Loading

தொடுவானம்

அத்தியாயம் – 01

அன்னை தெரசா மகளிர் விடுதி

பலகணியின் திரைச்சீலையை மெல்ல விலக்கவும் அவளது முகத்தின் நேரே சூரிய ஒளி பட்டுத் தெறித்தது. அவளது இமைகள் மூடியிருக்க, சூரியக்கதிரை தன் தேகத்தினுள் உள்வாங்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். அதனைத் தடுக்கும் விதமாக அவளது வலகரத்தில் இருந்த காஃபி டம்ளரில் இருந்து வெளியேறிய ஆவி அவளது இதழ்களை வருடிக் கொண்டிருந்தது.

அந்நேரம் அவளது அலைப்பேசி சிணுங்க, “ப்ச்” என நொச்சுக் கொட்டலோடு தனது அலைப்பேசியைத் தேடினாள் சரயு. அதுவோ அவளது தலைக்கு மேலே சப்தம் போட, அப்பொழுது தான் அந்த அறையினுள் நுழைந்த சம்யுக்தா, “ச்ச, இந்த வார்டன் தொல்லை பெருந்தொல்லையா போச்சு” எனப் புலம்பிக் கொண்டே சரயுவின் அருகில் வந்தவள், “என்னத்த தேடுற டி?” என்றாள்.

“என் ஃபோன தான் தேடுறேன். எங்க சத்தம் போடுதுனே தெரியல” என அவள் அருகில் இருந்த கட்டிலில் போர்வையை எல்லாம் கலைத்துக் கொண்டிருக்க, “மேல் காட்ல இருக்கு டி” என்றவாறே சம்யுக்தா மேல் கட்டிலில் இருந்த போர்வையை விலக்கி அதற்குள் இருந்த அலைப்பேசியை எடுத்தவள், அவளிடம் நீட்டினாள்.

தொடுதிரையில் மின்னிய பெயரைக் கண்டவள், மீண்டும் பொத்தென அந்த அலைப்பேசியை கட்டிலின் மீது போட்டாள் சரயு. “ஏன் டி, யார் ஃபோன்ல” என்றவாறே அலைப்பேசியை எடுத்துப் பார்க்க அதில் ‘அம்மா’ என மின்னியது.

“மேடமுக்கு அம்மா மேல என்ன கோபம்?” என்றாள் சம்யுக்தா புன்னகைத்தவாறே. “அந்த தாய்க்கிழவிக்கு வேற வேல இல்ல, எப்ப பார்த்தாலும் ஏதாவது சொல்லிக்கிட்டு கெடக்கும். விடு, பாத்துக்கலாம்” என்றவள் விட்ட பணியை தொடர நினைத்து பலகணி அருகே மீண்டும் சென்றாள்.

மீண்டும் அலைப்பேசி சிணுங்க, “அத எடுத்து ரெண்டு வார்த்தை பேசிட்டு தான் வையேன் டி” என அலைப்பேசியை எடுத்து அவளது கரத்தில் திணித்தாள் சம்யுக்தா.

கடுப்புடன் அழைப்பை ஏற்றவள், “சொல்லு மா” என்க, “ஏன் டி, எத்தன வாட்டி கூப்டறேன் ஒரு ஃபோன எடுக்க எவ்ளோ நேரம்?” என பொரிந்துத் தள்ளினார் எதிர்முனையில்.

“இப்ப என்ன தங்கம்மா உனக்கு வேணும்? அதான் அட்டெண்ட் பண்ணிட்டேன்ல… சொல்லித் தொல, நிம்மதியா ஒரு டீய குடிக்க விடுறியா?” என்க, அவள் அருகில் இருந்தவளோ, “அது காஃபி” என அவள் கையில் இருந்த டம்பளரை பார்த்து இதழை மடித்து புன்னகைக்க, அவளை ஏகத்துக்கும் முறைத்து வைத்தாள் சரயு.

“ஆமா டி, நான் எப்ப ஃபோன் பண்ணாலும் காத கடி. புள்ள நூறு மைல் தாண்டி தனியா கெடக்கறாளேனு வெசனத்துல கூப்ட்டா இவ என்னமோ காலுல சலங்கைய கட்டிக்கிட்டு ஆடறா” என தாவக்கொட்டையை சிலுப்பிக் கொண்டார்.

“சரி, இப்ப என்ன சொல்லு… இன்னிக்கு எந்த கோவிலு போன, என்ன வேண்டிக்கிட்ட. இத சொல்லத் தான வேகமா கூப்ட்ருப்ப” என்றாள் வேண்டாவெறுப்பாய்.

“ஏன்டி இத்தன சலிச்சுக்கிற, என் மனசுல கெடக்கிறத பொலம்புறதுக்கு கூட எனக்கு ஆளில்லாம போச்சு. நான் பெத்தது கூட என் பேச்ச கேட்க மாட்டேங்கிதுங்க” என ஒப்பாரி வைக்காத குறையாய் அவர் புலம்பலை ஆரம்பிக்க, தனது காது ஜவ்வினை கிழிக்காமல் தன் அன்னை ஓய மாட்டார் என்பதை உணர்ந்த சரயு, “அய்யோ தங்கக்கட்டி… இப்போ என்ன, நீ சொல்றத நான் கேட்கணும் அவ்ளோ தான. சொல்லும், சொல்லித் தொலையும்” என்றாள் அவசர அவசரமாக.

“நான் என்னத்த டி உங்களுக்கு கெடுதல் பண்ண போறேன். நீயும் உன் அண்ணனும் நல்லா இருக்கணும்னு தான கோவில் கோவிலா வேண்டிக்கிட்டு கெடக்கிறேன்” என்றவர் மூக்கை உறிஞ்ச, ‘எங்க நல்லதுக்கு எங்க நல்லதுக்குனு சொல்லி சொல்லியே ஒருத்தன் மனச கொல்ல பாத்துட்டு இருக்க. இதுல மூக்க வேற அடிக்கடி உறிஞ்சிக்கிறது’ என அவள் மனம் நொடித்தாலும் இதனை வெளியே கூறி அதற்கும் ஒரு ஒருமணி நேரம் அவரின் புலம்பலை கேட்க மனமில்லாமல், “ம்மா, எங்க நல்லதுக்கு தான் பண்ற சரி. இப்படி கோவில் கோவிலா அலையறதுக்கு பிரஷாந்த்கிட்டயே பேசிறலாம்ல” என்றாள் பொறுமையாக.

“நான் சொல்றத உன் அண்ணன் கேட்பானா டி? அவன்தான் பிடிவாதகாரனாச்சே. இந்தா இன்னிக்கு கூட நம்ம சொந்தத்துல பொண்ணு ஒன்னு இருக்குனு பக்கத்து வீட்டு முருகேசன் மாமா சொன்னாரு. உன் அப்பா தான் எதையும் கண்டுக்காம எல்லாத்தையும் என் தலைல கட்டிட்டு வேல வேலனு தோட்டத்துலயே இருக்காரு. நீயாச்சும் அவன்கிட்ட பேசுனா என்னவாம் டி, அவன் உன் அண்ணன் தான… அவன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான நான் நினைக்கிறேன். ஆனா நீயும் என்னை எதிரிய பாக்கிற மாதிரியே பாத்தா நான் என்னத்த டி பண்ணுவேன்” என நீண்ட புலம்பல் ஒன்றை கொட்டிவிட இதற்கு என்ன பதிலளிப்பது எனத் தெரியாமல் முழித்தாள் சரயு.

தன் அண்ணனை பற்றிதான் தெரிந்தவளாயிற்றே. அவள் எப்படி அவனிடம் இதனைப் பற்றி பேச முடியும். “சரயு கண்ணு, லைன்ல இருக்கியா மா?” என்ற தன் அன்னையின் அழைப்பில் மீண்டவள், “ம்… இருக்கேன் மா, கொஞ்சம் டைம் குடு மா. அவன்கிட்ட பேசி பாக்கிறேன்” என்றவள் ஓரிரண்டு வார்த்தைகளை பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவளின் முகமோ தீவிர யோசனையில் இருந்தது.

அவளின் முகத்தை ஏறிட்ட சம்யுக்தா, “என்ன டி, அம்மா என்ன சொன்னாங்க? ஊர்ல எதும் பிரச்சினையா?” என்றாள்.

“ப்ச், ஊர்ல இல்ல டி. எல்லாம் வீட்ல தான். பிரஷாந்த்க்கு ஒரு பொண்ணு பாத்துருக்காம். அதான்…” என அவள் இழுக்க,

“ஹேய் சூப்பர், அப்போ கல்யாண சாப்பாடு ரெடியா! அண்ணா என்ன சொல்றாங்க, ஓகே வா?” என படபடத்தாள் சம்யுக்தா.

அவளை முறைத்தவள், “கல்யாண சாப்பாடு… அது ஒன்னு தான் இங்க கொற” என்றவாறே சோர்வாக கட்டிலில் அமர்ந்தாள் சரயு.

“ஏன் டி, அண்ணா பொண்ணு பிடிக்கலனு சொல்லிட்டாங்களா? அதான் அம்மா உன்கிட்ட பேச சொன்னாங்களா?” என இவளே ஒரு கற்பனை கதையை உருவாக்கி இருக்க, தன் தோழியை முறைத்தாள் சரயு.

“ஏன் டி மொறைக்கிற” என பாவமாய் பார்த்து வைத்தாள் சம்யுக்தா.

“இல்ல சம்யு, இது வேற மாதிரி பிரச்சினை. அண்ணா என் மாமா பொண்ண லவ் பண்றான்” என்றவள் எங்கோ வெறித்துக் கொண்டிருக்க, “ஹேய் செம செம… அப்போ இது அரேன்ஜ் இல்லயா லவ்வா!” என குஷியாய் வினவ,

“ஏன் டி உனக்கு மட்டும் கற்பனை குதிரை எட்டூருக்கு பாய்து. முழுசா எதையும் கேட்க மாட்டியா” என்றவளை “ஏன் டி, அப்போ இதுவும் இல்லயா?” என அவள் உதட்டைப் பிதுக்க அதில் சிரித்தவள், “இது பெரிய கதை டி. அம்மாவுக்கும் அண்ணா லவ் பண்ற விசயம் தெரியும். அது தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் தீவிரமா பொண்ணு தேட ஆரம்பிக்குது” என்றாள் சரயு.

“மாமா பொண்ண தான உன் அண்ணா லவ் பண்றாங்க. அப்போ ரெண்டு வீட்டுக்கு எந்த பிரச்சனையும் இருக்காதே. அப்புறம் எதுக்கு டி உன் அம்மா வெளிய பொண்ணு பாக்கணும்?” என்றவள், “உங்க வீட்டுக்கும் உன் மாமா வீட்டுக்கும் எதும் சண்டையா டி, அதுனால அம்மா உங்க மாமா பொண்ண வேண்டாம்னு சொல்றாங்களோ?” என்றாள் குழப்பமாய்.

“அதெல்லாம் இல்ல டி. ரெண்டு குடும்பமும் ஒரே தட்டுல சாப்பிடாத குறையா சொந்தம் கொண்டாடறவங்க. ஆனா கல்யாணம்னு வரும்போது தான் ஏகப்பட்ட கண்டிஷன அள்ளி தெளிக்கறாங்களே” என்றவள் கட்டிலில் இருந்து எழுந்து மீண்டும் பலகணி அருகே சென்றாள் சரயு.

“நகை, சொத்து இந்த மாதிரியா டி?” என்றாள் சம்யுக்தா. இல்லை என தலையாட்டினாள் அவள்.

‘வேற என்ன’ என யோசித்தவள், “ஒருவேள உன் மாமா பொண்ணு கொஞ்சம் சுமாரோ” என்க, “நானும் அவளும் ஒரே வயசு சம்யு, என்னை விட பாக்க ஆள் செமயா இருப்பா” என்றவள் மீண்டும் எங்கையோ வெறித்து நோக்கினாள்.

“அப்புறம் என்ன தான் டி பிரச்சினை உங்களுக்கு? உன் அண்ணா லவ் பண்ற பொண்ணு உன் மாமா பொண்ணு, ஆளும் பாக்க நல்லா இருக்கும்னு சொல்ற. உங்களுக்கு ஈக்குவலான ஸ்டேட்டஸ் உள்ள குடும்பம். வேற என்ன தான் பிரச்சினை?” என்றவள் குழம்பிப் போய் பார்க்க,

“அதெல்லாம் இப்போ சொன்னா உனக்கு புரியாது டி. போக போக சொல்றேன்” என்றவள் அத்தோடு பேச்சு முடிந்ததாய் அவள் மீண்டும் வேடிக்கைப் பார்க்க, “என்னமோ போ… ஆனா இதுக்கு எதுக்கு அம்மா கோவில் கோவிலா போகணும்?” என்றாள் சம்யுக்தா.

“வேற என்ன… என் அண்ணன் ரேவதிய மறந்துட்டு என் அம்மா சொல்ற பொண்ண கட்டிக்கணும். அதுக்கு தான், அதோட இப்போதைய ஒரே வேண்டுதல் இது மட்டும் தான். அதான் மாசத்துக்கு பத்து கோவிலாச்சும் ஏறி இறங்கிருது” என்றவள், “ப்ளீஸ் டி, இதுக்கு மேலயும் கேள்வி கேட்டு என்னை கொன்றாத. ஆல்ரெடி தங்கம்மா பேசுனதுலயே நான் டயர்ட் ஆகிட்டேன். இன்னும் பதில் சொல்ல எனக்கு தெம்பு இல்ல மா” என்றாள்.

தன் தலையை தாங்கியவள், “ஒன்னும் புரியல, சொல்லத் தெரியல… ” என பாடிக் கொண்டே குளியல் அறைக்குள் தன்னை புகுத்திக் கொண்டாள் சம்யுக்தா.

ஆனால் இங்கு சரயுவின் மனமோ அலைப்பாய்ந்துக் கொண்டிருந்தது. இதுவரை நாவிற்கு இதமாய் இருந்த காஃபி தற்போது திகட்ட ஆரம்பிக்க கண்களை இறுக மூடினாள்.

சரயு, சொந்த ஊர் திண்டுக்கல் அருகே ஒரு குக்கிராமம். முத்துச்சாமி – தங்கம்மாளின் செல்வ புதல்வி. பிரஷாந்த் அவளின் அண்ணன். ஆஸ்திக்கொன்றும் ஆசைக்கொன்றும் கொண்ட அளவான குடும்பம். தற்போது கோவை மாநகரம், சரவணம்பட்டியில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரி ஒன்றில் முதுகலை கணிதம் பயின்று வருகிறாள். இதுவரை கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தவள் கடைசி வருடம் மட்டும் தனியார் விடுதியில் தங்கி படிக்க விருப்பப்பட்டு தற்போது கல்லூரிக்கு அருகிலே உள்ள அன்னை தெரசா மகளிர் விடுதியில் தன் தோழியுடன் தங்கி உள்ளாள்.

“ப்பா” என மழலை மொழியில் காலில் மாட்டி இருந்த கொலுசொலி சப்தத்தை கேட்டு குதூகலித்தவாறே தன் தந்தையை அழைத்துக் கொண்டிருந்தாள் இதழிகா.

இதழிகாவின் அழைப்பு அவளது தந்தைக்கு கேட்டதோ இல்லையோ சரயுவின் காதை இதமாய் வருடிச் சென்றது.

தன் இமைகளைத் திறந்தவள் பலகணி வழியே சப்தம் வந்த திசை நோக்கி எட்டிப் பார்த்தாள். அங்கே இளஞ்சிவப்பு வண்ண பிராக்கில் ஒரு குட்டி தேவதை தன் காலில் அணிந்திருந்த புது கொலுசை ஆசையாய் பார்த்துக் கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல் அதன் சப்தத்தை கேட்க அடிக்கடி குதித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.

சரயுவின் மனம் குழந்தையின் புறம் சாய, அவளது இதழ்கள் “கியூட்டி” என முணுமுணுத்தது.

அவளது மனதை சற்று இதமாக்கி இருந்தது அந்த குட்டி தேவதை. “இதழி மா” என்றவாறே ஒருவன் வந்து அந்த குழந்தையைத் தூக்கிக் கொஞ்சிக் கொண்டிருக்க அவன் மறுபுறம் திரும்பி இருந்ததால் அவனின் முதுகை மட்டுமே காணப் பெற்றாள் சரயு.

அதற்குள் அவர்களின் வீட்டினுள் இருந்து அழைக்கும் சப்தம் கேட்க, “இதோ வரேன் மா” என்றவாறே இதழிகாவை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றான் சித்தார்த்.

தனது தந்தையின் முதுகில் கோலமிட்டவாறே இதழிகா மகளிர் விடுதியை பார்க்க சரயுவின் கைகள் தானாய், “ஹாய்” என அசைந்தது. அவளை கண்டுக் கொண்ட இதழிகா புன்னகை உறைய கைகளை ஆட்ட, அதற்குள் சித்தார்த் இதழிகாவை வீட்டினுள் அழைத்துச் சென்று விட்டான்.

அவர்களது விடுதிக்கு அருகிலே உள்ள வீடு என்பதால் அவளது கண்கள் அனிச்சையாய் அந்த வீட்டை அளவெடுத்தது.

அளவில் பெரிதும் அல்லாமல் சிறிதும் அல்லாமல் நடுத்தரமான வீடு. வீட்டிற்கு வெளியே காற்றோட்டமான போர்டிகோ. சுற்றுச்சுவர் அருகில் சிறுசிறு பூந்தொட்டிகள் அலங்கரித்துக் கொண்டிருந்தது. சரயுவின் அறை தரைத்தளத்தில் அமைந்திருந்ததால் அந்த வீட்டிற்கு நேராக இருந்தது அவர்களது அறையின் பலகணி. மீண்டும் அந்த குட்டி தேவதை தெரிவாளா என்ற ஆவலோடு அந்த வீட்டை நோக்கிக் கொண்டிருந்தாள் சரயு.

_தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
23
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment