Loading

நிறம் 12

 

வர்ஷினி கேள்விகளால் அகிலை திணறடிக்க, அதை சமாளிக்க முடியாமல், “போதும் போதும், உனக்கென்ன பதில் தான வேணும்? சொல்லிடுறேன்.” என்றான்.

 

‘ஹப்பா, ஒருவழியா சொல்றேன்னு சொல்லிட்டான். இவனுங்க கிட்டயிருந்து விஷயத்தை வாங்குறதுக்குள்ள எப்பா!’ என்று சலித்துக் கொண்ட வர்ஷினியோ, வெளியே விறைப்பாக காட்டிக்கொண்டாள்.

 

“விக்ரம் பத்தின கேஸ் ரொம்ப நாளா எவிடன்ஸே கிடைக்காம நிலுவைல இருந்துச்சு. அதுவும், நீ வேலை செஞ்சியே அந்த கம்பெனில தான் அவனோட இல்லீகல் பிசினஸ் பத்தின எவிடென்ஸ் இருக்குறதாவும், அங்க தான் பிசினஸ் மீட்டிங்ஸ் நடக்குறதாவும் எங்களுக்கு தகவல் கிடைச்சுது. எப்படியாவது அந்த எவிடன்ஸை கைப்பற்றிடனும்னு தான் நானே அவங்ககிட்ட மாட்டிக்கிற மாதிரி சூழ்நிலை உண்டாக்கி, வேற வழியில்லாம அவங்களுக்கு ஹெல்ப் பண்ற மாதிரி நடிச்சேன். ஆனாலும், என்னால அந்த விக்ரமையும் அவன் கம்பெனில நடக்குறதையும் க்ளோஸா வாட்ச் பண்ண முடியல. அப்போ தான் அவன் கம்பெனிக்கு சூப்பர்வைசர் மாதிரியான வேலைக்கு ஆள் எடுக்குறதா சொன்னாங்க. சோ, எங்களுக்கு தேவையான தகவல்கள் சேகரிக்க அந்த சூப்பர்வைசர் தான் கரெக்ட்னு தோணுச்சு. எங்களுக்கு தெரிஞ்ச ஆளா இருந்தா, அவன்கிட்ட மாட்டிப்பாங்களோன்னு சந்தேகமா இருந்துச்சு. அதனால எங்க மிஷனே பாழாகலாம். அதான் யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி, ஏன் அந்த பெர்சனுக்கே தான் இந்த வேலையை செய்யப் போறோம்னு தெரியாத மாதிரி இருக்கணும்னு பிளான் பண்ணோம். அதுல சிக்குனது தான் நீ.” என்றதும் அவனை முறைத்தாள் வர்ஷினி.

 

“முறைக்காத மா. உன்னை அவங்க தான் செலக்ட் பண்ணாங்க. நாங்க உன் ஐடென்டிட்டி மட்டும் யூஸ் பண்ணிக்கிட்டோம்.” என்று அவன் கூறியதும், “ஐடென்டிட்டியா?” என்று யோசித்தவளின் சிந்தனையை கலைத்தவன், “ஆமா, உன் ஐடி கார்ட்ல ஸ்பை கேமரா ஃபிக்ஸ் பண்ணி அங்க நடக்குறத நாங்க கவனிக்க ஆரம்பிச்சோம்.” என்று கூறியபோது வர்ஷினிக்கு முதன்முதலில் அகிலை சந்தித்த காட்சி மனதில் படமாக விரிந்தது.

 

*****

 

பிடிக்காத வேலை என்றாலும், படித்து முடித்த பின்னர் தன் சொந்த காலில் நிற்கப்போகும் சந்தோஷத்துடனே முதல் நாள் வேலைக்கு வந்த வர்ஷினி, அங்கிருப்போர் காட்டிய அலட்சியத்தில் வாடித் தான் போனாள்.

 

சூப்பர்வைசர் என்பதால், பேசுவதற்கு நண்பர்கள் இன்றி தனித்து விடப்பட்டாள். அதுமட்டுமின்றி அங்கு பணிபுரிவோரும் ஒருவருக்கொருவர் தேவையற்ற பேச்சுவார்த்தைகள் வைத்துக் கொள்வதில்லை.

 

முதல் நாளே இதையெல்லாம் கவனித்தவள், பாதையில் கவனம் பதிக்காமல் நடந்ததால் எதிரே வந்தவருடன் இடித்துக் கொள்ள, அவளுக்கென்று புதிதாக வழங்கப்பட்ட அடையாள அட்டை கீழே விழுந்தது.

 

இந்த இடத்தில் எப்படி வேலை செய்யப் போகிறோமோ என்ற சிந்தனையிலேயே திரிந்தவளை, இந்த சாதாரண சம்பவம் கூட திகைப்பில் ஆழ்த்த, நின்ற இடத்திலேயே சிலையென நின்றாள்.

 

அவளின் நிலையைக் கண்டு கொண்டவனைப் போல, “ஹே ரிலாக்ஸ். சாரி, ஏதோ யோசனையில கவனிக்காம வந்துட்டேன்.” என்று அவனே ஆரம்பிக்க, ‘என்ன நம்ம சொல்ல வேண்டியதை அவரே சொல்றாரு.’ என்று குழம்பினாள் வர்ஷினி.

 

தான் கூறியதற்கு எந்த “ஹலோ, இன்னும் ஷாக்ல இருந்து வெளியே வரலையா?” என்று அவள் முகத்தின் முன்னே கையை ஆட்டினான்.

 

“சாரி, நான் தான் பார்க்காம வந்தேன்.” என்று அதற்கு மேலும் அமைதியாக இருக்க முடியாமல் கூறினாள்.

 

“இட்ஸ் ஓகே. நியூ ஜாயினியா? இதுக்கு முன்னாடி இங்க பார்த்ததே இல்ல.” என்று அவன் வினவியதும், “ஆமா, இன்னைக்கு தான் ஜாயின் பண்ணேன்.” என்று பவ்யமாக பதிலளித்தாள். பார்க்க சீனியர் போலிருந்ததால் வந்த மரியாதை!

 

“ஓஹ், பேரென்ன?” என்று அவன் மேலும் கேள்விகளை அடுக்க, “வர்ஷினி.” என்றாள் மென்குரலில்.

 

“ஐ’ம் அகில்.” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவன், “என்ன போஸ்ட்?” என்று வினவினான்.

 

இதுவே வேறு சூழலாக இருந்திருந்தால், ‘இப்போ எதுக்கு இன்டெர்வியூ எடுக்குற மாதிரி இத்தனை கொஸ்டின்ஸ்?’ என்று அலுத்துக் கொண்டு இருந்திருப்பாள். ஆனால், பேச்சு துணைக்கு ஆளில்லாமல் இருந்தவளிற்கு அவன் ஓயாமல் கேட்கும் கேள்விகள் கூட சுவாரஸ்யமாக இருந்தது போலும்!

 

“சூப்பர்வைசர்.” என்று அவனின் கேள்விக்கு பதிலளிக்க, “பார்றா!” என்ற ஆச்சரியத்துடன் நிறுத்திக் கொள்ள, அங்கு வந்த வர்ஷினியின் மேலாளர் இருவரையும் பார்த்துவிட்டு அவர்களை கடந்துவிட, வர்ஷினிக்கு பதற்றமாகி விட்டது.

 

“நா… நான் உள்ள போறேன்.” என்று திக்கியவாறே அங்கிருந்து செல்ல முற்பட, “ஹே, இந்தா உன் ஐடி கார்ட்.” என்று நீட்டியவன், “இனி ரொம்ப கேர்ஃபுல்லா இரு.” என்று எச்சரித்துவிட்டே அங்கிருந்து சென்றான்.

 

*****

 

மனதில் ஓடிய காட்சியை அப்படியே ‘ஃப்ரீஸ்’ செய்து மீண்டும் ‘ரீவைண்ட்’ செய்து பார்த்தவள், அகில் அந்த அடையாள அட்டையை நீட்டிய காட்சியை மீண்டும் ஃப்ரீஸ் செய்தாள்.

 

“அட ஃப்ராடு பசங்களா! வந்ததும் ஒரு பச்சை புள்ளைய ஏமாத்திருக்கீங்களே.” என்று வாய்விட்டே புலம்ப, “சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியாம, என்னையே  ‘பே’ன்னு பார்த்துட்டு இருந்தா இப்படி தான் ஏமாத்துவாங்க.” என்று அகில் கூற அவனை முறைத்தாள்.

 

“அப்பறம்…” என்று அகிலை பேசத் தூண்டினாள் வர்ஷினி.

 

“அப்பறம் என்ன? உன் ஃபோட்டோவை பார்த்ததும், ஸ்வருபனுக்கு நீ தமயந்தி சித்தி பொண்ணா இருக்கலாம்னு சந்தேகம் வந்துச்சு. உங்க ரெண்டு பேரு ஃபோட்டோவையும் பக்கத்து பக்கத்துல வச்சு பார்த்தா, சந்தேகமே இல்லாம, நீதான் தமயந்தி சித்தி பொண்ணுன்னு யாரு பார்த்தாலும் சொல்லிடுவாங்க. அப்போ கூட நான் அவன்கிட்ட, உன்னை இந்த ரிஸ்க்கான விஷயத்துல ஈடுபடுத்த வேணாம்னு தான் சொன்னேன். அவன் தான், ‘இவ மட்டும் என்ன ஸ்பெஷல்’னு சொல்லி ப்ரோசீட் பண்ண சொல்லிட்டான்.” என்று நண்பனை மாட்டிவிடும் மும்முரத்தில் அவன் பின்னே நிற்பதை பார்க்கவில்லை.

 

‘அந்த சிடுமூஞ்சி சொன்னாலும் சொல்லியிருப்பான்.’ என்று நினைத்துக் கொண்டவள் எதிரே பார்க்க, அங்கு இருவரையும் பார்த்தவாறே கல்மேஜையின் மீது கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான் ஸ்வரூபன்.

 

‘போச்சு இவன் எப்போ வந்தான்னு தெரியலையே! இவன்கிட்ட மாட்டக் கூடாதுன்னு தான் இங்க வந்தேன்.’ என்று அவனின் பார்வையை தவிர்ப்பதாக எண்ணி அவனையே சுற்றி வந்தன அவளின் கண்கள். வர்ஷினியின் பார்வை சென்ற திசையையெல்லாம் கவனிக்கும் விருப்பமில்லாதவனாக தன் பேச்சை தொடர்ந்தான் அகில்.

 

“நீ என்னைப் போய் தப்பா நினைச்சுட்டியே வர்ஷு மா! எல்லாத்துக்கும் அந்த ஸ்வரூபன் தான் காரணம். நீயே சொல்லு, அன்னைக்கு என்னை அடிச்சுட்டு, உன்னை அந்த ஜன்னல்லயிருந்து கிட்டத்தட்ட தள்ளிவிட்டு கடத்திட்டு வந்தவன் அவன். அப்போ அவனை கேள்வி கேட்குறது தான நியாயம்!” என்று அகில் கூற, ‘அடப்பாவி அண்ணா, இப்போ எதுக்கு என்னை அவன்கூட கோர்த்து விடுற?’ என்று மனதிற்குள் அலறியது வர்ஷினியே தான்.

 

“என்னடா அமைதியா இருக்க? உனக்கு பயமா இருந்தா சொல்லு நான் கேட்குறேன் அவன் கிட்ட.” என்று வேறு கூற, “அடேய் அண்ணா, உன் ஓவர் ஆக்டிங்ல தீயை வைக்க.” என்று அடிக்குரலில் முணுமுணுத்தாள்.

 

அதற்குள், “என்னடா கேட்கணும் என்கிட்ட?” என்று அகிலின் பின்பக்கமிருந்து சத்தம் கேட்க, “ஐயையோ” என்று வெளிப்படையாகவே அலறினான் அகில்.

 

ஒரு பெருமூச்சுடன் ஸ்வரூபன் புறம் திரும்பிய அகில், “மச்சான், நீ எப்போ வந்த?” என்று சமாளிப்பாக வினவ, “நான் இங்கயே தான் இருக்கேன்.” என்றான் அவன்.

 

‘ஹையோ, முழுசா கேட்டுருப்பானே!’ என்று உள்ளுக்குள் புலம்பிய அகில் வெளியே சமாளிக்க ஆரம்பித்தான்.

 

“அது நம்ம வர்ஷுக்கு உன்னைப் பார்த்தா பயமா இருக்காம். நீ வேற அவளைக் கடத்திட்டு வர மாதிரி இங்க கூட்டிட்டு வந்தியா, சோ அதுல பயந்துருக்கா. அதான் பயப்படாதன்னு சொல்லிட்டு இருந்தேன்.” என்று ஏதோ உளறி வைக்க, வர்ஷினி வெளிப்படையாகவே தலையிலடித்துக் கொண்டாள்.

 

“கேவலமா சமாளிக்காத. உன்னை ரூபா தேடிட்டு இருந்தா.” என்று ஸ்வரூபன் கூற, “என்ன ரூப்ஸ் டார்லிங் என்னை தேடுனாளா?” என்று உடனே அங்கிருந்து சென்று விட்டான் அகில்.

 

‘பொண்டாட்டின்னதும் தங்கச்சியை கழட்டிவிட்டுட்டு போயிட்டானே!’ என்று அகிலை மனதிற்குள் திட்ட தான் முடிந்தது வர்ஷினியால்.

 

வெகு தீவிரமாக மனதிற்குள் அண்ணனை திட்டிக் கொண்டிருந்ததால், தன்னை நெருங்கிய ஸ்வரூபனை வர்ஷினி கவனிக்கவில்லை.

 

இத்தனை நேரம் முகத்தை தழுவிக் கொண்டிருந்த காலை நேரத்து இளவெயில் தடைபட்டதும் தான் சுயத்திற்கு வந்தாள் வர்ஷினி. வெயில் தடைப்பட்டதன் நோக்கம் அறிந்துகொள்ள நிமிர்ந்து பார்த்தவள் கண்டதோ தன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்வரூபனை தான்.

 

அவளின் ஒவ்வொரு பாவனைகளையும் பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் தன்னைக் கண்டதும், “என்ன மேடம், ஏதோ இன்வெஸ்டிகேஷன் பண்ணிட்டு இருந்தீங்க போல.” என்றான்.

 

அவனிடமிருந்து வந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திக்கியவள், அதன் காரணத்தை உணர்ந்து வேறு பக்கம் பார்த்தவாறே, “அதெல்லாம் இல்லையே, சும்மா பேசிட்டு இருந்தோம்.” என்று கூறினாள்.

 

“ஆஹான்… நம்பிட்டேன்.” என்று கிண்டலாக அவன் குரல் வெளிப்பட, அவனின் கிண்டலே வர்ஷினியின் துடுக்குத்தனத்தை தூண்டிவிட போதுமானதாக இருந்தது.

 

“ஆமா, இன்வெஸ்டிகேஷன் தான் பண்ணிட்டு இருந்தேன். சின்ன பிள்ளையை ஏமாத்தி, அந்த வில்லன்கிட்ட மாட்டிவிட்டதும் இல்லாம, போலீஸ் அட்டாக், ஹாஸ்பிடல் ஸ்டே, திரும்பவும் அங்கிருந்து கிட்னாப் – உஃப், சொல்றதுக்கே மூச்சு வாங்குது! இத்தனையும் பண்ணிட்டு, இப்போ வந்து பார்த்தா எல்லாரும் கூட்டு களவானிங்க. இதுல ப்ரொஃபெசர்னு வேற ஊரை ஏமாத்துறது.” என்று பேசிக் கொண்டே சென்றவள், அப்போது தான் அவள் பேசியதை உணர்ந்து வாயை மூடிக் கொண்டாள்.

 

ஸ்வரூபனோ, “அவ்ளோ தானா இல்ல இன்னும் ஏதாவது இருக்கா?” என்று வினவ, இம்முறை தலையை மட்டும் அசைத்தாள்.

 

“இங்க பாரு, எங்க வேலைக்காக வில்லனோட இடத்துக்கு போறவங்களை அவ்ளோ ஈசியா விட்டுடமாட்டோம். நார்மலாவே அப்படின்னா, நீ நம்ம குடும்பத்துக்கு எவ்ளோ முக்கியம்னு உன்னை விட எங்களுக்கு நல்லாவே தெரியும். அப்படி இருக்குறப்போ, உன்னை அங்க அனுப்பிருக்கோம்னா அதுக்கு ஏதாவது காரணம் இருக்கும்னு உனக்கு தோணலையா?” என்ற கேள்வியுடன் அவன் நிறுத்த, வர்ஷினியோ, ‘இதுல என்ன பெரிய காரணம் இருக்கப் போகுது?’ என்று யோசித்தாள்.

 

அவள் எதுவும் கூறாததைக் கண்டவன், “மத்தவங்களை விட நீ அங்க சேஃபா இருப்பன்னு நம்பிக்கை தான்.” என்று ஒரு மாதிரியான குரலில் அவன் கூறினான்.

 

இப்போதும் வர்ஷினிக்கு குழப்பம் தான். ‘நான் எதுக்கு அங்க சேஃபா இருக்கணும்?’ என்று மீண்டும் யோசனையில் மூழ்கியவளை தடுத்தவனாக, “இனிமே உனக்கு நான்… க்கும் நாங்க இருக்கோம். நம்ம குடும்பம் இருக்கு.” என்று அவளின் கைப்பிடித்து கூறியவன் தூரத்தில் வந்த வேலையாளை கண்டு கண்னசைவில் ஏதோ வினவ, அதற்கு மறுமொழியையும் பெற்றுக் கொண்டான்.

 

இந்த கண்ஜாடையை காண்பதற்கு வர்ஷினி சுயத்தில் இருக்க வேண்டுமே! அவள் தான் அவன் கைப்பிடித்ததும் உறைநிலைக்கு சென்றுவிட்டாளே. அவன் கூறியவை கூட அவளின் செவிகளில் விழுந்திருக்காது!

 

கண்கள் பேசியதற்கு மறுமொழி கிடைத்தும், வாய்மொழிக்கு மறுமொழி கிடைக்காததால், வர்ஷினியைக் கண்டவன் அவளின் நிலை கண்டு புருவம் சுருங்க, பின்னர் தான் அவள் விழி சென்ற திசை அறிந்து அவளின் நிலையை புரிந்து கொண்டான்.

 

உதட்டோர சிரிப்புடன் மெல்ல தன் கைகளை விலக்கியவன், “என்ன நான் சொன்னது புரிஞ்சுதா?” என்று திடீரென்று அழுத்ததுடன் கேட்க, அப்போது தான் தான் உறைநிலையிலிருந்து உருகியவளாக திருதிருவென்று விழித்தாள்.

 

‘அச்சோ, நான் எதுக்கு இப்படி ஃப்ரீஸ்ஸாகி நின்னேன்? நடந்தது கனவா இருக்குமோ? இப்போ எல்லாம் அடிக்கடி கனவு காண ஆரம்பிச்சிட்டேன். இவன் வேற என்னத்த கேட்டான்னு தெரியலையே!’ என்று புலம்பியவன் தலையை மட்டும் அசைத்தாள்.

 

அவளிடம் தலையசைத்துவிட்டு விலகியவன், என்ன நினைத்தானோ மீண்டும் அருகில் வந்து, “நான் ப்ரொஃபெசர் தான். நீ நம்பலைனாலும் அது தான் நிஜம்!” என்று கண்ணடித்துவிட்டு நகர்ந்தான்.

 

அப்போது அவர்களை நெருங்கிய அந்த வேலையாள், “உங்களை பெரியய்யா கூப்பிடுறாங்க.” என்று கூறிவிட்டு செல்ல, வர்ஷினியோ ‘ஏன்’, ‘எதற்கு’ என்று கூட கேட்காமல் மந்திரித்து விட்டது போல தாத்தாவை பார்க்க சென்றாள்.

 

அவர்களை அழைத்தது எதற்கு என்று அறிந்த ஸ்வரூபனோ ஒரு பெருமூச்சுடன் வர்ஷினியை பின்தொடர்ந்தான்.

 

*****

 

“செல்வம், அந்த பிக்பாக்கெட் கேஸ் என்னாச்சு? யாரையாவது அர்ரெஸ்ட் பண்ணியிருக்கீங்களா?” என்று ஷ்யாம் வினவ, செல்வம் என்று அழைக்கப்பட்டவனோ, “இன்னும் இல்ல சார். அவங்களுக்கு பெரிய இடத்துல சப்போர்ட் இருக்கு. அர்ரெஸ்ட் பண்ணாலும் ஈசியா வெளிய வந்துடுவாங்க.” என்றான் சிறிது சலிப்புடன்.

 

அவனின் சலிப்பிற்கான காரணம், இந்த இரண்டு நாட்களில் இத்துடன் பத்தாவது முறையாக ஷ்யாம் அவனை அழைத்து இதைப் பற்றி கேட்டுவிட்டான். வேறு யாராக இருந்திருந்தாலும், ‘எதற்கு இந்த வழக்கில் இவ்வளவு தீவிரம்?’ என்று போகிற போக்கில் கேட்டுவிடலாம். ஆனால், கேட்டது ஷ்யாமாகிற்றே!

 

“ப்ச், வெளிய வரதுக்கு ஃபர்ஸ்ட் அர்ரெஸ்ட் பண்ணனும்.” என்று கடுப்பாக கூறிவிட்டு அலைபேசியை அணைக்க, எதிர்முனையில் இருந்தவனோ, ‘எதுக்கு இவ்ளோ கோபப்படுறாரு?’ என்று புரியாமல் முழித்துக் கொண்டிருந்தான்.

 

ஷ்யாமின் மனமோ ஷர்மி மற்றும் வினய்யையே சுற்றிக் கொண்டிருந்தது. ஏதோ தவறாக நடக்கப்போகிறது என்று அடித்துக் கூற, இந்த சூழ்நிலையில் இங்கு வந்திருப்பது தவறோ என்று ஆயிரமாவது முறையாக நினைத்தான்.

 

ஷ்யாமின் கணிப்பு சரியே என்பது போல, அங்கு ரவுடிகள் சூழ நின்று கொண்டிருந்தாள் ஷர்மி. அழுகை மறந்த விழிகளில் இப்போது நிராசையும் சேர்ந்து கொண்டதோ!

 

*****

 

தோட்டத்திலிருந்து வீட்டினுள் சென்ற வர்ஷினி கண்டது கலவையான உணர்வுகளை பிரதிபலித்த வீட்டினரின் முகங்களை தான். யோசனையுடன் வாசல் புறம் விழிகளை திருப்ப அங்கு நின்றிருந்தது, அவளின் தந்தை மற்றும் சித்தி.

 

அவர்களைக் கண்டவள் அதிர்ச்சியடைய, அவளின் கண்கள் தாமாக அன்னையின் புறம் திரும்ப, அவரோ நிர்மலமான முகத்துடன் நின்றிருந்தார்.

 

வர்ஷினிக்கு இப்போது எப்படி எதிர்வினையாற்ற வேண்டும் என்பதே தெரியவில்லை. அன்னையின் நிம்மதிக்காக தந்தையைப் பற்றி நினைக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கையில், இப்படி தந்தையை நேரில் காண்போம் என்று நினைக்கவே இல்லை.

 

அதுமட்டுமல்லாது, இத்தனை வருடங்கள் தாயைப் பற்றி கூறாததும் அவளிற்கும் தந்தைக்கும் இடையேயான தூரத்தை அதிகப்படுத்தியிருந்தது. சூழ்நிலை காரணமாக உள்ளே அடக்கி வைக்கப்பட்ட தாய் – தந்தை உறவைப் பற்றிய கேள்விகள் மீண்டும் அவளின் மனதை ஆக்கிரமித்தன.

 

குழப்பங்கள் சூழ, அதிலிருந்து விடுபட தெரியாதவளாக நின்றவளுக்கு ஆறுதலாக கைகளை தட்டிக் கொடுத்தான் ஸ்வரூபன். அவனும் அவளின் முகம் காட்டும் உணர்வுகளை கிரகித்துக் கொண்டு தானே இருந்தான்.

 

“ரிலாக்ஸ், திரும்பவும் சொல்றேன், இனி என்ன நடந்தாலும், யாரு விட்டுட்டு போனாலும், நம்ம குடும்பம் உனக்கு துணையா இருக்கும்.” என்று மெல்ல அவளின் காதில் முணுமுணுத்தான்.

 

அவனின் குரலோ, அதிலிருந்த உறுதியோ, அது தந்த ஆறுதலோ,  வர்ஷினியை சிறிது சமாதானப்படுத்த அடுத்து நிகழப்போகும் நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ள எத்தனித்தாள்.

 

“எங்க பேத்தி இவ்ளோ நாள் உன்கூட தான் இருந்தான்னு தகவல் சொல்லக் கூட தோணலையா, ராஜா?” என்று வைத்தீஸ்வரன் தன் வழக்கமான குரலில் கேட்டாலும், இத்தனை வருட பிரிவின் வருத்தம் அந்த குரலில் தெரிந்தது.

 

அந்த இடமே அமைதியாக ராஜரத்தினத்தின் பதிலுக்காக காத்திருக்க, அவரோ மௌனமாக தலை குனிந்து நின்றார்.

 

சிறிது நேரம் அதே அமைதியே நிலவ, “இத்தனை வருஷமா, என் பேத்தி உயிரோட இருக்காளா இல்லையான்னு தெரியாம தவிச்சுட்டு இருந்தேன். ஒத்த வார்த்தை சொல்லிருக்கக் கூடாதா?” என்று எதற்கும் கலங்காத பெரியநாயகி தன் பேத்திக்காக கண்ணீர் வடிக்க, அவரை ஆதரவாக தாங்கிக் கொண்டனர் அவரின் மருமகள்.

 

அவர்களின் குற்றச்சாட்டை கேட்ட கனகவள்ளி, “இப்போ எதுக்கு என் புருஷனை பேசிட்டு இருக்கீங்க? அவரு தான் உங்க பேத்திக்கு இத்தனை வருஷம் சோறு போட்டு வளர்த்துருக்காரு. அது மட்டுமில்லாம அன்னைக்கு…” என்று சொல்ல வரும்போதே அவளைத் தடுத்த ராஜரத்தினம், “வாயை மூடிட்டு சும்மா இருக்குறதுன்னா இங்க இரு. இல்லைன்னா வெளிய போடி.” என்று அடிக்குரலில் அதட்டினார்.

 

அதன் பின்னர் வாய் திறக்குமா கனகவள்ளிக்கு! இங்கு வந்ததே, ‘எரிகின்ற வீட்டில் பிடிங்கினது வரை லாபம்’ என்பது போல, இத்தனை வருடங்கள் வர்ஷினியை வளர்த்ததற்காக லாபம் பார்ப்பதற்கு தானே. அந்த சந்தர்ப்பத்தை நழுவவிடுவாரா?

 

அந்த இடம் மீண்டும் அமைதியாக, அவர்கள் இருவரும் வந்தது முதல் எதுவும் பேசாமல் இருந்த தமயந்தி பேச ஆரம்பித்தார்.

 

“உங்க கூட நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்துனதுக்காக என் பொண்ணை இத்தனை வருஷம் என்கிட்ட இருந்து பிரிச்சு வச்சுட்டீங்களா..?” என்று ஆதங்கத்துடன் அவர் வினவ, அதைக் கேட்டு யார் அதிகம் அதிர்ந்தனர் என்று தெரியவில்லை. மகளா, இல்லை அவள் இத்தனை வருடங்களாக ‘அப்பா’ என்று அழைத்தவரா?

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்