Loading

சலனம்-1

 

“பிரபல திரைப்பட இயக்குநரின் மனைவி விபத்தில் பலி. கார் மீது கண்டெய்னர் லாரி மோதியதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.!” கண்ணாடி டீப்பாயின் மீதிருந்த செய்தித்தாளில் என் கண்கள் பதிந்திருந்தது.

 

இந்தச் செய்தியைப் படித்த எல்லோருக்குமே அது வெறும் தகவல் மட்டுமே.! ஆனால் எனக்கு அது வாழ்க்கை. அனைவரும் வார்த்தைகளால் கடந்து போனதை, வாழ்க்கையாய் கடக்க முடியாமல் தவிக்கிறேன். கிட்டத்தட்ட முப்பது நாட்கள் கடந்துவிட்டது. இன்னும் அவள் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல், என் மனம் தவியாய் தவிக்கிறது. உள்ளே பொங்கி எழுந்த உணர்வுகளின் வடிகாலாய் கண்ணீர் கூட வழிந்தது.

 

நான் அழுகிறேனா? ஆம் நான் அழுகிறேன். ஆண்கள் தைரியமானவர்கள் என யார் சொன்னது. உண்மையைச் சொல்லப் போனால், ஒரு பெண்ணுக்கு இருக்கும் தைரியத்தில் கால்வாசி கூட ஆணிடம் இருக்காது.

 

“முப்பது நாட்களாய் அழுதுக் கொண்டு தானே இருக்கிறாய்? உருப்படியாய் ஏதாவது செய்யேன்?” என் மனம் என்னையே கேள்விக் கேட்டது.

 

 

“அவள் இல்லாத உலகில் இனி நான் செய்வதற்கு என்ன இருக்கிறது?” நானே பதில் சொல்லி, என் மனதைச் சமாதானப் படுத்தினேன். மனம் சமாதானமாக மறுத்தது. வீட்டுக்குள்ளேயே அடைந்துக் கிடந்து புத்தி மரத்துப் போயிருந்தது.

 

 

பெரிதாய் எதையும் யோசிக்கவே முடியவில்லை. ஏதோ என் உலகம் மட்டும் சுழல்வதை நிறுத்தியதைப் போல் ஓருணர்வு. பூனை கண்ணை மூடியக் கதையாய், நான் ஒன்றும் செய்யாமல் இருந்துவிட்டு, உலகம் இயக்கத்தை நிறுத்தியதாய் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை அது உண்மையாகக் கூட இருக்கலாம். என் மனைவியின் மறைவோடு என் உலகமும் சுழல்வதை நிறுத்தியிருக்கலாம்.

 

“டேய் விக்ரம்..! மூவ் ஆன் டா! எத்தனை நாள் இப்படியே இருக்கப் போற? அம்மாவுக்கு கால் பண்ணி வரச் சொல்லட்டுமா? சாப்பிட்டியா? சமைக்கிறதுக்கு மெய்ட் வரச் சொல்லட்டுமா? ப்ரடியூஸர் உன்னைக் கேட்டாருடா!” என் நண்பன் சித்தார்த் சொன்னது என் செவியோரம் மோதியது.

 

சித்தார்த் என் நண்பன், தினமும் என்னை அழைப்பான். நான் நன்றாக இருக்கிறேனா எனத் தெரிந்துக் கொள்ளும் பொருட்டு விசாரிப்பான். அவன் நேரில் வந்தால், கதவைத் திறக்கமாட்டேன் என்பது அவனுக்குத் தெரியும். இரண்டு மூன்று முறைகள் முயற்சி செய்து பார்த்துவிட்டு, என்னைப் பார்க்க வருவதை நிறுத்தியிருந்தான்.

 

சித்தார்த் சொன்ன பிறகு தான், நானொரு இயக்குநர் என்பதே எனக்கு ஞாபகம் வருகிறது. ஆம் நானொரு இயக்குநர். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான, நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சியில் என் குறும்படம் முதல் பரிசைப் பெற்றது. விஸ்காம் இறுதியாண்டு படிக்கும் போது, நான் பெற்ற வெற்றி, என்னை ஓர் அறிமுக இயக்குநராய் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகப் படுத்தியது. கிட்டத்தட்ட ஆறு வருடங்கள், எட்டு திரைப்படங்கள், இரண்டு ஃப்லிம் ஃபேர் அவார்ட்டுகள் என முன்னேறிக் கொண்டிருக்கும் துடிப்பான இளைஞன் தான் நான்.

 

 

ஆனால் என்னவளின் இழப்பு, என்னைச் செயல்பட விடாமல் முடக்கிப் போட்டிருந்தது. மனமும் உடலும், அவளுக்காக, அவள் ஸ்பரிசத்திற்காக ஏங்கியது. என் வறண்டு போன உதடுகள், அவள் தரும் இதழ் முத்தத்திற்காக ஏங்கித் தொலைத்தது. காற்றோடு காற்றாய் கலந்து போனவளை நான் எங்கே போய் தேடுவது.

 

“காற்றாகவாவது என்னைத் தீண்டிவிட்டுப் போ! உன் ஒரேயொரு தீண்டலில் உயிர் மோட்சம் பெறுகிறேன்.!”

 

கவிதைக் கூடத் தோன்றியது. காதல் பிரியாமல் கவிதை தோன்றாது கவியின் திரு ஏட்டிலே..! என்ற பாடல்வரி சட்டென நினைவிற்கு வந்தது. இங்கு என் காதல் மட்டுமல்ல காதலியே பிரிந்துவிட்டாள். பூக்கள் அழியாமல் கனிகள் தோன்றாது கொடியின் வரலாற்றிலே..! அடுத்த வரியை யோசித்துப் பார்த்து விரக்தியாய் சிரித்துக் கொண்டேன். கனி தாங்கி நிற்க வேண்டிய கொடியே, சாம்பலாய்ப் போன பின், பூக்கள் அழிந்தாலென்ன? அழியாமல் போனாலென்ன?
நான் எனக்குள் யோசித்துக் கொண்டிருக்க, என் சிந்தனையைக் கலைத்து இடையூறாய் அலறியது அலைபேசி.

 

“அம்மா!” என்ற பெயர் ஆங்கில எழுத்தில் மின்னி மறைந்தது. என் அன்னையிடமிருந்து தான் அழைப்பு.

 

 

ஆனாலும் அழைப்பை ஏற்க எனக்கு மனமில்லை. என்னவளின் நினைவுகளுக்கு இடையூறாய் வந்ததாலோ என்னவோ, என்னால் என் தாயின் அழைப்பைக் கூட ஏற்க முடியவில்லை. நான் எடுக்காமல் இருக்கவும் பதறி, மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டே இருந்தார் என் தாய்.

 

“இப்போ என்னம்மா வேணும் உனக்கு? என்னை நிம்மதியாய் இருக்கவே விட மாட்டிங்களா?” அழைப்பை ஏற்று எரிச்சலுடன் கத்தியிருந்தேன்.

 

“என்னய்யா இப்படி பேசுறே.? நடந்ததையே இன்னும் எத்தனை நாளைக்கு நினைச்சுட்டே இருப்பே.? பேசாமல் மதுரைக்கு வந்துரு விக்ரம்! நானாச்சும் அங்கண வர்ரேன்னு சொன்னால் வேணாமுன்னு சொல்ற? என்னதான்ய்யா நாங்களும் செய்யறது?” என் தாயின் ஆதங்கமான குரல் என்னைக் கொஞ்சம் அமைதிப்படுத்தியது.

 

“நான் பார்த்துக்கிறேன்ம்மா! நீங்க உடம்பைப் பார்த்துக்கோங்க!” என்ற எனது பதில் என் தாயை சமாதானம் செய்யவில்லை என்று எனக்குத் தெரியும். ஆனாலும் அவரைச் சமாதானப்படுத்த நான் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

 

“விக்ரம்! சொல்றதைக் கேளேன்.. நீ இங்கண வந்துரு! ஒத்தையில் நீ ஏன் சென்னையில் கிடந்து வருந்தணும். என்னதேன் அழுது கரைஞ்சாலும், போனவுக திரும்பி வாரதில்லை. எல்லாத்தையும் மறந்துததேன் தீரணும்! உன்னை நம்பி இருக்கிறவங்களுக்காக மறந்துதேன் ஆகணும். வேதனையில் நெஞ்சு அடைக்குதுடா!” குரல் தழுதழுத்து வந்ததிலிருந்தே என் தாய் அழுகிறார் என்பது புரிந்தது.

 

“இந்த உலகத்தில் அவள் இல்லைதான். ஆனால் என் மனசில் இருக்காளேம்மா?”

 

என நான் கேட்ட கேள்விக்கு என் தாயிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. நான் அவள் மீது கொண்டுள்ள நேசங்களை, பேரன்பை வார்த்தைகளால் சொல்லிவிடமுடியாது. ஒரு எண்ணின் பின்னால் எத்தனை பூஜ்ஜியங்கள் இருக்கிறதோ, அந்த எண்ணின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே போகுமாம். ஆனால் பூஜ்ஜியத்திற்கு தனியாக மதிப்பில்லை தானே? நானும் அப்படித்தான். இந்த விக்ரம் என்ற பூஜ்ஜியத்தின் முன்னால் நின்றிருந்த எண் அவள். அவளின் பிரிவுக்குப் பின் நான் பூஜ்ஜியமாகி நிற்கிறேன்.

 

“ஆனாலும்..!” என் தாயின் குரலில், நடப்பிற்கு வந்தேன்.

 

“என்னால் அவளை மறக்க முடியாதும்மா! ஆனால் அவள் நினைவுகளோடு வாழப் பழகிட்டு இருக்கேன். சீக்கிரம் என் கூட்டை உடைச்சுட்டு நானே வெளியே வந்துடுவேன்.!” எனச் சொல்லிவிட்டு அலைபேசியை அணைத்துவிட்டு, அமர்ந்திருந்த மெத்திருக்கையில் பின்னுக்கு தலை சாய்த்து அமர்ந்தேன்.

 

மூடியிருந்த என் கண்களுக்குள், புன்னகை முகமாய் சடுகுடு ஆடினாள் அவள்.

 

“சம்யூ..!” மெதுவாய் அவள் பெயரை உச்சரித்தேன். அவள் அருகில் அமர்ந்திருப்பதைப் போன்ற பிரம்மை எனக்குள் எழுந்தது. அவளோடு காதலும் காமமும் சேர்ந்து பழகிய பொழுதுகள் கண்களுக்குள் விரிந்தது. மனம் பின்னோக்கிப் பயணித்து, அவளைச் சந்தித்த நாளுக்குப் பறந்தது.

 

எனது இரண்டாவது படத்தின் கதாநாயகியாகத்தான் நான் முதலில் சந்தித்தேன்.

 

“சார்! எனக்கு சினிமாவில் நடிக்கணும்ன்னு ரொம்ப ஆசை, பட், நிறைய பேர்கிட்டே வாய்ப்பு தேடிப் போனேன். எல்லாருமே அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்கிறாங்க! என்னால் முடியாது சார். நீங்களும் அந்த மாதிரி கேட்கிறதா இருந்தால் எனக்கு இந்த வாய்ப்பே வேணாம் சார்!” எனக்கு அவள் பேசியது பிடித்திருந்தது. ஆனாலும் ஒரு சராசரி ஆணாய் நீ பெண் எனக் குத்திக்காட்ட முயன்றேன் நான்.

“சைட் கேரக்டர் பண்ணுறவங்கக் கிட்டேயே அட்ஜஸ்ட்மெண்ட் கேட்பாங்க தான். உனக்கு வாய்ப்பு கொடுக்கிறாங்க தானே? அட்ஜஸ்ட் பண்ணிக்கிறதில் தப்பு இல்லை!” என வேண்டுமென்றே நான் சொன்னதில் அவள் முகம் சுருங்கியதில் எனக்குள் ஓர் நிம்மதி.

 

இது ஒரு சராசரி ஆணுக்கான மானோபாவம். நீ எனக்குக் கீழே தான். நீ வலிமையானவள் இல்லை. எனக் குத்திக்காட்டி சந்தோஷப்பட்டுக் கொள்வது. இதை எந்த ஆண்மகனும் வெளிப்படையாய் ஒத்துக் கொள்வதும் இல்லை. ஒரு பெண்ணின் சாதனைகளை அங்கீகரிப்பதும் இல்லை. பாராட்டுவதும் இல்லை.
அன்று நான் ஏன் அவளிடம் அப்படிப் பேசினேன் என்று இந்த நொடி வரை விளங்கவே இல்லை.

 

ஆணின் மனதிற்குள் ஒரு அரக்கன் இருக்கிறானோ என்னவோ?
நான் சொன்ன பதிலில், முகம் கறுக்க, அங்கிருந்து நகர முயன்றாள் சம்யுக்தா.

 

“அக்ரிமெண்ட் சைன் பண்ணிட்டு, நடிக்காமல் எங்கே போகப் போற? இன்னைக்கு மேக்-அப் டெஸ்ட் எடுத்துடலாம். நைட் எட்டு மணிக்கு இந்த ஹோட்டல் வந்துடு! ரூம் நம்பர் த்ரீ நாட் ஒன்.!” அவள் முன்னால் கரத்திலிருந்த முகவரி அட்டையை வீசினேன். கண்களில் நீர் தளும்ப எடுத்துக் கொண்டு சென்றுவிட்டாள்.

 

அவளின் கண்ணீர் ஏனோ என் மனதைப் பிசைந்தது. அவள் கண்ணீரோடு ஓடிய தோற்றம் மீண்டும் மீண்டும் கண்ணுக்குள் வந்துப் போனது. அவளை எட்டுமணிக்கு வரச் சொல்லிவிட்டு, ஆறு மணிக்கே ஹோட்டல் அறையில் போய் அமர்ந்துக் கொண்டேன். மனம் அவளின் வரவை நிரம்பவும் எதிர்பார்த்தது.

 

எட்டுமணியும் வந்தது. சரியாய் அவளும் வந்தாள்.
அழுது கரைவாள், என்னைக் கெஞ்சுவாள் என நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்க,

 

“ஷேல் வீ ஸ்டார்ட்?”

 

என அவள் உடைகளைக் களையத் துவங்க அதிர்ந்து போய் எழுந்து நின்றுவிட்டேன் நான். என்ன இது? இது சரியா? இன்னுமும் உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறதா? ஒரு பெண், தன் கற்பை துச்சமாக நினைத்துவிட்டால் இந்த உலகம் இயக்கத்தை நிறுத்திவிடாதா? பெண்களுக்கு கற்பு முக்கியமானது இல்லையா? என் மனதிற்குள் கேள்விகள் வரிசையாய் சரம் தொடுத்தன. என் மனம் எதிர்பார்த்ததை அவள் செய்யவில்லை என்றதும் அவள் மேல் கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது.

 

“நிஜமாவே நீ பொண்ணு தானா?” அமிலத்தில் தோய்த்தெடுத்த வார்த்தைகளை அவளிடம் கேள்விக்கணையாய் தொடுத்தேன்.

 

“ஏன் நான் பொண்ணுதானான்னு சந்தேகமா இருக்கா? அழுது கரைஞ்சு உங்களைத் தடுக்க முயற்சி பண்ணுவேன்னு நினைச்சீங்களா? நீங்களாவது நல்லவங்களா இருப்பீங்கன்னு நினைச்சேன்.. எப்படியும் சினிமாக்குள்ளே வந்தால், இதெல்லாம் சகிச்சு தானே தீரணும். பொண்ணோட உடம்பை, அவளோட நிர்வாணத்தை கற்புன்னு ஒரு பேரைச் சொல்லி மறைச்சு வச்சுட்டு, அதுக்காக அவள் மட்டுமே போராடணும்.. நாங்க அவளை சூறையாடுவோம்ன்னு சொல்றது தானே உங்களைப் பொருத்தவரை பெண் சுதந்திரம். உங்க பொன்னான நேரத்தை வீணடிக்காதீங்க டைரக்டர் சார். பெண் உடலோடு விளையாடாமல் உங்களுக்கு, கதையோ கவிதையோ வராதோ?” அவள் கேட்ட கேள்வியில் என்னை யாரோ செருப்பால் அடித்ததைப் போல் உணர்ந்தேன் நான்.

 

நான் பார்த்தவரை நான் சந்தித்த அத்தனை பேரும், அதாவது எனக்குத் தெரிந்தவர்களில் சிலரைத் தவிர, எல்லோருமே இதை ஒரு ட்ரெண்டாய் வெளியே சொல்லிக் கொள்பவர்கள் தான். ஒரு நாயகி, இயக்குநர், இசையமைப்பாளர், கதாநாயகன் எல்லாரோடும் அனுசரித்து தான் போக வேண்டும். அது இங்கு எழுதப் படாத விதி.

 

 

நான் இவளை இங்கே வரச் சொன்னது கூட, இவளோடு ஒருநாள் இரவைக் கழித்துவிட்டேன்.. என எல்லாரிடமும் தம்பட்டம் அடித்துக் கொள்ளத்தான். என் முதல் படத்தின் போது, கதாநாயகியே என்னிடம் வலிய வந்தும், நான் வேண்டாமெனச் சொன்னதும், என்னை ஆண்மையில்லாதவன் எனச் சொன்னதையும் என்னால் இன்றும் மறக்க முடியவில்லை. ஏதோ முதுகெலும்பில்லாத ஜந்துவைப் போல் என்னைப் பார்த்த பார்வை என் ஆயுசுக்கும் மறக்காது தான்.

 

“நான் பெண்ணுடலை நம்பி, கதை எழுதுகிறவன் இல்லை! இதுவரை நான் எந்தப் பெண்ணையும் தீண்டியதும் இல்லை!” எனக் கத்த வேண்டும் போல் இருந்தது. ஆனால் நான் எடுத்த முதல் படமே சற்று ஏடாகூடமானது தானே? கதை மொத்தமும் நாயகன் நாயகி இணைவதை நோக்கித்தானே நகரும். என் முதல் படம் வெற்றி பெற்றதற்கு, அதிலிருந்த அதீத கவர்ச்சியும் கிளுகிளுப்புமே காரணம் என்பது எனக்குத் தெரியும். அப்படி இருக்கையில் இவளிடம் நான் உத்தமன் என்று எப்படிச் சொல்ல முடியும்? தயாரிப்பாளர் என்னை நம்பி முதலீடு செய்யும் போது, அவருக்கு இலாபத்தைக் கொடுக்க இதையெல்லாம் செய்யத்தான் வேண்டியிருக்கிறது. கருத்தைச் சொல்லும் படங்களோ, கதைகளோ காணாமல் தானே போயிருக்கின்றன.

 

“என்ன டைரக்டர் சார் ஷாக் ஆகிட்டீங்க? இதை நீங்க எதிர் பார்க்கலையோ?” என் செவிக்கருகில் கேட்ட குரலில், அவளை நோக்கித் திரும்பினேன்.

 

“ஜஸ்ட் இதை ஒரு டேட்டிங்கா வச்சுக்கலாமே சம்யுக்தா!” முதன் முறையாய் அவள் பெயர் சொன்னேன்.

 

“செக்ஷூவல் டேட்டிங்கா சார்?” பொட்டில் அடித்தாற் போல் கேட்டாள். அவளின் ஒற்றைக் கேள்வியில் வாயடைத்து நின்றுவிட்டேன். அவளின் ஒவ்வொரு பதிலுக்கும் மனதிற்குள் சபாஷ் போட்டுக் கொண்டேன். அவள் மீது என் கண்கள் முதன் முறையாய் ஆர்வமாய் படிந்தது.

 

“சும்மா ஒரு ஃப்ரெண்ட்லி டேட்..!” என நான் சொன்னதும், சத்தமாய் சிரித்தாள் அவள்.

 

“இப்போ ஏன் சிரிக்கிறே?” எரிச்சலாய் நான் கேட்டபோதும் அவள் சிரித்துக் கொண்டே இருந்தாள். அவளின் தெற்றுப் பல் சிரிப்பில் மனம் ஒருநொடி சிக்கித் தவித்தது. அதன் பின் என்ன பேசினோம் என்பதெல்லாம் நினைவில் இல்லை. இதுவரை வெள்ளைக் காககிதமாய் இருந்த என் மனதில் ஒற்றைப் புள்ளியாய் விழுந்திருந்தாள் சம்யுக்தா.

 

அதன் பின் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த போதெல்லாம் அவளுக்கு அரணாய் பாதுகாப்பாய் நின்றேன் நான். என்னை நம்பி, எனக்காக ஒரு பெண் இருக்கிறாள் என்ற உணர்வே அலாதியாய் இருந்தது. எனக்குள் கர்வம் கூட முளைத்திருந்தது. எங்களுக்குள் இருந்த உறவு காதலா? காமமா? எனக்கே தெரியவில்லை. காமத்தின் வழியாகத்தான் காதலைக் காட்ட முடியும் என்ற கட்டமைப்பிற்குள் வளர்ந்த என்னால், அவள் மேல் நான் வைத்திருந்தது காதலா? காமமா? என்பதைப் பிரித்தறிய முடியவில்லை.

 

 

நான் உன்னைக் காதலிக்கிறேன் என வார்த்தைகளால் இருவரும் சொல்லிக் கொள்ளவே இல்லை. ஆனாலும் ஒருவருக்கொருவர் பிடித்திருந்தது. அந்த உறவிற்கு நாங்கள் எந்தப் பெயர் வைக்கவும் விரும்பவுமில்லை. என் இரண்டாவது பட வெளியீட்டின் பின் அவளை என்னோடு, என் வீட்டிலேயே தங்க வைத்துக் கொண்டேன்.

 

 

நான் சம்யூவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன் என்று தெரிந்ததும், என்னை அணுக, மற்ற பெண்கள் யோசிப்பதே எனக்குப் போதுமானதாக இருந்தது.
பெயரில்லா உறவு நீண்ட நாள் தொடர்ந்தது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாய் எனக்கு அவளைத் தெரியும். பெயரில்லாமல் தொடர்ந்த உறவிற்கு பெயர் வைக்கும் நிர்பந்தமும் கட்டயாமும் ஏற்பட்டது.

 

ஐந்தாறு படங்கள் எடுத்தாகிவிட்டது. சினிமா துறைக்கு நான் வந்து நான்காண்டுகள் கடந்திருந்தது. நானும் ஓர் தகுதியான இயக்குநர் என தடம் பதித்த வேளையில், என் வீட்டில் எனக்குப் பெண் பார்க்கத் துவங்கியிருந்தனர்.

 

“விக்ரம்.! பொண்ணு ஃபோட்டோ சிலது அனுப்பியிருக்கேன்! பார்த்துட்டு எந்தப் பிள்ளையைப் பிடிச்சிருக்குன்னு சொல்லுய்யா! உன் வசதிக்காக சென்னையில் தான் பொண்ணு பார்த்திருக்கிறோம்.” என்ற என் அன்னையின் அலைபேசி அழைப்பின் பின், என் உள்பெட்டியில் வந்து குவிந்தது ஓராயிரம் புகைப்படங்கள்.

 

“என்ன இவ்வளவு ஃபோட்டோ அனுப்பியிருக்காங்க? இதை வச்சு ஹீரோயின் செலெக்ஷன் பண்ணலாம் போல!” என நான் சொல்ல, என் கணிணியின் தன் கரத்தில் வைத்து இயக்கிக் கொண்டிருந்தாவளோ,

 

“இந்தப் பொண்ணைப் பாரு டா!”

 

“இந்தப் பொண்ணு அழகா இருக்கா!”

 

“ஏய் இந்தப் பொண்ணைப் பாரேன்.. ரொம்ப பாவமா இருக்கா! இவளைக் கட்டிக்கோ, ஏன்னா கல்யாணத்திற்குப் பின்னால் என்னையுமே மெய்ன்டெய்ன் பண்ணணுமே?” என ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தாள் சம்யுக்தா.

 

“உனக்கு கோபமே வராதாடி? நான் இன்னொருத்தியைக் கட்டிக்க நீயே ஃபோட்டோ செலெக்ட் பண்ணுற?” என்ன இந்தப் பெண், எல்லாவற்றையும் சாதாரணமாய் எடுத்துக் கொள்கிறாள் என்ற கோபத்தில் தான் கேட்டேன்.

 

“நீ என்ன என் புருஷனா? ஜஸ்ட் வீ ஆர் இன் அ ரிலேஷன்ஷிப்! எப்படியும் இது நிலையானது இல்லைன்னு எனக்குத் தெரியும்! உன்னை மாதிரி டைரக்டருக்கு காதலை விட, ஸ்டேடஸ் பெருசுன்னு எனக்குத் தெரியும்டா! நமக்குள்ளே இருக்கிற உறவுக்குப் பேரு காதலே இல்லைன்னு எனக்குத் தெரியும். அதைச் சொல்ல எனக்கு வேற வார்த்தை தெரியலை. வேணும்ன்னா லஸ்ட்ன்னு வச்சிக்கலாமா?” என அவள் சொன்னதும் சுறுசுறுவெனக் கோபம் என் உச்சந்தலைக்கு ஏறியது.

 

அவள் தெளிவாகத்தான் இருந்தாள். நான்தான் குழம்பிப் போயிருந்தேன். என் நண்பன் சித்தார்த் கூட எத்தனையோ முறை சொன்னான்.

 

“சம்யுக்தாவை உனக்குப் பிடிச்சிருக்குன்னா பேசாமல் கல்யாணம் பண்ணிக்கோடா! இப்படி கல்யாணம் பண்ணாமல் ஒரு ரிலேஷன்ஷிப் உனக்குத் தேவையாடா? அந்தப் பொண்ணைக் கழற்றி விடத்தானே, கல்யாணம் பண்ணாமல் வச்சிருக்கிறே?” எனச் சொன்னவனை முறைத்தே பஸ்பமாக்கினேன்.

 

“நீ ஒண்ணை மறந்துட்ட டா! அவளும் ஒரு நடிகை. இந்தக் கல்யாணத்தால் அவளோட கெரியரும் பாதிக்கப்படும்!”
என நல்லவன் போல் சொன்னேன். ஆனால் இன்று யோசிக்கும் போது, நான் அவளைக் கழற்றி விடுவதற்கு ஏதுவாகத்தான் இப்படிச் செய்தேனோ? என எனக்கே தோன்ற ஆரம்பித்துவிட்டது. ஆனாலும் அவள் லஸ்ட் எனச் சொன்ன ஒற்றை வார்த்தையை மனதில் வைத்துக் கொண்டு, யாரெனப் பார்க்காமலே ஒரு பெண்ணின் புகைப்படத்தை தேர்வு செய்து அனுப்பி, திருமணத்திற்கு சம்மதம் சொல்லியிருந்தேன்.

 

நான் திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டேன் எனத் தெரிந்தும் கூட, அவள் சலனமில்லா முகத்துடன் அமர்ந்திருப்பது என் கோபத்திற்கு தூபம் போட்டது.
நான் என்ன நினைக்கிறேன்? எனக்கே புரியவில்லை! அவள் என்னிடம் கெஞ்ச வேண்டுமா? மெகொத்தொடர் நாயகிகள் போல் திருமணத்தை நிறுத்த திட்டமிட வேண்டுமா? ஓர் ஆணாய் நான் என்ன அவளிடம் எதிர்பார்க்கிறேன் என்பது எனக்கே புரியவில்லை. அவள் எந்த எதிர்வினையும் காட்டாமலிருப்பதே எனக்குள் எரிச்சலைக் கிளப்ப,

 

“அடுத்த வாரமே கல்யாணத்தை வச்சுக்கலாம்!”

 

என என் அன்னையை அழைத்துச் சொல்லிவிட்டு அவள் முகம் பார்த்தேன். அப்போதும் எனக்கு ஏமாற்றம் தான். இராட்சசி என்னைப் பிரிவதில் அவளுக்கு துளி வருத்தமே இல்லையா? நான் எனக்குள் வதைபடுவதை இரகசியமாய் இரசிக்கிறாளோ? கோபமாய் வந்தது எனக்கு. அவளைப் பற்றிய என் அனுமானங்கள் ஒவ்வொன்றும் தோற்றுக் கொண்டே இருக்கின்றன. நான் அவளிடம் தோற்றதைப் போல்..!

 

ஆனால் அவள் இறப்பிற்கு பின்னர் தான் நான் தோற்றதன் காரணம் எனக்குப் புரிந்தது. பெண்கள் ஆணில்லாமல் காலம் தள்ளிவிடுகிறார்கள். ஆண்களால் தான் ஒரு நாளைக் கூடத் தள்ள முடிவதில்லை. ஆனால் இப்போதும் ஒரு ஆண்மகனாய் இதை நான் வெளிப்படையாய் ஒத்துக்கொள்ள தயாராய் இல்லைதான்.

 

ஏனென்றால் நான் ஒரு ஆண்..!

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

    1. Author

      மிக்க நன்றி கலை மா ❤ தொடர் ஆதரவிற்கு நன்றிகள் ❤