Loading

சமுத்ரா அங்கு வந்ததையோ திரும்பி சென்றதையோ அறியாத ஷாத்விக் பவித்ராவின் பேச்சில் எரிச்சலடைந்திருந்தான்.

“இங்க பாரு பவித்ரா. என் அமைதிக்கும் ஒரு அர்த்தம் இருக்கு. என் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு. நீ பேசுறதெல்லாம் அமைதியாக கேட்டுட்டு இருக்கிறதால நீ சொல்லுறதெல்லாம் சரின்னு அர்த்தம் இல்லை. நீ ஏதோ புரியாமல் பேசுறனு தான் நீ இவ்வளவு பேசியும் அமைதியாக இருக்கேன். இன்னைக்கு பகல் அவ பேசுனதுலயே புரிஞ்சிருக்கனும். சில கருத்து வேறுபாட்டால தான் நாங்க இரண்டு பேரும் விலகி இருக்கோம். மத்தபடி இன்னொரு வாழ்க்கையை தேடுற ஐடியாவிலேயே நானும் இல்லை. என்னை பேக் பண்ணி அனுப்புற ஐடியாவுல அவளும் இல்லைனு இன்னைக்கு அவ பேசுனதுலயே உனக்கு புரிஞ்சிருக்கும். அதனால உன் மனசுல உள்ள எல்லா எண்ணத்தையும் தூக்கி தூரப்போட்டுட்டு ஊர் போய் சேருற வழியை பாரு.” என்று கூறியவன் அதற்கு மேல் அங்கு நிற்காது சென்றுவிட்டான்.

பவித்ராவோ ஷாத்விக் வார்த்தைகளில் சற்றும் வருந்தியதாய் தெரியவில்லை.

“நீ இப்படி பேசிட்டா நான் அமைதியாக போயிடுவேனா மாமா? உனக்காக தான் நான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன். நீயே உன் வாயால் நான் தான் வேணும்னு சொல்லுற வரைக்கும் நான் ஓயமாட்டேன்.” என்று உள்ளுக்குள் சபதம் எடுத்துக் கொண்டவள் உள்ளே சென்றாள்.

தன் அறைக்கு திரும்பிய சமுத்ராவுக்கு எரிச்சலும் கோபமும் ஆற்றாமையுடன் ஏமாற்றமும் ஏகத்துக்கு போட்டிபோட்டது.

வேண்டாமென்று அவள் முடிவு செய்திருந்தாலும் பவித்ராவின் வார்த்தைகள் அவளை மனதளவில் பெரிதாக காயப்படுத்தியிருந்தது.

எடுக்கும் முடிவுகளில் எதிரிலிருப்பவர் கூட அஞ்சி நடுங்கும் வகையில் உறுதியாய் இருப்பவள் தளர்ந்து தடுமாறுவது ஷாத்விக்கின் விஷயத்தில் மட்டுமே.

அதற்கு காரணம் இந்த விஷயத்தில் அவளை ஆட்டுவிப்பது அவளின் மனம்.

அவளின் மனமும் நிலையில்லா ஒரு முடிவில் தத்தளித்து அவளை பெரிதும் பாடாய் படுத்திக்கொண்டிருந்தது. கொஞ்ச நாளைக்கு இந்த பிரச்சினைகளை மறந்து எங்காவது சென்றுவிட்டு வந்தாளென்ன என்று மனம் ஏங்க மூளையோ அடுத்த திட்டத்தை சொன்னது.

ஆம். இப்போது அவளுக்கு தேவை யாரும் இல்லாத தனிமை. அது இங்கே நிச்சயம் கிடைக்காது. வேலை, வாழ்க்கை பிரச்சினை, வீட்டு பிரச்சினையென்று ஏதாவது ஒரு யோசனை அவளை வாட்டிக்கொண்டே இருக்கும். அமைதி மட்டுமே அவளின் அனைத்து குழப்பங்களுக்கும் ஒரே வழி. 

 

சற்று நேரம் யோசித்தவளுக்கு ஏதோ ஒன்று தட்டுபட உடனேயே அடுத்து செய்யவேண்டியவற்றை செய்து முடித்தாள். 

மாலை காபி எடுத்துக்கொண்டு சமுத்ரா அறைக்கு வந்த அமராவதி அவளிடம் காபி கொடுத்துவிட்டு செல்ல முயல அவரை தடுத்து நிறுத்தினாள் சமுத்ரா.

“அம்மா நான் அடுத்த வாரம் வாலண்டியரிங்காக ஒரு குக்கிராமத்துக்கு போறேன்.” என்று கூற இது அடிக்கடி நடப்பது என்பதால்

“எத்தனை நாள் மா?” என்று கேட்ட அமராவதியிடம்

“ஒரு வாரம்மா.” என்று சமுத்ரா கூற

“ஓ… சரி சமுத்ரா.” என்றவர் அதற்கு மேல் எதுவும் பேசாது வெளியேறிவிட்டார்.

வெளியே வந்தவர் மாலதியையும் அழைத்து விஷயத்தை சொல்ல ஏதோ யோசித்த மாலதி

“ஏன் அண்ணி இந்த முறை ஷாத்விக்கையும் சமுத்ரா கூட அனுப்பி வச்சா என்ன?” என்று மாலதி கேட்க அமராவதியோ

“அவ ஒத்துப்பாளா?” என்று அமராவதி சந்தேகத்துடன் கேட்க

“சொன்னா தானே?” என்று கூறி மாலதி விஷமமாக சிரிக்க அமராவதிக்கு புரிந்தது.

“அதுவும் சரி தான். நான் உதய்கிட்ட பேசுறேன் ” என்றவர் அடுத்த செய்யவேண்டியதை முடிவெடுத்துவிட்டார்.

மறுநாள் காலை உதய்யிடம் பேசி வேண்டியவற்றை செய்தவர் ஷாத்விக்கிடமும் தனியே அழைத்து விஷயத்தை சொன்னார்.

சரியென்று சொன்னவன் எதையோ யோசித்தபடி அமர்ந்திருக்க அவனின் போன் ஒளிர்ந்தது.

அதை எடுத்து காதில் வைத்தவன்

“சொல்லுடா” என்று உற்சாகமில்லாத குரலில் சொல்ல

“டேய் எங்கடா இருக்க? நான் வந்துட்டேன்.” என்று நாதன் கூற அப்போது தான் நாதன் வருவதாக கூறியது தாமதமாய் நினைவு வர தலையில் அடித்துக்கொண்ட ஷாத்விக் விரைந்து கிளம்பினான்.

பஸ் ஸ்டாண்டில் அவனை அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தவனை அமராவதி சரியாக உபசரிக்க வேலை விஷயமாக வந்திருந்ததால் உணவை முடித்துக்கொண்டு ஷாத்விக்கோடு வெளியே கிளம்பிவிட்டான் நாதன்.

சமுத்ராவுடனான திருமணத்திற்கு பின் தன் தொழிலை நிலைப்படுத்தவேண்டுமென்று எண்ணியிருந்தான் ஷாத்விக். இதுவரை காலமும் பெரிய முதலீடு இல்லாமல் இயற்கை உர வியாபாரத்தை செய்திருந்த போதிலும் அவனிடம் நிலையான தொழிலொன்றை ஆரம்பிப்பதற்கான முதலீடு சற்று தாராளமாகவே இருந்தது. அதோடு நாதனிடமும் இது பற்றி பேசியிருந்தவன் இயற்கை உரம் தயாரிப்பதற்கான சரியான இடத்தையும் தேடிக்கொண்டிருந்தான். இப்போது சரியான இடமும் அமைந்திட அதனை பேசி விலைக்கு வாங்கிடவே நாதனும் வந்திருந்தான்.

ஆரம்பத்தில் ஊரிலேயே உர உற்பத்தியை செய்யலாமென்று எண்ணியிருந்தவன் இன்னொரு இடமும் இருந்தால் நல்லது என்று தோன்ற இங்கேயும் தகுந்த இடமாய் பார்த்து பேசி முடித்திருந்தான். 

 

நிலத்தை பேசி ரிஜிஸ்டர் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு கிளம்பிய இருவரும் மதிய உணவிற்கு ஒரு ஹோட்டலுக்கு வந்திருந்தனர்.

 

உணவை ஆடர் செய்துவிட்டு

“பாலு ஊருல நெலத்தை பேசி முடிச்சிட்டதா சொன்னான். இனி தான் வேலை அதிகமா இருக்க போகுது.”என்று ஷாத்விக் சொல்ல

“அதான் ராமு, வைகுண்டம் , பச்சையன் இருக்காங்களே. உன்ன மாதிரியே பக்குவமா வேல செய்றானுங்க” என்று நாதன் சொல்ல

“அது சரி தான். உடையவன் பார்க்கலானா எதுவும் சரியாப்போகாதுல.”என்று ஷாத்விக் சொல்ல லேசாக சிரித்த நாதன்

“உன்கிட்ட தொழில் கத்துகிட்டவன்ங்கடா அவங்க. அதனால நீ பயப்படவேண்டிய அவசியமே இல்லை. ஆனா இங்கேயும் அது மாதிரி ஆளுங்க கெடைப்பாங்களானு தான் தெரியல.” என்று நாதன் கூற

“நானும் அதான் யோசிக்கிறேன். பார்த்துக்கலாம். அப்புறம் இங்க ஊருல மாதிரி கடையை மட்டுமே நம்பி எதுவும் செய்யமுடியாது. அதனால் ஆன்லைன்லயும் சில வேலைகள் செய்யனும்.”என்று ஷாத்விக் கூற

“சமுத்ரா தங்கச்சிகிட்ட கேட்டா என்ன?”என்று நாதன் சொல்ல ஷாத்விக்கிற்கு இது நல்லயோசனையாக தெரிந்த போதிலும் சரியென்று சொல்ல மனமில்லை. பேச்சு வார்த்தையை இல்லாத இடத்தில் எப்படி சென்று உதவி கேட்பதென்ற தயக்கம் அவனுக்கு.

“என்னடா அமைதியா இருக்க?” என்று நாதன் கேட்க

“பார்த்தாலே முறைக்கிறவகிட்ட போய் எப்படி கேட்கிறதுனு யோசிக்கிறேன்.” என்று ஷாத்விக் சொல்ல

“இன்னுமாடா பேசாம சிலிர்த்துக்கிறீங்க இரண்டு பேரும்?” என்று நாதன் ஆயாசமாக கேட்க

“என்ன பேசறதுனு சொல்லு? வீட்டுல உள்ள மேசை நாற்காலி மாதிரி தான் என்னை பார்க்கிறா. அத்தை மட்டும் இல்லைனா எனக்கு சோறு போட கூட ஆளில்லை. வேணானு வெரட்டவும் மாட்டேங்கிறா. பக்கத்துல இருந்தா மதிக்கவும் மாட்டேங்கிறா. ஆனா வேறு யாரோடயாவது சிரிச்சி பேசுனா கண்ணாலே எரிக்கப்போற மாதிரி பார்க்கிறா. எனக்கு தான் என்ன செய்றதுனு புரியல.” என்று ஷாத்விக் சொல்ல ஏதோ ஞாபகம் வந்தவனாக 

“வந்தப்பவே கேட்கனும்னு நெனச்சேன். அந்த பவித்ரா புள்ள எப்படி இங்க?”என்று நாதன் கேட்க ஷாத்விக்கும் விஷயத்தை கூறினான்.

“இப்போ தானே எனக்கு வெவரம் புரியிது. நீ அந்த பவித்ரா புள்ளகூட சிரிச்சு பேசும் போது தான் சமுத்ரா தங்கச்சி உன்னை எரிக்கிற மாதிரி பார்த்திருக்கு. சரியா?” என்று நாதன் கேட்க சற்று யோசித்த ஷாத்விக்

“ஆமாடா அதுக்கு பிறகு தான் நான் சிரிச்சலே அவ முறைக்கிறா”என்று ஷாத்விக் சொல்ல

“ஏன்டா கொஞ்சமாவது அறிவு இருக்காடா உனக்கு? அவங்க ஏன் முறைக்கிறாங்கனு கூடவா உனக்கு புரியல?”என்று நாதன் சலிப்புடன் கேட்க

“டேய் நான் என்ன அவ மனசை ஆழம் பார்க்குற பூதக்கண்ணாடிய கையில வச்சிட்டா சுத்துறேன். அவ என்ன நெனைக்கிறானு அவ சொன்னா தானே எனக்கு தெரியும்.”என்று ஷாத்விக் புலம்ப

 

“இப்படியே கேள்வியை மட்டுமே கேட்டுட்டு இருந்தன்னா நீ கடைசி வரைக்கும் இப்படியே தான் இருந்தாகனும்.” என்று நாதனும் சொல்ல

 

“இப்போ என்னதான்டா சொல்ல வர்ற?” என்று ஷாத்விக் குழப்பத்தோடு கேட்க

“டேய் சமுத்ரா தங்கச்சி உன்னை விரும்புச்சினு நீ தானே சொன்ன?” என்று நாதன் கேட்க

“ஆமா”என்று ஷாத்விக் பதில் சொல்ல

“அப்போ நீ அவங்க கூட சகஜமா இல்லாத சமயத்துல இன்னொரு பொண்ணு கூட பேசி சிரிச்சா அவங்களுக்கு பொறாமையா தானே இருக்கும்.” என்று நாதன் சொல்ல ஷாத்விக்கிற்கு இப்போது தான் விஷயமே விளங்கியது.

“அப்போ இப்பவும் அவ மனசுல எனக்கு இடம் இருக்குனு சொல்லுறியா?”என்று ஷாத்விக் கேட்க

“இல்லாமலா நீ அவ்வளவு மோசமாக பேசுன பிறகும் உன்னை விட்டு வச்சிருக்கு?”என்று நாதன் கேட்க இப்போது ஷாத்விக்கின் முகம் சுருங்கியது.

“உன்னை கஷ்டப்படுத்தனும்னு சொல்லலடா. உனக்கு சில விஷயங்கள் புரியணும்னு தான் சொல்றேன். நீ இந்த வாழ்க்கையை வாழ ரெடினு எனக்கு தெரியும். ஆனா நீ முழு மனசாக சமுத்ரா தங்கச்சி கூட வாழத்தயார்னு அவங்களுக்கு தெரியாதே. அவங்களை பொறுத்தவரைக்கும் நீ வீட்டாளுங்களுக்காக தான் இதை செய்றனு நெனைச்சிருக்கலாம். நீ நேரடியாக உன் மனமாற்றத்தையும் உன் முடிவையும் சமுத்ரா தங்கச்சிகிட்ட சொல்லி புரியவைக்கும் வரைக்கும் இந்த இடைவெளி எப்பவுமே மாறாது.” என்று நாதன் சொல்ல ஷாத்விக்கிற்கும் அப்போது தான் அவனின் தவறு புரிந்தது.

இத்தனை நாட்களாய் சமுத்ரா பிடிவாதம் பிடிக்கிறாளென்று எண்ணியிருந்தவனுக்கு அதற்கான மூலக்காரணமே தான் தானென்ற உண்மை இப்போது தான் தெரிந்தது. சமுத்ராவின் கோபத்தை எண்ணி சற்று தயங்கியவன் எப்பாடு பட்டாவது அவளின் விழுந்து எழும்பி இந்த இடைவெளியை சரிகட்டவேண்டுமென்ற உறுதியை அந்த நொடியில் எடுத்திருந்தான்.

 

“ரொம்ப தேங்க்ஸ்டா. இத்தன நாளா ஒரு குழப்பத்துலயே இருந்தேன். இப்போ தான் என்ன செய்யனுங்கிற தெளிவே வந்துச்சு”என்று ஷாத்விக் சொல்ல

“டேய் நான் உன் சிநேகிதன் டா.இதே பிரச்சினை எனக்கு வந்தா நீ பேசி தீர்த்துவைக்க மாட்டியா?”என்று நாதன் நட்பாக கேட்கவென்று இருவரும் பேசியபடியே உணவை முடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பினர்.

அன்று மாலையே நாதனும் கிளம்பிட சமுத்ராவும் மறுநாள் காலை அந்த குக்கிராமத்துக்கு போவதாக சொன்னாள். 

அமராவதி ஷாத்விக்கை அர்த்தமாக பார்க்க அவனும் தான் பார்த்துக்கொள்வதாக கூறி கண்ணசைத்தான்.

மறுநாள் காலை சமுத்ரா முன்னே செல்ல ஷாத்விக்கும் அவளறியாமல் அவளை பின்தொடர்ந்தான்.

30 பேர் செல்வதற்கான பஸ் தயாராயிருக்க ஷாத்விக்கோ சமுத்ராவின் கண்ணில் படாதபடி ஏறி அவளின் பார்வைக்கு மறைவான இடத்தில் அமர்ந்துகொண்டான்.

தான் வருவது தெரிந்து சமுத்ரா இந்த பயணத்திற்கு போகாவிட்டாலென்ற பயமே அவனின் இந்த தலைமறைவு பின்தொடரலுக்கு காரணம்.

ஐந்து மணிநேர பயணத்திற்கு பின் அந்த பஸ் சம்பந்திபட்டணம் என்ற பெயர் பலகை தாங்கியிருந்த அந்த ஊரிற்குள் நுழைந்தது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்