Loading

குளிர் ஊசி ❄️!

உழைக்க வேண்டிய
வயசு இதுதான்
என்று விமானம் ஏறி வந்தோம்..
வாழ வேண்டிய
வயதும் இதுதான்
என்பதை மறந்து..!

இது ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் பொருந்தும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இங்கிலாந்திற்கு பயணம் மேற்கொள்கிறாள் இருப்பத்தைந்து அகவை கடந்த ஜனனி.

சென்னையில் இருந்து எடின்பர்க்கிற்கு உள்ள தொலைதூரம் பதினான்கு மணி நேரம். அப்பதினான்கு மணி நேரமும் தனக்கு பிடிக்காத இவ்வாழ்க்கைக்கு செல்வதற்கு மனதை  தயார்படுத்தும் நேரமாக எண்ணினாள்.

மனதை ஒரு நிலைப்படுத்தி தான் செல்லும் காரணகர்த்தாவாக இருக்கும் தனது குடும்பத்தின் புகைப்படத்தை தனது பர்ஸிஸ் இருந்து எடுத்து பார்த்துக் கொண்டே இருந்தாள்.

அதில் அழகாக தம்பதியர்களாக இருவர் நிற்க, அவர்களின் இரு பக்கத்திலும் இரு பெண் பிள்ளைகள் நின்றுக் கொண்டிருந்தனர். அதில் உள்ள அத்தம்பதியர்கள் அவளின்  பெற்றோர் பாலன் மற்றும் ஸ்ரீதேவி .

பாலனின் அருகில்  பட்டு பாவாடை அணிந்து, இரட்டை ஜடை கட்டி, ஒன்பதாம் வகுப்பு படித்தும் பால் மணம்  மாறாது இருக்கும் தனது தங்கையான சாரு நிற்க, தனது தாயின் அருகில் தாவணி அணிந்து, ஒற்றை ஜடை பிண்ணி தலையில் மல்லிகை பூ அணிந்து , முகத்தில் மஞ்சள் பூசி, வெளிச்சத்திற்கு தங்கம் மின்னுவது போல் மேனி மின்ன, அரிசி போல் இருக்கும் பற்கள் வெளியில் தெரியாதவாறு சிரித்துக் கொண்டிருந்தாள் ஜனனி .

அவர்களை கட்டியணைப்பது போல் யூகித்துக் கொண்டே அவர்களை தொட்டு தழுவினாள். இறுதியாக ஒரு ஏக்கம் பெரு மூச்சை விட்டு நிமிர, அவளின் அருகில் ஆறடிக்கும் அசராத ஒரு ஆண்மகன் அமர்ந்திருந்தான்.  காதில் மாட்டியிருக்கும் ஹெட்போனின் மூலம் வரும் இசையில் லயித்திருப்பான் போல, அவனின் மூடிய கண்கள் அதையே பிரதிபலித்தது.

அவனை கூர்ந்து நோக்கினாள். அவனின் கேசம்  அவனின் நெற்றியை மறைத்து அசைந்தாடிக் கொண்டிருந்தது. அவனின் வெள்ளை நிறச்சட்டை, அவனின் இளஞ்சிவப்பு நிறத்திற்கு எடுத்துக் காட்டியது. அதையும் அவன் முட்டி வரை மடக்கி , கையில் ஃபாஸ்ட்ராக் கடிகாரம் அணிந்திருந்தது இன்னும் அவனின் ஆண்மைக்கு அழகேற்றியது.

கண்கள் மூடி இசையை கவனிக்க, கைகள் தன்னிசையாக தாளம் இட்டுக் கொண்டிருந்தது. அதுவும் அவனின் இடது மோதிர விரலில் எந்தவொரு வடிவமைப்பும் இல்லாமல் ஒரு வளையம் அணிந்திருந்தான். அதில் டி(D) என்று ஆங்கிலத்தில் பொறித்து இருந்தது.

அதுவரை அவனை சைட் அடித்துக் கொண்டிருந்தவள் இவன் மணமானவன் என்று நினைத்து ஜன்னல் பக்கம் திரும்பி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.  ஆனால், அவளின் பார்வை வெளியில் இருந்தாலும், அவளின் மனது அவனைக் கண்டதே வந்து வந்து சென்றது.

இன்னும் இன்னும் அவனைக் காண வேண்டும் என்று ஏங்கியது. அவனின் முகத்தில் உள்ள ஒவ்வொரு அங்கங்கமும் கண் முன் ஓடியது.

நெற்றியில் வழியும் கேசம், இரு அடர்த்தியாக ப்ரவுன் நிற புருவம்,  பெண்கள் போல் அடர்த்தியாக இருந்த இமைகள், கூர் நாசி, ஆண்களுக்கே உரித்தான மீசை, அதை அமேசான் காடு போல் வளர்ந்திருக்கும் தாடியுடன் இணைந்திருந்தது. பாசம் பிடித்த குளத்தில் மெல்ல எட்டிப்பார்க்கும் தாமரை போல், கண்ணுக்கே தெரிந்தும் தெரியாமலும் இருந்த சிவந்த உதடு.  நொடிக்கொரு முறை, கீழுதட்டை கடித்தான்.

அதற்கு மேல் முடியாமல் சடாரென்று கண்விழிக்க, மறுபடியும் அவனின் எண்ணம் ஆக்கிரமிக்க , கண்கள் சொருகி அவனை நினைக்க, நாடியின் கீழ் கழுத்தில் மெலிதான சங்கிலி ஒன்று அணிந்திருந்தான். அதற்கும் கீழ் சட்டையின் இரு பொத்தான்களை கழற்றி விட்டிருந்தான். அதனால் தெரிந்த அவன் மார்பின் கேசம். அவளை இன்னும் இன்னும் மயக்கி சென்றது.

அதை ஆழ ரசித்துக் கொண்டிருக்க , அதனை கெடுக்கும் பொருட்டு “மிஸ்…. மிஸ் …… ” என்று காதில் ஒலித்ததை வைத்து திரும்பி பார்க்க, அதிர்ந்து விட்டாள்.

ஸ்காட்லாந்து 🌨️

ஸ்காட்லாந்து வடமேற்கு ஐரோப்பாவில் பெரிய பிரித்தானியத் தீவில் உள்ள நாடு. இது ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பாகமாகும். இதன் கிழக்கில் வட கடலும், வடமேற்கிலும் மேற்கிலும் அட்லாண்டிக் பெருங்கடலும், தென்மேற்கில் வடக்குக் கால்வாயும் ஐரியக் கடலும் சூழ்ந்துள்ளது. இதன் தெற்கில் இங்கிலாந்துடன் தனது எல்லையைக் கொண்டிருக்கிறது. முதன்மையான பெரும் தீவு மட்டுமின்றி 790க்கும் மேற்பட்ட சிறு தீவுகளும் ஸ்காட்லாந்தில் அடங்கும்.

ஸ்காட்லாந்தின் வட அத்திலாந்திக்குப் பெருங்கடல் மற்றும் வட கடல் கடற்பரப்புகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப் பெரும் எண்ணெய் இருப்பு உள்ளது. இதனால் ஸ்காட்லாந்தின் மூன்றாவது பெரிய நகரமான அபர்தீனுக்கு ஐரோப்பாவின் எண்ணெய்த் தலைநகர் என்ற பட்டம் கிடைத்துள்ளது.

இங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்திக்கு பேர் பெற்ற முக்கிய கம்பெனிகளில் ஒன்று ஃபோர்டிஸ் ஆயில் கம்பெனி. இது வட கடலில் உள்ள இரண்டாம் பெரிய ஆயில் கம்பெனி . 1975 இல் பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் கீழ் இயங்கியது.

பின்பு, 2007 ல் இனியோஸிடம் விற்று விட்டனர். இன்றுவரை குழாய் அமைப்பு (Pipeline System) இயங்கி கொண்டிருக்கிறது. அதில், தினமும் 455,000 பீப்பாய்கள் நிரப்பி கொண்டிருக்கின்றனர்.

அத்தகைய குழாய் அமைப்பு கூடத்தில் பைப்லைன்  இன்ஜினியராக வேலையில் இருக்கும் அனந்தன்  அனைவரையும் கண்களாலேயே சுட்டெரித்துக் கொண்டிருந்தான்.

அனந்தன் பெயருக்கு ஏற்றாற் போல்  அளவின்மை இல்லாமல் ஆகாயத்தின் அளவுக்கோலுக்கு ஏற்ப அறிவு , அழகும் கொட்டிக் கிடந்தது. அதற்கு ஈடு செய்யும் வகையில் கோபமும் அளவில்லாமல் வரும்.

எந்தவொரு வேலையும் நேர்த்தியாகவும், சரியாகவும் , நேரத்திற்குள் முடிக்கும் மிஸ்டர் . பெர்பெக்ட் அவன். அதனால், மற்றவர்களும் அவனின் வேகத்திற்கு ஓட வேண்டும். இன்பம், சிரிப்பு, சந்தோஷம்,மகிழ்ச்சி என்று காலம் செல்லும் இருபத்தி ஏழு வயதில் ஒழுக்கம், கடமை, வேலை என்று குதிரைக்கு கடிவாளம் இட்டது போல் செல்பவன் தான் இந்த அனந்தன்.

உறவுகள், நண்பர்கள், பிணைப்புகள் என்று எதுவும் பிடிக்காமல், தனிமை மட்டுமே தன் காதலி என்று நினைத்து , வெளிநாட்டு வேலைக்கு வந்தவன் இந்த தமிழன்.

தனிமை
எனக்கு மிகவும் பிடிக்கும்
காரணம்
மனதை ஆக்கிரமிக்கவும்
காயப்படுத்தவும்
இங்கு யாரும் இல்லை !
நானே எனக்கு ராஜா!
நானே எனக்கு மந்திரி!

இப்படிபட்ட கொள்கையை பின்பற்றும் இந்த அனந்தனும் , அதற்கு எதிர்மாறாக இருக்கும் ஜனனியும் காதல் வயப்படுவார்களா? இடையில் உள்ள அந்த சக -பயணி யார்?

கீர்த்தி☘️

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்