Loading

அத்தியாயம்- 7

 

(அனைவரின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி இந்தக் கதையில் எவ்வித மருந்துகளின் பெயரையும் அதன் செயல்பாடுகளையும், தொல்நுட்பத்தின் விரிவான விளக்கத்தையும் கொடுக்கப் போவதில்லை. அனைத்தும் கதைக்குத் தேவையான அளவே சொல்லப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.)

 

              அருளும் தேன்மலரும் தங்களது திட்டத்தின் முதற்கட்டமாய் இருவரும் தனி தனியாக யாருக்கோ அழைத்து பேசினர். பின் தேன்மலர் சிதம்பரத்தோடு இருந்துக் கொள்ள, அருள் எங்கோ வெளியேச் சென்றவன் இரண்டு மணி நேரம் கழித்து திரும்பி வந்தான். தேன்மலர் அவனைப் பார்க்க அருள் மென்னகையோடுக் கட்டை விரலை உயர்த்திக் காட்டவும் அவள் முகத்தில் ஒரு நொடி நிம்மதியின் சாயல் ஓடி மறைந்தது. இவர்கள் ஒருபுறம் தங்கள் வேலையை யாரும் அறியா வண்ணம் செய்துக் கொண்டிருக்க, அங்கு சிதம்பரத்திற்கு மறுபடியும் எம் ஆர் ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன் என்று அனைத்தும் எடுக்கப்பட்டு மற்ற பரிசோதனைகளும் முடிக்கப்பட்டு, அதற்கான ரிப்போர்ட்களையெல்லாம் சரி பார்த்தத் தலைமை மருத்துவர் தன் மருத்துவக் குழுவோடு அதைப் பற்றி ஆலோசித்து முடித்து அவற்றையெல்லாம் டெல்லி மருத்துவமனைக்கு மெயில் செய்தார். 

 

         அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த ராஜஷ் தான் அவற்றை சரிப்பார்த்து தலைமை மருத்துவரிடம் கொடுத்ததால் யாரும் அறியா வண்ணம் அந்த ரிப்போர்ட்களையெல்லாம் தன் கைப்பேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டான். 

 

         இப்படி அவரவர் வேலைகள் அவர்களை மூழ்கடித்ததில் அந்த நாள் ஓட, மறுநாள் விடிந்தவுடன் தேன்மலர் மருத்துவரிடம் கேட்டு சிதம்பரத்தை ஒரு சக்கர நாற்காலியில் அமர்த்தி அந்த மருத்துவமனை வளாகத்திலிருந்த சிறியப் பூங்கா போன்று அமைந்தத் தோட்டத்தில் நடைப் பழகியவாறு வெளிக்காற்றை சுவாசிக்க அழைத்துப் போனாள். அருள் ராஜேஷை காணச் சென்றிருந்தான். தேன்மலர் சிதம்பரத்திடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே சக்கர நாற்காலியைத் தள்ளிச் சென்றவள், அங்கு குழந்தைகள் விளையாடவும் அதை வேடிக்கைப் பார்த்த வண்ணம் நின்றிருந்தாள். அச்சமயம் அருளும் தேன்மலரை மென்னகையோடு ரசனையாகப் பார்த்துக் கொண்டே அங்கு வந்தான்.

 

                     தேன்மலர் அருகில் வந்த அருள் “அந்த குழந்தைங்களாம் ரொம்ப ஜாலியா இருக்காங்கல்ல….” என்று கேட்க, 

 

       அவனைத் திரும்பிப் பார்த்து மென் முறுவல் பூத்த தேன்மலர் “ஆமா அருளு… இவங்கள பாரேன்… ஒவ்வொருத்தர் முகத்துலயும் கண்லயும் எவ்ளோ சந்தோஷம்… கவலைனா என்னன்னே தெரியாத வயசுல்ல…” என்றாள். 

 

         அருளும் சிறு சிரிப்போடு ஆமோதிப்பாய்த் தலையாட்டியவன், பெருமூச்சுவிட்டு “ஹ்ம்ம்…. நாமளும் வளராம குழந்தையாவே இருந்துருக்கலாம்…. இல்ல ஹனிமலர்… கவலையே இல்லாம ஜாலியா இப்டி வெளையாடிட்ருந்துருப்போம்…” என்றான். 

 

          தேன்மலர் குழந்தைகளை வெறித்தவாறே “ஆமாண்டா… ஆனா நா சொன்னது நீ சொன்ன காரணத்துக்காக இல்ல…” என்றாள். 

 

       அருள் அவளைப் புருவம் சுருக்கிப் பார்க்க, தேன்மலர் அவன் முகம் பார்த்து விவரிக்க முடியா உணர்வைக் கண்களில் தேக்கி “புரிலல… இதோ இந்த குழந்தைங்க வயசு இருக்கும்போது அப்பா அடிக்கடி ஊருக்கு வருவாரு… அப்டி வர்ரவரு இப்ப மாறி ஒரு நாள்லலா திரும்பி போ மாட்டாரு… ஒரு மாசமாவது தங்குவாரு அப்டி இல்லனா பத்து பதினஞ்சு நாளாவது இருப்பாரு… அப்டி இருக்கும்போது என்னை காலைல எழுப்பி குளிக்க வச்சு சாப்பாடு ஊட்டி கிளப்பி ஸ்கூல்ல கொண்டு போய் விட்டு கூட்டிட்டு வந்து ஹோம் வொர்க் செய்ய வச்சு அப்றம் சாப்ட்டு நா தூங்கற வர என்கூட விளையாடி சிரிச்சு கதைப் பேசி என்கூடவே தான் இருப்பாரு… அப்பா வர்ர அந்த பத்து பதினஞ்சு நாள் மட்டும் அப்பாயியையும் அம்மாவையும் நா தேடவே மாட்டேன்… எனக்கு எல்லாமுமா அவரே இருப்பாரு… லீவ் முடிஞ்சு அவரு ஊருக்கு போறப்ப அழுது உருண்டு பிரண்டு ஆர்ப்பாட்டமே பண்ணுவேன்… அப்பா அடுத்து எப்போ வருவேன்னு ஒரு டேட் சொல்லி ப்ராமிஸ் பண்ணா தான் கொஞ்சம் சமாதானம் ஆவேன்…. ஹ்ம்ம் அதெல்லாம் கோல்டன் டேஸ்… இப்ப ரொம்ப மிஸ் பண்றேன்… அப்றம் விவரம் தெரிஞ்சு அப்பாவோட ஆசை லட்சியம்லாம் புரிஞ்சப்றம் அவருக்கான ஸ்பேஸ குடுக்கனுனு நினச்சு அப்டிலா அடம்புடிக்றத நிறுத்திட்டு நானே அவருக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சேன்… ஆனாலும் அப்பாவ மனசு தேடும் அப்பலாம் அப்பாயியோட ஒட்டிட்டே திரிவேன்…. அப்றம் நானும் அப்பாயியும் அப்டியே ஒட்டிக்கிட்டோம்…” என்று கூறி, விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் மனம் புரிந்த அருளும் அமைதியாக நின்றிருந்தான். இதைக் கேட்ட சிதம்பரத்தின் மனம் மகளை அணைத்து ஆறுதல் கூற நினைத்தாலும் அவரால் முடியாததால் கண்கள் தானாய் கண்ணீர் சிந்தியது. 

 

                 தேன்மலர் “சரி அருளு போலாம்…” என்று கூறி, சிதம்பரத்தின் சக்கர நாற்காலியைத் திருப்புகையில் அவர் கண்களில் கண்ணீரைக் கண்டவள் பதறி துடைத்து விட்டு “அப்பா… இப்ப எதுக்கு ஃபீல் பண்ற… நீ இத்தன நாள் என்னை விட்டு ரொம்ப தூரம் இருந்தல்ல… அதான் அந்த ஆண்டவன் போடா போய் உன் பொண்ணு கூட கொஞ்ச நாள் இருன்னு உன்னை என்கிட்ட அனுப்பி வச்சுட்டான் போல…” என்று கூறி அவள் இதழ்கள் விரக்திப் புன்னகை சிந்தினாலும் அவள் கண்கள் காட்டிய உணர்வை சிதம்பரத்தால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.

 

          ஆனால் அதைப் புரிந்துக் கொண்ட அருள் புதிதாய் தெரியும் தேன்மலரை கண்டு ஒரு நொடி சிலிர்த்தவன் பின் அவள் கரம் பற்றி அழுத்த, அவனைப் பார்த்த தேன்மலர் இறுக்கமான பார்வை ஒன்றை பதிலாய்த் தந்தாள். பின் இருவரும் சிதம்பரத்தை அவர் அறைக்கு அழைத்துச் சென்றனர். 

 

        காலை பரிசோதனையை சிதம்பரத்திற்கு ராஜேஷ் முடித்து செல்லும் முன் ஒருமுறை அருளையும் தேன்மலரையும் திரும்பிப் பார்க்க, அருள் கட்டை விரலை உயர்த்திக் காட்டவும் சிறு தலையசைப்புடன் மற்ற நோயாளிகளைக் கவனிக்கச் சென்றான். தேன்மலர் அருளை பார்க்க, அச்சமயம் அருளின் கைப்பேசி சிணுங்கவும் அதை எடுத்துப் பேசியவன் முகம் சுருங்கிப் போனது. 

 

        அருள் பேசுவதையேப் பார்த்துக் கொண்டிருந்த தேன்மலர் அவன் முக மாறுதல்களைக் கண்டு “என்னாச்சு அருளு…” என்று தண்மையாய் வினவ, அருள் “தாத்தா ரொம்ப சீரியஸா இருக்காங்களாம்… அம்மா ஒடனே கிளம்பி வர சொல்லுது…” என்று கூறி முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டான். 

 

       தேன்மலர் “அதுக்கு என்ன அருளு… கிளம்பி போக வேண்டியதுதானே…” என்று சாதாரணமாகக் கூற, அருள் அவளை முறைத்து முகத்தைத் திருப்பிக் கொண்டான். தேன்மலர் அவன் முகம் திருப்பி “இங்க பாரு அருளு… தாத்தா கடைசியா உன்னை பாக்கணுனு ஆசப்பட்ருக்கலால… அவருக்கு உன்னை எவ்ளோ புடிக்கும்னு எனக்கு தெரியும்… என்னால தான் வர முடியாது… நீ போறத்துக்கென்ன…” என்றாள். 

 

           அருள் அப்போதும் உர்ரென்று இருக்க, தேன்மலர் குரலில் கடுமைக் கூட்டி “இங்க பாருடா… அம்மாவ பெத்தவரு… உனக்கு இருக்கிற ஒரே தாத்தா… அவுருக்கு ஒன்னுன்னா அம்மா எவ்ளோ ஒடஞ்சுப் போவாங்க… அப்ப அவங்க பக்கதுல நீ இருக்க வேணா… ஒரு பேரனா உன்னை பாக்கணுன்ற அவரோட நியாயமான ஆசைய நீ நிறவேத்த வேணா… ஒழுங்கு மரியாதையா கிளம்பி போ… இல்ல உன்னை அடிச்சு துரத்தி விடுவேன்…” என்று விரல் நீட்டி எச்சரித்தாள். 

 

          இப்போது அருள் அம்மாவிடம் அடம் பிடிக்கும் குழந்தைப் பாவத்தோடு நின்றிருக்க, தேன்மலர் இதழோரம் துளிர்த்த முறுவலை வாய்க்குள் மறைத்துக் கொண்டு அவன் கன்னம் கிள்ளி “என் ராஜால்ல… போய்ட்டு வாடா… அப்பாவுக்கு தான் இப்ப உடம்பு நல்லார்க்குல்ல… நா பாத்துக்றேன்…” என்று அவன் கைப்பற்றி அழுத்தம் கொடுக்க, அதில் அவள் கண்களைக் கண்ட அருள், அவள் கண்கள் சொன்ன செய்தியைப் புரிந்தவன் கவலையோடு அவளைப் பார்த்துவிட்டு அரைமனதாக சரியென்று தலையாட்டினான். அதில் மகிழ்ந்த தேன்மலர் “என் செல்லம்… பட்டு… இப்டி தான் சொல் பேச்சு கேக்கணும்…” என்று அவன் கன்னம் கிள்ளி கொஞ்சியவள் “சரி வா… நீ இப்டியே போனா சாப்ட மாட்ட… கேண்டீன் போய் சாப்ட்டு கிளம்பு நீ…” என்றவள் சிதம்பரத்திடம் சாப்பிட்டு வருவதாகக் கூறிவிட்டு அவன் கைப் பிடித்து கேண்டினுக்கு அழைத்துச் சென்றாள். அருளும் அமைதியாக கவலைத் தோய்ந்த முகத்தோடு விழியகலாமல் அவளைப் பார்த்துக் கொண்டே போனான். அவள் உணவு வாங்கி வர, இருவரும் அமைதியாக உண்டனர். அப்போதும் அருளின் விழி தேன்மலரை விட்டு அகலவில்லை. 

 

                  தேன்மலர் கண்டும் காணாமலும் முகத்தில் எவ்வித உணர்வுமின்றி உணவே கண்ணாக உண்டு முடித்தாள். பின் இருவரும் சிதம்பரம் இருந்த அறைக்கு வர, உள்ளே நுழையும் முன் அருள் அவள் கைப் பிடித்தான். அவனைப் பார்த்த தேன்மலர் அவன் விழி பேசும் மொழியினை புரிந்து இதழ்களை சிறிதாக விரித்து இமை மூடித் திறந்து அழுத்தமானப் பார்வையோடு அவன் கை மீது கை வைத்து அழுத்தி “அருளு… நா பாத்துக்றேன் டா… நா என்ன சின்ன குழந்தயா…. நீ கவலப்படாம போ… அம்மாதான் ரொம்ப கலங்கிப் போவாங்க… எவ்ளோ வயசானாலும் நாம நம்பிக்கையா பற்றிக்க அப்பான்ற தூண் இருக்குன்ற வரை இந்த உலகத்துல எத வேணா சாதிக்கலான்ற தைரியமிருக்கும்… அதுவும் பொண்ணுங்களுக்கு அந்த தைரியமே அப்பா தான்… அப்டிபட்ட அப்பாவுக்கு ஒன்னுன்னா இந்த உலகமே நின்னு போன மாறியிருக்கும்… அவ்ளோ வலிக்கும்…” என்று சிறிது இடைவெளி விட, அவளைப் பார்த்துக் கொண்டிருந்த அருள் அவள் கண்களில் அந்தக் கவலையை வலியை அவள் அனுபவிப்பதை உணர்ந்தான். 

 

       பின் தேன்மலரே தொடர்ந்தாள், “ஸோ இந்த மாறி நேரத்துல அம்மா ரொம்ப ஒடஞ்சு போயிடுவாங்க… அவங்களுக்கு தாத்தா இடத்தையும் தைரியத்தையும் இனி நீ தான் நிரப்பனும்… அதுக்கு முதல்ல நீ அவங்க பக்கத்துல இருக்கணும்… அம்மாவ பாத்துக்கோடா…” என்று கூறி அவன் தலையில் ஆரம்பித்து கன்னம் வருடி அவனைக் கண்களில் நிரப்பியவள், “ம்ம்…” என்று தலையாட்டிக் கண்கள் சுருக்கிக் கெஞ்சலாக கொஞ்சிக் கேட்டாள்.

 

      அப்படி அவளைக் கண்ட அருளுக்கு அவள் சாக்லேட் கேட்டு கொஞ்சலாகக் கெஞ்சி நிற்கும் குழந்தையாகவேத் தெரிய, அவன் அதரங்கள் குறு முறுவல் பூக்க, செல்லமாக அவள் தலைக் கலைத்து “சரி டி…” என்றான். 

 

        அதைக் கேட்ட தேன்மலர் முகம் மலர “தட்ஸ் மை அருள்…” என்றவள், “சரி வா அப்பாகிட்ட சொல்லிட்டு… வீட்டுக்குப் போய் உன் திங்க்ஸ்லா எடுத்துட்டு கெளம்பு… நா துர்காவுக்கு ஃபோன் பண்ணி சொல்லிர்றேன் நீ வர்றன்னு…” என்று அவள் பாட்டுக்குப் பேசிக் கொண்டே அறையினுள் சென்றாள். அருளோ அவள் என்ன தான் கூறினாலும் விட்டுச் செல்ல மனமின்றி அவளைப் பார்த்தவாறே உள்ளேச் சென்றான்.

 

                  தேன்மலர் சிதம்பரத்திடம் விவரம் கூற, அருளும் அவரிடம் விடைபெற, சிதம்பரம் சிறு தலையசைப்போடு விடைக் கொடுத்தார். பின் சிதம்பரம் உறக்கம் வருவதுபோல் இருக்கவும் கண்சந்து விட, தேன்மலர் அருளுக்கு மேலும் சில அறிவுரைகள் கூறி அவனைப் புறப்படச் சொன்னாள். அருள் மனமேயில்லாமல் சரி என்று தலையசைத்துக் கிளம்பியவன் திரும்பி வந்து அவளை இறுக அணைத்துக் கொள்ள, தேன்மலரும் அவனை அணைத்துக் கொண்டு முதுகை வருடினாள். அந்த அணைப்பில் ஒரு அன்னை மகனின் பாசமும், அன்னையைப் பிரிய மறுக்கும் குழந்தையின் அன்பும் தான் நிறைந்திருந்தது. பின் மனமேயில்லாமல் அருள் விடைப்பெற்றுக் கிளம்ப, மருத்துவமனையின் வெளியில் அவனுக்கு விடைக் கொடுத்த தேன்மலர் அவன் சென்ற பாதையையே வெறித்தவள், பெருமூச்சோடு இறுகிய முகமாய் சிதம்பரத்தின் அறைக்குத் திரும்பி துர்காவிற்கு அழைத்து அருள் வரும் விடயத்தைக் கூறினாள். 

 

        பின் தான் செய்ய வேண்டியக் காரியம் பற்றி யோசிக்கலானாள். அருளும் வேலாயியை பார்த்துவிட்டு துர்காவிடம் கூறிவிட்டு திருச்சிக்குப் புறப்பட்டுச் சென்றான். மாலைபோல் ஊருக்குச் சென்று விட்டு கைப்பேசி மூலம் தேன்மலரிடம் சிதம்பரத்தின் உடல்நிலைப் பற்றி விசாரித்துவிட்டு தன் தாத்தா இப்பவோ அப்பவோ என்ற நிலையில் இருப்பதாகக் கூறினான். 

 

           தேன்மலர் அவனிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்த நேரம் ராஜேஷ் மாலை பரிசோதனைக்காக அங்கு வர, தேன்மலர் அமைதியாக அவனை வெறிக்க, அவனும் பார்வையால் பதில் சொல்லிவிட்டு சிதம்பரத்தைப் பார்த்துவிட்டுச் சென்றான். அந்த நாள் அப்படியே கழிய, இரவெல்லாம் தேன்மலர் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தவள், பின் நன்கு யோசித்து குழப்பமில்லாமல் தெளிவான முடிவெடுத்து உறங்கிப் போனாள். 

 

          மறுநாள் காலை பதினோரு மணியளவில் சிதம்பரத்தை வந்துப் பார்த்த தலைமை மருத்துவர் தேன்மலரிடம் ரத்த அழுத்தம் குறைந்துள்ளதாகவும், அவர் விரைவில் குணமடைய வாய்ப்பிருப்பதாகவும் கூறிவிட்டு அவருக்கு தரச்சொல்லி சில மருந்துகளைத் தந்துவிட்டு மாலையே அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று கூறினார். 

 

           மருத்துவர் கூறியது போலவே சிதம்பரத்தின் உடல்நிலையில் முன்பைவிட முன்னேற்றம் தெரிந்தது. இடது பாகம் பக்கவாதத்தால் முடங்கியிருக்க, வலது கை, காலையும் நகர்த்த முடியாமல் சிரமப்பட்ட சிதம்பரம் இப்போதெல்லாம் பழையபடி அசைக்க ஆரம்பித்துவிட்டார். அதனால் தேன்மலர் அவருக்கு உதவிக்கு ஆள் வேண்டாம் என்று மருத்துவரிடம் கூறினாலும் அவருக்கு பிசியோதெரபி செய்ய என்று பாரதியை உடன் வைத்துக் கொள்ளுமாறுக் கூற, சந்தேகப்படும்படி நடந்துக் கொள்ள வேண்டாம் என்று அரைமனதாக சரியென்று சம்மதித்தாள்.

 

                      மாலை அனைத்து மருத்துவமனை சம்பிரதாயங்களையும் முடித்து விட்டு, கேப் வரச்சொல்லி தேன்மலரும் பாரதியும் சிதம்பரத்தை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் வீட்டிற்கு வந்ததும் துர்கா இருவரிடமும் சிதம்பரத்தின் உடல்நிலைப் பற்றிக் கேட்டறிந்துக் கொண்டாள். பின் இரவு உணவைத் தயார் செய்ய தேன்மலர் அடுக்களைக்கு விரைய, அருள் அவளுக்கு அழைக்கவும் அழைப்பை ஏற்றவள் அவனின் தாத்தா இறந்த செய்திக் கேட்டு வருத்தம் கொண்டாள். எதிர்ப்பார்த்த செய்திதான் என்றாலும் அவளும் ஒரிரு முறை அவரைக் கண்டு பேசியவளாதலால் அவளின் மனம் வருந்தத் தான் செய்தது. தன் வருத்தம் மறைத்து அருளுக்கு ஆறுதல் கூறியவள் அவனின் அன்னையையும் நன்றாகப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்தாள். 

 

         தேன்மலருக்கு வருத்தமாகயிருந்ததால் எதுவும் செய்யாமல் அமைதியாக வந்து உட்கார்ந்தாள். அவளைக் கண்ட பாரதியும் துர்காவும் அவளிடம் என்னவென்று விசாரிக்க, அவள் விடயம் கூறவும் அவளைத் தொந்தரவுச் செய்யாது அவர்கள் இருவருமே இரவு உணவை சமைத்து சிதம்பரத்தை உணவருந்தச் செய்துவிட்டு, தேன்மலரை அழைக்க, அவள் தனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டு தன்னறைக்குச் சென்று முடங்கிக் கொண்டதால், இருவரும் உண்டு விட்டு எல்லாம் எடுத்து வைத்து விட்டு தங்கள் பணியைக் கவனிக்கச் சென்றனர். 

 

        அறைக்கு வந்து மெத்தையில் விழுந்த தேன்மலருக்கு யாரிடமாவதுப் பேசினால் தேவலாம் என்று தோன்ற ராகவிக்கு அழைத்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாள். வேலாயி மற்றும் சிதம்பரத்தை பற்றி விசாரித்த ராகவி, சிறிது வெட்கம் கலந்தக் குரலில் தனக்கு மாப்பிள்ளைப் பார்த்திருப்பதாகவும் அடுத்த மாதம் நிச்சயம் செய்து மூன்று மாதங்களில் திருமணம் செய்வதாக முடிவுச் செய்திருப்பதாகக் கூறவும் தேன்மலரின் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது. அவளுக்கு வாழ்த்துக் கூறியவள், பின் மாப்பிள்ளைப் பற்றி விசாரித்துத் தெரிந்துக் கொண்டு ராகவியை செய்தக் கிண்டலில் அவள் அழைப்பைத் துண்டித்து விட்டாள். தேன்மலரும் மலர்ந்தப் புன்னகையோடு உறங்கிப் போனாள். 

 

                    இரண்டு நாட்கள் அமைதியாக வழக்கமான வேலைகளோடுக் கழிய, மூன்றாம் நாள் பாரதி வீட்டிலிருந்து அவளது அம்மாவிற்கு உடம்பு முடியவில்லை என்று அழைப்பு வரவும் தேன்மலரிடம் தெரிவித்த பாரதி, மருத்துவமனைக்கும் அழைத்து விவரம் கூற, முதலில் முடியாது என்று மறுத்த மருத்துவமனை நிர்வாகம், அவள் அன்னை இதய நோயாளி எனவும் அவரைப் பார்த்துக் கொள்ள தன்னை விட்டால் வேறு யாருமில்லை என்று கூறவும், பாரதி தன் அன்னையை அனுமதித்திருப்பதாய்க் கூறிய மருத்துவமனைக்கு அழைத்து உண்மைத் தன்மையைத் தெரிந்துக் கொண்டு அவளுக்கு ஒருவாரம் விடுமுறை அளித்தது. அதன் பின்பே பாரதி தன் சொந்த ஊரான திண்டுகல்லுக்குக் கிளம்பிச் சென்றாள். அவள் சென்றதும் அவள் வரும்வரை சிதம்பரத்தை தான் பார்த்துக் கொள்வதாக ராஜேஷ் மருத்துவமனை நிர்வாகத்திடம் கூற, அவர்களும் சிறிது யோசனைக்குப் பின் சரியென்று கூறவும் உடனே புறப்பட்டு தேன்மலரின் இல்லம் வந்தடைந்தான். 

 

           ராஜேஷ் வந்ததும் தேன்மலர் அவனிடம் சைகையாலேயே தாயாரா என்று கேட்க அவனும் தயார் என்று கூற, இருவரும் துர்காவை உதவிக்கு அழைத்துக் கொண்டு சிதம்பரத்தின் அறைக்குச் சென்றனர். சிதம்பரத்தின் கைப் பிடித்து தேன்மலர் சைகையால் பொறுமையாக விடயத்தை விவரிக்க, சிதம்பரத்தின் கண்கள் தன் பெண்ணை எண்ணி பெருமையால் மிளிர, இதழ்கள் சிறிதாய் விரிந்தது. சிதம்பரம் கண்களால் தன் சம்மதம் தெரிவித்ததும் ராஜேஷ் துர்காவின் உதவியோடு அவரின் வலது கையில் உணர்விழப்பு மருந்தை (அனஸ்தீஷியா) ஊசி மூலம் செலுத்தினான். 

 

           ராஜேஷ் கொடுத்தது குறிப்பட்ட இடத்தை மட்டும் உணர்விழக்க வைக்கும் மருந்தாதலால் சிதம்பரத்தின் வலது கை மட்டும் உணர்விழக்க, ராஜேஷ் சிதம்பரத்தின் கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்குமிடையேக் குறிப்பிட்டளவு சிறிதாகக் கிழித்தவன் மருத்துவ இடுக்கி மூலம் நெல்மணியளவு அவரின் கைக்குள் செலுத்தப்பட்டிருந்த மைக்ரோ சிப்பை நாசுக்காக வெளியே எடுக்க, துர்கா தயாராய்க் கையில் வைத்திருந்த திரவக் குடுவையில் அதைக் கழுவியவன் அந்த சிப் உள்ளே நுழையும் அளவுள்ள சிறிய குடுவையில் அது அசையாதவாறுப் போட, தேன்மலர் அக்குடுவை இறுக்க மூடி தாங்கள் உபயோகிக்காத ஒரு அறையில் வைத்து விட்டு, தொலைக்காட்சியை போட்டு சத்தத்தை அதிகமாக வைத்துவிட்டு சிதம்பரத்தின் அறைக்கு வந்தாள். 

 

                  அதற்குள் ராஜேஷ் சிதம்பரத்தின் கையில் இரு தையல்களைப் போட்டு அது சீழ் பிடிக்காமலிருக்க, ஒரு ஊசியையும் போட்டு விட்டான். ராஜேஷும் துர்காவும் தங்கள் கைகளை சுத்தப் படுத்தி வர, அதேநேரம் தேன்மலரும் அங்கு வர, மூவரும் சிதம்பரத்தை பார்த்தனர். 

 

தொடரும்….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்