Loading

பகலவன் மேகங்களினுள் ஒளிந்து மெல்ல தன் கதிர்களை பரப்பிய அந்த அழகிய காலை பொழுதில், கண்ணாடியின் முன் நின்று புடவை கட்டிக்கொண்டிருந்தாள் ஹர்ஷிதா

 

ஐந்து மாத கருவை தாங்கியிருந்த தன் மேடிட்ட வயிற்றை சுற்றி அவள் மடிப்புகள் எடுத்து ஓய்ந்திருக்க, அதுவரை கதவில் சாய்ந்து தன் மனையாளின் அழகை ரசித்துக்கொண்டிருந்தவன், அவள் களைப்பை உணர்ந்து அவள் முன் சென்று மண்டியிட்டான். பின் அவனே அவளின் மடிப்புகளை சரி செய்து அதை இடுப்பில் சொருகி விட, கணவனின் செயலில் மென்னகை புரிந்தவள் அவன் தலை முடியை தன் வெண்டை விரல்களை கொண்டு கோதிவிட, அவளை ஏறிட்டவனின் கண்கள் மெலிதாக கலங்கி இருந்தது. 

கணவனின் கலங்கிய முகத்தை கண்டு தானும் பதறியவள் “என்ன வாசு இது.. சின்ன பிள்ள மாதிரி” என்று அவன் கண்களை துடைத்துவிட, அவள் கையை தன் கன்னத்தோடு சேர்த்து பிடித்தவன் “சீக்கிரம் வந்திடு ஹர்ஷி” என்று தழுதழுத்த குரலில் கூற, அவனை தன் இடையோடு கட்டிக்கொண்டவளோ “நான் எங்கயும் போகல வாசு.. இங்கயே இருக்கேன்.. நீ முதல அழாத” என்றாள் தவிப்பாக.

தன்னவளின் காதலில் எப்போதும் போல் கரைந்தவன் “வேண்டாம் ஹர்ஷி, நீ போயிட்டு வா.. இத்தனை வருஷத்துக்கு அப்பறம் இப்போ தான் உங்க வீட்ல மனசு மாறி உன்ன ஏத்துகிட்டு இருக்காங்க.. இந்த நேரத்துல நீ போகாம இருந்தா அது தப்பாகிடும்” என்றிட, “நீயும் வா வாசு.. நீ இல்லாம நான் மட்டும் எப்படி போவேன்.. அன்னிக்கு அப்பா நம்ம ரெண்டு பேரையும் தான வர சொன்னாரு” என்றிட, தன் முழு உயரத்திற்கு நின்றவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து “இல்லடி.. நான் அங்க வந்து, உன் வீட்ல இருக்குறவங்க என்ன ஏதாவது பேசிட்டா.. என் பொண்டாட்டிக்காக நான் அமைதியா இருப்பேன் ஆனா என் பொண்டாட்டி சும்மா இருக்க மாட்டாளே.. எனக்காக அவங்க கூட அவ சண்டை போட்டுட்டு திரும்ப வந்திடுவா.. அவ அப்படி அவங்கள பிரிஞ்சு கஷ்டப்படுறதை என்னால பார்க்க முடியாது.. என்கிட்ட காட்டிக்கிலனா கூட நீ உன் அப்பா அம்மாவை எவ்ளோ மிஸ் பண்ணுறன்னு எனக்கு தெரியும்” என்றவன் தொடர்ந்து “இவ்ளோ நாளா என் மனச அழுதிட்டு இருந்த குற்றவுணர்வு இப்போ தான் குறையுற மாதிரி இருக்கு” என்றான். 

கணவனின் நெஞ்சில் சாய்ந்தவள் “லவ் யூ அண்ட் தேங்க்ஸ்” என்க, அவள் முகத்தை நிமிர்த்தியவன் “நான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லனும் ஹர்ஷி.. அவ்ளோ பெரிய குடும்பத்தையும், வீட்டையும் விட்டுட்டு ஒரு வேலை கூட இல்லாத என்ன நம்பி வந்ததுக்கு, என்ன இப்படி உயிரா நேசிக்கிறதுக்கு தேங்க்ஸ்” என்று உணர்ச்சிவசப்பட, அவன் இதழை ஒரு விரல் கொண்டு மூடியவள் “தேங்க்ஸ் இப்படி சொல்ல கூடாதே” என்று கண்ணடிக்க, அதில் வாய் விட்டு சிரித்தவன் அவள் இதழை தன் இதழ் கொண்டு சிறை செய்தான். 

 

காலதேவன் அவர்களுக்கு காத்திருக்காமல் கரைய, அவர்களின் முத்தயுத்தமோ முடிவில்லாமல் நீண்டுகொண்டே இருந்தது, முதலில் சுதாரித்து விலகியது என்னவோ வாசு தான். 

 

ஹர்ஷி “என்னால கண்டிப்பா தனியா போக முடியாது வாசு.. நீயும் வா.. ப்ளீஸ், எனக்காக” என்று இறைஞ்ச, மனைவியின் பேச்சிற்கு என்றும் அவனிடம் எதிர் பேச்சு இருந்ததில்லை. “சரி சரி.. வரேன்.. ஆனா ப்ரோமிஸ் பண்ணு.. உங்க வீட்ல என்ன ஏதாவது  சொன்னா நீ அவங்க கூட சண்டை போட கூடாது ஓகே” என்று கை நீட்ட, அவன் கையை தட்டிவிட்டவள் “அவங்க என் ஜாதி தான் பெருசு.. என் பாரம்பரியம் தான் உசத்தி.. எங்க குடும்பத்துக்கு மட்டும் தான் கௌரவம் இருக்குன்னு பேசி உன்ன அசிங்கப்படுத்துவாங்க நான் கேட்டுட்டு சும்மா இருக்கனுமா.. நீ ஒன்னும் வரவே தேவையில்ல.. இங்கயே இரு” என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க பேச, “சரி சரி தாயே.. நான் எதுவும் கேட்கல.. போதுமா” என்றான் சமாதானமாக. 

 

‘அது’ என்பதை போல மிதப்பாக பார்த்தவள், இரண்டு மூன்று ஆரங்களை அணிந்துகொள்ள, வாசு “எதுக்கு இப்ப நகை கடை விளம்பரத்துக்கு வர மாதிரி இத்தனை செயின் போடுற.. ஹெவியா இருக்கும்டி” என்றிட, “பரவால்ல.. என் புருஷன் என்ன மகாராணி மாதிரி வச்சிருக்காருன்னு அவங்களுக்கு தெரிய வேண்டாம்.. அதுக்கு தான்” என்றாள் கண் சிமிட்டி. ஹர்ஷிதாவின் கூற்றில் இதழ் பிரித்து சிரித்தவன் “கிளம்பு டி.. நேரமாகுது” என்றிட, “ம்ம்.. ம்ம்” என்றவள் அவன் உடமைகளையும் சேர்த்து எடுத்துவைத்துக்கொண்டாள். 

 

இருவரும் கிளம்பி வெளியே வந்த நேரம், ஹர்ஷிதாவின் புடவை தடுக்கிவிட, அவள் தோள்களை தாங்கி பிடித்தவன் “மா.. பார்த்து” என்றான். ஹர்ஷி “சாரி சாரி..” என்றவள் அவன் கரம் பற்றிக்கொண்டு காரை நோக்கி சென்றாள். 

 

இருவரும் காரில் ஏற, மூன்று நெடிய ஆண்டுகளுக்கு பின் சொந்த ஊரை நோக்கி அவர்களின் பயணம் தொடங்கியது. கிளம்பும் வரை எதுவும் தெரியவில்லை ஆனால் கிளம்பிய பின் ஹர்ஷிதாவின் மனம் வெகுவாய் படபடத்தது. கண்கள் அலைபாய அமர்ந்திருந்த மனைவின் வலது கரத்தை தன் இடது கரத்தோடு கோர்த்தவன் “என்ன ஆச்சு.. கொஞ்ச நேரமா உன் முகமே சரியில்ல” என்று புருவமுயர்த்த, அவன் கைகளை இறுக பற்றிக்கொண்டு அவன் தோளில் சாய்ந்தவள் “தெரியல வாசு.. இவ்ளோ நேரம் ஒன்னுமில்ல.. இப்போ கொஞ்சம் படபடப்பா இருக்கு” என்றிட, வண்டியை சாலையின் ஓரத்தில் நிறுத்தியவன் “என்ன மா என்ன ஆச்சு.. டாக்டர் கிட்ட போவோமா” என்று அக்கறையாக வினவ, அவளோ மறுப்பாக தலையசைத்தாள். 

 

வாசு “மனச போட்டு குழப்பிக்காத ஹர்ஷி.. எல்லாம் நல்லதே நடக்கும்” என்றவன் மீண்டும் வண்டியை செலுத்த, கணவனின் வார்த்தைகளில் கொஞ்சம் தெளிந்தவள் ஜன்னலின் வழி தன் பார்வையை திரும்பினாள். பழைய நினைவுகள் அலையலையாய் மனதில் எழும்ப, கண் மூடி சாய்ந்தவளுக்கு நிழல் படமாய் அனைத்தும் கண் முன்னே ஓடியது. 

  

 

வாசுவிற்கு பெற்றோர்கள் என்று யாருமில்லை, அனாதை இல்லத்தில் வளர்ந்தவன் தான் அவன். எப்போதும் ஹர்ஷிதாவின் பிறந்த நாளன்று அவள் ஆஸ்ரமம் செல்வது வழக்கம், அப்படி ஒருமுறை அவள் சென்ற போது அவளுக்கு கிடைத்த நண்பன் தான் வாசு. யாருடனும் அவ்வளவு எளிதில் பழகிவிடாத ஹர்ஷிக்கு வாசுவுடன் சிறு வயதிலேயே ஒரு ஆழ்ந்த பிணைப்பு ஏற்பட்டது. நண்பர்களாக பழக தொடங்கியவர்களின் நட்பு, கொஞ்சம் கொஞ்சமாக காதலாய் மலர்ந்தது. 

 

உறவுகளற்று வளர்ந்தவனுக்கு ஹர்ஷியே யாதுமாகிப்போனாள். அவள் மீது காதலையும் தாண்டி அன்பும் அக்கறையும் அவனுக்கு அதிகமாகவே  இருந்தது. இருவரும் மற்றவருக்கு உயிராகி போன தருணத்தில் ஹர்ஷிதாவின் இல்லத்தில் அவர்களின் காதல் விவகாரம் பூதாகரமாய் வெடித்தது.  விஷயமறிந்த ஹர்ஷிதாவின் தந்தை மாறன் தன் மகன் ரதனை விட்டு வாசுவை மிரட்ட, அவனோ அதற்கெல்லாம் அஞ்சவில்லை. ரதனை அழைத்த மாறன் “இங்க பாரு ரதன், இது நம்ம வீட்டு புள்ள விவகாரம்.. ஊர்ல தெரிஞ்சா நம்ம குடும்ப மானம் தான் போகும்.. அதனால நம்ம கொஞ்சம் இறங்கி போவோம்.. அந்த பையனை கூப்பிட்டு கொஞ்சம் பேசு” என்று அறிவுரை வழங்க, ரதனும் அதன் படி வாசுவை சந்திக்க சென்றான். 

 

வாசுவை நேரில் சந்தித்த ரதன் “இங்க பாரு வாசு.. இந்த ஊரோட தலை கட்டு குடும்பம் எங்களோடது.. ஆனா உனக்கு அப்படி இல்ல.. ஊர் பெயர் தெரியாதவனுக்கு எப்படி எங்க பொண்ணை கொடுக்கிறது.. சரி அப்படியே உனக்கு பொண்ணை கொடுத்தா கூட உன்னால எப்படி அவளை வச்சு காப்பாத்த முடியும்.. உன்கூட கூட்டிட்டு போய் அவளையும் கஷ்டப்படுத்த விரும்புறியா” என்று கேள்வி எழுப்ப, நொந்து தான் போனான் அவன். ரதன் கேட்பதும் சரி தானே, வீம்பிற்கு அவளை திருமணம் செய்துக்கொண்டாலும் அதன் பிறகு அவளை எப்படி வைத்து காப்பாற்றுவான். தன்னை காதலித்த ஒரே காரணத்திற்காக அவள் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட வேண்டுமா என்ற கேள்வி அவன் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் குத்தியது. மிரட்டல்கள் வேலை செய்யாத இடத்தில் ஹர்ஷிதாவின் நலன் வேலை செய்தது. 

 

ஹர்ஷிதாவின் மீதிருந்த அதீத அக்கறையில் அவள் வாழ்க்கையிலிருந்து விலக எண்ணினான் அந்த அன்பு காதலன். ஆனால் அது அவ்வளவு எளிதில் நடந்துவிடுமா என்ன, அவள் மீது உயிரையே வைத்திருக்கும் அவனால் எப்படி அவளை விட்டு செல்ல முடியும். ஒருபக்கம் வாசுவின் ஒதுக்கம் என்றால் மறுபக்கம் ஹர்ஷியின் வீட்டில் அவளுக்கு திருமண பேச்சுகள் தீவிரமாக தொடங்கியது. 

 

ஒரு கட்டம் வரை பொறுமையாக இருந்தவளால் அதற்கு மேல் முடியவில்லை. அன்றிரவே கடிதம் ஒன்றை எழுதிவிட்டு வீட்டை விட்டு வெளியில் வந்தவள் சென்றது என்னவோ வாசுவின் இல்லத்திற்கு தான். ஹர்ஷிதாவின் பிரிவால் முற்றிலுமாக மனமுடைந்து கிடைந்தவனின் வீட்டு கதவு தட்டப்பட, இந்த இரவில் யாராக இருக்கும் என்று குழம்பி போய் கதவை திறந்தவன் ஹர்ஷிதாவை அங்கு சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. 

 

வீட்டினுள் நுழைந்து கதவை தாழிட்டவள் அவனை ஓங்கி அறைய, அதில் அதிர்ந்து விழித்தவன் “இங்க என்ன பண்ணுற” என்று வினவ, “ஹான் சாமி கும்மிட வந்தேன்” என்றாள் எரிச்சலாக. வாசு “ப்ச்.. விளையாடாத ஹர்ஷிதா.. முதல வீட்டுக்கு போ” என்று கடினமான குரலில் பேச முயற்சிக்க, கலங்கிய கண்களுடன் அவனை ஏறிட்டவள் “எப்போ ஹர்ஷி ஹர்ஷிதாவா ஆனேன்” என்றாள். வாசுவோ “முதல கிளம்பு நீ” என்று அவளை துரத்த முற்பட, பிடிவாதமாக மறுத்தவள் “முடியாது வாசு.. இனி நான் எங்கேயும் போறதா இல்ல.. அங்க வீட்ல அவசரமா எனக்கு பையன் பாக்குறாங்கடா.. நான் உன்னை நம்பி இருந்தா, நீயும் எதுவும் பண்ற மாதிரி தெரியல.. அதான் நானே வீட்ட விட்டு வந்துட்டேன்” என்றாள். 

 

வாசு “சொல்றதை கேளு ஹர்ஷிதா.. நான் உனக்கு சரியானவன் கிடையாது.. வீட்ல பாக்குற பையனை கல்யாணம் பண்ணிக்கோ.. அது தான் உனக்கு நல்லது” என்றிட, அதில் அதிர்ந்தவள் “அப்போ நம்ம காதல்” என்றாள் தழுதழுத்த குரலில். அவள் கோபமாக கேட்டிருந்தால் கூட அவன் முகத்தில் அறைந்தார் போல் பேசிருப்பான் ஆனால் அவள் கலங்கிய குரல் அவனை மொத்தமாக கட்டிபோட்டது. வாசுவோ தளர்ந்த குரலில் “புரிஞ்சிக்கோடி.. என்கூட வந்தா உனக்கு கஷ்டம் மட்டும் தான் இருக்கும்.. தயவு செய்து புரிஞ்சிக்கோ” என்றான். “வாழ்வோ சாவோ அது உன் கூட மட்டும் தான் வாசு.. ஒருவேளை உனக்கு விருப்பமில்லன்னா சொல்லு.. இப்படியே எங்கேயாவது விழுந்து சாகுறேன்” என்று முடிக்கும் முன் அவளை இறுக அணைத்தவன் “என்னடி பேச்சு இது” என்று அதட்ட, அவன் சட்டையை இறுக பற்றிக்கொண்டவள் “நீ இல்லாம என்னால இருக்க முடியாது வாசு.. நம்ம எங்கயாவது கண் காணாத தூரத்துக்கு போயிடலாம்டா ப்ளீஸ்” என்றாள். 

 

வாசுவிற்கும் அவள் கூறுவதே சரி என்று பட்டது ஆனால் எங்கு செல்வது, அப்படியே சென்றாலும் அவளை எப்படி பார்த்துக்கொள்வது என பல கேள்விகள் அவன் மூளையை நிறைந்திருக்க, கடவுளின் மீது பாரத்தை போட்டவன்

ஊர் எல்லையிலிருந்த அம்மன் கோவிலுக்கு அவளை அழைத்து சென்றான். எல்லையம்மனின் சாட்சியாக அவளை தன் சரி பாதியாக ஏறுக்கொண்டவன், இதுவரை சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஊரை விட்டு வெளியேறினான். 

 

ஹர்ஷிதாவை மணந்துக்கொண்டு கோவை வந்தவன் முதலில் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்தான். வாசுவின் திறனுக்கு அவனுக்கு வேலை கிடைப்பது ஒன்றும் அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை, கோவையில் இருந்த பெரிய மகிழுந்து நிறுவன தொழிற்சாலையில் அவனுக்கு வேலை கிடைத்தது. பிறந்த வீட்டில் சாப்பிட்ட தட்டை கூட எடுத்து வைக்காமல் வளர்ந்த ஹர்ஷிதாவிற்கு தான் தனியாக வீட்டை சமாளிப்பது பெரும் சவாலாக இருந்தது ஆனால் அந்த வேலையை கூட அவளுக்கு தராது அவளை தங்க தட்டில் வைத்து தாங்கினான் அவள் காதலன். 

 

சிறு சிறு சீண்டல்கள், ஊடல்கள் என்று நாட்கள் இனிதே கழிய ஒரு நிலைக்கு வந்த பிறகே இருவரும் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறினர். நாட்கள் இப்படியே கழிய, ஒரு நாள் வேலை முடித்துவிட்டு வந்த வாசு, வீட்டின் கதவை தட்ட போக, அது தானாகவே திறந்துகொண்டது. வீட்டினுள் நுழைந்தவன் “ஹர்ஷி.. எங்க இருக்க” என்று குரல் கொடுத்தபடி கதவை தாழிட, அவளோ படுக்கை அறையிலிருந்து குரல் கொடுத்தாள்.  

 

சட்டையின் கைகளை மடக்கியபடி, அறையினுள் நுழைந்தவன், துணிகள் மடித்துக்கொண்டிருந்தவளை பின்னிலிருந்து அணைத்துக்கொள்ள, அவன் மார்பின் மீது சாய்ந்தவள் “அப்பாவாக போற” என்றாள் வெகு இயல்பாக. ஹர்ஷிதாவின் கூற்றில் விழி விரித்தவன் பின் “ஓ.. சூப்பர் ஹர்ஷி” என்று அவளை போலவே சாதாரணமாக கூறிவிட்டு அவள் கன்னத்தில் இதழ் பதிக்க, பட்டென அவனை விட்டு விலகி நின்றவள் “அடப்பாவி.. இவ்ளோ தான் உன் ரியாக்ஷனா” என்று அவன் நெஞ்சில் தன் தளிர் கரங்களை கொண்டு அடிக்க, அவள் கரத்தை பற்றி தன்னோடு அணைத்துக்கொண்டவன் “நீங்க மட்டும் எப்படி சொன்னீங்க” என்று கேலியாக கேட்க, அதில் அவனை முறைத்தவள் பின் அவன் சட்டை பட்டனை திருகி “அது.. எனக்கு கொஞ்சம் கூச்சமா இருந்துச்சு.. அதான் அப்படி சொல்லிட்டேன்” என்றாள் கன்னம் சிவக்க. 

 

அவள் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தியவன் “என் வாழ்க்கைய அழகா மாத்த வந்த தேவதை பெண் டி நீ.. லவ் யூ.. லவ் யூ சோ மச்” என்று அவள் இதழில் இதழ் பதித்தான். பின் அவளருகே மண்டியிட்டு, அவள் புடவையை விலக்கியவன் அவள் வெற்றிடையில் அழுத்தமாக இதழ் பதிக்க, பெண்ணவளின் உடலில் ஒரு புதுவித சிலிர்ப்பு. அவன் விழியின் ஓரத்திலிருந்து ஒரு துளி நீர் அவள் இடையில் பட்டு தெறித்தது, எந்த ஒரு ஆணுக்கும் நெகிழ்வான தருணமல்லவா அது.  

 

ஹர்ஷியின் கர்ப்பத்தை பற்றி அறிந்த அவள் தாய் மேகனா தன் கணவனிடம் சண்டையிட்டு மகளை காண வந்தார். அவர்கள் சிசுவின் வரவு மாறனையும் அசைத்து பார்க்க, தானே சென்று இருவரையும் வீட்டிற்கு அழைத்திருந்தார். இப்படி பழைய நினைவுகளில் உழன்று கொண்டு இருந்தவளின் தோள் தட்டிய வாசு “என்ன யோசனை.. வீடு வந்திடுச்சு” என்றிட, ஒன்றுமில்லை என்பதாய் தலையசைத்தவள் அவனுடன் சேர்ந்து உள்ளே நுழைய எத்தனித்த சமயம் “அங்கேயே நில்லுங்க” என்று மாறனின் கணீர் குரல் ஒலித்தது. வாசுவின் கைகளை இறுக பற்றியவள் அவனை கலக்கமாக ஏறிட, மாறன் “மேகனா.. புள்ள முதல் முதலா வீட்டுக்கு வந்திருக்கு.. வந்து ஆர்த்தி எடு வா” என்று கூறி அவள் கலக்கத்தை துடைத்து வைத்தார். 

 

அதன் பின் சில நலன் விசாரிப்புகள் அரங்கேற, மாறனின் தாய் கோசலை “போதும்யா.. வயித்து புள்ளதாச்சி பசியா இருக்கும் அதுக்கு சாப்பிட ஏதாவது கொடுங்க” என்று அவர்களை உணவுண்ண அனுப்பி வைத்தார். 

 

உணவை முடித்துக்கொண்டு வந்த வாசுவை அழைத்த ரதன் “வாங்க மாப்பிள்ளை அப்படியே பின்னாடி தோப்பு வரை போயிட்டு வருவோம்” என்றிட, “சரிங்க மச்சான்” என்றவன் மனைவியிடம் கூறிவிட்டு ரதனுடன் சென்றான். ரதனுடன் அவர்களின் உறவினர்கள் நால்வர் வர, ஐவரும் வீட்டின் பின் இருந்த தோப்பிற்கு சென்றனர். 

 

ரதன் “இதெல்லாம் எங்க தோப்பு தான்.. சுமார் நாலஞ்சு ஏக்கர் இருக்கும்” என்று பேச்சை தொடங்க, ரதனின் பங்காளி ஒருவன் “மாப்பிள்ளை கிட்ட எவ்ளோ சொத்து இருக்கு” என்று கேள்வியெழுப்ப, மாற்றொருவனோ “அவர்கிட்ட பெருசா என்ன இருந்திட போகுது.. அரை சென்ட்ல ஒரு வீடு.. ஒரு சொகுசு கார்.. அதான மாப்பிள்ளை” என்றிட, வாசுவின் முகம் கருத்தது ஆனால் ஹர்ஷிகாக பொறுமை காத்தவன் மௌனமாகவே இருக்க, மீண்டும் அவர்களே “இவ்ளோ சொத்துக்கு நடுவுல ராணி மாதிரி இருந்த பொண்ணை கூட்டிட்டு போனா மட்டும் பத்தாதுடா.. அவளை ராணி மாதிரி வச்சிக்கனும்” என்றனர் குத்தலாக. 

 

வாசு “மச்சா.. என் பொண்டாட்டிய எப்படி பார்த்துக்கணும்னு எனக்கு தெரியும்” என்றிட, ரதன் “யாருக்கு யாருடா மச்சான்.. எங்க அந்தஸ்து என்னனு தெரியுமா உனக்கு.. ஊரோட தலகட்டு குடும்பம்டா நாங்க.. பிச்சைக்காரன் நீ எங்க வீட்டு பொண்ணை தூக்கிட்டு போவ அதை பார்த்து நாங்க மூடிக்கிட்டு இருக்கனுமா.. உங்க இங்க கூட்டிட்டு வந்ததே உன்ன போட்டுட்டு என் தங்கச்சிய வீட்ல வச்சுக்க தான்டா” என்றவன் முதுகில் வைத்திருந்த அரிவாளை எடுத்து வாசுவின் கழுத்தில் வெட்ட, எதிர்பாரா தாக்குதலில் நிலைகுலைந்தவன் அப்படியே நிலத்தில் சரிந்தான். சரியாக அப்போது அங்கே வந்த மாறன், நிலத்தில் சரிந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வாசுவை பார்த்து “தகுதி தராதிரம் பார்க்காம காதலிச்சா இது தான் நிலைமை.. முதல நீ போ.. பின்னாடியே உன்னோட வாரிசை அனுப்பி வைக்கிறேன்” என்றார். வாசு “வேண்டாம்.. பாப்பாவை ஒன்னும் பண்ணிடாதீங்க” என்று திக்கி திணறி பேச முயற்சித்தவன், கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவை இழந்து, உயிர் துறந்தான்.

 

மாறன் “இந்த நாய இங்கயே எரிச்சிடு ரதா.. இவன் சாம்பல் கூட வெளிய கிடைக்க கூடாது” என்னும் போதே வாசுவை தேடிக்கொண்டு வந்த ஹர்ஷியின் கண்களில் அது பட “வாசுஊஊஊ” என்று  அலறியபடி உறக்கத்திலிருந்து எழுந்தமர்ந்தாள். 

 

அப்போது தான் ரதனுடன் தோப்பிலிருந்து வந்த வாசு, ஹர்ஷிதாவின் அலறலில் பதறியடித்துக்கொண்டு அவள் அறையினுள் நுழைந்தான். முகமெல்லாம் வியர்வை பூத்திருக்க, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அமர்ந்திருந்த மனைவியின் அருகில் சென்றவன் “ஹர்ஷி.. என்ன ஆச்சு.. ஏன் அப்படி அலறுன” என்று பதற, “வாசு” என்றவள் அவன் உடலை ஆராய்ந்தபடி “உனக்கு ஒன்னுமில்ல தான.. நீ நல்லா இருக்கு தான” என்று வினவ, அவளை தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டவன் “எனக்கு என்னடி.. நான் நல்லா இருக்கேன்.. எதாச்சு கெட்ட கனவு கண்டியா” என்று வினவ, “ம்ம்.. ரொம்ப கெட்ட கனவு” என்றவள் தொடர்ந்து “நம்ம வீட்டுக்கு போகலாம் வாசு.. இங்க வேண்டாம் ப்ளீஸ்” என்றாள் அவன் நெஞ்சில் ஆழ புதைந்து. 

 

பெண்ணவளின் தலையை மென்மையாக கோதியவன் “ஹர்ஷி.. இப்போ தான வந்தோம்.. உடனே கிளம்புனா உங்க வீட்ல என்ன நினைப்பாங்க” என்று புரியவைக்க, “ப்ளீஸ்டா.. போகலாம்.. இங்க வேண்டாம்” என்றாள் விசும்பலுடன். வாசு “சரி சரி.. கொஞ்ச நேரம் இருந்துட்டு சாயங்காலமா கிளம்பலாம்” என்றான் சமாதானமாக. ஹர்ஷி “இப்போவே கிளம்பலாம் வாசு.. இங்க இருக்க பயமா இருக்குடா” என்றிட, அவள் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தியவன் “என்னடி.. என்ன கனவு கண்ட அதை சொல்லு” என்று வினவ, அவளும் மறைக்காது அனைத்தையும் ஒப்பித்தாள். 

 

ஹர்ஷி கூறியதை கேட்டு வாய் விட்டு சிரித்தவன் “ஏன்டி.. உங்க அப்பா அப்படி பண்ற ஆளா” என்று கேலிய வினவ, அவளோ கலக்கமாக அவனை ஏறிட்டாள். “நான் தோப்புக்கு போனேன்ல அப்போ என்ன ஆச்சு தெரியுமா” என்றவன் நடந்ததை கூற தொடங்கினான். 

 

ரதனுடன் பின்கட்டிருக்கு சென்றவனின் காதில் உறவினர்களின் பேச்சு சத்தம் விழுந்தது. அதில் மாறனின் தாய் மாமா சுந்தரம் “என்ன மாறா.. அந்த பைய வந்தவுடனே அவனை வெட்டி போட்டிருக்க வேண்டாமா.. அவன் என்ன சாதியோ.. என்ன குலமோ அவனை கூட்டி வந்து நடு வீட்டுல வச்சிருக்க.. இதெல்லாம் நல்லவா இருக்கு.. என் பொண்ணு மட்டும் இந்த மாதிரி ஓடி போயிருந்தா முதல் வேலையா அவங்க ரெண்டு பேரையும் வெட்டி போட்டிருப்பேன்.. நமக்குலாம் கௌரவம் தான் முக்கியம்” என்று ஆவேசமாக பேச, அந்த ஆளின் பேச்சை கேட்ட மாறனோ “அவனை வெட்டிட்டு என்ன பண்ணுறது மாமா.. பொண்ணுக்கு யாரு பதில் சொல்லுவா” என்று வினவ, சுந்தரம் “அவ சின்ன பொண்ணு.. அவளுக்கு நீ என்ன பதில் சொல்லிக்கிட்டு.. ஒரு ஒரு வாரம் அழுவா.. அப்பறம் நம்ம சாதி பைய ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணி வச்சா அவன்கூட வாழ போறா.. நமக்கு சாதி சனம் முக்கியமில்லையா.. இந்த காதல் கத்திரிகாயெல்லாம் நம்ம சாதிக்கு ஒத்து வராது” என்றார்.

 

மாறன் “காதலுக்கு சாதி மதம் என்ன இருக்கு.. என் மாப்பிள்ளை என்ன சாதி பையலா இருந்தா என்ன மாமா.. அவன் மனசு சுத்தமா தான் இருக்கு.. ஏன் நம்ம சாதி பைய தப்பே பண்ணதில்லையா என்ன” என்றவர் தொடர்ந்து “என் பொண்ணை கைல வச்சு தாங்குறான் மாமா.. ஒரு அப்பனா எனக்கு வேற என்ன வேணும்.. நானே தேடி ஒரு பையனை அவளுக்கு கட்டி கொடுத்திருந்தா கூட அவன் என் பொண்ண இப்படி பாத்திருந்திருக்க மாட்டான்.. என்ன பெரிய சாதி, அந்தஸ்த்து.. அதை வச்சு என்ன சாதிச்சிட போறோம் சொல்லுங்க.. உங்க சாதி காரனா வேணா நான் தோத்து போயிருக்கலாம் ஆனா ஒரு அப்பனா நான் ஜெய்ச்சுட்டேன்.. என் மக சந்தோஷத்துக்கு முன்னாடி எனக்கு இந்த சாதி மதம் எதுவும் பெருசில்ல” என்றார்.

 

மாறனின் பேச்சியில் நெகிழ்ந்தது என்னவோ வாசு தான். ரதன் “தாத்தா பேசுறதை பெருசா எடுத்துக்காதீங்க மாப்பிள்ளை” என்று சங்கடமாக கூற, வாசு “அட என்ன மச்சான் நீங்க.. அதெல்லாம் நான் தப்பாவே எடுத்துக்கல” என்றான். 

 

அங்கு சுந்தரம் இன்னும் அடங்காது கத்திக்கொண்டிருக்க, மாறனோ “மதவங்களோட உணர்வை புரிஞ்சிக்கிற சக்தி இருக்குறதால தான் நம்மள மனுஷங்கன்னு சொல்லுறாங்க.. பெத்த புள்ளையோட உணர்வை.. காதலை கூட புரிஞ்சிக்க முடியலன்னா நமக்கும் காட்டுல திரியுற மிருகத்துக்கும் என்ன வித்தியாசம்” என்றுவிட, சுந்தரமோ “இப்போ நல்லா பேசு.. நாளைக்கு உன் பொண்ணுக்கு ஏதாவது ஒன்னுன்னா என்கிட்ட வந்து நிக்காத” என்றவர் தோளில் இருந்த துண்டை உதறிவிட்டு அங்கிருந்து எழுந்து செல்ல, மாறனோ “அப்படி ஒன்னு கண்டிப்பா நடக்காது” என்றார் மருமகனின் மீதிருந்த நம்பிக்கையில். 

 

என்னதான் உலகம் அறிவியலில் முன்னேற்றம் அடைந்து வளர்ச்சியடைந்திருந்தாலும் இன்றளவும் பல ஊர்களில் கௌரவ கொலைகள் போன்ற வன்கொடுமைகள் கண்ணுக்கு தெரியாமல் நடந்துகொண்டு தான் இருக்கிறது. இனம், சாதி, மதம் என்ற பெயரில் சொந்த பிள்ளைகளின் வாழ்க்கையையே அழிக்க துணியும் பெற்றோர்கள் இன்றளவும் உண்டு தான். சாதி வெறி பிடித்து சொந்த பிள்ளைகளின் வாழ்க்கையை அழிக்கும், அழிக்க துணியும் பெற்றோர்களும் அரக்கர்களே. 

 

வாசு நிற்பதை அப்போது தான் கவனித்த மாறன் “என்ன மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை.. நானும் ரதனும் கூட சாதி அந்தஸ்த்து அப்படின்னு உங்களை அசிங்கப்படுத்திருக்கோம்.. ஆனா அது எதையும் பெருசா எடுத்துக்காம.. நான் கூப்பிட்ட உடனே நீங்க பாப்பாவை கூட்டிட்டு வந்தீங்க பாருங்க.. நீங்க ரொம்ப உசந்துட்டீங்க மாப்பிள்ளை.. அப்பறம் நான் பேசுன எல்லாத்துக்கும் மன்னிப்பு கேட்கிறேன்” என்று மன்னிப்பை வேண்ட, அதில் பதறியவன் “ஐயோ எதுக்கு மாமா மன்னிப்பெல்லாம்.. அதெல்லாம் வேண்டாம்.. கௌரவதுக்காக பெத்த புள்ளைய கொலை பண்ண துணியுற இந்த சமுதாயத்துல, உங்க பொண்ணோட சந்தோசத்துக்காக பாக்குற நீங்க தான் மாமா கிரேட்” என்றான் நெகிழ்வாக. 

இவ்வாறு நடந்தவற்றை ஹர்ஷிதாவிடம் கூறியவன் “இப்போ பயம் போச்சா” என்க, கணவன் கூறியதை கேட்டு முற்றிலுமாக தெளிந்தவள் “கொஞ்சம் பயமா தான் இருக்கு” என்று குறும்பாக கண்ணடிக்க, மனைவியின் குறும்பில் தானும் இணைந்தவன் “ஓ.. மேடமோட பயத்தை எப்படி சரி செய்யனும்னு எனக்கு தெரியும்” என்றவன், பெண்ணவளை தன் காதலில் திக்குமுக்காட வைத்தான். 

 

முடிவு..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

3 Comments

  1. Sooooooooooooooo sweet😍😍😍😍😍…romba cute aana story❤️❤️…naan kuda
    jaathi veri la enga kola panitangalo nu pathariten🥺…but romba azhaga eluthirukinga❣️❣️🤩🤩🤩🤩🤩cute ah vum irunthuchu at the same time ninga sonna msg um semma🔥🔥🔥🔥🔥🔥jaathi ah vechi namma edhum pana poradhu ila nu romba azhaga soltinga🥰…vera level story…enaku romba pudichiruku❤️❤️❤️❤️😍😍😍😍😍✨✨✨

  2. மிக நேர்த்தியான படைப்பு. நயத்துடன் ஈர்க்கும் எழுத்து. கதை நகர்வை கூற வார்த்தைகளே இல்லை. மனதிற்கு நெருக்கமாக மாறி விட்டனர் கதை மாந்தர்கள் மேலும் சிறக்க வாழ்த்துகள்.

  3. ஹர்ஷி,வாசு லவ் செய் க்யூட் சிஸ்..மாறன், ரதன் மேலே ஆரம்பத்துல கோவம் இருந்தாலும் கடைசில மகளோட காதலை புரிந்த இடத்துல மனசுல நின்னுட்டாங்க…..அழகிய எழுத்து நடை,சொல்ல வந்த கருத்தை அழகா சொல்லியதெல்லாம் அருமை சிஸ்.. வாழ்த்துக்கள் 💐💐💐💐💐