Loading

கஞ்சனடா கவிஞ்சா நீ!! 

அத்தியாயம் – 3 ( 3.1 )

 

அந்த கனீர் குரலுக்கு சொந்தக்காரியானவளை பார்க்கும் ஆர்வத்தில் கதவை படாரென்று திறந்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்த அமுதனின் கண்கள் அவளை கண்ட மறுநொடி ஆச்சரியத்தில் விரிய , அதனூடே அவள் அணிந்திருந்த லேப் கோட்டும் , அவள் கையிலிருந்த மஞ்சள் நிற திரவியம் தாங்கிய கண்ணாடி குடுவையையும் கண்டவனது இதழ்கள் புன்முறுவல் பூத்தது. 

அமுதனின் முகமாறுதலையே மரகதவல்லி பாட்டியும் , அப்பெண்ணின் பெற்றோரும் அவனை சுற்றி நின்று கவனித்துக்கொண்டிருக்க , ஆனால் அதை கவனிக்க வேண்டியவளோ கடமையே கண்ணாக கோமியம் தாங்கிய அந்த கண்ணாடி குடுவைக்குள் மீண்டும் ஏதோ ஒரு திரவத்தை ஊற்றிக்கொண்டிருந்தாள். 

அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த அமுதனின் அருகில் வந்த வல்லி பாட்டி , அவன் காதருகே எம்பி

 ” டேய் அமுதா , பெரிய தப்பு நடந்துருச்சு டா. இன்னைக்கு காலைல கோமியம் கேட்டுருந்தாங்கல்ல , அவுங்க இந்த குடும்பம் தான் டா. ரொம்ப சீக்கிரம் வேணும்னு அவசர படுத்துனாங்க , நானும் எதுக்கு வர லட்சமிய வேண்டாம்னு சொல்லணும்னு , கொஞ்சமா இருந்த கோமியத்துல தண்ணீ கலந்து குடுத்துட்டேன் , அதுக்கு போயி இந்த பொண்ணு லப லபனு கத்துறா டா , பத்தாததுக்கு குடும்பமே வந்து உட்கார்ந்துகிட்டு என்னை போலீஸ்ல புடிச்சு குடுத்துவேன்னு பயமுறுத்துறாங்க டா ” என்று புலம்பிக்கொண்டிருக்க , அமுதனோ வல்லி பாட்டி சொல்வது எதுவும் காதிலே விழாதது போல் , திறந்த வாய் மூடாமல் அவளையே வெறித்துக்கொண்டிருந்தான். 

தன்னை வெகுநேரமாய் ஒருவன் பார்வையால் துளைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்தும் அவன் புறம் திரும்பாமல் போக்கு காட்டிக்கொண்டிருந்தவள் , வீட்டை ஒரு முறை பார்வையால் நோட்டம் விட , அங்கே படுக்கையறையில் மாட்டப்பட்டிருந்த கவிதை தாங்கிய அவளது அழகிய புகைப்படம்  கண்களில் பட , அவளது கண்கள் ஆனந்த கண்ணீரை சுமந்திருக்க , உதடுகளோ அக்கவிதையை மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டிருந்தது.

சிகரமாய் நீ உயர்ந்திருக்க 

சமுத்திரமாய் நான் தாழ்ந்திருக்க 

அங்கே சமுத்திரம் பல , சிகரத்தை எக்கி பிடிக்க தவமாய் தவமிருக்க 

இங்கோ சிகரமே தாழ்ந்து , வளைந்து சமுத்திரத்தை தன் வசமாக்க எத்தனிக்க 

இச்சிகரத்திற்கு எப்படி புரியவைப்பது ? 

சமுத்திரம் சிகரம் வசமாகி வருடங்கள் பல கடந்துவிட்டதென்று …..

– கவிஞ்சன் அமுதன் 

இதில் சமுத்திரமாய் நான் , சிகரமாய் என்னவள், என்னுயிரானவள் , என் இதயராணி வந்திதா (  வருங்கால உணவு பாதுகாப்பு அதிகாரி ) ….

இக்கவிதையை படித்தவளது பால் முகம் வெட்கத்தில் சிவந்திருக்க , ஆசையுடன் அக்கவிதைக்கு கீழே இருந்த இரண்டு வரிகளை படித்த மறுநொடி இம்முறை அம்முகம் கோவத்தில் சிவந்தது.

அவளது முகத்தையே உற்று நோக்கிக்கொண்டிருந்த அமுதன் அவளது முகமாறுதல்களை வைத்தே அவளது மனதை படித்தவன் இன்று  தனக்கு நிச்சயம் ஒரு சிறப்பான சம்பவம் இருக்கிறது என்று நினைத்து முடிப்பதற்குள்ளே , அவனை நெருங்கிய அந்த லேப் கோட் அணிந்த பெண் , அவனது வலது காதை பிடித்து நன்கு திருகிக்கொண்டே நேரே அக்கவிதை தாங்கிய புகைப்படத்திற்கு முன் அழைத்து வந்தாள் இல்லை இல்லை இழுத்து வந்தாள்.

 ” டேய் அமுதா  உனக்கு எவ்ளோ கொழுப்பிருந்தா என்னையவே  கிண்டல் பண்ணி கவிதை எழுதியிருப்ப ? என்னை பார்த்தா உனக்கென்ன மாமிச மலை மாதிரியா இருக்கு ? ” என்று அமுதனிடம் சண்டைக்கு சென்றவள் அவன் தலையில் நங்கென்று ஒரு கொட்டு வைக்க , அமுதன் சுற்றி இருந்த அனைவரையும்  நோக்கி ” ஐயோ யாராச்சும் இந்த வந்தி கிட்டயிருந்து என்னை காப்பாத்துங்களேன் ”  என்று கத்த , வந்தியின் பெற்றோரும் , தம்பியும் அமுதன் கத்துவது காதிலே விழாதது போல் தங்களுக்குள் ஏதோ சிரித்து பேசுவதுபோல் நடிக்க , நம் வல்லி பாட்டி அமுதன் வந்தி என்று கூறியதிலேயே விஷயத்தை புரிந்துக்கொண்டவர் தன் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு வேறுபுரம் திரும்பிக்கொண்டார்.

தன்னை சுற்றியிருப்போரில் யாராவது ஒருவரேனும் தனக்கு துணைக்கு வருவார்களா ? என்று தன் முகத்தை பாவம் போல் வைத்துக்கொண்டு அமுதன் அனைவரையும் நோக்க , அதற்குள் வந்தி அவன் காதை மீண்டும் பிடித்து நன்கு திருகிக்கொண்டே ” ஹலோ அமுதா , அங்க என்ன லுக் ? முதல்ல நா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு. எதுக்கு என்னை வார்த்தைக்கு வார்த்தை சிகரம் சிகரம்னு சொல்லி கிண்டல் பண்ணி வச்சிருக்க ? நா என்ன அவ்ளோ குண்டா வா இருக்கேன் ? ” என்று கோவத்தில் ஆரம்பித்து சிணுங்களில் முடித்தாள்.

அவள் கூறுவதை அமைதியாக  கேட்டுக்கொண்டிருந்த அமுதன் இறுதியாக அவள் சிணுங்கலில் தன்னை துலைத்தவன் , அவள் கன்னங்களை தன் கரங்கள் கொண்டு மெல்ல வருடியவன் 

” ஐயோ வந்தி, நா உன்ன சிகரம்னு சொன்னது உன்னோட உயரத்தை வந்தி” 

ஆனால் அவன் கூறியதை தவறாக புரிந்துக்கொண்டவளோ ” சும்மா பொய் சொல்லாத அமுதா  . என் உயரம் ஜஸ்ட் 5.5 அடி தான் , உன் உயரம் தான் 6.8 அடி. உன்ன விட நா குள்ளம் தான். சும்மா எதையாச்சும் சொல்லி சமாளிக்காத.” என்று தன் கன்னத்திலிருந்து அவன் கையை தட்டிவிட பார்க்க , அவள் தமிழ் புலமையை கண்டு தன் தலையில் அடித்துக்கொண்ட அமுதன் , அவள் கைகளை கெட்டியாக பிடித்துக்கொண்டு 

” வந்திதா இங்க பாரு டா , நா உயரம்னு சொன்னது உடல் உயரத்த இல்ல , நா வாழுற உன் அழகான உள்ளம் இருக்குல்ல , அதோட  உயரத்த சொன்னேன். உடலவுள வேணும்னா நா உன்ன விட உயர்ந்தவனா இருக்கலாம். ஆனா என்கிட்ட  காசு, பணம், குலம் , கோத்திரம்னு , எதையும் பார்க்காம என்னை எனக்காகவே  காதலிச்ச உன் உள்ள உசரத்துக்கு முன்னாடி நா எதுவுமே இல்லமா ” என்று உணர்ச்சி பொங்க சொன்ன அமுதனையே கண்களில் காதல் பொங்க பார்த்திருந்தாள் அவனால் செல்லமாக மெர்மைட் என்றழைக்கபடும் அவனின் காதலி  வந்திதா.

சரியாக இரண்டு வருடங்கள் கழித்து காணும் தன் உயிரானவளை கண் சிமிட்டாமல் பருகி கொண்டிருந்தவனது உதடுகள் அக்கவிதையின் இறுதி வரிகளை உச்சரிக்க , இம்முறை அதை கேட்டவளது கன்னங்கள் வெட்கத்தில் சிவக்க அதனூடே அவள் கைகள் தன்னிச்சையாய் அவளது லேப் கோட்டை அழுந்த பற்ற, இருவரது கருவிழிகளும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ள , இருவரும் தங்கள் முதல் சந்திப்பை அசைபோட்டுக்கொண்டே தங்களது கடந்த காலத்திற்குள் கொசுவத்தி சுருளோட நுழைந்தனர். ( அதான் பா ஃப்ளாஷ்பேக் போயிட்டாங்க , வாங்க நாமளும் ஆளுக்கு ஒரு கொசுவத்தி சுருளோட அவுங்க கூட ஃப்ளாஷ்பேக் பார்க்க போவோம். ) 

தொடரும் ….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    5 Comments

    1. hani hani

      கொசு வத்தி கிடைக்கலனா குட் நைட் எடுத்துட்டு வரலாமா 😝 செம்ம செம்ம.. பாட்டி அடிக்குற லூட்டி சூப்பர்… செம்மயா சிரிச்சேன். சோ லவ்லி.. எழுத்துப்பிழை தவிர எதுவுமே குறை இல்ல. அழகா எழுதுறீங்க. வாழ்த்துக்கள் ❤️

    2. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். சமூக கருத்தை வலியுறுத்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.