
அத்தியாயம் 3
கணவன் தன் உறவினர்களிடம் பேசி கொண்டிருக்க அங்கு தனித்திருப்பதை போல் உணர்ந்தாள் கனிமொழி. அவளின் மனம் முழுவதும் உலைகலனாக கொதித்து கொண்டிருந்தது. சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் நடுவில் தத்தளித்து கொண்டிருந்தாள் அவள். எதேச்சையாக திரும்பிய கீதனின் பார்வையில் அவள் தனித்திருப்பது பட அவளின் அருகில் வந்தான்.
“சாரி கனி.. நீயும் எங்க கூட வந்து இரு..” என்று கைபிடித்து எழுப்ப கஷ்டப்பட்டு அவனின் தொடுகையை சகித்து கொண்டவள் இழுத்து ஒட்ட வைத்த சிரிப்புடன் அனு மற்றும் அதிரன் அருகில் வந்தாள். அவளின் நிலை கணவனுக்கு புரியவில்லை என்றாலும் மற்ற இருவருக்கும் புரிந்தது.
“கனி.. இது அதிரன் என் பெஸ்ட் பிரண்ட் அண்ட் நம்ம கம்பெனியில் இவனும் ஒரு பார்ட்னர்” என்று அறிமுகபடுத்த “ஹலோ..” என்றவள் கீதன் புறம் திரும்பி “கொஞ்சம் தலை வலிக்குது.. நான் போய் ரெஸ்ட் எடுக்கவா?” என்று கேட்டாள்.
“தலை வலியா? மாத்திரை தரவா?” அவன் பதற “நீ எனக்கு மாத்திரை தர போறியா? முதல்ல உன் நிலமையை பற்றி தெரிஞ்சிக்கோ” என்று கத்த வேண்டும் போல் தோன்றியது. ஆனால் அதை மனதிற்குள் வைத்து கொண்டவள் “தேவை இல்லை..” என்று கூறி விட்டு மாடிக்கு சென்றாள்.
கீதன் போகும் அவளையே கவலையுடன் பார்த்து கொண்டிருந்தான். அனு அதிரனுக்கு கண் காட்ட “ஹேய் இனிமேல் சிஸ்டர் எப்பவும் உன் கூட தான் இருக்க போறாங்க.. இப்போ சைட் அடிச்சது போதும்.. எங்களை கவனி” என்று அதிரன் கீதனை தட்ட “நான் அங்க பார்த்தா நீ என் தங்கச்சியை கூட்டிட்டு கிளம்பணும்னு கூட நான் உனக்கு சொல்லி தர வேண்டி இருக்கு” என்று தலையில் அடித்து கொள்ள அசடு வழிந்தனர் மற்ற இருவரும்.
அன்றைய மாலை பொழுது இனிமையாக செல்ல இரவு நேரத்தில் கனியை முதல் இரவிற்காக தயார் படுத்தினர் அனு மற்றும் பார்வதி. கனியின் முகம் பாறையை போல் இறுகி இருக்க “பார்த்து பத்திரமா நடந்துக்கோ கனி” என்று சொல்வதை தவிர வேறு எதுவும் இல்லை.
இங்கு தனது அறையில் ஆயிரம் கனவுகளுடன் காத்திருந்தான் கனிகீதன். அவனின் கனவு தேவதை இன்று அவன் கையில் தவழ போகும் நொடியை நினைத்து அவன் மனம் குதூகலிக்க அவனின் மனைவியோ இந்த நொடியை எதிர்கொள்ளும் மனநிலையில் உள்ளே நுழைந்தாள்.
அவளை தன் அறையில் பார்த்ததும் அவனால் தன் சந்தோஷத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை. “வெல்கம் கனி.. நான் இந்த நாளை எவ்ளோ எதிர்பார்த்தேன் தெரியுமா? வா வா.. இங்கே உட்காரு” என்று கட்டிலில் தன் அருகில் அமர சொல்ல அவன் சொல்படி அமர்ந்தாள்.
அவள் முகம் குனிந்திருப்பதை பார்த்து தன் இரு கைகளையும் அவளின் கன்னத்தில் தாங்கி அவளின் விழியோடு விழி கலந்தவன் “இந்த நொடி நீ என் மனைவியா அருகில் இருப்பது எத்தனை மாத தவம் தெரியுமா? ஐ லவ் யூ சோ மச் கனி..” என்று அவளின் இரு விழிகளில் முத்தமிட கனிக்கு மனதில் எதுவோ பிசைந்தது.
ஆனாலும் சிறிதும் அசையாமல் அமர்ந்திருந்தாள். அவனின் பேச்சுக்கும் எதிர்பேச்சு இல்லை. அவளை பொறுத்தவரை அவனிடம் உண்மையை சொல்ல கூடாது என்பது தான் இடப்பட்ட கட்டளை. அதற்காக இந்த பந்தத்தையும் வெறுப்போடு உள்வாங்கி கொண்டாள். அவன் அவளை நிமிர்ந்து பார்க்க உதட்டில் புன்னகையை கொண்டு வந்தாள்.
அவளின் புன்னகையை பார்த்தவனுக்கு காலையில் அவள் இருந்த கோலம் பின்னுக்கு தள்ளப்பட அதை கேட்கும் நினைவே இல்லை.
“கனி இதுக்கு உனக்கு விருப்பம் தானே?” என்று அவன் கேட்க ‘முடியாது என்று சொன்னால் கேள்வி கேட்பான்.. உண்மையை சொல்ல வேண்டி இருக்கும்’ என்று எண்ணியவள் பதில் சொல்லாமல் அவனுக்கு எதிர்பக்கம் சரிந்தாள். அதே நேரம் அவன் கேட்ட சம்மதமா எனும் கேள்வியும் அவளுக்கு நெருடியது. அவளை பலவந்தபடுத்த நினைப்பவன் இந்த கேள்வியை கேட்டிருக்கவே மாட்டானே.
அவன் அவளை பலவந்தபடுத்த நினைக்கவே மாட்டான் என்பது அவளுக்கு தெரியவில்லை. அவனின் காதல் மனைவி அவள். அவளுக்கு வலித்தால் அவனுக்கும் வலிக்குமே.
விளக்கை அணைத்தவன் அவளை நெருங்க அவளின் இதயம் பலமாக துடித்தது. “அமைதியா இரு.. உன் பதற்றம் அவனிடம் எதையும் காட்டி கொடுத்து விட கூடாது” என்று உருப்போட்டவள் அடுத்து அவன் செய்த எந்த செயலுக்கும் மறுப்பு தெரிவிக்கவில்லை. சில நேரம் அவளே அவனுக்கு இசைந்து கொடுத்ததை நினைத்த போது அவள் மனம் காறி துப்பியது.
அவனின் ஒவ்வொரு தேடலும் காதலுடன் இருக்க அந்த காதலை முழுமையாக அனுபவிக்க முடியாமல் இவளின் மனம் கடமைக்காக என்று பொறுத்து கொண்டது. அவனின் அதீத சந்தோஷமும் காதலும் இவளுக்கு சந்தோஷத்தை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் கனியின் மனம் அவனின் காதலை விட அவனின் உடல் நிலையில் கவனம் கொண்டது. எனவே அவனின் காதல் மனம் அவளுக்கு புரியாமலேயே போனது.
விடியற்காலை மூன்று மணி அளவில் அவன் தூங்கி விட அவனிடம் இருந்து விடுபட்டு எழுந்த கனிக்கு அவன் கைபட்ட இடம் எல்லாம் தகித்தது. அவளின் மனம் ஒன்றிணையாமல் நடந்த இந்த கூடலில் அவளுக்கு வெறுப்பு மட்டுமே வந்தது. இன்னொருவனுக்காக தன்னை இழக்க வேண்டுமோ என்று மனம் கதறியது. அழுகை தன்னை பலவீனமாக்கும் என்று புரிந்து கொண்டவள் குளியலறை கண்ணாடியின் முன் நின்று தன்னை பார்த்தாள்.
அவளின் முகம் முழுவதும் அவனின் அச்சாரங்கள். கழுத்து பகுதியில் அவனின் விரல் அழுந்தி தடமாக இருந்தது. கையெல்லாம் ஏதோ ஊர்ந்து செல்வது போல் தோன்றியது. நேற்று ஒருவனிடம் காதலும் கல்யாணமும் இப்போது பிடிக்கவில்லை என்று சொல்லி விட்டு வந்தவளுக்கு இன்றைய நிலை கண்ணீரை வரவழைத்தது.
கணவன் நீண்ட நாட்கள் உயிரோடு வாழ்வான் என்றால் கூட பொறுத்திருப்பாளோ.. இன்றைய மனநிலையில் மொத்தமாக குழம்பி போயிருந்தாள் கனி. அவனின் மீதான வெறுப்பும் அவனின் குடும்பத்தின் மீதான கோபமும் மொத்தமாக கீதனின் மீதே திரும்பியது. “இவனை யாரு என்னை காதலிக்க சொன்னது? அதனால் தானே இவ்வளவு பிரச்சனை..” என்று புசுப்புசுவென மூச்சை வெளியேற்றியவளுக்கு அவனை ஏதேனும் செய்ய வேண்டும் என்றே தோன்றியது.
சுற்றிலும் பார்த்தவள் கண்கள் கலங்க, தேற்ற யாரும் இல்லாமல் நின்றாள்.
“என்னோட விருப்பத்துக்கு மதிப்பே இல்லையா? என் அம்மா இருந்திருந்தா எனக்கு பிடிக்குமான்னு கேட்டிருப்பாங்கல” தனக்கு தானே பேசியவள்,
அவனுக்கு உண்மை தானே தெரிய கூடாது.. இதை அனுபவிக்கட்டும் என்று குளியலறையில் இருந்து ஒரு வாளி தண்ணீரை எடுத்து வந்து அவனின் மேலே கொட்டினாள்.
சட்டென எழுந்து அமர்ந்தான் கீதன். அவனின் முன் மனைவி கோபத்துடன் நிற்க அது கூட அவனுக்கு குழந்தை தனமாக பட்டது.
“என்னமா ஆச்சு?” அவனின் கேள்வியில் திருதிருவென முழித்தாள் கனி. தண்ணீரை ஊற்றி விட்டாள். ஆனால் ஏதேனும் காரணம் சொல்ல வேண்டுமே..
அவளின் பார்வையில் கீதனுக்கு சிரிப்பு தான் வந்தது. “குளிக்க போறியா?” என்று கேட்டான்.
“ஹ்ம்.. ஹ்ம்..” அவசரமாக தலை ஆட்டினாள். மணியை பார்த்தவன் மூன்றரை தான் ஆனது என்றதும் அவளை அதிசயமாக பார்த்தான்.
“இவ்ளோ சீக்கிரம் எதுக்கு குளிக்க போற? சரி இப்போ எதுக்கு என் மேல தண்ணி ஊத்தின?”
என்ன சொல்வது என்ன சொல்வது என்று விரலை கடித்து யோசித்தவள் “நான் மட்டும் தனியா குளிக்குறேன்ல.. அது தான் உங்களையும் எழுப்பி விட்டேன்” என்று சொல்லி முடித்த பின் தான் என்ன சொன்னோம் என்பதே அவளுக்கு புரிந்தது.
“ஐயோ தெரியாம சீண்டி விட்டேனே”
“இல்ல.. அது வந்து..” அவள் தடுமாற எழும்பி வந்தவன் “இப்படி ஒரு சான்ஸ் கிடைச்சா நான் விடுவேனா? சரி நானும் உன் கூட சேர்ந்தே குளிக்குறேன்” என்று சொல்லி அவளை தூக்கி கொண்டு செல்ல வேறு வழி இல்லாமல் அவனுடன் சென்றாள்.
இரவிலேயே ஒரு வழி செய்தவன் இப்போது மட்டும் விடுவானா என்ன? அவளின் வெட்கத்தை வெளி வர செய்து விடும் அளவிற்கு சேட்டை செய்தான். அதை சில நேரம் அவளும் ரசித்தாள் என்பதே உண்மை. குளித்து விட்டு அவள் வெளியே செல்ல அவளின் துண்டை பிடித்து இழுத்தான் கீதன்.
“ஹே..” என்று அவள் பதற அவளை இழுத்தவன் சுவற்றோடு சாய்த்து அவள் கண்களை பார்க்க அடுத்து நடப்பது அவள் அறியாததா என்ன? கண்களை மூடி கொண்டாள்.
“கனி..”
“ஹ்ம்ம்…”
“கனி என்னை பாரு.. இப்போ நீ கண் திறக்கலன்னா இடையில் கட்டியிருக்கும் துணியும் காணாம போயிடும்” என்று சொல்ல சட்டென கண் திறந்து பார்த்தாள்.
அவன் கண்கள் சொல்லிய காதலில் அவள் தடுமாறி தான் போனாள். “டு யூ லவ் மி?” அவனின் கேள்வியில் புரியாமல் பார்த்தாள்.
“சொல்லு கனி.. உனக்கு என்னை பிடிக்குமா?”
இதற்கு என்ன பதில் சொல்வாள்? நேற்று வேண்டாம் என நினைத்த ஒன்று இன்றைக்கு அவளின் மனம் ரசிக்கிறதே.. சிறிது நேரம் முன் அவன் தொட்ட இடம் தகிக்கிறது என்றவளுக்கு இப்போது அந்த இடம் குளிர்கிறதே. அவளின் கோபம் அவனின் காதலில் கரைந்து விடுகிறதே. அவன் தவறொன்றும் செய்து விடவில்லையே. ஆனாலும் ஏதோ ஒன்று அவளை தடுத்தது. அவளின் அமைதி அவனுக்கு கஷ்டமாக இருந்தது. ஒரு வேளை தான் எதிர்பார்க்கும் காதல் அவளிடம் இல்லை என்பதாலோ? அவளின் துணியை விட்டுவிட்டு ஷவரை ஆன் செய்து அதன் நடுவில் நிற்க அந்த நீர் துளிகள் கூட அவனின் வெம்மையை குளிர்விக்கவில்லை.
அவனின் வேதனை கனிக்கு கஷ்டமாக இருந்தது. அவன் என்ன பெரிய பாவம் செய்து விட்டான்? இந்நேரம் வரை அவளை சிரிக்க வைத்து கொண்டிருந்தான். தாயின் இழப்பிற்கு பிறகு சிரிப்பை தொலைத்தவள் இன்று தான் அவனின் சேட்டையில் சிரித்தாள். வெட்கத்தை வெளிக்கொணர செய்தவன் அவன். ஒருவேளை அவனின் உடல்நிலை தெரிந்து அவளை ஏமாற்றியிருந்தால் அவன் மீது கோப படுவது நியாயம். ஒன்றுமே அறியாத ஒருவனின் காதலை மிதிக்க அவளுக்கு அதிகாரம் இல்லையே.
அவனின் வேதனையை போக்க நினைத்தவள் அவன் அருகில் சென்று “எனக்கு உங்களை பிடிக்கும்னு சொன்னா என்ன தருவீங்க?” என்று கேட்டாள்.
“என்ன?” என்று ஒரு நொடி அதிர்ந்தவன் பின் அவளை சுவரோடு சாய்த்தவன் தன் உதட்டை அவளின் உதட்டோடு இணைத்து தேன் பருகினான்.
எத்தனை நிமிடங்கள் பருகினானோ தெரியாது அவளை நிமிர்ந்து பார்க்கும் போது மொத்தமாக அவனின் அன்பில் வீழ்ந்திருந்தாள் அவள். அவளின் துணியை பற்றியவன் அதை அவளின் இடையில் கட்டி விட்டு பார்க்க அவனின் செயலில் செங்கொழுந்தாகி போயிருந்தாள் அவள்.
“இந்த வெட்கம் நேற்று இரவு இல்லை.. அன்னைக்கு கல்யாணம் ஆன நேரமும் நிமிர்ந்து கூட பார்க்கல.. என்ன பிரச்சனை உனக்கு?” என்று அவன் கேட்க தடுமாறினாள் கனி.
“அது.. திடீர்னு கல்யாணம்னு சொல்லவும் ஏதோ ஒரு பதற்றம்” என்று சமாளித்தவளுக்கும் இப்போது அவனின் உடல் நிலையே முதன்மையாக பட்டது. ஒருநாள் அவனுக்கு சிகிச்சை செய்யும் மருத்துவரிடம் பேச வேண்டும் என்று எண்ணியவளுக்கு அனு மற்றும் பார்வதி இருவரையும் மன்னிக்க மனம் வரவில்லை.
பின் இருவரும் குளித்து விட்டு வெளியே வரும் போது மணி ஐந்து ஆகியிருந்தது. கனி ஏதோ யோசனையில் இருக்கவும் அவளின் அருகில் வந்து அமர்ந்தான் கீதன்.
“என்கிட்ட ஏதாச்சும் சொல்ல நினைக்குறியா கனி?”
அவனின் கேள்வியில் திரும்பி பார்த்தவள் “எனக்காக ஒரு விஷயம் பண்ண முடியுமா?” என்று கேட்டாள்.
“என்னமா?”
“நாம ரூமுக்குள் மட்டும் இப்படி இருப்போமா?”
“ஏன்?” அவனின் முகம் சுருங்கியது.
“கொஞ்ச நாளைக்கு ப்ளீஸ்..” என்று கெஞ்ச அதற்கு மேல் அவளிடம் வாதாட விரும்பவில்லை அவன்.
“சரிமா.. உன் விருப்பப்படி செய்..” என்று கூறி விட்டு செல்ல அவனையே பார்த்து கொண்டிருந்தாள் கனி.
கனிகீதன் காலையிலேயே கம்பெனி சென்று விடவும் சாப்பிட கீழே இறங்கி வந்தாள் கனி. அனு அவளை பார்த்ததும் “வாங்க அண்ணி.. சாப்பிடலாம்” என்று கூப்பிட அதை அலட்சியம் செய்து விட்டு சமையலறைக்குள் நுழைந்தாள்.
வீட்டில் இருப்பது இரண்டு பேர். அதிலும் ஒருத்தி முகத்தை தூக்கி வைத்து கொண்டு செல்வதை பார்த்த அனுவிற்கு கஷ்டமாக இருந்தது. சமையலறைக்குள் சென்ற கனி தனக்கான தோசை ஊற்றி எடுத்து கொண்டு வெளியே வரவும் அனு அவளின் முன் சென்றாள்.
“அண்ணி இங்க இருக்குறதே நாம ரெண்டு பேர் தான்.. இதுல நீங்க முகத்தை தூக்கி வச்சிட்டு இருந்தா நல்லாவா இருக்கும்?”
“இதை என்னை உன் அண்ணாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கும் போது யோசிக்கணும் அனு.. இப்போ பேசி எந்த பலனும் இல்லை.. ப்ளீஸ் என்கிட்ட எப்பவுமே பேச முயற்சி செய்யாத” என்றவள் சாப்பிட்டு அறைக்கு சென்று விட அனு தான் விக்கித்து நின்றாள்.

