Loading

என்று முதல் உன்னவன் நான்
நின்கரம் சேர்வேனோ…?
அன்று முதல் உன் உதிரத்தில்
உறைந்தே கரைந்திருப்பேன்…!
புதிதான வாய்ப்பொன்றை
வாழ்க்கையாக நீ தந்தால்!

என்று அவளுக்கு வந்த குறுஞ்செய்தி ஒன்றை, கண்ணெடுக்காமல் வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தவள், ஒரு முறை கண்ணைப் பிரித்து, அறையின் சாளரம் வழியே தெரிந்த, அந்தச் சிறு மலர் தோட்டத்தைப் பார்வையால் வருடினாள்.

சில நொடிகளில் அவள் தன் தளிர் விரல்களைக் கொண்டு, அந்தக் குறுஞ்செய்தியை அழித்துக் குப்பையில் போட்டு விட்டு, மீண்டும் வெளியில் வெறிக்க, இன்னும் ஒரு குறுஞ்செய்தி அவள் கோபத்தைக் கிளறயது.

கேள்வியுடன் நீ!
கேள்வியாகவே நான்! – அப்போது
பதிலுடன் நான்!
பதிலாகவே நீ! – இப்போது
மன்னிக்கமாட்டாயா மந்தாகையே?

என உருகிய படி அனுப்பி இருக்க, சிவந்த விழிகளுடன் செல்பேசியை அணைத்துத் தூர வைத்தாள்.
பின் ஏதேதோ நினைவுகளில் சிக்கித் தவித்தவள், தோள்களில் விரிந்திருந்த கூந்தலை அள்ளி முடிந்து, குளியறைக்குள் புகுந்தாள்.

சில பல நிமிடங்களில் சர சரக்கும் லாவெண்டர் வண்ண காட்டன் புடவையில், வெளியில் வந்தவள் கண்ணாடி முன் நின்று தலையைத் துவட்ட, சட்டென்று அவள் பின்னிருந்து அவளவன் “இந்தக் கலர் புடவை உனக்கு நச்சுன்னு இருக்கு ஸ்வீட்டி” என்று சொல்வது போல் இருக்க, சட்டென்று திரும்பிப் பார்த்தவள், அதன் பிறகே அது மாயை என்றறிந்தாள்.

பிரம்மையிலும் அவளவன் வருகையில் அவள் கன்னம் சிவப்பேறி இருக்க, கண்ணில் நீர் தேங்கி இருந்தது.

கையில் வைத்திருந்த அலைபேசியை வெகுநேரம் உற்று நோக்கிக் கொண்டிருந்தவன், பதிலேதும் வராமல் இருந்ததில் பெரு மூச்சொன்றை விட்டு, அலுவலகம் கிளம்ப ஆயத்தமானான்.

கண்ணாடி முன் நின்று தலையை அழுந்த வாரியவனின் முன்னே, அவனவள் “ஏன் இப்படி ஸ்கூல் பசங்க மாதிரி வழிச்சு சீவுறீங்க…?” என்று அவன் முன் நெற்றி முடிகளில் சிலவற்றை எடுத்து அவனின் பரந்த நெற்றியில் பரப்பி விட்டு “சூப்பர்” என ‘சைகை’ காட்ட, அதில் பளீர் புன்னகையை சிந்தியவன், நிமிர்ந்து பார்த்ததில் அவள் காற்றோடு காற்றாகி இருந்தாள்.

“கனவா?” என்று தன் தலையில் தன்னையே அடித்துக் கொண்டவன், அவள் விருப்பப்படி சிகையை வாரி விட்டு, வெளியில் வந்து மகிழுந்தைக் கிளப்பினான்.
வீட்டிலிருந்து கிளம்பியவள், அணைத்து வைத்த செல்பேசிக்கு மீண்டும் உயிர் கொடுத்து, அதில் ஒரு எண்ணை அழுத்த, எதிர்முனையில்…

“ஹாய் ஹரி, கிளம்பிட்டியா? சாரி பா. நான் முன்னாடியே சொல்லனும்னு நினைச்சேன். இன்னைக்கு நீ நேரா ‘பார்க் ஹோட்டலுக்கு வந்துடு. அங்கதான் மீட்டிங் நடக்குது.” என்று படபடவென மொழிந்தான் அவளின் ஆருயிர் தோழன் சாத்விக்.

அதற்கு “ஹ்ம்ம் நான் வந்துடறேன்.” என்ற பதிலை மட்டும் அளித்தவள், அவன் சொன்ன இடத்திற்கு விரைந்தாள்.

காரில் சென்று கொண்டிருந்தவன், கையில் வைத்திருந்த செல்போனில்

எங்குத் திரும்பினாலும் நிலவின் வடிவம்…!!!
நான் மட்டுமே அறிவேன்
அது உன் மலர் முகம் என்று!!!!

எனத் தட்டச்சு செய்து அனுப்ப, ஏற்கனவே அவள் வந்த ஆட்டோ பஞ்சர் ஆன கடுப்பில் இருந்தவள், இதனைக் கண்டதும் மேலும் கடுப்பனாள்.

அவள் கோபப்பட்டதின் அடையாளமாக அவளின் உதட்டை அழுந்தக் கடிக்க, மேலும் ஒரு குறுஞ்செய்தி அவளைத் தழுவியது.

கோபம் மேலேயே கோபம் வருகிறது,
உன் இதழை நீயே காயப்படுத்துவது கண்டு!
உன் இதழ் மேலேயே மோகம் வருகிறது,
என் பற்களால் அதனை வதம் செய்ய வேண்டும் என்று!

அதில் திகைத்தவள் திருதிருவென விழித்துச் சுற்றும் முற்றும் பார்க்க, அவள் சந்தேகித்தது போலவே எதிரில் இருந்த மகிழுந்தில் சாய்ந்து, அவளைக் குறும்புடன் பார்த்த படி அவன் நின்றிருந்தான்.

அவனைக் கண்டதும் அவள் விழிகள் அவளின் பேச்சை மீறி அவனிடமே விழ முயல, முயன்று அதனை மறுத்து கோபக்கனலுடன் அவனை நோக்கினாள்.

அவன் மெல்ல அருகில் வர, அவளுக்கு இதயம் படபடவென அடித்துக் கொண்டது. அவனோ “என்ன ஆச்சு” என்று அவளிடம் கேட்பது போல ஆட்டோ ஒட்டுனரிடம் வினவினான்.

அவர் “பஞ்சர் சார். இந்தம்மா வேற விரசா எங்கயோ போவனுமாம்…” என்று கேட்ட கேள்விக்கு அதிகமான பதிலைக் கொடுத்ததில்,
அவள், “நான் அவசரமா போகனும்னுலாம் சொல்லல. நீங்கப் பொறுமையா ரெடி பண்ணுங்க…” என்று அழுத்தமாகச் சொல்ல,
அந்த ஓட்டுநர் தான் ‘சிறிது நேரம் முன்பு இந்தப் பெண் தானே அவசரப்படுத்தினாள்’ என்று தலையைச் சொரிந்தார்.

அவனோ, “ஓ அப்புறம் என்ன டிரைவர் அண்ணா! அந்த மேடமுக்கு தான் அவசரம் இல்லையே…! நீங்களே பார்த்துக் கூட்டிட்டு வாங்க. சாயந்தரம் ஆனாலும் பரவாயில்ல.” என்று அவளைக் கேலியுடன் பார்த்து விட்டு, அவன் காரை நோக்கி நகர்ந்தான்.

இதற்கிடையில், சாத்விக் வேறு, பல முறை அவளுக்குப் போன் செய்து சீக்கிரம் வரச் சொல்ல, அவள் தான், ‘சே மீட்டிங்க்கு வேற டைம் ஆச்சு. இப்போன்னு பார்த்து ஒரு ஆட்டோ கூட வரல’ என்று நொந்தவள் சாலையைப் பார்க்க, அவளவன் கார் கதவைத் திறந்து வைத்து, என்ஜினை ஸ்டார்ட் செய்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் அழுத்தமாக அங்கேயே நிற்க, அவனின் என்ஜின் சத்தம் அவன் கொடுத்த ஆக்சிலேட்டரின் அழுத்தத்தில் மேலும் அதிகரிக்க, அவளோ அசையாமல் நின்றிருந்தாள்.

‘அப்போ நீ வரமாட்டீல?’ என்று அடிபட்ட பார்வை ஒன்றை பார்த்தவன்,
“ஐ டிசர்வ் திஸ் ஸ்வீட்டி” என நினைத்து விட்டு, காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டான். அவன் சென்ற திசையையே வெறித்தவளின், மனம் தீயாக வெந்து போனது.

ஆனால் சில நிமிடங்களில், அவன் கார் அவளை நோக்கித் திரும்பி வந்தது, பின்னால் ஒரு ஆட்டோவுடன். அவளுக்கு முன்னே காரை நிறுத்தியவன், அவன் அழைத்து வந்த ஆட்டோ ஓட்டுனரிடம் “பார்க் ஹோட்டல்ல இறக்கி விட்டுடுங்க.” என்று அவளுக்கு கண்ணைக் காட்ட,
அவளோ ‘இவருக்கு எப்படி நான் அங்கு போவது தெரிந்தது’ என விழித்து விட்டு,
பின் ‘டேய் எருமை நீ பார்த்த வேலை தானா இது’ என்று சாத்விக்கிற்கு மனதினுள்ளேயே அர்ச்சனை செய்ய, அதில் அவனுக்குப் புரை ஏறியது.

‘நம்ம தோழி நம்மளை கரிச்சு கொட்டுறாங்க போலயே… இப்படி இருமல் வருது?’ என்று மிரண்டான்.
பின் வேறு வழியில்லாது ஆட்டோவில் ஏறியவள், பார்க் ஹோட்டலை சென்றடைய, உள்ளே சென்றவள் ரிசப்ஷன் பெண்ணிடம், “மீட்டிங் நடக்கும் ஹால் எங்க?” என்று வினவினாள்.

அந்தப் பெண், “உங்க குட் நேம் மேம்?” எனக் கேட்க,
“ஹரிதா” என்று அவள் சொல்லும் முன்பே,
அவளுக்கு அருகிலிருந்து, ஒரு கம்பீரமான ஆண் குரல் “Mrs. ஹரிதா புகழேந்தி” என்றதில், அவள் கோபத்துடன் திரும்பினாள்.

அவன் பின்னே வரவில்லை என்று நிம்மதியாக உள்ளே வந்தவள், திடீரென்ற அவன் வரவைக் கண்டு அதிர, ‘நீ போற இடம் தெரிஞ்சும், உன் பின்னாடி வரலைன்னா நான் என்னடி புருஷன்?’ என்று அவளைக் குறும்பு மின்னப் பார்த்தான்.

அதில் இறுகியவள் அந்தப் பெண்ணிடம் “ஹால் எங்க இருக்கு?” என்று காரமாகக் கேட்க, அந்தப் பெண் தான் ஒன்றும் புரியாமல் இருவரையும் பார்த்து விட்டு,
“மேம் உங்க நேம் ஹரிதா புகழேந்தின்னு எழுதிடவா மேம்?” எனக் கேட்டாள்.

அவள் பேசும் முன், அவன் “சியூர்… இதுல என்ன டவுட் உங்களுக்கு?” என்று கேட்டு விட்டு,
“அப்படியே என் பேரையும் ஸ்டோர் பண்ணிடுங்க. நானும் மீட்டிங்க்கு தான் வந்துருக்கேன்…” என்றவன்,
“ஐ ஆம் புகழேந்தி ஹரிதா!” என்றான் அவனின் மனையாளை பார்வையால் சீண்டிக் கொண்டு.
அதில் அவள் அவனைத் தீயாக முறைத்து விட்டு, விறுவிறுவென அவனை விட்டு விலகி நடக்க, “டோய்ங்” என்று அவளின் அலைபேசி சத்தம் கொடுத்தது.

அதில்
உன் பெருங்கடலளவு கோபத்தின்
ஆழம் புரியாமல்!
கரை தொடும் அலைகளிலேயே
தேடிக் கொண்டிருக்கிறேன்!
என்னுடனான உன் காதலை!!!
என்று வந்திருக்க, ஒரு நொடி நின்றவள் அந்தக் குறுஞ்செய்தியை அழித்து விட்டுத் திரும்பிப் பாராமல் செல்ல, புகழின் மனம் தான் “சாரி ஸ்வீட்டி…!” என்று தன்னவளிடம் மானசீகமாக மன்னிப்பு வேண்டியது.

அலைகள் தீண்டும்

மேகா

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
20
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்