!” என்றான் இளித்துக் கொண்டே.

 

அபி என்னை முறைத்துக் கொண்டே, “வாங்க ப்ரோ அங்க போகலாம்.” என்று ஆனந்தை அழைத்துச் சென்றான்.

 

தாமோ அங்கிளும் வந்துவிட நாங்களும் திறப்பு விழாவினை கவனிக்கச் சென்றோம்.

 

ஈர்ப்பான்(ள்)…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
17
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்