Loading

அத்தியாயம் 11

“இதோ, நல்ல நாள் பார்த்து பெரியவர்கள் பேசி நாளை மாலை நிச்சயதார்த்தம், அடுத்த நாள் திருமணம், அவனோடு… நினைக்கவே தித்திக்குது மனது. அவசரம்தான் ஆனால் பிடித்திருக்கிறது. அன்று நேரில் சந்தித்து பேசியதுதான். அதன்பின் அத்தம்மா விரைந்து திருமணம் முடித்துவிடலாம் என்று சொல்ல, எதற்கு இத்தனை அவசரம் என்ற கேள்விக்கு ஜாதகமும் அதே பதில் சொல்ல ஒரு மாதம் முடிந்ததே தெரியவில்லை. முகூர்த்த புடவை எடுக்கவோ, மாங்கல்யம் எடுக்கவோ என எதற்கும் அவன் வரவில்லை. அன்று பார்த்த பிறகு தொடர்ந்து இருபத்தைந்து நாட்கள் வேலை விடயமாக வேடந்தாங்கல் சென்றதுதான். இரு நாட்களுக்கு முன்னர்தான் வருகை. என்னதான் தினமும் குறுஞ்செய்தி அனுப்பி பேசிக்கொண்டாலும், அவனின் முகம் பார்க்கவே மனது ஏங்குகிறது. ஒரு மாதத்தில் இத்தனை மாற்றமா? இதே மாற்றம் அவனுக்குள்ளும் தோன்றி இருக்குமா? இதுவரை அவனின் பேச்சுக்கள் ஒருவித எல்லையில் இருந்தாலும் இனி அவனுடன்தான் என் வாழ்வு என்று நினைக்கையில் அத்தனை இனிக்கிறதே. ஆம், அவனுடன்தான். இனி மாறன் அப்பாவும் பிறையம்மாவும் நினைத்தவுடன் அருகில் இருக்க மாட்டார்களே. பிரவீன்? அவனில்லாமல் நான் இனி இருக்க வேண்டுமா? என் நல்லது கெட்டது அனைத்தும் சிறு வயதில் இருந்தே அவனுடன்தானே நடக்கிறது. இதோ எனக்காக அத்தனையும் பார்த்து பார்த்து செய்கின்றானே. அவனும் பெற்றவர்களும் இனி உடன் இருக்க போவதில்லை. அங்கும் அனைவரும் நன்றாகத்தான் பேசுகிறார்கள். ஆனால், என் பிறையம்மாவைப் போல் வருமா? எல்லாவற்றிற்கும் நான் மாறனப்பாவைத்தானே தேடுவேன். அங்கு??? பெண்ணாய் பிறந்தாலே இதனை அனுபவிக்க வேண்டுமா? அங்கு மாமாவும் அத்தையும் நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள் தான். திகழும் அண்ணி அண்ணி என்று நன்றாக ஒட்டிக்கொண்டாள். ஆனாலும், பிரவீன்? இவனில்லாமல்? என்ன நடந்தாலும் சரி, திகழை அவனோடு சேர்த்து வைத்துவிட வேண்டும். சுயநல எண்ணம்தான். ஆனால், நடந்தால் நன்றாகவே இருக்கும். இனிவரும் நாட்களுக்காக காத்திருக்கிறேன், மணப்பெண்ணாக. – இவண், இதழினி இளையபாரதி.”

தன் நாட்குறிப்பை மூடி வைத்தவளுக்கு உள்ளுக்குள் அத்தனை குத்தாட்டம்தான். ஆனால், சிறு வருத்தமும் இழையோடி இருந்தது. அனைவர் வாழ்விலும் நடக்கும் விடயம்தான் என்றாலும் ஏனோ அதனை ஏற்றுக்கொள்ளத்தான் மனம் விரும்பவில்லை.

இவளின் ஆசைகள் ஒருபுறம் இருந்தாலும் திகழின் எண்ணவலைகள் இன்னும் அகிலனை சுற்றித்தான் இருந்தது. அவனைப் பற்றிய எண்ணங்களை தள்ளி வைத்து இப்போதைய திருமண விழாவில் கவனம் செலுத்த முயன்று கொண்டிருந்தாள்.

உறவுக்காரர்கள் எல்லாம் வீட்டை நிறைத்து இருக்க, தன் நண்பர்களுக்கு எல்லாம் பத்திரிக்கை வைத்துவிட்டு அப்போதுதான் நுழைந்தான் இளையா, உடன் அகிலனும். தாவணி பாவடையில் திகழினி அமர்ந்து இருக்க, அவள் வயதொத்த பெண் அவளின் கைகளுக்கு மருதாணி வைத்துக் கொண்டிருந்தாள்.

“என்ன ஒரு ஆச்சர்யம், திகழ் நீயா?” என்று அவள் தாவணி அணிந்திருப்பதை எண்ணி வியந்தபடி வர, பின்னே வந்த அகிலனும் அதனை கவனிக்கத்தான் செய்தான். அவள்மேல் எந்தவித எண்ணமும் தோன்றவில்லையே. அவள் இளையாவின் தங்கை. சிறுவயது முதல் இந்த எண்ணம் மட்டும் தான் அவனிடம். எதுவும் பேசாமல் அவன் உள்ளே சென்றுவிட, அவனின் எண்ணவலைகளை கணித்தவளின் கண்களில் அப்படி ஒரு கோபம்.

தன் கோபத்தை கண்மூடி கட்டுப்படுத்தியவள், அமைதியாக அந்த மருதாணியையே கவனித்துக் கொண்டிருந்தாள். அப்போது வெளியே பிரவீன் இதழிடம் பேசியபடியே வந்தவன் இவளை பார்த்து அப்படியே ஆணிஅடித்தாற்போல் நின்றுவிட்டான்.

‘என் திகழா இது? யப்பா, கொல்றாளே. செமயா இருக்கா. பிரவீனு இப்போ உன்பாடு திண்டாட்டம்தான்டா. செதுக்கி வச்ச சில மாதிரி இருக்காளே…’ என்றபடி அவனின் தலையில் தட்டிக்கொண்டவன், ‘புத்தி போகுது பாரு. இது மட்டும் தெரிஞ்சது அன்னைக்கு மனோஜ்க்கு நடந்த மாதிரிதான்டி. அவ அடி மட்டும் தனியா தெரியும். பாக்காதடா… அவள பாக்காத… அப்டியே இளையா ரூம் போய்டு’ என்று அவன் கவனிக்காததுபோல் சென்றுக்கொண்டிருக்க, தேவநந்தன் அவனை அழைத்துவிட்டார்.

“வந்துட்டியா பிரவீன். இதுல இன்னும் நாப்பது பத்திரிக்கை இருக்கு. இதழ் சைடுல வைக்க வேண்டியதுலாம் வச்சிடு. கடைசி நேரத்துல தான் இந்த பத்திரிக்கை வந்துச்சுபா. கோச்சிக்க வேண்டாம்.”

“அச்சோ அங்கிள், என்ன இது? அவங்க லேட் பண்ணதுக்கு நீங்க என்ன செய்வீங்க. இப்டி நீங்க என்கிட்ட பேசினது இதழுக்கு தெரிஞ்சது என்னை கொன்னுடுவா.” அவன் அத்தனை கலகலப்பாக பேசியது, தன் தோழியின் கல்யாணம் என்று தள்ளி நிற்காமல் அனைத்தும் செய்வது அவருக்கு அவனின் மேல் அத்தனை மரியாதை. ஆனால் அனைவரின் கண்ணும் அதுபோலவே இருக்காதே. இதற்கும் ஒரு பேச்சு வரத்தான் செய்யும்போல் இருந்தது உறவினர்கள் வருகை.

பத்திரிக்கையை வாங்கிக் கொண்டவன், இளையாவின் அறைக்குள் செல்ல அங்கு அகிலனின் முகமே எடுத்துக்காட்டியது அவனின் சோர்வை. பிரவீனுக்கும் புரிந்தது, காதலின் இழப்பு எத்தனை வலியைக் கொடுக்கும் என்று. அதற்காகவே அவனை தனியாக விடாமல் இளையாவும் பிரவீனும் மாற்றி மாற்றி அவனிடம் ஏதாவது ஒரு வேலையை கொடுத்துக் கொண்டே இருந்தனர்.

“அகில், நான் இன்விடேசன் வைக்க போறேன். கூட வாங்களேன்.”

“நீங்க போய்ட்டு வாங்களேன். எனக்கு கொஞ்சம் தல வலிக்குது.” என்று அவன் தவிர்க்க பார்க்க,

“வாங்க, அப்டியே ஒரு டீ அடிச்சிட்டு வரலாம். பொண்ணு சைடுல நான் போறேன். அமுதனுக்கும் அங்க பிறைம்மா வேலை வச்சிட்டாங்க. மாப்ள சைட்ல இருந்து நீங்க வந்தா நல்லா இருக்கும்னு நினச்சேன்” என்று முகத்தைத் தொங்கப் போட்டான்.

“உடனே இப்டி மூஞ்ச வச்சிக்குறது. சரி வாங்க போலாம்.” அவனிற்கும் மாற்றம் தேவைப்பட்டது. இங்கிருந்தால் மீண்டும் திகழை பார்க்க நேரிடும். அவளோ அவனை முறைத்தே பஸ்பமாக்கிவிடுவாள்.

இருவரும் வெளியே செல்ல, தெய்வானையின் மாமியார் அவரை வேலை சொல்லியே ஆட்டிவைத்துக் கொண்டிருந்தார்.

“இந்தா தெய்வான, என்ன நீ இன்னும் ஜாக்கெட் வாங்குறத பத்தி பேசவே இல்ல. நாளைக்கு மதியம் சாமி கும்புடறப்போ இருந்தே ஆகணும்ல. இதுக்குதான் நம்ம பக்கம் தேவி பொண்ணுக்கிட்ட குடுத்து தைக்க சொன்னேன். நீ தான் ஊர் உலகத்துல இல்லாத மருமக சொன்னான்னு அவங்க சொல்ற இடத்துலயே கொடுக்கணும்னு சொன்னவ. இப்பப்பாரு இன்னும் வரல.” என்று கத்திக்கொண்டிருந்தார்.

சரியாக அகிலனும் பிரவீனும் வெளியே வர, “நல்ல நேரத்துல வந்த பிரவீன். முகூர்த்த புடவை, நிச்சய புடவை, ரிசப்சன் சேரி இதுக்கு எல்லாத்துக்கும் இன்னும் ப்ளவுஸ் வரல. நீ திகழ கூட்டிட்டு போய் வாங்கிட்டு வந்துடுறியா?” என்றார் தன் மாமியாரிடம் ஒரு கவனத்தை வைத்துக் கொண்டு.

அவர் சொன்னதைக் கேட்டதும் பிரவீனுக்கு உள்ளுக்குள் குத்தாட்டம்தான். ஆனாலும் சற்று பயமும் கூட. அகிலனிற்கோ எரிச்சல் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

“அதுலாம் ப்ராப்ளம் இல்ல ஆன்ட்டி. போய்ட்டு வந்துடலாம். ஆனா, இப்போ இன்விடேசன் வைக்க போனுமே. நான் ரிட்டர்ன் வரப்போ அப்டியே ப்ளவுஸ் வாங்கிட்டு வந்துடுறேன். திகழ் வேற மெஹந்தி போட்டுட்டு இருக்காங்க. இங்க இருக்கட்டுமே.”

இவனின் பதிலில் அகிலன்தான் சற்று ஆசுவாசமடைந்தான். “ஆமாம்மா. நானும் கூடத்தான் போறேன். வரப்போ அப்டியே நான் வாங்கிட்டு வந்துடுறேன்.”

“அதுலாம் சரிதான். இந்த அத்த ஆம்பள பசங்க கிட்ட என்ன பொட்ட புள்ளைங்க துணிய வாங்கிட்டு வர சொல்றன்னு அதுக்கு வேற கத்துமே. அதான் யோசனையா இருக்கு அகில்.” என்றார் கையை பிசைந்து கொண்டே.

சரியாக அப்போது தெய்வானையின் மாமியார் வந்துவிட, “என்ன தெய்வா, இன்னும் இங்க நிக்குற? உன் சம்மந்தி வீட்டாளுங்க கிட்ட போன போட்டு ஜாக்கெட்ட வாங்கி கொடுத்து அனுப்ப சொல்லு. சீக்கிரம். ஆமா, இந்த பய யாரு? நானும் வந்ததுல இருந்து பாக்குறேன் எல்லா வேலையும் எடுத்து செய்றான், ஆனா பெரியவங்கள பாத்தா மதிக்கணும்னு தெரியாதா?” என்று சடசடத்தார்.

‘ஆத்தி, இந்த கிழவிய பகைச்சிக்கிட்டா பின்னாடி பெரிய ஆப்பா வச்சிட்டு போய்டும் போலயே’ என்று பிரவீன் உள்ளுக்குள் நினைத்து கொண்டவன், “நான் இதழோட ப்ரெண்ட் பாட்டி. ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று பொத்தென்று காலில் விழுந்துவிட்டான்.

“இந்தாப்பா, நல்லா இரு. எந்திரி எந்திரி. நல்ல வெவரமான பய தான்.”

“இவங்க கிட்ட தான் அத்த சொல்லி இருக்கேன். பிரவீன் போய் ப்ளவுஸ் வாங்கிட்டு வந்துடுவான்.”

“கூறு எதாவது இருக்கா தெய்வா உனக்கு? ஆம்பள பசங்க எப்டி பொட்ட புள்ளைங்க துணிய வாங்கிட்டு வருவாங்க? திகழ அனுப்பு நீ. அவ தேவா கூட போய் வாங்கிட்டு வரட்டும்.”

“அத்த, அவரு மண்டபத்துக்கு போய் இருக்காருத்த. நாளைக்கு சமைக்க ஆளுங்க நைட் வந்துடுவாங்க. அதுக்கு சரக்குலாம் எடுத்து வைக்க போய் இருக்காரு.”

“என்னதான் இந்த காலத்து புள்ளைங்களோ. திகழ எப்டி தனியா அனுப்ப?”

“தனியாலாம் இல்லங்க அத்த, இவங்க கூட அனுப்பலாம். அதான் கேட்டுட்டு இருந்தேன்.”

“என்ன? வயசு புள்ளய இவனுங்க கூட அனுப்புவியா? அறிவு இருக்கா உனக்கு? இந்த வீட்ல கேட்க ஆளு இல்லன்னு உங்க இஷ்டத்துக்கு முடிவு எடுப்பீங்களா? நானே போய் வாங்கிட்டு வரேன், இவனுங்க கூட போய். என்னப்பா போலாமா?” என்றதில் உண்மையில் பிரவீனுக்கும் அகிலனுக்கும் கடுப்புத்தான் வந்தது.

அந்நேரம் பிறை பிரவீனுக்கு அழைப்பு விடுக்க, “ஒரு நிமிசம், பிறைம்மாதான் ஆன்ட்டி” என்றவன் அழைப்பை இணைத்தான்.

“சொல்லுங்க மா”

“இதழ் ப்ளவுஸ் வாங்கியாச்சுடா. நம்ம மகிழாழிக்கிட்ட குடுத்து விட்டு இருக்கேன். அவ ஸ்கூட்டில வரா. தெய்வானை அண்ணிக்கிட்ட சொல்லிடு. அவங்களுக்கு கூப்டேன் எடுக்கல. நீ இன்விடேசன் வைக்க போய்ட்டியா?”

மனதிற்குள் ‘கடவுள் இருக்கான் குமாரு’ என்று சொல்லிக் கொண்டவன், “இல்லம்மா இப்போதான் கிளம்ப போறேன். இங்க இப்பதான் ஆன்ட்டி கேட்டாங்க ப்ளவுஸ் பத்தி. எடுத்துட்டு வராங்களா? சரிம்மா. நான் அப்ரோம் கூப்டுறேன்” என்றபடி அழைப்பைத் துண்டித்தவன்,

“எங்க ஃப்ரென்ட் கொண்டு வந்துட்டு இருக்காளாம் ஆன்ட்டி ப்ளவுஸ். நாங்க கிளம்புறோம். வரோம் ஆன்ட்டி, வரோம் பாட்டி” என்று நிற்காமல் ஓடிவிட்டனர் இருவரும்.

தன் வீட்டில் உறவினர்கள் தோழிகள் சூழ்ந்திருக்க, “இதழ்மா… எல்லாம் பேக் பண்ணிட்டியாடா?” என்று கேட்டபடி அவளின் அறைக்குள்ளே வந்தார் இளமாறன்.

“ஹான், ஆச்சுப்பா. இன்னும் கொஞ்ச திங்க்ஸ்தான் இருக்கு. அங்க போய்ட்டு ஒரு ஒன் வீக் கழிச்சு தேவையானது எடுத்துக்குறேன்பா. அதுவரைக்கும் இங்கயே இருக்கட்டுமே.!” என்றவளின் பார்வையில் அப்பட்டமாக ஏக்கம் நிரம்பி இருந்தது.

“என்ன இதழ்மா? பர்மிசன்லாம் கேட்குற? இது நம்ம வீடுடா. இருக்கட்டுமேன்னு சொல்ற? இங்கதான்டா இருக்கணும்.” என்றவரின் குரல் தழுதழுக்க ஆரம்பித்தது.

அவர் உள்ளே வந்தவுடனேயே மற்றவர்கள் எல்லாம் வெளியே சென்றிருக்க, இருவரும் சன்னல் வழியே வாசலில் நட்டு வைத்திருக்கும் பந்தகாலினை பார்த்துக் கொண்டே பேசினர்.

“நானும் உங்கம்மாவும் கல்யாணம் செய்துக்குறப்போ இப்டித்தான் உன் தாத்தாவும் பிறைக்கிட்ட பேசிட்டு இருந்தாரு. மனுசன் எவ்ளோ கம்பீரமா இருப்பாரு தெரியுமா? அதே ஆளுமைதான் உங்கம்மா கிட்டயும்.

நானும் மிலிட்டிரிக்கு போணுமா எப்டி இவ எல்லாம் சமாளிப்பான்னு நினச்சா, என்னை விட பயங்கர தைரியம்தான் உன் அம்மாவுக்கு. எவ்ளோ சண்ட வரும் தெரியுமா இதழ்.? சின்ன சின்ன விசயத்துக்கு ரெண்டு பேரும் சண்ட போடுவோம். ஆரம்பத்துல என்னடா இவ எதுக்கெடுத்தாலும் சண்ட போடுறா? நம்மள புரிஞ்சிக்கவே மாட்டிங்குறா? இதுல வேலைக்கு போறதுக்கு கூட உன் பாட்டி அவள திட்டுவாங்க. ஆனாலும் எத பத்தியும் கவலப்படாம அவளுக்கான வழில போனாலும் குடும்பத்தையும் அழகா பாத்துக்கிட்டா. ஹஸ்பன்ட் வீட்ல நாம அனுசரிச்சு போகலாம், ஆனா அதே சமயம் நம்மளோட சுயமரியாதைய என்னைக்கும் நாம விட்டுடக் கூடாதுன்னு சொல்லுவா. நீ பொறந்தப்போ அவ அவ்ளோ துடிச்சிட்டா இதழ்மா. அதுனால தான் உனக்கு அடுத்து நாங்க குழந்தைங்க வேண்டாம்னு சொல்லிட்டோம். இப்போ தான் உன்ன கைல வாங்குன மாதிரி இருக்கு. அதுக்குள்ள என் பொண்ணுக்கு கல்யாணம். ரொம்ப சந்தோசமா இருக்கு இதழ்மா” என்றவரின் பேச்சினை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தாள். இந்நேரம் பொங்கி வந்த அழுகையை கட்டுப்படுத்த அரும்பாடு பட்டுக்கொண்டிருந்தாள். தான் அழுதால் நிச்சயம் தந்தையும் வருத்தப்படுவார் என்பதனாலேயே அழாமல் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள்.

“என்ன அப்பாவும் பொண்ணும் இங்க பேசிட்டு இருக்கீங்க? என்னங்க, தேவாண்ணா போன் பண்ணாங்க. மண்டபத்துல சமைக்க ஆளுங்க வந்துட்டாங்களாம். டெக்கரேசன் செய்றதுக்கும் ஆளுங்க வந்துட்டாங்களாம். கிளம்பி வர சொன்னாங்க.”

“சரிம்மா. இதழ் எல்லாம் எடுத்து வச்சிட்டு சீக்கிரம் தூங்குடாமா” என்றபடி அவர் சென்றுவிட்டார்.

“என்ன மிஸஸ் இளமாறன், அப்பாவ காப்பாத்துறீங்களா?”

“கொஞ்சம் விட்டா ரெண்டு பேரும் வீட்டுக்குள்ள ஒரு தெப்பக்குளத்த உருவாக்கிடுவீங்க. அதான், வந்தேன்.” என்றவரை சிரிப்புடன் ஏறிட்டவள், அவரைக் கழுத்தோடு கட்டிக்கொண்டாள்.

“என்னடி?”

ஒன்றுமில்லை என்பதுபோல் தலையசைத்தவள், “எனக்கு உங்கள மாதிரி லைஃப்ப கொண்டு போவேனான்னு இருக்கும்மா!”

மெலிதாய் புன்னகைத்தவர், “எங்கள விட பெட்டரா உன் லைஃப்ப கொண்டு போவன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு இதழ். இந்த மாதிரி எக்சைட்மென்ட்டோட ஏக்கம், பிரிவு எல்லாம் எமோசனலும் இந்த கல்யாணத்துல தான் வரும். அத ஜஸ்ட் என்ஜாய் பண்ணு. இங்கதான வீடு. நினச்ச நேரத்துக்கு வரலாம். அண்ணனும் அண்ணியும் ரொம்ப நல்லவங்க. அதுவும் அண்ணிக்கு அதட்டி கூட பேச வராது. அது மட்டுமில்ல, நீ கண்டிப்பா இடத்துக்கு தகுந்த மாதிரி அவங்கள மாத்திடுவ. சோ, எனக்கு எந்த கவலையுமில்ல.” என்றார் மனதார.

“ம்ம்… அத்தம்மா ரொம்ப ஸ்வீட்மா”

“பாரேன், இப்போவே அங்க சப்போர்ட்டா? சரி, சரி.! என்ன என்ன வேணுமோ எல்லாம் எடுத்து வச்சிடு. நாளைக்கு சீக்கிரம் எழுந்து நலுங்கு வைக்கணும். மதியம் சாமி கும்பிடுவாங்க. ஈவ்னிங் நிச்சயதார்த்தம் முடிச்சிட்டு ரிசப்சன். காலைல முகூர்த்தம். நிறய வேலை இருக்கு.” என்று எழ,

“கொஞ்ச நேரம்மா” என்றபடி அவரின் மடியில் தலைசாய்த்துக் கொண்டாள். சரியாக அப்போது இளையா அழைக்க,

“மாப்ளைக்கு என்கூட கொஞ்சுறதே பிடிக்கல போலடி. உடனே போன் அடிச்சிட்டாரு. நீ பேசிட்டு இரு வரேன்.” வந்த உறவினர்களை கவனிக்க சென்றுவிட்டார்.

அங்கு இளையாவோ பயங்கர கோபத்தில் இதழுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தான்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்