Loading

** 10 **

 

கணவனுடன் வந்த கஸ்தூரியைக் கண்ட பரமேஸ்வரி, “எதுக்காகடி வெளியே போன? அவன் சொன்னா செய்திடுவியா? அப்பனும் மாமாவும் இங்க எதுக்கு இருக்கோம்? இப்பவே உங்களுக்கெல்லாம் கொடுக்கு வந்திடுச்சா?” என கோபமாகக் கேட்டார்.

 

அதற்கு கஸ்தூரி, “நான் என்ன வீட்டை விட்டா போனேன்?” என துடுக்காகக் கேட்டவள், 

 

பரமேஸ்வரியைப் பாராமல், “கோபத்தில் ஏதாவது பேசிடக்கூடானு தான் ம்மா வயலுக்கு போனேன்” என்றாள். 

 

அப்பொழுது தான் அவளுக்கு தான் என்ன சொன்னோம் என்று புரிந்தது. 

 

கலக்கத்துடன் பரமேஸ்வரியையும் ஆடலரசனையும் இருவரும் அதிர்ச்சி விலகாமல் பார்த்தனர். 

 

பரமேஸ்வரியின் கைகளைப் பற்றிய கஸ்தூரி, “அம்மா… ஏதோ கோபத்தில் சொல்லிட்டேன்… இனி மேல் இந்த மாதிரி தப்புத்தப்பா பேசமாட்டேன்” என கெஞ்சலாகக் கூற.

 

அவரோ விசும்பலுடன், “போடி” என கோபமாகக் கூறியவர்,

 

“அவனுக்கும் உனக்கும் என்னதான் வந்தது? எதுக்காக முட்டிக்கிட்டே சுத்தறிங்க?” எனக் கேட்க.

 

கஸ்தூரி, “அதெல்லாம் எதுவும் இல்லம்மா” என்றவள், 

 

“நான் சொல்றது ஆரூ அண்ணாவுக்கு பிடிக்கலை; அவர் செய்வது எனக்கு பிடிக்கலை… அதுதான் அப்பப்ப முட்டிக்கிறது… வேற எந்த பிரச்சனையும் இல்லை அவ்வளவு தான் ம்மா” என்று கூற.

 

ஆடலரசன், “நீ பேசி புரியவைக்கணும் கஸ்தூரி… அதைவிட்டுட்டு வெளியே போற வேலையெல்லாம் இனி இருக்கக்கூடாது” என்றவர்,

 

“ஆரூரன்… ஆரூரன்” என இளைய மகனை அழைத்தார். 

 

கஸ்தூரி, “அச்சோ! ஐயாரு என்ன பண்றிங்க? ஏன் ஆரூ அண்ணாவை கூப்பிடறிங்க ? வேண்டாம் விடுங்க” என பதட்டமாக கூற.

 

அதற்கு அவரோ, “அப்படியே விட்டா சரியா வராது கஸ்தூரி” என்றவர்,

 

“இன்னைக்கு நாம இருக்கும் போது பேசற பேச்சுத் தான நாளைக்கும் வரும்… இவனுங்க பேசுவதை வைத்து தான் இந்த வீட்டுக்கு வர மருமகள்களும் நாளைக்கு உன்னை நடத்துவாங்க? முளையிலேயே கிள்ளி எறிந்தால் தான் சரியாவரும்” என்று கறாராகக் கூறினார். 

 

பரமேஸ்வரி, “அவனையும் கொஞ்சம் தட்டிவைங்க மாமா… இவனை கூட நம்பிடலாம் மினுக்கு மினுக்குனு இருக்கான் பாருங்க அவனை மட்டும் நம்பவே முடியாது… அப்படியே பல்டி அடித்திடுவான்” என்றார்.

 

அப்பொழுது அங்கு வந்த ஆதிரன், “யாரும்மா  அது?” எனக் கேட்டு மாட்டிக்கொண்டான். 

 

“வேற யாரு? நீ தான்” என்ற பரமேஸ்வரி,

 

“ஆள் யாரு? உங்களைப் பற்றி எங்களுக்குத் தெரியாதுனு நினைக்கிறிங்களா? பேசக்கூடாதுனு தான் அமைதியா இருக்கோம்” என்றார் ஒரு மாதிரியான குரலில்.

 

“கண்ணு…  அமைதியா இரு” என மனைவியை ஆடலரசன் அடக்கினார். 

 

அதில் ஆதிரனின் முகம் விழுந்துவிட்டது.

 

கஸ்தூரி, “விடு ண்ணா… அம்மா தான… நானும் இப்பதான் ரெண்டு வாங்கினேன்” தன் கவலையை மறந்து சன்னக்குரலில் அவனை சமாதானம் செய்தாள். 

 

மெல்ல ஆடி அசைந்து வந்த ஆரூரன், “எதுக்கு ம்மா இப்படி கத்தறிங்க?” என கடுப்பாகக் கேட்க.

 

ஆடலரசன், “கூப்பிட்டது நான் ஆரூ” என்றவர்,

 

“இதுதான் உனக்கு கடைசி முறை…  திரும்பவும் பாப்பாவை எடுத்தெறிந்து பேசின துளைத்திடுவேன் ஜாக்கிரதை” என அழுத்தமும் கடுமையும் கலந்த குரலில் கூறினார். 

 

அதில் பின்வாங்கிய ஆரூரன், “தெரியாமல் சொல்லிட்டேன்… அதற்கு ஏன் இவ்வளவு பிரச்சனை? விடுங்க… இனி இந்த மாதிரி பேசமாட்டேன்” என அசால்டாகக் கூறினான்.

 

அதைக் கண்ட கஸ்தூரி மனதில், ‘சரியான சுயநலவாதி… எப்படி பேசுது பார்?’ என நினைத்துக்கொண்டாள். 

 

ஆதிரனோ, ‘ஜெகஜால கில்லாடியா இருக்கான்… என்னதான் இவனுக்கு அண்ணனா இருந்தாலும் நீ வேஸ்ட் ஆதி… அத்தனை பித்தலாட்டத்தையும் கரைத்துக் குடித்துவிட்டு வந்திருக்கான் பார்’ என மனதில் நினைத்துக்கொண்டான். 

 

ஆடலரசன், “நீ பேசினதைப் பார்த்தால் தெரியாமல் பேசினது போல் இல்லை, வேணும்னே சொன்ன மாதிரி தான் இருந்தது” என சந்தேகமாக கேட்க.

 

ஆரூரன், “அப்பா… பிளீஸ் விடுங்க… காலையிலிருந்து கார் ஓட்டிக்கிட்டு வந்ததில் தலைவலி, அப்புறம் கஸ்தூரி பேசினது எல்லாம் சேர்ந்து கத்திட்டேன்… எதையும் மனதில் வைத்துக்கிட்டு நான் ஒன்றும் பேசலை” என்று முகத்தை பாவம் போல் வைத்துக்கொண்டு கூறினான்.

 

பரமேஸ்வரி பதறிப்போய் , “தலைவலியா? அதை முன்னமே சொல்ல வேண்டியது தானேடா?” என்றவர், 

 

“இரு நான் போய் சுக்கு காபி போட்டுக்கிட்டு வரேன்” என்று கூறியவர் மற்றதை மறந்து சமையலறைக்கு விரைந்தார்.

 

“பார்த்தியாடா? இதுதான் அவ… இப்படிப்பட்டவளைத் தான் படுத்தற ஆரூரன்” என்றவர், 

 

“இனி பார்த்து நடந்துக்கோ… அவ மட்டும் கண் கலங்கி நிற்பது போல் ஏதாவது பண்ணின வயலுக்கு உரமாக்கிடுவேன்” என்று அழுத்தத்துடன் கூறியவர் தனது அறைக்குச் சென்றுவிட்டார்.

 

அவர் போனதும் ஆரூரன், “இப்ப என்ன நடந்ததுனு இவ்வளவு பேசறாங்க?” என எரிச்சலாக ஆதிரனிடம் கேட்டான். 

 

அதில் கடுப்பான கஸ்தூரி எதுவும் பேசாமல் தனது அறைக்குச் சென்றுவிட்டாள். 

 

ஆதிரன், “கொஞ்சம் மூடிக்கிட்டு இருக்கியா? நீ பேசினதைக் கேட்ட எனக்கே அப்பலாம் போல் இருந்தது, அப்ப அவங்களுக்கு இருக்காதா?” என எரிச்சலுடன் கேட்டான். 

 

சுற்றி முற்றி பார்த்துவிட்டு ஆரூரன், “யாரை எங்க வைக்கணுமோ அவங்களை அங்க தான் வைக்கணும்… அதுதான் நமக்கு நல்லது, இல்லைனா நம்ம இடமே நமக்கு இல்லாம போய்டும்” என்று ஒரு மாதிரியான குரலில் கூறினான்.

 

அதற்கு ஆதிரன், “நீ ஆணியையே புடுங்க வேணாம்… பேசாமல் அமைதியாக இருந்தா போதும்… அப்புறம் சென்னை போறவரை வாலை சுருட்டிக்கொண்டு அமைதியா இரு” என்றான். 

 

“அதற்குப் பிறகு உங்க விருப்பம்… எப்படியோ போங்க… எனக்கானதை என்னிடம் கொடுத்திடுங்க நான்பாட்டுக்கு போயிக்கிட்டே இருக்கிறேன்” என்று ஆரூரன் கூறவும்.

 

ஆதிரன் ஏதோ சொல்ல வாயெடுத்தவன் அன்னை வரவும் அமைதியாகிவிட்டான்.

 

சூடான காபியுடன் வந்த பரமேஸ்வரி மகன்களிடம் கொடுத்துவிட்டு கஸ்தூரியின் அறைக்குச் சென்றுவிட்டார்.

 

அவர் சென்றதும் ஆதிரன், “யாரும் இங்க உன்னுடைய பங்குக்கா அலையலை ஆரூ… இந்த நினைப்பு ரொம்ப தப்பு, மாத்திக்கோ… இல்லைனா வருத்தப்படுவ டா” என்று கூறியவன் வெளியே சென்றுவிட்டான். 

 

“முட்டாள்… இவனையெல்லாம் வெச்சுக்கிட்டு வெங்காயம் கூட இனாமா வாங்க முடியாது… லூசுப்பையன்” என அண்ணனைத் திட்டியவன் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் லக்ஷியுடன் கடலை போட ஆரம்பித்துவிட்டான். 

 

அங்கே தேனிசைச்செல்வன் அத்தனை பேரையும் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தான். 

 

“எப்படி நடந்தது? எப்படி?” என ஆவேசமாகக் கத்தியவன்,

 

புது சைட் சூப்பவைசரிடம் வந்தவன், “யாரிடம் எவ்வளவு வாங்கின? பணத்தைப் பார்த்ததும் விசுவாசம் காணாமல் போயிடிச்சா?” என கண்கள் சிவக்க அழுத்தமாகக் கேட்டான். 

 

அதற்கு அவரோ, “இல்லைங்க சார்… நான் எதுவும் பண்ணலை… எனக்கு எதுவும் தெரியாது” என திணறுதலாகக் கூறினார். 

 

“ஓ! அப்படியா?” என ஊடுருவும் பார்வை பார்த்தவன்,

 

“உனக்குத் தெரியாமல் எப்படிடா சிமெண்ட்டில் கலப்படம் நடந்திருக்கும்?” என்று கேட்டவன் அவரை ஊடுருவும் பார்வை பார்த்தான். 

 

அதில் சூப்பர்வைசர் முதுகுத்தண்டு சில்லிட, “சார்… எனக்கு எதுவும் தெரியாதுங்க… யாரோ வேணும்னே மாட்டிவிட பிளான் போடறாங்க” என்றான்.

 

“அப்படியா! வேணும்னே உன்னை மாட்டிவிட நீ என்ன அவ்வளவு பெரிய அப்பா டக்கராடா?” என முதலில் ஆச்சரியம் போல் ஆரம்பித்தவன் இறுதியில் கடுமையாக முடித்தான். 

 

“இல்லங்க சார்… அப்படியெல்லாம் இல்லைங்க சார்” என அவசரமா சூப்பர்வைசர் மறுத்தார்.

 

அதற்கு தேனிசைச்செல்வன், “நம்பும்படியா இல்லையே” என்றவன், 

 

“ நீ சொல்ற மாதிரியே வச்சுக்கலாம்… ஆனால் முந்தாநாள் இறக்கிய மூட்டைங்க எங்கடா? காக்கா தூக்கிட்டுப் போய்டுச்சா என்ன?  இல்லை தானா ரெக்கை முளைத்து பறந்து போயிடுச்சா? சொல்லுங்க சார்… சொல்லுங்க” என நக்கலாக கேட்க.

 

தேனிசைச்செல்வனின் வலது கை, “இவங்கிட்ட பேச்செல்லாம் சரிபட்டு வராது வீச்சிதான் ண்ணா லாயக்கி” என்று கூறியவன் சட்டையை மடித்தபடி சூப்பர்வைசரை உறுத்து விழித்தான். 

 

அதில் அரண்ட சூப்பர்வைசர், “வேணா சார்… வேணா” என பயத்தில் கத்தினான்.

 

தேனிசைச்செல்வன், “அப்படியா சொல்ற வீரா? உன்னுடைய ஆசையை ஏன் கெடுப்பானே நீயே ஸ்டார்ட் பண்ணு” என மர்மப்புன்னகையுடன் கூறினான். 

 

அதில் குஷியான வீரன், “செம பசியில் இருந்தவனுக்கு பிரியாணியே கொடுத்துட்ட ண்ணா… ஒரு பருக்கை இல்லாமல் சாப்பிட்டு ஏப்பம் விட்டுடமாட்டேன்” எனக்கூறி கண்ணடிக்க.

 

தேனிசைச்செல்வன், “நீ நடத்து ராசா நடத்து” என சிரிப்பு கூறவும்.

 

வீரன் மெல்ல சூப்பர்வைசரை நோக்கி முன்னேறினான். 

 

அதில் அரண்ட சூப்பர்வைசர், “சொல்லிடறேன் சார்… நானே எல்லாத்தையும் சொல்லிடறேன்” என்க.

 

வீரன், “சாரிடா நாயே உனக்கான டைம் ஓகையா… இனி நீ பேசுவதை நாங்க கேட்க தயாரா இல்லை” என்றவன்,

 

தேனிசைச்செல்வனிடம், “அப்படித்தான அண்ணா?” என கேட்க.

 

அவனோ, “அதே… அதே” என்றான். 

 

உயிர் பயத்தில் தேனிசைச்செல்வனின் காலில் வந்து விழுந்த சூப்பர்வைசர், “பிளீஸ் சார்… நடந்ததை ஒன்றுவிடாமல் நான் சொல்லிடறேன்… விட்டுடுங்க சார்… என்னை எதுவும் பண்ணிடாதிங்க” எனக் கெஞ்சவும்.

 

வீரன், “உனக்கு ஐந்தே நிமிஷம் தான் டைம், அதற்குள் நடந்ததைச் சொல்ற” என அழுத்தமாகக் கூறினான். 

 

“நேத்து நைட் குழந்தைக்கு முடியலைனு ஒரு மணி நேரம் மேனேஜரிடம் பர்மிஷன் கேட்டுட்டு போயிட்டேன்… அதைத் தவிர நான் வேற எதுவும் பண்ணலைங்க சார்” என்றவர்,

 

“பத்து வருஷமா இங்க வேலை பார்க்கிறேன், இன்னைக்கு நானும் என்னுடைய குடும்பமும் ஒரு அளவுக்கு நல்லா இருக்கோம்னா அதற்கு காரணம் வளையாபதி ஐயாவும் பவளமயில் அம்மாவும் தாங்க சார்… அப்படிப்பட்டவங்களுக்கு நான் எப்படிங்க துரோகம் செய்வேன்? அந்த மாதிரி நினைத்தால் கூட என்னுடைய ஏழுதலைமுறையும் நல்லா இருக்குமா? மண்ணோடு மண்ணாகிடும்” என அழுதபடியே கூறினார். 

 

அவரின் கண்களிலும் வார்த்தையிலும் உண்மையைக் கண்ட வீரன், தேனிசைச்செல்வனைக் காண அவனோ கண்கள் மூடி திறந்து சைகை செய்தான்.

 

அதைப் புரிந்து கொண்ட வீரன், “சரி… நீங்க இதை பண்ணலைனா வேற யார் பண்ணினது?” என கேட்க.

 

“சத்தியமா எனக்குத் தெரியாது சார்” என்று கூறினார். 

 

தேனிசைச்செல்வன், “நீங்க போங்க… ஆனால் இங்க நடந்தது எதுவும் யாருக்கும் தெரியக்கூடாது… புரியுதா?” என அழுத்தமாக கூற.

 

அவரோ, “புரியுதுங்க சார்” என்றவர் விந்தி விந்தி நடந்து சென்றார்.

 

“வீரன்… அவரை வீட்டில் விடச் சொல்லு” என்றதும் தன் ஆட்களை அழைத்து சூப்பர்வைசரை வீட்டில் விட்டு வரச்சொன்னான். 

 

“அப்படியே அவர் குழந்தையைப் பற்றி ஹாஸ்பிட்டலில் விசாரி… பணத்தையும் கட்டிடு… நான் சாரிடம் சொல்லிடறேன்” என்ற தேனிசைச்செல்வன் ஆழந்த யோசனைக்கு சென்றான். 

 

அவனின் யோசனையைக் கண்ட வீரன், “யாரா இருக்கும்னு நினைக்கிறிங்க ண்ணா?” என கேட்க.

 

“வேற யார்? அந்த மேனேஜர் தான்… ஆளைப் பிடி… ஒரு வாரம் வச்சு செய்… துரோகம் பண்ணணுங்கிற எண்ணமெல்லாம் காத்தோடு காத்தா போய்டும்” என கேலியாக கூறினான். 

 

“சிறப்பா செஞ்சிடலாம் ண்ணா” என்ற வீரன்,

 

“இப்ப வர எவ்வளவு நாள் ஆகும்?” என கேட்க.

 

“ஒரு மாசம்னு சொன்னார்… பார்க்கலாம்” என்றதோடு அந்த பேச்சை நிறுத்திக்கொண்டான். 

 

அதை உணர்ந்த வீரன், “வாங்க வீட்டுக்குப் போகலாம்… இன்னைக்கு வேலை வேற அதிகம்… செம டையர்டா இருக்கு” என்க.

 

“ஹம்ம்… போகலாம்” என்றவன் யாருக்கோ அழைத்துப் பேசினான்.

 

தேனிசைச்செல்வன் பேசிய பத்தாவது நிமிடத்தில் திடகாத்திரமான நான்கு ஆட்கள் அங்கு காவலுக்கு அமர்த்தப்பட்டனர். 

 

வீட்டிற்கு போகும் வழியில் வீரன், “நான் இல்லாமல் பத்து நாள் எப்படி போச்சு?” என கேட்க.

 

பி.ஏ மோடிலிருந்து நார்மல் மோடுக்கு வந்த தேனிசைச்செல்வன், “அந்த கொடுமையை ஏன்டா கேட்கிற? செம பிரஷர்… இந்த ப்ராஜெக்ட் வேற அதுக்கு மேல் கழுத்தை அறுக்குது… போராடி இப்ப தான் ஒரு வழிக்கு வந்தது அதை பொறுக்காமல் இவனுங்க வேற குட்டையைக் குழப்பி வைத்திருக்கானுங்க” என ஆயாசமாக கூறினான். 

 

அதற்கு வீரன், “ண்ணா… அங்க அதுக்கு மேல் இருந்தது” என்றவன்,

 

“எவனோ வேணும்னே நம்ம சார் பேரை கெடுக்க பிளான் பண்றான்… உங்களுக்கு ஏதாவது ஐடியா? இல்லைனா யார் மேலையாவது சந்தேகம்னு இருக்கா?”எனக் கேட்க.

 

“சந்தேகம் இல்லைடா உறுதியா சொல்றேன் இதெல்லாம் அந்த ***கன்ஸ்ரக்ஷன் காரன் வேலை தான்… அவனுக்கு இந்த ப்ராஜெக்ட் கைவிட்டு போனதில் ஏகக் கடுப்பு… அதற்குத் தான் கோக்கு மாக்க பண்ணிகிட்டு திரிகிறான்” என தேனிசைச்செல்வன் கூறினான்.

 

அதற்கு வீரன், “பேசாமல் அவனை ரெண்டு தட்டு தட்டி வைக்கலாமா ண்ணா?” என கேட்க.

 

“வேண்டாம்டா… அது வேற மாதிரி பிரச்சனையை கொண்டு வந்திடும்” என்ற தேனிசைச்செல்வன்,

 

“அவன் தான் கண்ட இடங்களில் கைவைத்திருக்கானே… பேசாமல் ஒரு போன் போடு” என சிரிப்புடன் கூற.

 

“இது வேற லெவல் ண்ணா… இப்பவே அந்த நல்ல காரியத்தை பண்ணிடறேன்” என்ற வீரன் தன்னுடைய செல்லிலிருந்த சிம்மை மாற்றிவிட்டு யாருக்கோ கால் செய்து பேசினான். 

 

“அவன் சோலி காலி ண்ணா” எனக்கூறி சிரிக்க தேனிசைச்செல்வனும் வாய்விட்டு சிரித்தான். 

 

வீரன் வேறு யாரும் இல்லை… தேனிசைச்செல்வன் வளர்ந்த அதே ஆசிரமத்தில் வளர்ந்தவன்.

 

இவன் வந்து ரெண்டு வருடங்களுக்கு பிறகு அங்க வந்தவன் தான் வீரன்… அன்றிலிருந்து இன்றுவரை இருவரும் ஒன்றாக தான் இருக்கின்றனர்… அவ்வளவு ஏன் வளையாபதி வீட்டில் தங்கித் தான் இருவரும் வேலை செய்கின்றனர்… அந்த அளவுக்கு ஒருவர் மீது ஒருவர் பாசமாக இருக்கின்றனர்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
8
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments