Loading

அத்தியாயம் 10

“என் எண்ணம் முழுக்க வியாபித்திருக்கிறான் அவன். பலரும் சொல்லக் கேட்டு இருக்கின்றேன், பெண்களின் மனதை புரிந்துக்கொள்ள முடியாது என்று. ஆனால், இன்று உணர்கிறேன், ஆண்களின் மனதையும் அத்தனை எளிதில் புரிந்துக்கொள்ள முடியாது. இவனோ, அழுத்தக்காரன்தான். பிடித்திருக்கிறது என்று சொல்வதற்கும் அப்பப்பா எத்தனை நேர யோசனை.? அவன் கூறினான், உள்ளுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருந்த அந்த விசயத்தை. கடினம்தான், கடந்து வருவது. இலட்சியத்தின் இழப்பு யாவருக்கும் வரும், இதில் ஆணென்ன? பெண்ணென்ன? மற்றவர்களுக்காக வருந்தும் உள்ளம் கிடைப்பது அரிது. என் நினைவலைகள் முழுக்க அவன்தான். வருந்தினான், அவனின் தோழியின் இலட்சியப்பாதை தவறியதற்கு இவனும் ஒரு காரணமாம். ஒரு படி ஏறினால் பத்து படிகள் சருக்கிவிடும் இந்த காலத்தில் இவன் வருந்துகிறான், அவளுக்காகவும், அவன் நண்பனின் காதலுக்காகவும். இழப்பு இழப்புதானே. என் வாழ்க்கை இவனோடு அமைவதில் திருப்தியாக இருக்கின்றது உள்ளம். – அவனோடு கை சேர்க்கும் நாளுக்காக காத்திருக்கிறேன். இவள் இதழ்.”

திருப்தியோடு தன் நாட்குறிப்பில் எழுதி முடித்தவளின் எண்ணம் மாலை நடந்தவற்றை மீண்டும் நினைவு கூர்ந்தது.

இதழும் இளையாவும் முதலில் கோவிலுக்கு செல்ல, திருப்தியோடு மனதார வேண்டிக் கொண்டவள் திருநீறை வைத்துக்கொண்டு அவனை நோக்கி திரும்பினாள்.

“இந்தாங்க, எடுத்துக்கோங்க.” என்றிட, நிமிட நேர யோசனைக்குப் பின் எடுத்து கீற்றாக வைத்துக் கொண்டான்.

அமைதியாக படிக்கட்டில் இவள் வந்து அமர, அவனும் வந்து அமர்ந்துக் கொண்டான். அவசர வாழ்க்கையில் நின்று, ஒரு நொடி நாம் திரும்பி பார்த்தால் அனைத்திலும் எதை நோக்கியோ ஓடிக் கொண்டேதான் இருக்கின்றோம். நின்று நிதானமாக நாம் ஒரு செயலை செய்ய நினைக்கையில் நமக்கு முன் பலர் சென்று விடுகிறார்கள். அந்த களேபரத்திலேயே நாமும் ஓட வேண்டியதாக இருக்கின்றது. மனதில் இந்த அவசர வாழ்க்கையை உருப்போட்டபடியே தான் கூற வந்ததை எப்படி ஆரம்பிப்பது என மனதிற்குள் ஒத்திகை செய்து கொண்டிருந்தான் இளையா.

ஆனால் இதழோ, எதைப்பற்றியும் சிந்திக்கவில்லை. நிர்மலமான முகத்தோடு கூடிய சிரிப்போடு அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். மனதில் அத்தனை நிம்மதி. எதுவும் கடவுளிடம் கேட்கத் தோணவில்லை. எது நடக்கின்றதோ அது நடந்துவிட்டு போகட்டும். இன்று இந்த நொடியை அவனுடன் இருக்கும் இந்த நொடியை மனதார ரசித்துக் கொண்டிருந்தாள்.

ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டவள், “ஒரு தெளிவுக்கு வந்துட்டீங்களா?” என்றபடி இளையாவைப் பார்த்தாள்.

இன்னும் சிந்தனையில் இருந்தவன், “ஹான், என்ன இதழ்?”

அவனின் பாவனையில் மென்னகை புரிந்தவள், “என்னன்னா? நீங்க தான் பேசணும்னு சொன்னீங்க? அதான் தெளிவாகிட்டீங்களான்னு கேட்டேன்.” என்றாள் சிரித்துக் கொண்டே.

தன் நிலையை எண்ணி சிரித்தவன், “இப்போ கொஞ்சம் பெட்டரா தான் இருக்கு. பார்க் போலாமா?” என்றுக் கேட்டான்.

சிறிய தலையசைப்புடன் எழுந்தவள், “போலாம்” என்றாள்.

இருவரும் கிளம்ப, இதழ் மீண்டும் ஒரு முறை கொடி மரத்தை வணங்கிவிட்டு மகிழுந்தில் ஏறிக் கொண்டாள்.

“ரொம்ப பக்தியோ?” தன் பக்க கதவை திறந்து அமர்ந்தவாறே அவன் கேட்க,

“மனசு ரிலாக்ஸ்சா இருக்கும். அவ்ளோதான். வண்டிய எடுங்க” என்றாள்.

பூங்காவிற்குள் ஒரு ஓரமாக வந்து அமர்ந்தனர் இருவரும். மணி பத்தைக் கடந்திருக்க பூங்காவிற்குள் ஆங்காங்கே சிலர் அமர்ந்திருந்தனர்.

அவனே ஆரம்பிக்கட்டும் என அமைதியா அமர்ந்திருந்தாள் இதழ். தன்னை நிதானப்படுத்திக் கொண்டவன், “சின்ன வயசுல இருந்தே நானும் அகிலனும் ரொம்ப க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்.” என்றவனின் பேச்சில் கவனத்தை அவன் பக்கம் திருப்பினாள்.

“ஸ்கூல் ஒன்னா தான் படிச்சோம். அப்ரோம் காலேஜ் ரெண்டு பேரும் விசுவல் கம்யூனிகேசன் எடுத்தோம். அப்போ எங்கக் கூட ஒரு அறுந்த வாலும் சேர்ந்துச்சு. மகி… வாய்தான், ஆனா ரொம்ப நல்ல பொண்ணு. அகிலனுக்கு அந்த பொண்ண பாத்த உடனே லவ் தான். ஆனா, அவ ஒத்துக்கல. எப்டியும் குட்டிக்கரணம் அடிச்சு அவன் ஒத்துக்க வச்சிட்டான். மகிக்கு க்ரைம் ஜர்னலிசம் ரொம்ப பிடிக்கும். அப்போவே அவளுக்கு அதுல ரொம்ப இன்ட்ரெஸ்ட். அவளோட இலக்கும் அது தான். ஆனா, கடைசி வரைக்கும் அது தான் அவளோட இன்ட்ரஸ்ட்ன்னு யாருக்கும் தெரியாம போயிடுச்சு.

பைனல் இயர் லாஸ்ட்ல தான் அப்பா இங்க வந்தாரு. அந்த சமயத்துல எனக்கும் மைல்ட் ஆக்சிடன்ட்டுன்னு லீவ்ல இருந்தேன். அப்போ மகிக்கும் அகிலனுக்கும் ஏதோ மிஸ் அன்டர்ஸ்டான்டிங்க் போல. மகி எங்க போனான்னு தெரியல. அன்ட் எனக்கும் க்ரைம் ஜர்னலிஸ்ட்ன்னா உயிர். அப்பா அம்மா பேச்ச மீறி விசுவல் கம்யூனிகேசன் எடுத்து க்ரைம் ஜர்னலிசம் பண்ணலாம்னு இருந்த சமயம் தான் என்னால பைனல் எக்சாம் கான்சன்ட்ரேட் பண்ண முடியல. பட் ஒரு வழியா லாஸ்ட் ஸ்டேஜ்ல முடிச்சாலும் எதிர்பார்த்த ரிசல்ட் வரல. எனக்கு டாக்குமென்ட்ரி ஃபோட்டோகிராஃபி தான் கிடச்சது. ஆனா, லாஸ்ட்டா எனக்கு முன்னாடி இருந்த ஒருத்தர் க்ரைம் சீட் வேண்டாம்னு சொல்லிட்டதுனால அந்த சீட் எனக்கு கிடச்சிடுச்சு.

என்னோட பிஜி டைம்ல தான் அது மகிக்கான சீட்னே எனக்கு தெரியும். அகிலன் கிட்ட அத பத்தி கேட்டப்போ அவன் அத பத்தி எதுவுமே தெரியாதுன்னு சொன்னான். ஆனா, மகி அவன விட்டு போனதுக்கு நான் தான் காரணம்னு சொன்னான். என்னோட டாபிக் தான் போய் இருக்கு அவங்க சண்டையப்போ. அதுக்கு அப்ரோம் அகிலன் அப்ராட் போய்டான். மகிய பத்தி எந்த தகவலும் ஏழு வருசமா கிடைக்கல. இப்போ தான் அவ லே லடாக்ல இருந்ததா க்ளாஸ்மேட் சொன்னான். அங்க போனா அவ சூசைட் பண்ணிக்கிட்டான்னு சொல்றாங்க. எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல. ஒரே கில்டியா இருக்கு. அன்ட் அவளோட ஆம்பிசன் நிறைவேறாம போனதுக்கு நானும் ஒரு காரணம் தானே. அது என்னமோ உறுத்திக்கிட்டே இருக்கு. இது ஆக்சுவலா கேட்குறவங்களுக்கு பெரிய விசயமா தெரியாது தான். ஆனா, ஒருத்தரோட கனவு இலட்சியமா இருக்க விசயத்த நாம பயன்படுத்திக்கிட்டோம்னு நினைக்குறப்போவே அது சொல்லத் தெரியல. இதுல அவளும் சூசைட் செய்துக்கிட்டான்னு தெரிஞ்ச உடனே மொத்தமா உடஞ்சு போய்ட்டான் அகிலன்.

அன்ட் காலேஜ் டேஸ்ல ஒரு நாள் அகிலன் எனக்கு தெரியாம டிரிங்க்ஸ் மிக்ஸ் பண்ணி கொடுத்திட்டான். அப்போ அகிலன் ரொம்ப புலம்பிட்டு இருந்ததுனால அகிலனுக்கு கல்யாணம் ஆகாம, நானும் கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு திகழ் மேல சத்தியம் செஞ்சிட்டேன். அது இன்னமும் எனக்கு உறுத்திக்கிட்டே இருக்கு.” என்று இதுவரை அடக்கி வைத்திருந்த அனைத்தையும் அவளிடம் கொட்டித் தீர்த்தான்.

உண்மைதான். ஒவ்வொருத்தருக்கும் அவர்களின் இலக்கு, இலட்சியம் மிகவும் முக்கியம். அது இன்னொருவரின் இழப்பினால் நமக்கு கிடைத்திருக்கிறது என்று நினைக்கும் போது நாம் அந்த இடத்தில் இருந்திருந்தால் இதனை செய்திருப்போமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இதில் கண் முன்னே காதலை, காதலியை இழந்த நண்பன் வேறு. இன்னும் இன்னும் அவனின் குற்றவுணர்வு அதிகரித்துக் கொண்டே தான் இருந்தது.

அவனின் நிலையை இதழும் புரிந்துக் கொண்டாள். அமைதியாக அவனைக் கவனித்துக் கொண்டிருந்தாள். இதுவரை அவன் அவளின் முகத்தை பார்க்கவில்லை. எங்கோ பார்த்துக் கொண்டு தான் பேசி முடித்தான். எண்ணவலைகளில் சிக்கித் தவிப்பது அப்பட்டமாக முகத்தில் தெரிந்தது.

“என்னமோ உங்கள பாத்த உடனே எனக்கு பிடிச்சு போச்சு இதழ். உங்க கிட்ட இத சொல்லியே ஆகணும்னு தோணுச்சு, அதான்.” என்று அவளை நிமிர்ந்து பார்த்தான். தன் நிலையை பார்த்து சிரித்து விடுவாளோ என்ற பயமும் அவனுக்கு இருந்தது.

“எனக்கு புரியுது. அன்ட், நீங்க சொல்றதுலாம் வச்சு பாக்குறப்போ மகி தைரியமான பொண்ணா தான் தெரியுறாங்க. பட், அவங்க ஏன் சூசைட் செய்துக்கணும். ஏதோ எனக்கு இடிக்குது. பாத்துக்கலாம். நீங்க எத பத்தியும் திங்க் பண்ண வேண்டாம். அன்ட் நானும் ஒரு விசயம் உங்க கிட்ட சொல்லணும்.” என்றவளை சிறு தலையசைப்புடன் பார்த்தான். அவள் தன்னை புரிந்துக் கொண்டது அவனுக்கு இதத்தைக் கொடுத்தது.

“நான் நீங்க நினைக்குற மாதிரி அந்த கம்பெனில டி.எல்-லாம் கிடையாது. அம்மா சி.பி.ஐ ஆஃபீசர், அப்பா மிலிட்டரி. என்னமோ எனக்கு அதுல ரொம்ப இன்ட்ரஸ்ட். சோ, நான் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி ரன் பண்ணிட்டு இருக்கேன்.” என்றதுதான் தாமதம்.

இளையாவின் முகத்தில் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம். “வாட்?” கண்களில் அதிர்ச்சியும், முகத்தில் புன்னகையுமாக அவன் கேட்டான். அவனுக்கும் அதுபோல் ஒன்று தொடங்க வேண்டும் என்று பலநாள் கனவு. ஆனால் மகியின் இழப்பில் க்ரைம் ஜர்னலிசம் சம்பந்தமாக எதையும் யோசியாதவன், வைல்ட்டு ஃபோட்டோகிராஃபியை தேர்ந்தெடுத்து அதிலும் தன் பங்கை நிலைநாட்டியுள்ளான்.

“ஏன், உங்களுக்கு அது பிடிக்காதா?” எங்கே அந்த வேலையை விட்டுவிட சொல்லி விடுவானோ என்ற பயம் அவளுக்கு. சொன்னாலும் அவள் விட மாட்டாள் என்பது வேறு விடயம். ஆனால், இளையா சொன்னால் அவள் விடுவதைப் பற்றி யோசிப்பாள் என்பது அவள் அறிந்த ஒன்று.

“ஏய், இதழ். நான் ஏன் அத விட சொல்லப் போறேன். உண்மைய சொல்லணும்னா எனக்கு அதுல ரொம்ப ஹாப்பி தான்.” என்றவனின் முகத்தில் விரிந்த புன்னகை.

இருவரின் முகத்திலும் மகிழ்ச்சி ததும்பி இருந்தது.

“இன்னொரு முக்கியமான விசயம். நான் டிடெக்டிவ்வா இருக்குறது வீட்ல ரெண்டு பேருக்கும் தெரியாது. மோஸ்ட்லி கேஸ் எது வந்தாலும் அமுதன் தான் ஹேன்டில் செய்வான். நானும் பிரவீனும் பேக்ரவுன்ட்டு வொர்க் தான். ஓ, அமுதன், அம்மாவோட ஜூனியர். அன்ட் பிரவீன் இன்னைக்கு நம்ம வீட்ல இருந்தான்ல அவன்தான்.” என்று அனைத்திற்கும் விளக்கமளித்தாள்.

அவனிற்கு தெரிந்தும் தெரியாததுபோல் தான் கேட்டுக் கொண்டான்.

“ஏன், வீட்டுக்கு சொல்லல?”

“அம்மாக்கும் அப்பாக்கும் நான் கிரிமினாலஜி எடுத்ததே சுத்தமா பிடிக்கல. நானும் அப்ரோம் சாஃப்ட்வேர் கம்பெனில ஜாய்ன்ட் பண்ணிட்டேன். எப்டியும் ஆஃப்டர் மேரேஜ் ஜாப் போகணுமா வேண்டாமான்னு முடிவு பண்ணிக்கோன்னு அம்மா சொன்னாங்க. சரி, அதுவரைக்கும் அவங்களுக்கு பிடிச்ச மாதிரி இருக்கலாமேன்னு இந்த ஜாப்.” என்றாள் தோளைக் குலுக்கியபடி.

அவளின் செய்கையில் சிரித்தவன், “ஃபைன். போலாமா?” என்றான் நேரத்தை பார்த்தபடியே.

‘அதுக்குள்ள போலாமா? இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாமே!’ என்று அவளின் எண்ணம் இருக்க, அவனின் எண்ணமும் அதுவாகத்தான் இருந்தது. ஆனால், இருவரின் முகத்தில் இருந்து எதையும் கண்டுகொள்ள இயலவில்லை.

“சரி, போலாம்.!” என்றபடி இருவரும் வெளியே வந்தனர். இருவரும் மகிழுந்துவில் ஏற, இதழுக்கு பிறை அழைத்தார்.

“அம்மா தான்” என்றபடி அழைப்பை ஏற்றவள், “சொல்லுங்க சி.பி.ஐ ஆபிசர்.”

“உனக்கு அடி இல்ல இதழ். அத விடு, கிளம்பிட்டீங்களா? மணி பதினொன்னாகுது. இன்னும் அந்த தம்பியும் சாப்பிடலயாம். வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடு. அப்டியே கிளம்பிட போறாங்க.”

“ஏன்மா, கல்யாணத்துக்கு முன்னாடி வீட்ல கை நனைக்க கூடாதுன்னு சொல்லுவாங்களே. அந்த ஃபார்மாலிட்டிலாம் இல்லையா?”

“இதழ், என் பி.பிய ஏத்தாத. நான் தெய்வானை அண்ணிக்கிட்ட கேட்டுட்டேன். அவங்களே ஒன்னும் சொல்லல. உனக்கு என்ன? பேசாம அவங்கள கூட்டிட்டு வா.” என்றபடி அழைப்பைத் துண்டித்தார். இதழின் பேச்சிலேயே தெரிந்துக் கொண்டார் அவளின் விருப்பத்தை, அழைத்ததே அதற்குத் தானே.

“அம்மா என்ன சொன்னாங்க?”

“காலைல இருந்து நீங்க சாப்டலயாம். வீட்டுக்கு கூட்டிட்டு வர சொன்னாங்க.”

“இல்ல பரவால்ல இதழ். நான் உன்ன டிராப் பண்ணிட்டு வீட்டுக்கு போறேன்.”

“அதெல்லாம் கிடையாது. அத்தம்மா கிட்ட கேட்டுட்டாங்களாம். கையோட உங்கள வீட்டுக்கு கூட்டிட்டு வர சொன்னாங்க. இல்லன்னா, பிறை என்னை கொன்னுடுவாங்க.”

“நீ பயப்படுறீயா? அதுசரி, யாரு அது அத்தம்மா?”

“வேற யாரு தெய்வானை அத்தையதான் சொல்றேன்.”

“ஒன்னு அத்தைன்னு கூப்டு, இல்ல அம்மான்னு கூப்டு. அதென்ன அத்தம்மா. புதுசா?”

“அதெல்லாம் அப்டித்தான்.” என்று அவள்பாட்டிற்கு வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள்.

அந்த பேச்சிற்கு பின் இருவருக்குள்ளும் ஒரு நெருக்கம் வந்துவிட்டது. பேசியபடியே மகிழுந்து இதழின் வீட்டை நோக்கி செலுத்தப்பட்டது. 

“என்ன பிறை சொன்னா? ஓகேவாம்மா?” என்று பதட்டத்துடன் கேட்டார் இளமாறன்.

“அவங்க வந்துட்டு இருக்காங்க. நீங்களே கேட்டுக்கோங்க. எல்லா பேச்சும் என்கிட்ட தான்.” என்றபடி உள்ளே செல்ல,

“இவ நம்மள மண்டைய பிச்சுக்கதான் வைப்பா. என்னடா மிலிட்டிரி மேனுக்கு வந்த சோதனை.” என்றபடி அமர்ந்து விட்டார். ஆனால், மகளின் விருப்பத்தை எதிர்நோக்கி மனது காத்துக்கிடந்தது. எப்படியும் அவள் ஒப்புக் கொள்வாள்தான். ஆனால், ஏதோ ஒரு விசயம் இருவரும் பேசிக்கொண்டதில் அவளின் விருப்பமில்லை என்றுவிட்டாள்? நினைக்கையிலேயே தேவனின் முகம்தான் கண்முன் வந்து சென்றது.

“பிறைம்மா ஒரு காஃபி.” என்றபடி உள்ளே வந்தான் பிரவீன்.

“இவ்ளோ நேரம் எங்கடா போன? இப்போதான் இதழுக்கு போன் பண்ணேன். வந்துட்டு இருக்காளாம். இந்தா இந்த வெங்காயத்த கட் பண்ணிடு” என்றபடி அவன் கேட்ட குழம்பியோடு செய்ய வேண்டிய வேலையையும் எடுத்து வந்து கொடுத்தார்.

“இவ்ளோ நேரம் நான் இங்க ஒருத்தன் உட்காந்துட்டு இருக்கேன். எனக்கு ஒரு காஃபி இல்ல. துரைக்கு வந்து கேட்ட உடனே காஃபியா?” என்று காய்ந்தார்.

“என்னடா இன்னும் கன் வெடிக்கலயேன்னு நினச்சேன்” என்று முணங்கியபடி குழம்பியை குடித்துக் கொண்டு இருந்தான் பிரவீன்.

“கொஞ்சம் கூட ரோசமே கிடையாது. பிறை, எனக்கும் காஃபி வேணும்.” என்றபடி அன்றைய நாளிதழில் கவனத்தை செலுத்தினார்.

‘ரோசம்லாம் பாத்தா பொழப்ப நடத்த முடியுமா? நீ குடிடா சூனாபானா’ என்று தன்னையே மெச்சிக் கொண்டவன், ரசித்து குடித்து முடித்தான். வெங்காயத்தை உறித்து அதனை வெட்டிக்கொண்டிருக்க, இதழும் இளையாவும் புன்னகையோடு வந்தனர்.

“என்ன எரும, வேலைலாம் பலமா இருக்கு. மாப்பிள்ளைக்கு கவனிப்போ?” என்றவள்,

“உட்காருங்க. வரேன்” என்று இளையாவிடம் கூறிவிட்டு பிரசாதத்தை அனைவருக்கும் கொடுத்தாள்.

இதழின் கேலிப்பேச்சிலேயே அவளின் சம்மதத்தை இளமாறன் அறிந்துக் கொண்டார். “வாங்க மாப்ள. பிறைம்மா வந்துட்டாங்க பாரு.” என்றபடி குரல் கொடுக்க, அவரும் குழம்பியோடு வந்தார்.

அதில் ஐவருக்குமான குழம்பி இருக்க, “இப்போதான இவனுக்கு கொடுத்த. மறுபடியும் என்ன?”

“இவரோட பெரிய இம்சைடி.” என்று இதழிடம் புலம்பியவர், “வெங்காயம் வெட்டுனான்ல. அதுல டயர்ட் ஆகிட்டான். அதான் அவனுக்கும்” என்றபடி பிரவீனுக்கும் ஒரு தம்ளர் கொடுத்தார்.

கேட்ட உடனேயே இளையாவிற்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வர, அடக்கிக்கொண்டான்.

“நீங்க உறிச்சி வெட்டின வரைக்கும் போதும். கொடுங்க” என்று அவன் செய்த வேலையை தன் வேலையாக மாற்றிக் கொண்டாள் இதழ்.

இளையாவின் பார்வை இதழின்மேல் ரசனையாக படிந்தது. தன்முன்னும் தன் நண்பனை விட்டுக்கொடுக்காமல் அவளிருக்க, இளமாறனுக்கோ இன்னும் கோபம்தான் இளையாவின் முன் இதனை செய்தது.

குழம்பியைக் குடித்து முடித்தவன், “மாமா, மேற்கொண்டு வீட்ல பேசுங்க. நான் கிளம்புறேன்.” என்றபடி எழுந்துகொள்ள,

“அதெல்லாம் நாங்க பேசிக்குறோம். சாப்டுதான் கிளம்பணும். உட்காருங்க.” என்ற பிறையின் பேச்சு அவனுக்கு அத்தனை பிடித்திருந்தது.

“இல்ல ஆன்ட்டி, இன்னொரு நாள் வரேன்.”

“தோ பாருடா. என் அப்பா மாமா, அம்மா மட்டும் ஆன்ட்டியா?” என்று இதழ் கேலியாக கேட்க,

நாக்கைக் கடித்துக்கொண்டவன், “அத்தை, போதுமா” என்றவனின் பார்வை அவளை விட்டு நகரவில்லை.

“இதழ்மா. சும்மா இரேன். நீ என்னடா இன்னும் காஃபிய குடிச்சிட்டு இருக்க. மாப்ள கூட பேசிட்டு இரு. சாப்பாடு ரெடி ஆனதும் வந்து சாப்பிடட்டும்” என்று பிரவீனை விரட்டினார் இளமாறன்.

‘நான் ஒன்னுக்கு ரெண்டு காஃபி குடிச்சா இவருக்கு பொறுக்காதே. சத்திய சோதனை’ என்றபடி ஒரே மூச்சில் குழம்பியை குடித்து முடித்தவன், “வாங்க பாஸ் நாம மேல போகலாம்” என்றபடி மாடிக்கு சென்றனர்.

அவர்கள் சென்றவுடன், “இதழ்மா உனக்கு சம்மதமா மா?”

“அதான் அவரு மேற்கொண்டு பேச சொல்லிட்டாரேபா. இதுக்கு மேல என்ன சொல்லணும்.” என்றவளின் முகம் அந்நியாயத்திற்கு மகிழ்ச்சியை கொண்டிருந்தது.

“உன் வாயால சொல்லிடு இதழ். இல்லன்னா உன் அப்பாக்கு தூக்கம் வராது.” என்று பேசியபடியே வெங்காயத்தை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

“ரொம்ப பிடிச்சுருக்கு பா. அவங்களயும் அவங்க வீட்டாளுங்களயும். உங்களுக்கு ஹாப்பிதானே?” என்று தந்தையின் அருகில் அமர, அவளை தோளோடு அணைத்துக் கொண்டவரின் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது.

“சரிடா.” என்றவர் உடனே அவரின் நண்பர் தேவாவிற்கு அழைத்தார்.

உண்மையில் இளையா இதழுக்கு மட்டுமல்ல, இருவீட்டாருக்கும் இத்தனை சீக்கிரத்தில் திருமணம் பேச்சு என்பது ஒருவித பரபரப்பை கொடுத்து இருந்தது.

மணமக்கள் இருவரின் ஒப்புதலையும் தேவாவிடம் பகிர்ந்தவர் நல்ல நாளை பார்க்க சொல்ல, தெய்வானை குதிக்காத குறைதான். இதில் எதிலும் நாட்டமில்லாமல் இருந்தது என்னவோ திகழும் அகிலனும்தான். தங்கையாக இதில் ஏக சந்தோசம் என்றாலும் அகிலனின் வார்த்தைகள் இன்னும் அவளை தீயாய் சுட்டது. இதில் அகிலன் மகியின் இழப்பில் நொந்து கொண்டிருந்தான்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்