
சொல்லாமல்..!
மௌனம் – 07
சொல்ல மறந்த கதை..
பாலாவும் எதுவும் பேசாமல்,மௌனமாய் தோழனைப் பார்த்திருந்தான்.இடைவேளை நேரத்தில் தான்,நடந்ததை சுருக்கமாக விளக்கி,அவளுக்கு எச்சரிக்க வேண்டும் என்று அவன் உரைத்திட,பாலாவுக்குமே அது சரியாகப் பட்டது.
காலையில் நடந்ததை விவரிக்கையில்,அவனுக்குமே கோபம் பற்றிக் கொண்டு வந்தது.
ஆடவன் இதே போன்ற ஒன்றை கடந்து வந்தவன் என்பதால்,அவன் யோசிப்பதில் பிழையும் இல்லை என்பதே அவன் எண்ணம்.
அதுவும்,அவன் ஏறிப்பாயாமல் எச்சரிக்க நினைப்பதே போதுமென்று இருந்தது.பெண்ணவள் மீது அவனுக்கும் கோபம் இருக்க,அவளின் முகத்தில் தெரிந்த பயத்தில்,பாலாவின் கோபம் அப்படியே மட்டுப்பட்டது உண்மை.
இன்னுமே,பெண்ணவள் பார்வையை நிமிர்த்தாது இருக்க,எகிறியது ஆடவனுக்கு.
படாரென,அவன் அமர்ந்திருந்த மேசையில் தட்டிட,அது தந்த அதிர்வில் ஓரமாய் வைக்கப்பட்டிருந்த நீர்க்குவளை துள்ளி கீழே விழுந்து நொருங்கிப் போக,அவள் பாதங்களுக்கு தண்ணீர் அபிஷேகம்.
அவன் அதிரடிச் செயல் தந்த அதிர்வில்,அவள் விலுக்கென நிமிர,”என்ன ப்ரச்சன உங்களுக்கு..?” என்று கேட்டான்,நேரடியாக.
அவளுக்கு சத்தியமாய்,எதுவுமே புரியவில்லை.அவனின் வருகையும் கோபமும் பயத்தை வாரியிறைத்த போதிலும்,அதன் பிண்ணனி தான் அவனுக்கு பயந்து கொண்டு போட்ட கூத்தாக இருக்கும்,என்று கிஞ்சிற்றும் எண்ணவில்லை,அவள்.
அவள் தானே,அவனுக்கு பயந்து சங்கடப்பட்டு,தலைமறைவாய் திரிவது.அதுவும்,அவன் தன்னை கவனித்திட கூடும் என்று அவள் துளியும் யோசிக்கவேயில்லை.
அன்றைய நிகழ்வை நூல் பிடித்துக் கொண்டு,இன்றும் திட்ட வந்திருக்கிறான் என்று நினைத்திருக்க,அவன் கேள்வியில் எதுவும் புரியாமல் விழிக்க வேண்டியதாயிற்று.
என்ன பதில் சொல்வதென்று தெரியாமல்,காயத்ரியை ஏறிட,அவளுமே தெரியாதென்பது போல் உதடு பிதுக்க,இப்போது அவள் பார்வை என்ன சொல்லவென்பது போல் அவனிடம் கேட்டது.
“நடிக்கிறீங்களா..?”,அவளின் முகபாவத்தில் பொய் இல்லை என்பது புரிந்த போதிலும்,அவனால் ஏற்க முடியாது போக,அவளிடம் காய்ந்தான் அத்தனை எரிச்சலுடன்.
“உன்ன நா பொண்ணு பாக்க வந்த மாதிரி தல குனிஞ்சு கிட்டு இருக்க..நிமிந்து பாரு என்ன..” ஒருமையில் வெடித்திருந்தான்,அவள் மீளவும் பார்வையை தாழ்த்திடவும்.
அந்த ஒருமை அழைப்பில் தோழன் அதிர்ந்து விட்டான்.தங்கையை கூட,ஒருமையில் அழைக்க மாட்டான்.அத்தனை மரியாதை இருக்கும்,அவன் அழைப்பில்.
“சிவா!”எனத் தோள் தொட்டான்,பாலா.பழைய நினைவுகளில் சுவடுகளை தோழனை அண்டியிருக்க வேண்டும் என்பது புரிந்திட,அண்மித்தவனின் முகம் பார்த்தவனோ,”அந்த வைஷ்ணவி மாதிரியே பண்றாடா..” என்றான்,பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்து துப்பி.
“மச்சி,நிதானமா பேசுடா..என்ன இருந்தாலும் பொண்ணுல..” அவனின் வார்த்தைகளில் தணிந்தவனோ,இதழ் குவித்து ஊதிக் கொண்டே அவளை நேருக்கு நேர் பார்த்து,”உங்களுக்கு என்ன ப்ரச்சன..?” என்றிருந்தான்,தன்மையாய்.
“என்ன ப்ரச்சனன்னு கேட்டா நா என்னத்தடா சொல்லுவேன்..ஒன்னும் புரிலியே..” உள்ளுக்குள் அழுதவளோ,எதுவும் இல்லையென்று தலையைசத்து வைக்க,அவளின் முகபாவங்களே கூறியது,தான் கேட்டது அவளுக்கு புரியவே இல்லையென.
அவள் விழிகளில் ஆழப் புதைந்த பார்வை சில நொடிகள் நீடிக்க,”என்னக் கண்டதும் அப்நார்மலா பிஹேவ் பண்றீங்க..? அது தான் என்ன ப்ரச்சனன்னு கேக்கறேன்..?” விளக்கிச் சொல்லவே,அவளுக்கு விடயம் புரிந்தது.
பாலாவுக்கு அப்படியொரு சிரிப்பு,ஆடவனின் முகத்தில் தோன்றிய ஆயாசத்தில்.சிரித்தால்,திட்டுவான் என்று அவன் புன்னகையை அடக்கிட,சத்தியமாய் அவன் சொன்ன காட்சிகளுடன் வர்ஷினியை பொருத்திப் பார்த்திடவே முடியாதிருந்தது,அவனால்.
“எஞ்சாமி,அப்போ நம்மள இவன் கவனிச்சானா..?” என்கின்ற அதிர்விலே அவள் பேச்சற்று பார்த்திருக்க,”ஸ்பீக்கர் அவுட்டா என்ன..?”அடிக்குரலில் அதட்டிட,எந்த கேள்விக்கு எப்படி என்ன பதில் சொல்ல என்று தெரியாத ஸ்தம்பித்த நிலை,அவளுக்கு.
“இடியட்..ஸ்பீக் அவுட்..” அவன் அதற்கும் சீற,அவளோ மறுப்பாய் தலையசைக்க,பொத்துக்கொண்டு கோபம் வந்தது.உடன் குழப்பமும்.
பேசு என்பதற்கு அவள் மறுப்பாக தலையசைத்திருந்தால்,முகபாவமும் அதற்கு ஒத்துப் போக வேண்டுமே.பதிலும் பாவமும் எதிரெதிராய்.
“என்ன நடிச்சு இம்ப்ரஸ் பண்ண ட்ரை பண்றீங்களா..?” குத்தல் கேள்வி,அது நடிப்பில்லை என்று புரிந்தும்.
“எனக்கு எந்த ப்ரச்சனயும் இல்ல சீனியர்..” முதல் கேள்விக்கு பம்மிக் கொண்டு அப்போது தான்,அவள் பதில் கூற,பாலாவின் விழிகள் அதிர்ந்து விரிந்தன.
அடுத்த நொடியே,வெடித்து வந்த சிரிப்பில் வாயைப் பொத்திக் கொண்டு ஆடவனை ஏறிட்டான்,பாலா.ஆடவனுமே,இதை சத்தியமாய்,சுத்தமாய் எதிர்பார்த்திடவில்லை.
“இப்போ தான் ஒவ்வொன்னா ப்ராசஸ் ஆகுது போல..இடையில எந்த கேள்வியும் கேட்ராத டா..” ஆடவனிடம் சிரிப்புடனே சொல்லி வைக்க,தோழனை உறுத்து விழித்தான்.
அவள் யோசித்து கிரகித்து,குழம்பி அவனையே பார்த்து, தெளிந்து பதில் சொல்லிட,அவள் காட்டிய பாவங்கள் யாவும்,அவனுள் அச்சொட்டாய் பதிந்ததை அவனே அறியவில்லை.
என்னவோ பேசட்டும் என்று விட்டுச் செல்ல முடியாதிருந்தது.அதட்ட வந்தவனே,அவளின் குழப்பத்தில் அடங்கிப் போயிருந்தான்,தன்னை அறியாமல்.
“நா இனி அப்நார்மலா எல்லாம் பிஹேவ் பண்ண மாட்டேன் சீனியர்..” அப்படியே ஒப்புக் கொண்ட,அவளின் அப்பாவித் தனத்தில் அவள் பற்றிய அவன் பிம்பங்கள் சில்லுச் சில்லாய் உடைந்து சிதற,அவனில் மெல்லிய பிறழ்வு.
என்ன பதில் சொல்வேன்,என்று விழித்து அவள் பார்த்த ஒரு நொடிப் பார்வை,அவனிதயத்தில் ஊசியாய் துளைத்து ஊடுருவியது.
ஆழி விழிகளில்,கொஞ்சமும் பொய்யில்லை.ஆராய்ந்தவனின் எண்ணம்,அதை ஏற்கவே செய்தது.
“இனிமே,என் கண் முன்னாடி வந்து சீன் போட்ட..தொலச்சி கட்டிருவேன்..” ஒற்றை விரல் நீட்டி உறுமிட,”கண்ணு முன்னாடி வர மாட்டேன் சீனியர்..”கலங்கிய கண்களுடன் அவள் சொல்ல,ஒரு கணம் அவன் பார்வையில் ஆழம் கூடிற்று.
“ஏதாச்சும் நடந்துச்சுன்னு வை,அடுத்து உங்கப்பாவும் இருப்பாரு உன்னோட பேசறப்போ..” பின்னந்தலையை கோதிக்கொண்டே அவன் விடுத்த எச்சரிக்கையில்,அவளிதயத்தில் அணுகுண்டே வெடித்தது.
அவன் அகன்றதும், தலையைப் பிடித்துக் கொண்டாள்,பெண்ணவள்.புயலடித்து,ஓய்ந்தது போலிருந்து.முகமெங்கும் வியர்த்துப் போட்டிருக்க,காயத்ரியோ இவளின் செயலில் அழுவதா சிரிப்பதா என்று புரியாத நிலையில் இருந்தாள்.
“என்னடி இதயும் நோட் பண்ணி இருக்கு இந்த வாட்ச் மெகானிக்..?” தலையைப் பிடித்துக் கொண்டே கேட்டாள்.
அவனின் கவனத்தில் வரக் கூடாது என்று,அவள் செய்தவையே அவனின் கவனத்தை தன் திருப்பி விடும் என்று எண்ணவில்லை,அவள்.
“அப்பாட்ட சொன்னா சோலி முடிஞ்சுது..” புலம்பியவளுக்கு,அவனின் “இம்ப்ரஸ் பண்ண ட்ரை பண்றீங்களா..?” என்கின்ற கேள்வி,இப்போதும் சுருக்கென்றிருந்தது.
அவன் மனதின் எண்ணத்துக்கே பயந்தவள்,இத்தகைய நேரடிக் கேள்வியில் நிலைகுழைந்து தான் போனாள்.
“பாத்தியா..? லூஸா டி நீ..? நீ பண்ணுன காரியம் எப்டி நெனக்க வச்சிருக்குன்னு பாத்தியா..? கேட்டப்போவாச்சும் உண்மய சொல்ல வேண்டியது தான..” பொடுபொடுத்தாள்,தோழி.
“ப்ச்..யாரோ தான..? விடேன்..” உண்ட கையை பார்த்திட,அது வரண்டிருந்தது.
“ஆனா,அவரு கேள்வி ஹர்ட் பண்ணுச்சு தான..?” சரியாக கேட்க,மழுப்பி விட்டாள் பதிலேதும் சொல்லாமல்.
கைகளை கழுவிக் கொண்டு வர,அங்கு சிற்றுண்டிச்சாலையை சுத்தம் செய்யும் பெண்மணி,ஆதங்கத்துடன் பார்த்திருந்தார்,இவர்களை.
“கதிரைல கால் வக்கிறது எல்லாம்,சுத்தம் பண்ண நாங்க இருக்கோமுங்குற திமிருல தான..” அவர் அருகே இருந்த பெண்மணியிடம் கடிய,பரபரவென தோழியிடம் இருந்த டிஷ்யூவை வாங்க அவனின் கால் தடத்தை அழித்து விட்டவளுக்கு,இப்போதே தலைவலிக்க ஆரம்பித்திருந்தது.
இதில்,சுத்தம் செய்யும் பெண்மணி உடைந்த குவளையை காண்பித்திட,அவன் உடைத்து சிதறடித்த குவளைக்கான பணத்தை வேறு,கவுண்டரில் செலுத்தி விட்டு வர,உரிமையாளரின் பார்வை வேறு இவள் மீது கண்டனமாய்.
“நீ எதுக்குடி காசு கட்டுன..?”தோழியவள் கடுகடுத்திட,அமைதியாய் இருக்கும் படி சைகை செய்தவளோ,வெளியே ஆங்காங்கே போடப்பட்டிருக்கும் கல் இருக்கையொன்றில் பேசாமல் சென்று அமர்ந்து கொண்டாள்.
“இந்தாடி..” ஆவி பறக்கும் டீயொன்றை தோழி கொண்டு வந்து நீட்டவே,மெலிதாய் புன்னகைத்து வாங்கியவள்,பருகிடவே சிந்தை கொஞ்சம் தெளிந்தாற் போல் இருந்தது.
“ரியாக்ட் பண்ணியாச்சு..அத யோசிச்சு சாகாம ஃப்ரீயா விடு..” அவளின் மனப்போக்கை கணித்து தோழியவள் சொல்ல,அதை ஆமோதிக்கும் மனநிலை தான்,பெண்ணவளில்.
சூழ்நிலையை சட்டென ஏற்க முடியாமல்,ஏதேதோ எதிர்வினைகளை ஆற்றியிருக்க,அதை நினைத்து மனம் தன்னையே நிந்தனை செய்யத் துவங்கி இருக்க,அவளில் மௌனம்.
“உன்னத் தான் சொல்றேன்ல..நீ ரியாக்ட் பண்ணது யாரயும் ஹர்ட் பண்ணல தான..பேசாம விடு..”
“ரொம்ப முட்டாள்தனமா பிஹேவ் பண்ண மாதிரி இருக்கு..” கூறியவளின் பார்வையோ,காலியாகியிருந்த பேபர் கப்பை ஆராய்ந்தது.
“நமக்கு என்ன வருமோ அதத் தான் ரியாக்ட் பண்ண முடியும்..அப்போ,உன்னால சட்டுன்னு ஏத்து கிட்டு அடாப்ட் ஆக முடில..அவ்ளோ தான் பேசாம விடு..”
அறிவுரை உரைத்தவளுக்கு தெரிந்தே இருந்தது,அவளாக தேறினால் அன்றி அந்த சிந்தனையில் இருந்து,விடுபடுவது சாத்தியமில்லை என்பது.
“ம்ம்..தெரியும் தான என்னப் பத்தி..ஓகே ஆகிருவேன்..” என்றவளோ,அதன் பின் அவ்வளவாய் பேசவேயில்லை.
●●●●●●●
மிடறு மிடறாய் காஃபியை விழுங்கியவாறு, மொட்டை மாடி கட்டுத் திண்டில் அமர்ந்திருந்தான்,ஆடவன்.காற்றின் தாளத்துக்கேற்ப,அடர்ந்த கருஞ்சிகையும் அங்குமிங்கும் அசைந்தாடியது.
உடன் பாலா,காலியாகியிருந்த டம்ளரை விரல்களால் சுழற்றியவாறு அவனுக்கு பக்கமாய்,எதிர்ப்புறம் திரும்பி நின்றிருந்தான்.
“அந்தப் பொண்ணு,உனக்கு ப்ரபோஸ் பண்ணி மெஸேஜ் பண்ணி இருக்கும்னு உன்னால ஏத்துக்க முடியுதா சிவா..? எனக்கு என்னமோ மிஸ் அன்டர்ஸ்டான்ட் பண்ணிகிட்டு இருக்கு மாதிரி ஒரு தாட்..”
நிஜத்திற்குமே,அவனுக்கும் அதே எண்ணம் தான்.என்னவோ,அவனின் மீது அவன் கொண்டிருந்த எண்ணங்கள் யாவற்றை,இந்த ஒரு சந்திப்பு மொத்தமாய் புரட்டிப் போட போதுமாக இருந்தது.
பேசும் அவள் விழிகள்..
அதில் மிளிர்ந்து மின்னிய அவள் உணர்வுகள்..
முகவதனம் அப்பிக் கொண்டிருந்த அப்பாவித்தனம்..
உறைந்து போய் அவள் உதிர்த்த இதழ்மொழிகள்..
ஒவ்வொன்றாய் நினைவில் வர,தன் எண்ணம் பிழையோ என்கின்ற எண்ணமே,நெஞ்சம் முழுவதும் வியாபித்து நின்றிருந்தது.
அவளின் தந்தையின் பெயர்.அவளுக்கு ஒரு தங்கை இருந்திட,அவளோ இப்போது தான் பள்ளியில் படிக்கிறாள்.”அண்ணா” என்று அழைத்துப் பேசும்,அந்த பால் முகத்தின் மீது சந்தேகம் கொண்டால்,அது அவனுக்கே அடுக்காது.
“எனக்கு என்னமோ,அந்தப் பொண்ணு மாதிரி தோணல டா..நீ உன் தாட்ட மாத்திக்கிறது பெட்டர்..வேணும்னா,அந்த பொண்ணு கிட்ட ஒரு தடவ என்ன உண்மன்னு கேட்டு பாரு..”
“ப்ச்ச்ச்..” சலித்தான்,ஆடவன்.
“எது உண்மன்னு தெரிஞ்சு எதுவும் ஆகப் போறதில்ல..இனிமே,இப்டி கிறுக்குத் தனம் பண்ணிட்டு க்ராஸ் ஆகாது அந்தப் பொண்ணு..தட்ஸ் இனாஃப்..”
அவனுக்குமே உண்மை அறிய வேண்டும் என்ற துடிப்பிருந்தும்,அது அவன் இயல்பல்ல என்கின்ற உண்மை சுட,அவ்வெண்ணத்தை அப்படியே அமிழ்த்திக் கொண்டான்,வலுக்கட்டாயமாய்.
தன்னை தொந்தரவு செய்யாமல்,அவளும் இயல்பாக இருந்தால்,அவனும் எதுவுமே சொல்லப் போவதில்லை.அவள் வழியில் குறுக்கிடப் போவதுமில்லை.அப்படி இருக்கும் பட்சத்தில்,ஏன் வீணாய் இந்த உண்மை அறியும் படலம் என்பதே,அவனுக்கு தனக்கு கூறிக் கொண்ட காரணமாய் இருந்தது.
“ம்ம்..நீ அதட்டிட்ட..நெஜமாலுமே தப்பு அந்தப் பொண்ணு மேல இருந்தாலுமே,அது பயந்த பயத்துக்கு இனி,உன்ன க்ராஸ் பண்ணாது..அப்றம் எதுக்கு வீணா தேடனுங்குற..? சரி தான்..நா உன் பாய்ண்ட அக்ஸப்ட் பண்றேன்..” என்க,தலையைசைத்துக் கொண்டான்,ஆடவன்.
இயல்பாக இரு என்று மறைமுகமாய் உணர்த்தியது அவன் தான்.அதுவே,அவனின் இயல்புகளை கொன்று தின்று மென்று விழுங்கிடும் என்று தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை.
இயல்பின்மையுடன்,அவள் இயல்பான இயல்புமே அவன் இயல்புகளை சிதறடிக்க காத்திருக்க,உயிர் கொல்லும் நேசமது,உயிர் கொள்ளும் நாள் அவன் அகராதியில்,வெகு அண்மையில்.
இரு நாட்கள் நழுவியிருந்தன.
வீட்டின் கொள்ளைப் புறம்,வலது மூலையில் சீமெண்ட் கட்டின் மேல்,அம்மி வைத்து கட்டப்பட்டிருக்க,அதற்கு பக்கமாய் வாஷ்பஸினுடன் நீர்த்திருக்கும் ஒழுங்கமைக்கப்ட்டிருத்தது.
அதற்கு பக்கத்தில் இருக்கை போட்டமர்ந்து,மருதாணி இலைகளை உருவிக் கொண்டு இருந்தார்,விசாலாட்சி.மகளை அழைத்து சத்தம் கொடுத்துப் பார்த்த போதிலும்,இன்னும் அவள் வந்தபாடில்லை.
“வர்ஷினி..” மீண்டும் சத்தமிடவே,பொடுபொடுவென்ற முகத்துடன் அவரருகே வந்தவளோ,பக்கத்தில் அமர்ந்து தானும் அதே வேலையை செய்திட,அவளிடம் ஒப்படைத்து விட்டு,அம்மியை தண்ணீர் ஊற்றிக் கழுவத் துவங்கினார்,தாயார்.
“இப்போ எதுக்கு உர்ருன்னு மொகத்த வச்சி இருக்க..?ஒடம்பெல்லாம் அனலா அடிக்குது..சூடு தாங்க முடிலன்னு தான்,மருதாணி அரக்க போறேன்..அதுக்கு உதவி பண்ண கூப்டது குத்தமா என்ன..?” அங்கலாய்ப்புடன் கேட்டவரோ,சிறிது கராம்பை கையில் அள்ளி எடுக்க,அவளோ எதுவும் பேசவில்லை.
“என்னடி..?பதில் சொல்லாம இருக்க..? முடிலன்னா வச்சிட்டு போ..” அவர் முறுக்கிக் கொள்ள,தெளியாத முகத்துடன் கேட்டதை செய்து கொடுக்க,அழைப்பு மணி அடிக்கும் சத்தம்.
தம்பி ஆனந்த் வரும் நேரம் தான்.எப்போதும் வீட்டுக்கு வந்து அழைப்பு மணியை அழுத்தி,இவளை கதவை திறக்க வைத்து இரத்த அழுத்தத்தை ஏற்றி விட்டு தான்,உள்ளே வருவான்,தம்பியவன்.
அவளோ,பேசாமல் அமர்ந்து இருக்க,தாயோ போகச் சொன்னார்.”உங்க புள்ள தான,நீங்க பாருங்க..?” கடுகடுத்து அவள் சொல்லும் போதே,உள்ளிருந்து குரல் கொடுத்தார்,சற்குணம்.
“அப்பாவோட!”முணுமுணுத்தவாறு கூடத்துக்கு நடந்தவளோ,எதற்குமென்று துப்பட்டாவை சரிபார்த்திட,யன்னலு்கு வெளியே தெரிந்தது,தம்பியின் உருவம்.
“இவனோட..” பல்லைக் கடித்தவளோ,”எரும்ம்ம்ம் மாடே,பெல் அடிச்சு எதுக்கு உயிர வாங்கற..? மெண்டல்..திரும்ப இப்டி பண்ண கொன்னுருவேன் உன்ன..” அர்ச்சனையுடன் கதவை திறந்தவள்,ஒரு கணம் திடுக்கிட்டுப் போனாள்.
அலைபேசியை துழாவியவாறு தலை தாழ்த்தியிருந்தவனோ,நிமிர்ந்து நேர்ப்பார்வையுடன் அவள் விழி நோக்க,கல்லூரி நினைவில் இரு கைகளாலும் வாயைப் பொத்திக் கொண்டு மிரண்டு விழித்து,அவனை அழைக்க கூட மறந்து உள்ளே ஓடியிருந்தாள்,தன் வாய்ப்பேச்சை நொந்தவாறு.
●●●●●●
விடியும் முன்னே விழிப்புத் தட்டியிருந்தாலும்,எழச் சோர்வாய் இருக்கவே போர்வைக்குள் சுருண்டிருந்தாள்,தர்ஷினி.
மூன்று நாட்களுக்கு முன்பு மழையில் நனைந்ததில்,மறுநாள் காய்ச்சல் கண்டிருக்க,இன்று தான் கொஞ்சமேனும் தேகசுகம் சீராகியது.
தலை கனக்க நெற்றியில் கொஞ்சமாய்,சூடு இருக்கவே தொண்டை கட்டியிருந்ததும்,முழுதாய் சரியாகவில்லை.
அடிக்கடி தும்மலும் எட்டிப் பார்த்திட,காய்ச்சல் குறைந்த போதும் எழுந்து அமர்வதே,ஒரு வித வருத்தமாய்.
விழி திறந்து தன் அலைபேசியினை ஆன் செய்ய அதில் லாக் ஸ்கீரினின் முகப்புப் படத்தில், கம்பீரமாய் நின்றிருந்தான்,அவள் கணவன்.
விழிகளில் அவன் நிழலில் இளைப்பாற,இதழ்களினோரம் புன்னகை நிறைந்தோடியது.இமைக்காமல் பார்த்திருந்தாள்;இமைகள் அசையவேயில்லை.
“என் தங்கப்புள்ள..” கொஞ்சிக் கொண்டே,அவன் நிழலுக்கு முத்தம் பதித்தவளுக்கு,நிஜம் நினைவிலாட மனம் கசந்தது.
ஒட்டாத வாழ்வு அவர்களது.அவனறைக்குள் அவளை நுழையவிட்டதே இல்லை,இதுவரை.அவளறையை அவன் எட்டிப் பார்த்திருக்கிறானா என்பதும் தெரியாது, அவளுக்கு.
ஆனால்,அவனிடம் அவள் உணர்ந்த பாதுகாப்பு உணர்வை இதுவரை யாரிடமும் உணர்ந்தது இல்லை, என்பது அவளுணர்ந்த சத்தியமான உண்மை.
ஒருவேளை,மனம் முழுக்க காதலை நிரப்பிக் கொண்டு திரிவதும் காரணமாய் இருக்கலாம்.
இயலாமையின் விளிம்பும்,அவன் அண்மையை தொலைத்த வலியும் அவளை மேலும் சோர்வடையச் செய்ய,பேசாமல் கண்களை மூடிப் படுத்து விட்டாள்.
எதிர்ப்பார்ப்பில்லா நேசங்கள் எந்தளவு அழகோ,அதே அளவு வலியை வாரித்தரும் வல்லமை கொண்டவை.
பிரிவென்று சொன்னது முதல் எத்தனையோ,தடவை உடைந்து நொருங்கி இருந்தாலும்,ஒவ்வோரு முறை அதே நினைவில் வந்திடும் போதும்,மீண்டும் உயிர்த்து உடையும் உணர்வு.
தாய் கதவை திறந்து கொண்டு உள் நுழைந்திடும் அரவம் கேட்டிட,தன்னை சமப்படுத்திக் கொண்டு அப்பொழுது தான் எழுந்தமர்வது போன்று சைகை செய்தவளின் கரமோ, போர்வையை தன்னில் இருந்து விலக்கியது.
அவளுக்கு காயச்சல் என்றிருக்க,மருமகன் விசாரித்தாரா என்று கலங்கிட,அவரை பொய் சொல்லி தேற்றுகையில் போதுமென்று இருந்தது,அவளுக்கு.
“தர்ஷினி என்ன இன்னும் எழுந்துக்காம இருக்க..?காய்ச்ச கொறஞ்சிருக்கு தான..?”நெற்றியைத் தொட்டுப் பார்த்துக் வினவிய,தாயின் குரலில் அவளுக்கு சிரிப்பு வந்தது.
முன்பென்றால் எழுந்து கொள்ளாததற்கு விழும் திட்டுக்கள் இப்போது முற்றாக தொலைந்து போயிருக்க,”என்னம்மா..வர வர ரொம்ப நல்லவரா மாறிட்டு வர்ரீங்க..இப்டி திட்டவெல்லாம் மாட்டீங்கன்னா நா அப்போவே கல்யாணம் பண்ணி இருப்பேன்…” கேலி இழையோடிய குரலில் சொன்னாள்,
அவள்.
“அது அப்டி தான் கொழுப்பு உனக்கு..சரி என்ன இது தொண்ட இப்டி கட்டி கெடக்குது..? நைட் குளிச்சியா..?”
“ச்சே..ச்சே..நைட்லாம் குளிக்கல..குளிருக்கு தொண்ட கட்டிருச்சு..”
“………..”
“நம்புங்க மா..எப்பா பாரு மொறச்சி பாத்துகிட்டு..”
“மாப்ள ஃபோன் பண்ணாரா டி..?”
“ம்ம்..ஆமாம்மா நேத்து பேசனாரு..ஏன் சொல்லலன்னு ரொம்பத் திட்டு..நா தான் சமாளிச்சேன்..எப்போ வேல முடியும்னு தெரில போல..கன்ஃபார்ம் பண்ணிட்டு சொல்றாராம்..”லாவகாமாய்,அறையில் இருந்து வெளியேறி குளியலறைக்குள் நுழைந்திட்ட பின்னரே நிம்மதிப் பெருமூச்சொன்று.
அன்று ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் புத்தகக் கண்காட்சி இருக்க,தாயவர் மறுக்க மறுக்க கிளம்பி இருந்தாள்,உடல் அசதியையும் கணக்கில் கொள்ளாது.
வீட்டில் இருந்தால்,நினைவுகளுக்குள் உழன்று தவிப்பதை விட,வெளியே செல்வது உசிதம் என்ற எண்ணம்,மனதில்.
பத்து நிமிட பேரூந்து பயணம்.அவள் வர வேண்டிய இடத்தில் இறங்கிக் கொள்ள,”தி பிக்கஸ்ட் புக் ஃபெயார்..” என நுழைவாயிலின் அருகே கட்டப்பட்டிருந்த பேனரில் பெரிதாய் எழுதப்பட்டிருந்தது.
இயற்கையும் மென்காற்றும்,அவளுக்கு புத்துணர்வை தந்து விட்டிருப்பது போன்றதோர் எண்ணம்.
நுழைவாயிலின் அருகே ஏதோ வேலைக்காக வந்திருந்த, தேவேந்திரனை கண்டவளின் இதழ்கள் புன்னகை சிந்திட எதிர்பாரா சந்திப்பில் அவன் விழிகளும் விகசித்தன.
அவள் சென்று புத்தகம் தேடும் போதே,கார்த்திகாவும் வந்து இணைந்து கொண்டாள்.நெடு நாட்களாக அவள் தேடிய புத்தகத்தின்,இரு பிரதிகளே அங்கு எஞ்சியிருக்க,ஆயிரங்கள் தாண்டிய அதன் விலையில்,அதை வாங்கும் எண்ணத்தை கை விட்டவளோ,தாயார் கேட்ட சிலதை மட்டும் எடுத்திருந்தாள்.
ஏனோ,அந்த புத்தகத்தை அவள் விழிகள்,சிறு ஏக்கத்துடன் தழுவுவது இரு விழிகளில் தப்பாமல் சிக்கியது.
“நீ பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்ணுடி..நா வந்துர்ரேன்..” பில் போட பெரும் வரிசையிருக்க,அதில் மாட்டிக் கொண்ட கார்த்திகா சொல்ல,சரியென தலையசைத்தவளோ,இருக்க இடம் கிடைக்குமென்று பேரூந்து நிறுத்தத்திற்கு நடையை கட்டினாள்.
பேரூந்து நிறுத்ததில் அமர்ந்திருந்தவளோ,விழிகளை ஏறிட,எதிர்ப்புறம் ஒரு கறுப்பு நிறக்கார்.வண்டியின் எண்ணைப் பார்த்துமே,புரிந்தது அது அவனது என்று.
விழிகள் விரிந்து, அவனின் உருவத்தை தேடி பரபரவென சுழன்றிட,வழியாமல் சிறு நீர்த்திரள் கட்டிக் கொண்டது,விழிகளினோரத்தில்.
“அப்போ இவரு ஃபாரின் போகலயா..?”
நினைக்கும் பொழுது, மனதின் ஆழத்தில் ஒரு வித ஆனந்தத்தின் தூறல்.
விழிகளின் தேடல் அவன் விம்பத்தில் முற்றுப்பெற,பார்வை சில க்ஷணங்களுக்கு அசைந்தாடவில்லை.
நெடியவனின் விம்பம்,அவளை முழுவதுமாய் அள்ளிக் கொள்ள,அலையாமல் அசையாமல் கருமணிகள் மொத்தமாய் அவன் நிஜத்தை சுவீகரித்து உயிரில் புதைத்துக் கொண்டது.
அவளுக்கு நேரேதிரே நிறுத்தப்பட்டிருந்த வண்டியின் பின்புறம் சாய்ந்து தீவிரமாய்,அவன் யாருடனோ அழைப்பில் உரையாடிக் கொண்டிருக்க,அவனை விட்டு இம்மியும் நகராது இருந்தது,அவள் பார்வை.
“பாக்கறத பாரேன்..” பக்கத்தில் நின்றிருந்த, பெண்கள் இருவர் தமக்குள் பேசிக் கொள்ள,சட்டென கலைந்தவளை அந்த வார்த்தைகள் குத்தியது.
யாரோ ஒருவனை வெறித்துப் பார்ப்பதாய்,அவர்கள் எண்ணம்.ஆனால்,அது அவள் உயிரோடு கலந்தவன் என்று அவர்கள் அறிந்திடும் சாத்தியமில்லை.அறிந்திருந்தாலும்,அவர்களின் பார்வை பரிதாபமாகத் தான் மாறியிருக்கும்.
அவன் மீதான,மொத்த உரிமையும் அவளுக்கே.ஆனால்,அவர்கள் உறவிலோ, உரிமை அவளால் கோரப்படவுமில்லை.அவனால் வழங்கப்படவுமில்லையே.
வாகனங்கள் அவ்வப்போது வந்து சென்று கொண்டிருக்க, அலைபேசயில் பேசிக் கொண்டே பாதையை கடக்க முற்பட்டவனின், செயலில் இவளுக்கு உள்ளுக்குள் திக்கென்றது.
அவளைக் கவனித்தது இல்லை,அவன் காட்டிய பாவம்.
தன் பாட்டில் பாதையை, கடக்க முயன்றவனின் முகத்தில் எரிச்சலின் ரேகைகள்,அதிகாமவே தேங்கியிருக்க,திருப்பத்தில் வந்த வாகனத்தை கவனிக்க மறந்திருந்தான்.
அவளுக்கு அது தெளிவாய்த் தெரிய,கத்திவளின் சத்தமும் அவனின் செவியை அண்டாது போக,எதையும் சிந்திக்கவில்லை அவள்.ஏன் அவளைப் பற்றிக் கூட.
பாய்ந்து நடு வீதிக்கு வந்து,அலைபேசியில் ஐக்கியமாகி இருந்தவனை தள்ளி நகர்த்தவும்,கடந்து சென்ற அந்த கார் அவளின் தோளை உரசிச் செல்லவும் சரியாய் இருந்தது.
நிகழ்வு தந்த அதிர்வில் வெடவெடத்தவளின்,விழிகளோ அவனை முழுதாய் ஆராய,விரல்கள் இன்னும் அவன் கரங்களுடன் பிணைந்தே இருந்தது.
கண்களில் கண்ணீர்.கைகளில் நடுக்கம்.கண்ணீர் வழிந்திடவா என கண்ணோரம் நின்று மிரட்டியது.
அவள் வந்திருக்காவிடின்,அதை யோசிக்கும் போதே,அவளுக்கு அப்படியொரு நடுக்கம்.அடுத்து யோசித்திடவே,முடியவில்லை.
பாதையின் ஓரம் அவளை இழுத்து வந்தவனோ,”இடியட்ட்ட்ட்ட்ட்..”அடிக்குரலில் சீறிட,வெடுக்கென கைகளை உருவியவனின் கரம்,அவளை அடிக்க ஓங்கப்பட்டது.
அது கூட,அவள் பார்வையில் விழவில்லை.முழுதாய் அவனை மட்டுமே விழிகளுக்குள் நிரப்பி,அவனுக்கு ஏதுமில்லை என மனதில் பதிய வைத்திட முயன்றாள்.விழிகள் அங்குமிங்கும் என,அவனிலேயே அசைந்திட,அவள் உறைநிலையில் அவனும் தணிந்தாக வேண்டிய நிர்ப்பந்தம்.
அறைய நீண்ட கரத்தை பின்னிழுத்தவனோ,அழுத்தமாய் முறைப்பாய் அவளை பார்த்து விட்டு,வண்டியை கிளப்பிக் கொண்டு அகன்றிட,அவன் கார்க்கதவை அடித்துச் சாற்றிய வேகம் சொன்னது,அவனுள் பொங்கும் கோபத்தை.
கார்த்திகா வந்து தோள் தொடவுமே,கலைந்து மீண்டாள்,தர்ஷினி.அவனுக்கு எதுவும் ஆகவில்லை என்கின்ற உண்மையே மனம் முழுதாய் ஏற்றபாடில்லை.
“நா..நா..வர்லனா..அ..அவரு..அவரு..”திக்கல் திணறலாய்,கலங்கிய விழிகளுடன் விம்மலுடன் மொழிந்தவளுக்கு,அவனை வண்டி மோதவிருந்த காட்சியே மீண்டும் மீண்டும் கண்களுக்கு புகுந்து ஆட்டி வைத்தது.
“ரிலாக்ஸ்ஸ்ஸ் டி..” தோள் தொட்டவளை அப்படியே அணைத்துக் கொண்டவளின்,தேகத்தில் வெளிப்படையான நடுக்கம் ஓடிட,மெதுவாய் முதுகை நீவி விட்டாள்,கார்த்திகா.
“அவருக்கு எதுவும் ஆகலல..அப்றம் என்னடி..ரிலாக்ஸ்ஸ்ஸ்ஸ்..ரிலாக்ஸ்ஸ்ஸ்ஸ்..” தோழியின் வருடலிலேயே,அவள் சற்றே இயல்பானாள்.
“ஓகே தான..” கேட்டவளுக்கு,”ம்ம்” என்ற போதும்,மனம் முழுதாய் சமப்படவில்லை என்பதே உண்மை.
வீட்டுக்கு வந்து அறைக்குள் நுழைந்து படுத்துக் கொண்டவள் தான்.காய்ச்சல் அயர்வு என்று,யாரும் தொந்தரவு செய்யவில்லை.
கண் முன்னே,அவன் தன்னை அறையைக் கையோங்கியதும் திட்டியதும் வந்து போக,சுருக்கென்று குத்திய வலியில்,அவள் உள்ளம் விம்மித் துடித்தது.
தொடரும்.
🖋️அதி..!
2026.07.06

