Loading

ரிஷி, சஞ்சய், நளினி மற்றும் ப்ரகாஷ் நால்வரும் அவர்கள் வீட்டின் ஹாலில் அமர்ந்திருந்தார்கள். ரிஷி ப்ரகாஷிடம்,”சொல்லுங்க எதுக்கு எங்க அப்பா, அம்மாவ கொலை பண்ணீங்க??” என்று ரிஷி கேட்க, நளினி மற்றும் ப்ரகாஷிற்கு மேலும் அதிர்ச்சி.

“ரிஷி!!!” என்று நளினி அதிர்ச்சியுடன் கூற, ரிஷி அவரைக் கண்டுக்காமல் ப்ரகாஷிடம்,”அப்போ இத்தனை நாள் உங்க குற்றவுணர்ச்சில தான் என்னை வளர்த்தீங்களா??”

“அய்யோ ரிஷி அப்படிலாம் சொல்லாத. உன்னை நான் என் தம்பி பையனா இத்தனை நாள் பார்த்ததே இல்லை. எனக்கு அது மறந்து கூட போய்டுச்சு.”

“அப்போ சொல்லுங்க. ஏன் கொலை பண்ணீங்க??”

“திரும்பத் திரும்ப அப்படிச் சொல்லாத ரிஷி. அது என்னையே அறியாமல் நடந்த ஒன்னு.” என்று கூற, ரிஷியும் சஞ்சயும் எதுவும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“என்ன சொல்றீங்க??”

“ஆமா ரிஷி. நான் முதல்ல இருந்து சொன்னா தான் உங்க எல்லாருக்கும் புரியும்.” என்று கூறி தன் கடந்த காலத்தைக் கூற ஆரம்பித்தார்.

முப்பது வருடங்களுக்கு முன்பு,

அப்பொழுது தான் ப்ரகாஷ் கல்லூரி முடித்திருந்தார். முரளிக்கும் ப்ரகாஷிற்கும் ஒரே வயது. ப்ரகாஷின் தாய் அவரின் சிறு வயதில் இறந்துவிட்டார்.

ப்ரகாஷின் தந்தை நாராயணன், முரளியின் தந்தை தியாகராஜன் மற்றும் அவரின் மனைவி கங்கா அமர்ந்திருந்தனர். முரளியும் ப்ரகாஷும் பக்கத்தில் நின்றிருந்தனர்.

“அப்புறம் இரண்டு பேர் அடுத்து என்ன பண்ண போறீங்க??” என்று நாராயணன் கேட்டார்.

“அப்பா நீங்க என்ன சொல்றீங்களோ அதே செய்றேன் அப்பா.”

“ஆமா பெரியவங்க நீங்க என்ன சொல்றீங்களோ அப்படியே செய்றோம்.” என்று முரளியும் கூற, பெரியவர்கள் இருவரையும் பெருமையாகப் பார்த்தனர்.

“சரி அப்ப நாராயணா இரண்டு பேரும் நாளைல இருந்து நம்ம கூட ஆஃபிஸ் வரட்டும்.”

“ம் அத தான் நானும் யோசிச்சேன். எப்படி இருந்தாலும் இவங்க இரண்டு பேரும் தான் நமக்கு அப்புறம் தொழில பார்த்துக்க போறாங்க. அதனால் நாளைல இருந்து இரண்டு பேரும் வந்துருங்க.”என்று கூற, இருவரும் தலை அசைத்தனர்.

நாட்கள் அதன் போக்கில் சென்றன. தொழிலும் நல்லபடியாக இருந்தது. இரண்டு வருடத்தில் ப்ரகாஷிற்கு திருமணம் செய்து வைத்தனர். முரளிக்கும் பெண் பார்த்துக் கொண்டு தான் இருந்தனர். அவருக்கு எதுவும் அமையவில்லை. அந்த சமயம் தான் ரிஷியின் தந்தை மனோஹர் கல்லூரி முடித்து இருந்தார்.

“மனோ அதான் படிச்சு முடிச்சுட்டல, நாளைல இருந்து நம்ம ஆஃபிஸ் வந்து ப்ரகாஷ்கும் முரளிக்கும் உதவியா இரு.” என்று சாப்பிடும் போது கூறினார்.

“அப்பா எனக்கு மேல படிக்கனும்.”

“என்னடா சொல்ற?? மேல படிக்கனுமா?? நளினியோட தங்கச்சி ஜானகிக்கு அடுத்த வருஷம் படிப்பு முடியுது. உனக்கும் அவளுக்கும் கல்யாணம் பேசி முடிச்சாச்சு ஞாபகம் இருக்குல??”

“அப்பா எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. எனக்கு இருபது ஒன்னு தான் பா ஆகுது. அதுக்குள்ள எதுக்கு பா எனக்குக் கல்யாணம்??”

“எப்பல இருந்து நீ இப்படி எதிர்த்துப் பேச ஆரம்பிச்ச?? இல்லை வேற யாரையாவது நீ காதலிக்கிறியா??”

“அய்யோ அப்பா அப்படிலாம் இல்லை. நான் ஜானகியையே கல்யாணம் பண்ணிக்கிறேனா. ஆனால் எனக்கு ஒரு மூணு வருஷம் தாங்க அப்பா. நான் படிச்சு முடிச்சுக்கிறேன். அண்ணாக்கு கூட ஆஃபிஸ் வந்ததுக்கு அப்புறம் தான கல்யாணம் பண்ணி வச்சீங்க.” என்று கூற, அவர் யோசித்துவிட்டு,”சரி உன் இஷ்டப்படி படி.” என்று கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார்.

மனோஹரும் சந்தோஷத்துடன் சென்றார். அதே போல் படிப்பு முடிந்து சிறிது காலம் அவர்கள் ஆஃபிஸில் வேலை செய்தார். அவரின் பல ஐடியாவில் கம்பெனி பல மடங்கு முன்னேறியது. இதில் நாரயணன்கு மிகுந்த சந்தோஷம். அதனால் நளினி வீட்டில் பேசி கல்யாணத்தை அப்பொழுதே நடத்தியும் முடித்தார். மனோஹரின் உழைப்பைப் பார்த்து நாராயணன் ஒரு முடிவு செய்தார். அதாவது மனோஹரை மெ.டி ஆக்குவது என்று. இதை தியாகராஜனிடமும் கூறினார்.

“தியாகு நம்ம மனோ நல்ல திறமைசாலி. அவனை ஏன் நம்ம கம்பெனிக்கு எம்.டி ஆக்க கூடாது??”

“அது நல்ல விஷயம் தான். ஆனால் மத்த இரண்டு பேரும் இதுக்கு ஒத்துக்கணும். அதுவுமில்லாம அவங்களுக்குள்ள காழ்ப்புணர்ச்சி வந்துர கூடாது.” என்று கூறினார். நாராயணனும் இதை ஒத்துக் கொண்டார். அதனால் ஒரு திட்டம் வகுத்தனர். அதாவது நான்கு மாதக் காலம் ஒருவர் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்குக் கொடுத்த அந்த கால நேரத்தில் கம்பெனியின் நலனுக்கு எதாவது செய்ய வேண்டும். அப்படி செய்பவர் நிரந்தரமாக கம்பெனியின் எம்.டி ஆக நியமிக்கப் படுவர் என்று மூவரிடமும் கூறினர். மூவருக்கும் இது நல்ல வாய்ப்பாகத் தோன்ற, மூவரும் சந்தோஷத்துடன ஒத்துக் கொண்டனர்.

முதலில் முரளி தான் பொறுப்பு எடுத்துக் கொண்டார். அவர் பொறுப்பு எடுத்துக் கொண்ட இரண்டாவது மாதம் அவருக்குக் கல்யாணம் ஆனது. ஆனால் அவரின் கல்யாணம் முடிந்த சிறு நாட்களில் அவர் தந்தை மாரடைப்பால் உயிர் இழந்தார். மீதமிருந்த ஒரு மாதத்தில் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் தான் கங்கா ஆஃபிஸ் வர ஆரம்பித்தார். அவருக்கு கம்பெனியில் என்ன நடக்கிறதென அனைத்தும் தெரியும். தினமும் தியாகராஜன் கம்பெனியில் நடக்கும் அனைத்தையும் அவரிடம் சொல்லிவிடுவார். தியாகராஜன் இருந்த போதே அவர் நிறைய முறை வந்துள்ளார். அதனால் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவர் வந்ததிலிருந்து தான் பிரச்சனை வெடிக்க ஆரம்பித்து.

ஒரு நாள் ஆஃபிஸில், சில வேலை ஆட்களால் சம்பளப் பிரச்சனை வெடித்தது. நிர்வாகத்திற்கு வேண்டியவர்களுக்குச் சம்பளம் அதிகமாகவும் மற்றவர்களுக்கு சம்பளம் குறைவாகத் தருவதாகவும், இந்த நடைமுறையை மாற்றாவிட்டால் ஸ்டிரைக் நடத்தப் போவதாகவும் கூறினர். அப்பொழுது பொறுப்பில் இருந்தது பிரகாஷ் தான். அவர் பிரச்சனையை சரி செய்வதற்கு பதிலாக அதைப் பெரிது படுத்தி விட்டார். அதாவது ஸ்டிரைக் செய்வேன் என்று கூறியவர்களை பணியிலிருந்து நீக்கிவிட்டார். அதனால் பிரச்சனை பயங்கரமாக வெடித்தது.

“என்ன பண்ணிருக்க ப்ரகாஷ்?? யார கேட்டு நீ அவங்களை வேலைல இருந்து தூக்கின??” என்று கோவமாகக் கேட்டார் நாராயணன்.

“அப்பா நான் தான் இப்ப அங்க எம்.டி. எனக்கு இந்த உரிமை கூட இல்லையா அப்பா??” முதல் முறை தன் தந்தையை எதிர்த்து கேள்வி கேட்டார் ப்ரகாஷ்.

“உரிமையைப் பத்தி பேசற நேரம் இல்லை இது
நீ பண்ண தப்பைப் பத்தி தான் இப்ப பேசனும். சொல்லு நீ அவங்களை எதுக்கு வேலையை விட்டு தூக்கின???”

“அப்பா என்னபா இப்படி கேக்குறீங்க?? அப்போ அவங்க செய்வதெல்லாம் சரியா??”

“அவங்க செய்தது தப்பு. அதை நீ எடுத்து சொல்லி அவங்ககிட்ட பேசிருக்கனும். நம்ம யாருக்கும் அதிகமா சம்பளம் தரலை. யார் இப்படி புரளி கிளப்பி விட்டாங்கனு தெரியலை. அதைக் கண்டுபிடிச்சு பிரச்சனையைச் சரி படுத்துறதை விடுத்து வேலை செய்றவங்கள வேலையை விட்டு தூக்கிருக்க??” என்று காட்டமாகக் கேட்டார்.

“ஆமா அண்ணா நீங்க கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம். இப்ப பாருங்க பிரச்சனை பெரிசா ஆயிடுச்சு. சரி விடுங்க நான் போய் பேசுறேன். நீங்க போய் ஃபேக்ட்ரில எல்லார்கிட்டேயும் பேசுங்க. நான் இவங்ககிட்ட மன்னிப்பு கேட்டுத் திரும்ப வேலைக்குச் சேர்த்த ஆர்டர் குடுத்துட்டு வரேன்.” என்று மனோஹர் சொல்ல,

“அவன் சொல்றதை செய். தேவை இல்லாத வேலைலாம் செய்யாத புரியாது?? முதல்ல போய் கண்டுபிடி இந்த பிரச்சனைக்குப் பின்னாடி யார் இருக்காங்கன்னு. இதையாவது உருப்படியா செய்.” என்று நாராயணன் கோவமாகக் கூறிவிட்டுச் சென்று விட்டார்.

ப்ரகாஷ கோவமாக மனோஹரிடம்,”இங்க பார் நீ சொல்லி நான் கேட்கனுமா??? இப்ப வந்துட்டு என்ன ரொம்ப ஆடுற?? நான் இந்த கம்பெனில நாலு வருஷம் இருக்கேன்டா எனக்குத் தெரியாதது உனக்குத் தெரியுமா?? அப்பா உன்னைத் தூக்கி வச்சு பேசற மதப்புல திரியுற!!! பார்த்துக்கிறேன் இன்னும் எத்தனை நாள்னு.”என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். இதைக் கேட்ட மனோஹருக்கோ பக்கென இருந்தது. தன் அண்ணன் தன் மீது பொறாமை கொண்டுள்ளார் என்பதைப் பார்த்து மிகவும் வருத்தம் கொண்டார். முதலில் கம்பெனியில் நடந்த பிரச்சனையைச் சரி செய்வோம் பின் இதைப் பார்த்துக்கலாம் என்று விட்டுவிட்டார். இந்த சண்டையை கங்காவும் பார்த்துவிட்டார். இதைத் தனக்குச் சாதகமாக உபயோகிக்கவும் முடிவு செய்துவிட்டார்.

கம்பெனி சென்ற மனோஹர் அந்த ஊழியர்களிடம் பேசி, கம்பெனியின் சம்பளப் பட்டுவாடாவைக் காட்டி அவர்கள் சொன்னது போல எதுவும் நடக்கவில்லை என்று தெளிவுபடுத்தி அந்த போராட்டத்தை கைவிட வைத்தார். அது மட்டுமில்லாமல் அவர்களை வேலையிலும் சேர்த்துக் கொண்டார். இங்கு ப்ரகாஷால் எவ்ளோ முயன்றும் யார் இப்படி செய்ய வைத்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனெனில் இதைச் செய்ய வைத்ததே கங்கா தான். அவருக்கு எங்கு ப்ரகாஷ் ஏதாவது செய்து இந்த கம்பெனியின் எம்.டி. ஆகிவிடுவாரோ என்ற பதற்றம். ஆனால் அவரே எதிர்பார்க்காமல் நடந்தது தான் ப்ரகாஷ் மனோஹர் மீது கோவம் கொண்டது. இந்த ஒன்று போதும் தான் நினைத்தது நடக்கும் என்று மகிழ்ச்சியாக இருந்தார். பிரச்சனை முடிந்ததால் அதை அப்படியே எல்லாரும் விட்டுவிட்டனர்.

ஒரு நாள் ப்ரகாஷ் தனியாக இருப்பதைப் பார்த்து கங்கா அங்குச் சென்றார். அவரைப் பார்த்ததும் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றார்.

“என்ன ப்ரகாஷ் வேலைலாம் எப்படி போகுது??”

“நல்லா போகுது அம்மா.”

“உனக்கு இன்னும் பத்து நாள் இருக்கு இந்த நாற்காலில உட்கார. அதுக்கு அப்புறம் இது உனக்கும் இல்லை. முரளிக்கும் இல்லை.” என்று கூறி பெரு மூச்சு ஒன்று வெளியிட்டார்.

“என்ன அம்மா சொல்றீங்க??”

“ஆமா சும்மா வேலைக்குனு வந்த போதே மனோஹர் பயங்கரமா வேலை செஞ்சான். இப்போ முதலாளி ஆக ஒரு சான்ஸ் கிடைச்சதும் விடுவானா?? நான் சொல்றேன் எழுதி வைச்சுக்கோ மனோஹர் தான் இந்தக் கம்பெனி முதலாளி.” என்று கூற, சிறு வயதில் இருந்தே தந்தை தம்பியைப் புகழ்ந்து பேசிய படியே இருக்க, ப்ரகாஷிற்கு தம்பியைப் பிடிக்காமல் போனது. இப்போது அதே தான் நடந்தது.

“ஆனாலும் அவனும் சும்மா இல்லையே. என்ன என்ன வேலைலாம் செய்றான்!!! பின்ன சும்மாவா ஒரு கம்பெனிக்கு முதலாளியாக இருக்குறதுனா.”என்று கூற,ப்ரகாஷ் அவரை பார்த்து,” நீங்க என்ன சொல்றீங்க??”

“அட இன்னுமா உனக்கு புரியலை. அன்னைக்கு நம்மகிட்ட வேலை செஞ்சவங்களை தூண்டி விட்டது யாரு?? எல்லாம் உன் தம்பி தான்.” என்று கூற,

“அம்மா என்ன சொல்றீங்க??”

“ஆமா அதனால தான் நீ அவங்களை வேலை விட்டு தூக்கினதும் எங்க அவன் தண்டவாளம்லா வெளில வந்துருமோனு வேக வேகமாக வந்து அவங்களை மறுபடியும் வேலைக்குச் சேர்த்துட்டான்.”என்று கூற, ப்ரகாஷ் அதை அப்படியே நம்பினார். வேகமாக அங்கு இருந்து வீட்டுக்குச் சென்றார்.

வீட்டில் எல்லாரும் சந்தோஷமாக இருந்தனர். ஆம் ஜானகி கருவுற்றிருந்தார். நளினிக்குக் கல்யாணம் ஆகி இத்தனை வருடங்களில் அவருக்குக் குழந்தை எதுவுமில்லை. ஆனாலும் சந்தோஷமாக தன் தங்கையின் மகிழ்ச்சியை தன் மகிழ்ச்சியாகக் கொண்டாடினார். அப்பொழுது அங்கு வந்த ப்ரகாஷ் மனோ சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து உள்ளம் கொதித்தது. வேகமாக அவரிடம் சென்று அவரை அடித்துவிட்டார். எல்லாரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியாக, நாராயணன் தன் பெரிய பையனிடம் வந்து,”இப்ப எதுக்குடா அவனை அடிச்ச??”

ப்ரகாஷ் தன் தந்தையின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் மனோவைப் பார்த்து,”என்னை வீழ்த்திட்டோம்னு நினைச்சு சந்தோஷப்படுறியா?? ஆம்பளையா நேரா நின்னு மோதுடா அதை விட்டுட்டு இப்படி முதுகில குத்துற??? வெக்கமா இல்லை உனக்கு??” என்று அவர் கோவமாகக் கேட்க,யாருக்கும் ஒன்று புரியவில்லை.

“இப்போ எதுக்கு அவனை அடிச்ச?? அதை முதல்ல சொல்லுடானா. ஏதோ ஏதோ பேசிட்டு இருக்க??”

“அப்பா அவனையே தலைல தூக்கி வைச்சு கொண்டாடுங்க. அம்மா மட்டும் உயிரோட இருந்திருந்தா இப்படி பாகுபாடு பார்த்துருப்பாங்களா??” என்று கூற, நாராயணனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“அப்ப நான் பாகுபாடு பார்க்கிறேனு சொல்றியா??”

“இதை நான் வேற சொல்லனுமா!!”

“அப்படி என்னடா நான் பாகுபாடு காட்டுனேன்??”

“சின்ன பிள்ளைல இருந்து எல்லாம் அவன் இஷ்டப்படி தான நடந்துச்சு அவனுக்கு!!! படிப்புல இருந்து போடுற துணி வரைக்கும் அவனுக்கு புடிச்சது தான வாங்கி கொடுத்தீங்க!!”

“டேய் உனக்கு மூளை குழம்பி போச்சா?? நான் எது செஞ்சாலும் நீ ஒன்னும் சொன்னதில்லையே!!! ஆனால் அவன் என்கிட்ட இது வேண்டும் அது வேண்டும்னு கேட்டு வாங்கிட்டான். நீயும் கேட்டிருந்தா எல்லாம் உனக்கும் புடிச்ச மாதிரி நானும் செஞ்சுருப்பேனே.” இந்த நியாயம் எல்லாம் ப்ரகாஷுக்கு புரியவில்லை. கோவம் கண்ணை மூடி இருந்தது.

“அதலாம் எனக்கு தெரியாது அப்பா. சொத்தை பிரிங்க. நான் என் பொண்டாட்டிய கூட்டிட்டு தனியா போறேன். உங்க செல்ல பையனோட நீங்க சந்தோஷமா இருங்க. அவனை தான நீங்க கம்பெனிக்கு முதலாளி ஆக்கனும்னு நீங்க நினைக்கிறீங்க. அதனால அவனே முதலாளியா இருக்கட்டும். நான் போறேன்.” என்று கூற, அதுவரை அமைதியாக இருந்த மனோ,” அண்ணா என்ன இப்படி பேசுற?? அப்பா அப்படிலாம் நம்மகுள்ள பாகுபாடு பார்த்து இல்லை. இப்போ என்ன உனக்கு நான் கம்பெனி வரது பிடிக்கலை அதுதான?? சரி இனிமே நான வரல. அதே மாதிரி நீ போக வேண்டாம். நான் ஜானகியைக் கூப்பிட்டு தனியா போறேன்.” என்று கூற,

“என்ன மனோ நீ?? அவன் தான் புரியாம பேசுறானா நீயும் இப்படி பேசுற?? எங்கடா போவ??”

“அப்பா நானே இதைப் பத்தி பேசலாம்னு இருந்தேன். ஈஸ்வர் இருக்கான்ல. அவன் புதுசா ஒரு கம்பெனி தொடங்க போறான். என்னை பார்ட்னரா வரச் சொல்லிக் கூப்பிட்டு இருந்தான். நான் யோசிச்சு சொல்றேனு சொன்னேன். இப்ப நான் அவன் கூட போய் பிஸினஸ் பண்றேன் அப்பா. அதான் நம்ம கம்பெனியை பார்த்துக்க ப்ரகாஷ அண்ணா இருக்கிறார், முரளி அண்ணா இருக்காங்க. நானும் எதுக்கு அப்பா?? ப்ளீஸ் பா இதுனால ஒரு பிரச்சனை நம்ம வீட்டுல வர வேண்டாம்.” என்று கூற, அவரும் வேறு வழியில்லாமல் சரி என்றார். ப்ரகாஷிற்கு நிம்மதியாக இருந்தது.

ஆனால் பத்து வருடங்கள் கழித்து தன் தந்தை,தம்பி,தம்பி மனைவி, மற்றும் அவனின் நண்பன் அனைவரும் தன்னால் இறந்துவிட்டனர் என்றும் தம்பியின் பையன் தலையில் காயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறான் என்று கேள்விப்படும் பொழுது அந்த நிம்மதியை முற்றிலுமாக தொலைந்து இருப்பார் என்று அப்பொழுதே தெரிந்திருந்தால் அவர் தம்பியை வீட்டை விட்டு அனுப்பி இருந்திருக்க மாட்டாரோ!!!!.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்