Loading

ரிஷி ஆர்த்தியைப் பார்க்க அவள் வீட்டுக்கு வந்தான். முரளி அவனைப் பார்த்து,”வா ரிஷி. என்ன இந்தப் பக்கம்??”

“அங்கிள் நான் ஆர்த்திகிட்ட கொஞ்சம் பேசனும்.”

“ஆர்த்திகிட்ட பேச என்ன இருக்கு??”

“இல்லை அங்கிள், ஆர்த்தியை அழ வச்சுட்டு எனக்குக் கல்யாணம் பண்ணிக்குறதுல சம்மதம் இல்லை. அதான் என் நிலைமையை அவகிட்ட சொல்லி புரியவைக்கனும் அங்கிள்.”

“ஹிம். நீ பேசியாவது அவ புரிஞ்சுக்குறாளானு பார்ப்போம். போய் பேசிட்டு வா. மேல வாசுகி கூடத் தான் இருக்கா. அவளை இப்போலாம் தனியா விடவே பயமா இருக்கு.”

“நான் பேசுறேன் அங்கிள்.” என்று கூறிவிட்டு ரிஷி மேலே போனான்.

ஆர்த்தி ஏதோ பறி கொடுத்தவள் போல் அமர்ந்திருந்தாள். பக்கத்தில் வாசுகி ஒரு நாவலோடு உட்கார்ந்திருந்தார். அவருக்கும் கவனம் புத்தகத்தில் இல்லை. தான் இத்தனை நாள் எவ்ளோ மோசமாக இருந்தோம் என்று சுய அலசலில் ஈடுபட்டிருந்தார். ரிஷி கதவில் தட்டச் சிந்தனை கலைந்த வாசுகி அவனைப் பார்த்தார்.

“என்ன ரிஷி இங்க வந்துருக்க??” ரிஷி என்ற பெயரைக் கேட்டவுடன் ஆர்த்தி என்ற சிலைக்கு உயிர் வந்தது. அவள் கண்களில் ரிஷியை அங்கு கண்டதும் பிரகாசமாயின. வேகமாக அவனிடம் சென்று,”எனக்குத் தெரியும் ரிஷி. நீ எப்படியும் என்னைத் தேடி வருவனு. தாங்க் யூ ரிஷி.” என்று அவனை அனைத்துக் கொண்டாள். ஆனால் ரிஷி கல் போல் நின்றிருந்தான். மெதுவாக அவளை விடுத்து,”ஆர்த்தி உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.”

“கொஞ்சம் என்ன நிறையவே பேசலாம் ரிஷி. வா வந்து உட்கார்.”

“ஆனால் நான் பேசுறதுக்கு முன்னாடி எனக்கு நீ ஒரு சத்தியம் பண்ணி குடுக்கனும்.”

“என்ன சத்தியம் ரிஷி??”

“நான் பேசும் போது நீ கோவப்பட கூடாது. அப்புறம் சுயமா சிந்திச்சு பதில் பேசனும். உங்க பாட்டி, அம்மா, அப்பா இப்படி எல்லார் பேச்சையும் மறந்துட்டு நான் சொல்றதை தெளிவா கேட்டு பதில் சொல்லனும் புரியுதா??”

“ம் சரி ரிஷி.” என்று அவன் கையில் அடித்து சத்தியம் செய்தாள்.

“சரி நீங்க பேசிட்டு இருங்க, நான் சாப்பிட, குடிக்க ஏதாவது குடுத்துவிடுறேன்.” என்று கூறிவிட்டு வாசுகி கீழேச் சென்றார்.

“ஆர்த்தி நீ என்னை லவ் பண்றியா??”

“ப்ச் என்ன கேள்வி இது. நான் உன்னை மட்டும் தான் லவ் பண்றேன். எதுக்கு உனக்குத் தேவையில்லாத சந்தேகம்??”

“சந்தேகம் தான். சரி அதை விடு. நீ என்னை லவ் பண்றனு சொல்றள?? அப்போ என்னை பத்தி சொல்லு பார்க்கலாம்.” என்று ரிஷி கூற, ஆர்த்தி வேகமாக,”ப்ச் என்ன இது??”

“சொல்லு ஆர்த்தி.”

“சரி ஓகே. உன் பெயர் ரிஷி. உன்னோட அம்மா அப்பாவ என் பாட்டி கொலை பண்ணிட்டாங்க. உனக்கு சஞ்சய், நளினி ஆண்டி, ப்ரகாஷ் அங்கிளை ரொம்ப பிடிக்கும். இப்போதைக்கு காலேஜ்ல வொர்க் பண்ற, கொஞ்ச நாள் கழிச்சு கம்பெனியை டேக் ஓவர் பண்ண போற. அவ்ளோ தான்.”

“இல்லை ஆர்த்தி, இதலாம் என்கிட்ட முதல் முறை பேசுறவங்களே சொல்லிடுவாங்க. ஆனால் உனக்கு என்னை கிட்ட தட்ட பதினாறு வருஷம் தெரியும். எனக்குப் பிடிச்சது எது பிடிக்காதது எதுனே உனக்குத் தெரியலை. நாம ஒருத்தரை லவ் பண்றோம்னா அவங்களுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுனு தெரிஞ்சு வச்சுப்போம். ஆனால் உனக்கு என்னைப் பத்தி எதுவும் தெரியலை. உனக்கு என் மேல லவ் இல்லை ஆர்த்தி. உங்க பாட்டி உன் மனசுல என் மேல லவ் இருக்குற மாதிரி பேசி உன் மனசைக் கெடுத்து வைச்சுருக்காங்க. இது காதலே இல்லை. இன்னைக்கு இல்லைனாலும் கண்டிப்பா ஒரு நாள் உனக்குனு பிறந்தவன் வரத் தான் செய்வான். அவன் உன்னை திகட்டத் திகட்ட காதலிப்பான். அப்போ உனக்கு இதலாம் நினைச்சா சிரிப்பா வரும். அதனால யோசி ஆர்த்தி. உங்க அப்பா சொன்ன மாதிரி வடநாடு போய்ட்டு வா. கண்டிப்பா உன் மனசுல மாற்றம் வரும். எனக்கு அதுல முழு நம்பிக்கை இருக்கு.” ரிஷி கூற, ஆர்த்தி யோசித்தாள்.

“அங்க போய்ட்டு வந்தும் என் லவ் மாறலைனா??”

“ஹா ஹா கண்டிப்பா மாறும். மாறாட்டி அப்போ பார்த்துக்கலாம். உங்க அப்பா கீழ எவ்ளோ வருத்தமா இருக்கார் தெரியுமா?? உங்க பாட்டியைப் பத்தி நினைக்காத, அவங்களாம் மனிதப் பிறவியே இல்லை. உன் மேல அவங்களுக்கு பாசம் எல்லாம் இல்லை. உன்னை வச்சு அந்த கம்பெனியை அவங்க பெயருக்குக் கொண்டு வரனும். அது மட்டும் தான் அவங்களோட குறிக்கோள். உங்க அப்பாவுக்கா யோசி. வடநாடு போய்ட்டு வா. கண்டிப்பா உன் வாழ்க்கைல ஒரு மாற்றம் வரும். அங்க கவுன்ச்லிங் மட்டும் தர மாட்டாங்க, யோகா,தியானம் எல்லாம் சொல்லி கொடுப்பாங்க. அதனால உன்னை இவ்ளோ ஸ்ட்ரெஸ் பண்ணி சொல்றேன்.”என்று ரிஷி கூற,

“சரி ரிஷி. நீ இவ்ளோ சொல்ற, கண்டிப்பா நான் போறேன்.” என்று கூறினாள்.

“அப்போ எனக்கு இன்னொரு சத்தியம் பண்ணி குடு.”

“என்ன ரிஷி??”

“இனிமே இடியாடிக்கா சூசைட் ட்ரை பண்ண மாட்டனு!!”

“கண்டிப்பா இனிமே அப்படி பண்ண மாட்டேன் ரிஷி.” என்று சத்தியம் செய்தாள். இப்பொழுது தான் ரிஷிக்கு நிம்மதியாக இருந்தது.

“சரி ஆர்த்தி நான் கிளம்புறேன்.” என்று கூறிவிட்டு ரிஷி கீழே வந்தான். அங்கு முரளியும் வாசுகியும் கவலையுடன் அமர்ந்திருந்தனர்.

“அங்கிள் நான் ஆர்த்திகிட்ட பேசிட்டேன். அவ இனிமே எந்த தப்பான முடிவுக்கும் போக மாட்டா. அப்புறம் வடநாடு வரதுக்கும் சரினு சொல்லிட்டா. அங்கிருந்து திரும்ப வரும் போது கண்டிப்பா ஆர்த்தி மாறியிருப்பா அங்கிள்.”

“ரொம்ப தாங்க்ஸ் ரிஷி. ஆர்த்தி மட்டும் மாறிட்டா எனக்கு அதை விட பெரிய சந்தோஷம் எதுவுமில்லை.” என்று உணர்ச்சிவசப்பட்டு சொல்லு. ரிஷி அவன் கையை அழுத்தி ஆறுதல் படுத்தினான். அங்கிருந்து கிளம்பி சமியின் வீட்டுக்குச் சென்றான்.

சமி வீட்டில், அவள் சோகமே உருவமாக உட்கார்ந்திருந்தாள். உள்ளே வந்த ரிஷி அவளிடம்,”என்னாச்சு யுகி?? ஏன் இப்படி உட்கார்ந்திருக்க??”

“ப்ச் ஆஷ் பெங்களூருக்கு போறான்.”

“எதுக்கு??”

“யூ.பி.எஸ்.சி கோச்சிங்கு போறான்.”

“நல்ல விஷயம் தான, இதுக்கு போய் இப்படி சோகமா உட்கார்ந்திருக்க??”

“ப்ச் இப்ப படிக்க போவான். அப்புறம் எக்ஸாம்,போஸ்டிங்னு போய்டுவான். அதுக்கு அப்புறம் அவன் எங்க கூட இருக்குறது எப்பவோ!!!”

“என்ன யுகி இப்படி பேசுற?? இத்தனை வருஷம் உன் கூட தான இருந்தான். இது அவனோட கனவு, வாழ்க்கை. இப்போ நீ அவனைச் சந்தோஷமா அனுப்பி வைக்கனும். இப்படி நீ சோகமா இருக்கிறதைப் பார்த்தா அவன் மனசு கஷ்டப்படாதா??”

“ஹிம் நீ சொல்றதும் கரெக்ட் தான். இருந்தாலும் மனசுக்குக் கஷ்டமா தான் இருக்கு. பட் ஆஷ் முன்னாடி நான் காமிச்சுக்க மாட்டேன்.”

“தட்ஸ் மை கேர்ள்.” என்று கூறி அவளை அனைத்து உச்சியில் முத்தம் குடுத்தான். அதே நேரம் அங்கு வந்த வாசு அந்தக் காட்சியைப் பார்த்து தன் தொண்டையைக் கனைத்து அவரின் இருப்பைக் காட்டினார்.

“அது எப்படி கரெக்ட்டா நான் உன் கிட்ட வரும் போது உங்க அப்பாக்கு மூக்கு வேர்த்துரும்.”என்று முணுமுணுத்துக் கொண்டு தள்ளி அமர்ந்தான் ரிஷி.

“ரிஷி ஒரு நிமிஷம் உள்ள வா. உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.” என்று வாசு கூற, ரிஷி அவரின் பின்னே சென்றான்.

உள்ளே வந்ததும் வாசு கதவை லாக் செய்ய ரிஷி யோசனையுடன் அவரைப் பார்த்தான். வாசு அவனை நெருங்கி அனைத்துக் கொண்டார். ரிஷி ஆச்சரியமாக அவரைப் பார்க்க, வாசு கண்கள் கலங்க அவனை விடுத்து,”எனக்கு என் குடும்பம் தான் எல்லாமே. அவங்களுக்காக தான் நான் உயிர் வாழுறதே. நேத்து அந்த கங்கா என் பொண்ண கத்தியால குத்த வந்தப்போ உண்மையிலே நான் ரொம்ப பயந்துட்டேன். நல்ல வேளை நீ காப்பாத்திட்ட. அப்போவே முடிவு பண்ணிட்டேன் நீ தான் என் பொண்ணுக்கு கரெக்ட்டான துணைனு. அதான் உங்க கல்யாணத்துக்கு சரினு சொன்னேன். என் பொண்ண நல்லா பார்த்துக்கோ.” என்று கூற,

“அங்கிள் உங்களை மாதிரி தான் நானும். எப்படி நீங்க ஆண்டி சொன்னா மறு பேச்சில்லாம நடந்துக்குறீங்களோ அதே மாதிரி நானும் யுகி பேச்சை தட்டாமா நடந்துக்குறேன்.” என்று கூற, வாசு சிரித்துக் கொண்டே அவன் முதுகில் செல்லமாக அடித்தார்.

“முன்னேறிடுவ நீ. சரி வா போகலாம். என் பொண்ணு பயந்துட்டு இருப்பா.” என்று வாசு கூற, இருவரும் வெளியே வந்தனர். வாசு ரிஷியின் தோளில் கை போட்டு வருவதைப் பார்த்த பின் தான் சமிக்கு நிம்மதியாக இருந்தது.

“பாப்ஸ் என்ன பேசுனீங்க??”

“ஒன்னுமில்லைடா சும்மா தான் பேசிட்டு இருந்தோம்.”

“இல்லை யுகி உங்க அப்பா என் கையைப் பிடிச்சு கொஞ்சிட்டு இருந்தார்.” என்று போட்டுக் குடுக்க, அப்பொழுது அங்கு வந்த யாமினி, ராம் மற்றும் ஆகாஷ்,சமியுடன் சேர்ந்து சிரித்தனர்.

பத்து வருடங்களுக்குப் பிறகு,

கோயம்பத்தூர், ஆர்.எஸ்.புறத்தில் சமி இல்லம் களை கட்டியது. இன்றோடு சமி மற்றும் ரிஷிக்கு கல்யாணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகிறது. அதைக் கொண்டாடவே இந்த விழா.

வீட்டின் உள்ளே, யாமினியும் லக்ஷ்மியும் அங்கும் இங்கும் அலைந்து வேலை செய்து கொண்டிருந்தனர். கூடவே ராமுவும் அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தார். அவர் தன் வேலையிலிருந்து விருப்ப ஓய்வுபெற்று முழு நேரமும் தன் மனைவியோடு நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார்.

“ப்ச் வாசு இங்க எவ்ளோ வேலை இருக்கு!!! அண்ணா கூட வேலை செய்றார். உனக்கு என்ன வந்துச்சு?? வந்து எங்களுக்கு உதவி செய்.” என்று யாமினி கூற, அதற்கு வாசு பதில் சொல்லும் முன்,”போ தேவ் வராது. நீ செய்.” என்று மழலை குறள் ஒன்று கேட்டது.

“அனன்யா குட்டி எத்தனை வாட்டி சொல்றது தாத்தாவைப் பேர் சொல்லி கூப்பிடாதனு.”

“பாட்டி எல்லாம் சமிமானால தான் பாப்பாவும் தாத்தாவை அப்படி கூப்பிடுது.” என்று கூறியது இன்னொரு குட்டி செல்லம் ப்ரெஜய், ப்ரீத்தி மற்றும் சஞ்சயின் ஐந்து வயது புதல்வன்.

“ஹான் அவளை சொல்லனும். பிள்ளைங்க முன்னாடி அப்படி கூப்பிடாதனு சொன்ன கேட்டாதான!!” என்று கூறிவிட்டு அனன்யாவிடம் வந்து,”குட்டிமா அம்மா பேட் கேர்ள். அவ சொல்ற மாதிரி நீங்க சொல்லக் கூடாது சரியா. எங்க தாத்தா சொல்லுங்க.”

தன் தலையை இருபுறமும் இல்லை என ஆட்டிவிட்டு,”தேவ்.” என்று திரும்பவும் பெயர் சொல்லியே அழைக்க, யாமினியைத் தவிர அனைவரும் சிரிக்க, யாமினி தன் தலையில் அடித்துக் கொண்டார். அதே நேரம் சமி தங்கள் கட்டுமானக் கம்பெனியில் இருந்தும் ரிஷி கல்லூரியிலிருந்தும் வீட்டினுள் நுழைந்தனர்.

ரிஷியைப் பார்த்த அனன்யா வேகமாக அவனிடம் சென்றாள். ரிஷியும் குட்டியைத் தூக்கி கண்ணத்தில் முத்தமிட்டான்.

“யாம்ஸ் ஆஷ் வந்துட்டானா??”

“இன்னும் அரை மணி நேரத்துல வந்துருவான். ப்ரீத்தியும், சஞ்சயும் இப்ப தான் ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்தாங்க. ட்ரெஸ் மாத்த போய்ருக்காங்க.” என்று யாமினி கூறினார்.

“நீங்களும் போய் சீக்கிரம் ரெடி ஆயிட்டு வாங்க, ரிஷி அப்பா அம்மா எப்ப வராங்க??”

“அவங்ளும் வந்துட்டு இருக்காங்க அத்தை. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க.”

“சரி நீங்க போய் ஃபிரஷ் ஆயிட்டு வாங்க.” என்று கூற, அவர்களும் தங்கள் அறைக்குச் சென்றனர்.

அவர்கள் வருவதற்கு முன் இந்த பத்து வருடங்களில் என்ன நடந்தது என்று பார்த்துவிடலாம்.

சமி தன் முதல் வருடப் படிப்பை மட்டும் சென்னையில் படிக்க, அடுத்த மூன்று வருடமும் கோயம்புத்தூரில் படித்தாள்.

ஆகாஷ் முதல் அட்டெம்ப்டில் கோட்டைவிட, இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்று பூனாவில் முதலில் போஸ்டிங்கில் இருந்தான். பிறகு பல ஊர்களுக்கு மாற்றம் வந்து இப்பொழுது சிங்கார சென்னையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியில் உள்ளான்.

ப்ரீத்தி தங்கள் மருத்துவமனையிலே டாக்டராக உள்ளாள். சஞ்சய் தான் அந்த மருத்துவமனையை இப்பொழுது பார்த்துக் கொள்கிறான்.

ரிஷி, சஞ்சய், ப்ரகாஷ் மற்றும் நளினி சென்னையில் உள்ள சொத்துக்களை விற்றுவிட்டு பொள்ளாச்சியில் விவசாய நிலம் வாங்கிட் குத்தகைக்கு விட்டு கோயம்புத்தூரில் சமியின் வீடு இருக்கும் பகுதியிலே ஒரு வீடு வாங்கி குடியேறி விட்டனர்.

ரிஷியும் சஞ்சயும் அவர்களது கம்பெனி பங்குகளை ஆர்த்தி பெயருக்கு எழுதி வைத்துவிட்டனர்.

ஆர்த்தி வயநாடு போய் விட்டு வந்து முற்றிலும் நல்லபடியாக மாறிவிட்டாள். அவளுக்குப் புரிந்தது ரிஷி மேல் தனக்கு இருப்பது காதல் இல்லை என்று. இப்பொழுது அந்த கம்பெனியை அவள் தான் நிறுவகிக்குறாள். அவளுக்கும் கல்யாணம் ஆகி ஒரு பையன் இருக்கிறான். எப்பாவது ரிஷி அவளுடன் ஃபோனில் பேசுவான்.

கங்கா பாட்டி ஒரு வாரம் தான் ஜெயிலில் இருந்தார். அவருக்குத் தீர்ப்பு வருவதற்கு முன்பே மாரடைப்பால் உயிரிழந்தார்.

ஆகாஷ், நளினி மற்றும் ப்ரகாஷும் சமி இல்லம் வர, ப்ரீத்தி,சஞ்சய் அவர்கள் அறையிலிருந்து வர சம்யுக்தா, ரிஷி நந்தன் மற்றும் அனன்யா கேக் கட் செய்து தங்கள் ஐந்தாவது திருமண விழாவை குடும்பத்துடன் சந்தோஷமாகக் கொண்டாடினர்.

முற்றும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    5 Comments

    1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.