Loading

 

கயலை திட்டி அனுப்பிவிட்டு, ‘சே இப்படி திட்டிவிட்டோமே’ என்று நொந்து போன ஜீவா, வெளியில் வந்து அவளைப் பார்க்க, கயல் கண் கலங்கி எங்கோ வெறித்துக்கொண்டிருப்பதை கண்டதும் அவனுக்கு ஐயோவென்றிருந்தது.

‘கனவுல மட்டும் கொஞ்சி கொஞ்சி  பேசுறாரு ஆனா நிஜத்துல எரிஞ்சு விழுகுறாரு.’ என்று மனதினுள் வெம்பியவள்,

பின், ‘ப்ச், அவருதான்  என்னை லவ் பண்ணவே இல்லையே, அப்பறம் எதுக்கு என்கிட்டே சாஃப்ட் – ஆ பேசணும்…’ என்று உதட்டைக் கடித்து அழுகையைக் கட்டுப்படுத்தியவள், திருமணத்திற்கு முன் தன்னிடம் குழைவாய் பேசியதை எண்ணினாள்.

வலுக்கட்டாயமாக அது நடிப்பு என்றும், இதுவே அவனின் இயல்பு என்றும் மனதில் ஏற்றிக்கொண்டாள்.

காதல் கொண்ட மனமோ, அதுவே உண்மையாய் இருக்கக் கூடாதா என்று ஏங்கியது. அவளைக் காணாத தவிப்பில் தான் அவன் கோபப்பட்டான் என்று அவள் உணரவும் இல்லை.

ஜீவா கயலின் அருகில் வருவதை உணர்ந்தவள், அவன் பேச வரும் முன், விறுவிறுவென கார்த்தியின் குடிலுக்கு சென்று விட்டாள்.

அவளை பார்த்து பெருமூச்சு விட்டவன், ‘முதல்ல நம்ம கோபத்தை குறைக்கணும்’ என்று எண்ணிக்கொண்டான்.

 கார்த்தி, பேயறைந்தது போல் நின்றிருந்த பூவரசியை பார்த்து மனதில் சிரித்து கொண்டு வெளியில், “என்ன பூவரசி ஷாக்காகி நிக்கிற…” என்று ஒன்றும் தெரியாதது போல் கேட்க,

அவள், “யோவ், என்னய்யா உன் அண்ணாரு இப்புடி கத்துறாரு. என் ஐயா கூட  என்னை வஞ்சது இல்ல” என்று பாவமாய் சொல்ல, அவளை ஒரு மாதிரி பார்த்தான், ‘நேத்து தான உங்க அம்மா கிட்ட விளக்கமாத்து அடி வாங்குன’ என்று.

அவள்,  “அது… எங்க அம்மை அப்படிதான். ஆனால் அவக கோபமா பேசுனா பயமே வராது சிரிப்பு தான் வரும். ஆனால் அந்த சாரு ஒரு வார்த்தை பேசுனதே நடுங்குது” என்று எச்சிலை முழுங்கி கொண்டு சொல்ல, அவள் செய்கையில் சிரித்தவன்,  வேறு ஏதோ பேச வர, கயல் முகத்தை உம்மென்று வைத்து வருவதை கண்டு, “கயல், அண்ணா ரொம்ப திட்டிட்டாரா” என்று வருத்தமாய் கேட்க, அவள் முயன்று சிரிப்பை வரவழைத்து, இல்லை என்று தலையாட்டினாள்.

கார்த்தியோ, “எப்படி கயலு உனக்கு வாசு அண்ணாவை தெரியும். நீதான் அவரை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னியே…” என்று வரிசையாய் கேள்வி கேட்டவனுக்கு தான் நினைத்தது போல் அவள் அண்ணியாய் வந்தது பெரும் சந்தோசமே. ஆனால் கயலை நினைத்து சற்று கவலையாகவும் இருந்தது.

மேலும் விடாமல் அவன் கேள்வி கேட்கையில் இருமல் வேறு வந்து விட, கயல், “ப்ச் ஏண்டா இத்தனை கேள்வி கேக்குற. எதுவா இருந்தாலும் ஊர்ல போய் பேசிக்கலாம்” என்றவளை முறைத்தவன், “அண்ணாவும் இதே தான் சொல்றாரு. நீயும் இப்படித்தான் சொல்ற. எனக்கு தலையே வெடிச்சுடும் போல இருக்கு.” என்று தலையில் கை வைக்க,

அதில் லேசாய் முறுவலித்தவள், “ஏன் கார்த்தி? நீதான ஆசைப்பட்ட நான் உன் அண்ணாவை கல்யாணம் பண்ணிக்கனும்ன் னு. அப்பறம் என்ன?” என்றாள் மெதுவாக.

“ஐயோ கயல், எனக்கு இப்போ எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா. என்னால இதை கொண்டாட முடியாம., அதை பத்தி நல்லா பேசக்கூட முடியாமல் படுத்த படுக்கையா இருக்கோமேன்னு தான் கவலையா இருக்கு.” என்று முகத்தை சுருக்கிக் கொண்டு சொன்னவன்,

“ஆனால் அண்ணாவோட கோபத்தை உன்னால தாக்குப்பிடிக்க முடியாது. அப்பறம் எப்படி அவரை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டன்னு தான் எனக்கு புரியல” என்று குழப்பமாய் கேட்க, பூவரசிக்கு அவர்கள் பேசுவது, புரியவில்லை என்றாலும், கயலின் தவிப்பான முகத்தை கண்டு,

கார்த்தியிடம் “ஏய்யா ஒரு கலுயாணம் பண்ணுனதுக்கு  இம்புட்டு வக்கணையா கேள்வி கேக்குற…” என்றவள்,

கயலிடம்.. “யக்கா இன்னைக்கு கோவில்ல ஒரு சடங்கு இருக்கு… நீங்களும் கலந்துகிடனும் வாங்க” என்று சொல்லிவிட்டு வெளியில் செல்ல, கார்த்தி, ‘இவள் வாசு அண்ணாகிட்ட அடி வாங்காம அடங்க மாட்டாள் போலயே’ என்று நினைத்து விட்டு கயலை பார்த்ததான்.

கயல் தயங்கி கொண்டே “கார்த்தி, நான் ஒன்னு சொன்னா கேட்பியா” என்று கேட்க,

கார்த்தி சிரித்து விட்டு, “கேட்டு தான ஆகணும் அண்ணியாரே…” என்று கேலி செய்ய, அவனின் அண்ணி என்ற அழைப்பில் சிவந்தவள், அதனைக் கட்டுப்படுத்தி கொண்டு,

“என்னை தான் அவர்க்கு கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்பட்டதை நீ அவர்கிட்ட சொல்லக்கூடாது. அப்படியே அவரு கேட்டாலும், அப்படிலாம் எதுவும் இல்லைன்னு சொல்லிடனும்…” என்று சொல்ல, கார்த்திக்கு தான் தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை.

“ஏன் கயல்” என்று அவன் கேட்கவரும்  முன்பே, “ப்ச் என்கிட்ட காரணம்லாம் கேட்காத, ப்ராமிஸ் பண்ணு” என்று கையை நீட்ட, அவன் உச்சக் கட்ட குழப்பத்தில் உழன்று கொண்டிருந்தான்.

கயல், அவன் கையை எடுத்து அவள் தலையில் வைத்து கொண்டு “என் மேல சத்தியம் நீ அவர்கிட்ட எதுவும் சொல்லக்கூடாது.” என்று அழுத்தமாய் சொல்ல, கார்த்தியும் அரை மனதுடன் சரி என்று தலையாட்டினான்.

அங்கு ஜீவா உள்ளே வருவது தெரிந்ததும், “நீ ரெஸ்ட் எடு நான் வெளில இருக்கேன்” என்று ஜீவாவை கண்டுகொள்ளாமல் வெளியில் சென்று விட்டாள்.

ஜீவாவிற்கு அவளின் தவிர்ப்பு, மேலும் கோபத்தை தான் கூட்டியது.

‘ஏன் எங்க முகத்தை கூட அம்மணி பார்க்க மாட்டாங்களோ…’ என்று மனதில் வறுத்தவன், “எங்க போய்டுவ நைட்டு என் பக்கத்துல தான வந்தாகணும். நீ கனவுன்னு நினைச்சதை இன்னைக்கு நிஜத்துல பண்ணி காட்றேன்” என்று சபதம் எடுத்து கொண்டு, கார்த்தியின் அருகில் சென்றவன், “இப்போ பரவாயில்லையா…” என்று கேட்க, அவன் “ம்ம் இப்போ பெட்டர் அண்ணா” என்றான். 

ஜீவா தொண்டையை செருமிக்கொண்டு, “கார்த்தி, நீ எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணனும்…” என்று சொல்ல, கார்த்தி பே வென அவனை பார்த்தான்.

ஜீவா சுற்றி முற்றி கயல் இருக்கிறாளா என்று பார்த்து விட்டு, “நீ கயலை தான நான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்பட்ட” என்று கேள்வியாய் கேட்க, கார்த்தி அதிர்ந்து, “இப்போதான அவள் சொல்லக்கூடாதுன்னு சொன்னா என்ன பண்றது இப்போ” என்று பேந்த பேந்த முழிக்க,

ஜீவா, அவன் பதில் சொல்லும் முன்பே, “நீ கயலை தான் நான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்பட்டதா என்கிட்ட சொல்லாத மாதிரியே இருந்துக்கோ. நான் உங்கிட்ட எதாவது கேட்டேனான்னு அவள் கேட்டாலும், நான் எதுவும் கேட்கலைன்னு சொல்லிடு. புரிஞ்சுதா” என்று சற்று கடுமையாய் கூற,

கார்த்தி ‘என்னடா இது… ரெண்டு பேரும் ஒரே விஷயத்தை, வேற வேற ஆங்கில்ல சொல்றாங்க’ என்று நினைத்தவனுக்கு பைத்தியமே பிடிப்பது போல் இருந்தது.

ஜீவா அழுத்தமாக “உன்னை தான் கேட்குறேன். அவள் கிட்ட நீ எதுவும் சொல்லக்கூடாது… அண்டர்ஸ்டாண்ட்” என்க, அவன் சரி என்று தலையாட்டினான்.

ஜீவா “ம்ம் ரெஸ்ட் எடு நான் வெளிய இருக்கேன்” என்று வெளியில் சென்று விட, கார்த்தி தான் “ரெண்டு பேருக்குள்ள ஏதோ இன்டெரெஸ்டிங் – ஆ நடக்குது ஆனால் அது என்னன்னு தெரியலையே” என்று புலம்பியவன், சீக்கிரம் கண்டுபிடிக்கனும் என்று நினைத்து கொண்டான்.

கயல் பூவரசியுடன் ஏதோ பேசிக்கொண்டிருக்க, ஜீவா கையில் போனை வைத்து கொண்டு டவர் கிடைக்கிறதா என்று பார்த்து கொண்டிருந்தான்.

கயலிடம் வந்தவன், “நான் வெளிய போய் டவர் கிடைக்குதான்னு பார்த்துட்டு வரேன். இந்த பொண்ணு கூடவே இரு…” என்று கட்டளையாய் சொல்ல, பூவரசி, “வெளிய எல்லாம் போவக்கூடாது” என்று சத்தமாக சொல்ல,

ஜீவா அவளை பார்த்ததும், அமைதியாக, “இல்ல காப்பு கட்டிட்டு வெளிய போகமாட்டேன்னு சொன்னீகள்ல…” என்று முணுமுணுத்தாள்.

“நான் பார்டரை தாண்டி போக மாட்டேன். நம்ம வந்த இடத்துல போய் டவர் கிடைக்குதான்னு பார்த்துட்டு வரேன்.” என்று பொறுமையாய் விளக்கம் கொடுத்து விட்டு, சென்றான்.

கயல் பூவரசியுடன் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று, அங்கு நடக்கும், பூஜைகளை பார்த்து விட்டு, அரை மணி நேரம் சென்றதும், “சீக்கிரம் கிளம்பலாம்… இல்லைன்னா அவரு திட்டுவாரு” என்று அவளையும் வற்புறுத்தி அழைத்து வந்துவிட்டாள். அப்பொழுதும்ஜீவா அங்கு வந்திருக்கவில்லை.

‘என்னை மட்டும் அரை மணிநேரத்தில் திரும்ப வரணும்னு சொல்லிட்டு இவரு எங்க போனாரு.’ என்று யோசித்துக் கொண்டு, அந்த காட்டில் இருக்கும் மனிதர்களையே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்.

அங்கு, பெண்கள் உட்பட அனைவரும் அவ்வளவு வேலை பார்த்தனர். மலை ஏறுவது, மரம் ஏறுவது, மரம் வெட்டுவது, கனமான பொருட்களை கூட அசால்டாக தூக்குவது என்று அவர்கள் வேலை செய்வதை பார்த்தவள், வியந்து போனாள். பூவரசியும் வெட்டிய மரத்தின் ஒரு பகுதியை ஒரு ஆளாய் தூக்கி தள்ளி போட்டதை பார்த்தவள்,

“எப்படி பூவரசி இவ்ளோ வெய்ட்ட தூக்குற?” என்று கேட்க,

  புன்னகையுடன் “பழகிடுச்சு கா…” என்றவள், மேலும், ஒரு பெரிய  கல்லை எடுத்து, அன்று இரவு கோவிலில் நடக்க இருக்கும் சடங்கிற்கு தூக்கி கொண்டு போக,

கயல் “பூவரசி நானும் தூக்கி பார்க்கவா” என்று கேட்க, பூவரசி, “வேணாம்கா உங்களால தூக்க முடியாது…” என்று எச்சரித்தாள்.

“ப்ளீஸ். ஒரே ஒரு தடவை ட்ரை பண்ணி பார்க்குறேன்…” என்று கெஞ்சவும்,

அவள், “சரி இந்தாங்க” என்று அந்த கல்லை கீழே வைக்க, கயலினால் அந்த கல்லை அசைக்க கூட முடியவில்லை. அப்படியும் முயற்சி செய்தவள், மூச்சு வாங்க வியர்த்து போய், “ஹைய்யோ என்னால இதை உருட்ட கூட முடியல” என்று இடுப்பில் கை வைத்து நிற்க,

அப்போது ஜீவா வந்து, இவள் இப்படி நிற்பதை பார்த்து பதறி, “என்னாச்சு கயல் ஏன் இப்படி வேர்த்துருக்கு உனக்கு… ஏன் இப்படி நிக்கிற” என்று கேட்க, அவளுக்கு அது கூட மிரட்டிக் கேட்பது போல் தான் இருந்தது.

கயல் மிரண்டு, “இல்ல அது அது…” என்று திணற, பூவரசி வேகமாக, “அது ஒன்னும் இல்ல சாரு. அக்கா நான் இந்த கல்லை தூக்குனதை பார்த்துட்டு, அவகளும் தூக்கணும்னு சொன்னாகளா. ஆனால் அவகளால நகட்ட கூட முடியல” என்று சொல்லி முடிக்கும் முன்பே, பூவரசியிடம் “கெட் இட் அவேய்…” என்று அந்த கல்லைக்காட்டி கத்த, அதில் பூவரசி தான் திருதிருவென முழித்தாள்.

ஜீவா மேலும், “இடியட் எடுத்துட்டு போ இதை” என்று சொன்னதும், தப்பித்தோம் பிழைத்தோம் என்று அந்த கல்லை தூக்கி கொண்டு ஓடியே விட்டாள்.

கயல், ஜீவா கத்தியதில் அரண்டு நிற்க, அவளை அடிக்க கையை ஓங்கி, பின் தன்னை கட்டுபடுத்திக் கொண்டு, “அறிவில்லை உனக்கு… அவ்ளோ வெய்ட்ட அவள் தூக்குவா. நீ தூக்க முடியுமா…” என்று கத்தும் போதே, கயலுக்கு கண்ணில் இருந்து பொலபொலவென நீர் கொட்டியது.

அதில் மேலும் கோபமானவன், “முதல்ல அழுகையை நிறுத்து. கல்லை தூக்குறேன் கடப்பாரையை தூக்குறேன்னு, இனிமே எதாவது சாகசம் பண்ணு. அப்பறம் பார்த்துக்கறேன் உன்னை…” என்று பல்லைக்கடித்து திட்டு விட்டு, பின்னாடி திரும்பி, தலையை அழுந்த கோதி கோபத்தை கட்டுப்படுத்தி விட்டு,

மெல்லிய குரலில், “கை கால்ல அடிபட்டா என்ன ஆகும். உனக்கு ஒண்ணுன்னா என்னால தாங்க முடியாதுடி. இனிமே இப்படி பண்ணாத ஸ்வீட் ஹார்ட் ப்ளீஸ்” என்று கெஞ்சுவது போல் திரும்ப, அங்கு கயல் தான் இல்லை.

அவள் அவன் திட்டிவிட்டு திரும்பும் போதே, அங்கிருந்து சென்று விட்டாள். ‘ப்ச் இந்த பொண்ணு இருக்காளே, என்னை பைத்தியமா ஆக்காம விட மாட்டாள்… சே.’ என்று தரையை காலால் எத்திவிட்டு சென்றான்.

கல்லை வைத்து விட்டு நிமிர்ந்த பூவரசி, எதிரில் கலங்கிய கண்ணுடன், கயல் வருவது தெரிந்ததும், ‘இருந்தாலும் இத சாரு இம்புட்டு கோபப்படக்கூடாது’ என்று நினைத்து விட்டு,

“அக்கா சாரு ரொம்ப திட்டுனாரா…” என்று பாவமாய் கேட்க, கயல் “சாரி மா… என்னால தான் அவரு உன்னையும் திட்டிட்டாரு.” என்றவள், அங்கேயே ஒரு ஓரமாய் போய் அமர்ந்து விட, பூவரசிக்கு தான் என்னவோ போல் ஆகி விட்டது.

இந்த மக்களை  பார்த்தாலே, முகத்தை சுருக்கும் மனிதர்கள் மத்தியில், வந்த ஓர் நாளிலேயே, அங்கிருந்தவர்களிடம் நன்கு ஒன்றி விட்டால் கயல்.

அவளின் அமைதியான முகமும், அன்பான பேச்சும் பூவரசிக்கு மிகவும் பிடித்து விட்டது. அதனாலேயே அக்கா அக்கா என அவளை ஒட்டிக்கொண்டு திரிந்தாள்.

ஆனால் இப்போது ஜீவாவின் மேல் கடுங்கோபம் வர, நேராய் கார்த்தியின் குடிலுக்கு சென்று கண்டபடி திட்ட ஆரம்பித்தாள்.

கார்த்தி ஒன்றும் புரியாமல், எதுக்கு இப்படி உளறிக்கிட்டு இருக்காள் இவள் என்று நினைத்து என்னவென்று கேட்க, அவள் நடந்ததை கூறி, “இப்படியா திட்டுவாக. பாவம் அந்த அக்கா முகமே வாடி போச்சு… கல்லை தூக்கி ஏதோ அவக தலைல போட்ட மாதிரி.. அப்படி திட்டுறாக… கலியாணம் கட்டிக்கிட்டா என்ன வேணாலும் பேசலாமா. படிச்சவகளே இப்புடி இருக்கீக…” என்று தாறு மாறாய் பேச, கார்த்தி, அங்கிருந்த பானையை தொம்மென்று தள்ளி விட்டான்.

அதில் அவள், “யோவ், எதுக்குய்யா தள்ளிவிட்ட…” என்று அருகில் வர, கார்த்தி “என்னால கத்த முடியல அதான் அதை தள்ளி விட்டேன்…” என்று கோபத்தில் சிவக்க,

பூவரசி, அவனை முறைக்கவும் “இன்னொரு தடவை என் அண்ணனை பத்தி என்கிட்ட எதாவது சொன்னா… நான் மனுஷனாவே இருக்க மாட்டேன். போடி இங்க இருந்து.” என்றான் சினத்துடன்.

அவள் அசட்டையாக, “இங்காருய்யா… உன் அண்ணாரு கோபப்பட்டா தான் எனக்கு கொஞ்சூண்டு பயமா இருக்கு. நீ கோபப்படறதுலாம் என் அம்மையை விட சிரிப்பா இருக்கு” என்று தோளைக் குலுக்கி சொல்ல, அதில் அவளை பார்வையால்  சுட்டெரித்தவன், அவள் அதனை சிறிதும் கண்டுகொள்ளாததை கண்டு சிரித்து விட்டான்.

“ரைட்டு விடு” என்றவன்

“அண்ணா கோபப்பட்டது தப்பு தான். ஆனால் கயல் மேல இருக்குற அக்கறைல தான் கோபப்பட்டார்…” என்று சொல்ல, பூவரசி புரியாமல், “அக்கறை இருந்தா எப்படி கோபப்படுவாக” என்று கேட்க,

கார்த்தி, “உன் அம்மா உன்னை திட்டிகிட்டே தான இருக்காங்க. அதுக்காக அவங்களுக்கு உன் மேல அக்கறை இல்லைன்னு அர்த்தமா” என்க,

அவள் உடனே “இல்லையே… அவகளுக்கு நான் அவக தம்பியாரை கலியாணம் பண்ணிக்கனும்னு ஆச. அதை நான் பண்ணமாட்டேன்னு சொன்னதும் என்னை திட்டுறாக. என் ஐயாவை விட, என் அம்மைதான் என் மேல ரொம்ப பாசமா இருக்கும்” என்றாள் பெருமையாக.

கார்த்தி “ம்ம் அதே மாதிரி தான் வாசு அண்ணாவும்… அவள் கல்லை தூக்கி அடி பட்டுச்சுன்னா. அவளுக்கு இந்த காடுலாம் ரொம்ப புதுசு. அதான் திட்டிருப்பாங்க…” என்று அவனை சரியாக கணித்து சொல்ல,

பூவரசி, நாடியில் கை வைத்து, “ஆமால்ல…” என்று யோசிக்க, கார்த்தி “ஆமா தான்…” என்று அவளை அனுப்பியவன், மீண்டும் கயல் எப்படி என் அண்ணாவை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டா என்று தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான்.

பூவரசி நேராக கயலிடம் வந்து கார்த்தி சொன்னதை வெகுளியாய் ஒப்பிக்க, கயலோ, ‘ஆமா ரொம்ப அக்கறைதான்… அப்படி என் மேல கல்லு விழுந்தா சந்தோசம் தான் படுவாரு. இப்போ எனக்கு எதாவது ஆனா கார்த்திக்கு பதில் சொல்லணுமேன்னு தான், இப்படி நடந்துக்குறாரு…’ என்று நினைத்து கொண்டு, பேச்சை மாற்றினாள்.

இப்படியாக, அடுத்த மூன்று மணி நேரம் நகர கயல் ஒரு வித பதட்டத்திலேயே சுற்ற ஆரம்பித்தாள். கடந்த மூன்று மணி நேரமாக ஜீவா அவள் கண்ணில் தட்டுப்படவே இல்லை.

அங்கு அனைவரிடமும் ஜீவாவை பார்த்தார்களா என்று விசாரிக்க ஆரம்பித்தாள். அவர்கள் பார்க்கவில்லை என்றதும், மிகவும் பதட்டத்தில், பூவரசியிடம், “அவரை ரொம்ப நேரமா காணோம் பூவரசி. எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று தவிக்க,

அவள் “அக்கா, அவக இங்கன தான் எங்கயாவது இருப்பாக. அவக தம்பி குடில்ல இருப்பாக வாங்க போய் பார்க்கலாம்” என்று அழைத்து வர அங்கும் கார்த்தி மட்டும் தான் இருந்தான்.

அதில் மேலும் பதறியவள், “அவரு எங்கேயுமே இல்ல எங்க போனாருன்னு தெரியல” என்று புலம்ப  ஆரம்பிக்க,

கார்த்தி, “கயலு, அண்ணா இங்கதான் இருப்பாங்க. பொறுமையா தேடி பாரு” என்றான்.

கயல், “இல்லைடா… அவரு எங்கேயுமே இல்ல. நான் எல்லா இடத்துலயும் தேடி பார்த்துட்டேன்…” என்றவளுக்கு அவனை காணாமல் கண்ணெல்லாம் பூத்து விட்டது.

திட்டிக்கொண்டே என்றாலும் அவன் அருகில் இருக்கும் போது அவள் தனிமையாய் உணர்ந்ததில்லை. இப்போது மனதெங்கும், ரணமான வலியுடன், அவனைக் காணாத ஏக்கத்தில் அழுகவே ஆரம்பித்தாள்.

அதில் கார்த்தி பதறி, “ஹே என்ன கயல் நீ?  அண்ணாவுக்கு ஒன்னும் இருக்காது. அழுகாத” என்று சொல்லும்போதே, அங்கு அனைவரும் கூடி விட, இவளைக் காணமால் ஜீவா அதிரடியாய் ஆர்ப்பாட்டம் செய்ததை, கயல் அழுது கொண்டு செய்தாள்.

இவள் கண்ணீரில், பூவரசியின் அம்மாவே உருகி விட, “ஏ புள்ள… அவுக வந்துடுவாக நீ அழுவாத” என்று சமாதானப்படுத்த, அவள் கேட்கவே இல்லை.

சரியாக அப்போது, ஜீவாவும், மற்றும் அங்கிருந்த மலை வாழ் ஆட்களும் கையில் சில பொருட்களுடன் அங்கு வந்து சேர, ஜீவாவுக்கு தான் ஏன் இப்படி கும்பலாக நிக்கிறாங்க என்று புரியவில்லை. கயல் அவனை பார்த்ததும் தான் நிம்மதியே ஆனாள். அவன் பார்ப்பதற்கு முன் கண்ணீரை துடைத்துக் கொண்டவளை கண்டவன், “என்ன ஆச்சு” என்று கேட்க,

பூவரசி, “சாரு உங்களை காணலைன்னு அக்கா தவிச்சு புட்டாக. இப்படியா இம்புட்டு நேரம் கழிச்சு வாறது. இவ்வளவு நேரம் அக்கா அழுது ஒரே ஆர்ப்பாட்டம்” என்று சொல்லும்போதே, கயல் பூவரசியை சொல்லாதே என்று கிள்ளினாள்.

பூவரசி அதனைப் புரிந்து கொள்ளாமல், “அக்கா ஏன் என்னை கிள்ளுறீக. இவ்ளோ நேரம் எங்க போனாருனு கேட்டு அவுகளைத்தான் கிள்ளனும்…” என்று கேலி செய்ய, கயலோ அடிப்பாவி என்று தலையில் கை வைத்தாள்.

தன்னை காணாமல் தவித்தாளா என்று ஜீவா வானில் சிறகடித்துக் கொண்டிருக்க, கயலின் செயலில் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, “என்னை காணோம்னு அழுதேன்னு ஒத்துக்குறதுல உனக்கு என்னடி அவ்ளோ ஈகோ…” என்று அவளையே குறுகுறுவெனப் பார்க்க, கயல் குனிந்த தலையை நிமிரவே இல்லை.

கார்த்தி தான், இருவரும் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டத்தை பார்த்து மனதில் சிரித்து கொண்டிருந்தான். அதே நேரம், இருவருக்குள்ளும் ஏதோ சரி இல்லை என்று உணர்ந்தவன் ஊருக்கு சென்று இதுக்கு ஒரு முடிவெடுக்கலாம் என்று தீர்மானித்துக் கொண்டான்.

ஜீவா, கயலை கண்டுகொள்ளாமல், அவன் கொண்டு வந்த பொருட்களை அங்கு வைத்தான். கார்த்திக்கு வீல் சேர், மாத்திரைகள், மேலும் அவனுக்கு தேவையான உபகரணம் அனைத்தும் அங்கு இருந்தது. சிறிது டவர் கிடைக்கவும் ஜீவா அவனின் ஆட்களுக்கு தேவையான பொருட்களை குறுஞ்செய்தி அனுப்பி, ஜீப்பில் வரவைத்திருந்தான்.

இவர்களின் சம்பிரதாயத்தை கெடுக்க கூடாது என நினைத்து, ஜீப்பை அவர்களின் எல்லையில் நிற்க வைத்து, அங்கிருந்து பொருட்களை எடுத்து கொண்டு. வந்தான் பெரிய சாமியின் அனுமதியோடு.

கயல் எப்படி இதெல்லாம் வந்தது என்று ஆச்சர்யமாய் பார்க்க, கார்த்தி இதை நான் எதிர்பார்த்தேன் என்பது போல் இயல்பாகவே இருந்தான்.

கார்த்தியை வீல் சேரில் அமரவைத்து வெளியில் கூட்டிக்கொண்டு வர, எல்லாரும் அதனையே ஆச்சர்யமாய் பார்த்தனர். அன்று இரவு நடக்க இருக்கும் ஒரு சடங்கில் அனைவரும் கோவிலில் கூட, பெரியசாமியின் வேண்டுகோளுக்கிணங்க இவர்கள் மூவரும் கலந்து கொண்டனர்.

முதலில் ஏதோ ஒரு சிலையை நடுவில் வைத்து, சுற்றி நின்று அனைவரும் ஏதோ ஒரு தெம்மாங்கு பாட்டு பாட, பின், திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் எல்லாரும், கையை கத்தியால் லேசாக கிழித்து, அந்த சிலையில் சில சொட்டு இரத்தத்தை வடிய விட்டனர். கயலுக்கு தான் அதையெல்லாம் பார்த்து  மயக்கமே வந்துவிட்டது.

கார்த்தியோ “என்னடா ரத்தக்களரிலாம் ஆக்குறீங்க” என்று முழித்தான்.

மேலும் புதிதாக திருமணம் ஆன பெண்கள், அந்த சிலைக்கு, கற்பூரம் காட்டி, பொட்டு வைத்த வழி பட்டனர்.

சில சம்பிரதாயங்கள் ஜோடியாக செய்ய வேண்டும் என்பதும், அப்படி செய்தால், அவர்கள் என்றும் இணைபிரியாமல் இருப்பார்கள் என்பதும் அவர்களின் நம்பிக்கை. மொத்தமாக ஒன்பது ஜோடிகள் அந்த சம்பிரதாயத்தை செய்ய வேண்டும். ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் அந்த சடங்கில் அந்த ஐந்து வருடத்திற்குள் திருமணமான ஜோடிகள் கலந்து கொள்வர்.

ஆனால் இந்த வருடம், மொத்தம் எட்டு ஜோடிகள் மட்டுமே இருந்தனர். பூவரசிக்கும் சீக்கிரம் திருமணம் செய்து ஒன்பது ஜோடிகளாக்கி விட்டு, சம்பிரதாதயத்தை செய்யலாம் என்ற அவளின் தாய் முத்தாயியின் எண்ணத்தை தான் அவள் நடக்கவே விடவில்லையே. அதனால், அந்த சடங்கில் பூவரசியை திட்டிக்கொண்டு, இருக்க, ஒன்பதாவது ஜோடிக்கு என்ன செய்வது என்று முழிக்கையில்

பூவரசி, “ஐயோ இந்த சடங்கு மட்டும் நம்மளால கெட்டுச்சுன்னா அடுத்த அஞ்சு வருஷத்துக்கு என் அம்மை என்னை திட்டி தீர்த்துரும்” என்று நினைத்தவள், கயலை அழைத்து அந்த சடங்கை செய்ய சொன்னாள்.

கயலோ பேந்த பேந்த முழித்து “நா நானா… நான் எதுக்கு வேணாம் நீ பண்ணு” என்று மறுக்க,

அவள் “இது கல்யாணமானவங்க மட்டும் தான் பண்ணனும். கன்னி பொண்ணுங்க பண்ணக்கூடாது கா நீங்க வாங்க…” என்று கையைப் பிடித்து இழுக்க, அவளோ ஜீவாவை பாவமாக பார்த்தாள்.

கார்த்தி, இவள் ஏன் இவ்ளோ யோசிக்கிறா என்று புரியாமல், “போ கயல், அவங்க தான் ஏதோ சடங்குன்னு சொல்றாங்களே” என்று சொல்ல, கயலுக்கு தான் கடவுளே, இங்க இருந்து என்னை மறைய வச்சுரு என்று நொந்து கொண்டிருந்தாள்.

ஜீவா அவளின் பாவனையைக்க கண்டு உதட்டில் அடக்கிய சிரிப்புடன் நிற்க, பூவரசி, “சாரு நீங்க சொல்லுங்க அக்காட்ட. ரெண்டு பேரும் வந்து பண்ணுங்க” என்று அடம்பிடிக்க, கயல் “எனக்கு இதெல்லாம் எப்படி பண்றதுன்னு தெரியாது” என்று சமாளிக்க, மற்ற பெரியவர்களும் அவளை அழைத்தனர்.

ஜீவாவோ, “அவங்க தான் இவ்ளோ தூரம் சொல்றாங்கள்ல, போ கயல்” என்று  நல்லவன் போல் பேச, கயல் அவனை முறைத்தாள். அவளும் இவ்வளவு நேரம் அந்த சம்பிரதாயத்தை பார்த்து கொண்டு தானே இருந்தாள். அதில், இறுதியில் இருவரும் ஒருவருக்கொருவர் மாலை போட்டு, குங்குமம் வைத்து, இறுதியில் அந்த பெண் அவளின் மணமகனுக்கு நெற்றியில் முத்தம் இட வேண்டும்.

இதனை நினைத்தவள், முடியாது என்று தலையாட்ட, கார்த்தியோ “கயலு, உங்க கல்யாணத்தை தான் நான் பார்க்கவே இல்லை. இந்த சடங்குலாம் கல்யாணம் பண்ற மாதிரியே இருக்கு. ப்ளீஸ் கயல்…” என்று கெஞ்ச,

கயலோ ‘டேய் உன்னால தாண்டா இவ்ளோ பிரச்னையும் ஊருக்கு வா. உன்னை மலைல இருந்து உருட்டி விடறேன்’ என்று அவனை மனதிலேயே திட்டிக் கொண்டிருக்க, ஜீவாவோ, நக்கல் சிரிப்புடன் அவள் கை பிடித்து அழைத்துச் சென்றான்.

பூவரசி சொல்ல சொல்ல, அந்த சிலைக்கு தீபாராதனை காட்டி, அந்த சிலையில் சாத்தியிருந்த ஒரு எருக்கம்பூ மாலையை எடுத்து, ஜீவாவின் முன் நிற்க, அவன் அவளையே ரசித்துக் கொண்டிருந்தான்.

பூவரசி “அக்கா சாருக்கு மாலையை போடுங்க” என்று சொல்ல, மெல்ல அவன் அருகில் வந்தவள், கையை தூக்கி மாலையை போடப் போனவளுக்கு அவன் கழுத்து எட்டவே இல்லை.

அவன் வேண்டும் என்றே நன்றாக நிமிர்ந்து நின்றிருந்தான். கயல் மேலும் அருகில் வந்து, அவன் கழுத்தில் போட முயற்சி செய்ய, அவளால் முடியவே இல்லை.

தன்னிச்சையாக கண்கள் வேறு கலங்கி விட்டது அவளுக்கு. நிமிர்ந்து பாவமாய் அவனை பார்க்க, அவள் அவனைப் பார்த்ததும், சிறிது குனிந்து, அவள் கையை பிடித்து அந்த மாலையை அவன் கழுத்தில் போட்டு கொண்டான் அவள் கண்ணை பார்த்து கொண்டே.

அவளும் அவனை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மேல் விழியை அகற்றாமல் ஒரு மாலையை எடுத்து அவளை எவ்வளவு நெருங்க முடியுமோ அவ்வளவு நெருங்கி அவள் கழுத்தில் மாலை இட, அவளுக்கு கண்ணில் இருந்து நீர் உருண்டோடியது.

எவ்வளவு ஆசையாக திருமணம் செய்ய எண்ணி இருந்தேன்…
கண்ணில் காதலுடனும் மனதில் மகிழ்ச்சியுடனும்,
அனைத்தையும் சுக்கு நூறாக உடைத்து விட்டாயே…

அன்று கோபத்தில் மாலையிட்டாய்,
இன்று, உன் கண்ணில் தெரிவது என்ன?
என்னை அடக்க நினைக்கும் உன் அடக்குமுறையா.
இல்லை… உன் சகோதரனுக்காய் செய்யும் போலி நாடகமா.

நாடகம் தான் நான் உணர்ந்து கொள்கிறேன்.
நடிப்பது உனக்கென்ன புதிதா…
உன் கைபொம்மையாய் நீ என்னை ஆட்டுவிக்க,
என் மனமும் வெட்கமில்லாமல்… உன்னையே எதிர்பார்க்கிறது
இப்பொழுதாவது காதலாகி மாலை இட மாட்டாயா என்று…

என்று நினைத்து அவள் மனமே இரண்டாய் உடைய, ஜீவாவோ, அந்த குங்குமத்தை எடுத்து, அவள் நெற்றியில் அழுத்தமாய் வைத்து, அவளுக்கு பதிலாய் அவனே மென்மையாய் நெற்றியில் முத்தமிட்டான். மனம் முழுதும் நிரம்பி வழியும் காதலுடன்.

என்றுமே எனக்கானவள் நீதானடி…
அன்று கோபத்தில் உன்னை கரம் பிடித்திருந்தாலும்,
மனதில் ஏற்பட்ட நிம்மதியை எவ்வாறடி எடுத்துரைப்பேன்…
உன்னை காயப்படுத்தியதில்
என் இதயமும் தன்னிச்சையாய் காயப்பட்டதை
புரிந்து கொள்ளடி பெண்ணே…

உன்னை காதலித்தவாறு போலியாய் நடித்தாலும்…
உன் மேல் கோபம் கொண்டு உன்னை ரணப்படுத்தினாலும்,
நீயே என் உயிரென்று எப்படியடி உணர வைப்பேன்…

அன்பை காட்ட தெரியவில்லையடி எனக்கு…
உன் கெண்டை மீன் விழி கொண்டு
கற்றுக்கொடுத்து விடு கண்ணே…
உன்னை காதலில் திணற வைக்க காத்திருக்கிறேன்…

என்று இரு மனமும், மனதிலேயே காதலை சொல்லி, கத்தி கொண்டிருக்க, அவனின் முத்தம், அவளுக்கு உயிர் வரை சென்று  ஊடுருவ, அமைதியாய் அவள் குடிலுக்கு வந்து விட்டாள். அவள் சென்ற திசையையே ஏக்கமாக பார்த்திருக்க ஜீவாவை கண்ட கார்த்திக்கு, அவனின் ஏக்கப் பார்வை என்னவோ செய்தது.

அவனுக்கு  தெரியுமே, அவனின் அண்ணன் எதற்கும் ஆசைப்பட்டதும் இல்லை. எதை நினைத்தும் ஏக்கம் கொண்டதும் இல்லை என்று. நடப்பது ஒன்றும் புரியாமல் அவனும் வீல் சேரை தள்ளி கொண்டு சென்று விட, ஜீவா குடிலை நோக்கி சென்றான்.

குடிலில் ஒரு ஓரமாக அவள் அமர்ந்திருக்க, மெதுவாக அவள் அருகில் சென்றவன், “ஸ்வீட் ஹார்ட்” என்று மெல்லிய குரலில், அழைக்க, அடுத்து அவள் சொன்ன செய்தியில் அவளை பளாரென அறைந்திருந்தான்.

நேசம் தொடரும்..
-மேகா..

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
28
+1
79
+1
4
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்