Loading

கார்த்தியை தேடி காட்டிற்குள் சென்ற ஜீவாவும், கயலும் அந்த ஆற்றைக் கடக்கும் வேளையில், ஆஆ வென்ற அலறல் சத்தம் காட்டைப் பிளந்தது.

அவர்களுடன் வந்தவர்களும் அந்த சத்தத்தில் அதிர்ந்து நிற்க, கயல் பயந்து ஜீவாவின் கைகளை பற்றிக்கொள்ள, ஜீவா, அவளை தோளோடு அணைத்து சுற்றி முற்றி பார்த்தான்.

அப்பொழுது, காக்கி சீருடையில் ஒருவன் காலில் இரத்தம் வழிய தலை தெறிக்க ஓடி வருவதைக் கண்டு, ஜீவா, அவரை நிறுத்தி “என்ன ஆச்சு?” என்று கேட்க,

அவர், “சரியான காட்டுமிராண்டி கூட்டம். ஆத்தை தாண்டி போனாலே, எதையோ வச்சு அடிக்குறானுங்க…” என்றவர், உயிர் பயத்தில் மிரண்டு அங்கிருந்து ஓடினார்.

அதில் கயல் அரண்டு ஜீவாவைப் பார்க்க, ஜீவா, “நீங்கல்லாம் இங்க இருங்க, நான் போய் பார்த்துட்டு வரேன்” என்று முன்னேறினான்.

கயல் “வேணாம்ங்க… நம்ம போயிடலாம். உங்களை ஏதாவது பண்ணிட போறாங்க” என்று தடுக்க,

ஜீவா, “அவங்க போலீஸ் யூனிபார்ம பார்த்தா தான் அந்த மாதிரி நடந்துப்பாங்க… நான் பேசிப்பார்க்குறேன். நீ இவங்களோட இரு” என்று சமாதானம் செய்ய, கயல், வீம்பாய் மறுத்து, “இங்க இருந்து போகலாம்” என்று கெஞ்சினாள்.

அதில் ஜீவா கடுமையாய், “நான் கார்த்தி இல்லாம இங்க இருந்து வரமாட்டேன். நீ வேணும்னா வீட்டுக்கு போ” என்றிட, அதில் அதிர்ந்தவள், “அப்போ நானும் வரேன்” என்றாள் தீர்மானமாய்.

இப்போது ஜீவா அதிர்ந்து, “நீ இங்கயே…” என்று சொல்லவர, அவள் “கார்த்தி உங்க தம்பின்னா, அவன் என் ஃப்ரெண்ட்… நீங்க உங்க தம்பியை தேடி வந்தா, நான் என் ஃப்ரெண்ட தேடி வந்துருக்கேன். அவன் இல்லாம நானும் இங்க இருந்து போகமாட்டேன். நானும் தான் அங்க வருவேன்”  என்றதும், ஜீவா பெருமூச்சு விட்டு, அவளையும் அழைத்துச் சென்றான்.

ஒரு வழியாய் ஆற்றைக் கடந்து இருவரும் முன்னேறப் போகையில், மரத்திலிருந்து ஒருவன் தொம்மென்று அவர்கள் முன்னே குதித்து, கையில் வைத்திருந்த அம்பை அவர்களை நோக்கி குறி வைத்தான்.

ஜீவா, அவனுக்கு பின்னே கயலை மறைய வைத்து, அவனிடம், “ஹே ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளு…” என்று பேச,

அவன், “யாருலே நீங்க… அந்த போலீசுக்காரன் உளவாளிகளா.” எனக் கோபமாய் கேட்க,

ஜீவா, “நான் போலீஸ்லாம் இல்ல. என் தம்பியை தேடி தான் வந்தேன்” என்றபடி லேசாய் ஒரு அடி முன்னெடுத்து வைக்க, அவன் அம்பை, ஜீவாவின் பாதத்தை நோக்கி செலுத்தினான்.

அதை உணர்ந்தவன் சட்டென்று பின்னே நகர, குறி தப்பி அம்பு கீழே விழுந்தது.

அதில் கோபமான அந்த காட்டுவாசி, “ஒரு அடி கூட நீ முன்னால வரக்கூடாது…” என்றவன் மீண்டும் அவனை நோக்கி குறி வைக்க, ஜீவா, “நோ நோ நான் சொல்றதை கேளு…” என்று மறுக்க மறுக்க, அவன் அம்பை விட போக, பூவரசி வந்து அவனைத் தடுத்தாள்.

“ஏலேய் என்னால பண்ணுற இங்கன” என்று கோபமாக கேட்க, அவனோ “நீ எதுக்கு புள்ள இங்கன வந்த… அந்த போலீசுக்காரன் கூட இவகளும் வந்து திருவிழாவை கெடுக்க பார்க்குறாக” என்று ஜீவாவையும் கயலையும் முறைக்க,

கயல் அவசரமாய், “இல்ல இல்ல நாங்க அந்த போலீஸ் கூட சேர்ந்து வரல, இவரோட தம்பியை தேடி தான் வந்தோம்…” என்று சொல்ல, அவன் நம்பவே இல்லை.

பூவரசி, “இங்க பாருங்க… இங்க திருவிழாவுக்கு காப்பு கட்டிருக்கோம். ஆத்தை தாண்டி எவுக வந்தாலும், அவகளை அடிப்போம்… இல்லைன்னா, எங்கன எடத்துக்கு வந்து, பிரச்சனை பண்ணுறாக. நீங்க மொத கிளம்புங்க” என்று அவர்களை அனுப்ப முயல,

ஜீவா, “இங்க பாருங்க, உங்க திருவிழால பிரச்சனை பண்ண நாங்க வரல… என் தம்பியை யாரவது பார்த்தீங்களானு விசாரிக்க தான் வந்தோம்” என்று சொல்ல,

அவர்களை முறைத்துக் கொண்டிருந்த, பூவரசியின் அம்மாவின் தம்பி சிக்கண்ணன் வேகமாக, அம்பை குறி வைத்து, “பார்த்தியால விசாரிக்க வந்தாராம், அந்த போலீஸ் கூட சேர்ந்தவுக தான் நான் சொன்னேனுல…” என்றான் வேகமாக.

பூவரசி, “யோவ்… போயா இங்கன இருந்து நான் பார்த்துக்குடேன்”
 என்று அவனை அனுப்ப, சிக்கண்ணன் இவளை முறைத்தபடி, மனதினுள் கறுவிக் கொண்டு அங்கிருந்து நகன்றான்.

“நீங்க என்ன விசாரிக்கனும்” என்று பூவரசி வினவ,

ஜீவா, “மலைல இருந்து என் தம்பி விழுந்துட்டான்…” என்று விவரங்களை சொல்ல, அவள், “ப்ச்” என்று அவனை தடுத்து, “அப்டிலாம் நாங்க யாரையும் பார்க்கல… இன்னும் கொஞ்ச நேரம் இங்கன இருந்தீங்கன்னா மொத்த ஜனமும் இங்கன வந்துடும்…” என்றாள்.

‘அப்போ உண்மையிலேயே கார்த்தி உயிரோட இல்லையா’ என்று ஜீவாதான் நொந்து போனான். கயலும் கண்ணீருடன், கார்த்தியை நினைத்து பூவரசியிடம், “நிஜமாவே இங்க யாரையும் நீங்க பார்க்கலையா…?” என்று தவிப்புடன் கேட்க, கயலின் கண்ணீர் அவளை என்னவோ செய்தது.

“இல்லக்கா… இங்க அப்படிலாம் யாரையும் பார்க்கல. ஒருவேளை  மலைல இருந்து விழுந்துருந்தாலும், நாங்க பார்க்கறதுக்கு முன்னால, இங்க மிருகங்கள்லாம்” என்று சொல்லும் முன்பே, கயல் முகத்தை மூடி அழுதாள்.

ஜீவா அவளை சமாதானப்படுத்த கூட தோன்றாமல் எங்கேயோ வெறித்துக் கொண்டிருக்க, அப்பொழுது தான், ஜீவாவின் நிலையை உணர்ந்தவள், ‘தேவையில்லாம நாம தான் அவருக்கு ஃபால்ஸ் ஹோப் குடுத்துட்டோம்’ என்று  நினைத்து, கண்ணீரை துடைத்து கொண்டு, “கிளம்பலாம்” என்று சொல்ல, அவனும் கீ கொடுத்த பொம்மை போல் திரும்பி நடந்தான்.

பூவரசி ஏதோ தோன்ற திடீரென, அவர்களை ஓடி வந்து வழிமறிக்க, இருவரும் அவளை புரியாமல் பார்த்தனர்.

“ரெண்டு மாசத்துக்கு முன்னால, என் ஆளுங்க மலைல அடிபட்ட ஒருத்தனை காப்பாத்தி கூட்டியாந்தாக. அது நீங்க சொல்ற ஆளான்னு எனக்கு தெரியல” என்று சொல்லி முடிக்கும் முன்பே, ஜீவா கண்ணில் மின்னலுடன், “அவன்…. அவன் நல்லாருக்கானா? எப்போ நீங்க அவனை பார்த்தீங்க…” என்று கேட்க,

பூவரசி “அந்த ஆளுக்கு உடம்பு பூரா நல்ல அடி… எந்திரிச்சு நல்லா நடக்கவே இன்னும் ஆறு மாசம் ஆகும். எனக்கு தேதிலாம் நியாபகம் இல்ல. ஒரு ரெண்டரை மாசம் இருக்கும்.” என்று சொல்ல, கயலுக்கு அப்பொழுதும் பயம் தான்.அது கார்த்தியாக இல்லாமல் இருந்தாலும், இன்னும் தானே இவர் ஏமாந்து போவார் என்று.

“ஒருவேளை அது கார்த்தியா இல்லாம இருந்தா… நீங்க எக்ஸ்பெக்ட் பண்ணாதீங்க அப்பறம் ரொம்ப கஷ்டமா இருக்கும்” என்க,

தன் வருத்தத்தில் அவள் கலங்குவதைக் கண்டு,” சரி கயல். நான் எதுவும் எக்ஸ்பெக்ட் பண்ணல, இந்த பொண்ணு சொன்னவனை பார்த்துட்டு முடிவெடுக்கலாம்” என்றான் சிறிய நம்பிக்கையுடன்.

பூவரசி தான்,” என்னாது அந்த ஆளை பார்க்க போறீகளா… நீங்க உள்ளாரேயே வர முடியாது. முதல்ல நான் பேசுறதை பார்த்தாலே எங்க ஆளுங்க என் தோளை உரிச்சுப்போடுவாக… நீங்க வேணா, ஒரு வாரம் கழிச்சு திருவிழா முடிஞ்சதும் வாங்க” என்றதும்,

ஜீவா, “இல்ல அவ்ளோ நாள்லாம் வெய்ட் பண்ண முடியாது. நான் உடனே அவனை பார்க்கணும்.” என்று விடாப்பிடியாய் நிற்க,

“சாரு, உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா… அது உன் தம்பியான்னே தெரியாது.” என்றவள்,

என் அண்ணனுக்கு போன் பண்ணுங்க என்று கார்த்தி சொன்னது நினைவு வர,

“ஆனா நேத்திக்கு கூட, அந்த ஆளு ஏதோ அண்ணனுக்கு போன் பண்ணுங்க அவக வந்து கூட்டிட்டு போவாகன்னு சொன்னான்” என்றாள் யோசனையாக.

கயலோ, “அவன் பேர் என்னன்னு கேட்டீங்களா?” என்று கேட்க, பூவரசி தலையை சொரிந்து, “அந்த ஆளு பேர் எனக்கு தெரியலையே” என்றாள்.

கயல் அவள் கையைப் பிடித்து, “ப்ளீஸ் மா… நாங்க அவனை பார்க்கணும். அவன் கார்த்தியா இருந்தா நாங்க எங்களோட கூட்டிட்டு போய்டறோம். ஒருவேளை அவனா இல்லைன்னா அவன் செத்துட்டான்னு நினைச்சு மனசை தேத்திக்கிறோம். ப்ளீஸ் எங்களுக்கு ஹெல்ப் பண்ணு” என்று கெஞ்ச,

இங்கு வந்தாலே மிரட்டுபவர்களை தான் அதிகமாய் பார்த்தவள், இப்போது ஒரு பெண் கெஞ்சுவதை பார்த்து ஒரு மாதிரி இருக்க  என்ன செய்வதென்று யோசித்தாள்.

“அக்கா, இப்போ நீங்க உள்ள வர முடியாது…” என்று புரியாமல் பேச, ஜீவா, “நாங்க உள்ள வரலைன்னாலும் பரவாயில்ல. அவனை வெளியே அனுப்புங்க” என்றான் அழுத்தமாக.

  “இல்ல உள்ள இருந்தும் யாரும் வெளியார வரக்கூடாது” என்று சொல்ல ஜீவா கடுப்பானான்.

கயல் அவனை அமைதி படுத்தி, “ஏதாவது பண்ணும்மா, ப்ளீஸ்” என்று மீண்டும் கெஞ்ச,

சிறிது யோசித்தவள் “சரி, நீங்க உள்ள வாரதுக்கு நான் ஏற்பாடு பண்றேன். ஆனா உள்ள வந்தா திருவிழா முடிஞ்சுதான் வெளியார வரணும்.. அது உங்க தம்பியா இருந்தாலும், இல்லைனாலும் நீங்க அங்கன தான் இருக்கனும் இதுக்கு சரின்னா சொல்லுங்க நான் உங்களுக்கு காப்பு கட்டி விட்டு, உள்ளாரா கூட்டி போறேன்” என்று சொல்ல,

கயல் உடனே “சரி நாங்க அங்கேயே இருக்கோம்” என்று சொல்ல, பூவரசி, ஜீவாவை பார்த்தாள்.

“இந்த சாரு எதுவும் சொல்லமாட்டுறாரு அப்பறம் உள்ளாரா வந்துட்டு வெளியில போறேன்னு சொல்லக்கூடாது” என்று எச்சரிக்கையாய் சொல்ல, ஜீவா, “நான் சொல்லமாட்டேன்… உள்ள போலாமா” என்றான் எரிச்சலாக.

அதில் “சரி இங்கனயே இருங்க நான் வரேன்” என்று காட்டுக்குள் ஓடினாள் பூவரசி.

ஜீவா தான், “இவள் சொல்றதை எந்த அளவுக்கு நம்புறதுன்னு தெரியல” என்று யோசிக்க,

கயல், “அவளை பார்த்தா பொய் சொல்ற மாதிரி தெரியலைங்க. ஒருவேளை கார்த்தி இங்க இருந்தா சந்தோசம் தான”

  “சந்தோசம் தான்… ஆனா…” என்று இழுத்தவன்,

“இவங்க வேற திருவிழா அது இதுன்னு சொல்றாங்க. நீ வேற அழகா இருக்கியா… சோ, உன்னை உள்ள கூட்டிட்டு போறதுக்கு இப்படி ஒரு பொய்ய சொல்லி, திருவிழாவுக்கு ஆடு வெட்டுற மாதிரி வெட்டிருவாங்களோனு ஒரே சந்தேகமா இருக்கு” என்று அவளின் பிபியை ஏற்றி விட்டான்.

கயல் அரண்டு,” என்… என்… என்ன வெ வெ வெட்டுவாங்களா” என்று பேந்த பேந்த முழித்து கொண்டு கேட்க, அதில் வந்த சிரிப்பை அடக்கியவன், பாவமாய் முகத்தை வைத்து கொண்டு, “ம்ம்” என்று தலையாட்ட, அவனின் குறும்பை கண்டுகொண்டவள்,

“விளையாடாதீங்க. அப்படிலாம் பண்ணமாட்டாங்க” என்றாள் உறுதியாக.

ஜீவா, மேலும் அவளை பயமுறுத்த, “உனக்கு இந்த காட்டுவாசிங்களை பத்தி தெரியாது… திருவிழா வைக்கிறதே, ஆளை போட்டு தள்ளுறதுக்கு தான். அதுவும் கன்னி பொண்ணுங்களை தான் பலி குடுப்பாங்க. நீ வேற கல்யாணம் ஆகியும் இன்னும் கன்னி பொண்ணு தான் சோ” என்று ஹஸ்கி வாய்ஸில் இழுக்க, அதில் சிவந்தவள்,

“பரவாயில்ல… அவங்க என்னை பலி குடுத்தாலும் “என்றதும், அவளை ஆச்சர்யமாய் பார்த்தவனிடம், மெல்லிய குரலில்,

“தலையை வெட்ட போற பலியாடு மாதிரி தான நான் உங்களை கல்யாணம் பண்ணி இங்க வந்தேன். இப்போ உண்மையிலே வெட்ட போறாங்க ரெண்டுத்துக்கும் பெரிசா வித்தியாசம் இல்ல” என்று மெதுவாய் அவனுக்குள் ஊசியை ஏற்ற, அதில் எழுந்த கோபத்தையும், வலியையும் அடக்க முடியாமல், ஜீவாதான் திணறினான்.

கையை இறுக மூடி, கோபத்தை அடக்கியவன்,
கயலை பாராமல் நிற்க, பூவரசி வந்து, இருவர் கையிலும் கயிறு போல் ஏதோ கட்டிவிட்டு, உள்ளே அழைத்து செல்ல, ஜீவா விறுவிறுவென உள்ளே நடந்தான்.

பூவரசி, கயலுடன் நடக்க, ‘எதுக்கு இந்த சாரு இம்புட்டு விரசா போறாரு’ என்று நினைத்து விட்டு, கயலை பார்க்க, அவள் ஜீவாவின் முகத்தில் தெரிந்த கடுமையில் வெந்து கொண்டிருந்தாள்.

ஒரு வழியாய், மூவரும் பூவரசியின் இடத்தினுள் நுழைய, அங்கு, அவர்களை அனைவரும் சுற்றி வளைத்தனர்.

சிக்கண்ணன் பூவரசியை திட்ட ஆரம்பித்தான்.

அவள் அவனுக்கு பதில் சொல்லாமல், அவளின் தந்தையிடம், “ஐயா, இவக… நம்ம குடிசைல அடிபட்டு கிடக்குராறுல, அவரோட சொந்தமாம். அந்த ஆளை பார்க்கணும்னு சொன்னாக. அதான் காப்பு கட்டி விட்டு கூட்டியாந்தேன். திருவிழா முடியிற வரை அவக இங்க இருக்கட்டும் ஐயா” என்று கெஞ்சலாய் கேட்க, பெரியசாமி, யோசித்து விட்டு, பின் மகளின் வார்த்தையை தட்ட முடியாமல், அவர்களை உள்ளே அழைத்தார்

அவரே அழைக்கவும், மற்றவர்களும் அமைதியாய் கலைந்து விட, பூவரசியின் தாய் தான் இவர்கள் வந்தது பிடிக்காமல் புலம்பிக் கொண்டே இருந்தார்.

பூவரசி அதனை காதில் வாங்காமல், அவர்களை கார்த்தியின் குடிலுக்கு அழைத்துச் செல்ல, இருவரும் கடவுளே அது கார்த்தியாய் இருக்க வேண்டும் என்று அனைத்து கடவுளுக்கும் கோரிக்கை வைத்து, உள்ளே சென்று, உடம்பெல்லாம் கட்டு போட்டு, வாடிப் போய் படுத்திருந்த கார்த்தியை கண்டு, தன் கண்ணையே நம்ப முடியாமல், சிலையாகி நின்றனர்.

என்னதான் அவன் உயிருடன் இருக்கலாம் என்று எதிர்பார்த்திருந்தாலும், வெறும் 10 சதவீதம் நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவனைத் தேடினர். இறந்துவிட்டான் என்று நினைத்தவன், தன் கண் முன்னே, உயிருடன் இருப்பதை பார்த்த இருவருக்கும் அந்த தருணத்தின் மகிழ்ச்சியை வார்த்தையாய் விவரிக்க முடியவில்லை.

ஜீவா வேகமாக கார்த்தியின் அருகில் ஓடி சென்று, கண்ணில் வழிந்த நீருடன் அவனை பரிவாய் பார்க்க, அப்பொழுது தான், ஜீவாவை பார்த்த கார்த்தியின் கண்கள் பெரிதாய் விரிய, சந்தோஷத்துடன் “அண்ணா” என்று படக்கென எழுந்தான். அதில் உடல் வலி  எடுக்க, அவன் முகம் சுருங்கியது.

ஜீவா உடனே பதறி  அவனை அமர வைத்து, “நீ செத்துட்டன்னு நினைச்சேன்டா. இப்போதான் எனக்கு உயிரே வந்துருக்கு…” என்று தலையை வருட,

கார்த்தி, “அண்ணா… எனக்கு ஒன்னும் இல்ல. என் வாசு அண்ணா இருக்கும்போது என்னை யாரு என்ன பண்ணிட முடியும்”  என்று வெளிவராத குரலில் தலையை சாய்த்து  சொல்ல, ஜீவா, கண்ணீருடன் அவனை அணைத்துக் கொண்டான்.

அப்பொழுது தான் கயல் கண்ணீருடன் நிற்பதை பார்த்த கார்த்தி, ஆச்சர்யமாய் “கயலு” என்று முயன்று கத்த, கயல் அங்கேயே அமர்ந்து கதறி அழுதாள்.

இவ்வளவு நாள், அடக்கி வைத்திருந்த சோகத்தையும், அவனைக் கண்டு விட்ட சந்தோஷத்தையும் அழுதே கரைக்க முயன்றாள்.

பூவரசி, அவள் அழுகவும் என்ன செய்வதென்று புரியாமல் முழிக்க, கார்த்திக்கு அவள் அழுவது வருத்தமாக இருக்க, “கயலு அழுகாத கயலு, எனக்கு தான் ஒன்னும் இல்லையே” என்று சமாதானம் செய்ய முயற்சிக்க அவள் அழுகையை நிறுத்தவே இல்லை.

பின் கார்த்தியே, “இன்னும் என் மேல கோபம் போகலையா பட்டி(buddy)” என்று பாவமாய் கேட்க  விறுவிறுவென வந்து அவன் அருகில் அமர்ந்து, “போடா லூசு. இவ்ளோ நாளா நீ இறந்துட்டன்னு நினைச்சு” என்று மேலும் பேச முடியாமல் அழுதவளை கார்த்தி சமாதானம் செய்ய, ஜீவா எதுவும் பேசாமல் அமைதியையே கடை பிடித்தான்.

கயல் சற்று அழுகையை நிறுத்தவும், கார்த்தி, “ஆமா கயலு, நீ எப்படி இங்க வந்த? அதுவும் வாசு அண்ணா கூட” என்று புரியாமல் கேட்க, கயல் இப்போது என்ன சொல்வது என்று புரியாமல் ஜீவாவை பார்த்தாள்..

ஜீவா அப்பொழுதும் அழுத்தமாய் அமைதியாய் இருக்க, பூவரசி, ‘இவன் என்னா லூசுகணக்கா பேசுறான்…’ என்று நினைத்தவள் அவள் பள்ளி செல்லும்போது, அங்கு பெண் ஆசிரியர் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டி இருப்பது போல் இவளும் தாலி போட்டிருப்பதை கண்டு, அவர்கள் கணவன் மனைவி என்று கணித்தே இருந்தாள்.

வேகமாக கார்த்தியிடம், “யோவ், லூசாய்யா நீ… சாரோட பொஞ்சாதி அவரு கூட தான வருவாக.” என்று சொல்ல, கார்த்தி அப்பொழுது தான் கயலின் கழுத்தில் இருந்த தாலியை பார்த்தான்.

ஒன்றும் புரியாமல், “கயல் உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா” என்று குழம்பிப் போய் கேட்க, இருவரும் அப்பொழுதும் அமைதியாகவே இருந்தனர்.

பூவரசி தான், “அட.. என்னய்யா நீ… கல்யாணம் ஆனா தான பொஞ்சாதியா இருக்க முடியும்” என்று அவள் நான்சிங்காகவே பேச, கார்த்திக்கு தான் தலை சுற்றியது.

“யம்மா பூவரசி நீ கொஞ்சம் அமைதியா இருக்கியா” என்று விட்டு  “கயல் நீ வாசு அண்ணாவையா கல்யாணம் பண்ணிருக்க.” என்று வியந்து கேட்க, கயல் “ஆம்” என்று தலையை மட்டும் அசைத்தாள்.

கார்த்தி சந்தோஷத்தில், “வாசு அண்ணா நீங்க உண்மையிலேயே கயலை தான் கல்யாணம் பண்ணிருக்கீங்களா” என்று கேட்க, அவனும் “ஆம்” என்று தலையசைக்க, அதில் வாவ் என்று தன்னிலை மறந்து கத்தி குதித்தவன், தொண்டையில் சுர்ரென்று வலி எடுக்க, லொக்கு லொக்கு என இரும ஆரம்பித்தான்.

அதில் ஜீவா, ” எதுக்கு டா இப்படி கத்துற…” என்று அவரசமாக தண்ணீரை கொடுக்க, கார்த்தியால் பேசவே முடியவில்லை.

கயல் “நீ எதுவும் பேசாத, முதல்ல ரெஸ்ட் எடு. சாப்பிட்டியா…” என்று கேட்டதும்,

பூவரசி, “ம்ம் நான் அப்போவே சாப்பாடு கொடுத்துட்டேன்…” என்று வெகுளியாய் சொல்ல, கயல் அவள் கையை பிடித்து, “ரொம்ப ரொம்ப ரொம்ப  நன்றிமா… என் பிரெண்டை காப்பாத்தி திரும்பி எங்ககிட்டயே குடுத்ததுக்கு…” என்று சொல்ல, பூவரசி தான், ‘என்ன இவக பிரெண்டுன்னு சொல்லுறாக, தம்பின்னு சொல்லுறாக. ஒன்னுமே புரியல’ என்று விட்டு,

“சரி ரொம்ப இருட்டிருச்சு… நீங்க ரெண்டு பேரும் வாங்க.” என்று அழைத்து கொண்டு ஒரு குடிலில், விட்டவள், இருவருக்கும் சாப்பிட, ஏதோ ஒரு கஞ்சியை வைத்துக் கொடுக்க, இருவரும் எதையும் உணராத நிலையில் அதனை சாப்பிட்டு முடித்தனர்.

நடந்ததை நினைத்து கொண்டே உள்ளே சென்ற கயல் அதிர்ந்து நின்றாள். ஜீவாவும் உள்ளே சென்று பார்த்துவிட்டு கயலை கண்டுகொள்ளாமல், அங்கிருந்த ஒரு ஓலை பாயை எடுத்து விரித்து படுக்க கயல் திருதிருவென விழித்தாள்.

அந்த குடிசையில் வெறும் இரண்டு பேர் மட்டுமே படுக்க முடியும். அவள் படுத்தாள், ஜீவாவை ஒட்டிக்கொண்டு தான் உறங்க முடியும். என்ன செய்வதென்று புரியாமல், முழித்தவள், அப்படியே நிற்க, ஜீவா, “எதுக்கு அங்கேயே நிக்கிற. வந்து தூங்கு.” என்று அதட்டுவது போல் சொல்ல, வேறு வழி இல்லாமல், அவன் அருகில் சென்று அமர்ந்தவள் அவனுக்கு முதுகு காட்டி ஒரு ஓரமாக படுத்துக் கொண்டாள்.

ஜீவா மல்லாந்து படுத்து விட்டதையே வெறிக்க, கயல் சொல்ல வார்த்தைகள் அவனுள் தீயாய் எரிந்தது.

‘ஏண்டி என்னை இப்படி கொல்ற… ஒன்னு அமைதியா இருந்து சாகடிக்கிற… இல்லன்னா என்னை விட்டு ஒதுங்கி போய் காயப்படுத்துற. இல்லைன்னா வார்த்தையாலேயே என்னை வதைக்கிற’ என்று புலம்பியவனின் மனசாட்சி “நீயும் அவளுக்கு இதே தானே செய்தாய்” என்று எடுத்துரைக்க,

“நான் செஞ்சது தப்புன்னு நான் ஒத்துக்கிட்டேனே… அப்பறமும் ஏண்டி என்னை இம்சை பண்ணுற. நீ பேசுனதுக்கு உன்னை” என்று அவளைப் பார்க்க, அலைச்சலிலும், கார்த்தி கிடைத்த சந்தோஷத்திலும், படுத்ததும் உறங்கியவள் உறக்கத்தில் இவன் புறம் திரும்பி படுத்தாள்.

  “நீ பேசுனதுக்கு உன்னை என்னடி பண்ணலாம்…” என்றவன் அவளை நெருங்கிப் படுத்து, கிசுகிசுப்பாய், “ஸ்வீட் ஹார்ட்… சாரி டி. உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் தான். ஆனால் தெரியாம தாண்டி பண்ணுனேன். உன்னை கஷ்டப்படுத்திட்டு, நானும் நிம்மதியா இல்லடி… அது உனக்கு எப்போ புரியும் ஸ்வீட் ஹார்ட்…” என்று தூங்கி கொண்டிருந்தவளிடம் புலம்பிக்கொண்டிருந்தவனின் மனமோ,

“அடேய் கேனைப்பயலே… அவள் முழிச்சுருக்கறப்ப பேச வேண்டிய டயலாக்கை எல்லாம் தூங்குறப்ப பேசுற” என்று காரி துப்ப, அதில் ஜீவா

“எங்க முழிச்சுருந்தா தான், இவள் என்னை எதுவும் பேச விடாம டென்ஷன் பண்ணுறாளே. இவள் கண்ணை பார்த்தாலே, இவளை சீண்டணும்ன்னு தான் தோணுது. என்ன பண்றது…” என்று பெருமூச்சு விட்டவன், அவள் கையை தன் கைக்குள் வைத்துக் கொண்டு,

” ஸ்வீட் ஹார்ட்… ஐ நீட் யூ மேட்லி. அண்ட் எனக்கு இப்போதான் ரொம்ப ரிலாக்ஸ் – ஆ இருக்கு. நீ மட்டும் இல்லைன்னா கண்டிப்பா நான் கார்த்தியை கண்டுபிடிச்சுருக்க மாட்டேன். அவன் செத்துட்டான்னே நினைச்சு வாழ்ந்துட்டு இருந்துருப்பேன். யு ஆர் மை ஏன்ஜெல் ஸ்வீட் ஹார்ட். நீ என் லைஃப்ல வந்ததுக்கு அப்பறம் என்னமோ எல்லாமே புதுசா இருக்கு. நான் இழந்தது எல்லாம் எனக்கு திரும்பி கிடைச்ச மாதிரி” என்று ஆரம்பித்தவன்,

“ஹ்ம்ம்… அதெல்லாம் கிடைக்குமான்னு தெரியல. ஆனால், நீ எனக்கு என்கூட எப்போவுமே இருக்கணும்டி. உன்னை நான் எதுக்காகவும் விட்டு குடுக்க மாட்டேன். நான் சின்ன வயசுல இருந்து இது வேணும் அது வேணும்ன்னு ஆசைப்பட்டது இல்ல. ஏன்னா நான் ஆசைப்பட்டா அது கண்டிப்பா நடக்காது. நான் ஆசைப்பட்டதை செய்றதுக்கு எனக்கு யாரும் இருந்ததும் இல்ல.

ஆனா என் மனசு, உன்னை மட்டும் தாண்டி ஆசைப்படுது. நீ மட்டுமே என் வாழ்க்கையாகணும்ன்னு உடம்புல இருக்குற அணுவெல்லாம், அப்படியே படபடன்னு அடிச்சுக்கிது. நான் என்கூட இருக்கணும்னு ஆசைப்பட்ட யாருமே என்கூட இருந்தது இல்ல ஸ்வீட் ஹார்ட். அப்போ எல்லாம் எல்லாரையும் இழந்துட்டேன்…” என்று குரல் கமற கூறியவன்,

கண்ணில் உறுதியுடன், “ஆனால் நீயே நினைச்சாலும், உன்னை என்னை விட்டு போக விட மாட்டேன். யு ஆர் மை கேர்ள் ஸ்வீட் ஹார்ட்…” என்று தன் போக்கில் எதை எதையோ உளறி கொண்டிருந்தான்.

அது எதையும் உணராமல் கயல் அசந்து உறங்கி க் கொண்டிருக்க, ஜீவா, சிறிது நேரம் கழித்து, “ஸ்வீட் ஹார்ட்…” என்று மெதுவாய் அழைத்து,

“உன் செர்ரி லிப்ஸ் வேணும்டி எனக்கு. இது இல்லாம, நான் கொஞ்ச நாளா சரியாவே தூங்கல தெரியுமா.” என்று சிணுங்கியவன், அவள் உதட்டினை வருடி, “நான் எடுத்துக்கவா” என்று கேட்டு விட்டு, அவள் இதழில் இதழ்  பதித்து விலகியவன்,

“தூக்கத்துலயே ரொமான்ஸ் பண்ணுனா எப்போடி நிஜத்துல பண்றது…” என்று பாவமாய் கேட்டவன் மீண்டும் அவள் இதழ்களை நாட, சில நொடிகளுக்கு பிறகு, கயல் அவனை தள்ளி விடுவதை போல் இருந்தது.

‘அய்யோயோ முழிச்சுட்டாளா’ என்று திருதிருவென முழித்து அவளைப் பார்க்க, அவள் கண்ணை மூடிக் கொண்டே, “போங்க ஜீவா, இவ்ளோ நாள் எனக்கு கிஸ் கொடுக்கவே இல்ல. உங்களை ரொம்ப மிஸ் பண்ணுனேன்.” என்று  நடப்பது கனவென்று நினைத்து உளற, முதலில் புரியாமல் விழித்தவன், பின், வாயை பொத்திக் கொண்டு சிரித்தான்.

“அடிப்பாவி கனவுன்னு நினைச்சுகிட்டு இருக்கியா இதெல்லாம்…” என்று சிரித்தவன், “அதுவும் நல்லது தான் அப்படியே மெயின்டெய்ன் பண்ணுவோம்…” என்று விட்டு

“சாரி ஸ்வீட் ஹார்ட்… கொஞ்சம் வேலை இருந்துச்சா அதான் கிஸ் பண்ணலை… இப்போ பண்ணிக்கவா” என்று நல்ல பிள்ளையாய் கேட்க, அவளும்,” ம்ம்” என்று தூக்கத்தில் தலையாட்டினாள்.

புன்னகையுடனும், அவளின் அனுமதி உடனும், அவளின் இதழ் தேனை போதும் போதும் என அளவுக்கு  ருசித்தவன், அவள் நெற்றியில் முட்டி “லவ் யு டி ஸ்வீட் ஹார்ட்” என்று சொல்ல, அவளும் “லவ் யு ஜீவா” என்று அவனைக் கட்டி கொண்டு உறங்கி விட்டாள்.

ஜீவா தான் ‘ கனவுல சொல்றதை எப்படி நேர்ல சொல்லுவ’ என்று புலம்பி விட்டு, அவளின் செயலினை நினைத்து, புன்னகை முகத்துடன் உறங்கிப் போனான்..

மறுநாள், முதலில் எழுந்த ஜீவா, விடிந்திருப்பதைக் கண்டு, கயலை விலக்கி,அவள் நெற்றியில் முத்தம் கொடுத்து நன்றாக படுக்க வைத்து விட்டு, கார்த்தியைப் பார்க்க போனான்.

அங்கு பூவரசி அவனை மிரட்டிக் கொண்டிருக்க, கார்த்தி திருதிருவென முழித்து கொண்டிருப்பதை பார்த்து, என்ன என்று கேட்டான்.

பூவரசி, கையில் வைத்திருந்த அருவாளை ஜீவாவின் முன் ஆட்டி, “ஒழுங்கா சாப்பிட்டா தான சரி ஆகும். உங்க தம்பியாரூ சாப்பிடாம என் உசுரை வாங்குறாரு. நான் விறகு வெட்ட போவோனும் நேரம் ஆகுது” என்று சொல்ல, அதில் ஜீவா அவளின் அரிவாளை கண்டு வந்த சிரிப்பை அடக்கி கொண்டு, “சரி நீ போ நான் சாப்பிட வைக்கிறேன்” என்று சொன்னதும்,

“சாப்பிட வச்சுடுக இல்லைன்னா ஐயா வந்து என்னை திட்டுவாக…” என்று எச்சரித்து விட்டு சென்றாள்.

கார்த்தி, “அண்ணா இந்த கூட்டமே சரியான காட்டுவாசியா இருக்கு… சாதாரணமா பேசுறதை கூட கைல அருவலோட துப்பாக்கியோட தான் பேசுறாங்க” என்று மிரள, அதில் புன்னகைத்த ஜீவா,

“அவங்க இவ்ளோ கேர் எடுத்து பார்த்துக்குறதே பெரிய விஷயம் கார்த்தி… சிட்டில எல்லாம் யாரவது அடி பட்டு இருந்தாலும், கண்டுக்காம போய்டுவாங்க.. “என்று சொல்ல,

கார்த்தி ஜீவாவின் சிரித்த முகத்தை அசந்து விட்டு, ‘வீட்டுலயே அண்ணா சிரிக்க மாட்டாரு காட்டுக்குள்ள வந்து இப்படி சிரிச்சு பேசுறாரு’ என்று நினைத்தவன், “கயலுக்கும் வாசு அண்ணாவுக்கும் எப்படி கல்யாணம் நடந்தது” என்று தலையை பிய்த்துக்கொள்ள,

அவனிடமே “உங்களுக்கு கயலை எப்படின்னா தெரியும்” என்று கேட்டான்.

அதில் இறுகியவன், “முதல்ல சாப்பிட்டு ரெஸ்ட் எடு. எதுவா இருந்தாலும் ஊர்ல போய் பேசிக்கலாம்” என்று சொல்லிவிட, அவனின் குரலில் மீண்டும் அந்த கேள்வியை கேட்கவே அவனுக்கு நாவெழவில்லை.

கயலும் துயில் கலைந்து கார்த்தியை பார்க்க வர, ஜீவா அவனுக்கு சாப்பாடு கொடுப்பதைப் பார்த்து, வெளியே சென்றாள்.

அப்பொழுது தான் வெளிச்சத்தில், அந்த இடத்தை நன்றாக பார்த்தவள், சுற்றி மலையாக இருக்க, அந்த அதிகாலை வேளையில் மேக மூட்டம் தலைக்கு மேல் செல்ல, குடிசைக்கு வெளியில் விறகு அடுப்பை வைத்து, ஒவ்வொருவரும் ஏதோ சமைத்து கொண்டிருந்தனர்.

அவர்களின் உடையும், பேச்சும், நாகரிகமும் வித்தியாசமாய் இருக்க, அப்படியே நின்று பார்த்து கொண்டிருந்தவளை கண்டு பூவரசி, “அக்கா, எந்துருச்சுடிகளா… இந்தாக கஞ்சி” என்று ஒரு கிண்ணத்தை கொடுக்க, அவள் “என்ன இது” என்று புரியாமல் கேட்டாள்.

பூவரசி,” கேழ்வரகு கஞ்சி கா. இதான் காலைல எந்திரிச்சதும் குடிப்போம். உங்களுக்கு வேற எதுவும் வேணுமா” என்று கேட்க,

கயல் புன்னகைத்து, வேண்டாம் என்று தலையசைக்க, அவள் “சரி இதை குடிச்சுட்டு வாங்க… ஆத்து பக்கம் போய் நம்ம குளிச்சுட்டு வரலாம்” என்று சொல்ல, அப்பொழுது தான், அங்கு குளியலறை, கழிவறை எதுவுமே இல்லை என்று உணர்ந்தாள்.

ஐயோ, எப்படி வெட்ட வெளில குளிச்சு… வேற ட்ரெஸ் கூட இல்லையே  என்று பேந்த பேந்த முழித்தவளை பார்த்த ஜீவா, எதுக்கு இவ இப்படி ஒரு ரியாக்ஷன் குடுக்குறாள் என்று யோசித்துக்கொண்டே அவர்களை நெருங்கியவன், கயலிடம் என்ன என்று கேட்க, அவள் “இல்ல மாத்து ட்ரெஸ் கூட எடுத்துட்டு வரல…” என்றதும், அவன் கொண்டு வந்திருந்த ஷோல்டர் பேகில் இருந்து ஒரு செட் சுடிதாரை எடுத்து கொடுத்தான்.

அவள் இவனை வியப்பாய் பார்க்க, ஜீவா, “காட்டுல திடீர்னு டென்ட் போட்டு இருக்குற மாதிரி இருந்தா என்ன பண்றதுன்னு நினைச்சு தான் ரெண்டு பெருக்கும் ஒரு செட் ட்ரெஸ் எடுத்து வச்சேன்…” என்று சொன்னதும், அவள் ம்ம் என்று தலையாட்டி பூவரசி உடன் சென்று விட்டாள்.

தயங்கி கொண்டே சென்றவளுக்கு அந்த மரங்களுக்கு நடுவில் இருந்த அந்த சிறிய ஆற்றைக் கண்டு உற்சாகம் தொற்றி கொள்ள, “ஹைய்யோ இந்த இடம் சூப்பரா இருக்கு.” என்று சொன்னதும், பூவரசி புன்னகைத்து,

“இதுல குளிச்சா இன்னும் சூப்பரா இருக்கும்” என்று அவளை ஆற்றில் இறக்க  முதலில் குளிரில் நடுங்கியவள் பின், அதிலிருந்து வெளிவர மனதில்லாமல் நீரிலேயே இருந்தாள்.

அதன் பின்னே, கயல் “உன் பேர் என்ன” என்று கேட்க,

பூவரசி என்றதும் “அட அழகான பேர்… என்றாள் புன்னகையுடன்.

பூவரசியும், காட்டைப் பற்றியும், அவர்கள், பழக்க வழக்கம் பற்றியும், பேசிக்கொண்டே, இருந்தாள்.

கார்த்தி குடிலில், ஜீவா தான் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான் கோபத்தில்.

அவனின் கோபத்தின் அளவு தெரிந்தவன் ஆயிற்றே என்ன ஆகப்போகுதோ என்று கார்த்தி மிரண்டு பார்த்திருக்க, பெரியசாமி, “சாமி, பூவு கூட தான புள்ளை போயிருக்கு… சீக்கிரம் வந்துடும்” என்று சமாதானம் செய்ய,

ஜீவா, “ரெண்டு மணி நேரம் ஆகுது. குளிக்க போனவங்க ஆத்துல தான இருக்கணும். அங்கேயும் இல்லைன்னு சொல்றாங்க… நான் போய் பார்க்குறேன்” என்று வம்பாய் நின்றான்.

கயலை இன்னும் காணவில்லை என்று அங்கிருந்தவர்களை குரங்காட்டி கொண்டிருந்தான். இரு பெண்களை அனுப்பி ஆற்றில் பார்க்க சொல்ல, அங்கே அவர்கள் இல்லை என்றதும் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தான்.

அவனின் கோபத்தில் அங்கிருந்தவர்களே நடுங்க, ஆளுக்கொரு திசையில் சென்று பார்க்கிறோம் என்று அவர்கள் தேட போக, சரியாக இரு பெண்களும் அங்கு வந்து விட்டனர்.

பூவரசி, “என்னங்கைய்யா எதுக்கு எல்லா பேரும் இப்படி நிக்கிறீக” என்று கேட்க, பெரியசாமி, “எங்க பூவு போன… இவ்ளோ நேரம்” என்று பதட்டமாய் கேட்க,

“அக்காவுக்கு காட்டை சுத்தி காட்டிகிட்டு இருந்தேன்” என்றாள் சவாகாசமாக.

ஜீவா, கயலை தீயாய் முறைத்து, பூவரசியிடம், “இதென்ன பெரிய தாஜ்மஹாலா சுத்தி காட்ட. இனிமே என் அனுமதி இல்லாம அவளை எங்கயும் கூட்டிட்டு போக கூடாது புரிஞ்சுதா” என்று அழுத்தமாய் கடுமையாய் கூற, எப்பொழுதும் மற்றவர்களை அதட்டியே பழகியவள், முதன் முறை அவன் கோபத்தை கண்டு திகைத்து அப்படியே நிற்க, ஜீவா, கயலை தரதரவென இழுத்து கொண்டு, அவனின் குடிலுக்கு சென்றான்.

கார்த்தி தான், ஐயோ இந்த அண்ணா கோபம் வந்தா என்ன பண்ணுவாருன்னே தெரியாதே… கயலு எப்படி எங்க அண்ணனை கட்டிக்க ஓகே சொன்னாள்… என்று புரியாமல் இருந்தவன், பூவரசி பேயறைந்தது போல் இருப்பதை பார்த்து விட்டு, ‘என்னை என்ன பாடு படுத்தின, இப்ப என் அண்ணா கிட்ட நல்லா வாங்குனியா’ என்று மனதில் கும்மி அடித்து கொண்டிருந்தான்.

கயல், அவனின் கோபத்தில் நடுங்கி, அவன் இழுத்த இழுப்பில் குடிலுக்குள் வர, அவனை பார்த்து பயந்து சுவற்றோடு ஒன்றியவளை பார்த்தவன், அவள் அருகே வந்து,

“இங்க பாரு. என் கண் பார்வையில இருந்து நீ நகரவே கூடாது. குளிக்க போனாலும் உனக்கு அரை மணி நேரம் தான் டைம். அதுக்கு மேல லேட் ஆச்சு நானே உன்னை தேடி நீ குளிக்கிற இடத்துக்கு வந்து உன்னை குளிப்பாட்டிடுவேன். காட் இட்.” என்று பல்லைக்கடித்து கொண்டு கூற அவள் பயத்தில் சரி என்று தலையாட்டினாள்.

அதில் ஜீவா அவளை “போ” என்று அனுப்ப, அவள் வெளியில் சென்றதும், அங்கேயே தலையில் கை வைத்து அமர்ந்திருந்தவனுக்கு கை கால் எல்லாம் நடுங்கியது.

அவளை இரண்டு மணி நேரமாக காணாமல், தவித்துப் போனவனுக்கு, மனதெல்லாம் பதறியது. இதில் பூவரசி வேறு அசட்டையாக காட்டை சுற்றி பார்க்க போனோம் என்று சொன்னதும், அவனுக்கு சுறுசுறுவென கோபம் வர, அவனின் தவிப்பை எல்லாம் கோபமாக வெளிப்படுத்தி விட்டு, இப்போது, இப்படி அவளிடம் கோபத்தை காட்டி விட்டோமே என்று தன்னை நொந்து கொண்டு கயலை தேடி வெளியில் வந்தவனுக்கு, அவள் கண் கலங்கி, எங்கேயோ வெறித்துக்கொண்டிருப்பதை பார்த்து ஐயோ வென்றிருந்தது.

நேசம் தொடரும்…
-மேகா.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
21
+1
81
+1
4
+1
4

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்