Loading

“இனி வீட்டிற்கு இவள் வரக்கூடாது எங்கேயாவது போய் சாகச் சொல்” என்று சொல்லிச் சென்ற தந்தையை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள் யாழினி. 

 

அவள் தந்தை இப்படி பேசியது அவளுக்கு மட்டும் அதிர்ச்சி அல்ல. அதைக் கேட்டுக் கொண்டிருந்த அவளது அம்மா, அந்த பாட்டி காவ்யா அனைவருக்குமே அதிர்ச்சி தான். 

 

யாழினியின் தாயோ, “என்னங்க இப்படி சொல்றீங்க. அவள் நம்ம பிள்ளைங்க” என்று அழுதவாறு அவரின் பின்னால் சென்று தடுக்க முயன்றார். 

 

“நம் பிள்ளையா? இந்த அதிர்ஷ்டம் கெட்டவள் என் பிள்ளை இல்லை. எனக்கு வீட்டில் இருக்கும் இருவர் மட்டும் தான் பிள்ளைகள். இவள் எக்கேடாவது கெட்டு, எங்காவது போகட்டும்” என்று மீண்டும் அழுத்தமாக கூறினார். 

 

யாழினி அருகில் இருந்த பாட்டி, அவளின் தாய் தந்தையர் அருகில் சென்று, “என் பெயர் லக்ஷ்மி” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, “ஒரு வயசு பெண்ணை இப்படித்தான் நாலு பேர் கூடி இருக்கும் பொழுது பேசுவீர்களா?” என்று கோபமாக கேட்டார். 

 

யாழினியின் தாயோ அழுது கொண்டு லக்ஷ்மி பாட்டியை பார்த்தார். ஆனால் அவளின் தந்தையோ அவருக்கும் அவர் பேசியதற்கும் சம்பந்தமே இல்லாதது போல் தன் மனைவியை பார்த்து, “இப்பொழுது நீ என்னுடன் வரப் போகிறாயா? இல்லையா? என்று கோபமாக மனைவியின் கையைப் பிடித்து இழுத்தார். 

 

உடனே லட்சுமி பாட்டி, “சரி போகிறது தான் போகிறீர்கள், உங்கள் மகளின் திருமணத்தை பார்த்து விட்டே செல்லுங்கள்” என்று சொல்லிவிட்டு அவர்களின் பதிலையோ, செயலையோ எதிர்பார்க்காமல் நேராக யாழினியிடம் வந்தார். 

 

“உன் பெயர் என்னம்மா?” என்று அவளின் கையைப் பிடித்து கேட்க, தந்தை பேசிய பேச்சில் சிலையாக நின்றிருந்தவள் உணர்வற்று பாட்டியை திரும்பி பார்த்தாள். அவளின் பக்கத்தில் நின்ற அவளின் தோழி “யாழினி பாட்டி” என்றாள். 

 

“யாழினி… நல்ல பெயர். இங்கே பாருமா யாழினி. நீ என் பேரனை கல்யாணம் பண்ணிக்கிறியா?” என்று அவளின் நாடி பிடித்து, தன்னை பார்க்க வைத்து கேட்டார். 

 

யாழினியோ என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அப்படியே விழித்தபடி நின்றாள். 

 

அதுவரை அங்கு நடந்தவற்றையும், தன் மனைவி ஒரு பெண்ணின் மானத்தை காத்ததையும் அமைதியாக நின்று பார்த்துக் கொண்டிருந்த நரசிம்மன் தாத்தா தன் மனைவியை லட்சுமியிடம் வந்தார். 

 

“லட்சுமி.. நீ இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்க? “என்று சற்று அதட்டலாக கேட்டார். 

 

“என்னங்க.. பாருங்க.. இந்த புள்ளைய எவ்வளவு அழகா இருக்கா? இவளுக்கு போயி அந்த வயசான வர கல்யாணம் பண்ணி வைக்க முடிவு செஞ்சிருக்காங்க. நல்லா வேளை கல்யாணம் நின்னுடுச்சு” 

 

“அதற்கு.. நீ என்ன வேலை பண்ணுகிறாய் இப்பொழுது?” என்றார். 

 

“அவளோட அப்பா அவளை வீட்டிற்கு வரக்கூடாது என்கிறார். நம் பேரனுக்கு திருமணம் முடித்து மருமகளாக நம் வீட்டிற்கு அழைத்துச் செல்வோம்” என்றார் சிரித்துக் கொண்டே. 

 

“உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா? நம் பேரனின் நிலை என்ன? இந்த பெண்ணின் நிலை என்ன? கொஞ்சம் ஆவது யோசித்தாயா?” என்று சற்று கோபமாகவே கேட்டார். 

 

இவர்கள் பேச்சில் கொஞ்சம் கொஞ்சமாக சுயத்திற்கு வந்த யாழினி பாட்டியை பார்த்து, “நான் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறேன் பாட்டி” என்றாள். 

 

அதில் அதிர்ந்த தாத்தா, “என்னம்மா சொல்ற?” என்று அவளிடம் அதிர்ச்சியாக கேட்டார். 

 

“எங்க அப்பா என்னை எக்கேடாவது கெட்டு, எங்கேயாவது சென்று செத்து விடு என்கிறார். எனக்கு இப்பொழுது போவதற்கு இடமில்லை. சாவதற்கும் தைரியம் இல்லை. பாட்டி என்னை திருமணம் தானே செய்ய சொல்கிறார்கள். செய்து கொள்கிறேன்” என்று அமைதியாக பேசினாள். 

 

“அவள் சொல்லுவாள் ஆயிரம். அதற்காக நீ என் பேரனை திருமணம் செய்து கொள்ள வேண்டுமா? வேண்டாம்” என்று மறுத்தார். 

 

“அப்பா சொன்னதற்காக ஐம்பது வயது ஆனவரேயே திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொண்டேன். உங்கள் பேரனுக்கு அதைவிட அதிக வயதா?” என்று உணர்ச்சியற்ற குரலில் கேட்டாள் யாழினி. 

 

“என் பேரனுக்கு ஒன்றும் அதிக வயது இல்லை. திருமணம் செய்து கொள்ளும் வயது தான். இருபத்தி ஒன்பது வயது ஆகிறது. ஆனால் இங்கு வயது பிரச்சனை இல்லை” என்று அவளுக்கு புரிய வைக்க வேண்டும் என்று தன் பேரனை பற்றி சொல்ல வர, 

 

“பின்ன என்ன தாத்தா! நான் அவரை திருமணம் செய்து கொள்கிறேன்” என்று மணமேடையில் இன்னும் அமர்ந்து கொண்டிருந்த ஐயரை பார்த்து, “இன்று மணமுடிக்க வேறு நல்ல நேரம் இருக்கிறதா?” என்று கேட்டாள். 

 

“அடுத்த முகூர்த்தம் ஒன்பது பத்தரை. நல்ல நேரம்தான்” என்று கூறினர் ஐயர். 

பாட்டியை பார்த்து, “நீங்கள் கொடுத்த புடவையை தான் கட்டி இருக்கிறேன். நகை என்று என்னிடம் எதுவும் இல்லை” என்று சொல்லிவிட்டு தன் கையில் கிடந்த தங்க வளையல்களையும் கழுத்தில் கிடந்த ஒரு தங்க சங்கிலியையும் கழட்டி தன் தாயிடம் கொடுத்தாள். 

 

“இப்பவும் என்னை உங்கள் பேரனுக்கு திருமணம் செய்ய விரும்புகிறீர்கள் என்றால், எனக்கும் இந்த திருமணத்தில் சம்மதம்” என்று அமைதியாக பாட்டியை பார்த்தாள். 

 

உடனே பாட்டி மகிழுந்து தன் கழுத்தில் கொத்தாக கிடந்த நகைகளில் காசு மாலையையும் இரட்டை வடம் சங்கிலியையும் கழட்டி யாழினிக்கு அணிவித்தார். 

 

“எனக்கு பரிபூரண சம்மதம். நீ என் பேரனை திருமணம் செய்வதில்” என்று நெட்டி முறித்தார். 

 

“லட்சுமி” என்று அதிர்ந்து கத்திய நரசிம்மன் தாத்தா யாழினியை பார்த்து, “முதலில் நீ என் பேரனை பார்த்து விடு. அதன் பிறகு திருமணத்திற்கு ஒத்துக் கொண்டால், இந்த மேடையிலேயே வரும் முகூர்த்தத்தில் திருமணம் செய்து கொள்ளலாம்” என்று கூறினார். 

 

“பரவாயில்லை தாத்தா, உங்கள் பேரன் எப்படி இருந்தாலும் நான் திருமணம் செய்து கொள்கிறேன். உங்கள் பேரனுக்கு சம்மதமா என்று கேட்டு, மணமேடைக்கு அழைத்து வாருங்கள். அதுவரை நான் அறையில் அமர்ந்திருக்கிறேன்” என்று கூறிவிட்டு காவ்யாவை அழைத்துக் கொண்டு தன் தாய் தந்தையரிடம் சென்றாள். 

 

“இனிமேல் என்றைக்கும் நான் உங்களைத் தேடி வரமாட்டேன். என்னால் உங்களுக்கு எந்த தொந்தரவும் இனி இருக்காது. இன்றிலிருந்து உங்களைப் பார்த்து எல்லா அதிர்ஷ்டமும் வந்து சேரும். உங்களுக்கு விருப்பம் என்றால் என் திருமணத்தை பார்த்து விட்டு செல்லுங்கள்” என்று கைகூப்பி கும்பிட்டு தான் இதுவரை அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்று அமர்ந்து கொண்டாள். 

 

அவளிடம் வந்த காவ்யா, “அந்த தாத்தா தான் அவ்வளவு சொல்றாரு இல்ல. பின்ன ஏன் நீ பிடிவாதமா கல்யாணம் பண்றதுலயே இருக்க. ஒரு தடவை அவர் பேரனை தான் பார்த்துவிடேன்.அதன்பிறகு முடிவு செய்யேன்” என்றாள் தன் தோழியிடம். 

 

“நீ சும்மா இரு காவ்யா. இந்த திருமணம் கண்டிப்பாக நடக்கும். அதுவரை தான் நான் இங்கு இருப்பேன். இப்போது என்னிடம் தயவு செய்து தேவையில்லாததை பேசி நேரத்தை வீணாக்காதே” என்று சொல்லிவிட்டு அமைதியாக கண்களை மூடி அமர்ந்து விட்டாள். 

 

“சரி இப்பொழுது நான் தான் என்ன செய்யட்டும்” என்று அவளிடமே கேட்டாள் காவ்யா. 

 

“நம் பிரண்ட்ஸ்க்கு போன் செய்து இங்கு வர முடியுமா? என்று கேள். எனக்கு திருமணம் என்று சொல்”

 

“எப்படியும் திருமணம் முடிந்து அவர்களுடன் சென்று விடுவேன். அதன் பிறகு உங்கள் எல்லோரையும் எப்பொழுது பார்ப்பேன் என்று தெரியவில்லை. அதனால் தான்” என்று நிறுத்தினாள். 

 

காவ்யாவும் பெருமூச்சுடன் தன் நண்பர்களுக்கு போன் செய்தாள். என்ன திடீர் கல்யாணம் என்று நண்பர்கள் அதிர்ந்தாலும் உடனே வருவதாக கூறினார்கள். 

 

முகூர்த்த நேரம் நெருங்க யாழினியின் நண்பர்களும் கோயிலுக்கு வந்து விட்டார்கள். தடல்புடலாக பரபரப்பாக இருந்தார் லட்சுமி பாட்டி. 

 

நரசிம்மன் தாத்தாவோ அமைதியாக தன் மனைவியின் செயலை வேடிக்கை பார்த்தவாறு அமர்ந்துவிட்டார். 

 

ஐயர் மணமகனை அழைத்து வருமாறு கூற, நரசிம்மன் தாத்தா தன் பேரனின் நண்பனுக்கு ஃபோன் செய்து அவனை அழைத்து கொண்டு வருமாறு சொன்னார். சற்று நேரத்திற்கெல்லாம் இரு வாலிபர்கள் மேடையை நோக்கி வர, அதில் ஒருவன் பட்டு வேஷ்டி சட்டை அணிந்து இருந்தான். 

 

அவன் தான் மணமகனாக இருப்பான் என்று காவ்யா நினைத்துக் கொண்டு, அவனைப் பார்த்து மதிப்பீடு செய்தாள். எப்படியும் ஆறு அடிக்கு மேல் இருப்பான். மாநிறம். அழகான சுருட்டை முடி. பார்ப்பதற்கு எல்லா விதத்திலும் யாழினிக்கு பொருத்தமானவனாக தான் தெரிந்தான்.

 

நல்லவேளை அந்த கல்யாணம் நின்றது. அந்தக் கிழவனுக்கு பதில் கம்பீரமான ஒருவன் தான் என் தோழிக்கு கணவனாக வருகிறான், என்பதில் மகிழ்ந்து யாழினியின் அருகில் வந்து, “மாப்பிள்ளை அழகாக இருக்கிறார் டி” என்று சொல்லி மகிழ்ந்தாள். 

 

ஆனால் யாழினியோ அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

 

சற்று நேரத்திற்கெல்லாம் அவளின் நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து, ஏன் மாப்பிள்ளை பார்ப்பதற்கு ஒரு மாதிரி இருக்கிறார் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஒன்றாக சொல்ல ஆரம்பித்தனர். 

 

இவர்கள் சொல்லுவதை கேட்டு பயந்த காவ்யா வேகமாக வெளியே சென்று மணமேடையை பார்த்தாள். மணமேடையில் அமர்ந்திருந்த மணமகனோ ஐயர் சொல்லும் மந்திரங்களை சொல்லிக் கொண்டு அவருடன் விளையாடிக் கொண்டும் இருந்தான். 

 

பார்ப்பதற்கு வாலிபனாக தெரிந்தாலும், அவனது செயல்களை பார்க்க பத்து வயது சிறுவன் போல் தான் இருந்தது. அதில் அதிர்ந்த காவ்யா விரைந்து வந்து யாழினிடம், “அதற்குத்தான் அந்த தாத்தா கல்யாணத்துக்கு முன் பேரனை பார்த்து விடும்படி உன்னை அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார். அவன் பார்ப்பதற்கு லூசு போல் இருக்கான்டி” என்று யாழினியின் தோளை பிடித்து உலுக்கி “அந்த பாட்டியிடம் கல்யாணத்தை நிறுத்த சொல்லு” என்று அவளை உலுக்கினாள். 

 

தன் நண்பர்கள் சொன்னவற்றிற்கும் சரி, இப்பொழுது காவ்யா வந்து அவளை உலுக்குவதிலும் சரி, எதற்கும் அசராமல் அப்படியே அமைதியாக அமர்ந்திருந்த யாழினி தன் தோழியை பார்த்து, “கல்யாணத்தை நிறுத்திவிட்டு நான் என்ன செய்ய?” என்று உணர்வற்று கேட்டாள். 

 

“அதற்காக ஒரு லூச நீ கல்யாணம் பண்ணிக்க போரீயா?” என்று கோபமாக கேட்டாள் காவ்யா.

 

அதே எண்ணம் தான் அவளின் நண்பர்களுக்கும். அனைவரும் யாழினியை பார்த்தனர். யாழினியோ அனைவரையும் பார்த்துவிட்டு, லேசாக புன்னகைத்து, தன் தோழியின் காவ்யாவின் கையைப் பிடித்துக் கொண்டு, “என் அப்பா அம்மா எனக்கு பார்த்த மாப்பிள்ளையை நீ பார்த்தாய் அல்லவா?” என்றாள். 

 

ஆமாம் என்று அமைதியாக தலையை ஆட்டினாள் காவியா. 

 

எனக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து வைக்க வேண்டிய என் பெற்றோரே ஐம்பது வயதான ஒருவரை எனக்கு திருமணம் செய்ய முடிவு செய்திருக்கின்றார்கள். 

 

இப்போது உறவுகள் என்று யாரும் இல்லை. இருப்பதற்கு இடமும் இல்லை. அப்படிப்பட்ட எனக்கு இவரை திருமணம் செய்வதைத் தவிர வேறு வழியும் இல்லை.

 

அதுவும் இல்லாமல் பாட்டியை பார்த்தாயா? தன் பேரனுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று என்னிடம் உண்மையை சொல்ல மறுத்தாலும் அவர்கள் கண்களில் என்னை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை. 

 

அதேபோல் தாத்தா தன் பேரனின் நிலை அறிந்து, அவனுக்கு என்னை திருமணம் செய்ய பாட்டி நினைத்ததும் மறுக்கத்தான் செய்தார். என்னிடம் எப்படியாவது உண்மையை சொல்லிவிட வேண்டும் என்று தான் முயன்றார். நான் தான் ஒவ்வொரு முறையும் அவரது முயற்சிக்கு தடை சொல்லிக் கொண்டு இருந்திருக்கிறேன். 

 

பாட்டி, தாத்தா இருவருமே நல்ல குணம் படைத்தவர்கள் போல் தான் தோன்றுகிறது. அப்படிப்பட்டவர்கள் நிச்சயம் என்னை நன்றாக கவனித்துக் கொள்வார்கள். 

 

எங்கள் வீட்டில் நான் இருந்ததை விட இங்கு நிம்மதியாக இருப்பேன் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. 

 

அதைவிட நான் முதலில் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டதே அவர்கள் கோவிலில் வைத்து திருமணம் என்றதால் தான். எப்படியாவது சமயபுரம் மாரியம்மன் என்னை காப்பாற்றுவாள் என்று நம்பிக்கையில் தான். 

 

அதேபோல் திருமணமும் நின்று விட்டது. அடுத்த நொடியே அதே இடத்தில் என் திருமணமும் இவருடன் நிச்சயமாகி இருக்கிறது. இதை நான் கடவுளின் முடிவாகவே நினைக்கிறேன். 

 

நிச்சயம் என் வாழ்க்கைக்கு நல்ல முடிவை தான் கடவுள் கொடுத்து இருக்கிறார் என்று நம்புகிறேன்” என்று தன் தோழியை பார்த்தாள்.

 

காவ்யாவும் யாழினியின் கையைப் பிடித்துக் கொண்டு, “சரி அப்படியே இருக்கட்டும். ஒருவேளை உண்மையிலேயே மாப்பிள்ளை பைத்தியமாக இருந்தால் என்ன செய்வாய்?” என்று தன் தோழியின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டு கேட்டாள். 

 

“ஏதோ காரணமாகத்தான் கடவுள் என்னை அவருடன் இணைக்கின்றார் என்று நினைத்துக் கொள்வேன்” என்று சாதாரணமாக சொல்லிவிட்டு தன் நண்பர்கள் அனைவரிடமும், “நீங்கள் என் திருமணத்திற்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி. தயவு செய்து மேடையில் வைத்து மாப்பிள்ளை பற்றி எதுவும் பேசி விடாதீர்கள். என் அப்பாவிடம் எனக்காக பேசிய பாட்டி வருத்தப்படுவார்வருத்தப்படுவார். 

 

இப்படியாக இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது லக்ஷ்மி பாட்டி வேகமாக அங்கு வந்தார். சுற்றி அவளின் நண்பர்கள் நிற்பதை கண்டு அனைவரையும் பார்க்க, யாழினி “இவர்கள் என்னுடன் படித்த நண்பர்கள்” என்று அறிமுகப் படுத்தினாள். 

 

அவரும் மிகவும் மகிழ்ந்து, “ரொம்ப சந்தோஷம். என் பேத்தியின் திருமணத்திற்கு நீங்களாகவது வந்திருக்கின்றீர்களே!” என்று சொல்லிவிட்டு, காவியாவிடம், யாழினியை அழைத்துக்கொண்டு மணமேடைக்கு வாமா. அய்யர் கூப்பிடுகிறார்” என்று சொல்லிவிட்டு, “எல்லோரும் வாருங்கள்” என்று அனைவரையும் அழைத்துக்கொண்டு மணமேடையை நோக்கி சென்றார். 

 

பாட்டி முன்னால் செல்ல காவ்யா யாழினியின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு மண மேடைக்கு சென்றாள். அவளை அவர்களது நண்பர்களும் பின்தொடர்ந்தார்கள். 

 

இவ்வளவு நேரம் தைரியமாக பேசிய யாழினிக்கு மணமேடையை நெருங்க நெருங்க அவளின் கைகள் சில்லிட ஆரம்பித்தது. ஏதோ ஒரு வித பயம் குடி கொள்வது போல் இருந்தது. 

 

மெதுவாக மணமேடை ஏறி ஐயர் சொன்ன இடத்தில் அமர்ந்தாள். அப்படியே மெதுவாக நிமிர்ந்து தன் அருகில் நான் அமர்ந்திருந்த மணமகனை பார்க்க, அதே நேரம் மணமகனும் அவளைத்தான் வாயில் ஜொல்லு வடிய பார்த்துக் கொண்டிருந்தான். 

 

அவளை பார்த்துக் கொண்டே தன் அருகில் நின்ற தன் நண்பனின் பேண்டை பிடித்து இழுத்து, “பிரசன்னா.. பிரசன்னா.. இந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்கு” என்றான். 

 

அவனின் செய்கையும் அவனின் பேச்சு நடையும் ஒரு வாலிபனின் பேச்சு போல் அல்லாது சற்று மன வளர்ச்சி இல்லாத சிறுவனின் பேச்சு போல் இருப்பதை உணர்ந்து கொண்டாள் யாழினி. 

 

அருகில் பிரசன்னா என்று அழைக்கப்பட்டவனும் சற்றென்று அவனின் முன் குனிந்து கைக்குட்டையால் அவன் வாயை துடைத்து, “டேய்.. கொஞ்ச நேரம் அமைதியாக உட்கார். பிறகு பேசலாம்” என்று படபடப்பாக கூறினான். 

 

அவனின் படபடப்பு எங்கே யாழினி திருமணத்தை நிறுத்தி விடுவாளோ என்பதைப் போல இருப்பதை அங்கு இருந்த காவ்யாவும் உணர்ந்தாள். 

 

எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று நினைத்த காவ்யா ‘இவனை பிடித்து, நாக்கை பிடுங்குவது போல் நாலு கேள்வி கேட்டால் தன்னால திருமணத்தை நிறுத்தி விடுவான்’ என்று நினைத்து அவனின் அருகில் சென்றாள் காவ்யா.

 

தொடரும்… 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்