Loading

“ச்சே… இவிய எங்குட்டு போய் தொலஞ்சிட்டாருன்னு தெரியல… எலேய் கார்த்திக்… போய் துரை மாமா கிட்ட அத்தான பத்தி ஏதாவது தெரிஞ்சதான்னு கேட்டுட்டு வாலே…” எனத் தன் தம்பியிடம் கூறி அனுப்பி விட்டு வயற் காட்டை நோக்கி நடந்தாள் சென்னியம்மாள்.

மாலை நேரம் என்பதால் அவ் வழியில் யாருமே இருக்கவில்லை.

அனைவரும் தத்தம் வேலைகளை முடித்து விட்டு வீடுகளுக்கு கிளம்பி இருந்தனர்.

செழித்து வளர்ந்து இருந்த வயற் காட்டின் அழகை ரசித்தபடி நடந்தவளின் கைப் பற்றி திடீரென யாரோ இழுக்கவும் அவள் அதிர்ந்து கத்தப் பார்க்க, அதற்குள் அவளின் வாயை பொத்தினான் அவன்.

அவனைக் கண்டு சென்னியம்மாள் அதிர்ச்சியில் கண்களை அகல விரிக்க, தன் கரத்தை அவளின் வாயில் இருந்து விலக்கியவன், “என்ன புள்ள… இம்புட்டு அதிர்ச்சியா பார்க்குறீய?” என்க,

“நீ… நீயா… நீயி எப்படிலே உசுரோட இருக்க?” என அதிர்ச்சி மாறாமல் சென்னியம்மாள் கேட்கவும் பேய் சிரிப்பு சிரித்தவன், “உன் கையால தானேலே என்னைக் கொன்னு போட்டீய… அப்போவே நான் செத்துட்டேன்… ஆனா என்னை அநியாயத்துக்கு கொன்ன உன்னையும் உன் அத்தானையும் பழி வாங்க வேணாமாலே? அதான் செத்தும் ஆவியா வந்து இருக்கேன்…” என சென்னியம்மாளை முறைத்துக் கொண்டு கூறவும் அவள் கண்கள் மரண பீதியைக் காட்டியது.

“இ…இல்ல… நீயி பொய் சொல்ற…” என்கவும், “நீயி கொன்ன அழகுக்கு எவன்லே பொழச்சி வருவான்… பக்கா முழுநேர கொலைகாரியா இருப்ப போல…” என ஏளனமாகக் கூறவும் அன்றைய சம்பவத்தை நினைத்துப் பார்த்தவளின் முகம் வெளிறிப் போக, “நா… நான்…” என சென்னியம்மாள் அங்கிருந்து தப்பித்துச் செல்லப் பார்க்கவும் அவள் முகத்தில் மயக்க மருந்தை அடித்தான் அவன்.

_______________________________________________

“ஆஹ்… வலிக்கிதுலே… மருந்த போட்டு விடு… முடியல… வலி உயிர் போகுதுலே…” என உடம்பில் இருந்த காயம் தந்த வலியில் மாரி துடிக்க, அவ் அறையினுள் நுழைந்த முத்துராசு, “எலேய்… ஐயாவுக்கு வலிக்கிதாம்… அந்த மருந்த எடுத்துட்டு வாலே…” எனக் குரல் கொடுக்கவும் முகமூடி அணிந்த ஒருவன் கையில் ஏதோ ஒரு பாத்திரத்துடன் நுழைந்தான்.

மாரி கடினப்பட்டு தன் தலையை உயர்த்த, வந்தவனோ தன் கையில் வைத்திருந்த மிளகாய்த்தூள் கரைசலை மாரியின் உடலில் இருந்த காயங்களில் தடவவும் வலியில் அலறினான் மாரி.

“ஏ…ஏய்… என்னலே இது…” எனத் துடிக்க, அம் முகமூடி அணிந்து இருந்தவன், “என்ன… வலிக்கிதாலே? இப்படி தானே எனக்கும் வலிச்சது… எங்க ஐயனுக்கு அப்போ எம்புட்டு வலிச்சி இருக்கும்லே…” எனக் கூறவும் அவனின் குரலைக் கேட்டு அதிர்ந்தான் மாரி.

“நீ… நீயி…” என வார்த்தை வராது தடுமாற தன் முகத்திலிருந்த முகமூடியைக் கழற்றினான் ஜெய்.

மாரி அதிர்ச்சியில் உறைய, “என்னலே? நம்ம கையாலயே கொன்னவன் எப்படி உசுரோட வந்து இருக்குறான்னு யோசிக்கிறியா?” என ஏளனமாகக் கூறிய முத்துராசு, “நான் தான் சொன்னேன்ல… நீயி என் ஐயன கொன்னத போல என் குடும்பத்தை ஒன்னும் செய்ய விட மாட்டேன்னு… என் தம்பிய கொன்னு என்னை தேர்தல்ல தோற்கடிச்சி என் குடும்பத்தை சிதைச்சிட்டதா அப்பனும் புள்ளயும் ஆடிட்டு இருந்தியேலே… பாரு… நல்லா பாரு என் தம்பிய… என் ஜெய் அவன்… உங்களை அழிக்க தான்லே அவன் உசுரோட வந்திருக்கான்… என்னலே நினைச்சீய…அன்னைக்கு நீயும் அந்த பொட்டச்சியும் இவன கொன்னதும் இவன் செத்துட்டான்னா… இல்லலே… கேட்டுக்கோ என்ன நடந்ததுன்னு… அதுக்கு முன்னால நீயி ஒருத்தங்கள சந்திக்கணும்லே…” என்ற முத்துராசு ஜெய்யிடம் கண்ணைக் காட்டவும் சரி எனத் தலையசைத்து விட்டு வெளியே சென்றான் ஜெய்.

மாரி என்ன நடக்கிறது எனப் புரியாமல் அறை வாயிலையே பார்த்துக் கொண்டிருக்க, வெளியே சென்ற ஜெய் சென்னியம்மாளின் முடியைப் பற்றி இழுத்து வந்து மாரியின் அருகில் தள்ளி விட்டான்.

மாரியைக் கண்டு அதிர்ந்த சென்னியம்மாள், “அத்தான்…” என்க, “நீயி எப்படி புள்ள இங்குட்டு…” என்றான் மாரி அதிர்ச்சி மாறாமல்.

முத்துராசு, “இவ தானேலே அப்பனுக்கும் மவனுக்கும் அம்புட்டுக்கும் உடந்தையா இருந்தாப்புல… இவளை மட்டும் விட்டுற முடியுமா…” என்க, சென்னியம்மாளிடம் சென்ற ஜெய் அவளின் கன்னத்தில் ஓங்கி ஒன்று விடவும் தூரச் சென்று விழுந்தாள் அவள்.

மாரி, “ஏய்…” எனக் கத்த, “பொம்பளப் புள்ள மேல கைய வைக்க கூடாதுன்னு சொல்லி தான்லே எங்க ஆத்தா எங்க மூணு பேரையும் வளர்த்திச்சி… ஆனா நீயெல்லாம் பொண்ணே இல்ல…” என அவளின் மறு கன்னத்திலும் அறைந்த ஜெய், “பொண்ணு என்ன? நீயெல்லாம் மனுஷப் பிறவியே இல்ல… சாதி வெறி பிடிச்ச மிருகங்கள்… ச்சீ… அசிங்கமா இல்லயாலே உனக்கு? உங்க சாதி வெறிய காட்டிக்க என் காதல் தானாலே கிடைச்சது?” எனக் கேட்டான் வருத்தமாக.

சென்னியம்மாள் பயத்தில் பதில் கூறாது அமைதியாக இருக்க, “அன்னைக்கு அம்புட்டு நடந்தும் இன்னும் நான் எப்படி உசுரோட இருக்கேன்னு யோசிக்கிறியாலே?” என ஜெய் கேட்கவும் சென்னியம்மாளின் தலை தானாக மேலும் கீழும் ஆடியது.

_______________________________________________

இரண்டு வருடங்களுக்கு முன்

முத்துராசு திருவம்பட்டி எம்.எல்.ஏ தேர்தலில் கீழ் சாதி மக்களின் நலனுக்காக வேண்டி கலந்து கொள்ள முடிவு எடுத்தவன் நாமினேஷனில் தன் பெயரையும் வழங்கினான்.

அதை அறிந்த ராஜதுரை யாரும் முத்துராசுவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் எனக் கேலி செய்ய, அதனைக் கண்டு கொள்ளாத முத்துராசு தன் தேர்தல் பிரச்சாரத்தை கீழ் சாதி மக்கள் வாழும் இடத்தில் இருந்தே ஆரம்பித்தான்.

முத்துராசு, “இப்போ எம்.எல்.ஏயா இருக்குற ராஜதுரை தான் இன்னைக்கு நீங்க இந்த நிலமைல இருக்க காரணமா இருக்காரு… அந்தாளு இருக்குற வரைக்கும் நம்மள முன்னேறவே விட மாட்டாய்ங்க… அதனால தான் இந்த தடவை தேர்தல்ல உங்க எல்லாரோட சார்பாவும் நான் நிக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்…” என்கவும் கூட்டத்தில் சலசலப்பு.

“நாமளும் மனுசங்க தான்லே… அவிய என்னமோ எங்க இரத்தம் மட்டமான இரத்தம்னு சொல்றாய்ங்க… எதுல நாம அவியல விட குறைஞ்சி போய்ட்டோம்லே… நெசமா சொல்லணும்னா அவியலோட அம்புட்டு இடத்துலயும் நம்ம சனங்க தான்லே வேலை செய்றாங்க… அப்போ எப்படி நாம கீழ்த்தரமானவங்களா ஆவோம்… நம்மளுக்கு தேவையான அடிப்படை வசதி கிடைக்கணும்… நம்ம பசங்களும் மத்த பசங்கள போல பள்ளிக்கு போய் படிக்கணும்… இதெல்லாம் நடக்கணும்னா நான் இந்த தேர்தல்ல ஜெய்க்கணும்லே… அதுக்கு உங்க ஆதரவு இருந்தா போதும்…” என முத்துராசு கூறவும் கூட்டத்தில் ஒருவன்,

“நீயி சொல்றது எல்லாம் சரி தான்லே… ஆனா அந்த ராஜதுரை லேசி பட்டவன் கிடையாது… நாம புள்ள குட்டி காரன்லே… உனக்கு ஆதரவா நாம வாக்கு போட்டா அவிய நம்மள கொன்னு போட்டுருவாரு…” என்கவும் பலர் அதனை ஆமோதித்தனர்.

கஜா, “என்ன அண்ணே… இவிய இப்படி சொல்றாய்ங்க…” என வருத்தத்துடன் கூற, கூட்டத்தில் ஒரு பெரியவர் மட்டும், “அந்தப் பயலு நம்ம நல்லதுக்காக தானே இதை செய்யுறாப்புல… அந்த நாசமாப் போன ராஜதுரை நம்ம வூட்டையெல்லாம் கொளுத்தினப்போ இந்த பயலு தானே நமக்கு இருக்க இடம் அமைச்சி தந்தான்… இவிய தம்பி தானேலே எங்க புள்ள உசுர காப்பாத்திச்சு… அந்த நன்றிக்காகவாவது நாம இந்தப் பயலுக்கு வாக்கப் போட்டு உதவணும்லே…” என்கவும் முத்துராசுவின் கண்கள் பனித்தன.

“என்ன கிழவா நீயி… நீயி சொல்றது எல்லாம் நெசம் தான்… இவிய செஞ்சத்துக்கு நம்ம நன்றிய காட்டணும் தான்… ஆனா அதுக்காக நம்ம உசுர இழக்க முடியுமாலே? இது அந்த எம்.எல்.ஏக்கு தெரிஞ்சா அம்புட்டு பேரையும் கூண்டோட அழிச்சிடுவான்… உனக்கு என்ன கிழவா… நீயி வாழ்ந்து முடிச்சவரு… நாம அப்படியா…” என ஒருவன் கூறவும் அனைவரும் அதனை ஆமோதிக்க, “இது சரிபட்டு வராதுலே… நீயி கிளம்பு…” என்று விட்டு அக் கூட்டம் கலைந்து சென்றது.

“இவிய இப்படியே கிடக்கட்டும்ணே… இவியல எல்லாம் திருத்த முடியாது…” என‌ கஜா கோபமாகக் கூறவும், “எலேய்… சும்மா இருலே… அவிய சொன்னாய்ங்கன்னு அவியல அப்படியே சும்மா விட முடியாது… அவியலுக்கு நல்லது பண்ணணும்ங்கிறது எங்க ஐயன் ஆசை… நான் அதை எம்புட்டு கஷ்டப்பட்டாவது செஞ்சி காட்டுவேன்… நீயி மத்த சனங்க கூட பேச ஏற்பாடு பண்ணுலே…” என்று முத்துராசு கூறி விட்டு சென்றான்.

மக்கள் கூட்டம் காணப்படும் இடத்தில் நின்று முத்துராசு அதே போன்று பேச ஆரம்பிக்க, திடீரென எங்கிருந்தோ யாரோ அவன் மீது அழுகிய பழங்களை வீசவும் முத்துராசு அதிர, “எலேய்… எவன்லே எங்க அண்ணன் மேல இதை வீசினது?” என கஜா கோபமாக வினவவும் அவனை அடக்கினான் முத்துராசு.

மாரி அக் கூட்டத்திற்கு நடுவில் நின்று விஷமமாக சிரித்தான்.

மீண்டும் முத்துராசு பேச ஆரம்பிக்க, அதே போன்று அழுகிய பழங்கள், குப்பைகள் என ராஜதுரையின் ஆட்கள் அவன் மீது எறியவும் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமை காத்தான் முத்துராசு.

“கீழ் சாதிக்காரன் நீயி சொல்றத நாம கேட்கணுமாலே?” என ஒருவன் கேட்கவும் அக் கூட்டமே கேலியாக சிரித்தனர்.

கஜா, “எலேய்… யாரைப் பார்த்துலே கீழ் சாதின்னு சொன்னீய?” என கோபமாகக் கேட்கவும், “பின்ன என்னலே? இந்த ***** கீழ் சாதிக்கார பயலுக்கு கீழ நாம இருக்கணுமா? த்து… ஒன்னுக்கும் உதவாத பயலுங்க… வந்துட்டாய்ங்க வோட்டு கேட்டுக்கிட்டு…” என ஏளனமாக ஒருவன் கூறவும் அனைவரும் சிரித்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஆனால் முத்துராசு தன் முயற்சியைக் கை விடாமல் தன்னால் இயன்றது எல்லாம் செய்தான்.

சென்னியம்மாள் தன் காதலை ஏற்கவும் வானத்தில் மிதப்பது போல் உணர்ந்த ஜெய் அதன் பின் வந்த நாட்களில் துருவ்வுடன் நேரம் செலவழிப்பது குறைந்து சென்னியம்மாளுடனே நேரத்தைக் கடத்தினான்.

துருவ் விளையாட்டு போல் அடிக்கடி ஜெய்யைக் கவனமாக இருக்கக் கூற, ஜெய் அதனைக் காதிலே போட்டுக் கொள்ளவில்லை.

துருவ் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்ப்பார்த்துக் காத்திருக்க, இடையில் அருணிமாவின் காதல் தொல்லைகளும் அவனுக்கு வராமல் இல்லை.

ஒரு நாள் அலமேலு வீட்டில் வேலையாக இருந்தார்.

முத்துராசுவும் துருவ்வும் எங்கோ வெளியே சென்றிருக்க, ஜெய் தன் அறையில் உறங்கிக் கொண்டிருந்தான்.

திடீரென கதவு தட்டப்படவும் தன் மைந்தர்கள் தான் வந்துள்ளனர் என எண்ணியவாறு சென்று கதவைத் திறக்க, அங்கு இருந்ததோ அருணிமா.

அருணிமா, “ஹாய் அத்த… எப்படி இருக்குறீய?” எனப் புன்னகையுடன் கேட்கவும் அதிர்ந்த அலமேலு, “யாருலே நீயி? எங்குட்டு வந்து யாரைப் பார்த்து அத்தன்னு சொல்லுறீய?” என அதிர்ச்சி மாறாமல் கேட்க, “உங்கள தான் அத்தன்னு கூப்பிட்டேன்… நீயி என் மாமனுக்கு ஆத்தா… அப்போ எனக்கு அத்த தானேலே?” என அருணிமா கூறவும் குழம்பினார் அலமேலு.

சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து எழுந்து வந்த ஜெய் அங்கு அருணிமாவைக் கண்டு அதிர்ந்தவன், “எலேய்… நீயி இங்குட்டு என்னலே பண்ணுறீய?” என அதிர்ச்சியுடன் கேட்கவும் கோபமாக ஜெய்யிடம் சென்ற அலமேலு அவனின் காதைத் திருகியவர், “ஓஹ்… ஐயா தான் இந்தப் புள்ளயோட புருஷனாலே? எப்போ கல்யாணம் ஆச்சு? ஆத்தா கிட்ட கூட சொல்லல நீயி… எனக்கு அப்பவே தெரியும்லே நீயி கண்டவளுங்க கூட இளிச்சி இளிச்சி பேசும் போதே இப்படி தான் வந்து நிற்பீயன்னு…” என்கவும், “ஐயோ… ஆத்தா… விடுலே… வலிக்கிது… முதல்ல நான் சொல்றத கேளு ஆத்தா…” என ஜெய் கத்த, அதனைக் கண்டு வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள் அருணிமா.

“ஐயோ அத்த… அவிய ஒன்னும் என் மாமன் கிடையாது… அவிய எனக்கு அண்ணாத்த…” என அருணிமா கூறவும் அவளைக் குழப்பமாக நோக்கிய அலமேலு ஜெய்யின் காதை விடுவிக்க, தன் காதைத் தேய்த்து விட்ட ஜெய் அருணிமாவை முறைத்துக் கொண்டு, “ஆமாலே… இப்போ வந்து இம்புட்டு வியாக்கியானமா சொல்லு… இதை உனக்கு முன்னாடியே சொல்ல முடியாதா?” எனக் கேட்கவும் அருணிமா மீண்டும் சிரிக்க,

“எலேய்… செத்த கம்முன்னு இரு… என்னலே நடக்குது இங்குட்டு… யார இந்தப் புள்ள மாமான்னு சொல்லுது?” எனக் கேட்டார் அலமேலு.

ஜெய், “ஹா… எல்லாம் உன் செல்லப் புள்ள துருவ்வ தான் ஆத்தா…” என்கவும் அதிர்ந்த அலமேலு, “என்னலே சொல்ற? என் மயேனுக்கு கல்யாணம் ஆச்சா? அதுவும் இந்த ஆத்தா கிட்ட கூட சொல்லாம?” எனக் கண் கலங்க, “ஐயோ இல்ல அத்த… உன் புள்ள தான் உத்தமனாச்சே… அவிய எப்படிலே உன் சம்மதமில்லாம என்னைக் கல்யாணம் பண்ணிக்குவாறு…” என்றாள் அருணிமா.

அலமேலு, “அப்போ ரெண்டு பேரும் காதலிக்கிறியா கண்ணு?” எனக் கேட்கவும் இப்போது வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிப்பது ஜெய்யின் முறை ஆயிற்று.

அருணிமா அவனை முறைக்க, “ஆத்தா… இது வன் சைட் லவ்வு… இந்தப் புள்ள மட்டும் தான்லே நம்ம துருவ்வ காதலிக்கிது… இதுக்கு வேலை வெட்டி இல்லாம அந்தக் கல் நெஞ்சக்காரன் பின்னாலயே காதலிச்சிட்டு சுத்துது… ஆனா அவன் இந்தப் புள்ளய கண்டுக்குறதே இல்ல… எப்பப்பாரு அந்த புக்கையே கைல வெச்சிட்டு சுத்திட்டு இருக்கான்லே…” எனக் கூறிச் சிரிக்க,

“அப்படியாலே? அந்தக் கிறுக்கன் உன்ன கண்டுக்குறதே இல்லயா?’ என அலமேலு அருணிமாவிடம் கேட்கவும் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு ஆம் எனத் தலையசைத்தாள் அருணிமா.

அலமேலு, “இன்னைக்கு வரட்டும்லே… அந்தப் பயல நான் பார்த்துக்குறேன்… எம்புட்டு அம்சமா இருக்கியேலே நீயி… என் கண்ணே பட்டுடும்… அப்படியே மகாலட்சுமி மாதிரி இருக்க… அந்தப் பயலுக்கு கண்ணு தெரியல போல… இப்படி ஒரு ஜாரிய (ஜாரி – அழகான பெண்) கண்டுக்காம இருந்திருக்கானே…” என அருணிமாவின் முகத்தை வருடியவாறு தன் செல்ல மகனையே கடிந்து கொண்டார்.

ஜெய் அதனைக் கண்டு தலையில் அடித்துக்கொள்ள, “அப்போ உனக்கு என்னைப் பிடிச்சிருக்குதா அத்த? உன் புள்ளக்கி என்னைக் கட்டி வைப்பியலா?” என மகிழ்ச்சியுடன் கண்கள் பளிச்சிடக் கேட்க, “அடக் கூறு கெட்டவளே… உன்ன யாருக்குலே பிடிக்காம போகும்… என் புள்ளைக்கும் உன்ன பிடிக்குமா இருக்கும்… ஆனா அவன் காட்டிக்க மாட்டான்…” என அலமேலு துருவ்வை சரியாகக் கணித்துக் கூற, அருணிமாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அலமேலு, “இப்போ சொல்றேன் கேளு தாயி… நீயி தான் எங்க வூட்டு மருமக… என் புள்ளைக்கு நீயி தான் பொஞ்சாதி… எவன் என்ன சொல்லுறான்னு நானும் பார்க்குறேன்லே… என் தங்கத்துக்கு யாரு கண்ணும் படக் கூடாது… எம்புட்டு அம்சமான புள்ள…” என்றவர் அருணிமாவை நெற்றி வழித்து முத்தமிட்டார்.

பின் அத்தையும் மருமகளும் நன்றாக ஒட்டிக் கொண்டு கதைகள் பேச, இதையெல்லாம் ஜெய் ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்க்க, அப்போது சரியாக முத்துராசுவுடன் பேசியபடி வீட்டினுள் நுழைந்த துருவ் அருணிமாவைக் கண்டு அதிர்ந்தவன், “ஏய்… நீ இங்க என்ன பண்ணுற? யாரைக் கேட்டு என் வீட்டுக்கு வந்த?” எனக் கோபமாகக் கேட்டான்.

“நான் யாரைக் கேட்டுலே வரணும்? என் மாமன் வீடு… நான் எப்ப வேணாலும் வருவேன் மாமோய்…” என அருணிமா கூறவும் துருவ் பல்லைக் கடிக்க, முத்துராசு வாயை மூடிக் கொண்டு சிரித்தான்.

அலமேலு, “எலேய் துருவ் கண்ணா… எதுக்கு புள்ளைய திட்டுறியேலே… பாவம்…” என்க, “அம்மா… உங்களுக்கு இவளைப் பத்தி சரியா தெரியாது… சரியான வில்லங்கம் பிடிச்சவ… இவ்வளவு நேரமும் இங்க வந்து உங்க கிட்ட என்ன நாடகம் ஆடினாலோ தெரியல…” என துருவ் கோபமாகக் கூற, அவனைப் பார்த்து உதட்டை சுழித்தாள் அருணிமா.

துருவ், “ஏய்… நீ முதல்ல கிளம்பு இங்க இருந்து… உனக்கு தான் சொல்லி இருக்கேன் தானே என் பின்னாடி வராதேன்னு… திரும்ப உன்ன நான் இங்க பார்க்க கூடாது… போயிடு..” என அருணிமாவை விரட்டப் பார்க்க, “எலேய்… அது செத்த நேரம் இருந்துட்டு போகட்டும்லே…” என முத்துராசு கூற, “ஆமா கண்ணா… பாவம் புள்ள மூஞ்சே வாடி போச்சு…” என்றார் அலமேலு.

“என்ன ஆளாளுக்கு இவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்கீங்க… ஏய்… உனக்கு இப்படி சொன்னா சரி வராது… நீ வா முதல்ல…” என்ற துருவ் அருணிமாவின் கையைப் பற்றி வெளியே இழுத்துச் செல்ல, “அத்த… நான் வரேன்… அடுத்த தடவ மறக்காம அந்த மீன் குழம்ப சமைச்சி என் மாமன் கிட்ட அனுப்புச்சுடுலே… எலேய் அண்ணாத்த… வரேன்லே… ராசுண்ணா… நான் வரேன்…” எனக் கத்திக் கொண்டே துருவ் இழுத்த இழுப்பிற்கு சென்றாள் அருணிமா.

அலமேலு, முத்துராசு, ஜெய் மூவருமே அருணிமாவின் குறும்புத்தனத்தையும் வெகுளித்தனத்தையும் பார்த்து புன்னகைத்தனர்.

துருவ் அருணிமாவை வாசலில் விட்டு விட்டு கதவை அடைக்கப் பார்க்க, அவசரமாக கதவை மூட விடாமல் பிடித்துக் கொண்ட அருணிமா துருவ் தன்னை முறைப்பதைக் கூடப் பொருட்படுத்தாது, “ஓய் மாம்ஸ்… உன் கிட்ட முக்கியமான விஷயம் ஒன்னு சொல்லணும்லே…” என்கவும் அவளை முறைத்தவாறே, “என்ன? சொல்லித் தொலை…” என்றான் துருவ் கடுப்புடன்.

அவனைப் பார்த்து புன்னகைத்த அருணிமா, “முஜ்ஹே தும்சே பியார் ஹேன்…” என்கவும் கதவு பட்டென சாத்தப்பட்டது.

சாத்தப்பட்ட கதவையே சற்று நேரம் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அருணிமா.

துருவ் அருணிமாவை அனுப்பி விட்டு கோபமாக உள்ளே வர, அவனிடம் சென்ற அலமேலு, “எலேய்… நெசமாவே உனக்கு அந்தப் புள்ளய பிடிக்கலயா? எம்புட்டு அழகா இருக்குது… நல்ல பொண்ணுலே… எனக்கு இந்தப் புள்ள தான் மருமகளா வரணும்னு ஆசையா இருக்கு…” என்க, “சும்மா இருமா… நீ வேற…” என்று சலிப்பாக கூறி விட்டு தன் அறைக்குச் சென்றான் துருவ்.

ஜெய், “ஆத்தா… உனக்கு அந்தப் புள்ள மட்டும் இல்ல மருமக… இன்னொரு மருமகளும் இருக்கா…” என வெட்கப்பட்டுக் கொண்டே கூறவும், “எடுலே அந்த வெஞ்சாமரத்த… (வெஞ்சாமரம் – விளக்குமாறு)” என அலமேலு கூறவும் ஒரே ஓட்டமாக ஓடினான் ஜெய்.

அதனைக் கண்டு முத்துராசுவும் அலமேலுவும் மனம் நிறைய புன்னகைத்தனர்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்