Loading

அத்தியாயம்- 6

 

              தேன்மலரும் ராகவியும் அமைதியாக யார் வருகிறார்கள் என்று பார்த்திருந்தனர். சிதம்பரம் தலைமைத் தாங்கி இந்தியா வந்திருந்த எப் டி ஏ குழு விவரம் அறிந்து அவரைக் காண வந்திருந்தனர். அவர்களைக் கண்டு தேன்மலரும் அருளும் எழுந்து ஓரமாக நிற்க, வந்தவர்கள் சிதம்பரத்தை தொந்தரவு செய்யாதுப் பார்த்தனர். அந்தக் குழுவில் சிதம்பரத்தின் வயதையொத்த ஒரு நபர் தேன்மலரையே பார்க்க, அதைக் கவனித்த தேன்மலரும் அவரை எங்கோ பார்த்தது போல் உள்ளதே என்று அவரைப் பார்த்து யோசிக்க, திடீரென்று ஏதோ பொரி தட்ட அந்நபர் தேன்மலரிடம் வந்து “ஆர் யூ சிதம்பரம்ஸ் டாட்டர்…” என்று வினவினார். 

 

         தேன்மலரும் யோசனையோடு “எஸ்…” என்றாள். 

 

        அந்நபர் “டு யூ ரிமம்பர் மீ மிஸ்…” என்று நெற்றி தேய்க்க, தேன்மலர் “தேன்மலர்…” என்றாள். 

 

        அந்நபர் “எஸ் தேன்மலர்… ஒன்ஸ் வீ மெட் இன் ஏ ஹோட்டேல்… தட் டைம் யூ அக்கம்பனி வித் யுர் ஃபாதர்…” என்றார். 

 

        தேன்மலருக்கும் ஞாபகம் வந்துவிட “எஸ் மிஸ்டர். ஹென்ரி… நௌ ஐ ரிமம்பர்ட்…” என்று சிறிதாய் புன்னகைத்தாள். 

 

        ஹென்ரி ஜோன்ஸ் என்ற அந்நபர் தேன்மலரிடம் “ஐ அம் சாரி ஃபார் சிதம்பரம் பேபி…” என்று வருத்தப்பட, 

 

       தேன்மலர் “இட்ஸ் ஓகே மிஸ்டர். ஹென்ரி… ஹீ வில் பி பெட்டர் சூன்…” என்று கூற, 

 

       ஹென்ரி புன்னகைத்து “எஸ் பேபி… ஹி ஹேஸ் லாட் ஆஃப் வொர்க்ஸ் இன் பென்டிங்… யூர் ஃபாதர் டோன்ட் லைக் பென்டிங் வொர்க்ஸ்… ஃபார் தட் சேக், ஹி வில் பி ஆல்ரைட் சூன்….” என்று சிதம்பரத்தை பற்றி இன்னும் புகழ்ந்து பேசினார். 

 

          தேன்மலர் அருளையும் அவருக்கு அறிமுகம் செய்து வைக்க, அருளிடமும் பேசியவர், குழுவிலுள்ள மற்றவர்களுக்கும் தேன்மலரையும் அருளையும் அறிமுகம் செய்து வைக்க, அவர்களும் தேன்மலரிடம் சிதம்பரத்தின் நிலைக் குறித்து தங்கள் வருத்தத்தைத் தெரிவித்தார்கள். 

 

          பின் அவர்கள் கிளம்பிச் செல்ல, அருள் “இப்ப சொல்லு… ஏன் என்ன பேச வேணானு சொன்ன…” என்று கேட்க, 

 

         அந்நேரம் ஒரு பையன் கையில் வாளி மற்றும் மாப்புடன் வந்து “பையா… ரூம் கோ சாப் கர்னா ஹை… ஆப் பஹார் சலியே…” (ரூம் சுத்தம் பண்ணணும்… வெளில போக முடியுமா) என்று கேட்கவும், அருளும் தேன்மலரும் தலையசைத்து அறை விட்டு வெளி வந்தனர். 

 

           வெளியே வந்து நின்று அருள் கேட்க, அப்போதும் மருத்துவர் அழைத்ததாக செவிலிப் பெண் வந்து கூறிச் செல்லவும் இருவரும் மருத்துவர் அறைக்கு விரைந்தனர். மருத்துவர் சிதம்பரத்திற்கு எம் ஆர் ஐ ஸ்கேன் எடுக்க வேண்டுமென்றும் அதற்கு நேரமாகுமென்றும் தெரிவித்ததால் இருவரும் சென்று ஏதாவது சாப்பிட்டு வரலாம் என்று முடிவு செய்து கேண்டின் சென்றனர். அங்குத் தங்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொண்டு ஒரு மேசையில் அமர, அருள் தேன்மலரை “இப்ப சொல்லு…” என்பது போல் பார்த்தான். 

 

            தேன்மலர் “அருளு… அப்பா நல்லாயிருவாருல்லடா… இந்த ஹாஸ்பிட்டல் நல்ல ஹாஸ்பிட்டல்னு சொன்னாங்க…. இங்க அப்பாவுக்கு நல்லா ட்ரீட்மென்ட் தருவாங்கள்ள… இல்ல நாம நம்ம ஊருக்கு அப்பாவ கூப்ட்டு போலாமா…” என்று முகத்தில் கவலையோடு சம்பந்தமில்லாமல் பேசினாள். 

 

         அருள் கோபமாக “என்ன பே…” என்று ஏதோ சொல்ல வர, தேன்மலர் கண்களால் எச்சரிக்கவும் அருள் தன்னை தணித்து அவள் கைப் பற்றி ஆறுதலாக “அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது ஹனிமலர்… இங்க நல்லா ட்ரீட்மென்ட் பண்ணுவாங்க நா விசாருச்சுட்டேன்… நீ கவல படாத…” என்றான். 

 

          பின் இருவருமே எதுவும் பேசாமல் அமைதியாக உண்டு முடித்து எழ, இவர்களை இரண்டு மேசை தள்ளி கண்காணித்து வீடியோ எடுத்து யாருக்கோ அனுப்பிய நபரும் இவர்களோடு எழுந்து இவர்களின் பின்னே பத்தடி தள்ளி வந்தான். இருவரும் அதைக் கவனித்தாலும் கவனிக்காதவாறு தங்கள் முகத்தில் கவலைத் தேக்கி ஃபோன் செய்து சுரேஷிற்கும் ராகவிக்கும் விவரம் கூறிவிட்டு அமைதியாக மெதுவாக நடந்து சிதம்பரமிருந்த அறைக்குச் சென்றனர். இவர்கள் அங்குச் சென்ற நேரத்தில் சிதம்பரமும் எம் ஆர் ஐ ஸ்கேன் முடித்து வந்திருந்தார். இம்முறை அவரிடம் இருவரும் ஆசையாகப் பேசச் செல்ல செவிலிப் பெண் அவரைத் தொந்தரவு செய்யாதீர்கள் என்று கூறி அங்கேயே அவரருகில் ஒரு புத்தகத்தை விரித்து வைத்து உட்கார்ந்து விட, தேன்மலரும் அருளும் ஒருவரையொருவர் பார்த்து விட்டு அமைதியாக உட்கார்ந்து விட்டனர். 

 

            தேன்மலருக்கும் அருளுக்கும் மண்டைக்குள் குழப்ப வண்டுக் குடைந்தெடுத்தாலும் அதை வெளிக் காட்டாது இயல்பாக இருப்பதுபோல் அமர்ந்திருந்தனர். தேன்மலர் சிதம்பரத்தைப் பார்க்க, அவரும் கண்களால் ஏதோ உணர்த்த, தேன்மலர் அதற்குமேல் அவரைக் காணாது தன் கைப்பேசியில் முகம் புதைத்துக் கொள்ள, சிதம்பரமும் கண்கள் மூடிப் படுத்துக் கொண்டார். தேன்மலருக்கும் அருளுக்கும் தாங்கள் கண்காணிப்பில் உள்ளோம் என்பது ஏதோ விபரீதத்தை உணர்த்த நெஞ்சம் படபடவென அடித்துக் கொண்டாலும் இருவரும் அமைதியாகவே இருந்தனர். 

 

         தேன்மலர் வாட்ஸாப்பில் அருளுக்கு ஒரு சாமி படத்தை பார்வேர்டு மெஸேஜ் செய்ய, அருள் அவளை நிமிர்ந்துப் பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் எழுந்து வெளியேச் சென்றான். ஒரு மணி நேரம் கழித்து உள்ளே வந்தவன் தேன்மலரை பார்த்து ஆமென்று இமை மூடித் திறக்க, தேன்மலர் இது எதிர்பார்த்ததுதான் என்பதுபோல் அருளிடம் வேலாயிப் பற்றியும் தன் தந்தையுடன் சிறு வயதிலிருந்ததும் அமெரிக்காவிலிருந்த நாட்களைப் பற்றியும் பேச ஆரம்பித்தாள். அருளும் அவளைப் போலவே எதுவும் காட்டிக் கொள்ளாமல் சிதம்பரத்தைப் பற்றியும் தன் சிறு வயது நாட்கள் பற்றியும் அளவளாவ ஆரம்பித்தான். இருவருமே தங்களுக்கு எதுவுமே தெரியாது என்பதுபோல் தான் அதன்பின் நடந்துக் கொண்டனர். 

 

         கல்லூரிக்குச் சென்ற ராகவி தங்கள் துறைத் தலைவர் சீதாராமனிடம் விவரம் கூறியதும் அவர் தேன்மலருக்கு அழைத்துப் பேச தேன்மலர் அவரிடம் இதை மாணவர்களுக்குத் தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ள அவரும் சரி என்று கூறி அருளிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தார். பின் அவர்களுடன் பணிபுரியும் சக பேராசிரியர்களும் தேன்மலருக்கு அழைத்துப் பேசினர். இப்படியே அந்த நாள் ஓட, மறுநாளும் இருவரும் சந்தேகம் வராதபடி நடந்துக் கொள்ளவும், மருத்துவர் செவிலிப் பெண்ணை தனியே அழைத்து ஏதோ கூற, அவர் அவர்களை சிதம்பரத்தோடுப் பேச அனுமதித்தார். சிதம்பரமும் அவர்களோடு அதிகம் பேச முயற்சிக்காமல் அமைதியாகவே இருந்தார். 

 

         திருச்சியில் ராகவி கல்லூரி செல்லும் முன்னும் சென்று வந்தப் பின்னும் வேலாயியை வந்துப் பார்த்து அவர் உடலை என்ன தான் செவிலியர்கள் சுத்தம் செய்தாலும் தானும் சுத்தம் செய்துவிட்டு, அவரிடம் உணர்வில்லையாயினும் அவருடன் உரையாடுவதை வழக்கமாக்கிக் கொண்டாள். மற்ற நேரங்களில் சுரேஷும் அவரைக் கண்ணும் கருத்துமாய்ப் பார்த்துக் கொண்டான்.இவ்வாறு ஒருவாரம் செல்ல, சிதம்பரத்தை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று மருத்துவர் கூறிய நாளும் வர, தேன்மலரும் அருளும் மருத்துவர் அறை முன்பு நின்றிருந்தனர். 

 

                      (இனி ஹிந்தியில் பேசுவதையும் ஆங்கிலத்தில் பேசுவதையும் புரிதலுக்காகத் தமிழிலேயேத் தொடர்கிறேன்) 

 

                மருத்துவர் “பேஷன்ட்க்கு ப்லட் ப்ரஷர் கன்ட்ரோல் ஆயிருக்கு…. நா சில மெடிசின்ஸ் தரேன் அதயே ஃபாலோ பண்ணுங்க… அப்றம் இந்த மெடிசின்ஸ் தீந்தா எனக்கு மெயில் பண்ணுங்க… ஐ வில் கொரியர் யூ…” என்றார். 

 

         அருள் “ஏன் டாக்டர்… இந்த மெடிசின் தமிழ் நாட்ல கெடைக்காதா…” என்று கேள்வியாய் அவரை ஊடுருவ, 

 

       அதற்கெல்லாம் அசராத அந்த மருத்துவர் “கெடைக்கும்… பட் மிஸ்டர். சிதம்பரம் அமெரிக்க சிட்டிசன் அதுவுமில்லாம அவரு எப் டி ஏ ஆபிசர் அவர் க்யூர் ஆகுற வரை எங்கள நல்லா பாத்துக்க சொல்லி ஹெல்த் மினிஸ்டிரிலேர்ந்தும் எப் டி ஏ ஆபிஸ்லேர்ந்தும் இன்ஸ்ட்ரக்ஷன் வந்துருக்கு… எப் டி ஏல அவரு பேம்லி இங்க இருக்றதால அவரு சீக்ரம் குணமாகலான்னு இங்கயே ட்ரீட்மென்ட் பார்க்க சொல்லிட்டாங்க… ஸோ மிஸ்டர். சிதம்பரத்துக்கு ஏதாவது ஒன்னுன்னா நாங்க ரெண்டு கவர்ன்மென்ட்க்கு பதில் சொல்லணும்… அதான்… அப்றம் செக் அப்க்கு (சென்னையில் உள்ள நரம்பியல் மருத்துவமனை ஒன்றின் பெயரை கூறி) அங்கயே போங்க…. ஏனா அவங்களோட தான் நாங்க டை அப் ல இருக்கோம்… பேஷன்ட்டோட ரிப்போர்ட்ஸ் பாக்க அது எங்களுக்கு ஹெல்ப் புல்லாயிருக்கும்…” என்றார். 

 

        தேன்மலரும் அருளும் அதற்குமேல் எதுவும் சந்தேகம் வரும்படி கேட்காமல் சரி என்றுவிட்டு மேலும் சிதம்பரத்திற்கான உணவு, பராமரிப்பு போன்றவற்றைக் கேட்டு அறிந்துக் கொண்டு, சிதம்பரமிருந்த அறைக்கு வந்தனர். தேன்மலர் சிதம்பரத்தின் கைப்பிடித்து சிறு புன்னகையோடு “அப்பா… நாம தமிழ்நாட்டுக்குப் போகப் போறோம்…” என்று கூற, சிதம்பரம் மென்னகைப் புரிந்து ஆயாசமாகக் விழிகளை மூடிக் கொண்டார்.

 

         இந்த ஒரு வாரத்தில் சிதம்பரம் பற்றிய செய்தி ஊடகங்களில் முக்கியச் செய்தியாக மாறியிருக்க, தேன்மலர் மருத்துவனை முன் கூடியிருந்த ஊடகவியலாளர்கள் முன் தோன்றி சிதம்பரம் நலமாக உள்ளதாகவும் அவரை தமிழகம் அழைத்துச் செல்ல இருப்பதாகவும் கூறினாள். பத்திரிக்கையாளர்கள் ஏன் அவர் உடல் நிலையில் திடீர் மாற்றம் என்று கேட்டதற்கு தேன்மலர் மருத்துவர் கூறிய உயர் ரத்த அழுத்தமென்ற அதேக் காரணத்தைக் கூறவும் அவர்கள் சரியென்று மேலும் சில கேள்விகள் கேட்க அதற்கு பதிலளித்தவள் சிதம்பரத்தைக் காணச் செல்ல, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடமும் ஊடகவியலாளர்கள் கேள்விகள் கேட்டு பதில் அறிந்துக் கொண்டுச் கலைந்துச் சென்றனர்.

 

                  சிதம்பரத்தை அழைத்துச் செல்ல மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தனி விமானம் தயார் செய்திருக்க, ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரத்தை அழைத்துக்கொண்டு விமான நிலையம் சென்ற அருளும் தேன்மலரும் அவ்விமானம் மூலம் சிதம்பரத்தோடு சென்னை வந்தடைந்தனர். சிதம்பரத்தின் மருத்துவச் செலவினை அமெரிக்க மெடிக்கல் இன்சூரன்ஸும் எப் டி ஏ நிறுவனமும் பார்த்துக் கொண்டது. 

 

        தேன்மலரும் அருளும் தங்களுக்குத் தெரிந்த நண்பர்கள் மூலம் சென்னையில் ஒரு வீட்டை வாடகைக்கு ஏற்பாடுச் செய்திருக்க, இருவரும் சிதம்பரத்தை அங்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் அங்கு சென்றபோதே டெல்லி மருத்துவமனையோடு தொடர்புடைய சென்னை மருத்துவமனையிலிருந்து ஒரு மருத்துவரும் செவிலியரும் சிதம்பரத்தைப் பார்த்துக் கொள்ள தயாராய் வந்திருந்தனர். தேன்மலரும் அருளும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு அமைதியாக சிதம்பரத்தை உள்ளழைத்துச் சென்றனர். அங்கு தன் நண்பர்களின் மூலம் அனைத்து வசதிகளும் செய்து வைத்திருந்தனர். 

 

          அருள் சிதம்பரத்தின் அறையில் அவரை படுக்க வைத்து அவரை சோதித்து ட்ரிப்ஸ் போட்டுக் கொண்டிருந்த மருத்தவரிடமும் செவிலியரிடமும் பேச்சுக் கொடுக்க, தேன்மலர் வேலாயியை அழைத்துக் கொண்டு வரும் சுரேஷிற்கு ஃபோன் செய்து அவர்கள் எங்கே வருகிறார்கள் என்று கேட்டறிந்துக் கொண்டாள். சென்னை விமான நிலையம் வரை தாங்கள் பல நபர்கள் மூலம் கண்காணிக்கப் பட்டு வந்ததாலேயே அருள் சந்தேகம் கொண்டு அந்த மருத்துவரிடமும் செவிலியரிடமும் பேச்சுக் கொடுக்க, அவர்கள் ஏதுமறியாதவர்கள் என்றறிந்ததும் பெருமூச்சு விட்ட அருள், தேன்மலரிடம் அதைப் பற்றி கூற யோசனையோடு சரி என்றவள் “அருளு… இருந்தாலும் நாம ஜாக்ரதையா இருக்கணும்… இது நம்ம ரெண்டு பேருக்குள்ள மட்டுமிருக்கட்டும்… வேற யாருக்கும் தெரிய வேணாம்… அப்றம் நீயும் நானும் யூஸ் பண்ற மாறி ஒரு சிம் வாங்கு… அந்த நம்பர் உன்னையும் என்னையும் தவிர யாருக்கும் தெரியக் கூடாது… அப்றம் அந்த நம்பர்லேர்ந்து எந்த சிச்சுவேஷன்லயும் யாருக்கும் கால் பண்ணக் கூடாது… அதுல நாம பேசுனாலும் வெறும் மெசேஜ் மூலம் மட்டும் தான்… ஓகே….” என்றாள். 

 

          அருளுக்கும் அவள் கூறியது சரியென்று படவே “சரி ஹனிமலர்…. அந்த சிம்மையும் டைரக்ட்டா வாங்காம என் ஸ்கூல் ப்ரண்ட் ஒருத்தன் இருக்கான் மினிஸ்டர் பையன் அவன் பேர்ல வாங்கி தர சொல்றேன்… ஏதாவது பிரச்சனனா அவன் ஈஸியா சமாளிச்சுருவான்…” என்றான்.

 

          பின் தேன்மலர் “எப்டி அருளு கண்டுபுடிச்ச… எனக்கு நம்ம ஃபோனும் ஹேக் பண்ணி யாரோ ட்ராக் பண்றாங்கனு சந்தேகம் தான் இருந்துச்சு… நீ எப்டி கன்பார்ம் பண்ண…” என்று கேட்டாள். 

 

          அருள் “அதுவா தேனு… நம்மள பாலோ பண்ண ஆள் கண்ல மண்ண தூவிட்டு… நாங்க ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் பேசனு மட்டும் ஒரு நம்பர் வச்சுருக்கோம் நல்ல வேளை அந்த சிம்ம ஒரு பேஸிக் ஃபோன்ல போட்டு வச்சுருந்தது இப்ப கைல இருந்துச்சு… அதுலேர்ந்து என் ப்ரண்ட் ஒருத்தன் ஹேக்கரா இருக்கான் அவனுக்கு ஃபோன் பண்ணி உன் நம்பரையும் என் நம்பரையும் குடுத்து செக் பண்ண சொன்னேன்… அவன் ஒன் ஹார்ல கன்பார்ம் பண்ணி சொல்லிட்டான்… எப்டி…” என்று காலரைத் தூக்கி விட, தேன்மலர் புன்னகைத்து அவன் தலையைக் களைத்து விட்டுச் செல்ல, அருளோ உதட்டில் புன்னகை உறைய முன்னந்தலையைக் கோதிவிட்டுக் கொண்டே செல்லும் அவளைப் பார்த்திருந்தான். 

 

           சிதம்பரத்துடன் செவிலிப் பெண் பாரதி மட்டும் இருந்துக் கொள்ள, மருத்துவன் ராஜேஷ் மருத்துவமனைக்குச் சென்று விட்டான். சுரேஷ் வேலாயியோடு ஒரு ஆம்புலன்ஸில் வந்திரங்க, தேன்மலரும் அருளும் வேலாயியைக் கண்டுக் கண்க் கலங்கினர். மோகனிடம் சொல்லி வேலாயியைக் கவனித்துக் கொள்ள தேன்மலர் ஒரு செவிலிப் பெண் தயார் செய்திருக்க அவளும் அவர்களோடு வந்திருந்தாள். பின் வேலாயிக்கு சிதம்பரம் இருந்த பக்கத்து அறையையே ஏற்பாடுச் செய்திருக்க, அங்கு வேலாயியைப் படுக்க வைத்தனர். 

 

         தேன்மலர் அந்த செவிலிப் பெண்ணிடம் பேச்சுக் கொடுக்க, அவள் தன் பெயர் துர்காவென்றும் தானும் திருச்சி தான் என்று கூறியவள் தன் குடும்ப பின்னணியும் கூறினாள். தேன்மலருக்கு கலகலவென்று கள்ளமில்லாமல் பேசும் துர்காவை பிடித்து விட்டது. துர்காவும் பேசிய சிறிது நேரத்திலேயே அக்கா அக்காவென்று தேனிடம் ஒட்டிக் கொண்டாள். அருளுக்கும் துர்காவின் பேச்சு பிடித்து விட அவனும் அவளை தன் தங்கைப் போல் பாவித்தான். பாரதி துர்காவைப் போல் அதிகம் பேசா விட்டாலும் தேன்மலரிடமும் அருளிடமும் சினேகமாகவேப் பழகினாள். சுரேஷும் இரண்டு நாட்கள் அவர்களோடு தங்கியிருந்து விட்டு ஊருக்குக் கிளம்ப, தேன்மலர் அருளையும் கிளம்பச் சொன்னாள். 

அருள் போக மாட்டேன் என்று அடம்பிடிக்க, தேன்மலர் தான் வேலைக்குப் போக வேண்டுமென்று அவனை வற்புறுத்தி சுரேஷோடு அனுப்பி வைத்தாள். 

 

        அருள் ஊருக்குக் கிளம்பும் முன் தன் நண்பன் மூலம் ஏற்பாடு செய்திருந்த சிம் கார்டு ஒன்றை தான் வைத்துக் கொண்டு மற்றொன்றை தேன்மலரிடம் கொடுத்துச் சென்றான். தேன்மலர் மெடிக்கல் லீவ் எடுத்துக் கொண்டுச் சென்னையிலேயேத் தங்கி விட்டாள். தேன்மலரின் வீட்டு வேலைகளில் பாரதியும் துர்காவும் உதவிப் புரிந்தனர். ராஜேஷ் மட்டும் அவ்வபோது வந்து சிதம்பரத்தை பரிசோதித்துச் சென்றான். 

 

           சிதம்பரத்தால் மருத்துவமனையில் பேசிய அளவுக் கூட பேச முடியாமல் போனது. ஆனால் தேன்மலர் மட்டும் அவரோடுப் பேசுவதை நிறுத்தவில்லை. சிதம்பரத்தின் முகம் அவ்வப்போது கவலைக் கொள்வதையும் அதன் தாக்கமாகக் கண்களில் கண்ணீர் வழிவதையும் கவனித்தத் தேன்மலர் ஏன் என்ற யோசனையில் ஆழ்ந்தாள். அதோடு டெல்லியில் தாங்கள் கண்காணிக்கப் பட்டது அவள் மனதை அறித்துக் கொண்டேயிருந்தது. தேன்மலர் வேலாயியிடமும் பேசுவதை வழக்கமாக்கியிருந்தாள். ராகவியும் அருளும் காலையும் மாலையும் கல்லூரியிலிருந்தே வீடியோ கால் மூலம் தேன்மலர், வேலாயி, சிதம்பரம், பாரதி மற்றும் துர்காவுடன் பேசுவதை வழக்கமாக்கியிருந்தனர். அருளும் தேன்மலரும் அவ்வப்போது தங்கள் மனதில் தோன்றும் சந்தேகங்களையும் தாங்கள் கண்டறிந்த விவரங்களையும் தங்களின் ப்ரத்யேக எண்ணின் மூலம் பரிமாறிக் கொண்டனர். 

 

         இப்படியே ஒரு மாதம் கடந்திருக்க, ஒரு நாள் சிதம்பரத்தைப் பரிசோதித்து முடித்த ராஜேஷ் மற்றவர்களுக்குத் தெரியாமல் தேன்மலரிடம் ஒரு கைப்பேசியைக் கொடுத்துவிட்டுச் சென்றான். 

   

       அவனிடம் தேன்மலர் ஏன் என்று கேட்டதற்கு “இன்னிக்கு நைட் இதுல உங்ககிட்ட ஒருத்தர் பேசுவாரு… அவரு எல்லாம் உங்களுக்கு சொல்லுவாரு…” என்றுவிட்டு அவன் கிளம்பிச் சென்று விட, சிறிது நேரம் குழம்பி யோசனையில் ஆழ்ந்தத் தேன்மலர், இரவு தெரிந்துவிடப் போகிறதென்று ராஜேஷ் கூறிச் சென்ற அழைப்பிற்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள். 

 

        இரவு சரியாக ஒரு மணியளவில் அந்த கைப்பேசி ஒலிக்க, அழைப்பை ஏற்று காதில் வைத்தவள், அந்தப் பக்கம் கூறிய விஷயம் கேட்டு முகம் சிவந்து பிறகு தானும் பேசிவிட்டு, பொறுமையாக யோசித்தவள் ஒரு முடிவுடன் உறங்கிப் போனாள். 

 

        மறுநாள் காலை அருளுக்கு குறுந்தகவலின் மூலம் அனைத்தையும் தெரிவித்தவள், தான் யோசித்தவற்றையும் கூறினாள். அருளும் சில விஷயங்கள் கூற, இருவரும் சேர்ந்து பொறுமையாக ஒரு வாரம் யோசித்து ஒரு முடிவு செய்தனர். தேன்மலரிடம் கைப்பேசிக் கொடுத்துச் சென்ற மறுநாளே ராஜேஷ் வீட்டிற்கு வரவும் அவனிடம் யாரும் அறியா வண்ணம் அதைத் திருப்பிக் கொடுத்து விட, ராஜேஷ் திரும்பிப் போகும் வழியில் அதை உடைத்து ஒரு புதருக்குள் தூக்கி எறிந்துவிட்டான். 

 

         ஒருநாள் சிதம்பரத்தின் உடல்நிலை மோசமடைய பாரதி ராஜேஷின் எண்ணிற்கு அழைத்து விவரம் கூற, ராஜேஷ் ஆம்புலன்ஸோடு வந்துவிடவும் தேன்மலரும் பாரதியும் துர்காவிடம் வேலாயியை பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு சிதம்பரத்தை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு சிதம்பரத்திற்கு முதலுதவி அளிக்கப்பட்டு, ரத்த அழுத்தம் உயர்ந்திருந்ததால் அது குறைவதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. தேன்மலர் அருளுக்கு மட்டும் அழைத்து விவரம் கூற, மறுநாளே கல்லூரிக்கு ஒரு வாரம் விடுப்பு எடுத்துக் கொண்டுச் சென்னை வந்து விட்டான். சிதம்பரத்தை ஒருவாரம் மருத்துவமனையில் இருக்க பரிந்துரைக்கவும் தேன்மலரும் அருளும் அதுவே சரியான சந்தர்ப்பம் என்று கருதி தங்கள் திட்டத்தைச் செயல்படுத்த ஆயத்தமாயினர்.

தொடரும்….

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்