
குழந்தைப் பேறு கால சமயத்தில் தான் வருவதாக உமாவின் அம்மா எவ்வளவோ கெஞ்சியும் கூட உமா நிச்சயமாக மறுத்துவிட்டாள். அவள் அடி மனதில் பயம்! பயம்! கணவனை பற்றி முழுமையாக தெரிய விட்டாலும் அவள் பெண்கள் விஷயத்தில் திருந்தவில்லை என்பது அவளுக்கு கண்டிப்பாக தெரியும். ஆனால் அவளது அந்த மறுப்பை புரிந்துகொள்ளும் நிலையில் அவளது அம்மா இல்லை என்பது அவளது துர்ப்பாக்கியமே!
பிரசவத்திற்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் சமயத்தில், உமா தனது மாமனாரை பார்க்க விரும்பினாள். சாந்தா இப்பொழுது பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டாள். அதனால் இதற்கு மேல் அவளை இங்கு தமிழ்நாட்டில் இருக்க விட உமாவுக்கு மனதில்லை. எப்படியோ ரத்னாவை ஒரு வழியாக திருமணம் செய்து அனுப்பி ஆயிற்று. அடுத்தது சாந்தா. ஆனால் இங்கு சிறு பெண்ணுக்கும் திருமணம் ஒரு வழியாக அமையும் என்று உமா இப்போது நம்பவில்லை. அப்போது இருந்த மன கலக்கத்தில் அப்படி ஒரு முடிவு எடுத்து இருந்தாள். ஆனால் இந்த நான்கரை வருடங்களில் உமாவுக்கும் நிதானமும் பக்குவமும் வந்துவிட்டது.
தன் மனைவியுடன் மருமகளை காணவந்த அருணாசலத்திடம் உமா, தன் தங்கையை சாந்தாவை யாரும் அறிவதற்கு முன்னதாக ஏதேனும் ஒரு வெளிநாட்டிற்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டும் என்று பிடிவாதமாக கூற, தன் மகனைப் பற்றி எந்த புகாரும் சொல்லாமலேயே மருமகள் எடுக்கும் இந்த முடிவு அருணாசலத்திற்கு ஒருவிதத்தில் மகிழ்ச்சி தான். குருவை பற்றி அன்னபூரணிக்கு தெரிந்ததை விட அருணாசலத்திற்கு அதிகம் தெரியும். அதையும் விட அதிகம் தெரிந்தவள் உமா.
ஆனால் இவர்களையெல்லாம் ஏமாற்றும் அளவிற்கு மோசமானவன் குரு. அவன் எவற்றையெல்லாம் செய்வான் என்பது ஓரளவுக்கு மட்டுமே இவர்களுக்கு தெரியும். ஆனால் எந்த எல்லை வரை செல்வான் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.
உமாவிடம், குழந்தை பிறந்து ஓரிரு மாதங்களுக்குள் சாந்தாவை வெளிநாடு அனுப்பி படிக்க வைப்பதாகவும் அவரது பாதுகாப்புக்கு அருணாச்சலம் பொறுப்பு என்றும் சத்தியம் செய்த பிறகுதான் உமா நிம்மதியாக குழந்தை பிறப்புக்கு தன்னைத் தயார் செய்து கொண்டாள். அருணாசலத்திற்கு உள்ளூர வருத்தம்தான். தன் மகனைப் பற்றி தெரிந்தும் இப்படி ஒரு திருமணத்தை செய்வதற்கு தான் ஒப்புக் கொண்டிருக்க கூடாது. மேலும் இப்பொழுது உமாவின் குடும்பத்தில் உள்ள எல்லா பெண்களையும் தூக்கி சுமக்க வேண்டிய நிலையில் தள்ளப்பட்டு விட்டார் அருணாச்சலம். அவரது நியாய புத்தி அவருக்கு நல்லதை எடுத்துச் சொன்னாலும் இத்தனை வருட அரசியல் வாழ்க்கை அவருக்கு மற்ற கெட்ட குணங்களையும் ஏற்றி வைத்திருந்தது. மருமகளின் இந்தநிலையில் அவளை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஒப்புக்கொண்டார்.
மேலும் அவர் கொடுத்த சத்தியத்தை மீறுவதற்கு அன்னபூரணி என்றுமே ஒப்புக் கொள்ள மாட்டாள். அதனால் குழந்தை பிறந்த பிறகு மாறுவது என்பது முடியாது. எத்தனை உயரத்திற்கு தன் கணவர் வந்துவிட்ட பிறகும் அன்னபூரணி மாறவே இல்லை.
உமாவுக்கு ஆண் குழந்தை பிறக்க, அருணாசலத்திற்கு இந்த குழந்தையையாவது சரியாக வளர்க்க வேண்டும். தன் மகனிடம் நிகழ்ந்த தவறுகள் இந்த குழந்தையிடம் கூடாது என்று நினைத்துக் கொண்டார்.
குழந்தை பிறந்த இரண்டொரு நாட்களில் வீடு வந்து சேர்ந்த உமாவிடம் கூட துடித்தான் குரு. ஆனால் அன்னபூரணியின் கண்காணிப்பின் கீழ் இருந்த உமாவை குருவால் நெருங்க கூட முடியவில்லை. இரண்டு மாதங்கள் கடுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் அன்னபூரணி.குழந்தையை கொஞ்ச அவனுக்கு அவ்வளவு பிரியம் இல்லை.தன் மகனைப் பற்றி தெரிந்ததனாலேயே அதிக எச்சரிக்கையுடன் நடந்து கொண்டார் அன்னம் .
அருணாச்சலம் பழையபடி சென்னைக்கும் பூங்குவளைக்குமாக சென்று வந்துகொண்டிருந்தார். சிவனும் எப்போதும் போல் அவருடனே.இதற்கு நடுவே சொன்னபடியே சாந்தா விற்கு கனடாவில் படிப்பதற்கு அருணாச்சலம் ஏற்பாடு செய்து விட, இத்தனை சிறு பெண்ணை தனியாக அனுப்ப வேண்டாம் என்று பாறுவுக்கும் அங்கே செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தார்.
ஆனால் எந்த வித காரணத்தைக் கொண்டும் சிவனை அங்கு அனுப்புவதற்கு அவருக்கு மனதில்லை. அரசியல் வாழ்வில் சிவன் கிட்டத்தட்ட அருணாச்சலத்தின் பாதி ஆகிவிட்டார்.
‘மகளின் வாழ்வுதான் முக்கியம். அவளுக்கு இவ்வளவு நல்ல படிப்பும் எதிர்காலமும் அமைய இருக்கும் போது அதை தடுக்க கூடாது என்பதற்காக சிவனும் இதற்கெல்லாம் ஒப்புக்கொண்டு விட்டார். கணவரை சொல்லை மீறி பழக்கப்படாத அவர் மனைவி தனது மகளுடன் கனடாவிற்கு பயணம் செய்ய சிவனுக்கு முதன் முதலில் தனிமை என்றால் என்ன என்பது புரிந்தது.
தனிமை தாங்க முடியாமல் கட்சி வேலைகளில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு விட்டார் அவர்.
திருச்சியில் இருக்கும் ராகாயியை இப்பொழுது சென்னைக்கு கூட்டி வந்து, அவளுக்கு தொழிலை இன்னும் கொஞ்சம் விரிவு செய்து கொடுத்து,
அவளது மகளையும் நல்ல பள்ளியில் சேர்த்து விட்டார் சிவன். ஒருவேளை அந்தப் பெண் குழந்தை குருவின் குழந்தையாக இருக்குமோ என்பது அவருக்கு சந்தேகம். ஆனால் அதையெல்லாம் வாய்விட்டு சொல்ல கூடிய தைரியம் அவருக்கு இல்லை.
ராகாயியும் சென்னை வந்த பிறகு கட்சி பணியில் அதிகம் ஈடுபட்டாள். கட்சி சம்மந்தமான விஷயங்களுக்கு உணவு விநியோகம் செய்யும் காண்ட்ராக்ட் அவளது. சிவனின் ஏற்பாடு. அவளுக்கும் நேர்மையாக பிழைக்க வழி கிடைத்த சந்தோஷம். வீரனும் அவளும் அடிக்கடி பார்த்துக்கொள்கிறார்கள். வீரனுக்கு அவள் வாழ்க்கை சீரடைந்த திருப்தி.
பூங்குவலையில் இரண்டு மாதங்கள் எப்படியோ தாக்குபிடித்த குருவால் அதற்குமேல் முடியாது என்று தோன்றிவிட்டது. அன்னபூரணி கோயிலுக்கு சென்றிருக்கும் நேரத்தில் தன் மனைவியை வற்புறுத்த தொடங்கினான். ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாமல் உமாவும் ஒப்புக்கொண்டாள்.
ஆனால் தாய்ப்பால் கொடுக்கும் அவளிடம் வீசும் பால் வாசனையும், இன்னும் முழுமையாக வடிந்து விடாத அவளது அவளது வயிறும், அதிலிருந்த கோடுகளும், அவனுக்கு சந்தோஷத்தை தரவில்லை. அவளைப் பார்க்கும் போது ஒருவித அருவருப்பு அவனுக்கு வந்தது.
அப்படியும் பொறுத்துக்கொண்டு மேலே முயன்றவனுக்கோ குழந்தை பிறப்பதற்கு முன் அவளிடம் கிடைக்கும் சுகம் இதுவல்ல என்று தோன்ற, உன் *****முன்னே மாதிரி இல்லடி என்றுவிட்டு அதற்கு மேல் அவளுடன் கூட விருப்பமில்லாமல், எழுந்து சென்று விட்டான். ஆனால் அவன் அடி வரை அந்த அருவருப்பும் ஏமாற்றமும் தங்கிவிட இதற்கு மேல் இவள் வேலைக்கு ஆக மாட்டாள் என்ற முடிவுக்கு வந்துவிட்டான்.
‘இப்ப குழந்தை எதுக்கு டார்லிங் என்று உமா கேட்ட வாசகம் திரும்பத் திரும்ப அவன் காதுகளில் எதிரொலித்தது.’
சற்று நேரம் புகை பிடித்தவன் ஏதோ யோசித்தவனாக தோப்பு வீட்டுக்கு சென்றுவிட்டான்.
உமாவுக்கு அவன் மனதை முழுமையாக புரிந்து விட்டதில் ஓய்ந்து போனாள். இதற்காகத்தான் யோசித்து அவள் இத்தனை காலமாக குழந்தை வேண்டாம் என்று இருந்தது. அவளுக்கு தெளிவாக தெரிந்தது இனி தன் எதிர்காலம் முழுமையும் இந்த குழந்தையுடன் மட்டும்தான் என்று. அவளை விட்டுச் சென்ற குரு இனி அவளை நாடி வரப்போவதில்லை. அவனுக்கு தேவை கட்டுடல் விட்டிராத புது மலர்கள்.
உமாவின் கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. இதை உணர்ந்து கொண்டதோ என்னமோ உமாவின் குழந்தை ஸ்கந்தன் வீறிட்டு அழத் தொடங்கிவிட்டான். குழந்தை அழுவதை கவனித்த உமா இனி இந்த வாழ்க்கை இப்படித்தான் செல்ல போகிறது என்பதில் அழுது என்ன பயன்? எப்போதுமே நான் அழ மாட்டேன் என்று தீர்மானித்துக் கொண்டாள்.
ஆம், அருணாச்சலம் எதிர்பார்த்த அரசியல் வாரிசு ‘ஸ்கந்தன்’தான். ஆனால்… சாதுர்யா ரங்கன் வெளிநாடு சென்றதிலிருந்து கூட்டு பறவையாகி போனாள். அவளுக்கும் இந்த உலகத்தில் எதுவுமே ரசிக்கவில்லை. பசலை நோய் கொண்டாள். நிஜமாகவே உடல் இளைத்து அவளது வளையல்கள் கழன்று வர ஆரம்பித்துவிட்டது. கண்களில் எப்போதும் ஒரு சோகம். முன்பெல்லாம் நிறைய சிரித்துக் கொண்டிருந்த பேத்தி இப்போதெல்லாம் சிரிப்பதை நிறுத்தி விட்டாள். சரியாக சாப்பாட்டில் கவனம் இல்லை. பரீட்சை நேரத்தில் கூட புத்தகங் களை எடுப்பதில்லை. பெண்ணுக்கோ புத்தகங்களை தொட்டாலே ரங்கன் தனக்கு பாடங்கள் சொல்லிக் கொடுத்தது ஞாபகம் வந்து படுத்தியது. அவனது முத்தத்திற்காக அவள் மனம் ஏங்கியது. அவளது மனம் புரிந்தவனாக ரங்கனும் தினமும் வீடியோ காலில் அழைத்து பேசி விடுகிறான்.
ஆனாலும் பெண்ணும் மனதில் வைக்காமல் அப்படியே குழப்பிக் கொண்டு இருக்கிறாள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த லட்சுமி அம்மாளுக்கும் தாமோதரனுக்கும் பேத்தியை எப்படி தேற்றுவது என்பதே தெரியவில்லை. இன்னும் இவர்கள் இருவரும் நெற்றியில் குங்குமம் வைத்து திருமணம் செய்து கொண்டதை பற்றி பாட்டி தாத்தாவிற்கு தெரியாது.
ரங்கனும் சாதுர்யாவும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் என்பது வரைதான் அவர்களுக்கு தெரியும். இதைப்பற்றி ரேணுகாவிடமும் அவள் கணவரிடமும் தாமு மேம்போக்காக சொல்லிவிட அவர்கள் இருவருக்கும் ரங்கன் -சாதுர்யா திருமணம் பற்றி எந்த ஆட்சேபனையும் இல்லை. ரங்கன் படிப்பு முடியட்டும். இந்த பெண்ணும் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு முடித்தாக வேண்டும்.
அதற்கெல்லாம் காலம் இருப்பதால் இப்பொழுது இதைப் பற்றி மனதை குழப்பிக் கொள்ள வேண்டாம் வெங்கடேசனிடமும் பேச வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தார்கள்.
ஆனால் லட்சுமி அம்மாளுக்கும் ஜோசியர் சொன்ன விஷயங்கள் உள்ளூர ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது. இதைப்பற்றி இன்னும் அவர் கணவரிடம் சொல்லவில்லை. சொன்னால் வீணாக அவருக்கும் தனது மன வருத்தம் தொற்றிக்கொள்ளும் என்ற பயம் தான்.
ஆனால் ரங்கன் தான் தனது பேத்தியின் கணவனாக போகிறான் என்பது பற்றி பேச்சு வந்தபிறகு ஓரளவுக்கு லக்ஷ்மி அம்மாளுக்கு மன ஆறுதல்.
படிக்க அமெரிக்கா சென்றிருக்கும் ரங்கனுக்கு, தனக்கு திருமணம் ஆகிவிட்டது.இனி மனைவி தன் பொறுப்பு. அவளை சந்தோஷமாக வைத்துக்கொள்ள தான் அதிகம் மெனக்கெட்டாக வேணும் என்ற எண்ணத்தில் அதிகமாக உழைத்தான். பகல் நேரங்களில் படித்துக்கொண்டு மாலை நேரத்தில் ஏதோ ஒரு இடத்தில் வேலை செய்து தன் மனைவிக்கு அந்த பணத்தை அனுப்பி வைத்தான். மனையாளின் செலவுகள் அவனுடையது என்று அவன் யோசனை.மனைவி என்றுதான் அவன் நம்புகிறான். அவளுக்கு செய்வதற்கு தனக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது என்பது அவன் எண்ணம். இவையெல்லாம் இவர்கள் இருவரும் மட்டுமே அறிந்த ரகசியம். ரங்கனின் இந்த சைகை வேறு பெண்ணின் மனதில் ஆழமாய் புதைந்தது.
அவளைப் பிரிந்து வந்து விட்டோம் என்ற எண்ணம் ரங்கனுக்கு இல்லை. அவளை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது மட்டும் தான் அவனுக்கு.கணவனுக்குமாக சேர்த்து வருத்தப்பட்டது மனைவியின் மனம்.
இதுபற்றியெல்லாம் வெங்கடேசன் – மாலதி இருவருக்கும் எதுவுமே தெரியாது. தெரிந்தால் என்னவாகுமோ?உமா குழந்தை பெற்று இதோ இரண்டு வருஷங்கள் நிமிடமாய் ஓடி விட்டது.
திடீரென ரத்னா தன் அக்காவின் மகவை பார்க்க தமிழ்நாடு செல்வேன் என அடம்பிடிக்க, சங்கரன் மறுத்துவிட்டான். அவளுக்கும் புரிகிறது. ஆனால், பிறந்த வீட்டு தொடர்பே இன்றி வேறு ஊரில் கணவனின் துணை மட்டும் கொண்டு, அவளுக்கு கண்ணீர் வந்தது.
எல்லாவற்றிற்கும் விட்டு கொடுக்கும் கணவனின் கடுமை அவளை வாட்டியது.நாளும் தள்ளிப்போக இன்னும் ஆகவில்லையே எனும் எரிச்சல் வேறு. ஏற்கனவே அவளுக்கு மாதா மாதம் ஆகாது. இரண்டு மாதம் இல்லை நாற்பத்தைந்து நாட்கள் என படுத்தும். அதனாலேயே அவளால் சரியாக யோசிக்க முடியவில்லை.
முன்பு போல அம்மாவுடனும் தங்கச்சியுடனும் பேசவும் முடிவதில்லை. கனடா போன பிறகு நேர வித்தியாசம். தவித்து போனாள் ரத்னா. இப்போதெல்லாம் சங்கரனுடன் சண்டை பிடிக்கிறாள்.
தனியாய் உணர்ந்தாள் அவள். நிகழ போவது தெரிந்தால் அவள் நிலை?
காலங்களின் ஓட்டத்தில் உமாவின் மகன் ஸ்கந்தனுக்கு இப்போது முழுதாக ஐந்து வயது ஆகிவிட்டது. அவனுக்கு அம்மாவின் மீது அளவு கடந்த பிரியம். அதைப் போன்று தந்தையை கண்டால் ஏனோ அவனுக்கு அந்த வயதிலேயே பிடிக்காமல் போய்விட்டது. குருவுக்கும் குழந்தை மீதோ மனைவி மீதோ எப்போதுமே பெரிய அளவில் பிடித்தம் எதுவும் இருப்பதில்லை. ஊரில் சொல்லிக் கொள்வதற்காக ஒரு குழந்தை பெற்று ஆயிற்று.
அருணாச்சலம் அன்னபூரணி இருவருக்கும் தன் பேரன் மேல் பிரியம் அதிகம். அதிலும் தனக்குப் பிறகு அரசியல் வாரிசாக அருணாச்சலம் தனது பேரனை தான் நினைத்து இருப்பதால் அவனுக்கு சலுகைகள் அதிகம் கொடுத்துக்கொண்டிருந்தார்.
அவர் எவ்வளவுதான் சலுகைகள் கொடுத்தாலும் வீட்டில் இருக்கும் இரு பெண்களும் குழந்தைக்கு அப்போதே நல்லது கெட்டவைகளை சொல்லிக் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். ஐந்து வயது சிறுவனுக்கு வயதுக்கு மீறிய மனப்பக்குவம் உண்டு. தவறு நடந்தால் அதை பொறுத்துக் கொள்ளும் சக்தி அந்த வயதிலேயே அவன் மனதிற்கு இல்லை.
தவறுகளுக்கு தண்டனை ஒன்று தான் சரியான தீர்வு என்று ஆழமாக நம்பினான் சிறுவன். இப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்ட சிறுவனுக்கும், இதற்கு அப்படியே எதிராக குணங்களைக் கொண்ட அவன் தந்தைக்கும் ஒத்துப் போவது என்பது கனவிலும் நிகழப் போவதில்லை.
ஒருவேளை ‘இரணியகசிபுவுக்கு பிறந்த பிரகலாதன் இவனோ’ என்ற எண்ணம் அடிக்கடி உமாவிற்கு வருவதுண்டு. அருணாச்சலத்திற்கும் ஸ்கந்தன் பிறந்தபிறகு அரசியல் வாழ்வில் பெரும் ஏற்றம். மத்திய அமைச்சரவையிலும் பங்கு வகிக்கும் அவர் தனது கட்சியில் இருந்து மூவரை மத்திய அமைச்சர்கள் ஆக்கியிருக்கிறார். கை சுத்தமானவர்,நேர்மையானவர் என்ற பெயரை சம்பாதித்திருக்கும் அருணாசலத்திற்கு வரும் தேர்தலில் ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கான வாய்ப்புகள் இருக்கலாம்.
அதற்காகவே குரு இப்போதெல்லாம் செய்யும் தவறுகள் வெளியுலகிற்கு தெரியாத அளவிற்கு செய்கிறான்.
குழந்தையை கைதேர்ந்த நிபுணனாகவும் சிறந்த மனிதனாகவும் வளர்ப்பதற்காக வீட்டிலுள்ள மூவரும் அயராது பாடு படுகிறார்கள். குருவின் விஷயத்தில் விட்ட கோட்டையை பிடிக்க பேரன்தான் துருப்புச் சீட்டு.
சிவனின் மகள் சாந்தா இப்போது கனடாவில் முழுமையாக தன்னை பொருத்திக் கொண்டு விட்டாள். தனது அம்மாவை திரும்பவும் இந்தியா அனுப்பி வைக்கும் எண்ணம் அவளுக்கு சற்றும் இல்லை. தனது வாழ் நாள் மட்டுமல்ல இனி தனது அம்மாவின் வாழ்நாளும் இறுதி வரை இந்து தான் என்று அவள் முடிவு எடுத்து விட்டாள். சிவனுக்கு இதற்கெல்லாம் என்ன சொல்வது என்பது தெரியவில்லை. சிவன் ஆறு மாதத்திற்கு ஒருமுறை தன் மனைவி மகளுடன் இருந்துவிட்டு திரும்பவும் வந்துவிடுகிறார்.
அவர் இல்லாத சமயங்களில் அருணாசலத்திற்கு கை உடைந்தது போல கஷ்டம் தான் ஆனாலும் சிவன் எத்தனை காலம் குடும்பத்தை விட்டு இருக்க முடியும்?
மருமகள் சொன்ன உண்மை புரிந்த காரணத்தினாலேயே அருணாச்சலம் வாயை திறக்க முடியவில்லை. சிவனும் கனடாவில் பத்து நாட்களுக்கு மேல் தங்குவதில்லை.
அவரின் மன குற்ற உணர்ச்சி கூட காரணமாக இருக்கலாம். சாந்தாவிற்கு தனது தந்தை செய்த காரியம் எவ்வளவு ஆழமானது என அந்த வயதில் புரியவில்லை.ஆனால், வெளியுலகு புரிந்து, அந்நிய தேசத்தில் தனது எதிர்காலத்தை
ஊன்றியவளுக்கு விஷயத்தின் வீரியம் எவ்வளவு என்று தெரிந்ததனாலேயே அவள் மனதிலும் சிவன் மீது மரியாதை குறைந்துவிட்டது.
அக்காவின் வாழ்வு இன்று கேள்வி குறியாக இருப்பதற்கு காரணம் தன் தந்தையே என்ற எண்ணம் அவளை அப்பாவிடமிருந்து தூர நிறுத்தியது. சிவனுக்கு இதெல்லாம் புரிந்திருந்தாலும் இதற்கு மேல் அவர் செய்வதற்கு ஒன்றுமே இல்லை. சாந்தா பொறியியல் முடித்துவிட்டு இப்பொழுது மேல் படிப்பிற்கு அமெரிக்கா செல்வது பற்றி யோசித்துக் கொண்டு இருக்கிறாள். கனடாவிலிருந்து அமெரிக்கா செல்வது ஒன்றும் பெரிய கஷ்டமில்லை. இன்னொருபுறம் அவளுக்கு கனடாவை பிடித்துதான் இருக்கிறது. இங்கேயே படிக்கலாமா என்றும் யோசிக்கிறாள்.
இதுபோன்ற மேல்நாட்டு படிப்பெல்லாம் தனக்கு கிடைக்கக்கூடும் என்று அவள் கனவிலும் நினைத்தது இல்லை. தன்னையும் திருமணம் செய்து அனுப்பி வைக்காமல் உமா அக்கா தன்னை இவ்வளவு தூரம் படிக்க வைத்து இருப்பது சாந்தாவுக்கு அவள்மீது பன்மடங்கு மரியாதையை உண்டுபண்ணியது. உமா மெழுகாய் தன்னை உருக்கி தன்னையும் ரத்னா அக்காவையும் வார்த்திருக்கிறாள் என்று ஆத்மார்த்தமாய் உணர்ந்தாள் சாந்தா.
பெற்றவர்கள் செய்ய வேண்டியவற்றை உடன்பிறப்பு செய்யும் பொழுது அவர்கள் நம்மை பெற்றவர்களை விட ஒரு படி உயர்ந்து தெரிகிறார்கள்.
அக்காவின் கணவன் எவ்வளவு மோசமானவன், அவனிடமிருந்து அக்கா தன்னையும் ரத்னா அக்காவையும் எப்படி காத்திருக்கிறாள் என்பதெல்லாம் அவளுக்கு நன்றி விசுவாசத்தை கூட்டியது. தாங்கள் அம்மாவுக்கும் தனது அக்காவின் முடிவுகள் பற்றி மெதுவாக புரிய வைக்க முயன்று கொண்டிருந்தாள்.
உமா பணம் அதிகம் வந்துவிட்டதால் இவ்வாறெல்லாம் நடந்து கொள்ளவில்லை. அப்படி நடந்து கொள்வதாக இருந்திருந்தால் தனது புகுந்த வீட்டினரிடம் சொல்லி நமக்கு இவ்வளவு அகலமான வழியை ஏற்படுத்திக் கொடுத்திருக்க மாட்டாள் என்று மெதுமெதுவே சொல்ல சொல்ல பாறு குட்டிக்கும் உமாவின் மீதிருந்த வருத்தங்கள் குறையத்தான் தொடங்கியிருக்கிறது.
அடுத்து வந்த உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு என்று தொகுதிகள் ஒதுக்கப்பட உமாவை களமிறக்கிய அருணாச்சலம், சென்னையில் ராக்காயியையும் தேர்தலில் நிற்க வைத்தார்.
மகனால் நிரப்ப முடியாத இடத்தை மருமகள் மற்றும் பேரனால் நிரப்ப முடிவு செய்திருந்தார் அருணாச்சலம். இதில் தவறு ஏதும் இருப்பதாக அவருக்குத் தோன்றவில்லை.
ஆனால் இன்னொருபுறம் குருவின் மனதில் வண்ணம் அதிகரித்துக்கொண்டே சென்றது. மனைவியின் மீது அவனுக்கு பொறாமை. ஏற்கனவே அவள் உடம்பு மீது இருந்த பிடிப்பு நீங்கிவிட்டிருக்க, இப்போது அவள் மீதி இருப்பது வெறும் காழ்புணர்ச்சி மட்டுமே!
மனைவி தன்னை விட முதல் நிலையில் இருப்பது ஒரு ஆணாக அவனுக்கு அடி என்று நினைத்தது ஒரு புறம் என்றால் தன்னை தன் அப்பா ஓரம் கட்டுவதாக அவனுக்கு புரியவாரம்பிக்க அடுத்து தான் காய்களை எப்படி நகர்த்தி கட்சியை தானதாக்கி கொள்வது என்று அவன் புத்தி யோசிக்க ஆரம்பித்தது.தீர்வுதான் தெளிவாக தெரியவில்லை.
ஆனால், அவன் செய்யும் மூன்றாம் ரக வேலைகள் தடையின்றி நடக்க கொஞ்ச காலம் அமைதியாய் இருக்க முடிவு செய்து கொண்டான். அடியாட்களை கொண்டு வேலை சாதிக்க பழகி இருந்ததால் வளரும் மாஃபியா தலைவன் அவன். சிவனின் கண்காணிப்புக்கெல்லாம் அவன் சிக்கவில்லை.
கல்யாணம் முடிந்து ஏழு வருஷங்கள் ஆகியும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்னும் தவிப்பு சங்கரன் ரத்னா தம்பதிக்கு உண்டு. ரத்னாவுக்கு இப்போது எரிச்சலும் கோவமும் அதிகமாகிவிட்டது. காண்பிக்க இடம் இன்றி சங்கரனை உலுக்கி எடுக்கிறாள்.
அவனுக்கும் புரிகிறது அவள் நிலை. என்ன செய்ய என்று புரியாமல் அமைதி காக்கிறான். திலகாவோ வேறு திருமண உறவுக்கு அவனை வற்புறுத்தி பார்க்கிறாள். அது வேறு ரத்னாவுக்கு மன உளைச்சலை அதிகப்படுத்தி விட்டது.குழந்தை பிறக்க வேண்டுமானால் தவிப்பு இருந்தாலும் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டுமல்லவா? இதுதான் அவர்கள் இருவருக்கும் புரியவில்லை.
சங்கரனுமே அம்மாவின் பேச்சுகளில் மிகவும் சோர்ந்து போனான். அவனால் மனைவிக்கும் அம்மாவுக்கும் நடுவில் பந்தாக உருள முடியவில்லை. அவனுக்கு மன உளைச்சல் தான். ரத்னாவுக்கோ எங்காவது தன்னையும் சங்கரனின் பிரித்து விடுவார்களோ என்ற பயம், அதை யாரிடம் காண்பிப்பது என்று தெரியாமல் அவனிடமே சண்டை.
இருவருக்கும் அமைதியாக இருக்க உதவி செய்யும் இடம் வேலை செய்யும் இடமே!
இருவரும் சந்திக்கும் நேரங்களை குறைத்து கொண்டு இரவில் மட்டுமே வீட்டில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது என்ற நிலைமையில் வந்து நின்றது அவர்களது பந்தம்.இருவருக்குமே இந்த மையப் புள்ளியில் சலிப்பு தட்டியது. காதல் எனும் உணர்வில் தான் இருவரும் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அங்கே தேவைப்படுவது புரிதல். அது வாய்த்து விட்டால் குழந்தை பிறக்கும் போது பிறக்கட்டும் என்று பக்குவம் வந்து விடுமே!
சாதுர்யா அடிக்கடி தன் பெற்றோரிடம் பேசினாலும் கூட முன்பு இருந்த அளவிற்கு அவளால் ஈடுபாட்டுடன் அவர்களுடன் பேச முடியவில்லை. எங்காவது தனக்கும் ரங்கனுக்கும் இடையேயான காதலைப் பற்றி பேசி விடுவோமோ என்ற பயம் அவளுக்குள். மாலதியின் எண்ணம் அவளுக்கு தெரியும். இரண்டு மூன்று முறை மாலதியும் மகளை திருநெல்வேலி சென்று விட்டு வருமாறு வற்புறுத்தி பார்த்தும் கூட பெண் அசைந்து கொடுத்தாளில்லை.
அங்கிருந்துகொண்டு எதுவும் செய்ய முடியாமல் மாலதி தன் மாமியாரிடம் சொல்ல, அனுப்பி வைப்பதாக லக்ஷ்மி அம்மாளும் ஒப்புக்கொண்டார். ஆனால் பெண்ணோ ஏதோ ஒரு காரணம் காட்டி போவதை தவிர்த்துக் கொண்டே இருந்தாள். இவளது மதிப்பெண்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டே வந்த ரங்கனும் அவளை வெகுவாக திட்டிவிட்டான்.
‘ இப்படி எல்லாம் மார்க் வாங்குவது உனக்கு இது படிப்புல எண்ணம் குறைஞ்சுட போகுதுன்னு சொல்லிட்டுத்தான் நான் விலகி விலகி போனேன். இங்க படிச்சுகிட்டே என்னோட பொண்டாட்டி செலவெல்லாம் நானு பார்த்துக்கணும்னு வேலைக்குப் போயி உனக்கு பணம் அனுப்புறேன்.
நீ… பொறுப்பில்லாம இப்படி இருக்க’ என்று.அவன் சொல்வதில் இருக்கும் உண்மை புரிந்ததாலேயே சாதுர்யா அமைதியாக இருந்தாள்.
அவனே தொடர்ந்தான்… நா ஆசை பட்டது இந்த சாதுர்யாவ இல்ல. நிமிர்ந்து பாத்து பேசும், கல்யாணம் இல்லன்னாலும் அப்பா மாதிரி சிவில் சர்வீஸ் எழுதி கலெக்டர் ஆகிடுவேன்னு சொன்னவளை தான்.அதுக்கு வழிய பாரு. நா அங்கே வர வரைக்கும் உன்கிட்ட பேச மாட்டேன். உன்னியல்பை தொலைக்க நா விரும்பல. பை என்று வைத்து விட்டான்.
அலைபேசியை வெகுநேரம் வெறித்து பார்த்தவளுக்கு புரிந்து போயிற்று அவன் மிகவும் தீர்மானமாக தான் சொல்கிறான் என்று. உள்ளூர அழுகை வந்தபோதும் அடக்கி கொண்டவளாக, இனியாவது நன்றாக
படிப்போம் என்று முடிவு செய்து கொண்டவளுக்கு அவள் அத்தான் இனி நினைவுகளிலிருந்து தன்னை மீட்டு எடுத்துக் கொள்வது அவ்வளவு சுலபமாக இல்லை. முதல் வருடம் முழுவதும் மார்க்குகள் வெகுவாக குறைந்துவிட்ட நிலையில், இரண்டாம் வருடத்தில் முதல் செமஸ்டர் முடிந்துவிட்டது. அடுத்த செமஸ்டரிலும் விட்டுவிட்டால் கண்டிப்பாக மூன்று வருட மதிப்பெண்களை கூட்டும்போது இரண்டாம் வகுப்பு தான் கிடைக்கும்.
எப்படியோ தன்னை கொஞ்சம் கொஞ்சமாக சுதாரித்து படிப்பிற்குள் தன்னை நுழைத்துக் கொண்டாள். தாமோதரன் மூலம் ரங்கன் அவளைப்பற்றி கேட்டுத் தெரிந்து கொள்கிறான். இருவழி பாட்டி தாத்தா அத்தை மாமா இன்று எல்லோருடனும் சந்தோசமாக வாரம் ஒருமுறை பேசும் ரங்கன் அவளிடம் மற்றும் பேசுவதை அறவே நிறுத்திவிட்டான்.
அவளை நிலை அவனுக்கு புரியாமல் இல்லை. இது நிறைவேறுமா, நிறைவேறாதா என்ற தெரியாமலேயே பல வருடங்களாக மனதில் அவள் மீதான காதலை பொத்தி பொத்தி வைத்திருந்தவன் அவன். அவனுக்கு இல்லாத மன வலியா? அவள் சொல்வதற்கெல்லாம் அசைந்து கொடுத்தது தவறு என்பது ரங்கனின் இப்போதைய எண்ணம். படிக்க வேண்டிய வயதில் இதெல்லாம் தேவையா என்று கூட அவனுக்கு சலிப்பு வந்துவிட்டது. ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்காது போல இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் கழித்து தன் மனதில் இருப்பதைச் சொல்லி இருக்கலாம். இப்போதைய சொன்னதுதான் அவளது இந்த மாற்றத்திற்கு பெரிய காரணமாகிப் போயிற்று என்ற எண்ணம் அவனைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி கேள்விகள் கேட்டது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
+1
+1

